எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்


பண் :

பாடல் எண் : 1

முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர்
பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

பொழிப்புரை :

தம்மை நன்குணர்ந்தபின் தலைவனையும் உள்ளவாறு அறிந்தவரே (சிவஞானபோதம் - அவையடக்கம்) உண்மைத் தத்துவஞானிகள். அவர்கள் பிராரத்த வினைதோன்றினால், `இது நாம் முகந்துகொண்டு வந்தது, இதனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்` என்று உணர்ந்து அதன் பயனாகிய இன்பத்தில் விருப்பமும், துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் கடன்கழிப்பார்போலப் பற்றற்றே ஐம்புலன்களை நுகருமாற்றால் அவ்வினையினின்றும் நீங்குவர். (பற்றுச்செய்யா மையால் அவ்வினை அவர்தம் உணர்வைத் தாக்காமல். உடலையே தாக்கி ஒழியும்) விருப்பு வெறுப்பு இன்மையால் இன்பத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், துன்பத்தை விரைவில் ஒழிக்கவும் அவர்கள் எண்ணமையால், அவர்கள் ஆகாமிய வினையில் வீழ்தல் இல்லை. அதன் தோற்றத்தை நிகழாதபடி தடுத்து விடுவார்கள்.

குறிப்புரை :

`அதனால், உடம்பு நீங்கியபின் அவர்கள் அடைவது வீடு பேறேயன்றிப் பிறவியன்று` என்பதாம். ``தன்`` என்பதை, `தலைவன்` என்னாவிடில், ``ஞானிகள்`` என்னும் பன்மையோடு இயையாமை அறிக. ஈற்றடியை, ``முன்னை வினைவரின்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``வினைக்கு`` என்பது உருபு மயக்கம். அண்ணார் - சேரார்.
இதனால், ஞானிகள் பிறப்பை அறுத்துக்கொள்ளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறிய அந்த ஞானிகள், அம் மந்திரத்தில் கூறியபடி தாங்கள் வினையினின்று நீங்குதலோ டல்லாமல், தங்களைச் சிவமாகக் கருதி வந்து அடைந்தவர்களது வினைகளையும் சிவனது திருவருள் வியாபகத்தில் நின்று நீங்கியருள்வார்கள்.

குறிப்புரை :

இதனை மெய்கண்டதேவர், ``தம்மையுணர்ந்து தமையுடைய தன் உணர்வார் - எம்மை யுடைமை` (சிவஞான போதம் - அவையடக்கம்) எனவும்,
``சிவன் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்துவான்`` என்றல் இத்தகைய ஞானிகளைச் சிவன் அவர் தானேயாக ஆவேசித்து வந்து அருள்புரிதலையே என்பதை, அவர்,9
``இவ்வான்மாக்களுக்குத் தமது
முதல்தானே குருவுமாய்
உணர்த்தும் என்றது,
அவன் அன்னியமின்றிச் சைதன்னிய
சொரூபியாய் நிற்றலான்``l
எனவும் அருளிச் செயதைமையால் உணர்க.
முன் மந்திரத்தில் ``வரின்`` என்றதனால், ``முன்னைவினை`` என்றது பிராரத்துவமும், இம்மந்திரத்தில், ``முடிச்சு`` என்றதனால் ``முன்னை வினை`` என்றது சஞ்சிதமும் ஆயின. வருவதற்கும், முடிச்சாய்க் கிடத்தற்கும் உரியன அவையேயாகலின், ``அவிழ்ப்பர்`` என்றது, வினைகள் பின் நின்று விளையாது உருண்டோட வீழ்த்துவர் என்றதாம். முடிச்சு - மூடை. பின்னை வினை, ஆகாமியமே. அதனைப் பிடித்துப் பிசைதலாவது, அது தோன்றும் பொழுதே மாணாக்கரது உள்ளத்தில் தம்மையும், தமது உபதேச மொழியையும் நினைவு கூர்விக்கு மாற்றால் அவற்றின் கொடுமையையும் நினைந்து அஞ்சச்செய்து முற்றாதபடி போக்குதல். ``சென்னியில் வைத்த`` என்றது, அது மேலாய் நிற்கத் தாம் அதன் கீழாய் அடங்கி நிற்றல். அதனால் அவரது செயல் சிவன் செயலேயாதல் உணர்த்தப்பட்டது, ``திருவருளாலே`` என்றதனால் சிவசமவாதம் கூடாதியிற்று.
ஞானிகளாவார் குருவருள் பெற்றவர்களே. அவர்களது `சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம்` - என்னும் மூவகை வினைகளுள் சஞ்சிதம் ஞான தீக்கையால் எரிசேர்ந்த வித்துப் போலக்கெட் டொழியும். பிராரத்தம் அனுபவத்தால் தீரும். எனினும் அஃது அவர்களது உணர்வைத் தாக்காது உடலளவாய் ஒழிதலால், ஆகாமியத்தை உண்டாக்காது. சோர்வு காரணமாக ஒரோவழி ஆகாமியம் தலை யெடுக்குமாயினும் அது உடனே அவர்களது குருலிங்க சஙகமங்களைப் பற்றிய மனமொழி மெய் வழிபாடுகளால் முறுகுதலின்றிக் கெடும். இவ்வாற்றால் ஞானிகள் தாம் வினையினின்று நீங்குதலேயன்றித் தம்மை யடைந்த பக்குவிகளுக்கு ஆசிரியராய், அவர்களது வினையையும் நீக்குவர். இஃதே இம்மந்திரத்தால் கூறப்பட்டது. இங்ஙனம் கொள்ளாக்கால், கூறியது கூறலாய், இதனாற் போந்த பொருள் ஒன்றும் இல்லையாம். ``சென்னியில் வைத்த திருவருளாலே`` எல்லாம் செய்தல் மேற்பல விடத்தும் கூறப்பட்டமையால், அதனையே கூறுதற்கு இங்கொரு மந்திரம் வேண்டா.
மூன்று வகையான வினைகளும் நீங்கும் முறை மேற்கூறிய வாறே யாதலை,
``எல்லையில் பிறவி நல்கும்
இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்; ஏன்ற
உடல் பழ வினைய தூட்டும்;
தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத்(து)
அழல் உற அழிந்து போமே``l
என்னும் சிவப்பிரகாசத்தாலும்,
``ஏன்ற வினை உடலோடு எகும் இடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும்`` -திருக்குறள் - 98.
என்னும் திருவருட்பயனாலும் அறிக. மற்றும்,
``உணக்கி லாததோர் வித்து மேல் விளையாமல்
என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம்
நீ வந்து காட்டினாய்``
-திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் - 1.
சிவமேயான ஞானிகள் பக்குவிகளுக்குச் சிவமாகவே தோன்றுவர். அதனால் அவர்களைக் கண்டவுடன் பக்குவிகள் தம்மையிழந்து அவர்பால் அடைக்கலம் புகுவர். ஞானிகளும் அவர்களது பக்குவத்தை உணர்ந்து அவர்களைத் தங்கட்கு ஆளாகக் கொண்டு, அருளுதலைச் செய்வர். இவற்றையெல்லாம் ஆசிரியர் அருணநந்தி தேவர், உமாபதி தேவர் வரலாறுகளின் வைத்து அறிக.
இதனால், ஞானிகள் தாங்கள் நலம் பெறுதலேயன்றிப் பிறரையும் நலப்படுத்துதல் கூறப்பட்டது. இந்நாயனார்,
``நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்``
எனத் தொடக்கத்திற்றானே அருளிச்செய்தது நினைக்கற்பாலது.

பண் :

பாடல் எண் : 3

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால்
தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே.

பொழிப்புரை :

உயிர்களின் மனமும், வாக்கும், காயமும் நேர்முறையில் செயற்படாது, கோடும் முறையில் செயற்பட்டால் உயிர்கட்கு, நீக்குதற்கரிய வலிய வினைகள் உளவாகும். அவை அவ்வாறின்றி, நேர்முறையில் செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படாது. (எனினும் அஞ்ஞானமுடையவர்களது மனோவாக்குக் காயங்கள் நேர்முறையிற் செயற்படமாட்டா). இனி ஒருவன் அஞ்ஞானத்தின் நீங்கிமெய்ஞ்ஞானத்தைப்பெற்று, மனோ வாக்குக் காயங்களின் பிடியில் அகப்படாது விடுபட்டானாயினும், பழைய வாசனை காரணமாக ஒரோவழி அவை தம்மியல்பில் வந்து அவனைத் தாக்குதல் கூடும். அப்பொழுது அவன் தற்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உடையவனாய் அவற்றைச் செயற்படுத்தினால், அவன், `ஞானி` என்னும் நிலையினின்று நீங்கான்.

குறிப்புரை :

ஞானிகள் அவ்வாறுதான் அவைகளைச் செயற்படுத்தி நிற்பார்கள்` என்பது குறிப்பெச்சம். மனோ வாக்குக் காயங்கள் நேர் முறையில் செயற்படுதலாவது, `நாம் செயற்படுவது திருவருளால்` என்பதை மறவாமல் நினைந்து, தமது செயலை இறைவனது பணியாகக் கருதிச் செயற்படுதல். உடையானது நேர்மை, நேர்மை இன்மைகள் உடைமைகளின் மேல் ஏற்றிச்சொல்லப்பட்டன. ``தன்`` என்றது தற்போதத்தை, தற்போதத்தால் நுகராது சிவபோதத்தால் நுகரின் சிற்றின்பமும் பேரின்பமேயாகும். இதனை,
``பெற்றிசிற் றின்பமே பேரின்ப மாம்அங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற,
முளையாது மாயையென் றுந்தீபற`` -திருவுந்தியார் - 33.
எனவும்,
``உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத்(து) ஆக்கில் - தொடங்கி
முளைப்பதுமொன் றில்லை, முடிவதுமொன் றில்லை; இளைப்பதுமொன் றில்லை இவர்``
-திருக்களிற்றுப்படியார் - 76.
எனவும் போந்த சாத்திரங்களாலும், மற்றும்,
``காணும் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும் பெரியான்`` -திருவாசகம் - பண்டாய நான்மறை - 6.
என்னும் திருமொழியாலும் உணர்க. வாதனை - வாசனை. தன், சாரியை. வாதனையால் விளைவன ``வாதனை`` எனப்பட்டன. ``வாதனைதன்னால்`` என்னும் மூன்றாம் உருபை, `வாதனைதன்கண் என ஏழாம் உருபாகத் திரிக்க.
இதனால் ஞானிகள் பிராரத்தம் காரணமாகப் பழைய வாசனை தோன்றும்பொழுது அதனால் திரிபெய்தாது நிற்குமாறு கூறப்பட்டது.
சிற்பி