ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்


பண் :

பாடல் எண் : 1

மாயை இரண்டு மறைக்க மறைவுறும்
காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.

பொழிப்புரை :

`அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் இரு மாயைகள் தம்முள் ஒடுக்க ஒடுங்குகின்ற ஐந்து உடல்களையும் அவற்றது இயல்பை உள்ளவாறு உணர்ந்து, `அவை நாம் அல்ல` என்று கழிக்கக் கழிதலால், மூன்னர்த் தாம் சடமாகிய அவையாகாது, சித்தாகி நின்று, அங்ஙனம் நின்ற அந்நிலையில், இயற்கையிலே அசுத்தமாய் நின்ற பாசஞானமும், செயற்கையால் அசுத்தமாகிய பசு ஞானமும் போலாது, இயல்பாகவே தூய்தாகிய பதிஞானம், தோன்ற, அதனானே அந்த ஞானத்திற்கு முதலாய் உள்ள சிவத்தை அறிந்து, அதனுள் அடங்கியிருப்பவர்` மோனிகட்கு மேலாகிய மோனிகளாவார்.

குறிப்புரை :

`அத்தகையோரே ஞானக் குரவர்` என்பது குறிப்பெச்சம். சுத்தமாயை சகலர்க்கு உடம்பாய் வருதல் இன்மையானும், இங்குக் கூறுவது சகலரையே ஆகலானும் ``மாயை இரண்டு`` என்பதற்கு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என உரைத்தல் கூடாமையறிக. சிவசத்தியால் செய்யும் மாயைகளை அவையே செய்வனபோலக் கூறினார் ஐந்து உடம்புகள் எட்டாம் தந்திரத் தொடக்கத்தில் கூறப்பட்டன. ஞான அதிமோனர் - ஞான முதிர்ச்சியால் முற்றிய மௌன நிலையை அடைந்தவர்.
ஞானகுரு தரிசனச் சிறப்பைக் கூறுதற்கு முதற்கண் ஞானகுருவின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடல்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலா அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகியே.

பொழிப்புரை :

உயிர்க்குச் சிவத்தைக் காட்டாது தம்மையே காட்டி நிற்கின்ற முப்பத்தாறு கருவிகளின் சேட்டைகளும் அடங்கும் முறையை மேலான குரு உபதேசம் செய்யும் பேற்றினை அக்குருவைத் தரிசித்து வணங்குவதாகிய வணக்கமே தரும். அவ்வுபதேச வாயிலாக அது மேலும் சிறப்பாகச் சிவனது திருவடியைத் தரும் பின்பு முடிநிலைப் பேறாக அவனது ஆனந்தத்தைத் தந்து, அஃது எல்லை யின்றிப் பெருகி வருமாறு பேணியும் நிற்கும்.

குறிப்புரை :

`ஆகவே, உபதேசத்திற்கு முன்னும், அதன் பின் சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நிலைகளிலும் குரு வழிபாட்டினைத் தவிரற்க` என்பது குறிப்பெச்சம்.
``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது - முன்னவனே
தானேதா னாச் செய்தும், தைவமென்றுந் தைவமே;
மானே தொழுகை வலி``3
என்றார் மெய்கண்ட தேவரும்.
அங்கே - அப்பொழுதே. ``அடங்கிடல்`` என்றது, அதற்குரிய வழியைக் குறித்தது. `குருபரன் கூற, அவனைக் கும்பிடுதல் தந்திடும்` என இயைக்க. கும்பிடு, முதனிலைத் தொழிற்பெயர். `தத்துவம் முப்பத்தாறனுள் மேலே உள்ள சிவதத்துவம் ஐந்தும் செலுத்துதல் அளவாய் நிற்க, ஏனை முப்பத்தொரு தத்துவங்களே சகலர்க்கு மேற்கூறிய ஐந்துடம்புகளாய் வந்து பொருந்தும்` என்க.
இதனால், ஞான குரு தரிசனம் அடைதற்கரிய பேறுகளை யெல்லாம் அளித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையு மாகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.

பொழிப்புரை :

தம்மை அடைந்தவரை, முத்துரியங்கட்கும் அப்பாற்பட்டு ஒளிரும் பேரொளிப் பிழம்பாகிய, அணுகுதற்கரிய பரசிவப் பொருளேயாய், அதனைப்போலவே எங்கும் வியாபகமாய், அறிவு மாயாகாரியங்களின்மேல் படர்ந்து செல்லுதலும், அதனை விட்டு ஒன்றும் அறியாது அறியாமையுள் மூழ்கிக்கிடத்தலும் ஆகிய `சகலம், கேவலம்` என்னும் இரண்டும் அற்ற இடமாகிய சுத்த நிலையிலே தங்கும்படி கொண்டுபோய்ச் சேர்க்கின்ற பெருஞான குருவின் திருவடி தரிசனச் சிறப்பை அளவிட்டுச் சொல்ல இயலாது.

குறிப்புரை :

முத்துரியங்களை முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஆகி` என்பதை, ``பரசிவம்`` என்பதனோடும் கூட்டுக. விரிவு, சகலம். குவிவு, கேவலம். ``விரிவு குவிகு அற`` என்றதனஆல், `அவை அற்ற நிலத்தே விட்ட பெரிய குரு` என்க. விடுதல் - சேர்த்தல். அதிகாரம் `தரிசனம்` ஆதலின், ``பதம்`` என்பதும், பாத தரிசனத்தையே என்க. பாதம் பயன் தருதலும் தரிசனத்தினாலே யென்பதும் உணரற்பாற்று.
இதனால், முன் மந்திரத்தில் `வேறே சிவபதம் மேலா அளித்திடும்`` எனக் கூறப்பட்ட பயனின் பெருமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.

பொழிப்புரை :

என் ஞானகுரு நந்தி பெருமான்; அவர் தாயைப் போலும் கருணையுடையவர்; உயிர்க்கு உறுதி பயக்கும் சொல்லை யுடையவர்; கட்புலனாகின்ற திருமேனியை உடையவர். எனினும் பாவிகட்கு எட்டாதவர். யான் தலையைப் பெற்றது அவரது திருவடிகளில் படும்படி வணங்குதற்காகவே; மற்றும் அவற்றைச் சூட்டுதற்காகவுமாம். நான் வாய்பெற்றது அவரை வாழ்த்துதற்காகவே. நான் கண்பெற்றது அவரைத் தரிசித்தற்காகவே, நான் மனத்தைப் பெற்றது அவரை நினைத்தற்காகவே.

குறிப்புரை :

`ஞானத்தை விரும்புவோர் பலரும் எந்த ஞான குருவையேனும் அடைந்து, அவருக்கு ஆட்படுதலையே தங்கள் பிறவிப் பயனாக உணர்தல் வேண்டும்; இல்லையேல், ஞானம் கிடையாது; கிடைப்பினும் நிலைத்து நின்று பயன் தாராது` என்பதாம். ஆயன் - ஆய் தாய் போன்றவன். வாய் - வாய்மை. `காயத்தன்` என்பதில் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. `அந்நந்தி` என்பது, நான்கடிகளிலும் சந்தி நகர ஒற்று தொகுக்கப்பட்டு நின்றது. ``அடிக்கு, நந்திக்கு`` என்னும் நான்கன் உருபுகள் `அடியை வணங்குதற்கு, நந்தியைச் சிந்தித்தற்கு` என வினை பற்றி நின்றன. `பூவினைச் சென்றான், கடைக்குச் சென்றான்` என்பனபோல.
இதனால், ஞான குரு தரிசனமே மானுடப் பிறப்பின் பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடந் தீர்த்து பயங்கேடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`கருடோகம் பாவனையால் விடம் நீங்குவது போல்ச சிவோகம் பாவனையால் மும்மலங்களும் நீங்கும்` என்பது இதன் திரண்ட பொருள். சிவோகம் பற்றி முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. கருடோகம் பாவனை, சிவஞான போத ஒன்பதாம் சூத்திர பாடியத்துள் இனிது விளக்கப்பட்டிருத்தல் காண்க. இதனானே, `பாவனை பொய்யன்று` என்பதும் நிறுவப்பட்டதாம். ``கருட தியானத்தால் விடம் அகலும் அதுபோல``8 எனச் சிவஞான சித்தியிலும் சொல்லப்பட்டது. ``அவன்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டுக. ``அவன்`` என்றது பாவிப்பவனை.
இதனால், குருத்தியானமே சிவோகம் பாவனையாதல் கூறப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்`` என்னும் மந்திரம், மூன்றாம் தந்திரத்து, `கால சக்கரம்` அதிகாரத்தில் வந்தது.]

பண் :

பாடல் எண் : 6

தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும்
மான்ற அறிவும் மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்(று)அற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

பொழிப்புரை :

தோன்ற அறிதல் - பொருள்களை இனிது விளங்கத் தெளிய உணர்தல். தோன்றல் தோன்றாமை - விளங்கவும் விளங்காமலும் ஐயமாக உணர்தல். மான்ற அறிவு - யாதும் அறியாது அறிவு மூடமாதல். இவையே மறித்து மறித்து வரும் நனவு கனவு உறக்கங்களாம். இம்மூன்றும் நீங்கிய நான்காம் நிலை துரியம் அது மூன்று வகையாய் நிகழும். (அவை முன் தந்திரத்தில், `முத்துரியம்` என்பதில் காட்டப்பட்டன. அம்மூன்று துரியங்களும் நீங்க, ஐந்தாவதாகிய அதீதத்தில் ஞான குருவை உணர்பவன் (மேற்கூறியவாறு கருடோகம் பாவனை செய்பவன் கருடனே யாதல் போலக்) குருவேயாகிவிடுவான்.

குறிப்புரை :

`மலம் நீங்கிய முத்தனாய் விடுவான்` என்பதாம். நந்தி நிலையை யடைந்தவனையே ``நந்தி`` என்றார். ``உயர் மோனந்தான்`` என்றது `ஞானகுரு` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், `துரிய பாவனை முதிர, அதீதபாவனையால் பாவகன் பாவிக்கப்படும் பொருளாகிவிடுவான்` என, மேல், ``சிவன் அவன் ஆம்`` எனக் கூறியது மெய்ம்மையாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர்
பந்தம் அறுத்த பரம்குரு பற்று.

பொழிப்புரை :

புருடனது உடம்பில் சந்திர மண்டலம் எனக் குறிக்கப்படுகின்ற அந்த எல்லைக்குள்ளேயிருக்கின்ற புருவ நடுவில், நறுமணம் பொருந்திய ஈரிதழ்த் தாமரை மலரில் அருட்சத்தி, பிறிதொரு நிறத்தொடு கூடாது தூய்மையாய் உள்ள படிகம்போன்றிருக்கின்றார். உனது பாச பந்தங்களை முற்ற அறுத்த ஞான குருவை நீ அவ்விடத்திலே தியானி.

குறிப்புரை :

`தியானித்தால் அவர் உன்னைச் சிவனாக்கி விடுவார்` என்பது குறிப்பெச்சம். ஞான பூசைக்கு ஓமத் தானம், பூசைத் தானம், தியானத் தானம் முறையே உந்தி, இதயம், புருவநடு ஆதலின், `தியானத்தைப் புருவ நடுவிலே செய்க` என்றார். புருவ நடுவே `ஆஞ்ஞை` எனப்படும். ஆஞ்ஞை, சிவனது ஆணை. அது சத்தியேயாதலை உணர்க. `இரண்டிதழ்க் கந்த மலரில்` என மாற்று. ``கன்னியும்`` என்னும் உம்மை சிறப்பு. பரம் குரு - மேலான குரு.
இதனால், கருடோகம் பாவனைபோலக் குருவைப் பாவகன் தானாகப் பாவித்தலைச் செய்யும் இடம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மனம்புகு தான்உல கேழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வான்நிலம் தாங்க
சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப தாமே

பொழிப்புரை :

`ஏழுலகங்களிலும் உள்ள உயிர்கள் மகிழும்படி அவைகளின் மனத்தினுள் இருப்பவனும், நீண்ட வானுலகத் தேவரையும், மண்ணுலக மக்களையும் அருள்புரிந்து காக்க வேண்டிப் பல தலங்களில் எழுந்தருளியிருப்பவனும். பாவத்திற்கு அஞ்சாது உலகிற்குக் கொடுமையை விளைப்பவர் யாராயினும் அவர்கள் அஞ்சி நடுங்கும்படி சினம் கொள்கின்றவனும், காட்டை இடமாகக் கொண்டு ஆடல் புரிகின்றவனும் ஆகிய ஒருவனது இருப்பிடம் இப்பெரு நிலத்திற்கு வடக்கெல்லையாகிய இடத்தில் உள்ளது` என்று அறிந்தோர் சொல்லுவர்.

குறிப்புரை :

கயிலை மலையை இவ்வாறு குறிப்பாற் சுட்டினார் `நகர்` என்பது இறைவன் இடத்தைக் குறிப்பதுபோலவே, `ஊர்` என்பதும் அவனது இடத்தைக் குறிக்கும்.
``பணியியர் அத்தைநின் குடையே, முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே``
என்னும் புறப்பாட்டில், இறைவனது இடம் `நகர்` எனச் சொல்லப் பட்டது. `இறைவனாவான் சிவன் ஆதலின், `ஊர்` என்பது அவன் இயல்பாக இருக்கும் இடமாகிய கயிலாய மலையைக் குறிக்கும்` என்னும் கருத்தினால், ``ஊர்க் கோட்டம்``9 எனச் சிலப்பதிகாரம் கூறியதற்கு அரும்பத உரையாசிரியர், `ஷ்ரீ கைலாயம் நிற்கும் கோயில்` என்றும், பொருள் உரைத்தமை இங்கு அறியற்பாலது. ஞான குரு தரிசனத்தில் இதனைக் கூறியது `கயிலை மலையில் தென்முகக் கடவுளாய் இருந்து நால்வர் முனிவர்க்கு ஞானத்தை நால்வர் முனிவர்க்கு ஞானத்தை அளித்த முதலாசிரியன் சிவனே` எனவும், `ஆகவே, உலகில் ஞானத்தை அருளும் ஞானாசிரியர் யாவரும் அவனாகவே கொள்ளற்பாலர்` எனவும் உணர்த்தற் பொருட்டாம்.
``யோகியார் யோக முத்தி உதவுத லதுவும் ஓரார்``l என்னும் சிவஞான சித்தியும் தென்முகக் கடவுள் வடிவத்தையேயாதல் அறிக. இரண்டு மூன்றாம் அடிகளில் அநுக்கிரக நிக்கிரகங்களைச் செய்வோன் ஆதலையும், முதலடியில் அவற்றை அவன் உயிர்களோடு அத்துவிதமாய் நின்று செய்தலையும் குறித்தார். ``உலகு`` என்றது உயிர்களை மகிழ்தற்குரியன அவையேயாகலின்,
``வானிடத் தவரும் மண்மேல் வந்து
அரன்றனை அற்சிப்பர்``8
ஆகலின் நிலவுலகத் தலங்கள் அவர்களது நன்மைக்காகவும் இருத்தலையறிக. இரண்டாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. உயிரெதுகை பெற்றதுமாம்.
இதனால், இவ்வுலகத்து ஞான குரவரெல்லாம் தென்முகக் கடவுளாதலைக் கூறுமாற்றான், அவரது தரிசனத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தான்ஆன வண்ணம்ஐங் கோசமும் சார்தரும்
தான்ஆம் பறவை வனம்எனத் தக்கன
தான்ஆன சோடச மார்க்கம்தான் நின்றிடில்
தான்ஆம் தசாங்கமும் வேறுள்ள தாமே.

பொழிப்புரை :

சார்ந்ததன் வண்ணமாம் தனது இயல்பினால் ஐந்து உடம்புகளைச் சார்ந்து அவையேதானாய் நிற்கின்ற பறவையாகிய உயிர் அது சென்ற திரியும் காடாகிய சொல்லுலகத்தில் `பதினாறு பாகளை உடைய ஒரு நல்ல வழியைக் கண்டு நடக்குமாயின், அது சிவமாம் தன்மையை அடையும், இனி, அஃதேயன்றி, அப்பறவை சிவமாதற்குப் பத்து படிகளையுடைய வேறொரு வழியும் உண்டு.

குறிப்புரை :

ஐந்து உடம்புகள் எட்டாம் தந்திரத் தொடக்கத்தே காட்டப் பட்டன. அவை பறவைகளின் உடம்பாகவும், அவற்றில் உள்ள உயிர் பறவையாகவும் உபநிடதங்களில் உருவகிக்கப் படுதலும் மேலே கூறப் பட்டன* சொல்லுலகமாவது மொழி மொழி வாயிலாகவே உயிர் உலகத்துப் பொருள்கள் பலவற்றையும் மிக விரைவாக, மாறி மாறி உணர் கின்றது. அதனால், மொழியை உயிராகிய பறவை பறந்து திரியும் காடாக உருவகித்தார். ஆயினும் உயிருக்கு உறுதி பயக்கின்ற மந்திரங்களும் அந்தச் சொல்லுல கிலேதான் உள்ளது. ஆதலின் அவற்றை அந்தக் காட்டில் கிடைக்கும் வழியாக வைத்து, அவற்றுட் சிறந்த சோடச கலாப் பிராசாத மந்திரத்தைப் பதினாறு படிகளையுடைய நல்ல வழியாகக் கூறினார். `தசாங்கம்` என்றது தச காரியத்தை. பிராசாத யோகம் யோகமாய் நிற்க, தச காரியம் ஞானம் ஆதல் பற்றி அவற்றின் வரிசையை ``வேறுள்ளது`` என்றார். இனி, ``சோடச மார்க்கம்`` என்பதை, `சரியை -யிற் சரியை, சரியையிற் கிரியை முதலிய பதினாறு` என்பாரும் உளர். இங்கு விளக்கப்படுவது ஞானம் ஒன்றேயாகையாலும், பிரிசாத யோகம் ஞானயோகமே ஆதலாலும் அவர் கூறும் பொருள் சிறவாமை அறிக.
பிராசாதயோகம், தச காரியம் - இவற்றை அவ்வந் நூல்களிற் காண்க.
``தான்`` நான்கில் முன்னிரண்டும்` ஆன்மாவால் சாரப்படும் பொருள். பின்னிரண்டும் சிவம். `வண்ணத்தோடும்` என உருபு விரிக்க. ``சார்தரும்`` என்பது, `சார்தந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `வனம் எனத் தக்கனவற்றில்` என ஏழாவது விரிக்க. `சோடசத்தையுடைய மார்க்கம்` என்க. மூன்றாம் அடியில் உள்ள ``ஆன`` என்னும் பெயரெச்சம், ``மார்க்கம்`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. ``ஆன்`` என்னும் இரண்டு இறந்த காலங்களும் முன்னை நிகழ்ச்சி வாயிலாக முக்கால நிகழ்ச்சியையும் குறித்தவாறு.
இதனால், `ஞான குரு தரிசனத்தால் உயிர் உய்யும் வழியை உணரும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி
உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும்
கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு)
அருவினை சோரும் அழிவார் அகத்தே.

பொழிப்புரை :

ஒருவரை அணுகிவிட்டால், பின்பு அவரை விட்டு ஒருபோதும் நீங்குதல் இல்லாதவர் எங்கள் நந்தி பெருமான். அந்நிலையில் அவரது திருவுருவத்தை உள்ளே நினைத்தால், நினைக்கின்ற உள்ளங்களை அஃது உருக்கிவிடும். அதனால், அங்ஙனம் உருகிய உள்ளம் உடையவர்கள் அவரிடத்தே ஒடுங்கி, அவரது அருள் கண்ணாகவே எதனையும் காண்பர். அங்ஙனம் காண வல்லார் முன்பு அவரது பிராரத்த வினை இவ்வுலகத்தில் மிகவும் மெலிந்து விடும். (உயிரைத் தாக்காது, உடல் ஊழாய்க் கழியும்` என்பதாம்.) அதனால், அவர் தியானித்த அந்த உருவத்திலே அடங்கித் தற்போதம் அற்றிருப்பர்.

குறிப்புரை :

`அதனால், அவர்க்குப் பின்னை வினையாகிய ஆகாமியமும் உண்டாகாது` என்பதாம் கரு - முதற்பொருள் தாக்க வரும் வினை தாக்க மாட்டாது மெலிதல் பற்றி, ``வல்லார்க்குச் சேரும்`` என தாக்கப்படுவோர்க்கு நான்கன் உருபு கொடுத்துக் கூறினார்; அவனை `அவனுக்கு இவன் இளைத்தான்` என்பது போலக் கொள்க. அரு - சூக்குமம். பிராரத்தம் யாரும் அறியாதபடி வருதாதல் அறிக. `அருவிகண் சோரும்` என்பதும் பாடம்.
இதனால், `ஞான குருவாய் வந்து ஞானத்தைத் தந்த சிவன் பின்பு நீங்கான் ஆதலின், ஞானியரும் அவனை விடாது பற்றி வினை திரப்பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை
அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
நிலைப்பட நாடி நினைப்பற உள்கின்
தலைப்பட லாகும் தருமமுந் தானே.

பொழிப்புரை :

எங்களது மெய்ப்பொருளாகிய சிவனைப் பலரும் அடையலாம். ஆயினும், அதன்பின்பும் அலைகள் போல வந்து வந்து தாக்குகின்ற பாசங்களை அவ்வப்பொழுது அவை தாக்காதபடி அறுத்தறுத்துப் போக்கி, அடைந்த அடைவு நிலைப்பில் நிற்கமாற்றை ஆராய்ந்து, தற்போதம் தலையெடாதபடி குறிக்கொண்டிருந்தால், அடைந்தது அடைந்ததாகவேயிருக்கும். அதுவே சிவனை அடைந்தவர்க்குரிய தருமமும் ஆகும்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்து நிலைத்திருத்தல் அரிது` என்பதாம். இது பற்றியே ஞானம் பெற்றோர் தம் ஞானாசிரியரது அடி நிழலைப் பிரியாது உறைவர் என்க. அதிதீவிர நிலையை உடையவர்க்கு இவ்வாறான இடர்ப்பாடு தோன்றாது. ஏனையோர்க்கு இவை தோன்றும். அதனையே அருணந்தி தேவர்
``நேசமொடும் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நிலையுடையோர் நின்றிடுவார் நிலையதுவே ஆகி;
ஆசையுடன் அங்கும் இங்கும் ஆகி அலமருவோர்
அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி உரைப்பாம்.3
என்றார். மெய்ப்பொருளைத் தலைப்பட்டும் அதிலே நிற்கமாட்டாது மீளப்பிறவியிற் செல்வோரைக் கருதியே திருவள்ளுவர், ``தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்``9 என்றார். பின்னர் நிற்கும் நிலை, கழைக் கூத்தர் கரணம் இடுதலும் கயிற்றின்மேல் நடத்தலும், குடநீரைத் தலையிற்கொண்டவன் கையிரண்டையும் வீசி நடத்தலும் போலும் அருஞ்செயலாதல் பற்றி முதற்கண், ``தலைப்படலாம் எங்கள் தத்துவன்றன்னை`` என எளிது போலக் கூறினாராயினும் அதுவும் எளி தன்று என்பது வெளிப்படை. தருமம் கடமை. ``அவர்க்குத் தருமமும் ஆகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. அது செய்யாவழித் தீங்கு வருதல் பற்றி, ``தருமம்`` என்றார். உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், ஞானத்தைப் பெற்றுவிட்டவர்க்கும் ஞானகுரு தரிசனம் இன்றியமையாததால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே.

பொழிப்புரை :

சிவபெருமான், தன்னை நினைத்தால், நினைப்பவரைத் தானும் நினைப்பான். (நினைத்து, அவரை மேன்மேல் உயரச் செய்வான்) அதனால், சுனைக்குள்ளே மலர்ந்த ஒரு தாமரை மலரின்மேல் எழுகின்ற சோதிபோல இருதய கமலத்திலே ஒளிவடிவாய் விளங்கும் அப்பெருமானை `அடைதல்` என்பது மனத்தால் அடைதலேயாதலின் அவ்வாறு அவனை முதிர்ந்த அன்பால் அடைந்தவர், உலகியலில் எத்துணைச் சிறுமையராய் இருப்பினும், உயர்ந்தோரினும் உயர்ந்தோரேயாவர்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவரை அடைந்தோரும் உயர்ந்தவரே` அவரை அடைந்து பயன் பெறுதலே அறிவுடைமையும், அங்ஙனம் செய்யாது, உலகியல் பற்றி அவரைப் புறக்கணித்தல் அறியாமையும் ஆம்` என்பது கருத்து. `கொப்பூழ் அடியாகத் தோன்றிட தண்டின்மேல் மலரும் மலர் இருதயம்` எனச் சொல்லப்படுவதால், அதனை, `சுனையின் விளைந்த மலர்`` என்றார். அச்சோதியினை` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. `தினை, பனை என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டப்படும் சில அளவைகள்9 பரிமேலழகர் உரை. ஆதலின், சிறுமையை, ``தினைப்பிளந்தன்ன சிறுமையர்`` எனக் குறித்தார். பகர ஒற்று எதுகை நோக்கி விரிக்கப்பட்டது களத்தல் முதிர்தல். அஃது இங்கு அன்பு முதிர்தலைக் குறித்தது.
இதனால், `உயர்ந்தோரினும் உயர்ந்தோராவர் ஞான குரவரே` என்பது கூறும் முகத்தால், அவரது தரிசனத்தின் உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.

பொழிப்புரை :

சிவனை மனத்தால் அடைந்து நிற்கும் பொழுது இடையே அதனை நீக்குகின்ற ஊறு ஏதேனும் தோன்றுமாயின், அதனை, `இது நாம் முன்பு செய்த வினையினின்றும் முகந்து கொண்டு வந்த பிராரத்தத்தின் விளைவு` என அறிக. அங்ஙனம் அறியுமிடத்து, `அந்தப் பிராரத்தம் தானே வரும் சுதந்திரம் உடைத்தன்று; சிவனே அதனைக் கூட்டுவிக்கின்றான்` என உணரவல்லவர், அதனாலும் சிவபத்தி செய்பவராயே விளங்குவர்.

குறிப்புரை :

வினையை நுகர்வோர் ஆகார்; அதனால், அந்தப் பிராரத்தம் கட்டாயமாக விளைத்துச் செல்லும் ஆகாமியத்தையும் விளைக்கமாட்டாது உடல் ஊழாய் ஒழியும்` என்பதாம்.
``நின்னைஎப் போதும் நினையலொட்டாய் நீ;
நினையப்புகின்,
பின்னைஅப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று
நாடுவித்தி``9
எனப் பிராரத்த விளைவிலும் சிவனையே நினைந்தவாற்றை உணர்க. `தத்துவன் றன்னைத் தலைப்படும் காலத்து` என மாற்றியுரைக்க. விதி - பிராரத்தம் விதியை விளைவை, ``விதி`` என்றும், அயர்வொழிந்து நிற்றலை, ``நேடி`` (தேடி) என்றும் கூறினார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்று வந்தது.
இதனால், ஞானியர் பிராரத்தத்தால் தாக்குண்ணாது நிற்குமாறு கூறப்பட்டது. இவ்வாறு நிற்பவர் ஞானகுரு என்பதாம்.

பண் :

பாடல் எண் : 14

நகழ்வொழிந் தார்அவர் நாதனை உள்கி
நிகழ்வொழிந் தார்எம் பிரானொடுங் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியனுள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

பொழிப்புரை :

`யான், எனது` தன்முனைப்புக் கொண்டு தருக்குதலை ஒழிந்து, `எல்லாம் அவனே` என்று அடங்கி யிருப்பவர்களது அறிவினுள்ளே சிவன் நின்று எல்லாக்கலைகளாலும் புகழப்படுகின்ற தனது திருவருள் நெறியையே விளக்கி நிற்பான். அதனால், அவர்கள் அவனையே அறிந்து நிற்றலால் அத்திருவருள் நெறியைவிட்டு அப்பால் நகர்தல் இல்லை. மற்றும் அவனிடத்திலே அழுந்தி நிற்றலால் பிறவிக்குரிய நெறியில் சென்று பிறப்பதில்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. நகழ்வு - நகர்வு. திகழ்வொழிந்தாரைச் சுட்டுவதாகிய ``அவர்`` என்னும் சுட்டுப் பெயர் செய்யுளாகலின் முன் வந்தது. `நாதனை உள்கி நகழ் வொழிந்தார்; எம்பிரானொடுங் கூடி நிகழ்வொழிந்தார்` என்க. ``உள்கி, கூடி`` என்னும்`` செய்திகள் எச்சங்கள் காரணப் பொருளாவாய் நின்றன. (கற்றுப் பெரியன் ஆயினாள் என்பதிற் போல`. ``காட்டிப் புகுந்து நின்றான்`` என்பதை, `புகுந்து காட்டி நின்றான்` எனப் பின்முன்னாக வைத்துரைக்க.
இதனால், `ஞான குரவர் ஏனையோர் போலவாரல்லர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச்
சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.

பொழிப்புரை :

ஞான குரு காட்டும் ஞானநெறி, அன்று அயன் மால் தேடும்படி வந்த, மரகது மணியொளிவும் மாணிக்க மணி யொளியும் சேர்ந்த ஓர் ஒளிவடிவை அடையும் உபதேச மொழியே யாம். அந்தமொழியின் பொருளே மூக்கின் அடி இடமாகிய புருவ நடுவில், ஆன்மாவின் அறிவினுள் அறிவாகத் தியானிக்கப்படும் ஒளியுமாகும்.

குறிப்புரை :

``மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்``3
என்பதனால், அயன், மால் இவர்கட்டுமுன் ஒளிவடிவம் பச்சை நிறமும், செம்மை நிறமும் விரவிய ஒளியாய் இருந்தமை அறியப்படும் முதற்பொருள் `சத்தி, சிவம்` என இருதிறப்பட்டு இயைந்து நிற்றலை இந்நிறங்கள் குறிக்கும்.
``அழகாயும், மெய்ம்மையாயும் உள்ளவனும்,
பரப்பிரம்மம் - என்று பேசப்படுபவனும்,
உயிரினுள் இருப்பவனும், கருமை நிறமும்,
பொன்னிறமும் கலந்த உருவத்தை உடையவனும்,
மேல்நோக்கி பாயும் வீரியத்தை உடையவனும்,
மாறுபட்ட கண்களை யுடையவனும்,
உலகத்தைத் தன் வடிவமாகக் கொண்டவனும்
ஆகிய அவனுக்கு வணக்கம்! வணக்கம்!!*
என வேதமும் கூறிற்று. இரேகை - ஒளி. ``எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய``* என்பது பற்றித் தொகைச் சொல் இடையில் ரகர லகர முதல் ஆரியச் சொற்கள் முதற்கண் அகர இகர உகரங்களில் யாதும் பெறாது வருதலைக் `குற்றம்` என்றல் இல்லை. அதனால் ``மாணிக்க ரேகை`` என்றே வந்தது. ``மரகத மாணிக்க ரேகை`` என்னும் மும்மொழித் தொகைச் சொல் முதல் இருமொழிகள் உம்மைத் தொகையாய்ப் பின்பு `ரேகை` என்பதனோடு ஆறாம் வேற்றுமைத் தொகையாய்த் தொக்குப் பின்பு விடாத ஆகுபெயராய், அவற்றையுடைய ஓர் ஒளியைக் குறித்தது` ``வந்த`` என்பது, அயன், மால் இவர்முன் வந்த` என ஆற்றலாற் பொருள் தந்தது. `ரகையைச் சந்தித்திடும்` என இயையும். இவ்விரேகையை, ``சிவ`` என்னும் மந்திரம் உணர்த்து -மாறும், அதுவே உபதேசம் ஆமாறும் உணர்க. ``மூலம்`` என்றதை, `நாசியின் மூலம்` எனக் கொள்க. சுத்தான்ம அறிவை, ``சுந்தரச் சோதி`` என்றார்.
இதனால், ஞான குரு உபதேசம் பரசிவத் தியானத்தை உணர்த்திப் பயன் பெறச் செய்தல் கூறும் முகத்தால், அவரது தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணும்மா யோகக் கடவுள் இருப்பது
மண்ணும் நீர் அனல் காலொடு வானும் மாய்
விண்ணும்பின் னின்றி வெளியானோர் மேனியே.

பொழிப்புரை :

நிலம் முதலிய பூதங்கள் ஐந்தையுமேயன்றி, அவை தோன்றியொடுங்கும் இடமாகிய மூலப் பகுதியையும் கடந்து அறிவேயான ஞானியரது உடம்பில், யோகத்தால் கருதியுணரப் படுகின்ற கடவுள் இருப்பது, உணவை உண்கின்ற வாய் முதலிய உறுப்புக்கள் அவற்றையுடைய, உடம்பு அதனுள்ளிருக்கும் உயிர் ஆகிய அனைத்திலும் ஒன்றாய்க் கலந்தேயாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதல் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. அருவமாதல் பற்றி மூலப் பகுதியை ``விண்`` என்றார். இங்குக் குறிப்பது சகலரையேயாதலின் அவருக்குரிய மூலப் பகுதியை மட்டுமே கூறினார். எனினும், உபலக்கணத்தால் அசுத்த மாயையும் கொள்ளப்படும். வெளியாதல் - விடுபடுதல். மாயையினின்றும் விடுபடுதலாவது, அவற்றின் காரியங்களைத் தாமாக மயங்காது, தம்மை அவற்றின் வேறாக உணர்வில் நிலைபெற்றிருத்தல் அத்தகையோர் மாசுடையாராகாது தூயராகலின், அவரது உடம்பும் தூயதாக, அதன் கண்ணும் சிவன் விளங்குவான்` என்க. இது பற்றியே,
``... ... நிலாவாத புலால் உடம்பே புகுந்துநின்ற
கற்பகமே``3
எனவும்,
``எந்தையே! ஈசா! உடல்இடம் கொண்டாய்;
யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே``l
எனவும் திருமொழிகள் எழுந்தன என்க. `மேனியில்` என ஏழாவது விரிக்க. உடம்பு நிலைபெறுதற்கு உணவு இன்றியமையாதாதல் பற்றி அதனை உண்ணும் உறுப்புச் சிறந்தெடுத்துக் கூறப்பட்டது. கண்ணல் - கருதல்.
``இருப்பது`` என்ற வினைப்பெயர் அத்தொழில் மேல் நின்றது ஆதலின், அவ்வெழுவாய்க்கு, ``ஆய்`` என்ற வினையெச்சம் பயனிலையாயிற்று. `ஒருவன் உயர்வது உழைத்து` என்பதிற்போல.
``மாயோகக் கடவுள்`` என்றது, தென்முகக் கடவுளையே என்பர்.
இதனால், ஞானிகளது திருமேனியைச் சிவன் தனதாகக் கொள்ளுதல் கூறும் முகத்தால், குரு தரிசனம் சிவ தரிசனமேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும்மப் பாதியால்
பெரிய பதிசெய்துபின்ஆம் அடியார்க்(கு)
உரிய பதியும்பார் ஆக்கிநின் றானே.

பொழிப்புரை :

வேதாகமங்களால், `பதி` என்று போற்றப்படுகின்ற பரமசிவனது திருவாணை எவ்வுலகிலும் தடையின்றிச் செல்லும். அதில் ஒரு கூற்றினால் முன்னுள்ள அடியார்களை அவன் தானாகச் செய்து, மற்றொரு கூற்றினால் பின்னுள்ள அடியார்களுக்காகப் பலவகையான உலகங்களைப் படைத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

பரசுதல் - துதித்தல். அதற்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `பதியென்று பரசு பரசிவன் ஆணை பார்முழுதெல்லாம் நடக்கும்` என இயைக்க. `பாதி` என்றது கூறு` என்னும் பொருட்டாய் நின்றது. ஆணை - சத்தி. அதன் ஒரு கூறு` திரோதான சத்தியாய் நின்று உலகைச் செயற்படுத்தும் மற்றொரு கூறு அருட் சத்தியாய் நின்று உயிர்களைச் சிவத்தோடு சேர்த்துச் சிவமாக்கும். இதனையே இம் மந்திரத்தாற் கூறினார். இரண்டையும் புடைபடவைத்துக் கூறியது இவ் விடத்திலேயாகும். எண்ணுப் பெயர்கள் இரட்டிக்குமிடத்து, ஒவ் வொன்று. இவ்விரண்டு, மும்மூன்று என்பன முதலாக வருதல் போல, ``பாதி பாதி`` என்பது ``பப்பாதி`` என வந்தது. அதனுள் ஒவ்வொன்று, `பதி செய்தல், பார் ஆக்கல்` என்பவற்றோடு வேறு வேறு சென்றியைந்தது. பின் ஆம் அடியார் - பின்பு தான் ஆதற்கு உரிய அடியார். எனவே, `முன் ஆம் அடியார்` என்பது தானே பெறப்பட்டது. பின் வந்த `பதி, வாழும் இடம். `பதியாகிய பாரினை ஆக்கியும் நின்றான்` என உம்மையை மாற்றியுரைக்க.
இதனால், `ஞானகுரு, பர சிவனால் பதியாக்கப்பட்டவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அம்பர நாதன் அகலிட நீள்பொழில்
தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

பொழிப்புரை :

மக்கள் நிலவுலகத்துள்ளாராயினும் அவர்கள் எங்கள் சிவபெருமானது திருவருளைப் பெற்றிருக்கின்றார்கள் ஆகையால், அவர்கள், `அகன்ற இடத்தையுடைய அனைத் துலகங்களும் சிதம்பர நாதன் ஆகிய அவனது ஆணைவழியல்லது பிறவாற்றால் நடத்தலைத் தாங்கள் அறியவில்லை` என்று கூறுகின் றார்கள். அஃதாவது, `அவன் அன்றி ஓர் அணுவும் அசைதலைக் காணவில்லை` என்கின்றார்கள். தேவரும் மக்களுக்கு மேலிடத்துள் ளாராயினும் இந்த உண்மையை அவர்கள் உணர்ந்திலர்.

குறிப்புரை :

`காரணம், அவர்கள் எம்பெருமான் அருள் பெறாமை` என்பதாம்.
``கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற் கருளினை போற்றி!``
``தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள்``
``புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாளும்
போக்குகின் றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி ... ... [திருமாலாம்
அவன்விருப் பெய்தவும், மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்தமெய்க் கருணையும், நீயும்
அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்``3
என்னும் திருமொழிகளும் இக்கருத்தே பற்றி எழுந்தன.
மக்கள், `யாம் மானுடர்; சிவன் கடவுளர். ஆகவே அவன் நமக்கு அருள்புரிதல் வேண்டும்` என்னும் எண்ணத்தைப் பொதுவாக உடையவர். அதனால், அவர்களில் முயற்சியுடையோர் அவனது அருளைப் பெறுகின்றனர். தேவர், `நாமும் தேவர், சிவனும் தேவர்` என்னும் எண்ணத்தைப் பொதுவாக உடையர். அதனால் அவர்களுள் அவன் அருள் பெறுபவர் அரியர் ஆகின்றனர். சிலர் பெற நினைப்பினும் தாழ்வெனும் தன்மை வருதற்பொருட்டு மண்ணுலகில் வந்து வழிபட்டே சிவன் அருளைப் பெறுகின்றனர்.
``வானிடத் தவரும் மண்மேல்
வந்து அரன்றனை அற்சிப்பர்;
ஊனெடுத் துழலும் ஊமர்
ஒன்றையும் உணரார் அந்தோ``9
என்னும் சாத்திர மொழியைக் காண்க.
``அகலிடநீள் பொழில்`` என்பதை முதலிற்கொள்க. அம்பரம் சிறப்புப் பற்றி, சிதம்பரத்தைக் குறித்தது. `தாம் என்பர்` என இயையும். உம்பர் - மேலிடம். ``உம்பர்`` என்றதனால், `இம்பர்` என்பது பெறப்பட்டது. மூன்றாம் அடியை இறுதியிற் கூட்டுக. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், `சிவன் அருள் பெறாதார் சிவனது மேற்கூறிய இயல்பை உணர்தல் இயலாது` என்பது கூறப்பட்டது. `அதனாலே ஞான குருவின் பெருமையையும் அவர்கள் அறியார்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 19

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.

பொழிப்புரை :

எங்கள் ஞான குருவாகிய நந்தி பெருமான் எங்களுடைய நாங்கள் எங்களையே புகழ்ந்து கொள்ளும் இயல்புடையனவாய் இருந்த நிலையை மாற்றித் தமக்கு வணக்கங் கூறுவன ஆகும்படி அருள்புரிந்தார். அதனால், பின்பு எங்கள் அறிவுகள் தெளிவுடையன ஆகப் பெற்றோம். ஆகி, தேவர்கோவும் மக்கட் கோக்கள் பலரும் வணங்கும்படி `கோவணமும் மிகையே` என்னும் மனப்பான்மையுடன் துறவுக் கோலத்தை உடையர் ஆயினோம். யாவரும் பல அரிய சாதனங்களின் வழியே சென்று அடையப்படும் பொருளாகிய சிவமேயாய் இருக்கின்றோம். ஆகவே இனிப் `பிறிதொரு தெய்வத்தை வணங்குதல்` என்பது எங்கள்பால் நிகழாது.

குறிப்புரை :

`நந்தி, நா வணங்கும்படி அருள் செய்தான்; பின் சித்தம் தெளிந்தனம்; கோ வணங்கும்படி கோவணம் ஆகிப் போய் வணங்கும் பொருளாகி யிருந்தோம்; இனித்தே வணங்கோம்` என இயைத்துக் கொள்க.
நா வணங்குதல் கூறவே, ஏனைத் தலையும், உள்ளமும் வணங்குதலும் உடன் கொள்ளப்படும். ஈற்றடி ஆசிடை எதுகை.
இதனால் ஞான குரு தரிசனத்தால் விளையும் பயன் தம் அனுபவ்தில் வைத்துக் காட்டி முடிக்கப்பட்டது.
சிற்பி