நக்கீரதேவ நாயனார் - கார் எட்டு


பண் :

பாடல் எண் : 1

அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்குங் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எல்லா வெண்பாக்களிலும் ``கார்`` என்பதை முதலிற் கொண்டு உரைக்க. `எங்கும் விரவி எழுந்து சடைபோல் மின்னி அடை வுற்றே சங்கம் போல் முழங்கும்` என இயைத்து முடிக்க. `அரவினங்கள் அணைய` என இயையும்.
``அரைக்கு`` என்பதை `அரைக்கண்` எனத் திரிக்க. இஃது உருபு மயக்கம். அசைத்த - கட்டிய. `புற்றில் அணைய` எனச் சொல்லெச்சம் வருவிக்க. சங்கு திருமாலுக்குச் சிறப்பாக உரித்தாயினும், `பிறர் அதனைக் கொள்ளலாகாது` என்பது இல்லை. வெற்றிச் சங்குத் தீயோரைக் காய்வார் பலரும் கொள்வதே. அதனால் இங்குச் சிவபெருமான் சங்கு உடைமையைக் கூறினார். `அவன் கைச்சங்கம் போல்` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 2

மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக் காட்டிற்றே ஐவாய்
அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஐ வாய்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. அழல் அரவம் - அழலும் அரவம். அழலும் - சீறுகின்ற; வினைத் தொகை. கழல் அரவம் - காலில் அணிந்த `கழல்` என்னும் அணி கலத்தின் ஒலி. காண்பு உள்ள - அவ்வொலி புலப்படுதற்கு இடமான; அஃதாவது இடி முழக்கத்தைச் செய்கின்ற. ``அவன்றன்`` என்பதை, ``மைஆர் மணி மிடறு`` என்பதற்கு முன்னே கூட்டுக. மை ஆர் - கருமை நிறம் பொருந்திய. மணி, நீ. மணில மற்று - அசை `சிலையைக் காட்டிற்று` என்க. சிலை - வில். விலகி - குறுக்கிட்டு.

பண் :

பாடல் எண் : 3

ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும் கொல்லேறும் போல்வ
இருண்டொன்று மின்தோன்றி அம்பொன்றவ் வானம்
கருண்டொன்று கூடுதலின் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கார், அம்பு ஒன்று அவ்வானம் இருண்டு, ஒன்று மின் தோன்றி, கருண்டு ஒன்றுதலின். மிடறும், சடையும், ஏறும் போல்வ` என இயைக்க. அம்பு ஒன்று - மழை நீர் பொருந்திய `வானத்தில்` என ஏழாவது விரிக்க. ஒன்று மின் - பொருந்திய மின்னல். தோன்றி - தோன்றப் பெற்று. இயம்புதல் - ஒலித்தல். கருண்டு - மயங்கி; அஃதாவது பல்வேறு வகைய வாய். ஏறு - இடபம், இருளுதலால் மிடறு போல்வனவும், மின்னுதலால் சடை போல்வனவும், இடி முழக்கம் செய்தலால் இடபம் போல்வனவும் ஆயின. இவ்வெண்பாவின் பாடம் பெரிதும் பிழைபட்டுக் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 4

இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக்
குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் சுருள்கொண்டு
பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோள்ஈயக் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குருள் - தளிர். காம்பு - மூங்கில். மூங்கில் தோளுக்கு உவமையாகச் சொல்லப்படுதலால், அவற்றின் மேல் தங்கும் மேகங் களுக்கு அவை ஏறியிருக்கத் தோளைத் தந்ததாகக் கூறினார். `கார், காம்பினங்கள் தோள் ஈய (அவற்றின் மேல் தங்கி) மின்னிப் பாம்பினங்கள் அஞ்சி சுருள் கொண்டு பாடம் ஒடுங்க ஆர்த்தது` என்க.

பண் :

பாடல் எண் : 5

கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்
றாடரவம் எல்லாம் அளையடைய நீடரவப்
பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோடல் - காந்தள். அதன் அரும்பு பாம்பு போலும் தோற்றத்தை உடையது ஆகலின் `கோடல் கோடு அரவம் அரும்ப` என்றார். கோடு - வளைந்த. `அரவம் போல அரும்ப` என்க. மழைக் காலத்தில் காந்தள் அரும்பெடுத்து மலரும். குரு - நிறம். மணி, நவ மணிகள். கான்று - உமிழ்ந்து. அணை - புற்று. பொற்பு அகலம் - அழகிய மார்பு. கல் - மலை. அதனது தனது தன்மை. கற்பு, `கல்லினது தன்மையாகிய அகன்ற இடத்தில் காணப்பட்ட கார்` என்க.

பண் :

பாடல் எண் : 6

பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு மின்விலகி ஊரும்
அரவம் செலஅஞ்சும் அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதலிலும் `கார்` என்பது வருவித்து, `மின் விலகி, இருள் கீண்டு ஊரும்` என்க. பார் - நிலத்தின் கீழ் இடம். பனி விசும்பு. குளிர்ந்த ஆகாயம். பாசுபதன் சடை - சிவபெருமானது சடை. `இம் மூன்றிடங்களும் இருள் தங்கியிருக்கும் இடம்` என்றார். ஆரும் - பொருந்தும். சிவபெருமானது சடை முடி `அடவி` (சடாடவி) எனப் படுதலால், அதனையும் இருள் தங்கும் இடமாகக் கூறினார். விலகி - குறுக்கிட விட்டு. ஊரும் - தவழும் (அது பொழுது) `அரவம் வெளியே செல்ல அஞ்சும். `ஆயினும் அம் சொல்லார் (அழகிய சொற்களை யுடைய பெண்கள் பிரிந்து சென்ற கணவர் மீண்டு வருவார் என மகிழ்ந்து) அக் கார் காண்பார்கள். கண்டு, கர இந்து அம் (இவற்றுள்ளே மறைந்து நிற்கின்ற நிலவு அழகிது) என்பார்கள் இங்ஙனமெல்லாம் மகிழ்வார்கள்` என்றபடி. கர இந்து, இறந்தகால வினைத்தொகை.

பண் :

பாடல் எண் : 7

செழுந்தழல் வண்ணன் செஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல் உயர எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாய்அக் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காவி - கருங் குவளைப் பூ `அதன் தன்மை சேர்ந்த கண்களையுடைய தோழீ` என்க. அக்கார் - அஃதோ தோன்றுகின்ற மேகம்; `அன்பை அளத்தற் பொருட்டு, மின்னி, அழுந்தி, உயர எழுந்து, எங்கும் உற்றது; (யான் ஆற்றுமாறு எவன்) என முடிக்க. ஈற்றில் வருவிக்கப்படுவது குறிப்பெச்சம். அழுந்துதல் - இறுகுதல். `எனது ஆற்றாமையைப் பலரும் இகழ்கின்றார்கள் என்பதை நீ சொல்ல வேண்டாமலே யான் அறிவேன்` என்றற்கு, இடையே, ``அவர்போல் உயர எழுந்து`` என்றாள். ஆற்றாமையால் ஆவி சோர்தலைக் கண்டும் நீங்காமையால், `உயிர்விடுகின்றாளா, பார்ப்போம்` என்று இருக் கின்றது` என்பாள். ``ஆவி சோர் நெஞ்சினரை அன்பு அளக்க உற்றது`` என்றாள்; இரண்டன் உருபை ஆறன் உருபாகத் திரிக்க. இது தலைவனது பிரிவு நீட்டிக்க ஆற்றாளாய தலைமகளை, `ஆடவர் பிரிந்த செயலை முடித்து வருங்காறும் ஆற்றியிருத்தல் மகளிர் செயற்பாலது; அது நீ செய்கின்றிலை` என வற்புறுத்திய தோழிக்குத் தலைவி, `அன்பிலார் ஆற்றியிருப்பர்; யான் ஆற்றேன்` என வன்புறை எதிரழிந்து கூறியது.

பண் :

பாடல் எண் : 8

காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அண்டம் - ஆகாயம். அது நீல நிறத்தை உடையது ஆதலின் சிவபெருமானுடைய கண்டத்திற்கு உவமையாயிற்று. ``அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே`` என உவமைக்கு உவமை கூறலை விலக்கியது, உவமையால் பொருளைச் சிறப்பிப்பதாகிய நேர்நிலை உவமத்திற்கே யாம். அதில் உவமைக்குக் கூறும் உவமை ஆகவே அதற்கு அது விலக்கப்பட்டது. பொருளால் உவமையைச் சிறப்பிப்பதாகிய எதிர்நிலை உவமத்தில் உவமைக்கு உவமை கூறினால் இரண்டானும் பொருள் சிறப்பெய்துதலின் அதற்கு அவ் விலக்கு இன்றாம். `அண்டம்போல் மீதிருண்ட கண்டம் போல்` என இயைக்க. ``ஆதியான்`` என்பதும் ``கண்டம்`` என்பதனோடே முடியும். ஆதியான், சிவபெருமான். ஆய் மணி - ஆராய்ந்தெடுக்கப் பட்ட நீல மணி. `அதன் தன்மை சேர்ந்த கண்டம்` என்க. தளவம் - முல்லை. `தளவம் பூ ஆர` என மாற்றியுரைக்க. ஆர - நிறைய. மலரவும், `சொரியவும், ஆரவும் புகுந்தின்று` என்க. புகுந்தின்று - புகுந்தது. இன், சாரியை. இச்சாரியை ஈறு திரியாது வருதல் பண்டைய வழக்கம். `கூயிற்று, போயிற்று` என்றாற்போல ஈறு திரிந்தே வருதல் பிற்கால வழக்கம். அதனால் பிற்காலத்தில் இச்சாரியை ஏற்ற இடத்தே வருவதாம். ``புகுந்தின்று`` என்பதில் தகர ஒற்று இறந்த காலம் காட்டிற்று. `கூயிற்று, போயிற்று` என்பவற்றில் யகர ஒற்றே இறந்த காலம் காட்டுதலை, `ஆயது, போயது` முதலிய வற்றான் அறிக. கார் எட்டு முற்றிற்று.
சிற்பி