எட்டாம் தந்திரம் - 43. சோதனை


பண் :

பாடல் எண் : 1

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து)
அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.

பொழிப்புரை :

எல்லோரினும் பெரியவனும், பெருந்தலைவனும் சொல்ல வாராத பெரிய இன்பத்தைத் தன்னை அடைந்தவர்க்கு வழங்கி யருளும் அன்னதொரு பெருந்தகையை உடையவனும் ஆகிய சிவன் உம்முன் வந்து தனது திருவடிகளை எங்கள் தலைமேற் சூட்டினமையால் நாங்கள் அவனது திருவருளாகிய கடலில் மூழ்கினோம் அதனால், (நீருள் இருக்கும் மீனைச் சிச்சிலி கொத்தமாட்டாது ஓடி விடுதல்போல) பொய்யாகிய பாசங்கள் எல்லாம் எம்மைப் பற்றமாட்டாது நீங்கிவிட, நாங்கள் எங்களை அவனிடத்தில் ஒளித்து வைத்துச் சும்மா இருக்கின்றோம். இந்த நிலையில் எங்கட்குச் சோதனைகள் வருகின்றன.

குறிப்புரை :

அஃதாவது, `பாசங்கள் எங்களுடைய சோர்வை, மீன் நீரை விட்டு மேலே வரும் வரவைப் பார்க்கின்ற சிச்சிலி போலப் பார்க்கின்றன` என்பதாம். ஆகவே, `அப்பார்வை யினின்றும் நாங்கள் தப்புகின்றோம்` என்பது கருத்து. `பெம்மான் அம்மான்` என்னும் பொதுச் சொற்கள் சிவனையே குறித்தற்கு ``நந்தி`` என்னும் சிறப்புப் பெயரை இடையே பெய்தார். ``தந்து, விடுத்து`` என்பவற்றிற்கு `தந்தமையால், விடுத்தமையால்` என உரைக்க. `சும்மாதிருத்தல், வாளாதிருத்தல்` என்பனவே இலக்கணச் சொற்கள். அவை, `சும்மா, வாளா` என மருவி வழங்குகின்றன. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆகும் - தோன்றும்.
இதனால், முத்தி நிலையை அடைந்தவற்றை யெல்லாம் வகுத்துக் கூறி, இவற்றிற்குப் பின் சோதனை உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அறிவுடை யான்அரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடும் கூடுவன் நானே.

பொழிப்புரை :

அறியாமையோடு கூடுதல் சிறிதும் இன்மையால், `அறிவுடையான்` எனப்படுதற்கு உரிமையுடையவனும், அரிய பெரிய வேதங்களில் எங்கும் பரவலாகப் போற்றப்படுபவனும், பெரிய தேவர்கட்கும் தேவனும், கண், செவி முதலிய பொறிகளையுடைய னாயினும் அவற்றால் அறியப்படுகின்ற ஐந்து புலன்களில் ஒருபோதும் தோய்வின்றித் தன்னிலையில் திரியாதிருப்பவனும், ஆகிய சிவனோடே யான் என்றும் கூடியிருப்பதன்றிப் பிரிதல் இல்லை.

குறிப்புரை :

இறைவனை, ``பொறிவாயில் ஐந்தவித்தான்``* என்றல் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்கும் தன்மை யுடைமை பற்றியேயன்றி, ஒரு காலத்தில் பாசத்தையுடையனாயிருந்து பின் நீங்கினவனல்லன் என்பது தோன்ற, ``அறிவுடையான்`` முதலிய மூன்றற்கும் பின்னர் இறுதியில் இதனைக் கூறினார். `இயல்பாகவே பாசங்களின் நீங்கினவன் எவனும் இல்லை` என்பவர், இதனை `ஒரு காலத்தில் புலனைக் கடந்தவனைக் குறிக்கின்றது` என்பர். இஃதே தொல்காப்பியத்துள் ``வினையின் நீங்கி விளங்கிய அறிவின் - முனைவன்``9 எனப்பட்டது. கூடுதல் பிரிவின்மையைக் குறிக்க வந்தது. `இயல்பாகவே பாசங்களால் பற்றப்படாது இருப்பவனைச் சார்ந்திருத்தலால், எம்மைப் பாசங்கள் வந்து அணுகுமாறில்லை` என்பது கருத்து. மிகுதேவர், காரணக்கடவுளர் மூவர். உம்மைகள், சிறப்பு. ``பொறியுடையான்`` என்பதன்பின், `ஆயினும், என்னும் சொல்லெச்சம் வருவிக்க. குறி - தன்னியல்பு. இதனால் மேல்,
``பதியணுகின்பசு பாசம்நில் லாவே``3
என்று அருளிச்செய்தபடி, பதியைச் சார்ந்து நிற்கும் உயிரைப் பாசம் பற்ற மாட்டாமைக்குக் காரணம் கூறப்பட்டது.
``சதசத்தாம் மெய்கண்டான், சத்து அருளிற் காணின்
இதமித்தல் பாசத்தில் இன்றிக் - கதம்மிக்(கு)
எரிகதிரின் முன்இருள்போல் ஏலா அசத்தின்
அருகணையார்; சத்தணைவார் ஆங்கு``8
என்றதனை நோக்குக.
(இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``அறிவறிவென்றங் காற்று முகம்`` என்னும் மந்திரம், மேல், ``அறிவுதயம்`` என்னும் அதிகாரத்தில் வந்தது.3)

பண் :

பாடல் எண் : 3

குறியாக் குறியினில் கூடாத கூட்டத்(து)
அறியா அறிவில் அவிழ்ந்தே சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம்என லாமே.

பொழிப்புரை :

குறியாக் குறி - தற்போதத்தால் தானே கொள்ளாது, குரு கொள்வித்தபடி கொண்ட இலட்சியம் கூடாத கூட்டம் - தற் போதத்தின் வழிச்சென்று புணராது, திருவருள் வழிச்சென்று புணர்ந்த புணர்ச்சி. அறியா அறிவு - தற்போதமாய் நின்று அறியாது, சிவ போதமாய் நின்று அறியும் அறிவு அவிழ்தல் பாசக்கட்டு நீங்குதல் எனவே, `குறியா ... ... அவிழ்ந்து` என்றது ``தானே கொள்ளாது குருவுணர்த்திய இலட்சியமாகிய சிவத்தில், தற்போதத்தால் முயலாது, திருவருள் வழியாக முயன்று ஒன்றுபட்டுபின்னும் அந்தத் திருவருளாலே அஃதொன்றையே அறிந்து நிற்குமாற்றால் பாசங்கள் நீங்கப்பெற்று` என்றதாயிற்று. பாசக்கட்டு நீங்கினமையால், பலவாகிய பொய்ப்பொருட்பற்றுத் தொலைய, ஒன்றாகிய மெய்ப்பொருளிடத்தே அன்பு மீதூர நிற்றலால், நன்னெறியாகிய அருட்சத்தியின் முதலாகிய அச்சிவத்தில் அவ்வருளால் அழுந்துதலாகிய இயற்கை இயைபே உண்மைச் சிவ சம்பந்தமாம்.

குறிப்புரை :

செறியாச் செறிவு - புதுவதாய்ச் சென்று இயையாது, முன்பே இயல்பாய் இயைந்துள்ள இயைபு, `சிவத்திற்கும், ஆன்மா விற்கும் இடையேயுள்ள அத்துவித சம்பந்தம், முன்பு இல்லாது பின்பு இடையே ஒரு காலத்தில் உண்டாகும் சம்பந்தம் அன்று: அஃது அனாதியேயுள்ள சம்பந்தம்` என்றபடி. எனவே, `சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்`* என்றது, முன்பு உணராதிருந்த அச்சம்பந்தத்தை உணர்தல் என்றதேயாம். `எல்லா உயிர்களிடத்தும் சிவனது அத்துவித சம்பந்தம் இயல்பாக உள்ளமை தோன்றவே, ``நின்றனவும், சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை அவர்க்கருள்செய்து`` எனக் குறித்தருளினார் சேக்கிழார்.*
``சென்றிவன்றான் ஒன்றில், சிவபூ ரணம்சிதையும்;
அன்றவன்றான் ஒன்றுமெனில் அன்னியமாம் -இன்றிரண்டும்
அற்றநிலை ஏதென்னில், ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றமற நின்றதுபோற் கொள்``*
என்னும் உண்மை விளக்கமும், இதனையே விளக்கிற்று.
பராநந்தி - பரைக்கு முதல்வனாகிய சிவன். `நந்தியின்கண்` எனவும், `நீடு அருளால்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. ``சிவம்`` என்றது, அதனோடு சம்பந்தம் ஆதலைக் குறித்தது. ``செறிவே`` எனவும் எனலாமே எனவும் போந்த பிரிநிலையும், தேற்றமும் ஆகிய ஏகாரங்கள், எத்தகைய சோதனையிலும் இந்நிலையினின்றும் சிறிதும் வழுவலாகாமையை உணர்த்தி நின்றன.
இதனால், `சோதனைகளால் சலியாது நிற்றற்குரிய நிலை இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களிலும் தங்கியிருத்தல் பற்றி, `இறை` என்றும், எல்லா உயிர்களையும் பாதுகாத்தல் பற்றி, `பதி` என்றும் சொல்லப்படுபவனாகிய எங்கள் சிவபெருமான், காற்றில் பரிசமும், கரும்பில் வெல்லமும், பாலில் நெய்யும், பழத்தில் சுவையும், மலரில் மணமும் போல, உயிர்களின் உள்ளங்களில் எல்லாம் இரண்டறக் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அக்கலப்பினை அறிந்து, `சிவோஹமஸ்மி` எனப் பாவிக்கும் பாவனையில் உறைத்து நின்றால், சோதனைகளால் வரும் ஊறு யாதும் இல்லையாம்` என்பது கருத்து.
``கசிந்த - தொண்டினொடும், உளத்து அவன்றான் நின்ற [கலப்பாலே
`சோகம்` எனப்பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. எனவே, `அஹம்பிரஹ் மாஸ்மி` `சோஹமஸ்மி` என்பன. இக்கலப்புப் பற்றிக் கூறப்படுத லல்லது, `சோயம் தேவதத்தன்` என்பதுபோல, விட்டும் விடாத இலக்கணை வகையாற் கூறப்படுவன அல்ல` என்றவாறாம். உளம், உளன் - மகர னகர உறழ்ச்சி. `உளன் எங்கும் கலந்து நின்றான்` என்க.
இதனால், சோதனைகளில் சலியாது நிற்றற்குரிய வழிவகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விருப்பொடு கூடி விகிர்தரை நாடில்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்து நிறைந்தே.

பொழிப்புரை :

எங்கள் சிவனார், தம்மை அன்பினால் நோக்கின், தம்முடைய சத்திபோல வந்து, அங்ஙனம் நோக்கி நிற்பவரது உள்ளத்தில், பேரறிவாய், உயிர்க்குயிராய் நிறைந்து, நீங்காதிருப்பார்.

குறிப்புரை :

பொருப்பகம் சேர்தரு பொற்கொடி, உமை; `சத்தி` எனற்பாலதை இவ்வாறு கூறினார். `முன்னர்ச் சத்திநிபாதம்போல வந்து, பின்னர்த் தாம் விளங்கி நிற்பார்` என்றபடி, `போல` என்பதன்பின், `வந்து` என ஒருசொல் வருவிக்க. ``நெருப்பு`` என்பது, `ஒளி` என்னும் பொருட்டாய், அறிவைக் குறித்து நின்றது. ``எங்கள் பிரானார்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``விகிர்தர்`` என்றது சுட்டளவாய் நின்றது. `மனத்திடை, நெருப்புருவாகி நிகழ்ந்து நிறைந்து இருப்பர்` என இயைத்துக்கொள்க.
இதனால், `சோதனைக் காலத்திலும் அன்பு குறைதலாகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள
`எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

பொழிப்புரை :

`பர வியோமம்` எனப்படுகின்ற அருள்வெளியில் உள்ள சிவபெருமான், அங்கு நின்றும் போந்து என் உள்ளத்துள்ளே புகுந்து அதனையே தனது இடமாகக் கொண்டான். கொண்டது எவ்வா றெனில், அவன் எனது உள்ளத்தை நோக்கி வரும்பொழுது, ``வாராத என் தந்தை வருகின்றான்`` என்று நான் பதைத்தெழுந்து எதிர்கொண்டேன். அதனால்தான் அவன் என் உள்ளத்தையே தனது இடமாகக் கொண்டுவிட்டான்.

குறிப்புரை :

`வியோமத்து நடுவுள் நின்றும் வந்து` என்க. வியோமம், பரவியோமம். கொள்ள - கொள்ளுமாறு. எழுதல், அதன் காரியத்தைக் குறித்து நின்றது. இருந்தான் - நீங்காது, இருந்தே விட்டான். `தன்னை வரவேற்கும் உள்ளப்பான்மை உள்ளவர்களை நோக்கியே அவன் வருவான்` எனவும், `அங்ஙனம் வந்த பின், அவன் மீண்டு நீங்கிப்போதல் இல்லை` எனவும் கூறியவாறு. ``வருதல் கோயில் கொள்ளல்`` என்பவற்றின் உண்மைப்பொருள், மேல், ``செறியாச் செறிவு``8. என்பதுபற்றிக் கூறியதனால் விளங்கும். `உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவ தினியே`3 என்பதனானும் இம் மந்திரப் பொருளை உணர்க. ``சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன்பள்ளி யாரே``l என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், `சிவனது அருமை பெருமைகளை எந்நிலையிலும் அயராது உணர்ந்திருத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே

பொழிப்புரை :

உயிர்களுக்கு ஆகும் நன்மைகளை யெல்லாம் செய்ய வல்லவனும், அனைத்துயிர்களையும் ஒப்ப நோக்கும் நடுவு நிலையாளனும் இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் புன்மை உண்டாகும்படி பொய்த்தல் இன்றி, உண்மையாக விரும்புங்கள்; விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, `இவ்வுயிர் யாது` எனச் சிறப்பாக நோக்கி, நும் செயற்கையை நீக்கி, இயற்கையாகச் செய்து அத்தொன்னிலையில் பின்னும் தொடர்ந்தே நிற்பான்.

குறிப்புரை :

`வேறுபடான்` என்பதாம். `புன்மையாக` என ஆக்கம் வருவிக்க. பொய்யாது நாடுதலாவது, வேறுபயன் கருதாது அன்பே காரணமாக விரும்புதல். செயற்கை, பாசத்தோடு கூடிநின்ற நிலை. இயற்கை, பாசத்தின் நீங்கிச் சிவத்தோடு நிற்கும் நிலை இஃதே தொன்னிலை; அனாதி நிலை; உண்மையியல்பு. அதில் தொடர்ந்து நிற்றலாவது, அதினின்றும் மாறுபடாதிருத்தல்.
இம்மந்திரம் பதிப்புக்களில் பாடம் பெரிதும் வேறாய்க் காணப்படுகின்றது.
[தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைசெய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.]
அடுத்து வரும் மந்திரம், ``தொடர்ந்து நின்றான்`` எனத் தொடங்குதலால், இப்பாடமே கொள்ளப்பட்டது.
இதனால், `மெய்யன்பு சோதனையால் திரியமாட்டாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின்(று) ஆதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் சற்குருவாய் வந்து எனது ஆறு அத்துவாக்களையும் அவற்றில் உள்ள சஞ்சித கன்மங்களை நீக்கித் தூய்மை செய்யும் பொழுது, அந்தச் செயலிலே தொடர்ந்து நின்றான். பின்பு தூய்மையாகிவிட்ட அந்த அத்துவாக்களிலே அவனே தொடர்ந்து நின்றான். அதன் பின்பு எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றா -கியும், பொருள்தன்மையால் வேறாகியும் நிற்கின்ற அந்த நிலைகளை எனக்கு அறிவித்துக் கொண்டே யிருக்கின்றான்.

குறிப்புரை :

`அவன் அவ்வாறிருக்கும் நிலையை மறவாதிருத்தலே நான் செய்யத்தக்கது` என்பது இசையெச்சம். `அதனைச் செய்தால் சோதனை எதுவும் என்னை ஒன்றும் செய்யாது` என்பது கருத்து. சோதித்தலுக்குச் செயப்படு பொருள் அத்துவாக்களேயாதலின் அவை வருவிக்கப்பட்டன. ஆகவே, பின் தொடர்ந்து நிற்றற்கு அவையே இட மாயின ஆதலின், `அங்கே` எனச் சுட்டினார். அதில் உள்ள ஏகாரம் பிற இடங்களினின்றும் பிரித்த பிரிநிலை. நல்லநாதன் - சற்குரு. `சற்குரு வாவான் சிவனே` என்பதைப் பின்னர், `ஆதிப் பராபரன் எந்தை` என் பதனால் சுட்டினார். படர்தல் - எங்கும் நிறைதல். `படர்ந்து நின்றும், கடந்து நின்றும் அவ்வழி காட்டுகின்றான்` என்க. ஏகாரம், ஈற்றசை.
இதனால், `இறைவன் உயிர்க்குயிராய் நின்று அறிவித்தலை மறவாமையே சோதனைகளினின்றும் நீங்கும் வழியாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளிரே ஒக்கும்
செவ்வழி சேர்சிவ லோகத் திருத்திடும்
இவ்வழி நந்தி யியல்பது தானே.

பொழிப்புரை :

விண்ணுலகத்தில் விண்ணவர்கட்கும் அவர்கள் அவ்வுலகத்தில் பற்றற்றுச் செல்ல வேண்டிய அந்த வழியைக் காட்டும் அரிய பொருளாய் இருப்பான். மண்ணுலகத்தில் மக்களுக்குத் தந்தை போலவும், தாய்போலவும், உறவினர் போலவும் இம்மைக்கு வேண்டுவன பலவும் செய்து, அம்மைக்கு ஆகும் நல்வழியையும் கற்பித்துத் தனது உலகத்தில் இருக்கச் செய்வான். இஃது எங்கள் சிவபெருமானது இயல்பு.

குறிப்புரை :

``அமரர்க்கு`` என்பதை முதலிற் கொள்க. இவ்வழி - இவ்விடம்; மண்ணுலகம். தேவர்கள் இம்மை நலம் பெற்றுச் சிவனை ஓரளவு அணுகியவர் ஆகலின், அவர்க்கு வேண்டுவது அம்மை வழியேயாயிற்று. ஈற்றில், ``வழி`` என்பது, `இயல்பு` என்னும் பொருட்டு. `தன்னடியார்களைச் சிவன் தன் உலகத்து இருத்துவோன் ஆதலின் சோதனைகளில் அவர்களை நழுவ விடான்` என்பது கருத்து.
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்ஆதல்,
சார்ந்தாரைக் காத்தும் சலம்இலனாய்``3
எனவும்,
`` ... ... ... ... என்றுந்தான்,
தீதுறுவ னானால், சிவபதிதான் கைவிடுமோ!
மாதொருகூ றல்லனோ மற்று``9
எனவும் போந்த சாத்திர மொழிகளைக் காண்க.
இதனால், சிவன் தன் அடியார்களைச் சோதனைகளில் காத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி
அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச்
செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.

பொழிப்புரை :

உலகப் பற்றை விடுத்துச் சிவப்பற்றைப் பற்றினோர், அந்நிலைக்கண் தமக்கு யாதேனும் இடையூறுவரின் அவர்கள் அவற்றைப் போழ்வது, ஞானமாகிய வாளைத் திரு வருளாகிய உறையினின்றும் உருவியாம். அங்ஙனம் இடையூற்றைப் போக்கி முன்போல அவர்கள் அறிந்து நிற்பது, தம் இயல்பையும், தலைவன் இயல்பையுமாம். (ஆகவே அடிமை நிலையினின்றும் பிறழார் என்பதாம்) அங்ஙனம் அறிந்து அடிமை செய்து நிற்றலால் அவர்கள் இரண்டறக் கலப்பது சிவபெருமானையே. அவர்கள் அறவே விட்டு விலகுவது, வேற்றியல்புடைய பல குழுக்களையாம்.

குறிப்புரை :

``ஞான வாள் ஏந்தும்; ... வான ஊர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே``* என்று அருளிச்செய்தது காண்க. ``ஞானத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. ஞானிகட்கு இடை யூறுகளாவன, ஐம்புலக் குறும்புகள். அறிவ, அன் பெறாத அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினைப்பெயர். அஃது அறிதலாகிய அத்தொழில்மேல் நின்றது. `தன்னோடு` என்பது இடைக்குறைந்து, பன்மை யொருமை மயக்கமாய் வந்தது. தேவர்க்கும் தேவர், மூவர். `எறிவது, செறிவது, பறிவது` என்பனவும் தொழில்மேல் நின்றனவே. `பற்றுவிடார்` என்பது பாடம் அன்று.
இதனால், சோதனைக் காலத்திலும் ஞானிகள் செய்யும் செயல்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின்
வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை
சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.

பொழிப்புரை :

யான் தொடக்கத்தில் தேவனாய் இருந்து, இப்பொழுது சிவனே ஆகிவிட்டேன். அஃது முழுமுதற் கடவுளாகிய சிவன் தனது ஞானமாகிய வாளை எனக்கு ஈந்தருள, இதனை யான் விடாது பற்றிக்கொண்டமையால். என்னை இனி அவனை அடைய ஒட்டாமல் வேறுபடுத்தி விலக்க வல்லவர் எங்கும், எவரும் இல்லை. அவ்வா றன்றி எங்கேனும், யாரேனும் என்னை வேறுபடுத்தி விலக்க வருவார்களேயாயின் அவர்கள் வந்து சென்ற சுவடும் தோன்றாதபடி அவர்களது வலிமையைச் சோதித்து ஓட்டிவிடுவேன்.

குறிப்புரை :

``நாம் ஆர்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்``, `தென்றிசைக்கோன்றானே வந்து - கோவாடிக் குற்றேவல் செய் கென்றாலும் குணமாகக் கொள்ளோம்`* ``யாம் ஆர்க்கும் குடியல்லோம்; யாதும் அஞ்சோம்`` எனப் போந்த திட்பத் திரு மொழிகளைக் காண்க. வேதித்தல் - பேதித்தல். ``வேதித்து`` என்னும் குற்றியலுகரம் கெடாது நின்றது. அங்கே - அப்பொழுதே. தெய்வம் ஆதல், மக்களினும் மேம்படுதல். அது ஞானத்தைக் கேள்வியளவில் உணர்ந்த நிலை. சிவமாதல் நிட்டை கூடியபின். வீரன் ஒருவன் தன்னையே சுட்டி, `இவன்முன்யாரும், எதுவும் செய்ய இயலாது` என்றவிடத்து, வீரம் காரணமாகப் படர்க்கைச் சொல் தன்மைப் பொருள் தருதல் போலவே, இங்கு `இவன்` என்பது தன்மைப் பொருள் தந்தது. இவன் ஆதிக்கண் தெய்வம், இப்போது `அவனே` என மாற்றி, முதலிற் கூட்டியுரைக்க.
இதனால், சோதனைகளில் ஞானிகளது துணிவு நிலை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அந்தக் கருவை அருவை வினைசெய்தற்
பந்தப் பனிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.

பொழிப்புரை :

எல்லா அனத்தங்கட்கும் மூலமாய் உள்ள ஆணவம், சத்தி சமூகம் ஆதலின் அருவமாய் உள்ள மாயை, அதனைக் கொண்டு சில செயல்களைச் செய்வதாகிய கன்மம் ஆகிய இப் பந்தங்களால் உளவாகின்ற, நடுங்கத் தக்க அச்சத்தைத் தரும், எண்ணிறந்தனவாகிய பிறப்புக்கள் அனைத்தையும் போக்கி, ஞானாசிரியர் ஆன்ம அறிவைத் தூயதாக்க, அதனால் சிவத்தைச் சேர்ந்து சிவமாயினோர், அதன்பின்பும் வரும் சோதனைகளை உறுதியோடு சந்தித்து வென்றால், அங்ஙனம் வென்ற திறமையாளர்க்கு அந்தச் சிவப்பேறு நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

`இல்லையேல் நழுவிடும்` என்றபடி. சேர்தற்குச் செயப்படுப்பொருள் வருவிக்கப்பட்டது. `அந்தக் கரு, அச்சோதனை` என்பன பண்டறி சுட்டு சந்தித்தல், புறங்கொடாமையைக் குறித்தது. ``தற்பரம்`` என்றது, பெறப்பட்ட பொருளைக் குறித்தபடி. ஆதல், என்றும் உளதாதல்.
இதனால், ஞானத்தை முறையாக எய்தினோர், அதன் பின்வரும் சோதனைகளால் கலங்காது நின்று சாதித்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத்
திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகும்தற் பரனே.

பொழிப்புரை :

முதுமை காரணமாக வருகின்ற திரையில்லா (இளமையாகவே யிருக்கின்ற) என்னுடைய உடம்பை அவ்வாறே என்றும் அழியாதிருக்கும்படி வைத்து, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் குற்றங்கள் அற்ற என்னுடைய உள்ளத்தில் புகுந்த சிவன், எனக்கு, அளவின்றிக் கிடக்கின்ற நூல்களின்மேல் செல்கின்ற அவாவை அறுத்து, சொல்லுக்கு எட்டாத ஓர் அரும்பொருளை எனக்கு உபதேசித்தான்.

குறிப்புரை :

`அதனையே யான் இத்தந்திரத்தில் கூறினேன்` என்றபடி. பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, முதல் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. உரையற்றது ஒன்று - சிவானுபவம். ``நூலறிவை மட்டுமே கொண்டு நான் இத்தந்திரத்தைக் கூறவில்லை` என்பதாம். ``அரன் அடி சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே``1 எனப் பாயிரத்துட் கூறினாராகலின், இது கூற வேண்டியதாயிற்று. `சரியை முதலிய நான்கனுள் முதல் மூன்றும் நூலறிவானே கூறினும் கூடும்; ஞானம் அத்தகையது அன்று` என்பதாம். `உடலை நீங்கா திருக்கச் செய்தான்` என்றது நெடுநாள் இருக்கச் செய்தான் என்றபடி.
இதனால், `இத்தந்திரத்துள் ஞானம் இவ்வாற்றால் கூறி முடிக்கப்பட்டது` என முடிவுரை கூறினார்.
சிற்பி