ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்


பண் :

பாடல் எண் : 1

பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.

பொழிப்புரை :

`குருமார்களில் எல்லாம் மேலான குருவாகிய ஞான குருவே எங்கும் நிறைந்த பரம்பொருளாவான்` என்பது நன்கறியப் பட்டது. அதற்கேற்ப அவன் தன் மாணாக்கனை விட்டு நீங்காது, அவன் செல்லுமிடமெல்லாம் சென்று நிலையாகப் பொருந்தி, கண்ட பொருள்களில் எல்லாம் அது அதுவாகும் இயல்புடைய அவனது ஆன்ம சொரூபத்தினுள் அஃது அவ்வாறாகாமல் நிலைபெற்று விளங்கும் அறிவின்பப் பொருளாய், அடைதற்கரிய துரிய நிலையில் கிடைத்திருப்பான்.

குறிப்புரை :

என இவ்வாறு குருவின்மேல் வைத்துக் கூறினா ராயினும், ஞான குருவின்பால் ஞானத்தைப் பெற்ற நன்மாணாக்கர் எங்கும், எப்பொழுதும், எவ்வாற்றானும் அக்குருவை மறவாது அவனைச் சிவமாகவே அறிவினுள் கண்டு ஆனந்திப்பர்` என்பதே கருத்து. `அக்காட்சி வெறும் கருதுகோள் காட்சியன்று; உண்மைக் காட்சியாய்ப் பயன் தரும் காட்சியே` என்பதைத் தெளிவித்தற் பொருட்டே இம்மந்திரத்தைக் குருவின்மேல் வைத்து இவ்வாறு அருளிச்செய்தார். `எங்கும் ஆம் பரமாகி` என்க. ``ஆகி`` என்பது பெயர். ஒழிவு - விட்டு நீங்குதல். `எங்கணும் ஒழிவற்று திரம் உறச் சேர்ந்து` என மாற்றிக் கொள்க. நிரவுதல் - அது அதுவாய் வசப்பட்டு நிற்றல். `நீடும் சொரூபமாய்` என ஆக்கம் வருவிக்க. ``துரியத்து நின்றான்`` என்றதனஆல், `ஞானிகள் துரியத்தினின்றும் கீழ் இறங்கார்` என்க. துரியம் முதலிய அவத்தைகளின் இயல்பு முன் தந்திரத்தில் கூறப்பட்டது.
இதனால், `அடையத் தக்க பொருள் ஞான குரு உருவமே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

பொழிப்புரை :

மண் தன்னை அழிக்கும் தன்மையுடைய நீரினுள் அழியும், அவ்வாறே நீரும், காற்றும் முறையே நெருப்பினுள்ளும் ஆகாயத்தினுள்ளும் அழியும். எனவே, இப்பொருள்களுள் அடங்கியிருப்பவர் அல்லன் சிவன். அவன் பூமியையும் கடந்து மேற்போகியும் அளவின்றியிருப்பவன். (``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர் - போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``* அவனை ஒரு சிறுகுடிலுள் அடக்கி வைத்துக் கண்ணாற் கண்டு, காலால் வலம் வந்து, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி இன்புறுதல் எளிதாயிருக்க, அம்முறையை யறியாமல் யான் அல்லல் உறுகின்றேன்.

குறிப்புரை :

என்றது, அறிவிலாதார் செயலைத் தம்மேல் வைத்து அருளிச் செய்து இரங்கியவாறு. `குவலயம் குலைக்கின்ற நீரில்` என மாற்றி, அதன்பின்னும், ``ஆகாசம்`` என்பதன் பின்னும் `அழியும்` என்பன வருவிக்க. வரைத்தல் - அளவுட்படுத்தல். `படுத்தப்படுவது குருவுருவம்` என்க. என்றாற்போலும் திருமொழிகளால் ஞான குருவின் அருமையில் எளிமையை ஆய்ந்துணர்க. வலம் செய்தல் கூறவே, இனம் பற்றி ஏனையவும் கொள்க.
இதனால், அடைதற்கரிய பொருளை எளிதில் அடையும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

பொழிப்புரை :

அயன், மால் முதலிய தேவர்கள் முதலாக எங்குள் ளவர்களும் இறைவனை, `அவன் பரமாகாசத்தில் இருக்கின்றான், ஆயினும் ஏத்துவார்க்கு அருள்புரிகின்றான் என அவனைக் காணாமலே கருதிநின்று ஏத்துவார்கள். ஆயினும் எங்கட்கு அவன் குருஉருவாகி எதிர் வந்து எங்களோடு நீங்காது உறைகின்றான்.

குறிப்புரை :

`அதனால் நாங்கள் அவனை நேரிற்கண்டு வலம் வந்து வணங்கி, ஆடிப்பாடி, அளவளாவி மகிழ்கின்றோம்` என்பது குறிப் பெச்சம். ``அங்கு நின்றான்`` என்பதனை, ``இறைவன்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `தேவர்கள் முதலாக` என ஒரு சொல் வருவிக்க. ``தனி நாயகன், புவனாபதி`` என்னும் பெயர்கள் இரண்டன் உருபு ஏற்று, ``ஏத்துவர்`` என்பதனோடு முடிதற்கு உரியன; செய்யுள் நோக்கி வேறுபட்டு நின்றன. ``எம் இறை`` என்றது, குருவாகி வந்து அருள் புரிந்த உரிமை பற்றி. பொங்குதல், கூர்தலாகிய உள்ளது சிறத்தலே யாகலின் அதனை இங்கு, ``பொங்கி`` என்றார். ``பொங்கி நின்றான்`` எனப் பண்பின் வினைப் பண்பின்மேல் ஏற்றப்பட்டது. கூர்ந்தது அருள். `அது கூர்ந்து, குருவுருவாய் வந்தது` என்பதாம். புவனங்களை ``புவனா`` என பெண்பாலற் கூறினார். அன்னதொரு வழக்குப் பற்றி,
இதனால், அருட் குருவின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சமையச் சுவடும் தனைஅறி யாமல்
கமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர்
அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.

பொழிப்புரை :

ஒவ்வோர் உயிரும் தன்னைத் தான் அறியக் கடமைப் பட்டவை. அவற்றை அவ்வாறு அறியச் செய்யாமல் மயங்கச் செய்வன, புறச் சமய நூல்களும், அடக்கம் இன்றி, வேண்டியவாறே ஒழுகத் தூண்டும் காமம் முதலிய குற்றம் எட்டும், அவற்றுக்குக் காரணமான ஆணவ மலமும் ஆகும். அவை முற்றாக நீங்குமாறு ஞான குருவைப் பிரியாது அவரது நிழல்போல உடன் இருப்பவர் வானவர்க்கும் தலைவராவர்.

குறிப்புரை :

சுவடு - எழுத்தின் வரிவடிவம். அவற்றை உடையது சுவடி. எனவே சுவடிகளில் உள்ள எழுத்துக்களை, ``சுவடு`` என்றார். `தனை அறியாமற் செய்யும்` என ஒரு சொல் வருவித்து, அதனை முதலிற் கூட்டுக. கமை - பொறுமை. அஃது அடக்கத்தைக் குறித்தது. `ஆணவ மலத்தின் காரமயம் எட்டு` என்பதை,
``... ... ... ... விகற்பம், கற்பம்,
குரோதம், மோகம், கொலை, அஞர், மதம், நகை``3
என்னும் இருபா இருபஃதால் அறிக. இவற்றுள் `மோகம்` என்பதனையே தலையாயதாக எடுத்து, ``காமம்`` என்றார். இனி, காமம் முதலிய அறுபகைகளோடு, `மண், பொன் இரண்டு கூட்டி, `எட்டு` என்பாரும், `இடும்பை, அசூயை, இரண்டு கூட்டி `எட்டு` என்பாரும் உளர். திமிரம் - இருள்; அணவ மலம். ``செயல்`` என்றது எட்டொழிந்த பிறவற்றை அவை மறைப்பு. திரிப்பு முதலியன. `தெளிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `குருவுடன்` என்பது அதிகாரத்தால் வந்தது. தலைவராதல், மேல் நிலையில் நிற்றல்.
இதனால், சொரூப உதயத்தாலே உயிர் தூய்மை பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.

பொழிப்புரை :

`முக்குணங்களால், `அயன், அரி, அரன்` எனச் சொல்லப்படும் மூவருள், `தனி ஒருவன்` எனச் சுட்டப்படும் அரன், குணம் பற்றி ஏனையிருவரோடு ஒத்தவனாகச் சொல்லப்படினும் ஏனையிருவர்போலச் சகலனாகாது, பிரளயாகலருள் பக்குவம் உற்ற வனாய், சிவனை மறந்து, `தானே முதல்வன்` என மயங்கும் மயக்கம் இன்றிச் சிவனையே முதல்வனாகத் தெளிந்து அவன் பணியையே ஆற்றுபவன் ஆதலின் வேற்றியல்புடையனாதல் போல முத் துரியத்திலும் சீவனும், சிவனும் ஒரு பெற்றியராய் நின்ற போதிலும் பல வகையில் சிவன் சீவனின் வேறு பட்டவன்` என்று சிவநூல்கள் செப்பும்.

குறிப்புரை :

முதல் உரு - காரணமூர்த்தி. தனது வலப்பாகத்தினின்று அயனையும், இடப்பாகத்தினின்று அரியையும் தோற்றுவித்தலால் அரன் காரண மூர்த்தியாயினன். இவனே சீகண்ட உருத்திரன். `முதல் உரு ஆயதனால்` என உருபு விரிக்க. அணு - உயிர். ``அணுப் பரன்,`` சேய - சேய்மையில் உள்ள. ``சிவம்`` என்பது, `சுத்தம்` என்னும் பொருளதாய் நின்றது. கேவல சகலங்களைக் கடந்து நிற்றலின் சுத்தாவத்தைகள் சேய வாயின. `முத்துரியம்` முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஒரு சீர் பெற ஏயும் நெறி` என்க. ஏய்தல் - பொருந்துதல்.
`அணுவும், பரனும் ஏயும் நெறி, மூவகைத் தெய்வத்து ஒருவன் வேறாயது` என இயைத்து முடிக்க. முதல் அடி இன எதுகை பெற்று வந்தது.
இதனால், `சொரூப உதயத்துச் சிவ சீவர்கள் அருள் நிலையால் சமமாயினும், பொருள் நிலையால் வேறானவர்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.

பொழிப்புரை :

சிவன் தான், தனக்கு ஓர் உடம்பில்லாமலே பல உயிர்கட்கும் பல்வேறு வகையான உடம்புகளைப் படைத்துக் கொடுக்கின்றான். தனக்கு ஒரு காரணம் இன்றித் தானே அனைத் திற்கும் காரணமாய் உள்ளான். எந்தப் பொருளின் தன்மையும் தன்னைப் பற்றாது தான் அனைத்துப் பொருளிலும் தாமரை இலையில் தண்ணீர் போலப் பொருந்தி நிற்கின்றான். ஆகவே, அவனது நிலை யாவராலும் அறிய ஒண்ணாத பெருமறையாய் இருத்தலின், அம்மறையை அறிந்த நல்லா சிரியன் வழியாக அன்றித் தாமே நேராக அவனை அடைதல் யாவர்க்கும் இயலாது.

குறிப்புரை :

``கரு`` என்றது காரணத்தை. மருவுதல் பற்றுறப் பற்றல். மாயம், இங்கு மறைவைக் குறித்தது, அதனையுடைய தன்மையை உணர்த்திற்று.
``கருவினா லன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினா லன்றியே உருவுசெய்தான்`` (திருமுறை - 3.35.3.) என்னும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியை இம் மந்திரத்தோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், `உண்மைச் சொரூபமாம் சிவனது தோற்றத்திற்கு முற்பட்ட நிலை குருவினது தோற்றம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.

பொழிப்புரை :

குருவின் உருவத்தை உள்ளத்தில் உள்கியிருப்பவர் கட்கு அங்குச் சிவ சோதியே பிரகாசிக்கும். அவர்கள் ஊழிக் காலம் நிலவுலகில் வாழ்வர்; பின்பு சிவலோக வாழ்வினரும் ஆவர். அங்ஙன மாகவும் குரு உருவத்தின் சிறப்பை அறிந்து அதனை உள்ளத்தில் உள்குவோர் உலகத்தில் எத்துணைப் பேர்!

குறிப்புரை :

உருவம், அதிகாரத்தால் குரு உருவேயாயிற்று. `மணி மந்திர ஔடதங்களாலும், மற்றும் அடயோகம் முதலிய உழைப்புக் களாலும் அடையும் பயனை ஞான குருவால் அடையலாம்; ஆனால் ஞான குருவால் அடையும் பயனை வேறு வழியால் அடைய இயலாது` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார்.
``மந்திரத்தால், மருந்துகளால், வாய்த்தஇயோ கத்தால்,
மணியிரத குளிகையினால், மற்றும் மற்றும்
தந்திரத்தே சொனைமுறை செய்ய, வேத
சகலகலை ஞானங்கள், திரிகால ஞானம்,
அந்தமிலா அணிமாதி ஞானங்கள் எல்லாம்
அடைந்திடும்; ஆசான் அருளால் அடிசேர் ஞானம்
வந்திடும்; மற்றொன்றாலும் வாரா தாகும்;
மற்றவையும் அவன்அருளால் மருவு மன்றே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சொரூபத்தியானத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``உள்ளுறும் சோதி`` எனப்பட்ட அந்த மேலான ஒளி என் உள்ளத்துள்ளே தோன்றியவுடன் நான் அதனைச் சிக்கெனப் பிடித்தேன். பிடித்தபொழுது முதற்கண் அஃது என்னுள்ளே அடங்கப் பின்பு நான் அதனுள்ளே தோய்ந்தேன். தோயத் தோய, அஃது எல்லையின்றி விரியக் கண்டேன்.

குறிப்புரை :

`பதியாகும் பரஞ்சோதியை` என மாறிக் கூட்டி உரைக்க. உதயம் உள்ளத்துள் ஆதலின், `முதற்கண் அஃது என்னுள் படிந்தது` என்றும், விறகினின்றும் தோன்றிய தீ பின் அவ்விறகைக் கதுவுமாறுபோல, ஆன்ம அறிவில் தோன்றிய சிவஒளி பின்பு அவ்வறிவை விழுங்கி நிற்றல் பற்றி, `பின்பு நான் அதனுட் படிந்தேன்` என்றும், முன்பு சுட்டுணர்வாய் நின்ற ஆன்ம அறிவு பின்பு வியாபக அறிவாய் விரியுந்தோறும் சிவஒளி அவ்வறிவிற்கு வியாபகமாயே விளங்குதல் பற்றி, `அதனைப் பறையக் கண்டேன்` என்றும் கூறினார். பறைதல் - பறத்தல். அஃது இங்கு வியாபித்தலைக் குறித்தது. இனி, `பறைதல், சொல்லுதல்` எனக் கொண்டு, அஃதாவது, தன்னியல்பை அறிவித்தல்` என்பாரும் உளர். தன், சாரியை. ``பறைய`` என்னும் செயவென் எச்சம், `பறையும்பொழுதில்` எனக்காலம் உணர்த்தி நின்றது. இதனுள்ளும் முன் மந்திரத்திற் போந்த அணியே வந்தது.
இதனால், சொரூப உதயத்தின் படிநிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக் குரவன் சுகோயத் தானே.

பொழிப்புரை :

கவர்ச்சியான வடிவம், நிறம், மணம் முதலிய பிற பண்புகள் ஆகியவற்றை இயல்பாகவே கொண்டிருத்தலாலே குவளை மலர்கள் பிற மலர்களினும் கிடைத்தற்கரிய சிறந்த மலர்களாகக் கருதப்படுகின்றன. அதுபோலவே, `சத்தியம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்னும் மெய்ப்பொருள் இயல்புகளைத் தனது ஞானமாக அடைந்த உண்மைக் குருவே வீட்டின்பத்தைத் தர வல்லவனாவான்.

குறிப்புரை :

குவளை மலரையே எல்லா மலர்களினும் சிறந்த மலராக நாயனார் கூறிவருதலை மேலேயும் சில மந்திரங்களிற் கண்டோம். அதற்குக் காரணம், அது தீக்கைக் காலத்தில் அணியப் படுதல் பற்றிப்போலும்! ``சொரூபம்`` இரண்டில் முன்னது வடிவம். பின்னது உண்மை. உருவம் - நிறம். `தொன்மை` என்பதில் விகுதி தொகுக்கப்பட்டது. `தொல்லாக` என ஆக்கம் வருவிக்க. இயல்பை, ``தொன்மை`` என்றார். விழுங்குதல், கொண்டிருத்தல். ``விழுங்கி`` என்னும் எச்சம் காரணப் பொருளில் வந்தது. `உற்பலம் அரியன ஆமாறு போல` என மாற்றிக் கொள்க. சத்தியம் முதலிய நான்கு மெய்ப்பொருளின் இயல்பாதல் மேலேயும் கூறப்பட்டது.
இதனால், `சிவனைப் போல, `சொரூபம்` எனச் சொல்லத் தக்கவன் உண்மையான ஞான குருவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
மருவுற் றுகாரம் மகாரம தாகி
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

பொழிப்புரை :

(`சொரூபம்` என்பதைப் பொதுப்பட இயல்பு` - என வைத்துக் காணும்பொழுது அது, `மேனிலைச் சொரூபம், கீழ்நிலைச் சொரூபம்` என இரண்டாகும். அவற்றுள்) சிவனது மேனிலைச் சொரூபம் சொல்லைக் கடந்தது; இன்ப உருவானது. அநாதி; சிவமாவது கீழ்நிலைச் சொரூபம். `அகார உகார மகாரம்` என்னும் பகுதிகளாயும், அங்ஙனம் பகுக்கப்படாத தொகுதியாயும் உள்ள தாரக மந்திரத்தின் உள்ளொளியாகும். ஆதி; சத்தியாவது.

குறிப்புரை :

`உரையற்ற` எனப் போந்த இரண்டில் முன்னது ``மோனம்`` என்பதனை விளக்கியது. பின்னது `வெளிப்படச் சொல்ல வாராதது` என்னும் பொருட்டாய் ஓங்காரத்தைக் குறித்தது. உள் ஒளி - அதனால் சுட்டப்படும் பொருள். `தாரகம்` என்பது இடைக்குறைந்து நின்றது, `கீழ் நிலைச் சொரூபமும் அளவுட் படாதது` என்றற்கு, ``கரை -யற்ற`` என்றார். `மருவுற்ற` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
சொல்லைக் கடந்ததாய், இன்பமாய் அநாதியாய், `சிவம்` என நிற்பவனே, ஆராயுமிடத்து, அகார உகார மகாரங்களின் பொருளாயும், அவை ஒருங்கு தொக்க `ஓம்` என்பதன் பொருளாயும், ஆதியாயும் `சத்தி என நிற்பான்` என்பது இம்மந்திரத்தின் பொருள். சிவம் மேல்நிலைச் சொரூபம். சத்தி கீழ்நிலைச் சொரூபம். இவ் விரண்டையும் அனுபவமாக உணர்ந்தவனே ஞானகுரு. அவனே `சொரூபம்` எனப்படுவான். கீழ்நிலைச் சொரூபத்தை மட்டும் உணர்ந்தவன் கிரியா குரு. அவனும் ஓராற்றால் `சொரூபம்` எனப் படுவான் என்றற்கு இது கூறினார். கூறவே, கீழ்நிலைச் சொரூபத்தைத் தானும் உணராதவன் குருவாகாமை விளங்கும்.
இதனால், மேல்நிலைச் சொரூப உதயமே சொரூப உதயமாதல் அன்றிக் கீழ்நிலைச் சொருப உதயமும் ஓராற்றால் சொரூப உதயமாதல் கூறப்பட்டது.
இதனையடுத்துப் பதிப்புக்களில், ``தலைநின்ற தாழ்வரைமீது தவம் செய்து`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து `வாய்மை` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 11

ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நாமென லாமே.

பொழிப்புரை :

பாச ஞான பசு ஞானங்களால் எளிதில் அறியப் படும் பொருள்கள் யாவும் நமக்குப் புறத்தே நிற்பனவாக, அந்த ஞானங்களால் அறிதற்கரிய பொருள் நம்மின் வேறாகாது நம் உள்ளே யிருத்தலை நான் அறிந்தேன். மேலும், அந்தப் பொருள் நம்மை விட்டு நீங்குதற் காரணத்தையும் நான் `இது` என அறிந்தேன்; நீங்கிப் போன அது மீட்டும் வந்து புகுதற் காரணத்தையும் `இது` என அறிந்தேன். இனி நான் `யான், எனது` எனச்செருக்கு மாட்டேன்; அந்தப் பொருளை யன்றி வேறொரு புகலிடமும் எனக்கு இல்லை. இந்நிலைமை, `முன்பு தானாய் இராது நாமாகவேயிருந்த முதல்வனும் நாமே` எனத் தக்கதாய் உள்ளது.

குறிப்புரை :

`அரும்பொருள் அகத்தின் ஆமாறு அறிந்தேன்` எனவே, எளிய பொருள்கள் புறத்தேயிருத்தல் பெறப்பட்டது. போதல் - நீங்குதல். அது விளங்காது மறைந்திருந்தைம அதற்குக் காரணம். ஆன்ம அறிவு `யான் எனது` எனச் செருக்கினமை. புகுதல், மறைவின்றி வெளிப்பட்டு விளங்குதல். அதற்குக் காரணம் அச்செருக்குக்கள் இன்றி, அடங்கி ஒடுங்கினமை. முன்பு செய்த குற்றங்களை இனிச் செய்யமாட்டேன்` என்பார். ``ஏமாப்பதில்லை. இனி ஓர் இடமில்லை`` என்றார். பெத்த காலத்தில் முதல்வன் வேறு விளங்காது, உயிர்களாயே நின்றதனை, ``நாம் ஆம் முதல்வன்`` என்றும், முத்தி காலத்தில் உயிர் வேறு விளங்காது முதல்வனாயே நிற்றலின், ``முதல்வனும் நாம் எனலாம்`` என்றும் கூறினார். இதனை மெய்கண்ட தேவர்,
``அவனே தானே யாகிய அந்நெறி
ஏக னாகி``8
என்றார். தம்மோடு தம் மாணாக்கரையும் உளப்படுத்த, ``நாம்`` என்றார்.
இதனால், சொரூப உதயத்தின் முடிநிலை இயல்பு கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி