கல்லாடதேவ நாயனார் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம்


பண் :

பாடல் எண் : 1

பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்
போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன்
குருதி புலராச் சுரிகை எஃகம்
அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன்
தோல்நெடும் பையில் குறுமயிர் திணித்து

வாரில் வீக்கிய வரிகைக் கட்டியன்
உழுவைக் கூனுகிர்க் கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த மாலையுத் தரியன்
நீலப் பீலி நெற்றி சூழ்ந்த
கானக் குஞ்சிக் கவடி புல்லினன்
முடுகு நாறு குடிலை யாக்கையன்
வேங்கை வென்று வாகை சூடிய
சங்கரன் றன்இனத் தலைவன் ஒங்கிய
வில்லும் அம்பும் நல்லன ஏந்தி
ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கி
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்து
கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி
நாவில் வைத்த நாட்போ னகமும்
தன்தலைச் செருக்கிய தண்பளித் தாமும்
வாய்க்கல சத்து மஞ்சன நீரும்
கொண்டு கானப் பேருறை கண்ணுதல்
முடியிற் பூசை அடியால் நீக்கி
நீங்காக் குணத்துக்
கோசரிக் கன்றவன் நேசங் காட்ட
முக்கண் அப்பனுக் கொருகணில் உதிரம்

தக்கி ணத்திடை இழிதர அக்கணம்
அழுது விழுந்து தொழு தெழுந் தரற்றிப்
புன்மருந் தாற்றப் போகா தென்று
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப
ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம்
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க
அற்ற தென்று மற்றக் கண்ணையும்
பகழித் தலையால் அகழ ஆண்டகை
ஒருகை யாலும் இருகை பிடித்து
ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய்

நல்லை நல்லை எனப்பெறும்
திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக்
கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி -1: பரிவு - அன்பு, பரிவின் தன்மை - பரிவாகிய பண்பு, இன், வேண்டாவழிச் சாரியை.
இவ்அடியையே பற்றிச் சேக்கிழார் ``அன்பு பிழம்பாய்த் திரிவார்`` எனவும், ``அவனுடைய வடிவெல்லாம் நமபக்கல் அன்பு`` எனவும் அருளினமை காண்க.
அடி-2: போழ் வார் போர்த்த - தோலை வாரால் தைத்த. `போழ்` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளைக் குறித்தது. போழ்தல் - உரித்தல். தாழ் அகச் செருப்பு - தாழ்ந்த உள்ளிடத்தையுடைய செருப்பு.
அடி- 3: சுரிகை எஃகம் - குற்றுடைவாளாகிய படைக்கலம். எஃகம் - கூர்மை. அதுவும் ஆகுபெயராய், அதனையுடைய படைக் கலத்தைக் குறித்தது. `எஃகத்தோடு கட்டிய` என உருபு விரித்துரைக்க.
அடி - 4: `உடையாகிய தோலின்மேல் கச்சையை உடையன்` என்க. `உடைத் தோல்` என்பதில் தகர ஒற்றுத் தொகுத்தலாயிற்று.
அடி-6: `வீக்கிய வாரின் வரி` என மாற்றிக் கொள்க. வீக்கிய - கட்டி முடிந்த, வாரின் வரி - வாரால் திரிக்கப்பட்ட கயிறு. கட்டியன் - கட்டினவன்; கட்டியிருப்பவன்.
அடி-7: உழுவைக் கூர்ன் உகிர் - புலியினது வளைந்த நகம் கேழல் வெண் மருப்பு - பன்றியின் வெள்ளிய கொம்பு(பல்). இவைகளைத் தொடுத்த மாலை` என்க.
அடி-8: மாறுபடத் தொடுத்தல் - ஒன்றையிடையிட்டு மற்றொன்றைத் தொடுத்தல். `மாலையோடு உத்தரியத்தை யுடைய வன்` என்க. உத்தரியம் - மேலாடை. `அது புலித் தோல்` என்பது, மேல், ``உழுவைக் கூன் உகிர்` என்ற குறிப்பாற் பெறப்பட்டது.
அடி-10: கானக் குஞ்சி - காடுபோன்ற தலை மயிர். கவடி- பல கறை; அஃது அவை பல கோத்த மாலை. புல்லினன்- பொருந்தியவன்.
அடி-11: முடுகு - முடை நாற்றம்; ``முடுகு நாறிய வடுகர்``* என்றார் சுந்தரரும். குடிலம் - வளைவு. குடிலை - வளைந்துள்ளது; `கூன்` என்றபடி. வலை முதலியவற்றைச் சுமந்து, முதுகு கூனா யிற்றாம்.
அடி- 12,13: வேங்கை - புலி. `புலிகளை அஞ்சாது சென்று கொன்று வெல்லுதலால் வேடுவர் சிவன் குலத்தவர்` என நகை தோன்றக் கூறியவாறு. தலைவன், அக்குலத்தார்க்கு அரசன், ``தலைவன்`` என்றது, `தலைவனாயினான் ஒருவன்` என்றபடி. இஃதே எழுவாய். எனவே, மேற் போந்தன எல்லாம் இவ் ஒரு பொருள்மேல் வந்த வினைப் பெயர்களும், வினைக் குறிப்புப் பெயர்களுமாய், இவனது நிலையை வருணித்த வருணனைகளாயின. இனி, இவன் செய்த செயல்கள் கூறப்படும்.
அடி-14: இவன் தாங்கிய வில்லும், அம்பும் கொலைக் கருவிகளே யாயினும் இறை வழிபாட்டிற்குத் துணையாய் அமைந்தமை பற்றி, ``நல்லன்`` என்றார்.
அடி- 15: ஏற்றுக் கல் - உயரமான மலை. காற்றுப் போலும் உடல் விரைவு. `நாதனார் பசி மிகுதற்கு முன்பு விரைந்து சென்று ஊட்டுதல் வேண்டும்` என்னும் உள்ள விரைவினால் நிகழ்ந்தது. அடி-16: கரு மா - பன்றி. ``இழிவாய கரு விலங்கு``* எனச் சேக்கிழாரும் கூறினார்.
அடி-17: கோல் - அம்பு.
அடி-18: நாட் போனகம் - அன்றைய உணவு. `புதிது புதிதாக அமைக்கும் உணவு` என்பதாம்.
அடி-19: பள்ளித் தாமம் - பூ மாலை. அஃது இடைக் குறைந்து நின்றது. இங்குப் பள்ளித் தாமம் சருகுகள்.
அடி-20: `வாய் கலசம்`` என்றது `வாயே கலசமாயிற்று`` என்பதாம். உருவகம் அன்று.
அடி-21: `கொண்டு சென்று` என ஒரு சொல் வருவிக்க. வினை முதனிலைகள் திரிந்து பெயராதல் போல. இங்கு `பெரு` என்னும் பண்புப் பகுதி `பேர்` எனத் திரிந்து பெயராகி பெரிதாகிய இடத்தைக் குறித்தது. கானப் பேர் - காடாகிய பெரிய இடம். அது காளத்தி மலை.
அடி- 22: செருப்பினை, ``அடி`` என்றது தகுதி வழக்குப் பற்றி.
அடி-23: நீங்காக் குணம் - நீங்காமையாகிய பண்பு. எனவே, பெயரெச்சம் பண்புப் பொருட்டாய் வந்ததாம்.
அடி - 26: கோசரி, `சிவகோசரியார்` என்னும் அந்தணர். காட்ட- காட்டுதற்கு.
அடி-25: ``அப்பனுக்கு`` என்பதன் பின்னும் `அவன் செயலால்` என்பது வருவிக்க.
அடி- 26: தக்கிணர் - வலப்பக்கம். ``ஒரு கண்`` என்றது `வலக் கண்` என்றபடி.
அடி- 28: புன் மருந்து, நோயின் வலிமையை நோக்க மெலிவுடைத்தான அயல் மருந்து. - சாதி யொருமை. `புண் மருந்து` எனப் பாடம் ஓதுதல் ஆம். ஆற்றப் போகாது. கண்ணிற் புண்ணினை ஆற்ற வல்லது ஆகாது.
அடி- 29: `தன்னையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்த லாயிற்று. ``தான்`` என்றது தனது உடம்பினை. ``மலர்க்கண்`` என்பதில் மலர், மென்மை பற்றி வந்த உவமை. உறுப்புக்கள் பலவற்றினும் கண்ணினது மென்மையை விதந்த படி. ``பகழித் தலையால் அகழ`` எனப் பின்னர் வருதலின், ``அப்ப`` என்றது அம்பாற் பெயர்த்து அப்பியதாயிற்று.
அடி- 30: உதிரம் இழிதல் ஒழிந்தது` என்க.
அடி- 31: `பொழிந்த கலுழி, கண்ணீர் போலும் கலுழி` எனத் தனித் தனி இயைக்க. `கண்ணீர் போலும் கலுழி` என்றதனால் அது மேற் கூறிப் போந்த உதிரக் கலுழியாயிற்று. பொங்க - ஒரு காலைக்கு ஒரு கால் மிகுவதாக.
அடி- 32: அற்றது - கை கண்டு. அறுதியிட்டு உணர்ந்த மருந்து என்று - என்று தெளிந்த.
அடி- 33: ஆண் தகை - எல்லாம் வல்ல தன்மையை உடையவன்; இறைவன்.
அடி-34: ``ஒரு கையாலும்`` என்னும் முற்றும்மை, முயன்று பிடித்தமை குறித்தது. `இருகையும்` என்பதே பாடம் போலும்!
அடி-35: ஒல்லை - நீ அப்பும் முன்பே.
அடி-36: ``நல்லை! நல்லை!!`` எனப் புகழப் பெற்றார் என்றது, `புகழ்ந்து உயர் பதம் அருளினார்` என்னும் குறிப்பினது. `அப்பத மாவது, தம் அருகிலே இருத்திக் கொண்டது` எனப் பெரியபுராணம் கூறிற்று.
அடி-37: ``திருவேட்டுவர்`` என்பது உயர்வு பற்றி வந்த ஒருமைப் பன்மை மயக்கம். திருவேட்டுவர் - திருவருளுக்கு உரியவரான வேட்டுவர்.
அடி-38: கரு - பிறவி. வேட்டு - மேலும் மேலும் விரும்பி. உழல் காரியம் - உழல்வதாகிய செயல். எனவே, இது தொழில் மேல் தொக்க வினைத் தொகையாம். கருவி இன்றிக் காரியம் கூடாது ஆகலானும், உலகப் பயன்கள் பிறவியைக் கருவியாக உடைமையானும் `உலகப் பயனை விரும்புவோர் யாவரும் பிறவியை விரும்புவோரேயாவர்` என்னும் கருத்தினால், உலகப் பயனை விரும்புவோரைப் பிறவியை விரும்புவோராகவே கூறினார். `கண்ணப்ப நாயனாரை வணங்கு பவர்க்கு உலகப் பற்று நிகழாது, திருவருட் பற்றே நிகழும் என்றபடி.
இவ் இரு திருமறங்களும் பின்னர்ச் சேக்கிழார் கண்ணப்பரது வரலாற்றை விளங்கக் கூறுதற்குத் துணையாய் நின்றமையறிக.
கல்லாடதேவ நாயனார் அருளிய
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முற்றிற்று.
சிற்பி