நக்கீரதேவ நாயனார் - கோபப் பிரசாதம்


பண் :

பாடல் எண் : 1

தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே
வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்
அண்ட வாணனுக் காழிஅன் றருளியும்
உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த
மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்

கான வேடுவன் கண்பரிந் தப்ப
வான நாடு மற்றவற் கருளியம்
கடிபடி பூங்கணைக் காம னாருடல்
பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த
மானுட னாகிய சண்டியை
வானவன் ஆக்கியும்
மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்
கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும்
கடல்படு நஞ்சங் கண்டத் தடக்கியும்
பருவரை சிலையாப் பாந்தள் நாணாத்

திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும்
கற்கொண் டெறிந்த சாக்கியன் அன்பு
தற்கொண் டின்னருள் தான்மிக அளித்தும்
கூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும்
தோற்றிய வாரணத் தீருரி போர்த்தும்
நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும்
நற்றா நந்தீச் சுவரற் கருளியும்
அறிவினை ஓரா அரக்க னாருடல்
நெறுநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும்
திருவுரு வத்தொடு செங்கண் ஏறும்

அரியன திண்திறல் அசுரனுக் கருளியும்
பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து
மல்குபிருங் கிருடிக்கு மாவரம் ஈந்தும்
தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்து
மிக்கவரம் நந்தி மாகாளர்க் கருளியும்

செந்தீக் கடவுள்தன் கரதலஞ் செற்றும்
பைந்தார் நெடும்படை பார்த்தற் கருளியும்
கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும்
நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும்
சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும்
மறைபயில் மார்க்கண் டேயனுக் கருளியும்
தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும்
சீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும்
கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்
ஆலின் கீழிருந் தறநெறி அருளியும்

இன்னவை பிறவும் எங்கள் ஈசன்
கோபப் பிரசாதங் கூறுங் காலைக்
கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன்
புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன்
உரைப்போ ராகிலும் ஒண்கடல் மாநீர்

அங்கைகொண் டிறைக்கும் ஆதர் போன்றுளர்
ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை
அடங்கா ஐம்புலத் தறிவில் சிந்தைக்
கிருமி நாவாற் கிளத்தும் தரமே அதாஅன்று
ஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும்
மூவகைக் குணமும் நால்வகை வேதமும்
ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும்
எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும்
ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும்
பத்தின் வகையும் ஆகிய பரமனை

இன்பனை நினைவோர்க் கென்னிடை அமுதினைச்
செம்பொனை மணியினைத் தேனினைப்பாலினைத்
தஞ்சமென் றொழுகுந் தன்னடி யார்தம்
நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர்
செந்தழற் பவளச் சேணுறு வரையனை

முக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்
கள்ளங் கைவிட் டுள்ளம துருகிக்
கலந்து கசிந்துதன் கழலினை யவையே
நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்
தேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப்

பாவ நாசனைப் படரொளி உருவனை
வேயார் தோளி மெல்லியல் கூறனைத்
தாயாய் மன்னுயிர் தாங்குந் தந்தையைச்
சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்
கல்லுங் கடலும் ஆகிய கண்டனைத்
தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை
நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை
வாக்கும் மனமும் இறந்த மறையனைப்
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்றறி வரியவன்

தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம் கலவர் போலவும்
விளக்கங் கிருக்க மின்மினி கவரும்
அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும்

கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக்
கொச்சைத் தேவரைத் தேவரென் றெண்ணிப்
பிச்சரைப் போலஓர்
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர் மானுடம் போன்று
பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன்
தலைமீன் தலைஎண் பலமென்றால் அதனை
அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்
மத்திர மாகுவர் மாநெறி கிடப்பவோர்
சித்திரம் பேசுவர் தேவ ராகில்

இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர்
என்றறிய உலகின்
முன்னே உரைப்ப தில்லை ஆகிலும்
மாடு போலக் கூடிநின் றழைத்தும்
மாக்கள் போல வேட்கையீ டுண்டும்
இப்படி ஞானம் அப்படி அமைத்தும்
இன்ன தன்மையன் என்றிரு நிலத்து
முன்னே அறியா மூர்க்க மாக்களை
இன்னேகொண் டேகாக் கூற்றம்
தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(அடி - 1) ஈற்றயல் அடியில் வரும் ``கூற்றம்`` என்பதை முதல் அடிக்கும் கூட்டி, `என்னை` என்னும் வினாவருவிக்க. (அடி - 3) அண்ட வாணன் - தேவன். கடல் மேல் துயில் கொள்ளும் தேவன் திருமால். ஆழி - சக்கரம். மலரோன் - பிரமன். பிரமனைச் சிரம் அரிந்த வரலாறு மேல் பெருந்தேவ பாணி உரையில் கூறப்பட்டது. (அடி - 6) வேடுவன், கண்ணப்ப நாயனார். இவர் வரலாறு இத்திருமுறையில் வேறு பாடல்களிலும், பெரியபுராணத்திலும் விளங்கக் கூறப்பட்டது. பரிந்து - பெயர்த்து. மற்று, அசை (அடி - 8) கடி படு நறுமணம் பொருந்திய. காமனார் - மன்மதன். ஆர் விகுதி இழிவு குறித்தது. பொடி பட - சாம்பலாகும்படி. (அடி - 10) சண்டி - சண்டேசுர நாயனார். இவரது வரலாறும் பெரியபுராணத்துட் காணத்தக்கது. (அடி - 12, 13) `சிவபெருமான் கூற்றுவனுக்குக் கூற்றுவனாய் யமனை உதைத்தது மார்க்கண்டேயருக்காக` என்பது நன்கறியப்பட்டது. (அடி - 14) தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தபொழுது அவர்கள் நினைத்தபடி அமுதம் எழாமல் ஆலகால விடம் தோன்றினமையால் அவர்கள் வேண்டு கோளுக்கு இரங்கிச் சிவபெருமான் தான் அதனை யுண்டு கண்டத்தில் நிறுத்தினான். அதனால் கண்டம் நீலகண்டம் ஆயது. (அடி - 15, 16) மேரு மலையை வில்லாகவும், `வாசுகி` என்னும் பாம்பினை நாணாகவும் கொண்டு ஒரு கணையால் முப் புரத்தை அழித்தமை சங்க இலக்கியத்திற்றானே சொல்லப்பட்டது.* (அடி - 17, 18) சாக்கிய நாயனார் கல் எறிந்து பேறு பெற்ற வரலாறும் பெரியபுராணத்துள்ளே காணத்தக்கது. தற் கொண்டு - தனக்கு ஏற்புடைத்தாகக் கொண்டு (அடி - 19, 20) கூற்றென - யமன்போல, கோளரி - சிங்கம். யானைக்குப் பகை சிங்கம். வாரணத்து ஈர் உரி - யானையினின்றும் உரித்த தோல், யானையாய் வந்து எதிர்த்தவன் கயாதரன் (அடி - 21, 22) நந்தீச்சுவரன், நந்திதேவர். இவர் செய்த தவத்திற்காக இவருக்குச் சிவபெருமான் தனது உருவைக் கொடுத்தலாகிய சாரூப பதவியைத் தந்தருளினான். நற்றா - நல்லதாக; நல்லது உண்டாக. (அடி - 23, 24) அறிவு - அறியத்தக்க பொருள். ஓரார் - ஆராய்ந்துணராத அரக்கனார், இராவணன். இங்கும் ஆர் விகுதி இழிவு குறித்து நின்றது. ``நெறு நெற`` என்பது ஒலிக் குறிப்பு. (அடி - 25, 26) அசுரன், வாணன். இவன் செய்த பூசைக்காக இவனுக்குச் சிவபெருமான் தனது சாரூபத்தை வழங்கித் தான் நடனம் புரியும் பொழுது குடமுழா வாசிக்கப் பணித்தருளினான். சாரூபம் பெற்றமையால் அவனுக்கு ஊர்தியும் இடபமாயிற்று. ஏறு - இடபம் (அடி - 27) பல் கதிர் உரவோன், சூரியன். இவன் பல்லைத் தகர்த்தது தக்கன் வேள்வி அழிப்பில். அதனைக் கந்தபுராணத்துட் காண்க. (அடி - 28) பிருங்கிருடி, கணங்களில் ஒருவர். ``தண்டி குண்டோதரன் பிங்கிருடி`` * என அப்பரும் அருளிச் செய்தார் (அடி - 29) தக்கன் வேள்வியை அழித்தது கந்தபுராணத்துள் விரித்துக் கூறப்பட்டது. (அடி - 30) நந்திமாகாளர், திருக்கயிலைக் காவலருள் தலைவர். அத்தலைமை அளித்தது மிக்க வரம் ஆதல் அறிக. (அடி - 31) தீக்கடவுள் - அக்கினி தேவன். இவனது கையை அறுத்தது தக்கன் வேள்வியில் (அடி - 32) `நெடும்படை பைந்தார்ப் பார்த்தற்கு அருளியும்` என மாற்றியுரைக்க. நெடும் படை - பெரிய அத்திரம். பார்த்தன் - அருச்சுனன். (அடி - 33) `கதிர்`` என்றது நிலவை. `காலால் பயன் கெடுத்து` என்க. பயன் கெடுத்தது, கீழே தேய்த்து வலியிழக்கச் செய்தது. இதுவும் தக்கன் வேள்வியில் (அடி - 34) நீள் நகர், அளகாபுரி (அடி - 37) தாருகன், இவன் கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட தாரகன் அல்லன், அவனின் வேறானவன். ``கானகம் உகந்த காளி தாருகன் - பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்``* எனச் சிலப்பதிகாரத்து கூறப்பட்டது காண்க. (அடி - 38) சிலந்திக்கு அரசளித்ததைப் பெரியபுராணம் கோச்செங்கட் சோழர் வரலாற்றில் காண்க. (அடி - 39) கார்- கருமை; அழகு. திருமாலின் ஊர்தியாகிய கருடனை இடபத்தின் மூச்சுக் காற்றில் அகப்பட்டு உழலச் செய்ததைக் காஞ்சிப் புராணம் தழுவக் குழைந்த படலத்தில் காண்க. (அடி - 44) புடம் - மறைப்பு; நிழல் (அடி - 46) ஆதர் - அறிவிலார். `உளர் ஆவர்` ஆக்கம் வருவித் துரைக்க. (அடி - 47) ஒடுங்கா - முடிவு பெறாத. உம்பர்கோன். சிவபெருமான் (அடி - 49) ``கிருமி`` என்றது ஆசிரியர் தம்மையே குறித்தது. பரம் - அளவு. ஏகாரம், எதிர் மறைவினா. (அடி - 50) ஒருவகைத் தேவர், சுவர்க்க லோகவாசிகள். திறம் - கூறுபாடு. இருவகைக் கூறுபாடு புண்ணியம் பாவம் (அடி - 52) இரதம், நாவால் நுகரப்படும் சுவை. (அடி - 53) ஓசை - இசை. ஞானம், புத்திகுணபாவகங்கள் எட்டில் ஒன்று. இஃது எண் வகைப்படுதலைச் சிவஞான போதம் 2 ஆம் சூத்திர பாடியத்தால் உணர்க. (அடி - 54) நவரத்தினங்கள் போல ஒன்பது வகையான நிறம் உடைய மலர்கள் விரும்பப்படுகின்றன. (அடி - 55) ``பத்தின் வகை`` என்பதனை, ``பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே`` * என்னும் அப்பர் திருமொழியால் உணர்க. (அடி - 56) `நினைவோர்க்கு இன்பனை` என மாற்றிக் கொள்க. (அடி - 60) (அடி - 70) கல் - மலை. கண்டன் - அளவுட்படுபொருள்களாய் உள்ளான். (அடி - 71) தொன்மை, தொன்மைத்தான பொருள்; ஆகுபெயர். (அடி - 72) நித்தன் - அழிவில்லாதவன். முத்தன் - பாசம் இல்லாதவன். (அடி - 73) மறையன் - வேதப் பொருளாய் உள்ளவன். (அடி - 77, 78) `முயல் விட்டுக் காக்கைப்பின் போவது போல` என்பது ஒரு பழமொழி, அப்பர் திருமொழியிலும் வந்துள்ளது.* வேட்டையாடுபவன் முயலின்பின் விடாது சென்றால் பயன் பெறுவான்; அதை இடையில் விட்டுவிட்டுக் காக்கைப்பின் போனால் யாது பெறுவான்? ஒன்றையும் பெறான். இது பயன் தருவதை விட்டுப் பயன் தாராததைத் தொடர்வதற்கு உவமையாகும். கலவர் - படைக் கலம் எந்தியவர்; வேட்டையாடுபவர். (அடி - 79) ``விளக்கிருக்க மின்மினித் தீக் காய்தல்` என்பதும் முன் கூறியது போன்ற ஒரு பழமொழி. இதுவும் மேற்குறித்த அப்பர்திருமொழியில் வந்துள்ளது (அடி - 80) அளப் பரும் சிறப்பு, அறியாமையின் மிகுதி. (அடி - 81, 82) கச்சம் - அளவு; எல்லை. எல்லைக்கு உட்பட்ட ஆற்றல் உடையவர்களாய்ப் பெருஞ் செயலை முடிக்கமாட்டாத சிறிய தேவர்கள். கொச்சை - நிரம்பாமை; அரை குறை. (அடி - 83) பிச்சர் - பித்தர். ஓர் - சிறுமையுடைய (அடி - 84) ஆரியப் புத்தகம், பல தெய்வ வழிபாட்டைக் கூறும் ஆரிய நூல், அத்தகைய நூல் தமிழில் இல்லாமையால், `ஆரியப் புத்தகம்` என்றே கூறினார். அது வீணே அலையப் பண்ணுதலால் அதனை, ``பேய்`` என்றார். (அடி - 85) வட்டணை - சுற்றிச் சுற்றி முடிவில்லாது வரப் பேசுதல். மானுடராயினும் மானுடப் பண்பு இல்லாமையால் ``மானுடம் போன்று`` என்றார். ``மக்களே போல்வர் கயவர்`` என்னும் திருக்குறளைக் காண்க. (அடி - 86) பெட்டு - பொய், (அடி - 87, 88) குறும்பன் ஒருவன் வேறு ஒருவனைப் பார்த்து, ``உனது தலை. மனிதர் தலையாய் இல்லை; மீன் தலையாய் உள்ளது; அதன் எடை எட்டுப் பலமே`` என்று சொன்னால் உடனே தன் தலையை வெட்டி எடுத்து நிறுத்துப் பார்ப்பவர் உலகில் ஒருவரும் இல்லை. ஒருத்தர், பொதுமை பற்றி வந்த பன்மை; `ஒருத்தரும்` என்னும் இழிவு சிறப்பும்மை விரிக்க. (அடி - 89) மத்திரம் ஆகுவர் - அவ்வாறு சொன்னவர்மேல் சினங் கொள்வர். மாநெறி, எல்லா நெறிகளையும் தன்னுள் அடக்கி நிற்கும் நெறி; அது சிவ நெறி. மத்திர மாகுவர் - அதன் மேல் காழ்ப்புக் கொள்பவர். (அடி - 90) சித்திரம் - சொல்லளவில் அழகாய்த் தெரியும் சொற்கள். பேசுவர் - பேசப்படுபவர் தேவராகில் அவரால் குறிக்கப் படுவோர் பெருந்தேவராயின் (அடி - 91, 92, 93) ``இன்ன தீயோரைக் காய்ந்தனர்; இன்ன நல்லோர்க்கு அருள் புரிந்தனர்`` என்பது எங்கேனும் சொல்லப்படுகின்றதா? இல்லையே - என்க. இங்ஙனம் கூறியது, `புராண இதிகாசக் கதைகளாய் இல்லாமல் சண்டேசுரர், கண்ணப்பர், கோச்செங்கட் சோழர், மூர்த்தியார் முதலியோர் வரலாறுபோல வரலாற்று முறையில் சொல்லக் கேட்கின்றோமா` என்னும் கருத்தினாற் கூறியதாகும். (அடி - 94) அழைத்தல் - கூப்பீடு செய்தல். (அடி - 95) ஈடுண்டல் - உட்படுதல் (அடி - 96) இப்படி ஞானம் - இங்கே சொல்லப்பட்ட ஞானம். அப்படி அமைத்தல் - மேல் வட்டணை பேசுவோர் கூறும் ஞானமாகத் திரித்து அமைத்தல். (அடி - 97) மேற்கூறிய பூக்கமழ் சடையனும் புண்ணிய நாதனும் ஆகிய இறைவனை இன்ன தன்மையன் என்று இருநிலத்து முன்னே (இளமை யிற்றானே) அறியாமாக்களை` என்க. (அடி - 99) இன்னே - இப் பொழுதே. `அவர்களைக் கூற்றம் கொளல் வேண்டும்` என்றது அவர்கள் மேல் எழுந்த சீற்றத்தால் அன்று; பயனில் உழப்புச் செய்தல் பற்றிய. பரிதாபத்தினாலாம்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் சாகடிக்கும் கூற்று*
என்னும் திருக்குறள் போல்பவற்றைக் காண்க. (அடி - 100) தவறு - கடமையைச் செய்யாமை, `கூற்றம்` என்பது சொல்லால் அஃறிணை யாதலின், ``உடைத்து`` என அஃறிணையாகக் கூறினார். கோபப் பிரசாதம் முற்றிற்று.
சிற்பி