எட்டாம் தந்திரம் - 38. வாய்மை


பண் :

பாடல் எண் : 1

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.

பொழிப்புரை :

உயிர்கள் அடையத் தகும் முடிவான பயனை கூறுமிடத்து, அது வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் ஒருமித்த பொருளேயாகும். அதுமேலே சொல்லப்பட்டது. அந்தப்பயன், இறைவன், உயிர்கள் பாச பந்தங்களினின்றும் முற்றாக நீங்கத் திருவுளம் பற்றி, தான் அந்தப் பந்தங்களை நீக்கும் செயல்களைக் குறைவின்றிச் செய்தால் தீயில் இட்டு மாசுக்களை நீக்க நீங்கிய பொன்போல உயிர்கள் தன்னைச் சூழ்ந்துள்ள இருளை ஓட்டி ஒளிவிடுகின்ற விளக்குப்போல ஆகி, பந்தங்கள் அனைத்தையும் துரத்தி விளங்கும்.

குறிப்புரை :

அற்றது - முடிந்த பயன். இதன்பின், `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ``கனலிடை`` என்பதை அவ்வடியின் முதலிற் கூட்டி, அவ்வடியை ஈற்றுக்கு அயலிற் கூட்டுக`. ``இறை`` என்பதையும் அவ்வடியின் முதலிற் கூட்டுக. ``அற்று அற`` என்னும் ஒரு பொருட் பன்மொழி, `முற்றாக` எனப்பொருள் தந்தது ``அற`` , என்றதும், `முற்ற` என்றபடி. `திருவுளம் வைத்து` என்க. மாற்று - மாற்றுச் செயல்; பரிகாரம் ``ஆகும்`` என்பதற்கும், `உயிர்` என்னும் எழுவாய் வருவிக்க. ஆக்கம், உவமை குறித்து நின்றது.
இதனால், ஒருமொழி மகாவாக்கியங்களே உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுகின்ற புணையாகும்` என்பதும், (அம்மகா வாக்கியங்களில் தலையாயது திருவைந்தெழுத்து` என்பதே சித்தாந்தம். ``அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை`` (திரு வாசகம் - திருச்சதகம் - 27) எனவும், ``இருவினைப்பாசம் மும்மலக் கல் ஆர்த்திட - வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட - அருளும்மெய் அஞ்செழுத்து`` (பெரிய புராணம் - அப்பர் - 129.) எனவும் போந்த திருமொழிகளைக் காண்க). `அதுவும் இறைவனது அருளால் உரிய காலத்தில் பெறத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டே
எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை
எல்லாம் அறியும் அறினை `நான்` என்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.

பொழிப்புரை :

உயிர்கள் இறைவனைத் தவிர மற்றை எல்லாப் பொருள்களையும் அறிதல் அவற்றிற்குப்பந்தமாகும், அதனைக் குருவருளால் நீங்கிச் சிவனைப்போல முற்றறிவைப் பெற்றபின்னும் இறைவனைத் தவிர வேறுபொருள்களை அறிவதில் பேறு ஒன்றும் இல்லை. (மாறாக, இன்ப இழப்பே உளதாகும், ஏனெனில், பிற எல்லாம் துன்பப் பொருள்களேயாதலின). ஆகவே `சிவன் நான்` என்னும் அந்த ஒற்றுமை உணர்விலே நிலைத்து நிற்பின், உயிர் இறை நிலையினின்றும் பிறழாதிருக்கும்.

குறிப்புரை :

முதல் இரண்டடிகள் முறையே பாச நீக்கத்தையும், சிவப்பேற்றையும் குறித்தன. `சிவப்பேறு பெற்றும் பயனில்லை` என்றதனால், அதற்குரிய காரணம், ``எல்லாம்`` என்றதனால் குறிப்பால் பெறப்பட்டது. `இறையே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. `திருவருளைப் பெற்றபின்னும் அது கண்ணாக இறைவனையே உணர்ந்து அவனிடத்து அடங்கி நில்லாது, தற்போதத்தால் பிறவற்றை யுணர்தல் மீட்டும் பந்தமாம்` என்பதனை,
``பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்?
அக்கொழு நீ அறிந் துந்தீபற;
அறிந்தறி யாவண்ணம் உந்தீபற`` *
என்னும் திருவுந்தியாரால் அறிக. ``அறிந்து, அறியா வண்ணம்`` திருவருளாலே யறிந்து, தற்போதம் தலை யெடாதபடி நில்.
``எல்லாம் அறியும் அறிவுறினும், ஈங்கிவர் ஒன்(று)
அல்லா தறியார் அற`` *
என்றார் உமாபதிதேவர்.
இதனால், `உபதேச நிலையினின்றும் பிறழாது உறைத்து நின்ற வழியே பயன் உளதாம்; இல்லையேல் அஃது இழக்கப்படும்` என்பது கூறப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``தலைநின்ற தாழ்வரை மீது தவம் செய்து`` என்னும் மந்திரம் அடுத்த தந்திரத்து, `சொரூப உதயம்` என்னும் அதிகாரத்தில் வருவது].

பண் :

பாடல் எண் : 3

தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும்.

குறிப்புரை :

இங்கு, ``தான்`` என்பன வடமொழி வழக்குப் பற்றிப் பொதுமையில் வாராது, தமிழ்வழக்கே பற்றி மேலெல்லாம் சிறப்பாக எடுத்து வலியுறுத்திப் போந்த சிவபெருமானை உணரச்சிறப்பாகவே வந்தது. `அல்லாக்கால், இம்மந்திரம் நின்று வற்றும்` என்க. `மாமறை வழி ஒழுக வானே மழை பொழியக் கூர்ந்திடும்` என ஒருசொல் வருவித்து இயைத்து முடிக்க. ``பொழி`` என்னும் முதனிலையே, `பொழிய` என வினையெச்சப் பொருள் தந்தது. ``வானே`` என்னும் பிரிநிலை ஏகாரம், ``வானின்றமையா தொழுக்கு``3 என்பதை விளக்கி நின்றது. `ஊனே` என்னும் தேற்றேகாரம், `உருகமாட்டாதது ஊன், அதுவும் உருகுதற்கு ஏதுவாய் நின்ற உள்ளம்` என்னும் பொருளைத்தோற்றுவித்தது. ``உருகிய`` என்னும் பெயரெச்சம், ``உள்ளம்`` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. அப்பெயர்விடாத ஆகுபெயராய் அதனையுடைய ஆன்மாவைக் குறித்தது. இனால், முன் மந்திரங்களில், ``இறை`` என்றும் ``எல்லாம் அறிந்த அறிவன்`` என்றும் கூறப்பட்ட முதல்வன் சிவபெருமானே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

பொழிப்புரை :

`திருவருளைப் பெற்றவர் அதனைப் பெற்றது எதன்பொருட்டு` என்று அறிய விரும்பினால், அவர் அத்திருவருளால் மலம் நீங்கப்பெற்ற தமது அறிவுகள் அத்திருவருளே கண்ணாக அத்திருவருட்கு முதலாகிய சிவத்தை ஆராய்ந்து அவ்வாராய்ச்சியால் முன்பு நீங்கிப்போன மலத்தின் வாசனை தங்கியுள்ள தங்களது அறிவை அவ்வாசனையும் அற்ற தூய அறிவாய் நிற்கும்படி செய்து, இங்ஙனம் அரிதிலே பெறப்பட்ட பொருளாய் உள்ள இவனது திருவடியையே விடாது பற்றி, அவற்றின்கீழ் அடங்கியிருப்பர்.

குறிப்புரை :

`அவர் திருவருள் பெற்றது இந்நிலையை அடைதற் பொருட்டே; வேறொன்றின் பொருட்டன்று` என்பதாம்
``யாஅம் இரப்பவை,
பொருளும், பொன்னும், போகமும் அல்ல, நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும்
உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே``9
என்னும் சான்றோர் மொழியினை எண்ணுக. இம்மந்திரத்தின் பொருளைச் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தாலும், அதன் உரையாலும் உணர்க. `எனகொல் என அறிய` என ஒருசொல் வருவிக்க. அமர்தல் - விரும்புதல். சிந்தை, அறிவைக் குறித்த ஆகு பெயர். முன்னர், `சிந்தையின் கண்` என ஏழாவது விரிக்க. `அருமைப் பொருளாய்` என ஆக்கம் விரிக்க. தாம், அசை, ஏகாரம், தேற்றம்.
இதனால், மேல், ``எல்லாம் அறியும் அறிவுதனை விட்டே`` என்னும் மந்திரத்திற் கூறியது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.

பொழிப்புரை :

எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.

குறிப்புரை :

``மெய், பொய்`` என்ற பொதுமைகள், உலகியல் அருளியல் இரண்டிலும் உள்ள வாய்மை பொய்மைகளை உணர்த்திநின்றன. அதனால் உலகியலிலும் பொய்யைப் பற்று கின்றவர்களைச் சிவன் வெறுத்தல் விளங்கிற்று. ``கரவாடும் வன் னெஞ்சர்க்கு அரியானை``, 3 `கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்`` l ``வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார் - நஞ்சநெஞ்சர்க் கருளும் நள்ளாறரே`` 9(நஞ்ச - நைந்த; உருகிய) என அப்பர் கடிந்தோதியருளிய திருமொழிகளைக் காண்க. கரத்தல் - உள்ளதை `இல்லை` என மறைத்துக் கூறுதல். அது பொய்ம்மையே யாதல் அறிக.
``நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும்கண்டு,
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே``*
என அவர் அருளியல் பற்றிச் சிறப்பாக ஓதியருளினமையும்,
``யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என்
அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே. 8
என ஆளுடைய அடிகளும் அவ்வாறே அருளிச் செய்தமையும் உணரற்பாலன. மெய்கலந்தான் - நேரே விளங்கிக் கலந்தான். ஏனையோர்பால் விளங்காதே கலந்திருப்பான் என்க. இரண்டன் உருபுகள் ``உய்கலந்து`` என்பதில் கலத்தலோடு முடிந்தன.
உய்கலந்து - உய்யக்கலத்தலால். கலப்பவர் மெய்யர். கலத்தல், உணர்வால் ஒன்றுதல். `மெய்யர்க்கே`` என்பதை இதன்பின் கூட்டுக. `மெய் கலந்த` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மெய் - நிலைபேறு.

பண் :

பாடல் எண் : 6

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக்
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற்கூறிய அத்தகைமையனாகிய சிவனை, ஆவி உடலைவிட்டு நீங்கும் காலத்தில் நினைத்தல், அதற்கு முன்னெல்லாம் இடைவிடாது நினைந்தவர்கட்கே கூடும்.

குறிப்புரை :

`ஆதலின் அவ்வாறு இப்பொழுதே நினையுங்கள்` என்பது குறிப்பெச்சம். `உயிர்போங் காலத்து நினைத்தல் அரிது` என்பதை,
`` ... ... ... ... ... கடல்நாகைக்
காரோண, நின்
நாமம் பரவி, நமச்சிவா யவ்வெனும்
அஞ்செழுத்தைச்
சாம்அன் றுரைக்கத் தருதிகண்டாய்,
எங்கள் சங்கரனே`` 9
என்பதனாலும், `அவ்வாறு நினைந்தவழியே அவனை யடைதல் கூடும்` என்பதை,
``உன்னை நினைந்தே கழியும் என் ஆவி`` 3 என்பதனாலும் உணர்க. இறக்குங் காலத்தில் வினையின்வழி எந்த நினைவு உயிருக்கு உண்டாகின்றதோ, `அந்த நினைவின்படியே அஃது அடுத்த பிறப்பை அடையும்` என்பதை
``மரிக்கும்போ(து) உன்னும் வடிவமதை ஆவி
பரிக்கும் நினைவு பரித்து``
என்பதனாலும்,
``ஆதலினால் சுற்றத் தவரைநினை யா(து) அமலன்
பாதம் நினைக பரிந்து`` *
என்பதனாலும் அறிக.
மூன்றாம் அடியில், `கைகலந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஆவி கலந்திருத்தலும், எழுந்து போதலும் உடலிடத்து` என்பது வெளிப்படை. ``கருத்துறல்`` என்பதை ``எழும்போது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. பின்வந்த, `கைகலத்தல்` என்பது, எப்பொழுதும் இடைவிடாது கலத்தலைக் குறித்தது.
இதனால், உய்திவேண்டுவோர் தப்பாது செயற்பாலது இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன்
மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில்
ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.

பொழிப்புரை :

ஒருவன் எய்தற்கரிய மானுடப் பிறவி தனக்கு எய்தி யிருப்பதையும், அதன் நிலையாமையையும் உணர்ந்து காலை, மாலை இருபொழுதும் சிவன் வகுத்த உலகியல் அருளியல் இரண்டிலும் வாய்மையையே கடைப்பிடித்து ஒழுகுவானாயின்` அதுவே வருங்காலத்தில் அவன் பயனடைதற்கு ஏற்ற நெறி முறையாகும். சிவபெருமானும் அவ்வழியில்தான் புலப்பட்டு நிற்பான்.

குறிப்புரை :

`ஆகவே, எவ்வகையிலும் பொய்மையைப் பற்றாதொழிக` என்பதாம்.
``பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று`` *
எனவும்,
``பொய்கடிந்(து) அறத்தின் வாவ்வார்;
புனற்சடை முடியார்க்கு அன்பின்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்`` 8
எனவும் அருளிச்செய்தமை காண்க. செய்தல், சொல்லாலும், செயலாலும் நிலைநிறுத்துதல். `சிறிதளவு காலத்தையும் பொய்மையில் செலவழித்தல் கூடாது` என்பது, ``எய்திய காலத்து இருபொழுதும் சிவன் - மெய்செயின்`` எனப்பட்டது.
இதனால், `உய்தி வேண்டுவார்க்குப் பொய்மை கூடாது` என்பது வலியுறுத்தப்பட்டது. ஐம்புல விருப்பமே பொய்க்குக் காரணமாகும்` என்பதைக் குறிக்க அதுவும் உடன் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி
பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

பொழிப்புரை :

யாதானும் ஒன்று கிடைப்பது அல்லது கிடையாது ஒழிவது ஆகிய இந்நிலையை திருவருளால் அமைவது. இதனை உத்தம குருவாகிய எங்கள் புகழ்மிக்க நந்திபெருமான் நாங்கள் உய் வடைதற் பொருட்டு எங்கட்கு அருளிச்செய்தார். ஆகவே, ஒன்றைப் பெற வேண்டியோ, அல்லது போக்க வேண்டியோ பொய்யை மேற் கொள்ளத் தேவையில்லை. ஆயினும் யோகியரே இந்நிலைமையைத் தெளிபவர்கள். அந்த யோகம் வாய்க்கவேண்டினால், பொய்ப் பொருளிலே பூசையை உண்டாக்குகின்ற நவத்துவாரங்களையும் அடைத்தலாகிய இமய நியமங்களைக் கைக்கொளல் வேண்டும். கைக்கொண்டால் உண்மையான வாசியோகம் எளிதாக அமையும்.

குறிப்புரை :

ஐம்பொறிகளில் மெய் தவிர ஏனைய நான்கும் ஏழு துளைகளாய் உள்ளன. கன்மேந்திரியங்களில் எருவாய், கருவாய் இரண்டைக் கூட்ட ஒன்பது துவாரங்களாம் `எருவாய்` வழியாக அபானனைத்தடுக்க வேண்டும்` என்பதும் யோக நூல் முறைமை, `உலகத்தார் ஊர்வன பொய்க்குதிரை` என்றற்கு வாசி யோகத்தை ``மெய்யென் புரவி`` என்றார்.
இதனால், `வாய்மையை நன்கு கடைப்பிடித்தற்கு வழி யோகம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை
மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப்
பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.

பொழிப்புரை :

(இவ்வதிகாரத்துள் முன்பே இரு மந்திரங்களில் கூறியபடி) வாய்மையாளரையே விரும்புதலும்` பொய்ம்மையாளரை வெறுத்தலும் உடையவனும், எல்லா உயிர் உள்ளங்களிலும் உள்ளவனும், வேத முதல்வனும் ஆகிய சிவபெருமானைப் பொய்யை யொழித்து, மெய்யாகப் பற்றினவர்க்கே அவன் புகலிடமாவான். (``மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து * செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே`` என அருளிச்செய்தார் ஆளுடைய பிள்ளையாரும்).

குறிப்புரை :

இரண்டன் உருபுகளை, `ஒழிந்து பற்றினார்க்கே` என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், பொய்யாமையானே முன் மந்திரத்திற் சொல்லிய திருவருள் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப்
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு)
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.

பொழிப்புரை :

உயிர்களின் உள்ளங்களாகிய கோயிலுக்கு உள்ளே சிவபெருமான் தனது நிலையான திருவடிகளை விரும்பி வைத்து விளங்குகின்றான் அக்கோயில் பூட்டப்பட்டுள்ளது. ஆயினும் அப்பூட்டைத் திறத்தற்குரிய திறவுகோல்கள் மக்கள் எல்லாரிடத்திலும் உள்ளது. இருந்து அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி அந்தப் பூட்டைத்திறந்து சிவனைத் தரிசிப்பவர் யாரும் இல்லை. அதற்குக் காரணம், அருவருக்கத் தக்க பொருள்களைப் பொதித்து வைத்து மூடியுள்ள பைகளை அவர்கள் `பொய்` என்கின்ற கயிற்றால் இறுகக் கட்டி, அவற்றைக் காவல் புரிந்து கொண்டிருப்பதாகும். மாணவகனே, நீயும் அவர்களைப்போல இருந்தும் விடாமல் அந்தப்பைக் காவலை உண்மையாகவே விட்டு, உன் கையில் உள்ள அந்தத் திறவுகோலால் அந்தக் கோயிலைத் திறப்பாயாயின், கிடைத்தற்கரிய பேறு உனக்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

``தாள்மேவிய`` எனச்சினைவினை முதல்மேல் நின்றது. கைத் தாழ் - இயல்பாகவே கையில் இருக்கின்ற திறவுகோல். என்றது, பிராணனை. பொய்த்தாழ் - பொய்ம்மையாகிய திறவுகோல். தாழ் இடுதல் - பூட்டுதல், பின்னர், `பை` என வருதலால், இவை பையைக் கட்டுகின்ற கயிற்றையும், கட்டுதலையும் குறித்தன. பையாவது உடம்பு.
``இடும்பைக்(கு) இடும்பை இயல்உடம்பி தென்றே
இடுபொய்யை மெய்யென் றிராதே`` 9
என ஔவையாரும் கூறினார். `பைம்மறியாப் பார்க்கப்படும் 8என்பது நாலடி பின் இரு தாள்கள் `தாழ்` என்பதன்மரூஉ. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், `வாசியோகத்தால் சிவனைத்தரிசித்தல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

பொய்ம்மையைச் சிறிதும் இல்லாது உறுதியாக அப்பாற்போக்கி, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் வாய்மை விளங்க நிற்பாரது நடுவிலே சிவனும் விரும்பி எழுந்தருளி யிருக்கின்றான். ஆகையால், உய்தியின் பொருட்டு, அந்த நிலைமையை உணர்ந்து சிவனைத் துதியுங்கள் அப்பால், மெய்ம்மையின்கண் உள்ளவனாகிய சிவனை அடையும் வழிதானே கிடைப்பதாகும்.

குறிப்புரை :

``திண்ணென`` என்பது தொடங்கி உரைக்க. ஒன்றும் - சிறிதும். புறத்திலும் வாய்மை பொலிதலாவது, கொள்ளும் கோலங்கள் அகத்தில் கொள்ளும் எண்ணங்களுக்கு ஏற்றவையாய் யிருத்தலும், நெஞ்சில் கரவு இன்மையால் முகம் மகிழ்ச்சியாற்பொலிதலும் போல்வன. நடு அங்கே - நடுவாகிய இடத்திலே. அமர்ந்து - விரும்பி. ``அடியார் நடுவுள் இருவீரும் இருப்பதானால்``l என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார்.
இதனால், `அகத்தும், புறத்தும் வாய்மையால் விளையும் தூய்மையே சிவநெறியும் ஆகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

 வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து)
அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே

பொழிப்புரை :

நறுமணம் மிக்க மலர்களினின்றும் காய்த்துப் பழுத்த நல்ல பழம் ஒன்று தோட்டத்தில் உள்ளது. அதனை தோட்டத்தில் விளைவித்தவன் உண்ணாதபடி ஒரு கொடிய பறவை வந்து கொத்தித் தின்கின்றது. அஃது அவ்வாறு செய்யாதபடி வில்லில் அம்பைத் தொடுத்து எய்து பறந்தோடும்படி ஓட்டினால் சிவந்த பொன்போலும் கிடைத்தற்கரிய சிவகதியைச் சென்று அடையலாம்.

குறிப்புரை :

முன் மூன்று அடிகள் ஒட்டணியாய் நின்றன. மலர்கள், ஆறு ஆதாரங்கள். மணம் - தெய்வமணம். பல மலர்கள் பூத்துப் பொலிய, அவற்றின் பயனாக ஒருகாயே காய்த்துப் பழுத்த அரிய பழம் சிவம் `வம்பு மலரிற் பழுத்த பழம்` என மாற்றியுரைக்க தோட்டம் - உடம்பு. தோட்டத்தை உடையவனாய், அதில் பயிர் செய்பவன் யோகி. பறவை - பொய்ம்மை. சிவத்தை மறைத்து விடுவதால், அதனை அப்பழத்தை உண்ணும் பறவையாகக் கூறினார். எய்தற்குரிய `வில், நாண், அம்பு` இவை என்பது மேலே கூறப்பட்டது. 3
இதனால், பொய்மை அகலப்போக்குதற்குப் பிரணவயோகம் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன்எம் பெருமான்
உயப்போ கெனமனம் ஒன்றுவித் தானே.

பொழிப்புரை :

தன் அடியார்களுடைய ஐம்புல ஆசையாகிய பாசங்களைப் போக்கி, அவர்கள் கலக்கத்தை நீக்கித் தெளிவைத் தருகின்றவன் சிவன் ஆதலின், அவனை அறிவினாலே பற்றுங்கள்; பற்றினால், அவன் சற்றும் தாழாது, உங்களை `உய்யப் போக` எனத் திருவுளம்பற்றி, உங்களுடைய மனங்களை ஒருவழிப்படுத்துவான்.

குறிப்புரை :

துயக்கறுத்தமை தம்மை உள்ளிட்ட பலரது அனுபவம் பற்றிக் கூறினார். அறிவால் தொடர்தல், சரியை, கிரியை யோகங்களில் இயன்றவாற்றால் பற்றுதல். என்னை? தொடர்ந்து நிகழ்வன அவையேயாதலின். `மனம் பல வழியிற் சென்று அலைதலானே அது பொய்ம்மையையும் ஏற்கின்றது; ஆகவே, மனம் ஒருவழிப்படின் பொய்ம்மையும் இல்லாதொழியும்` என்பதாம். `போக` என்னும் வியங்கோளின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. தெளிவுபற்றி எதிர்காலம் `ஒன்று வித்தான்` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், `யோகம் இயலாதவர் சரியை கிரியைகளாலாயினும் பொய்ம்மையைப் போக்கற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

மனமது தானே நினையவல் லாருக்(கு)
இனம்எனக் கூறும் இருங்காயம் ஏவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

பொழிப்புரை :

ஒருங்கிய மனம் தானாகவே சிவனை நினைக்கும் நிலையுடையதாகும். அந்நிலைக்கு மனத்தைக் கொணர வல்லவர் கட்கு, அனைத்துயிர்க்கும் துணையாகின்ற முறையில் அவர்கட்கு அமைந் துள்ள தூல உடம்பும் அவர் ஏவியவற்றையே செய்யும் ஏவலாளியாய்க் கீழ்ப்படிந்து நிற்கும். அக்கீழ்ப்படிதலைக் கொண்டு சிவன்பால் ஏற்புடைய செயல்களைச் செய்தால், இப்பிறப்பிலேயே அவர் செய்யும் செயல்கள் எல்லாம் மிகவும் சிவன் செயலேயாய்விடும்.

குறிப்புரை :

`அவர்கட்குப் பந்தம் ஆகா` என்பதாம். ``நினைய`` என்பதன்பின், `செய்ய` என ஒரு சொல் வருவிக்க. ஏவல் தணிவு - ஏவலிற்படும் பணிவு. தக்கன சரியை கிரியா யோகங்கள். `புவிக்கே போதப் புனிதன் செயல் ஆகும்` என இயைக்க. புவி - நில உலகம். இதனால், `இப்பிறப்பு` என்பது குறிக்கப்பட்டது. ``புவிக்கு`` என்பது உருபு மயக்கம். போத - மிகவும்.
இதனால், முன் மந்திரத்திற் கூறியவாறு மனம் ஒருமிக்கச் செய்தலின் பயன் கூறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாயும் ஆயிற்று.
``மெய்ம்மையாம் உழவைச் செய்து,
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்பராகில்
சிவகதி விளையு மன்றே`` *
என்னும் அப்பர் திருமொழியை இவ்வதிகாரத்துடன் கூட்டியுணர்க.
சிற்பி