நக்கீரதேவ நாயனார் - பெருந்தேவபாணி


பண் :

பாடல் எண் : 1

சூல பாணியை சுடர்தரு வடிவனை
நீலகண்டனை நெற்றியோர் கண்ணனை
பால்வெண் ணீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை
நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை

கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேலுடைக் கையனை விண்தோய் முடியனை
ஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை
தேவ தேவனை திருமறு மார்பனை
கால மாகிய கடிகமழ் தாரனை
வேத கீதனை வெண்தலை ஏந்தியை
பாவ நாசனை பரமேச் சுவரனை
கீதம் பாடியை கிளர்பொறி அரவனை
போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை
ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை

சாதி வானவர் தம்பெரு மான்தனை
வேத விச்சையை விடையுடை அண்ணலை
ஓத வண்ணனை உலகத் தொருவனை
நாத னாகிய நன்னெறிப் பொருளினை
மாலை தானெரி மயானத் தாடியை
வேலை நஞ்சினை மிகவமு தாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை
ஆயிர நூற்றுக் கறி வரியானை
பேயுருவு தந்த பிறையணி சடையனை

மாசறு சோதியை மலைமகள் கொழுநனை
கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச்
சீரிய அடியாற் செற்றருள் சிவனை
பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை
பீடுடை யாற்றை பிராணி தலைவனை

நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை
ஈசனை இறைவனை ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை
தாதணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றின் உரியனை
சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை
தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை
வித்தக விதியனை
தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை
பிரமன் பெருந்தலை நிறைவ தாகக்
கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை
நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்
உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த
ஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை

ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை
வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை
திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை
வேதமும் நீயே வேள்வியும் நீயே

நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியம் நீயே புனிதன் நீயே
பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே
ஊழியும் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே

தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன்னெறி நீயே
மால்வரை நீயே மறிகடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
விண்முதற்பூதம் ஐந்தவை நீயே
புத்தியும் நீயே முத்தியும் நீயே
சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ
தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன்

ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று
வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே.

விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா
திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவும்நீ செய்யும் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(அடி - 1) சூல பாணியை - சூலம் ஏந்திய கையினை உடையாய். சுடர்தரு வடிவனை - ஒளியைத் தருகின்ற திருமேனியை உடையாய். (அடி - 3) பரம யோகியை - யோகியர்க்கெல்லாம் மேலான யோகியாம் தன்மை உடையாய். (அடி - 6) கொக்கரை - சங்கு. `அதன் ஒலியோடு கூடிய பாடலை உடையாய்` என்ப (அடி - 7) வேல் - வேறு படைக்கலம்; மழுமுதலியன (அடி - 8) ``நாத்தனை`` என்பதில் தன், சாரியை. எனவே, `நாவைக் காய்ந்தனை` என்க. தக்கன் வேள்வியழிப்பில் அக்கினி தேவனது கையையன்றி. நாவை அறுத்ததாகவும் சொல்லப்படும். ``தீயினை நாவினைக் காய்ந்தனை`` என்பதை, `யானையைக் காலை வெட்டினான்` என்பது போலக் கொள்க. (அடி - 9) ``திருமறு மார்பனை`` என்றது, `நீயே திருமாலாக வும் இருக்கின்றாய்` என்றபடி. (அடி - 10) காலமாகிய தாரனை - கால மாகிய மாலையை உடையாய்; என்றது, `காலத்தால் தாக்குண்ணாது நின்றாய்` என்றபடி. `காளமாகிய` எனப்பாடம் ஓதி, `நஞ்சு பொருந்திய பாம்பை மாலையாக உடையாய்` என்றலும் ஆம். (அடி- 12) பரமேச்சுவரனை - பரமேச்சுவரனாம் தன்மையை உடையை. ஈச்சுரன் - ஐசுவரியத்தை உடையவன். பரமேச்சுவரம் - மேலான ஐசுவரியம். அஃதாவது, எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள் களையும் தன்னவாக உடைமை. (அடி - 16) சாதி வானவர் பல இனத்தவராகிய தேவர்கள். அவர்கள் தம் பெருமான், இந்திரன். ``பெருமான்`` என்பது உயர்திணைச் சொல்லாதலின், `பெருமானினை என இன்சாரியை கொடாது தன் சாரியை கொடுத்து, ``பெருமான் றனை`` என்றார். `அவனை உடையை` என்றபடி. (அடி - 18) ஓதம் - கடல். ஒரு பாதி அம்மை, அல்லது திருமால் ஆதலின் சிவபெருமான் கடல் வண்ணத்தையும் உடையவன். (அடி - 19) நாதன் - குரு (அடி - 20) எரியும் தீ இருள் வந்த பின்பே விளங்கித் தோன்றுதல் பற்றி, `மாலையில் எரியும் மயானம்` - என்றார். தான், அசை, (அடி - 22) அமரர்களை மேலே கூறினார். ஆகலின், இங்கு ``விண்ணவர்`` என்றது சிவலோகத்தில் வாழ்பவர்களை (அடி - 23) `ஆதி` என்பது எப்பொருட்கும் முதலாம் தன்மையையும், காலத்தால் எவருக்கும் முதலாதலையும் குறிக்கும் ஆதலின் மேலேயும், இவ்விடத்திலும் ``ஆதி`` என இருமுறை கூறியவற்றிற்கு இவ்விரு பொருளையும் ஏற்ற பெற்றியாற் கொள்க (அடி - 24) ஆயிரம் நூற்றுக்கு அறிவரிதலாவது அன்ன பல பேரெண்களிலும் அடங்காமை. எனவே, ``ஏகன், அநேகன்`` என்றவற்றுள் ``அநேகன்`` * என்ற நிலையைக் குறித்ததாம். (அடி - 25) ``பேய் உருவு`` என்றது பிறர் கூறும். தந்த - தனக்குத் தானே செய்து கொண்ட (அடி - 30) ஆறு - வழி `அதன் பயனாய் நின்றாய்`. உயிர்களை, ``பிராணி`` என்றார். `பிராணிகள்` எனப் பாடம் ஓதுதலும் ஆம், (அடி - 31) ``நீடிய`` என்றது, `காலத்தைக் கடந்த` என்றபடி. (அடி - 32) ஈசனை - எல்லாரையும், எல்லாவற்றையும் ஆளுதல் உடையாய். இறைவனை - எல்லாப் பொருளிலும் அது அதுவாய் வேறறக் கலந்துள்ளனை. (அடி - 33) நேசனை - அருளுடையாய். (அடி - 35) மலரனை - தாமரை மலரை இருக்கையாக இருத்தலை உடையாய். தருமனை - அறத்தை நடாத்துதல் உடையாய், பிரமனை - பிரமனை உடையாய் (அடி - 35) ``குழையனை`` என்பது முதலான ஏழும் ஆடூஉவறிசொல்லின் அன் விகுதிமேல் ஐகார விகுதிபெற்று வருதலால் அவற்றிற்கு, `குழையனாய் உள்ளாய், உரியனாய் உள்ளாய்` என்பனபோல உரைக்க. உரி - தோல். சுந்தரம் - அழகு. விடங்கன் - உளியாற் போழ்ந்து செய்யப்படாமல் தானே முளைத்த இலிங்க வடிவினன். இதனை. `சுயம்பு லிங்கம்` என்பர். `சுந்தர விடங்கன்` என்பது மதுரைத் திருவாலவாய்ப் பெருமானுக்கு உரிய பெயராகவே சொல்லப்படுதலால் இப்பாட்டு அப்பெருமானை, வழுத்திப் பாடியதாகின்றது. மேல் பொதுப்படக் கூறிய கொன்றையை இங்கு, ``தார்`` எனச் சிறப்பாகக் கூறினார். தார் - மார்பில் அணியும் மாலை. (அடி - 38) வித்தகம் - திறமை. விதி - நேர்மை. `நேர்மையாள னாய் நிற்க வல்லாய்` என்றபடி (அடி - 41) கருமன் - கரிய நிறத்தை யுடைய திருமால். செந்நீர் - இரத்தம். `பிரமன் தலையைக் கிள்ளிய வயிரவர் அவன் கொண்ட செருக்கை ஒழித்து ஏனைத் தேவர்களும் அவனைப் போலச் செருக்குக் கொள்ளாதபடி ஒழிக்க வேண்டி எல்லாரிடமும் சென்று அக்கபாலமாகிய கலத்தில் இரத்த பிச்சை ஏற்றுக் கடைசியாகத் திருமாலின் இரத்தத்தை ஏற்றார்` என்பது வரலாறு. `திருமாலின் இரத்தத்துடன் கபாலம் நிறைந்துவிட்டது` என்பது ஒருவரலாறு. இதனையே வைணவர்கள் `திருமால் சிவனுக்குப் பிச்சையிட்டு, அவனது பிச்சையெடுக்கும் தொழிலை ஒழித்தருளினான்` எனப் பெருமையாகப் பேசுவர். எனினும், `அப்பொழுதும் கபாலம் நிறையவில்லை என்பதும் ஒருவரலாறு.
காதி ஆயிர மால்களைப் பிழிந்துமாங் கனிபோல்
கோது வீசினும் கடல்கவிழ்த் தனையசெங் குருதி
பாதி யாயினும் நிரம்புறாக் கபாலபா ணியனாய்
மாது பாதியன் அவையிடை வந்தனன் வடுகன்.*
என்றார் சிவப்பிரகாச அடிகள் ( அடி - 42, 43) திருமால் இரத்த பிச்சை தருகையில் ஆவி சோரும் நிலையை அடையத் திருமகள், நிலமகள் இவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி வயிரவர் திருமாலை முன்போல அருள் புரிந்து சென்றார் என்பது வரலாறு ஆதலின், திருமால் கொண்ட மோகினி வடிவத்திலிருந்து சிவபிரான் ஐயனாரை (அரிகர புத்திரரை)த் தோற்றுவித்தமையை, வயிரவரது கபாலத்தில் திருமால் சொரிந்த குருதியினின்றும் தோற்றுவித்ததாக நகைச்சுவை படக் கூறினார் இனி அன்னதொரு புராணபேதம் பற்றி அவ்வாறு கூறினார் என்றலும் ஆம். உறைத்த உரு - வளர்ச்சியடைந்த உருவம். (அடி - 45) ஆவம் - ஆவி; உயிர் (அடி - 48) திக்கு அமர் தேவர் - திக்குப் பாலகர். (அடி - 53) பண்ணியன் - எல்லாவற்றையும் ஆக்கியவன் (அடி - 55) வாழி - கால எல்லையின்றி வாழ்பவன். (அடி - 57) முன் நெறி - எல்லா நெறி கட்கும் முன்னதாய நெறி. (அடி - 62) புத்தி - போகம். முத்தி - மோட்சம் (அடி - 64) குழகன் - அழகன் (அடி - 64) ஆவது - பின் விளைவது (அடி - 64,65) `ஆவது அறியாது குழகனாகிய நினது அருந்தமிழைப் பழித்தனன்` என மொழி மாற்றி யுரைக்க (அடி - 66) ஈண்டிய சிறப்பின் இணையடி - இங்குச் சொல்லப் பட்டவற்றுடன் மற்றும் பலவாகத் திரண்ட சிறப்புக்களையுடைய இணையடி. (அடி - 66, 67) இனி - இப்பொழுது. இதனை மேல் (அடி- 65) ``அடியேன்`` என்றதற்கு முன்னே கூட்டுக. (அடி - 67) வேண்டும் அது - எனக்கு வேண்டுவனவற்றை வேண்டிப் பெறுதலாகிய அதனையே. விரைந்து வேண்டுவன் - சற்றும் தாழாது விரும்பு கின்றேன் `தாழாது விரும்புகின்றேன்` என்றது. `முன்பு இருந்த நிலையினின்றும் நான் மாறிவிட்ேடன்` என்பதைக் குறித்தபடி.
வெண்பா: `அடியேன், எம்பெருமான் வேண்டியது வேண்டாது விரைந்தேன் இகழ்ந்தேன்; பிழைத்தேன்; தேவாதி தேவனே, (இனி நீ) என்மேல் ஆற்றவும் செய்யும் அருள், என்மேல் (நீ கொண்ட) சீற்றத்தைத் தீர்த்தருளும்` என இயைத்து முடிக்க. நீ வேண்டியது - நீ விரும்பியதை (நான் விரும்புவதே கடப்பாடாய் இருக்க அவ்வாறு செய்யாது அதனை நான்) விரும்பாது இகழ்ந்தேன். (எனது அறியாமையால் எண்ணிப் பாராமல்) பதறிவிட்டேன். என்க. ``தீர்த் தருளும்`` என்றது, `தீர்த்தருளுவதாக` என்றபடி.
இத்திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர, நக்கீரர் அருளிச் செய்தனவாய் உள்ள பிரபந்தங்கள் பலவும் ஆலவாய்ப் பெருமானது அருந்தமிழை இகழ்ந்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டிப் பாடப்பட்டனவாகச் சொல்லப்பட்ட போதிலும் இந்த ஒரு பாட்டில்தான் அதற்கு அகச் சான்று காணப்படுகின்றது.
பெருந்தேவபாணி முற்றிற்று.
சிற்பி