ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு


பண் :

பாடல் எண் : 1

உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.

பொழிப்புரை :

உயிர்களின் அறிவிலே சிவன் `ஓம்` என்னும் பிரணவ வடிவாயும், அதனால் உண்டாக்கப்படுகின்ற உணர்வு வடிவாயும், அவ்வுணர்வில் தோன்றுகின்ற அற வடிவாயும் விளங்குகின்றான். அவனை அங்கு அம்முறையானே சென்று தலைப்படும் இடம் அருள் வெளியேயாம்.

குறிப்புரை :

ஒருவன் - ஒப்பற்றவன். ``அங்கி`` என்றது ஒளியை. அஃது உணர்வேயாம். உணர்வுகள் நாதத்தானே உளவாதல் மேலெல்லாம் சொல்லப்பட்டது. ``நீதி`` என்றது அறத்தை. `அது தானும் அற உணர்வை` என்க. `நாதம், பொருள் உணர்வு, அவற்றுள் அற உணர்வு, திருவருட் பேறு இவை காரண காரியமாய் முறையானே நிகழும்` என்பதும், `அவற்றுள் திருவருட் பேறே முடி நிலை` என்பதும் கூறியவாறு. ஆகவே, `திருக்கூத்தினைக் கண்டு, இம்முறையானே திருவருளைப் பெறுக` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உறல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய், உறும் இடத்தைக் குறித்தது. `உடல்` என்பது பாடம் அன்று.
இதனால், ஆகாசப் பேறே முடிநிலைப் பேறாதலும், அதற்குமுன் உள்ள படிநிலைப் பேறுகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

சிவன் (உடலில் உயிர்போல எப்பொருளிலும் கலந்து நிற்கும் கலப்பினால்) பெரிய பூமியாயும், அப்பூமிபோன்ற பல உலகங்களையும் அடக்கி நிற்கும் அண்டங்களாயும் இருப்பினும் அவை அனைத்தையும் கடந்த திண்ணிலமாகிய அருள் வெளியிலே விளங்குபவனாய்த்தான் இருக்கின்றான். அதனாற்றான் அவன் எல்லாவற்றையும் தாங்கும் பெரிய பூமிபோல. எல்லாவற்றையும் தாங்கும் ஆற்றலையும் ஒருவராலும் சென்று அணுகுதற்கரிய இடத்தையும் உடைய முதற்கடவுளாய் இருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், அவனை அவ்வருள்வெளியில் சென்று தலைப்படவே முயலவேண்டும்` என்பது குறிப்பெச்சம், ``கொள்கை`` என்றது உண்மையை. தாள் - ஆற்றல். ``அரு நிலமாய் நின்ற ஆதிப்பிரான்`` என்றது உடம்பொடு புணர்த்தல் ஆதலின் அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. குருநிலம், அருநிலம் இரண்டும் ஆகுபெயராய், அதன்கண் உள்ளவனைக் குறித்தன. குரு - திண்மை; பேராற்றல்.
இதனால், அருள் வெளியது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

பொழிப்புரை :

அகண்ட ஒளியாகிய சிவ சொரூபத்தையும் தான் கண்ணாற் காணும் போல ஞாயிறு, திங்கள், பிறகோள்கள், விண்மீன் ஆகிய ஒளிகளைப் போலவே உடன் வைத்து எளிதில் கண்டு விட்டதாக, உடம்பாற் பெற்ற சிற்றறிவு கொண்டு பிதற்றுலாகிய சிறுமையை, அதனை விழுங்கி நிற்கின்ற அருள் வெளிக்குள்ளே ஒளியாகிய சிவ ஒளிக்குள் மறைந்து நிற்கச் செய்வதே, சீவன் தான் பெற்றுள்ள `சீவன்` என்னும் அப்பெயரைப் போக்கும் செயலாகும்.

குறிப்புரை :

அஃதாவது, `சிவமாகின்ற செயலாம் என்றபடி. `அண்ட ஒளியையும்` என உருபு விரிக்க. உம்மை, இழிவு சிறப்பு. பிதற்றுதல், அறிந்தோர் நகைக்கும்படி, அறிந்ததாக எங்கும் சென்று கூறுதல். பிதற்றுதலாகிய சிறுமையை ``பெருமை`` என்றது எள்ளற் குறிப்பு. அனைத்தையும் விழுங்கியுள்ள (அடக்கியுள்ள) வெளி அருள்வெளி. ``ஒளித்தது, குலைத்தது`` என்பன தொழிற் பெயர்கள். `ஒளிக்குள் ஒளித்தலைச் செய்யாமல் வேறுநின்று கூறுவன எல்லாம் வெறும் பிதற்றல்களே என்பதாம்.
இதனால் ஆகாசப் பேறல்லன எல்லாம் பேறாகாகமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு)
உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.

பொழிப்புரை :

உயிர்கட்குப் புறத்தே பெறப்படும் பயனாகிய மகளிரது இன்பத்தைப்போல, அகத்தே பெறப்படும் பயனாய் விளையும் இன்பமாய் நிற்பது, எல்லாவற்றிற்கும் முதலாயும், மேலாயும் உள்ள பேரொளிப் பொருள். அஃது அயன், மால் முதலியோர்க்கும் அறிய வாரா நிலைமையதாயும், மேலாய நெறியின் பயனாயும் பரவொளியின்கணுள்ள ஒரு பொருளாகும்.

குறிப்புரை :

ஈரிடத்தும், `பயனாய்` என ஆக்கம் விரிக்க. பின்னர் ``உள்ளே`` என்றமையால், முன்னர், `புறத்தே` என்பது பெறப்பட்டது. இன், உவம உருபு. ``உறும்`` என்பது முற்று. ஈற்றில் உள்ள ``அது`` என்பதை, ``சோதி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. நெறியின் பயனை, ``நெறி`` என்றார்.
இதனால், ஆகாசப் பேறே பேரின்பப் பேறாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.

பொழிப்புரை :

உயிர்களின் அறிவுக்கறிவாய் நிற்கின்ற, `சிவம்` என்னும் ஒளியுடைப் பொருளையும், அதனை விட்டு நீங்காது தாதான்மியமாய் நிற்கும் ஆற்றலாய் எங்கும் பரவி நிற்கும் `இச்சை, ஞானம், கிரியை` என்னும் முச்சுடர்களையும் ஒருவன் தன்னின் வேறாக வைத்துச் சுட்டி உணராமல் அவற்றினுள்ளே அடங்கி ஒன்றாகி, அந்நிலையினின்றும் நீங்காதிருப்பானாயின், அவன் காலத்திற்குக் காலமாய் விளங்குவான்.

குறிப்புரை :

``காலத்தைக் கடந்து நிற்பான்`` என்பதாம். காலத்தைக் கடந்து நிற்றல் கூறவே, இடத்தைக் கடந்து நிற்றலும் தானே பெறப்பட்டது. ``ஒளி`` இரண்டனுள் முன்னது, ஒளியை உடையதனைக் குறித்தது. வலம் - வல்லமை; ஆற்றல், வலத்தினில் - `வல்லமை` என்னும் நிலைமையில் உள்ள. `பெயரொளி` என்பது ``பேரொளி`` என மருவி வந்தது. பெயர்தல் - பரவுதல். `வலத்திற் பெயரொளி மூன்றும்` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். `அத்தன் அடிக்குள் அடங்கிடில்` என முன்னே கூட்டுக. இதனால், `பரவெளி காலத்தைக் கடந்தது` என்பதும், அஃது அதுவேயாய் அடையத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.

பொழிப்புரை :

ஐந்து தத்துவங்களாய் நிற்கும் சுத்த மாயை யினையே ஐந்து தலைகளையுடைய பாம்பாக ஆடைபோல் அணிந்து, அந்தத் தத்துவங்களிலே நிற்கின்ற சிவன் அவையாகிய சுத்த மாயை யிடத்தவனாய், `அமரர்` என்னும் பெயருக்கு, முகமனாக அன்றி, உண்மையாகவே உரிய சிவலோகத்தார்க்குத் தலைவனாவான். இன்னும் அவன் அத்தத்துவங்கட்கு அப்பாற்பட்ட பர வெளியில் நிற்றலையே விரும்பி நிற்பினும் இங்குள்ளார் பொருட்டு இப்பூதா காசமாகியும், அதன்கண் விளங்குகின்ற ஒளியாகியும் இருக்கின்றான்.

குறிப்புரை :

ஏகாசம் - மேலாடை; உத்தரீயம். மேலாடையே, ஆடி அசைதல் பற்றி, `ஆடை` எனவும், இடையில் இறுக உடுத்தப்படுவது, `உடை, உடுக்கை` எனவும் சொல்லப்படும். இரண்டாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. முதற்கண் உள்ள ``ஆகாசம்`` சுத்த மாயை. வண்ணம் - வடிவம். அதிட்டானம் `வடிவம்` எனப்படுதலை, ``சுத்த தத்துவம் சிவன்றன் சுதந்திர வடிவமாகும்``3 என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. அமரர் - மரியாதவர்; இறவாதவர். இது தேவர்கட்கு முகமனாகிய பெயரே என்பதை,
``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சம் படு முகமனே யானபோல்``l
என்னும் கந்த புராணச் செய்யளாலும் அறிக. குலம் - கூட்டம். கொழுந்து தலைவன். இதன்பின் ``அப்புறம்`` என்பதை இயைக்க. ``ஆகாசம்`` மூன்றும் முறையே சுத்தமாயை, பரவெளி, பூதாகாசம் இவற்றைக் குறித்தன. இவையெல்லாம் ஒருங்குதோன்ற அப்பர், ``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9 என்று அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரஹ்ம``8 என்பது உபநிடதம். அமர்தல் - விரும்புதல். ``அங்கி`` என்றது ஒளியை. காசம் - ஒளி, அது, `ப்ர` என்னும் இடைச்சொல்லை முதலிற் பெற்று, `ப்ரகாசம்` எனவழங்கும். ஒளிக்கு இடமாதல் பற்றியே, `ஆகாசம்` எனப் பெயர் பெற்றது.
இதனால், ஆகாசங்களது சிறப்புணர்த்தும் முகத்தால் பராகாசத்தினது சிறப்புணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.

பொழிப்புரை :

`சேதனம், அசேதனம்` என்னும் இருவகை உலகங்களும் இயங்குமாறு உளங்கொள்கின்ற உள்ளொளியாகிய சிவன் தன்னைச் செலுத்தியபோது, குயில்போலும் குரலையுடைய அருட்சத்தி அவனோடே குலாவி உலாவுதலால், எனது உள்ளம் அவனது ஒளியைப் பெற்று, இருள் நீங்கிப் பிரகாசிக்கின்றது.

குறிப்புரை :

உயிர்த்தல், உயிர்த்தன்மை பெற்று உணர்தல். எனவே, அதனைச்செய்வது சேதனமாயிற்று. ஆகவே, பின்னர் ``உலகம்`` என்றது அசேதனத்தையாயிற்று. பின் வந்த உயிர்த்தல், திருவுளங் கொள்ளுதல். `உயிர்க்கின்றவாற்றையும், உலகத்தையும் ஒக்க உயிர்க் கின்ற உள்ளொளி` என்க. சேர்தல். தன் காரியம் தோற்றி நின்றது. உலாவி - உலாவுதலால். `பரவெளியாவது அருட்சத்தியேயாதலின் உயிர் உடம்பொடு கூடியிருக்கும் பொழுதும் அஃது அந்தப் பரவெளியைச் சேர்தலாற்றான் ஒளியுடையதாய்த் திகழ்கின்றது` என்பது உணர்த்தியவாறு.
இதனால், சீவன் முத்தியும் பர வெளியிருப்பேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து)
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

பொழிப்புரை :

சிவன் தன்னைச் சாராமல் உலகத்தைச் சாரின் அவர்களை விட்டு மிகச் சேயனாய் நீங்கி நிற்பன். உலகத்தைச் சாராது தன்னைச் சாரின், அவர்களை விட்டு எப்பொழுதும் நீங்கான். முதற்கண் மின்னல் ஒளி போலத் தோன்றிப் பின்னர்ப் பேரொளியாகி விளங்கு கின்ற பரவெளியாம் அவனை வணங்கினால் அவன் கூறியவாறு நீங்காது நின்று அமுதத்தைப் பொழிவான். அதனை உண்டு தேக்கி மகிழலாம்.

குறிப்புரை :

``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்``* என்னும் முறைமையால், `சிவன் பொதுவாகவே யாவர்க்கும் தலைவனாயினும் அவன் சிறப்பாகத் தலைவனாய் நிற்றல் தன்னைச் சார்ந்தவர்க்கே` என்பதை முன்னிரண்டடிகளில் உணர்த்தி `அவனைச் சார்ந்து பயன் பெறுக` எனப் பின் இரண்டடிகளில் அறிவுறுத்துகின்றவ், `அவனைச் சார்தல் பர வெளியிலாம்` என விளக்கினார். `ஒளியும், சோதியும் ஆம் வெளி` என்க. வெளியில் உள்ளவனை ``வெளி`` என்றார். ``நந்தி`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. அகல்கிலனாகிய நாதன்` என்க. `நாதன், பதி` என்பன பொருட் பின்வரு நிலையணி.
இதனால், `உண்மைச் சிவப்பேறு பர வெளிப்பேறே` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.

பொழிப்புரை :

(பதிப்புக்களில் வருகின்ற அதிகாரத்தில் மூன்றாவதாய்க் காணப்படும் இம்மந்திரம் இங்கிருத்தற்குரியது.)
எழுவகைப் பிறப்புக்களில் மேற்பிறப்பை எய்தினவராகிய தேவர்கள் அமுதுண்ண வேண்டித் தான் அதற்கு முன்னே தோன்றிய விடத்தை உண்டதனானே, `எல்லாரினும் மேலானவன் சிவன்` என்பது இனிது விளங்கும். இன்னும்,
``அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை,
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை``*
என்று அருளிச்செய்தபடி, அமுதத்தை உண்டவர் சாவவும், தான் நஞ்சுண்டும் என்றும் ``சாவா மூவாச் சிங்கமாய்`` இருத்தலாலும் அவனது மேன்மை தெளிவாகும். அறிவும், ஆற்றலும் உடையாரினும் அருளுடையாரே மேலானவர் ஆதலாலும், அவ்வருட் பெருக்கம் தன்னையடைந்தார் அமுதுண்ண வேண்டித் தான் நஞ்சத்தை உண்டமையானே தெற்றென விளங்குதலாலும் ``மிக்கார் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டவன் மேலவன்``* ஆகின்றான். அவனைத் தக்கார் உரைத்த தவநெறியில் சென்று அடைந்தால் அங்ஙனம் அடைந் தவர்களைத் தானாம் வண்ணம் அருளுவான். ஆகையால் அவரது பொன்போலும் மொழியால் விளக்கப்படும் ஞானத்தை `இதுவோ ஞானம்` என இகழ்கின்றவர்களை விட்டு விலகும் உபாயத்தை நீங்கள் ஆராய்ந்து அறிவீர்களாக.

குறிப்புரை :

``பணியின் அமுதம் பருகலும் ஆமே`` என மேற் கூறியதனை அனுபவமாக நிறுவியவாறு. `இம் மேலவனை (பராகாசத் தவனை) இகழ்வாரை நீங்குமாற்றையறிதலே ஞானோதயத்தின் முதல் நிலையாகும் என இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.

பொழிப்புரை :

(`ஆகாசமாவது யாது` என்பார்க்கு, `ஆகாசமாவது ஏனை யெல்லாப் பொருள்கட்கும் இடம் தருவது` என்பது விடையாயின், பிற பொருளுக்கு இடம் தருவன யாவும் ஆகாசமாம். அந்நிலையில் பூதங்களில் ஒன்றை மட்டும் `ஆகாசம்` என்றல் இடுகுறியாம். அவ்வாறன்றிக்) காரண வகையால் நோக்கின் `புவனங்கள்` என்றும், `உலகங்கள்` என்றும் சொல்லப்படுவன புற ஆகாசங்களாம். எல்லாப் பொருள்களும் அறிவினுள் அகப்பட்டுத் தோன்றுதலால் நம் அறிவுகள் அக ஆகாசங்களாம். நமது அறிவுகளையும் அகப்படுத்தி நிற்பது சிவனது அறிவு ஆதலின் அஃது உள்ளுக்குள் ஆகாசமாம். அதனை அகப்படுத்தி நிற்பது வேறொன்றில்லை ஆகலின் அதுவே பரமாகாசமாம். அந்த ஆகாசத்தை இந்த உலகிலே பெறுதல் அழகிய `சமாதி` என்னும் நிலையாகும்.

குறிப்புரை :

`அதனைப் பெறவே முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம். புவனங்களாவன அவ்வவ் அண்டங்களைப் புரக்கும் கடவுளரது இடங்களாம். அவர்களது காப்பிற்கு உட்பட்ட அண்டங்களில் உலகங்கள் உள்ளன. ஆதி அறிவு - முதல் அறிவு. அது கருவிகளால் உண்டாகும் பாச அறிவாம். ``அறிவு`` என்பதை, ``சிவத்து`` என்பதற்கும் கூட்டுக. `அதற்கு மேலானது ஒன்று இல்லை` என்பதே ``செஞ்சுடர்ச் சோதி`` என்பதனால் குறிக்கப்பட்டது. இதற்கு `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ஈற்றில் நின்ற ஆகாசம், அதனைப் பெறும் பேற்றினைக் குறித்தது. தான், அசை. அழகு, இங்கு நிரம்பிய இயல்பைக் குறித்தது. சமாதி, `யோக சமாதியும் ஞான சமாதியும்` என இருவகைத்து. ஞான சமாதியே ஞான நிட்டையாகும்.
இதனால், ஆகாசப் பேறுகள் பலவற்றுள் முடிநிலையான ஆகாசப் பேறே பேறாதல் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி