ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்


பண் :

பாடல் எண் : 1

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது `உணர்த்தரிது` என எஞ்சி நின்ற சொல்லெச்சம் பற்றி. ``கண்டீர்`` மூன்று தொடர்ப் பொருளை வலியுறுத்தி நின்ற முன்னிலையசைகள். ``உலகு`` இரண்டில் பின்னது உயிர்த்தொகுதி. நன்றாவது ஞானம். அதனைத் தருவதனை ``நன்று`` என உபசரித்துக் கூறினார். இனித் தின்று கண்டேன் என இயையும். இனி - இப்பொழுது.
இதனால், `ஞானத்தைத் தருதல் பற்றி மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரம் `என்பதும், அது நகாரம் முதலாக அமையின் தூல பஞ்சாக்கரமாம்` என்பதும் சொல்லப்பட்டன. இதனைப் பிரணவத்தோடு கூட்டிக் கூறின தூல சடாக்கரமாம்.
வடமொழி `ம` என விசர்க்க ஈறாய் நின்று முப்பதாம் மெய்யோடு புணருங்கால், விசர்க்கம் அம்முப்பதாம் மெய்யாகத் திரிந்து வருதல் பற்றித் தமிழில் நமச்சிவாய` எனச் சொல்லப்படும். அவ்வாறாயினும் வடமொழியிலாயினும், தென்மொழியிலாயினும் மெய்யெழுத்து எண்ணப்படாமையின், எழுத்து ஐந்தேயாம். `நமசிவாய` என்றல் யந்திர முறையாகிய கிரியா மார்க்கமாம். திருமுறைகளில் எல்லாம் ஞானமார்க்க முறையாகிய `நமச்சிவாய` என்றே சொல்லப்படும். திருமுறைகளில் பெரும்பான்மையாக இத்தூல பஞ்சாக்கரமே எடுத்தோதப்படுதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 2

அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

பொழிப்புரை :

சிவன், ``சொல் இறந்து நின்ற தொன்மையன்`` ஆயினும் சொல்லாலன்றி உயிர்கள் அவனை உணர்தல் கூடாமை பற்றி அவன் சொல்வடிவான பல பெயர்களையும் உடையவன் ஆகின்றான். எல்லாப் பொருள்களும் பெயராலே அறியப்படுதலாலும் எல்லாப் பொருள்களிலும் சிவன் அவையேயாய்க் கலந்து நிற்றலாலும் ஒரு வகையில், எல்லாப் பெயர்களும் சிவன் பெயர்களேயாகின்றன. பெயர்கள் யாவும் எழுத்துக்களால் ஆனவை. `அவ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` எனப்படுகின்றன. அந்த எழுத்துக்கள் பிரணவ கலைகளாகிய அகார உகார மகாரங்களால் முறையே `தோற்றம், நிலை, இறுதி` என்பவற்றை அடைவனவாகச் சொல்லப்படுகின்றன. ஆகவே, அனைத்துப் பெயர்களும் தோன்றி அழிவன ஆகின்றன. இந்நிலையில் தோற்றமும் அழிவும் இல்லாத சிவ நாமம், நகாரத்தை முதலாக உடைய ஐந்தெழுத்தாதல் ஆவதாம்.

குறிப்புரை :

எனவே, இந்த ஐந்தெழுத்துக்கள் ஐம்பத்தோர் அக்கரங்களுள் அடங்கி நிற்கின்ற அந்த எழுத்துக்கள் ஆகாது, வேறு எழுத்து என்பதாம். இது பற்றி, ``ஐந்து கலையில் அகராதி தன்னிலே`` என்ற மந்திரத்தை நோக்குக. மற்றும்,
``அஞ்செழுத்தீ தாகில் அழியும் எழுத் தாய்விடுமோ!
தஞ்ச அருடகுருவே சாற்று``
என்னும் உண்மை விளக்க அடிகளில் அமைந்த குறிப்பையும் உன்னுக. ஆதல் - தோன்றுதல். ஓங்கி உதித்தல் - நிலைத்து நிற்றல்.
``மாய்ந்து மாய்ந்து ஏறி`` என்றது, `பலவாய்த் தோன்றி மறைந்து பெயர்களாய் எண்ணிக்கை மிகுந்து` என்றபடி. இங்ஙனம் கூறியது பெயராயின பலவற்றையும் ``ஏறி`` என்பதன் பின் `முடிவாக` என்பது வருவிக்க. `முதலது` என்பதில் இறுதி நிலை தொகுத்தலாயிற்று.
இதனால், சிவ நாமமாகிய ஐந்தெழுத்துக்கள் ஏனை எழுத்துக்கள் பலவற்றில் சில ஆவன அல்ல` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம்
உகராதி சத்தி உள்ளொளி ஈசன்
சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம்
நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.

பொழிப்புரை :

`ஐம்பது` அல்லது, `ஐம்பத்தொன்று` எனப்படும் அகரம் முதலாகிய எழுத்துக்களில் பதினாறு வகையாய்ப் பராசத்தி நிறைந்து நிற்கும். (பதினாறாவன சயை, விசயை, அசிதை, பராசிதை, நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, இந்திகை, தீபிகை, இரோசிகை, மோசிகை, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை` என்பன.
அந்தச் சத்தியைக் குறிக்கும் பெயர் உகாரத்தை முதலாக உடையது `உமா, என்பது (இஃது உ, ம், அ என்பது கூட்டாக இருத்தலால், `சத்தி பிரணவம்` எனப்படும்.) சத்தி ஒளியாய் நிற்க. அதற்குப் பற்றுக் கோடான சுடராய் உள்ளார்ந்து நிற்பவன் சிவன் முன் மந்திரத்திற் கூறிய ஐந்தெழுத்து மந்திரத்தைச் சிகாரம் முதலாகக் கொண்டு நோக்கினால் அம்மந்திரம் மூன்று கூறாய், `பதி, பசு, பாசம்` என்னும் மூன்றையும் உணர்த்தும், ஆகவே, முன் மந்திரத்திற் கூறியவாறு நகாரத்தை முதலாகக் கொண்ட ஐந்தெழுத்தாலாகிய அந்த மந்திரமே அனைத்து மந்திரங்கட்கும் மூல மந்திரமாம் தகைமையை உடையதாகும்.

குறிப்புரை :

அகாராதி - அகரம் முதலாகிய எழுத்துக்கள். `அகாராதியில்` என உருபு விரிக்க. `பரையாம் தன் சத்தி உகராதி` உகாராதி - உகரத்தை முதலாக உடைய மந்திரம் என மாற்றியுரைக்க. ``உள்ஒளி`` என்பது, `ஒளி உள்` என்பது பின் முன்னாக மாறி நின்ற ஆறாவதன் தொகை. ``உள்`` என்பது ஆகுபெயராய் உள்ளார்ந்து நிற்கும் பொருளைக் குறித்தது. ஐந்தெழுத்து மந்திரத்தில், `சிவா` என்பது பதியையும் `ய` என்பது பசுவையும், நம என்பது பாசத்தையும் குறிக்கும். அவற்றுள்ளும் சிகாரம் சிவனையும், வகர ஆகாரம் அவனது அருட் சத்தியையும் குறிக்கும். `நம` என்பதிலும் மகாரம் ஆணவத்தையும், நகாரம் திரோதான சத்தியையும் குறிக்கும். மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்கும். இவற்றையெல்லாம், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் முதலிய நூல்களில் காண்க. ஏதம் - குற்றம்; பாசம். கோணம் - வளைவு. இரு பக்கமும் வளைந்து சென்று பாசத்தோடும், பதியோடும் பற்றும் தன்மையுடையது பசு, மந்திரம்` என்றது, மூல மந்திரமாம் தன்மையை.
இதனால், முன் மந்திரத்தில் ``நந்திதன் நாமம்`` எனக் கூறிய நகாராதி ஐந்தெழுத்தால் ஆகிய மந்திரம் ஏனை மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமாதற்குக் காரணம் விளக்கிக் கூறப்பட்டது. அதனோடே அக்கரங்கள் எல்லாம் சத்திமயம் ஆதலும் உடன் இணைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.

பொழிப்புரை :

நந்தி நாமமாகிய நகாராதி ஐந்தெழுத்தாலாகிய மந்திரத்தின் நிலையை நுணுகி நுணுகி நோக்கினால், அடி அண்ணம், கண்டம், (மிடறு, இருதயம், உந்தி, மூலம் என்பவற்றில் முறையாகப் போய், முதல் நிலையாய் நிற்கும். அந்நிலையே `நாதம்` என்பர். அதனை `அகரம்` எனவும் வழங்குவர். இனி அது தியானிக்கப்படும் நிலையில் புருவநடு, நெற்றி, உச்சி அதற்கு மேலும் செல்வனவாகிய நிராதாரம், மீதானம் ஈறாகிய ஐந்திடத்திலும் பொருந்தும்.

குறிப்புரை :

எல்லாச் சொற்களுமே ஒருவன் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி சொல்லும்பொழுது பல், இதழ், நா, அண்ணம் முதலியவற்றின் முயற்சியால் பிராண வாயுவோடு கூடிப் பருமையாய் வெளிப்பட்டு வைகரி வாக்காய் நிகழும். இவ்வாறாக மந்திரங்களை உச்சரித்தல் `வாசகம்` எனப்படும். தன் செவிக்குக்கூடக் கேட்காதபடி மெல்ல உச்சரிக்கும் பொழுது `அடி, அண்ணம், கண்டம்` என்னும் இடங்களில் மத்திமை வாக்காய் நிகழும். இவ்வாறாக மந்திரங்களை உச்சரித்தல் `உபாஞ்சு` எனப்படும். இவ்வாறு உச்சரித்தலே இல்லாமல் பொருள்கள் கருத்தளவாய் நிற்கும்பொழுது இருதயத்திலும், கருத்தளவாய் உருவாக நிற்கும்பொழுது உந்தியிலும் பைசந்தி வாக்காய் நிற்கும். கருத்தளவாய் நிற்க மந்திரங்களை எண்ணுதல் `மானதம் எனப்படும். இவற்றிலும் நுண்ணிதாய்க் காரண நிலையில் நிற்கும் பொழுது மூலாதாரத்தில் சூக்குமை வாக்காய் நிற்கும். அந்நிலையே சிறப்பாக, `குண்டலி சத்தி` எனப்படுகின்றது. இந்நிலைதான் ஐந்தெழுத்து மந்திரத்திற்கும் உள்ளது. ஆயினும், புருவ நடுமுதல் மீதானம் ஈறாகத் தியானப் பொருளாய் வியாபித்து நிற்றல் ஐந்தெழுத்து மந்திரத்திற்கன்றிப் பிற சொற்களுக்கில்லை. இச்சிறப்பை விளக்குதற் பொருட்டே முதற்கண் அனைத்துச் சொற்களும் நால்வகை வாக்காய் நிகழுமாற்றை எடுத்துக் கூறினார். ஆகவே அது ஞாபக மாத்திரையேயாம். புருவ நடு முதலாக மேற்செல்லுதல் எல்லாம் தியானமே யாதலின் அதனைக் கூறிற்றிலர். இலிங்கம், அதனை அடுத்துள்ள மூலத்தைக் குறித்தது. `அவ்வாய்` ஆம், என முடிக்க. துண்டம் - மூக்கு. அஃது அதன் அடியாகிய புருவ நடுவைக் குறித்தது. மத்தகம் - தலை நெற்றியையும் சுட்டுதற்கு, ``இருமத்தகம்`` என்றார். செல்லல் - அதற்குமேற் பெயராய்ச் செல்லும் இடங்களைக் குறித்தது.
இதனால், ஐந்தெழுத்து மந்திரம் பிற சொற்களின் வேறுபட்டதாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும்
மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும்
அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே.

பொழிப்புரை :

``தோற்றம் உண்டேல் மரணம் உண்டு.(திருமுறை - 7-7-2) என்றபடி பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இயற்கை நியதியின்படி இறப்பை எய்திய மக்களின் உடம்பை உறவினரும், ஊராரும் முறைப்படி எரியூட்டுவார்கள். அவ் எரி, ஏழுவகையான கதிர்கள் மிக்குத் தோன்றும் வகையில் ஓங்கி எரியும். அப்பொழுதுதான் பருவுடம்பில் எஞ்சி நின்ற `தனஞ்சயன்` என்னும் காற்று முதலிய சில கருவிகள் அவ்வுடம்பை விட்டு நீங்குவனவாகும். அவையும் நீங்க உயிர் நுண்ணுடலோடு வினைக்கீடாகத் தான் செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செல்லும். இவ்வாறான இயற்கை இறப்புவரினும், உயிர் செய்த பெருந்தீவினை காரணமாக இடையே திடீர் செயற்கை இறப்பு வரினும் எப்பொழுதும் உயிருக்குப் பாதுகாவலைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே.

குறிப்புரை :

`நெருப்பிலும், ஞாயிற்றிலும் ஏழுவகையான ஒளிக் கதிர்கள் உள்ளன` எனவும், `அந்த ஏழு கதிர்களே பகலவன் தேரில் ஏழு குதிரைகளாக உருவகிக்கப்பட்டன` எனவும் இக்கால அறிவியலார் கூறி விளக்குவர். அதனை நாயனார் முன்பே, ``கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கி`` எனக் கூறினார். கரணங்கள் - கருவிகள். ``விட்டு`` என்னும் செய்தென் எச்சம் எண்ணின்கண் வந்தது. ``எரி பொங்கி`` என்றதனால் `இயற்கை மரணம்` என்பது போந்தமையின், பின்பு ``மரணம்`` என்றது, அகால மரணத்தையாயிற்று. இரு நிலைகளிலும் அஞ்செழுத்துப் பாதுகாவலைத் தருதலாவது, உயிர், சுவர்க்க நரகங்களில் புகாது, சிவலோகத்தை அடைவித்தல். சிவலோகத்தை அடைந்த உயிர் ஏனை உயிர்கள்போல மீள இவ்வுலகத்தில் வந்து பிறத்தல் நியதியன்று. பிறக்கினும் ஞானத்திற்கு உரியதாகவே பிறக்கும். `அந்நிலையைத் தருவது ஐந்தெழுத்து` என்றபடி.
இதனால், பிறப்பை நீக்குவது ஐந்தெழுத்து மந்திரம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.

பொழிப்புரை :

`ஞாயிறும், திங்களும் எழுகின்ற காலை, மாலை என்னும் வேளைகளில் சிறப்பாகக் கணிக்கத் தக்க மந்திரம் இது` என்பதை அக்காலங்களில் மந்திரக் கணிப்புச் செய்வோரில் பெரும்பாலோர் அறிந்திலர். (ஆகவே அவர்கள் காயத்திரி மந்திரத்தையே அவ்வேளைகளில் கணிக்கின்றனர். ஆகவே) `சந்தியா தேவதை` எனப்படும் சத்திக்கு மிகவும் விருப்பத்தைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே என்பதை அறிந்து அதனை அக்காலங்களில் வாசகம் முதலிய மூவகையானும் ஓதுதலாகிய சிறப்பு அவர்கட்குக் கூடுமோ!.

குறிப்புரை :

`கூடாது` என்பதாம். நவிலுதல் - முறைப்படி அமைதல். ஞாயிறு எழும் காலம் காலை வேளையாதல் வெளிப்படை. `திங்கள் எழும் காலம் ஞாயிறு மறையும் நேரம்` என்றே கொள்ளப்படும் இவையிரண்டும் கூறவே, இனம் பற்றி நண்பகலும் கொள்ளப்படும். இவையே முப்போதுகளாம் `சந்தியா காலம் எனப்படும் ஆசாரியராயினார் நள்ளிரவிலும் வழிபடுவர். அது சிறுபான்மை.
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்(கு)
அந்திஉள் மந்திரம் அஞ்செ ழுத்துமே``9
என்னும் ஞானசம்பந்தர் திருமொழியை இங்கு உடன் வைத்து உணர்க. ஆய் - ஆய்வு; முதனிலைத் தொழிற்பெயர். சேயுற் கண் - செவ்வரி பொருந்திய கண். மந்திரங்களைக் கணிக்கும் முறை `வாசகம், உபாஞ்சு மானதம்` என மூன்று என்பதை மேல், `வாயொடு கண்டம்`` எனப் போந்த மந்திர உரையிற் காண்க. ``வழுத்தலும்`` என்னும் உம்மை சிறப்பு, ஈற்றில் உள்ள ஏகாரம் எதிர்மறை வினாப்பொருட்டு.
``ஞாயிறு, திங்கள்`` என்பவற்றை வல இட உயிர்ப்புக்களாகக் கொண்டு, `அவற்றை முறையாக இயக்கித் திருவைந்தெழுத்தைக் கணிப்பினும், அம்ச மந்திரத்தைக் கணித்தலோடொப்பதே` என உரைத்து, ``ஊனில் உயிர்ப்பை`` எனத் தொடங்கும் ஞானசம்பந்தர் திருப்பாடலை மேறகோளாகக் காட்டுவர்.
இவ்விருபொருளையும் இம்மந்திரத்திற்குப் பொருளாகக் கொள்க.
[இதனை அடுத்துச் சில பதிப்புக்களில் காணப்படும் ``தெள்ளமு தூறச் சிவாய நம என்று`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.]

பண் :

பாடல் எண் : 7

குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வருவழி மாள மறுக்கவல் லார்கட்
கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

சிவகுரு உபதேசித்த மொழி வழியில் நின்று, பிறப்பிற்கு ஏதுவான வழியையே கூறும் சமய நூல்களைக் கைவிடவும், மற்றும் பிறவி வரும் வழிகெட்டுப் போகும்படி அதனைப் போக்கவும் வன்மை பெற வேண்டுவார்க்கு அவ்வன்மையைத் தருவதாகிய திருவருளாகிய வழியைக் காட்டுவது திருவைந்தெழுத்து மந்திரமே யாகும்.

குறிப்புரை :

குரு வழி - குரு காட்டிய வழி. அஃது உபதேச வடிவின தாம். குணம் - நற்பண்பு; என்றது நல்லொழுக்கத்தை. குணத்ததைத் தருவதனை, ``குணம்`` என்றார். `நின்று அறுக்கவும், மறுக்கவும் வல்லார்` என்க. கணக்கு - நூல். ``வல்லார்`` என்றது, `வன்மையை வேண்டுவார்` என அக்காரணத்தின்மேல் நின்றது. அருள் வழி - அருளாகிய வழி. `அதனைக் காட்டுவது அஞ்செழுத்து` எனவே, பிறவெல்லாம் அருள் அல்லாத மருள் வழியையே காட்டுதல் பெறப்படும்.
இதனால், `திருவருளைப் பற்றச்செய்வது திருவைந் தெழுத்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.

பொழிப்புரை :

செயலற்று நிற்கும்படி வினையின் பயனாகிய துன்பங்கள் வந்து விளையும்பொழுது, அவற்றால் சோர்வுறாதபடி உறுதியைத் தருகின்ற திருவைந்தெழுத்தை ஓதும் கருத்தைக் கொண்டால் அக்கருத்து அதனை உடையவனைச் சிவனது திருவடியில் சேர்க்கும். மேலும் அக்கருத்துடையவன் செய்யும் செயல்கள் சிவனது உருவேயாகும்.

குறிப்புரை :

வெறித்தல் - வெறிச்சோடிப் போதல், செறிதல், அடங்குதல் ஆதலின், செறித்தல் அடக்குதல். அஃதாவது, துயரத்தை வெளிக்காட்டு இருத்தல். குறிப்பு - கருத்து.

பண் :

பாடல் எண் : 9

நெஞ்சு நினைந்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

பொழிப்புரை :

மேகங்கள் தவழும் வெள்ளி மலையில் வீற்றிருகின்ற இறைவனை திருவைந்தெழுத்து வழியாக நெஞ்சால் நினைதலும், வாயால், `தலைவனே` என்று சொல்லி வாழ்த்துதலும், இறக்கும்பொழுது, `உனது திருவடியே புகல்` என்று சொல்லியும் நின்றால் அவ்விறைவனது அருளை எளிதில் பெறலாம்.

குறிப்புரை :

``அஞ்சில்`` என்பதில், இல், ஏதுப் பொருள்கள் வந்த ஐந்தாம் உருபு. இதனை முதலிற் கொள்க. இதற்குப் பிறவாக உரைப்பன இவ்விடத்திற்கு இயையா. ``வாயால்`` என்பதனோடு இயைய, `நெஞ்சால்` என உருபு விரிக்க. ``என்று`` இரண்டின் பின்னும் வருவிக்கப்பட்ட சொல்லெச்சங்கள் காரணப் பொருளவாய், `பெறலாம்` என்பதனோடு முடித்தன.
இதனால், திருவைந்தெழுத்தான் சிவனது திருவருளைப் பெறுதல் எளிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பிரான் வைத்தஐந்தின் பெருமை உணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கள் உய்தியின் பொருட்டு உண்டாக்கி வைத்துள்ள சாதனம் திருவைந்தெழுத்து மந்திரம். அதுவே அவனது பேராற்றலாகிய பொருட் சத்தியும், குண்டலினியாதல் பற்றி, `பாம்பு` என உருவகித்துக் கூறப்படும் சுத்த மாயையால் பலவகையாலும் வியாபிக்கப்பட்டு விளங்கும் அசுத்த மாயையும் பல புவனங்களும் ஆகும். ஆகவே, அதன் பெருமையை உணரமாட்டாத எளிய மக்கள் தங்கள் அஞ்ஞானமாகிய இருளைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ!.

குறிப்புரை :

`ஆகார்` என்பதாம். குண்டலினி - வளைந்திருப்பது; அஃதாவது, அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவற்றைச் சூழ்ந்திருப்பது. அது சுத்த மாயையே அது நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாய் விரிந்து அனைத்தையும் உள்ளடக்கி நிற்பதைக் குறிக்கவே சிவாலயங்களில் சிவலிங்கத்தின் மேல் பாம்பு ஒன்று ஐந்து தலைகளுடன் படம் எடுத்துக் கவிந்திருப்பதாக வைக்கப்படுகின்றது. இனிப் பூமியை அதன் அடியில் `ஆதிசேடன்` என்னும் பாம்பு தாங்குவ தாகக் கூறப்படுவதும், சுத்த மாயை எங்கும் வியாபித்துள்ளதைக் குறிப்பதே. திருமால் பாம்பணையிற்பள்ளி கொண்டிருப்பதாகக் கூறுவதும் பழமையாக இந்தக் கருத்து இந்நாட்டில் பலர்க்கும் பொதுவாய் இருந்ததைக் காட்டும். ஆயினும் பிற்காலத்தில் மாயோன் சமயம் சைவ தத்துவத்தை விட்டுச் சாங்கிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டது. இங்குப், ``பல்வகையாலும்`` என்றது, சுத்த மாயை நால்வகை வாக்குகளாயும், சிவம், சத்தி முதலிய சுத்த தத்துவங்களாயும், நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாயும் விரிந்து நிற்றலை. இவற்றுள் நால்வகை வாக்குக்களே சிறப்புடையனவும் ஆதலின், `மந்திரங்களில் தலையானதாகிய திருவைந்தெழுத்து மந்திரமே அனைத்துமாய் உள்ளது` என்றும், இதனை உணராதார்க்கு ஞானம் உதியாது ஆதலின், `அவர் அஞ்ஞானத்தைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ` என்றும் கூறினார். இரா - இரவு; இருள். பரா - பரா சத்தி. கீழ் - கீழது; அதோ மாயை; அசுத்த மாயை, பரா முற்றும், கீழொடு, அராப் பல்வகையாலும் சூழ்ந்த அகலிடம் முற்றும் தானே` என இயைக்க. தானே - அத்திருவைந்தெழுத்தே.
இவ்வாறு திருவைந்தெழுத்தின் பெருமையை பொதுப்படக் கூறி, தூல நிலை முடிக்கப்பட்டது.
சிற்பி