எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்


பண் :

பாடல் எண் : 1

விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து
தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும்
விட்டும் விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.

பொழிப்புரை :

ஆன்மாவின் சொரூப (இயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களெல்லாம் இலக்கணைச்சொல்லாகாது இலக்கணச் சொல்லேயாம். அஃதாவது நேர்ப்பொருளைத் தருவனவேயாம். அவை `ஆன்மா நித்தியம், வியாபகம், சித்து` என்றல் போல்வன. ஆன்மாவின் சொரூப நிலையைக் கூறாது, தடத்த (செயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களே இலக்கணைச் சொல்லாய் நிற்கும். அஃதாவது நேரே பொருளை யுணர்த்தாமல், ஒன்றை இடையிட்டுப் பொருளுணர்த்தும். அது மூன்று வகைப்படும். (அவ்வகைகள் மேலே காட்டப்பட்டன.)
`ஆன்மா, மேல், கீழ், நடு உலகங்களில் பிறந்தும், இறந்தும் உழலும்` என்றால், ஆன்மா உண்மையில் வியாபகப் பொருள் ஆகையால், அதற்குப் போக்கு வரவு இல்லையாதலின், ஆன்மாவை விட்டு, `அதன் சூக்கும, பரசரீரங்களே அவ்வாறு உழல்வன` எனக் கொள்கின்றோம். ஆகவே இது விட்ட இலக்கணை.
இனி, `ஆன்மாச் சகலத்திற் கேவலம், சகலம், சுத்தம் என்னும் அவத்தைகளை அடைகின்றது` என்றால், அவ்வவத்தைகளில் உணர்வு வேறுபடுவது ஆன்மாவே ஆகையாலும், அதன் கருவிகளின் கூடுதல் பிரிதல்கள் என்பவற்றாலும், சீவ கரணங்கள் சிவ கரணங்களாய் வேறுபடுதலாலுமே அவத்தைகள் நிகழ்தலாலும் ஆன்மாவை விடாமலே அதன் கருவிகளின் கூடுதல் குறைதல் -களையே கொள்கின்றோம். அதனால் இது விடாத இலக்கணையாம்.
இனி, `ஆன்மா புறத்தே உள்ள ஓசையைக் கேட்கின்றது, உருவத்தைக் காண்கின்றது` என்றால், கேட்டல் காண்டல்களைத் தான் நேரே செய்யாது, செவியும், கண்ணுமாகிய பொறிகளே அவற்றைச் செய்கின்றன என்றும், ஆயினும் அப்பொறிகள் அச்செயல்களைச் செய்யுமாறு ஆன்மா அவற்றை அதிட்டித்து (வாயிலாகப் பற்றி ஏவி) நிற்கின்றது என்றும் கொள்கின்றோம். இதனால், இது விட்டும் விடாத இலக்கணையாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. `சொரூபம் இலக்கணாதீதம்` (இலக்கணைக்கு அப்பாற்பட்டது) எனக் கூறியதனால், `இலக்கணைச் சொற்களாய் வருவன தடத்தத்தைப் பற்றி வருவனவே` என்பது பெறப்பட்டது.
`ஆன்மாவின் தடத்த இயல்புகளைக் கூறுமிடத்து ஆன்மா விற்குச் செயற்கையாயுள்ள மலங்கலின் இயல்பை வேறாகவும், ஆன்மாவின் தற்சொரூபம் வேறாகவும் உணர்தல் வேண்டும்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. ஆகவே, ஆன்மாவைப் போலச் சிவன் தனது தடத்த நிலையில் முன்னை நிலையை மறத்தலாகிய உணர்வு வேறு பாட்டை அடைதல் இல்லாமையால், `அவனது தடத்த நிலைகளைக் குறிக்கவே இலக்கணைச் சொற்கள் பயன்படுகின்றன` எனக்கூறும் மாயாவாதிகள் கூற்றுப் பொருந்தாது என்பதும் இதனாலே குறிக்கப்பட்டதாம். இது வருகின்ற மந்திரத்தில் வெளியாகும்.
வியோமம் - ஆகாயம் ; வானுலகம். அஃது உபலக்கணம். ``உபசாந்தம்`` என்றது கருவிகளின் சேட்டை அடங்கிய நிலையை. சத்தாதி - ஓசை முதலிய புலன்கள். சுட்டும் - நேரே சுட்டுகின்ற.
இதனால், உபநிடதப் பொருள்களைச் செம்மையாக உணர்தற்கு உரிய ஒரு கருவியின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வில்லின் விசைநாணில் கோத்திலக் கெய்தபின்
சொல்லுங் களிறைந்தும் கொலொடே சாய்ந்தன
இல்லில் இருந்தெறி கூறும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிர்எதி ராகுமே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் ஒட்டணியாய் நின்றது.]
வில்லினிடத்து விசையைத் தருகின்ற நாணை ஏற்றி, அதன்கண் அம்பைப்பூட்டி தொலைவில் உள்ள இலக்கை எய்ய வல்லார் அங்ஙனம் எய்வாராயின் அந்த இலக்கிற்குக் குறுக்கே நிற்கின்ற கொலையானைகள் ஐந்தும் அந்த அம்பாலே வீழ்ந்துவிடும். (அம்பு இலக்கைச் சென்று அடையும்.) இனி அவ்வாறு எய்யும் ஒருவன் தனக்கு வாய்ப்பான இடத்தில் இருந்து கொண்டு எய்யும் பொழுது அச்சாதனையால் இனியதோர் ஒளி மாணிக்கக்கலன் போல் வெளிப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

இவ்வதிகாரத்தில் உபநிடத வாக்கியங்களுக்குப் பொருள் கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றார். ஆதலின் `முண்டகம்` என்னும் ஓர் உபநிடதத்தில் கூறப்பட்டவாறே இம்மந்திரத்தில் கூறினார். அதிற் கூறப்பட்டது வருமாறு.
1. ``சித்தம் அழகியோய், உபநிடத்தில் உள்ள பெரிய அத்திரத்தை (வில்லை) எடுத்து அதில், முன்பே உபாசனையால் கூர்மை பெற்றுள்ள அம்பைத் தொடுத்து, பிரம்ம பாவனையால் அதை இழுத்து, அட்சரப் பிரம்மமாகிய இலக்கில் பாயும்படி செலுத்து``3
2. ``பிரணவமே வில். ஆன்மாவே அம்பு. பிரம்மமே அதன் இலக்கு அது சிறிதும் மறதியற்ற நினைவுடன் எய்யப்படல் வேண்டும். (எய்யப்பட்டால்) ஒன்று பட்ட நிலை ஏற்படும்``.3
இவற்றால் இம்மந்திரத்தில் மறைத்துக் கூறப்பட்டபொருள் இனிது விளங்கும். உபாசனை, இங்கு மந்திரோபாசனை யாதலின், ``விசை நாண்`` என்றது திருவைந்தெழுத்தாகக் கொள்ளப்படுகின்றது. இதனை மேற்காட்டிய உபநிடதம் வெளிப்படையாகக் கூறவில்லை. `பிரணவ கலைகளே அஞ்செழுத்து` என்பது உபநிடதங்களின் கருத்து ஆதலால் அது `வில்` என்பதில் அடக்கப்பட்டது என்பது இனிது விளங்க நாயனார், ``விசை நாணின்`` என வெளிப்பட ஓதினார்.
உபாசனையால் கூர்மை பெற்ற அம்பு, சமய விசேட நிருவாண தீக்கைகளால் பல முறைகளில் திருவைந்தெழுத்தை ஓதிப் பயின்று, திருவருள் உணர்வு மிகப்பெற்ற ஆன்ம உணர்வு, ஆன்மா எத்துணை முயற்சிகளைச் செய்தாலும் தனது இலட்சியத்தை அடைதற்கு, இடையே குறுக்கிடுவன ஐம்புலன்கள் ஆதலின், அவையும் இலட்சியத்தை நோக்கி உறுதியாகச் செல்லும் ஆன்மாவின் முன் வலியற்று வீழ்ந்துவிடும்` என்பதையும் நாயனாரே கூறினார்.
கோல் - அம்பு, ஒடு உருபை ஆன் உருபாகத் திரிக்க. ஏகாரம், `அந்த அம்பைத்தவிர வேறொரு படைக்கலம் வேண்டா` என்பதைக் குறித்தது. தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
உபநிடதத்தில் `மறவா நினைவு` எனப்பட்டது யோகா வத்தையில் சமாதி நிலையும், நின்மலாவத்தையில் நின்மல துரியமும் ஆகும் இவற்றையே நாயனார் ``இல்`` (இல்லம்) என்றார். எறி - எய்யப்படும் இலக்கு . கூரும் - அதனைக் கூர்த்து நோக்குகின்ற. கல் - மாணிக்கம். `கற்கலன்` என்பது எதுகை நோக்கி, `கல்கலன்` என இயல்பாய் நின்றது. கதிர் - கதிரவன்; ஆகுபெயர். சொரூப சிவம்.
இங்குக் கூறிய இவ்வுருவக முறையில் பரமான்மாவை, `இலக்கு` என்றதனால், அஃது இருந்தபடியே என்றும் இருக்கின்றது என்பதும், `கூர்மை பெற்ற அம்பு` என்றதனால், சீவான்மாவே பிரணவோபசனையாகிய சாதனத்தால் அவ்விலக்கினை அடைதல் வேண்டும்` என்பதும் உபநிடதத்தின் கருத்து என்பது போந்தது. எய்பவனும், எய்யப்படும் பொருளும் ஒன்றாதல் ஒருபோதும் இல்லையாகலானும், `உண்டு` எனின், `தன்னைப் பற்றுதல்` (ஆன்மாச் சிரய தோடம் என்னும் குற்றம் படும் ஆகலானும், ஏகான்ம வாதம் கொண்டு இலக்கணைகளைப் பிரமப் பொருளின் தடத்த நிலைகளுக்கு ஆக்குதல் பொருந்தாமை தெள்ளிது என்றபடி. இங்ஙனம் இதனைத் தெளிவுபடுத்தவே நாயனார் இம்மந்திரத்தைக் கூறினார். அதனால் இம்மந்திரம் இவ்வதிகாரத்தில் இடம்பெற்றது.
``புள்ளுவர் ஐவர் கள்வர்
புனத்திடைப் புகுந்து நின்று,
துள்ளுவர்; சூறை கொள்வர்;
தூநெறி விளைய ஒட்டார்;
முள்ளுடை யவர்கள் தம்மை
முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்துநின்(று) அங்(கு)
உணர்வினால் எய்ய லாமே``9
என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், இலக்கணை பயன்படும் முறை உபநிடதக் கூற்றால் விளக்கப்பட்டது.
சிற்பி