எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம


பண் :

பாடல் எண் : 1

நாசி நுனியினின் நான்மூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி யிருக்கும் குணம் அது வாமே.

பொழிப்புரை :

மூன்றாம் தந்திரத்தில், நாசிக்கதோமுகம் பன்னிரண்டங்குலம்``8 என்னும் மந்திரத்திற் கூறியபடி, `மூக்கின் நுனிக்குக் கீழே பன்னிரண்டங்குலத்தில் உள்ள இருதயம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடம்` என்பதை உங்களுள் ஒருவரும் அறியார். (அதனால் அவர்கள் புறத்தே உள்ள இடங்களில் சிவனைக் காணும் அளவிலே அமைந்து, அதனையே சிவக்காட்சியாகக் கொண்டு இருந்துவிடுகின்றனர்.) ஆயினும் பெரிய மறைநூல்கள் மேற்கூறிய ஈசன் இருப்பிடத்தைச் சொல்லியிருக்கின்றன. எனினும் அந்த மறை நூல் அந்த இடத்தை அணுக இயலாதவர்கட்கு அதனைக் கூற நாணம் உற்று, வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகவே கூறியமைந்தன. அது மறைநூல்கட்கு இயல்பு.

குறிப்புரை :

`அதனால், அப்பொருளை நல்லாசிரியரை வழிபட்டுக் கேட்டுணர்ந்து அணுகல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இங்கு, ``பெருமறை`` என்றது, யோகம், தகர வித்தை முதலியவற்றைக் கூறும் உபநிடதங்களையும், சிவாகமங்களில் யோக பாதங்களையும். அவ்விடங்களில் குறிப்பு மொழிகள் உளவாதலை அறிக. நாயனாரும் `சூனிய சம்பாடணை` முதலியவற்றால் குறிப்பு மொழிகள் பல வற்றைக் கூறினமை வெளிப்படை.
இதனால், `புறத்தூய்மையோடு அமைந்துவிடாது அகத் தூய்மையை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது புறத்தூய்மையையே சிறப்பாக வலியுறுத்துவன பிரம்மாணங்களும், மிருதிகளும்.

பண் :

பாடல் எண் : 2

கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து)
உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக்
கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற்
புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.

பொழிப்புரை :

உயிர்களால் செய்யப்படும் செயல்கள் யாதேனும் ஒரு பயனைக் கருதிச் செய்யும் செயல்களாகுமிடத்து `அச்செயல்களைச் செய்தோன் அவனே` என்னும் உரிமை தோன்றுதலையும், செய்த செயல்களும், `இனி வரும்` எனக் கருதப்படுகின்ற பிறவிக்கு வித்தாம் ஆகாமியம் ஆதலையும் உணர்ந்து, அச்செயல்களில் பற்று வையாது `எச்செயலையும் செய்யும் வாய்ப்பினை நமக்கு அளித்தவன் சிவன்` என்பதை யுணர்ந்து, அவனிடத்து அன்பு செய்து, எச்செயலையும் அவன் பணியாகச் செய்யின் அம்முறையில் அறிந்தோ, அறியாமலோ நிகழும் செயல்கள் யாவும் வினை நீக்கத்திற்கு வாயிலான தவமாகி, அவற்றைச் செய்தவனை வினை நீக்கத்தில் சேர்ப்பிக்கும்.

குறிப்புரை :

ஒன்று ஒரு பயன் `கன்மமும் கருவினை ஆவதும்` என இயையும். `ஆவது` என்பது தொழிற்பெயர். ``கன்மமும்`` என்னும் உம்மை சிறப்பும்மை. உன்னும் - கருதப்படுகின்ற. கரு - முதல். கரு வினை. `இச்செயலை யானே செய்கின்றேன்; இச்செயல்களும், இவற்றால் வரும் பயன்களும் என்னுடையனவே` என்னும் கருத்தே `பற்று` எனப்படுகின்றது. இப்பற்றோடு செய்யும் கருமமே `காமிய கருமம்` எனப்படுகின்றது.
இனி, யாதொரு பயனையும் கருதாதவழிச் செயல் செய்வார் ஒருவரும் இலராவர். ஆகவே, `செயல்களைச் செய்தற்கு வேண்டுவன பலவற்றையும் அளித்தவன் இறைவன் ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் யாவும் `ஈசன் இடும்பணி`* என உணர்ந்து, அவற்றில் - யான், எனது என்னும் பற்றின்றி, ``என்கடன் (அவன்) பணிசெய்து கிடப்பதே``* என்று அவனிடத்து அன்போடும் செய்வதே பயன் கருதாது செய்தலாம். அதனையே இங்கு நாயனார், ``அகன்று அன்பின் புரிவன`` என்றார். இதுவே `நிட்காமிய கருமம்` எனப்படுகின்றது. இந்நிலைமை கடவுட் கொள்கையில்லார்க்கு வாயாது. `க்ஷயம்` என்னும் வடமொழி, தமிழில் `கயம்` என வரும். ஆகவே, கருமக் கயம் - வினை நீக்கமாம். `காமிய கன்ம நிட்காமிய கன்மங்களாவன இவை` என்பதும், அவற்றின் பயன் முறையே பிறப்பும் வீடுமாம்` என்பதும் இம்மந்திரத்துட் கூறப்பட்டமை காண்க.
``காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்தங்கு உள்ளத் துணர்மினோ``*
எனப் அப்பரும் அருளிச்செய்தார்.
இதனால், வினை மாசே உண்மை மாசும், அதன் நீக்கமே உண்மைத் தூய்மையும் ஆதல் கூறப்பட்டது.
``புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்``9
என அருளிச்செய்த திருவள்ளுவர்க்கும் புறத்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்தது என்பது கருத்தாதல் தெளிவு, அவர்.
``மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்``9
என அருளிச்செய்ததும் இங்கு நினைவுகூரற்பாலது.

பண் :

பாடல் எண் : 3

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.

பொழிப்புரை :

வேதங்களால் முடிநிலைப் பொருளாகக் கொள்ளப் பட்ட முதற்பொருள் உயிர்கட்கு வேறாய் இன்றி அவைகளிடத் திற்றானே இருக்கின்றது. ஆயினும், மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்கள் உயிரினது அறிவைத் தம் வயப்படுத்தியே வைத்திருத்தலால் உயிர்கள் அம்முதற்பொருளை அறியாதிருக்கின்றன. அதனால் முதற்பொருள் மறைந்து நிற்கும் பொருளாக அறியப்படுகின்றது. மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்களின் வயப்படாது விடுபட்டவர்க்கு அக்கருவிக் கூட்டங்கள் மறைந்துவிட, முதற்பொருள் வெளிப்பட்டுத் தோன்றும். அதன் பின்பும் அக்கருவிக் கூட்டங்கள் தம்மை மயக்காதபடி அம்முதற் பொருளுக்குள்ளே அடங்கி நிற்க வல்லவர்கட்கு உடம்பு இருந்தும் இல்லையாம். அதனால் அவை பற்றி யெழுகின்ற, `யான், எனது` என்னும் செருக்கும் இல்லையாம்.

குறிப்புரை :

ஆகவே, அவர்கள் உடம்பு நீங்கியபின் ``வானோர்க்கு உயர்ந்த உலகம் புகுதல்``* தெள்ளிது என்பதமாம்.
``முந்திவட் டத்திடைப் பட்டதெல்லாம்
முடிவேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப்
புண்பதற் கஞ்சிக் கொல்லோ!
நந்திவட் டம்நறு மாமலர்க்
கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யான்அடிச்
சேர்ந்ததென் ஆருயிரே``
என்பனபோல ஆரூயிர்த் திருவிருத்தம்8 முழுவதும் அருளிச் செய்தமை காண்க. `அப்பொருளின்கண்` என, `உள்` எனப்பொருள் படும் ஏழாவது விரிக்க.
உலகியலில் வினை மாசே பெருமாசு ஆகலின் அது நீங்கு மாற்றை முன் மந்திரத்திற் கூறியபின், மாயை மாசு நீங்குமாறு இதனால் கூறப்பட்டது. `இம்மாசு நீக்கமே உண்மைத் தூய்மையாம்` என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 4

மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக்
கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில்
ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.

பொழிப்புரை :

ர் புறம் போய் வீணாவதற்கு உரிய, வயல்களின் சிறு புழை போல, விந்து வெளிச்சென்று வீணாகின்ற வழியாகிய குறியைச் செயற்படாமல் தடுத்து, பிராணனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி அதனோடே மேல்நிலமாகிய ஆஞ்ஞையில் உணர்வினால் சென்று புகுந்து, அங்கு நிற்கின்ற நிலை சலித்தலை நீக்க முயலு மிடத்துச் சிவ நினைவால் அதனை அடியோடு நீக்கி, உடம்பையும் விரைவில் வீழ்ந் தொழியாதபடி யோகக் கனலால் கற்பஞ்செய்து தன்னைச் சிவத்திற்குள்ளே அடைத்து வைத்தலே ஒருவனுக்கு உண்மையான தன்வலிமையாகும்.

குறிப்புரை :

முழை. மலை முழை. சுழுமுனை நாடியை `மேரு` என்பதால், அதன் உள்வெளியை `மலைமுழை` என்றார். காயத்தைக் கற்பம் செய்தல் இப்பிறப்பிற்றானே சிவஞான முற்றுதற் பொருட்டேயாம்; என்னை? முற்றுப் பெறாதவழி மேலும் பிறப்பு வரும் ஆதலின் ``கோழை`` என்பது இங்குக் கோழைமையாகிய தளர்ச்சியைக் குறித்தது. தாழ்தல் - தங்குதல் ``வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும் - துணை வலியும் தூக்கிச் செயல்``3 என்ற விடத்துக் கூறப்பட்ட வலிமைகளிலும் ``தன் வலி`` என்றதே இன்றி யமையாதல் பற்றி `இச்செயலே உயிருக்குத் தன்வலியாம்` என்றார்.
இதனால், மேற்கூறப்பட்ட இருவகை மாசுகளையும் கழுவுதற்கு ஒருவகைச் சாதனம் கூறப்பட்டது.
(இதன்பின் பதிப்புக்களில் காணப்படும், ``காயக் குழப்பனை`` என்னும் மந்திரம் ஏழாம் தந்திரத்து, `கூடா ஒழுக்கம்` என்னும் அதிகாரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 5

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர்கள் தங்கள் உடம்பு அசுத்தத்தைத் தீண்டிவிட்டதனால் `தீட்டு உண்டாகிவிட்டது தீட்டு உண்டாகி விட்டது` என்று சொல்வார்கள். அவர்களில் ஒருவருமே, உண்மையில் தீட்டு எங்கு உண்டாகின்றது` என ஆராய்ந்தறியமாட்டார். யாராயினும் அதனை ஆராய்ந்து அறிவார்களோயானால் `உயிர் மக்கள் வடிவாய் உள்ள உடம்பைத் தீண்டியதே தீட்டு` என்பது அவர்கட்கு நன்கு புலப்பட்டுவிடும்.

குறிப்புரை :

`அசுத்தத்தைத் தீண்டுவதனால் தீட்டு உண்டாதல் உண்மையே. அந்தத் தீட்டு உடம்பிற்கு உண்டாவதைத் தங்களுக்கு உண்டானதாகவும், அதனைப் போக்கித் தூய்மை செய்வதால் தாங்கள் தூய்மை அடைந்துவிட்டதாகவும் கருதுதல் அறியாமை` என்பதாம். உண்மையை உணர்ந்தால், நாம் மானுட உடம்பைப் பற்றிக் கொண்டிருப் -பதே தீட்டு, என்பதும், `அதனைப் போக்கி இறைவனை அடைதலே நமக்குத் தூய்மை` என்பதும், விளங்கும். அவற்றை விளங்கிக் கொண்டவர்களே அறிவுடையோர் என்பது கருத்து. மாணாக்கர் செயற் பாலது மானுட உடம்பை நீக்குதலேயாதல் பற்றி, ``மானுடம் ஆசூசம்`` எனறாரேனும், `உடம்பாவன பலவும் ஆசுசமே` என்றலே கருத்து.
மானுட உடம்பை,
``பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
பொழுகிய பொய்க்கூரை``3
என்றார்போலப் பலபடக் கூறுமாறு அறிக. `மக்கள் தங்கள் உடல் தீட்டைப்போக்கி உடலைத் தூய்மையாக்கிக் கொள்வதனாலே தாங்கள் தூயோராய்விட்டதாகக் கருதிக்கொள்ளுதல் அறியாமை` என்றபடி. இதனானே, `புறத்தூய்மை ஒன்றே உயிரை நற்கதி யடைவிக்கும்` எனக் கூறும் கூற்றுக்கள் போலியாதல் விளங்கும்.
இதனால், `புறத்தூய்மையையே பெரிதாக வலியுறுத்தியமை யாது, அகத்தூய்மையையே பெரிதும் வலியுறுத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு)
ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு)
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு)
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.

பொழிப்புரை :

சிவனது முதன்மையை உணர்ந்து அவனைச் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நால்நெறியில் எவ்வகையில் நின்று வழிபடுவார்க்கும் புறத்தூய்மை வாயாவிடினும் அகம் திருவருளில் படிந்திருத்தலால் அவர்கட்கு எந்த வகையான அசுசியும் இல்லையாம்.

குறிப்புரை :

இஃது அறியாது அவர் புறத் தூய்மை குறைந் திருத்தல் பற்றி அவரை, `ஆசௌசம் உடையவர்` என இகழலாகாது என்பதாம். புறத் தூய்மை இல்லாமைக்குக் காரணம் அவர் அதனை இகழ்ந்து ஒதுக்குதல் அன்று; வாய்ப்புக் கூடாமையேயாம். கண்ணப்பர் முதலியோரது அருள் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
அரு நியமம் - கடைப்பிடித்தற்கரிய கடப்பாடான தொண்டு அருச்சனை அகத்தும், புறத்தும் செய்யும் வழிபாடு. யோகிகள் பிராணா யாமத்தால் மூலாக்கினியை வளர்ப்பர் ஆதலால், புறத்தே அழல் ஓம்பி வழிபடுவாரும் யோகிகளாகச் சொல்லப்படுவர். இவருள் சிவவேள்வி செய்வாரையே இங்குக் கொள்க. ஞானசம்பந்தர்,
``சுடர்விட்டுளன் எங்கள் சோதி``*
என அருளிச்செய்தற்குச் சேக்கிழார்,
``ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பின்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்``*
எனப் பொருள் விரித்தமை இங்கு நோக்கத் தக்கது.
அருமறை ஞானிகளாவார் வேதத்தின் `பிரமகாண்டம்` எனப்படும் ஞானகாண்டப் பொருளை அதன் தெளிவாகிய சிவாகமங்களின் ஞானபாதத்தின் வழிச் சிந்திப்பவர்களும், சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடியிருப்பவர்களும் ஆவர். இவற்றிற்கெல்லாம் முற்பட்டது. ``குருவார்த்தை கேட்டல்``* ``அருமறை`` என்பதனை இரட்டுற மொழிந்து, `அரிய உபதேசம்` என்றும், `அரிய பிரகாண்டம்` என்றும் இருபொருள் கொள்க.
இதனால், `சிவநெறி நிற்றலே சிறப்புடைத் தூய்மை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.

பொழிப்புரை :

முன்னர்ப் புறத்தொண்டுகளைச் செய்து, பின்பு அகத்தும், புறத்தும் சிவனை வழிபடுவார்க்குச் சுழித்தோடுகின்ற நீரில் மூழ்கினார்போலும் ஓர் உண்மைத் தூய்மை தொடங்குவதாகும். (பின்னர் அகத்தும், புறத்தும் அங்கி வளர்த்தலால் அத்தூய்மை முதிரும்.) இவைகளைச் செய்யாது புறத்தூய்மையை மட்டுமே வலியுறுத்திக் கூறு கின்ற நூல்களாகிய குழிகளில் வீழ்ந்தவர்கள் தூய்மையைப் பொருந்தார். இனி முற்கூறிய தூய்மையைப் பொருந்தியவர்களில்கூட, உருவம், அருவுருவம், அருவம் என்னும் குறிகளைக் கடந்து குறியிறந்து உணரும் உணர்வுடையார்க்கன்றிச் சிவனை நேர்படக் காணுதல் இயலாது.

குறிப்புரை :

`சிவனை நேர்படக்காணுதலே முழுத் தூய்மையாம்` என்றபடி கூடுதலுக்குச் செயப்படுபொருள் முன்னர்க் கூறிய தூய்மையேயாயிற்று. தொடங்குதல் கூறினமையால் முதிர்தலும் கொள்ளப்பட்டது.
இதனால், அகத்தூய்மை தொடங்கி, முதிர்ந்து, முற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை
தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.

பொழிப்புரை :

உலகத்தில், மாசு நீங்கக் கழவுவப்பட்ட இரத்தினமும், தூய பொருள்களாலே வளர்க்கப்பட்ட தீயும் தூய ஒளியையே தரும். `அதுபோல உடம்பினுள் தூய ஒளிகளைத் தரும் தூய இரத்தினமும், தூய தீயும் எவை` என்பதை அறிபவர் உலகருள் எவரும் இல்லை அவற்றை அறிய வல்லவர்கட்கு அவை தாம் தூயவாய் இருத்தலேயன்றி உடம்பிற்குத் தூய்மையைத் தருவனவாய் அமையும்.

குறிப்புரை :

கழுவப்படுவதனால் தூய்மை அடைகின்ற மணி உயிர். இயல்பாகவே தூய்மையுற்றிருக்கின்ற தீ சிவம். `சாதனங்களைச் செய்தவழி உயிர் தூய்மையுற்றும், சிவம் பிராகசித்தும் புலால் உடம்பை ஒளியுடம்பாகச் செய்யும்` என்பது கருத்து.
இதனால், `ஆன்ம சுத்தியே உண்மைத் தூய்மையாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தூயது வாளாக வைத்தது தூநெறி
தூயது வாளாக நாதன் திருநாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியாம்
தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.

பொழிப்புரை :

`முதல்வனாகிய முக்கண்ணன் முன்னெறியாகிய* தனது நெறியை உலகிற்கு வைத்தது உயிர் தூயதாதற் பொருட்டேயாம். அந்நெறியிற் செல்வார்க்கு உறுதுணையாக அவன் வைத்தது அவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரம். அந்த மந்திரத்தைப் பல்காலும் ஓதி உயிர் தூய்மையுற்றால் அட்டமா சித்திகள் தாமே வந்து அதனை அடையும். ஆதலின் உயிர் தூய்மை அடைவதற்கு முன்பு அங்ஙனம் தூயராயினார் சென்ற அடிச்சுவட்டில் செல்.

குறிப்புரை :

`நான்கு அடிகளிலும், வாள் தூயதாக` என மாற்றிக் கொள்க. வாள் - ஒளி; அஃது இங்கு அறிவுப் பொருளாகிய உயிரைக் குறித்தது. ``ஆக`` நான்கில் மூன்றாவது காரணப் பொருளிலும், ஏனைய காரியப் பொருளிலும் வந்தன. ``வைத்தது`` என்பதை இரண்டாம் அடியிலும் கூட்டுக. தூயவரது அடிச்சுவடும் தூயதே ஆம் என்க.
இதனால், உண்மைத் தூய்மையை வேண்டுவோர் சிவ நெறியைப் பற்றிச் சிவமூல மந்திரத்தை எப்பொழுதும் ஓதுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.

பொழிப்புரை :

மெய்ப் பொருளாய், என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பவன் சிவபெருமானே. அவனே எங்கட்குத் தந்தை. அவனது திருவருளைப் போற்றுகின்ற அடியவர்களே சுருண்டு சுருண்டு வருகின்ற கடலின் அலைபோல முடிவின்றி வருகின்ற பிறப்பாகிய துன்பச்சூழலினின்றும் நீங்குவர். அவனது திருவருளைப் போற்றாது ஒழிகின்றவர் எல்லாம் அச்சூழலில் அகப்பட்டுத் திகைக்கின்றார் ஆதலின் அவர் அருளுடையாராகாது மருளுடையவரேயாவர்.

குறிப்புரை :

எனவே, `திருவருட் செல்வராகிய சிவனடியாரே தூயவர் ; அச்செல்வத்தைப் பெறாதோரெல்லாம் மாசுடையவரே; அதனால் அச்செல்வத்தைப்பெற முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம்.
``புண்ணியன்`` என்பது, `சிவன்` என்னும் பொருட்டாய் நின்றது. `அது` மூன்றும் பகுதிப்பொருள் விகுதி. ``சுருளதுவாய்`` என்பதில் ஆக்கம் உருவகம் குறித்து நின்றது. ``மருளவர்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
இதனால், உண்மைத் தூய்மையை உணராதவரது நிலைமை இரங்கத் தக்கதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

வினையால் அசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார்
வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.

பொழிப்புரை :

`நிலையில்லனவாகிய பல வகை உடம்புகள் ஒன்றழிந்தபின் மற்றொன்று தோன்ற, அஃதழிந்தபின் வேறொன்று தோன்ற, இவ்வாறு முடிவின்றி வந்து உயிரை அலைக் கழிப்பது வினையே` என்பதையும், `அந்த வினை பொருள்களை உற்றவா றுணரும் மெய்யுணர்வால் கெடும்` என்பதையும் ஆசான் அருள் பெறாதார் அறியமாட்டார். இனி, `வினை நீக்கமே வீடுபேறாம்` எனக் கூறுகின்ற வேதத்தையும் அவர்கள் ஓதுவதில்லை ஆகவே, அவர்கள் வினையை ஆண்டு, அதிற்றானே மகிழ்கின்றவராவர். அவர் பின்னும் பின்னும் எல்லையின்றி வரும் துன்பவினை அறிய மாட்டார்.

குறிப்புரை :

அசத்து - நிலையில்லாதது. சத்து - நிலையுடையது இங்கு ``வினை`` என்றது பிராரத்த வினை, ஆகாமிய வினைகளை. `அவை ஆசிரியன் உணர்த்தியவாற்றானே நின்மலாவத்தையை அடைந்து அதன்கண் நிற்பவரை வாதியா` என்பதை,
``எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை;
முற்செய்வினை யும்தருவான் முன்``
என்றும் சிவான போதத்தால்3
``எப்பொழுது இவனுடைய இருதயத்தில்
நிறைந்துள்ள ஆசைகள் எல்லாம் ஒழிகின்றனவோ
அப்பொழுது, சாகும் தன்மையுடைய மனிதன்
சாகாதவனாகி விடுகின்றான்``
என்று கடோப நிடத ஆறாவது வல்லிப் பதினாறாவது மந்திரம் கூறுகின்றது. ஆசையால் விளைவனவே வினையாதலின் ``வினைவீட வீடு`` என வேதம் கூறுதல் அறிக.
``அவாஎன்ப எல்லா உயிர்க்கும், எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து``8
``இன்பம் இடையறாது ஈண்டும், அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்``8
எனத் திருவள்ளுவர் வலியுறுத்தியதும் இதையே.
இதனால், `வினைமாசு நீங்கலே உண்மைத்தூய்மை, அது நீங்காமையே உண்மை மாசு` என்பன கூறி முடிக்கப்பட்டது. (யாவரும் அறிந்தது இதுவேயாதல் பற்றி இவ்வாறு கூறினார், `பின்பு ஆழ்ந்து உணர்வார்க்குக் காரணமாசாக ஆணவத்துண்மை புலனாகும்` என்பது கருதி.)
சிற்பி