எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்


பண் :

பாடல் எண் : 1

அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.

பொழிப்புரை :

விரையத் தோன்றி மறைகின்ற சாயா புருடனைப் போலவும், சிறிது நின்று கெடுகின்ற நீர்க்குமிழி போலவும், சிறிது நீட்டித்துக்கெடுகின்ற, தீயிடைப்பட்ட கருப்பூரத்தைப்போலவும், அசுத்தத்தைப்பொழிகின்ற தூலவுடம்பும் ஒரு காலத்தில் சிவத்தில் ஒடுங்குவதேயாம்.

குறிப்புரை :

தத்துவ முறைப்படி தத்துவங்களில் தோன்றும் உடம்புகள் தோன்றிய தத்துவங்களிலே மீள ஒடுங்கத் தத்துவங்கள் மாயையில் ஒடுங்கும் ஆகலின், அவை மாயைக்கு வியாபகமான சிவத்தில் ஒடுங்குவதேயாம்` என்றபடி.
``இவ்வுடம்பு`` எனத் தூல உடம்பையே சுட்டினாராயினும், உபலக்கணத்தால் சூக்கும அதிசூக்கும உடம்புகளும் கொள்ளப்படும்.
சாயா புருடன், நின்மலமாகிய வானத்தை உற்று நோக்குங்கால் அதன்கண் உள்ள ஒளி மண்டலத்தின் ஒரு கூறு மனிதனைப் போலத் தோன்றும் வடிவம். இது மிக விரைவில் மறைதலால் விரையக் கெடும் உடம்பிற்கு உவமையாயிற்று.
சாயா - சாயை; நிழல். ஒளி மண்டலத்தின் ஒரு கூறே புருடன் வடிவற்றாய்த் தோனஅறுதலின், அஃது இல்லதன்று; உள்ளதே. அஃது ஒடுங்குதல் ஒளிமண்டலத்திலேயாம். காணின் - காணுதலைப் போல. `இன்` உவம உருபு. நீர்க்குமிழி நீரில் தோன்றி நீரில் ஒடுங்குதல் வெளிப் -படை. கருப்பூரம் - பச்சைக்கருப்பூரம். அது கூட்டுப் பொருளாகலின், அதன் கூறுகள் ஆற்றலாய் மாறி அவ்வப் பொருள் ஆற்றலில் ஒடுங்கும்.
இங்ஙனமாகவே, `உடம்புகளை இறைவன் ஓடுக்குதல் இல்லை` எனல் வேண்டா என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உம்மைகள் விரிக்க.
இதனால், உடம்புகள் ஒடுங்குமாறு உவம அளவையால் நிறுவப்பட்டது. `தோற்றம், ஒடுக்கம்` என்பவற்றில் இங்கு வேண்டுவது ஒடுக்கமேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றின்
படரும் சிவசத்தி தானே பரமாம்
உடலைவிட் டிந்த உயிர்எங்கு மாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.

பொழிப்புரை :

உடம்பும், உயிரும் நீக்கமற ஒன்றியிருக்கும் பொழுது, உலகத்தை நோக்கிச் செல்லும் சிவ சக்தியே உயிருக்குத் தலைமையாய் நின்று நடத்தும். உடலை அறவே விட்டொழித்தவழி, உயிர் சிவனைப் போலப் போலவே எங்கும் இருப்பதாய், முடிவும், முதலுமாகிய எல்லைகளில் எதுவும் இன்றி வியாபகமாய்ச் சிவனது வியாபகத்தில் அடங்கிவிடும்.

குறிப்புரை :

ஆகவே, `சிவன் உயிரை உண்கின்றான்` என்றல் பொருந்துமாறு அறிக என்பதாம். திருவாசகத்தில் `உயிருண்ணிப் பத்து` என ஒரு பகுதியிருப்பதும், ``யானாகிய என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``9 என்றதும் இங்கு நினைவு கூரத்தக்கன. `விட்டவழி` என்பது, ``விட்டு`` எனத் திரிந்து நின்றது.
`பெத்த காலத்தில் திரோதான சத்தி வழிப்பட்டு ஏதேசியாய்ப் போக்கு வரவு புரிகின்ற உயிர் முத்தி காலத்தில் ஏகதேசத் தன்மை நீங்கி வியாபகமாய்ச் சிவத்தில் அடங்கும்` என்பது இம்மந்திரத்தின் கருத்து. ``உடல்`` என்ற பொதுமையால் மூவகை உடம்பும் கொள்க.
இதனால், `உயிர் ஒடுங்குதல் இல்லை எனல் வேண்டா` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செவி மெய் வாய் கண் மூக்குச் சேர்இந்திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
குவிவொன றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தாமே.

பொழிப்புரை :

செவி முதலிய ஐந்து ஞானேந்திரியங்கள், மனம் முதலிய நான்கு அந்தக் கரணங்கள், பிரகிருதி ஆகப் பத்தினையும் பற்றி நின்று செலுத்துகின்ற உயிர்கள் அவற்றைப் பலதலைப் பட்டு விரிந்து செல்லவிடாது சிவம் ஒன்றையே நோக்கிக் குவிந்து செல்லுமாறு செலுத்துதல் வேண்டும். அங்ஙனம் செலுத்தாமையால் அவை பல வழியாக விரிந்து செல்லத் தாமும் அவ்வாறே முதற்கண் உலகில் விரிந்து செல்கின்றன. ஆயினும் அவை முன் சொல்லிய வற்றுள் குவிந்த பொழுது, சராசரங்களாகிய அனைத்து உடம்புகளும் உயிர்களும் சிவத்தில் ஒடுங்கிச் சிறிதும் நீங்காதனவாய் இருக்கும்.

குறிப்புரை :

அவி இன்றிய - அடங்குதல் இல்லாத. ``ஐந்தும்`` என்ற குறிப்பால் பிரகிருதி தழுவப்பட்டது. `முன்பு விரிந்து, பின்பு குவிந்த வழி` என்க. `சாராசதரந்தாமே தவிர்வொன்றிலாதவாம்` என்க. சரம் - இயங்கு திணை. அசரம் - நிலைத்திணை. `தாம், ஏ` அசைகள்.
இதனால் உலகத்தின் விருவும், ஒடுக்கமும் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பரன் எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்
திரன் எங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும்
உரன்எங்கு மாய்உல குண்டு முமிழ்க்கும்
வரன்இங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

பொழிப்புரை :

சிவன் வியாபகன்; மாற்றம் இல்லாதவன் எவ்விடத்திலும், எப்பொருளிலும் நிறைந்து அதனால், தனது ஆற்றலால் சுத்தமும், அசுத்தமும் ஆய இரு மாயா காரியங்களிலும் தனது ஆற்றலால் தங்கி அவற்றைத் தன்னுள் ஒடுக்கவும் செய்வான். பின்பு விரிக்கவும் செய்வான். நான் மேல்நிலை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந் திருத்தற்குக் காரணம் இந்த உண்மையை இவ்வாறு உணர்ந்ததே.

குறிப்புரை :

`அதனால் நீவிரும், இதனை, இவ்வாறே உணர்மின்; மேல்நிலையை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந்திருப்பீர்` என்பது குறிப்பெச்சம்.
``எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும்`` என்றது, `வியாபகன்` என்றபடி. பின்னர் வந்த ``எங்கும்`` என்பது, `எப்பொருளிலும்` என்றதாம். உரன் - ஆற்றல். `உரனால்` என உருபு விரிக்க. வரன் வரம்; மேன்மை. `யான் வரனில் வாழ்ந்துற்றவாறு இங்ஙன் கண்டு` என முடிக்க. `உமிழும்` என்பது இடைக்கண் வேண்டாவழிக் குகரச் சாரியையும்` சந்தியும் பெற்று, `உமிழ்க்கும்` என வந்தது.
இதனால், `மெய்யுணர்வோர், உலகத்தை இறைவன் ஒடுக்கியும், தோற்றுவித்தும் நிற்கின்றான் என உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அளந்த துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரம்சகம் உண்டஃ தொழித்துக்
கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.

பொழிப்புரை :

உயிரினது அறிவின் நிலைமையை அளந்து, அஃது நின்மல துரியத்தை அடைந்தவாற்றினைத் தெரிந்து, அதன்கண் உயிரினது அறிவினை வாங்கித் தன் அறிவினுள் அடக்கிக் கொண்ட நின்மல சிவம். அந்நிலையில் உயிரினது உடம்பும், உலகமும் இருப் பினும் அவையில்லாதது போலத் தனது அருளினுள் அடக்குமாற்றால், உயிரினது, `யான், எனது` என்னும் பற்றை அறுத்துத் துரியத்திற்கு மேற் பட்ட பரசிவமாய்ப் பொருந்தக் கிடைத்தால், ஆன்மா அந்தப் பரசிவ -மாகிய பராகாயத்தில் அடங்கிவிடும் பேற்றினையும் பெற்றுவிடும்.

குறிப்புரை :

``உளம்`` என்று அறிவினை. ``அஃது`` என்றதும் அதன்மேல் உள்ள பற்றினையே. வெளியன் ஆதற்கு வருவிக்கப் பட்டது. உம்மை சிறப்பும்மை.
இதனால், சிவன், உணர்வொடுக்கம் செய்யுமாற்றால் உயிர் ஒடுக்கம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இரும்புண்ட நீர்என என்னைஉள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
யிருந்தனன் நந்தி இதயத்து ளானே.

பொழிப்புரை :

உலையிற்பட்ட இரும்பு தன்மேல் வீழ்ந்த நீரை மீள வெளிப்படாதபடி தன்னுள் ஒடுக்கிக் கொள்வது போல, மேலானதற்கும் மேலான பொருளாகிய சிவன், யான் அஞ்ஞானத்தை விட்டு மெய்ஞ்ஞானத்தைப் பெற்றமையால் முப்பாழிலும் முறையானே எனது சீவ போதத்தைத் தான் விழுங்கித் தான் மட்டுமே எனக்கு மேலேயிருந்தான்; என் அறிவினுள்ளும் இருந்தான்.

குறிப்புரை :

ஈற்றில் நின்ற ``பரம்`` வாளா பெயராய் நின்றது. அது பகுதிப்பொருள் விகுதி. உரம் - மெய்ஞ்ஞானம். பெற்றது மெய்ஞ் ஞானமாகவே, விட்டது அஞ்ஞானமாயிற்று. முப்பாழ், மேலே கூறப் பட்டன. அப்பாழ்தோறும் உயிரினது அறிவு வேறுபடுதலை யறிக. ஒளி - அறிவு. ``விழுங்கி யிருந்தனன்`` என்றதனால் அவன் மட்டுமே தனித்திருந்தமை பெறப்பட்டது. ``அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல்`` 9 சீவன் சிவத்துள் சென்று அடங்கச் சிவமே ஒளி வீசி நின்றது என்றபடி. பின்னர், ``இதயத்துளான்`` என்றதனால், முன்னர் `மேலே உளான்` என்றதாயிற்று.
``இரும்பிடை நீர் என`` என்றமையால் இது நிறைவொடுக் கமாகிய முடிநிலை முத்தியைக் கூறியதாயிற்று. ``மற்றீண்டு வாரா நெறி``. பேரா இயற்கை* மீண்டு வாரா வழிஅருள் புரிபவன்``* என்றாற் போலும் திருமொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 7

கரிஉண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும்முன் ஓதும் சிவமும்
அரிய துரியத்(து) அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெரு மானே.

பொழிப்புரை :

`சீவ அவத்தை, சிவ அவத்தை, பர அவத்தை` என மேற்கூறிய மூன்று அவத்தைகளிலும் அரியனவாம் துரிய நிலையில் சிவபெருமான் அனைத்துலகங்களையும், அவற்றில் வாழும் உயிர் -களையும் அவற்றது முன்னை இழிநிலை மாறி, உயர்நிலையாகும்படி விழுங்கிவிடுவான்.

குறிப்புரை :

`யானை` என்பது விளம்பழத்திற்கு உண்டாகின்ற ஒரு நோய். அஃது அப்பழத்தின் ஓடு இருந்தபடியே இருக்க, உள்ளே உள்ளதை மட்டும் அழித்துவிடும். அதனால், வெளிப்பார்வைக்கு மட்டும் நன்றாய் இருப்பதுபோலக் காணப்பட்டு, உட்பகுதியில் ஒன்றும் இல்லையாய் விடுகின்ற பொருள்கட்கு, `வேழம் உண்ட விளங்கனிபோல` என்னும் உவமை கூறப்படுகின்றது. அஃது இங்குத் தம் தன்மை திரிந்த மாயா காரியங்கட்கும், அவற்றைப் பற்றி நிற்கும் உயிர்கட்கும் உவமையாகக் கூறப்பட்டது. உயிர் - சீவன். `சீவன், சிவம், பரம்` என்பன அவ்வவ் அவத்தைகளைக் குறித்து நின்றன. செய்யுள் நோக்கி, இறுதிக்கண் நிற்றற்பாலதாய பரம் இடைக்கண் வைக்கப் பட்டது. முன் ஓதும் - மேலே சொல்லப்பட்ட. `உயிரும், சிவமும், பரமும் ஆன துரியத்து` என்க. ``அகிலம்`` என்றது மாயா காரியங்களையும், எல்லாம்`` என்றது உயிர்களையும், அங்ஙனம் கொள்ளாக்கால், ``எல்லாம்`` என்றது கூறியது கூறலாம். திரிய - தம் நிலை மாறும்படி. விழுங்குதல், இங்குத் தன் தன்மைய ஆக்குதல். உயிர் பெத்தத்தில் நிற்கும்பொழுது அதற்குச் சார்பாய், உள்ள மாயா காரியங்கள் பசுகரணங்களாயும், முத்தியைப் பெற்ற பொழுது அவை பதி கரணங்களாயும் நிற்கும். இவ்வாறு ஆதலையே ``திரிய`` என்றார்.
``மாயைமா யேயம், மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆய ஆ ருயிரின் மேவும்
மருள்எனில் இருளாய் நிற்கும்;
மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
அருள்எனில் ஒளியாய் நிற்கும்``.l
என்னும் சிவப்பிரகாசச் செய்யுளைக் காண்க. முத்தி, இங்குப் பரமுத்தி தவிர ஏனைய. ``கரியுண் விளவின் கனி`` என்ற உவமையால் இது விளங்கும். முன்னர் ``இரும்புண்ட நீர்`` என வேறு உவமை கூறப்பட்டவாறு அறிக.
இதனால், சிவன் உலகத்தையும், உயிர்களையும் அவற்றின் தன்மைகளைத் திரித்துத் தன்வண்ணம் ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அந்தமும் ஆதியும ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே.

பொழிப்புரை :

சிவபெருமான், அனைத்துப் பொருள்கட்கும் அந்தமும், ஆதியுமாய் உள்ள பெரும் பொருளாய் நின்று, பல உயிர்களும் அடையும் பலவேறு அவத்தைகளில் தடத்த சிவனாய் எல்லாம் அவற்றிற்குத் தலைவனாய்ப் படிமுறையால் அவைகளை உயர்த்தி, முடிவில் சொரூப சிவனாய் அவனது ஞானமே கண்ணாக உணரும் ஞானத்திற்கு ஞேயமாய் இருக்கின்றான். அவனது செயல்களை நாம் அறுதியிட்டு அறியமாட்டோம்.

குறிப்புரை :

``நந்தி`` என்பதை முதலிற் கொள்க. `இயற்கையில் அந்தமும், ஆதியும் ஆகும் பராபரனும், உயிர்களின் அவத்தை வேறுபாடுகளில் தத்தமக்குப் பராபரனும், முடிவில் தன்னில் தான் ஆன பரமும் ஆகி நம்மை உண்டு, அந்தத்து ஞானத்திற்கு ஞேயமாய் இருந்தனன். அவற்றை யெல்லாந் நாம் அறியோம்` என இயைத்து முடிக்க உண்ணுதல் மேற்கூறிய வேழம் உண்ட விளங்கனிபோல ஆகும்படி உண்ணுதல். `ஆதலுடன் கூடி` என முன்னும் பின்னும் ஓரோர் சொல் வருவிக்க. ஆதல் - ஆதற்றன்மை.
இதனால், சிவன் உலகை உண்ணும் முறைகளையெல்லாம் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி