ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி


பண் :

பாடல் எண் : 1

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

பொழிப்புரை :

வேதங்களில் உயர்த்துச் சொல்லப்படுகின்ற பிரணவ மந்திரம் மெய்ப்பொருள் இன்பத்தைப் பொதுவாக விளக்கும் தூல மந்திரமேயாம். (அஃது அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாகவே சொல்லப்படுகின்றது. அக்கரங்கட்கும் அத்தியான்மிக சத்திகள் உண்டு. எனினும் அவை வேத வேதாந்தங்களில் சொல்லப் படவில்லை. ஆகவே அத்தியான்மிக சத்திகளையுடையனவாகச் சொல்லப்படுகின்ற சீபஞ்சாக்கரமே (திருவைந்தெழுத்தே) சூக்கும மூல மந்திரமாகும். (இது பிரணவத்தை நோக்கி, `சூக்குமம்` எனப்பட்டது) இனித் திருவைந்தெழுத்திலும் மிகச் சூக்குமமானது ஞான குரு தமது கையால் காட்டுகின்ற சின்முத்திரை. இவற்றுள் முதற்கண் சொல்லப்பட்ட பிரணவ யோகம் வேதாந்த முறையாம்.

குறிப்புரை :

எனவே, சீபஞாசாக்கர யோகமும், அதன் பொருளைச் சின் முத்திரையால் உணர்வதும் சித்தாந்த முறை` என்பது அருத்தா பத்தியால் பெறப்பட்டது. பஞ்சாக்கர யோகமாவது பஞ்சாக்கரத்தைச் சுத்தமானதாக அறிவாற் கணித்தலாம். சின்முத்திரையை உணர்தல் அனுபவமாம். ``பிரணவம்`` என்பதை முதலிற் கூட்டுக. சொரூபம் - மெய்ப்பொருள். `தூலப் பேருரை` என இயையும். மூல மந்திரம், ``பேருரை`` எனப்பட்டது. திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு கூட்டிச் சொல்லுதல் `ஆறெழுத்து மந்திரம்` எனப்படும். ஆறெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து நோக்கி, பிரணவத்தை, `பரன்` என்றும், சிகாரம் முதலிய ஐந்தையும் முறையே `ஈசானம் முதலிய பஞ்சப் பிரமங்களின் சத்தி` என்றும் சிவாகமங்கள் கூறும். ஈசானம் முதலிய ஐந்தின் சத்திகள் முறையே `ஈசானி பூரணி, ஆர்த்தி வாமை, மூர்த்தி` எனப் பெயர் பெறும். இச்சத்திகள் ஐந்தும் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டுமாகிய கலைகளை (கூறுகளை) உடையன. இந்த முப்பத்தெட்டுக் கலைகளின் வடிவமாகவே சதாசிவ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவையெல்லாம் சிவாகமங்களிலும், சைவ பத்ததிகளிலும் காணத்தக்கவை. இந்தப் பஞ்ச சத்திகளையே நாயனார் இங்கு, `மேலைச் சொரூபப் பெண்`` என்றார். எனவே, `அக்கரங்களாகச் சொல்லும் வேதாந்தத்திலும், சிவசத்திகளாகச் சொல்லும் சித்தாந்தம் நுட்பமானது` என்பதை, ``பாவித்த சூக்குமம்`` என்றார். பாவித்த - மறைபொருளாக வைத்துக் காக்கப்பட்ட. சின்முத்திரையில் பெருவிரல் `சிவ` என்பதையும், சுட்டு விரல் `ய` என்பதையும், நடுவிரல் `ம` என்பதையும் ஏனை ஆழிவிரல் சிறுவிரல்கள் கன்மம் மாயைகளாய் `ந` என்பதையும் குறிப்பனவாம். ஆலித்தல் - உருப்படுதல். விரைவில் கரைவதாகிய பனிக்கட்டி (கல்மழை) அவ்வாறு கரைவதற்குமுன் `ஆலி` எனப் பெயர்பெற்று நிற்கும். ``காரணம்`` என்றது, `அதி சூக்குமம்` என்றபடி.
இதனால், ஞான குரு தரிசனத்தால் கிடைக்கும் பிரணவ யோகம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என மூன்றாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

பொழிப்புரை :

வேதாந்த சித்தாந்த ஞான குரவர்கள் ஒரு வார்த்தையாகச் சொல்லுகின்ற உபதேச மொழிகளும், சிவன் கொள்ளு கின்ற உருவம், அருவம். அருவருவம் என்கின்ற மூவகைத் திருமேனி களும், பலவகை மொழிகளும் ஆகிய எல்லாம் `ஓம்` என்பதாகிய பிரணவத்தில் உள்ளனவேயாம். அதனால் பிரணவயோகத்தால் சித்தி முத்திகள் யாவும் கிடைக்கும்.

குறிப்புரை :

`சொல்லுலகங்கள் யாவும் பிரணவத்தின் காரியமே` என்பதாம். ஓங்காரம் நான்கும் `பிரணவம்` என்னும் அளவில் வாளாபெயராய் நின்றன. ஒருமொழியே மகாவாக்கியமாம். மகாவாக்கியங்கள் முன் தந்திரத்துள் கூறப்பட்டன. `ஒருமொழி` என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் இங்குப்பன்மை குறித்து நின்றது. முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் `உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. உருவும், அருவும் கூறவே இனம் பற்றி உருவருவும் கொள்ளப்பட்டது. வருகின்ற மந்திரத்துள் `சராசரம்` என வருதலால், இங்குக் கூறப்பட்ட உருவம் முதலியன இறைவனுடைய திருமேனிகளாயின. `திருமேனிகள் ஓங்காரத்தில் உள்ளன` என்றது அவற்றது மந்திரங்களை நோக்கி இறைவனை `மந்திரத்தால் உருக் கோலி`9 எனக் கருதுதல் கிரியா மார்க்க முறை. அருவத் திருமேனியை மந்திரமாகவே உள்குதல் (தியானித்தல்) யோகமுறை `இம் முறைகளால் பிரணவம் சித்தியையும், முத்தியையும் தரும்` என்பதாம். சிறப்பு பற்றி முத்தி முன்னர்க் கூறப்பட்டது. முத்தியையும், சித்தியையும் தருவதை அவையேயாக உபசரித்துக் கூறினார்.
இதனால், பிரணவத்தினது இயல்பும், அதன் வழித்தான யோகத்தின் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.

பொழிப்புரை :

பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியங்களாகிய பலவகை உடம்புகளும் பிரணவத்திலிருந்தே தோன்றின. பிரணவமாகிய அதற்கு அப்பால் உள்ளன மூவகை உயிர்கள், ஆகவே பிரணவமே வடிவான உயிரை, `பரசிவன்` என்றே சொல்லலாம்.

குறிப்புரை :

``உள்`` இரண்டிலும் `நின்று` என்பது வருவிக்க சொல்லாலன்றிப் பொருள்கள் பற்றி `விளங்கிய ஞானம்`3 உண்டாதல் கூடாமை பற்றிச் சொற்களையே பொருளாகக் கூறும் முறை பற்றி அச்சொற்கள் அனைத்திற்கும் மூலமான பிரணவத்தினின்றே பொருள்கள் பலவும் தோன்றினவக்கா கூறினார். எனினும் சித்தாகிய உயிர்கள் ஓங்காரத்திற்கு வேறாதல் பற்றி `அவை ஓங்காரத்திற்கு அப்பால் உற்றன` என்றும், பிரணவத்தைச் செலுத்தி நிற்பது சிவ சத்தியேயாகலின் `பிரணவ வடிவான உயிரை, சிவன் என்றல் கூடும்` என்றும் கூறினார்.
``மூவகை அணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம்,
ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே``.
என்னும் சிவஞான சித்தயைக் காண்க.9 இதனால் உயிர் தன்னை உணர்தல் பிரணவ யோகத்தின் வழியாதல் விளங்கும்.
இதனால் பிரணவத்தின் சிறப்பும், `அதன்வழித்தான யோகத்தால் உயிர் தன்னை உணர்ந்து, தலைவனையும் உணரும்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
அருக்கச் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.

பொழிப்புரை :

`ஓம்` எனச் சமட்டியாகச் சொல்லப்படுவது `பிரணவம்` எனவும் அதனை `அகாரம், உகாரம், மகாரம், விந்து. நாதம் எனப் பெரும்பான்மை ஐந்தாகவும், மற்றும் பலவாகவும் பிரித்து வியட்டியாகச் சொல்லப்படுகின்றவற்றை, `பிரணவத்திற்கு` இனம் எனவும் கூறுவர். அவ் இனங்களை மேல், `கலைநிலை` என்னும் அதிகாரத்தில் காணலாம். * அந்த இனங்கள் ஞான வடிவான பல சத்திகளாகும். சத்திக்கும் சிவத்திற்கும் வேற்றுமையின்மையால் அவைகளை, `ஆனந்த மயமான சிவம்` என்றும் சொல்லலாம். அச்சத்திகள் அண்டத்தில் சரம், அசரம் ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்து நிற்கும். மற்றும் பிண்டமாகிய உடம்பில் ஆறாதாரங்கள் முதலான பல இடங்களிலும் நிற்கும். இத்தன்மைகள் எல்லாவற்றையும் உணர்ந்தவர்கட்கே விரிந்த ஞானம் உளதாகும்.

குறிப்புரை :

இனத்தை, ``வருக்கம்`` என்றார். ``சுகமாம் பிரமம்`` என்பது பெயரெச்சத் தொடர் உம்மை இறந்தது தழுவியதனோடு, சிறப்பு. அதனால் சத்தியாதல் பெறப்பட்டது. ஞாயிற்றைக் குறிக்கும் `அருக்கம்` ஒன்பது `ஒளி` (விளக்கம்) என்னும் பொருட்டாய் நின்றது. மேனி - வடிவம். அது தியான வடிவம். `மேனி உளதாம்` எனவும், `ஞானம் உளதாம்` எனவும் எச்சங்கள் வருவித்து முடிக்க.
இதனால் பிரணவ யோகத்தில் பிரணவ பல கலைகளாய்ப் பிரிந்து நின்று பயன் தருதல் கூறப்பட்டது. அக்கலைகள் சராசரங்கள் அனைத்துமாய் நிற்றலைப் பிராசாத நூல்களில் காண்க.
இனி, இம்மந்திரத்திற்கு வைதிக முறையில் பொருள் கூறுவோர், `வருக்கமாவன` ஐம், க்லீம், ஸௌம், ஹ்ரீம், ச்ரீம்` எனவும், `அவை மூலாதாரம் முதலிய இடங்களில் நிற்கும்` எனவும் கூறுவர். அம்முறை சிறப்புச் சிவயோகமாகிய பிரணவ பிராசாத யோக முறையாகாது, பொதுயோக முறையேயாம். இதனையடுத்து வரும் ``சோடச மார்க்கமும், ஈராறின் அந்தமும்`` என்பவற்றாலும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 5

மலையுமனோ பாவம் மருள்வன வாவ
நிலையின் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்த மாகும்
நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.

பொழிப்புரை :

தன்னறிவாலே தனக்குள் தோன்றும் மலைவுகள் எல்லாம் தெளிவைத் தாராது. மேலும், மேலும் மயக்கத்தையே தரும், இருள் நெறிகளேயாகும். ஆகையால், ஞான குருவின் தரிசனமே நிலையான உணர்வைத் தருகின்ற ஒளி நெறியாம். ஆகவே, தவத்திற் குரிய புண்ணியத் தலங்களும், அங்குள்ள தவத்தோர் கூட்டங்களும், அவரோடு கூடி ஒழுகுகின்ற தவ ஒழுக்கமாகிய நன்மையும் எல்லாம் நன்னெறியை உணர்த்துகின்ற நல்லாசிரியரது உபதேசமே.

குறிப்புரை :

உபதேசத்தின் வழிபட்டனவற்றை `உபதேசம்` என உபசரித்துக் கூறினார். நல்லாசிரியர்தம் உபதேச வழிபட்ட பொழுதே புண்ணியத் தலம் முதலியன உண்மைப் புண்ணியத் தலம் முதலியனவாம்` என்றபடி. `அவற்றைத் தன்னறிவளவிலே தான் அறிந்து கைக்கொள்ளுதல் பயனுடைத் தாகாது` என்பதாம். இங்ஙனம் கூறுமுகத்தானே, `பிரணவ யோகமும் உபதேச முறையான் உணர்ந்து மேற்கொள்ளற்பாலது` என்பது உணர்த்திய வாறு, `சித்தம் தவம் ஆகும் நலம்` என மாற்றிக் கொள்க. தவம் - தவ விருப்பம்.
இதனால், `உண்மைப் பிரணவ யோகம் இன்னது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்(கு)
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்(து)
ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.

பொழிப்புரை :

ஞானத்தை அடைதற்குரிய வழியை அடைய விரும்புவோர்கட்கு, அவர்கள் ஆதாரயோகத்தின் முடிநிலையாகிய புருவ நடுவையும் கடந்து மேல் ஏறி ஏழாந்தானத்தை அடைந்து உணர்ந்த ஞானத்தினால் நிராதாரத்தையும் கடந்துள்ள ஞேயமாகிய சிவத்திற் சென்று அடங்கியிருத்தற்பொருட்டு, `பன்னிருகலை, பதினாறுகலை` என்று பிராசாத யோகங்களைப் பதினான்கு வித்தைகளின் முடிவாகிய பிராசாத நூல்கள் கூறும்.

குறிப்புரை :

`சன்மார்ககிகட்கு. கோதண்டமும் கடந்த ஏறிய ஞானத்தால் ஞேயமாகிய அந்தத்து இருக்க, சோடசத்தையும், ஈராறையும் ஈரேழில் கூடிய அந்தமும் சொல்லும்` என இயைத்துக் முடிக்க. ஆடிய - முன்னோர் பயின்ற இது தாப்பிசையாய். `சோடச மார்க்கம்` என்பதனோடும் சென்றியைந்தது.
புருவநடு ஆதார யோகத்தின் முடிநிலை இடமாகலின் ``கோதண்டமும்`` என்னும் உம்மை சிறப்பு ஏறிய ஞானம் - ஏறியதனால் விளைந்த ஞானம். `ஞானத்தால்` என உருபு விரிக்க. ஞேய அந்தம் - ஞேயமாகிய அந்தம். இதுவே பிராசாத யோக முடிநிலை இடமாதலின் ``அந்தம்`` எனப்பட்டது.
பதினான்கு வித்தைகளாவன வேதம் நான்கு, வேதாங்கம் ஆறு, உபாங்கம் நான்கு இவற்றுடன் உபவேதம் நான்கு கூட்டி, `பதினெண் வித்தை` என்றலும், உபவேதம் நீக்கி, ``பதினான்கு வித்தை`` என்றலும் ஆக இரு வழக்குக்கள் உள்ளன. அவற்றுள் பின்னதை இங்குக் கூறினார்.
``ஈரேழிற் கூடிய அந்தமும்`` என்னும் உம்மை முற்றும்மை. அந்தத்தின் பொருளை ``அந்தம்`` என்றது ஆகுபெயர். பின்னர் அப்பொருளைக் கூறும் நூலை ``அந்தம்`` என்றது இருமடியாகு பெயர். ஈற்றடி உயிரெதுகை பெற்றது.
இதனால், `ஞானத்தைப் பெறவேண்டினார்க்குச் சிறந்த வழியாவது பிரணவ யோகமே` என்பது கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி