நக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை


பண் :

பாடல் எண் : 1

வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற்
படஅர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருவலஞ்சுழி காவிரியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. `நெஞ்சே வலஞ்சுழி அண்ணலது அடியே வணங்குதும்; வாழி` என இயைத்து முடிக்க. கருமுகிற் கணம் உடன் புணர்ந்து பொரு கடல் முகந்து மின்னிக் குடவரைப் பொழிந்து கொழித்து இழி அருவி குண கடல் மடுக்கும் காவிரி` எனவும் இயைக்க.
உடன் புணர்ந்து - ஒரு சேரச் சேர்ந்து. பொரு கடல் - அலை யால் கரையைத் தாக்குகின்ற கடல். கடல், அதன் நீரைக் குறித்தமை யால் ஆகுபெயர். மின்னல் தோன்றிய உடன் இடி முழக்கம் கேட்கும் ஆதலால் அதனை அறிந்த பாம்புகள் புற்றில் ஒடுங்குபவாயின. குடவரை - மேற்கு மலை; சைய மலை. பொழிந்து - பொழிதலால். `மணிகளைக் கொழித்து` எனக் கொழித்தற்குச் செயப்படு பொருள் வருவிக்க. குண கடல் - கீழ்க்கடல். `கடலை மடுப்பிக்கும் - உட்கொள் விக்கும் காவிரி` என்க. ``காவிரி`` என்றது அவ்யாற்றினை. அதனை அறம் வளர்க்கும் மடந்தையாக உருவகித்து, கடலைப் பசித்து நிற்கும் இரவலனாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம். காவிரியினது நீரால் சூழப்பட்டமையின் மணி நீரை உடைய வலஞ்சுழி யாயிற்று`` மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சூழி`` 1 என ஞானசம்பந்தரும் அருளிச் செய்தார். காவிரியாறு இத்தலத்துக்கு அருகில் ஓடி வந்து பாதலத்தில் வீழ்ந்து விட்டதை `ஏரண்டர்` என்னும் முனிவர் இறங்கி வெளிப்படச் செய்யக் காவிரி மேலே வலம் சுழித்து எழுந்தமையால் `வலஞ்சுழி` எனப் பெயர்பெற்றது. என்பது தலபுராணம். அணி நீர் - அழகிய தன்மை. கொன்றை, முன்னர் அதன் மலரையும், பின்னர் அம்மலரால் ஆகிய மாலையையும் குறித்தலால் இருமடியாகுபெயர். `எனது வேண்டுகோளுக்கு இணங்கினமையால் நீ வாழ்வாயாக` என்க.

பண் :

பாடல் எண் : 2

அடிப்போது தம் தலைவைத் தவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கண்டார் முடிப்போதா
வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொற் கழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வானோரும் காணாத, வலஞ்சுழியான் செம்பொற் கழலை அவ் அடிப் போதினைத் தம் தலைமேல் வைத்து, அவ்அடி களை (மனத்தில்) உன்னிக் கடிப்போது (மணம் மிக்க மலர்களைக்) கைக்கொண்டாரே (கைக்கொண்டு தூவி வழிபட்டவர்களே) கண்டார்; (ஏனையோர் கண்டிலர்) எனக் கூட்டி முடிக்க.
``தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான்`` 2 எனச் சேக் கிழாரும் அருளிச் செய்தார். போதாக - சூடும் பூவாக. வாள் நாகம் - கொடிய பாம்பு.

பண் :

பாடல் எண் : 3

கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லாத்
தழல்வண்ணங் கண்டே தளர்ந்தார் இருவர் அந் தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அம் தாமரையின் நிழல் வண்ணம்... அழல் வண்ணம் இவற்றோடு வலஞ்சுழியை ஆள்கின்ற அண்ணலை இருவர் தாம் கழல் வண்ணமும், சடைக் கற்றையும் காணகில்லாத் தழல் வண்ணராகக் கண்டே தளர்ந்தார்` என இயைத்துமுடிக்க. தாமரை வண்ணம் முதலாகக் கூறியன சிவபெருமான் எவ்வண்ணமும் உடையன் ஆதலைக் குறித்தது.
......வெளியாய், கரியாய்,
பச்சையனே செய்ய மேனியனே *
எனத் திருவாசகத்திலும் வந்தது. முந்நீர் - கடல்; `கடல் போலும் காவிரியின் வலஞ்சுழி` என்க.

பண் :

பாடல் எண் : 4

அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற்
கடவுள் மன்னிய தடம்மல்கு வலஞ்சுழிப்
பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்
திருந்திருங் குழலியைக் கண்டு
வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`குழலியைக் கண்டு என் உள்ளம் வருந்தி வந்த அப்போதே அண்ணலது பெருமை கண்டனம்` என இயைத்து முடிக்க. இது தோழி வெறி விலக்கிக் கூறியது. அண்ணல், தலைவன். தடம் மல்கு - பொய்கைகள் மிக்க. வைசேடிகர் பண்பு, தொழில் முதலிய அனைத்தையும் `பொருள்` எனக் கூறும் முறைபற்றிப் பண்பினை இங்கு, ``பொருள்`` என்றார். பனி - குளிர்ச்சி. குளிர்ச்சியாகிய பண்பு. காவிரி வலஞ்சுழித்து ஓடுதலால் அதனைச் சார்ந்து விளங்கும் தலம் குளிர்ச்சியைத் தருவதாயிற்று. `வலஞ்சுழிப் பொருள்` என இயையும். பயத்தலுக்கும், பழித்தலுக்கும் கருவியாய `மேனியால்` என்பது வருவிக்க. `மேனி தரும் குளிர்ச்சி மனத்திற்கு மாம் என்க. பல்லவம் - தளிர், திருந்துதல், நன்கு சீவிமுடித்தல். தலைவனோடு களவில் இயற்கைப் புணர்ச்சி எய்தி தலைவி வந்த காலத்தில் தோழி அவளது வேறுபாட்டைக் கண்டு வருந்தினளாயினும், `எட்டியும், சுட்டியும் காட்டப்படாத குலத்தையுடையவளாகிய இவளது உள்ளத்தைப் புதுவதாக ஒருமுறை கண்டபொழுதே முற்றிலும் கொள்ளை கொண்டவன் பல்லாற்றானும் ஒப்புயர்வற்ற தலைவனே யாவன்` என உய்த்துணர்ந்து மகிழ்ந்தாளாதலின், அதனைத் தலைவிதன் வேறுபாடு தெய்வத்தான் ஆயதாகக் கருதி வெறியாடத் தொடங்கியோர்முன் செவிலி கேட்பக் கூறினாள் என்க.

பண் :

பாடல் எண் : 5

போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்
தாதெலாம் தன்மேனி தைவருமால் தீதில்
மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பூங் கொன்றை`` இரண்டில் முன்னது அழகிய கொன்றை மரம்; பின்னது `கொன்றைப் பூ` எனப் பின் முன்னாக மாற்றிக் கொளற்பாலது. போது - பொழுது. போதெலாம் - `எப் பொழுதும் தைவரும்` என முடிக்க. ``பெண்`` என்றது, `என் பெண்` என்றபடி. `என் பெண் பிறைக் கண்டம் கண்டு அணைந்த பின், கொன்றை மரம் கொண்டிருக்கின்ற கொன்றப் பூவைப் பறித்து அதன் மகரந்தத்தை உடம்பு முழுதிலும் எப்பொழுதும் பூசிக்கொண்டே யிருக்கின்றாள் என்க. தைவருதல் - தடவுதல். மறைக்கண்டன் - வேதம் முழங்கு மிடற்றினை உடையவன். வானோன் - தேவன். கண்டம் - துண்டம். அணைதல் - மீளுதல். இது, தலைவியது ஆற்றாமைக்குச் செவிலி நொந்து கூறியது.

பண் :

பாடல் எண் : 6

பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம் பெரு மான்திருமால்
வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான் மதி சூடிநெற்றிக்
கண்கொண்ட கோபங் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப்
பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`புனத்து வண்டினம் பாடப் பன்முகில் மின்னி ஆர்த்தன; பெண் கொண்டிருந்து வருந்தும்` என இயைத்து, `என்செய்கேன்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. பெண் தலைமை பற்றித் தலைவியையே குறித்தது. `திருமாலின் வண்ணம் கொண்ட சோலை என்க. திருமாலின் வண்ணம் கருமை. கொண்டு - இவற்றை நினைத்துக்கொண்டு. கொல், ஆம் அசைகள். ``கோபம்`` என்பது, கோபத்தால் தோன்றும் தீயைக் குறித்தமையால் கருவியாகுபெயர். கார்ப்புனம் - இருளால் கருமையுடைத்தாகிய புனம், ``வண்டுகள் பாட`` என்றது. ``கார்ப் பருவத்தில் பூக்கள் பூத்தன`` என்பதைக் குறித்தவாறு. இது, தலைவன் நீடக் கார்ப்பருவம் கண்டு, ``தலைவி ஆற்றாள்`` எனத் தோழி நொந்து தன்னுள்ளே சொல்லியது.

பண் :

பாடல் எண் : 7

முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்
எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற
அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும்
சாரல் தண்பொழில் அணைந்து சேரும்
தடம்மாசு தழீஇய தகலிடம் துடைத்த
தேனுகு தண்தழை தெய்வம் நாறும்
சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு
சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி
அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த
மணிநீர்க் குவளை அன்ன
அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எம் பெரும, ஆயிழை பொருட்டு, (நீ) சரு வரி வாரல்` என இயைத்து முடிக்க. `இடி முழக்கத்தைச் செய்த முகிற் கூட்டத்தைக் களிற்றியானை. `வேறு யானை` என்று கருதிச் சினந்து அதனைத் தன் தந்தங்களுக்கிடையே கோத்துக் கொள்ள, தவறாகக் கொண்ட அதன் சினத்தை ஆற்றுதற்குப் பிடியானை அதன் அருகு வந்து அணையும் தண்பொழிலில் தானும் வந்து சினம் தணிந்த களிற்றின் மதம் ஒழுகப் பெறும் வழி மாசுபட்டதாக அதனைத் தம்மேல் ஒழுகிய தேனைச் சிந்தித்தூய்மைப் படுத்துகின்ற தண்ணிய தழைகள் தெய்வ மணம் கமழ்கின்ற, தேவர் உண்டாட்டுச் செய்கின்ற வழியிலே வருதல் வேண்டா` எனப் பொருள் காண்க. சரு -தேவர் உண்ணும் உணவு. வரி - இசை. அஃது அதனையுடைய வழியைக் குறித்தது. இது இரவுக் குறி வரும் தலைவனை `அது வேண்டா` என விலக்கியது. இதன் பயன், அவன் களவு நீட்டியாது வரைவு முயலல்.

பண் :

பாடல் எண் : 8

பொருள்தக்கீர் சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும்
அருள்தக்கீர் யாதுநும்ஊர் என்றேன் மருள்தக்க
மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்
தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருள் தக்கீர் - பொருள்கள் பலவற்றுள்ளும் `பொருள்` என்று உணரத் தக்கவரே. நீர் சில பொருள்களைப் பிச்சை யாக ஏற்றற்கு இல்லங்களில் புகுந்தீராயினும், அருள் தக்கீர் - கருணை யால் பெரிதும் தகுதி வாய்ந்திருக்கின்றீர். ஆகவே, `நும் ஊர் யாது` என அறிய விரும்புகின்றேன் - என்றேன். அவர் `மறையம்`என்றார். `நம் வாழ்வு வலஞ்சுழி` என்றார். இவ்வாறு சொல்லி மறைந்து விட்டார். அப்பொழுதே என் கையில் இருந்த சங்கவளையலை நான் காணவில்லை. மருள் தக்க - வியக்தத் தக்க. மறை - மறைக்காடு. மறையம்- அதன்கண் உள்ளேம் ``வாழ்வு`` என்க. அதற்கு உரிய இடத்தைக் குறித்த ஆகுபெயர். பின்பு அவரைக் காணாது காதல் மிகுதியால் உடல் மெலிந்தாளாகலின் அவள் கையிலிருந்த வளை அவளை யறியாமல் கழன்று ஒழிந்தது. இது நொதுமலர் வரைவு நோக்கித் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 9

சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே
வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா
றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்நக்கன்
பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரை, சங்கங்களைப் புரளச் சுமந்து ஏறும் கழி` என்க. வங்கம் - மரக்கலம். ஆறு அங்கம் - வேதத்திற்கும் அங்கமான ஆறு நூல்கள். அவற்றில் சொல்லப்பட்ட முறைமைகளை உடைமையால், நான்மறையை அவையேயாகக் கூறினார். ``புலன் ஐந்து`` என்பது உபலக்கணத்தால் அனைத்துத் தத்துவங்களையும் குறித்தது. `இவை யான நான்மறை` என்றதற்கும் அங்கங்கட்கு உரைத்தவாறே கொள்க. `நான்மறையை அருளிச் செய்த முக்கண் நக்கன்` என்க. `அவனது பங்கில் அன்றே இருவர்க்கும் ஒருவடிவேயாகும்படி ஒன்றியிருக் கின்ற பாவையை (தேவியை) வலஞ்சுழி வழிச் சென்று கழியருகே துறையிடைக் காணுதிர், என இயைத்து முடிக்க. ``பாவையைக் காண்டிர்`` என்றாராயினும் `முக்கண் நக்கர் பாவை யோடு ஒன்றாய், ஒருவடிவாய் இருக்கும் கோலத்தைக் காண்மின் என்பதே கருத் தென்க. இஃது இறைவரது அர்த்தநாரீசுர வடிவத்தை வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 10

பாவை ஆடிய துறையும் பாவை
மருவொடு வளர்ந்த வன்னமும் மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உளங்கொண்ட சூழலுங் கள்ளக்
கருங்கண் போன்ற காவியும் நெருங்கி
அவளே போன்ற தன்றே தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக்
கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வலஞ்சுழியில் வண்டினம் பாடும் சோலையாகக் கண்ட அக் கடிபொழில்தானே, துறையும், வன்னமும், திறனும், சூழலும், காவியும் நெருங்கி அவளே போன்றதன்றே` - என இயைத்து முடிக்க.
பாவை ஆடுதல், மகளிர் பாவையைக் கையில் குழந்தையாக ஏந்தி அது பேசுவது போல வைத்து அதனுடனே பேசி நீரில் மூழ்கியாடுதல். `ஆடாநின்ற` என்னும் நிகழ்காலம், `ஆடிய` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. `பாவையை மருவுதலோடு வளர்ந்த வன்னமும்` என்க. வன்னம் - அழகு. கடல் நீர் பாவையோடு பொலிதலால் ஓர் அழகு பெற்று விளங்குவதாயிற்று, ``அடியேன், கொடியேன்`` என்பன தன்னை வெறுத்துக் கூறிக்கொண்டன. தலைவி தன் பாதங்களை, ``திருவடி`` என்றான். திரு - அழகு, அதனைத் தலைவன் தீண்டியது, வணங்கியது. ``திறன்`` என்றது, அதன் அடையாளமாகப் பதிந்த சுவட்டினை. உள்ளத்தைக் கவர்ந்தவள் தலைவி. கவர்ந்த இடத்தைக் காணும் பொழுது, கவர்ந்த நிலைமை உள்ளத்தில் தோன்றுகின்றது. காவி - குவளை மலர். துறை, வன்னம், திறன், சூழல் இவை அனைத்தினாலும் கடற்றுறை தலைவனுக்குத் தான் முன்பு அங்குக் கண்ட தலைவிபோலவே தோன்ற அவன் இவ்வாறு வருந்திக் கூறினான். எனவே இது, களவொழுக்கத்தில் தலைவன் வறுங்களம் நாடி மறுகியதாம்.
தவளம் - வெண்மை. சாந்தென - சந்தனமாக, தைவந்து - உடம்பெங்கும் பூசிக் கொண்டு. தேம்பல் - இளைத்தல். சிறிதாதல். `ஏற்றை (எருதை) உடையவன் உழவன்` என்னும் முறையில் ``உழவன்`` என்க. கூறினார். `ஏற்றை ஊர்ந்து வந்து அடியவர்க்கு அருள் செய்பவன்` என்பது கருத்து.
சோலை, கடற்கரைச் சோலை. `சோலையாக` என ஆக்கம் வருவிக்க. `கண்ட பொழில்` என இயைக்க. `தான்` என்பது. கட்டுரைச் சுவைபட வந்தது. அம்ம, வியப்பிடைச் சொல். இது `நோக்குவ எல்லாம் அவையேபோறல்` என்னும் நிலைமையாம்.

பண் :

பாடல் எண் : 11

தானேறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்
தேனேறு கொன்றைத் திறம்பேசேன் - வானேறு
மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்ந்த வாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வான் ஏறும் மை ஆரும் சோலை - வானத்தில் செல்கின்ற மேகங்கள் நிறைந்த சோலை, `கண்டு தொழுதபின் வளையைக் கவராது, கண்ட பொழுதே கவர்ந்தான்` என இமைப்பில் காதல் மிக்கமையை வியந்து கூறினாள். இது வியப்போடு கூடிய அவலம், அவலம் அணையாமையால் உண்டாயது. இது பெண்பாற் கைக்கிளை.

பண் :

பாடல் எண் : 12

ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக்
கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு
நாறுதண் கொம்பரன் னீர்கள்இன் னேநடந் தேகடந்தார்
சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த, அஃதாவது அழகிய. `வலஞ்சுழியில் கொம்பர்` என இயையும். வலஞ்சுழியில் உள்ள கொம்பர். கொங்கு - தேன், இன்னே - இப்பொழுதே. சேண் நெறி - நீண்ட வழி. `கொம்பர் அன்னீர், `இன்னே, கானவர் வாழ்கின்ற சேண் நெறி, (ஒருவனும், ஒருத்தியும்) நடந்தே கடந்தார்` என இயைத்து முடிக்க. இது, புணர்ந்துடன் போய் தலைமகளைப் பின் தேடிச் சென்ற செவிலி ஆற்றிடை (வழியிடை)க் கண்டோரை வினவ, அவர் கூறியது. ``கடந்தார்`` என்பதற்கு எழுவாய் தோன்றாது நின்றது.

பண் :

பாடல் எண் : 13

நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூற் சீறியாழ்ப் பாண
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர
மூவோம் மூன்று பயன்பெற் றனமே
நீ அவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமற் பேச வன்மையில்
வான்அர மகளிர் வான்பொருள் பெற்றனை
அவரேல்
எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர் யானேல்
அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச்
சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பின்
தீநீர் அன்ன வாய்நீர் சோரும்
சிலம்புகுரற் சிறுபறை பூண்ட
அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நெறிதரு குழல் - நெறிந்த கூந்தல். விறலி - பாணிச்சி; பாணன் மனைவி. தமிழ். இசைத்தமிழ், அதன் நூலிற் சொல்லப்பட்ட இலக்கணப்படி அமைந்த சீறியாழ் பேரியாழ் வேறுளதாகலின், இதனை, ``சீறியாழ்`` என்றாள். ஊரன் - மருதநிலத்துத் தலைவன். பொய்கை ஊருக்கு அடை. ஊரன் பழைய மணத்தை வெறுத்துப் புதுமணம் செய்து கொண்ட நிலையில். மூவோம் - நாங்கள் மூன்றுபேர். யாவரெனில், நானும், என் தோழியும், என் மகனும். மூன்று பயன் பெற்றனம் ஒவ்வொருவர் ஒவ்வொரு பயனைப் பெற்றோம். எங்ஙனம் எனில், யான் இல்லக் கிழத்தியான நிலையில் நன்மகனை ஈன்று புறந்தருதலாகிய தலைக்கடனை இறுத்தேன். என் தோழி அதற்கு உறுதுணையாய் இருந்து தன் கடமையை ஆற்றினாள். என் மகன் தான் தாயைக் கடனாளியாய் இருப்பதினின்றும் நீக்கிக் கடன் நிரப்பினான். நீ இல்லது பாதியும், உள்ளது பாதியுமாகப் பொய்களைச் சொல்லிப் பிறரை மகிழ்விக்க வல்ல வல்லமையினால் அந்த புதுமணப் பெண்டிராகிய தேவமாதரால் மிகப் பெரும் பொருள் களை அடைந்தாய். அவரோ (தலைவனோ) என் தங்கைமார்களது கொங்கைகளைத் தழுவி, உள்ளத்தில் அவர்கள் விரும்பாத இன்பத்தைத் தாம் விரும்பிப் பெற்றார். (அவர்கள் விரும்பியது பொருளேயன்றி இவரது இன்பத்தையன்று என்பதாம்) `ஆகவே, அவர் அவர்களோடே இருத்தற்கு உரியர்; யான் என் மகனோடே யிருத்தற்குரியேன்; இங்கு அவருக்கு என்ன தொடர்பு? என தலைவி தான் புதல்வற் பெற்று நெய்யாடியதறிந்து தலைவன் ஏவ வந்து வாயில் வேண்டிய பாணனுக்கு வாயில் மறுத்தாள். ஈற்றில் உரைத்த மறுப்புரை குறிப்பெச்சம் `தார்` என்பது போக காலத்தில் அணியும் மாலையாகலின், ``தார் மாலை`` என்றது இருபெயர் ஒட்டு. ஊடிக் கூறுகின்றார் ஆதலின் `வான் அர மகளிர்` என்றது இகழ்ச்சி தோற்றி நின்றது. ``என் தங்கைமார்கள்`` என்றதும் அன்னது. சுரும்பு இவர் நறவு - வண்டுகள் மொய்க்கக் கரும்பினின்றும் ஒழுகுகின்ற சாறு. `நறா` என்பது, ஈறு குறுகி உகரம் பெறாது நின்றது. இது வயலுக்கு அடை. `கருப்பஞ் சாறு போன்ற வாய் ஊறல் ஒழுகும் புதல்வன்` என்க. இதனால் மக்களால் பெறும் இன்பம் பெரிதாதலைத் தலைவி குறிப்பால் உணர்த்தி, `இஃது அவர்க்குக் கிடையாதாயிற்று` என்பதையும் குறித்தாள். சிலம்பு குரல் - ஒலிக்கும் குரல் ``அலம்பு குரல்`` என்றதும் அன்னது. கையில் கொண்ட `பூண்ட களிறு`, கிண்கிணிக் களிறு` எனத் தனித்தனி முடிக்க. கிண்கிணி - சதங்கை. புதல்வனை அளவற்ற அன்பால் ``களிறு`` என்றாள். பாணன் விறவியொடு கூடி வந்ததைக் குறித்தது, `இத்தகைய அன்பைத் துறந்தவனுக்காக நீ பரிந்து பேசுதல் தகுதியோ` என்றற்கு. இது பரத்தையிற் பிரிவு நிகழ்ச்சி. இவ் அகவற்பா இடையிடையே கூன் பெற்று வந்தது.

பண் :

பாடல் எண் : 14

தனமேறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய்
மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ இனமேறிப்
பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்
கோடாலம் கண்டணைந்த கொம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வண்டு இனம் ஏறிப் பாடலம் அலம்பும்` எனத் தொடங்கியுரைக்க. `பாடலம்` என்பது நீட்டல் பெற்றது. பெற்றது. பாடலம் - பாதிரி. சிவபெருமானுக்கு உரிய சில சிறந்த மலர்களுள் பாதிரியும் ஒன்றாகலால் அதனை விதந்து கூறினார், கோடாலம் - கொம்பு - பூங்கொம்பு போல்வாராய பெண்; என்றது தலைவியை. இஃது உவம ஆகுபெயர். `பீர் தனம் ஏறிப் பொங்கி` என மாற்றிக் கொள்க. பீர் - பசலை. தனம் - கொங்கை. பொங்கி - பொங்கப்பட்டு. அங்கம் - உடம்பு. ``வேறாய்`` என உடையாள் மேல் ஏற்றப்பட்டது. மனம் - மனத்தில் தோன்றும் எண்ணம் வேறுபடுதலாவது, அன்னை, அத்தன் முதலாயினாரை நீப்ப நினைத்தல். ஒழி துணிவுப் பொருண்மை விகுதி. மாது, ஓ அசைகள். இது தலைவியது வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 15

கொம்பார் குளிர்மறைக் காடனை வானவர் கூடிநின்று
நம்பா என வணங் கப்பெறு வானை நகர்எரிய
அம்பாய்ந் தவனை வலஞ்சுழி யானையண் ணாமலைமேல்
வம்பார் நறுங்கொன்றைத் தாருடை யானை வணங்குதுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொம்பு ஆர் குளிர் மறைக்காடு - பூங்கொம்புகளில் நிறைந்த குளிர்ச்சியை யுடைய திருமறைக்காடு. நம்பன் - பழை யோன்; விரும்பப்படுபவன்` என்றும் ஆம். அம்பு ஆய்ந்தவன் - அம்பை ஆராய்ந்து எடுத்து எய்தவன். வம்பு - புதுமை. நறு - மணம். ``கொன்றைத் தார் உடையான்`` என்பது, `சிவன்` என்னும் ஒரு பெயராய், ``அண்ணாமலை மேல்`` என்பதற்கு முடிபாயிற்று. இதனுள் ``மேல்`` என்றது மேலிடத்துள்ள கோயிலை. ``அண்ணா மலைமேல் அணிமலையை``* எனச் சேக்கிழாரும் கூறினார். அக்கோயில் இன்று நமக்குத் தரை மட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. குறிப்பு: மும்மணிக் கோவை முப்பது பாடல்களை உடையதாய் வருதல் மரபாயினும், இது பதினைந்து பாடலோடே முற்றுப் பெற்றது. அஃது ஆசிரியர் கோட்பாடு. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை முற்றிற்று
சிற்பி