எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை


பண் :

பாடல் எண் : 1

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியில் உற்றோர் பரானந்தர் போதரே.

பொழிப்புரை :

முத்தி நிலையை அடைந்தவர் சிவனது திருவருளை முழுமையாகப் பெறுவர். (எனவே, `ஏனையோர் சிறிது சிறிது பெறுவர்` என்றதாம்). அதனால், அவரே கருவி கரணங்களின் கட்டற்றவராவர் (கருவி கரணங்களோடு கூடியிருப்பினும் அவற்றால் உலகியலில் செல்லார்` என்பதாம்). ஆகவே, அவர் தன் முனைப்புக் கொண்டு `யான், எனது என்னும் வகையில்) உலகை நோக்கி ஒன்றைச் செய்தலும், அவ் வாறன்றிச் சிவனையே நோக்கி ஒன்றைச் செய்தலும் ஆகிய செயல்கள் எல்லாவற்றையும் விடுத்து, சொரூப சிவனிடத்து உண்மையான பத்தியில் மட்டுமே நிற்பர். அதனால், அவர் அடையும் ஆனந்தமே உண்மைப் பேரானந்தமாகும். உண்மை ஞானியரும் அவரே.

குறிப்புரை :

`தன்பணி` என்பது, பொதுவாகச் சீவபோதச் செயலை உணர்த்தும் ஒருசொல். `தன்பணியையும், மெய்த்தவத்தையும் செய்கை யாகிய வினையை விட்ட பத்தி` என்க. மெய்த்தவம், சிவனை நோக்கிச் செய்யும் செயல்கள். உலகியற் செய்கையை நோக்க மெய்த்தவம் சிறந்ததாயினும் அதுவும் நான்` என்னும் போகத்தோடு செய்வதேயாகலின், அப்போதத்தை விட்டவர்க்கு அதுவும் வினையேயாம் என்றற்கு, ``மெய்த்தவம் செய்கை வினை`` என்றார். இஃதே பற்றித் தாயுமானார், ``நான் பூசை செய்யல் முறையோ``3 என்றார் மெய், மெய்ப்பொருள், சொரூப சிவன் `மெய்யின்கண் செய்யும் உண்மைப்பத்தி` என்க. உண்மைப்பத்தி, பிறிது பயன் விரும்பாது, அவனையே விரும்பிச் செய்யும் பத்தி இங்கும் பத்தியையே முடிநிலையாகக் கூறினமை உணரற்பாலது.
இதனால், முத்தி நிலையின் இயல்புகள் எல்லாம் சுருக்கிக் கூறப்பட்டன. இவையும், அடுத்து வரும் மந்திரத்தில் வருவனவும் ஆகிய இயல்பினை உடையோரே சீவன் முத்தராவர்.

பண் :

பாடல் எண் : 2

வளங்கனி தேடிய வன்தாட் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.

பொழிப்புரை :

(மேல், ``பறவையில் கர்ப்பமும்``9 என்னும் மந்திரத்தில் சொல்லியபடி) உலகமாகிய மரத்தில் தனக்கு இனிமையான பழத்தைத் தேடி அலைந்த சீவனாகிய பறவை, பின்பு அந்தப்பழம் தன்னுள்ளே யிருப்பதை அறிந்து அதனைத் தேடி அங்கு அலைந்துகொண்டிருக்கும் பொழுது, அதற்குக் கண்ணும், சிறகும்போல உதவுகின்ற அந்தக் கரணங்களாகிய நால்வரும் முன்புபோலத் தீயராய் இல்லாது நல்லவராய் விட்டமையால், அங்கே (உள்ளத்துள்ளே) மிக்கு விளங்குகின்ற பேரொளியிலிருந்து சிறு கைவிளக்கை ஏற்றிப் பிடித்து, அப் பறவைக்கு உதவி புரிகின்றனர்.

குறிப்புரை :

`பெத்த நிலையில் உலகியலில் ஈர்த்துச் சென்ற அந்தக் கரணங்கள், முத்தி நிலையில் சிவத்தை உணர்தற்குத் துணை புரிகின்றன` என்பதாம். `விளக் கனி, உளக் கனி` என்பன எதுகை நோக்கி, ஒத்த வல்லெழுத்து மிகாது, இனமெல்லெழுத்து மிக்கு முடிந்தன. தாள் - முயற்சி. களம் - இடம். `அக் களத்துக் கனிந்த அங்கி` என்க. கனிதல், இங்கே, மிகுதல், அங்கி - அக்கினி பேரொளி; பேரறிவு. `மலம் நீங்கிய உயிரின் அந்தக் கரணங்கள் பதிஞானத்தை உடையனவாகும்` என்பது உணர்க.
இதனால், சீவன் முத்தரது அந்தக் கரணங்கள் பாசத்தளை யாகாமை கூறப்பட்டது.
சிற்பி