ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்


பண் :

பாடல் எண் : 1

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
சிவசிவ மாகும் திருவரு ளாமே.

பொழிப்புரை :

முன் அதிகாரத்திற் கூறிய மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை மட்டுமே மந்திரமாகக் கொண்டு தொடர்ந்து இடைவிடாது கணித்தல் சிறப்புடைத்து` என்பதைத் தெளிய மாட்டாதவர் அவ்வாறு கணியாமையால், பேசும் வன்மையிருந்தும் அஃது இல்லாத ஊமரேயாவர். அம்மந்திரத்தைக் கணிக்கும் தெளிவினுள் நிற்பவர்கள் அதனால் அடங்க, ஆன்ம போதமும் அடங்கச் சிவம் ஆதற்குரிய திருவருள் நிலை வாய்க்கப் பெறுவார்கள்.

குறிப்புரை :

இது மேற்கூறிய அதிசூக்குமத்தினும் சூக்குமம் ஆதலின் காரண பஞ்சாக்கரமாம். ``சிவ சிவ`` என்றது இரண்டெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும் முறையைக் கூறியது; நான் கெழுத்தைக் கூறியதன்று. இதன்பின் `சிறப்புடைத்து` என்பது வருவிக்க. `இம்மந்திரக் கணிப்பால் வாயு (பிராணவாயு) அடங்கும்` என்றதனால் இவ்விரண்டெழுத்தும் முறையே இரேசக பூரக எழுத்துக்களாய் அசபா மந்திரமாய்ப் பயன்படுதல் குறிக்கப்பட்டது. மூன்றாம் அடியை முதல் அடியின் பின்னர்க் கூட்டுக. சிவ சிவ ஆய தெளிவு - `சிவ சிவ` என்றலே உறுதி பயக்கும் எனத் தெளிந்த தெளிவு. இரண்டாம் அடியில் `சிவசிவவாய்` எனவும் ஈற்றடியில் `சிவவாய்` எனவும் மூன்றாம் உருபு விரிக்க. ஆகும் திருவருள் ஆம் - ஆதற்கு ஏதுவாகிய திருவருள் உண்டாகும்.
இதனால், அதி சூக்குமத்தினும் சுக்குமமாகிய காரண பஞ்சாக்கரம் இது` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.
`சிவ` என்பதைத் தொடர்ந்து உச்சரித்தால் `வசி` என வருதல் பற்றி, `வசி` என்பதே காரண பஞ்சாக்கரம் எனக் கூறுவாரும் உளர். அவர்,
``கலந்தருள் பெற்றது மாவசியே;
காழி அரனடி மாவசியே``3
என்னும் திருமுறையை எடுத்துக்காட்டி,
``நாலாய பூதமும், நாதமும் ஒன்றிடின்
நாலாம் நிலையாம் என் றுந்தீபற``9
என்னும் திருவுந்தியார் `வசி` என்பதையே காண பஞ்சாக்கரமாகக் கூறிற்று என்பர். நாலாய பூதம் ஆகாயத்திலிருந்து எண்ண நான்காவது வாயு. அதன் பீசம் வகாரம். நாதம் சிவதத்துவ மூர்த்தி சிவன். அவனைக் குறிப்பது `சி` என்னும் எழுத்து. நாலாம் நிலை நின்மல துரியம், அல்லது சாயுச்சியம் என்பர்.

பண் :

பாடல் எண் : 2

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

`தேவர்` என்றது அபரமுத்தரை. உம்மை சிறப்பு. அதனால் பத முத்தர் ஆதல் தானே பெறப்பட்டது. சிவகதி - சிவமாம் நிலை. இது சீவன் முத்தி நிலை, பரமுத்தி நிலை இரண்டையும் குறிக்கும். தான், அசை. ஏகாரம் தேற்றம். இதனால் சிவகதியின் அருமை விளங்கும்.
இதனால், `காரண பஞ்சாக்கரம் முத்தியை எய்தும் நிலையுடையவர்கட்கே கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புறம்
மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு
துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

பொழிப்புரை :

இறக்கும் நிலையை அடைந்த ஒருவன் அப்பொழுது இந்தக் காரண பஞ்சாக்காரத்தை இரண்டு முறையேனும் சொல்வா னாயின், அவன் சூரிய மண்டலத்தைப் பிளந்துகொண்டு, அப்பால் மின்னல் உலகத்தையடைந்து, பின்பு அதனையும் கடந்து சிவனையே தனக்கு உயிராகக் கொண்டிருக்கும் நிலையைப் பெறுவான்.

குறிப்புரை :

``அபர முத்தியைப் பெறுவான்`` என்பதாம். `ஞானிகள் தாம் நின்ற உடலை விட்டு நீங்குங்கால் இங்குக் கூறியவாறு ஒளி வழியிற் சென்று இறைவனை அடைவார்கள்; ஞானம் இல்லாதவர்கள் பிறவழிகளில் சென்று தேவர் உலகம், அல்லது மானுடர் உலகம் இவற்றிற் செல்வார்கள்` என்பது உபநிடதங்களின் கருத்தாதல் சாந்தோக்கியம் பிருகதாரணியம் முதலிய உபநிடதங்களாலும், உத்தர மீமாஞ்சை நூலாலும் அறியப்படுவன. அவற்றுள், `ஒளிவழியில் சென்று இறைவனை அடையும் வீட்டு நிலை இக்காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் உண்டாகும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
``துஞ்சும் அவன் சொன்ன காலத்து`` என்பதனை முதலிற் கூட்டி, சொல்லுதலுக்குச் `சிவசிவ` என்னும் செயப்படுபொருளை அதிகாரத்தால் வருவித்து உரைக்க. ``நெஞ்சு`` என்றது உயிரை. `இறைவனையே உயிராகக் கொண்டிருத்தலாவது, அவனோடு பிரிவின்றி ஒன்றி, அவன் வழிப்பட்டு நிற்றல்` என்பதை நாயனாரே, ``நீங்கா நிலைபெற லாகுமே`` என விளங்க ஓதினார்.
இதனால், காரண பஞ்சாக்கரத்தால் பயன் எய்தும் முறை வகுத்துக் கூறப்பட்டது.
``கடல் நாகைக் காரோண, நின்
நாமம் பரவி நமச்சிவா யவ்வென்னும் அஞ்செழுத்தும்
சாம் அன்றுரைக்கத் தகுதிகண் டாய்எங்கள் சங்கரனே``*
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.
சிற்பி