ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திரத் திருவெண்பா


பண் :

பாடல் எண் : 1

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும், `யாக்கையின் நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறி வுறுத்துகின்றன). இவ்வெண்பா, `தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குக` எனக் கூறுகின்றது.
நீர்மை - தன்மை; `நடத்தலேயன்றி ஓடவும் இருந்த வலிமை நீங்க, மூப்பு வந்தவுடன்` என்றபடி. உற்றார் - பிறவியிலே அன்புடைய வராய்ப் பொருந்தினவர்; சுற்றத்தார்; மனைவி, மக்கள் முதலாயினார். `உற்றாரும்` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. கோடுகின்றார் - மனம் மாறிவிடுவர்; தெளிவினால் எதிர்காலம் நிகழ்காலமாகச் சொல்லப் பட்டது. `மூப்பும்` என்னும் உம்மை இளமையாகிய இறந்ததனைத் தழுவிற்று. `வரும்` என்று அஞ்சப்பட்ட அதுவும் வந்துவிட்டது - என்ற படி. நாடுகின்ற - மிகவும் விரும்பப்படுகின்ற. நல் அச்சு - வண்டியில் பளுவைத் தாங்குகின்ற நல்ல அச்சுப் போல்வதாகிய உடம்பு. அஃது இறுதலாவது, செயலற்று வீழ்தல். அம்பலம், யாவருக்கும் உரிய பொது இடம். அஃது மயானத்தைக் குறித்தது. `அம்பலமே` என்னும் பிரிநிலை ஏகாரம் செயலற்று வீழ்ந்த உடலுக்கு அது தவிர இடம் இன்மையைக் குறித்தது. `சிற்றம்பலமே` என்னும் பிரிநிலை ஏகாரம், `சேரத் தக்க இடம் பிறிதன்று என்பதை உணர்த்திற்று. `நல்நெஞ்சே` என்பதை முதலிற்கொள்க. `நல்வழியைப் பற்றுதற்கு உரியை` என்பது தோன்ற, `நல் நெஞ்சே` - என்றார். பின்னிரண்டடிகள் `திரிபு` என்னும் சொல்லணி பெற்றன. மேலும் இவ்வாறு வருவன காண்க.

பண் :

பாடல் எண் : 2

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடு - கடுக்காய்; `இது பித்தத்தைப் போக்குவது` என்பர். காடி - பழஞ்சோற்று நீர். இதுவும் அத்தன்மையாதலோடு உணவும் ஆகும். `வெடுவெடுத்தல்` என்பது போல, நடுநடுத்தல், நடுக்கத்தைக் குறித்ததோர் இரட்டைக் கிளவி.
நா அடங்குதல் - பேச்சு நீங்குதல். பொடி - சாம்பல். பாழ்க் கோட்டம் - அழிவிடம், மயானம். தென் குடந்தை - தென்னாட்டில் உள்ளதாகிய `திருக்குடமூக்கு` என்னும் தலம். தென், அழகும் ஆம், செப்பி - துதித்து. `கிட` என்றது `நிலைமாறுதலை விடுக` என்றபடி. இது முதலாக இனி வரும் வெண்பாக்களில் வேண்டும் இடங்களில் `நெஞ்சே` என்பது வருவிக்க. `முன்னம், முன்` என்பன செவ்வெண்.

பண் :

பாடல் எண் : 3

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குந்தி நடத்தல் - நெடுக நடந்துபோக இயலாமல் இடையிடையே குந்திக் குந்தி எழுந்து நடத்தல். `ஐ` இரண்டில் முன்னது கோழை. அது நுரைத்து, மேலே ஏறி, வெளி வந்து, ஓட்டெடுத்து வாய் ஆறு (வாய்வழியால்) பாயா முன்` என்க. ஐயாறு, சோழ நாட்டுத் தலம். தலப் பெயரைச் சொல்லுதலும் அங்குள்ள இறைவன் பெயரைச் சொல்லுதலோடே ஒக்கும். இனி, `ஐயாறு` என்பது ஆகுபெயரில் அங்கு எழுந்தருளியுள்ள இறைவனைக் குறித்தது என்றலும் ஆம், பின்னிரண்டடிகள் `மடக்கு` என்னும் சொல்லணி பெற்றன.

பண் :

பாடல் எண் : 4

காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காளை - கட்டிளைஞன். இஃது அப் பருவத்தைக் குறித்தது. கையறவு - செயலற்ற நிலை. ஐயுறவு - சந்தேகித்தல், அஃது, `இன்றோ, நாளையோ வாழ்வு முடிவது` எனப் பலரும் நினைப்பது. நாள் - இறுதி நாள். உம்மை, முன்னர்க் கூறிய வற்றைத் தழுவிநின்றது. நலிதல் - அடர்த்தல். இதற்கு வினை முதலான `கூற்றுவன்` எனத் தனித் தனி இயைக்க. `முகம்` என்றது தலையை. அதற்கும் `என்` என்பதனைக் கூட்டி, `என் முகம் (தலை) கவிழ்க; (வணங்குக) கை (கள்) கூம்புக` என்க. இதிலும் திரிபணி வந்தது.

பண் :

பாடல் எண் : 5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வஞ்சி - வஞ்சிக் கொடி. நுண்ணிடையார், தேவியார்; உயர்வுப் பன்மை. குஞ்சி - ஆடவர் தலை மயிர். அது விடாத ஆகுபெயராய், அஃது உள்ள தலையைக் குறித்தது. குறங்கு - தொடை. இது தேவியாருடையது. `தேவியார் உனது தலையைத் தமது தொடைமேற் கொண்டிருந்தது, - அருத்த ஒருத்தி கஞ்சி கொண்டு வா - என்னாமுன்` என்க. `அருத்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. திருத்துருத்தி, சோழநாட்டுத் தலம் இது, `குத்தாலம்` என வழங்குகின்றது.

பண் :

பாடல் எண் : 6

காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காலைக் கட்டி` என இயையும். கரையிழை - பழந்துணியின் ஓரத்தில் உள்ள கரையைக் கிழித்து எடுத்த நீள் வடம். இறந்தோரது இரு காற் பெருவிரல்களையும் இத்தகைய இழையாற் சேர்த்துக் கட்டுதல் வழக்கம். `தன்` என்றது. `தன் பிணத்தினது` என்ற படி. உடல் உயிருக்கு வேறாய் வீழ்ந்தமையின் பிறிதாகச் சொல்லப் பட்டது. கைகளையும் ஆட வொட்டாமல் கட்டுவர், ஆர்த்து - கட்டி. தலைக்கு மாலை சூட்டுதலும், கண்ணுக்கு மை யெழுதுதலும் பிணச் சிங்காரம். `மேல் மூடி` என்க. பருக் கோடி - பெரிய புத்தாடை. `பருக் கோடியால் மூடி` என்க. திருக்கோடிகா, சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 7

மாண்டு வாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே
வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் பாண்டவாய்த்
தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்காத்தல் - திறத்தல். வேண்டு வாயாகி - விரும்புதல் தன்மையை உடையையாகி. விரைந்து விரைந்து சென்று. ஒல்லை - சீக்கிரமாக. `பண்டு` என்பது முதல் நீண்டு `பாண்டு` என வந்ததாகக் கொண்டு. பண்டே அவாவி இடைவாய் மேலே சிவனார்` என்க. இனி, பாண்டத்தின் வாய் போலும் உனது வாயில் வைத்து` என்றலும் ஆம். தென் இடைவாய் - தென்னாட்டில் உள்ள `இடைவாய்` என்னும் தலம். சோழ நாட்டில் அண்மையில், `விடைவாய்` என்னும் தலத்து ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைக் கல்வெட்டிலிருந்து கண்டு சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்டது. * `இடைவாய்` என்பது அத்தலத்தின் மறுபெயராகலாம். அல்லது வேறொரு வைப்புத் தலமாகவும் இருக்கலாம். இவ்வெண்பாக்களில் வைப்புத் தலங்களும் சில காணப்படுகின்றன. நின்னிடை - நின்னிடமாக. வாய் வைத்தல், வாசகமாகக் கணித்தல். நினைதல் - மானதமாகக் கணித்தல். இவை ஒன்றின் ஒன்று மிக்கது.

பண் :

பாடல் எண் : 8

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துடிப்பு - இருதயத் துடிப்பு, நாடித் துடிப்பு முதலியன. பெட்ட - முன்பெல்லாம் பலராலும் விரும்பப்பட்ட. இது பழமையை நினைவு கூர்தல் கூறியது. பகர வொற்று விரித்தல். பேர், மாற்றுப் பேர். `அப்பனைக் கண்டேன், அம்மையைக் கண்டேன்` எனற் பாலனவற்றை. `அப்பாவைக் கண்டேன், அம்மாவைக் கண்டேன்` என்னும் நாட்டு வழக்குப் போல, `அத்தனை எடுங்கள்` என்பது `அத்தாவை எடுங்கள்` என வந்ததாகக் கொண்டு, இரண்டாம் உருபு விரித்துரைக்க. அல்லது, `அத்தா` என உரியவரை விளித்தது எனின், ஒருமைப் பன்மை மயக்கமாகும். இனி `அத்தான்` எனப் பாடம் ஓதி, `அத்தன்` என்பது நீண்டு வந்தது, எனினும் ஆம். இப்பொருட்கும் இரண்டன் உருபு விரிக்கப்படும். நெடுங்களம் சோழ நாட்டுத் தலம். ஏழை மடம், ஒரு பொருட் பன்மொழி.

பண் :

பாடல் எண் : 9

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரி - கெட்டுப்போன. கெட்டது மூப்பினாலும், பிணியினாலும். குரம்பை - குடில். குடில் போலும் உடம்பு. ஆங்கது, ஒரு சொல் நீர்மைத்து. ஆவி - உயிர். ஒழுகுதல் - ஓட்டைக் குடத்தி னின்றும் நீர் நீங்குதல் போல நீங்குதல். இது நீங்குதலே இயல்பாதலைக் குறித்தவாறு. அறிதல், இங்கு நினைத்தல் `கழித்து உண்டு அலையா முன்` என்றாரேனும், `அலைந்து உண்டு கழியாமுன்` என்றலே கருத் தென்க. தண்டலை - `தண்டலை நீணெறி` என்னும் தலம். இது `குழித் தண்டலை` என வழங்கினமை பெறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 10

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி யுண்ப துறும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படி - நிலவுலகம். `ஒரு வெண்குடை` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `கீழாக` என ஆக்கம் வருவிக்க. `படி` என முன்னர் வந்தமையின், `பாரெலாம்` என்றது, `அவற்றை யெல்லாம்` எனச் சுட்டுப் பெயரளவாய் நின்றது. `செல்வத்தின்` என ஒப்புப் பொரு, அல்லது உறழ் பொருப் பொருட்டாகிய ஐந்தாவது விரிக்க. `செல்வத்தின்` என்றே பாடம் ஓதலும் ஆம். மும்மை - மும் மடங்கு. `மும்மடங்கு உறும்` என முடியும். உறும் - நன்றாம். கடி - வாசனை. தோடு - இதழ். `கடியிலங்கு ..... உண்பது` என்பதனை முதலிற் கூட்டியுரைக்க. ஓடு ஏந்துதல், எந்தி இரத்தலாகிய தன் காரி யத்தைத் தோற்றி நின்றது. இந்நாயனார். மன்னர் எலாம் பணிசெய்ய அரசாண்ட பல்லவ மன்னராய் இருந்தும், `அரசை இன்னல்` எனத் துறந்தார் - என்று சேக்கிழார் கூறியதற்கு இவ்வெண்பாவும், இனி வரும் `தஞ்சாக மூவுலகும்` என்னும் வெண்பாவும் அகச்சான்றாய் நிற்றலையறிக.

பண் :

பாடல் எண் : 11

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எவர் ஒருவர் இறப்பினும் இறந்த அத்துக்கக் குழுவினர் இறந்தவரது குற்றங்களையெல்லாம் மறைத்து விட்டுக் குணம் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டுதல் வழக்கம். வழுவுதல் - நிலைகெடுதல். அங்கங்கள் - உடல் உறுப்புக்கள். `எல்லா வற்றையும்` என இரண்டாவதன் தொகை. `இருந்தும்` என்னும் உம்மையை வேறு வைத்து, அழுகை ஒலிக் குறிப்பாகக் கொள்க. `ஆனை` என்றது, காதல் பற்றி வந்த உபசார மொழி.* ஆ ஆ - அழுகை ஒலிக் குறிப்பு. தென் ஆனைக் கா - தென்னாட்டில் உள்ள `திரு ஆனைக் கா` என்னும் தலம். சோழ நாடு.

பண் :

பாடல் எண் : 12

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒத்து இருண்ட குஞ்சி` என்க. `குயில் ஒத்து இருண்ட` என்பதனோடு இயைய, `கொக்கு ஒத்து வெளுத்த` என்பது வருவிக்க. பயில - அடிக்கடியாக. முதுமையில் கோழை மிகுதலால், இருமல் அடிக்கடியெழுவதாம். புன்னையங் கானல் - புன்னை மரங்கள் மிக்குள்ள கடற்ரை. மயிலை - மயிலாப்பூர், இது தொண்டை நாட்டுத் தலம். இஃது இங்குள்ள திருக்கோயிலைக் குறித்தது. இக் கோயில் `கபாலீச்சரம்` என்னும் பெயருடையது.
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்.
என்னும் அற்புதத் திருப்பதிக அடிகளைக் காண்க. பின்னை, யாதும் இயலாத இறுதிக் காலம். அங்காந்து - (துயரத்தால்) வாயைத் திறந்து கொண்டு (உயிர் போய்விட,) `இரு - காண் போர் இரங்கக் கிட` என்ற படி `இப்பொழுதே சிந்திப்பாயாயின் இந்நிலைவாராது` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 13

காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈளையர்கள்` என்றது, முதுமையெய் தினமையைக் குறிப்பால் உணர்த்தியது. பூளை - பூளைப் பூ. இது வெண்ணிறம் உடையது. பொங்குதல், படியாது விரிதல். சூளையர்கள்- எரிகொளுவச் சூழ்ந்திருப்பவர்கள். ஓகாளம் செய்தல், அருவருப்பால், முன் உண்டதைக் கக்குதல். உஞ்சேனை - உச்சயினி; இது வட நாட்டில் உள்ள ஒரு நகரம். இதன்கண் உள்ள கோயிலும் `மாகாளம்` எனும் பெயரினது. இஃதொரு வைப்புத் தலம். `நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்` 2 `உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்` 3 என்னும் தேவாரத் திருமுறைகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 14

இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே நல்ல
கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இல் - இல்லாள். மனை - இல்லம். சொல் - இறந்தமை பற்றிய இரங்கிச் சொல்வனவும், தேற்று வனவும். துடிப்பு, வந்து கண்டு நீங்குவதில்` உள்ள கடமையுணர்ச்சி. கிளை - சுற்றம் கிற்றியே - இதனை அறிய வல்லாயோ? ஏகாரம் வினாப் பொருட்டு. வாழ் முதலாகக் கருதியிருந்த பொருள்களுள் ஒன்றேனும் (உடன் வருவதில்லை) என்பது கருத்து. `கிற்றியேல் வாழ்த்து` என்பது குறிப்பு. `கிற்றி யேல்` என்றே பாடம் ஓதுதலும் ஆம். வளைகுளம் ஒரு வைப்புத் தலம்.

பண் :

பாடல் எண் : 15

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அஞ்சனம் - மை மையெழுதிய கண்ணார், மகளிர். பதம் - நிலைமை `வெளுத்து` `வெளுக்க` எனத் திரிக்க. `அரு வருக்கப்படுவதும் உடலமே` என்க. கோடுதல் - வளைதல்; கூன் விழுதல், கூடப்படுங் காடு சுடுகாடு. புலம்புதற்கு, `பலர்` என்னும் எழுவாய் வருவிக்க. காடு போய்க் கூடவிட, பின்னர்ப் பலர் இருந்து புலம்பாமுன்` என்க. `பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காடு` எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 16

இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச்
சட்டவொரு முட்டைநெய் தான்கலந் தட்ட
அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முட்டை, முட்டை வடிவமாக எண்ணெய் முகப் பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை. ஒரு முட்டையளவான விளக்கெண்ணெயை இருநாழியளவு நீரிற் கலந்து, அதனை ஓர் உழக்களவாகச் சுவறக் காய்ச்சி யெடுத்ததை `உடலுக்கு நல்லது` என ஊற்றப் பிறர் முயலுவர்.
அட்ட - காய்ச்சி எடுக்கப்பட்ட. அருவாய்ச் சாறு - அரிய சாறு; கசாயம். வாய் - வாயில் ஊற்றச் தக்க. `சாறு` என்பதன் பின், `குடியுங்கள்` என்பது வருவிக்க. என்று சொல்லி அழுபவர்கள், சுற்றத்தார். திருப்பாச்சில் ஆச்சிராமம் சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 17

கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உயிர் போயது நேற்றையது; அதனால் உடல், கட்டுக்களெல்லாம் தளர்ந்து நாற்றம் எடுத்து விட்டது. இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அஃது அழிந்து விட்டது. ஆகவே, உறவினனான ஐயா, இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ என்று அயலார் பலரும் சோல்லுவதற்குமுன், நெஞ்சே, திருச்சிராமலையில் உள்ள சிவன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்று.
`நன்னெற்று` என்பது பாடம் அன்று. `கழிந்தது` என்பதற்கு, `உயிர்` என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. சிராமலை, திருச்சிராப் பள்ளிக் குன்று.

பண் :

பாடல் எண் : 18

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இழவு ஆடுதல் - இழவு கொண்டாடுதல். விழவு ஆடுதல் - விழாக் கொண்டாடுதல். விழா, பிண விழா. `ஆடி` என்ப வற்றை `ஆட` எனத் திரித்துக் கொள்க. `இழவாடி` என்பதனை, `விழா வாடி` என்பதற்கு முன்னே கூட்டுக. மழபாடி, சோழநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 19

உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உள்ளுதல் - நினைத்தல். அதனுடன் `இடு` என்னும் அசையிடைச் சேர்ந்து, `உள்ளிடை` என வந்தது. தான், அசை. உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ. கள் இடம் - களவான காலம். அஃதாவது உயிர் சோர்வுற்றிருக்குங்காலம், `கள் இடத்தான்` என்னும் ஆன் உருபு ஏழாவதன் பொருளில் வந்தது. `காலத்தினாற் செய்த நன்றி` * என்பதிற் போல. திருஆப்பாடி சோழ நாட்டுத் தலம். திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன். `தாள் உள்ளிடவல்லையே` என மேலே கூட்டுக. `கலவா முன் உள்ளிட வல்லையே எனவும் இயைக்க. `வல்லையே` என்னும் வினா, `வல்லையாயின் நன்று` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 20

என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் வன்னஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரத்தல், குறையிரத்தல், உம்மை, இழிவு சிறப்பு. கன்னம் - செவி. அதனைச் செய்தலாவது, செயற்படச் செய்தல்; கேட்டல் `செவிசாய்த்தல்` என்றலும் வழக்கு. `காலத்தால்` என்பதனை, மேல், `கள்ளிடத்தான்` என்றதனைக் கொண்டவாறு கொள்க. வல் நஞ்சு ஏய் - கொடிய நஞ்சு போன்ற. நஞ்சுய் ஆனை, மா ஆனை, கம்பத்து ஆனை` எனத் தனித்தனி இயையும். மா - பெரிய கம்பத்து - அசைதலையுடைய கச்சி. காஞ்சி. ஏகம்பம் அத்தலத்தில் உள்ள கோயில்.

பண் :

பாடல் எண் : 21

கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரமூன்றி வாய்குதட்டா முன்னம் புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரம் - கை. முதுமையில், எழும் பொழுது எழுந் திருக்க இயலாமல் கைகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு எழுதலும், ஒளியை முற்ற வாங்க முடியாமல் கண் கூட இடுக்கிப் பார்ப்பதும், நடக்க முடியாமல் கால்கள் தள்ளாடுதலும், அவை தள்ளாடாமைப் பொருட்டுக் கோல் ஊன்றி நடத்தலும், பல் இல்லாமையால் வாயைக் குதட்டுதலும் இயற்கை. மரம், கோல். மற்று, வினைமாற்று. தீச்சரம் - தீக்கடவுளாகிய அம்பு. திருப்பனந்தாள், சோழ நாட்டுத்தலம். தாடகை யீச்சரம், அதில் உள்ள கோயிலின் பெயர்.

பண் :

பாடல் எண் : 22

தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தஞ்சம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து, `தஞ்சு` என நின்றது. தஞ்சம் - எளிமை. தலையளித்தல் - குடிகளை நன்கு காப்பாற்றுதல், எஞ்சாமை - அங்ஙனம் காப்பதில் இளையாமை. அத்தகைய பேற்றினைப் பெற்றாலும் அதனை வேண்டேன்` என்க. `கரந்து உண்ட` என்பதை `உண்டு கரந்த` என முன்பின்னாக வைத்து விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. ஒற்றியூர் - தொண்டை நாட்டில் உள்ள கடற்கரைத் தலம். `ஓடு ஏந்தி இரந்து உண்டல்` என்பது துறவு வாழ்க்கையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 23

நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவம் கேட்ட பகல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நூற்று அனைத்து - நூற்றுக் கணக்கான. ஓர் நூற்றனைத்து` என மாற்றி, `ஓர்` என்பதனை நூற்றுக்கு அடையாக்குக. `பல் ஊழி வீற்றிருந்த` என்க. நுண்வயிரம் - நுண்ணிய ஒளியை யுடைய வயிரம் - `செல்வம்` என்பது, செல்வத்தோடு வாழ்ந்த காலம். பாடு அரவம் கேட்ட காலத்தை விழையாது` என்க. விழையாது. ஒவ்வாது. `அரவம்` இரண்டில் முன்னது பாம்பு; பின்னது ஓசை. `அம்மான் தன்னை` என்னும் இரண்டாம் உருபு தொகுக்கப்பட்டது. இதில் தலம்யாதும் குறிக்கப்படவில்லை. அதனால், `கூற்று உதைத் தான்` என்ற குறிப்பினால், `திருக்கடவூர் கூறப்பட்டது` எனலாம்.

பண் :

பாடல் எண் : 24

உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உய்யும் மருந்து - இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்து. உற்றார் - சுற்றத்தார் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை. கண் தெரியாமையால் வருவது. பைய எழுந்து - மெல்ல எழுந்து. `யான் வேண்டேன்` என்றல், உண்ண முடியாமை யால். `திருமயானம்` என்பது சில தலங்களில் உள்ள கோயில்களின் பெயராய் அமைந்துள்ளது. கச்சி மயானம், கடவூர் மயானம், நாலூர் மயானம் - இவை காண்க.
சேத்திரத் திருவெண்பா முற்றிற்று.
சேத்திரத் திருவெண்பா குறிப்பிடும் சிவதலங்கள். தில்லைச் சிற்றம்பலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருஇடைவாய் திருநெடுங்களம், திருத்தண்டலைநீணெறி, திருஆனைக்கா, திருமயிலை, திருஉஞ்சேனைமாகாளம், திருவளைகுளம், திருச்சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி திருமழபாடி, திருஆப்பாடி, திருக்கச்சியேகம்பம், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்).
சிற்பி