ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்


பண் :

பாடல் எண் : 1

மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

எத்துணையோ பேர் எத்துணையோ வகையில் காண முயன்றும் காணப்படாது ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவனை, `எப்படியும் கண்டுவிட வேண்டும்` என்று பலர் அவன் ஒளிந்திருக்கும் இடத்தையறியாமல், மனமாகிய நெடுந்தூரம் செல்லத்தக்க தேர்மேல் ஏறிக்கொண்டுச் சென்று வருந்துகின்றார்கள். நானும் அவர்களைப் போலத்தான் எங்கெங்கோ அவனைத் தேடி வருந்தினேன். ஆயினும் நான் `அவன் ஒளிந்திருக்கும் இடம் எனது உடம்பாகிய ஒளியிடந்தான்` என்று தெரிந்து அங்குச் சென்று அவனைக் கண்டு விட்டேன்.

குறிப்புரை :

மாயம் - வஞ்சனை; கள்ளத்தனம். அதனையுடையவன் மாயன். சிவன், பல்லாற்றானும் தேடிய பல்லோர்க்கும் அகப்படாத கள்வன் ஆதலை மாணிக்க வாசகர் தமது திருஅண்டப் பகுதியுள் நூற் றிருபத்து நான்கு முதல் நூற்று நாற்பத்தைந்து முடிய உள்ள அடிகளால் விரித்தமை காண்க. தேடுவார் தேடும் பொருளாயிமை பற்றி. ``போயின்`` என்றாரேனும், `இருந்த` என்றலே கருத்தென்க. ``நாடு`` மூன்றனுள் நடுவணது ஒன்றே தன் பொருளைத் தந்தது; ஏனை இரண்டும் `இடம்` என்னும் பொருளவாய் நின்றன. `தேயம் பெருநாடும், நாடு உள்நாடும் ஆம்` என்க. `காய நாடு, மின் நாடு` எனத் தனித் தனி முடிக்க. மின் - ஒளி. `ஞானியரது உடம்பு ஊனுடம்பாகாமல் ஒளியுடம்பாம்` என்பது கொள்கை. ஆகவே, `அஞ்ஞானியரது உடம்பன்றி, ஞானியரது உடம்பே சிவன் இருக்கும் இடம்` என்றற்கு, ``மின் என்றும், ``கண்டறி வார் இல்லை காயத்தில் நந்தியை`` என்று முன்னருங் கூறினார்.1
இதனால், `இத்தோத்திரம் புறக்காட்சித் தோத்திரம் அன்று; அகக் காட்சித் தோத்திரம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றேதம் பாடறி வீரே.

பொழிப்புரை :

நிலைபெற்ற மலைபோலும் தோற்றத்தை உடையதாய், ஆயினும் மதத்தால் அடங்காது நடக்கும் யானையின் மேல் பலர் இனிய இசைபாடிச் சூழ்ந்து வர இப்பொழுது உலாவரும் அரசர்கள் யாவரெனின், `முற்பிறப்பில் சிவனது ஆயிரம் நாமங்களை எடுத்தோதித் திரித்தவர்` என்றே அவரது பெருமையின் காரணத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.

குறிப்புரை :

முன் இயல் காலம் - முற்பிறப்பு. ``என்றே`` என்னும் கோரம் தேற்றம்.
``வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி,
நந்தாவனஞ் சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும்,
சிதவல் சுற்றிக்
கால்நகம் தேயத்திரிந் நிரப்பாரும்
கனக வண்ணப்
பால்நிற நீற்றற்கு அடியரும், அல்லாப்
படிறருமே``
``உலகா ளுறுவீர், தொழுமின்; விண்ணாள்வீர்,
பணிமின்; நித்தம்
பலகா முறுவீர், நினைமின்; பரமனொடு
ஒன்றலுற்றீர்,
நலகா மலரால் அருச்சிமின்; நாள்
நரகத்து நிற்கு
அலகா முறுவீர் அரனடி யாரை
அலைமின்களே``1
என்னும் பொன்வண்ணத் தந்தாதியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.
``மத வாரணம்`` என்றது, ஐராவதத்தையும் குறிக்கும் குறிப்பினது.
``வண்டுளருந் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்,
புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்,
அண்டர்தொழ வாழ்உன் (இந்திரன்) இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்``2
``வானம் ஏத்த யான் (மாயோன்) வைகுந்த வாழ்வுபெற்றதுவும்,
ஞான நான்முகன் சத்திய உலகம்நண் ணியதும்,
ஏனை விண்ணவர் தத்தம வாழ்க்கை எய்தியதும்
ஆனுயர்த்தவர் அருட்குறி அருச்சனைப் பயனால்``3
எனக் காஞ்சிப் புராணத்திலும் சொல்லப்பட்டன. நல்வாழ்வு வாழ் வோரைக் கண்டால், ``அஃது அவர் பூசா பலம்`` என்றல் இன்றும் வழக்கில் உள்ளது. ``பாடறிவீரே என்றது, பன்னுவீராயின் நீவிரும் பெருவாழ்வு வாழலாம்` என்றபடி.
இதனால், தோத்திரத்தின் பயன் உணர்த்தும் முகத்தால் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணா(து) அரற்றுகின் றேனை ஒர்
பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.

பொழிப்புரை :

பொன்னின் தராதரத்தை அளத்தற்கு உதவுகின்ற பொன் `ஆணிப் பொன்` எனப்படும். அஃது ஏனை எல்லாப் பொன்னினும் உயர்ந்தது. அதுபோல முத்துக்களின் தராதரத்தை அளக்க உதவுகின்ற முழுதும் `ஆணி முத்து` எனப்படும். அஃது ஏனை எல்லா முத்துக்களினும் உயர்ந்தது. அதுபோலச் சிவன் ஏனைத் தேவர் பலரினும் உயர்ந்தவன். பின் அவன், திருமேனி அழகால் காலையில் தோன்றும் ஞாயிற்றை ஒப்பான்,
``காலையே போன்றிலங்கும் மேனி; கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை; மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு``1
என அம்மையாரும் அருளிச்செய்தார். தேவர் என்று எத்துணைப் பேர் உளரோ அத்துணைப் பேராலும் `இறைவன்` என்று ஏத்தப் படுபவன் அவன்; கருவுற்ற நாள்முதல் இன்றுகாரும் அவன் என்னைப் புரந்து வருதலால் எனக்குத் தந்தை. ஆகவே, அரைக்கணமேனும் அவனை நான் காணமல் எப்படியிருத்தல் கூடும்?
``பாணியில் வீணை பயின்றவர் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே``2
என அப்பரும் அருளிச்செய்தார். அதனால் இவ்வுலக நிலை அவனை இடையறாது காணும் தன்மையுடைத்தாகாமையால் யான் `ஓ` என்று அழைத்து அரற்றிக் கதறுகின்றேன். எனது நிலைமையை அறிந்து கொள்ளாத உலகர், `துன்பத்திற்கு ஏதும் காரணம் இல்லாதிருக்கவும் இப்படி இவன் எப்பொழுது அழுது கொண்டிருக்கின்றான்; இவன் பித்துக் கொள்ளியல்லது வேறு யார்? என்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.

குறிப்புரை :

`அதற்கு நான் என் கடவேன்` என்பது குறிப்பெச்சம். ``சகம் `பேய்` என்று தம்மைச் சிரிப்ப``3
``உத்தமன், அத்தன், உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு `மால்இவன்` என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே``4
என்றார் மாணிக்க வாசகரும்.
இதனால், உடம்பில் நிற்குங்காறும் சிவனது தலைப்பாடு இடையிடும் பொழுதெல்லாம் ஞானிகள் ஆற்றாமையால் அழைத்தும், அலறியும் நிற்றல் கூறப்பட்டது. அழைத்தலே தோத்திரம் ஆதல் அறிக.

பண் :

பாடல் எண் : 4

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

பொழிப்புரை :

பல்வேறு வகைப்பட்ட அறங்களையெல்லாம் தனது வடிவாகக் கொண்டிருத்தலால் `அற ஆழி` எனப்படுபவனும், எல்லா வற்றையும் ஒருங்கேயறிதலால், பேரறிவாளன் - முற்றுணர்வினன்` எனப்படுபவனும், எல்லாப் பொருள்களிலும் தான் நீக்கம் அற நிறைந் திருப்பினும் அங்கெல்லாம் பாலல் நெய்போல விளங்காது நின்று, தன் அடியவர் உள்ளங்களில் தயிரில் நெய்போல விளங்கி நிற்பவனுமாய் இருப்பவன் எங்கள் சிவபெருமான். அவன் என் உள்ளத்திலும் புகுந்துவிட்டமையால் அவனையே தோத்திரித்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஈற்றில் வந்த ``புகுந்து நின்றான்`` என்பது, `புகுந்து நின்ற அவன்` எனப்பொருள் தந்தது. புண்ணிய மூர்த்தி - அற வடிவினன். போது அறிவு - நிரம்பிய அறிவு. புகுதல், விளங் -குதலையே குறித்தது.
இதனால், `சிவன் இத்தன்மையன் ஆகலின் அவனே தோத்திரிக்கப்படுதற்கு உரியவன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.

பொழிப்புரை :

பூதக் கண் ஆடி - பூத காரியமாகிய `கண்` என்னும் ஆடி. இஃது உருவகம். இது முகத்தில் உள்ள கண்ணைக் குறித்தது. இக் கண்ணிற்கு அகப்படாதவன் சிவன். ஆயினும், போது - அடியார் களுடைய உள்ளக் கமலத்தில் என்றும் விளங்கியே நிற்கின்றான். வேதக் கண்ணாடி - வேதமாகிய கண்ணாடி. இதுவும் உருவகம். பொருள்களைத் தெளிவுற விளக்குதல் பற்றி வேதத்தைக் கண்ணாடியாக உருவகம் செய்தார். இஃது ஆகமத்தையும் உள்ளடக்கியதே. வேதாகமங்களை உணர்வார்க்குச் சிவன் அந்நூல்களின் பொருளாய், உணர்பவர்க்கு வேறாய் நின்று விளங்குகின்றான். இனி, நீதிக்கண் நாடி நினைவார் மனத்து - ``சிவன் - நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்த தவன்``1 என உணர்ந்து அந்த உணர்வு வடிவாகத் தமது அறிவினுட் காண்பவர் கட்கு அவன் அவர்தம் அறிவுக்கறிவாய், ஒன்றாகியே விளங்கு கின்றான். அத்தகையோனை நான் பலர் பாடும் தோத்திரப் பாடல் -களில் கேட்டுக் கண்ணாடி நிழலைத் தெளிவாக உணர்தல் போல உணர்ந்து நின்றேன். இங்குள்ள கண்ணாடி அதன் நிழலைக் குறித்த ஆகுபெயர். அந்நிழல், தெளிவாக உணரப் படுதற்கு உவமையாயிற்று.

குறிப்புரை :

`அதனால், நானும் அவனைத் தோத்திரித்தலையே மேற்கொண்டேன்` என்பது கருத்து. முதல் மூன்று அடிகள் அவன் தோத்திரிக்கப்படுவதற்கு உரியன ஆதலையும் ஈற்றடி தோத்திரங்களில் அவன் இனிது விளங்கி நிற்றலையும் குறிப்பால் உணர்த்தின. இவையே இம்மந்திரத்தால் உணர்த்தப்பட்டன என்க.

பண் :

பாடல் எண் : 6

நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.

பொழிப்புரை :

`அளவற்ற மந்திரங்களை ஓத வல்லேம்` என்று சொல்லி, வேத வேள்விகளை அளவின்றிச் செய்தோர் யாவரும் அவற்றின் பயனாகிய போகங்களை அனுபவித்தலோடு போய் விட்டார்கள். ஆகவே, சிவனை அவனது அளவற்ற திருப்பெயர்களைச் சொல்லித் தோத்திரியுங்கள்; அளவற்ற இன்பத்தில் பொருந்துவீர்கள்.

குறிப்புரை :

`ஓமம் செய்தவர்கள் பெற்றது காமம்` எனவே, `நாமம் ஓதுவார் பெறுவது மோட்சம்` என்பது பெறப்பட்டது. ``காமம், ஏமம்`` எனவும், `ஒழிந்தார், இசைவீர்` எனவும் கூறிய சொற்குறிப்புக்களால், ஓமத்தை விலக்குதற்கண்ணதே நாயனாரது கருத்தாதல் விளங்கும். ``பசித்துண்டு பின்னும் பசிப்பானையொக்கும் - இசைத்து வருவினையில் இன்பம்``2 என மெய்கண்ட தேவரும் அதனை விலக்குதலையே மேற்கொண்டார்.
``அவிசொரிந் தாயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று``2
என்னும் திருக்குறளும் இக்குறிப்புடைத்து. ``ஆயிரம்`` என்றவை அளவின்மை குறித்து நின்றன.
இதனால், வேள்வி மந்திரங்களை ஓதுதலைவிட, வழி பாட்டுத் தோத்திரம் பயனுடைத்தாதல் கூறப்பட்டது.
[இதன் பதிப்புக்களில் காணப்படும், ``போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை`` என்னும் மந்திரம் நான்காம் தந்திரத்தின் தொடக்கமாய் வந்தது.]1

பண் :

பாடல் எண் : 7

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டவன்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

பொழிப்புரை :

தேவருலகமும் உங்களை வழிபடுமாறு, நீவிர் உங்கள் உடம்பில் உள்ள ஆதார கமலங்களில் மந்திர ரூபமாய் நுணுகிச் சென்று, அவற்றிற்கு அப்பால் நிராதாரம், அதற்கப்பால் மீதானம் ஆகிய இடங்களை அடைந்து அங்கே நின்றுகொண்டு சிவனைப் பல்லாற்றானும் நினையுங்கள். அவ்வாறு நினைகின்றவர்களில் எவனாயினும் ஒருவன் மீண்டு கீழே வருவானாயின், அவன் மயக்கம் தருகின்ற மதுவை நிரம்ப உண்டு, அதன் கீழ்மையை உணர்ந்து வெறுப்படையும் நிலை உண்டாதலும் கூடும்.

குறிப்புரை :

``வானோர் உலகம் வழிபட`` என்பதை இரண்டாம் அடியின் முன்னர்க் கூட்டிப் பின் இரண்டாம் அடியோடு முதலிற் கூட்டி யுரைக்க. நானாவிதம் செய்தல் - பலவகைப்படுத்துதல். அஃதாவது, சிவன், (ஹடயோகம், மந்திரயோகம், ஆதாரயோகம், நிராதார யோகம் முதலியவற்றில் நின்று அருளுமாற்றையெல்லாம் நினைத்து துதித்தல். மீளுதல் யோக நிலையினின்றும் நீங்கி உலகமுகப்படுதல். ``தேன்`` என்றது, மதுவை. `தண்ணீர்` என, நகை தோன்றக் கூறுதல்போலக் கூறிய வஞ்சப்புகழ்ச்சி. ``மீண்டவன் தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆம்`` என்றது, `உலக மாயையில் வீழ்ந்து அல்லற்பட்டுப் பின் வெறுத்தலும் கூடும்` என்னும் பொருளைத் தோற்றுவித்தலின், பிறிது மொழிகல். `நிராதார மீதானங்களினின்று மீளுதல் கூடாது` என்பதை இங்ஙனம் கூறினார். `மீட்சியைத் தோத்திரம் விலக்கும்` என்பது இங்குள்ள குறிப்பாகக் கொள்க.
இதனால் தோத்திரம் மீதானத்தில் சென்றோர்க்கும் உரித்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

பொழிப்புரை :

(`தோத்திரம்` என்னும் அதிகாரத்தை முதலில் `தோத்திரத்தின் சிறப்புணர்த்துவது` என்னும் பொருளதாக வைத்து, முன் மந்திரம் வரையில் அதனையே கூறிவந்த நாயனார் தோத்திரத்தைக் கூறுவது` என்னும் பொருளதாக வைத்து, இது முதலாக வரும் மந்திரங்களில் தோத்திரமே செய்கின்றார். `இவ்வாற்றால் பிறரும் தோத்திரம் செய்யப் பயன்படும்` என்பது பற்றி திருவள்ளுவ நாயனாரும், `பெரியாரைப் பிழையாமை` என்ற ஓர் அதிகாரத்தை இரண்டு பொருளதாக வைத்துக் கூறியதைக் காணலாம்.) இவ்வுலகில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற இன்ப ஆரவாரமே யல்லது பிறிதொரு சிறப்பும் இல்லாத விண்ணுலகச் சிற்றின்பத்தை, நூறு பரிமேதங்களை வேதம் நுவன்றவாற்றானே சிறிதும் குறையின்றி வருந்திச் செய்து இந்திர பதவி எய்துவோர் முதலாகப் பலர் மயக்கத்தால் விரும்பினாராயினும் தன் அடியவர்களால் மட்டுமே பெறப்படுகின்ற சிவன் தரும் இன்பமே அவ்விண்ணுலக இன்பங்கட் கெல்லாம் அப்பாற்பட்ட அரிய பெரிய இன்பமாகும்.

குறிப்புரை :

``அந்தம்`` `வெளி` என்னும் பொருட்டாய், யாதும் இன்மையைக் குறித்தது. ``வானம்`` என்பது ஆகுபெயராய், அவ்விடத்து விளையும் இன்பத்தைக் குறித்தது. இதனை முன்னர், வேண்டுதலுக்குச் செயப்படுபொருளாக்கிப் பின்னர், `அரும்பொருள் அதனின் அப்புறம் ஆம்` என இயைத்துரைக்க. எல்லாம், `பொருள்` எனப்படுதலின், இங்கு இன்பம் ``பொருள்`` எனப்பட்டது. `அடியார்கட்கு வந்து நின்றானது பொருள்` என இயைக்க. வந்து நிற்றல், கிடைத்தல்.
இதனால், சிவன் பிறவிடத்தில்லாத பேரின்பத்தைத் தருதல் எடுத்தோதிப் புகழப்பட்டது.
``செங்க ணவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா``1
என்ற திருவாசகத்தைக் காண்க.

பண் :

பாடல் எண் : 9

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

வானில் தெளிவாய் இருந்த நீர் மண்ணில் வீழ்ந்த வுடன் அம்மண்ணின் தன்மையைப் பெற்றுத் தன் தன்மை திரிந்தது போல, மக்களும் அநாதியே மும்மலச் சார்பினால் அறிவு கலங்கி, வேதாகமங்கள், ``சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை`` என அறுதி யிட்டுரைக்கவும் அதனைத் தெளிய மாட்டாராய், ``அதேவர் தேவர் அவர் தேவர் என்றிங்ஙன் - பொய்த்தேவு பேசிப் புலம்புவார்`` ஆயினர். ஆயினும், பருகுதற்கு உரிய நீராக ஒருவன் குளத்தினின்றும் சிறிது நீரை எடுத்து இல்லத்தில் ஒரு பக்கத்தில் தேற்றாங் கொட்டை யிட்டுத் தெளிய வைப்பதுபோல நல்லாசிரியன் ஓரிடத்திலிருந்து, பல சொல்லி ஆரவாரியாது ஒரு சொல் உறுதியாற் சொல்லித் தெளிவித்த வழி. அங்ஙனம் தெளிவிக்கப்பட்டவன், `சிவனே தெய்வம்` என்று தெளிந்து சிவனை அடைந்து, சிவனே ஆய்விடுவான்.

குறிப்புரை :

எண் - எண்ணம்; என்றது அறிவை. ``இவன்`` எனச் சுட்டுப் பெயர், செய்யுளாகலின் முன்வந்தது. ``உண்ணில்`` என்பது, `உண்ண வேண்டின்` என்னும் பொருட்டாய், ``படுத்த`` என்பதனோடு முடிந்தது. `தெண்மையின்` என்பதில் மையீறு தொகுத்தலாயிற்று. தெண்மை - தெளிவு. இன், உவம உருபு. ``படுத்த`` என்பது, `ஆக்க` என்னுப் பொருட்டாகிய செயவெனெச்சம்.
``குருவே சிவம்``2 என்றாராகலின், `சிவன் குருவாய் வந்து பாசத்தை நீக்கி, உண்மையை உணர்த்தாதவழிச் சீவன் சிவனாமாறு இல்லை` என்பதை வலியுறுத்தி முகத்தான் `சிவன் யாண்டும் உள்நின்று உணர்த்தி வருதலே யன்றி முடிவில் குருவாகி வந்து பாசத்தை நீக்கிச் சீவனைத் தானாக்கியும் வைக்கும் கருணையாளன்` என அவனது கைம்மாறு கருதாத கருணையுள்ளத்தை இதனால் புகழ்ந்தார் என்க.
``சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயுமவன்``1
என்னும் திருமுறையால், சிவன் சீவரைத் தானாகச் செய்யும் கருணையையும்,
``சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தின் வாய்க்கும்வளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு``2
என்னும் சாத்திரத்தால் குருவினாலன்றி மெய்யுணர்வு பிறவாமையையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 10

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.

பொழிப்புரை :

சிவன், மெய்த்தவத்தாலன்றிப் பொய்த்தவத்தால் அணுகப்படாதவன்; பிறிதொன்றை விரும்பாது தன்னையே விரும்பு -பவர்கட்கு அங்கை நெல்லிக் கனியென விளங்கி அதனோடேதானும் தூயனாய், அவரையும் தூய்மை செய்து இன்பப் பொருளாயும் இலங்குபவன். ஆகவே, நானும் அவனையே நாடிய காரணத்தால், ``அலையிலாத சாகரம் போலவும், அநிலம் இல்லா விளக்குப் போலவும்`` அலையின்றி அமைதியுற்றேன்.

குறிப்புரை :

சிவ நெறியில் `தவம்` எனப்படுவன சரியை கிரியா யோகங்களே. அவை பயன் கருதிச் செய்யுமிடத்து `உபாயச் சிவ புண்ணியம்` எனப்பட்டு, நேரே ஞானத்திற்குச் சாதனமாகாது, உண்மைச் சிவ புண்ணியம் வழியாகவே ஞானத்திற்குச் சாதனமாம். பயன் கருதாது செய்யப்படும் சரியை முதலியனவே `உண்மைச் சிவ புண்ணியம்` எனப்பட்டு ஞானம் வாயிலாகச் சிவனைக் கூட்டுவிக்கும். அது பற்றியே சிவனை, `மெய்த்தவத்தாலே அடையப் படுவன்` என்றார். பயன் கருதாது செய்யும் சிவ புண்ணியம் மெய்த்தவம். ஆகவே, பயன் கருதிச் செய்யும் சிவ புண்ணியம் பொய்த்தவம் ஆயிற்று.
``கள்ளனேன்`` கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கவித்துப் போக்கி``1
``காமியம் செய்து காலங் கழியாதே``2
``யானே பொய்;என் நெஞ்சும் பொய்; என்
அன்பும் பொய்``3
என்றாற்போல, `கள்ளம், பொய்` என வருவன எல்லாம் பயன் கருதிச் செய்யும் சிவத் தொண்டையும்,
``மெய்கலந்த அன்பர்அன்பு எனக்கும ஆக வேண்டுமே`` 4
``மெய்த்தொண்டர் செல்லும் நெறியறியேன்``5
என்றாற்போல, `மெய்யன்பு, மெய்த்தொண்டு` என வருவன எல்லாம் பயன் கருதாது அன்பே காரணமாகச் செய்யும் சிவத் தொண்டையும் குறிப்பனவாம். பொய்த் தொண்டர்கட்குச் சிவன் அகப்படாமையை மாணிக்க வாசகர் தமது திருவண்டப்பகுதி நூற்றிருபத்தாறு முதல், நூற்று நாற்பத்தைந்து முடிய உள்ள அடிகளால் விரித்துக் கூறி, மெய்த்தொண்டர்களுக்கு அங்கை நெல்லிக்கனிபோல் விளங்குதலை, ``தடக்கையின் நெல்லிக் கனி எனக்கு ஆயினன்`` என நூற்றறுபத் -தாறாம் அடியில் விளங்கக் கூறினார்.
நெல்லிக்கனி தூய்மைக்கும் இனிமைக்கும் உவமை. இன்னும் அருநெல்லிக்கனி சாவா மருந்தாதல் அதியமான், ஔவையார் வரலாற்றால் அறியப்படும். கனிந்த நெல்லிக்கனி, தன் உள்ளே யிருக்கும் விதையை ``அடுத்தது காட்டும் பளிங்குபோல்``6 இனிது விளக்குதல் பற்றி அஃது இனிது விளங்குதற்கு உவமையாகச் சொல்லப்படும். அக்கனி அகங்கையில் இருந்துவிட்டால், தெளிவு இன்னும் மிகுதியாம். இஃது அதன் தூய்மையாலே நிகழ்வதாம். நெல்லிக்காயைத் தின்றபின் குடிக்கும் தண்ணீரும் இனித்தல் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டது. அத்தன் - தந்தை. ``தேவர்கள் அத்தன்`` என்பது, `சிவன்` என்றவாறாய், ``நின்ற`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. ``நின்ற`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. இங்குச் சிவனது பெருமைகளை எடுத்துக் கூறியது, அவனை நாடியபின் பிறரை நாட வேண்டாமையைக் குறிப்பால் உணர்த்தற்கு. `ஒழி` துணிவுப் பொருண்மை விகுதி.
இதனால், சிவபெருமான் தன்னை அடைந்தவர்க்குக் குறைவிலா இன்பமும், தூய்மையும் உளவாக விளங்கி நிற்கும் தகைமையனாதல் கூறப்புகழ்தல் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம்
சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.

பொழிப்புரை :

இம் மண்ணுலகம் தீக்குணங்கள் பலவும் மூண்டு எரியும் இடம். புண்ணியமே வடிவான சிவன் இதன்கண் தன் திருவடி தோயும்படி எழுந்தருளி வந்து மெய்ந்நெறிப் பொருளை வகை வகையாக வகுத்துத் தெளிவிக்கின்ற குருமூர்த்தியும் ஆவான். அத்தகைய குருவருளால் நான் அளவற்ற புகழையுடைய ஞானத்தைப் பெற்றுவிட்டேன். அதன் கண் எனக்குத் தடுமாற்றம் யாதும் இல்லை. எனவே, யான் அலைவு ஒன்றும் இன்றி, முழு அமைதியை உடையவனாயினேன்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ``அமைந் தொழிந்தேன்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. ``வள்ளலும் ஆம்`` என்றது சிவன் பலர்க்கு அருள்வதைப் பொதுவாக எடுத்துக் கூறியது. உம்மை, சிறப்பு. வகைந்து - வகை செய்து. தாம் குருவருள் பெற்றவாற்றை மேல் பல இடங்களில் கூறினார் ஆகலான் இங்கு அதனைக் கூறாது பயனை மட்டுமே கூறினார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், சிவன் குருவாகியும் வந்து அருளும் கருணைத் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்(று)
உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.

பொழிப்புரை :

[தலைவனை, நாடனை, முதல்வனை என வந்த வற்றிற்கு, `இத்தன்மையேனாகிய என்னை` என்பதே கருத்தாகலான், இவை தன்மைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி.]
`ஒப்புயர்வற்ற தலைமையையும், சிற்பர வியோமத்தில் இருக்கும் இருப்பையும், வேதத்தைச் செய்த முதலாசிரியத் தன்மையும் உடையேனாகின்ற என்னை, எனது உண்மையை உணராது, தாங்களையே தலைவர்களாகக் கருதிக் கொண்டு செயற்படுகின்ற மாக்கள் என்று உணர்வார்களோ` என்னும் அருள் நோக்குடன் சிவபெருமான் உயிர்களின் உள்ளத்துள்ளே தோன்றாத் துணையாய் இழிந்து, காலம் வந்தபொழுது தோன்றி ஆட்கொள்கின்றான்.

குறிப்புரை :

கள்ளம் உடையரை, ``பெருமக்கள்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``உடம்போ டுயிரிடை நட்பு``1 என்றது போல. கொல், அசை ``வள்ளல் தலைவன்`` என்பது முதலிய குறிப்பினால், ``ஒளிந்திருந் தானாம்`` என்னும் பயனிலைக்கு. `அவன்` என்பது தோன்றா எழு வாயாய் நின்றது. என்று இரண்டில் முன்னதை, என்று காண்பர் கொலோ` என மாற்றிவைத்துரைக்க. ஓர் என்றே பாடமாக ஓதுதல் பாடமன்று.
இதனால், சிவன் காலம் வாராத முன்னெல்லாம் தோன்றாத் துணையாயும், காலம் வந்தபொழுது தோன்றி ஆறாம் துணைவனாயும் நிற்கும் கருணைத்திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.

பொழிப்புரை :

[இங்கும் ``கடவுளை`` என வேறுபோலக் கூறப்பட்டதை, `கடவுளாகிய தன்னை` என ஒன்றுபடுத்தி உரைக்க.]

குறிப்புரை :

நாளும் - நாள்தோறும். நன்மை - நன்றிச்செயல். ``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப் - பின்னை மறத்தல் பிழையலது``1 என்றார் மெய்கண்ட தேவர். `நின்றவரது, குரிசிலினது` என ஆறாவது விரிக்க. கோள் - கிரக சாரம். ``கோட்பாலனவும், வினையும் குறுகாமை``2 என்றார் ஞானசம்பந்தரும். குரிசில் - சிவபிரான். அவன் தந்த வாள், ஞானம். ``நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்``3 என முன்னருங் கூறினார் உம்மை, சிறப்பு `மனத்தொடு பொருந்த` என ஒருசொல் வருவிக்க.
இதனால், ஞானம் பெற்றபின்னும் தன்னை வழிபடுவாரைச் சிவன் கைவிடாது காக்கும் கருணை புகழ்ந்து கூறப்பட்டது. ``துறக்குமா சொலப்படாய், துருத்தியாய்``4 என்பதும் ஞானசம்பந்தர் வாக்கு.

பண் :

பாடல் எண் : 14

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும்
வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.

பொழிப்புரை :

``கோழை மிடறாக, கவி கோளும் இலவான``5 நிலைமையை யுடையோரும் முயன்று, ``இசை கூடும் வகையால்``6 சிவனது திருவடிகளை வாழ்த்துபவர்கட்கு அவர்கள், `வீர சுவர்க்க இன்பம் எவ்வாறு உள்ளது` எனக் காண ஒரு கால் விரும்புவாராயின் அத்திருவடிகளே அதுவாய் நின்று அவர்கட்கு அதனைக் காட்டும். அங்கு அவர்கள் செல்ல வேண்டுவதில்லை.
இனிப் பொதுவான சுவர்க்க இன்பத்தைக் காண அவர்கள் அவ்வாற்றான் விரும்புவராயின் அதுவாயும் அத்திருவடிகள் நின்று இனிப்பிக்கும்.
தீர்த்தங்கள் பலவற்றில் சென்று மூழ்க அவர்கள் விரும்பு வராயின் அவையாயும் அத்திருவடிகள் அவர்கட்கு நின்று அவர்கள் விருப்பத்தை நிறைவு செய்யும்.

குறிப்புரை :

`இத்துணை ஆற்றல்களையுடையது சிவனது திருவடிகள்` என்றபடி. இதற்கு எடுத்துக்காட்டாக ஞானசம்பந்தர் திருவீழிமிழலையினின்றும் சீகாழிக்குச்செல்ல நினைத்தபொழுது திருவீழிமிழலைக் கோயிலேக் கோயிலாகிக் காட்சியளித்தமை, திருமருகல் கோயிலும் அவ்வாறே திருச்செங்காட்டங்குடிக் கோயிலாகிக் காட்சியளித்தமை, நாவுக்கரசர்க்குத் திருவையாற்றுக் கோயிலே திருக்கயிலையாகிக் காட்சியளித்தமை முதலியனவாம்.
``பொருந்தில்`` என்றதும், `மனம் பொருந்தில்` என்றதேயாம். திருந்துதல் - செந்நெறியிற் செல்லுதல். அதுவும் செல்ல விரும்பு தலையே குறித்தது. ``விரும்பில்`` முதலிய மூன்றும் பெரும்பான்மை விரும்பாமையைக் குறித்து நின்றது. `வருந்தியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அவன் `பண்டறி சுட்டு`.
இதனால், சிவனது திருவடிகளைத் தோத்திரிப்பார்க்கு அவை அவர் வேண்டும் பொருள் அனைத்துமாகிப் பயன் தரும் சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

பொழிப்புரை :

ஞானாசிரியன் தனது ஞானத்தால் அண்டங் கடந்த பொருளாய் உள்ளான். அவன் இவ்வுலகத்தில் இருப்பினும் ஏனையோர் போல `யான், எனது` என்னும் பற்றுடையவன் ஆகாது, பற்றற்றுத் தூயனாய் இருக்கின்றான். அவன் தந்த மலைவாழைக் கனியை நுகர்ந் -தமையால், நான் என்னுள்ளே ஊறுகின்ற அமுதமாயும், ஒளியாயும் உள்ள அம்மெய்ப் பொருளைப் பற்றி அசைவின்றி நிற்கின்றேன்.

குறிப்புரை :

``போதகன்`` என்பதை முதலிற் கொள்க. போதகன், இங்கு ஞான போதகன், கானக வாழைக் கனி, இனிமைக்கு ஒன்றனை எடுத்துக் கூறியவாறு. பானகம் - இனிப்புடைய நீர்ப் பொருள். அஃது இங்கு அமுதத்தைக் குறித்தது. தனி - தனிமை. அஃது ஆகுபெயராய், அதனை உடையானைக் குறித்தது.
இதனால், சிவன் அவன் தானாகும்படி ஆவேசித்து அருளும் ஆன்ம சைதன்னியததின் சிறப்புக் கூறும் முகத்தால், அத்தன்மைத்தாகிய சைதன்னியத்திலன்றி ஆவேசியாத அவனது மாண்பு புகழ்ந்து கூறப்பட்டது.
``நம்செய லற்று,இந்த நாம்அற்றபின் நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற;
தன்னையே தந்தான்என் றுந்தீபற``1
என்னும் திருவுந்தியாரையும் காண்க.

பண் :

பாடல் எண் : 16

விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.

பொழிப்புரை :

ஓர் அறிவு எனது அறிவைத் தன்னுள் விட்டது. அஃது எல்லாப் பொருள்கட்கும் அதுவது இயங்குதற்குரிய நெறி முறைகளை வகுப்பது. சுவர்க்க லோகத்தில் வாழும் அமரர்கட்கு மேலான அமரர்கள் வாழ்கின்ற அந்த உலகத்தில் அஃது உள்ளது. அதன் சடை முடியில் வேகமாகப் பரந்து பாய்கின்ற வெள்ள நீர் அடங்கிக் கிடக்கின்றது. யார் யார் எந்த எந்த பெயரைச் சொல்லிப் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளையெல்லாம் உண்மையில் தன்னுடையனவாகவே உடையது. அது பழவினையாகிய கட்டினை ஆசானைக் கொண்டு அறுப்பிக்கும். கடைசியாக எல்லாப் பொருட்கும் அதுவே புகலிடமாய் உள்ளது.

குறிப்புரை :

``மதியது வவ்விட்டது`` என்பதை முதலிற் கொள்க. ``மதியது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `வவ்வியது` என்பது, ``வவ்வியிட்டது`` என, `இடு` என்னும் அசைச்சொல்லோடு வந்து, இகரம் தொகுக்கப்பெற்றது. ``வவ்வியிட்டது`` என்னும் வினைப் பெயரே மேல் வந்த பயனிலைகளுக்கெல்லாம் எழுவா யாயிற்று. `மதியை வவ்வியது` என்றதனால் அதுவும் மதியாதல் பெறப் பட்டது. ``விதியது`` என்றது, `விதியை வகுக்கும் ஆற்றலுடையது` என்றவாறு. மேலை அமரர் சுத்த மாயா புவனங்களில் வாழ்வோர். பாய்புனற் கங்கையை உடைமை கூறியது. இங்குச் சொல்லப்பட்ட பெருமைகளையெல்லாம் உடைய அந்தப் பெரும்பொருள் இவ்வுலகத்தில் வெளிப்படும்பொழுது இவ்வுருவுடையதாய்த்தான் வெளிப்படும்` என்பது உணர்த்தற்கு.
``அண்டம் ஆரிரு ளூடுகடந் தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்? அறி வாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``1
என்னும் அப்பர் திருமொழியைக் காண்க. உம்மை, `பதயதேயன்றி` என இறந்தது தழுவிநின்றது. ``யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்`` என்னும் முறைமையால் துதிப்பார் துதிக்கும் துதிகள் யாவும் சிவனுடைய துதிகளேயாதல் அறிக.
``எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர்
என்பதே வேதநூல் துணிபு``
என்பது சிவஞான மாபாடியம்.2

பண் :

பாடல் எண் : 17

மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.

பொழிப்புரை :

மேலே உள்ள வானத்தில் வாழ்பவரும் கீழே உள்ள நிலத்தில் வாழும் பெருந்தவத்தோரும் தவம் இன்மையால் துன்புறுகின்ற உலகரும் ஆகிய அனைவர்க்கும் வெளித்தோன்றாது புதைந்துள்ளது ஒரு பெருநிதி. அது வில்வமாலை மணக்கும் சடையை உடையது. எங்கட்கு ஆவனவற்றையெல்லாம் அது தானாகவே செய்யும். அதுவே எங்கட்கு அரிய உயிர்.

குறிப்புரை :

``மேலது`` என்பது ``வான்`` என்பதனோடே முடிந்தது. முதற்கண் நின்ற ``கீழது`` என்பது கீழ் உள்ளதாகிய நிலத்தைக் குறித்தது. கீழ்தன்கண் உள்ள மாதவர், மானுடர்` என்க. தான், அசை, `வானவர், மாதவர், மானுடர்` என்னும் செவ்வெண்ணிற்குரிய தொகைப் பொருட்டாகிய `யாவரும்` என்பதனோடு, `யாவர்க்கும் என உருபும் விரிக்க. பின் வந்த ``கீழது`` என்பது `மறைந்துள்ளது` என்னும் பொருட்டு. கான் - மணம். இதன்பின் வந்த `அது` என்பது பகுதிப்பொருள் விகுதி. கூவிள மாலை கான கமழ் சடை` என மாற்றியுரைக்க. `சடைத்து என்னும் துவ்விகுதி தொகுக்கப்பட்டது. இவ்வாறன்றி, `சடையொடு` என உருபு விரித்து, அவனை, ``செய்யும்`` என்பதனோடு முடிப்பினும் ஆம். மூன்றாம் அடிக்கு, முன் மந்திரத்தில் இரண்டாம் அடிக்கு உரைத்தது. ``ஆனது தானே`` செய்யும்` என இயைக்க. முதலடி `எதுகை யின்றி, முரண் தொடை நயமே பெற்று வந்தது.
இதனால், சிவன் தன் அடியார்க்கே ``எய்ப்பினில் வைப்பாய்``1 அவர்க்கு ஆவனவற்றைத் தானே செய்து, அவர்கட்கு உயிர்போலச் சிறந்து சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
ஆழும் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.

பொழிப்புரை :

`நஞ்சத்தை உண்டமையால் கருமை நிறம் பெற்ற கண்டத்தை உடையவன்` எனச் சொல்லப்படுகின்ற அந்தச் சிவனையே கருமை நிறம் பொருந்திய கடல் சூழ்ந்து நிற்கின்றது என்றது, `நில உலகச் சிவன் கறைமிடற்றண்ணல்` என்றபடி. இவன், `சீகண்ட பரம சிவன்` எனப்படுவான். `பிரமாண்டம்` எனப் பெயர் பெற்ற இந்த அண்டத்தில் உள்ள, கீழ் ஏழ், மேல் ஏழ் ஆகிய பதினான்கு உலகங்கட்கும் இவனே மகேசுரன்; பிறப்பிறப்பில்லாத பரமசிவன். ஆழ்ந்த சுனைகளையும், காடுகளையும் உடைய கயிலாய மலையில் இவன் எழுந்தருளியிருக்கின்றான். மேலும் இவ்வுலகில் உள்ளார் ஓதும் திருவைந்தெழுத்து மந்திரத்திற்கு முதல்வனும் இவனே.

குறிப்புரை :

சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற ஒரு தலையாய பொருளை நாயனார் `தோத்திரம்` என்னும் இவ்வதிகாரத்தில் இம் மந்திரத்திற் கூறினார். அஃதாவது, `சுத்தம் மிச்சிரம், அசுத்தம்` என்னும் மூவகை உலகங்கள் முறையே `விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர்` என்னும் மூவகை உயிர்கட்கு உரியனவாய் உள்ளன. அவற்றுள் சுத்த உலகத்திற்குச் சிவனே நேராய்த் தலைவனாய் இருக்கின்றான். அவ்விடத்து அவன் `அருவம், அருஉருவம், உருவம்` என்னும் திருமேனிகளைக் கொண்டிருக்கின்றான். அருவத்திருமேனியில் `சிவன்` என்றும், அருஉருவத் திருமேனியில் `சதாசிவன்` என்றும், உருவத்திருமேனியில் `மகேசுரன்` என்றும் பெயர் பெறுகின்றான். இம்மூவகைப் பேதங்களும், `சம்பு பட்சம்` எனப்படும். மிச்சிர உலகத்திற்கு, விஞ்ஞானகலருள் பக்குவன் பெற்றுச் சுத்த வித்தையில் சிவனது அருளைப் பெற்று வைகும் அட்ட வித்தியேசுரர்களில் முதல்வ ராகிய அனந்த தேவரே தலைவராய் உள்ளார். அசுத்த உலகத்திற்குப் பிரளயாகலருட் பக்குவம் பெற்றுக் குண தத்துவத்தில் சிவனது அருளைப் பெற்று வைகும் சீகண்ட உருத்திரரே தலைவராய் உள்ளார் என்பது, இவ்விருவரும் உருவம் ஒன்றையே உடையர். `அணு பட்சத்தினர்` எனப்படுவர். சிவனது அருளால் மலம் நீங்கப் பெற்று ஞானத்தை அடைந்திருத்தலால், இவர்கள் அவனது முற்றுணர்வு முதலிய எண்குணங்களைப் பெற்று நிற்கின்றனர்.
இதனால், சிவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி அனைத்தையும் செய்பவனாகின்ற மாட்சிமை புகழ்ந்து கூறப்பட்டது.
சீகண்டர் குண தத்துவத்தில் இருப்பவராயினும் அவரது வியாபகம் ஆன்ம தத்துவம் முழுவதிலும் இருத்தலால், கீழ்த் தத்துவமாகிய பிருதிவி உலகத்தில் இங்குள்ள உயிர்களின் பொருட்டுக் கயிலாய மலையில் எழுந்தருளியிருக்கின்றார். இஃது பற்றி இவருக்குரிய குண தத்துவம் `மகா கயிலாசம்` எனப்படுகின்றது. `பிருதிவி தத்துவ உலகத்திற்கு இவரே சிவனாய் உள்ளார்` என்பதையே நாயனார் இம்மந்திரத்து இரண்டாம் அடியால் வலியுறுத்தினார். இவர் அணுபட்சத்தினராயினும் இவர் செய்வன வற்றை எல்லாம் தற்போதத்தின்வழிச் செய்யாது, சிவபோதத்தின் வழியே செய்தலால் அச்செயல்கள் அனைத்தும் சிவன் செயலே ஆகின்றன. இதனைச் சிவஞான சித்தியார், வேதத்துள் சிவனைப் பற்றிச் சொல்லப்பட்ட, `விசுவாதிகள், விசுவ காரணன், விசுவத்திற்கு அந்தரியாமி, விசுவரூபி` என்னும் பெயர்கள் ஆதலை நிறுவும் சான்று களாக இந்நில உலகத்தில் சீகண்ட உருத்திரர் பால் நிகழ்ந்த செயல் களையே எடுத்துக் காட்டிற்று. [சுபக்கம் - சூ - 1]. அது பற்றிச் சிவஞான யோகிகள் இவ்விடத்தில்,
``சீகண்ட ருத்திரர்க்குரிய வடிவங்களும்,
பெயர்களும், தொழில்களும் முதல்வனுக்கும்
ஒப்ப உள - என்பது வாயுசங்கிதையுட்
கூறப்படுதலின், ஈண்டுக் கூறியன
எல்லாம் முதல்வனுக்கு உரியனவேயாம்
எனக் கொள்க``
எனவும்,
``அற்றாகலின்றே ஈண்டுக் கூறிய
வடிவங்க ளெல்லாம் மாகேசுரமூர்த்தம்
இருபத்தைந்தனுள் வைத்தெண்ணப்பட்டன
என்பது``
எனவும் உரைத்தார். எனினும் சிவன் சருவ வியாபியாதலானும் அவன் எதனுள் நிற்பினும் அதன் தன்மை தனக்கு எய்தான் ஆகலானும் `அவன் இவ்வுலகத் தொடர்புடையன் அல்லன்` என்றோ, `ஈண்டுள்ளார்க்கு` அவன் காட்சி வழங்குதல் இல்லை` என்றோ கொள்ளுதல் கூடாதாம்.
உலகப் பயன் வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்பவர்கட்கெல்லாம் சீகண்ட உருத்திரரே தோன்றிப் பயன் கொடுத்தலைக் கந்தபுராணம் முதலிய பல புராணங்களாலும், இதி காசங்களாலும் உணரலாம். ஞானத்தைச் சிவன் சீகண்டர் வழியாகவும் அருளலாம்; தான் நேர் நின்றும் அருளலாம். இதனை, `சகல வருக்கத்தினர்க் கெல்லாம் ஞானத்தைச் சிவன் குரு மூர்த்திகளை ஆவேசித்து நின்று அருளுவான்` என்பதே பெரும்பான்மை பற்றிய விதியாய் இருப்பினும், வாதவூரடிகட்குச் சிவன், தானே குருவாகி வந்து ஞானத்தை வழங்கினமை கொண்டு அறிக. சீவன் தானை குருவாகி வந்து அருள்செய்த அந்த அருமையைத்தான் வாதவூரடிகள் பல விடத்திலும் பெரிதும் போற்றிப் புகழ்கின்றார்.
``அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்``1
``கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி!2
``பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க;
கண்ணால் யானும கண்டேன் காண்க``3
``புவனியிற் சேவடி தீண்டினன் காண்க;
சிவன்என யானும் தேறினன் காண்க;
அவன்எனை ஆட்கொண்டருளினன் காண்க``4
என்னும் திருவாக்குக்களைக் காண்க.
`அங்ஙனமாயின், வாதவூரடிகட்கு அருள்புரிந்த குரு சிவனே` என்பது தெளியப்படுதல் எவ்வாறு` எனின்` அடிகட்கு அருள்புரிந்த குரு நெடுநாள் இங்கில்லாமல் உடன் வந்த அடியவர்களோடும் விரைந்து திருவுருத் தோன்றாமல் மறைந்தமையால் தெற்றென விளங்கும் பலரை மாணாக்கராகக் கொண்டு ஞானத்தை அருளிய குருமூர்த்திகள் பலர் எங்கே, எப்பொழுது, எந்தப் பெற்றோருக்குப் புதல்வராய்த் தோன்றினர்? எப்படி வளர்ந்தார்? எப்படி ஞானம் பெற்றார்? என்பன பற்றிய வரலாறுகள் உள. அத்தகைய வரலாறு மாணிக்கவாசகருக்கு அருள்புரிந்த குருவுக்கு இல்லை. மற்றவர்களெல்லம் மாணாக்கர்க்கு ஞானத்தை உபதேசிப்பது மட்டுமன்று; பல காலம் உடன் இருந்து சிந்திப்பித்து தெளிவித்து, நிட்டை கூடுவித்து, பின்னும் அதிலே நிற்குமாறு நிறுத்தி இவ்வாறெல்லாம் அருள்புரிந்து, உடன் இருப்பர். உடம்பினால் அவரெல்லாம் நம்மனோருட் சிலரே. ஞானத்தினாலும் சிவனது திருவருளாலுமே அவர்கள் சிவமாகின்றனர். மாணிக்க -வாசகருக்கு அருள்புரிந்த குரு அவ்வாறெல்லாம் இல்லாது விரைய மறைந்தமையால் அவர் சிவனே யன்றி வேறல்லராதல் தெளிவு.
``... ... உன்தா ளிணை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார்;
புறமே போந்தேன் யான்``
``சிவமா நகர் குறுகப் - போனார் அடியார்;
யானும் பொய்யும் புறமே போந்தோமே``1
``உடையானே! நின்றனை உள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார், உடையாய் நின்பாதம்
சேரக்கண்டு இங்கு ஊர்நாயிற்
கடையானேன், நெஞ்சு உருகாதேன்
கல்லாம் மனத்தேன், கசியாதேன்,
முடையார் புழுக்கூடு இத காத்து,
இங்கு இருப்பதாக முடித்தாயே``2
என்றாற்போல் அடிகள் அருளிச்செய்த குறிப்புக்கள் பலவும் அவரை ஆட்கொண்ட குருமூர்த்தி அவருடன் பலநாள் இல்லாது விரைய மறைந்தமையைத் தெரிவிக்கின்றன. ஆகவே அவரை சிவனே` எனக்கொள்ளுதற்கு ஐயுறவு யாது மில்லையாம்.
மூவர் முதலிகளுள் சுந்தரரையே சேக்கிழார் கயிலாயம் சென்றதாகக் கூறினார்.
``மன்னும் வன்றொண்டர் ஆலால சுந்தரராகித்
தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்``1
என்னும் அடிகளால் `அவர்` முன்பு விட்டு வந்த பதவியிலே மீண்டும் சென்று அமர்ந்தார் என்றார். அப்பரும், சம்பந்தரும் சாயுச்சிய பரமுத்தியையே அடைந்ததாகவே கூறினார். இத்தகைய ஞானச் செய்திகள் எல்லாம்,
``ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதிமாண்பும்
கேட்பான் புகின் அளவில்லை; கிளக்கவேண்டா;
... ... எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றினை கேட்க, தக்கார்``2
என அருளிச் செய்ததில் சேர்வனவாம்.
சீகண்ட உருத்திரரை நஞ்சுண்ட கண்டராகக் கூறுதல், `அசுத்த உலகத்தில் தங்கு தருவனவாய் உள்ளவற்றையும் நன்மை தருவன வாக்கும் ஆற்றலுடையார்` என்பதைக் குறிப்பால் உணர்த்தற் பொருட்டேயாம். உருத்திரருள், `சீகண்ட உருத்திரர்` என இவர் விசேடித்துச் சொல்லப்படுதற்கும் இதுவே காரணம். இங்ஙனமாகவும் மகேசுரருக்கும் கறைக் கண்டம், அல்லது நீல கண்டம் சொல்லப் படுதல். இவருடைய செயல்கள் எல்லாம் அவருடைய செயல்களே` என ஒற்றுமை யுணர்த்தற் பொருட்டாம்.
`நஞ்சுண்ட கண்டனைக் கருங்கடல் சூழும் என மாற்றியுரைக்க. இது, `மண்ணுலகம் இவரையே முதல்வராகக் கொண்டுள்ளது` என்னும் குறிப்பினதாம். `சுனையையும், அடவியையும் உடைய அங்கு` என்க.
இதனால், இவ்வுலகத்தார் சொல்லும் தோத்திரங்களின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உலகம தொத்துமண் ஒத்(து) உயர் காற்றை
அலகதிர் அங்கிஒத்(து) ஆதிப் பிரானும்
நில(வு) இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல்
செலவொத்(து) அமர்திகைத் தேவர் பிரானே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்கட்கும் முதலாயுள்ள சிவன் நிலம், நீர், தீ, காற்று, வானம், ஞாயிறு, திங்கள் என்னும் பொருள்களாக அவற்றுடன் ஒன்றாய்க் கலந்திருத்தலால், எல்லா உயிர்களும் அவனேயாய், அவை செல்லும் நெறிகளிலும் அவற்றோடு உடனாய் உதவி புரிந்து எண்திசைக் காவலர்கட்கும் தலைவனாய், உலக முதல்வன் ஆயினான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி நிலம் முதலியன முறையின்றி, ஏற்ற பெற்றியில் வைக்கப்பட்டன. கதிர் முதலிய பிறவற்றிலும் இரண்டன் உருபு விரிக்க. நிலவு - சந்திரன். முகில், இங்கு ஆகுபெயராய், வானத்தை உணர்த்திற்று. ``உலகம்`` என்றது உயிர்த் தொகுதியை. அது, பகுதிப்பொருள் விகுதி. ஒத்தல், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நிற்றல். `அமர் தேவர்` என இயையும். `ஆதிப் பிரான் ஒத்து, ஒத்துப் பிரான் ஆயினான்` என வினை முடிக்க. `உலகு` நிலம் முதலிய எட்டுக் கூறுகளாய் அடங்குதலாலும், அவ் எட்டுக் கூறுகளிலும் நிறைந்து அவற்றை இயக்குதலாலும் சிவன் உலக முதல்வனாயினான்` என அவனது பெருமையை விளக்கியவாறு. ``ஆதிப்பிரானும்`` என்னும் உம்மை. அசைநிலை. இறுதியில் `ஆயினான்` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. எண் திசைக் காவலர்களுக்குப் பிரான் ஆயினமை கூறும் முகத்தால் உலக முதல்வன் ஆயினமை குறித்தவாறு.
இதனால், சீவன் அட்ட மூர்த்தியாம் சிறப்பினால் உலக முதல்வன் ஆயினமை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
பரிசறித் தங்குளன் மாருதத் தீசன்
பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.

பொழிப்புரை :

தீக்குத் தலைவனாகிய தீக் கடவுள், கதிர்க்குத் தலைவனாகிய கதிர்க் கடவுள். மதிக்குத் தலைவனாகிய மதிக்கடவுள், மற்றும் காற்றிற்குத் தலைவனாகிய காற்றுக் கடவுள் ஆகியோரும், நிலத்திற்குத் தலைவியாகிய நிலமகள், `எல்லாப் பொருள்களையும் தாங்கும் திண்மையை எனக்கு அருளியவன் சிவன்` என்னும் உண்மை யுணர்வோடே எல்லாவற்றையும் தாங்குதல் போலவே`` தாம் தாம் தீ முதலாக மேற்கூறியவற்றிற்குத் தலைவராய் இருந்து, அவற்றின் செயல்களைச் செய்வித்து வருகின்றனர்.

குறிப்புரை :

`எல்லாக் கடவுளரும் சிவனது முதன்மையை உணரும் உண்மை ஞானத்தாலே தம் தம் அதிகாரத்தை நடத்தி வருகின்றனர்` என்பதை உடம்பொடு புணர்த்தலாக நிலமகள் மேல் வைத்து, வேறு எடுத்துக் கூறினார். அட்ட மூர்த்தத்தில் இயமானன் தவிர ஏனை ஏழும் சடப்பொருள்கள். அவற்றுள், `நிலம், நீர், வானம்` என்னும் மூன்றிற்கும், `நிலமகள், நீர் மகள், வான் மகள்` எனப் பெண்மையர் முதல்வராகவும், `முச்சுடர், காற்று` என்னும் ஏனை நான்கிற்கும் ஆண்மையர் முதல்வராகவும் கூறப்படுதலின் அவருள் பெண்மையர்களில் நிலமகளை எடுத்துக் கூறி, ஏனை இருவரையும் உபலக்கணத்தால் தழுவினார்.
முச்சுடர்களை முதலிற் கூறுதல் கருத்தாகலின் பரிசறிந் தங்குளன் மாமதி என்பதை, ``அருக்கன் உளன்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. முதற்கண் உள்ள, ``பரிசறிந்தங்குளன்`` என்பதை ``அருக்கன்`` என்பதற்கு முன்னும் கூட்டுக. ``அருக்கன் ஈசன்`` என்பவற்றோடு இயைய, `அங்கி, மதி` என்றவற்றையும் `அங்கியன், மதியன்` என ஆடுவறி சொற்களாக்குக. அல் நிலம் - இவர்கள் அல்லாத நிலம். ``நிலம்`` என்றது நிலமகளையே. `பரித்தல்` என்பது முதல் நீண்டு வந்தது. பரித்தல் - தாங்குதல். `அல் நிலம், ஞானப் பரிசு அறிந்து பரிக்குமாறே, ஏனை அங்கியன் முதலியோரும் அங்கங்கு உளர் என்பது இம்மந்திரத்தின் சொற்சுருக்கம். அங்கு என்றது, `அவற்றை இயக்கி நிற்கின்றனர், என்றபடி. சிவனே எல்லாப் பொருள் கட்கும் அதுவதற்குரிய ஆற்றலைத் தந்தருளினானஅ` என்பதை,
``அருக்கனில் சோதி அமைத்தோன், திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன், பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன், மேதகு
காலின் ஊக்கம் கண்டோன், நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் - என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத்து அவ்வயின் அடைத்தோன்`` -திருவண்டப் பகுதி, 20-28.
என்னும் திருவாசகத்தால் உணர்க. இதன்கண் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது.
இதனால், `தேவர் யாவரும் சிவனது ஆணையால் சிற்சில அதி காரங்களைப் பெற்று அவற்றை அவனை நினைந்தே நடத்தி வருகின்றர்` என்ற அவனது முழுமுதற்றன்மை புகழ்ந்து கூறப்பட்டது. இதனானே, சிவனுக்கு, `தேவ தேவன்` எனவும், `மகா தேவன்` எனவும் சொல்லப் படும் பெயர்கள் பொருள் பொதிந்த பெயர்களாதல் விளங்கும். `பிறரெல்லாம் சிவனது ஆணையை நினைந்தே தம் அதிகாரத்தைச் செலுத்துபவர் - என்பது, சிவனை மறந்து தம் மனம் சென்றவாறே அதிகாரத்தைச் செலுத்த முற்படும்பொழுது இவர்க்கு ஒறுப்புண்டாயினமையால் அறியப்படும்` என்பதைச் சிவஞான யோகிகள்.
``அரன் நினைந்தவாறன்றி ஆகாமை,
தக்கன் வேள்வி, மார்க்கண்டி வாழ்நாள்,
ஆலாலத் தோற்றரவு முதலியவற்றால்
இனிது விளங்கக் கிடத்தலின்``
என விளக்கினார்.1 கூற்றுவனுக்குச் சிவன் இட்ட ஆணை `நம் அடியவர்க்கு வாழ்நாள் முடிந்தால், நாம் அவர்களை அழைத்துக் கொள்வோம் நீ அவர்களிடம் செல்ல வேண்டா` என்பது. அதனை மறந்து அவன் மார்க்கண்டேயரிடத்துச் சென்றமையால் ஒறுக்கப் பட்டான். அவ்வினையை இனிமேலாயினும் மறவாது செய லாற்றுங்கள் என அறிவுறுத்தும் முறையில்தான் அப்பர் கால பாசத் திருக்குறுந்தொகையை அருளிச்செய்தார்.2
தேவர்கள் சிவபெருமானை வேண்டி இசைவு பெறாதே தாமும் அவனைப் போல என்றும் இறவாதிருக்க அமுதம் பெற வேண்டிப் பாற் கடலைக் கடைந்தனர். அதனால் அவர்கள் பெற்ற பயன் என்றும் இறவா நிலையை வேண்டியவற்கு மாறாக, அன்றே இறக்கும்படி வந்த ஆலகால விடந்தான். பின்பு அவர்கள் சிவபெருமானை அடைந்தே நலம் பெற்றனர். இவைகளையே சிவஞானயோகிகள் குறித்தார். இவற்றால் எல்லாம் நாம் அறிய வேண்டிய முடிநிலைப் பொருள், `சிவபெருமானது சங்கற்பமே சங்கற்பமாக நின்று முற்றுப்பெறும் அன்றி ஏனையோர் சங்கற்பங்களெல்லாம் முற்றாப்பெரா என்பதே. இதனால் சிவனது சங்கற்பம் வேதங்களில் `சத்திய சங்கற்பம்` எனப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 21

அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

பொழிப்புரை :

தான் படைத்த உலகத்திற்குத் தானே முன்னைப் பழம் பொருளும், பின்னைப் புதுப் பொருளுமாய்,1 நிற்கும் சிவன், தான் தன் மேல்நிலையினின்றும் இறங்கி வந்து உலகத்தைப் படைக்கின்ற முறை அதுவாகும் (அஃதாவது, `உலகத்திற்கு அது தோன்றும் இடமும், பின் ஒடுங்கும் இடமும் தானேயன்றிப் பிறரில்லாத தனியொரு முதல்வன்` என்பதாம்.) அவன் உலகத்திற்கு வித்தாகிய மாயையின் வியாபகத்தைக் கடந்து அப்பால் உள்ளவ -னாயினும் அசுத்த உலகமாகிய இந்தப் பிரகிருதி புவனத்தில் உள்ளவர்கட்கும் அவனே முதல்வன்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `பரம், உபரம்` என்பன, `முன், பின்` என்னும் பொருளைத் தந்தன. `கடலினின்றும் தோன்றும் அலை, நுரை, திவலை முதலியவற்றிற்குக் கடலே முன்னைப் பொருளும், பின்னைப் பொருளுமாய் இருத்தல் போல இறைவன் உலகிற்கு முன்னைப் பொருளுமாய் இருத்தல் போல இறைவன் உலகிற்கு முன்னைப் பொருளும் தானேயாய் இருக்கின்றான்` என்பதை,
``நுரையும் திரையும், நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகடற்
பெருத்தும், சிறுத்தும் பிறங்கு தோன்றி
எண்ணில வாகி யிருங்கட லடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி, நின்னிடை அடங்கும்; நீ
ஒன்றினும் தோன்றாய்; ஒன்றினும் அடங்காய்``2
என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கால் உணர்க. உபநிடதமும், ``எல்லாம் பிரமத்தினின்றும் தோன்றி அதிலே அடங்குகின்றன. இடையிலும் அதிலேதான் நிலைத்திருக்கின்றன``1 எனக் கூறிற்று.
சிவன் தான் படைத்த உலகத்திற்கு வெளியிலே வியாபித்த லன்றியும் எல்லாப் பொருள்களினுள்ளும் எள்ளினுள் எண்ணெய் போல நிறைந்தும் நிற்றலால், ``பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்`` என்றார். பெந்தம் - பெத்தம். என்றது இங்கு, முக்குண வடிவாய் அறிவை மாறி மாறி மயக்குகின்ற மூலப் பிரகிருதியை. `இதன் காரிய புவனங்களில் வாழ்பவர் மூவகை ஆன்மாக்களுள் கீழ்ப் பட்ட சகலர்` என்பதை ``கீழோர்`` என்பதனால் குறித்தார். `கீழோர்க்கும்` எனத் தொகுக்கப்பட்ட உருபையும், உம்மையையும் விரிக்க. `அதிகார மூர்த்திகள் பலரும் சிவனது ஏவல் வழி நிற்பவரே யன்றிச் சுதந்திரர் அல்லர்` என்பது முன் மந்திரத்தில் இனிது விளக்கப்பட்டமையால் ஈண்டுள்ளார்க்கும் சிவனே முதல்வன் ஆதற்கு இழுக்கின்மை அறிக.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய பொருள் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தன்பா தாள அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.

பொழிப்புரை :

மூன்றும், இரண்டும் ஆக ஐந்தாய உலகங்களே அனைத்துலகங்கட்கும் முடியாய், `சிவனுக்கு உரியன` என்று சொல்லப்பட்டாலும், எல்லா உலகங்களுமே அவனுக்கு உருவமாகும். அப்படிப் பார்க்கின்றபொழுது, பிருதிவி அண்டத்தில் அதன் கீழ்ப் பகுதியாகச் சொல்லப்படுகின்ற பாதாள உலகங்களே அவனுக்குத் திருவடியாம். (சிவ தத்துவ உலகமே முடியாதல் முதலடியிற் கூறியதனானே பெறப்பட்டது.) அறியாமையுடையவர்கள் இந்த உண்மையை அறிந்து மகிழ்வெய்தும் நிலையில்லாதவராவர்.

குறிப்புரை :

இதுவும் முன் மந்திரத்தில், ``பெந்த உலகினிற் கீழோர் பெரும்பொருள்`` என்றதனை விளக்கியவாறு. ``முத்தண்ட ஈர் அண்டம்`` என்றதனை `மு இரு தண்ட அண்டம்` என மாற்றிக்கொள்க. `மூ இ` என்பது, ``மூன்றும் இரண்டும்` என உம்மைத் தொகை. ``ஐந்து`` என்பது, தத்துவங்களைக் குறித்த தொகைக் குறிப்பு. முடியாவது, பிறவற்றிற்கெல்லாம் மேல் நிற்பது. `உரு, பெயர், தொழில் ஒன்றும் இல்லாத சிவன் அவைகளை உடையனாய பொழுதும், சுத்த தத்துவத்திலன்றி, ஏனைத் தத்துவங்களில் இருத்தல் இல்லை` என்னும் தத்துவக் கோட்பாடு பற்றி, `அவன் அத்தத்துவங்கட்குக் கீழ்ப்பட்ட தத்துவ உலகங்கட்கு முதல்வனாதல் எவ்வாறு` என மலைவெய்து வார்க்கு அம்மலையை நீக்குதற்கு இவ்வாறு கூறினார் என்க. `திரு மேனி கொண்டு விளங்குதல் சுத்த தத்துவத்திலாயினும், எள்ளினுள் எண்ணெய்போல எல்லாப் பொருளிலும் அவன் நிறைந்திருக் கின்றான் ஆதலின், அவன் அனைத்துலகங்கட்கும் முதல்வனாதல் கூடுவதாம்` என விடுத்தவாறு. இந்நிறைவு நிலை பற்றியே அவனை, `விசுவ ரூபி` என்றும், `அட்ட மூர்த்தமாய் நிற்பவன்` என்றும் உண்மை நூல்கள் கூறுகின்றன என்க. இதனானே எவ்வுலகத்தார் செய்யும் வழி பாட்டினையும் அவன் ஏற்றுப் பயனளித்தல் கூடுவதாதலையும் அறிக.
தண்டம் - கோல். இஃது ஒரு நீட்டலளவை. சுத்த தத்துவங்கள் ஐந்தின் அண்டங்களையும் தனித் தனி ஒரு கோல் அளவினதாகக் கூறியது, பொதுப்பட அவையும் அளவுட்பட்டனவே தொகுத்த லாயிற்று. `உலகேழும் அத்தன் உருவம் எனப்படும்` எனவும், `அத்தன் சேவடி பாதள அளவுள்ள` எனவும், உணர்ந்து மகிழார் எனவும் மாற்றிக் கொள்க. பாதாள அளவு - பாதாளமாகிய அவ்வளவினதாகிய இடம் `சேவடியாய் உள்ளது என்க. இத்துவ்விகுதி தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களும் ஒடுங்கிய பின்னும் தான் ஒடுங்காது, ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுதற்கு முதல்வனாய் உள்ளவன் எவனோ அவனே நமக்குப் பெருமான். அவன், விரிந்த இடத்தையுடைய இந்த உலகத்திற்கு விளக்காய் உள்ள `கதிர், மதி, தீ` என்னும் மூன்றிற்கும் ஒளியைத் தரும் பேரொளிப் பெருமான்; முன் மந்திரத்திற் கூறியவாறு விசுவ ரூபியாய் நிற்றலேயன்றி, விசுவாதி கனாய், அனைத்துலகங்களையும் கடந்து அவற்றிற்குமேலும், கீழும் இருக்கின்றான். இனி மேற்கூறியவாறு அவற்றினுள்ளும் விசுவ ரூபியாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அவனது பெருமையை அறிய வல்லார் யார்` என்பது குறிப்பெச்சம். ``ஆதிப் பிரான்`` என்பது மீள மீள வந்தது சொற் பொருட் பின்வருநிலையணி. ``ஆதிப் பிரான்`` என்று இதனையே மெய்கண்ட தேவர் ``ஆதிப் பிரான்`` புலவர்``1 என்றார். `அகலிடச் சுடர் மூன்றின் ஒளியாய் நிற்கும் சோதிப் பிரான்` என இயைக்க. ``அப்புறம்`` என்பதிலும் `அப்புறத்தவன்` என்னும் விகுதி தொகுத்த லாயிற்று. சிவன் அண்டத்து அப்புறத்தவனும், கீழவனும் ஆதலை,
``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``
``கீதம் இனிய குயிலே, கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்;
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை``2
என்னும் திருவாசகத்தால் அறிக.
இதனால், சிவபிரானது நித்தியத் தன்மையும், அளவில் ஆற்றலும் புகழ்ந்து கூறப்பட்டன. `எல்லாம் ஒடுங்கும் பொழுது ஒருவன் மட்டும் எங்ஙனம் ஒடுங்காது நிற்பான்` என்பனபோலும் ஐயங்கள், `திருவருள் கிடைக்கப் பெற்றார்க்கன்றி நீங்கா` என்பதை அப்பர்,
``கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோ டொக்கு மோகடல்? என்றல்போல்,
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்,
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே``3
என அருளிச் செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 24

அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.

பொழிப்புரை :

அண்டங்கள் அனைத்தையும் கடந்து எல்லையற்று விளங்கும் அகண்டப் பொருளாய் இருப்பினும் பிறவாய் பிறவியாகிய திருமேனிகள் பலவற்றைக் கொண்டு கண்டப் பொருளாயும் விளங்குகின்ற சிவனது, தீயோர் அணுகாத திருவடிகளைக் காணுந் தோறும் அவன் அடியார்கள் சுத்தாவத்தையில் அழுந்துகின்றார்கள்.

குறிப்புரை :

`ஆகவே, யாவரும் அவனது திருவடிகளைக் காணுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `பெருமை, சிறுமை` என்பன `அகண்டம், கண்டம்` என்னும் பொருளவாய் நின்றன. ``பெருமையன்`` என்பதன் பின் `ஆயினும்` என்பது வருவிக்க. பிண்டம் - தசை. நிணம் முதலிய தாதுக்களின் திரட்சி. எனவே, அது, தாய் தந்தையரது உடற் கூற்றால் தோன்றி வளர்ந்து, பின்னும் உணவால் பெருக்கின்ற புலால் உடம்பைக் குறிக்கும். `அவ்வா றில்லாத பிறவி` என்றது அருட்டிரு மேனியை. சிவனை, ``பிறவா யாக்கைப் பெரியோன்``1 எனப் பிறருங் கூறினார். அஃதாவது, `சிவனுக்கு யாக்கை உண்டு; ஆயினும் அது மேற்கூறியவாறு தாய் தந்தையரால் பிறந்து, அவரால் வளர்க்கப்பட்டது அன்று` என்றதால் ``சிறுமை`` `பிறப்பிப்பதுதான் கடவுட்குப் பெருமை`` எனக் கூறுவாரை நோக்கி, `அத்தகைய பெருமையில்லாத சிறுமையன் எங்கள் சிவன்` என நகை தோன்றக் கூறிய, பழிப்பது போலப் புகழ் புலப் படுத்திய வஞ்சப் புகழ்ச்சியாக உரைப்பாரும் உளர். `சிறுமை யானது` என ஆறாவது விரிக்க. கண்டர் - கண்டகர்; தீயோர். `இவர்கள் கடந்த கழல்` என்றது `அணுகாது விலகிச் சென்ற கழல்` என்றதாம். கனை கழல் அடையடுத்த ஆகுபெயர். `தொண்டர் நடந்த கனைகழல், என்பது பாட மன்று. ``நெறி`` என்றது அவத்தையை. சுத்தாவத்தையின் இயல்பு முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.
இதனால், சிவன் அகண்டப் பொருளாயினும் உயிர்களின் பொருட்டுக் கண்டப் பொருளாய்த் தோன்றியருளும் அருட்சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது. `இதுபற்றி அவன் பிறத்தல் இல்லை` என்னும் உண்மையும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த
நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே
புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.

பொழிப்புரை :

சீவன் ஓவாது வீசுகின்ற அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுதும் நிறைந்து நிற்கின்றான். நின்று, இதன்கண் உளவாகின்ற அனைத்துப் பயன்களையும் தோற்று -விக்கின்றான். இவையல்லாமலும் உயிர்களின் பட்பொறி சென்று பற்றும்படி பொன்னார் மேனியாய் முன் வந்து காட்சியும் தருகின்றான்.

குறிப்புரை :

`வேறு என்ன வேண்டும்` என்பது குறிப்பெச்சம். உலவு, உலவுதல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஓங்கு` என்னும் முதனிலை `அம்` என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று, வலித்தல் பெற்று, `ஓக்கம்` என வரும். தேங்கு, தேக்கம்; அடங்கு, அடக்கம்; விளங்கு, விளக்கம் முதலியவற்றைக் காண்க. இஃது இங்கு ஆகு பெயராய், ஓங்கியெழுகின்ற அலைகளைக் குறித்தது. இவ்வாறன்றி, `நோக்கம்` என்னும் பாடத்திற்கு இங்கு இயைபு யாதும் இன்மை அறிக. பலம் - பயன். `முழுதெல்லாம்` என்பது ஒரு பொருட் பன்மொழி. ``முன்னே`` என்பதை, ``நின்றான்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. ``புலம்`` என்பது பொறியின் மேலதாய், இங்குக் கண்ணைக் குறித்தது. கண் உழுதலாவது, பற்றிக் காணுதல். ``பொன்னிறம்`` என்பது பண்பாகு பெயராய், அதனையுடைய திருமேனியைக் குறித்தது. `சிவன் திருமேனி கொள்ளுங் காலத்தில், பொன்மயமான திருமேனியையே கொள்ள விரும்புகின்றான்` என்பதாம்.
இதனால், சிவனது மற்றும் பல அருட் சிறப்பே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், மேலான பொருள்கட்கெல்லாம் மேலான பெரும்பொருளாய் நிற்பினும் ஊழிகள் தோறும் அவற்றின் தொடக்க மாயும், முடிவாயும் நிற்கின்ற அளவினனும் ஆய், நாம் கண்டும், கேட்டும் உணர்கின்ற அனைத்துலகங்களையும் நிலம் போலத்தாங்கி நிற்கும் தன்மையுடையனாதலை உலகர் உணர்தல் இல்லை. ஆயினும், அவன் அதனால் கீழ்மை ஒன்றும் இலனாய், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து அவற்றை இயக்கியே நிற்கின்றான்.

குறிப்புரை :

`சிவன்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது. ``பராபரன்`` இரண்டில் முன்னது, `பராற்பரன்` என்பதன் மரூஉ. பின்னது, `பரனாயும் அபரனாயும் நிற்பவன்` என்றதாம். பரம் - மேல், அபரம் - கீழ். `பராபரன்` என்பதை, ``மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க``1 என்னும் திருவாசகத்திலும் காண்க. இந்த, `பரம், அபரம்` என்பன இங்கும், ``அந்தம் கடந்தும்`` 2 என்னும் மந்திரத்திற் போலவே, `முன், எனப் பொருள் தந்தன. `தராபரன்` என்னும் வட சொல் தொகை மொழி உவமத் தொகை. பரன் - தன்மையுடையவன். ``உணரார்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. `அபரன்` என்பது முதல் நீண்டு, `நிர்` என்பதனோடு புணர்ந்து` ``நிராபரன்`` என வந்து, `கீழ்மை யில்லாதவன்` எனப் பொருள் தந்தது.
``தரையை யுணராது தாமே திரிவார்;
புரையை உணரா புவி``3
என்றாற்போல், நிலம் யார் தன்னைப் போற்றினும், போற்றா தொழியினும் தாங்குதலாகிய தன் கடமையை அஃது ஆற்றி வருகின்றது. அதுபோலத்தான் சிவன் தன் செயலைச் செய்து நிற்கின்றான் - என்பதையே ``தராபரனாய் நின்ற தன்மை என்றார். இதனையே அப்பர் பெருமான், ``தன்கடன் அடியேனையும் தாங்குதல்`` அஃது யார் போற்றிடினும் நிகழ்ந்து கொண்டே யிருக்கின்றது. ஆயினும், ``என்கடன் பணி செய்து கிடப்பதே``4 என்பதை நான் உணர்ந்தேனா என்னும் ஐயம் எழுகின்றது என்று அருளிச் செய்தார். சிவன் இவ்வகலிடத்தைத் தாங்குதலை நாயனார் சில இடங்களில் நினைவு கூர்கின்றார். அப்பரும் சிவனை, ``பொய்யாத பொழில் ஏழும் தாங்கி நின்ற - கற்றூண்காண்``5 எனக் குறித்தருளினார் உலகனைத்தையும் தாங்கும் சிவனது சத்தி, `ஆதார சத்தி` எனச் சிவாகமங்களில் சொல்லப்படுகின்றது. ``நின்றான்`` என்பது, நின்று செய்தலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.
இதனாலும், சிவனது சில திருவருட் சிறப்புக்களே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 27

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம்
காற்றது ஈசன் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

பொருள்களும், சொற்களும், சொற்கள் ஒடுங்குகின்ற இடமும் தனக்கு வேறாயினும் அவை தனக்கு உடலாய் நிற்க, அவற்றிற்கு உயிராய் நிற்பது எதுவோ, அது பெருந்தெய்வம். (முதற் கடவுள்.) அத்தகைய பெருந்தெய்வம் சிவனன்றிப் பிறிதில்லை. அஃது எங்ஙனம் எனின், சிவனே எல்லா உயிர்களிடத்தும் அவற்றின் உயிராகிக் கலந்து நின்று அவற்றைப் புரந்து வருகின்றான்.

குறிப்புரை :

ஊற்றம் - பிறிதொன்றைத் தாங்கும் திட்பம். அஃது அதனையுடைய பொருளைக் குறித்தது. சொல் ஒடுங்குமிடம் நாதம். எனவே, `சொல்லும், பொருளுமாகிய இருவகை உலகங்களும் தனக்கு உடலாகத் தான் அவற்றுக்கு உயிராக் அவற்றைப் புரந்து வருவதே பெருந்தெய்வம்` எனப் பெருந்தெய்வத்தின் இலக்கணம் கூறப்பட்டதாம். `உடல் நிலை பெறுவது உயிரால்` என்பது வெளிப்படையாதலின், `இருவகை உலகங்கட்கும் உயிராவது பெருந் தெய்வம் எனவே, `உயிர்போல அவற்றை நிலைப்பிப்பது பெருந்தெய்வம்` என்றதாயிற்று. `அந்த இலக்கணத்திற்கு இலக்கியம் சிவபெருமானே` என்பதை நிறுவுதற்கு, ``காற்றது ஈசன் கலந்து நின்றானே`` என்றார். சிவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றலை, நான்காம் தந்திரத் தொடக்கத்தில் அசபா மந்திரத்தால் நாயனார் விளக்கினார். அப்பரும், ``என்னுளே உயிப்பாய்ப் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே``6 என்று அருளிச் செய்தார். ``காற்றது`` என்பதில் `அது` பகுதிப் பொருள் விகுதி. ``காற்றதன்கண்`` ஏழனுருபு விரிக்க. `மர வகைகளும் உயிர்க்கின்றன` என இக்கால அறிவியலார் கூறுவர். முதல் அடியை இரண்டாம் அடியின் பின்னர்க் கூட்டி, அதன்பின் `என்னையெனின்` என்பதும், இறுதியில் `ஆகலின்` என்பதும் வருவித்து முடிக்க. இடையிலும் `உடலாக, உயிர்` என வேண்டும் சொற்கள் வருவிக்க. இதனுள், ``ஈசன்`` என்றது `சிவன்` என்றதேயாதல் வெளிப்படை. ``சிவனோ டொக்கும் தெய்வம் தேடினு மில்லை``7 என முதற்கணே கூறினார்.
இதனால், முதற்கண்கூறிய சிவனது முதன்மை வலியுறுத்திப்புகழப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின்
மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும்
முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

மனம் உடைமையால், `மனிதர்` எனப் பெயர் பெற்றவர்களே! (அந்த மனம் திருந்தியதாய் இல்லையே.) (``மனிதர்காள்! இங்கே வம்மொன்று சொல்லுகேன்``1 என்பதிலும் இக்குறிப்பு உள்ளது.) உலகனைத்தும் சிவமயேமே. அனைத்தும் அவனானபின்பு சொல்ல வேண்டியது என்ன இருக்கின்றது? ஆகவே, வீண் வாதங்களைக் கிளப்ப வேண்டா. ஏனெனில், சில இடங்களில் வெளியே காணப்படுகின்ற புகை உள்ளே மறைந்திருக்கின்ற நெருப்பினின்றும் வந்ததுதான். பின்பு அஃது அடங்குவதும் நெருப்பில்தான் அது போலத் -தான் காணப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் சிவனிடத்திலிருந்து வந்தவைதாம். ஆகவே, அவை ஒடுங்குவதும் அவனிடத்தில்தான்.

குறிப்புரை :

இவ்வாறு கூறுவன ஆணை மொழிகளாம். அஃதாவது உபதேச மொழிகளாம். ஆசிரியர் மாணாக்கனை `இவ்வாறு நில்` என்றால் மாணாக்கன் அவ்வாறு நிற்க வேண்டியவனே தவிர, `ஏன், ஐயா, இவ்வாறு நிற்கச் சொல்கின்றீர்` என வினாவுதற்கு உரியன் அல்லன். அத்தகையவான மொழிகள் ஆணை மொழிகளாம். ``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த``2 எனத் தொல்காப்பியர் கூறியதும் இவ்வாறான மொழிகளை நோக்கியே. இவ்வாறான நல்லாசிரியரை, தொல்லாணை நல்லாசிரியர்``3 எனச் சங்க இலக்கியங்கள் கூறும். ஞானசம்பந்தரது பாடல்களில் பல இத்தகையினவாய் இருத்தல் காணலாம். ``புறம்`` என்பதற்கு, `புறத்து உள்ளன`` எனவும் `பின் அங்கியிற் கூடும்` எனவும் உரைக்க. இஃது எடுத்துக் காட்டுவமை. முகை - அரும்பு. அரும்புதல் தோன்றுதல் ஆகலின் அது தோன்றிய பொருள்களைக் குறித்தது. ஆதிப் பிரான் - ஆதி சத்தியை உடைய கடவுள். ``எல்லாம் சிவன் என்ன நின்றாய் போர்றி``4 என்ற அப்பர் திருமொழியை, ``திகை அனைத்தும் சிவம்`` என்பதனோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், சிவன் எல்லாப் பொருளுமாய் நிற்கும் பெருமை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன் `தான்` எனநின்(று) எளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகி
நவின்றா உலகுறு நம்பனு மாமே.

பொழிப்புரை :

சிவன், ஏழுலகங்களும் ஒன்றாக ஓர் உருவாய்க் கலந்து, அப்பொழுதே தான் அவற்றுள் ஒன்றும் ஆகாது தனியனாய் நிற்பினும், தனிமையானோர் பலர் பிறர்க்கு எளியராதல்போல எளியனல்லன்; அரியனே, இனி இவன் அளவற்ற உயிர்களோடு அவையேயாய்க் கலந்து அவற்றின் செயல்களில் எல்லாம் தானும் உடன் பயின்று, அனைத்துயிர்கட்கும் ஆத்தனும் ஆகின்றான்.

குறிப்புரை :

செய்யுளாகலின், ``இவன்`` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது. `தான் என நின்றும் எளிய னல்லன்` என உம்மையை மாற்றிவைத் துரைக்க. நவிலுதல் - பயிலுதல். நம்பன் - நம்பத் தக்கவன். இதுவே வடமொழியில் `ஆத்தன்` எனப்படுகின்றது. இதனுள் சிவன் எல்லாப் பொருளிலும் ஒன்றாய்` வேறாய் உடனாய் நின்று உயிர்கட்கு உறுதுணையாதல் கூறல் பட்டவாறு அறிக. இரு பொருள் ஒன்றாய், வேறாய், உடனாய் இயைந்து நிற்பதொரு சம்பந்த விசேடமே சைவ சித்தாந்தத்துள் கூறப்படும் சுத்தாத்துவிதம் ஆதலை நினைக. சிவன் இவ்வத்துவிதப் பொருளாம் முறைமை இங்குப் புகழ்ந்து கூறப்பட்டது.
இம்மந்திரம் பதிப்புக்களில் இரண்டாம் தந்திரத்தில் `அனுக்கிரகம்` என்னும் அதிகாரத்திலும் காண்பபடுகின்றது.

பண் :

பாடல் எண் : 30

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளில் முதல் மூன்றைக் கடந்து, மேலேயுள்ள `சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் விளங்குவோனாய் உள்ளவன் சிவனேயன்றிப் பிறரல்லர். (பிறர் எல்லாரும் மேற்கூறிய மூன்று கலைக்குள் இருப்பவரே` என்றபடி.) ஆகவே அவனே யாவர்க்கும் தலைவன் எல்லாத் தத்துவங் கட்கும் முதல்வன். உயிர்கட்கெல்லாம் உயிராய் அவைகளின் அறிவினுள் உள்ளவனும் அவனே. ஆதலின், ஏனைத் தேவர்களோடு அவனையும் ஒப்ப வைத்துக் கூறும் கூற்றுக்கே இடமில்லை. இனி அவன், எவராயினும் தம்மை அவனுக்குக் கொடுத்துப் பெறத் தக்கவனேயன்றி, வேறு பொன், பொருள் முதலியவற்றைப் பண்ட மாற்றாகக் கொடுத்துப் பெறத்தக்கவன் அல்லன். இவற்றையெல்லாம் அறிந்து அவனை நினைமின்கள்.

குறிப்புரை :

``கலையொரு மூன்று`` என்பவற்றை `இடைகலை, பிங்கலை, சுழுமுனை` எனவும், `தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை` எனவும், ``அருள் நூலும், ஆரணமும் அல்லாதும்``1 எனவும் உரைப்பாரும் உளர், சிவனை ஏனை விண்ணவரின் வேறு வைத்துக் கூறுதற்குக் காரணம் கூறுகின்றார் ஆகலின், அவற்றிற்கு இங்கு இயைபின்மையறிக. சிவனை `பரம்பொருள்` எனக் கொள்பவர் தவிர ஏனையோரெல்லாம் போக்கிய காண்ட தத்துவங்கட்குமேல் (ஆன்ம தத்துவங்கட்குமேல்) உள்ள தத்துவங்களையும், போசயித்திரு காண்ட தத்துவங்கட்குமேல் (வித்தியா தத்துவங்கட்குமேல்) உள்ள தத்துவங்களையும் உணராமையால் அவரால் கொள்ளப்படும் கடவுளர்கள் யாவரும் `நிவிர்த்தி பிரதிட்டை, வித்தை` என்னும் மூன்று கலைகட்குள்ளே நிற்பவராவர். ஆன்ம தத்துவங்களில் கீழ் உள்ளதாகிய பிருதிவி தத்துவத்தளவில் நிற்பவன் பிரமதேவன். ஆகவே இந்திரன் முதலிய பலரும் அவனுக்குக் கீழ்நிற்போரேயாவர். அவரெல்லாம் நிவிர்த்திக் கலைக்கு உட்பட்டவர்கள்.
பிருதிவிக்குமேல் பிரகிருதியானவும் சென்று நிற்பவன் மாயோன். ஆகவே, அவனும், அவனைச் சார்ந்த அதிகாரிகளும், அடியவர்களும் எல்லாம் பிரதிட்டா கலைக்கு உட்பட்டவர்கள். ஆயினும் பௌத்தரும், சமணரும் `உயிரும், வினையும் உண்டு` என நம்புபவர்கள். வினை, புத்தி தத்துவத்தையே பற்றிக் கிடத்தலாலும் அவர்கள் `அறிவு, அல்லது, உயிர்` என்பன எல்லாம் புத்தி தத்துவத்தையேயாகலானும் அவர்கள் புத்தி த்ததுவத்தளவில் செல்லுதற்கு உரியர். `புத்தி தத்துவம் பிரதிட்டா கலைக்கு உட்பட்டது` என்பது மேலே பெறப்பட்டது.
புறச் சமயிகளில் மீமாஞ்சகரும், சாங்கியரும் கடவுட் கொள்கை இல்லாதவர்கள். ஆயினும் உயிரும், அதற்குக் கருவியாகிய உடம்பு முதலியனவும், வினையும் உள்ளன` என நம்புபவர்கள். அவருள் சாங்கியர் கூறும் தத்துவமே மீமாஞ்சகர், ஏகான்ம வாதிகள் ஆகியோருக்கும் ஆகையால் அவரெல்லாம் பிரகிருதிக்குமேல் உள்ள புருட தத்துவத்தளவில் செல்லுதற்குரியர். புருட தத்துவம் வித்தியா கலையின் கீழ் எல்லையாகலின், இவர்களை பிரதிட்டாகலைக்குள் நிற்பவர்களாகவே கருதலாம். இவருள் ஏகான்ம வாதிகள் `கடவுள் இல்லை` எனக் கூறாவிடினும் `கடவுள் வியாவகாரிக சத்தைய வதன்றிப் பார மார்த்திக சத்தை அன்று` எனவும், `பாமார்த்திகப் பொருள் பரப்பிரம்பம்; அது நாமேயன்றி வேறில்லை` எனக் கூறுதலால் அவர்கட்கு எல்லையும் புருட தத்துவமே யாகின்றது.
அகப்புறச் சமயிகளாகிய பாசுபதர், மாவிரதர், காபாலிகர் வைரவ மதத்தினர் முதலியோர், `சிவன், சிவன்` எனக் கூறினாலும், அவர் கருதுவன எல்லாம் உருத்திர வகையினரையே. வாம மதத்தவர் `சத்தி` என்பதும் உருத்திராணிகளில் ஒருத்தியையே. சுத்த சாத்த மதத்தினர் இவரின் வேறுபட்டவர்கள். அவர்கள் அகச் சமயிகளுள் வைத்து எண்ணத் தக்கவர்கள். ஆகவே அகப்புறச் சமயிகளது கடவுளரும் வித்தியா கலைக்கு உட்பட்டவர்களே.
அகச் சமயிகளாகிய பாடாண வாத சைவர் முதலியோர் `இலய சிவன், போக சிவன், அதிகார சிவன்` எனப் பகுதிப்பட்டு, முறையே உருவம், அருவுருவம், அருவம் என்னும் திருமேனிகளைத் தாங்கித் தூல, சூக்கும, அதிசூக்கும ஐந்தொழில்களைச் செய்யும் தடத்த சிவபேதங்களுள் ஒரோ ஒருவனையே பரம சிவனாகக் கொள்வர். அதனால் அவர்களது கடவுளர், வித்தியா கலைக்கு மேல் உள்ள சாந்தி, சாந்தியதீதை கலையில் உள்ளவராவர். இம்மந்திரத்தில் ஐந்தொழில் இயற்றுதல் இன்றிச் சித்தாந்த சைவர்க்கே உரியவனாய்த் தன்னளவில் நிற்கும் சொரூப சிவனைக் கூறாமல், ஐந்தொழில் இயற்றி, `பதி` எனப் பெயர்பெற்றுத் தலைவனாய் அகச் சமயத்தார்க்கு உரிய தடத்த சிவனையே கூறினார் ஆதலின், `கலை ஐந்தும் கடந்து` என்னாது, ``கலையொரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற தலைவன்`` என்றார்.
ஒரு பொருளைப் பெறுதற்கு அதற்கு நிகரான மற்றொரு பொருளைக் கொடுக்குமிடத்து, அவ்வாறு கொடுக்கப்படும் பொருளே `விலை` எனப்படுவதல்லது, தன்னையே தான் கொடுப்பது விலை யெனப்படாது, ஏனெனில் விலையைக் கொடுப்பவன் பின்பு அவ் வலைக்கீடாகத் தான் வாங்கும் பொருளைப் பின் சுதந்திரமாய் நின்று அனுபவித்தற்கு உரியன். தன்னையே கொடுத்தவன் தன்னை வாங்கி -னவனுக்கு அடிமையேயல்லது, சுதந்திரமிலன். இவ்வகையில் உயிர்கள் தம்மையே கொடுத்துப் பெறத் தக்கவன் சிவன் ஆதலின், `அவனுக்கு விலையில்லை` என்றார். ``உள்ளுறும் உள்`` என்றதில் பின்னுள்ள ``உள்`` என்பது ஆகுபெயராய், அவ்விடத்துள்ள பொருளைக் குறித்தது. உம்மை சிறப்பும்மை. இதனால் பிறரோடு ஒப்ப வைத்துக் கூறுதல் கூடாமை சொல்லவேண்டாவாயிற்று. `விண்ணவரோடும் ஒப்பித்து உரைப்ப` என ஒரு சொல் வருவிக்க. உரைப்ப உரை. உரைக்கப்படுவன -வாகிய உரைகள். ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், சிவனது முதன்மை தத்துவங்களில் வைத்து இனிது விளங்கக் கூறிய புகழ்ந்துரைக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து
செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.

பொழிப்புரை :

மேற்கூறிய தலைவன், மேற்கூறிய கலைகளும் கீழதாகிய நிவிர்த்தி கலையில் இருக்கும் பிரம தேவன் செய்கின்ற படைத்தலையும் நீக்கி, அவனுக்குமேல் இருபத்து மூன்று தத்துவங் -கட்குத் தலைவன் ஆதலின், `நெடியோன்` எனப்படுகின்ற மாயோன் செய்கின்ற சின்னாள் நிலைப்பதாகிய காத்தலையும் நீக்கி, அவனுக்கு மேல் உள்ள உருத்திரன் அறியாமையிற்படுத்துத் துன்பக்கிடையில் கிடத்துகின்ற அழித்தலையும் நீக்கி அடியேனை உய்ய வைத்து, என்மீது அருள்மிக உடையன் ஆயினான்.

குறிப்புரை :

`அவனது பெருமை அத்தகையது` என்பது குறிப் பெச்சம். கால் - அடிநிலை. இதனை, `கடைக்கால்` என்பர். பாசம், பிணிப்பது. ``பிரமன் செய் குறுமை நேசம்`` என மொழி மாற்றுக் கொள்க. நேசம் - கருணை. கருணையால் செய்யப்படுவதநை, `கருணை` என உபசரித்துக் கூறினார். முத்தொழில்களுள் காத்தல் தொழிலையே கருணைத் தொழிலாக மக்கள் கருதுதல் பற்றி அதனை, ``குறுமை நேசம்`` - என நகையாடிக் கூறினார். செடி - கீழ்மை. அஃது இங்கு அறியாமையைக் குறித்தது. ஊழியை முடிப்பவன் உருத்திரன். அது முடிந்தபொழுது கருவிகளுள் யாதும் இன்மையால், உயிர்கள் ஆணவத்துள் அழுந்தி, யாதும் அறியாது கிடக்கும் சிலவகைக் கேவலங்களுள் இது `சகல கேவலம்` எனப்படும். `தவம்` என்பது, `தாபம் - வெப்பம்` என்பதினின்றே வருதலால் இக்கேவல நிலையையும் `தவம்` என்கின்றவர் `செடியார் தவம்` என வேறு படுத்திக் கூறினார். ``சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் - சுடச்சுட நோற்கிற் பவர்க்கு``1 என்னும் திருக்குறளும் `தவம்` என்னும் சொல்லியல்பை விளக்குவதாய் உள்ளது. இவ்வாற்றால் அழித்தலைக் குறிக்கவே, அதனைச் செய்வோனை எடுத்தோதல் வேண்டா வாயிற்று. இங்கு, செய்தல், சேர்த்தலாம். முத்தியாவது விடுதலை யாகலின், `அவ்விடுதலை யாது` என்பார்க்கு, `படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் காரணக் கடவுளர்களது செயல்களினின்றும் விடுபடும் விடுதலை` என்பதே விடையாகக் கூறப்படுகின்றது. அதனையே நாயனார் இம்மந்திரத்தில் இவ்வாற்றாற் கூறினார்.
இதனால், முன் மந்திரத்தில் ``நாடுமின்`` எனக் கூறிய அத் தலைவன் உயிர்களிடத்துக் கொண்டுள்ள அருள்நிலை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி
தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `நாதம்` எனப்படும் சூக்குமை வாக்கினின்றும் தோன்றிய அனைத்து மொழிகளுமாகிய சொற் பிர பஞ்சத்திலும் நீங்காது நிறைந்து நிற்கின்றான். `தேசம், என்று சொல்லப் படும் பூமி ஒன்றுதான் ஆயினும் அஃது ஒன்பது கண்டங்களாகப் பிரிந்து நிற்கின்றது. அப் பிரிவுகளாகிய பொருட் பிரபஞ்சத்திலும் அவன் மலரில் மணம்போல் மருவி நிற்கின்றான். அதனால் அனைத்துலகங்களும், சிவனாகிய முதலையே முதலாகக் கொண்டு இயங்குகின்றன.

குறிப்புரை :

`ஆகலான் அவனைத் தோத்திரித்தல் உயிர்கட்குக் கடன்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. `சத்தத்தும்` என அத்தும், உம்மையும் விரிக்க. ``இமயம், குமரி இவற்றின் இடைப்பட்ட நிலம், `பாரத வருடம்` என ஒன்றாகவும், அதுதானே குமரி முதலிய ஒன்பது கண்டங்களாகவும் சொல்லப்பட்டது`` என்பதைச் சிவஞான மாபாடியத்து இரண்டாம் சூத்திரத்து, மூன்றாம் அதிகரணப் பகுதியில் காண்க. `அனைத் துலகங்களும்` என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பாரத வருடம் முழுவதையும் கூறினார். ``வாச மரல்போல்`` என்பதை, `மலர் வாசம் போல்` என மாற்றியுரைக்க. ஈசன் - சிவன். `சிவன் என்று` என்றது, `சிவனே முதல் என்று கொண்டு` எனக் கூறியவாறு. இங்ஙனம் கூறியதனால், ``உலப்பிலி`` எனவும், ``மருவி நின்றான்`` எனவும் போந்த பயனிலைகட்கு, `சிவன்` என்பதே எழுவாயாயிற்று.
இதனால், சிவன் தோத்திரிக்கப்படும் பொருளாதல் காரணங் கூறி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், உலகர் எத்தனை கூறினாலும், அவனை உணர்ந்தோர். ``என் புந்தி வட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனோ``1 எனவும், ``ஏதுக்களாலும், எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி``2 எனவும் உறுதிப்பட உரைத்தலால், இல்லாதவனும் அல்லன். அவர் எத்தனை சொல்லினும் உலகர், ``காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு``3 என்றபடி. தாம் கூறுவதையே கூறி, `சிவன் இல்லை` எனப் பிணங்குதலின், உள்ளவனும் அல்லன். `இல்லை` என்பவரது கல் போன்ற நெஞ்சங்களிலும் ஒரு காலத்தில் அந்நெஞ்சைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றுவான்; ஏனெனில், அவன் பழமையாகவே எங்கும் இருப்பவன்; இயல்பிலே மாசற்றவன் ஆதலின் மாசிலாமணிபோல ஒளிவிடுந் தன்மையன்; தோன்றியபின் தோன்றிய இடத்தினின்றும் பெயர்தல் இல்லாதவன்; சொல்லைக் கடந்த அறிவு வடிவினன். என்றாலும் அனைத்துயிர்களையும் தொடர்ந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

``உண்மையுமாய், இன்மையுமாய்``4 என்னும் திருவாசகத்தையும் காண்க. ``உளதன் றிலதன்று``5 எனப் பிற்காலத்தவரும் கூறினார். ``தூய்மணி`` என்பதை, ``தூயவன்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `தூயன் ஆகலின் தூய்மணிபோல்பவன்` என ஒரு சொல் வருவித்துரைக்க.
இதனால், சிவனது பெருமைகளே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும்
வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.

பொழிப்புரை :

எப்பொழுதும் பகையாய் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவராகிய தேவரும், அசுரரும் தாம் தாம் தனித் தனியே வந்து நாள்தோறும் சிவபெருமானைத் துதித்து அவன் திருவடியை நினைப்பர். துதிப்பவர்க்கு அருளும் முறையில் அவர் வேண்டிய வற்றை அவர்க்கு அவன் அளித்து நிற்பான். (அவற்றால் விளையும் விளைவுகட்கு அவன் பொறுப்பாதல் இல்லை. மனிதருள்ளும் இத்தகையோர் உளர். அவர்களிடத்தும் சிவபெருமான் அத்தகையோ -னாகியே நிற்பன். ஆயினும், உள்ளத்தில் அன்பு மிகத் துதிக்கின்ற வர்களுக்கு அவன் அகமாகிய உயிரைப் பற்றியும், புறமாகிய பொருள், சுற்றம் பற்றியும் அவர் வேண்டுவனவற்றை வேண்டிய வாறே தாராது, ஆவனவற்றைத் தந்து, ஆகாதனவற்றை விலக்கி, அவர்களது அறிவையும் திருத்துவான்.

குறிப்புரை :

இதனை அப்பர் பெருமான் கயிலையை அடைய முயன்று அணுகியும் அடையச் செய்யாது மீள்வித்தமையும், வாதவூரடிகள் ஏனையடியார் போலத் தம்மையும் உடனழைத்துச் செல்ல வேண்டியும் அழையாது இருத்தினமையும் போல்வனவற்றால் உணரலாம்.
``வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மை எல்லாம்தொழ வேண்டி``1
என்னும் திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. ``மாறாய் எதிர்`` என ஆக்கம் வருவிக்க. `உள்ளத் ஊறுவார்` என மாற்றியுரைக்க. `அகம், புறம்` என்பன முதற்கண் அவ்விடத்துப் பொருள்களைக் குறித்துப் பின் அவை பற்றிய பற்றுக்களைக் குறித்தன. `அப்பற்றுக்களில் அவர் வேண்டியவாறன்றி வேறு செய்தும்` என்க. `செய்தும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `விளக்கொளியாதல் அறிவிற்கு` என்க. ஊறுவார் உள்ளத்திற்கு அருளும் முறை கூறியதனால், அவரின் வேறானவர்க்கு அருளும் முறை பெறப்பட்டது.
இதனால், சிவன் தன் அடியார்க்குச் சிறந்த வகையில் அருள்புரிதல் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன்
கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், ஆகாயத்திற்கு உள்ள அருவத்தன்மையன், ஆயினும் உருவம் உடையவனே. கண்ணாற் காணப்படும் பொருளல்லன். ஆயினும் கண்ணாற் காணப்படுபவனே. ஒன்றை ஆக்கும் செயலின் பலனாய்த் தோன்றுவது பலத் தோன்றியவன் அல்லன்; ஆயினும் அத்தன்மை உடையவனே. ஆகவே அவன் எல்லையுட்படாத இன்பமும் ஆவான்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளிலும் முன்னர்ச் சிவனது சொரூபத் தன்மையும், பின்னர்த் தடத்தத் தன்மையும் கூறப்பட்டன. `தடத்தத் தன்மையால் அளவுபட்ட இன்பத்தையும் தருவன்` என்றபடி. பண் - பண்ணுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எண்`` இங்கு அளவைக் குறித்தது. உம்மையால் எண்ணுடை ஆனந்தமும் பெறப்பட்டது. ஆனந்தம் இரண்டில் எண்ணில் ஆனந்தம் அவனே. எண்ணுடை ஆனந்தத்தைத் தருதல் பற்றி அதனையும் அவனேயாக உபசரித்தார். இதன்கண் பாடங்கள் வேறுபட்டன.

பண் :

பாடல் எண் : 37

உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :

சிவன் ஏனை யாவரினும் மேலானவன்; எந்த இடத்திலும் முகந்துகொள்ளக் கூடிய பேரானந்தப் பெருங்கடலாய் உள்ளவன்; முத்துப்போலும் வெண்மை நிறம் உடையவன். அப்பொழுதே நீலமணிபோலும் கருமை நிறத்தையும் உடையவன். அத்தகையோனைச் சித்தர்களும், தேவர்களும் எத்துணையோ காலமாக பொதுவாக எண்ணுகின்றார்கள். ஆயினும் இன்னும் உண்மையாக அறிந்திலர்.

குறிப்புரை :

சிவபெருமான், ``பொங்கழல் உருவன்``1 ஆயினும் பளிங்குபோன்றவன் என்பதை, ``தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே``2 என்பதனான் அறிக. வெண்ணிறம் அப்பன், கருநிறம் அம்மை. `எவரும் தாம் தாம் இடத்தில் இருந்தே முகந்து கொள்ளக் கூடியகடல் எதுவும் இன்மையால் சிவன் அத்தகைய கடலாய் இருத்தலாலும், ஒருபாதி உடம்பு ஒரு நிறமும், மற்றொரு பாதி உடம்பு வேறொரு நிறமும் உள்ளார் எவரும் இன்மையால் சிவன் அத்தகைய உருவம் உடையவனாக இருத்தலாலும் இந்த அதிசயங்களைச் சித்தரும், அமரரும் எண்ணி வியக்கின்றார்களேயன்றி, `எவ்வாற்றால் இவன் இப்படியிருக்கின்றான்` அறிந்தாரில்லை` என்பதாம். ``ஓருடம் பிருவாரகி``3 என வேறிடத்தும் வியந்தோதுதல் காணத்தக்கது. ``ஈசன்`` எனப்பின் வருவதனை வைத்து, அவ்விடத்தில், `அவனை` எனச் சுட்டியுரைக்க.
இதனால், சிவனது, யாவராலும் அறுதியிட்டறியப்படாத அதிசயத் தன்மை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

 நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.

பொழிப்புரை :

உயிர்களுக்குச் சிவனது அறக்கருணை எந்த அள வினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாக வீட்டின்பம் உள தாகும். அவனது மறக்கருணை எந்த அளவினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாகப் பிறவித் துன்பம் உளதாகும். இவையறிந்து, உலகில் எத்தனை வண்ணங்களும், வடிவங்களும் உள்ளனவோ அத்தனை வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குதலைக் கண்டும் மக்கள் அவனைத் துதிக்க மாட்டா தவர்களாய் உள்ளனர்.

குறிப்புரை :

முதலடியை இரண்டாம் அடிக்குப் பின்னர்க் கூட்டி யுரைக்க. ``அவ்வண்ணம் ஈசன்`` என்பதில் ``வண்ணம்`` என்று ஆகு பெயராய், `வண்ணத்தன்` எனப்பொருள் தந்தது. வண்ணம் கூறவே, வடிவமும் பெறப்பட்டது. யாதொரு தெய்வங் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்``1 என்பது சித்தாந்தமாகலின் தெய்வத் திருவுருவங்கள் எல்லாம் சிவன் வடிவே யாதல் பற்றி, `எல்லா வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குகின்றான் என்றார். `சிவன்` என்னும் வண்ணம் இன்றியே தெய்வங்களை வழிபடினும் அவ்வழிபாடு பின்பு சிவ நெறியிற் சேர்த்தல் பற்றி, ``போற்றகிலாரே`` என்றார். புறச்சமய நெறி நின்றும் அகச் சமயம் புக்கும் ... ... சென்றால் சைவத் திறத்தடைவர்`` என்னும் சிவஞான சித்தியால் பிற தெய்வ வழிபாடுகள் சிவநெறி அடைதற்கு வழியாதல் விளங்கும் ``ஈசன்`` என்றதன் சார்பால் ``அறம், மறம்`` என்பன அத்தன்மையவான அவனது கருணை வகைகளைக் குறித்தன. அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியும் ஆகும். பவம் - பிறப்பு. அது, ``பாவம்`` என நீட்டப்பெற்றது. `இன்பம், பவம்` என்பன ஒன்றால் ஒன்று விளங்க வைத்தன ஆதலின், பவத்துன்பம், வீட்டின்பம்` என உரைத்துக் கொள்க. ``புறம் பல`` என்பதில் பல, பல தெய்வ வடிவங்கள்.
இதனால், `மக்கள் எவ்வளவாயினும் தோத்திரம் செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
``எப்பரி சாயினும் ஏத்துமின்; ஏத்தினால்,
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே``1
என முன்னருங் கூறினார்.

பண் :

பாடல் எண் : 39

இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய்
எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.

பொழிப்புரை :

சிவன் இங்கிருக்கின்றான்; அங்கிருக்கின்றான்; எங்கும் இருக்கின்றான். எல்லாப் பொருள்கட்கும் மேலே யிருக்கின்றான்; உலகிற்குத் தலைவன்; அற வடிவினன்; இரவில் தண்கதிர் மதியாய் நிற்கின்றான்; பகலில வெங்கதிர் ஞாயிறாய் நிற்கின்றான்; மேகத்தைப்போலக் கைம்மாறு கருதாது எவ்வுயிர் கட்கும் தனது அருளைப் பொழிகின்றான்.

குறிப்புரை :

`அத்தகையோனை மக்களுயிர்கள் தோத்திரிக்க வேண்டாவோ` என்பது குறிப்பெச்சம். ``இங்கு, அங்கு`` என்பன இவ்வுலகத்தையும், பிற உலகங்களையும் குறித்தன. `எங்கும் உளன்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இது முடிந்தது முடித்தல். பொங்குதல் - மேல் எழுதல். உலகங்களை, ``புவனா`` எனப் பெண்பாலாகக் கூறினார். `கங்குலில் கதிர் மதியாய் நின்றான்` என மாற்றி ஆக்கம் வருவித்துரைக்க. இதனானே ``ஞாயிறாய்`` என்பதில், `பகலில் நின்றான்` என்க. ``இறைதான்`` என்பதில் `தான்` எழுவாய்ப் பொருள்படவந்த அசை நிலை.
இதனால், மக்கட்குச் சிவனைத் தோத்திரித்தல் கடமையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

உணர்வது வாயுமே உத்தம மாயும்
உணர்வது நுண்ணற(வு) எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானாகிய சிவன், சார்ந்ததன் வண்ண மாவதும், ஒருகாலத்து ஒன்றனை மட்டுமே உணர்தலின் சிறிதாயும் உள்ள அறிவினையுடைய உயிர்களாயும் அவ்வுயிர்கட்கு நிலைக் களமாகிய உடல்களாயும் அவ்வுடல்களுக்கு இடமாகிய அண்டங் களாயும் உள்ளான். அவனை, உயிர்களின் அறிவுக்கறிவாகவும், உயிர்க்குணங்கலின் மாறுபட்ட குணங்களையுடையவனாகவும் உணரும் அறிவே நுண்ணறிவாகும்.

குறிப்புரை :

``புணர்வது`` என்பது `அழுந்துவது` என்னும் பொருட்டு. `புணர்வதாயும், புல்லிதாயும் உள்ள உணர்வு` என்க. `எம்பெருமான்` என எடுத்துக்கொண்டு, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``உணர்வு, உடல்`` என்பவற்றிலும் உள்ள எண்ணும்மைகள் தொகுக்கப்பட்டன. ``எம்பெருமானை`` என்பதை `அவனை` என்றவாறாகக் கொள்க. முதற்கண் உள்ள, ``உணர்வது`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. முதலடியில் உள்ள, ``ஆயும்`` என்றவற்றை, `ஆகவும்` எனத் திரிக்க. ஏகாரங்கள் அசை.
இதனால், மக்கட்குச் சிவனைத் தோத்திரித்தல் கடமையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன்
தன்வலி யாலே தடங்கட லாமே.

பொழிப்புரை :

சிவன் தனது ஆற்றலால் தானே உலகத்தை யெல்லாம் தாங்குகின்றான்; அதனால் அவன் மிகப்பெரிய பொருள் போலத் தோன்றினும் தனது ஆற்றலாலே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியனும் ஆகின்றான்; எட்டுப் பெருமலைகளிலும் நின்று நிலத்தை நிலைபெறுவிக்கின்றான்; நிலம் முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள பெரிய கடலாயும் விரிந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அவனது ஆற்றல் எத்தகையது? எவ்வளவினது? என அறிதல் அரிது` என்பது குறிப்பெச்சம். `சாரான்` என்பது பாடமன்று. சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சிவனது ஆற்றல் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான் ஏனைத் தேவரினும் பார்க்க மிகப் பெரியோனாயினும், உயிர்களின் சிற்றுடம்பினுள் அவற்றினும் சிறியவாய இருதயத்துட் சிறியனாய்க் கலந்து, அங்குச் சுடர்வடிவாய் விளங்குகின்றான். ஆகவே, அப்பெரியோன் ஏனைத் தேவரால் அளவிட்டறியப்படும் அளவினன் அல்லன். இங்ஙனமாகவே உயிர்கள் செய்யும் தவங்களை அளவிட்டறிபவன் அவனே.

குறிப்புரை :

``தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற் றரற்றுகின் றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்ப ரீசனே``1
என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார். `சிறுமை` என்பது ஆகுபெயராய்ச் சிறியவாகிய உடல்களைக் குறித்தது. சிவன் உயிர்களின் இதயங்களில் சுவர் வடிவாய் நிற்றலைச் சாந்தோக்கிய உபநிடதம் தகர வித்தை கூறுமிடத்தில் கூறிற்று. `அம்மாதேவன்` எனச் சுட்டு வருவித்துரைக்க.
இதனால், சிவன் பெரியவற்றிற்கெல்லாம் பெரியவனாய்ச் சிறியவற்றிற்கெல்லாம் சிறியவனாய் நிற்கும் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது

உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.

பொழிப்புரை :

ஆல் மரத்தினின்றும் பாகுபட்ட பழத்தின் விதையி லிருந்து முளைத்த சிறு முனை, பெரிய மரமாகி, உருண்ட வடிவான ஆலங்காயே காய்த்தது. ஆயினும், அந்தக் காய் மாம்பழமாகப் பழுத்தது. இந்த அதிசயப் பழத்தை உண்டவர்கள் பிறவித் துன்பத்தி னின்றும் நீங்கிக் களித்தார்கள். உண்ணும் உணர்வு இல்லாத பேதை -யர்கள், பிறவித் துன்பத்தில் அகப்பட்டு முரணியே நிற்கின்றார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரமும் மறைந்துரையாடலாகவே அமைந்தது. ஆலமரம் - உடம்பு. உடம்பை அலமரமாகச் சிவாகமங்களின் கிரியா பாதங்கள் வருணிக்கும் பிண்ட - பாகுபட்ட. ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆல் - ஆலம் பழம்; ஆகுபெயர். அது முன் மந்திரத்திற் கூறிய இருதயம் முளை, இருதயத்தில் சுடர்விடும் சிவன். மரம், தியானம் - தியானிக்கப்படும் பொருட்டும் தியானத்திற்கும் வேற்றுமையின்மையாலும் வளர்வதாதலின் தியானமே `மரம்` எனப்பட்டது. பெருமுளை - பின் பெரிதாதற்குரிய முளை. காய், தியானத்தில் வரும் திருவருள். உருண்டைக்கு, கீழ், மேல், வலம் இடம் ஆகிய பக்க வேறுபாடுகள் இன்மை பற்றி யாவர்மாட்டும் ஒப்பச் செல்லும் திருவருட்கு உருண்டை வடிவம் கற்பிக்கப்பட்டது. `மா` எனக் கூறி, ஒருவகை மரத்தை உணர்த்தற்பாலதனை, `மா` என்னும் பெயருடைமையே பற்றி, `குதிரை` எனக் கூறியது. அதிசயத்தின் மேலும், மற்றும் ஓர் அதிசயம் தோற்றுவித்தற்பொருட்டு. இவ்வாறு எழுத்தொப்புமையால் ஒன்றாகின்ற சொற்களால் அவற்றின் பொருளல்லாத பிற பொருளைக் கூறுதலையும் ஒட்டணி வகையிற் சேர்ப்பர். கந்தபுராண ஆசிரியர், `சூரபதுமன் மாமரமாய் நின்றான்` எனக் கூறுமிடத்தில், `அத்தி, அரசு, வாகை, வன்னி, வீரை, இருப்பை` என்னும் மரப்பெயர்களை உடன் வைத்து, இந்திரன், அக்கினி முதலிய பிறபொருள்கள் தோன்றக் கூறியது முதலியன இதற்கு எடுத்துக்காட்டாகும். சீவக சிந்தாமணி ஆசிரியரும், `புத்திசேனன்` என்னும் பெயருடையவனை. ``திங்கள் விரவிய பெயரினான்``1 என்றார். அதற்கு நச்சினார்க்கினிரய், ``திங்கள் - மதி. `மதி எனவே புத்திசேனரும்`` என உரைத்து, தீத்தீண்டு கையார்`` என்றது வேங்கையை உணர்த்தினாற்போல - எனத் திணைமாலை நூற்றைம்பதின் தொடரை மேற்கோளாகக் காட்டினார். `வேங்கை` என்பது ஒரு சொல்லாயினும் அது, `வேம் கை` என்னும் புணர் மொழிபோல வைத்து, `வேகின்ற கை - தீத்தீண்டு கை` எனப் பட்டது பிற்காலத்தில் காளமேகப் புலவரும்,
``கரிக்காய் பொரித்தாள்; கன் னிக்காயைத் தீய்த்தாள்;
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்; - உருக்கமுடன்
அப்பைக்காய் நெய்த்துவட்ட வாக்கினாள், - அத்தைமகள்;
உப்புக்காண் சீசீ உமி``2
எனப் பாடினார். கரி - யானை; அத்தி. கரிக் காய் - அத்திக் காய் கன்னி - அரம்பை. அரம்பை - வாழை. கன்னிக் காய் - வாழைக் காய். பரி - குதிரை; மா. பரிக்காய் - மாங்காய். பை - பாம்பின் படம் அது. `படத்தையுடைய பாம்பு` என்று ஆயிற்று. பாம்பில் ஓர் இளம் கத்தரி. அப்பைக் காய் - கத்தரிக் காய். இவை போல்வன எல்லாம் சொற்சுவை பட வருவனவாகும். மாம்பழம், சிவானந்தம், பிண்டம் - உடல், முதற்கண் உள்ள ``பிண்ட`` என்பதனையும் இப்பொருட்டாகவே உரைப்பர். அது மறைபொருட் கூற்றிற்கு ஒவ்வாமை அறிக.
`அம்முச் சாரியை இடையினம் வருமிடத்துக் கெடும்` எனத் தொல்காப்பியர் கூறினாராயினும், பிற்காலத்தில் கெடாதே வழங்கும் வழக்கம் உண்டாயிற்று. ``உறக்கும் துணையதோர் ஆலம் வித்து``3 என்னும் நாலடி வெண்பாவைக் காண்க.
``பிணங்குகின்றார்கள்`` என்றது சமய வாதிகளை.
இதனால், தோத்திரத்தால் சிவானந்தப் பேறு உளதாதலைக் கூறி, அது செய்யாதாருக்கு இரக்கம் காட்டி முடிக்கப்படுகின்றது. எனினும், சமய வாதிகளைக் கூறிய இயைபே கொண்டு சமயங்களைப் பற்றி மூன்று மந்திரங்கள் கூறி முடிக்கின்றார். அவை பதிப்புக்களில் `அதிகப் பாடலகள்` எனக்காட்டப்படுகின்றன.

பண் :

பாடல் எண் : 44

முதல்ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பு செவி துதிக் கை கால்
மதியுடன் அந்தர் வகைவகை பார்த்தே
அதுகூற லொக்குமவ் வாறு சமயமே.

பொழிப்புரை :

``ஒன்றே பொருள் என்னின், வேறென்ப; வேறென்னின் - அன்றென்ப ஆறு சமயத்தார்.1 என்றாற்போலச் சமய வாதிகள் ஒருவர் கொள்கையை மற்றவர் மறுத்து வாதம் புரிதலை யானை கண்ட குருடர் கதையில் வைத்து உணர்த்திற்று இம்மந்திரம்.

குறிப்புரை :

``சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்``2
என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார். ``ஒன்றதே பேரூர்; வழி ஆறதற்குள``3 3மந்திரம் - 15,38. என்னும் மந்திரத்திற்கு இங்கும் கூறி முடிக்கின்றார்.
இதன் பொருள் வெளிப்படை. ஆனையாகிய முதல் ஒன்றேயாம்; ஆயினும் அந்தகர் அதன் உறுப்புக்களை வேறு வேறு முதல்களாகக் கூறிக் கலாம் விளைத்தல் போலவே, மெய்ப்பொருள் ஒன்றேயாயினும் அதன் இயல்புகளை வேறு வேறு பொருள்களாகக் கருதிச் சமய வாதிகள் ஒருவரை ஒருவர் மறுக்கின்றனர்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. சிவஞான போத அவையடக்கத்தில்,
``தம்மை - உணரார்; உணரார் உடங்கியைந்து தம்மில்
புணராமை``
என்றதன் உரையிலும் மாதவச் சிவஞான யோகிகள் இக்கதையையே உவமையாகக் காட்டினார்.
அகரம், பண்டறி சுட்டு அன்றி, `ஆறு ஆறாகச் சொல்லப் படுகின்ற சமயம்` எனினுமாம். `ஒருபுடையுணர்வே முரண்பாட்டிற்குக் காரணம் ஆதலின், முழுதுணர்வார்க்கு முரண் ஏதுமில்லை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 45

ஆறு சமயம் முதலாம் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி
ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.

பொழிப்புரை :

சமயங்களுட் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்ற ஆறு சமயம் முதலாக அனைத்துச் சமயங்களிலும் ஒரோ ஒன்றே `நன்று` என உணர்பவர் உணரட்டும் (அஃது அவர் விருப்பம்) சமய வேற்றுமை பாராட்டாது, `அனைத்துச் சமயங்களையும் அதனதனளவில் நன்றே` என உணர்பவர்க்கு உண்மைக் குரு நந்தி பெருமானேயாவார். அவரது மரபு நெறியே சான்றோர்க்கு இனிதாய் இனிக்கும்.

குறிப்புரை :

அதனதன் அளவில் நன்றாதலாவது, ஓரோர் பக்குவம் உடையார்க்கு அவர்க்கேற்ற நன்மையைத் தருவதாதல் ``எச்சமயத் தோர்செல்லும் - தீதொழிய நன்மை செயல்``1 1நல்வழி. என ஔவையார் கூறியதும், எல்லாச் சமயங்களும் ஓரோர் நன்மை கருதியே எழுந்தனவாதல் பற்றியே. அங்ஙனமாயின் பிற மதங்களை நூல்கள் மறுத்தல் ஏன் எனின், மறுப்பு, அதில் உள்ள நன்மையைப் பற்றி எழுதல் இல்லை; அவ்வச்சமயத்திற்கு மேம்பட்ட சமயத்தில் உள்ள நன்மையை மறுப்பதைப் பற்றித்தான் எழும் என்க.
உறுவது - நன்றாவது, ``உணர்வார் குரு`` என்னும் கிழமை்ப பொருள் தொகையில், `குரு` உயர்திணையாகலின் `உணர்வாரது குரு` என ஆறாவது விரியாது, `உணர்வார்க்குக் குரு` என நான்காவது விரிக்க. `அவரது ஆறு` எனச்சுட்டு வருவிக்க. `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். அமைபவர் - சான்றோர். சான்றோர் முழு துணர்ந்தவர். எனவே, `உணர்வார் உணர்க என்றது ஒருபுடை உணர்ந்தாரை நோக்கியாம்.
சமயங்களுட் சிறந்த சமயங்களாகச் சொல்லப்படும் ஆறாவன ஆறு தரிசன மதங்கள். அவை `வைசேடிகம், நையாயிகம், பூர்வ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை, சாங்கியம், யோகம்` என்பன. இவை வேதத்தின் தத்துவத்தை ஆராயும் நூல்களாகச் சொல்லப்படுதலின் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்றன. ``அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து``1 எனச் சுந்தரர் அருளிச் செய்ததும், வாதவூரடிகள் ``இருமுச் சமயம்``2 என்றதும் இவற்றையே. ``அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்``3 என அவர் அருளிச் செய்தது, காணாபத்தியம் கௌமாரம் முதலிய அறுவகைச் சமயங்களை. அவற்றிடையே கொள்கைப் பூசல் பெரும்பான்மையாக இல்லை.
இதனால், பிற சமயங்களெல்லாம் ஒருபுடை உண்மையை உடையனவாக, சைவம் முழுதுண்மை உடையதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கும் முதல்வனு மாமே.

பொழிப்புரை :

`புறப்புறம், புறம் அகப்புறம், அகம்` எனப் பாகுபட்ட சமயங்கள் பலவற்றுள் பெரும்பான்மை ஒத்த கொள்கை யுடையவாய்ச் சிறுபான்மையே வேறுபட்ட சமயங்கள் அகச் சமயங்களாகும். அவையாவும் சைவமே. அவை ஆறு வகைப்பட்டன. அந்த ஆறும், `தம்மை ஆக்கினவன் சிவனே` எனக் கருதுகின்றன. அதனைப் பிற சமயிகள் மறுக்கின்றனர். அம்மறுப்புக்களைக் கேளாமல், `அகச் சமயங்கள் ஆறும் சிவனையே முதல்வனாக உடையன` என்பதை ஒருவன் அறிந்து, அவற்றுள் எந்த ஒன்றனையேனும் தெளிந்து அதில் நிற்பானாயின், அவன் சிவஞானியாய்த் தானும் முத்திக்கு உரியவனாய்ப் பிறரையும் முத்திக்கு உரியவராகச் செய்ய வல்ல ஆசிரியனும் ஆவான்.

குறிப்புரை :

`சமயங்கள்` என்னாது, ஒத்த சமயங்கள் என்றதனால், அவை அகச் சமயங்களாயின. எனவே, அவை தம்முள் ஒத்தனவாதல் பற்றியே ``ஒன்றதே பேரூர்; வழி ஆறதற்குள்`` எனவும், அவற்றுள் ஒன்றை இகழ்வோரையும், ``குன்று குரைத்தெழு நாயைஒத் தாரே`` எனவும் முன்பு4 கூறினார். அவ்வகச் சமயங்கள் `பாடாண வாத சைவம்` முதலிய ஆறுமாம். அவற்றைச் சங்கற்ப நிராகரண நூலுட்காண்க. அந்நூலுள் இறுதியில் அடைமொழியின்றி, `சைவம்` என்றே கூறப்பட்டது சுத்த சைவம். அதற்கும், சித்தாந்த சைவத்திற்கும் இடையேயுள்ள வேற்றுமை மிகமிகச் சிறிதே. `குரு` என்பது பொது வாயினும், சைவத்துள் `சிவாச்சாரியார்` `சைவாச்சாரியர்` என்றும் குறிக்கப்படுவோரே `சிவகுரு` எனப்படுவர். சிறுசிறு வேறுபாட்டால் அவருள் தாரதம்மியமும், சித்தாந்த சைவாசாரியரை நோக்க ஆசிரியத்தன்மை முற்றப்பெறாமையும் உடையரேனும், அவரெல்லாம் சிவப்பேறாகிய முத்தியை வழிமுறையில் அடைவிப்பவரேயாவர் அதனால், `சிவப் பேற்றை விரும்புவர் அவருள் எவரையேனும் ஆசிரியராகத் தெளியின் பழுதடையார்` என்பதாம்.
இதனால், `சித்தாந்த சைவமும் பொதுவாக, `சமயம்` என வழங்கப்படினும், அது சமயங் கடந்த நெறியேயாம்` என்பதை அதற்கு அணியவாகிய அகச் சமயங்களது சிறப்புக் கூறும் முக்ததால் சமயங்களைப் பற்றிய கூற்றுக்களில் இறுதியாக முடித்துக் கூறினார்.
சிற்பி