கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை


பண் :

பாடல் எண் : 1

அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இங்கு, `இரட்டை மணி மாலை` என்று இருப்பது `இணைமணி மாலை` என்று இருத்தல் வேண்டும். ஏனெனில், இப்பொழுது இதில் கிடைத்துள்ள பாடல்கள் - 37.37 ஆவது பாடல் இப்பிரபந்தத்தின் இறுதிப்பாடல், முதற் பாடல் தொடங்கிய அந்தச் சொல்லால் முடிய வேண்டும். அவ்வாறு முடியவில்லை. வெண்பா வும், கட்டளைக் கலித்துறையும் மாறி மாறி அந்தாதியாக வந்து, 20 பாடல்களில் முடிவது இரட்டை மணி மாலை. அவை அவ்வாறு வந்து, 100 பாடல்களில் முடிவது இணைமணி மாலை. எனவே இதில் எஞ்சிய பாடல்கள் கிடைத்தில. பதிப்புக்களில், `இரட்டை மணிமாலை` என்று இருப்பதால், இங்கும் அவ்வாறே சொல்லப்பட்டது.
இப்பாட்டில், ``அந்தி`` என்னும் சொல் ஒரு பொருளிலே பின்னும் பின்னும் வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. அந்தி- மாலைக் காலம். மதி முகிழ் - முகிழ் மதி; இளந்திங்கள்; மூன்றாம் பிறை. அந்திச் செந்நிறம், உவமத் தொகை. அவிர் - ஒளிவிடுகின்ற. ``அந்தியில்`` என்பதில், ``இல்`` என்பது `பின்` என்னும் பொருட் டாகிய ஏழன் உருபு. இல்லின் பின் உள்ளதை. `இல்லில் உள்ளது` என்றல் போல. தூங்கு இருள் - திணிந்த இருள். யாமம், இடையாமம். வீங்கு இருள் - மிகுந்த இருள். இதில் ``இருள்`` என்றது கருமையை. `சுடு நீற்றான் மிடறு யாமமே போலும்; அவன் மதி முகிழான்; செந்நிறத் தான்; அவிர் சடையான்` என இயைத்து முடிக்க. இது சிவபெருமானது திருவுருவை வியந்தது.

பண் :

பாடல் எண் : 2

மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வெண்காட்டு எம் கரும்பு போல்வானை (அவன் தனது) மிடற்றில் நஞ்சம் வைக்கின்ற ஞான நல்லாள் தாமரைக் கைகள் காத்திலவே; (தடுத்திலவே; அஃது ஏன்?) என இயைத்து முடிக்க. மெல் ஓதி - மென்மையான கூந்தல். நல்லாள் - அழகுடையவள்; உமை. மடல் - இதழ்கள். மழுவாளால் அன்று தாதையைத் தாள் எறிந்தான் - சண்டேசுர நாயனார். `கொள்கைக் கரும்பு` என இயையும். கடல் - கடலைச் சார்ந்த நிலம். தாழ் வயல் - பள்ளமான வயல்கள். நெல் - நெற்பயிர். ஏறும் - வளர்க்கின்ற. வெண்காடு. `திருவெண்காடு` என்னும் தலம். `வெண்காட்டின்கண் உள்ள கரும்பு` என்க. கரும்பு உவமையாகு பெயர் . `தடாமைக்குக் காரணம், இதனால் இவற்கு விளைவதொரு தீங்கில்லை என அறிந்திருந்தமையே` என்பது குறிப்பு. இங்ஙனம் இறைவியது அறிவைப் புகழும் முகத்தால், இறைவனது ஆற்றலைப் புகழ்ந்தவாறு. பல தலங்களுள் ஒன்றில் வைத்துப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 3

கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் இறைக்குத் திருநெற்றி நாட்டம் சுட்ட நெருப்பு; திருமேனி திங்கள் புரையும்` என இயைத்து முடிக்க. நாட்டம் - கண். திருமேனி திங்களை ஒத்தல் திருவெண்ணீற்றால், `திருச்சடை மட்டும் திங்களால் விளங்குவதன்று; திருமேனி முழுதுமே திங்களைப் போல விளங்கும்` என்றற்குத் திருச்சடைமேல் திங்களையே உவமை கூறினார். திரள் பொன் - பொன்திரள், பொன் திருமேனி, உவமத் தொகை. இதுவும் திருவுருவின் சிறப்பையே புகழ்ந்தவாறு. ``இமையோர் இறை`` என்பது `கடவுள்` என்னும் பொருட்டாய், ``எங்கள்`` என்பதனோடு ஆறாவதன் தொகை படத்தொக்கது.

பண் :

பாடல் எண் : 4

இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லார்எருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர்சென்றிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(`எல்லார்க்கும் குறைகள் உண்டு; இறைவனுக்கு யாதும் குறையில்லை` எனக் கூறினால்.) `இறைக்கோ குறைவில்லை? உண்டு. (ஆயினும்) இறையே. சிறிதே (அஃது யாது எனின்,) எம்பிரான் (தான் சூடியுள்ள) ஒருபாதியாகிய பிறைக்கு மற்றொரு பாதி பெறவேண்டிய இளிவரலைக் கருத்திற்கொண்டு, தான் உடையின்றிக் கோவணம் மட்டும் உடுத்திருத்தலை நீங்கினால், அதற்குப்பின் அவனுக்கு ஏதும் குறையில்லை` என இவ்வாறு இயைத்துரைக்க. `இறைக்கு யாதும் குறையில்லை` என்பாரை மறுப்பார்போல இவற்றைச் சில குறைகளாகக் கூறியது, அவர் கூறியதையே மறை முகமாக வலியுறுத்தியதாம். இது பழிப்பதுபோலப் புகழ்ந்தது.நறை - தேன். கோமளம் - அழகு. `சடைச் சென்னி நக்கு ஆர் பிறை` என மாற்றிக் கொள்க. `நக்கார் என்பது குறுக்கல் பெற்றது. நக்கு- ஒளிவீசி. ``பிளவு`` என்பது `பாதி` என்றபடி. இளி - இளிவரல். ``கருத்திற் கொண்டு` என்பது, கருத்திற் கொண்டு ஆவன செய்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.

பண் :

பாடல் எண் : 5

இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இன் புறவு - இனிய காடு. முதுகுன்று - திரு முதுகுன்றத் தலம். `முதுகுன்றில் உள்ள` என்க. `கொல்` என்பது ஐகாரம் பெற்று. ``கொல்லை`` என வந்தது. `கொல் விடை` என்பது இன அடையாய். ஆற்றல் மாத்திரையே விளக்கிற்று. `போர் விடை` என்றபடி. ``விடையானை... சாராதார் தாம் பிறவிக் கடல் ஏறல் இல்லை`` என்க. இதனால், `பிறவி நீங்குமாறு சிவபத்தியன்றி வேறு இல்லை` என்பது கூறப்பட்டதாம். ``யதா சர்மவ தாகாசம் வேஷ்ட யிஷ்யந்தி மாநவா; ததாசிவ மவிஜ்ஞாய துக்கஸ்யாந்தோ பவிஷ்யதி!!`` என்னும் சுருதியையும் 1அதனை மொழி பெயர்த்து, பரசிவ னுணர்ச்சி யின்றிப்
பல்லுயிர்த் தொகையு மென்றும்
விரவிய துயர்க்கீ றெய்தி
வீடுபே றடைது மென்றல்,
உருவமில் விசும்பிற் றோலை
உரித்துடுப் பதற்கொப் பென்றே
பெருமறை பேசிற் றென்னில்.
பின்னும்ஓர் சான்று முண்டோ 2
எனக் கந்த புராணமும்,
மானுடன் விசும்பைத் தோல்போற்
சுருட்டுதல் வல்ல னாயின்
ஈனமில் சிவனைக் காணாது
இடும்பைதீர் வீடும் எய்தும்;
மானமார் சுருதி கூறும்
வழக்கிவை யாத லாலே
ஆனமர் இறையைக் காணும்
உபாயமே அறிதல் வேண்டும்
எனக் காஞ்சிப்புராணமும் 3 கூறுவனவற்றையும், மற்றும்
அவனவ ளதுவெனு மனைவதொ றொன்றும்இச்
சிவனலால் முத்தியில் சேர்த்து வார் இலை;
துவளரும் இம்முறை சுருதி கூறுமால்;
இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்
என அக்காஞ்சிப் புராணமும் 1 கூறுதலையும் காண்க.

பண் :

பாடல் எண் : 6

தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாம்அரைக் கோவணத் தோடிரந் துண்ணினுஞ் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுஉல காளத் தருவர்கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. தாமரைக்கோ - பிரமன். தலையிடம் - வாயிற் படியிடம். `தாம் அரையிலே கோவணத் தோடு இரந்து உண்ணினும்` என்க. ``கோவணத்தோடு`` என்றது, `கோவணத்தை மாத்திரமே உடுத்து` என்றபடி.
தாமரைக் கோமளம் - திருமகள். கண்டீர், முன்னிலையசை. தாமரைக் கோமளக் கை - தாவுகின்ற மானையேந்திய அழகிய கை. தவளப்பொடி - வெண் பொடி; திருநீறு. `தாம் கோவணத்தோடு இரந்து உண்ணினும், தம்மைச் சார்ந்தவர்க்கு உலகாளத் தருவர்` என்க.
தான்நாளும் பிச்சை புகும்போலும் தன்அடியார்
வான்ஆள, மண் ஆள வைத்து
என நக்கீர தேவரும் கூறினார். 2 இப்பாட்டு யமகம் என்னும் சொல்லணி பெற்றது.

பண் :

பாடல் எண் : 7

சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாய் கலுழி... வளர் சடையாய், தம் அங்கம் பங்கு போய் நின்றாலும் பாவையரைச் சங்கு கோள் எண்ணுவரே; (ஆயினும்) பிறர் நின்போல் பெரியர் ஆவாரோ? (ஆகார்.) - எனக் கூட்டியுரைக்க. அங்கம் - உடம்பு. பாவையர் - மகளிர். ``சங்கு கோள் எண்ணுவர்`` என்றது, `தம்மைக் காதலிக்கச் செய்ய விரும்புவர்` என்றபடி.
காதல் மீக்கூரப் பெற்ற மகளிர்க்கு அவர் தம் சங்க வளைகள் கழன்று வீழ்தல் இயல்பு. அதனை நிகழ்விக்கச் சிலர் எண்ணுதலையே, ``சங்கு கோள் எண்ணுவர்`` என்றார். ஏகாரம் தேற்றம். ``பிறர், அங்கம் பங்கு போய் நின்றாலும் சங்கு கோள் எண்ணுவரே ஆனாலும் நின்போல் பெரியவர் ஆவரோ`` என்றது, `நீ அங்கம் பங்குபோய் நின்றாலும் பாவையரைச் சங்கு கொண்டு பெரியவன் ஆகின்றாய்; அது மற்றவர்களுக்குக் கூடுமோ` என்றபடி. அங்கம் பங்குபோதல் சிவனுக்கு, உமாதேவிக்கு ஒருபாகத்தைக் கொடுத்ததனாலும், பிறர்க்கு, உடம்பு நரை திரை மூப்புப் பிணிகளால் மெலிதலாலும் பொருந்துகின்றது. பாவையரைச் சங்கு கொள்ளுதல் சிவனுக்குத் தாருகாவனத்து இருடியர் பத்தினிகளை மையல் செய்வித்ததனாலும், பிறர்க்கு, மகளிரை மையல் செய்விக்க எண்ணுதலாலும் பொருந்து கின்றது.
எனவே, மேற்போக்கில் ஏனையோரும் சிவன் செய்த வற்றையே செய்வார் போலக் காணப்பட்டாலும், சிவன் தனக்குப் பற்று யாதுமின்றி அருள் காரணமாக எல்லாவற்றையும், பிறர் பொருட் டாகவே செய்து பெரியன் ஆதல்போல ஆதல் பிறர்க்குக் கூடாது` என விளக்கியவாறு.
கலுழிக் கங்கை - (சடைக் காட்டின் இடையே பாய்தலால்) கான்யாற்றைப் போலும் கங்கை. `கங்கையிலே அரா (பாம்பு) போதும் (புகும்) சடை` என்க.

பண் :

பாடல் எண் : 8

பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றியேதிரி யும்புரமூன்
றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திரியும் புரம் மூன்று`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க, திரியும் புரம் - வானத்தில் உலாவும் கோட்டைகள். இங்ஙனம் கூறியதனால் `திரிபுரம்` என்பது வினைத்தொகையாகவும் கொள்ளுதற்கு உரித்தாதல் அறியப்படும். ``திரியும் புரம்`` என்றே திருமுறைகளில் பல இடங்களில் வருதல் காணலாம்.
அறப் பாய் எரி- முற்றும் அழியும்படி பற்றும் தீ. உற - பொருந்தும்படி. வான் வரை - சிறந்த மலை; மகாமேரு. இனி, `உறுவான்` என வான் ஈற்று வினையெச்சமாகப் பாடம் ஓதலும் ஆம். `வில்லாக` என ஆக்கம் வருவிக்க. ஆயிர வாய், மற, பாவரி அர - ஆயிரம் வாய்களையும், கொடுமையையும், பரவியவரிகளையும் உடைய பாம்பு. செய்யுளாதலின், `அர` என்பதில் குறிற்கீழ் ஆகாரம் உகரம் செலாது குறுகிமட்டும் நின்றது. இடை - வில்லின் கண். வானவன் - தேவன். `பிறப்பாகிய ஆழ் குழி` எனவும், `அருளாகிய சிறப்பு` எனவும் உரைக்க. சிறப்புத் தருவதனைச் ``சிறப்பு`` எனவும் உரைக்க. சிறப்புத் தருவதனைச் ``சிறப்பு`` என உபசரித்தார். சிறப் பாவது வீடாதலைச் ``சிறப்பீனும் செல்வமும் ஈனும்``, ``சிறப்பென் னும் செம்பொருள்`` என்னும் திருக்குறள்களால் * அறிக. ``அருளின்`` என்பதில் இன், தவிர்வழி வந்த சாரியை. `சிறப்பைத் தருவதாகிய அருள் நிறைந்த திருக்கை` என்றபடி. ஆழ் குழியில் வீழ்ந்தாரை எடுப் போர் கைதர வேண்டியிருத்தலை நினைக. கிற்றியே - வல்லையோ? `என்னைப் பற்றியுள்ள மலங்கள் மிக வலியன என்பார், `வல்லையோ` என்றார்.

பண் :

பாடல் எண் : 9

வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மணி முகடு - அழகிய மேற் கூரை. மால் வரை - பெரிய அட்டதிசை மலைகள். பார் - பூவுலகம். அரங்கு - ஆடும் மண்டபம். அம் மா முழவு - அழகிய, பெரிய மத்தளம். இது வாசிப்பாரால் வாசிக்கப்படும். எய்தாது - போதாது. இங்குக் கூறிய ஆட்டம். பிரம தேவனுடைய நித்திய கற்பங்களின் முடிவில் செய்யப்படும் நடனம். ``கானகம்`` என்றது உயிர்கள் ஒடுங்கிய நிலையில் உள்ள உலகத்தை. `அப்பொழுதும் சிவபெருமானது அருளிலே உயிர்கள் பிழைக்கின்றன` என்பதாம். `முகடா, தூணா, அரங்காக ஆடும் பொழுது ஆரூர் எம்மானுக்கு இடம் எய்தாது` என்க. `இங்ஙனம் ஆகலின், அவன் ஊர்தோறும் உள்ள சுடுகாட்டில் ஆடுவதாக நினைப் பாரது நிலைமை எத்தன்மையது` என்பது கருத்து. சிவபெருமானது பெரு நிலையை எடுத்தோதியவாறு.

பண் :

பாடல் எண் : 10

இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங் கண்ணுதலே.

பொழிப்புரை :

`தனது இடப்பாகத்தில் உடையாளாகிய, வரை ஈன் பால்மொழி உள்ளாள்` என்பர்; அங்கும், `வலப்பாகத்தில் மானுக்கு நேராக மழு உள்ளது` என்பர்; அங்கும், `வயிற்றில், நஞ்சுள்ள பாத்திர மாகிய பாம்பாகிய கச்சு உள்ளது` என்பர்; அங்கும், விருப்பம் உண்டாதலால் திருநீற்றை நிறையப் பூசியிருந்தும் எங்கள் சிவ பெருமான், மிக்க மதம் பொருந்திய பரிய யானையின் தோலை அந்த எல்லா இடங்களும் மறையும்படி போர்த்துள்ளான்.

குறிப்புரை :

`இஃது எதற்கு` என்பது குறிப்பெச்சம். மலைமகள், மழு, பாம்பு, திருநீறு இவற்றின்மேல் உள்ள ஆசையால் இவற்றைத் தன் திருமேனியில் கொண்டுள்ள சிவபெருமான் அந்தக் கோலம் சிறிதும் தோன்றாதபடி யானைத் தோலால் மூடியிருப்பது ஏன்` என்றபடி. `திருநீறே கவசமாய் எங்கும் பொதிந்திருக்க, மற்றும் ஓர் கவசம் மிகை` என்பதும் கருத்து. ``இடப்பாகம்`` முதலியவற்றைச் சொல் பல்காமைப் பொருட்டு இருமுறை கூறாது ஒருமுறையே கூறினார் ஆகலின், அதற்கு இவ்வாறுரைத்தலே கருத்தாதல் அறிக. ``என்பர்`` என்பது பிற இடங்களிலும் சென்று இயைவது. உடையாள் - அனைத்தையும் உடையவள். வரை ஈன் - மலை பெற்ற. இள வஞ்சி அன்ன - இளைய வஞ்சிக் கொடி போன்ற. மடம் - மகளிர் குணம் நான்கனுள் ஒன்று. பால் மொழி, பால் போலும் சொற்களை உடையவள். ``மழுவும்`` என்னும் உம்மையை ``வலப் பாகத்து`` என்பதனோடு கூட்டுக. ``கச்சு`` என்றதனால், `வயிறு` என்பது வருவிக்கப்பட்டது. கடம் - மதம். `யானையை உரித்துப் போர்த்தது பிறர்மேல் வைத்த கருணையால்` என்பதே இங்குப் புலப்படுத்தக் கருதியது.

பண் :

பாடல் எண் : 11

கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலம்இல்லை தண்அலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தண் அலங்கல்.... புனிதா`` - என்பதை முதலிற் கூட்டி, `மதித்து, இன்றே வாங்கு` என மாற்றி வைத்து உரைக்க. கண்ணி - முடியில் அணியும் மாலை. `கண்ணியாகிய பிறை` என்க. மாசுணம் - பாம்பு. `பிறையும், பாம்பும் பகைப் பொருள்கள். ஆகையால், அந்த இரண்டையும் உனது சடையில் சேர்ந்து இருக்க வைத்தால் நன்மை யில்லையாம். (தீமை விளையும்.) ஆகையால், இதனைப் பொருட்படுத்தி உணர்ந்து, அந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை இப்பொழுதே நீக்கிவிடு` என்க. இஃது, இறைவனது அருளாற்றலின் சிறப்பை உணராதவர் போல அச்சம் உற்றுக் கூறியது. இங்ஙனம் கூறும் முகத்தால், பகைப் பொருள்களும் சிவபெருமானை அடைந்தால் பகை நீங்கி நட்புற்று வாழ்தலை உணர்த்தியவாறு.
`ஒற்றி ஊரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி ஊரும்அப் பாம்பும் அதனையே;
ஒற்றி ஊர ஒருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஒயுமே` 1
என்பதும்,
`பாம்பும், மதியும், புனலும் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி`` 2
என்பதும் அப்பர் திருமொழிகள்.

பண் :

பாடல் எண் : 12

மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதி - உயிர்களின் அறிவு. கோழிருள் கண்டவ - திணிந்த இருள்போலும் மிடற்றை உடையவனே. `கண்டன்` என்னும் சினையடியாகப் பிறந்த பெயர் இடையே அகரத்தை வேண்டாவழி சாரியையாகப் பெற்று, ``கண்டவன்`` என நின்றது. இனி, `இருள் கண்டவ` எனப் பாடம் ஓதி, `ஊழிக் காலத்து இருளைக் கண்டவனே` என உரைப்பினும் அமையும். விண்டவர் - பகையால் நீங்கினவர். பதி - ஊர், அதிகை மங்கை - திருவதிகைத் தலம். ``அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்`` 3 என அப்பரும் அருளிச் செய்தார். கதி மயங்க - வழி பலவாய்க்கூட. `பல ஊர்களுக்குச் சென்று` என்றபடி. `கண்டல், வானவ, வீரட்ட, ஆர் இட்டதேனும் உண்டு கதி மயங்கச் செய்வதையே செல்வமாக நீ கருதலாமோ?` (இஃது உனக்குத் தகுதியா?) என முடிக்க. இதுவும் பழித்தது போலப் புகழ்ந்தது. சிவ பெருமான் வைரவரைத் தோற்றுவித்துப் பிரம கபாலத்தில் இரத்த பிச்சை ஏற்கச் செய்தது தேவர்களது அகங்காரங்களை அடக்குதற் பொருட்டும், பிட்சாடனராய்ச் சென்று பிச்சை ஏற்றது தாருகாவன இருடியரது அறியாமையைப் போக்குதற் பொருட்டும் ஆதலைச் சொல்லாமற் சொல்லி வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 13

கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கருதுதல் - நினைத்தல். கருத்து - மனம் ``கருதும்`` என்றதும், `கருதுதற்கு` என்றவாறேயாம். `கூப்பக் கையுடையேன்` என்க. எனவே, `யான் அவனைக் கருதுதற்கும், தொழுதற்கும் தடை என்னை` என்றபடி. அரிது அன்றே - (தடையில்லையாகவே) அவை யியல்வது அரிதாதலே இல்லை. ஏகாரத் தேற்றம். `அவை யியல்வது அரிதன்று ஆதலால், பிறையான் என் அகம் (மனம்) புகுந்து புறம் போகப் பெறுமோ` என்க. புகுந்து - பின் புகுந்தபின். ``இனிப் புறம் போகலொட்டேனே`` என மாணிக்கவாசகரும் அருளிச் செய்தார்.*

பண் :

பாடல் எண் : 14

புறமறையப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்
நிறமறையத்திரு நீறு துதைந்தது நீள் கடல்நஞ்
சுறமறை யக்கொண்ட கண்டமும் சால உறைப்புடைத்தால்
அறமறையச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. அறம் மறையைச் சொல்லி - அறத்தை மறைபொருளாய் நிற்கும்படி (மறைகளின் உள்ளேயிருக்கும்படி) சொல்லி வைத்து, ஐயம் வேண்டும் (அது நடைமுறையில் நிகழவேண்டித்)தானே பிச்சைவேண்டி நிற்கின்ற. புறம் - முதுகு. விட்டு - தாழ விடப்பட்டு. இஃது எண்ணின் கண் வந்த வினையெச்சம். எரி பொன் திகழும் - நெருப்பில் காய்கின்ற பொன்போலும் நிறம். துதைந்தது - நிறையப் பூசப்பட்டது. உற மறைய - முற்றிலும் மறையும்படி. ``கண்டமும்`` என்னும் உம்மை சிறப்பு. உறைப்பு - உரம்; வலிமை. ஆல், அசை. இதுவும் திரு மேனியை வருணித்துப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 15

அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ பொடியாடும்
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்ஊரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பொடி ஆடும்` என்பது முதலாகத் தொடங்கி, ``உரை`` என்பதை, ``கொண்டோ`` என்பதன் பின்னர் வைத்து உரைக்க. தாங்குதல் - புரத்தல். குடி - மனைவியும், மக்களும். ஆடையே இல்லாதவனை ``ஆடை உடுத்தோ`` என்றது, அவனது நிலையைச் சுட்டிக்காட்டி நகைத்தவாறு. ``அடியோமைத் தாங்கியோ`` என்றதும், ``குடிஓம்பவோ`` என்றதுங்கூட அவ்வாறு தாங்காமையை யும், ஓம்பாமையையும் மறுதலை முகத்தாற் கூறி நகையாடினவேயாம். `உன் அடியார்கள் ஒன்றும் அற்றவர்கள்தாமே? உன்னுடைய மனைவியும், மக்களும் தங்கள் தங்கள் திறமையால்தானே மக்களிடம் வழிபாடு பெறுகின்றார்கள்?` என்பது கருத்து. `அதனால், நீ உன் ஊரை ஒற்றியாக்கியது வீணேயன்றோ` என்றபடி. பொடு ஆடும் - திருநீற்றில் மூழ்குகின்ற. `பொடி ஆடும் நெற்றியையும், ஊர்கின்ற வாளரவத்தையுடைய சடையையும், உடையவனே` என்க. கடல் அலைகள் வந்து ஒற்றுதல் பற்றி, `ஒற்றியூர்` எனப் பெற்ற பெயரைச் சிலேடையால் ஆசிரியர் பலரும் இங்ஙனம் நகைதோன்றக் கூறுவர். ``ஒற்றியூரேல், உம்மதன்று`` சுந்தரம் - தி.7 ப.5 பா.9 என்றது முதலியன காண்க. ஒற்றியூரை ஊராகக் கொண்டதனைக் குறித்து நயம்படப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 16

உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்அன் றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நன் முத்து இடறி`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. உரை வந்து உறும் பதம் - பேச்சுக்கள் தடையின்றி வந்து பொருந்த (நன்றாய்ப் பேச முடிகின்ற) அந்தப் பருவத்தில் தானே (துதியுங்கள்). கலம் - மரக் கலம், வந்து உற - வந்து சேரும்படி. கை - கைபோன்றவனும். தாள் - முயற்சி; செயற்பாடு, முயற்சியை, முன் ``கை`` என்றதற்கு ஏற்ப, ``தாள்`` (கால்) என்றது சொல் நயம். வரை - மலை. ``திரை வந்துறும்`` என்பது கரைக்கு அடையாய், வேறுமுடி பாயிற்று. மலை போலும் அலைகள்; உவமையாகுபெயர். மணி - மாணிக்கம். இது காதற் சொல், `மணியினை உரைமின்கள்` என்க.

பண் :

பாடல் எண் : 17

மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோடயனும் மாலும் துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மணி அமரும் மாடம் - மணிகளை வைத்து இழைத் தமையால் அவை பொருந்தியுள்ள மாடங்கள். வாய்மூர் - திருவாய் மூர்த்தலம். அணி - வரிசை; கூட்டம். செஞ்சூட்ட சேவல் - சிவந்த கொண்டையையுடைய சேவற் கோழி. அதனைக் கொடியாக உடைய வன் முருகன். `இவர்கள் எல்லாரும் ஒருங்கு சேர்ந்து நின்ற நஞ்சு ஊட்ட எண்ணம் இட்டவாறு நன்று` எனப் பழித்தவாறு (அமரரும், அயனும், மாலும் தாங்கள் பிழைக்க நினைத்து எண்ணம் இட்டார்கள்; முருகன் ஏன் அதற்கு இசைய வேண்டும்` என்பது கருத்து. `இவர்கள் யாவராலும் சிவபெருமானது நித்திய (அழிவிலா)த் தன்மை நன்கறியப்பட்டது) என்பது இதன் உண்மைப் பொருள். மேலேயும்,
மிடற்று ஆழ்கடல் நஞ்சம் வைக்கின்ற ஞான்று
மெல்லோதி நல்லாள்
மடற் றாமரைக் கைகள் காத்திலவே.*
என இரங்கும் முகத்தால் இதனை விளக்கினார்.

பண் :

பாடல் எண் : 18

நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண் ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``குன்றைக் குறுவது... அறிவீர்`` என்னும் தொடரை முதற்கண் கூட்டி உரைக்க. ஐக்கு நன்று உறும் இருமல் - கோழையை வெளிப்படுத்தற்கு நன்கு பொருந்துவதாகிய இருமல். இருமலும், பெருமூச்சும் நண்ணுதல் முதுமைக் காலத்தில். எனவே, ``அவை நண் ணும் முன்னம்`` என்றது, `இளமையிற்றானே` என்றதாம். `குறியது` என்பது. எதுகை நயம் நோக்கி, ``குறுவது` என வந்தது. `குறுவதாக` என ஆக்கம் வருவிக்க. குன்றைக் குறுவதாகக் கொண்டு அழியாது அறிவீர் - மலையை (மலை போலப் பெரிதாகிய பயனை)ச் சிறியதாக நினைத்து இழந்து கெடாதவாறு. ஆவனவற்றை அறியும் அறிவுடைய வர்களே, கயிலாயத்தை அடைதல் அரியதொன்றாயினும் (`அரிது` என்று விட்டொழியாது) கயிலை நாயகனை உள்ளத்தில் நினையுங் கள்; அதன் பயனாகப் பின் கயிலாயத்தில் செறியுங்கள். (சேருங்கள்)

பண் :

பாடல் எண் : 19

கொண்ட பலிநுமக்கும் கொய்தார்க் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பெருமானே` என்பதை வருவித்து, ``மயிரிழந்த`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. பலி - பிச்சை. புண்டரிகம் - புலி. அது சாதி பற்றிச் சிங்கத்தைக் குறித்தது. சிங்க வாகனத்தை யுடைய மாது காளி. இனி, `அன்பர் இதயத் தாமரை` எனினும் ஆம். குமரர் - பிள்ளைகள் விநாயகனும், முருகனும் `உயிர் இழந்தார் மண்டிச் சேர் புறங்காடு` என்க. மண்டி - நெருங்கி. வெண்தலைவாய்- வெண்தலையின்கண் (கொண்ட பலி) `பெருமானே, ஒரு தலையோட்டளவில் நீர் கொண்டு செல்கின்ற பிச்சை உமக்கும், உம் பிள்ளைகள் இருவருக்கும், அம்மைக்கும் ஆக நால்வருக்கும் போதுமோ` என்க. `எடுப்பதுதான் பிச்சையாயிற்றே; அதையாவது எல்லாருக்கும் ஆகும்படி பெரிய பாத்திரத்தைக் கொண்டு எடுக்கலா காதோ` என்றபடி. இதனால், `உங்களில் யாருக்கும் இந்தப் பிச்சை தேவையில்லாமை தெரிகின்றது` என்பதைக் குறிப்பாய் உணர்த்திப் பழிப்பது போலப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 20

வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செல்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்ட இன்மலரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆறு - காவிரியாறு.`ஆறு வந்து அலைக்கும் வலஞ்சுழி` என்க. வானவ - கடவுளே `போதினின்றும் ஒழுகும் அழகிய. தேன்`` என உரைக்க. ``திருவடிகளை, `தாமரை` எனக் கூறுதல் தேனோடு பொலிதலால் உண்மையாகின்றது`` - என்றபடி. எந்தாய் அடி- எந்தையாகிய உனது திருவடி. செல்லுமே - ஏற்குமோ. பிடித்தல்- கண்டறிந்து பறித்தல். `பறிந்திட்ட` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். `தேவர்களது கற்பக மலரைப் பொருந்தி விளங்கும் உனது திருவடிகட்கு இங்கு மக்கள் தேடிக் கண்டு பறித்து இடுகின்ற சில மலர்கள் ஏற்புடைய வாகுமோ` என்றபடி. `இன்மலர் செல்லுமே` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 21

மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கூப்பி`` என்பதனோடு இயைத்து முரண் நயம் தோன்றுதற்பொருட்டு ``மலர்ந்த`` என்றாராகலின் அதற்கு. `மலரும் நிலையில் உள்ள` என்பதே பொருளாதல் அறிக. மா - குதிரை. கூப்பி- குவியப் பண்ணி. `போது` என்பது, ``புலர்ந்த`` என்பதனோடும் இயையும் ஆதலின், ``புலர்ந்ததும்`` என்றதற்கும், `புலர்ந்தபோதும்` என்பதே பொருள். புலர்ந்தபோது காலை நேரம். புலராத போது - மாலை நேரம். கலந்து - அன்பால் உள்ளம் பொருந்தி. `தே, தூவி, கூப்பி, கலந்திருந்த கண் நீர் அரும்பக் கசிவார்க் காண்பு எளியன்` என இயைத்து முடிக்க. `அல்லாதார்க்கு எளியனல்லன்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 22

தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தேவன்`` என்றது, தலைமை பற்றி, `தேவ தேவன்; மகாதேவன்` என்னும் பொருட்டாய் நின்றது. கோதை - மாலை `கோதையின் கண்` என ஏழாவது விரித்து, அதனை, ``பூவன்`` குறிப்பு வினைப்பெயரோடு முடிக்க. இதழி - கொன்றை. அடையாளப் பூவா தலின் ``திருஇதழி`` என்றார். விடை - இடபம். அதற்குக் காய் சினமும், போரும் இன அடையாய் வந்தன. ``போற்ற`` என்றது, `யாவரும் போற்ற` என்றபடி. மூவன் - மூப்பவன். `மூத்தவன்` என இறந்த காலத் தாற் கூறற்பாலதனை எதிர்காலத்தாற் கூறினார். எதிர் காலம் உணர்த்து வதில் வகரமெய் பகர மெய்யோடு ஒக்கும் ஆதலின், ஈண்டு எதுகை நோக்கி வகரமெய் வந்தது. மூத்தவன் - பெரியோன். `முத்தானே, மூவாத முதலானே`
`விண்ணோர்க் கெல்லாம் மூப்பாய்` *
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். ``ஈருருவாய முக்கண்ணன்`` என்றது எண்ணலங்காரம். சிவபெருமானை, `தேவன்` முதலிய பல பெயர்களால் கூறி, ``நான் மறவேன்`` என்றதனால், `இன்னோரன்ன அவனது பெயர்களை மறவேன்` என்பதே பொருளாம். பெயர்கள் பலவாதல் பற்றி அவற்றை உணரும் ஞானங் களும் பலவாகக் கூறப்பட்டன. பிரித்துக் கூட்ட, ``இவையே`` என வரும் பிரிநிலை ஏகாரத்தால், ``பிற ஞானங்களை நான் வல்லே னல்லேன்`` என்பதைப் பிரிநிலை எச்சத்தால் உணர்த்தி, `பிற ஞானங்கள் வேண்டுவதில்லை` எனக் குறிப்பாற் புலப்படுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 23

நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிநிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூற்றல்
எம்பெருமான் என்னா இயல்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வானவர்கள் தம் பெருமான்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. நல்குரவு - வறுமை. அஃது எங்குச் சென்றாலும் நீங்காமை நோக்கி, அது தனி நிற்பதொன்றாய் உடன் வந்து நிற்பது போலப் பான்மை வழக்காற் கூறினார். கடை - வாயில். கால் நிமிர்த்தல் - வலி தாங்காமையால் வளைத்தும், நிமிர்த்தியும் நிற்றல். ``எம்பெருமான்`` என்பதன் பின், `துணை` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. என்னா, என்று நினையாமை. அவ் எம்பெருமான் என்பதில் சுட்டு, `அத்தன்மையன்` எனப் பொருள் தந்தது. `எம் பெருமான் என்னாத அந்த இயல்பே இப்படி இரந்து நிற்கும் நிலைமையைத் தந்தது` என்பதனை, `இயல்பு நாங்கள் இரத்தலைக் கண்டு, மகிழ்ந்துகொண்டிருக்கின்றது` என்றார். `சிவபெருமானை ஏத்தாதவரே வறுமையாளராய் இரப்பர்` என்றல் கருத்து.
வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி, நந்
தாவனம்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும், -
சிதவல்சுற்றிக்
கால்நகம் தேயத் திரிந் திரப்போரும்
கனக வண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும், அல்லாப்
படிறருமே. *
எனச் சேரமான் பெருமாள் நாயனாரும் அருளிச் செய்தார்.
``இயல்பு, கண்டிருக்கும்` என்றதும் பான்மை வழக்கு.

பண் :

பாடல் எண் : 24

இயல் இசை நாடக மாய் எழு வேலைக ளாய்வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வண் தில்லைமல்கு
கயலியல் கண்ணியங் காரன்பர் சித்தத் தடங்குவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பின்னர், `எழு கடலாய்` எனக் கூற இருப்பவர் அதற்கியைய முன்னர் `முத்தமிழாய்` எனக் கூறுகின்றவர் அம்முத் தமிழ்களையும் விதந்தோதினார். வேலை - கடல். வழுவா- எஞ்சாத (விண்ணும், மண்ணும்). புயல் இயல் விண் - மேகங்கள் உலவுகின்ற ஆகாயம். பொழுது - கால தத்துவம். ``கடல் `` என்றது உபலக்கண மாய் ஏனைக் கருப்பொருள் பலவற்றையும் குறித்தது. `தமிழ்ச் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் குறித்தது. எனவே, இறைவர் முதல், கரு, உரி ஆகிய அனைத்துப் பொருளுமாய் நிற்றல் கூறப்பட்டதாம். ஆகவே, `இங்ஙனம் விசுவத்திற்கு அந்தரியாமியாய் நிற்கும் பெரியோனாகிய பெருமான் அன்பர் சித்தத்தில் அடங்குவன்` என வியந்தருளிச் செய்தவாறு. இப்பாட்டில் திருமறைக்காடு, திருவெண்காடு, திருத்தில்லை என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன. மயில் இயல் - மயில்கள் நடமாடுகின்ற. மா - பெருமை. `கயல் இயல் மல்கு கண்ணி` என மாற்றி, `மீனின் இயல்பு நிறைந்த கண்ணையுடைய உமாதேவி` என உரைக்க. `பங்கர்` என்பதில் `அர்` விகுதி நீக்கி, ஆர் விகுதி புணர்த்து. `பங்கார்` என்றார். `பங்கினார்` என்பதில், `இன்` சாரியை தொகுக்கப்பட்டது எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 25

அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை நுடங்கிடையீர்
ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே
ஆரூரன் செல்லுமா றங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நுடங்கிடையீர்; ஆரூரன், - உண் பலிக்கு - என்று அங்ஙனே ஊர் ஊரனாய்ச் சென்றக்கால், (அவன்) செல்லும் ஆறாகிய அங்கு காதலையுடைய என் வளைகளை (அவன்) கொண்ட வார்த்தையினுள் அடங்காதாராக யார் ஒரு மகளிர் உளராவர்? (ஒருவரும் உளராகார்) என இயைத்து முடிக்க. `அவன் பலிக்குச் செல்லும் எவ்விடத்திலும் உள்ள மகளிர் யாவரும் அவன் மீது, கொள்ளும் காதலால் தங்கள் வளைகளை இழக்கவே செய்வர்` என்றவாறு. `நிலைமை இதுவாகலின், யான் என் வளைகளை இழந் தமை பற்றித் தாய் முனிதல் தகுமா` எனத் தனது வேறுபாடு கண்டு கழறிய தோழியரைக் கழற்றெதிர் மறுத்தாள். இன்னோரன்ன துறைகள் கைக்கிளை பெருந்திணைகளில் வருதல் இயல்பு.
அடங்குதல் - உட்படுதல். கொன்றைதுன்று மடம் காதல் என்வளை - கொன்றை மாலையைப் பெற வேண்டிய மடமையையும், காதலையும் உடைய எனது வளைகள். ``வார்த்தை`` என்பதில், `உள்` என்னும் பொருளில் வந்த கண் உருபு விரித்து, வார்த்தைக்கண் அடங்காதார் ஆர் ஒருவர்` என மேலே கூட்டி முடிக்க. நுடங்கு துவள்கின்ற. `ஊர் ஊரனாய்` என ஆக்கம் விரிக்க. ஆறு - வழி.

பண் :

பாடல் எண் : 26

அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கை மறித்தவர் - வேள்வித் தீயில் ஆகுதி பண்ணுதற்குக் கைகளை மூடி விரிப்பவர்கள் அந்தணர்கள். அவி - அவிப் பாகம். தம் கை மறித்து அறியாதவர் - விரித்து இணைத்துக் குவித்த கைகளை மீட்க அறியாதவர். `அறியாதவராய்` என ஆக்கம் விரிக்க. `எப்பொழுதும் கும்பிட்டுக்கொண்டேயிருப்பவராய்` என்ற படி. கங்கை மறித்து - கங்கை நீரைத் தடுத்து வைத்து. அணவாப் பண மாசுணம் - சுருக்கிச் சுருக்கி உயர எடாமல், (எப்பொழுதும் உயர எடுத்து ஆடிக்கொண்டே) இருக்கின்ற படத்தையுடைய பாம்பு. செங்கை மறித்து - சிவந்த கையை (அஞ்சலீர் என) அமைப்பதாகக் காட்டி `தாழ் சடையில் கங்கையை மறித்து வைத்து, மாசுணக் கங்கணத்தின் கையை மறித்துச் சிவபெருமான் இரவில் ஆடும் திருநட்டம் வானவர்கள் தம் கை மறித்தறியாராய்த் தொழுதே நிற்பர்` என இயைத்து முடிக்க. இரவாவது, ஊழி யிறுதிக் காலம். நட்டம், புனர் உற்பவத்திற்கு ஆவனவற்றைப் புரியும் சூக்கும நடனம். ``வானவர்கள்`` என்றத னால், இங்கு `இரவு` என்றது நில உலகத்து ஊழியை.

பண் :

பாடல் எண் : 27

நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ அட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற பேயின் கொடிறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அட்டு`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ``பொழுது`` என்பதில் அத்து வேண்டாவழிச் சாரியை. இலயம் கொடுத்தல் - தாள அறுதிக்கு ஏற்ப முழக்குதல். ஒழி, துணிவுப் பொருண்மை விகுதி. கொல், அசை. ஓகாரம், ஐயப் பொருட்டு. அட்டு - கொன்று. கடுங்குன்ற மால் யானை - பெரிய மலைபோலும் மத யானை. கார் உரிவை - கறுத்த தோல். கொடுங் குன்றம், பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று. ``கொடுங்குன்ற`` என்பது விளி. `உன்னுடைய பேயின் கொடிறு` என்க. கொடிறு - தாடை. முழவு முதலியவற்றைத் தாள அறுதி தோன்ற முழக்கும் பொழுது வாய்ச் செய்கையால் தாடை குழிதல் உண்டு.
பேய்கட்கு இயற்கையாய் உள்ள தாடைக் குழியை இங்ஙனம் செயற்கையால் நேர்ந்தன போலக்கூறி நகைத்தவாறு. `உனது கூத்திற்குக் கொட்டி முழக்கப் பேய்கள் தவிரப் பிறர் இல்லையோ` என நகை தோன்றக் கூறியதாம். `ஒடுக்கக் காலத்தில் இறைவனைச் சார்ந்து நிற்கும் உயிர்களே அவ்விடத்து உள்ளன` என்பது இதன் உண்மைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 28

கொடிறு முரித்தனன் கூறாளன் நல்லன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம்
மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூறாளன் - ஒரு பாதியில் இருப்பவனும், நல்லன் - நற்குணம் (சாத்துவிக குணம்) உடையவனும் ஆகிய திருமால் (அவ்வாறு இருந்துகொண்டே) கொடிறு முரித்தனன் - எங்கள் பெருமானுடைய கழுத்தை முரித்து விட்டான். (`இது, கூடவேயிருந்து கொண்டு குழிபறித்தான்` என்னும் பழமொழிக்கு ஒப்பாயிற்று - என்பதாம்.) கொடிறு, ஆகுபெயர். குருகு - நீர்ப் பறவை. பழனம், `திருப்பழனம்` என்னும் சோழ நாட்டுத் தலம். `பழனத் தாரசைக் கொடிறு முரித்தனன்` என்பதை, `யானையைக் கோட்டைக் குறைத் தான்` என்பது போலக் கொள்க.
படிறு மொழிந்து - கபட்டுரை கூறியது. அது, `தேவ யாகத்தில் முதற் பங்கு உம்முடையதே யன்றோ? அதனால், தேவ காரியமாகப் பாற்கடலைக் கடைந்ததில் முதலில் தோன்றியது உமக்குத் தானே ஆக வேண்டும்?`` எனக் கூறியது. விதி, இங்கு நல் ஊழ். `மிடறு தடுத்திராது விடில் நாங்கள் எங்கள் தலைவனை இழந்திருப்போமன்றோ` என்றபடி. இவ்வாறு, தேவர்களது தந்நலத் தன்மையையும், அநித்தியத் தன்மையையும், சிவபிரானது பெருங்கருணைத் திறத்தையும், நித்தியத் தன்மையையும் குறிப்பாற் கூறிவியந்தவாறு. பரவை - கடல்.

பண் :

பாடல் எண் : 29

விதிகரந்த வெவ்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேர் கொன்றைக் குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்கழல்வாய் தொக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மதுகரமே, கொட்டுக்கு ஆட்டான் சடைமேல் கொன்றைத் தெரியல் தொட்டுக் காட்டாய்; தொக்குச் சுழல்வாய்; வாளா, எத்துக்கு வினையேன் மென் குழற்கே வந்தாய்?` என இயைத்து முடிக்க. விதி - பிரமதேவன். கரந்த வினை - மறைந்து வகுத்த பிராரத்துவ கன்மம். குழற்கே - கூந்தலின்கண்; உருபு மயக்கம். மதுகரம் - வண்டு. `எற்றுக்கு` என்பது, `எத்துக்கு` என மருவி வந்தது. `நதி கரந்த சடை` என இயையும். கொட்டுக்கு ஆட்டு, மத்தளம் முதலிய கொட்டுக்களுக்கு இயைய ஆடும் நடனம்.
தெரியல் - மாலை. தொட்டு - கிளறி. `அதன் நறுமணத்தைக் கொண்டுவந்து காட்ட மாட்டாய் என்க. `மாலையைப் பெறாவிடினும் மணத்தையேனும் பெற்றால் `ஆற்றலாம்` என்பது கருத்து. தொக்கு - வேறு பல வண்டுகளோடு கூடி. இஃது ஆற்றாமை மீதூர்வால் தலைவி வண்டினை நோக்கிக் கூறிய, காமம் மிக்க கழிபடர் கிளவி.

பண் :

பாடல் எண் : 30

தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவு
நக்கு வருங்கண்ணி குடிவந் தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்அரும் போதரைக் காண வெள்குவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஐயாறரைக் காண அன்புமிக்கு வாழும்; (அவர் வந்தார்; காண வெள்குவன்` என இயைத்து முடிக்க. தொக்கு - கூடி. கணம் - பூத கணம். `நிலவாகிய கண்ணி, நக்கு வரும் கண்ணி` எனத் தனித்தனி இயைக்க.
நக்கு - ஒளி வீசி. கண்ணி - முடியில் அணியும் மாலை. புன்னை - புன்னை மலர்; ஆகுபெயர். அக்கு - சங்கு. கானல் - கடற்கரைச் சோலை. ஐயாறு, சோழ நாட்டுத் தலங்களில் ஒன்று. அரும் போதர் - அரியஞான சொரூபர், இஃது இங்கு, `அவர்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. இது தலைவி தன் நாண் அழிவு கூறித் தோழியை வரைவு கடாவுவித்தது.

பண் :

பாடல் எண் : 31

வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எம்பெருமான்`` என்பது விளி. அது முதலாகத் தொடங்கி, `வானவர்கள் எள்காரே`` என முடிக்க. `வல்` என்பது அடி யாக `வல்கு` எனப் பிறந்த பண்புப் பெயர், `வள்கு` எனத் திரிந்து `ஊர்` என்பதனோடு புணர்ந்து, கோவலூரை உணர்த்திற்று. அவ்வூர் வீரட்டமே, ``வடதிருவீரட்டானம்`` எனப்பட்டது. தென் - தென்திரு வீரட்டம்; திருவதிகை. குட திருவீரட்டானம் - மேற்கேயுள்ள வீரட்டானம்; திருக்கண்டியூர். கூறு - பங்கு. `இவை போல எத்தனையோ வீரட்டானம் உம்முடைய பங்காய் இருக்க, நீர் `பிச்சைக்கு` என்று வெண்தலை கொண்டு ஊர் திரிந்தால், வானவர்கள் ஏற்காரே?` என்க. `வானவர்கள் நீர் இரப்பதன் உண்மையை அறிவார் கள் ஆகையால் எள்கிற்றிலராய், உம்மை வணங்குவர்` என்பது குறிப்பு. ``அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடையாவது, கலனா வது ஓடு. கருதில் - அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும் அகன் நேர்வர் தேவரவரே``* என்னும் அப்பர் திருமொழியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 32

கூறு பெறுங்கன்னி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்
தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எம்பிரானுக்கு வெண்ணிறம், துதைந்து, ஒத்து, சிந்த வீறு பெறும்` என இயைத்து முடிக்க. கூறு பெருங்கன்னி, திருமேனியில் ஒரு கூற்றைப் பெற்று விளங்கும் கன்னிகை; உமை. சுண்ணம் - பொடி; திருநீறு. துதைந்து - மூழ்கப் பெறுதலாலும், `நீறு பெறும் நெருப்புப் புரை திருமேனி நெருப்பு ஓத்து` என மாற்றி. `நீறு பூத்த நெருப்பை ஒத்த திருமேனி மலைபோலத் தோன்றுதலாலும்` என உரைக்க. `கொன்றை அம் தேன் திவலையைச் சிந்தவும்` என்க. கொன்றை - கொன்றைப் பூ; ஆகுபெயர். சென்று சென்று வீறு பெறும். தொடர்ச்சியாக விளங்கி விளங்கிப் பெருமை பெறும். `கண்ணி, பெருஞ்சடை` என்பன பாடம் அல்ல. செய்தென் எச்சங்கள் எண்ணின் கண் வந்து, காரணப் பொருளவாய் நின்றன. `பெருமானது பெரிய திருமேனி முழுதும் திருநீற்றால் விளங்குகின்ற வெண்ணிறம், அதன்மேல் உமாதேவி தன் கூந்தல் விழுதலால் கரு நிறத்தைச் சிறிது பொருந்தியும், சடையினின்றும் தேன் துளித் துளியாகச் சிந்துதலால் பல புள்ளிகளைப் பெற்றும் மேலும் மேலும் அழகு பெறுகின்றது` என அதனை வியந்துவாறு. பல நிறங்கள் ஒன்று கூடுதலை அழுகுடையதாக மதிப்பர்.

பண் :

பாடல் எண் : 33

நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ நறுந்தேன்
படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக்
கொடுமுடியாய் என்றன் கொடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நறுந்தேன்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. தேன்படும் முடியாய் - மலர்கள் தேனைச் சிந்துகின்ற முடியினை (தலையை) உடையதாய். பாண்டிக்கொடுமுடி, கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்று.
கொடி - கொடி போல்வாளாகிய பெண்; உவமையாகு பெயர். வாளா - யாதொரு பயனையும் பெறாது. புறம் புறமே - பெரிதும் தொலைவில் நின்று; அடுக்கு, மிகுதி பற்றி வந்தது. ஓகாரம் இரக்கப் பொருட்டு. அதனால், `நீ இரங்காயோ` என்பது பெறப்படும். இது தலைவியது நிலைமை பற்றித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்ற பின்பு செவிலி இறைவனாகிய தலைவனை எதிர்பெய்துகொண்டு, இரங்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 34

கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறுமஞ்சி நஞ்சம் இருந்தநின் கண்டத்தையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வீரட்ட, அரவம் அம் முடிப் பிடிக்கில்; அத்தொடு விடையின் குரல்கேட்டு இடி - என்று அஞ்சி நின் கண்டத்தை அடிக்கடி இறுகக் கடித்தலுறும். (ஆகையால் அவற்றைப்) பூணலை` என இயைத்து முடிக்க. `கொடியையுடைய மதில், குலம் மதில்` எனத் தனித் தனி இயைக்க. குலவுதல் - விளங்குதல். ``குலவும் மதில்`` என்பதில் மகர ஒற்று விரித்தல். பிடித்தல் - போதுமானதாக அமைதல். முடி பெரிதாய் `இருத்தலின் அதை முழுவதுமாகச் சுற்றுதற்குச் சிறிதான பாம்பு, போதவில்லை` என்றபடி. `அதனோடு` என்பு, அத்தோடு` என மருவிற்று. `இவ் இருகாரணம் பற்றியேனும் அரவம் பூணுதலை விடு` என வேண்டியதாம்.

பண் :

பாடல் எண் : 35

கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உத்தமற்குத் தொண்டு அடைந்தார் கூற்றைக் கூசுவரே? தீக் கொடுமை. குறுகுவரே? மற்றொருவர் பேச்சுப் பேசுவரே? என வினாப் பொருளில்வந்த ஏகாரங்கள் அவை நிகழா மையைக் குறித்தன. கவ்வை - ஆரவாரம். `புரிந்தும்` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது. உகந்த (அதனை உண்பித்தவர்களை வெறாமல்) விரும்பிய. உத்தமன் - மேலானவன். `தொண்டாய் அடைந்தார்` என ஆக்கம் விரிக்க. கூசுதல் - நாணுதல். அஃது இங்கு அஞ்சுதலின் மேற்று. தீ - தீமை அது துன்பத்தைக் குறித்தது. கொடுமை - அடைய லாகாதவை. `தீயவையாகிய கொடுமையைக் குறுகுவரே` - என்க. மற்றொருவர் பேச்சு - பிறர் ஒருவரைப் பற்றிய பேச்சு, `உத்தமன் பேச்சையன்றிப் பிறர் பேச்சைப் பேசார்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 36

பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர்கோன் அயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முப்பொழுதும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கோச் சுற்றம் ஆ - அரசனுக்குரிய பரிவாரங்கள்போல. `இடு காட்டு ஆடல்` என இயையும். `இந்திரன், அயன், மால் முதலிய மேலான தேவர்களும் முப்போது வந்து வணங்க நிற்கின்ற நீ இடு காட்டில் ஆடல் என்? செப்பு என வினை முடிபு செய்க. ஆம், அசை. `இடுகாடு` எனப்படுவது, உலகர் தம் கிளைஞரை இடுகின்ற காடு அன்று; உலகம் அனைத்தும் ஒடுங்கிய நிலையில் காரணமாத்திரை யாய் நிற்கின்ற மாயையே - என்பது கருத்து. அதனால், ``பேய்`` எனப் படுவனவும் ஒடுக்கக் காலத்து யாதோர் உடம்பும் இன்றி, மாயையில், பிரளய கேவல நிலையில் இருக்கும் உயிர்களே - என்பதும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 37

மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றாத்தான் தேசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து`` என்பதை யிறுதியிற் கூட்டியுரைக்க. வாள் அரக்கன் கொடிய இராக்கதன்; என்றது இராவணனை. ``சுடர் முடிகள்`` என்பது அடையடுத்த ஆகுபெயராய், அவற்றை யணிந்த தலைகளைக் குறித்தன. முடிகள், தோள்கள் செவ்வெண். ``திருச்சத்தி`` இரண்டில். ஈற்றடியில் உள்ள ``திருச்சத்தி முற்றம்``, சோழநாட்டுத் தலங்களில் ஒன்று. ``தன்னைத் திருச்சத்தி முற்ற என்றது, `தன்னை (அவ் அரக்கன்) என்றும் நிலையான பேராற் றலை உடையவனாக நன்கு உணருமாறு` என்றபடி. சித்தத்துள் வைத்தான் திருவுள்ளத்தில் நினைத்தவன். என்றது, நினைத்துக் கால் விரலால் ஊன்றியான்` என்றதாம். தேசு - ஒளி; அருள். `அரக்கனைத் தன்னை உணருமாறு செய்தவனும். திருச்சத்திமுற்றத்தில் உள்ளவனும் ஆகிய அவனது அருளே, பலகாலமாய் நீங்காதிருக்கின்ற பிறவியாகிய நோயை நீக்கும் பெரிய மருந்து` என முடிக்க. சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை முற்றிற்று.
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலையில் குறிக்கப் பெற்றுள்ள தலங்கள்
திருவெண்காடு, திருமுதுகுன்றம், திருவாரூர், திருவதிகை, திருவொற்றியூர், திருமறைக்காடு,
திருவாய்மூர், திருவலஞ்சுழி, தில்லை, திருக்கொடுங்குன்றம், திருப்பழனம், திருவையாறு,
திருக்கண்டியூர், திருப்பாண்டிக்கொடுமுடி, திருக்கோவலூர், திருச்சத்தி முற்றம்.
சிற்பி