ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்


பண் :

பாடல் எண் : 1

ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.

பொழிப்புரை :

ஐந்தொழில் செய்யக் கருதிய காலத்துக் கொள்ளப்படுகின்ற `உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகை வடிவங்களும் இன்றி, அவற்றைக் கடந்துள்ள, உண்மை நூல்களால் கூறப்படுகின்ற சொரூப சிவனது மேலான இயல்பாவது, அவனைத் தன்னின் வேறாக வாயினும், ஒன்றாகவாயினும் உணரும்பொழுது அவ்வாறு உணரும் உயிரினது மயிர்கால்தோறும் தவறாது ஊறித்ததும்பகின்ற அமுதம்போலும் பேரின்பமேயாம்.

குறிப்புரை :

ஆதி - குறிப்பிட்ட ஒருகாலம். அக்காலத்தில் வடிவம், பெயர். தொழில் இவைகளைக் கொண்டு நிற்கின்ற சிவன். `தடத்த சிவன்` எனப்படுவான். அவைகளுள் ஒன்றும் இன்றித் தன்னியல்பில் நிற்கின்ற சிவன் `சொரூப சிவன்` எனப்படுவான். அவன் அநாதி. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, உரைக்க. ``சொரூபங்கள்`` என்றது வடிவங்களை. மூன்றும் என்னும் முற்றும்மை தொக்கது. ஓதுதல், இங்கு உணர்தலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. `ஓதும்` என்பது பாடம் அன்று. அமுது ஊறிய - `அமுதம்போல ஊறிய` என உவமத் தொகை. பேதம், வேறாக உணர்தல். அபேதம், ஒன்றாக உணர்தல், முன்னது முதல்நிலை. பின்னது முடிநிலை. இவற்றின் பின், `இரண்டிலும்` என்னும் தொகைச் சொல் வருவிக்க இரண்டிலும் உளதாகும் ஆனந்தம் முறையே காதலன் காதலியைக் களவுக் காலத்து இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் இடந்தலைப்பாடு முதலிய காலங்களிலும், கற்புக் காலத்துப் பிரிந்து மீண்ட பின்னும் காணும் பொழுதும், கூடிய பொழுதும் உளவாகும் இன்பங்களை ஒக்கும். அவற்றிடையே வேற்றுமை உளதாயினும் இன்பம் ஆதலில் வேற்றுமையின்மை பற்றி, ``பிறழாத ஆனந்தம்`` என்றார். `சிந்தையுள்ளே நிற்கும் சிவனை ஞானிகள் சுகோதயனாகவும், சுக வாரியாகவும் உணர்ந்து இன்புறுவர்` என்பதாம்.
இதனால், சிந்தையில் உள்ள சிவனது இன்ப நிலையை உணர்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பொழிப்புரை :

பொருள்களை உணர்தற் கருவியாகிய உணர்வும், அவ்வுணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் சிவன் ஒருவனே. அனைத்துப் பொருள்களையும் தக்கவாற்றால் இயைத்துச் செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் தனியே நினைக்கவும் வாரான். ஆயினும் கொத்தாய் உள்ள மலர்களினின்றும் மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயற்பாட்டில் அவன் விளங்குகின்றான்.

குறிப்புரை :

`அவனை அத்தன்மையனாக உணர்தல் வேண்டும்; ஞானிகள் அவ்வாறு உணர்ந்திருப்பர்` என்பதாம்.
`எல்லாம் அவனே` என்றல் அவன் அவற்றில் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியாம். ``அவன்`` என்பது பண்டறி சுட்டு. ``புணர்வு`` என்பது, விடாது பற்றுதல். அஃது அதற்கு ஏதுவாய விருப்பத்தைக் குறித்தது. ``இணரும்`` என்பது பெயரடியாகப் பிறந்த பெயரெச்ச வினை. `இணராக்கும்` என்றபடி. இணராக்கல் - கொத்தாக்கல். துணர் - பூங்கொத்து. `கந்தம் போல` என உவம உருபு விரிக்க.
இதனால், `அனைத்துப் பொருள்களின் செயற்பாட்டினையும் அவனது செயலாக உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
``எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு``
-திருக்குறள் - 355.
என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 3

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு மலர்க் கந்தம்போலத் துள்ளி நிற்கின்ற சிவன் தன்னை நினைந்திருப்பவர் குறையை முடிப்பவன். வேதத்தை ஓதும் அயன், மற்றும் மால் முதலியோருடைய தலைக்குள் இருந்து அறிவைப் பிறப்பிப்பவனும் ஆவன். ஆகையால் அவனையே நினைத்து அவன் திருமுன்பில் இரு.

குறிப்புரை :

`இருப்பின் உனக்குக் குறை உண்டாகாது` என்பதாம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``கேள்வி`` என்றது `சுருதி` என்றபடி. சிவனது திருமுன்பிலே (சந்நிதியிலே) இருத்த லானது புற உலகை நோக்கும்பொழுதும் அவற்றின் இயல்பினைச் சிவனது அருளாகவே கண்டிருத்தலாம். ``மறையவன், மாதவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், சிவனைச் சேர்ந்திருப்பவர் செம்மையராய் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிவானான் என்விழித் தானே.

பொழிப்புரை :

மின்னல் மின்னினாற்போலத் திடீரெனத் தோன்றி மறைந்த ஓர் ஒளியால் மூடிக்கிடந்த எனது அறிவாகிய கண்ணைத் திறந்தேன். திறந்தவுடன் சிவன் அக்கண்ணில் என் அறிவினுள்ளே அறிவாய் விளங்கினான்.

குறிப்புரை :

இடையிரண்டு அடிகள் சிவனது இயல்பைக் குறித்து நின்றன. எனவே, ``தலைவன், இணையிலி, நந்தி`` என்பன ஒரு பொருள்மேற் பல பெயராய் வந்தனவாம். தன் உற்ற சோதி - தன்னை இயல்பாகவே பற்றியுள்ள ஒளி; அஃது அறிவேயாம். அந்த அறிவாகிய ஒளியே மின்னல்போலத் தோன்றி மறைந்தது. அஃதாவது, `சத்தி நிபாதம். முதற்கண் ஆன்ம அறிவில் ஓர் அதிர்ச்சி உண்டாகும் படி தோன்றிப் பின் மெல்ல முதிர்ந்தது` என்பதும், `அதனால் எனது அறிவு சிவத்தை அறியும் நிலையைப்பெற்றது` என்பதும், அதனைப் பெற்றபின் சிவன் அறிவினுள் அறிவாய் விளங்கினான்` என்பதும் கருத்து. அறிவினுள் அறிவே சிவஞானம். `விழிக்கண்` என ஏழாவது விரிக்க. அறிவு, ``சிந்தை`` எனப்பட்டது. `சிந்தையை விழித்தேன்` என்க. ``விழித்தேன்`` என்றது குறிப்புருவகம்.
இதனால், சத்தி நிபாதத்தில் திருவருள் மிக்கு விளங்க, அதனாலே பெற்ற சிவ தரிசனத்தை எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.

பொழிப்புரை :

உண்மையாயும், ஞானமாயும், உள்ள ஒப்பற்ற பரம்பொருள் அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கும். அந்த ஆனந்தம் ஆன்ம அறிவு இருந்துகொண்டிருக்கும் பொழுது இராது. (எனவே, ஆன்ம அறிவு தோன்றாத நிலையே அனுபவமாம்.) ஆயினும் ஆன்ம அறிவு உள்ளபொழுது மேற்கூறிய ஆனந்தத்தைக் காட்டுகின்ற அருள் ஒளி உளதாகும். (அந்த அருள் ஒளியால் சிவத்தை உணர்தல் சிவ தரிசனமாகும்.) அதன் பின் அருள் ஒளி ஆன்ம அறிவை விழுங்கி நிற்கும் நிலை நின்மல சிவ துரியமாகும். (இதுவே சிவயோகமாம்.) இத்துரியத்துள் விளங்குகின்ற அருள் ஒளியே ஆனந்த அனுபவமாகிய பர துரியத்துள் ஆன்மாவைச் செலுத்து.

குறிப்புரை :

``நில்லா`` என்னும் எதிர்மறைப் பெயரெச்சம், ``சிவானந்தம்`` என்பதனோடு முடிந்தது, சிவானந்தப் பேரொளி - சிவானந்தத்தைக் காட்டும் பேரொளி. சுத்தம் - நின்மலம். அஃதாவது மலம் நீங்கினும் அதன் வாசனை நீங்காமையால் ஆன்ம அறிவு `யான், எனது` என முனைந்து நிற்றல் இன்மை எனவே, இம்முனைப்பின்றி பேரொளியாம் நிற்றலே சுத்தப் பிரம துரியம் ஆதல் அறிக. சிவத்தை, ``பிரமம்`` என்றார். ``துரியம்`` என்றதன்பின், ``துரியத்துள்`` என்றது. `அதனினும் மேலான துரியத்துள்` என்றதாம். ``உய்த்தல்`` என்னும் தொழிற்பெயர் உய்ப்பதாகிய வினைமுதலைக் குறித்தது. இதன்பின் ``துரியம்`` என்றது, முற்கூறிய பிரம துரியத்தை.
இதனால், `ஆனந்த அனுபவமே சிவபோக நிலை` என்பதையும் அருள் அனுபவம் `சிவ யோக நிலை` என்பதையும் விளக்கும் முகத்தால், அவற்றிற்கு முன் நிற்கும் சிவ தரிசன நிலை உயிர் சிவஞானம் கண்ணாகச் சிவத்தை உணரும் நிலை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரனல்லன் நீடும் பராபரன் அல்லன்
உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன்
தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும்
அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.

பொழிப்புரை :

``பரனாய்ப் பராபரன் ஆகி``9 என்னும் மந்திரத்திற் கூறியபடி சிவ ரூபத்தில் `பரன்` முதலிய இயல்பினனாய் வேறு தோன்றுகின்ற சிவன், சிவ தரிசனத்திலும் அத் தன்மையனாய், அவற்றிற்கு மேற்பட்ட சிவயோக சிவ போகங்களில் அவ்வாறு காணப்படாது அவற்றைக் கடந்து ஆன்மாவைத் தன்னுள் அடக்கி அருளையும், ஆனந்தமாயும் விளங்குவன்.

குறிப்புரை :

இது, ``பரனாய்ப் பராபர னாகி`` என்னும் மந்திரத்துட் கூறியவற்றை எதிர்மறுத்துக் கூறுமாற்றால், சிவரூப சிவதரிசனங்கட்கு மேற்பட்ட நிலைகள் உளவாதலைக் குறித்தது. `அதனால் அவற்றை அடைந்தார் புறப் பொருள்களை நோக்குமிடத்து சிவயோக நிலையில் நின்றே நோக்குதல் வேண்டும் என்பது கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 7

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.

பொழிப்புரை :

`வீடு பேறு` என்பதில் வீடு - விடுதல். பேறு - பெறுதல். விடுதல் பாசத்தை; பெறுதல் பதியை. வீடும், பேறுமே இங்கு ``முத்தியும், சித்தியும்`` என ஓதப்பட்டன. முற்றிய ஞானத்தோன் - இவ்விரண்டன் இயல்புகளையும் முற்றும் உணர்ந்தவனே நிறை ஞானி -யாவான். ``இருமை வகைதெரிந்து ஈண்டும் அறம் பூண்டார்``3 என்றார் திருவள்ளுவரும். இத்தகையோன் தனது ஞாநத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அதனானே அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, அவ்வாற்றால் சிவத்துள் அடங்கி, அதனானே அறிவர் யாவரும் ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் ``தலைப்படுதலால், சகலத்தில் சுத்தாவத்தை யாகிய சிவானந்தத்தை அடைந்த ஞானியர் ஆவர்.

குறிப்புரை :

``மா சத்தியுள் நின்று`` என்பதை, பரந்தன்னுள் நின்று`` என்பதற்கு முன்னே கூட்டுக. ஓர்த்தல் - ஆராய்தல். தத்துவம் - மெய்ப் பொருள். ``சுத்தி`` என்றது சகலத்திற் சுத்தத்தை. ``அகன்றோர் போதர்`` என்பது வேறு முடிபாகலின், ஒருமை பன்மை மயக்கம் இன்று.
இதனால், நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை எய்தினோர் அந்நிலையினின்றும் ஒரோ ஒருகால் இறங்கினும் சிவயோக நிலையினின்றும் தாழார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன்
உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.

பொழிப்புரை :

எவ்வகை அவத்தையிலும் `துரியாதீதம்` என்பது உயிர் தன்னை மறந்திருக்கும் நிலையாகும். ஆகவே, நின்மலா வத்தைத் துரிய துரியாதீதங்களே யாயினும் அந்நிலைகளை அடைந்த ஆன்மா புறத்துச் செல்லுதல், அகத்தில் மீளுதல், பொருள்களை நோக்கி ஓடுதல் என்பனவாகிய தனது இயல்பு அனைத்தினும் நீங்கி நிற்கும் என்றால், அவ்வான்மாவை முன்னது போல வைத்து, `சீவன்` என்று சொல்வது எங்ஙனம்?

குறிப்புரை :

`கூடாது` சிவம் என்றே சொல்லுதல் வேண்டும்` என்பதாம். முன் மந்திரத்தில் ``சுத்தி`` நின்மலாவத்தை இடம் பெற்றமையால் இங்கு, ``துரிய அதீதம், துரியம்`` எனப்பட்ட நின்மலாவத்தைய ஆயின. புரிதலுக்கு, `ஆன்மா` என்னும் எழுவாய் வருவிக்க. விள்ளா - விள்ளாது; இடைவிடாமல் மிளிர்தல். இங்கு அறிவு செல்லுதல். ``விரியும்`` என்பது முதலிய `செய்யும்` என்னும் எச்சங்கள் மூன்றும் அடுக்கி, ``உரு`` என்னும் ஒரு பெயர் கொண்டன. `உரு` என்றது இயல்பை. திரிதல் - வேறுபடுதல்; நீங்குதல். ``உரைப்பது`` என்பது தொழிற்பெயர். `முன்னது போல` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
பராவத்தையை எய்தினோர் சீவத் தன்மை எய்தாமைக்கு நின்மல துரியாதீதங்களை எடுத்துக் காட்டினார்.
இதனால், சொரூப சிவனை எய்தினோர் சீவத் தன்மை எய்தாமை உவமை முகத்தால் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.
சிற்பி