ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்


பண் :

பாடல் எண் : 1

சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

பொழிப்புரை :

அறிவுப்பொருளாகிய உயிரும், அறிவுக்கறிவாய் உள்ள சிவனும் பொருளால் வேறேயாயினும், உடல் உயிர் போல ஒன்று பட்டு நிற்கும் கலப்பினால் வேறு நிற்பவர் அல்லர். ஆகவே, உயிரினது அறிவினுள்ளே, விறகில் தீயும், பாலில் நெய்யும் போலத் தோன்றாது மறைந்து நிற்கும் சிவன் அவ்விடத்தில் தோன்றவும் வாய்ப்பு உண்டு. அதனால், தங்கள் அறிவு மாசற்று விளங்கும்படி அவ்வுண்மை உணர்வில் உறைத்து நிற்க வல்லவர்கட்கு, கடைய வல்லவர்க்கு விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படுதல் ஒருதலையாதல் போல அவர்களது அறிவில் சிவன் வெளிப்பட்டு விளங்குதல் ஒருதலை.

குறிப்புரை :

``விறகில் தீயினன், நன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே``3 என்னும் அப்பர் அருள்மொழியை நெஞ்சினுள் ஆழப்பதித்துக் கொள்க. தெளிதல் இரண்டில் முன்னது மாசு நீங்கி, விளக்கம் பெறுதலையும், உறுதிப்பட உணர்தலையும் குறித்தன. அவை ஈரிடத்தும் செயவென் எச்சமாய் நின்றவற்றில் முன்னது காரியப் பொருட்டாய வினை யெச்சமாயே நின்றது; பின்னது தொழிற் பெயர்ப்பொருள் தந்தது. ``இருந்தான்`` என்னும் இறந்த கால வினை தெளிவை விளக்கி நின்றது. ஏகாரம், தேற்றம். எனவே, `மெய்யுணர்ந்தோர் ஒருஞான்றும் தங்கள் சிந்தையில் சிவன் இருத்தலை மறவார்; அதனால், அவர் மீள ஒரு ஞான்றும் பந்தத்தில் வீழார்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
இதனால் ஞானிகள் சிவரூப நிலையினின்றும் வழுவாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் சிந்தையினுள்ளே இருப்பதாகச் சொல்லி சிவன்) வாக்கும், மனமும் அடங்கி ஒடுங்கி நிற்கும் நிலையில் உள்ள ஓர் உள்ளீடான பொருள். ஆகவே, அவனை நேக்கும் முறை யறிந்து நோக்குங்கள். அங்ஙனம் நோக்கும்பொழுது அந்நோக்கிற்கு அவன் மிக நுண்ணிதாய்ப் புலனாகும் பொருளாவான். புலனாகியபின் அவன் போதல் இல்லை புலனாகும் பொழுதும் புதியனாய் அப்பொழுது தான் வந்து புகுதலும் இல்லை (முன்பே உள்ளவன் என்பதாம்.) அவனுக்கு என்றும் அழிவில்லை. `அழிவில்லை` எனவே தோற்றமும் இல்லையாம். நன்மையாவன பலவும் அவனை அவ்வாற்றால் நுணுகி நோக்கி அடைவார்க்கே உளவாம்.

குறிப்புரை :

மறைந்தவிடத்துத் தோன்றும் பொருளை மறைந் ததனால் தோன்றும் பொருளாக உபசரித்தார் ஆதலின், மறைந்த பொருள் என்பதில் பெயரெச்சம் காரியப்பெயர் கொண்டதாம். மறை பொருள் - மறைவை உடைய பொருள். ``மறைப்பொருள்`` என்பது முன் மந்திரத்தினின்றும் வந்த `சிவன்` என்னும் எழுவாய்க்குப் பய னிலையாய் நின்றது. பொருளை `வாக்கு மனம் மறைந்தது` என்றும், `மறைவுடையது` என்றும் கூறிப்பின், ``நோக்குமின்`` என்றதனால், `நோக்குமாற்றால்` என்பது போந்தது. நோக்குமாறாவது பிற ஒளிகள் அடங்கியொடுங்க நிற்கும் ஞாயிற்றைப் பிற ஒளி கொண்டு நோக்காது அதன் ஒளியையே கொண்டு நோக்குதல் போல அதன் ஒளியையே கொண்டு நோக்குதல். `அவ்வொளி அருள் ஒளி என்க. அது, நோக்கப் படும் பொருளாய், நுண்ணிதாம் என்க. நன்மைகளாவன ஆசை யறுதலும், அதனால் துன்பம் நீங்கலும், அன்பு வளர்தலும், இன்பம் மிகுதலுமாம். இறுதியில், `உளவாம்` என்னும் பயனிலை வருவிக்க. `முன்னர் அஃறிணையாகக் கூறியனயாவும் `சிவனே` என்றற்கு ஈற்றில், ``அத்தன்`` என உயர்திணையாகக் கூறினார்.
இதனால், அருள் ஒளியாலே சிவரூபம் தோன்றுதல் கூறும் முகத்தால், ஞானிகள் அருளாலல்லது எதனையும் நோக்காமை கூறப்பட்டது.
``அருளே உலகெல்லாம் ஆள்விப்ப(து); ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு``*
என்னும் அம்மை திருமொழியையும்,
``அருளால் எவையும்பார் என்றான்; - அத்தை
அறியாதே, சுட்டிஎன் னறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன்; என்னேடி தோழி``3
என்னும் தாயுமானவர் வாக்கையும் நினைக.

பண் :

பாடல் எண் : 3

பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்(று)
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர்
தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.

பொழிப்புரை :

(இங்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்ற சிவன்) உலகங்கள் பலவற்றிலும் மேல் உள்ள உலகில் உள்ளான். இனிமேல் உள்ள பொருளுக்கும் மேலாய் அவற்றைக் கடந்தும் இருக் கின்றான். ஆயினும் தனக்குக் கீழே உள்ள எல்லா உலகங்களிலும் நிறைந்து நின்று உயிர்களின் பிறவித் தொடர்ச்சி அறுபட அருள் புரிகின்றான். அஃது எங்ஙனம் எனின், பிறிதொரு பொருளால் வெல்லப்படாத ஆற்றலையும், பிறர் அறிவிக்க வேண்டாது தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் அறிவினையும் உடையனாயும், அனைத்துப் பொருளையும் ஆதாரமாய் நின்று தாங்குபவனாயும், பாசங்களை அறித்தல் தெரியாமலே அரிப்பவனாயும் இருந்து.

குறிப்புரை :

பரன் - மேலானவன். இங்கு இஃது இடம் பற்றி வந்தது. அவ்விடமாவது நாத தத்துவன். `பராற் பரன்` என்பது ``பராபரன்`` என மருவி வந்தது. `அப்பாற் சென்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. `சென்றும் உலகில் அருள் புரிந்தான்` என இயைத்து முடிக்க. `ஆகவே, அவனை வாக்கு மனங்களைக் கடந்தவன்` எண்ணிச் சோர்ந் தொழியாது, மேற்கூறியவாறு நோக்குமாற்றால் நோக்கிக் காணுதல் கூடும்` என்பதும், `ஞானிகள் அவனை அங்ஙனம் கண்டிருப்பர்` என்பதும் கருத்துக்களாம். உரம் - அறிவு. `வழக்கு` எனினும், `தொடர்ச்சி` எனினும் ஒக்கும். அது பிறவித் தொடர்ச்சியையே குறித்தது. ``சுடர்`` என்றது அறிவை. தான், அசை. தான் - தாங்குபவன். ஆறு - வழி. தனாதென ஆறு அறிவொண்ணா - தான் கையாளும் வழி இது என அறிய ஒண்ணாமல், `ஒண்ணாது` என்பது ஈறு குறைந்து நின்றது. அரன் - பாசத்தை அறிப்புன். ``உரனாய் ... ... ... அரனாய்`` என்றது, சிவன் உலகில் நிற்கும் நிலையில் கொண்டிருக்கும் இயல்புகளை விரித்தது. அதனால், அவை அவன் அருள் புரிதற்குக் காரணமாக, அதற்குப் பின் வைத்து உரைக்கப்பட்டது.
இதனால், சிவன் பொருள் நிலையில் வாக்கு மனங்களைக் கடந்தவனாயினும், அருள் நிலையில் உலகில் எங்கணும் நிறைந்து நிற்றலால் இங்குள்ளார் அவன் உண்மை உணர்தல் கூடும் என்பது கூறப்பட்டது.)
சிற்பி