ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்


பண் :

பாடல் எண் : 1

எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.

பொழிப்புரை :

(காரியங்கள் ஒடுங்குதற்கு இடமாதல் பற்றிக் காரணங்கள் `பாழ்` எனப்படும். அதனால்,) ``எப்பாழும் பாழாம் யாவுமாய்`` என்றது, எக்காரணங்களும் ஒடுங்குதற்குக் காரணமாய் உள்ள பரம காரணங்கள் எல்லாமாகி` என்றதாம். உலகிற்குக் காரணம் தத்துவங்கள். அவை தோன்றி ஒடுங்குதற்கு இடமான பரம காரணங்கள் சுத்த மாயையும், அசுத்த மாயையும். ஓராற்றால் பிரகிருதி மாயையும் பரம காரணமாகக் கொள்ளப்படும். கலப்பினால் மெய்ப்பொருள் அம்மும்மாயையாகியும் நிற்கும். ஆயினும் மாயைகளின் தன்மே வேறு; மெய்ப்பொருளின் தன்மை வேறு ஆதலின் பொருள் தன்மையால் மெய்ப்பொருள் அம்மாயைகளின் வேறாகியும் நிற்கும்.

குறிப்புரை :

இனி இரண்டாம் அடியிற் கூறப்பட்ட பாழ்கள் பரம காரணத்தைக் குறியாது, அவற்றினின்றும் தோன்றிப் பிறவற்றிற்கும் காரணமாகின்ற இடைநிலைக் காரணங்களாம் தத்துவங்களைக் குறித்தன. மேல் உள்ள மூன்று தத்துவங்களாவன, `இலய தத்துவம், போக தத்துவம், அதிகார தத்துவம்` என்பன. அவை முறையே இரண்டும், ஒன்றும், இரண்டும் ஆக ஐந்தாம் முதல் இரண்டும் சிவம், சத்தி. இடை ஒன்று சாதாக்கியம். இறுதி இரண்டு ஈசுரம், சுத்தவித்தை. கீழ் உள்ள மூன்று தத்துவங்களாவன, `காரண தத்துவம், கஞ்சுக தத்துவம், குணதத்துவம்` என்பன. காரண தத்துவம், மாயா தத்துவம், கஞ்சுக தத்துவம், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், இவ்வைந்தில் அடங்கும் குண தத்துவம் சித்தம் முதலிய இருபத்து நான்கு. முன்னுதல் - நினைத்தல்; சங்கற்பித்தல். அஃதாவது மும்மாயைகளினின்றும் இம் மூவகைத் தத்துவங்களும், பின் அவற்றின் காரியங்களும் `இவ்விவ்வாறு தோன்றுக` எனவும் `இத்துணைக் காலம் நிலைபெற்றுச் செயலாற்றுக` எனவும், `இனி இப்பொழுது ஒடுங்குக` எனவும் சங்கற் பித்தல். இதனானே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும், அவற்றிற்குக் காரணமாம் மறைத்தல் தொழிலும் அவற்றின் காரியமாய் அருளல் தொழிலும் நடைபெறும். ``இப்பாழும்`` என்றதனோடு இயைய இன்னவாறும்` எனவந்த எண்ணும்மை தொகுத் தலாயிற்று. `இங்குக் கூறிய காரணங்களில் ஒன்று` என்றோ, அவையல்ல வாயின் `வேறு இன்ன தன்மையது` என்றோ ஒன்றதனோடு சார்த்திச் சொல்ல ஒண்ணாத இயல்பினது, பொதுவாக, `அது` எனச் சுட்டிச் சொல்லப்படும் மெய்ப் பொருள். ஆயினும் அதனைப் பற்றி உணர் வார்க்கு அது பேரின்பப் பொருளாய், உயிரினது அறிவுக்கு மேலான அறிவாய், ஆனந்தமாய் உள்ளது.
`சத்திய ஞானம்` என்றது, `சத்துச் சித்து` என்றபடி. எனவே, மெய்ப் பொருளின் உண்மை இயல்பு, `சத்துச் சித்து ஆனந்தம்` என்றதாயிற்று. சத்து என்றும் ஒருபடித்தாய்த் திரிபின்றியிருத்தல். சித்து - அறியாமை சிறிதும் இன்றி அறிவேயாய் இருத்தல். ஆகவே, அறிவிக்க. வேண்டாது தானேயறிதலும், ஒரு காலத்து ஓரிடத்து ஒன்றை மட்டும் அறிதல் என்பதின்றி, எக்காலத்தும், எவ்விடத்தும் எல்லாப் பொருளையும் அறியும் அறிவாதலும் தானே பெறப்பட்டது. ஆனந்தம் - துன்பக் கலப்பு இன்மையால் எஞ்ஞான்றும் வரம்பின்றி விளையும் இன்பமாதல். தற்பரம் - தனக்கு (உயிர்கட்கு) மேல், தன், சாதியொருமை. ``தான்`` என்பது தேற்றப்பொருளில் வந்தது.
``அது`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``ஆகும்`` என்றது, இயற்கையைச் செயற்கைபோலக் கூறும் இலக்கணையாய் உளதாதலைக் குறித்தது.
`காரணப்பொருள்கள் அனைத்திலும் தான் அவையேயாய்க் கலந்தும், பொருள் தன்மையால் வேறாகியும் நின்று தனது சங்கற்ப மாத்திரையானே ஐந்தொழிலை நடாத்துவதாயினும் மெய்ப்பொருள் பிறிதொரு பொருளோடு சார்த்தி, `இன்ன தன்மையது` எனச் சொல்ல ஒண்ணாத இயல்பினையுடையது. சத்தாய்ச் சித்தாய், ஆனந்தமாய் இருத்தலே அதன் உண்மையியல்பு` என்பது இம்மந்திரத்தின் திரண்டபொருள். பின்பு ``கீழுள முப்பாழ்`` என்றதனால் முற்கூறிய முப்பாழ் `மேல் உள` என்பது பெறப்பட்டது.
``ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்கு
ஒன்றும் குறியொன் றிலாமையினால் - ஒன்றோடு
உவமிக்க லாவதுவுந் தான்இல்லை; ஒவ்வாத்
தவமிக்கா ரே இதற்குச் சான்று``8 என்னும் திருக்களிற்றுப்படியாரைக் காண்க.
இதனால், மெய்ப்பொருளின் பொதுவியல்பு சிறப்பியல்புகள் தொகுத்துக் கூறப்பட்டன.
பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``தொம்பதம் தற்பதம்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்தில் `முத்துரிய` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.

பொழிப்புரை :

சிவனது சத்தி `பரா சத்தி` என்றும், `ஆதி சத்தி` என்றும் இரண்டாய் இருக்கும். (பராசத்தியே அருட் சத்தியும், ஆதி சத்தியே திரோதான சத்தியும் ஆகும்.) அவையிரண்டும் வேறு வேறல்ல. அஃது எது போல்வது எனின், மணியின்கண் (இரத்தினங் களில்) அதனிடத்தே நின்று அதனையே விளக்கி நிற்பதும், வேறிடத் திலும் சென்று பிற பொருள்களைப் பற்றுவதும் ஆகிய ஒளி செய்கையால் இரண்டாதல் அல்லது பொருளால் இரண்டாகாமை போல்வது. மணியொளி மணியையே விளக்கி நிற்குமிடத்து `பிரகாசம்` என்றும், பிற பொருள்மேல் பாயுமிடத்து `காந்தி` என்றும் சொல்லப்படும். (காந்தியே சோபை) இனி ஆதிசத்தியும் `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாம். ஆதி சத்தி இவற்றின் வேறல்ல வாயினும் அதனையும், பரை ஆதியின் வேறல்ல வாயினும் அதனை -யும் வேறு வேறாக வைத்து எண்ணினால், `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` எனச் சத்திகள் ஐந்தாகும். அதுவும் எதுபோலும் எனின், குவளை மலரின் குணம் ஒன்றேயாயினும் அதனை, பொலிவு, சிறப்பு, நிறம், மணம்,அழகு` என இவ்வாறு வேறுவேறாக உணர்வது போலும். சத்தி குணமும், சிவன் குணியும் ஆகலின், குணமாகிய சத்தி வேறுபாடு ஐந்தனோடு குணியாகிய சிவம் ஒன்றையும் கூட்டி எண்ண மெய்ப்பொருள் ஆறு கூற்றதாம்.

குறிப்புரை :

மன் சத்தி - நிலையாய் உள்ள சத்தி; மூல சத்தி. அது பரா சத்தி. இது காலத்தைக் கடந்தது. அதனால் அநாதி. இதினின்றும் ஒரு காலத்தில் தோன்றுவது ஆதி. மணியினது `ஒளி, சோபை` என்பவற்றை ``மன் சத்தி, ஆதி`` என்பவற்றோடு நிரல் நிறையாக இயைக்க. ``சத்தி`` என்பதை ஆதிக்கும் கூட்டுக. ஒளியாகிய `அன்னதோடு, சோபையாகிய அன்னதோடு` எனத் தனித் தனி இயைக்க. ``ஒப்ப`` என முற்று. மிடல் - சத்தி ``ஒன்றா மாறாது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `மிடல் ஒன்றாமாறு, உற்பலம் ஒண்மை முதலியன ஆமாறுபோலும்` என முடிக்க. உற்பலம் - குவளை. அது முன்னர் பொருளாகு பெயராய் அதன் மலரையும், பின்னரும் அவ்வாகுபெயராய், அதன் குணத்தையும் குறித்த இருமடியாகுபெயர். ஒண் - ஒண்மை. சீர் - சிறப்பு. அது மலர்களுள் மேலானதாகப் புகழப் படுதற்றன்மை. ``சோபை`` என்பதன்பின், `ஆனவாறு` என்பது எஞ்சி நின்றது. ``ஆறும் ஆனது`` என்னும் உம்மை, `ஒன்றானதேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``ஆனது`` என்னும் பயனிலைக்கு, `மெய்ப்பொருள்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது.
இதனால், மெய்ப்பொருள் `தானும், தன் சத்தியும்` என இரு கூற்றாகப் பின் சத்தி காரணமாகப் பல கூற்றதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.

பொழிப்புரை :

சத்தி, சிவம் இவற்றது இயல்பைச் சொல்லுமிடத்து முறையே பர ஞானமும், அதனால் தரப்படுகின்ற முடிவில் பொருளும் ஆகும். இனிச் சிவம் பிறிதொன்றிலும் இல்லாத, தனி ஒரு பேரானந்தப் பொருளுமாம். அந்தச் சிவத்தின் மேனிலைச் சத்தியே பக்குவான் மாக்களை ஆட்கொள்ளுதற்கு இந்நிலவுலகில் வந்து உலாவச் செய்கின்ற குரு வடிவும் ஆகும். இங்குக் கூறிய பரஞானம், முடிவின்மை, ஆனந்தம், ஆன்மாக்களை ஏற்ற பெற்றியால் ஆட்கொள்ளும் பேரருள் என்பனவற்றுக்கு முன் மந்திரத்திற்கூறிய குவளை மலரே உவமையாம்.

குறிப்புரை :

``சாற்றுங்கால்`` என்பதனை, ``சிவம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உய்த்தல் - தரப்படுதல். ``அனந்தம்`` என்பதிலும் எண்ணும்மை விரித்து, எஞ்சிநின்ற `ஆம்` என்னும் பயனிலையை வருவிக்க. அனந்தம் - முடிவின்மை. முடிவு காலம். இடம் இரண்டு பற்றியது. காலம் பற்றிய முடிவின்மை` நித்தியத்துவத்தையும், இடம் பற்றிய முடிவின்மை பூரணத்துவத்தையும் விளக்கும். நித்தியத்துவமே மெய்ம்மையும், பூரணத்துவமே பெருநிறைவும் ஆகும். மெய்ப் பொருள் `மெய்யாயும், அறிவாயும், முடிவிலதாயும் உள்ளது` என்பதை தைத்திரீய உபநிடதம், ``சத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம``8 எனக் கூறிற்று. சத்தி தன்னிலையில் நிற்குங்கால் `சொரூப சத்தி` என்றும், பிறவற்றோடு தொடர்புற்று நிற்குங்கால் `தடத்த சத்தி` என்றும் சொல்லப்படும். `அவற்றுள் சொரூப சத்தியே அருளுருவாய் வந்து ஆட்கொள்ளும்` என்பது பின் இரண்டடிகளில் கூறப்பட்டது. முன் மந்திரத்திற்கூறிய உற்பல உவமையை, `பூவண்ணம், பூவின் நிறம் போல மெய்ப்போத இன்ப மாவண்ண மெய்கொண்டவன்``3 என்னும் பரஞ்சோதி திருவிளையாடலாலும் அறிக.
இதனால், `மேற்குறித்த சத்தி சிவங்களாவன இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.

பொழிப்புரை :

மேல் உவமையாகக் கூறிய குவளை மலரின் நிறம், பொலிவு, மணம், அழகு என்பன அம்மலரின் வேறாகாததுபோல உயிர் சிவனிடத்தில் வேற்றுமையின்றி ஒன்று பட்டு நின்றால், `சிவாய` எனவும், `சிவத்துவமசி` எனவும் சொல்லப்படும் மகாவாக்கியங் களின் பொருளாய் உள்ள சிவனது அனந்த சத்தி, அலுத்த சத்தி முதலிய எண்குணங்களும் உயிரினிடத்து விளங்கி நிற்க, உயிர் சிவனாகியே நிற்கும்.

குறிப்புரை :

உரு - அழகு. `உற்பலத்தில்` என ஏழாவது விரிக்க. `தரமாய்` என ஆக்கம் விரிக்க. மருவுதல், அறிந்து நிற்றல். முப்பதங் களில் இரண்டொன்றையே முதற்குறிப்பாகக் கூறி, மகா வாக்கியங் -களை நினைப்பித்தார். சொரூபம், இங்குப் பொருள். சிவனது எண் குணங்களில் இரு குணம் `சத்தி, என்னும் பெயராற் சொல்லப் படுதலின். அவை முதலிய குணங்களைச் ``சத்தியாதி`` என்றார். முன்னர் `உயிர்` என்றதனைப் பின்னர் ``நின்றான்`` என ஆடூவறி சொல்லாற் கூறியது வடமொழி மதம் பற்றி. சிவத்திற்கும், உயிருக்கும் இடையே உள்ள தொடர்பு குணிக்கும், குணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு போன்றது அன்றாயினும் வேற்றுமையின்றி நிற்றல் மாத்திரைக்கு அத்தொடர்பினை உவமையாகக் கூறினார்.
இதனால், உயிர் ஞானத்தால் மெய்ப்பொருளாகிய சிவமாம் நிலையை எய்துதல் கூறப்பட்டது. அந்நிலையை எய்திய வழி உயிரும் மெய்ப்பொருளாதல் பற்றி இஃது இவ்வதிகாரத்தில் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

பொழிப்புரை :

சிவனை அன்பால் நினைதற்குப் பக்குவம் வேண்டும். அது வாய்க்கப் பெற்று, அவனை அன்பினஆல் நினைந்தும், வணங்கியும், புகழ்ந்து பாடியும் நின்றால் ஒன்றிலும் அகப் படாத அவனை நம்முள்ளே அகப்படுத்திக் கொள்ளலாம். எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமானும் எனக்கும் பக்குவம் வாய்த்தமையை அறிந்தே தமது அருளை வழங்கிச் சிவனை நினைக்கச் செய்தார்.

குறிப்புரை :

என்றது, `நினைத்து வணங்கவும், புகழ்ந்து பாடவும் செய்தாரா` எனவும், `அதனால், நான் சிவனை இப்பொழுது என்னுள்ளே அகப்படுத்தியுள்ளேன்` எனவும் கூறியவாறு. நெகிழ்வது மனம். வணங்குவது உடம்பு. புனைதல், ``பூமாலை புனைந்து ஏத்துதலையும், புகழ்ந்து பாடுதலையும்``l ஒருங்கே குறித்து நின்றது. புகழ்ந்து பாடுதல், ஆசிரியன்மார் அருளிச் செய்த பாடல்களையும்,தாமே பாடும் பாடல் களையும், அவை அவன் அருள்வழியே அமையும். `நாயனார் இந் நூலால் அவனைப் புகழ்ந்து பாடினார்` என்க,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``3
எனவும்,
``இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கெழுந் தருளுவ தினியே``1
எனவும்,
``அழலார் வண்ணத் தம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``2
எனவும் இவ்வாறு அருளிச்செய்ப ஆதலின், அவனைப் பொதியலும் ஆகும்`` என்றமை பொருந்துவதாதல் காண்க. உம்மை சிறப்பு. நந்தி பெருமான் தம் அருளை வழங்கியது, நினைவிற்கு எட்டாதவனை நினைக்குமாற்றையும், வணங்குமாற்றையும், பூப்புனையுமாற்றையும், புகழ்ந்து பாடுமாற்றையும் விளக்கியருளியது. `அவர் அவற்றை அருளிச் செய்யாராயின், யான் எதனை அறிவேன்` என்பது கருத்து.
இதனால், `மெய்ப்பொருளை யுணர்தலும், அடைதலும் பக்குவ காலத்தில் குருவருள் வாய்க்கப் பெறுதலாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

பொழிப்புரை :

முன் தந்திரத்திற் கூறிய முத்துரியத்துள்
நிலையிற் புக்கபொழுது, பாலுந்தேனும் கலந்த கலப்பின்கண் உள்ளதும், கனிந்த பழத்தின் சாற்றில் உள்ளதும், மிகத் தூயதாகிய தேவரது அமுதத்தில் உள்ளதுமாகிய இனிமைகள் போன்ற ஓர் இனிமை அவ்வுயிரினது உடம்பில் உள்ள மயிர்க்கால்கள்தோறும் தேங்கி நிற்கும்.

குறிப்புரை :

`பாலொடு தேன் ஆகும் மதுரமும், பழத்துள் இரதம் ஆகும் மதுரமும்` என ``ஆகும் மதுரம்`` என்பதை ஏனையவற்றிற்கும் கூட்டுக. வாலிய - தூய. பேரமுது, தேவர் அமுது, ``துரியம் பொடிபட உள்புக`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொடிபடல் - விலகுதல். சீலம் - தன்மை, என்றது இங்கு இனிமையை மயிர்க்கால் தோறும் தேக்குதலை.
``வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்``*
என்னும் திருவாசகத்தாலும் அறிக.
இதனால், இங்கு எடுத்துக்கொண்ட ஆனந்தத்தின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்துப் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `இறவா நிலை` எனப்படும் அபர முத்தி நிலையையும், அந்நிலைக்கு ஏற்புடைய சுத்தமாயா புவனங்களையும் கடந்து, அவ்விடத்தை அடைந்த தன் அடியார்களோடே கூடி, அவர்கட்கு ஒப்பற்ற தலைவனாய் இருப்பவன். (எனவே, `நிரதிசய சுத்த போகத்தையே தருபவன்` என்றதாம்.) ஆயினும் அவன், பவழம் போன்ற இதழையும், அதற்குள்ளே அரும்பும் முத்துப்போன்ற நகையினையும், அதற்குள்ளே மெல்ல மிழற்றுகின்ற இனிய சொல்லையும் உடைய மாதராளாகிய, கெடுதல் இல்லாத ஞான சொரூபியைத் துணையாகப் பற்றி நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனால், பலவகைப்பட்ட மாயா போகங்களை வேண்டுவார்க்கு அவற்றையும் தருகின்றான்` என்பதாம். தமர் - அடியார். ``விண்வத்துக் கொட்டும் வண்ணத் தமரர்`` என்றாற்போல மகர ஈறொழிந்த ஏனையீறுகளின் முன்னும் சிறுபான்மை அத்துச் சாரியை வருதல் அறிக. `தமரிடத்து நின்ற` என ஏழாவதன் பொருள் பட விரிக்க. `அண்டம் கடந்து நிற்பவன், ஆயினும் தமரிடத்து நிற்பவன்` என்க. ``தனியைமன்`` என்றது, `சிவன்` என்னும் நிலையையும் , ``சோதி தொடர்ந்து நின்றான்`` என்றது, `சத்தன்` என்னும் நிலையும் குறித்தனவாம். இதனால், மெய்ப்பொருளின் இரு நிலைகள் விளங்கும். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், `ஞான ஆனந்தமேயன்றி ஊன ஆனந்தமும் மெய்ப்பொருளால் ஆவதே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.

பொழிப்புரை :

`மத்தியாலவத்தை` எனப்படும் சகலத்திற் சகலமாகிய மாசகலத்திலே முப்பத்தாறு கருவிகளுள் யாதொன்றும் ஒடுங்காது எழுச்சியுற்றிருப்பினும் தான் அவற்றின் வசப்படாது, அவற்றை வேறு நிறுத்தி, அங்ஙனம் நிறுத்தியதனால் கேவலாவத்தை வந்துவிடாதபடி அதனையும் நீக்கிச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையை அடைந்து, பின் `அதுவும் சீவச் செயலேயாம். என அதனை நீக்கிப் பரா வத்தையை எய்தியவழியே பந்தம் முற்றும் நீங்கிய நிலையாகும். அந் நிலையை அடைந்து, `சீவன்` என்னும் நிலைமை மாறி, `சிவம்` என்னும் நிலைமையை அடைந்து, அதனால் சத்திய ஞானானந்தத்தை அடைந்தவனே நிறைவான ஞானத்தை அடைந்தவனாவான்.

குறிப்புரை :

``மத்திமம்`` என்றது மத்தியாலவத்தையை. `மத்திமத் தின்கண்` என ஏழாவது விரிக்க. ``மாற்றி`` என்றதும் `நீக்கி` என்றதே. `பிறழ்வுற்றுச் சிவமாகி` என மாறிக்கூட்டுக. ``சார்ந்தான்`` என்பது வினையாலணையும் பெயர். `சார்ந்தானே ஞானி` என ஏகாரத்தை மாற்றி வைத்துரைக்க.
இதனால், சத்திய ஞானானந்தமே நிறைஞானத்தின் பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

 சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானனந் தத்தே
துவமார் துரியம் சொரூபம தாமே.

பொழிப்புரை :

பயன் இலதாம் பிறவியிற் செலுத்துகின்ற மும்மலங்களும் நீங்கி உயிர் சிவமாதற்பொருட்டு உண்மையான மூன்று துரிய நிலைகளைப்பிற பற்றுக்கள் நீங்குதற் பொருட்டுப் பற்றினால், தவத்தின் பயனான சத்திய ஞானானந்தம் கிடைக்கும். அந்நிலையில் அந்த ஆனந்தத்தையுடைய பொருளும் காட்சிப்படும்.

குறிப்புரை :

``சிவமாம் மும்மலந்தீர`` என்பதனைப் பின்முன்னாக நிறுத்தி, `மும்மலந்தீர்ந்து சிவமாக` விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. பவம் - உண்மை. துரியம், `பாழ்` எனப்பட்டது. `துரிய நிலையில் ஆனந்தம் தோன்ற, அதனானே அதனையுடைய பொருள் உண்மை தோன்றும்` என்றபடி. சொரூபம், `வந்து` (பொருள்) எனவும் பொருள் தரும். ஆனந்தம் தோன்ற, அஃதே பற்றி அதனையுடைய பொருளை உணர்தல், அருணோதயம் உண்டாக, அஃதே பற்றி ஞாயிற்றை உணர்தல் போலும்.
இதனால், துரியத்தை எய்தி, அதில் ஞானானந்தத்தை உணர்ந்து, அதனானே பொருளை உணர்க` என்பது கூறப்பட்டது. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
சிற்பி