ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி


பண் :

பாடல் எண் : 1

தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

பொழிப்புரை :

தூய்மையாகிய சுத்தாவத்தையைப் பயக்கும் முத்தி பஞ்சாக்கரக் கணிப்பினால் ஓர் ஆன்மா தனது ஏகதேச உணர்வாகிய சுட்டுணர்வு கழியப்பெற்ற பின் அஃது யாரை வரைந்து சுட்டியுணரப் போகின்றது? இனி அது தான் சிவமாகி விட்டபின்பு யாரைத் தியானப் பொருளாக வரைந்து கொண்டு தியானிக்கும்? அவாவின் வேரையே அஃது அறுத்து விட்டபின்பு அஃது யாரை விரும்பும்? மாணவர்களே, நீங்களே சொல்லுங்கள்.

குறிப்புரை :

`இவற்றிற்கெல்லாம் சிறிதும் இடம் இல்லை` என்பது கருத்து. வினாக்கள் யாவும் இன்மையைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. `உலகத்தை உணர்வது சுட்டுணர்வினாலும், விருப்பு, வெறுப்புக்கள் தோன்றுதல் அச்சுடணர் வினை பயனாலும் ஆகலின் சுட்டுணர்வு நீங்கவே அவையெல்லாம் இயைபின்றி நீங்கும்` என்பதும் கருத்து. காமன் - மன்மதன். அவன் அவாவின் வேருக்கு ஓர் உருவகம். `அவன் சிவனது நெற்றிக்கண் முன் நில்லான் ஆகலின், சிவ ஞானியர் கண்முன்னும் நில்லான்` என்னும் நயம் தோன்றச் சிவ ஞானியரது அறிவை, காமனை வென்ற கண்` என்றார். `சுட்டுணர்வு நீங்கவே, சிவத்தையும் ஆன்மாத் தன்னின் வேறாக வைத்துச் சுட்டியுணர்தல் இன்றித் தன்னுள்ளே அறிவுக்கறிவாக அநந்நியமாய் நின்று உணரும்` என்பது, ``ஆரை`` நினைவது என்பதனால் குறிக்கப் பட்டது. ஆன்மாச் செயற்கையாய் எய்திய சுட்டுணர்வு நீங்குதல் பாச நீக்கத்தாலும், இயற்கையாகிய வியாபக உணர்வைப் பெறுதல் சிவத்தைத் தலைப்படுதலாலும் ஆதல் பற்றி, வியாபக உணர்வு எய்தினமையை, ``தான் அவன் ஆதல்`` என்றார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், முத்தி பஞ்சாக்கரமாகிய வரையுரை சீவனைச் சிவமாக்கியருளும் மாட்சிமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

பொழிப்புரை :

`கடலுக்கு கரை யில்லை` என்பது தெளிவு. (`கரை` எனப்படுவன எல்லாம் தீவுகளே) அங்ஙனமாகவும் அதற்குக் கரை யிருப்பதாகக் கருதிக்கொண்டு, அந்தக் கரையைச் சென்று காண முயலுதல் அறிவுடைமையாகுமோ? ஆகாது. அதுபோலச் சிவம் வியாபகப் பொருள்; சொல்லிற்குள்ளும் அடங்குவதன்று. அவ்வா றிருக்கவும், மாணவர்களே, நீங்கள், `சிவத்தை யாம் சொல்லாற் சொல்லி உணர்த்திவிடுவோம்` என்று உணர்த்த முயல்வீர்களேயானால், ஊமன் தனது கருத்தைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்த முயலுங்கால் அடையும் இடர்ப்பாடுகளைத் தான் அடைவீர்கள் அடைந்தாலும் உங்கள் கருத்து நிறைவுறாது. உண்மையென்ன வெனில், `அலை யில்லாத கடல் ஒன்று இருக்குமேயானால் அதனோடு ஒத்துச் சிறிதும் சலனம் அற்றுத் தெளிந்த விரிந்த அறிவினை யுடையாரது அறிவில் சிவன் வரம்பில் பொருளாய் ஒளிர்கின்றான்` என்பதே.

குறிப்புரை :

`பஞ்சாக்கரத்தை அறியும் முறையில் அறிந்து, ஓதும் முறையில் ஓதினால், அஃது இந்தத் தெளிந்த அறிவைத் தந்துவிடும்` என்பது கருத்து. முன்னிரண்டடிகளில் வேற்றுப் பொருள் வைப்பணி வந்தது. ``நீர்`` என்றது கரையற்ற நீரை ஆதலால், அது கடல் நீரேயாயிற்று. ``திரையற்ற நீர்போல்`` என்றது இல்பொருளுவமை. புரை - சிற்றிடம் அஃது` `ஏகதேசம்` ஒரு புடை) என்பதைக் குறித்தது. ``உரையற்ற தொன்று`` என்றதனால், முத்தி பஞ்சாக்கரத்தையும் சுத்தமானதம் ஆக அறிவாற் கணித்தலே இங்கு விதிக்கப்பட்டதாம்.
இதனால், முத்தி பஞ்சாக்கரத்தை அறியும் முறை ஓதும் முறைகளின் மாட்சிமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மனமாயை மாயைஇம் மாயை மயக்க
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே.

பொழிப்புரை :

மாயையின் உண்மை யாதாயினும் பொதுவாக `மாயை, மாயை` எனச் சொல்லிப் பலரும் முறை செய்வன எல்லாம் மாயா காரியங்களுள் ஒன்றாகிய மனத்தைக் குறித்தேயாம். (``மனம் எனவும் ஒரு மாயை எங்கேயிருந்து வரும்`` என்றார் தாயுமான வரும்.) இந்த மனமாகிய மாயை, `பிறரை மயக்குவது` என்பது இல்லாமல் அது மயங்கும்படி செய்க. அஃதாவது, `அதன் கொட்டம் அடங்கும்படி செய்க` என்பதாம். மனம் அடங்கிவிட்டால், ஆன்மாவை அலைப்பது வேறு எதுவும் இல்லை. ஆகவே, அப்பால் அடங்க வேண்டுவதாகவும் எதுவும் இல்லை. மனத்தின் வழிப்பட்டு உள்ளத்தில் தோன்றியவற்றைத் தோன்றியவாறே பலபடப் பேசும் பேச்சுக்களும் அற்றொழியும். அப்பால் புறப்பொருள்களைத் துருவித் துருவி ஆராய்வதை விடுத்து, ``நான் ஆர், என் உள்ளம் ஆர், ஞானங்கள் ஆர்``3 என்பன போல உள்நோக்கி ஆன்மாத் தன்னையும், தலைவனையும் ஆராய்ந்து உணர்வதே மெய்ப் பொருளைக் கூட்டுவிக்கும் மெய்யுணர்வாகும்.

குறிப்புரை :

மனமாயை, `மனமாகிய மாயை` என இருபெயர் ஒட்டு. இதில் ``மாயை`` என்பது அதன் காரியத்தைக் குறித்தது. `இம்மாயையை` என இரண்டாவது விரிக்க. `மயக்க` என்பது அகர ஈற்று வியங்கோள். பின்வந்த ``மன மாயை``, `இது` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. தான், அசை. ``வேண்டா`` என்பது. வேண்டப் படாதாய் அற்றொழிதலைக் குறித்தது. `தன்னை` என்பது இடைக் குறைந்து, `தனை` என நின்றது. தன்னை ஆய்தல் கூறவே, அதனோடு உடன் நிகழ்வதாகிய தலைவனை ஆய்தலும் கொள்ளப்பட்டது. பிறவற்றை ஆராயாது, தன்னையும், தலைவனையும் ஆராய்தலை மட்டுமே கூறினமையாயினும், இந்த ஆராய்ச்சி அருள்வழி நிகழ்வதே யாகலானும் `திருவைந்தெழுத்தில் பாச எழுத்துக்கள் இரண்டை நீக்கி ஏனை மூன்றெழுத்தையே கொண்டு உணர்க` என மறைபொருளாக உணர்த்தியதாயிற்று. `முத்தி பஞ்சாக்கரமாவது இதுவே` என்பது, மேல்` ஐந்தெழுத்து` அதிகாரத்தில் சொல்லப்பட்டது. `இதனைக் கணித்தல்` என்பதும் சுத்தமானதாக அறிவாற் கணித்தலேயாதல், முன் மந்திரத்தில் ``திரையற்ற நீர்போல்`` என உவமையாற் கூறப்பட்டது. இங்கு ``மன மாயைதான் மாய`` என்றதனால் நேரே கூறப்பட்டது.
இதனால், `பஞ்சாக்கரத்தை முத்தி பஞ்சாக்கரமாகக் கொண்டு, அதனையும் `வாசகம், உபாஞ்சு, மானதம்` முறைகளுக்கு அப்பாற்பட்ட சுத்த மானத முறையிலே கணிப்பின் முத்திப் பயன் உளதாகும்` என அதன் மாட்சிமை உணர்த்தப்பட்டது.
சிற்பி