எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை


பண் :

பாடல் எண் : 1

முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரானைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.

பொழிப்புரை :

வீடுபேற்றைத் தருகின்ற ஞான நூலைக் கற்கின்ற கல்வியின் பயனாயும், அவற்றைப் பற்றிக் கேட்கின்ற கேள்வியின் பயனாயும் உள்ளவனும், உலகிற்குத் தந்தையும் தேவர்கட்குத் தேவனும், தான் இயல்பாகவே தூயனாய், உயிர்கள் தூய்மை அடைதற்குரிய வழியாய் நிற்பவனும், அறிவே வடிவாய் உள்ளவனும் ஆகிய சிவனையே, `உயிர்கட்குத் தலைவன்` என்று உணர்ந்து இறையன் புடையோன் போற்றுவான்.

குறிப்புரை :

``பத்தன்`` என்பது சாதி யொருமை. பாசப்படுதற்குக் காரணம் உடம்பொடு புணர்த்தலாகக் கூறப்பட்டது. ``ஞானமும் கேள்வியும்`` என்றது ஆகுபெயராய், அவற்றின் பயனைக் குறித்தது.
இதனால், `இறையன்பாவது இது` என உணர்ந்தார் பத்திசெய்யும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு)
அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட்ட
`அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.

பொழிப்புரை :

சிவனுக்கு அடியராயினார்க்கு அடியர் ஆயினார் சிலர் அவர்கட்கு அடியராயினார் சிலர். அவர்கட்கு அடியராயினார் மற்றும் சிலர் அவர்கட்கே நான் அடியவன் ஆக என்னைக் கொடுத்து அடியவனாகி, அடிமைகட்குரிய பணிகளைச் செய்வதையே எனது கடமையாகவும் மேற்கொண்டேன். அதனால் என்னை ஆளாக ஏற்றுக் கொண்ட அடியார்கள் என்மேல் கருணை வைத்து அந்தப் பெரு மானுடைய திருவடிகளில் என்னைச் சேர்ப்பிக்க, அப்பெருமானும் என்னைத் `தனக்கே அடியவன்` என்று சொல்லி, நேராகவே என்னை அடிமை கொண்டான்.

குறிப்புரை :

அடியார்க்கு அடியாரைப் பலராகக் கூறியது, `அன்று தொட்டு இன்று காறும் அடியவர் பரம்பரை தொடர்ந்து வருகின்றது` என்பதை உணர்த்தற்கு. `அந்தப் பரம்பரையில் வந்த எந்த அடியவர்க்கு அடிமை பூண்டாலும், அவர்களைச் சிவன் நேரே தன் அடியவராக ஏற்றுக்கொள்வான்` என்பதே இங்கு உணர்த்தப்பட்டது.
``திருப்பா திரிப் புலியூர்
உடையான் அடியார் அடிஅடி யோங்கட்கு
அரியதுண்டே`` -திருமுறை - 4.94-3.
``தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே``3 எனப்போந்த திரு மொழிகளுடன் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகத்தையும்l உற்று நோக்குக. ``சீரணி குருசந்தானம்``* என்றதும் இக்கருத்தே பற்றி. முதலடியின் ஈற்றில், ``அடிமை`` என்றதும் `அடிமை` செய்யும் அடியரையே. `நல்கியிட்டு` என்பது குறைந்து நின்றது. `நல்கிட்டு அடியனாய்` என மாற்றுக.
இதனால், அடியார் அடியார், அடியடியார் பத்திகளே சிவபத்தி யாதல் கூறப்பட்டது.
``எனக்கன்பு நின்பொருட்டு எய்தாத தென்கொல்!
வெள் ளேறுடையான்
றனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்த, இத்
தாரணியில்
நினக்கன்பு செய்கின்ற அப்பூதியைச், சிவ
நேசம்உறும்
இனர்க்கன்பு செய் நம்பி யாரூரன் ஏத்தும்
இயல்பறிந்தே``
-நால்வர் நான்மணி மாலை - 6.
என்னும் சிவப்பிரகாச அடிகள் திருமொழியும் இங்கு உணரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆர்இக் கடன்நந்தி ஆமா றறிபவர்
பாரில் பயன்ஆரைப் பார்க்கிலும் நேரியன்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் குளிர்ச்சியால் இருக்க வேண்டிய சமையத்தில் நீரைவிடக் குளிர்ச்சியாய் இருப்பான். சுடவேண்டிய சமையத்தில் நெருப்பை விடச் சூடாகச் சுடுவான். (இரண்டும் கருணையே). அவனது முறை இவ்வாறாதலை அறிய வல்லார் ஆர்! நிலவுலகில் உள்ளார்க்குப் புலனாகாமலே சூக்குமமாய் இருந்து, அவர்கட்குப் பயன் தருகின்ற தேவர் பலரையும்விடச் சிவன் அதிசூக்குமன் ஆயினும், அவன் உயிர்களின் பொருட்டு ஊர்கள் தோறும் உமாதேவிக்குக் கணவனாய், அவளோடும் எழுந்தருளிக் காட்சியளிக்கின்றான்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவ்விடங்களில் சென்று பத்தி செய்க` என்பது குறிப்பெச்சம். ``நந்தி`` என்பதை முதலிற்கொள்க. இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். ``பயன்`` என்பதன்பின் `தரும்` என ஒருசொல் வருவிக்க. நேர்மை - சூக்குமம். இது பருமைக்கு எதிரானது. உமாபதியாகி நிற்றல், `உலகனைத்திற்கும் அம்மையும், அப்பனும் தானே` என்பது தோன்றுதற்கு, `அதனை யுணரின் பத்தி தானே பெருகும்` என்பது கருத்து.
இதனால், சிவன் உருப்பத்தி சிவ பத்தியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒத்துல கேழும் அறியா ஒருவன்என்
றத்த னிருந்திடம் ஆர்அறி வார்செல்லப்
பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.

பொழிப்புரை :

அன்பரது அன்பில் சென்றாலல்லது, `அனைத் துலகங்களாலும் அறிய இயலாத ஒருவன்` எனச்சொல்லப்படுகின்ற சிவன் இருக்கின்ற இடத்தை அறிந்து சென்றடைய வல்லார் யாவர்? அவ்வாறே, அன்பர்கள் தம் அன்பிற்கண்டு சொன்னாலல்லது, கிடைத்தற்கரிய முத்துப்போன்ற அவனைக் கண்டு சொல்ல முற்படுவார் யாவர்? ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

சிவனை அவன் அன்பர்களல்லது பிறர் காணவும், சொல்லவும் வல்லாரல்லர்` என்றபடி.
``சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க``3
என்றருளிச் செய்தமை யறிக. `ஒருவன்` என்பது சிவனைக் குறிக்கும் ஒருபெயர்.
``ஒருவன் என்னும் ஒருவன் காண்க``9
``ஒருவன் என்று உலகம் ஏத்தும்
நளிர்மதிச் சடையன்``8
எனத் திருவாய்மொழியுள்ளும் வந்தது. `என்ற, இருந்த` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. `ஆரறிவார் சொல்ல` என்பது பாட மன்று; அது பின்னர் வருதல் காண்க. ``பததர்தம் பத்தியின் பாற்படி னல்லது`` என்பது தாப்பிசையாய் முன்னரும் சென்றியைந்தது. அங்ஙனம் இயையுங்கால் ``தம்`` என்பது முன்னர்ச் சாரியையாயும், பின்னர்ப் பெயராயும் நின்றது.
இதனால், `பத்தி யுடையாரே சிவனைக் காணவும், சொல்லவும் வல்லார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல
நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றான் நாடிவந் துள்புகுந் தானே.

பொழிப்புரை :

தாயைப் பிரிந்த பசுக்கன்று தன் தாயை நாடி அழைப்பதுபோல, சிவன் ஆவாய் இருக்க, நான் அவனைப் பிரிந்து வாடும் கன்றாய் இருந்து, என் தலைவனாகிய அவனையே நாடி, `அப்பாவோ! ஐயாவோ!` எனப் பன்முறை அழைத்தேன்; அவன் வானுலகத்திலுள்ள பசுக்கன்றுகள் போலும் தேவர்கட்கெல்லாம் அப்பால் நிற்கும் வேதப்பொருளாயினும் எனது கூக்குரலைச் செவிமடுத்து, உருவம் யாதும் கொள்ளாமலே என்னைத் தேடி வந்து, என் உள்ளத்துள்ளே புகுந்தான்.

குறிப்புரை :

`நான் மகிழ்ந்தேன்` என்பது இசையெச்சம். `ஆனை` என இரண்டன் உருபு விரிக்க. ``கன்றாய்`` என்னும் ஆக்கம் உவமை குறித்து நின்றது. தேவர்கள் பசுவர்க்கத்தினராகலின் `பசு` என்றும், அவர்கள், `தாம் கன்றுகள்` என்பதையும், `சிவன் தாய்ப்பசு` என்பதையும் நினைந்து அவனை அழைத்தல் இன்றிச் சுக போகங்களில் ஆழ்ந்து கிடத்தலால் `அவர்கட்கு அப்பாலாய்` என்றும், `எனினும், மெய்யுணர்வார் அவனை அழைத்தே நிற்பர்` என்றற்கு, ``மறைப் பொருள்`` என்றும் கூறினார். `மறைப்பொருள் ஆமவன்` என்க. ஊன் - உடம்பு கன்றுதல் - விடாது பற்றுதல், `ஊன் கன்றானாய் வந்து புகுந்தான்` என்க. இங்ஙனம் கூறியது, `அவன் புறம் நின்று போதராமல், அகம் நின்ற நிலையையே விளக்கியருளினான்` என்றபடி.
இதனால், `பத்தியுடையார் சிவனை யின்றியமையாது அலமருவர்` என்பதுவும், `அவர்கட்குச் சிவன் நேர்வந்து அருளுவன்` என்பதும் கூறப்பட்டன.
``உடையான் கழற்கு அன்பிலை;
... ... துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றிலை; தெருவுதோ றலறிலை;
செய்வதொன் றறியேனே``*
எனவும்,
`` ... ... வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ்விடத்தான்?
எவர் கண்டனர்? என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள்ளுருகேன்;
நின்று உழைத்தனனே``9
எனவும், பிறவாறும் போந்த பத்தித் திருமொழிகளைக் காண்க.
`ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே`*
எனத்தொடக்கத்தேயும் இவர் கூறினார்.

பண் :

பாடல் எண் : 6

பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.

பொழிப்புரை :

உயிர்களின் நிலை `பெத்தம், முத்தி` என இரண்டு. பெத்தம், பாசங்களிற் கட்டுண்ட நிலை. முத்தி, அவற்றினின்றும் விடு பட்ட நிலை. இவ்விரண்டு நிலைகளிலும், `உயிர்களின் செயல்` என்று ஒன்று இல்லை ஏனெனில், பெத்தத்தில் உயிர்கள் பல பிறவிகளில் சென்று உழல்கின்றன. அப்பிறப்புக்களைத் தருபவனும், வாழுங் காலத்து இன்பத் துன்ப நுகர்ச்சிகளை அவற்றிற்குரிய பொருள்களைத் தந்து ஊட்டுவிப்பவனும், பின்பு அந்தப் பிறவியை நீக்கிவிடுபவனும் எல்லாம் சிவனே. அதனால், பெத்தத்திலும் அவற்றிற்கென்று ஒரு செயல் இல்லை. இனி, முத்தியாவது சிவன் குருவாய் வந்து ஞான தீக்கை செய்து வினைக்கட்டினை அறுத்து அதினின்று விடுவிப்பது. அந்நிலையிலும் உயிர் அவன் காட்டிய வழியில் நடத்தற்குரியதே யன்றித் தானாக எவ்வழியிலும் செல்லாது. மேலும் ஞான தீக்கையில் உயிர் தனது, உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவன் கையில் முழுமையாக ஒப்புவித்துவிடுகின்றது. இவ்வாற்றால், பெத்தம், முத்தி யிரண்டிலும் உண்மையில் உயிருக்கென்று ஒரு செயல் இல்லை. ஆயினும் மயக்கத்தால் உயிர்கள் பெத்தத்தில் நிகழும் செயல்களைத் தம் செயல்களாகவும், முத்தர்கள் செயலையும் அவரது செயல்க ளாகவும் கருதி மயங்குகின்றன. ஞானம் கைவரப்பெற்று பத்தி மிகுந் தவர்க்கு அத்தகைய மயக்கம் இன்றி, உண்மையே விளங்கி நிற்றலால், தமக்கும் பணியாதும் இல்லையாகும் நிலை அவர்கட்கே உள்ளது.

குறிப்புரை :

``தன்`` என்றது சாதியொருமை. ``பிறத்தலால்`` என்றது, `தம் வயம் இன்றிப் பிறத்தலால் என்றபடி. பிறத்தல் கூறவே, வாழ்தலும், இறத்தலும் பெறப்பட்டன `முத்தி` என்பது எதுகை நோக்கி, `முத்தம்` என இகரம் தொகுத்து அம் விரிக்கப்பட்டது. முறைமை - குரு கற்பித்த முறைமை. இரண்டு, பெத்த நிலை, முத்தி நிலை, அருளால் அருளின்படி. அளித்தது, அருளைத் தந்தவனுக்கு. ``தந்ததுன்றன்னைக் கொண்டதென் றன்னை`` (திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 10.) என அருளினமை காண்க.
இனி ஒருபோது அளித்தமையை எப்போதும் மறவாமைப் பொருட்டு அவர் எல்லாச் செயல்களையும் `சிவனுக்கு ஆகுக, சிவனுக்காக` என அருள் வழி நின்று சொல்லி முடிப்பர். `இவ்வாற்றால் பணிச் சுமை யாதும் இல்லாதார்க்குப், பத்தி மேலும் மேலும் பெருகி முதிரும்` என்பது கருத்து.
இதனால், பத்தி யுடையார்க்கு அப்பத்தி மேலும் மேலும் பெருகி முதிருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பறவையிற் கர்ப்பமும் பாம்பும்மெய் யாகக்
குறவம் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவன்என் றென்மனம் ஏத்தகி லாதே.

பொழிப்புரை :

உபநிடதம் கூறுமாறு ஐந்து பறவைகள் போன்றுள்ள ஐந்து உடம்புகளுள்ளும் உள்ளீடாய் நிற்கின்ற ஆன்மாவும், அன்ன மயம், பிராணமயம் என்னும் உடம்பினுள் பாம்பு வடிவாய் உள்ள குண்ட லினியும் பொதுமை நீங்கி, உண்மை நிலையை அடைந்திருக்க, அவ் வுடம்புகளுள்ளே மலையில் வாழும் குறவர்கள் இசைக்கும் இசைபோல எழுகின்ற நாதங்கள் ஒலிக்க, அமிர்தத்தால் குளிர்ந்திருக்கின்ற, விந்துத் தானமாகிய, `மேரு` எனப்படும் ஆஞ்ஞையை அடைந்து அங்குக் கொல் -லாமை முதலிய எட்டையும் எட்டு மலர்களாகக் கொண்டு வழிபட்டுத் `தியானம்` செய்யும்பொழுது, எங்கள் சிவபெருமானையன்றி, எனது மனம் வேறொருவனை `இறைவன்` என்று கொண்டு தியானியாது.

குறிப்புரை :

தைத்திரீய உபநிடதம் ஆனந்த வல்லியில், ஐங்கோசங் -களையும் தனித்தனிப் பறவையாகவும் அவற்றின் உறுப்புக்களைத் தனித்தனி ஐந்தாக வைத்து, முகம் முதலிய உறுப்புக்களாகவும் உருவகம் செய்து கூறிற்று. அதனை, மாதவச் சிவஞான யோகிகள்,
``ஆன்மா இத் தரை கீழ் மேலும்
கொள்ளி வட்டம் கறங்கென
நிமிடத்தின்கண் அலமரும் படி
கொண்டு திரிதல் பற்றி இவ்
வைங்கோசங்களை ஐந்து
பறவையாகவும், அவற்றுள் ஒரோ
ஒன்றை ஐவகைப் படுத்து முகம்
முதலிய உறுப்புக்களாகவும்
வேதத்துள் உருவகஞ் செய்
துணர்த்தியவாறு``
முண்டகோபநிடதம், மூன்றாம் முண்டகத்தில், ஆன்மாவையே பறவையாக உருவகம் செய்து, `அஃது உலகமாகிய மரத்தில் அமர்ந்து, அதில் உள்ள போகமாகிய பழத்தைப் புசிகின்றது` என்றும், `ஆயினும், அதனைவிட்டுப் பிரியாது இணைந்து உடன் இருக்கின்ற மற்றொரு பறவை அந்தப் பழத்தை உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றது` என்றும் கூறிற்று. உண்ணாமல் பார்த்துக்கொண்டிருக்கின்ற பறவை சிவன்.
பறவை உடம்பை எடுத்த உயிரும் `பறவை` என்றே சொல்லப் படுதல் பற்றி முண்டகோபநிடதம் ஆன்மாவையே (பறவை) என்றது. ஆயினும் உண்மையில் பறவையாவது, பறவை உடம்பே ஆகையால், தைத்திரியோபநிடதம் ஐவகை உடம்புகளையே ஐந்து பறவைகளாகக் கூறிற்று. இங்கு நாயனார், ``பறவை`` என்றது உடம்பையே. கர்ப்பம் - சூல்; உள்ளீடு உடம்பின் உள்ளீடாவது ஆன்மா. குறவர் பாடும் இசையை, ``குறவம்`` என்றார். ஆஞ்ஞையை `மேரு` என்பதால், அதன் கீழ் ஒலிக்கின்ற நாதத்தை, ``குறவம்`` என்றார். சிலம்புதல் - ஒலித்தல். இதனை, மேல், ``மணி கடல் யானை``l என்னும் மந்திரத்தும் குறித்தவாறு காண்க. கொல்லாமை முதலிய எட்டாவன, `கொல்லாமை, ஐம்பொறியடக்கல் பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` என்பன. 9 இவை எண்வகை யோக உறுப்புக்களில் இயம நியமங்களாய் வருதல் காண்க. ஏத்துதல், இங்குப் பொதுமையில் `வழிபடுதல்` என்னும் பொருட்டாய்த் தியானத்தைக் குறித்தது, குளிர் வரை ஏறியபின் செயற்பாலது அதுவேயாகலின்.
இதனால், சிவ பத்தியே இறை பத்தியாவதன்றிப் பிற பத்திகள் இறை பத்தியாகாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து)
உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், தன்னையே நெருங்கி நிற்கும் துணைவனாக உணர்ந்து, தனது திருவடிகளைச் சிந்தித்தவழிக் கிடைக்கும் துணைவனாயும், ஒளி விளக்காயும் உள்ளான். அவனையன்றிப் பெருந்துணைவரும், பெறத்தக்க துணைவரும் வேறிலர். (ஏனெனில், பேரருளால் உயிர்களின் பிறப்பை அறுப்பவன் அவனேயாகலின்) ஆகையால், உணர்வுடையீர், அதனை உணர்ந்து அவனையே துணையாகப் பற்றிப் பிறப்பையறுத்துப் பிழையுங்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, அதனுள்ளும் ``சிவன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. செய்தல், இங்குக் கருதுதலைக் குறித்தது. ``உறுதுணை`` இரண்டில் முன்னது உரிச் சொற்றொடர்; பின்னது வினைத்தொகை. அங்கி- தீ. அஃது இங்கு விளக்கைக் குறித்து, அறிவை விளக்குதலைச் சுட்டிற்று. `அறிவுத் துணையே துணையாவதன்றி, உடற்றுணை துணையாகாது என்றபடி.
இதனால், `சிவன் ஒருவனே அறிவுத் துணையாகலானும், உற்றாரை உறுபவன் ஆகலானும் அவனையே துணையாகப் பற்றிப்பத்தி செய்து பயன்பெறல்வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரம் சென்ற தலைவனை
கானவன் என்றும் கருவரை யான்என்றும்
ஊனத னுள்நினைந் தொன்று படாரே.

பொழிப்புரை :

தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களது மூன்று கோட்டைகளைத் தன் சிரிப்பினாலே ஒரு நொடியில் சாம்பலாக்கி அழித்த தலைவன் சிவன். அவனைச் சிலர், `காட்டிலே ஆடுபவன்` என்றும், `கரிய மலையில் வாழ்பவன்` என்றும் தங்கள் ஊன் உடம்பின் உள்ளுக்குள்ளாகவே இகழ்ந்து, அவனைக்கூடார் ஆயினார்.

குறிப்புரை :

`அஃதவர் வினையிருந்தவாறே என்பது குறிப்பெச்சம்.
`ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண்கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல்``3
என்பனபோலும் சான்றோர் மொழியினை உணராதார் பிணங்குவர் என்பது முதல் இரண்டடிகளில் குறிக்கப்பட்டது. `ஒன்றுபட்டார்` என்பது பாடமாயின், `அவனது பெருமையை உணர்வினால் உணர்ந்து, அகமாகிய உள்ளத்துள் தியானித்துச் சமாதி நிலை கூடினர்` என உரைக்க. சிவன் இருப்பது வெள்ளிமலையாயினும், முகில்கள் தவழ்தலும், பசுமை படர்ந்திருத்தலும் பற்றி, `கருவரையான்` என்றார். `ஒன்றுபட்டார்` என்பதையே பாடமாகக்கொள்வார், `கரு - பிறப்பை. வரையான் - ஏற்காதவன்` என உரைப்பர்.
இதனால், உண்மை உணராதார் பத்திசெய்து பயன் பெறும் இடம் அறியாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

நிலைபெற கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே.

பொழிப்புரை :

உலகனைத்தையும், `இவை சிலகாலம் நிலைபெற்றிருந்து, பின் `ஒடுங்குக` என்று சங்கற்பித்துப் படைத்த தலைவன் எங்கேயிருக்கின்றான்`` என்று அவனைக் காணத்தேடி என் உள்ளம் திகைத்தது. பின்பு அவன் தேட வேண்டாது எங்கும் நிறைந்து, உயிர்களின் புறத்தும், அவனைத்தேடித் திகைக்கும் உள்ளத்தும் `புறம், அகம்` என்னும் வேறுபாடின்றி விளங்குதலைக்கண்டு வியந்தேன்.

குறிப்புரை :

`கெட` என்னும் வியங்கோள்முற்று ஈறுதொக்கு, முதல் நீண்டு `கேட்` என நின்றது. அது, `கேடு` என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயரன்று. ``தயங்கும்`` என்றது. இறந்த காலத்தில் நிகழ்கால முற்று. `எவ்விடத்தும்` என்றற்கு மலையையும், வானத்தையும் உபலக்கணமாகக் கூறினார். உலைதல் - வருந்துதல். ``உள்ளும் உள்ளத்தும்`` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் நிற்க, `உலை` என்பது அதனோடு தொக்கு வினைத்தொகையாயிற்று. ஊழ்த்து நிற்றல், காண்டற்குரிய செவ்வியோடேயிருத்தல். `நின்றான்` என்றது, அதன் பயனாகிய வியப்பைக் குறித்து நின்றது.
இதனால், பத்தி செய்வார்க்குச் சிவன்தேட வேண்டாது, இருந்த இடத்தில் இருந்தே காணப்படுதல் கூறப்பட்டது.
சிற்பி