நக்கீரதேவ நாயனார் - போற்றித் திருக்கலிவெண்பா


பண் :

பாடல் எண் : 1

திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருமால் வராக வடிவம் கொண்டு திரு வடியைத் தேடிக் காணாமை இவற்றால் கூறப்பட்டது. முதற்கண் உள்ள திரு. இலக்குமி. `எருத்தத்து இலங்கிய, வெண் கோடு முதலாக நீல நிறம் முடிவான இவற்றால் பொலிந்து வரைபோலும் பன்றி` என்க. வரை - மலை. எருத்தம் - பிடரி `எருத்தத்தால்` என உருபு. விரிக்க.

பண் :

பாடல் எண் : 2

குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து நிலம்ஏழ் - உறத்தாழ்ந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`குறுந்தாள்` என்பது வலிந்து நின்றது. தாள் - கால். குன்றிக் கண் - குன்றி மணிபோலும் கண்கள். `பன்றித் திருஉருவாய் நிலம் ஏழ் உறத் தாழ்ந்து காணாத பாதங்கள்` என இயைக்க.

பண் :

பாடல் எண் : 3

பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி - அன்றியும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பன்றித் திருஉருவாய் நிலம் ஏழ் உறத் தாழ்ந்து காணாத பாதங்கள்` என இயைக்க. நிலம், இங்குப் பாதல உலகங்கள். நின்றவா நின்ற நிலை - என்றும் ஒரு பெற்றியனவாய்த் திரிபின்றி நிற்கும் நிலை. (இதற்குப்) போற்றி - வணக்கம்

பண் :

பாடல் எண் : 4

புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புண்டரிகம் - தாமரை மலர். அதனுள் இருந்த புத்தேள், பிரம தேவன். `பறவை` என்னும் சாதி பற்றி அன்னத்தை, ``கழுகு`` என்றார். அன்றிப் புராண பேதம் பற்றிக் கூறினார் எனினும் ஆம். அண்டர் அண்டம் தேவர் உலகம். ஊடுருவியது கழுகுருவம். ``பண்டொருநாள்`` என்பதை முதலிற் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 5

காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி - நாணாளும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``காணான்`` என்பது, `காணானாய்` என முற்றெச்சம். இழிய - (முன் இருந்த இடத்திற்கு) இறங்கிவிட, சிவனுக்கு முடி சடையேயாயினும் கனக (பொன்) முடி விலக்கன்று. ``முடி கவித்து`` என்றதனால். `காணப்படாது நின்றது முடி` என்பது போந்தது. கோணாது - வளையாமல் `நிமிர்ந்து` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த
மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பேணி - பாதுகாத்து `காலங்கள் தோறும்` என. `தோறும்` என்பது வருவிக்க. மாணி - பிரமசாரி. மார்க்கண்டேயர். கடவூர் - திருக்கடவூர். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. ஊரில் உள்ளவர்களை ``ஊர்`` என்றார். `வரத்தின் பெற்ற பெரிய வலி` என்க. உரம் - மார்பு.

பண் :

பாடல் எண் : 7

வரத்திற் பெரிய வலிதொலையக் காலன்
உரத்தில் உதைத்தஉதை போற்றி - கரத்தாமே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வரத்தின் பெற்ற பெரிய வலி` என்க. உரம் - மார்பு. ``கரத்தான் மே`` என்றதனை, ``குங்குமத்தின்`` என்பதற்கு முன்னே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 8

வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கரத்தான் மே`` என்றதனை, ``குங்குமத்தின்`` என்பதற்கு முன்னே கூட்டுக. கற்பு - கற்றல். அஃதாவது இங்குக் கோலம் எழுதக் கற்றுக் கொள்ளுதல். அஃது ஆகுபெயராய் அக்கல்வி வன்மையால் எழுதப்படும் கோலத்தைக் குறித்தது. எனவே, `கொங்கைமேல், கரத்தான் மேவு குங்குமத்தின் கோலம் அழியும் வண்ணம்` - அஃதாவது, `கொங்கைமேற் சேரும் வண்ணம்` எனக் கூறியதாம். கசிவித்தல் - மனத்தை இளகச் செய்தல், `யோகத்தில் இருந்த தன்னை (சிவனை)ப் போகத்தில் இச்சையுடையனாக்கும் பொருட்டு` என்றவாறு. அழகுடைமை பற்றித் திருமாலும் `வாமன்` எனப்படுவான். பொற்பு - அழகு. எனவே, ``வாமன்`` என்பது வாளா பெயராய் நின்றது.

பண் :

பாடல் எண் : 9

வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக்
காமன் அழகழித்த கண்போற்றி - தூமப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அழகுடைமை பற்றித் திருமாலும் `வாமன்` எனப்படுவான். பொற்பு - அழகு. எனவே, ``வாமன்`` என்பது வாளா பெயராய் நின்றது. தூமம் - தாருகாவனமுனிவர் செய்த வேள்வியின் புகை நடுவிலே. படம் எடுத்து வந்த பாம்புகள் வெகுண்டு பார்த்து தீங்கு செய்யவர அவைகளைப் பற்றி அணியாக அணிந்து.

பண் :

பாடல் எண் : 10

படமெடுத்த வாளரவம் பார்த்தாடப் பற்றி
விடமெடுத்த வேகத்தான் மிக்குச் - சடலம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தூமம் - தாருகாவனமுனிவர் செய்த வேள்வியின் புகை நடுவிலே. படம் எடுத்து வந்த பாம்புகள் வெகுண்டு பார்த்து தீங்கு செய்யவர அவைகளைப் பற்றி அணியாக அணிந்து.
இவற்றில் முயலகன் வரலாறு சொல்லப்படு கின்றது. வேறு இடங்களில் இது பெறப்படவில்லை.

பண் :

பாடல் எண் : 11

முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்தவடர் போற்றி - நடுங்கத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இவற்றில் முயலகன் வரலாறு சொல்லப்படு கின்றது. வேறு இடங்களில் இது பெறப்படவில்லை. `தாருகாவன இருடிகளால் அனுப்பப்பட்ட ஓர் அசுரன்` என்னும் அளவில் சொல்லப்பட்டது.) உடன் தோன்றிய பாம்புகள் உமிழ்ந்த விடவேகத்தைத் தானும் உடையவனாய், அப்பாம்புகளைப் போலத் தானும் உடலை வளைத்துத் திருமேனியைச் சுற்றி வளைத்து வலித்த (இழுத்த) முயலகனுடைய மொய்ம்பை (வலிமையை) அடங்க மிதித்த திருவடிக்கு வணக்கம். ``நடுங்க`` என்பதை, ``குருமாற`` என்பதன் பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 12

திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நடுங்க`` என்பதை, ``குருமாற`` என்பதன் பின் கூட்டுக. குரு - பாரம். அஃது ஆகுபெயராய் மலையைக் குறித்தது. மலை, மந்தரமலை. மாற - மாறி. மாறிக் கடைய. `அவர்கள் நடுங்க வந்தெழுந்த ஆலம்` என இயையும். மால் கடல் - பெரிய கடல் `நாகத்தையும் பற்றி மாற` என்க. நாகம், `வாசுகி` என்னும் பாம்பு.

பண் :

பாடல் எண் : 13

நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி - சாலமண்டிப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீலம் - நீல நிறத்தையுடைய கடல் நீர். ஆகுபெயர் `நீர் முகில்போல் வந்தெழுந்த ஆலம்` என்பதாம். அழல - துன்பத்தால் வருந்த. கண்ட மாகிய அதற்கு வணக்கம். ``சால மண்டி`` என்பதை ``மிக்கடர்க்கும்`` என்பதற்குமுன்னே கூட்டுக. உகந்த - விரும்பிய. சால மண்டி - மிகவும் நெருங்கி.

பண் :

பாடல் எண் : 14

போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடர்க்கும் - வருத்துகின்ற. தாருகன், ஓர் அசுரன். இவன் முருகக் கடவுளால் அழிக்கப்பட்ட தாரகனின் வேறானவன். `அதற்கு வீரம் கொடுத்து` என்க.

பண் :

பாடல் எண் : 15

கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி - தடுத்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாகாளி - வீர மாகாளி. `அவள் தான் கொண்ட கோபம் தணியாது உலகிற்கு இடர் புரிந்தமையால், அவளை நடனப் போரினால் சிவபெருமான் நாணம் அடையச் செய்து வென்றான்` என்பது வரலாறு. இந்நடனப் போர் நிகழ்ந்த இடமாகக் கூறப்படுவது திருவாலங்காடு.

பண் :

பாடல் எண் : 16

வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாளரக்கனைத் தடுத்து அவன் வாய் ஆறு உதிரம் நிலை எடுத்து` என உருபு விரித்தும், சுட்டுப் பெயர் வருவித் தும் உரைக்க. வரை, கைலாயமலை, அதனை எடுத்த அரக்கன் இராவணன். நிரை, தாரைகளின் வரிசை. எடுத்து - தோன்றி. இற்று - முரிந்து. இரு செய்தென் எச்சங்களும் எண்ணின்கண் வந்து, ``நெரிய`` என்பதனோடு முடிந்தன. புரை எடுத்த - `குற்றத்தை மேற் கொண்ட முடியும், தோளும்` என்க.

பண் :

பாடல் எண் : 17

பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய
மெத்தெனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பத்து அனைய - `பத்து` என்னும் அவ் எண்ணிக்கையை உடைய. முடி. ஆகுபெயராய் அதனை அணிந்த தலையை உணர்த்திற்று. வலி பொறுக்கமாட்டாது அழும் அளவிற்கு ஊன்றியதன்றி, இறந்தொழியும்படி ஊன்றாமையால் ``மெத்தெனவே வைத்த விரல்`` என்றார். (இவற்றில் பிரமன் தலையை வெட்டிய வரலாறு வேறு வகையாகக் கூறப்படுகின்றது. ``நாமகள் நாசி, சிரம்பிரமன் பட`` திருவாசகத்தில் பிரமன் சிரம் தக்கன் வேள்வியில் வெட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. ``அரி அயன் தலை வெட்டி வட்டாடினார்``* என்பது அப்பர் திருமொழி.) ``தகைத்த`` என்பது `தகை` என்பது அடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம்.

பண் :

பாடல் எண் : 18

வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மந்திரித்தல் - மந்திராலோசனை செய்தல், மந்திரம் - மந்திராலோசனை செய்து முடிக்கப்பட்ட பொருள். இஃது இரகசியமானது. விதிர் விதிர்த்தல். அஞ்சுதல் - நடுங்குதல். பிரமன் அஞ்சியது, `இம்முடிவு தன்னால் ஏற்பட்டது எனக் கொண்டு அசுரர்கள் தனக்குக் கேடு சூழ்வர் என நினைத்தமையாலாம். மேல் - பின்பு. தானவர் - அசுரர்.

பண் :

பாடல் எண் : 19

கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`விதிர் விதிர்த்து, மேல் தானவருக்கு நவில ஓடி, ஒட்டிக் குறளை உரைத்த அயன்` என்க. குறளை உரைத்தல் - கோள் சொல்லல், ஒட்டி- அவர்களோடு பொருந்தி. `இது பற்றித் தேவர்கள் முறையிடச் சிவ பெருமான் அயனது சிரசை அறுத்தான்` என்க. மட்டித்தல் - பூசுதல்.

பண் :

பாடல் எண் : 20

வாலுகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மட்டித்தல் - பூசுதல். அது நன்கு அமையச் செய்தலைக் குறித்தது. வாலுகம் - வெண்மணல் குவை. வகுத்து - செய்து. உகைத்து - அப்புறப்படுத்தி.

பண் :

பாடல் எண் : 21

ஒட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஓட்டிய - தன்னையும் வெருட்டிய. வன்தாதை - கொடிய தகப்பன், `தகப்பன்` எனக் கருதுதற்கு உரியன் அல்லாதவன்` என்றபடி. சண்டி - சண்டேசுர நாயனார். வேறாக - தனியாக. `வேறாக இருத்தி` என்க.

பண் :

பாடல் எண் : 22

பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி - நிற்க

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மாலை தான் சாத்தி எடுத்த பூ மாலை. போனகம் - நிவேதனம். இதுவும் நிவேதித்து. நற்கோலம் - சிவ வடிவு. ``நற்கோலம்`` என்பதிலும் உம்மை விரிக்க. இவற்றையெல்லாம் கொடுத்தது. மகன்மையுரிமை மிக்குத் தோன்றவாம்.

பண் :

பாடல் எண் : 23

வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வலம் தரும் மால் - வெற்றியைத் தருகின்ற திருமால். அலந்து அரு மால் கொள்ள - அலமந்து, நீக்குதற்கரிய மயக்கத்தைக் கொள்ள. அடர்க்கும் - துன்புறுத்தும். சலந்தரன் - சலந்தராசுரன்.

பண் :

பாடல் எண் : 24

சக்கரத்தால் ஈர்ந் தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஃதன் றீந்த விறல்போற்றி - அக்கணமே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரி - திருமால். விறல் - வெற்றி. நக்கு இருந்த - பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டிருந்த. `அக்கணமே மூக்கரிந்து` என்க.

பண் :

பாடல் எண் : 25

நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய - மிக்கிருந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நக்கு இருந்த - பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டிருந்த. `அக்கணமே மூக்கரிந்து` என்க. தொக்கு இருந்த - தொகை மிக்கு இருந்த. வண்ணம் - வகை; புகழ்;

பண் :

பாடல் எண் : 26

அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த
செங்கைத் திறத்த திறல்போற்றி - திங்களைத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கைத் தலத்தே அணி மாலை - உள்ளங்கையில் வைத்திருத்தற்குரிய செபமாலை, ஆங்கு அளித்த - அப்பொழுதே கொடுத்த. `அணி மானை` என்பதும், `ஆங்கணிந்த` என்பதும் பாடங்கள் அல்ல.
திங்கள் - சந்திரன்.

பண் :

பாடல் எண் : 27

தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திங்கள் - சந்திரன். தக்கன் வேள்வியில் சந்திரன் தரையில் வைத்துத் தேய்க்கப்பட்டான். ``அதுவே`` என்ப தனை, `அதனையே` என உருபுவிரித்துரைக்க. `வாய்த்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வாய்த்த - தக்கன் வேள்வியில் சென்றிருந்த தேவர்களை மடிவித்துப் பின் எழுப்பியதாகக் கூறப்பட்ட செய்தி இங்குச் சிறையில் அடைத்துப் பின்பு விடுவித்ததாகச் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு
வரமன் றளித்தவலி போற்றி - புரமெரித்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரிபுரத்தையெரித்த பொழுது அவற்றுள் இருந்த பலருள் சிவபத்தியினின்றும் மாறாது உறைத்து நின்ற, `சுதன்மன், சுசீலன், சுபுத்தி` - என்னும் மூவர் திருவருளால் உய்தி பெற்றிருந்தனர். திரிபுரத்தசுராகிய தாரகாக்கன், கமலாக்கன், வித்யுன்மாலி - இவரும், மற்றையோரும் அழிந்தொழிந்தனர். உய்ந்த மூவரில் இருவர் கோயில் வாயில் காவலராகும் வரத்தையும், ஒருவன் முழவு வாசிக்கும் வரத்தையும் பெற்றனர்.
மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க் கருள் செய்தார்;
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளரென் றேவிய பின்னை
ஒருவன் நீ கரி காடரங் காக
மானை நோக்கிஓர் மாநடம் மகிழ
மணிமுழா முழக்க அருள் செய்த
தேவ தேவ
உய்யவல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
என்னும் திருமுறைகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 29

அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமர்ந்து - விரும்பி. நிகழ்வித்து - யாவரும் அறியச் செய்து.

பண் :

பாடல் எண் : 30

நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி - விடைகாவல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நடை காவலால்` என உருபு விரிக்க. நடை- ஒழுக்கம். காவல் - அதனைக் காத்துக் கொள்ளுதல். காத்துக் கொண்டவர் அம்மூவர். கடை - வாயில்.
`காவல் விடை` என மாற்றி, `வாயில் காவலர் பால் விடை பெற்று அடைந்த வானவர்கள்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 31

தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் - கோனவனைச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காவல் விடை` என மாற்றி, `வாயில் காவலர் பால் விடை பெற்று அடைந்த வானவர்கள்` என உரைக்க. தானவர்கள் - அசுரர்கள். மயில் ஊரும் கோன், முருகன். முருகனை வான் ஆள வைத்தமையால் அவன் அசுரரை அழித்து வானவரை வாழச் செய்தான் என்க.

பண் :

பாடல் எண் : 32

சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம்போற்றி - மேனாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முருகனை வான் ஆள வைத்தமையால் அவன் அசுரரை அழித்து வானவரை வாழச் செய்தான் என்க.

பண் :

பாடல் எண் : 33

அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் - துதித்தங்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அந்தகன் - அந்தகாசுரன். அண்டர் அண்டம் - தேவர் உலகம். `அந்தகாசுரனை வைரவர் சூலத்தாற் குத்தி எடுத்து உயரத் தூக்கி வைத்திருக்க, அவன் அகந்தை அடங்கிப் பல நாள் துதிசெய்தமையால் கீழே விடுத்து முத்தியடையச் செய்தார்` என்பது புராணம்.

பண் :

பாடல் எண் : 34

கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி - கவைமுகத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பவம் - பிறப்பு. பாவனை - நினைவு; சங்கற்பம்.
(இவற்றுள் கயாசுர வதம் கூறப்படுகின்றது. கயாசுரன் - யானை வடிவம் உடைய அசுரன். கயமுகாசுரன் இவனின் வேறாவன்.)

பண் :

பாடல் எண் : 35

பொற்பா கரைப்பிறந்து கூறிரண்டாப் போகட்டு
மெற்பா சறைப்போக மேல்விலகி - நிற்பால

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொன் - இரும்பு. கவை முகத்த பொன் - பல கிளைகளாகிய முகத்தையுடைய, இரும்பால் ஆன கருவி. அங்குசம் முதலியன. தன்னை அடக்க வந்த பாகர்களைக் கயாசுரன் கொன்று விட்டான். `மேல்` என்பது `மெல்` எனக்குறுகி நின்றது. பாசறைக்குப் போவதற்குத் தடையாகத் தன்மேல் வந்தவர்களை விலகப்பண்ணி. `விலகு வித்து` என்பது விகுதி தொக, ``விலகி`` என்று ஆயிற்று. நில் பால - நின்ற பான்மையையுடைய.

பண் :

பாடல் எண் : 36

மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தறுகண் - அஞ்சாமை; அதற்குப் `பசுமை` என்னும் அடை கொடுத்தது, கெடாது நிற்றலைக் குறித்தவாறு. கண்ணி - 36இன் முதலடியில் முரண்தொடை, அல்லது விரோத அணி வந்தது.

பண் :

பாடல் எண் : 37

அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி - தொடுத்தமைத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 38

நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ்
வாள்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாள் மாலை - நாள் மலர் மாலை; அஃதாவது அன்றலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை. நால்வர்- முனிவரர் நால்வர். `சனகர், சனந்தனர். சனாதனர், சனற்குமாரர்` என்பர். வாள் - ஒளி; ஞானம். மாலை - தன்மை. `ஞானத்தின் இயல்பு விளங்கும் வண்ணம் அருளிச் செய்து` என்க.

பண் :

பாடல் எண் : 39

விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விட்டு - ஒளிவீசி. தக்கிணம் - தெற்கு. குணம் எட்டு, சைவாகமங்களில் சொல்லப்பட்ட தன்வயத்தனாதல் முதலிய எண்குணங்கள். இலங்க - அம்முனிவரர் கட்கு விளங்கும்படி. இறை - இறைத்தன்மை; அது முதல் நூல் செய்தல். எனவே, இஃது அறம் முதலிய நாற்பொருள்களைக் கூறிய பழைய தமிழ் நான்மறைகளை அருளிச் செய்ததைக் குறித்ததாம். ஒட்டி - வலிமை பேசி.

பண் :

பாடல் எண் : 40

விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசையா உடல்திரியா நின்று - வசையினால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`விசயன்` என்பது, ``விசையன்`` எனப் போலியாயிற்று. விசயன் - அருச்சுனன். விசை - வேகம்; போராற்றல். `வேடன்` என்பது `வேடு` என்னும் சாதிப் பெயரால் கூறப்பட்டது. அசைய - அவன் தளர்ச்சியடையும்படி. உடல் திரியாநின்று - உடம்பைக் குப்புறக் கீழ்மேலாக விழச்செய்து. வசையினால் - வசை வகையில் அமையும்படி.

பண் :

பாடல் எண் : 41

பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பதைப்பு` என்பது, எதுகை நோக்கி, ``பதப்பு`` எனத் திரிந்து நின்றது, மற்று, வினைமாற்று, பதம் - திருவடி. திருவருளை, `திருவடி` என்றல் வழக்கு.

பண் :

பாடல் எண் : 42

வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந் திறைச்சி
ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துக்த் - தூயசீர்க்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகுடம் - தலை; ஆகுபெயர். `சிவ பெருமானை, `வேடர்` என்று இகழ்ந்த அருச்சுனனே பின்பு வேடர் குலத்தில் கண்ணப்ப நாயனாராக அவதரித்துக் காளத்தியில் சிவ பெருமானை வேடுவராயே இருந்து வழிபட்டு முத்தி பெற்றான்` எனச் சீகாளத்திப் புராணம் கூறும்.

பண் :

பாடல் எண் : 43

கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அதற்கேற்ப இங்குக் கண்ணப்ப நாயனார் செய்தி அருச்சுனன் செய்தியை அடுத்துக் கூறப்பட்டது. வட கயிலை யில் சிவபெருமானோடு போராடிய அருச்சுனன், மறுபிறப்பில் தென் கயிலாயத்தில் சிவபெருமானை வழிபட்டு ஆறே நாளில் முத்தி பெற்றான் போலும்!

பண் :

பாடல் எண் : 44

காளத்தி போற்றி கயிலைமலை போற்றி யென
நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் - தாளத்தோடு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீளத்தினால் - கால வரையறையின்றி. `ஆங்குச் சேர்வார்கள்` என்க.

பண் :

பாடல் எண் : 45

எத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆங்குச் சேர்வார்கள்` என்க. ஆங்கு - சிவலோகத்தில். எனவே, இங்கு `இமையோர்` எனப்பட்டவர் சிவகணங்கள் ஆவர். `இவ் வுலகில் சிவபெருமானை அவனது திருப்புகழ் பலவற்றையும் எடுத் தோதிப் போற்றி செய்தவர்கள் அவ்வுலகில் இமையோர் போற்றி செய்ய விளங்குவர்` என்றபடி.

போற்றித் திருக்கலிவெண்பா முற்றிற்று
சிற்பி