ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்


பண் :

பாடல் எண் : 1

அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

பொழிப்புரை :

வேதம், வேதாங்கம், வேதாந்தம் முதலாக உள்ள அனைத்து நூல்களையும் ஒருவன் ஓதி உணர்ந்தாலும் ஏனெனில், சிவன் இருப்பது ஓர் எழுத்திற்குள்ளே. (அஃதாவது, `சி` என்னும் எழுத்தின் உள்ளேயாம். எனவே, `அதன் உண்மையை உணராமல், மற்றை எத்தனை நூல்களை ஓதி உணர்ந்தாலும் அவனை உணர்தல் இயலாது` என்பதாம்.) இது கேட்பதற்கு முக வியப்பாய் இருக்கும் ஆகையால், `இஃது உண்மையாய் இருக்க முடியுமா` என எழும் ஐயம் நீங்குதல் அரிது. முன்னைத் தவத்தாலும், குருவருளாலும் அந்த ஐயம் நீங்கப் பெற்று அதனை உறுதியுடன் சாதித்தால் அங்ஙனம் சாதிக்கின்ற ஆன்மாத் தான் என்று அடைந்தறியாத அழகிய கரையை அடைந்த மரக்கலத்திற்கு ஒப்பாகும்.

குறிப்புரை :

அஃதாவது; `பிறவியாகிய கடலைக் கடந்து, வீடுபேறாகிய கரையை அடையும்` என்பதாம். வருவித்துரைத்தன இசையெச்சங்கள். ``ஓர் எழுத்து`` என்றது முன் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டெழுத்தில் வகாரம் நீங்க நின்ற சிகாரத்தினை ஆதல் எளிதின் விளங்கும்.
`தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகா காரணம்` என ஐந்து வகையாகக் கூறப்படுகின்ற பஞ்சாக்கரத்துள் சமய தீக்கைப் பேற்றால் தூல பஞ்சாக்கரத்தை ஓதிச் சரியையிலும், விசேட தீக்கைப் பேற்றால் சூக்கும பஞ்சாக்கரத்தை ஓதி முன்னர்க் கிரியையிலும், பின்னர் யோகத்திலும் நின்று, நிருவாண தீக்கைப் பேற்றால் அதி சூக்கும பஞ்சாக்கரத்தைக் கேட்டுப் பொதுப்பட உணருமாற்றால் தத்துவ சுத்தி ஆன்ம தரிசன சிவரூப நிலைகளையடைந்து, பின், அதனை நன்கு சிந்தித்துச் சிறப்பாக உணருமாற்றால் ஆன்ம சுத்தி சிவ தரிசன நிலைகளையடைந்து, பின் அதனை நன்கு தெளியுமாற்றால் காரண பஞ்சாக்கரத்தை ஓதிச் சிவயோக நிலைமை அடைந்து, பின் நிட்டை கூடுமாற்றால் மகாகாரண பஞ்சாக்கரத்தை ஓதிச் சிவபோக நிலையைப் பக்குவான்மா அடையும் என்க.
`சிவ யோகம்` என இங்குக் கூறப்படுவது, ஆன்மாத் தன்னை உணர்தல் இன்றிச் சிவனை மட்டுமே உணர்ந்து நிற்கும் நிலை. இதனால் இங்கு ஆன்ம எழுத்தாகிய யகாரம் நீக்கப்படுகின்றது. ஆன்மாத் தற்போதத்தை இழத்தலும் சிவபோதமே போதமாக நிற்றலும் திருவருளேயாகலின் இங்கு அருள் எழுத்தாகிய வகாரம் இருத்தல் இன்றியமையாததாகின்றது.
இந்தச் சிவயோக நிலை அருள்நிலையேயன்றி, ஆனந்த நிலையன்று. சிவபோதம், மேலிட மேலிட சிவானந்த வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்க அதனுள் ஆன்மா மூழ்குதலே ஆனந்த நிலை. அதுவே நிட்டை நிலை. அங்கு ஆன்மா அருளையும் நினையாது மது உண்ட வண்டுபோல் அந்த ஆனன்தமாயே நிற்றலால் அவ்விடத்து அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்குவதாயிற்று.
``மாயநட் டோரையும் மாயா மலம் எனும் மாதரையும்
வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு, மெய்யருளாம்
தாயுடன் சென்று,பின் தாதையைக் கூடிப்,பின் தாயை மறந்(து)
ஏயும் அதே நிட்டை யென்றான் எழிற்கச்சி ஏகம்பனே`` என்னும் பிற்காலப் பட்டினத்தடிகள் பாடலும் அதிசூக்கும, காரண, மகா காரண பஞ்சாக்கரங்களையே குறிப்பால் உணர்த்துதலை ஓர்ந்துணர்க.
தூல சூக்கும பஞ்சாக்கரங்களை ஓதுதல் சகல நிலையாய் முடிய, அதிசூக்குமம் முதலாக ஓதுவனவே சுத்த நிலையாகும். அதனுள் கேட்டல் சுத்த சாக்கிரம். சிந்தித்தல் சுத்த சொப்பன சுழுத்திகள். தெளிதல் சுத்த துரியம் நிட்டை சுத்த துரியாதீதம்.
ஆன்ம சுத்திக்குப்பின் ஆன்மா அடையும் ஆன்ம லாபம் இரண்டு. ஒன்று பாச நீக்கம். இதுவே அருள்நிலை மற்றொன்று சிவப்பேறு. இதுவே ஆனந்த நிலை, சிவஞான போத சூத்திரங்களுள் எட்டாவது முதலாக நான்கு சூத்தரங்களாலும் முறையே கேட்டல் முதலிய நான்கும் கூறப்பட்டன. பன்னிரண்டாம் சூத்திரம் அணைந்தோர் தன்மை கூறுவது.
உமாபதி தேவர் தாம் அருளிச் செய்த எட்டு நூல்களுள் இறுதி நூலாகிய சங்கற்ப நிராகரணத்து இறுதியில் இப்பஞ்சாக்கரங்களின் உண்மையே ஒருவாறு விளங்கும்படி பரம சித்தாந்தமாக ஓதியருளினார். அப்பகுதி வருமாறு:-
``பதிபசு பாச முதிர் அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனம்இல் ஞாதுரு, ஞானம், ஞேயம் என்(று)
இசைய மூன்றாய், பசு, பதி என்(று) அவற்(று)
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயன்எனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிறை யியற்கை இயம்புதல் தகுமே``
சிவப்பிரகாசத்து, ``ஆசுறு திரோதம் மேவாது`` என்னும் செய்யுளின் பொருளை வல்லார்வாய்க் கேட்டுணர்க. `அதிசூக்கும` முதலிய பஞ்சாக்கரங்கள் உலகப்பற்று `அற்று` ஞான வேட்கை கொண்டு, ஞானாசிரியரை அடைந்து ஞானோபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுவார்க்கே உரியன. மற்றையோர்க்குத் தூலமும், சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்களே உரியன.
தூலமும், சூக்குமமும் ஆகிய இருபஞ்சாக்கரங்களும் பிரணவத் தோடு கூட்டியும், கூட்டாதும் ஆசிரியர் உபதேசித்தபடி ஓதப்படும். அதி சூக்குமம் முதலிய மூன்றுவகைப் பஞ்சாக்கரங்களும் பிரணவம் இன்றியே ஓதப்படும்.
``எல்லா உணவிற்கும் உப்பு இன்றியமையாதது. ஆயினும் சிறந்த உணவாகிய பாலுக்கு உப்புக் கூடாது. அதுபோல எல்லா மந்திரங் கட்கும் பிரணவம் இன்றியமையாதது. ஆயினும் மிகச்சிறந்த சிவமூல மந்திரமாகிய பஞ்சாக்கரத்திற்குப் பிரணவம் தேவையில்லை`` என்கின்ற ஒரு மரபு உண்டு. அது அதிசூக்குமம் முதலிய பஞ்சாக்கரங்களை நோக்கி எழுந்ததேயாகும்.
பிற மந்திரங்கள் கூட நிர் பீச தீக்கையில் பிரணவம் இன்றியே சொல்லப்படும்.
இனி, உமாபதி தேவர், தமது, `கொடிக்கவி` நூலில் ``எட்டெழுத்து, நாலெழுத்து``l எனக் கூறியவை `பிராசாத பஞ்சாக்கரம், தார பஞ்சாக்கரம்` எனக் கூறப்படுமேயன்றி அதிசூக்கும பஞ்சாக்கரம் என கூறப்படாது. அவையும் யோகிகட்கே உரியன. எட்டெழுத்து, நாலெழுத்து முதலியவற்றை அச்செய்யுளின் உரையிற் காண்க.
ஆகம வேதங்களைக் கூறவே இனம் பற்றி வேதாந்தமும் கொள்ளப்பட்டது. ``ஓதினும்`` என்னும் உம்மை சிறப்பு. அதனால் `அறிதல் இயலாது` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது. ``ஒன்றையும்`` என்னும் உம்மை முற்று. அதனால் அதனது ஆற்றல் மிகுதி உணர்த்தப்பட்டது.
அதிகாரத்தை வேறுபடுத்தி விரிவு கூறாவிடினும் இம்மந்திரத்திற்குப் பிறகும் இப்பொருளையே கூறினமை காண்க.
இதனால், `மகா காரண பஞ்சாக்கரமாவது இது` என்பது குறிப்பால் உணர்த்தி, அதனது ஆற்றல் மிகுதி தெளிவாக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.

பொழிப்புரை :

மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது.

குறிப்புரை :

சித்தர் மரபில் உயர்ந்த பொருள்களைப் பிறர் அறியாவண்ணம் இழிந்தனபோல மறைத்தக் கூறுதல் வழக்கம். அம்முறையில் இஃது அவர்களால் `நாய் ஓட்டும் மந்திரம்` எனக் குறிக்கப்படுதலை இங்குக் கொண்டு கூறினார். ``கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி``8 முதலியனவும் காண்க. நாயை ஓட்டுமிடத்தச் சொல்லப்படுவது. `சீ` என நெட்டெழுத்தாய் இருப்பினும், அதுவே அதனைக் குறிக்கும் தொடராகாமல், குறிப்பால் பொருளையுணர்த் தலின், `சி` எனக் குற்றெழுத்தையே குறித்ததாயிற்று. நால் வேதங்களும் சிவபிரானது பெருமையை விரித்தலால், `இதுவே நால் வேதங்கள்` என்றும், சிவனே இதன் பொருளாதல் பற்றி ``நாதன் இருப்பிடம்`` என்றும், ``நாதந்த சோதி`` என்றும் சிவன் பொது மக்களால் அறிதற்கரியன ஆதலின் தம்மைப் பிறர் போல வைத்து, `இம் மந்திரத்தை நாம் அறியோம்` என்றும் தமிழ், ஆரியம் இரண்டாலும் கூறி வலியுறுத்துவார், ``நான்மறை நால்வேதம்`` என்றும் கூறினார்.
இதனால் மகாகாரண பஞ்சாக்கரமே எல்லாமாய் இருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவாய நம`எனச் சித்த ஒருக்கி
அவாய3ம் அறவே அடிமைய தாகிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்லும். அதனால் ஆன்மாத் தான் சிவனுக்கு ஆளாகி வினையாகிய தீங்கினின்றும் நீக்கும். அப்பால் அதி சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்ம அறிவு பாசஞானமாகிய தீங்கில்லதாம். அப்பால் காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாப் பசு போதம் நீங்கிச் சிவபோதம் பெற்றுப் பிறப்பாகிய தீங்கினின்றும் நீங்கும். அப்பால் மகாகாரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாச் சிவானந்தத்தில் மூழ்கியிருக்கும் ``என்று என்று`` என்னும் அடுக்கினுள் முன்னதைச் ``சிவாய`` என்பதனோடு கூட்டி, `அவாயம் அறநிற்க` என ஒருமுறையும் பின்னர் நிற்கும் ``என்று`` என்பதனை ``அவாயம்கெட`` என்பதனோடு மற்றொரு முறையும் முடிக்க. ``அவாயம்`` என்பது ஏற்ற பெற்றியால் பொருள் தந்தது. ``நிற்க`` என்பதன்பின், `பின்னர்` என ஒரு சொல் வருவிக்க. அதனால், `ஆனந்தம் ஆதல் ஓரெழுத்து மந்திரத்தால்` விளங்கிற்று. ``ஆம்`` என்றது `விளையும்` என்றபடி.

குறிப்புரை :

இதனால், உலகியலைத் தரும் தூல பஞ்சாக்கர் நீங்க, மற்றைய நால்வகைப் பஞ்சாக்கரத்தின் பயனும் ஒருங்கு தொகுத்துக்கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்தங் குறங்கும் வினையறி வார் இல்லை
எழுத்தறி வோம்என் றுரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்தறி யாரே.

பொழிப்புரை :

பஞ்சாக்கரம் பழமையான வேதமாகிய மரத்தில் அரும்பாய் அரும்பி, போதாய் முதிர்ந்து, பிஞ்சாய் உருப்பட்டு, காயாய்க் காய்த்து, பழமாய்ப் பழுத்து, உண்ண வல்லவர்க்கு இனித்துப் பயன்படுகின்றது. அதனை உண்டு, அல்லல் அறு அமைதியுடன் அறிதுயில் கொள்ளும் பயிற்சியை அறிபவர் உலகில் இல்லை. ஆயினும் பள்ளியில் எழுத்தறி கல்வியை மட்டும் கற்றவரகள் கூட, `இந்த ஐந்தெழுத்துக்களை நாங்கள் அறிவோம்` எனக் கூறுகின்றனர். ஆயினும் வேதம் முதலிய அனைத்தையும் கற்றவர்கள் கூட ஐந்தெழுத்து ஊழை நீக்கும் எழுத்தாதலை அறிய மாட்டார்கள்.

குறிப்புரை :

ஐந்து வகையான பஞ்சாக்கரங்களும் நிலையால் வேறு பட்டன அன்றிப் பொருளால் வேறுபட்டன அல்ல ஆதலை. ``பழுத்தன`` என்னும் குறிப்பால் உணர்த்தினார். அது பற்றியே அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``பழுத்தன`` என்றது குறிப்புருவகம். ``அங்கு`` என்றது, ``விழித்திருக்கும் போதே`` என்றபடி. விழித்தல் அறிவு அறியாமையுட் படாது விளங்கியிருத்தல் உறங்குதல் - உலக வாதனை யின்றியிருத்தல். எனவே, சிவத்தை மறவாது உணர்ந்திருத்தலாயிற்று. இந்நிலை ஆனந்த நிலையாதல் பற்றி, உலகத்தில் உறங்குவார் அல்லல் இன்றி இருத்தலோடு உவமித்து இந்நிலையில் நிற்பவரை, `தூங்குபவர்` என்றும், செயலற்றிருத்தல் பற்றி, ``சோம்பர்`` என்றும் நயம்படக் கூறுவர். ``தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே`` ``சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே``* என்னும் மந்திரங்களைக் காண்க.
``ஓங்குணர்வி னுள்ளடங்கி, உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவர்;மற் றேதுண்டு சொல்``8
என்றார் உமாபதி தேவரும் இதனை, ``தூங்காமல் தூங்குதல்`` என்றும் கூறுவர். ஏதர் - குற்றம் உடையவர். ஏதம் - குற்றம்; அறியாமை. ஈற்றடியின் முதலில் உள்ள எழுத்து ஊழ். அதனை `அயன் எழுத்து` என்றும், `தலையெழுத்து` என்றும் கூறும் வழக்குண்மை யறிக. அழுத்துதல் - அடங்குதல். ஊழ் வினை ஊட்டியல்லது ஒழியாமை பற்றி `ஒழிக்கும்` என்னாது, ``அழுத்தும்`` என்றார். `உயிரைத் தாக்காது உடல் ஊழாய் வந்து போகும்` என்பதாம்.
``திருவாஞ்சியத் துறையும்
ஒருவனார் அடியாரை ஊழ்வினை
நலிய ஒட்டாரே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டு. திருவைந்தெழுத்தை ஓதுவாரை ஊழ்வினை நலியா என்பதனை,
``பந்தமா னவை யறுத்துப்
பௌதிகம் உழலும் எல்லைச்
சந்தியா தொழியா தங்குத்
தன்மைபோல் வினையும் சாரும்;
அந்தம்ஆ திகள் இலாத
அஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை
வாதியா பேதி யாவே``*
என்பதனான் அறிக.
``சிவாய நமஎன்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை;- உபாயம்
இதுவே; மதிஆகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்``* என்னும் ஔவையார் திருமொழியும் காண்க. இறுதியில் உள்ள ``எழுத்து`` எழுத்தாம் தன்மை. இசை வல்லுநர்கள், `ச ரி க ம ப த நி` என்னும் எழுத்துக்களைச் சொல்லக் கேட்ட ஒருவன் `இந்த எழுத்துக்களை நான் அறியேனா` என்று சொல்வது போல்வதுதான், `ஐந்தெழுத்துக்களை நாம் அறிவோம்` என்றல் என்றபடி.
இதனால், இதுகாறும் பலவாறாகக் கூறிவந்த அஞ்செழுத்தின் சிறப்பனைத்தும் ஒருவார்த்தையாகத் தொகுத்துணர்த்தி முடிக்கப் பட்டது.
சிற்பி