நக்கீரதேவ நாயனார் - கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி


பண் :

பாடல் எண் : 1

சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் - சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பெற்று`` என்பதை ``விளக்கா`` என்பதன்பின் கூட்டுக.
`ஆக` என்னும் உருவக உருபு ஈறு குறைந்து நின்றது.
வெண்பாவை விளக்காகக் கூறியது புற இருளைப் போக்கும் விளக்குப் போல் அக இருளாகிய அஞ்ஞானத்தை நீக்குதல் பற்றி.
அதனால், இப்பிரபந்தத்தால் பெறும் பயன் அஞ்ஞான இருள் நீங்க, மெய்ஞ்ஞான ஒளியைப் பெறுதலாயிற்று.
இடிஞ்சில் - அகல்.
எரிகின்ற திரிக்கு முதல் நெய்யாதல்போல விளங்குகின்ற சொல்லுதல் முதல் பொருளாதல் பற்றி அவற்றை முறையே திரி நெய்களாகவும், நெய்யிற் பொருந்தி எரியும் திரிக்கு நிலைக்களன் அகலாதல் போலப் பொருளை விளக்கும் சொல்லுக்குநிலைக்களன் நாவாதல் பற்றி அதனை அகலாகவும் திரி, நெய், அகல் இம்மூன்றா னும் தோன்றுவது (ஒளிர்வது) விளக்காதல் போலச் சொல், பொருள், நா இம்மூன்றானும் தோன்றுவது இப்பிரபந்த வெண்பாக்கள் ஆதல் பற்றி அவற்றை விளக்காகவும் உருவகித்தார்.
சிவனுக்குச் செய்யும் திருப்பணிகளுள் திருவிளக்கேற்றும் பணி சிறப்புடைத்து.
எனினும் புற இருளை நீக்கும் விளக்கை ஏற்றுதலிலும் அகஇருளை நீக்கும் இவ்விளக்கை ஏற்றியது மிகச் சிறந்த பணியாதலையறிக.
வியல் - அகலம்.
அஃது உரிச் சொல் ஆதலின், அதன் ஈற்று லகரம் னகரமாய்த் திரிதல் புறநடையாற் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 2

பெற்ற பயன்இதுவே யன்றே பிறந்தியான்
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்
காளாகப் பெற்றேன் அடைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`யான் பிறந்து பெற்ற பயன் இதுவே` என மாற்றி, அதனை இறுதியிற் கூட்டுக.
`அம்மானையடைந்து அவனுக்கு ஆளாகப் பெற்றேன்` என்க.
கொற்றவர் - அரசர்; உடையவர்.
``ஆடு அரவம்``, வினைத்தொகை.
``சூழ்ந்து`` என்பதன்பின் `இருக்க` என ஒரு சொல் வருவிக்க.
அன்றி, ``சூழ்ந்து`` என்பதனைப் பிறவினை யாகக் கோடலும் ஆம்.
ஆகம் - உடம்பு.
அது முதலாகு பெயராய் அதன் உறுப்பைக் குறித்தது.
`ஆடு அரவத்தைத் தோளாகிய ஆகத்தில் சூழ்ந்து இருக்க அணிந்த அம்மான்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 3

அடைந்துய்ம்மின் அம்மானை உம்ஆவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றங்கு - அடைந்துநும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்
தண்ணலே கண்டீர் அரண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவ்வம்மானை அடைந்து, உய்ம்மின்` எனச் சுட்டு வருவித்து மாற்றி, இறுதிக்கண் கூட்டி யுரைக்க.
``அடைந்து`` என்றது, `அதற்கு முன்னே அடைந்து` என்றபடி.
எனவே, `அதற்குமுன்னே` என்பது சொல்லெச்சமாம்.
குடைதல் உள்ளகத்துப் பற்றின்றி நீங்க வாங்குதல்.
உண்ணுதல், அழித்தலைக் குறிக்கும் இலக்கணைச் சொல் அங்கு - உண்ணுதற்குரிய காலத்தில்.
``நுங்கண்` என்பதில் கண், ஏழன் உருபு.
`எண்ணிய கூற்று, எண்ணியதனை முடிக்க உள்ளிடத்தைப் பார்க்கும் என்க.
கண்டீர், முன்னிலையசை.
அரண் - பாதுகாப்பு.

பண் :

பாடல் எண் : 4

அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் - சரணமே
காணுமால் உற்றவன்றன் காளத்தி கைதொழுது
பேணுமால் உள்ளம் பெரிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆர் அழல் - தணித்தற்கு அரிய நெருப்பு.
முரண் - வலிமை.
சரணம் - பாதம்.
காணும் மால் - காண எழுந்த மயக்கம் - பித்து; பேரவா பேணும் - மறவாது நினைக்கும்.
`உள்ளம் பெரிது பேணும்` என இயைக்க ஆல், அசை.

பண் :

பாடல் எண் : 5

பெரியவர் காணீர்என் உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த திடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெரியவர் - பெரியவர்களே, (சிவனடியார்களே) இஃது அண்மை விளி.
காணீர் - அறிமின் இதனை இறுதிக்கண் கூட்டுக.
இருத்துதல் - இருக்கவைத்தல் ``இடம் போந்தது`` என மாற்றுக.
போந்தது - அமையப் பெற்றது.
`திருக்கயிலைக் கோனை இருத்துதற்கு மட்டுமே இடம் அமையப் பெற்றது; மற்றொன்றை இருத்த இடம் அமையப் பெறவில்லை; இஃது என் உள்ளத்தின் பெற்றி; காணீர்` என வினை முடிக்க.
பெற்றி - தன்மை.
`சிவபெருமானைத் தவிரப் பிறிதொன்ற நினையாத தன்மையுடைத்து` என நெஞ்சின் தன்மையைக் குறிப்பால் வியந்தவாறு.
பிறிதொன்றற்கு இடம் அமையப் பெறாமையைக் குறை போலக் கூறினமையின்.
இது பழிப்பதுபோலப் புகழ்த்திறம் புனைந்ததாம்.
பெரிதும் தக்கோர் - மிகவும் தக வாய்க்கப் பெற்றவர்.
திரு - திருவருள்.
`திரு பெரிதும் தக்கோர்` என மாறிக் கூட்டுக.
``திருத்தக்கோர் ஏத்தும்`` என்றமையால், முன்னர், ``தெரிவரிய`` என்றது.
திருவாய்க்கப் பெறாதவரை நோக்கியாயிற்று.

பண் :

பாடல் எண் : 6

இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே யானால் - விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க்
கொருவடிவே அன்றால் உரு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விடப்பால் - நஞ்சு பொருந்திய பகுதி.
`விடப் பாலாய்` என ஆக்கம் வருவிக்க.
வடி - வடிவு; கடைக் குறை.
``பாகம்`` என்பது ஆகுபெயராய், பாகமாகிய வடிவையே குறித்தது.
`இடப்பாகமாகிய வடிவம் பாவை வடிவேயானால், காளத்தி ஆள்வார்க்கு உரு ஒருவடிவே யன்று` (இருவடிவு) என்பதாம்.
இமம் - பனி.
அஃது ஆகு பெயராய், அதனை உடைய மலையைக் குறித்தது.
நீள் கோடு - உயர்ந்த சிகரங்கள்.
இது `பனி` என்னும் ஆகுபெயரைச் சிறப்பியாது, அதன் பொருளைச் சிறப்பித்தலின், ``நீள் கோட்டு இமம்`` என்றது, இரு பெயரொட்டு ஆகுபெயர், அல்லது பின்மொழியாகுபெயர்.
இம வான் - இமமலையைத் தனதாக உடையவன்; மலையரையன்.
மடம்- இளமை.
தன், சாரியை.
``ஆனால்`` என்பது தெளிவின்கண் வந்தது.

பண் :

பாடல் எண் : 7

உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கையிற்கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சும்
மாக்கயிலை என்னும் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கொண்டு`` - என்பது, `கொள்ளுதலால்` எனக் காரணப் பொருளில் வந்த செய்தென் எச்சம் ``அரிது`` என்பது அப் பண்பின்மேல் நின்று ஆகுபெயராய் அதனை உடையானைக் குறித்தது.
பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களுடன் தோன்றுதலால், அவனை, இன்ன உரு உடையன்` என அறுதியிட்டுணர்தல் அரிது` என்பதாம்.
பால் - இடம்.
`ஒருபால் ஆக` என ஆக்கம் விரிக்க.
இருக்கை - இருக்குமிடம்.
ஒருபாலாக இருக்கை - என்றும் நீங்காது நிலையாய் இருக்குமிடம்.
மரு - நறுமணம்.
`கையில்` என்பது `கயில்` எனப் போலியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 8

மலைவரும்போல் வானவரும் தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக்
கண்டமையால் தண்சாரற் காளத்தி ஆள்வார்நஞ்
சுண்டமையால் உண்டிவ் வுலகு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மலைவு அரும்போர் - வேறு இரு திறத்தினர் செய்தற் கரிய போர்.
அதனையுடையார் வானவரும், தானவரும்.
`மாலை வரும் போல்` என்பது பாடம் அன்று.
`வானவரும், தானவரும் ஆகிய எல்லாரும்` என்க.
எனவே எஞ்சினார் ஒருவரும் இல்லையாயிற்று.
``எல்லாம் அஞ்சி நிலை தளர` என்றது, உலகம் நிலையாது அழியும் நிலையாமையைக் கண்ட காரணத்தால் அவர்கள்மேல் அருள் மீக்கூரச் சிவபெருமான் நஞ்சினை உண்டான்` என்றற்கு, ``கண்டமையால் நஞ்சு உண்டமையால்`` என்றார்.
`காளத்தி ஆள்வார் நஞ்சு உண்டமையாலே இவ்வுலகு உளதாயிற்று` என்பது இனிது விளங்குதற்பொருட்டு முன் இரண்டு அடிகளைக் கூறினார்.
``உலகு`` என்றது உயிர்த் தொகுதியை `உண்டாயிற்று` என ஆக்கம் வருவிக்க.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
என உலகத்தின் நிலைபேற்றிற்கு கண்ணோட்டத்தினைக் காரணமாகக் கூறிய திருவள்ளுவர்,
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
எனக் கண்ணோட்டத்தினைச் சால்பாகிய பாரத்தைத் தாங்கும் தூண்களுள் ஒன்றாகக் கூறி,
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
என, `சான்றோர் தனது சான்றாண்மையைக் கைவடின் உலகம் நிலை கலங்கிவிடும்` எனக் கூறியதையும், `கண்ணோட்டத்தின் மேல் எல்லை நண்பர் பெயக் கண்டும் நஞ்சினை உண்டு அமைதலே` எனக் கூறியதையும் ஊன்றியுணர்வார்க்கு இவ்வாசிரியர், ``காளத்தி ஆள்வார் நஞ்சு உண்டமையால் உண்டிவ் வுலகு`` எனக் கூறியது சிறிதும் வியப்பினைத் தராது.
`சிவபெருமானது திருவருளானே உலகம் உள்ளது` என்பது இவ்வெண்பாவின் ஆழ்ந்த பொருள்.

பண் :

பாடல் எண் : 9

உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
திலக மெனப்பெறினும் சீசீ - இலகியசீர்
ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
பேசா திருப்பார் பிறப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எம்பெருமான்`` என்றதும், ``ஈசா`` என்றதுபோல `எம்பெருமானே` என விளியேயாம்.
அடுக்குப் பன்மை பற்றி வந்தது.
பேசுதல், இங்குத் துதித்தல்.
`துதியா திருப்பார் பிறப்புப் பிறவகையில் எல்லாம் உலகில் சிறந்து விளங்கிற்றாயினும் கண்ணிலா முகம்போல அருவருக்கப் படுவதேயாம்` என்றபடி.
`சீசீ எனப்படுவதே` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 10

பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடைய ரானாலும் சீசீ - இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணா தவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிறப்பு - குலம்.
அது தலைமை பற்றி மேற் குலத்தைக் குறித்தது.
கற்றோர் - மிகக் கற்றவர்.
``சீசீ`` என்பதற்கு, மேல் உரைத்த வாறு உரைக்க.
இறப்பு - உயர்வு.
`தன்னின் உயர்ந்ததில்லாத காளத்தி யாகிய தலம்` என்க.
கடி - நறுமணம்.
நறு - நல்ல.

பண் :

பாடல் எண் : 11

அவரும் பிறந்தாராய்ப் போவார்கொல் ஆவி
எவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழுது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிலர்` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, `பொழுது வாளா போக்குவார்; அவரும் பிறந்தாராய், ஆவிபோவார் கொல்`- என இயைத்து முடிக்க.
``ஆவி போவார்`` என்றது, ``இறப்பர்` என்னும் பொருட்டாய், `இறத்தற்கே பிறந்தான்போலும்` எனப் பொருள் தந்தது.
``பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக் கின்றாரே`` என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டு நோக்குக.
கொல், ஐயம் இன்றாயினும் உள்ளது போலக் கூறினமை யின் ஐயப் பொருட்டு.
``அவரும்`` என்னும் உம்மை, `ஏத்துவாரோடு` என இறந்தது தழுவிற்று.
சிவம் - மங்கலம்.
தேக்கு, ஒரு வகை மரம்.
வார் நீண்ட.

பண் :

பாடல் எண் : 12

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கோளர்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மானுடவர்`` என்பதை முதலிற் கொள்க.
பொழுது- கிடைக்கப் பெற்றுள்ள காலம், `அதனை வாளா கழிக்கின்றார்; அந்தோ! கிறிப்பட்டார்; கண்ணப்பராவார் கதை கேளார்கொல்` என இயைத்து முடிக்க.
காலம் இல்லாமற் போகவில்லை; கேட்டலைச் செய்தல் அரிதன்று; ஆயினும் கேட்டுப் பயனடைகின்றிலர்; கிறி - பொய்; உலக வாழ்க்கை.
`கிறிக்கண்பட்டார்` என ஏழாவது விரிக்க.
அந்தோ, இரக்க இடைச் சொல், ``ஆவார்`` என்பது எழுவாய் வேற்றுமைச் சொல் லுருபு.
``ஆவார்`` என்ற எதிர்காலம் முக்காலத்திற்கும் பொதுவாய் நின்றது.
`ஒருபோதும் கேளார்போலும்` எனப் பொருள் தந்து நிற்ற லின், ஐயப் பொருட்டு, `கண்ணப்பர் கதையைக் கேட்டலாகிய சிறு முயற்சியைச் செய்து பெரும்பயன் பெறலாய் இருக்க.
ஆறறிவு படைத்த மக்களிற் பலர் அதனைச் செய்யாது காலத்தை வீணே கழிக்கின்றனர்` என இரங்கியவாறு.
கீள் - அரைநாண் அளவாகக் கட்டும் சீலை.
`கீளாகிய ஆடை` என்க.

பண் :

பாடல் எண் : 13

கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும் சென்று - சிதையாச்சீர்த்
தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பண்டு பார்த்தன் இருட்கண் கயிலாயம் நோக்கி மாலோடும் போய்த் தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில் வென்றிலனோ! (அதனைக்) கதையிலே கேளீர் என இயைத்து முடிக்க.
கதை, பாரதக் கதை.
பார்த்தன் (அருச்சுனன்) முதற்கண் பெற்ற பாசுபதாத்திரத்தை இந்திரன் பொருட்டாக, `நிவாத கவசர், கால கேயர்` - என்னும் அசுரர்மேல் ஏவி அவர்களை அழித்ததனால் அவ் அத்திரம் மீண்டு கயிலாயத்திற்குச் சென்றுவிட, மறுபடியும் அவன் பதின்மூன்றாம் நாட்போர் முடிந்தபின் இரவில் கண்ணனுடன் கயிலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி அவ்அத்திரத்தைப் பெற்று வந்து, பதின்மூன்றாம் நாட்போரில் தான் செய்த சபதப்படியே, தன்மகன் அபிமன்னுவைக் கொன்ற சயத்திரதனைப் பதினாலாம் நாள் சூரியன் மறைவதற்குள் கொன்று வெற்றி பெற்றான்.
இக்கதையே இவ் வெண்பாவிற் குறிக்கப்பட்டது.
அருச்சுனன் சயத்திரதனைக் கொன்றதில் ஓர் அதிசயம் உண்டு.
அருச்சுனன் செய்த சபதத்தைக் கேட்டுச் சயத்திரதன் தந்தை, `தன் மகனை நாளைப் பகலுக்குள் எப்படியும் அருச்சுனன் கொன்று விடுவான்; அவனுக்குச் சிவன், மால் இருவர் துணைகளும் உண்டு` என்று அஞ்சி, சமந்த பஞ்சக மடுவில் இறங்கி, `என் மகன் தலையைத் தரையில் எவன் வீழ்த்துகின்றானோ அவன் தலை அப்பொழுதே சுக்கு நூறாய் வெடித்துச் சிதறுக` என மந்திரம் செபித்துக் கொண்டிருந்தான் இறுதி நிலையில் அருச்சுனன் சயத்திரதன் தலையை அம்பினால் வீழ்த்த முயன்ற பொழுது, கண்ணன், `இவன் தலையை வீழ்த்துதல் மட்டும் உனக்கு வெற்றியாகாது; அந்தத் தலை மடுவில் செபம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தை கையில் போய்ச் சேர வேண்டும்` என்றான்.
அருச்சுனன் அப்பொழுது பாசுபதாத்திரத்தை எடுத்து மந்திரித்துத் தன் கருத்தை முடிக்க வேண்டி ஏவ, அது சயத்திரன் தலையைக் கொய்து கொண்டுபோய் கண்ணைமூடிக் கொண்டு செபம் செய்யும் அவன் தந்தை கையில் சேர்த்தது.
அவன் `ஏதோ பொருள்` என்று அந்தத் தலையைத் தரையிலே விடுத்தான்.
அதனால், அவனது மந்திர செபம் அவனுக்கே பலிக்க, அவன் தலை சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியது.
இச்செயல் பாசுபதம் இல்லையேல் அருச்சுன னால் செய்திருக்க முடியாது அதனையே, ``பாசுபதம் பெற்றுப் பார்த்தன் போர் வென்றிலனோ பண்டு`` என இவ்வாசிரியர் சிறந் தெடுத்து மொழிந்தார்.
`பெருமானை வணங்குவோர் செயற்கரிய செயலையும் செய்ய வல்லராவர்` என்பது இதன் கருத்து.
புதை யிருள் - மிக்க இருள்.
மால், கண்ணன்.
தீர்த்தன் - பரிசுத்தன்; சிவபெருமான்.
பார்த்தன் - அருச்சுனன்.

பண் :

பாடல் எண் : 14

பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்
டாளத் தயாஉண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தி யாய்உன் கருத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பண்டு`` என்றது இளமைக் காலத்தை.
`தொடர்ந்து பாவித்தும்` என ஒருசொல் வருவிக்க.
பாவித்தல் - நினைத்தல்.
இளமை தொட்டே இடைவிடாது நினைத்து வருதலை இவ்வாறு கூறினார்.
உம்மைகள் எண்ணும்மைகள்.
தொடர்தல் - பற்றி நிற்றல்.
``கண்டுகொண்டு`` என்பதில் கொள்.
தற்பொருட்டுப் பொருண்மை விகுதி - அதனால், `பிறர் வலிந்து காட்டாது, நீயே கண்டு` என்றாதா யிற்று `வலிந்து காட்டின் தயா இல்லையாகும்` என்பது பற்றி, `நீயே கண்டு கொண்டு ஆள வேண்டு` என்றார்.
``சொல்லாயே`` என்பதை இறுதியிற் கூட்டுக.
ஏகாரம் இரண்டனுள் முன்னது பிரிநிலை.
பின்னது அசை.

பண் :

பாடல் எண் : 15

கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர்
அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ
நெறிவார் சடையாய் நிலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``காண் தக்கோர் காண`` எனப் பின்னர் வருதலால், முன்னர், ``கருத்துக்கு`` என்றது `காணத் தகாதார் கருத்துக்கு` என்றதா யிற்று.
தகுதி அன்பு.
``காண்டற் கரிய கடவுள் கண்டாய்;
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்.
`` * என்ற அப்பர் திருமொழியையும் காண்க.
இருத்தி - இருக்கின்றாய் `திருக்கயிலைக்கண்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
`அறிவான் உறுவார் ஒருத்தர்க்கு` எனப் பின்முன்னாக வைத்து, உருபினை மாறிக் கூட்டுக.
அறிவான் - அறிதற்கு.
உறுவார் - முயல்வார், ``நிலை அறியு மாறு உண்டோ` என முன்னே கூட்டி முடிக்க.
``நெறி`` என்பது, ``சடை`` என்பதனோடு, `நெறித்த` என இறந்தகால வினைத்தொகைப் பொருட்டாய்த் தொக்கது.
நெறித்தல் - மேடும், பள்ளமுமாய், நீண்டு வளர்தல்.
வார் - நீண்ட, உரிச்சொல்.
``கடையாய்`` என்பது, முன்னிலை வினைக் குறிப்புப் பெயர்.
`சடையாயது நிலை` என ஆறாவது விரிக்க.
`நிலையை` என இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.
தகுதியில்லார்க்கு ஓரிடத்தும் காணப்படாது, தகுதியுடை யார்க்கும் திருக்கயிலையிலே காணப்படுகின்றாய்.
என்றால், `இவ்வுலகிலே உன்னைக் கண்டுவிடலாம்` என நினைதல் எங்ஙனம் கூடும் - என்பதாம்.

பண் :

பாடல் எண் : 16

நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன் - தொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தேஇப் பாசத்தை விட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புத்தேளிர் வேந்து`` என்பது, `சிவன்` என்னும் ஒரு சொல் தன்மைத்தாய் நின்றது.
``தலைவ`` என்பதனையும் ``வேந்தே`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
நிலை இல் பிறவி - ஒன்றாய் நில்லாது, பலவாய் விரைவில் மாறுபட்டு வரும் பிறவி.
நெடுமை, பெருமை குறித்தது.
சுழி - சுழல்.
தொலைவு இன்றி - அழிவு இல்லையாம்படி.
`கரை` என்பது வருவித்து, `கரை போந்து ஏற` என்க.
நீரில் வீழ்ந் தாரைக் கரையில் நிற்போர் கைகொடுத்தே கரையேற்றுவர்.
ஆதலின், ``கை தாராய்`` என்றார்.
`இப்பாசத்தை விட்டுப் போந்து ஏற` என்க.
இப்பாசம், உலக வாழ்ககை.

பண் :

பாடல் எண் : 17

பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழேஎன்
நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தை
நீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக்
காக்குமா றித்தனையே காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நேசம் - அன்பு.
``பாசத்தை விட்டு`` என்றது, `பாசத்தின்மேல் நேசத்தை வைத்தலை விடுத்து` என்றபடி.
எனவே, ``பாசம்`` என்றது உடம்பினையும், அதனோடு தொடர்புபட்ட பொருள்களையும் ஆயிற்று.
``கீழ்`` என்றது ஆகுபெயராய்.
`நிழல்` எனப் பொருள் தந்தது.
`கீழின் கண்ணே` என ஏழாவது விரிக்க.
ஏகாரம், பிரிநிலை.
`நீக்குமாறு` என்பது கடைக்குறைந்தது செய்யுள் முடிபு.
`நினை` என்றதனால்.
`நீ நினையாவிடில் அது கூடாது` என்பதும், `நினையின் தப்பாது கூடும்` என்பதும் பெறப்பட்டன.
``இத் தனையே`` என்றது, `இஃது ஒன்றே அனைத்தையும் தரும்` என்பது பற்றி காண், முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 18

காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
பூணார மார்பன்றன் பொற்பாதம் - நாணாதே
கண்டிடுவான் யான்இருந்தேன் காணீர் கடல்நஞ்சை
உண்டிடுவான் றன்னை ஒருங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இவ்வெண்பாவினை, ``அன்பரீர்`` என, அடியவரை முன்னிலைப்படுத்து உரைக்க.
`காளத்தியான் பாதம் காணாது வானோர்கள் அலக்கின்றார்` யான் நாணாதே அவனை ஒருங்கு காண இருக்கின்றேன்` என இயைத்து உரைக்க.
காணீர், முன்னிலையசை.
அலக்கின்றார் - அலமருகின்றார்.
ஆரம், பாம்பாகிய ஆரம், பொற் பாதம், உவமத் தொகை.
நாணுதலினின்றும் பிரித்தலின் ஏகாரம் பிரி நிலை.
``உண்டிடுவான்`` என்றது, `உண்ண வல்லவன்` என்றபடி மேல், ``பூண் ஆர மார்பன்`` என்றமையால், ``கடல் நஞ்சை உண்டிடு வான்`` என்றது `அவன்` என மேலே கூட்டி முடிக்க.
கண்டிடுவான், வான் ஈற்று வினையெச்சம்.
``இருந்தேன்`` என, முக்கால வினை இறந்த காலத்தில் வைத்துச் சொல்லப்பட்டது.
`வானவர் பாதத்தையே காணாது அலக்கின்றார்; யான் நாணாதே முற்றுங்காண இருக்கின் றேன்` என்றதனால், `இஃது என் அவா இருந்தவாறு` என்பது குறிப் பெச்சமாயிற்று.
`ஆசை வெட்கம் அறியாது` என்பது பழமொழி.

பண் :

பாடல் எண் : 19

ஒருங்கா துடனேநின் றோர்ஐவர் எம்மை
நெருங்காமல் நித்தம் ஒருகால் - நெருங்கிக்
கருங்கலோங் கும்பற் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒருங்காது - ஒரு முகப்படாமல் (அவரவர் விரும் பியபடியே) உடனே - கூடவே.
ஐவர், ஐம்புல வேடர்.
``நெருங்குதல்`` இரண்டில் முன்னது வலிசெய்து வருத்துதல்; பின்னது கிட்டுதல்.
நித்தம் - நாள்தோறும்.
கருங்கல் - கரிய மலை.
`கருங்கல் போல ஓங்கும் உம்பல்களையுடைய கயிலாயம்` என்க.
உம்பல் - யானை.
`ஓர் ஐவர்(எம்) உடனே நின்று, எம்மை நித்தம், ஒருங்காது நெருங்காமல், கயிலாயம் மேயான் நம்பால் (நம்மை) மதித்து ஒருகால் நெருங்கி வருங்கொலோ` என இயைத்து முடிக்க.
ஒருங்காது வருத்துதலாவது.
ஐவரும் ஒரு பெற்றியாக வருத் தாது, அவரவர் வேறு வேறு வகையாக வருத்துதல்.
``நெருங்காமல்`` என்பது, `நெருங்க` என எதிர்காலப் பொருட்டாய் வரும் செயவென் எச்சத்தின் மறை, `நெருங்காதபடி` என்பது பொருள்.
கொல், ஐய இடைச் சொல்.
ஓகாரம் அசை.
``உடனே`` என்னும் ஏகாரம் வேறு நிற்றலினின்றும் பிரித்தலின் பிரிநிலை.
மதித்து - பொருட் படுத்துதலைச் செய்து.

பண் :

பாடல் எண் : 20

நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நம்பால்`` என்பது `எம்பால்` என்னும் பொருட்டாய் நின்றது.
``மதித்து`` என்பதற்கு, மேல் உரைத்தது உரைக்க.
`நீ உறையும் காளத்தி` என்க.
வம்பு ஆர் - மணம் நிறைந்த.
சீலங்கள் - குணங்களும், செயல்களும்.
ஏத்துதல் - புகழ்தல் `தீவினையேனாகிய யான்` என்க.
இருந்தேன் - வாளா இருந்தேன்.
காலங்கள், நாள்கள், `போயின` என்பது இடைக் குறைந்து நின்றது.
`கழிந்து போயின` என்க.
`இனி இரங்கிப் பயன் என்` என்பது குறிப்பெச்சம் `மேற் கூறியன பலவும் காலம் உள்ள பொழுதே செய்யத் தக்கன` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 21

கழிந்த கழிகிடாய் நெஞ்சே கழியாது
ஒழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையே
நண்ணுதலாம் நன்மை நமக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கழிந்த கழிகிலாய்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
கழியாது ஒழிந்தநாள் - வாளா கழியாது; உறுதி செயச் சென்ற நாள்கள்.
`நாள்களில் ` என ஏழாவது விரிக்க.
``மேற்பட்டு உயர்ந்தோர்`` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றது.
`கயிலாய மால்வரையை நண்ணுதல் நமக்கு நன்மையாம்; ஆயினும் நாள்கள் கழிந்தன.
நீ இருந்த இடத்தை விட்டுப் பெயர்ந்திலை` என்க.

பண் :

பாடல் எண் : 22

நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே யறிவார் - அமைப்பொதும்பிற்
கல்லவாம் நீடருவிக் காளத்தி யாள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, அமைப் பொதும்பின்` எனத் தொடங்கி யுரைக்க.
அமை - மூங்கில்.
பொதும்பு - மரச் செறிவு.
`மூங்கிலை யுடைய மரச் செறிவையுடைய காளத்தி` என்க.
இன், சாரியை; கல்லவாம் `கல்` என்னும் ஓசையை உடைய அருவி, வல்லவா - இயன்ற அளவு.
(ஏன் எனில்,) நம்பர் தமக்கு அழகு தாமே அறிவார் - சிவபெருமான் தாம் செய்யத் தக்கதைத் தாமேயறிவார்; நாம் அவருக்குத் சொல்லத் தேவையில்லை.
அஃது, `இவரால் இயன்றது இவ்வளவு தான்.
ஆகவே, இவர்க்கு வேண்டுவதை நாம் அருள வேண்டுவது தான்` என்பது.
``இசைந்தவா`` என்பதும், `இயன்ற அளவு` என்றதே யாம்.
``நமக்கு இசைந்தவா நாமும் ஏத்தினால்`` என்றது அனுவாதம்.
உம்மை, `அவரும் அறிந்து செய்வார்` என எதிரது தழுவிற்று, `தன் கடன் அடியேனையும் தாங்குதல்``* என அருளிச் செய்தமை காண்க.
`இறைவனது பெருமையை முற்ற அறிந்து வாழ்த்துவார் ஒருவரும் இல்லை.
அதனால், அவரவரும் தாம் தாம் அறிந்த அளவில் வாழ்த்துதல் வேண்டும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 23

வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட்டு
ஆழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே - யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே
கண்டாய் அடியேன் கடன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாழ்த்துதல் - வாழப் பண்ணுதல்.
வாழ்த்தா தொழிதல் - வாழப் பண்ணுதலைச் செய்யாமை.
சுழி - சுழல்.
மறு சுழி- ஒன்றின்மேல் மற்றொன்றாய் வரும் சுழல்.
`சுழியின்கண்` என ஏழாவது விரிக்க.
அஃது மேற் கூறிய மூன்றனுள் செய்யத்தக்கது.
அறி வாய் நீ அன்றே - அறிபவன் நீயேயல்லது, பிறர் யார்! `பிறர் ஒருவரும் இல்லையாதலின், உனக்கு அதனை அறிவிப்பாரும் இல்லை` என்பது கருத்து.
ஒன்றனைச் `செய்தல்.
செய்யாமை, வேறொன்று செய்தல்` என்னும் இம் மூன்றனுள் ஒன்றைத் தான் விரும்பிய வண்ணம் செய்பவனே முதல்வன் (கருத்தா) ஆவன்; அத்தகைய முதல்வன் நீயே - என்பார் இங்ஙனம் மூன்று வகையாகக் கூறினார்.
இம்மூன்றும் முறையே, `கர்த்திருத்தவம், அகர்த்திருத்தவம், அந்யதாகர்த் திருத்தவம்` - என வடமொழியில் சொல்லப்படும்.
இம்மூன்றனையும் குறிக்கும் முறையில்தான் ஔவையார், `ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்; - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனை ஆளும் ஈசன் செயல்.
` 1 எனக் கூறினார்.
`உலகியல் என்னும் வெள்ளத்திலிருந்து என்னை எடுத்துக் கரையேற்று`` என்றோ, `வேண்டா; கரை யெற்றாதே` என்றோ, `மேலும் ஆழத்தில் அமிழ்த்திவிடு` என்றோ உனக்கு விதிக்க நான் யார்? தக்கதை நீயே அறிந்து செய்வாயன்றோ- என்பது கருத்து.
`யாழ்த் தகைய ஆக` என ஆக்கம் வருவிக்க.
`வண்டு ஆர்க்கும் பொழில்` என்க.
ஆர்த்தல் - ஒலித்தல்.
(உன்கடனை நீ அறி வாய்) `கயிலை வாழ்க! கயிலாயன் வாழ்க!!` - என்பன போல இயன்ற அளவு உன்னை வாழ்த்தியிருத்தலே எனது கடன்.
அதனை நான் செய்தல் வேண்டும் என்றபடி ``என் கடன் பணி செய்து கிடப்பதே`` 2 என்றமை காண்க.
கண்டாய், முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 24

கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க் கில்லை - இடம்நாடி
இந்நாட்டிற் கேவந்திங் தீண்டிற்றுக் கொண்டுபோய்
அந்நாட்டில் உண்டுழலு மாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இல்லை`` என்பதை இறுதிக்கண் கூட்டுக.
கடநாகம் - மதத்தையுடைய யானை.
ஊடு ஆடும் - உள்ள இடங்களில் உலாவுகின்ற காளத்தி.
கடனாக - கடமையாக; நியமமாக.
இடம் - பிறப்பெடுக்கும் இடம்.
இந்நாடு.
மண்ணுலகம்.
ஈண்டிற்று - திரண்டது, வினைக் கூட்டம்.
வினையாலணையும் பெயர்; சாதியொருமை, `ஈண்டிற்றை` என இரண்டாவது விரிக்க.
அந்நாடு, சுவர்க்க நரகங்கள்.

பண் :

பாடல் எண் : 25

மாறிப் பிறந்து வழியிடை யாற்றிடை
ஏறி யிழியும் இதுவல்லால் - தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகீர்` என முன்னிலை வருவித்து, `தேறித் திருக் கயிலை ஏத்திரேல்` என்பதை முதற்கண் கூட்டியும், `யார்க்கும் சேமத் தால் இனிது இருக்கை இலை` என மாற்றியும் உரைக்க.
தேறி - (உயர்ந்தோர் சொல்லைத்) தெளிந்து.
`இடை` இரண்டும் ஏழன் உருபு.
மாறிப் பிறத்தல், உயர் பிறவியிலும், தாழ்பிறவியிலும் மாறி மாறிப் பிறத்தல்.
வழி - இனிது செல்லும் வழி.
யாறு- வெள்ளத்தில் அகப்பட்டு அல்லல் உறும் யாறு, `வழியிடை ஏறி, யாற்றிடை, இழியும்` என நிரல்நிறையாகக் கொள்க.
முன்னது உயர் பிறப்பிற் பிறத்தலையும், பின்னது தாழ் பிறப்பிற் பிறத்தலையும் குறித்தன.
வெள்ளத்தில் அகப்பட்டவர்க்கேயன்றி.
இருக்கும் இடம் இன்றி, ஓயாது வழி நடப்பார்க்கும் உளதாவது அல்லலேயன்றி அமைதியன்று.
அதனால் இரண்டுமே துன்பமாம்.
சேமம் - பாதுகாவ லோடு கூடிய, வாழும் இடம்.
``காலத்தினாற் செய்த நன்றி`` 1 என்பது போல, ``சேமத்தால்`` என்பது வேற்றுமை மயக்கம் இருக்கை - அமைதியுடன் இருத்தல்; தொழிற் பெயர்.
கண்டீர், முன்னிலை யசை.
`சிவபெருமானைத் துதிப்பார்க்கல்லது அமைதி கிட்டாது` என்றபடி.
`தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தாற்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது`
என்னும் பொது மறையையும் காண்க.

பண் :

பாடல் எண் : 26

இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள் தம்மில் - முனிவாய்ப்
பிணங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறவியே இனிது` என ஏகாரத்தை மாற்றி வைத்து, இறுதிக்கண் கூட்டுக.
வீட்டினின்றும் பிரித்தலின் ஏகாரம், பிரிநிலை.
இனம் - பல்வேறு இனம்.
`தேர் கடுவன்கள் ஏறித் தம்மில் பிணங்கி வரும் சாரல் காளத்தி` என்க.
கடுவன் - ஆண் குரங்கு.
முனிவு - கோபம் (மக்கள்) காளத்தி பேணி மகிழ்ந்து வணங்க வல்லாராயின் (அவர்கட்கு) அப்பிறவியே இனிது - என்க.
`வீடு வேண்டா` என்பதாம்.
`வீட்டின் பயன் அப்பிறப்பிலே உள்ளது` என்றபடி.
`தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடம் கும்பிடப் பெற்று,
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பமாம்.
* என்றது காண்க.

பண் :

பாடல் எண் : 27

மகிழ்ந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திகழ்ந்திலங்கும்.
.
.
என் பெண்` என்பதை முதலிற் கூட்டுக.
மகிழ்தல், இங்கு விரும்புதலைக் குறித்தது.
`விண் நிறத்தோடு` என்று ஓடுருபு தொகுக்கப்பட்டது.
விண்ணின் நிறம் புகைமை.
அஃது இங்கு இருளைக் குறித்தது.
கா - சோலை.
இது கயிலைப் பெருமான்மேல் காதல் கொண்டாள் ஒருத்திதன் செவிலித் தாய் கூற்று.

பண் :

பாடல் எண் : 28

பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானா ளேபாவம் - மாசுனைநீர்
காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று
பூம்பசலை மெய்ம்முழுதும் போர்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மா சுனை நீர்` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
காம்பு - மூங்கில்.
ஆலித்தல் - ஒலித்தல்.
பூம் பசலை - பூப் போலும் பசலை.
`பூ, பீர்க்கம் பூ` என்பது மரபு பற்றிக் கொள்ளப்படும்.
போர்த்து - போர்க்கப்பட்டு.
பேசும் பரிசு - வேறொன்றைப் பற்றியும் பேசும் தன்மை.
``பேதை`` என்றது சிலேடை.
பரிசு - தன்மை.
`தன்மை யுடையளாயினார்` என்க.
ஏகாரம், தேற்றம் ``பாவம்`` என்பது, இரக்கம் பற்றி வந்தது.
இதவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 29

போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா யான்காணக் காட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`போர்வையாகப் போர்த்த` எனவும், `பூணாகப் பூண்ட` எனவும் உரைக்க.
உரி - தோல், பொறி - புள்ளி.
தீர்த்த மகள், கங்கை.
மூர்த்தி - வடிவம்.
இதனை முதற்கண் வைத்து, `கூறும் ஆய வாறு` என உம்மையை மாறிக் கூட்டி, `ஆயவாறு காட்டு` என முடிக்க.
இது சிவபெருமானது உருவத்தை நினையும் பாட்டாய் அமைதலை யறிக.

பண் :

பாடல் எண் : 30

காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப்போய்
நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் - ஓட்டுண்பார்
ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கங்காளர் - எலும்புக் கூட்டைத் தோளில் கொண்ட வர்.
`நாட்டில் போய்த் திரிந்து` என்க.
பலி - பிச்சை.
`பிச்சைக்கு` என நான்காவது விரிக்க.
`நாள்தோறும் போய்` எனக் கூட்டுக.
ஓட்டு - ஓட்டின்கண், ஓடு, தலைஓடு.
`வணங்குமாறு` `வணங்குமா` எனச் செய்யுள் முடிபு எய்தி நின்றது.
``என்கொலோ`` என்றது, `இவரது செயலின் உண்மையை உணர்ந்ததனால்` என்பதனைக் குறிப்பாற் புலப்படுத்தியது.
`அவனும்ஓர் ஐயம்உண்ணி; அதள்ஆடை யாவ
ததன்மேல்ஒரு ஆட லரவம்;
கவணளவுள்ள வுள்கு கரிகாடு கோயில்;
கலனாவது ஓடு; கருதில்
அவனது பெற்றி கண்டும், அவன்நீர்மை கண்டும்
அகன்நேர்வர் தேவ ரவரே`.
* என அப்பர் பெருமானும் அருளிச் செய்தமை காண்க.
கங்காளம் தாங்கியது முதலியவற்றின் உண்மைகளை.
`நங்காய்,இ தென்னதவம்! நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ,
கங்காளம் ஆமாகேள்; காலாந் தரத்திருவர்
தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ`
(திருவாசகம் சாழல்.
11) என்பது முதலியவற்றான் அறிக.
`வானோர் வணங்குவர்` என்றத னால், உண்மை யுணராதவரெல்லாம் இவரது செயலைக் கண்டு இவரை, `பித்தர்` என்று இகழவே செய்வர் என்பது போந்தது.
`பித்தரே என்றும்மைப் பேசுவர் பிறரெல்லாம்`
என்றார் ஆளுடைய நம்பிகள்.
`இவரைப்பொருள்உணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்.
` என்றார் காரைக்கால் அம்மையார்.

பண் :

பாடல் எண் : 31

வந்தமரர் ஏத்தும் மடைகூழும் வார்சடைமேல்
கொந்தவிழு மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மாமுடிமேல்
பால்உகுத்த மாணிக்குப் பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மடை`` என்பது, `நிவேதனம்` எனச் சிறப்புப் பெயராயும், ``கூழ்`` என்பது `உணவு` என்னும் பொதுப் பெயராயும் நின்று, இருபெயர் ஒட்டாய் வந்தன.
``மாலை`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க.
கொல், அசை.
வால் உகுத்த - வெள்ளொளியை எங்கும் வீசு கின்ற.
மாணி - பிரமசாரி.
இதில் சண்டேசுர நாயனாரது வரலாறு குறிக்கப்பட்டது.
அதனைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 32

பண்டிதுவே அன்றா கில் கேளீர்கொல் பல்சருகு
கொண்டிலிங்கத் தும்பினூற் கூடிழைப்பக் - கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பல் சருகு`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
கொண்டு - மேற்கூரையாகக் கொண்டு.
இலிங்கம் - திருவானைக்கா வெண்ணாவலின்கீழ் உள்ள இலிங்கம்.
பின் நூல் - பின்னுகின்ற நூலால் கூடு.
பக்தர் நலம் - நலம் செய்வதாகிய கருணை.
`அதனை திக்கெலாம் ஏத்தும் காளத்தி நாதன்` என்க.
சிலந்திக்குச் செய்த சிறப் பாவது சோழ மன்னனாகப் பிறக்கச் செய்தமை.
அம்மன்னனே திருவானைக்கா முதலான எழுபது தலங்களில் சிவபிரானுக்கு மாடக் கோயில் எடுத்த கோச்செங்கணான்.
``பண்டு இதுவே`` என்பதை `இது பண்டே` என மாற்றி ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக.
`பண்டு` என்பது பெயர்த் தன்மைப்பட்டு, பண்டு நிகழ்ந்த செயலைக் குறித்தது.
`சிறப்பாகிய இது` என இயைக்க அன்றாகில் - `அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை` என்று எவரேனும் கூறுவீராயின்.
கேளீர்கொல் - செவிப்பொறி இல்லீர் போலும்! கொல், ஐய இடைச்சொல்.
`இந் நிகழ்ச்சி நாடறிந்த பெருவழக்காய் இருக்க, அதனை, `இல்லை` எனச் சொல்லிப்பிணங்குவார் உளராயின் அவர் செவிப் பொறி இல்லா தவரேயாவர்` என்றபடி.
`சிவபிரானுக்கு அன்புடன் சிறு பணி செய்யி னும் அவன் பெரும்பயன் தருவன்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 33

செய்த சிறப்பெண்ணில் எங்குலக்கும் சென்றடைந்து
கைதொழுவார்க் கெந்தை கயிலாயர் - நொய்தளவில்
காலற்காய்ந் தாரன்றே காணீர் கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கழல் தொழது பாலற்காய் அன்று பரிந்து நொய்தள வில் காலற் காய்ந்தாரன்றே! சென்று அடைந்து கைதொழுவார்க்கு எந்தை கயிலாயர் செய்த சிறப்பு எண்ணில் எங்கு உலக்கும்? என இயைத்துக் கொள்க.
காணீர், முன்னிலையசை.
இதில் மார்க்கண்டே யருக்கு அருள்செய்த வரலாறு குறிக்கப்பட்டது.
எண்ணில் - எண்ணால் கூறி வரையறுக்கப்புகின்.
எங்கு உலக்கும் - எங்கே போய் முடியும்? `ஓரிடத்தும் முடியாது, எண்ணிலவாய் மிகும்` என்றாம்.
மேல், சண்டேசர், கோச்செங்கணான் இவர்கட்குச் செய்த சிறப்பையும், இங்கு மார்க்கண்டேயர்க்குச் செய்த சிறப்பையும் கூறினார்` `இப்படி எத்தனைப் பேருக்கு என்னென்ன சிறப்புச் செய்தார்` என வினாவு வார்க்கு விடையும் இதிலே கூறினார்.
``எந்தை கயிலாயர்`` என்பது பன்மை யொருமை மயக்கம்.
நொய்தளவில் - சிறிது நேரத்திற்குள்.
பரிந்து - அருள் கூர்ந்து.

பண் :

பாடல் எண் : 34

பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதாவா காளத்தி நம்பாவா என்றென்றென்று
மாதாவா உற்ற மயல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``என் மாது`` என்பதை முதலிலும், ``பேசும்`` என்பதை ``என்றென்று`` என்பதன் பின்னும் கூட்டி (இவள்) `உற்ற மயல், ஆஆ` என முடிக்க.
பரிந்து - அன்பு கொண்டு உரைப்பார் சொல்லாவன, `அவன் உனக்கு எளியனல்லன்; அவனை நீ அடைதல் இயலாது` என்றல் போல்வன.
`பிரிந்திருக்ககில்லாமையால்` என உருபு விரிக்க.
பேசும் - பேசுவாள்.
`பிரிந்த` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று.
புரிதல் - விரும்புதல்.
``ஆஆ`` என்பதன்பின் `என இரங்கத் தக்கது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதுவும் மேற்போந்தன போலச் செவிலி கூற்று.
`சிவனிடத்து அன்பு கொண்டோர் அதனை விலக்கச் சொல்வார் கூற்றைக் கேளார்` என்பது இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 35

மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒருமூன்
றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப்
பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
யிருப்பதவா வுற்றாள் இவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கயிலைப் பருப்பதவா`` என்பது முதலாகத் தொடங்கி, இறுதியில், ``மயலைத் தவிர்க்க வாராய்`` என முடிக்க.
பருப்பதம் - மலை.
அஃது அடியாகப் பிறந்த `பருப்பதன்` என்னும் பெயர் ஓரு அகரம் விரித்தல் பெற்று, `பருப்பதவன்` என வந்தது, உன் பக்கத்திலே கூட இருக்க விரும்பினாள்` என்க.
``நீ ஒருமூன்று எயிலைப் பொடிய எய்தாய்`` என்றது, `தேவர் பொருட்டு அதனைச் செய்த அருளுடையயையன்றோ? இவட்கு இது நீ செய்யலாகாதோ` என்றபடி.
`இருப்பது` என்பது தொழிற்பெயர்.
`இருப்பதற்கு` என நான்காவது விரித்து, அதனை, `அவாவைப் பொருந்தினாள்` என்க.
இவ்வாறன்றி, `அவா உற்றார்`` என்பதனை `அவாவினாள்` என ஒரு சொல் நீர்மைத்தாகக் கொண்டு, `அவாவை` என இரண்டாவது விரிப் பினும் ஆம்.
இதுவும் செவிலி கூற்றே.

பண் :

பாடல் எண் : 36

இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றே
தவளப் பொடியிவள்மேல் சாத்தி - இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள் தீரும் துயர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இன்றே - இப்பொழுதே.
தவளப்பொடி - வெண் பொடி; திருநீறு.
`சந்தனத்தைப் பூசி இவள் உடல் வெப்பத்தைத் தணிக்க நினையாதீர்கள்` என்பதாம்.
`அது இவளுக்கு மேலும் வெம்மையைத் தரும்` என்பது குறிப்பு.
`காளத்தி காட்டுமின்கள்` என்க.
இப்பாட்டு தலைவிதன் வேற்றுமைக்குக் காரணம் அறியாது செவிலியும், நற்றாயும் அதனைப் பரிகரிக்க முயல்கையில் பாங்கி அறத்தொடு நின்றது.
சிவனடியார்கட்குச் சிவன்பணி கூடாமையால் உளதாகும் வருத்தம் பிறிதொன்றால் தீராமை இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 37

துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்பேர்
ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வியற் கொடும் பேர்.....எம்மானே`` என்பது தொடங்கி, `இதற்கு, மேல் விளைவு என்கொலோ` என முடிக்க.
வியல் - பெரிய.
``வியல் கொடும் பேர்` என்பது ஏற்றிற்கு இன அடை.
ஏறு - இடபம்.
குரம்பை - குடில்.
தோற் குரம்பை - தோலால் மூடப்பட்ட குடில்.
உடம்பு.
மயக்கில் - மயக்கத்தால், வழி - செல்லத்தக்க வழி ``இது`` என்றது மாட்டாமையை.
``இதற்கு விளைவு`` என்பதில் நான்காவது, `அவர்க்கு ஆகும் அக்காரியம்`` என்பதுபோல மூன்றாவதன் பொருட்டு.
மேல் விளைவு - பின் விளைவு.
தான், அசை.
கொல், ஐயம்.
ஓ, அசை.
`இவ் அறியாமை அறியாமையேயாகப் பிறவியே விளையுமோ! உனது அருளால் இது நீங்கி அறிவு தோன்ற, உனது திருவடிப்பேறு விளையுமோ! அறிகின்றிலேன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 38

விளையும் வினைஅரவின் வெய்ய விடத்தைக்
களைமினோ காளத்தி ஆள்வார் - வளைவில்
திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வினை அரவு``, ``திருநாமம் என்னும் மருந்து`` - இவை உருவகங்கள்.
விளையும் வினை, பிராரத்த வினை.
அதனை ``அரவு`` என்றதனால், ``அதன் விடம்`` என்றது, அது விளையும் பொழுது உளவாகின்ற இன்பத் துன்ப அனுபவங்களால் தோன்றும் ஆகாமியத்தையாம்.
``திருவாஞ்சியத்துறையும் - ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஓட்டாரே`` 1 என்று அருளிச்செய்தது இது நோக்கி.
``களைமின்`` என்பதை இறுதிக்கண் கூட்டுக.
ஓகாரம், அசை.
`ஆள்வாரது` என ஆறாவது விரிக்க.
வளைவு - கோட்டம்; அஃதாவது, மெய்யான.
சீர் - புகழ்.
`சீரை விளக்கும் திருநாமம்` என்க.
`ஈசன் ஆம் திருநாமம்` என ஒற்றுமைப் பொருட்டாகிய ஆக்கம் விரிக்க.
ஈசன் - ஐசுவரியத்தையுடையவன்.
இஃது உபலக்கணமாய் ஏனை பல பெயர்களையும் குறிக்கும்.
`சிவபெருமானது பொருள் சேர்ந்த புகழை எப்பொழுதும் சொல்லுதலே வினை நீக்கத்திற்கு வழி` என்றபடி.
`இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
` 2 என்னும் பொது மறையையும் காண்க.
`மருந்துகள் யாவும் உள் விழுங்கவே நோயைத் தீர்க்கும்.
இஃது அவ்வாறின்றி, வாயில் வைத்த அளவே நோயைத் தீர்ப்பதோர் அதிசய மருந்து என்னும் நயத்தைத் தோற்றுவித்தமையறிக.
புகழ்கள் சொல்லப்படுதல் வாயினாலே யன்றோ! இவ்வாறே, வருகின்ற வெண்பாவில், ``வாயிலே வைக்கு மளவில் மருந்தாகி`` என ஓதுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 39

வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
தெம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தூய`` என்பது, வேறுபடுதல் இன்மையைக் குறித்தது.
`பெருமாதேவியொடு தூய ஏகமாய்மன்னு எம் பெருமான்` என ஆக்கம் வருவித்துரைக்க.
தலைவராயினார்க்குத் தேவியாயினாரை `மாதேவி` என்றல் வழக்காதலின் தலைவர்க்கெல்லாம் தலைவனுக்குத் தேவியாயினாளை, ``பெருமாதேவி`` என்றார்.
`அஞ்செழுத்து ஆகித் தீர்க்கும்` என முடிக்க.
``அஞ்செழுத்து`` என்பது தொகைக் குறிப்பாய், ``நமச்சிவாய`` என்பவற்றைக் குறித்தல் மரபு வழியால் பெறப்பட்டது.
மரபு சைவாகம மரபு.
பிறவியை நோயாக உருவகித்தற்கு ஏற்ப அஞ்செழுத்தை மருந்தாக உருவகிக்கின்றார்.
ஆகலின் அதற்கேற்ப, `வாயாலே சொல்லுமளவில்` என்னாது, ``வாயிலே வைக்குமளவில்`` என்றார்.
வாயிலே வைத்த அளவில் நோய் நீங்குதல் கூறப்பட்டமையால், பின்னும் பின்னும் பேணி ஒழுக ஒழுகப் பேரின்பம் பெருகுதல் பெறப்பட்டது.
இவ்வஞ்செழுத்தின் பெருமையே திருமுறைகளில் எங்கும் விரித்துப் பேசப்படுதல் வெளிப் படை.
அவ்வாற்றானே இங்கும் பேசப்பட்டது.
`பிறவி நோயாதல் தெளிவாதல் போல, அஞ்செழுத்தே அந்நோய்க்கு மருந்தாதல் தெளிவு` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 40

அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகா ளாவனவும்
அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த
காளத்தியார் யார்க்கும் காண்டற் கரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அஞ்செழுத்தும் ஏற்ற பெற்றியால் சொற்களுக்கு உறுப்பாதலேயன்றி, இறைவனது அருளாணையால் அஞ்சு பதங்களு மாதல் பற்றி, ``அஞ்செழுத்தும் என முற்றும்மை கொடுத்தார்.
துஞ்ச லும் துஞ்சலிலாத போழ்தினும்` 1 என்னும் திருப்பதிகத்திலும், `ஏதும் ஒன்றும் அறிவில ராயினும்
ஓதி அஞ்செழுத் தும்உணர் வார்கட்குப்
பேத மின்றி அவரவ ருள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
` 2 என்றாற்போலும் இடங்களிலும் `அஞ்செழுத்தும்` என உம்மை கொடுத்தே ஓதப்பட்டன.
``அந்தியும் நண்பகலும்`` அஞ்சு பதம் சொல்லி3 என்பதில் அஞ்செழுத்தும் அஞ்சு பதங்களாதல் குறித்தருளப்பட்டது.
இனி, இங்கு மேலை வெண்பாவிலும், அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க் கச்சம் தீர்ந்தேன்`` 4 அஞ்செழுத்து - ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்`` 5 என்றாற் போலும் இடங்களிலும் உம்மையின்றியே ஓதப்பட்டது.
அஞ்செழுத்தும் சொற்கு உறுப்பாய் நிற்க அதனாலாம் தொடர்மொழி, `சிவனுக்கு வணக்கம்` என்னும் ஒரு பொருளையே தந்து, சிவன் வணங்கப்படுபவனும், உயிர்கள் அவனை வணங்குவனவும் ஆகின்ற முறைமையை உணர்த்தி நிற்கும்.
இது பொதுவாக யாவராலும் ஓதத் தக்கதாதல் பற்றி, `தூல பஞ்சாக்கரம்` (பருவைந்தெழுத்து) எனவும், அஞ்செழுத்தும் அஞ்சு பதங்களாய் நின்று அஞ்சு பொருளை உணர்த்துதல் உபதேச முறையால் பெற்றுச் சிறந்தாரால் ஓதப்படுதலின் `சூக்கும பஞ்சாக்கரம்` (நுண்ணைந்தெழுத்து) எனவும் சொல்லப்படும்.
முன்னது நகாரம் முதலாகவும், பின்னது சிகாரம் முதலாகவும் வரும்.
அஞ்செழுத்தும் அஞ்சு பதம் ஆதல் ஆணையாற்கொள்வ தல்லது, வழக்கினாற் கொள்வதன்று.
அதனால், `இவை போல்வன வழக்குநூல் வரையறைக்கு உட்படா` என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார், `மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்
அன்றி அனைத்தும் கடப்பா டிலவே.
` 1 எனப் புறடுத்தோதினார்.
அருமறைகள் - பொருள் உணர்தற்கு அரிய இறைவன் நூல்கள்.
அந்நூல்களில் பரக்க வரும் பொருள் அனைத்தையும் இவ் அஞ்செழுத்து அடக்கி நிற்றலின் ``அஞ்செழுத்துமே அருமறைகள் ஆம்`` என்றார்.
`அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும்.
` 2 எனவும்,
`அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள் நூல் தெரியப் புகின்.
` 3 எனவும் வரும் சாத்திர மொழிகளையும் காண்க.
கற்றல் - ஓதியுணர்தல்.
``போய்`` என்றது, `நீங்கி` என்றபடி.
`நிறத்தொடு` என ஒடு உருபு விரிக்க.
ஏகாரம், அசை.
``ஆவனவும்`` என்றதனோடு இயைய, `அஞ்செழுத்தும் கற்க, நெறி அணித்தாதலும்` என எண்ணும்மை விரித்து, `இரண்டும் ஆகும்` என்க.
ஆகும் முடியும்.
காளத்தியாருக்கும் காண்டற்கு அரிதாய், நீளத்தே நின்ற நெறியாவது, பகலவன் தனது கதிர்களைப் பரக்க வீசிய போதிலும் அவற்றை ஏற்க மாட்டாது இருளில் மூழ்கியிருக்கும் படலம் படர்ந்த கண்போலக் காளத்தி நாதர் தமது திருவருள் நோக்கினைச் செலுத்திய போதிலும் அதனை எய்த மாட்டாது அறியாமையில் அழுந்தியிருக்கும் பெத்தான்ம நிலை.
அந் நெறியும் அணித்தாதலாவது அவ்வாறான அறியாமை நீங்க, காளத்தி நாதரது திருவருளை எய்துதல்.
`இந்நிலை அஞ்செழுத்தை ஓதி உணர்தலால் உளதாம்` என்றபடி.
கண்டீர், முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 41

நெறிவார் சடையாய் நிலையின்மை நீஒன்
றறியாய்கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியில்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நெறி வார் சடை`` என்பதற்கு, மேல் * உரைக்கப் பட்டது.
`இவளது நிலையின்மை` என ஒருசொல் வருவிக்க.
நிலை - நிலைபேறு.
அஃது இன்மையாவது இறந்துபாடு, ஒன்று - சிறிது.
`ஒன்றும்` என இழிவு சிறப்பும்மை விரிக்க.
நெறியில் - வழியில்.
`நெறி யில் தூங்கும்` என இயையும்.
`கண் அருவி சோர நின்று அயர்ந்தாள்` எனக் கூட்டி முடிக்க.
அயர்தல் - சோர்தல்.
இதுவும் செவிலி கூற்று.

பண் :

பாடல் எண் : 42

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம்
என்றும் நினைந்தாலும் என்கொலோ - சென்றுதன்
தாள்வா னவர்இறைஞ்சும் தண்சாரற் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``என் கொலோ`` என்பதனை இறுதிக் கண் கூட்டுக.
நிற்றல் முதலியன அத்தொழில் நிகழும் காலத்தைக் குறித்தன.
`தன் தாள் வானவர் சென்று இறைஞ்சும் காளத்தி ஆள்வான்` என இயைக்க; ஆறு - காரணம்.
கொல், ஐயம், ஓ அசை.
``அருளாதவாறு என்கொல்`` என்றது, அருளைப் பெறுதற்கண் எழுந்த வேட்கை மிகுதியால்.
அங்ஙனம் கூறியதனானே, `நினைந்தார்க்கு அவன் அருளாமை இல்லை.
என்பது பெறப்பட்டது.
அருளும் காலத்தை அவன் அறிதலன்றிப் பிறர் அறியுமாறில்லை.

பண் :

பாடல் எண் : 43

அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக
இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்
திம்மையே தீர்க்கும் இடர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருள் - பொருளியல்பு.
அஃதாவது, அவனது இயல்பு, ஆய்தல், ஆய்ந்து உணர்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
இதனை முதலிலும், ``யார்க்கேனும் ஆக என்பதை உன்னில் என்பதன் பின்னும் வைத்து, `எம் ஈசன் அருளாதவாறு உண்டே` என முடிக்க.
`எமக்கு அருளாதவாறு` என ஒருசொல் வருவிக்க.
``யார்க்கேனும்`` என்றது, `உயர்வு தாழ்வு நோக்காது` என்றபடி.
எனவே, `எமக்கு அருளா தொழிதல் இல்லை` என்றதாம்.
மேலை வெண்பாவால் ஆற்றாமை கூறிய நாயனார் இவ்வெண்பாவில் ஆற்றினமை கூறினார்.
``எம் ஈசன்`` என்றது.
`அவன்` என்னும் அளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 44

இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க்
கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உமக்கு ஓர் இடம் நாடிக்கொண்டு காலத்தால் நடவீர்`` என்பதனை இறுதிக்கண் வைத்துரைக்க.
``இடரீர்`` என உயர் திணையாகக் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு.
இடராவன பலவற்றையும் நோக்கிப் பன்மையாற் கூறினார்.
``நாடிக்கொண்டு`` என்பது ஒரு சொல்.
``காலத்தால்`` என்பது வேற்றுமை மயக்கம்.
கருப்படுதல் - நீரை நிரம்ப முகத்தல் ஒருப்படுதல் - மனம் இசைதல்.
கண்டீர், முன்னிலை யசை.
`உணர்ந்து நடவீர்` என இயையும்.
இடராவனவற்றிற்கு இடம் காளத்தி காணாதாரேயன்றிக் கண்டவரல்லர்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 45

உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்
புணருங்கால் ஆரமுதே போன்று - இணரில்
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய்,
இனியவா காண்நின் இயல்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இணரில் கனிய - கொத்துக்களில் கனிகளையுடைய.
உணருங்கள் - நினைக்குப் புகும் பொழுதும்.
`உரு ஒன்றைத் தெரியக் காட்டாய்` என்க.
(உரு இன்றியே உன்னைப் புணர வல்லவர்) உணருங்கால் நின்.
இயல்பு ஆரமுதே போலும், (ஆதலின்) இனியவா காண்.
(நின் இயல்புகள்) மிக இனியயவாமாற்றை நீ அறிவாயாக.
`இனியவாறு` என்பது ஈறு குறைந்து செய்யுள் முடிபு எய்தி நின்றது.
ஆறு - தன்மை அஃது அதனை உடையவற்றைக் குறித்தது.
``இனியவா`` என்றது உண்மையேயாயினும், ``உருத்தெரியக் காட்டாய்`` என்றதனால், நகையாடல்போலக் கூறப்பட்டது.
புணர்தல் - தழுவுதல்.
`புணருங்கால் இன்பம் தரும் பொருள்கள் யாதோர் உருவும் இன்றியே, புணருங்கால் பேரின்பம் தருபவனாய் உள்ளாய்` என வியந்துகூறியவாறு.
`சிவனது இன்பம் ஐம்புல இன்பம் போலாது, அவற்றின் வேறு பட்டதோர் இயல்பிற்று` என்பதாம்.
``காண்`` என்றது, புதிதாகக் கண்டவர் அதனை முன்னமே கண்டவர்க்கு அறிவித்தல் போன்றதொரு வழக்கு.
`போல்வாய்` எனப்பாடம் ஓதுதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 46

நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்
வெளிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவுமா னால் உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மன்னிய சீர்`` என்பது முதலாகத் தொடங்கி, `நினையுங்கால் நின்னியல்பை அறிவார் யாரே? உரை` என முடிக்க.
மன்னியசீர் - நிலைபெற்ற புகழ்.
`என்றும் நிலைபெற்றிருத்தலால் பெற்ற புகழ்` என்க.
`நின்னினின்றும் வெளிப்படுவனாகிய ஏழுலகும்` என உரைக்க.
நின்னில், நீக்கப் பொருட்கண் வந்த ஐந்தாம் வேற்றுமை.
இதனை ஏழாம் வேற்றுமையாக்கி, ``ஒளிப்பதுவும்`` என்பதனோடும் கூட்டுக.
``மீண்டே ஒருகால்`` என்றதனால், `முன்பு ஒருகால் வெளிப் படுவ` என்பது வருவிக்க.
`ஏழுலகும் முன்பு ஒருகால் நின்னின்று வெளிப்பட்டு, மீண்டு ஒருகால் நின்னிடமே வெளிப்படுவ ஆனால்` என ஓதற்பாலதனைச் செய்யுள் நோக்கி இவ்வாறு ஓதினார்.
``நின்னில் வெளிப்படு ஏழுலகும்` என்பது உடம்பொடு புணர்த்தது.
``ஒளிப்பது`` என்பது தொழிற்பெயர்.
அஃது ஆகுபெயராய் அதனையுடைய உலகங்களின்மேல் நின்றது.
உம்மை.
இறந்தது தழுவியது.
``ஆனால்`` என்பது தெளிவின்கண் வந்தது.
தோன்றி ஒடுங்குவனவாகிய அனைத்துப் பொருள்கட்கும் இறைவன் நிலைக்களமாய் இருத்தலின், அவனது அளவை அத்தோன்றி ஒடுங்கும் பொருள்களில் ஒருவராய் உள்ள எவர் அறிதல் கூடும்? ஒருவரும் அறிதல் கூடாது` என்பதாம்.
`தோன்றி ஒடுங்கும் பொருள்கள் அனைத்திற்கும் இறைவன் நிலைக் களம்` என்பதை மெய்கண்ட தேவர், ``வித்துண்டா மூலம் முளைத்தவா`` 1 என விளக்கினார்.
இதனையே பிற்காலத்தில் பட்டினத்து அடிகளும், `நுரையும், திரையும், நொப்புறு கொட்பும்
வரையில் சீகா வாரியும் குரைகடல்
பெருத்தும், சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி யிருங்கடல் அடங்கும்
நின்னிடைத் தோன்றி, நின்னிடை அடங்கும், நீ
ஒன்றினும் தோன்றாய், ஒன்றினும் அடங்காய்`.
2 என அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 47

உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச்
சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புரை - குற்றம்.
அஃது இங்கு , `தடை எனப்பொருள் தந்தது.
விம்மி - பருத்து.
``சென்றவாறு`` என்பது `தான் வேண்டிய வாறு` என்றபடி.
ஓங்குதல்.
உயர்தல்.
`விம்மி.
.
.
ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான் எங்கும் நிறைந்து நின்றவாறு, உரையும் பொருளும்.
.
.
போல்` என இயைத்து முடிக்க.
``எங்கும்`` என்பதன்பின் `எல்லாப் பொருளிலும்` என ஒருசொல் வருவிக்க.
உரை - சொல், விரை - மணம், ``போல்`` என்னும் முதல் நிலை, `போல்வது` என முற்றுப் பொருள் தந்தது, ``பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர்`` 3 என்பதில் ``நேர்`` என்றது போல, இறைவன் எல்லாப் பொருளிலும் அது அதுவாய்; வேற்றுமையின்றிக் கலந்து நிற்றற்கு ``சொல்லும் பொருளும் முதலிய மூன்று உவமைகளைக் கூறினார்.
அவை பொதுப் படப் பிரிப்பற்றதாம் நிலையை உணர்த்தி நின்றன.
`இறைவன் இவ்வாறு நிற்கும் நிலையே உபநிடதங்களில் `அத்துவிதம்` எனப்படு கின்றது` என்பதைப் பிற்காலத்தில் மெய்கண்ட தேவர் தமது சிவஞான போத நூலாலும், அதன் வார்த்திகத்தாலும் விளக்கினார்.

பண் :

பாடல் எண் : 48

நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்
மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த
கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்முன் பரிசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சிறந்த.....ஆள்வாய்`` என்பதை முதலிற் கொண்டு, இறுதியில் `முன் பரிசு என்? பணியாய்` என மாற்றி முடிக்க.
``பார் அவன் காண்; பாரதனில் பயில் ஆனான்காண்; பயிர் வளர்க்கும் துளி அவன்காண்; துளியில் நின்ற - நீர் அவன்காண்`` * என்றாற்போலப் பல இடங்களிலும் `எல்லாப் பொருளும் அவனே` என்றல், மேலை வெண்பாவிற் கூறியவாறு, எங்கும், எல்லாப் பொருளிலும் உடலில் உயிர்போல வேற்றுமையின்றி அது அதுவேயாய்க் கலந்து நிற்கும் கலப்பு நோக்கியே என்பது, ``நிறைந்தெங்கும் நீ யேயாய் நின்றாலும்`` என்றமையால் விளங்கும் உயிர் எங்கும் நிறைந்து நிற்பினும் ஐம் பொறியில் ஒன்றிற்கும் புலனாகாது மறைந்து நிற்றல் போல, எல்லாப் பொருளிலும் நீ நிறைந்து நிற்பினும் ஐம்பொறிகளில் ஒன்றிற் புலனாகாதே மறைந்து நிற்கின்றாய்; உன்னை முன் பரிசு (நாங்கள் நினைக்கும் முறைமை) யாது? பணித்தருள்` என்பது இவ்வெண்பா வின் சிறந்த பொருள்.
நினைத்தல் மனத்தின் தொழிலாயினும் அஃது ஐம்பொறிகள் உணர்ந்தவற்றையே நினைத்தல்லது, அவற்றிற்கு உணர வராத பொருளை நினைக்கவல்லது அன்று ஆதலின், ``ஐம்புலன் ஒன்றின் காணவாராய்; உன்னை நாங்கள் நினைக்கும் பரிசு என்`` என்றார்.
`கருவிகள் வழியாக நினைக்க முயலாமல் அருள் வழி யாக நினைக்க முயலாமல் அருள் வழியால் நினைக்கின் காணப்படு வான்- என்பது, ``பணியாய்`` என்றதனாற் போதரும் குறிப்புப் பொருள்.
புலன், பொறிகளை உணர்த்தலின் ஆகுபெயர்.
காண்டல் - புலப்பட உணர்தல்.
கணிவேங்கை மரம், ஆல் , அசை.

பண் :

பாடல் எண் : 49

பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
பரமா அடியேற்குப் பற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திரியும் புரம்`` என்பது முதலாகத் தொடங்கி இறுதியில் `அடியேற்குப் பற்றுக் கண்டாய்` என முடிக்க.
பரிசு - பொருள்களின் நன்மை தீமை `அவற்றைப் பகுத்தறியும் அறிவிலேன் என்றபடி.
அறிவில்லாமையால் பற்றத் தகுவதனைப் பற்றிலேன்.
கற்றிலேன் - அறிந்து பற்றினவர்களை அடைந்து கேட்டும் உணர்ந் திலேன்.
`கரி உரியாய் பாதமே அடியேற்கு முற்றும் பற்று` என இயைக்க.
முற்றும் பற்ற - முற்றுமான (முழுமையான) துணை.
`வேறு துணை ஒன்றும் இன்று` என்பதாம்.
``பரிசறியேன்`` என்பது முதலாகக் கூறியன, ``யானாக அத்தன்மையைப் பெறும் ஆற்றல் இலேன்` என்றபடி.
உன் பாதமே துணை என அடைந்தேன்` என்பதாம்.
இனி உன் திருவுள்ளம் இருந்தவாறு செய்க` என்பது குறிப்பெச்சம்.
``கரி உரியாய்`` என்பது முன்னிலை வினைக்குறிப்புப் பெயர்.
கண்டாய், முன்னிலையசை.
``திரிபுரம்`` என்பது, ``திரியும் புரம்`` என வினைத்தொகையும் ஆம் என்பது இது போலும் திருமுறை ஆட்சியால் அறிக.
திரியும் புரம்வானத்தில் உலாவுகின்ற கோட்டை மதில்கள்.

பண் :

பாடல் எண் : 50

பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் முளைசூடி - வற்றாவாம்
கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எவ்வுயிர்க்கும் பற்றாவான்` என எடுத்துக் கொண்டு.
``பசுபதி`` முதலிய பெயர்கள் பலவற்றோடும் முடிக்க.
பற்று - துணை.
பெத்தம், முத்தி என்னும் இரு நிலைகளிலும் எஞ்ஞான்றும் துணையாவான் பசுபதி முதலிய வகையிற் சொல்லப்படும் சிவன் ஒருவனே` என்பதாம்.
பசுபதி - உயிர்கள் எல்லாவற்றிற்கும் தலைவன்.
இப்பெயர் சிவன் ஒருவனுக்கே உரியதாதலை நோக்குக.
ஆதல் - பெருகுதல் ``வற்றா`` என்னும் பன்மை காலம் பற்றி வந்தது.
`காலந்தோறும் பெருகும்` என்க, மன் - உடையவன்.

பண் :

பாடல் எண் : 51

மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற
தென்செய்வான் எந்தாய் இயம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மன்னன் - அனைத்துயிரையும் ஆள்பவன்.
மாமுத்தம், மாணிக்கம்`` என்பவற்றின் `இவைகளை` என ஒருசொல் வருவிக்க.
பொன் - அழகு ``மின் செய்`` என்பதில் செய், உவம உருபு.
செய்வான், வான் ஈற்று வினையெச்சம்.
செய்தல், பயன் தருதல் `பூணாமைக்குக் காரணம், அவைகளால் தான் சிறக்க வேண்டுவதொரு குறையில்லாமை` என்பதும், `பூணுதல், தனது நித்தியத் தன்மையை உணர்த்துதற் பயன் நோக்கி` என்பதும் குறிப்புக்கள்.
``முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா; யாரே அழகுக்கு அழகு செய்வார்`` * எனப் பிற்காலத்து ஆசிரியரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 52

இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால்
ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மட நெஞ்சே, புயம் பாம்பால்.... இருந்து ஏனோர் பால்...உற்றாய்? இயம்பாய், என இயைத்துக் கொள்க.
பயம் - பயன்.
பார்த்து - எதிர் நோக்கி, பற்றுவான் - பற்றுதற் பொருட்டு புயம் - தோள் ஆர்த்தல் - கட்டுதல்.
`புயத்தைப் பாம்பாலே ஆர்த்தானே` என்க.
``என்ன பயம் பார்த்து உற்றாய்`` என்னும் வினா, `அவரால் கிடைப்பது யாதும் இல்லை` என்னும் குறிப்புடைத்தாய் நின்றது.
`காளத்தி அம் மான் பணியில் வாளா இருந்து, ஏனோர்பால் பயம் பார்த்து உற்றமை யால் நீ அறிவினை இழந்தாய்` என்பது தோன்ற ``மட நெஞ்சே`` என்றார்.

பண் :

பாடல் எண் : 53

இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்
அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்
தானாளும் பிச்சை புகும்போலும் தன்அடியார்
வானாள மண்ணாள வைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கயிலாயத்து அண்ணல், தன் அடியார் வான் ஆளவும், மண் ஆளவும் வைத்து, தான் நாளும் வருந்திப் போய்ப் பிச்சை புகும்போலும்! இது என்ன மாயம்! ஆயினும் இருந்தவா காணீர்` என இயைத்து முடிக்க.
முதற்கண், `தொண்டர்காள்` என முன்னிலை வருவிக்க.
`இருந்தவாறு` என்பது குறைந்து நின்றது.
மாயம் - அதிசயம், `ஆயினும் நிகழலே செய்கின்றது` என்பதை ``இருந்தவா`` என்வறார்.
``ஆள`` இரண்டும் வினைக்கண் வந்த செவ்வெண்.
வான் ஆள வைத்தலும், மண் ஆள வைத்தலும் அவரவர் செய்த தவத்திற்கு ஏற்பவாம்.
`வேண்டுவார் வேண்டும் பயனை வழங்குபவன் பிச்சை புகுகின்றான்` என்றால், அஃது அதிசயமே யாயினும், ஊன்றி நோக்கின் அது தன்பொருட்டாகாது பிறர் பொருட்டாய், இயற்கையாய்விடும் - என்பது கருத்து.
இவற்குப் பிச்சையிடுவார்.
`தந்தவன் தண்டல் செய்கின்றான்` என்னும் உணர்வு தோன்றப் பற்றறுதல் பயன் என்க.

பண் :

பாடல் எண் : 54

வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே
நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்
அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால்
எக்காலத் தெப்பிறவி யான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வைத்த.....சுடரே, யான் காணுங்கால் எக்காலத்து, எப்பிறவி, ஒளி மொய்த்துச் சேர் அக்காலத்து அடிநாயேன் ஆை\\\\\\\\u2970?` என இயைத்து முடிக்க.
வைத்த - சேமித்து வைத்த.
இரு - பெரிய.
வாழ் முதல் - வாழ்விற்கு முதல்.
நித்திலம் - முத்து.
வைத்த நிதி, இளைத்த காலத்தில் உதவும்.
வாழ்விற்கு முதலாலேதான் வாழ்வு உளதாகின்றது.
நித்திலம் - அழகைத் தரும்.
`இறைவன் இம்மூன்றும் போல்பவனாய் உள்ளான்` என்பதாம்.
`காலம்` என்பது அம்முக்குறைந்து, ``கால்`` என நின்றது.
``பிறவி`` என்பதும் ஆகுபெயராய், அஃது உள்ள காலத்தையே குறித்தது.
``ஆை\\\\\\\\u2970?`` என்பதன் பின் `உள்ளது` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
`யான் உன்னை நேரே காணுங்காலம், எந்தக் காலத்தில் உளதாகின்ற எனது பிறவிக் காலமோ அந்தக் காலத்தையே அடியேன் அவாவிநிற்கின்றேன்` என்பது இவ்வெண்பாவின் திரண்ட பொருள்.
`அந்தக் காலமே எனக்கு ஒளி மிக்க காலமாகும்` என்பதும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 55

யானென்றும் தானென்று இரண்டில்லை என்பதனை
யானென்றுங் கொண்டிருப்பனா னாலும் - தேனுண்
டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
தெளிகொடான் மாயங்கள் செய்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தானென்று`` என்பதில் ``யானென்றும்`` என்பதிற் போல எண்ணும்மை விரிக்க.
இரண்டு இல்லை - வேறு வேறாய்ப் பிரிந்து நிற்றல் இல்லை.
`உடலும், உயிரும் போல் இருவரும் ஒன்றியே உள்ளேம்` என்றபடி.
`இவ்வாறு நாங்கள் இருவரும் ஒன்றியிருப்பினும் அவர் என்னோடு இருக்கும்.
இருப்பினை யான் உணராதபடி அவன் எனது அறிவை மறைத்தல் செய்கின்றான்` என்பது பிற்கூற்றின் பொருள்.
தெளி - தெளிவு.
மாயம் - மறைத்தல் `இரண்டில்லை` என்பது கலைஞானத்தால் உணர வருகின்றது.
அவ்வுணர்வு பேதைப் பெண் காம நூற்பொருளை உணர்வது போல்வதே யன்றி, அனுபவ உணர்வு அன்றாகலானும், அனுபவ உணர்வு அவன் அருளவே வரும் ஆகலானும், ............. இரண்டில்லை என்பதனை
யான் என்றும் கண்டிருப்பன் ஆனாலும், -
கயிலை மேயான்
மாயங்கள் செய்து தெளிகொடான்
என்றார்.
எனவே, ``கண்டிருப்பன்`` என்பது கலைஞானத்தையும் ``தெளி`` என்றது அநுபவ ஞானத்தையும் ஆயின.
இறுதியில், `யான் செய்வது என்` என்னும் குறிப்பெச்சம் வருவிக்க.
தெளிவித்தலே இறைவனுக்கு இயல்பாவதன்றி, மறைத்தல் அவனுக்கு இயல்பன்று ஆயினும், உடல் நலத்தையே செய்கின்ற மருத்துவன் கழலையைப்போக்கக் கருவியாற் கீறி அழ வைப்பது போல, அவன் (இறைவன்) ஆணவத்தை மெலிவித்தற்கு அதனது மறைக்கும் ஆற்றலைச் செயற்படுத்தலையே, அவனே மறைத்தலைச் செய்வதாக நூல்கள் கூறும்.
அவனது ஆற்றல் (சக்தி) ஆணவம் முதலிய மலங்களைச் செயற்படுத்தி மறைப்பினை உண்டாக்கும் பொழுது, `திரோதான சத்தி` என்றும், மலம் நீங்கியபின் தன்னைக் காட்டியருளும் பொழுது `அருட் சத்தி` என்றும் பெயர் பெறும்.
இரண்டும் செயலால் வேறாவன அல்லது பொருளால் வேறல்ல; ஒன்றேயாம்.
இரண்டும் கருணையே யன்றி, எதுவும் கொடிதன்று, திரோதான சத்தி மறக் கருணை; அருட் சத்தி அறக் கருணை, மறக் கருணையாவது, செயலால் வன்கண்மையுடையது போன்று, பயனால் நலம் செய்வது; அறக் கருணையாவது, செயல், பயன் இரண்டினாலும் இனிதாவது.

பண் :

பாடல் எண் : 56

மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று
காயங்கொண் டாடல் கணக்கன்று - காயமே
நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலர்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண், `உலகீர்` என்னும் முன்னிலை வருவிக்க.
``ஐவர்`` என்பதை முதலிற் கொள்க.
ஐவர் - ஐம்புலக் கள்வர்.
மாயம் - வஞ்சனை; அஃதாவது நல்லவர்போல் காட்டித் தீமையில் வீழ்த்துதல்.
`கள்வர்` என்றதற்கு ஏற்ப.
``சொன்ன`` என்றாராயினும் `செலுத்தியது` என்பதே பொருள் காயம் - உடம்பு.
`காயத்தை` என உருபு விரிக்க.
கொண்டாடுதல் - பாராட்டுதல், அது இயன்ற மட்டும் பேணிக் காத்த லாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
கணக்கு முறைமை.
``கணக்கு அன்று`` என்பதன்பின்.
`ஏன் எனில்` என்பது வருவிக்க.
காயமே - காயமோ.
சீர் - புகழ் கற்பது - பலகாலும் சொல்லுதல்.
கண்டீர், முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 57

கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதம் தொழு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வணக்கி - தாம் சொன்ன படி கேட்க வைத்து, `படுத்தல்` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டு, ``படா`` என வந்தது பிணக்கு மாறுபாடான எண்ணம்.
காலத்தால் காலத்தின்கண், `இளமையிலே` என்றபடி, வேற்றுமை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 58

தொழுவாள் பெறாளே தோள்வளையும் தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்
நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எண் பெண் மழுவாளன் காளத்தி வாழ்த்தி எழுவாள்; தொழுவாள்; தன் தோள்வளையும் தோற்றாள்.
ஆயினும் நறுமாமலர்க்கொன்றை பெறாளே; (இன்று இல்லை என்றாலும்) நாளை நம் முன்னே (அதனைப்) பெறுமாறு காணீர்` எனக் கூட்டிப் பொருள் கொள்க.
``பொருளே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
எழுவாள்- துயில் ஒழிவாள்.
இதுவும் செவிலி கூற்று.
காப்பு மிகுதி முதலியவற்றுள் யாதானும் ஒரு காரணத்தால் தலைவி வேறுபட்டவழி, `இஃது எற்றி னான் ஆயிற்று` எனத்தாயர் ஆராய்வுழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றவாறே செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.
செவிலி தலைவியை ``என் பெண்`` என்று எடுத்துக் கூறியது, அவள் மாட்டுத் தனக்கு உள்ள அன்பின் மிகுதி தோன்றுதற்கு.
செவிலி ஆயத்தாரையும் உளப்படுத்து, ``காணீர்`` என்றாள்.
சிவபெருமானை வாழ்த்தியெழுதலும், தொழுதலும் உடையராய்ப் பேரன்பு செய்வார் என்றாயினும் ஒருநாள் அவனைத் தலைப்படவே செய்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 59

பெண்இன் றயலார்முன் பேதை பிறைசூடி
கண்நின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற
காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமம்தா மற்றிவளைச் சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறை சூடியே, கயிலைக் கோனே` என இரு விளி களையும் முதற்கண் வைத்து, ``பெண்`` என்பதன்முன் `என்` என்பதும், ``பேதை`` என்பதன்பின் `ஆயினாள்` என்பதும் வருவிக்க.
தான், அசை.
மீதூர்தல் - புறத்தார்க்குப் புலனாகுமாறு மிகுதல்.
எனவே, நாணழிந்தாளாம்.
தாமம் - மாலை.
மற்று.
அசை.
சார்தல் - பக்கத்தே வருதல்.
இது ``மாலையிரத்தல்`` என்னும் துறை.
தோழிமேல் வருவது இங்குச் செவிலி மேலாதாய் வந்தது.
இது தூதிடையாடலின் * வகை.
எனவே, பெருந்திணையாம்.
மெய்யுணர்வாசிரியர் மெய்யுணர் மாணாக்கர் பொருட்டு இறைவனையிரத்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 60

சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் - கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அன்பு`` என்றதை, `அன்பு கூர்ந்து` என மீட்டும் கூட்டுக.
மூளத்தியானித்தல் - ஆழத் தியானித்தல்.

பண் :

பாடல் எண் : 61

தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலன்என்
றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத்
தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீ
கூத்தாடல் மேவியவா கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அகன் கயிலை மேயாய்`` என்பதனை முதலிற் கொள்க.
தங்கு அழல்கள் ஆர்ப்ப ஆங்காங்கு எரியும் நெருப்புக்கள் தம் ஒலியை எழுப்ப ``சலன்சலன்`` என்பது ஒலிக்குறிப்பு.
அம் - அழகிய.
``விளக்குப் போலும் அனலை ஏந்தி` என இயைக்க.
பொங்கு அகலத்து ஆடு அரவம் ஆர்த்தது - அழகு மிகுந்த மார்பின்கண் படம் எடுத்து ஆடுகின்ற பாம்பைக் கட்டி, மேவியவா - விரும்பியவாறு.
`அரசர் முதலியோரை மகிழ்வித்துப் பொருளும், புகழும் பெற வேண்டுவார் செய்யும் செயலை நீ மேற்கொண்டவாறு என்? அதனை நீ கூறு` என்பதாம்.
`உனது இயல்புகளைக் கூத்துச் செய்கைகளால் உணர்த்திப் பக்குவிகளை ஆட்கொள்ளவே மேற்கொண்டாய் போலும்` என்பது குறிப்பு.
`ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் புகழ் அல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீ ராகில்
நாடுந் தொழிலார்க் கருளல்லது நாட்டலாமே.
` * எனத் திருஞானசம்பந்தர் அருளிச்செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 62

கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீறாவும்
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கோலச் சிறுகிளியே, (நீ) வேறாக வந்திருந்து, நின் பொன்வாயால், எம் ஈசன் திறம் மெல்லெனவே கூறாய்` என இயைத்துக் கொள்க.
பொன் - அருமை இதனைப் பேசுதல் பற்றிக் கொள்க.
கோலம் - அழகு.
வேறாக - தனியாக.
வந்து இருந்து - யான் இருக்கும் இடத்திற்கு வந்து இருந்து.
நீறாவும் + நீல் தாவும் - நீல நிறம் பொருந்திய.
மஞ்சு - மேகம்.
குடுமி - சிகரம்.
வாள் - ஒளி.
இது காளத்திப் பெருமான் மேல் காதல் கொண்டாள் ஒருத்தி தனது ஆற்றாமையால் தான் வளர்க்கும் கிளியை நோக்கிக் கூறி இரங்கியது.
`ஈசன் வாராவிடினும் அவன் திறத்தை பிறர் சொல்லக் கேட்பின் ஆற்றுதல் உண்டாகும்` என்பது கருத்து.
திறம் - குணம்.
தன் சொல்லைக் கேட்டலும், கேட்டு மறுமொழி கூறுதலும் இல்லாதனவற்றைத் தனது ஆற்றாமையால் அவற்றையுடையனபோல வைத்து இங்ஙனம் கூறுவனவற்றை, `காமம் மிக்க கழிபடர் கிளவி` என்பர்.
இறைவனிடத்தில் பேரன்பு.
கொண்டவர்களும் அஃறிணைப் பொருள்களை நோக்கி இவ்வாறு கூறுதல் உண்டு.

பண் :

பாடல் எண் : 63

ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்
மாசில் நிறத்த மடக்குருகே - கூசி
இருத்தியாய் நீயும் இருங்கயிலை மேயாற்
கருத்தியாய்க் காமுற்றா யாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மாசில் நிறத்த மடக் குருகே`` என்பதனை முதலிற் கொள்க.
மாசில் நிறம் - வெண்ணிறம்.
மடம் - இளமை.
குருகு - பறவை அஃது இங்கு நீர்நிலையைச் சார்ந்து வாழும் பறவையைக் குறித்தது.
`நீயும் எம்மைப்போல் கூசி இருத்தியாய்` என இயைக்க.
கூசியிருத்தல் - ஒடுங்கியிருத்தல்.
`இருத்தி` என்னும் முன்னிலை வினையாலணையும் பெயர், `ஆயினமையால்` என்னும் காரணப் பொருளில் வந்த ``ஆய்`` என்னும் செய்தென் எச்சத்தை ஏற்று, ``ஆம்`` என்பதனோடு முடிந்தது.
அருத்தி - விருப்பம்.
அருத்தியுடையதனை ``அருத்தி`` என்றது உபசார வழக்கு `காமம் உற்றாய்` என்பது `காமுற்றாய்` எனக் குறைந்து நின்றது.
``ஆம்`` என்பது, `அவன் கொடுத்தானாம்; நான் வாங்கினேனாம்` என்றல்போல மேவாமைப் பொருளில் வந்தது.
எனவே, ஈற்றடி, நகையுள்ளுறுத்த கூற்றாம்.
அங்ஙனமாயினும் தனது நிலைமையை அதன் மேல் ஏற்றிக் கூறியத னால், ஆற்றாமை மிக்க தலைவிக்கு ஓர் ஆற்றுதல் பிறந்தது.
இதுவும் காமம் மிக்க கழிபடர் கிளவி.

பண் :

பாடல் எண் : 64

காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே
யாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்து
ஞாலத் துயிரெல்லாம் கண்துஞ்சும் நள்ளிருள்கூர்
காலத்தும் துஞ்சாதுன் கண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இருங் கடலே.
.
.
இருள்கூர் யாமக் காலத்தும் உன் கண் துஞ்சாது.
(ஆகலின் நீயும்) யாம் உள்ளது உற்றாய்.
(அதனால் நீயும்) காளத்தியான் கழற்கே காமுற்றாயாமன்றே` எனக் கூட்டி முடிக்க.
கழற்கு - கழலைப் பெறுதற்கு.
இரு - பெரிய.
யாமம் - இடையாமம்.
அது துயிலுக்குச் சிறந்த காலம் ஆதலின் உம்மை உயர்வு சிறப்பு.
``யாமத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை.
``காலத்தும்`` என்பதன் பின் `ஓலிக்கின்றாய் ஆதலின்` என்பது வருவிக்க.
உற்றது- உற்ற துன்பம்.

பண் :

பாடல் எண் : 65

கண்ணும் கருத்துங் கயிலாய ரேஎமக்கென்
றெண்ணி யிருப்பவன்யான் எப்பொழுதும் - நண்ணும்
பொறியா டரவசைத்த பூதப் படையார்
அறியார்கொல் நெஞ்சே அவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, யான் எப்பொழுதும்` என்று எடுத்துக் கொண்டு, `படையராகிய அவர் அறியார்கொல்` என முடிக்க.
கொல்.
ஐயம்.
ஐயத்திற்குக் காரணம் எதிர்ப்படாமை.
பொறி - புள்ளி.

பண் :

பாடல் எண் : 66

நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை
அஞ்சேல்என் றாட்கொண் டருள்செய்வார் - நஞ்சேயும்
கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அலர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முற்பகுதியை; தம் நெஞ்சை நோக்கியும், பிற் பகுதியை உலகரை நோக்கியும் கூறியவாறாகக் கொள்க.
`நினைவாரை, ேநரே `அஞ்சேல்` என்று ஆட்கொண்டு அருள் செய்வார் - எனவும், `அண்டத்தார் சூடும் அலர் காளத்தி ஆள்வார் கழல்` எனவும் இயைக்க.
``அஞ்சேல்`` என்பது வேறு முடிபு ஆகலின் இட வழுவின்று.
சூடுதல்- தலைமேற் கொள்ளல்.
கண்டாய், கண்டீர், முன்னிலை யசைகள்.

பண் :

பாடல் எண் : 67

அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்
பலராய்ப் படைத்துக்காத் தாண்டு - புலர்காலத்
தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க.
``அலரோன்`` முதலிய மூவர்க்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் நிரலே கொள்க.
`ஆளுதல், அமரரை` என்க.
``மற்றும் பலர்`` என்றதற்கு தேவர் பலருள் அவரவர்க்கு உரியதொழிலைக் கொள்க.
`தேவரை அணு பக்கமாக நோக்கின் பலராயினும், சம்பு பக்கமாக நோக்கின் சிவன் ஒருவனே யாம்` என்பது கருத்து.
இதனால், `தேவராவார் அதிகாரக மூர்த்திகள்` என்பது விளங்கும்.
புலர் காலம் - ஒடுக்கக் காலம், `அப்பொழுது செயல் இன்மையின் தான் மட்டுமே உளன்` என்பதும், `மீண்டு` என்றது, `மறுபடைப்புக் காலத்தில்` என்றபடி.
`பரம்பொருள் ஒன்றோ, பலவோ` என ஐயுறுவார்க்கு, `ஒடுக்கக் காலத்து ஒன்றாகித் தோற்றக் காலத்தில் பலவாகும்` எனவும், `அவ்வாறாகின்றவன் சிவனே` எனவும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 68

கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எத்துணைப் பேரையோ வென்றவர் எத் துணையோ பேர் இருப்பினும் காமனை வென்றவர் ஒருவரும் இலர்; அவனை வென்றவன் சிவன் ஒருவனே` என்பது உணர்த்தியவாறு.
`சிவனடியார்களும் காமனை வென்றார் எனின், அவரும் சிவனது அருளாலே வெல்லுதலின், அவர் வெற்றியும் சிவன் வெற்றியேயாம் என்க.
பண்பு, குற்றம் செய்தாரை ஒறுத்துத் திருத்தும் குணம்.
`அக் குணத்தோடு கூடியதே சிவனது கோபம்` என்றபடி.
அனங்கன் - உருவிலி; மன்மதன்.
பற்று அற்று - துணையில்லாமல்.
அஃதாவது `காப்பவர் இல்லாமல்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 69

வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஒர்
செந்தறுகண் கேழல் திறம்புரிந்து - வந்தருளும்
கானவனாம் கோலமியான் காணக் கயிலாயா
வானவர்தம் கோமானே வா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அஞ்சாமை` என்னும் பொருட்டாகிய ``தறுகண்`` என்பது ஒரு சொல்லாயினும் பிரித்துக் கூட்டல் முறைமையால் ``கண்`` என்பதனைத் தனிச்சொல்லாகப் பிரித்து, ``செம்மை`` என்பதனோடும் கூட்டுக.
கேழல் - பன்றி.
கேழல் திறம் - கேழலைக் கொல்லும் செயல் திறம்.
புரிந்து - செய்து.
கானவன் - வேடன்.
கோலம் - வேடம்.
பார்த் தனைக் கொல்லச் சென்ற பன்றியைக் கொல்லும் முகத்தால் சிவ பெருமான் அவனோடு போர்புரியும் திருவிளையாடலைச் செய்து அவனுக்குப் பாசுபதம் அளித்த வரலாற்றைப் பாரதம் கூறும் அச்செயல் அப்பெருமானது எளிவந்த கருணையை இனிது விளக்கி நிற்றலின், அந்த வடிவத்தைக் காண்பதில் இவ்வாசிரியர் அவாமிக்குடையாரா யினார் என்க.
பார்த்தன் - அருச்சுனன்.

பண் :

பாடல் எண் : 70

வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல்
தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்கும்
காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத்
தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வா மான் - தாவிச் செல்லுகின்ற குதிரை.
வயம் - வெற்றி.
விசயன் - அருச்சுனன்.
``தாம்`` இரண்டில் முன்னது சாரியை `தவம் உடையார்தாம் உலகில் ஆர்` என மாற்றி யுரைக்க.
தாம் - படர்க்கைப் பன்மை இருதிணைப் பொதுப் பெயர்.
அஃது எழு வாயாய் நின்று பின் வந்த ``அரியராய்`` என்னும் பயனிலை கொண்டு முடிந்தது.
`தான் சென்று தீண்டப் பெற்றமையால், விசயனைப்போல் தவம் உடையார் உலகில் ஆர்` என்க.
சிவபெருமான் பலருக்கு அருள் புரியினும், மெய் தீண்டல் மிக அரிதாம்.
நாயன் மாருள்ளும் அப்பேறு மிகச் சிலர்க்கே கிடைத்தது.
`பார்த்தன் சிவபெருமானோடு மற்போர் தொடங்கிக் கட்டிப் புரண்டான்` என்றால், அவன் செய்த தவம் மிக மிகப் பெரிதேயாம்.
அதனால்தான் திருமுறைகளில் அவன் பல இடங் களில் எடுத்துப் பாராட்டப்படுகின்றான்.
``அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை.
.
.
என்மனத்தே வைத்தேனே`` 1 ``பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுபதத்தை யீந்தாய்.
.
.
.
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறம் இலேனே`` 2 என்றாற்போல வருவன பலவும் காண்க.

பண் :

பாடல் எண் : 71

சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய்
என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்று
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க் கிவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்` என்பதை முதலில் வைத்து, ``இவர் பத்தர்க்கு இனியவா நன்று`` என முடிக்க.
``கனியவாம் சோலைக் கயிலாயம்`` என்பதற்குப் பொருள் மேலே உரைக்கப்பட்டது.
``சிவபெருமான் பலர்க்கும் மிகச் சேயனாயினும், அடியார்க்கு மிக அணியனாயிருத்தல் மிக நல்லதாகின்றது என்றபடி.
(1)``ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்`` எனத் தொடங்கும் புறப்பாடலில் ஔவையார் அதியமானைப் பாராட்டியது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

பண் :

பாடல் எண் : 72

இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்
இவர்அல்லர் என்றிருக்க வேண்டா - கவராதே
காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி யாள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே யாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருக்காளத்தி மலையைத் தமதாகக் கொண்டு ஆளும் தேவராகிய இவரே` என எடுத்துக்கொண்டு உரைக்க.
செய்யு ளாகலின் சுட்டுப் பெயர் முன்வந்தது.
முதல் தேவர் - தலைமைக் கடவுள்.
எனவே, `தேவர் பிறர் யாவரும் இவர்தம் பணிக் கடவுளர் என்பது போந்தது.
`இங்ஙனமாகவே - இவர் எல்லாரினும் மேலானவர்- என்பது சொல்ல வேண்டா` என்பது கருத்தாகலின்` ``எல்லார்க்கும் மிக்கார்`` என்றது முடிந்தது முடித்தலாம்.
`அன்னரல்லர்` என வருவிக்க.
இருத்தல் - அறியாமையுட் பட்டிருத்தல்.
``இவர் அல்லர் என்று இருக்க வேண்டா`` என்றது, மேலதனை எதிர்மறை முகத்தால் வலியுறுத்தியதேயாம்.
கவர்தல் - இரண்டு படுதல்; ஐயுறுதல்.
(2) ``கவராதே தொழும் அடியார்`` என அப்பரும் அருளிச் செய்தார்.
தரித்தல் - விரும்புதல்.
ஆதரித்த தெய்வம் - இட்ட தெய்வம்.
வேறு வேறு தெய்வங்களை விரும்புதல், `வேறு வேறு பயன்களை அது அதுவே தரும்` என்னும் எண்ணத்தினாலேயாம்.
`அனைத்துப் பயனையும் இவர் ஒருவரே தருதல் உண்மையாகலின், அனைத்துத் தெய்வங்களும் இவர் ஒருவரேயாவர்` என்றார்.
`ஆம்` என்பது உயர்தினை ஒருமையாய் நின்றமையின் பன்மையொருமை மயக்கமாம்.

பண் :

பாடல் எண் : 73

ஆம்என்று நாளை உளஎன்று வாழ்விலே
தாம்இன்று வீழ்தல் தவமன்று - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலை
அம்மானைச் சேர்வ தறிவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாளை உள என்று`` என்பதை முதலிலே கொள்க.
`நாளை - நாளை - என்று தொடர்ந்து வரும் நாள்கள் பல உள; ஆகையால், நாம் செய்ய வேண்டுவதை நாளைச் செய்து கொள்ள முடியும் என்று எண்ணி, (தாம்) மக்கள் பலரும், `இன்று` என எண்ணப் படும் நாள்களில் உலக மயக்கிலே வீழ்தல் அறிவுடைமையன்று.
(ஏனெனில், ``இன்றைக்கு இருந்தாரை நாளைக் கிருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லை`` 1 ஆதலின், மனமே,) நாம் எந்த ஒரு நாளிலும் இந்த நிலையற்ற வாழ்வை விரும்பாமல், பெரிய கயிலாய மலையில் வீற்றிருக்கும் தலைவனைப் புகலிடமாக அடைந்திருத்தலே அறிவுடைமையாகும் - என வேண்டும் சொற்கள் வருவித்து உரைத்துக் கொள்க.
`தவம் ஒன்றே தக்கது` என்பார், தக்கதனை இங்கு ``தவம்`` என்றார் அஃது இங்கு அதற்குக் காரணமாகிய அறியாமை மேல் நின்றதைப் பின் ``அறிவு`` என்றது பற்றி அறிக.
அன்றறிவாம் என்னாது அறம் செய்க
என்ற திருவள்ளுவர் வாய்மொழியும் காண்க.
`தகவன்று` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 74

அறியாம லேனும் அறிந்தேனும் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறியாது செய்யும் வினை `அபுத்தி பூர்வ வினை` என்றும், அறிந்து செய்யும் வினை, `புத்தி பூர்வ வினை` என்றும் சொல்லப்படும்.
செய்து - செய்தலால்.
செறிதல் - திரளுதல்.
கொடுமை மிகுதி பற்றித் தீவினையையே கூறினாராயினும் நல்வினையும் உடன் கொள்ளப்படும்.
பொன்முகலி, திருக்காளத்தி மலையைச் சார ஓடும் யாறு.
திருக்காளத்திப் பெருமானது திருவருளால் அவ்வாறு பெற் றுள்ள சிறப்பை உணர்த்தியவாறு.
`நெறிநின்று ஆடுதல்` என இயையும் நெறி நிற்றல், திருமுழுக்காடும் முறைவழி நிற்றல்.
`அம்முறைகளுள் தலையாயது சிவவணக்கம்` என்றற்கு, ``காளத்திநாதன் அடிபணிந்து ஆடுதல்` என்றார்.

பண் :

பாடல் எண் : 75

போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்
ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால்
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்
விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கயிலை வெற்பளவும்`` என்பதனால், `வடக்கு நோக்கிப் போகின்ற மாமுகிலே` என்க.
எனவே இது வேனிற் காலத்துத் தென்றலால் வருந்தினவள் கூற்றாம்.
காலத்தால் இது பாலைத் திணை.
``எமக்காக இன்று கயிலை வெற்பளவும் ஏகு; ஏகினால்` என்க.
``எமக்கு`` என்பது ஒருமைப் பன்மை மயக்கம்.
எம் பெருமானாகிய உண்டாற்கு என் நோயை வேறு விண்ணப்பம் செய்` என இயைத்து முடிக்க.
வேறு - சிறப்பாக `பொதுவாக நீ விண்ணப்பிக்க வேண்டிய வற்றை விண்ணப்பித்தபின், தனியாகச் சிறந்தெடுத்து விண்ணப்பம் செய்` என்றபடி.
உள் உறு நோய் - பிறர்க்கு வெளிப்படுத்தலாகாது, உள்ளே மறைத்து வைக்கப்படுகின்ற நோய், கண்டாய், முன்னிலை யசை.
இது மேகவிடு தூது.
`உண்ணப்படா நஞ்சை உண்டாற்கு என்னை ஏற்றுக் கொள்ளுதல் ஏலாததன்று` என்பதைக் கூறுக - என்பது குறிப்பு.
இஃது உடம்பொடு புணர்த்தல்.

பண் :

பாடல் எண் : 76

வேறேயும் காக்கத் தகுவேனை மெல்லியலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும்
அன்பா அடியேற் கருளா தொழிகின்ற
தென்பாவ மேயன்றோ இன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கொற்றவனே, அன்பா`` என்னும் விளிகளை முதலிற் கொள்க.
``தகுவேனே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதன்பின், `ஆயினும்` என சொல் வருவிக்க.
வேறே - சிறப்பாக இஃது அளியளாம் காரணத்தால் அமைந்தது.
உம்மை சிறப்பு.
`தகுவேனை` என்பது பாடம் அன்று.
மெல்லியலாள், உமை.
ஏறு - இடபம்.
`இன்று அருளாது ஒழிகின்றது` எனக் கூட்டுக.
``இன்று`` என்பது, `அருளு வதே உனக்கு என்றும் இயல்பு` என்பதைக் குறித்து நின்றது.
ஒழிகின்ற தன் காரணத்தை.
``ஒழிகின்றது`` எனக் காரியமாக உபசரித்தார்.
இது தலைவி தனது வேட்கையைத் தானே தலைவனிடம் கூறி.
`வேட்கை முந்துறத்தல்` என்னும் பெருந்திணைத் துறை.

பண் :

பாடல் எண் : 77

இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்
கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என்
னுட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பஞ் செய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இளமதி, பெருமான் அணிந்த பிறை பலர், பெருமான் ஊறும் விடையை நோக்கி, `நீ எம்பக்கல் வருங்கால்மெல்ல நட` என வேண்டிக் கொள்ளுதல்போல, இவள், பெருமான் அணிந் துள்ள பிறையை நோக்கி வேண்டுகின்றாள்,) `இளமதியே, இன்று தொடங்கி, யான் உனக்கு என்றும் பணிசெய்வேன்; என்றும் என்னுள் காதல் உண்மையினை எம்பெருமானாகிய கயிலை மேயாற்கு விண்ணப்பம் செய்` என இயைத்து முடிக்க.
``உள்`` என்பது இடப் பெயர்.
அஃது ஆகுபெயராய் ஆங்கு உள்ள நெஞ்சத்தைக் குறித்தது.
திட்குதல் - நாத்தடைப்படுதல்.
இது, `திக்குதல்` என வழங்குகின்றது.
பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே.
(புறநானூறு- கடவுள் வாழ்த்து) என்ப ஆகலின், அப்பிறைக்கு என்றும் பணிசெய்வதாகக் கூறியதில் புதிது ஒன்றும் இல்லை.

பண் :

பாடல் எண் : 78

செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கையறவு - செயலற்ற நிலை.
உள் மெலிவு - மனச் சோர்வு.
யான் காட்ட - நான் நேரே புலப்படுத்தற் பொருட்டு.
`இத் தெருவே பையவே போது` என்க.
கார் - மேகம் `தெருவின்கண்ணே` என உருபு விரிக்க.
மேலை வெண்பாவின் உரையிற் கூறியபடி இவள் பெருமான் ஊர்ந்துவரும் விடையை நோக்கி வேண்டினாள்.
போது - வா; இது `புகுது` என்பதன் மரூஉ.

பண் :

பாடல் எண் : 79

போது நெறியனவே பேசிநின் பொன்வாயால்
ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால்
கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான்
வண்தார்மோந் தென்குழற்கே வா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஒளி வண்டே`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
குழற்கு - குழற்கண்; வேற்றுமை மயக்கம்.
`பெருமான் தாரினை மோந்து மீண்டு குழற்கண் வந்தால், குழலும் அத்தாரின் மணத்தினைப் பெற்று, அத்தாரினைச் சூடியதுபோல் ஆகும்` என்னும் கருத்தால் அவ்வாறு செய்யுமாறு கூறினாள்.
இதுவும் அவளது ஆற்றாமையால் சொல்லிய சொல்லேயாகும்.
ஆகவே, `அது பயனுடைய செயல்தானா` என்னும் வினா எழவில்லை.
போது நெறியான - சென்று திரும்பிய வகையில் நிகழ்ந்த செயல்கள்.
`பேசி ஊத` என்க.
பொன், ஒளி இவை `அழகு` என்னும் பொருளன.
`பொன் போலும் வாய்` என உவமையாக்கலும் ஆம்.
`ஊதுதற்குரிய பக்குவத்தில் பல மலர்களைப் பறித்துப் பரிசாகத் தருவேன்` என்க.
`உண்ணத் தருவன், தின்னத் தருவன்` என்பன போல, ``ஊதத் தருவன்`` என்பது செயப்படுபொருள் தொக்கு நிற்க வந்தது.

பண் :

பாடல் எண் : 80

வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஒவாதே
பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக்
கோமான்வர ஒருகாற் கூவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வா வா`` என்னும் அடுக்குத் தொடரை, ``பிள்ளாய்`` என்பதன்பின் கூட்டியுரைக்க.
`மணிவாயால் ஓவாதே தளிர்கோதிக் கொண்டு` என்க.
பூ - அழகு.
அன்றி, `பூம்பொழில், மாம் பொழில்` என இயைத்துரைப்பினும் ஆம்.
வர - வருமாறு.
அஃதாவது.
`நின்பொருட்டாக இறந்து படுவாள் ஒருத்தியைக் காக்க வா எனல்.
கூவு என்பதன்பின் அமையும் என்பது வருவித்து முடிக்க.
`அவன் பேரருளாளன் ஆதலின் ஒருகாற் கூடவே அமையும்` என்பதாம்.
அடுக்கு, விரைவு பற்றி வந்தது.
பிள்ளைப் பிராணிகளில் குயிலும் ஒன்றாதல் பற்றி, ``பிள்ளாய்`` என்றாள்.
``வா இங்கே நீ குயிற் பிள்ளாய்`` * எனத் திருவாசகத்தும் வந்தது.

பண் :

பாடல் எண் : 81

கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன்
றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர்
அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
தன்பால்பால் வேண்டுதலும் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூவுதல் - அழைத்தல்.
``கூவுதலும்`` என்பதன்பின், `வர` என ஒரு சொல் வருவிக்க.
``மேவிய சீர்`` என்பது முதலாகத் தொடங்கி, ``எம்பெருமான்`` என்பதை, ``வேண்டுதலும்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க.
புலிக்காலன் - வியாக்கிர பாத முனிவர்.
பாலன் - அவர் மகன் உபமன்னிய முனிவர் ``பாலன்பால் தன்பால்`` என்பவற்றில் ``பால்`` ஏழன் உருபு.
`பாலன் பசிக்குப் பால் வேண்டப் பாற்கடலையே அழைத்துக் கொடுத்த பெருமான் கயிலைப் பெருமான்` என அவனது அருளையும், ஆற்றலையும் வியந்து கூறிய வாறு.
உபமன்னிய முனிவர்க்காகச் சிவபெருமான் பாற்கடலை அழைத்து கொடுக்க, அதனை அவர் உண்டு மகிழ்ந்த வரலாற்றைக் கோயிற் புராணத்துட் 1 காண்க.
``பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்`` 2 என்னும் திருப்பல்லாண்டினை யும், ``அத்தர் தந்த அருட்பாற் கடல் உண்டு - சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்`` 3 என்னும் திருத்தொண்டர் புராணத்தையும் காண்க.

பண் :

பாடல் எண் : 82

தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம்
ஆனான்மற் றார்இதனை அன்றென்பார் - வானோர்
களைகண்தா னாய்நின்ற காளத்தி யாள்வார்
வளைகொண்டார் மால்தந்தார் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வானோர்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
களைகண்- பற்றுக்கோடு, முன்னர்ப் பன்மையாகக் கொள்ள வைத்துப் பின் மூன்று இடங்களில் ``தான்`` என ஒருமையாகக் கூறியது.
`இப் பெருந்தகைமை யுடையார் தமக்கு அடாதது செய்தார்` என்பது தோன்றுதற்கு, `எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்`. (குறள்.,144)
என்பதிற்போந்த பால் மயக்கம்போல.
தான் கண்ட வா - தான் கருதிய வாறே.
வழக்கம் - தனது இயற்கை.
ஆனான் - நீங்கான் `அன்று` எனல்.
`இது தகாது` என இடித்துரைத்தல்.

பண் :

பாடல் எண் : 83

வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ
இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற்
கிடந்தார் வலியெலாங் கெட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஓர் அரக்கனார், இராவணன்.
ஆர் விகுதி இழிவு குறித்து நின்றது.
இடந்தார் - பெயர்த்தார்.
`அடார்` என்பது இங்கு ``இடார்`` என வந்தது.
`பாறங்கல்` என்பது பொருள்.
முன்னதற்கு முன் வெண்பாவில், வணங்கினார்க்குக் அருளல் சொல்லப்பட்டது.
இவ் வெண்பாவில் தருக்கினாரைத் தெறல் சொல்லப்பட்டது.
அந்தோ, இரக்கக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 84

கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல்
பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்
கலந்தரனார் காளத்தி யாள்வார்மேற் சென்று
சலந்தரனார் பட்டதுவும் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கெட்ட - தீமையை மிக உடைமையால், பெருமையை முற்ற இழந்த.
வேதியர்.
மீமாஞ்சை மதத்தவர்.
அவர் தாருகாவன முனிவர் போன்றவர்.
பட்டது - அசுரர் பலர் அழிந்தமை.
`பண்டு ஒருநாள் சலந்தரனால், (முன்பு பலர்) பட்டதுவும் ஓராது, அரனால் மேல் ஒட்டக் கலந்து சென்று தாம் பட்டதுவும் கேளீர் கொல்? என இயைத்து முடிக்க.
ஒட்டுதல் - வஞ்சினம் கூறிப் போர் தொடங்குதல், கலந்து - உடன்பட்டு, `சலந்தரன்` எனும் அசுரன் பட்டதாவது, சக்கரத்தால் தலை அறுபட்டு வீழ்ந்தது, எல்லாரையும் வென்று செருக்கு மிக்க சலந்தராசுரன் சிவபெருமானை வெல்லக் கருதி அவர் மேல் சென்றபொழுது, அவர் மண்ணிற் கீறிய சக்கரத்தை எடுத்துத் தலையறுப்புண்டு அழிந்த வரலாற்றைக் கந்த புராணத்துட் காண்க.
சிவ பெருமானை - இயல்பாகவே ஏலாது எதிர்க்கும் வேதியரை நோக்கிக் கூற வந்தவர், அசுரருட் சிலரும் அத்தன்மையர் ஆதல் பற்றி, அவர் களையும் உடன் நோக்கிக் கூறினார்.
அரனாராகிய `காளத்தி ஆள்வார் மேல்` என்க.

பண் :

பாடல் எண் : 85

தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை இறுதியிற் கூட்டுக.
அங்ஙனம் கூட்டு தற்குமுன் `காலனார் பத்தர்க்கு அருகு அணையார்; தொழுது தூரத்தே போவார்` என இயைத்துக்கொள்க.
காம்பு - மூங்கில்.
`அதினின்றும் விளைந்த நல்ல நெல்லையுடைய கயிலை` என்க.
``போவார்`` என்பதன்பின், `ஆம்! முன்பு தான் பட்டதைச் சிறிதாயினும் அறியாது போவாரல்லர்; அதனால் அருகு சார்வாரோ` என ஏதுக் கூறி முடிக்க.
முன்புபட்டது, மார்கண்டேயர்மேற் சென்று உதையுண்டது இவ் வரலாறும் கந்தபுராணத்துட் கூறப்பட்டது.
`கொல்` என்னும் ஐய இடைச் சொல் எதிர்மறை வினையோடு பொருந்த உடன்பாடாய தேற்றத்தை உணர்த்திற்று.
``சார்வரே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர்மறைப் பொருளைத் தந்தது.
``காலனார்`` என்னும் பன்மை இழிவு குறித்து நின்றது.
இழிவாவது மார்க்கண்டேயர் மேல் தன் நிலைமையறியாது சென்று கெட்டது.

பண் :

பாடல் எண் : 86

தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நமனும்`` என்பதை முதலிலும், ``சொல்லும்`` என்பதை ஈற்றிலும் வைத்துரைக்க.
அங்ஙனம் உரைக்குங்கால் ``பணிந்து எத்தனையும் சேய்த்தாக அகலப் போமின்கள்` என்க.
``நமனும்`` என்னும் உம்மை, உயர்வு சிறப்பு.
தொழுதல்.
பத்தரைத் திசை நோக்கியாம்.
எத்தனையும் சேய்த்து ஆக - நீவீர் செல்லுமிடம் எவ்வளவு தொலைவாக முடியுமோ அவ்வளவு தொலைவு ஆகும்படி.
``சிவனடியரை நமன் தூதுவர் அணுகார்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 87

வென்றைந்தும் காமாதி வேரறுத்து மெல்லவே
ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை
மானுடையான் என்னை உடையான் வடகயிலை
தானுடையான் தன்னுடைய தாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஐந்தும் வென்று` என்க.
ஐன்து, ஐம்புலன்.
காமாதி- காமம் முதலிய அறு பகைகள்.
அவை காமம், குரோதம்.
உலோபம், மோகம், மதம் மாற்சரியம் - என்பன.
இவை அவா, வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, அழுக்காறு என்பனவாம்.
`இவை களை வேரறுத்து` என்க.
ஒன்ற - பொருந்த.
`தாளில் ஒன்ற` எனவும் `சென்று ஒன்றலாம்` எனவும் இயையும், ``தான்`` எழுவாய் வேற்றுமை.
``உடையான்`` என்னும் குறிப்பு வினைப் பயனிலையைக் கொண்டது.

பண் :

பாடல் எண் : 88

தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால்
திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திறல் காளி`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``கண்ட`` என்பது, `உண்டாக்கிய` என்னும் பொருட்டாய், `செய்வித்த`` எனப் பொருள் தந்து, ``நக்கனை`` என்னும் இரண்டா வதற்கு முடிபாயிற்று.
செய்வித்தமையாவது, செய்ததற்கு ஏதுவாய் நின்றமை, `தாருகன்` என்னும் அசுரனை அழித்த காளி, அதனால், செருக்கி உலகத்திற்கு ஊறு உண்டாக்கச் சிவபெருமான் அவளோடு நடனப் போர் செய்து, அவள் நாணிச் செருக்கொழியப் பண்ணினான் என்பது புராணம்.
``தாருகன் - பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்``* என இளங்கோவடிகளும் கூறினார்.
அப்பர் தமது தச புராணத் திருப் பதிகத்து நான்காவது திருப்பாடலில் இவ்வரலாற்றைக் குறித்தருளி னார்.
`இந்நடனம் ஊர்த்துவ தாண்டவம்` என்பதை ``தண் விசும்பில் - தாள் ஒன்றால் அண்டம் கடந்துருவி`` எனக் குறித்தருளினார்.
அஃதாவது ஒருகால் ஆகாயம் நோக்கிச் செல்ல உயரத் தூக்கி ஆடிய நடனம்.
`இந்நடனம் திருவாலங் காட்டில் நிகழ்ந்தது` என்பது ஐதிகம்.
முதற்கண் இறைவன் மேல் வைத்து ``ஊடுருவ`` என்றார்.
போர்க்கும்- மறைக்கும்.
இறைவன் பாதாளம் ஊடுருவும்படி தான் அண்டம் கடந்து உருவித்திக்கனைத்தும் போர்க்கும்` - என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 89

நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்
படம்ஆடும் பாம்பணையான் காணான் - விடம்மேவும்
காரேறு கண்டன் கயிலாயன் றன்உருவை
யாரே அறிவார் இசைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நான்முகன் (பிரமன்) `முன்னே முடியைக் கண்டு விட்டுப் பின்னே அடியைக் காண்பேன்` என முயன்று, முதல் முயற்சியிலே தோல்வியுற்றமை பற்றி ``தாள் நான்முகனும் காணான்`` என்றார்.
தாளைப் பாம்பணையான் (மாயோன்) தேடிக்காணாது எய்த்தமை வெளிப்படை.
காணாமைக் குறை இனிது புலப்பட வேண்டித் தனித்தனித் தொடராகக் கூறினார்.
தன், சாரியை, `இசைந்து அறிவார்` என மாற்றுக.
இசைதல் - தம் இச்சையாகத் தாமே காண நினைத்தல்.
``யாரே அறிவார்`` - என்னும் வினா, அறிவார் ஒருவரும் இன்மையைக் குறித்தது.
`அவனே காட்டினாலன்றித் தாமாக ஒருவரும் காண மாட்டார்` என்பது கருத்து.
காண்பார் ஆர்? கண்ணுதலாய்க்
காட்டாக் காலே.
* என்னும் அருட்டிரு மொழியைக் காண்க.
இக்கருத்தினை வரும் வெண்பாவில் வெளிப்பட எடுத்துக் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 90

இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடவே கூடு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இசையும் - தானே தன் இச்சைப்படி ஏற்கின்ற.
கோலம் - வடிவம்.
எனவே, தனக்கு உருவத்தைப் பிறர் படைத்துத் தர வேண்டாமை விளங்கிற்று.
``வேண்டி`` என்பதற்கு, `தான் வேண்டி` என உரைக்க.
வசை - தளர்ச்சி அஃதாவது, அருள் பண்ணாமை, ``கூடலே`` என்பதை முதலிற் கொள்க.
``காட்டி`` என்றது அனுவாதம்.
கலத்தல் - எதிர்ப்படுதல்.
``காட்டுமேல், கூட்டுமேல்`` என்பன, `அவைகளை அவன் செய்தல் உண்டாகும் எனின்` என்னும் பொருள.
அகப்பொருள் நிகழ்ச்சிகளில் தலைவனைப் பிரிந்து ஆற்றாத தலைவி தலைவனது வருகை குறித்துப் பார்க்கும் குறிகளுள் கூடல் இழைத்தல் ஒன்று.
அஃதாவது, கண்ணை மூடியிருந்து நிலத்தில் வரைந்துவிட்டு விழித்துப் பார்க்கும் பொழுது வட்டத்தின் இரு முனை களும் ஒன்று கூட, வட்டம் குறையின்றி நன்கு அமைந்திருப்பின் `தலைவன் விரைவில் வந்து சேர்வான்` என்பதும், இருமுனைகளும் வேறு வேறாய்ப் போய்விட்டிருப்பின் `தலைவன் அண்மையில் வாரான்` என்பதும் முடிவுகளாகும்.
இம்முடிவுகளில் அக்கால மக்கட்கு முழு நம்பிக்கையிருந்தது.
இருமுனைகளும் ஒன்று கூடும்படி வரைதலால் அந்த வட்டத்திற்கே `கூடல்` என்பதும், அதனை வரைதற்கு, `கூடல் இழைத்தல்` என்பதும், பெயர்களாயின.
`நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர்மல்கும்
ஓடும் மாலினொடு, ஒண்கொடி மதராள்
மாடம் நீள்மரு கற்பெரு மான்வரின்
கூடு நீஎன்று கூடல் இழைக்குமே.
` * என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார்.
ஆகவே, இப்பாட்டு காளத்திப் பெருமான் மேல் காதல் கொண்டு ஆற்றாளாய தலைமகள் ஒருத்தி, `அவன் முற்றறிவும், பேரருளும் உடையன் ஆதலின் தன்னைக் காதலித்தார் முன் தான் விரைய வந்து அருள் பண்ணுவான்`- என்னும் உறுதிப்பாடு உடையளாய், `ஆயினும் அதனைக் கூடல் இழைத்துக் காண்போம்` எனக் கருதி அங்ஙனம் இழைக்கின்றாள் கூற்றாயிற்று.
ஆயினும், உண்மையில் இஃது ஆசிரியரது பேரன்பினை.
இம்முறையால் வெளிப்படுத்திய கூற்றேயாதல் தெளிவு.
இருவேறிடங்களில் விலகியுள்ளவர் விரைய ஓரிடத்தில் ஒன்று கூடுதலை அறிவித்தற்கு, இருமுனைகள் வேற்றுமை தோன்றாது ஒன்று கூடும் வட்டம் மிகச் சிறந்த குறியாயிற்று.

பண் :

பாடல் எண் : 91

கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
வடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
அடகயில ஆரமுதை விட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இருந்து, நாடி`` என்னும் எச்ச வினைகளால் புறங்கூறுவாரது இயல்பினை விளக்கியவாறு.
``தம் குற்றங்கள் நாடாதே`` என்பதனை முதற்கண் வைத்து உரைக்க.
`ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு`.
1 என்னும் குறளுக்குப் பரிமேலழகர், `தம் குற்றங்களில் பிற குற்றங் களைக் காணாது, புறங்கூறலாகிய அந்தக் குற்றத்தைக் கண்டாலே போதும்` என்பது பட உரைத்தமையும் இங்கு நோக்கத்தக்கது.
நாடுதல் - ஆராய்தல்.
ஆராயுங்கால் சிலரைப் பற்றிப் புறங்கூறப் பொருள் கிடைக்காமலே போகலாம்.
அப்பொழுது அவர்கட்கு அது பற்றித் துன்பமும் உண்டாகலாம் என்பது பற்றி ``நாடி பாடி`` என்றார்.
``ஏத்தாதே வாழ்ந்திடுவான்`` என்றது, காலம் முழுவதையும் இப்படிப் பட்ட செயல்களிலே கழித்தலைக் குறித்தது.
வான் ஈற்று வினையெச்சம் இங்குத் தொழிற் பெயர்ப் பொருட்டாய் நின்றது.
வேண்டுதல் - விரும்புதல்.
அடகு - இலை.
அயிலுதல் - உண்ணுதல்.
`அமுதை விட்டு அடகு அயிலல்` என்பது, `கனியிருப்பக் காய் கவர்தல்` என்பதனோடு ஒத்த ஒரு பழமொழி ``அயில`` என்பது `உண்பார்களாக` என அகர ஈற்று வியங்கோள்.
``அயில்வார்களாக`` என்றது, `அயில்கின்றவர்களோடு ஒத்த அறிவனர்தாம்` என்றபடி `ஏத்தாதே வாழ்ந்திடச் சிலர் விரும்புவார்களாயின், அவர் அமுதை விட்டு அடகு அயில்வார்களாக` என்க.
இதனால், `திருவருள்வழி வாராத இன்பம் இன்பமன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 92

விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயிற்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம்
கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச்சென் றேத்த மனம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆவி விட்டுப் போக` என மாற்றிக் கொள்க.
``உடல்`` எனப் பின்னர் வருதலால், விடுதல், உடலை விடுதலாயிற்று.
பட்டு - பொருந்தி.
ஆங்கு - அதன்கண், பார்த்தல், பல இடங்களில் பல முறை நிகழக் காண்டல்.
`பார்த்திருந்தும் (மக்களுடைய) மனங்கள் சென்று வள்ளலை ஏத்த ஓட்டா` என இயைக்க.
ஒட்டுதல் - ஒருப்படுதல்.
ஆம்.
அசை.
`இஃது அவர்களது வினையிருந்தவாறு` என்பது குறிப்பெச்சம்.
இவ் எச்சத்தால், இரங்குதல் பெறப்பட்டது.
``பார்த் திருந்தும்`` என்றது, `காட்சியளவையானே உணர்ந்தும்` என்றபடி.
``சுடலை சேர்வது சொற்பிரமாணமே`` என அருளிச் செய்தார் அப்பர்.

பண் :

பாடல் எண் : 93

மனம்முற்றும் மையலாய் மாதரார் தங்கள்
கனம்உற்றும் காமத்தே வீழ்வர் - புனமுற்
றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
றனக்குறவு செய்கலார் தாழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புனம் முற்றும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
அங்ஙனம் உரைக்குங்கால் ``தாழ்ந்து`` என்பதை ``மைய லாய்`` என்பதன் பின் கூட்டி அவ்விரண்டையும் ``வீழ்வர்`` என்பதற்கு முன்னே கூட்டுக.
புனம் முற்று இனக் குறவர் - தினைப் புனங்களில் நிறைந்துள்ள, கூட்டமான குறவர், தான்.
சாரியை - உறசெய்தல், தங்களை ஆளாக்கிக் கொள்ளுதல்.
கனம் - சுமை.
`சுமையாக உற்றும்` என ஆக்கம் விரிக்க, சுமையாக உறுதலாவது உண்டியும், உறையுளும், மருந்தும் ஆகியவற்றால் புறந்தருதலேயன்றி, ஆடை அணிகலங்களால் சிறப்புச் செய்தலும் கடமையாகி விடுதல்.
`மாதாரர் கனம் ஆக` என இயையும்.
``தங்கள்`` என்றது உறவு செய்கலாதாரை.
`தங்கட்கு` என நான்காவது விரிக்க.
தாழ்தல் - அழுந்துதல்.
``மனம் முற்றும் மையலாய்`` என்றது, `அறிவை முற்றிலும் இழந்து` என்றபடி.
`மக்களே மணந்த தாரம் அவ்வயிற் றவரை ஓம்பும்
சிக்குளே அழுந்தி, ஈசன் திறம்படேன்.
` * என்னும் அப்பர் திருமொழியைக் காண்க.
`அஃது உலகியலின் இயல் பினை விரித்தது` என்பது உணரமாட்டாதார், `அவர் தாமே மக்களை யும், தாரத்தையும் உடையராய் இருந்தார்` எனக் கூறிக் குற்றப்படுவர்.
`உலகியலை யான் மேற் கொள்ளா தொழியினும் உடல் ஓம்பலை ஒழிய மாட்டாமையின் உலகியலில் நின்றாரோடு ஒத்தவனாகின்றேன்` என்ற படி.
``இனக் குறவர் ஏத்தும்`` என்றது, கல்லா மாக்களாகிய குறவராயினும் முன்னைத் தவத்தால் கயிலை யருகில் வாழப் பெற்றுச் சிவனை ஏத்துகின்றனர்; `கற்றறிந்தேம்; நல்லொழுக்கம் உடையேம்` எனச் செருக்குவார் அது செய்யாது.
காமத்தே வீழ்கின்றார் - என்பது தோன்றுதற்கு.

பண் :

பாடல் எண் : 94

தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும்
சூழ்ந்த புலிஅதளும் சூழ்அரவும் - சேர்ந்து
நெருக்கி வானோர்இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க்
கிருக்கும்மா கோலங்கள் ஏற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சடை முதலியன காளத்தி ஆள்வார்க்கு மாகோலங் களாக ஏற்று இருக்கும்` என இயைத்து முடிக்க.
`வானோர் (தம்முள்) நெருக்கிச் சேர்ந்து இறைஞ்சும்` என்க.
`கோலங்களாக` என ஆக்கம் விரிக்க.
ஏற்று - ஏற்கப்பட்டு, சிவபிரானது திருக்கோலத்தை வருணித்த வாறு.
தவளம் - வெண்மை.
அதள் - தோல்.

பண் :

பாடல் எண் : 95

ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத் தெம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிலே கொண்டு, அதன்பின், `ஆற்று அருவி.
.
.
எம்பெருமான்` என்பதை வைத்து உரைக்க.
ஏறு - இடபம்.
பகற் காலத்தில் வெளியே சென்று மேய்கின்ற ஆன் நிரைகள் மாலைக் காலத்தில் ஊரை அடையும் பொழுது எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒலிக்கும்.
அவ்வொலி இராக்காலத்தின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் ஆதலின், தலைவரைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவியர்க்கு அது வருத்தத்தை மிகுவிக்கும்.
அதனால், ஆற்றாமையுடைய தலைவியரால் வெறுக்கப்படும் பொருள்களுள் காளைகளின் கழுத்தில் உள்ள மணியும் ஒன்றாம்.
அம் முறைமை பற்றி, வீதியில் திருவுலாப் போதுகின்ற சிவபெருமானது இடபத்தின் கழுத்தில் ஒலிக்கும் மணியையும் அவர்மேற் கொண்ட காதலால் வருந்தும் தலைவி வெறுத்துக் கூறினாள்.
`எம்பெருமானது ஏற்றின்` என ஆறாவது விரித்தும்.
`அவனது ஈர்ஞ் சடைமேல்` என ஒரு சொல் வருவித்தும் உரைக்க.
``மணியே`` என்னும் ஏகாரம் பிறவற்றினின்றும் பிரித்தலின் பிரிநிலை.
அமையாதோ - போதாதோ.
கங்கை நீரால் சடை ஈர்ஞ்சடை (குளிர்ந்த சடை) யாயிற்று.
ஏற்றின் மணியைவிட வெண்மதியையே பெரிதும் வெறுத்தாள்.
படை - ஐங்கணை.
அவற்றை விடுப்பவன் மன்மதன்.
அவனுக்கு உதவி செய்வன ஏற்றின் மணியும், ஈர்ஞ்சடைமேல் வெண்மதியும்.
``ஈங்கு`` என்றது, `வாழ் இடமே மன்மதனது போர்க்களமாகி விட்ட இந்த இடத்தில்` என்றபடி.
ஆற்று அருவி - ஆறுபோலப் பாய்கின்ற அருவிகள்.
கல் - பாறைகள்.
ஆர்த்தல் - ஒலித்தல்.
``எம்பெருமான்`` என்பதை ஆறன் உருபேற்றதாகக் கொள் ளாது, விரியாகக் கொண்டு, `நும் ஏற்றின்` எனவும், `நும் சடைமேல்` எனவும் உரைப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 96

ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல
பணிகின்ற வண்ணம் பணி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய், நீ என் மனத்தில் எப்பொழுதும் நீங்காமல் (நின்று,) - ஈங்கே வா - என்று அருளி வந்து நின்றாலும், நான் நல்லவாறு பணிகின்ற வண்ணம் பணி` எனக் கூட்டி ஓரோர் சொல் வருவித்து முடிக்க.
அடுதல் - போக்குதல்.
``அருளி`` என்னும் எச்சம், `நடந்து வந்தான், ஓடி வந்தான்` என்பவற்றிற்போல வருதல் தொழிலோடு உடன் நிகழும் அடையாய் வந்தது.
வந்து - எதிர் வந்து.
மனத்தில் நீங்காமல் நிற்றல்.
இடையறாது நினைத்தலால் ஆம் நினைவும் பாவனையாகலின், நேர்வருதல் உண்மையாகக் கொள்ளப்படும்.
`கருணை மிகுதியால் நீ நேர்வந்து நிற்பினும், அங்ஙனம் நிற்கும் பொழுது பணிய வேண்டிய முறைகளை நான் அறியேன்.
அதனால், அதனையும் நீயே அறிவித்தருளல் வேண்டும்` என்றபடி.
``தொண்ட னேன் பணியுமா பணியே`` 1 என்றது இப்பொருட்டாயும் நிற்கும்.
``காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே`` 2 என்றமையும் அறியற் பாற்று.
ஈற்றடி, மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
`படுகின்ற` எனப் பாடம் ஏதி, `நல்ல செயல்களைப் பொருந்துகின்ற வண்ணம்` என உரைப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 97

பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா
கணியாது காலங் கழித்தேன் - அணியும்
கருமா மிடற்றெம் கயிலாயத் தெங்கள்
பெருமான தில்லை பிழை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பாவியேன், இவனை முன் பணியாது, கணியாது வாளா காலங் கழித்தேன்.
அதனால், எங்கள் பெருமானது பிழை இல்லை` என இயைத்து முடிக்க.
கணித்தல் - எண்ணுதல்; பலமுறை நினைத்தல்.
செய்யுளாகலின், ``இவன்`` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது அணிதல் - அழகு செய்தல், `பெருமானது பிழையாக ஒன்றேனும் இல்லை` என்றதனால், `எல்லாம் எனது பிழையே` என்றதாயிற்று.
இக்கருத்தினைப் பட்டினத்து அடிகள், ``பாவிகள் தமதே பாவம்`` எனவும், ``அறுசுவை அடிசில் அட்டினி திருப்பப் புசியா தொருவான் பசியால் வருந்துதல் - அயினியின் குற்றம் அன்று`` 1 என்பது முதலிய உவமைகளாலும் விளக்கியருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 98

பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்
என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிழைப்பு - குற்றம் செய்தல்.
இது, `பிழைத்தல்` எனவும் வரும், வாய்ப்பு - பொருந்துதல்.
இவை இரண்டும் ஒன்றற்கு ஒன்று மறுதலையாய் நேர்மையினின்று விலகுதலையும், நேர்மையில் நிற்றலையும் குறிக்கும்.
இத்தொழிற் பெயர்கள் `ஆகுபெயராய், அச்செயல்களால் விளையும் செயப்படு பொருள்களை உணர்த்தும்.
இவை, நூல்களில் சொல்லப்பட்ட விதி விலக்குக்களை இங்குக் குறித்தன.
`பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்``
என ஆளுடை அடிகளும் அருளிச் செய்தார்.
`இவற்றுள் ஒன்றையும் அறியேன் என்க.
அழைத்தல் - விரித்தல்.
அஃதாவது `அப்பா, ஐயா, ஆண்டானே, கடவுளே` என்றாற் போலக் கூப்பிடுதல், `அஃதொன்றை மட்டுமே நான் அறிவேன்` என்பதாம்.
`அடியேன் செய்வது அழைப்பதே` என ஒரு சொல்வருவிக்க.
``அழைத்தாலும்`` என்றது, `அஃது ஒன்றையே நான் செய்தாலும்` என்றபடி.
ஆதரவு - அன்பு.
`அறிவிலனாயினும், அன்புடையன்` எனக் கொண்டு இரங்கியருளல் வேண்டும் என்றபடி.
கண்டாய், முன்னிலையசை.

பண் :

பாடல் எண் : 99

வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும்
பரமாஉன் பாதார விந்தம் - சிரம்ஆர
ஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும்
வாய்த்திடுநீ வேண்டேன்யான் மற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`யான் வேண்டும் வரமாவதெல்லாம்` என்க.
``வட கயிலை மன்னும் பரமா`` என்பதை முதலிற் கொள்க.
``ஆவ தெல்லாம்`` என்பது ஒருமைப் பன்மை மயக்கம்.
சிரம் ஆர - தலை ஆர; என்றதனால்.
`வணங்கி` என்பது வருவிக்க.
ஆர்தல் - பயனால் நிரம்புதல்.
``தலையாரக் கும்பிட்டு``(1) என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார்.
``ஆக`` என்னும் செயவென் எச்சம், `பொழுது சாய வந்தான்` என்பது போல அக்காலத்தை உணர்த்தி நின்றது.
``எப் பொழுதும்`` என்றது.
`எத்தனை முறையாயினும்` என்றபடி, ``நீ`` என்பதன்பின், ``எல்லாம்`` என்ற எழுவாய்க்குப் பயனிலையாகிய `அதுவே` என்பது வருவிக்க.
மற்று - பிற வரங்கள்.
`மாற்றுயான் வேண்டேன்` என மாற்றுக.
வாய்த்தல் - நேர்படுதல் `வைத்திடு` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 100

மற்றுப் பலிபிதற்ற வேண்டா மடநெஞ்சே
கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மற்றுப் பல பிதற்ற வேண்டா`` என்பதை இறுதிக் கண் கூட்டியுரைக்க.
மடமை - அறியாமை.
அஃதாவது, `பிறவற்றைச் சொல்லுதலால் பயன் உண்டாகும்` எனக் கருதுதல்.
அது பிழையாதல் பற்றி அவற்றை, பிதற்றுதலாகக் கூறினார்.
`காளத்தி அமுது` என இயையும்.
அமுது போல்வானை ``அமுது`` என்றது உவம ஆகு பெயர்.
ஆராமை - நிரம்பாமை; தெவிட்டாமை அஞ்செழுத்தின் சிறப்பு.
மேல் இரு வெண்பாக்களில்(2) சொல்லப்பட்டது.
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா`` என்று தொடங்கியவர்.
திருநாம அஞ்செழுத்தைச் சோராமல் எப்பொழுதும் சொல்வதில் முடித்தருளிய அருமை அறிந்து பயன் கொள்ளத்தக்கது.
சிற்பி