ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்


பண் :

பாடல் எண் : 1

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

பொழிப்புரை :

ஆன்மா, பரமுத்தி நிலையில் விளைகின்ற சிவபோகத்தை நுகர்தலாகிய இஃது ஒன்றைத்தவிர, அந்தப் போகத்தைத் தருகின்ற சிவத்தைத் தனக்கு வேறாக வைத்து ஆராய்கின்ற அறிவையும், மாயா மலத்தின் காரியமாய்ப் பொருந்திய அதிசூக்கும, சூக்கும, தூல உடம்புகளைப்பற்றி, புறஞ்செல்லுதலையும் உடையதாகின்ற வரையில் அதனது இயற்கைத் தன்மையைத் தலைப்பட்ட வியாபக நிலை அதற்கு நிலைக்கமாட்டாது.

குறிப்புரை :

`சிவனைப்போல எங்குமாம் வியாபகமே ஆன்மாவின் இயற்கைத் தன்மை. ஆயினும் சிவனைப்போல ஆன்மாச்சூக்கும சித்தாகாது. தூல சித்தாய் இருத்தலின், அதனை அநாதியே ஆணவ மலம் பற்றி, அணுத்தன்மை அடையச் செய்தது. எனவே, ஆன்மாவின் இயற்கைத்தன்மை அடையச் செய்தது. எனவே, ஆன்மாவின் இயற்கைத்தன்மை வியாபகமும், ஆணவ மலம் காரணமாக அடைந்த செயற்கைத் தன்மையே அணுத்தன்மையும் ஆதலால், ஆணவம் நீங்கிய பொழுது, ஆன்மாத் தனது இயற்கையாகிய வியாபகத் தன்மையை எய்தும். ஆணவ மலம் காரணமாகவே ஆன்மாவை மாயையும், கன்மமும் வந்து பற்றின ஆகலான், ஆணவ மலம் நீங்கினாலும் அதன் வாசனை நீங்காத வரையில் ஆன்மாவிற்கு அது அடைந்த இயற்கைத் தன்மையாகிய வியாபகத்தன்மை அதற்கு நிலையாதாக, மாயை கன்மங்களைப் பற்றித் தனது முன்னைச் செயற்கைத் தன்மையாகிய அணுத்தன்மை உடையதாகும்` என்பதே இம்மந்திரத்தால் கூறப்பட்ட பொருளாகும். ஆணவ மலத்தின் வாசனையே ஆன்மாவைச் சிவபோகத்தை நுகர்தலினின்றும் நீங்கிச் சிவனைத் தனக்கு வேறாக வைத்து ஆராயத்தூண்டும். அதனாலே ஆன்மா மாயா கருவிகளையும், அவற்றின செயற்பாட்டிற்கு ஏதுவான கன்மத்தையும் உடையதாகும் என்க. ஏய்தல் - பொருந்துதல். ஓர் ஒளி - சிவம். `ஒளியை` என உருபு விரிக்க. உபாதி - செயற்கை; குற்றம். ``பரிய`` என்பதில் `பரியவற்றை` என இரண்டாவது விரிக்க. `பரியவற்றைப்பற்றி` என ஒருசொல் வருவிக்க. ``சாயும்`` என்பதை இறுதியிற்கூட்டி முடிக்க. சாய்தல் - மெலிதல்; நீங்குதல். தான், ஏ அசைகள்.

பண் :

பாடல் எண் : 2

நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.

பொழிப்புரை :

மெய்ப்பொருளை நம்மின் வேறாகத் தேடி அடையும் இடம், நான் அறிந்தவரையில் எதுவும் இல்லை. அதனை நாம் நம்மிலே அறிதல் எவ்வாறு` எனின், `பரவியோமம்` எனப்படும் திருவருளை முன்னே அறிந்து. நம் வழியை நாம் விட்டு, அதன் வழியில் நின்றால், மெய்ப்பொருள் விறகைக் கடைந்தவழித் தோன்றும் தீ, பின் அந்த விறகைத் தானி அழிப்பதுபோல. நம் அறிவிலே விளங்கிப் பின் `நாம்` என வேறு முனைத்து நிற்கும் தற்போதத்தை அழித்து, நம்மைத் தானாக்கிக் கொள்ளும். ஆகவே, கருவிக் கூட்டங்களை `நாம் அல்ல` என்று கண்டு கழித்து நாம் தனித்து நின்றவழி, முன்னெல்லாம் உயிர்ப்பு வடிவில் இருந்த அந்த ஒளி விளக்கு இப்பொழுது தானேயாய் விளங்கும். ஆகவே இம்முறையில் ஒருவன் அதனை அறிவானே ஆயின், அவன் அதனோடு ஒற்றித்துத் தனது செயற்கைத் தன்மையாகிய அணுத் தன்மையின் நீங்கித் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலைப்படுதல் கூடும்.

குறிப்புரை :

``அறிந்து`` நான்கில் முதலு. அறிந்த அளவு என அறியப்பட்ட இடத்தைக் குறித்தது. ஏனைய மூன்றும், `அறிந்தவழி` என்பன திரிந்து நின்றவை, `உற விம்மிடும்` என்பதில் செயவெ னெச்சம், `மழை பெய்யக் குளம் நிறையும்` என்பது போலக் காரணப் பொருளில் வந்தது, விம்முதல் - பெருகுதல். ஆன்மாவைத் தன்னுள் அடக்கித் தாம் மேம்பட்டு நிற்றல். ``ஊன்`` என்பது, பலவகை உடம்புகளால் நிற்கும் கருவிகளைக் குறித்தது. கருவிகளில் ஒவ்வொன்றையும் `இது` எனச் சுட்டி, நான் அன்று எனக் கழித்தல் `நேதி வாக்கியம்` எனப்படும். (நேதி = ந + இதி இவ்வாறான தன்று) `நாஹம்` (நான் அது) எனப் பாவிக்க வேண்டும். `நாஹம்` என்னும் உணர்வால் பாச நீக்கமும், `சோஹம்` என்னும் உணர்வால் `சிவப்பேறும், உளவாம் என்பர். சிவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றலை`
``என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்(கு)
என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே``1
என்னும் அப்பர் திருமொழியாலும் உணர்க. `அம்` எனப் புறம் போந்து `சம்` என உட்புகுந்து அசபா மந்திரம் வடிவாய் நிற்பன் என்பதை, ``ஊனங் கத்துரு வாய்உல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானை``1 என்னும் சுந்தரர் திருமொழியால் உணர்க.
இதனால் ஆன்மா ஆணவ மலத்தால் தான் இழந்த வியாபக நிலையைத் தலைப்படுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து)
உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின்
உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே.

பொழிப்புரை :

ஆரவாரம் மிக்க கடலாற் சூழப்பட்ட உலகத்தில் உடலில் தங்கி வாழ்கின்ற ஆரவார வாழ்வின் உண்மையை ஆராய்ந்துணர்ந்தால், அந்த உடலிற்றானே தன்னோடு உடன் உறைகின்ற சிவானந்தத் தேனை கடலிடை நிரம்பப் புதிது புதிதாக எல்லையின்ற எழுந்து வருகின்ற அலைபோல்வதாகக் காண முடியும்.

குறிப்புரை :

``கௌவை`` என்பதைக் கடலுக்கும் கூட்டுக. கடல் கௌவையுடைத்தாதல் போல, அதனால் சூழப்பட்ட உலகத்தில் வாழும் வாழ்க்கையும் ஆரவாரம் மிக்கதாய் உள்ளது - என ஒரு நயம் தோற்றுவித்தவாறு, `கடலின் ஆரவாரம் முற்றுப் பெறாமையும், பயனின்மையும் உடைத்தாதல்போல, உலக வாழ்வின் ஆரவாரவும் முற்றுப் பெறாமையும், பயனின்மையும் உடைத்து` என்பது குறிப்பு. உடலிடை வாழ்வின் உண்மையாவது சில காலமே உளதாய்ப் பின் இல்லாதொழிவது. உள்ளொளி, சிவம். அதனை நாடும் முறை மேற் கூறப்பட்டது. `மலிதிரையின்` என, ஒப்புப்பொருளதாகிய ஐந்தன் உருபு விரிக்க. தேன் தான் உள்ள இடத்தில் சிறிதளவினதாகவே இருக்கும். `இந்தத் தேன் கடல்போல எல்லை யற்றதாம்` என அதிசயம் உணர்தியவாறு. ``காணலும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், `ஆன்மாத் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலையை அடைந்தவழி வியாபகமாகிய சிவத்தினது, கால, இட எல்லைகளில் ஒன்றும் இன்றிப் பெருகுகின்ற இன்ப வெள்ளத்தில் திளைக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.

பொழிப்புரை :

`கதிர், மதி, தீ` என்னும் பெருஞ்சுடர் மூன்றையும் அவை உலகிற்குப் பயன்படுவ ஆதலைத்தெரிந்து, தனக்கு உடம்பாகக்கொண்டு அந்த ஒளிப்பொருட்கட்கு ஒளியைத் தருகின்ற உள்ளொளியாய் அவற்றில் நிறைந்து நிற்கின்ற சிவனும் வியாபகப் பொருளாகிய ஆன்மாக்கள் ஒன்றுக்கொன்று மாறுபட அடையும் நிலைகளில் எல்லாம் தான் அருள் கூர்ந்து அவற்றின் அறிவுக்கு அறிவாய், அவற்றோடு உடனாய்ப் பலவாகின்றான்.

குறிப்புரை :

தெரிந்து உள்ளொளியாகி எனவும், `இகலிடம் எல்லாம் பரிந்து, இருஞ்சுடர் விட்டு உடன்போகின்ற பல்குரையாமே`` எனவும் இயைக்க. இகல் இடம் பெத்தமும் முத்தியும். ``பிரானும்`` என்னும் உம்மை எதிர்வருகின்ற `உயிர்` என்னும் பொருளைத் தழுவிநின்றது. பல உயிர்களிலும் நிறைந்து நிற்றல் பற்றி இறைவன், ``அநேகன்``1 எனப்படுதல் காண்க.
``பல்கு உரை`` என்பதில், `சொல்` எனப் பொருள் தரும் `உரை` என்பது அதனால் குறிக்கப்படும் பொருளைக் குறித்தது. பொருள், இங்கு உயிர். இனி, `பல் + குரை` என்றே பிரித்து, `குரை அசைநிலை இடைச்சொல்` என்றலுமாம். ``அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே``2 என்பது போலும் சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, ``நல்குர வென்னும் நசையின்மை பல்குரைத் துன்பங்கள் சென்று படும்``3 எனத் திருக்குறளிலும் `குரை` என்னும் இடைச்சொல் ஆளப்பட்டமை காண்க. `பல் கோரை என்றே பாடம் ஓதித் தாம் தாம் வேண்டுமாறேயும் உரைப்பர்.
இதனால், சிவன் தனது சருவ வியாபகத்தால் பல உயிர்களோடும் உடனாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் எல்லா உயிர் களோடும் உடனாய் நிற்பினும், மாயா காரியங்களில் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால் உளவாகின்ற வினைகளில் அகப்பட்டு உழன்ற போதிலும் முடிவில் தன் அடியில் வந்து, `அடைக்கலம்` என அடைந்தவர்க்கே பொன்போலப் பயன்படுவான். சிறியதிலும் சிறியதாய் விளங்குகின்ற ஒளிவடிவாகிய அவன், தன்னைப் பெற்றதனால் மேன்மை பெற்றவர்கட்கே எல்லையில்லா ஒளியாய், எங்கும் நிறைந்து விளங்குவான்.

குறிப்புரை :

``உறுதியினுள்`` என்பதில் `உள்` என்பது மூன்றாவதன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். உள் வினை - உளவாம் வினை. `இரணியம்` என்னும் வடசொல். `இரணம்` எனத் திரிந்து நின்றது. `அறுதி, பெறுதி` என்பனபோல, ``சிறுதி`` என்பது திவ்விகுதி பெற்ற தொழிற் பெயர். `சிறுத்தல்` என்பது அதன் பொருள். அஃது ஆகு பெயராய், அதனையுடைய பொருளைக் குறித்தது. ``ஒளி மூர்த்தி`` என்பது, `ஒளித்த மூர்த்தி` என வினைத்தொகை. `மேலோர்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது.
இதனால், சிவன் சருவ வியாபியாயினும் மலம் நீங்கப்பெற்றார்க்கே அவன் வியாபகன் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.

பொழிப்புரை :

பற்றப்படும் பொருள்களில் எல்லாம் மேலான பொருளாய், மேலான ஒளியாயும் உள்ள சிவன் அண்டம் முழுதும் நிறைந்து, `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்களாய்ப் புலப்படுவான். பிண்டத்தில் புருவ நடுவிலே தியானிக்கப்படும் பொருளாய் நிலைத் திருப்பான். பின்னும் அவ்வாறு தியானிப்போனும் தானேயாகின்ற தவ வடிவினனும் ஆவான்.

குறிப்புரை :

முதற்கண், ``பற்று`` என்றது, பற்றப்படும் பொருளை. பற்றப்படும் பொருள் நற்பொருளும், விடப்படும் பொருள் தீப் பொருளும் ஆதலை நினைக. `அத்தைகய பொருள்களுள் மேலானவன்` எனவே, அவனின் மிக்க நன்றாம் பொருள் இல்லை யாயிற்று. நன்மையே, வடமொழியில் `சிவம்` எனப்படுகின்றது. நன்மையை உடையது` என்பது அதன் பொருள். சுடர் - ஒளி. அஃது ஆகுபெயராய், அதனை உடையானைக் குறித்தது. ``முளைக்கின்ற மூன்றொளி`` என்றதனால், ``முற்றும்`` என்றது அண்டத்தைப் பற்றியதாயிற்று. உம்மை முற்றும்மை. முற்றுதல் - நிறைதல். நெற்றி - ஆஞ்ஞை. இதுவே தியானத்தானம் ஆதலை யறிக. நினைவு - தியானம்; என்றது தியானிக்கப்படும் பொருளை. மூன்று ஒளியாய்ப் புலப்படும் நிலை மாறி மாறி நிகழ்வது. தியானிக்கப்படும் பொருளாதல் ஒன்றேயாகலின், ``நிலைதரும்`` எனவும், `தியானமும் அவன் உடனாகாத விடத்து நிகழாது` என்றற்கு ``அவனாய் நின்ற`` என்றும், அவன் தியானமுமாய்க் கலந்து நிற்றல் பற்றி ``மாதவன்`` என்றும் கூறினார். தான்ஏ அசைகள்.
இதனால் சிவன் அண்டத்திலும், பிண்டத்திலும் வியாபியாய், ஏற்ற பெற்றியில் அருள்புரியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
ஏவனு மாய்விரி நீருல கேழையும்
ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்
நாவனு மாகி நவிற்றுகின் றானே.

பொழிப்புரை :

இன்னும், முன் மந்திரத்திற்கூறிய பரஞ்சுடராகிய சிவன், எல்லாத் திசைகளிலும் அதுவதற்குத் தலைவனாய் நிற்கின்றான். அவைகள் உள்ள எல்லாப் பொருள்களுமாய் இருக்கின்றான்; ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவுகளையும் ஆக்குபவனுமாகி, அவை அனைத்திலும் நிறைந்து அவற்றை நிலைக்கச் செய்பவனுமாய், அங்குள்ளாரது நாவில் அவையாய்க் கலந்து சொற்களைச் சொல்கின்றான்.

குறிப்புரை :

அடுக்கு, `அதுவது` எனத் தனித்தனியைச் சுட்ட வந்தது. `ஒவ்வொரு திசையையும் காக்கும் காப்பாளர் வேறு வேறாகச் சொல்லப்படினும் அவரிடத்தும் சிவனே வியாபியாய் நின்று காவல் புரிவிக்கிறான்` என்பது கருத்து. சிவாகமங்கள் பத்துத் திசைகளிலும் ஒவ்வொன்றிலும் பத்துப் பத்து உருத்திரர் இருந்து திசை காப்பாளரைச் செலுத்துகின்றனர்` என்று கூறுதலோடு, அவர்களின் பெயர்ப் பட்டியலையும் தருதற்கு இதுவே கருத்து என்க. `எவன்` என்னும் வினாப் பெயர் முதல் நீண்டு நின்றது. ``விரிநீர் உலகு`` என்றதனால், ``உலகு`` என்றது நிலவுலகத்தையாயிற்று. காட்சிப் பொருளாய நில வுலகத்தின் பகுதிகளை வகுத்துக் கூறியதனால், உரைப்பொருளாய பிற உலகங்களை ஆக்குதலும் தானே பெறப்பட்டது. `ஆக்குவன்` என்பது இடைக்குறைந்து நின்றது. அமர்தல் - தங்குதல். இதன் பயன் அப்பொருள்கள் நிலைபெறுதலாம். `எங்குமாம் உலகினும்` என ஆக்கம் விரிக்க. ``எங்கும்`` என்றது ஆகாயத்தை உணர்த்திற்று. நாவன் - நாவே வடிவானவன். `நவிற்றுதல்` என்பது பிறவினை வாய்பாடாய்த் தன்வினையையும் குறிப்பதொன்று. ``நம்பு வார்அமர் நாவின் நவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது``1 என்பதிலும் இவ்வாறு வந்தமை காண்க. ``நட்பாடல் தேற்றாதவர்`` 2 என்றார் போல்வன காண்க. நாவாய் நின்று நவிற்றுதல், பொதுப்பட எல்லார் மொழியையும் குறித்தலுடன் அருளாளர்களது நாவில் இனிது விளங்கி நின்று அருளிச்செய்யும் உறுதிச் சொல்லைச் சிறப்பாகக் குறிப்பதாம். ``எனதுரை தனதுரையாக``3 என்னும் அருள் மொழியை ஓர்ந்துணர்க.
இதுவும் சிவனது சருவ வியாபகத்தையே கூறியது.

பண் :

பாடல் எண் : 8

நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புரணவல் லானே.

பொழிப்புரை :

(ஆகாயத்தில் இருந்து அனைத்துப் பொருளையும் காணும் கருடன் நம்மால் அறியப்பட்டது.) அதுபோலப் பரம வியோம மாகிய சிதாகாசத்தில் இருந்து கொண்டு ஏனை எல்லாப் பொருளையும் அறிந்தாங்கறியும் கருடன் சிவன் பின்பு அழிக்கப்படுவனவாகிய ஏழுலகங்களையும் இதுபொழுது அவனே காக்கின்றான். ஆகவே உலக முதல்வன் அவனே. ஆதலின், அவ்வுலகங்களில் உள்ள வினைகளையெல்லாம் நீக்குகின்ற, இயல்பாகவே பாசம் இல்லாத, எஞ்ஞான்றும், எவ்வாற்றானும் பிறப்பினுட்படாத கடவுளும் அவனே. பிறப்பு இறப்பு இன்மையால், போக்கும், வரவும் இவன் ஆகிலும், உயிர்களில் அவையேயாய்க் கலந்து நிற்றலால், அவற்றது போக்கு வரவுகளில் நீங்காது நிற்கவும் அவன் வல்லவனாவான்.

குறிப்புரை :

``கருடன்`` என்றது, உவமையாகு பெயர். கருடன் மேற்கூறிய இயல்பினது ஆதல் பற்றியும், புள்ளரசு ஆதல் பற்றியும் இறைவனுக்கு அஃது உவமையாயிற்று. வேதத்தில் கருடனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது பற்றி, அங்கு, `கருடன்` என்பதைச் சிவனாகக் கொள்க என்றற்கும் இது கூறினார். `நோக்குதல்` என்பது பெரும்பான்மையும் காத்தல் தொழிலையே குறித்தலால், காத்தற் கடவுளாகிய மாயோனுக்குக் கருடன் ஊர்தி சொல்லப்பட்டது. `அங்குள வினை` என மாறிக் கூட்டுக. `வினையே நீக்குதற்கு உரியவன், வினையும், அதனால் வரும் பிறவியும் இல்லாதவனே என்றற்கு, `அங்குள வினையை நீக்கும் நிமலன்; பிறப்பிலி`` என்றார். `புணரவும்` என்னும் எதிர்மைறையும்மை தொகுத்தலாயிற்று. நொடித்தல் - அழித்தல். `நொடி உலகு, என் நிமலன்` - இவை வினைத் தொகைகள். அவை செயப்படு பொருள்மேல் தொக்கன. ``காக்கும்`` என்பது முற்று - எச்சமாகக் கொள்ளினும் ஆம். `தலைவனும் ஆவன்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், சிவன் எல்லாப் பொருள்களையும் கடந்து நிற்பினும் எல்லாப் பொருளிலும் வியாபியாய் நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன் திருமேனி கொள்ளும்பொழுது சிவந்த சடை, சொம்பொன்போலும் நிறம் இவைகளையுடையனவாகவே கொள்வான். ஏனைப் பொருள்களில் ஒன்றன் வடிவிலேயும் அவன் தோன்றானாகிலும் அவை அனைத்திலும் உடன் நிறைந்து நீங்காமலே நிற்கின்றான். ஆயினும் அவை பிறப்பதுபோல அவன் பிறப்பதில்லை. அவன் ஒடுங்கல் தோன்றல்கள் இல்லாதவனாயினும் அவைகளை யுடைய உலகத்தோடு ஒட்டி நிற்கின்றான்.

குறிப்புரை :

``ஈசன்`` என்பதை முதலிற் கொள்க. `அவன் மேனி செம்பொனே ஒக்கும்` என்க. `எங்கும் கழிந்திலன்` என மாறிக் கூட்டுக. ``எங்கும்`` என்பது, `அப்பால் எங்கும்` எனப் பொருள் தந்தது. உலகத்தின் இயல்பாகிய ஒடுங்குதல் இலகுதல்களைப் பின்னர் கூறுகின்றார் ஆதலின். `சிவனுக்கு அவையில்லை` என்றற்கு ``பிறப்பிலன்`` என்பதை முன்னே கூறினார். இலகுதல் - தோன்றுதல்.
பிற வகையான தெய்வ வடிவங்களையே சிவன் வடிவாகக் கொண்டு வழிபடின் குற்றம் என்னை? என்னும் ஐயத்தை நீக்குதற்கு இது கூறினார். இது பற்றியே இத்தகைய வடிவங்கள், `சிவனது இயற்கை வடிவங்கள்` எனப்படுகின்றன. இவ்வாறன்றி, நாயன்மார் சிலரிடம் சிவ யோகியாகவும், பிரமசாரியாகவும், சிவனடியாராகவும் வந்து சில திருவிளையாடல்களைச் செய்த வடிவங்கள் யாவும் சிவனுக்கு நிலையானவாய் இல்லாது, அவ்வப்பொழுது ஏற்ற பெற்றியாற் கொள்ளும் செயற்கை வடிவங்கள் என்க.
``அண்டம் ஆர்இரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர், அச்சுடர்
கண்டிங் கார்அறிவார்? அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``
என அப்பர் பெருமான் அருளிச்செய்ததும் இக்கருத்தை விளக்கவேயாம்.
இதனால், `சருவ வியாபியாய் அகண்டனாய் நிற்கும் சிவன் கண்டனாய்த் தோன்றுமாறு இது` என்பது கூறப்பட்டது. இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் உணர்வும் அவனே உயிரும் அவனே`` என்னும் மந்திரம் மேல், `சிவ தரிசனம்` என்னும் அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 10

புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையில் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் தந்தையாகிய சிவபெருமான், வெறும் நூலறிவில் மட்டும் தோன்றுபவன் அல்லன்; தவத்தில் தோற்றஞ் செய்பவன். அப்பால் அத்தவத்தின் பயனாகப் பெறப்படுகின்ற நன்மையுடைய ஞானத்தில் இடையறாது தொடர்ந்து விளங்குபவனும் ஆவான். இனி, `இன்ன செயலுக்கு இன்ன பயன்` எனப் பண்ட மாற்றுப் போலக் கொண்டு வேதியர்கள் கூறுகின்ற காமிய கன்மங்களிலும் எங்கும் நிறைந்து வேதியர்கள் அவர்கட்குப் பயனளித்து வருகின்றான்.

குறிப்புரை :

நாற்றம் - தோற்றம். நாறுதல் - முளைத்தல். `நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க``1 என்னும் திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. `நன்மை` என்பது எதுகை நோக்கி இடையே அகரம் பெற்று, ``நன்மை`` என வந்தது. `நன்மையின்` எனச் சாரியை நிற்க இரண்டன் உருபு, தொக்கது. `நன்மையைப் பயனாக உடைய ஞானம்` என்க. நன்மை, இங்கு வீடுபேறு வழக்கம் - தொடர்ச்சி, `விலைமை, என்பது, எதுகை நோக்கி, ``வில்மை`` என நின்றது. `பண்ட மாற்றுத் தன்மை, என்பது பொருள். பலம் - பயன். பலமை - பலன் தரும் தன்மை. அஃது ஆகுபெயராய், அதனையுடைய கன்மங்களைக் குறித்தது.
இதனான், சிவன் சருவ வியாபியாய் நிற்பினும் அவரவருக்கு ஏற்ற பெற்றியால் அருள்புரியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்
மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், பராகாயத்தில் அனைத்துலகங்கட்கும் மேலேயும் இருக்கின்றான். அப்பொழுதே மிகக் கீழே உள்ள மண்ணில் திண்மையாய் உள்ளவனாயும், அதனைச் சூழ்ந்துள்ள நீரில் தண்மையாய் உள்ளவனாயும், இவ்வாறு எல்லாவற்றிலும் அதனதன் தன்மையாய் நிற்பதுடன், உயிர்களுக் கெல்லாம் வேறோர் அறிவாயும் எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`தன்மை` என்பது எதுகை நோக்கி இறுதி நிலை தொகுத்த லாயிற்று. `அதனதன்` என்னும் அடுக்கும் தொகுத்தலை பெற்றது, கண் - அறிவு. ``நிற்பதோர் கண்`` என்பது உடம்பொடு புணர்த்ததாகலின் நிற்றலையும், கண் ஆதலையும் வேறு வேறாகக் கொள்க. ``தண்ணவன், கண்ணவன்`` என்பவற்றில், ``அவன்`` என்பன பகுதிப் பொருள் விகுதிகள். எழுவாய் முன் மந்திரத்தி -னின்றும் வந்தது.
இதனால், சிவன் தனது வியாபகத் தன்மையால் மேலான வற்றிற்கெல்லாம் மேலாயும், கீழானவற்றிற்கெல்லாம் கீழாயும் நிற்றல் கூறப்பட்டது. ``மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க``1 என்னும் திருவாசகத்தையும் காண்க.

பண் :

பாடல் எண் : 12

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாமே.

பொழிப்புரை :

சிவன், முன் மந்திரத்திற் கூறியபடி உலகத்தைக் கடந்து அப்பால் மேலும், கீழுமாய், உலகத்தில் எல்லாப் பொருளுமாய் வியாபித்து நிற்றலால் `மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்களை அதிட்டித்துக் காத்தல் படைத்தல்களைச் செய்பவனும் அவனே. அதனால், எல்லாப்பொருள்களின் முழுத்தன்மையும் அவனே.

குறிப்புரை :

``தான் நிலம்`` என்பது தொடங்கி, ஈற்றடியில் ``நின்றனன்`` என்பது காறும் சென்று, பின், `அதனால், என்பது வருவித்து மாலோடு நான்முகன் தானாகி நின்றனன்; தானே வளங்கனியாம்` என முடிக்க. ``என`` என்பதை ``வரை, கடல்`` என்பவற்றோடும் கூட்டுக. கனி, கனிவு; முதிர்ச்சி முதனிலைத் தொழிற்பெயர். சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இதன் கண்ணும் எழுவாய் முன் மந்திரத்திற்போல வந்தது.
முன் மந்திரத்தில் `சிவனே எல்லாப் பொருளுமாய் நிற்பினும் மாலும், அயனுமாகிய காரணக் கடவுளரும் அவனேயோ` என ஐயுறுவார்க்கு அவ்வையத்தை நீக்குவார் முன் மந்திரத்திற்கூறிய பொருள்களையே மீண்டும் இம்மந்திரத்தில் அனுவதித்துக் கூறினார். இங்ஙனம் உரையாதார்க்கு இவை கூறியது கூறலாம். ``நாரணங்கான்; நான்முகன்காண்; நால்வேதன்காண்``2 என்னும் திருத் தாண்டகத்தையும் காண்க.

பண் :

பாடல் எண் : 13

புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனேய உலகின் அடற்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறைஎன மாலுற்ற வாறே.

பொழிப்புரை :

பெரியோர்கள் சிவனிடத்திலேயே காதல் மிக்கவர்களாய் அவனையே நோக்கி நிற்றற்குக் காரணம், `எல்லாப் புவனங்கட்கும் அதிபதி அவனே; புண்ணியத்தின் பயனாய்க் கிடைப்பவனும் அவனே, யாவர்க்கும் தந்தையும் இவனே; உலகத்தை வலிமை வாய்ந்த தலைமையோடு நடத்துவோனாகி அதனை நடத்துபவனும் அவனே; எண்ணித்தொகை கூறுதற்கு இயலாத அனைத்துயிர்களும் அவனே; ஆகலின் அவன் ஒருவனே கடவுள்` என உணரும் மெய்யுணர்வேயாகும்.

குறிப்புரை :

`சிவன்பால்` என்பதும், `பெரியோர்கள்` என்னும் தோன்றா எழுவாயும் வருவித்து, ``மால் உற்ற ஆறு`` என்பது தொடங்கி உரைக்க.
புவனங்களை, ``புவனா`` எனப் பெண்பாலாகக் கூறினார். நிலத்தைப் பெண்ணாகக் கூறும் வழக்குப் பற்றி. `புவனா` என்பாள் ஒரு சத்தி என்றலுமாம். மிகுதி, பன்மை குறித்து நின்றது. ``என`` என்னும் செயவெனெச்சம், `என்பதனால்` என்னும் பொருட்டாய், ``மாலுற்ற ஆறு`` என்னும் எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. `பெரியோர்கள் சிவனிடத்துச் செலுத்தும் அளவிலா அன்பு, தலைவி ஒருத்தி தன் தலைவனை அவனை யின்றித் தான் அமையாளாய்க் காதலிப்பதனோடு ஒத்தது` என்றற்கு அதனை, `அன்பு, காதல்` என்பவற்றுள் ஒரு சொல்லாற் கூறாது. ``மால்`` என்னும் சொல்லாற் கூறினார். மால் - மயக்கம், மோகம்.
இதனால், மெய்யுணர்ந்தோர், சிவனே சருவ வியாபகனும், சருவேசுரனும் ஆதலையறிந்து அவன்பால் கரை கடந்த காதலை யுடையாராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும்
கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.

பொழிப்புரை :

உயிர்களின் உடம்புள்ளிருந்து ஓவாது இயங்கி, உயிரை நிலைப்பிக்கின்ற பிராணனும், வானத்தில் இயங்கி உலகிற்குப் பல நலங்களை விளைவிக்கின்ற, அளவற்ற கதிர்களையுடைய பகலவனும், மண்ணில் ஒரு சிற்றிடமும் விலக்கின்றி எங்கும் இயங்கி வாழ்விக்கும் காற்றும், மற்றும் அனை்ததுப் பொருள்களுமாய் நிற்பவன் சிவன்` என்றால், உயிர்களின் அறிவினுள் விளங்கி, அவ்வறிவை அறியச் செய்பவனும் அவன்தானே? வேறுயாராய் இருக்கமுடியும்?

குறிப்புரை :

``ஒளிரும்`` என்பது ``ஒளிர்விக்கும்`` எனப் பிறவினைப் பொருட்டாய், நிலைப்பித்தலைக் குறித்தது. உலவா - உலவி; சஞ்சரித்து. `உலவா ஒளிரும்` என மாறிக் கூட்டுக. உம்மை கொடுத்து எண்ணியது, உபலக்கணத்தால் அனைத்தையும் எண்ணிக்கொள்ளுதற்கு, ``நிற்கும்`` என்பதன் பின் `எனின்` என்பது வருவிக்க. அல்லாக்கால், மேல், ``நின்றனன்`` என்னும் மந்திர உரையிற் கூறியவாறு. `கூறியது கூறல்` என்பது படும். ``நிற்கும்`` என வேறு தொடராக்கி முடிந்தமையையும் நோக்குக. கண் - அறிவு. கருத்து அதில் தோன்றும் புலன் கருத்திற்கு ஏதுவாவதனை, `கருத்து` என்றது உபசார வழக்கு. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட வந்தது. ஏகாரம், உடன்படுவித்தற்பொருட்டாகிய வினா.
இதனால், சிவன் தனது சருவ வியாபகத் தன்மையால் அனைத்துப் பொருளையும் நிலைப்பித்து, உயிர்களின் அறிவையும் அறியச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.

பொழிப்புரை :

என் அறிவையும், எழுத்து அவ்வறிவின் வழி இன்பத்தையும் உண்டாக்குதல், அவையிரண்டும் இயற்றமிழில் அறிஞரால் ஓர் இனப்படுத்தி எண்ணப்பட்டன. (``எண் என்ப, ஏனை - எழுத்தென்ப``1 ``எண்ணெழுத் திகழேல்``2 ``எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்``3 என்பவற்றைக் காண்க.) இசைத்தமிழில் பண், திறம், (இன்னும் - திறத்திறம்) என்பனவும் அவ்வாறு ஓரினப்படுத்தி எண்ணப்படுவனவாம் இன்னோரன்ன பலவற்றை இனம், இனமாகப் படைத்த சிவபெருமானைக் கண்ணிலும், பொருள்களை உணரும் கருத்திலும் `அது` என்றும், `இது` என்றும் சேய்மைப் பொருளாகவும் அண்மைப் பொருளாகவும் தம்மின் வேறு வைத்து உணர்வார்க்கு அவன் அங்ஙனம் உணரும் உணர்வை, அவ்வுணர்வின் வழியே சென்று உணர்விற்கு உணர்வாய்த் தோன்றி அழித்து, `அவனே தாம் எண்ணும்படி ஒன்றாகியே நின்று, ஒப்பற்ற ஓர் ஊதியமும் ஆவான்.

குறிப்புரை :

``செயல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளை உணர்த்திற்று. `பண்ணும் திறனும் அவ்வழியவே` எனச் செயப்படு பொருள் வருவித்துரைக்க `கண்ணிலும் கருத்திலும்` என எண்ணும்மை விரிக்க. ``அது இது`` என்பது அவ்வாறு உணரும் உணர்வைக் குறித்தது. அஃது உம்மைத் தொகை. `அது இதுவை உருக்கி` என இயைக்க. ஆயம் - ``பொருளாயம்``1 ``ஆயும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், சிவன் எங்கும் சருவ வியாபியாய் நின்று, தன்னை உணர்வார்க்கு முன்னர் அவரின் வேறாகியும், பின்னர் அவரேயாகியும் பெரும்பேறாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்
உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம்
கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

பொழிப்புரை :

`தோன்றல், நிற்றல், ஒடுங்கல்` என்னும் முத்தொழில்களில் நடுவணதாகிய நிற்றல் தொழிலுடையவாய் உள்ள உலகங்கள் அனைத்தும் தனது உருவத்திற்குள்ளே `இவ்வாறு அடங்கியிருக்க` எனச் சங்கற்பித்துச் சிவன் அவற்றில் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`இவ்வண்ணம் ஓங்கக் கருக்கொடு` என மாற்றியுரைக்க. ஓங்குதல் - நிலைத்து நிற்றல். கருக்கொள்ளுதல், திருவுளத்திற்குள் சங்கற்பித்தல். ஈற்றடி `சிவன்` என்னுந் துணையாய் நின்றது. ``ஓங்கக் கருக்கொடே எங்கும் கலந்திருந்தான்`` என்றதனால், `அவனது சங்கற்பத்தானே உலகம் நிலை பெற்றுள்ளது` என்பதும், `பிறவாறு சங்கற்பிக்கின் அவ்வாறே ஆம்` என்பதும் `பிறர்போலக் கரணத்தாலன்றிச் சங்கற்பத்தாலே எல்லாம் செய்வன்` என்பதும் போந்தன. ``தன்`` என்றது தனது உருவத்தை. அவனது உருவம் சத்தியேயாதலை நினைக.
இதனால், சிவனது சருவ வியாபகச் சிறப்புடன், இயைபு பற்றி அவன் செயலாற்றும் முறையும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அதுஅறி வானவன் ஆதி புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.

பொழிப்புரை :

சிவனது பெருமை, உபநிடதங்களில் `அது` எனப் பொதுவாகச் சுட்டியும், `சித்து` என வரையறுத்தலும் கூறப்படுதலும், எல்லாப் பொருட்கும் ஆதியாயினும், தான் அநாதீயேயாதலும், எந்த அளவையினாலும் அளந்தறியப் படாமையும், உயிர்கள் பல வற்றிற்கும் பொதுப்பட இடமாய் விரிந்து உலகம் முழுதிலும் வியாபகம் ஆதலும் ஆகும். இன்னும் அவனது பெருமையை எல்லாம் எங்களுக்குக் குருவாகிய நந்தி பெருமான்தான் அறிவார்.

குறிப்புரை :

``பொதுவது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. எட்டும் - வியாபிக்கும். பெருமைகள் பலவாயினும் பொதுப்பட, `பெருமை` என்னும் அளவில் ``இது`` என்றார். ``ஈசன்`` என்பதை முதலில் கொள்க.
இதனால் முடிவில் முதற்கண் குரு வணக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.

பொழிப்புரை :

எங்கள் சிவன் ஐம்பூதங்களுடன், `ஒளி` எனத் தக்க மற்றும் முப்பொருள்கள் கூட எடடுப் பொருள்களாகிய வடிவினை உடையவன், `பராபரன் பிஞ்ஞகன்` என்பன போன்ற பெயர்களால் புகழப்படுபவன், எல்லா இடங்களும் அவனுக்கு இடங்களே எல்லாவற்றிற்கும் இறுதியாயினும் தனக்கு இறுதியில்லாதவன். அவனை யான் வாழ்த்துகின்றேன்.

குறிப்புரை :

இறுதியிற்கூறியது குறிப்பெச்சம். சோதி - ஒளி. ஞாயிறும், திங்களும் ஒளிப் பொருள்களாதல் வெளிப்படை. இனி அறிவும் ஒளியாதலின் அவ்வாற்றால் `ஒளி` என்பது ஆன்மாவையும் குறித்தது. ஆக அட்ட மூர்த்தமும் சொல்லப்பட்டமை காண்க. பராபரன் - மேலோடு கீழாய் விரிந்தவன். பிஞ்ஞகன் - தலைக் கோலத்தை உடையவன். தலையில் உலகம் அழியாதபடி கங்கையைத் தாங்கினவன்; பாம்பையும், நிலவையும் பகையின்றி ஒன்றி வாழ அணிந்தவன்; தலைமாலைகளை அணிந்து தனது நித்தியத்தை உணர்த் துபவன்; பிரணவத்தைக் குறிக்கும் கொன்றை மலர் மாலையைத் திருஅடையாளமாலையாக அணிந்தவன். குரண்டாசுரனை அழித்துக் கொண்ட கொக்கிறகை அணிந்து, கொடியோரை ஒறுத்தலை உணர்த் துபவன்; இன்னோரன்ன பல புகழ்கள் `பிஞ்ஞகன்` என்பதனால் பெறப்படுதல் அறிக. தூரும் உடம்பு - சோற்றால் தூர்க்கப்படும் உடம்பு; அதனுள் சோதி உயிர். ``சோதியும்`` என்னும் உம்மையால் ஏனை ஒளியும் தழுவப்பட்டன. ``பேரும்`` என்னும் உம்மை சிறப்பு. ஊர் - இடம். சகலன் - எல்லாம் ஆனவன். ஈற்றடி, கால இட வரையறைகள் இன்மையைக் குறித்தது.
இது நூற்பொருள் கூறியதன்று. நூற்கும், தமக்கும் முதல்வனாகிய இறைவனை வாழ்த்தியது. `வாழ்த்து, வணக்கம்` என்பவற்றுடன் பொருளியல்புரைத்தலும் வாழ்த்தாதலை உணர்க.

பண் :

பாடல் எண் : 20

தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை. நூலைச் சிவனது முதன்மையோடு தொடங்கிய நாயனார் முடிவையும் அவனது முதன்மையோடு முடித்தமை நினைந்து இன்புறத் தக்கது.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 21

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.

பொழிப்புரை :

இது நூல் சிதையாமைப் பொருட்டு இதன் அளவை நூற்குள்ளே வரையறை செய்தது.

குறிப்புரை :

``தமிழ்`` என்பது தமிழால் ஆகிய பாடலைக் குறித்தது. இந்நூலின் பாடல் தொகை மூவாயிரம்` என்பதாம்.
`இந்நூற் பாடல்கள் அனைத்துமே `மந்திரம்` எனப் பெயரிடப்பட்ட போதிலும், சிறப்பாக மந்திரமாகவே அமைந்த பாடல்கள் முந்நூறு` என்றபடி. அவை நான்காம் தந்திரத்தில் எண்ணிக் கொள்ளற்பாலன. `எந்திரம்` எனப்படும் சக்கரங்களும் `மந்திரம்` என்றதனானே பெறப்பட்டன. அவை மிகச்சில ஆதலின், தொகை சொல்லப்படவில்லை. இங்ஙனமாயினும், `முந்நூறு மந்திரம்` என்றே ஒரு தனி நூலும் வெளி வந்துள்ளது.1
`உபதேசம்` என்பது ஓர் அதிகாரம். முப்பது பாடல்களுடன் முதல் தந்திரத்தில் இருத்தல் நன்கறியப்பட்டது. முந்நூறு மந்திரத்தை வேறு கண்டவர்க்கு, முப்பது உபதேசம் வேறு கிடைக்கவில்லை போலும்!.
ஈற்றடியில் ``மூன்றும் ஒன்றாமே`` என முடிபு கூறியது, `மந்திரம் உபதேசம்` - எனக் கூறியவற்றை மூவாயிரம் வேறு என மலையற்க - என மலைவு தீர்த்தது. ``செய்த`` `செய்தன` என அன் பெறா அகர ஈற்றுப் பன்மை வினைப் பெயர். இவை செயப்படு வினையாய் நின்றன. இதிலும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இங்ஙனம் நாயனார் பாதுகாப்புச் செய்தும், பிரதிகள் நன்கு போற்றாமையால் பாடங்கள் மிகத் திரிக்கப்பட்டும், பாடல்கள் இடம் மாற்றப்பட்டும் சொற்கள் இருமுறை, மூன்றுமுறை சேர்க்கப்பட்டும், சில பாடல்களை விடுத்தும், சில பாடல்களை. இடைச் செருகல்களாக மிகுத்தும் செய்யப்பட்டமை பாதுகாத்தவர்களது. ஊக்கக் குறைவால் நேர்ந்துள்ளதை உணர்ந்து கொள்ளுதல் அறிஞர்க்குக் கடனாய் உள்ளது.

பண் :

பாடல் எண் : 22

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.

பொழிப்புரை :

இது இறுதியில் வாழ்த்துக் கூறி நூலை முடிவு செய்தது. ``என் நந்தி`` என்றதனானே இது நாயனாரின் திருமொழியாதல் விளங்கும்.

குறிப்புரை :

இவ்வாழ்த்து இரட்டுற மொழிதலாகக் குருவையும், சிவனையும் ஒருங்கே வாழ்த்தியது. மலர் அறுத்தது நாயனார்க்கும் அவரோடு உபதேசம் பெற்றவர்கட்கும் என்க.
முதற்கண், `சிவ பரத்துவம்` எடுத்துக் கொடுத்து இடையிலேயும், அதனையே பல்லாற்றானும் வலியுறுத்தித் தம் குருவையும், பல இடங்களில் நினைவு கூர்ந்து, ஈற்றிலும் சிவன் பெயரையே கூறிச் சிவன் திருவடியையன்றி, மறந்தும் பிறிதொன்றை நினையாது அவனது நெறியை விளக்கிய நாயனாரது திருமொழியின் அமைப்பையும், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`` என்ற அவரது திருவுள்ளத்தையும் நினைந்து நினைந்து பயன் பெறுதல் அறிஞர் கடனாகும்.
ஒன்பதாம் தந்திரம் முற்றுப் பெற்றது.
பத்தாந் திருமுறையாகிய திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் தெளிவுரையும் இம்மூன்றாம் தொகுதியுடன் முற்றும் பெற்றன.
வாழ்க திருமந்திரம்! வளர்க சிவஞானம்!
திருமூல தேவநாயனார் திருவடிகள் வாழ்க! வாழ்க!
சிற்பி