எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்


பண் :

பாடல் எண் : 1

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.

பொழிப்புரை :

வாசி யோகத்தின் பெருமையையும், அதிற் பயிலும் யோகியின் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, ஞானிகளும் விரித் துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிரல் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும் உயிர்ப் பொருள்கள்மேல் செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீவிர் இறை நிலையை அடைதல் எளிதாகும்.

குறிப்புரை :

`இல்லையேல், அரிதாகும்` என்பதாம். மூசுதல் - மூடுதல். மூசி - மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள். பேசி - பேசுபவன். வீண் காலம் போக்குதலை, `பிதற்றுதல் என்றார். அன்பு இல்லறத்தார்க்கே உயிரனவாய் நீங்க, ஞானிகட்கு அருளே உரித்தாதல் பற்றி, அன்பும் அறுக்கப்படவேண்டியதாயிற்று. ``இடம்`` என்றது நிலையை, இதனால், `சொல்லளவாய் நிற்கும் அவா அறுத்தல் ஞானி கட்கும் பயன் தருவதாகாது` என்பது கூறப்பட்டது. ``எனபோல் உடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுவர் ஆர்`` எனத் தாயுமான அடிகளும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

பொழிப்புரை :

சிவன், ஆசையால் மூடப்பட்டுள்ள அந்த மனங் களிலே வெளிப்படாது மறைந்து நின்று, ஆசையற்றவர்களது மனங் களிலே வெளிப்பட்டு விளங்கி, அவர்கட்கு முத்தியைத் தருகின்றான். ஆகையால் அவன், அவனை வைத்து வழிபடுகின்ற மாடம், மண்டபம், கூடம், கோயில், திருவேடம் ஆகிய இவ்விடங்களில் இல்லை.

குறிப்புரை :

மாடம் - இல்லங்களில் சுவர்களில் அமைக்கப்படும் சிறு நிலைகள். அடியார் வேடமும் சிவன் உரையும் இடமாகக் கொள்ளப்படுதல் தெளிவு. `இவ்விடங்களில் சிவன் இல்லை` என்றது, ஆசையுற்ற மனங்களுடன் அவ்விடங்களில் அவனை வழிபடு வார்க்கு. `மூடு அத்துளே நின்று` எனப்பிரித்து, அதனை, வேட்கை விட்டார் நெஞ்சில் முத்தி தந்தான்` என்பதற்கு முன்னே கூட்டி முதற் கண் வைத்து உரைக்க. `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. நின்று - மறைந்து நின்று. `மூடு அத்துளே மறைந்து நின்று` என்றதனால், மூடுதல் இன்றி விளங்கிய நெஞ்சில் வெளிப்பட்டு நிற்றல் பெறப் பட்டது. முன் மந்திரத்து நின்ற `ஈசன்` என்பதே இம்மந்திரத்திற்கு எழு வாயாய் வந்து இயைந்தது.இதனால், `உள்ளத்தில் ஆசை அறா தவர்கள் வெளியில் தனியிடங்களில் சிவனை வைத்து வழிபடுதலால் பயனில்லை, என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய உலக ஆசைகள் அனைத்தையும் நீவிர் கட்டாயமாக அறவே விட்டொழியுங்கள்; அவைகளை விட்டு நீவிர் சிவனை அடைந்தபின்பும் பழைய பழக்கத்தால் அந்த ஆசைகள் மீண்டும் உங்கள்பால் தோன்றுதல் கூடும். அப்பொழுதும் அதனை முளையிலேயே அறுத்தெறியுங்கள்; ஏனெனில் ஆசை மிகுந்து மிகுந்து வருவதால்தான் எந்நிலையிலும் துன்பங்கள் மிகுந்து மிகுந்து வருகின்றன. ஆசையை நீக்க நீக்க, இன்பங்களே மிகுந்து மிகுந்து வரும்.

குறிப்புரை :

அடுக்கு, வயியுறுத்தற்பொருட்டு, `ஈசனிடத்தாயினும்` என ஏழனுருபுபுணர்ப்பினும் அமையுமாயினும் அவ்வாறு புணர்த்தோதாது, ``ஈசனோடாயினும்`` என மூன்றுனுருபு புணர்த் தோதியதனையும் நோக்காது, `ஈசனை விரும்புதலையும் விடுமின்` என உரைப்பாரும் உளர். அந்த விருப்பத்தையும் அறுத்தவர் அடைவது யாது? மீமாஞ்சகரும், தருக்க மதத்தவரும், பாடணவாத சைவரும் கூறும், யாதோர் உணர்வுமின்றிக் கல்லுப்போலக் கிடக்கும் நிலையேபோலும்! ஈசனிடத்திருந்தபொழுதும் உலக ஆசை துன்பந்தருதற்கு நம்பியாரூரர் வரலாறு நற்சான்று பகரும். பின்னிரண்டடிகளில் வந்த ஆக்கம் மிகுதி மேலன.
இதனால், அவா துன்பத்திற்கும், அவா இன்மை இன்பத்திற்கும் காரணம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

பொழிப்புரை :

கொல்வது போலும் துன்பத்தை ஒருங்குகூடிச் செய்வனவே ஐம்பூதங்கள், அவற்றின்மேல் வைக்கின்ற பற்று மீண்டும் மீண்டும் சிக்குதற்கு வழி செய்வதே. அதனால், அந்தப் பற்றினைப் போக்கி, மீண்டும் அவற்றின்மேல் செல்ல எழுகின்ற ஆசையை எழாமல் தடுப்பதே நிலைத்து நிற்கின்ற ஞானமாகும். அந்தப் பூதங்களை மனத்தால் சிறிது தீண்டுதலும் அவை தொடர்தலுக்கு வழியேயாகும்.

குறிப்புரை :

அடுதல் - கொல்லுதல். இங்கு அதனோடொத்த துன்பத்தைக் குறித்தது, ``கொல்லப் பயன்படும் கீழ்``* என்பதிற்போல் ஐந்து பூதங்களும் துன்பம் செய்தலாவது, அவை உடம்பாகி நின்று, நோய், பசி முதலியவற்றைச் செய்தல், எனவே, ``பற்று`` என்றதும் உடம்பிற் பற்றேயாயிற்று. உடம்பிற் பற்றே வேட்கை பலவற்றிற்கும் காரணம் ஆதலை அறிக. உடன் - ஒன்றுகூடி. உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், `ஆசைகட்குக் காரணம் உடம்பின்மேல் பற்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து)
உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.

பொழிப்புரை :

நிறை மதி நாளன்று பொங்குகின்ற கடலைப்போல ஊழிவெள்ளம் தோன்றி உலகை விழுங்கிவிட்டு மறைந்தது. என்றும் கெடாத இன்பக்கடலை இறைவன் தாங்கிக் கொண்டிருக்கின்றான். ஆயினும், வானோரும், மண்ணோரும் ஆசைக்கடலில் மூழ்கியிருந் தமையால் இறைவனது இன்பக்கடலை அடைய மாட்டாது, அந்த ஊழி வெள்ளத்தில் மூழ்கி அழிந்தனரேயன்றி பயன் ஏதும் பெற்றாரில்லை.

குறிப்புரை :

ஈற்றடியை முதலடியின் பின்னர்க்கூட்டி, வானோர், மண்ணோர் அவாக் கடலும் பட்டு அழுந்தினராய், உவாக் கடலுட் பட்டு துஞ்சினர்` என முடிக்க. பின் வந்த ``உவாக்கடல்``, `மேற்கூறிய அந்தக் கடல்` என்னும் பொருட்டாய் நின்றது. ஏனைப் பிறப்புக்கள் பலவற்றினும் சிறந்த பிறப்பினராகிய தேவரும், மக்களும்கூட ஆசையால் ஏனைப் பிறப்பினரே தேவரும், மக்களுங்கூட ஆசையால் ஏனைப் பிறப்பினரே ஆயினர்` என்றபடி. ``அழுந்தினர்`` என்பது முற்றெச்சமாய் நின்றது. அவாக்கடலைத் துன்பக் கடலாக வருணித்தமையால், ``தவாக்கடல்`` என்றது இன்பக் கடலாயிற்று.
இதனால், மக்கள், தேவர் பிறப்பினையும் ஆசை பயனில்லன ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.

பொழிப்புரை :

ஞானிகளாயினார் செய்யும் வீட்டு நெறிச் செயலாவன, (தீக்கையால் எரிக்கப்பட்டு ஒழிந்த சஞ்சித வினைபோக, முகந்து கொண்டு) எஞ்சி நின்ற பிராரத்த வினைத் தாக்கத்தையும், கருவி கரணங்களால் நிற்கும் மாயையின் தாக்கத்தையும் வாசனை யளவாய் நிற்கும் ஆணவத்தின் தாக்கத்தையும் முன்போல நீடியாது (சிவஞானபோதப் பன்னிரண்டாம் சூத்திரத்திற் கூறிய முறையால்) உடனே தடுத்துப் போக்கித் தூய்மையோடிருத்தலும், ஐந்தொழில் முதல்வர் செய்யும் ஐந்தொழிலின்றும் நீங்கிச் சிவனது திருவருளைப் பெற்று அவற்றால் அவனை நேரே கூடி அவனது இன்பத்தில் மூழ்குதலுமேயாகும்.

குறிப்புரை :

`பின்னும் பின்னும் ஆசையில் வீழ்ந்து அழிவதன்று` என்பதாம்.
``தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்``*
என்றருளினார் திருவள்ளுவர். பிணி - கட்டு; நோயுமாம். வினையை முன்னர்ப் பிரித்தமையால் பிணி ஏனையவாயின. `பின்றை` என்பதன் ஈற்று ஐகாரமும் அதன்பின் உம்மையும் தொகுத்தலாயின. ``பின்றை`` என்பது, `மற்று` என்னும் பொருளதாயிற்று. பேர்த்தல் - நீக்குதல் அருள்பெற்று, நேர்த்துன்றி` என இயைக்க. அழுந்துதலுக்கு இடம் ஆற்றலால் பெறப்பட்டது. தூய்மை - வீடு. இஃது அதற்குரிய செயல்களைக் குறித்தது.
இதனால், `ஆசை அற்றொழிதற் பொருட்டு ஞானிகள் செய்யும் செயல்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம்
பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.

பொழிப்புரை :

பொருளியல்புகளை உள்ளவாறு உணருமாற்றால் பொய்ப் பொருள்களில் ஆசையை அறத்தொலைத்து, மெய்ப் பொருளை உணர்ந்து நிற்றலால் அடையப்படும் வீடு பேறே ஒருவனுக்குச் சிறந்த பேறாகும். அவ்வாறன்றிப் பெண்ணாசையை மட்டும் தொலைத்துப் புகழ், பொருள் முதலியவற்றை அவாவி யோகத்தில் நிற்றலால் பெறும் பேறு அட்டமாசித்திகளாம். (அவை பிறப்பை நீக்காமையால் `பேறு` எனப்படா) மற்று, மேற்கூறியவாறு மெய்யுணர்தலால், ``உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காக்கும்``3 திறம் பெற்ற ஞானி தனுவோடு (உடம்போடு) இருப்பினும் அவனது தனு சிவதனுவேயாகும், பிராரத்தம் முடிந்தபின் அத்தனு நீங்கினால், அவன் சிவனை மிக அணியனாய் அணைதற்குரிய அருளைப் பெற்று அணைவான். அணைந்தபொழுது சிவனிடத்தே அன்பு மீதூர்ந்து அவன் சிவனது இன்பத்திலே அமைதியுடன் திளைத்திருப்பான்.

குறிப்புரை :

சிவ தனுவின் பெருமை திருவுருத்திரத்துள் பின்வருமாறு கூறப்பட்டது.
``மகாருத்திரரே, உலகியலாகிய பிணிக்கு
மருந்தாய் உள்ளதும், உம் அருளைப்பெற்றுள்ள
உருத்திரருடனும் இரண்டறக் கலந்து உயிர்க
ளுக்குத் துன்பத்தை நீக்கி, இன்பத்தைத் தருகின்ற
மருந்தாய் உள்ளது மான உமது, சத்திமய
மான நன்மை மிக்க எந்தத் தனு
(உடம்பு) உண்டோஅந்தத் தனுவினால்
எங்களை நல்வாழ்வு வாழ அருளும்``*
இன்னும் அதனுள் அதுபற்றி,
``உருத்திரரே, (கயிலை) மலையில் வீற்றிருந்து
உலகிற்கு இன்பம் ஊட்டுபவரே,
சாந்தமானதும், நன்மை மிக்கதும்,
வினையற்ற நிலையை (வீட்டினை)
விளக்கி நிற்பதுமாய் எந்தத் தனு
உள்ளதோ அந்த உம்முடைய தனுவால்
எங்களுக்கு உண்மை விளங்கும்படி
அருள்வீராக`` 3
என்றும் கூறப்பட்டது. `சிவ ஞானிதன் தனுவும் இத்தகையதாகிய சிவ தனுவே` என்றற்கு, ``சிவ காயம்`` என்றார். ``உற`` என்பதன் `வரும்` என ஒரு சொல் வருவித்து `வரும் முத்தியே ஒண் சித்தியாம்` என முடிக்க. பெண் மயல் கெடுதல் `நியமம்` என்பதை உணர்த்திப் பின்யோகத்தையும் உணர்த்திற்று. `கெட்டறல்`, ஒருபொருட் பன்மொழி. பேறு - பெறப்படுவது. திண்மையின் ஞானி - திண்மையை (மன உறுதியை) உடைய ஞானி. `அண்மையாய்` என ஆக்கம் வருவிக்க. அடைந்தபின் அன்பு மேன்மேற் பெருக, அதனானே இன்பம் மேன்மேல் எல்லையின்றி விளையும் என்க. ``அன்பே இன்பமாம்`` என்பதை,
``இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல், இன்றுண்டாம்; அன்பு நிலையே அது``l
என்னும் திருவருட் பயனால் அறிக. அறிந்தாலன்றி அன்பு உண்டாகாது, ஆகவே, ஞானத்தின் பயனே பத்தியாம். இதனைச் சேக்கிழார்
``ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார்``
என்று அருளியது காண்க. சில சமயிகள், `ஞானமே முடிநிலையானது` எனக் கூறிப்பத்தியைப் படிநிலையாகக்கொள்வர். அவர்களை,
``வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற;
பெறுவதங் கென்பெணே உந்தீபற``3
எனவும், அவர்களது சமயங்களையும் சமய நூல்களையும்,
``சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவி யறாதேஎன் றுந்தீபற;
அவ்வுறை கேளாதே உந்தீபற``l
எனவும் திருவுந்தியார் கூறிற்று, இது பற்றி,
``வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும அதன் அங்குரமும் மெய்யுணரில் - வித்ததனில்
காணாமை யால் அதனைக் கைவிடுவர்; கண்டவர்கள்
பேணாமை யால் அற்றார் பேறு``9
எனக்கூறிய திருக்களிற்றுப்படியாரையும் நோக்காது`` முளையைக் கைவிட்டவர்`` என்பதற்குப் பிறிதுரை உரைத்தாரும் உளர். சாவி போதலாவது, விளைத்த பயிர் கதிர்விட்டு முற்றியும் நிரம்ப முற்றிப் பயன்படும் அளவிலே அங்ஙனமாகாது காய்ந்து பதராகி விடுதல். ஞானத்தைத் தந்தும், அதன் பயனாகிய அன்பைத் தராதுபோதற்கு இஃது உவமையாயிற்று. இனித் திருக்களிற்றுப்படியாருள், ``காணாமையால் அதனைக் கைவிடுவர்`` என்றது பிற சமயத்தாரைக் கருதியும், `கண்டவர்கள் - பேணாமையால் அற்றார் பேறு`` என்றது சித்தாந்த சைவருள்ளும் நூலறிவு பெற்றும் நுழைவின்றிப் பத்தி செய்யாதாரைக் கருதியும் என்க.
``நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்``*
என்னும் திருக்குறள் இங்கு நெஞ்சிற்பதிக்கற்பாலது.
``நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக``* என அம்மையார் அருளிச்செய்தார். இவ்வாறான அருமை தோன்றுதற்பொருட்டே ``இறுதியில் அன்பின் ஆறும்`` என்று அருளிச்செய்தார். ஆறும் - அமைதியுறும்.
இதனால், ஞானத்தால் இருவகைப் பற்றும் அற்ற மெய் யுணர்வால் அறுக்கப்படும் அவா அறுதியே சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

`அவன் இவன் ஈசன்` என்(று) அன்புற நாடிச்
`சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார்
பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப்
புவன் இவன் போவது பொய்கண்ட போதே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனையே முதற் கடவுளாக உணர்தலே, முன் மந்திரத்திற் கூறியவாறு உண்மையை உணர்தலாகும். அவ்வாறின்றி, பிற கடவுளரை, `அவனே கடவுள், இவனே கடவுள்` என உணர்ந்து அன்பு செய்வன எல்லாம் இறையன்புகள் ஆகா; உயிர் அன்புகளே. தான் உண்மையை உணர்ந்துவிட்டதாகக் கருதிய ஒருவன் அதன் பின்னும் வலிய பலவகைப் பிறவிகளாகிய தேரினை ஊர்ந்து, பலவகைப் புவனங்களாகிய வீதிகள்தோறும் பவனி வருதல் அவன் பொய்யை மெய்யாகத் திரிய உணர்ந்த பொழுதேயாம்.

குறிப்புரை :

``அன்புற நாடி`` என்பதை, நாடி அன்புற்று`` என மாற்றிக் கொள்க. `வன் பல்வகையாம் இப்பிறவியில் புவனியில் இவன் பவனி போவது பொய்கண்டபோதே என இயைத்துக்கொள்க. `வன்பிறவி, பல்வகையாம் பிறவி` எனத்தனித்தனி முடிக்க. பிறவியில் உழலுதலைப் பவனியாக உருவகித்து, ஏனையவற்றை உருவகம் செய்யாமை ஏகதேச உருவகம். தொடர் வேறாதலின், ஈற்றடியில் ``இவன்`` என்றது பன்மையொருமை மயக்கம் ஆகாமை யறிக. ``இவன்`` இரண்டில் முன்னது, `சிவனாகிய இவன்` என இருபெயரொட்டாய் அண்மைச் சுட்டுப் பெயர். பின்னது, மேற்கூறிய உணராருள் ஒருவன். `புவனி` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், சிவபத்தியாலன்றிப் பிற தேவர் பத்தியால் பதவி ஆசைகள் நீங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே.

பொழிப்புரை :

துன்பத்தைக் காய்தலும், இன்பத்தை உவத்தலும் ஆகிய இத்தன்மைகளையே உள்ளத்தில் உறுதியாகக் கொள்ளும் முறைமையையுடையதே இவ்வுலகம் முழுதும், ஆயினும், அந்தத் துன்ப இன்பங்கள் அவற்றிற்குக் காரணமான புலன்களைக் கொணர்ந்து பொருத்துகின்றவர் ஐம்பொறிகளாகிய துட்டரேயாகலின், அவரை உலகம் வெறுத்தொதுக்கி, அழியும் தன்மையுடைய இவ்வுடம்பில் இருந்துகொண்டே சிவநூல்களின் வழி நிற்றலே தக்கது.

குறிப்புரை :

`நிற்பின் அவா முற்றும் அறும்` என்பது குறிப்பெச்சம். பதிக்கின்றவாற்றை உடையதனை, ``பதிக்கின்றவாறு`` என்றார். ``பாரகம்`` என்றதும், `உலகம்` என்றதும் உயிர்களை விதித்தல், இங்கு தப்பாது பொருதுதல். `நொடிகின்ற` என்பது, எதுகை நோக்கி திரிந்து வலிமிகுந்தும் நின்றது. நொடிதல் - அழிதல், அது ``நொடித்தான் மலை``9 என்றமையானே விளங்கும். ``நூல்`` என்றது, இங்கு அதிகாரத்தால் சிவநூலையே குறித்துக் கருவியாகுபெயராய், அதனால் உணர்த்தப்படும் நெறியைக்குறித்தது. அந்நெறியில் சொல்லப்படுவனவற்றுள் பத்தியே தலையானவாதாகையால், ``ஒன்றல்`` என்றது அதனை ஒன்றுதலாகவே கொள்க. சிவ பத்தி மிகின், உலக ஆசை தோன்றாமை அறிக.
இதனால், ஆசையை அறுத்தற்கு உண்மை வழி சிவ பத்தியாதல் கூறிமுடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
[இதற்குப்பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``உய்ந்தனம் என்பீர்; உறுபொருள் காண்கிலீர்`` என்னும் மந்திரம் ஐந்தாம் தந்திரத்தில் `யோகம்` என்னும் அதிகாரத்தில் வந்தது]
சிற்பி