கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி


பண் :

பாடல் எண் : 1

ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர் உயிரையுண் டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்`` என்றது, `இடைப்பட்ட எந்த ஆண்டிலும் கூற்றுவன் வருவான்; அதற்குத் தடை யில்லை` என்றபடி. `மக்கள் வாழ்நாளின் மேல் எல்லை நூறு ஆண்டு` என்பதையும் பெரும்பான்மை பற்றிக் குறித்தார்.
ஒன்றும் மனிதர் - உலகில் பொருந்தியுள்ள மனிதர். `ஒன்றையும் மதியாத` என உருபு விரிக்க. இதில் ``ஒன்று`` என்றது, `உயர்ந்ததாயினும், அன்றி, இழிந்த தாயினும்` என்றபடி. ``ஒன்று`` என்னும் எண்ணுப் பெயர் எண்ணப் படும் காரணத்தின் மேல் நின்றது. உம்மை, முற்று. அடியையும், இடப்பக்கத்தையும் கூறியதனால், மதி, முடியில் உள்ள மதியாயிற்று. ``இடப்பக்கம் மால்`` என்றது, அரியர்த்தேசுர வடிவம், அல்லது சங்கர நாராயண வடிவத்தை. கற்பத் தொடக்கங்கள் பலவற்றில் சிவபெருமான் சிலபொழுது தனது இடப்பக்கத்தில் மாயோனைத் தோற்றுவித்து, அதன் வழியாகப் பிரமனைத் தோற்றுவித்து உலகத்தைப் படைக்கச் செய்வான். சில பொழுது இடப்பக்கத்தில் மாயோனோடு கூடவே வலப்பக்கத்தில் பிரமனையும் தோற்றுவிப்பான். சிலபொழுது வலப்பக்கத்தில் பிரமனைத் தோற்றுவித்து அவனைக் கொண்டே மாயோனைப் படைப்பிப்பான். அவற்றுள் ``இடப் பக்கம் மால்`` என்று மட்டும் கூறிப் போயினமையால் இது, பின்பு மாயோனைக் கொண்டு பிரமனைத் தோற்றுவிக்கும் முறையைக் குறித்தது. இங்குக் கூறியவைகளை.
அயனைமுன் படைத்திடும் ஒருகற்பத்
தரியைமுன் படைத்திடும் ஒருகற்பத்
துயர் உருத்திரன் றனைமுனம் படைப்பன்
ஒருகற்பம் மற்றொருகற் பந்தன்னில்
முயலும் மூவரை ஒருங்குடன் படைப்பன்
முன்பி றந்தவர் மற்றிரு வரையும்
செயலி னாற்படைக் கவும் அருள் புரிவன்
சிவபிரான் எனில், ஏற்றமிங் கெவனோ
என்னும் சிவதத்துவ விவேகத்தால் 1 உணர்க. ``முன்பிறந்தார் மற்றிரு வரையும் ... .... படைக்கவும் அருள்புரிவன்`` என்றதனால், `அஃதே நியதியன்று; ஒருகற்பத்தில் சிவபிரான் தானே மூவரையும் படைத்தல் உண்டு` என்பது போந்தது. இங்கு `அயன், மால்` என்பவரோடுகூட உருத்திரனையும் குறித்தமையை உணர்பவர்க்கு,
நான்முகனை நாரா யணன்படைத்தான்; நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் 2
என்றது ஒரே ஒரு கற்பத்தில் நிகழும் நிகழ்ச்சி. என்பதும், அதுதானும் மூவருள் ஒருவனாகிய உருத்திரனைக் குறிப்பதன்றி, மூவர்க்கும் மேலான நான்காமவனாகிய சிவபிரானைக் குறியாது. ஒருகற்பத்தில் பிரமனுக்குப் படைத்தல் தொழிலைச் செம்மையாக உணர்த்துதற் பொருட்டு அவனது நெற்றியினின்றும் தோன்றிய நீலலோகிதன் முதலிய உருத்திரர் பதினொருவரே எங்கும் `ஏகாதச ருத்திரர்` எனக் குறிக்கப்படுகின்றனர். `இங்ஙனம் சிவ புண்ணிய மிகுதியால் சிவ பிரானது உருவம், பெயர், தொழில் இவைகளைப் பெற்று நிற்கின்ற உருத்திரர்களே சிற்சில இடங்களில் பிரம விட்டுணுக்களினும் கீழ்ப் பட்டவர்களாகக் கூறப்படுகின்றனர்`` என்பதையறியாமல் சிவனையே பிரம விட்டுணுக்களுக்குக் கீழ்ப்பட்டவனாக எண்ணுதல் தவறுடையதாதல் அறிக. பிரமனை, `சாக்கிர மூர்த்தி` என்றும், விட்டுணுவை, `சொப்பன மூர்த்தி` என்றும் கூறுதல் பலர்க்கும் உடன்பாடு. அந்நிலையில் சைவாகமங்கள் சிவனை இம்மூவர்க்கும் அப்பாற்பட்ட `துரிய மூர்த்தி` என்றே கூறுதல் குறிக்கொளத்தக்கது. ``மால்`` என்னும் எழுவாய், `உளன்` என எஞ்சி நின்ற பயனிலையோடு முடிந்தது. இவ்வந்தாதியின் எல்லாப் பாடல்களும் சொற் பின்வருநிலையணி பெற்று வருதல் காண்க.

பண் :

பாடல் எண் : 2

மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாவதாக வந்த ``ஒருபால்``, இடப்பக்கம். `அப்பக்கத்தில் கொன்றை மாலையைச் சூடான்` என்றது, அஃது அம்மையது பாகம் ஆதலைக் குறித்தது. இறுதிக்கண் வந்த மாலை, அந்திக் காலம். அது கால ஆகுபெயராய். அது பொழுது தோன்றும் செவ்வானத்தைக் குறித்தது.
உண்ணா - உண்ணப்படாத, ஒளியான் - பின் வாங்கி மறையாதவன். ``ஏத்தி`` என்பது தகர ஒற்றுப் பெறாது வந்த இகர ஈற்று ஏவல் வினைமுற்று. `துதிப்பாயாக` என்பது பொருள். ``உளம்`` என்பதை முதலிற் கூட்டி முடிக்க. `உண்ணா நஞ்சு உண்டல்` என்றது முரண்தொடை.

பண் :

பாடல் எண் : 3

உளம்மால்கொண் டோடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தாவா றுண்டோ உளம்மாசற்
றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``யாமும்`` என்பதை முதலிலும், ``ஏத்தாவாறு உண்டே`` என்பதை இறுதியிலும் கூட்டி யுரைக்க. ``உளம்`` மூன்றில் இடையது தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று; ஏனையவை, `மனம்` எனப்பெயர். ``ஆகில்`` என்பது தெளிவின்கண் வந்தது, `நாமும் மற்றவர்கள் போல மன மயக்கங்கொண்டு ஓடி ஒழியாது, நிலைபெற்றிருக்கின்றோம் என்றால், நாம் (முற்பிறப்பில்) சிவபெருமானது, திருவடிகளை துதியாதிருந்தது உண்டோ` என்பது இதன் திரண்ட பொருள். ஏகார வினா, எதிர்மறையைக் குறித்தது.
அங்கம் - உடம்பு, `மலம் - மாசு. உள்ளமும் மாசற்று, உடம்பும் மாசற்று விளங்கும் ஏறு` என்க, அறக் கடவுளே விடையா தலையும், அதன் நிறம் வெண்மை யாதலையும் இவ்வாறு குறித்தார். அம் கமலம் - அழகிய தாமரை மலர். இது செந்தாமரை மலர்.

பண் :

பாடல் எண் : 4

அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மார்க்கண்டேயர் வரலாற்றைக் குறிப்பிடுகின்றவர் அதில் உள்ள சிவபெருமானது நேர்மையை விளக்குதற்கு, `அடியான்` என ஒருமையாற் கூறாது, ``அடியார்`` எனப்பன்மையாற் கூறினார். அட்டு - கொன்று. அழித்தல் - செயற்படாதபடி செய்தல். ``அந்தரத் தார்`` என்பதை மூன்றா வதாய் உள்ள ``அடியார்`` என்பதற்கு முன்னே கூட்டி, `அதன் கண், `அடியாராய்` என ஆக்கம் விரித்து, `சூடும் அவர் களையுடைய அடியால் செற்றான்` என முடிக்க. ``அருவாக`` என்றது, `தூலஉடம்பை இழக்கும்படி` என்றதாம். அம்தரத்தால் ஏத்தி - அழகிய, மேலான குணத்தால் துதித்து. `மந்திரத்தால்` என்பது பாடம் ஆயின் மடக்கணிக்குச் சிறிதும் இடம் இல்லாது போதலால் அது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 5

அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்
கலராகி யானும் அணிவன் அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, திருவாரூர்ப் பெருமான்மேல் காதல் கொண்டாள் ஒருத்திதன் கூற்று. ``அலர் ஆளும் கொன்றை`` என்பதை, `கொன்றை ஆளும் அலர்` என மாற்றிக் கொள்க. கொன்றை - கொன்றை மரம். அதனால் ஆளப்படுதல், பூத்து அசையச் செய்தல். அணியல் - அணிதலை உடைய. `அலர் அணிந்த ஆரூரனைக் காதலித்ததனால் யானும் எங்கும் அலர் உடையேனாயினேன்` எனச் சொல் நயம்படக் கூறி இரங்கியவாறு. இவ் அலர் இரண்டனுள் முன்னது மலர்; பின்னது, ஊரார் கூறும் பழிச்சொல். மூன்றாவதாகிய அலர் - பரந்து செல்லுதல். `நாண் இழந்து, எங்கும் பரந்து செல்லும் செல வினை உடையேனாய்` என்க. ``ஓதத்தான்`` இரண்டில் முன்னதில் தான், அசை, ஓத ஒட்டினேன் - நிகழ்ச்சியை வெளிப்படுத்தத் துணிந்து விட்டேன் `அதன்படி இனி யான் நஞ்சுண்டாவது ஊரைப் பலர்க்கும் ஓதுவன்` (வெளிப்படச் சொல்வன்) என முடிக்க. ஓதம், பின்னது அலை, அஃது ஆகுபெயராய்க் கடலைக் குறித்தது. அதன்பின் வந்த `ஆன்` உருபு ஏழாவதன் பொருட்டாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 6

ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன் றுடைதோலே ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இவ்வெண்பாவும் பழிப்பது போலப் புகழ்ந்தது. ``ஊரும் விடை`` என்பதில் பெயரெச்சம் செயப்படுபொருட்டாயும், ``ஊரும் நாகம்`` என்பதில் பெயரெச்சம் வினைமுதற் பொருட்டாயும் நின்றன. ``ஊரும் விடை ஒன்று`` என்றது, `ஊர்தியாகக் கொள்ளப் பட்டது யானை, குதிரை முதலியன அல்ல; காளையே, அதுவும் ஒன்று தவிர, இரண்டாவதில்லை` என்றபடி. ``தோலே`` என்னும் பிரிநிலை ஏகாரங்களால் நற்கலங்களும் நல் உடைகளும் பிரிக்கப்பட்டன. பட நாகம் மட்டு ஆர் பண் அம் மாலை - படத்தையுடைய பாம்பும், தேன் பொருந்திய அத்தியமே அழகாகச் செய்யப்பட்ட மாலைகள். நாகம் பட அட்டார் - யானை (கயாசுரன்) அழியும்படி அழித்தவர். பரிசு தன்மை `அவர் தன்மை இதுதானோ` என்க ஓகரம் இழிவு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 7

பரியானை ஊராது பைங்கண் ஏறூரும்
பரியானைப் பாவிக்க லாகாப் பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``பரியானை`` என்பதில் `பரிய` என அகரம் தொகுக்கப்பட்டது. இரண்டாம் அடியில் முதற்கண் நின்ற பரி- ஊர்தி. பாவித்தல் - நினைத்தல். நினைத்தல் செய்யாதவர்க்குப் பரியான் - அருளான். ``கட்டங்கம்`` இரண்டில் முன்னது `கட்வாங்கம்` என்பதின் திரிபு. `மழு` என்பது பொருள். பின்னது, கட்டு அங்கம் - மாலையாகக் கட்டப்பட்ட எலும்பு, நெஞ்சே பரியானை கட்டங்கம் ஏந்தியாகக் கண்டும், கட்டு அங்கம் ஏந்தியாகக் கண்டும் வாழ்` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 8

கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கண்டங்கள் பாடி ஆட்டாடும்`` என்பது முதலாகத் தொடங்கி, ``சோதிக்கு`` என்பதனோடு இயைய, ``பதி`` என்பதிலும் `பதிக்கு` என, தொகுக்கப்பட்ட நான்காவது விரித்துரைக்க, முதற்கண் நின்ற கண்டம் கழுத்து; மிடறு. `உமை பாலினையும், தன் பாலினையும் கண்டு` என இரண்டிடத்தும் இரண்டாவது விரிக்க. ``கண்டு`` என்னும் எச்சத்திற்கு முடிவாகிய `உணர` என்பது தொகுத்தலாயிற்று. அங்கு - அவனிடத்து `உமையொரு பாகமாகிய திருமேனியை யுடையனா யினும் அவனருள் பெற்றார்க்கன்றிக் காண இயலாதவன்` என்பதாம். இறுதியில் நின்ற கண்டம், `குரல்` என்னும் பொருளது. `இக்குரல், பூத கணங்களின் குரல்` என்க. ஆட்டு ஆடும் - பலவகை ஆட்டங்களை ஆடுகின்ற. பின் நின்ற பாடி - பாசறை; தங்குமிடம். பதி - தலைவன்.

பண் :

பாடல் எண் : 9

பதியார் பழிதீரா பைங்கொன்றை தாவென்
பதியான பலநாள் இரக்கப் பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பதியார் பழி - ஊரில் உள்ளவர்கள் தூற்றும் அலர்கள். தீரா - ஒழிகின்றில. `என்பது` என்னும் சொல்லின் ஈற்றுக் குற்றிய லுகரம் யகரம் வரக் குற்றிய லிகரமாய்த் திரிந்து முற்றியலுகரம் போல அலகு பெற்றது. `என்பது சொல்லி யான் இரக்கும்படி` என, `சொல்லி` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. பதி ஆய - தலைவர் ஆகிய. அம் மான் ஆர் கையார் - (தாருகாவன முனிவர்கள் விடுத்த) அந்த மான் பொருந்திய கையை உடையவர். அகரம், பண்டறி சுட்டு. `அம் - அழகு` என்றலும் ஆம். அஃதே கொல் அத்தன்மையது தானோ! அம்மானார் - யாவரினும் பெரியோராயினார். கையார் - ஒழுக்கம் உடையார். ``வளை கவர்ந்தார். அம்மானார், கையார் அறம் அஃதே கொல்` என முடிக்க. இதுவும் கைக்கிளைப் பாற்பட்ட தலைவி ஒருத்தி யது கூற்று.

பண் :

பாடல் எண் : 10

அறமான நோக்கா தநங்கனையும் செற்றங்
கறமாநஞ் சுண்ட அமுதன் அறல்மானும்
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறம் ஆன நோக்காது - தனக்கு அறமாவனவற்றை எண்ணாமல், (இரக்கம் இல்லாமல்` என்றபடி. இதுவும் பழித்ததுபோல் புகழ் புலப்படுத்தியது. அநங்கன் - மன்மதன். `மா நஞ்சு அற உண்ட அமுதன்` என மாற்றிக்கொள்க. அற - முற்றிலும். அறல் மானும் ஓதியாள் - கருமணல் போலும் கூந்தலை உடையவள்; உமை. `அறமான` என்பது பாடம் அன்று. அமர்ந்தான் - விரும்பினான். புகழே ஓதி - புகழையே சொல்லி. `ஒளி தோற்றேன்` என மாற்றி, `அழகினை இழந்தேன்` என உரைக்க. இதுவும் கைக்கிளைப் பாற்பட்ட தலைவி ஒருத்தியது கூற்று.

பண் :

பாடல் எண் : 11

ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்
கொளியான் உலகெல்லாம் ஏத்த ஒளியாய
கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோடற்கு ஒளியான் - கொள்ளுதலுக்குப் பின்னிடாதவன். ``ஒளியாயகள்`` என்பதில் கள், விகுதிமேல் விகுதி. `ஒளியானவைகள்` என்றபடி - இங்கு ஒளி - புகழ். `உலகம்` ஏத்துதற்கு உரிய புகழ்கள் பலவற்றையும் ஏற்றவன்` என்க. இரண்டிடத்தும் ``கொன்றை`` என்பது கொன்றை மாலையையே குறித்தது. ``காப்பு இகழ்ந்தான் - என்னை இறவாமல் காத்தலைக் கைவிட்டான். இதன் பின் `ஆயினும்` என்பது வருவிக்க. `தான் கொன்றையைக் கடிது ஈயக் கள்ளேல்` என இயைத்து முடிக்க. `ஈய என்பது சொல்லெச்சம் கள்ளேல் - (என்னால் இயலாது` என்று சொல்லிக்) கரவு செய்யாதே. `விரைந்து சென்று இரந்து வாங்கி வா` என்றபடி. இப்பாட்டின் துறையும் முன்பாட்டின் துறையே.

பண் :

பாடல் எண் : 12

கடியரவர் அக்கர் இனிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் கடியரவ
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடி அரவர் - கடிக்கும் குணத்தையுடைய பாம்பை அணிந்தவர். அக்கர் - எலும்பை அணிந்தவர். ஆடு கோயில் கடியர் - ஆடுமிடத்தைக் கடிதாக (சுடுகாடாக)க் கொண்டவர். `கடிய கோயி லார்` எனற்பாலது, இடத்தின் தன்மையை இடத்து நிகழ்பொருள்மேல் ஏற்றி, ``கடியர்`` எனப்பட்டது. ``கையதும்``என்னும் உம்மை, `அதுவும் கடிது`` என இறந்தது தழுவிற்று. கடி அரவ ஆன் ஏறு - கடுமையான குரல் ஓசையை உடைய இடபம், `கடியரவர் ஆனேறு` என்பது பாடம் அன்று. ஆன் ஏற்றார்க்கு ஆட்பட்டோம். அவ்விடத்துத் தகுதி வாய்ந்த தலைவர்க்கே ஆட்பட்டோம். ஈற்றடி, அஞ்ச வேண்டாமைக்குக் காரணத்தை விளக்கிற்று. ஆன் - அவ்விடம். அஃது, ``ஆன்வந்தியையும் வினைநிலை யானும்`` என்னும் தொல்காப்பியத்தாலும் * அறியப்படும். `அவ்விடம்` என்பது ஆட்பட்ட நிலையைக் குறித்தது. ஏற்றான் - ஏற்றவன்; ஏற்புடையவன். இதனால், பிறரெல்லாம் ஏற்புடையர் ஆகாமையும் குறிக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 13

யாமானம் நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார் யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

யாம் மானம் நோக்காது - நாம் நாணத்தைப் பொருட்படுத்தாமல், யா மானம் கொண்டு அங்கு யா மாவா ஆவூரா ஊரும் அழகா அனலாடி அலர் தந்தார் - என்ன பெருமை பற்றி அவ் விடத்து எந்த வகைக் குதிரையாகவோ இடபத்தை ஊர்பவரும், அழகாகத் தீயில் ஆடுபவரும் ஆகிய பெருமான் (கொன்றை மாலையைத் தாராமல்) பழிச் சொல்லையே தந்தார்? ஆ - ஐயோ! `யான் (அலர்தூற்றும்) ஊரார்க்கு என் உரைப்பேன்` என்க. ``ஆடி`` என்பது பன்மை யொருமை மயக்கம். அன்றி, `தந்தான்` என்றே பாடம் ஓதலுமாம். `என்னுரைக்கோம் யாம்` என்பது பாடம் ஆகாமையறிக. மூன்றாம் அடியில், ``ஊரா`` என்றது, `ஊர்தியாக` என்றபடி. இதுவும் காதற்பட்ட தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 14

யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும் குன்றுவித்து யானென்றங்
கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அண்ணாமலையான், அம் பரன்`` என்பவற்றை முதற்கண் கூட்டியுரைக்க. அன்பான் - அழகிய இறைவன். ``யான்`` மூன்றில் முன்னது இறைவன் தான் தன்னை அறிமுகப்படுத்தியது, இடையது, `யான்` என்னும் செருக்கு. `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஐயறிவு - ஐம்புல அறிவு. இறுதியது, இறைவன், `எல்லாவற்றிற்கும் முதல்வன் யானே` என அறிவித்தது. மூன்றாம் அடியில் உள்ள ஆர்த்தல் ஆரவாரித்தல். ஈற்றடியில் உள்ள ஆர்த்தல் இறுகக் கட்டுதல்; சூடியிருத்தல். `கொன்றை மாலையை எனக்குத் தாராமல் தானே சூடியிருப்பானாயின், யான் உய்வது அரிது` என்க. இதுவும் முன்னைத் துறை.

பண் :

பாடல் எண் : 15

அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அரி`` மூன்றில் முதலது வண்டு; இடையது திருமால்; இறுதியது சிங்கம், மூன்றாம் அடியில் ``வேங்கடம்`` திருவேங்கட மலை (மேவா உயிரெல்லாம் வியந்து கடத்து நோயால் வேம்) என்க. மேவுதல் - விரும்புதல். கடம் - உடல். வியத்தல், உடலை, `இளையது` என்றும், `அழகிது` என்றும் புகழ்தல். வேம் - வேகும்; அழியும். இப்பாட்டால் திருவேங்கட மலையில் எழுந்தருளியிருப்பவர் அரியர்த்தேசுரர் (சங்கர நாராயணர் ஆதல் விளங்கும். முதலாழ்வார் பாடலும் * இக்கருத்தை வலியுறுத்தும்.

பண் :

பாடல் எண் : 16

வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா வியந்தாய
கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வியம் தாழி - எனது ஏவலிற் பொருந்து. இந்த ஏவல் வினைமுற்றில் இகரவிகுதி தகர ஒற்றுப் பெறாமல் வந்தது. `தாழ்தி` என்றே பாடம் ஓதலுமாம், தாழ்தல் - தங்குதல். இதனை இறுதிக்கண் கூட்டுக. வியந்து - (அவர்களைப்) புகழ்ந்து. வியம்தாய - அகன்ற இடமுழுதும் நிறைந்த. கண் நுதலான் - கண் பொருந்திய நெற்றியை உடையவன். அடிப்பூ - திருவடியாகிய மலர். கண்ணுதல் - நினைதல். `நம்மால் உள்ள கடன்` என ஒரு சொல் வருவிக்க. கடன் - கடமை. ``என்கடன் பணிசெய்து கிடப்பதே`` * என அப்பரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 17

கடனாகம் ஊராத காரணமும் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாய் பணி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கடன்`` இரண்டில் முன்னது மதம்; அது, `கடம்` என்பதன் இறுதிப் போலி. பின்னது கடமை, ``பாரிடம்`` இரண்டில் முன்னது பூதகணம்; பின்னது பூமியாகிய இடம், பணி - சொல்லி யருள். இரண்டாம் அடியில் உள்ள ``கடனாகம்`` என்பதை. `கடல் நாகம்` - எனப் பிரிக்க இதில் நாகம் - விண்ணுலகம் `நாகக் கடல் கங்கை` என மாற்றி, விண்ணுலகத்தில் இருந்த கடல்போலும் கங்கையை` என உரைக்க. முதலில் உள்ள நாகம், யானை. மேவி - விரும்பி. பயிலும் - சூழ்கின்ற. மேயாய் எழுந்தருளியிருப்பவனே பரஞ்சோதி மேயாய் யானையை ஊராமல், எருதை ஊரும் காரணத்தையும், ஆகாய கங்கையை உன்சடைமுடியில் கவர்ந்து வைத்த காரணத்தையும், பணி` என முடிக்க. ``முன்னதன் காரணம் அறத்தை நடத்துதலும், பின்னதன் காரணம் பகீரதன் தவமும்` என்பது கருத்து. ``தான்`` இரண்டும் அசைகள்.

பண் :

பாடல் எண் : 18

பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பணி ஆதபத்தர் - இடையறாத பணியை (தொழிலை) உடைய வெயிலவர். (ஆதபம் வெயில்) ஆதித்தர். சேயன் - சிவந்த ஒளியை உடையவன். `சூரியர் பலர் ஒன்று கூடினால் உண்டாகும் ஒளியைவிடமேலான ஒளியை உடையவன்` என்றபடி. பணி ஆய ஆகம் - பாம்புகள் பொருந்திய உடம்பை உடையவன். செய்துமேல் - செய்வோ மாயின். தான், அசை. `நெஞ்சே, பல் சடையான் பாதம் பணியாய்; செய்துமேல் சேயனும் ஆகத்தானும் ஆகிய அரன் நம்மை அமரர் கோனாகச் செய்யும்` - என இயைத்து முடிக்க. ``ஆதபத்தர்க்கு`` என்னும் நான்கன் உருபு, `ஆதபத்தரினும்` என ஐந்தாவதன் பொருளில் வந்தது. ``செய்தும்`` என்பது வேறு முடிபாகலிற் பால் இடம்வழுவிய `நம்மை அமரர் கோன் ஆக` என்பது பன்மையொருமை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 19

அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியுமற் றந்தோ அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரன் காய - சிவன் (என்னை விரும்பாமல்) வெறுத்தலால், ``அம்பும் அரன்`` என்பதில் அரம், ``அரன்`` எனப் போலியாய் வந்தது. அது காரிய ஆகுபெயராய் அரத்தால் அராவி உண்டாக்கப்பட்ட கூர்மையைக் குறித்தது. உம்மையை மாற்றி, `அநங்க வேள் அம்பின் அரனும் காயும்` என்க. மற்று, அசை ``வெள்ளில்`` இரண்டில் முன்னது வெற்றிடம்; பின்னது விளாமரம். ஆடி, பெயர். மேற்புறம் அழகாய் இருந்து உள்ளே ஒன்றும் இல்லாததை, `வேழம் உண்ட விளாங்கனிபோல்வது` என்றல் வழக்கு. `வேழம் உண்டல்` என்பது விளாங்கனிக்கு இயற்கையில் ஏற்படுகின்ற ஒரு நோய். `தேரை மோந்த தேங்காய்` என்றலும் இது போல்வதே, இப்பழமொழிகளால் யானையும், தேரையும் உண்ணாமலே பழியைச் சுமத்தலால் உண்ணாமலே வரும் பழிக்கு இவைகளை உவமையாக உலகத்தார் கூறுவர். `அரங்கு ஆய காட்டின்கண் ஆடி (என்னை) வேண்டான். (அதனால்) என் உள்ளம் களிறு உண்ட வெள்ளில் போன்று வெறிதாயிற்று. (இங்ஙனம்) அரன் காய நைவேற்கு அநங்க வேள் அம்பின் அரமும் காயாநின்றது. அந்திக் காலமும் அந்தோ!` என இயைத்து முடிக்க. ``அந்தோ`` என்பதன் பின் `கொடிது` என்பது எஞ்சிநின்றது. இதுவும் கைக்கிளைப்பட்டாள் ஒருத்திதன் கூற்று.

பண் :

பாடல் எண் : 20

வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரார் விமலன் வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வெறி யானை ஊர் - மதத்தை உடைய யானையை ஊர்தியாகக் கொண்டு ஊர்கின்ற வேந்தர்பின் செல்லும் வேட்கை வெறியார் - (பரிசில் வேண்டி) அரசர் பின்னே திரிகின்ற ஆசை யில்லாதவர்கள். விமலன் வெறியார் - மலம் இல்லாதவனாகிய இறைவன்மேல் பித்துக் (பேரன்பு) கொண்டவர்கள். `ஐயன்` என்பது `அயன்` எனப் போலியாய் வந்தது. ஐயன் - தலைவன். `நெஞ்சே, யாவர்க்கும் தலைவனாவான் வேட்கை வெறியாரும், விமலன் வெறியாரும் ஆகிய அடியார்களது நோயைத் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன் அல்லனோ` என இயைத்து முடிக்க. `அங்ஙனமாக, நீ பிறரை நாடியலைதல் எற்றுக்கு` என்பது குறிப்பெச்சம் இனி, ``அயன்`` என்பதைப் போலியாக்காமல், `அயன் முதலாகிய காரணக் கடவுளர்களும் அவனே யன்றோ` என முடிப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 21

அயமால்ஊண் ஆடரவம் நாண ததள தாடை
அயமாவ தானேறார் ஆரூர் அயமாய
என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அயம் ஆல் ஊண்`` என்பதில், ``ஊண்`` என்பதை முதலிற் கூட்டுக. ஆல், அசை. `ஐயம்`, எனப்போலியாய் வந்தது. ஐயம் - பிச்சை. அதள் - தோல். ``அயமாவது`` என்பதில், குதிரையை உணர்த்துவதாய ``அயம்`` என்னும் பெயர் இங்குப் பொதுப்பட `ஊர்தி` என்னும் பொருட்டாய் நின்றது. இரண்டாம் அடியின் இறுதியிலும், `ஐயம்` என்பது போலியாய் ``அயம்`` என வந்தது. ஐயம், இங்கு, சந்தேகம். ஐயம் மாய சந்தேகம் நீங்க. இதனை, ``ஆழும்`` என்பதற்குமுன் கூட்டுக. நக்கன். உடை உடாதவன். உரிமை பற்றி, ``என் நக்கன்`` எனத் தம் தமனாக்கிக் கூறினார். `ஆடிபால்` என ஏழாவது விரிக்க. `இவள் என் நக்கு அன்று ஆழும்` என இயைத்து முடிக்க.
நகுதல் - மகிழ்தல்; விரும்புதல். அன்று - அவனைக் கண்ட அன்றே. ஆழும் - காதல் வெள்ளத்தில் ஆழ்வாள். `என் நக்கனுக்கு ஊண் ஐயம்; நாண் அரவு; ஆடை அதள்; அயமாவது ஆனேறு; ஊர் ஆரூர்; (அங்ஙனமாக, அவன்பால்) இவள் என் நக்கு அன்று முதலாக ஐயம் மாய ஆழும்` என இயைத்து முடிக்க. இதுவும் பழிப்பது போலச் சிவபெருமானது வசிகரத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 22

ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்
றாழும் இவளை அயராதே ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
சலமுடியா தின்றருள்வாய் தார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆழும் சல முடியாய் - வீழ்வார் அமிழ்ந்து போதற் குரிய நீரையணிந்த முடியை உடையவனே. இதனுடன் பிறவற்றையும் முதலிற் கூட்டுக. முதற்கண் உள்ள, ``ஆழும் இவ்வளையும் கை அல; ஆற்றேன்`` என்பது காதல் கொண்டாள் ஒருத்தியது கூற்று. ``வளை`` என்பது ஆகு பெயராய், நிலத்தை வளைத்துள்ள கடல் அலைகளைக் குறித்தது. கை - ஒழுக்கம். அஃதாவது, பிறர்மாட்டு இரக்கம். ஒழுக்கம் உடையவற்றை `ஒழுக்கம்` என்றே கூறினார். கடல் அலை எழுப்பும் ஓசை காதலால் இரவெல்லாம் தூங்காது துன்புறுபவர்களை மேலும் தூங்க ஒட்டாது ஒலித்து வருத்துவன கடல் அலைகள். அவைகளை, ``கை அல`` என்றாள், ``இவ்வளை`` என்பதில் வகர ஒற்றுத் தொகுக்கப்பட்டது. அயராதே - மறந்து விடாதே. ஈற்றடியில் உள்ள ``சலம்`` - வஞ்சனை. முடியாய் - இப்பொழுது கொண்டுள்ள இந்த வஞ்சனையை இறுதி வரையில் கொள்ளாதே. தார் - மாலை. `தார் அருள்வாய்` என்க. இதுவும் காதல் கொண்டாள் ஒருத்தி கூற்று.

பண் :

பாடல் எண் : 23

தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கஞ் சரிவித்தான் தாராவல்
லானைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
லானையும் வானோர்க் கரசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி இறுதியில் உள்ள ``தாரா`` - தாராக் கோழி; அது வயலுக்கு அடையாதலின், ``அணிவாய்`` என்பதற்கு முன்னே செல்லக் கூட்டுக. ஆன்ஐ - எருதை. மேல் வைகும் - `மேற் பொருந்தி ஊர்கின்ற அரசு` என்க. நல்லான் - நல்லவன். நையும் - வானோர் - பல துன்பங்களால் வருந்துகின்ற தேவர். அரசு - தலைவன். இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 24

அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்
அரசுமாம் அங்கொன்றும் மாலுக் கரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன்
ஊர்தி எரித்தான் உறா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அம் மான் - அழகிய பெண்; இலக்குமி, அவளுக்கு அரசு (கணவன்) ``அரசும் ஆம்`` என்றாராயினும், `அரசு ஆகின்றவனும்` என்றலே கருத்து என்க. அங்கு ஒன்றும் - இலக்குமி யாகின்ற அப்பொழுதே தனது ஒருபாகத்தில் பொருந்துகின்ற அப் பொழுதே தனது ஒருபாகத்தில் பொருந்துகின்ற. அரசும் - தலைவன் ஆகின்றவனும். ஆன் ஊர்தி - இடபத்தை ஊர்பவன். எரி - எரி போலும் உருவம் உடையவன். `தான் கண்ணுக்கு எரிபோலத் தோன்றினும் செவிக்கு இன்பம்` என்க. செவிக்கு இன்பத்தைத் தருபவனாதல். ``தான்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. ஈற்றடியில், `தீ யெரித்தான்` என்பது `தி எரித்தான்` எனக் குறுகி நின்றது. அதற்கு முன் உள்ள `ஊர்` திரிபுரம். `தீயால்` என உருபு விரிக்க. உறுதல் - விரும்புதல். ``உறார் போன்று உற்றார் குறிப்பு * `உறாது` என்பது ஈறு குறைந்து நின்றது. `ஊரை உறாது தீயால் எரித்தான்` என்க. ``ஆட்பட்டார்க்கு`` என்னும் நான்கன் உருபை இரண்டன் உருபாகத் திரிக்க. `அம்மானுக்கு அரசு ஆகின்றவனும், அப்பொழுதே தனது ஒருபாகத்தில் பொருந்துகின்றவனும் ஆகிய மாலுக்குத் தலைவன் ஆகின்றவனும், ஆன் ஊர்தியும், தான் எரியாயினும் செவிக்கு இன்பனும் ஊர் உறாது எரித்தவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு ஆட்பட்டவரை அரசுமாய் ஆள்விக்கும்` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 25

உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்
துறாவேதீ உற்றனகள் எல்லாம் உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள்
காவாலி தாம்நின் கலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒளி வளை, தலைவி. `ஒளிவளை நினைந்து சோர்ந்தாள்` என்க. மூன்றாம் அடியில் உள்ள ``காவாலி`` என்பது `காபாலி` என்பதாம். `காபாலியாகிய நின் தார் (மாலையை) நினைந்து (நினைதலால்) இரண்டாம் அடி முதலில் உள்ள ``உறா`` என்பது, `உற்று` என, `மிகுந்து` என்னும் பொருட்டாயிற்று. வே தீ - `வேகின்ற தீ` என வினைத்தொகை. `தீயைப்போல உற்றனகள் எல்லாம்` என்க. `கள்`, விகுதி மேல் விகுதியாய் வந்தது. ஏகாரத்தை மாற்றி வைத்து `உறா போயே, கைசோர்ந்து மெய் சோர்ந்தாள்` என்க. உறா - பற்றி. ஏகாரம் தேற்றம். கைசோர்தல் செயல் அறுதல். மெய்சோர்தல் நினைவிழத்தல். (இது பற்றி எழுந்த என் சொற்கள் (காபாலி) நின் உள்ளத்து உருவோ? வாலிதாம் நின் கலை கா` என்க. கலை - பிறை. `பிறை இனியும் தனது நிலவை வீசுமாயின் உன்னைப் பெண் பழி சாரும்` என்றபடி. வாலிது - வெள்ளிது. கா - தடைக்காவல் செய். இது தலைவியது ஆற்றாமை குறித்துச் செவிலி வேண்டியது.

பண் :

பாடல் எண் : 26

கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலிர்நாண் காமின் கலையாய
பால்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கலைசேர் நுதலிர்`` என்பது முதலாகத் தொடங்கி, ``நாண் காமின்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. கலை சேர் - பிறை சேர்ந்தது போலும். கலையாய பால் - நூல்களாய பகுதிகள். மதியன் - அவற்றால் விளங்கப்பெறும் அறிவாய் உள்ளவன். `பாண்டரங்கன்` என்பது குறுகி நின்றது. பாண்டரங்கம், ஒருவகைக் கூத்து, பால் மதியன் - பால்போலும் பிறையை அணிந்தவன். பலி - பிச்சை. `பலிக்குப் போந்தான்` என்க `தானே மகளிரை மெலியச் செய்தல் போகப் பிறையையும் அணிந்துவந்தான்` என்றபடி முதற்கண் உள்ள கலை - ஆடை. காமின் - இழவாது காப்பாற்றுங்கள். ஏர் - அழகு. இது தோழியர் தலைவியர்க்குக் கூறியது.

பண் :

பாடல் எண் : 27

பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்கு மனைபுகுந்து பாவாய் பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பலிக்கு - பிச்சைக்கு. பலிக்கும் மனை - பயன் விளையும் இல்லம். பாவாய் - பெண்ணே `பல்லி` என்பது இடைக் குறைந்து ``பலி`` என வந்தது. பல்லிக்கு - பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்ற இந்தப் பாத்திரத்தில். ஐயம் பெய் - பிச்சையிடு. ஐ அம்பு - ஐந்து அம்புகள். அநங்கன் - மன்மதன். இது தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 28

ஆயம் அழிய அலர்கொறைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆய் அம் - நுணுகிய அழகு. ஆயம் - தோழியர் கூட்டம். அவர் அழிதலாவது வருந்தி இரத்தல். `தோழியர் வருந்திக் கொண்டிருக்கச் சோர் வடைகின்ற என்மேல்` என்க. `ஆயன் குழல்` என இயையும் ஆயர் ஊதும் குழல் மாலைக் காலம் நெருங்குதலைத் தெரிவித்தலால் தனிமையால் வாடுவார்க்கு அதனால் துன்பம் மிகும். தேய் கோடு - கூரிய முனைகள். `இவை வருத்துதல் சொல்ல வேண்டுமோ` என்பதாம். தீங்கு உழலும் - தீமை செய்து கொண்டு திரிகின்றன. இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 29

தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால்வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நன்னெஞ்சை என்பதை முதலில் வைத்தும், ``கழற்கு ஆ`` என்பதில் உள்ள ``ஆ`` என்பதை இறுதியில் வைத்தும் உரைக்க. தேரோன் - வியத்தகுதேரை உடையவன்; சூரியன். வெந்து, (மணல்கள்) வேதலால். பேய்த் தேர் - கானல். அதனையும் ஒரு தேவனாக வைத்து ``பேய்த் தேரோன்`` என உயர்திணையாகக் கூறினார். அதன் இழிவு தோன்றுதற்கு, `இளமையார் போவார்; முதுமையார் வருவார்` என்றல் போல, கதிர் - ஒளி. பேய்த் தேரின் ஒளி நிலையாது நீங்குவது போல நில்லாது நீங்கும் பொருள்` என்க. ``என்னும்`` என்பன உருவக உருபும், உவம உருபுமாய் வந்தன. தேராது - அதனை அடையும் வழியை ஆராயாமல், கூடல் காவாலி - மதுரையில் உள்ள கபாலி. அவன் கழலைக் கூடுதற்காக. ஆலிதர - கண்ணீர் மழை போல வார. கூர் ஆ - மிகுந்த அன்பை உடையை ஆகு.

பண் :

பாடல் எண் : 30

கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூர் ஆலம் - மிக்க நீர். (அதன்கண் சென்று) மேயாக் குருகு - இரையை உண்ணாமல் (ஏதோ காரணத்தால் வாடியிருக் கின்ற) நீர்ப் பறவையோடு. நைவேற்கு - (உன்னையும் உன் துணை விட்டுச் செல்ல) `வாடுகின்றாயோ` என்று சொல்லி வருந்துகின்ற என் பொருட்டு, `பாம்பே, பால் மதியைப் பனிச்சு அங்கு ஆட்டாய்` என இயைத்து முடிக்க. `பனிப்பித்து` என்பது பிறவினை விகுதி தொக்கு, `பனிச்சு` எனப் போலியாயிற்று. `நடுங்குவித்து` என்பது பொருள். அங்கு ஆட்டாய் - அந்தச் சடையிலே அலைக்கழி. தமக்குத் துன்பம் செய்பவர்களைத் தம்மால் துன்புறுவிக்க இயலாதபொழுது, அதற்கு ஏற்புடையவர்களைக் கொண்டு துன்புறுவித்தலாகிய உலகியல்பு பற்றி, தன்னை வருத்தும் பால்மதியை வருத்தும் படி பாம்பை வேண்டிக் கொண்டாள் காதல் நோயால் வருந்துகின்ற தலைவி, கடிக்கப் பாய்ந்து. கடிக்கப் போவதுபோல் பாய்ந்து (ஆட்டு). `கடித்துக் கொன்று விட்டால் சிவபெருமான் உன்னை ஒறுப்பார் ஆதலின், அது வேண்டா` என்பாள். ``கூரார் வேல் கையார்க்காய்க் கொல்லாமே`` என்றாள். வேல் - மூவிலை வேல், மூன்றாம் அடியில், கூந்தலைக் குறிப்பதாகிய `பனிச்சை என்பது, ஈற்றில் அம்முப் பெற்று, ``பனிச்சம்`` எனவந்தது. கூர் ஆர் பனிச்சம் - அடர்த்தி மிகுந்த கூந்தல். இஃது உமாதேவிதன் பாகத்தைக் குறித்தது. காட்டு ஆர் சடை - காடு போலும் சடை. இதுவும் காதற் பட்டாள் ஒருத்தியது கூற்று.

பண் :

பாடல் எண் : 31

பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் பாயிலன்நற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கொன்றை என்பது விளியேற்குமிடத்து, `கொன்றாய்` என நிற்கும்.) நற்கொன்றாய் - நல்ல கொன்றை மலரே. இதனை முதலிற் கொள்க. பாயில் புகுத - படுக்கையில் புகவும். பணை முலை மேல் பாய் - பருத்த தனங்களின் மேல் படுக்கவும் (இலன்) ``பாய்`` - பரவி. இது `படுத்து` என்னும் பொருட்டாய் நின்றது. இதனைச் செயவென் எச்சமாகத் திரிக்க. (அதனால் நீயாயினும்) என் நிலைமைகள் குளிர் சடையாற்குக் (கூறினால் உய்வேன்.) கூறாமை யால் என்னைக் கொன்றுவிட்டாய் (பெரிய இடத்தில் உள்ளவர்கட்கு) இதுவோ குணம்! (நன்மை) இது கொன்றையோடிரங்கிய காமம் மிக்க கழிபடர் கிளவி.

பண் :

பாடல் எண் : 32

குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடிக் குன்றஞ்சூழ் போகிக் குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குணக் கோடி - கோடிகுணம்; `அளவற்ற நன்மைகள்` என்றபடி. கோடா - அவற்றினின்றும் மாறுபடாத. வில்லின் குணம் - வில்லின் நாண், `குணத்துக்கு என்பதில் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது. சிவபெருமானது வில்லின் நாண் பாம்பு. அஃது பாம்புகள் வாழும் நாக லோகத்தைக் குறித்தது. குன்றம், மேருமலை. குணக்கு கிழக்கு. ``கிழக்கே ஓடி, இல் வாரான் என்க. மூன்றாம் அடியில் `இரவி` என்பதன் ஈற்று இகரம் தொகுக்கப்பட்டது. ஈற்றடியில் உள்ள ``தேர்``, அறிவாயாக` என ஏவல் வினை முற்று. `நெஞ்சை என்பது வருவித்துக் கொள்க.
`நெஞ்சே, இரவி, சிவபெருமானது வில்லின் நாணாகிய பாம்பு வாழும் உலகத்திற்கு ஓடி, அதன் பின்பு மேருவைச் சுற்றி வந்து, கீழ்த்திசையை அடைந்து, தனது தேரில் எனது இல்லத்திற்கு நேராக வரவேண்டும். அவ்வாறு அவன் வரவில்லை. ஆகையால் நாம் இரவில் (இறந்துபடாது) உயிர்வாழும் முறை சிவபெருமானுக்கு அடிமையாகும் நிலைமையைச் சிந்தித்திருப்பதே. இதனை நீ அறிவாயாக - என்பது இதன் பொருள். இதுவும் பெண்பாற் கைக்கிளை.

பண் :

பாடல் எண் : 33

திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ டென்னை யுடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திறம் காட்டும் சேயாள் - அழகினால் யாவர்க்கும் ஒன்றுபடுத்திக் காட்டப்படும் இலக்குமி. `அழகினால் யாவராலும் `இலக்குமி` என்றே எண்ணப்படுபவள்` என்றபடி. என்றது தலைவியை. ``சிறுகிளியை`` என்பதன் பின் `நோக்கி` என ஒருசொல் வருவிக்க. `சேயாள் சிறு கிளியை (நோக்கி) ஊர் அரவம் உடைத்து என்னை அரவம் ஆர்த்தானோடு கூட்டின், தீவண்ணன் தன் திறம் காட்டும்` என இயைத்து முடிக்க. தன் திறம் - திருவருள். காட்டும் - உனக்கு எந்தவகையி லாவது விளங்கச் செய்வான். மூன்றாவதாய் வந்த ``திறம்`` என்பதில் ஆக்கம் விரித்து, திறமாகக் காட்டில் ஊர்கின்ற அரவம் (பாம்பு) என்க. ஊர் அரவம் - ஊரார் தூற்றும் அலர். சால உடைத்து - முற்றிலும் போக்கி. `எனக்காக நீ தீவண்ணனிடத்தில் தூது செல்ல வேண்டும்` என வேண்டிக் கொண்டபடி.

பண் :

பாடல் எண் : 34

உடைஓடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடைஆடை தோல்பொடிசந் தென்னை உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(எப்பொழுதும்) உடைந்த ஓடுகளையுடைய காட்டில் ஆடிக்கொண்டு, ஊரார் இடுகின்ற ஐயத்தையே உண்பவனாய், தோலையே` உடையும் ஆடையும் ஆகவும், சாம்பலையே சந்தனமாகவும், என்னை ஆளாகவும் உடையவனும், உன்மத்தத்தை உண்டாக்குகின்ற பூவை (ஊமத்தையை) முடிமேல் அணிந்தவனும், ஆகிய சிவபெருமானை, நல்ல நெஞ்சமே, உனது மத்தகத்தின் மேல் (தலையின்மேல்) உள்ள குடுமிக்கு மேலே இருக்கச் செலுத்து. உடை, அரையில் உடுப்பது. ஆடை, தோள்மேல் இடுவது. இதனை `உத்தரியம்` என்பர். சந்து - சந்தனம். ஆடி அசைவதால், `ஆடை` எனப்பட்டது. வேண்டும் இடங்களில் ஆக்கம் விரிக்க. ``அப்பூதி - குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய்`` * என்பதனாலும் இறைவனுடைய திருவடிகள் அடியார்களது குடுமிகளில் சூடிக்கொள்ளும் பூவாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 35

உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா உடம்பழிக்கும் ஒண்திதலை உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில், ``உய்யா`` என்றது, `கழல விடுத்து` என்றதாம். `திதலை உடம்பை அழிக்கும் என மாற்றிக் கொள்ள. ``உடம்பு`` என்றது, உடம்பில் உள்ள அழகை. தேமலைக் குறிப்பதாகிய `திதலை` என்பது இங்கு பசலையைக் குறித்தது. தனிச் சீரில் உள்ள, ``உய் ஆம்`` என்றது, `உயிர்கட்கெல்லாம் உய்தியாய் உள்ள` என்றபடி. உய், முதனிலைத் தொழிற் பெயர். இறையானும் - சிறிதாகிலும் காண் கிடாய் - காணக் கிடத்து. உன்னைக் காண என்னைக் கிடத்து` என்க. இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 36

இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே இன்றியாம்
காட்டாநஞ் சேற்றான் காமரு வெண்காட்டான்
காட்டானஞ் சேற்றான் கலந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எழில் நெஞ்சைஎன்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. எழில் - எழுச்சி; ஊக்கம் யாம் காட்டாஇன்றி நஞ்சு ஏற்றான்- யாம் சான்றாக இல்லாமல் விடத்தை உண்டான். (தேவர்கள் நஞ்சு ஊட்டும் பொழுது நாம் இருந்திருந்தால் தடுத்திருப்போம் என்றபடி.) காட்டான் அஞ்செழுத்து. உணர்வை விளக்கும் விளக்காக அஞ்செழுத்தை ஏற்ற பெருமான், காட்டு காட்டுவது; விளக்கு, ஆன், மூன்றன் உருபு.
``காட்டான்`` - என்றது, காட்டாய் இருத்தலால்` என்றபடி. கலந்து - நம்மிடம் வந்து கலந்தமையால். இடர் - இடையூறுகள்.

பண் :

பாடல் எண் : 37

கலம்பெரியார்க் காஞ்சிரம்காய் வின்மேரு என்னும்,
கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``கலம்`` - அணிகலம். பெரியார்க்கு ஆம் சிரம் - பெரிய தேவர்களுக்கு ஆன தலையால் ஆகிய மாலை, காய் வில் - பகைவர்களை அழிக்கும் வில். என்னும் - என்று சொல்லப்படும். இரண்டாம் அடி முதலில் `களம்` என்பது எதுகை நோக்கி, ``கலம்`` எனத் திரிந்து நின்றது. களம் பெரிதாதலாவது, நிழலால் நிலத்தில் பேரிடத்தைக் கவர்தல். இறுதியில் நின்ற ``கலம்`` - மரக் கலம். ஈற்றடியில், `ஆன்மாக்கள்` என்பது முதற் குறைந்து, ``மாக்கள்`` என நின்றது.
தனம் - பொருள். ஆன்மாக்கள் யாவும் அடையத்தக்க பொருள் வீடு பேறு, `அது, நித்தியத்துவத்தை உணர்த்தும் தலைமாலை களையும், எல்லாம் வல்ல தன்மையை உணர்த்தும் மேரு வில்லையும், ஞானோபதேசத்தைக் குறிக்கும் ஆல் நிழலையும் உடையோனாகிய சிவபெருமானை முதல்வனாக உணர்ந்து போற்றாதவர்க்குக் கிடைக்க மாட்டாது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 38

கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நெஞ்சைஎன்பதை முதலிலும், ``சேரப் போய்`` என்பதை, ``மனை`` என்பதற்குப் பின்னும் கூட்டியுரைக்க. ``கையாறு`` இரண்டில் முன்னது செயல் அறுதி. அது மிகுதுயரைக் குறிக்கும். கழிகாமம் - அளவிறந்த காமம். கை ஆறு செஞ்சடை - பல பக்கங் களிலும் சுழலுகின்ற சிவந்த சடை. `கையாறு முதலிய ஐந்தும் சிவ பெருமானால் தடுக்கப்படும் - என நூல்களில் சொல்லப்படும்` என்பது முதல் இரண்டடியின் பொருள். கை ஆறு மல் திரண்ட தோளான் - வெகுண்டு வந்த கங்கையின் வலிமை பொருந்திய பல அலைகளால் துளைக்கப்படாதவன். `ஆகாயத்தினின்றும் வீழ்ந்த கங்கையை வருத்தம் இன்றித் தாங்கினான்` என்றபடி. மற்று இரண்ட தோளான் - (தேவர் பலர்க்கும் பொதுவாய் அமைந்த நான்கு தோள்களினும் வேறு பட்ட இரட்டிப்பான தோள்களை (எட்டுத் தோள்களை) உடையவன். அவனது மனையாவன திருக்கோயில்கள். `சிவபெருமானது திருக் கோயிலை அடைந்து அவனை வணங்கினால், கையாறு முதலியவை களுக்கு அஞ்ச வேண்டா` என்பதாம். மூன்றாம் அடியில் ``திரண்ட`` என்பதும், ஈற்றடியில் ``இரண்ட`` என்பதும் அன்பெறா அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினையாலணையும் பெயர்கள்.

பண் :

பாடல் எண் : 39

மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனைஆ சறச்செற்ற வானோன் மனைஆய
என்பாவாய் என்றேனுக் யானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வண் காமன் மன் ஐ ஆசு அறச் செற்ற வானோன் - வளவிய, மன்மதனது அழகிய உடம்பை, அவனது குற்றம் நீங்குதற் பொருட்டு அழித்த இறைவன். மனை - எனது இல்லத்தில். ஆய் பலிக்கு என்று வந்தான் - `பல இடங்களிலும் சென்று ஏற்கும் பிச்சைக்கு` என்று சொல்லி வந்தான் (அவனை யான் கண்டு) `மன் ஐயாய என்பாவாய்` என்றேன் - (உன் உடம்பு முழுதும்) `நிலையான தலைமையை உணர்த்து வனவாகிய என்பாய் உள்ளவனே` என்றேன். (அதற்கு) இறை - அவன். திருவே என் பாவாய் - `திருமகளே` என்று சொல்லத்தக்க பாவையே. (பெண்ணே `என்பு ஆவாய்` என நான் கூறியதை, `என் பாவாய்` எனக் கூறியதாக வைத்து,) யான் அல்லேன்; நீ; என்றான் - நான் பாவையல்லேன்; (பெண்ணல்லேன்; ஆண்.) `நீதான் பாவை` என்றான். `என்னே அவனது சொல்திறம்` என்பது குறிப்பெச்சம். குற்றமாவது சிவாபராதம். `முன்னர்த் திருமேனியழகில் ஈடுபட்ட வளாய்த் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தவள், பின்பு அவன் சொல் திறத்தில் ஆழ்ந்துவிட்டாள்` என்பது கருத்து இதுவும் காதலித்தாள் ஒருத்தியது கூற்று.

பண் :

பாடல் எண் : 40

இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
இறைஆகம் இன்றருளாய் என்னும் இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இம் மாது`` என்பதை, தனிச் சீரில் உள்ள ``இறையாய்`` என்பதற்கு முன்னர்க் கூட்டிப் பின்பு அது முதலாக, ``மாதவனே`` என்பது ஈறாக உள்ளவற்றை முதலில் வைத்து உரைக்க. ``இறை`` - இரண்டில் முன்னது கை; பின்னது சிறிது. ஆகம் - மார்பு. `இறையான்` என்பது விளியேற்று, ``இறையாய்`` என வந்தது. மறைக் காடு தலம். மாதவன் - பெண்ணை உடம்பிலே உடையவன். இங்கே மறைக் காட்டாய் - இவ்விடத்தில் மறைவான ஓர் இடத்தில் காட்டு, ``என்னும்`` என்பதைப் பல முறை கூறியது. `இவ்வாறு இவள் பிதற்றுகின்றாள்` என்றற்கு. இதுவும் காதற்பட்டாள் ஒருத்தி கூற்று.

பண் :

பாடல் எண் : 41

மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாதர் அங்கம் - உமாதேவியது உடம்பு. மா தரங்கம் - பெரிய அலைகளையுடைய. மாது அரங்கத் தேர் ஆனை ஊரான். அழகிய பொது இடங்களில் ஊர்தியாக யானையை ஊராதவன். (இடபத்தையே ஊர்பவன்) என்றபடி. `தேராக என ஆக்கம் வருவிக்க. ஈற்றடியில் உள்ள ``தேர்`` இரண்டில் முன்னது, `தெளி` என்னும் பொருட்டு. `சிவனுக்கு ஆளாக எண்ணுகின்ற எண்ணமே நல்லெண்ணம்` எனத் தெளிவாயாக - என்றபடி. பின்னது, (தெளிந்த வண்ணமே) `சிந்தனை செய்` என்பதாம். இரண்டும் ஏவல் வினைமுற்றுக்கள். ஈற்றடியில் உள்ள ``ஆனை ஊரான்`` என்றது, `திருவானைக்கா` என்னும் தலத்தில் இருப்பவன் என்றதாம்.

பண் :

பாடல் எண் : 42

தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான் விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவின்
செல்லுமெழில் நெஞ்சே தெளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(`தேர்` என்பது குறுக்கம் பெறின் `தெரு` எனவரும் ஆகலின் `தெருள்`` என்பது அந்தாதியாயிற்று.) அருகு - அண்மை யிடம். விரி உலகம் செல்லும் மதில் - விரிந்த உலகம் எங்கும் செல்லக் கூடிய மதில்கள். ஈற்றடியில் ``செல்லும்`` என்றது. `நமது ஒழுக்கம் பெரியோர்களது அவையில் ஏற்கப்படும்` என்றதாம். ``எழில் நெஞ்சைஎன்பதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 43

தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் தெளியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச் சீரில், ``தெளி ஆய்`` என்பதில் `தெளி என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், அதனையுடைய நீரைக் குறித்தது. ``பூ`` இரண்டில் முன்னது அழகு; பின்னது மலர். ``பாசம்`` என்பது ஆகுபெயராய் அதனையுடைய பொருளைக் குறித்தது. ``அடிக்கே`` என்னும் நான்கனுருபை இரண்ட னுருபாகத் திரிக்க. புனைதல் - சூட்டுதல். `புனைந்து ஏத்துவன்` என்க.

பண் :

பாடல் எண் : 44

புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப் புராணன் புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில், `புன்னை` என்பது இடைக்குறைந்து `புனை` என வந்தது. இது நெய்தல் நிலக் கருப்பொருள். இதன் பூவின் மகரந்தம் பொன்போலுதலால், இதனை உதிர்த்தல். கடலுக்குப் பொன் சொரிதல்போல உள்ளதாம். கடுக்கை - கொன்றை. புராணன் - பழையோன். புனை கடத்து - அழகிய குடமுழா ஓசையுடன். நட்டம் கம் ஆடும். நடனத்தை சிதாகாசத்தில் ஆடுதலைச் செய்யும். சிதாகாசம் சிதம்பரமாகிய தலத்தையும் குறிக்கும். திருநாமம் நட்டு - திருப்பெயரை (உள்ளத்திலும், நாவிலும்) இருத்தி. நக்கு - மகிழ்ந்து. அங்கம் ஆட்டினேன் - உடம்பை ஆனந்தக் கூத்து ஆடச் செய்தேன். `இனி எனக்கென்ன குறை` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 45

நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன நக்குரையோம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டாள் மதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நக்கு அரைசு ஆளும் நடுநாளை - (பேய்கள்) சிரித்துக் கொண்டு ஆட்சி புரிகின்ற பாதியிரவில். இதன்பின் `வந்து` என ஒரு சொல் வருவிக்க. நாரையூர் நக்கர் - `திருநாரையூர்` என்னும் தலத்தில் உள்ள சிவபெருமான் (உண்மையைக் கூறாமல்) நாம் ஐவக்கரை யோம் என்ன நக்கு - `நாம் அழகிய `திருவக்கரை` என்னும் தலத்தில் உள்ளோம்` என்று (பொய்யாக கூறி) நகைக்கவும். உரையாம் - அவரை நாம் ஒன்றும் இகழவில்லை. (அங்ஙனமாகவும்) வண்டு ஆழ் அம் கொன்றையான் மால் பணித்தான் - வண்டுகள் தேனில் மூழ்கிக் கிடக்கின்ற கொன்றை மாலையை அணிந்த நாரையூரான் (அம் மாலையைத் தாராமல்) மயக்கத்தைக் கொடுத்துப் போயினான். (அதனால் இவள்) மதிவண் தாழம் கொண்டாள் - அறிவு அவனிடத்தை தங்குதலை அடைந்தாள். `கொண்டான்` என்பது பாடமன்று. தாழ்தல் - தங்குதல். ``தாழம்``, அம் ஈற்றுத் தொழிற் பெயர். எள்ளல் பற்றிப் பன்மையில் ஒருமை மயங்கிற்று. இது செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 46

மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரைப்பர் என்னும் மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வங் கொண்ட வனப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மறைக்காடா`` என்பதை முதலிலும், ``ஈதேகொல்`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. முதற்கண் உள்ள மதி`, சந்திரன். ஆல், அசை. தனிச்சீரில் `அஃதியாதே` என்பது, ஆய்தம் தொகுக்கப் பட்டு, `அதியாதே` எனவந்தது. `வைது உரைப்பர்; அஃதியாதே` எனக் கூட்டுக. வைதுரைப்பார் செவிலியும், நற்றாயும். அஃதியாதே - அஃது ``ஏத்தும்`` என்னும் பெயரெச்சம், என்ன முறைமை. ``மறைக்காடன்`` என்பதனோடு முடிந்தது. ``ஈற்றடியில் உள்ள மாது, தலைவி. அதன் பின், `எய்ப்பு` என்பது, ``எய்வு`` என வந்தது. `இவளது எய்ப்புக்குக் காரணமான உனது வனப்பின் தன்மை ஈதோ` என்க `இனி நீ வரைதல் இன்றியமையாதது` என்பது குறிப்பெச்சம். ஏகாரம் வினாப் பொருட்டு. கொல், அடை. அம் கொண்ட வனப்பு - இவளது அழகைக் கொள்ளை கொண்ட உனது அழகு. இது தோழி வரைவு கடாயது.

பண் :

பாடல் எண் : 47

வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான் கொள்ள வனப்பால்
கடற்றிரையும் ஈரும்இக் கங்குல்வாய் ஆன்கட்
கடற்றிரையும் ஈருங் கனன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள வனப்பு, அழகு. இரண்டாம் அடியில் வனம், காடு. `பரிய` எனப் பொருள் தரும். ``பார்`` என்பது `திரண்ட` என்னும் பொருளைத் தந்தது. வனப்பால் - நீரின்கண் உள்ள (திரை) என்க. ஈற்றடியை, `கடற்று + இரை` எனப்பிரித்து, `கடற்று ஆன்கண் இரையும் ஈரும்` என இயைக்க. கடறு - காடு; என்றது முல்லை நிலத்தை. ஆன் - ஆனிரை. இரை - இரைச்சல், `இக்கங்குல் வாய்க் கடல் வனப்பால் திரையும் ஈரும்; கடற்று ஆன்கண் இரையும் கனன்று ஈரும்` என முடிக்க. இது கைக்கிளைத் தலைவி மாலைப் பொழுதின்கண் தனிப்படர் மிக்குக் கூறியது. கங்குல், இங்கு மாலைக் காலத்தைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 48

கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் கனன்றார்
உடம்பட்ட நாட்டத்தன் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``கனன்று`` என்பதை, `கல் + நன்று` எனப் பிரித்து, `நன்று கல்` என மாற்றி, இறுதியில் வைத்து உரைக்க. ஆழி - (கவலையில்) ஆழ்தலை உடையது. கனன்று ஆர் களிறு - கோபித்து ஆர்ப்பரித்த யானை; கயாசுரன். (யானைத் தோலின் போர்வை தன்னிடத்தில்) மால் காட்ட - மாயானது நிறத்தைக் காட்ட. கனன்றோர் - மற்றும் பகைவர் சிலர். உடம்பு அட்ட நாட்டத்தன் - உடம்பை அழித்த நாட்டத்தன், ``நாட்டம்`` என்பது இரட்டுற மொழித லாய், `கண்` எனவும், `கருத்து` எனவும் இருபொருள் தந்து. மன்மதன், திருபுரத்தசுரர் ஆகிய இரு திறத்தினர்க்குப் பொருந்திற்று. ``கனன்றார்`` என்பது பொதுப்பட, `பகைத்தவர்` என்னும் அளவாய் நின்றது. ஆளா உடம்பட்ட நாள் - தொண்டனாக ஏற்றுக் கொண்ட நாள். `நாளில் காட்டிய தன் உரு` என விரித்து. `அதனை நன்று கல்` என முடிக்க. நன்று கற்றலாவது, வருணிக்கவும், புகழவும் வன்மை எய்துதல், ``உடம்பட்ட நாள் தன் உரு`` என்றதனால், இவ்வாசிரியர் இறைவனால் எவ்வகையிலோ ஆட்கொள்ளப்பட்டமை விளங்கும்.

பண் :

பாடல் எண் : 49

உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம் உடையன் உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற் கீதோ வடிவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உரு இயலும் - உடம்பின் நிறமும்; உம்மை சிறப்பு. இரண்டாம் அடியில் `இயலும்` முதற் குறைந்து வந்தது. இயலும் - போகின்ற. உரு இயலும் மால் ஏற்றான் - அழகாக நடக்கின்ற பெரிய இடப உருவத்தை உடையவன்; திருமால், இங்கும் எண்ணும்மை விரிக்க, மால் ஏற்றாற்கு - மயக்கத்தை ஏற்பதற்குக் காரணமாய் இருந்த வனுக்கு; இருந்தவன் சிவபெருமான். `வடிவு ஈதோ` என்க. ஓகாரம் வியப்பு.

பண் :

பாடல் எண் : 50

வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா வடிவார்வேல்
முற்கூடல் அம்மான் முருகமருங் கொன்றையந்தார்
முற்கூட மாட்டா முலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உந்தி வடி வார் அறப் பொங்கு வண் கச்சு (புனைந் தும்) - உந்தியின்மேல், நீண்டு தொங்குகின்ற வார்போலவே மிக விளங்குகின்ற கச்சினை ( பாம்பாகிய கச்சினை)ப் புனைந்தும் பின்னர், ``புனைந்தும்`` என்றதற்கு, மார்பில் புனைந்தும்` என உரைக்க. வடம் - தலைமாலை. வடிவு ஆர் வடம் - அழகு நிறைந்த வடம், ``புனைந்தும்`` என்பது முன்னரும் சென்றியைந்தது. வடிவு ஆர் வேல் - கூர்மை பொருந்திய படைக்கலம்; சூலம், முற் கூடல் - தலங் களில் முன்னிற்பதாகிய மதுரை, இதனை, ``முளைத்தானை எல்லார்க் கும் முன்னே தோன்றி`` * என்னும் அப்பர் வாக்கினாலும் அறிக, இனி மடக்கணி கருதாது, `முக்கூடல்` என்பது பாடமாயின், `திரிகூடமலை` என்க. அவ்வாறன்றி, `முக்கூடல் வேர்திரிசூலம்` என்றலும் ஆம். தார்- போக காலத்தில் மார்பில் அணியும் மாலை, `அதனைக் கூட மாட்டா` என்றதனால், `மார்பை அணையப் பெற வில்லை` என்றதாயிற்று. முருகு - நறுமணம். தேனும்` ஆம் முலை கூடமாட்டா` என்க. ``மாட்டா`` என்ற, `மாட்டாமை யுடையனவாய் வருந்துகின்றன` என்றபடி. `இவைகளைப் பெருமையால் பெண்மை நலம் வாயாதோர் பலர் இருக்க. யாம் இவைகளைப் பெற்றும் பயன் என்னை` என்பது குறிப்பெச்சம் இதுவும் கைக்கிளைப் பட்ட தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 51

முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் முலைநலஞ்சேர்
மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முலை`` மூன்றில் முன் இரண்டில் `முல்லை` என்பதன் இடைக்குறை. அவற்றுள் முன்னது முல்லை நிலம், `கானப் பேர்த்தலம் முல்லை நிலத்தில் உள்ளது` என்றபடி. பின்னது கற்பு, `கற்பு நலம்` என்பது அதனையுடைய பெண்ணை - கங்கா தேவியைக் குறித்தது. ``மாதேவா`` இரண்டில் முன்னது இருமொழித் தொடர். `பெண்ணே, வா` என்பது அதன் பொருள் பின்னது சிவபிரானை `மாதேவா` என விளிக்கும் விளி. இவற்றுள் பின்னின்ற ``மாதேவா`` என்பதை முதலிற் கொள்க. ``என்னும்; என்னும்`` என்பன, `என்று பிதற்றுகின்றான்` என்னும் பொருளன. வாய்சோர்தல் - வாய் தன்னை யறியாமலே பலவற்றைச் சொல்லுதல். `வாய் சோர என்னும், என இயைக்க. இவளை நீ, `நலம் சேர் மாத, வா` என்று அழைத்து, நின் வளர் கொன்றை காரணமாக வளை சோர்தலை நீக்கு` என முடிக்க. ``கொன்றை`` என்பதில் தொக்கு நின்ற `ஆன்` உருபு. `அது காரணமாக` என்னும் பொருளது. தன்வினை. பிறவினை இரண்டிற் கும் பொதுவாம் ``சோரல்`` என்பது இங்குப் பிறவினைக் கண் வந்தது. இது தோழி மாலை யிரந்தது. ``முலைநலஞ்சேர்`` என்னுந் தொடர் மீள மீள வந்து, பொருள் வேறுபட்டது சொற் பின்வருநிலையணி.

பண் :

பாடல் எண் : 52

வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே காணில் வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆழி நன்னெஞ்சே, வளை ஆழி வன்னஞ்சைக் கண்டு அமரர் வாய்சோர வந்து எதிர்ந்த வன்னஞ் சக்கு அண்டன் காணில் ஆழி வளையோடு அகல மால் தந்தான்; வரில் வளை` - என்னும் - என இயைத்து முடிக்க. ``ஆழி`` மூன்றில் முதலது மோதிரம்; இடையது, துன்பத்துள் ஆழ்தலையுடையது, இறுதியது கடல், ``வளை`` மூன்றில் முதலது மோதிரம்; இடையது, துன்பத்துள் ஆழ்தலையுடையது, இறுதியது கடல், ``வளை`` மூன்றில் முதலது வளையல் இடையது, ``வளைத்துக் கொள்`` என முற்று, இறுதியது `வளைந்த` (பூமியைச் சூழ்ந்த) என வினைத் தொகை. காணில் - காட்சியளவில் வன்னம் - ஒளி. சக்கு (சட்சு) - கண், ஒளியான கண் - `ஞாயிறு திங்கள், தீ` என்பனவாய் அமைந்த கண்கள். அண்டன் - தேவன் `வந்தெதிர்ந்த அண்டன்` என்க. என்னும் - என்று என் தோழி பிதற்றுகின்றாள். இது தலைவியை ஆற்றுவிக்கும் தோழி கூறியது.

பண் :

பாடல் எண் : 53

வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க. அந்த அடியில், ``மேல் ஈசன்`` என்பது `மேலாய சிவன்` என்னும் பொருளது, இடும் அணல் ஈசன் - (எமக்கு எல்லாவற்றையும்) தருபவனாகிய ஈசன்; `இது பொழுது நோய் செய்தான்` என்பதாம். ``வரி`` மூன்றில் முன்னது அழகு. இடையது, கீற்று. இறுதியது `வாரி` என்பது குறுகிநின்றது, வாரி - கடல். ``நீர்`` இரண்டில் முன்னது நீர்மை; பின்னது தண்ணீர். அம் நலம் - அழகினால் உண்டாகின்ற இன்பம். `இடு மணல் மேல் நலங் கொண்டான்` என்பது கைக்கிளைத் தலைவி தான் கண்ட கனவைத் தோழிக்குக் கூறியது.

பண் :

பாடல் எண் : 54

அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்
தக்காரந் தீர்ந்தேன் அடியேனுக் கக்காரம்
பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில் உள்ள ``அக்கு`` - எலும்பு ஆரம் - ஒளிமணிவடம். நாண் - அரைநாண். அறுவை - துணி; உடை. பொடி- சாம்பல். சாந்து - சந்தனம். `ஆரம் அக்கு; நாண் அரவம்; அறுவை தோல்; சாந்து பொடி` என்க. இரண்டாம் அடியில் உள்ள அக்காரம் - அத வெறுப்பு. அஃதாவது, `மாலை எலும்பு, சாந்து சாம்பல்` என்பன போல இகழ்தல். `காரம் தீர்ந்தேன் ஆகையால், அடியேனுக்கு அவன் அக்காரம் (சருக்கரை) என்க. ``சாந்து`` என்பதன்பின். `என்னும்` என ஒருசொல் வருவிக்க. ``பண்டரங்கன்`` இரண்டில் முன்னது, ஒருவகைக் கூத்து. பின்னது, பழமையான நடன அரங்கம். `வெங்காடாகிய பழைய அரங்கினை உடையவன்` என்க. ``பவன்`` என்பது சிவபெருமானது திருப்பெயர்களுள் ஒன்று.

பண் :

பாடல் எண் : 55

பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டில்
காலங்கை ஏந்தினான் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரி காடு - கரிந்த காடு; சுடுகாடு. ``கால் அங்கை ஏந்தினான்`` என்றது, `ஊர்த்துவ தாண்டவம் ஆடினான்` என்றபடி. ``அவனே`` என்பதை இதன்பின் பின்னும் முதல் அடியில் ``பவனடி`` ஒழிந்தவற்றை அதற்குப் பின்னும் கூட்டி, ``காண்`` என்பதை அசையாக்கியும், ``பவன் அடி பார்`` என்பதை வேறு முடிபாக வைத்தும் உரைக்க. பவன் - சிவன். சிவபெருமான் அனைத்துப் பொருள்களும் தானாகியும், பூமியே திருவடியாகக் கொண்டும் விளங்குதலைக் கூறியவாறு. இரண்டாம் அடி முதற்கண் உள்ள பவனம், தேவலோகம், ஈற்றில் உள்ள பவனம், மேடம், இடபம் முதலிய இராசிகள்.

பண் :

பாடல் எண் : 56

காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காணம் - பொற்காசு. கவலாது - கவலைப்படாமல். ஏகாரம் தேற்றம். `அங்கையால் தொழுது காண்` என மாற்றுக. காண் நங்கை - தன்னைக் கண்டு வழிபட்ட உமாதேவி. `அவள்பாவிக்கப் படும் பொருளாய் நின்றான்` என்க. ஈற்றடியில் உள்ள ``பாவனை`` என்பதை, `பா + வனை` எனப்பிரிக்க. பா - பாமாலை. வனைதல் - ஆக்குதல். `பதத்துக் கண்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. நின்ற பதம் - நிலையான பாதங்கள். நிலையாவது, அடைந்தார் பின் நீங்காமை.

பண் :

பாடல் எண் : 57

பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்
தஞ்சலிகள் என்பாலும் ஆக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பதங்கம் - பறவை. அது கருடனைக் குறித்தது. வரை - மலை, கருடனாகிய மலைமேல். உயர்ந்தான் - ஏறி வருபவன்; மாயோன். பால் - அவனது பாகத்தை. மகிழ்ந்தான் - தன்பாகத்தில் இருக்க விரும்பினவன். பதங்கன் - சூரியன். சூரியன் தக்கன் வேள்வி யில் பல் உதிர்க்கப்பட்டான் அவனது பதம் - பாதங்களில், நெஞ்சே, அன்பாலும் கூர்ந்து அஞ்சலிகள் (கும்பிடுகள்) ஆக்குதி; (அதனால்) என்பாலும் நீ அஞ்சலிகள் (அஞ்சாமைத் தன்மைகளை) ஆக்கு. அஞ்சப்படும் பொருள்கள் பலவாகச் சொல்லப்பட்டன. `சிவ பெருமானைத் தொழுதால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை` என்பது கருத்து, ``சுண்ணவெண் சந்தனச் சாந்தும். உடையார் ஒருவர் தமர் நாம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை`` 1, ``நாம் ஆர்க்கும் குடியல்லோம்; நமனை யஞ்சோம்`` 2 என்னும் அப்பர் திருமொழிகளையும் ``அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர் ... ... கொன்றை நயந்தாளும் - பச்சம்முடை அடிகள் திருப்பாதம் பணிவாரே``* என்னும் திருஞானசம்பந்தர் திருமொழியையும் காண்க. காண், முன்னிலையசை. என்பாலும் - என்னிடத்திலும்.

பண் :

பாடல் எண் : 58

ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
ஆக்கூர் அலர்தான் அழகிதா ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோன் நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆக்கூர்`` மூன்றில் முதலது, ``ஆக்கு ஊர் பனி`` எனப் பிரித்து, `பொழிகின்ற, உலகை மறைக்கின்ற பனி` எனப் பொருள் கொள்ளுதற்கு உரியது. இடையது, ஊர் ஆக்கு அவர் - ஊரார் தூற்று பழி. இறுதியது. `திரு ஆக்கூர்`த் தலம். மாடம் - மாடக் கோயில். மறை ஓம்பு மாடம் - காவல் செய்கின்ற மாடம். மா மறையோன், சிவபெருமான், ஈற்றடியில் உள்ள மறை, வேதம். மாதவர், அந்தணர். வந்து - வந்ததனால் `திருஆக்கூர்ப் பெருமான் அங்குள்ள அந்தணர்களுக்கு அருள்புரிய வேண்டி வீதியில் வந்ததனால் நான் பனியால் வாடி ஆவி சோர்ந்து ஆழ்கின்றேன்` எனக் கைக்கிளைத் தலைவி கூற்றாக உரைத்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 59

வந்தியான் சீறினும் வாழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடியில் `நம்பு + அரனை` எனப்பிரிக்க. நம்புதல். அரனை, சடையானை, பரனை (அவன்) வந்தியாய் வந்த பொழுது யான் சீறினும் நெஞ்சே (நீ அவனை) நாள்தோறும் நட்டு நட்புக் கொண்டு வந்தியா (வந்தித்து - வணங்கி) உள்ளத்து வைத் திராய்` என இயைத்து முடிக்க. தனிச் சீரில் உள்ள ``வந்தி`` - மங்கல மாகப்படுபவன். `வந்தியாய் வந்து` என முன்னே கூட்டுக. ``வந்து`` என்பதனை, `வர` எனத்திரித்துக் கொள்க. `ஆற்றாமை காரணமாக எனக்குச் சீற்றம் எழலாம்; ஆயினும் நீ அவனை வெறாதே` எனத் தலைவி தன் நெஞ்சிற்கு அறிவுறுத்தினாள். வாழி, முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 60

நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் நட்டமா
டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நட்டம் ஆகின்றன - இழப்பு ஆகின்றன. சங்கம் - சங்க வளையல். நட்ட மா நன்னீர்மை - நட்புக் கொண்ட பெரிய, நல்ல இயல்பு, `நன்னீர்மையால்` என உருபு விரிக்க. நட்டம் ஆடியான் - நடனம் ஆடுபவன். `ஆடியான்` என்பது நீட்டல் பெற்றது. ``இலம்`` என்னும் பன்மை இரக்கக் குறிப்புணர்த்தி, ``நான்`` என்ற ஒருமை யோடு மயங்கிற்று. இதுவும் கைக்கிளைத் தலைவி தோழியை மாலையிரக்க வேண்டியது.

பண் :

பாடல் எண் : 61

இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே
இலமலரே ஆயினும் ஆக இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ``ஆடினேன்`` என்பதை இறுதிக்கண்ணும், ``இலமலரே ஆயினும் ஆக`` என்பதை அதன்பின்னும் கூட்டியுரைக்க. மூன்றாம் அடியில் உள்ள ``ஆம்பல்`` என்பது ஆம்பல் மலரின் நிறத்தைக் குறித்தது. ``செவ்வாயார்`` என்றதும், ``சேவடியார்`` என்றதும் தோழியரை. ஏகாரம் வினாப் பொருட்டு. ஆடுதல் - உரையாடுதல். இரண்டில் முன்னது வெளிப் படுத்துதலையும், பின்னது அளவளாவுதலையும் குறித்தன. ஈற்றடியில் ``ஆம்`` என்பதில் `ஆளாய்` என ஆக்கம் விரிக்க. முதலடியின் முதலில் `இலவு` என்பது உகரம் இன்றி வந்தது. இலவ மலர். சிவப்பு நிறம் உடையது ஆதலின் சேவடிக்கு உவமையாயிற்று. இரண்டாம் அடியில் உள்ள ``இலம்`` - இல்லம்; அஃதாவது குடிமை.
அலர் ஆதல் - பழிச் சொல்லுக்கு உள்ளாதல். `தோழியர்க்கு உரையாமலே யான் வெண்டலையர்க்கு ஆளாய் அளவளாவினேன்; அதன்மேலும் நமது குடி பழிச் சொல்லுக்கு உள்ளாவதாயினும் ஆகுக. சேவடியார் (இறைவர் பால்) தூது ஏகப்பெறாரோ? (பெற்றால் யாதும் உய்வேன்.) யாவரும் பிறர் தூற்றும் பழியை இலமாவோம்` என இயைத்து முடிக்க. இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 62

ஆளானம் சேர்களிலும் தேரும் அடல்மாவும்
ஆளானால் ஊரத்தான் ஏறூறூர்ந்தே ஆளான்போய்
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆளான் அஞ்சு ஏர் களிறு - மனிதரால் அஞ்சப் படுகின்ற, அழகிய யானை. மா - குதிரை. ஆள் ஆனார் - தனக்கு அடியர் ஆயினார். பொய் ஆளான் - ஒரு ஞான்றும் பொய்யைப் பயன்படுத்தாதவன்; `வாய்மையையே உடையவன்` என்றபடி. நாடகங்கள் - பலவகை நடனங்கள். நாடு அகங்கள் - நினைக்கின்ற மனங்கள். ஆடி - கண்ணாடி போலத் தூய்மையைப் பெறும். `ஆடி ஆம்` என ஒரு சொல் வருவிக்க. நயந்து - விரும்பி. நயந்து `நாடு அகங்கள்` எனக் கூட்டுக. `ஏறூருந் தாளான்` என்பது பாடம் அன்று.
தான்நாளும் பிச்சை புகும்போலும், தன்அடியார்
வான்ஆள, மண்ஆள வைத்து *
என நக்கீர தேவரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 63

நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட நயந்தநாள்
அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்
அம்பகலன் பாயும் அலர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நய் அந்த நாள் நன்னீர்மை வாட - வருந்துகின்ற அந்த நாட்களில் எனது நல்ல அழகெல்லாம் வாடிப் போதலால், நய் அந்த நாள் நற் சடையான் கொன்றை யான் இரப்ப - இறந்துபடுகின்ற இறுதி நாள் வந்தது போன்ற நிலையில் யான் நல்ல சடைகளையுடைய சிவபெருமானது கொன்றை மாலையை இரக்கவும். நயந்த நாள் அம் பகல் அம் செற்றான் அருளான் - அவனைக் கண்டு நான் விரும்பிய நாளாகிய அழகிய நாளில் எனது அழகை அழித்துச் சென்றவன் அதனை எனக்கு ஈயவில்லை. அநங்க வேள் அம்பு அலர்ந்து அகலம் பாயும் - காமவேளது அம்புகள் எங்கும் பரந்து வந்து என் மார்பிற் பாயாநின்றன; (யான் இனிச் செய்வது என்!) `நை` என்பது, `நய்` எனப் போலியாய் வந்தது. ``அந்த`` இரண்டில் பின்னது சுட்டு; முன்னது `அந்தம்` என்பதன் புணர்ச்சி விகாரம். இதுவும் கைக்கிளைத் தலைவி ஆற்றாமை கூறியது.

பண் :

பாடல் எண் : 64

அலங்காரம் ஆடரவம் என்புதோல் ஆடை
அலங்கார வண்ணற் கழகார் அலங்காரம்
மெய்காட்டும் வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அலங்காரம்`` மூன்றில், முதலது அலங்கு ஆரம் - (மார்பில்) அசையும் மாலைகள். அவை அரவமும், எலும்புமாம். இடையது அழகு. வண்ணற்கு - நிறத்தையுடையவன் (சிவ பெருமான்) பொருட்டாக. அழகு ஆர் அலங்கு ஆர மெய் காட்டும் வார் குழலார் - தங்களது மேனி யழகு, நிறைந்த ஒளியை வீசுகின்ற முத்தின் நிறத்தைக் காட்டி நிற்கும் நீண்ட கூந்தலையுடைய மகளிர் (உடல் வெளுத்துப் போன மகளிர்` என்றதாம்.) இனி என்னாவாரோ! (இவர்கட்கு இனி) ஏற்றான் மெய்காட்டும் வீடு விரைந்து ஆம் - இடப வாகனத்தையுடையவன் தனது உண்மையை விளக்குகின்ற வீடு விரைவில் கிடைத்துவிடும்போலும்! (`இறந்துபடுவர் போலும்` என்றபடி.)

பண் :

பாடல் எண் : 65

விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா
விரையார் பொழிலுறந்தை மேயான் விரையாநீ
றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விரை ஆர் புனல் - விரைந்த (வேகமாய்) ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற) நீர். பொன்னாவிரை - பொன் போலும் ஆவிரம் பூ. ஆர் - நிறைந்த. உறந்தை - உறையூர்; முக்கீச்சரம். நீறு விரையா அணிந்தான் - திருநீற்றை வாசனை பொருந்திய சந்தனமாக அணிந்தவன். `விரைவாக` என்றதற் கேற்ப, `மாலையாக` என்பது வருவித்து, `மாலையாக என்பை அணிந்தான்`` என்க. ஈற்றடியில் ``ஈசன்`` என்பது `அவன்` எனச் சுட்டளவாய் நின்ற `அவன் எனக்குப் பணிந்தான்; என்` - என்க. எனக்கு - என் அளவிற்கு. பணிந்தான் - இறங்கி வந்து அருள் செய்தான். என் - என்ன வியப்பு.

பண் :

பாடல் எண் : 66

எனக்குவளை நில்லா எழிலிழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான் இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக்
கண்டத்தால் நெஞ்சேகாக் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இனக் குவளைக் கண்டத்தான் ... ... எம்மானைக் கண்ட அத்தால், (அவன்) நக்கு, வளை நில்லா நோய் என் செய்தான்? (இவள்) `எனக்கு வளை நில்லா; எழில் இழந்தேன் என்னும்; (இனி இவளைக் காக்கை நெஞ்
என இயைத்து உரைக்க. இனக் குவளைக் கண்டத்தான் - கூட்டமான நீலோற்பலப் பூப்போலும் கரிய கண்டத்தை யுடையவன். கண்ட அத்தால் - அவனைக் கண்ட அதனாலே, `கண்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அதனால்` என்பது `அத்தால்` என மருவிற்று. நக்கு - சிரித்து; `அன்பு காட்டி` என்றபடி வளை நில்லா நோய் - தாழ்ந்து நில்லாது உயர்ந்து எழுகின்ற நோய், காக்கை - காத்தலைச் செய்வது. நெஞ்சு காத்தலாவது, அவனை நினையாது மறத்தல், என்னும் - என்று சொல்லி இரங்குகின்றாள்.

பண் :

பாடல் எண் : 67

காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாய்ப்பால் நையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊர்குரக்குக் காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான தமைவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதலடியில் ``காக்கைவளை`` என்பதை, `கை வளை கா` என மாற்றுக. ``கா`` - கழன்று வீழாமல் காப்பாற்று. ஏவல் வினை முற்றின்முன் வல்லொற்று மிக்கது, என்பு - என்றல்; புகர ஈற்றுத் தொழிற் பெயர். என்பு ஆர்ப்பார்க்கு அன்பாய் - என்பதாகச் சொல்ல ஆரவாரிக்கின்றவர்கள் மேல் அன்பாய். தலைவி தன்னைப் பிறர் போலக் கூறினாள் ஆதலின், ``ஆர்ப்பார்`` எனப் பன்மையாற் கூறினாள்; பால் நையாது - அவர்கள்பால் மனம் இரங்காமல் ஏகாரம் தேற்றம். காக்கை வளை என்பு ஆர்ப்பான் - காக்கைகள் சூழ்கின்ற எலும்புகளை (`புறங்காட்டில் உள்ள எலும்புகளை` என்றபடி) மாலையாக அணிந்தவன்; சிவபெருமான். ``குரக்குக் கா`` என்பதும் ஈற்றடியில் உள்ள ``ஆடானை`` என்பதும் தலங்கள். கை வளை ஆடு ஆனை ஈர் உரியன் - தும்பிக்கை வளைந்து அசைகின்ற யானையை உரித்த தோலையுடையவன். ஆண் பெண் - ஆணும் பெண்ணுமாய உருவம் உடையவன். அமைவு - பொருந்தும். `காதல் மிக்கு மெலி கின்ற மகளிர், - எங்கள் கை வளைகளைக் கா - என்று முறையிடு கின்றவர்கள்மேல் அன்பாய், அவர்பால்இரக்கங் கொள்ளாமலே சிவன் குரக்குக்கா, ஆடானை ஆகிய தலங்களில் வாளா அமர்ந் திருத்தல் பொருந்துவதொன்றே` எனத் தலைவி இரங்கினாள். `பொருந்துவது` என்றது எதிர்மறைக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 68

அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமை - மூங்கில். அம் மாமை - அழகிய, மாந்தளிர்போலும் நிறம், அமையா நோய் - தீரா நோய், சாமத்த - சாமவேதம் பொருந்திய. `சாமத்தனாய்` என ஆக்கம் விரிக்க. சாமத்தன் - இடாயாமத்திலே வந்தவன். ``அணங்கே`` எனத் தோழியை தலைவி விளித்தாள். ஆகவே, இது தோழியைத் தூது செல்ல வேண்டிக்கொண்ட தலைவி கூற்றாயிற்று.

பண் :

பாடல் எண் : 69

தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன் தண்பழனன் தானத்
தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தான் + நக்கன்` எனப் பிரிக்க. நக்கன் - உடை யில்லாதவன்; திகம்பரன்; திக்குகளையே ஆடையாக உடையவன். நக்க பிறையன். ஒளி வீசுகின்ற பிறையை அணிந்தவன். கோடு - தந்தம், தானக் களிறு - மத நீரையுடைய யானை தானத்து அரையன் - தானம் செய்தற்கு வேண்டப்படும் சற்பாத்திரங்களுள் முதலாவதான வன். `சிவனை நோக்கிச் செய்யும் தானங்களை விடச் சிறந்த தானம் பிறிதில்லை` என்றபடி. ஆயிழை - உமை. மால் - மாயோன். அரையன் - இவர்களைப் பாதி உடலிற் கொண்டவன் `அருள் உடையான்` எனமாற்றி, `இங்ஙனம் கூறப்பட்ட இவன் உயிர்கள் மாட்டுப் பேரருள் உடையவன்` என்க.

பண் :

பாடல் எண் : 70

அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதம் அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதலடியிலும், இரண்டாம் அடியீற்றிலும் உள்ள ``அருணம்`` - சிவப்பு. அஃது ஆகுபெயராய், முதற்கண் நெருப்பினை யும், பின்னர் சூரியனது கிரணங்களையும் குறித்தன. பால் - பான்மை; தன்மை. ஆமாத்தூர், ஒருதலம். இரண்டாம் அடியில் உள்ள ``அருணம் பால்`` என்பதை, `அருள் + நம்பால்` பிரித்து உரைக்க. `ஆழி நெஞ்சே ஓர்; உவ` என மாற்றி, `துன்பத்தில் ஆழ்கின்ற நெஞ்சே, நினை; அதன் பயனாக மகிழ்ச்சியடை` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 71

உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை உவவா
றெழுமதிபோல் வாள்முகத் தீசனார்க் கென்னே
எழுமதிபோல் ஈசன் இடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசனார்க்கு ஈசன் இடம், உத்தமனை மலர் கொண்டு உள்கி மகிழும் வேட்கை எழுமதி போல் என்` என இயைத்து முடிக்க. ஏகாரம் தேற்றம். ``உத்தமன்`` என்பது ``ஈசனார்`` எனப்பட்ட வனையே குறித்தலால் `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. உவவா உள்கி - மகிழ்ந்து நினைத்து, இரண்டாம் அடியில் `உவ்வவா` என்பது வகரமெய் குறைந்து ``உவவா`` என வந்தது. உகரம் சுட்டு. `உந்த அவாவால் மனம் மகிழ்கின்ற வேட்கை எழும் மதி` என்க. மதி - புத்தி. உவவு ஆறு - உவா நாளில் (பௌர்ணிமையில்) எழுகின்ற திங்கள். என் - என்று அறி, ஈற்றடியில் உள்ள ஈசன் - தலைமை; `ஈசனார்க்கே, நறுமலர் கொண்டு உள்கி மகிழும் வேட்கை எழுகின்ற புத்தியே சிறப்புடைய இடம்` என்றபடி உயர்த்தற் கண் ஒருமையோடு பன்மை மயங்கிற்று.

பண் :

பாடல் எண் : 72

இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி இடமாய
மூவா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில், இடம் - இடப்பக்கம். மால் - மாயோன், மாலை - அந்தி வானம். தம்பம் இட - நிலைநிற்றலை இடும் படி. மால் வல மான் அம் சேர்த்தி - மருளுதலை மிக உடைய மானை அழகாக ஏந்தி. `அதற்கு (மதிக்கு) இடமாய சடை` என இயைக்க. புரைய - உயர்ந்து விளங்க. மூவா மதியான் - கெடாத அறிவை உடையவன்; `நித்தியன்` என்றபடி. முனி - தவக் கோலத்தையுடைய வன். இடப்பக்கத்தில் மாயோனை உடையனாய் இருத்தல் முதலிய வற்றைக் கூறி, இறுதியில் அவனது தவக்கோலத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 73

முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னுமர்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும் முனிவன்மால்
போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முனிவன் - தவக் கோலத்தையுடையவன். மால் சடை - பெரிய சடை. என்னும் - என்று சொல்வாள். முனி வன்மால் செய்து - யாவரும் வெறுத்தற்குரிய வலியமையலைக் கொண்டு. முன் நிற்கும் - அவன் எதிரில் போய் நிற்பாள். முனிவன்மால் போற்றார் - கோபிக் கின்ற, வலிய அஞ்ஞானத்தையுடைய பகைவர். அடிகள் போற்றா நாள் இன்று. பாதங்கள் இவளைக் காப்பாற்றாது கைவிட்ட நாளாகிய இன்று புலர்ந்து - மெலிந்து `இவள்` என்னும் எழுவாய் வருவித்து, `இன்று புலர்ந்து என்னும், `நிற்கும்` என முடிக்க. இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி நொந்து கூறியது.

பண் :

பாடல் எண் : 74

புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில் தனிச்சீர் முதலாகத் தொடங்கி யுரைக்க. `கல் தளி`, `கற்றளி` ஆதல்போல, `மண் தளி`, `மண்டளி` யாயிற்று. `மண்ணால் (சுடுமண்ணால் - செங்கற்களால்) ஆகிய கோயில்` என்பது பொருள். பல கோயில்கள் இவ்வாறு அமைந்தன. `திருவாரூர்ப் பரவையுள் மண்டளி` என்பதும் எண்ணற்பாற்று. இங்குக் குறிக்கப்பட்டதும் அதுவேயாகலாம். புலர்ந்து ஆய மண் - சுடப்பட்டு அமைந்த மண். ஈற்றடியில் `மண்டு` + அளியன் - எனப் பிரித்து, `மிக்க அன்பில் விளங்குபவன்` என உரைக்க. `அம்மானவன்` என்பதில் `அவன்`, பகுதிப் பொருள் விகுதி. (பொழுது, பயனின்றி வீணே) வீணே விடியுமாயின். புறன் உரை - அலர். அஃதே - முன்னிருந்த நிலையினதே. `புல் ஆர்ந்த ஆன்` என்பதில் ``ஆர்ந்த`` என்பது முதல் குறுகியும், ஈற்று அகரம் தொகுக்கப்பட்டும் நின்றது - `புல்லை உண்கின்ற இடபம்` - என்பது பொருள். புன்கூர் - திருப்புன்கூர்த் தலம், `மனம் என்னும்` என முடிக்க. என்னும் - என்று பதைக்கும். கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 75

மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார வாரான் மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியின் தனிச் சீரில் ``மனமாய`` என்பதை, `மன் அம் ஆய் அ` எனப் பிரித்து, `நிலை யான அழகாக அந்த` எனப் பொருள் கொண்டு, `அப் பொன் மாலை` என இயைத்து, `அந்தப் பொன்போலும் கொன்றை மாலையை` என உரைக்க. ஈற்றடியில் உள்ள மாலை - தன்மை. `தருப்பை பொன் மாலை` என்பதை, பொன் தருப்பை மாலை` என மாற்றி, `பொன்னாலாகிய தருப்பையின் தன்மையை உடைய சடை` என்க. மனம் மாய நோய் செய்தான் - மனம் அழியும்படி துன்பத்தை உண்டாக்கினான். தாரான்- தாமாட்டான். மனம் ஆய உள் ஆர வாரன் - எனது மனநிலையை உள்ளபடி உணர்தற்கு என் இருப்பிடத்தினுள்ளும் வரமாட்டான். `என் செய்வது` என்பது குறிப்பெச்சம். இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 76

போந்தார் புகவணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார் போந்தார்
இலங்கோல வாள்முகத் தீசனார்க் கெல்லே
இலங்கோலந் தோற்ப தினி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புரம் எரித்தார்`` என்பதை முதலிற் கொள்க. போந்தார் - வீதி வழியே வந்தார். புக அணைந்தார் - என் இல்லத்துள் புகுவார் போல அணுகிவந்தார். பொன் நேர்ந்தார் பெற்றோர்க்குப் பொன் தரவும் இசைந்தார் (ஆயினும்) பொன் ஆம் ஐ போம் தார் ஒழியார் - பொன் போலும் அழகு பொருந்திய கொன்றைமாலைய விடார்; (தாரார்) போந்தார் - மறைந்துவிட்டார். எல்லே, இரக்கச் சொல், இனி, `எல் - பகல்` எனக் கொண்டு, `எல்லே போந்தார்` என மேலே கூட்டி உரைப்பினும் ஆம் மூன்றாம் அடியில் ``இலங்கு ஓலம்`` என்பதை `ஓலம் இலங்கு` என மாற்றி, `பலரது முறையீடுகளை யடைய முகத்தை யுடைய ஈசனார்` என்க. ஈசனார்க்கு - ஈசனார் பொருட்டு. கோலம் தோற்பது இனி இலம் - அழகை இழப்பதை இனி யாம் செய்ய மாட்டோம். இஃது அருளாமை நோக்கி ஊடி யுரைத்தாள் கூற்று.

பண் :

பாடல் எண் : 77

இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தோடங்கி, ``தாம்`` என்பதை, ``ஆளாக`` என்பதற்கு முன்னே கூட்டியுரைக்க. இனியா நஞ்சு - இனிப்பை (விருப்பத்தை) உண்டாக்காத நஞ்சு. நஞ்சு ஊண் இருக்கைக்கு உள்ளான் இனியான் - நஞ்சினை உண்டு, அதனை உள்ளே அடக்கியதனால் தானும் அதுவே போன்று இனித்தல் இல்லாத வன். `கையால் தாளம் பாடி` - என மாற்றி, `தாளத்தோடு` என உருபு விரிக்க. முதல் அடியில், ``இனி`` என்றது, `அவன் சிறிதும் அருளான் ஆனபின்பு` என்றபடி. இஃது ஆசிரியர் ஊடிக் கூறியது. ``உங்களுக்கு ஆள் செய்ய மாட்டோம்; ஓணகாந்தன் தளியுளீரே`` என்றாற் போல்வன காண்க.

பண் :

பாடல் எண் : 78

தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சாடமகுடர் தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாம் அரை சேர் பாம்பர் - (நான்முகற்கும், மாற்கும் அரியாராகிய) அவர் தமது இடையிலே (கச்சாகச்) சேர்ந்த பாம்பினை உடையவர். தா மரைசேர் பாணியார் - தாவுகின்ற மான் பொருந்திய கையை உடையவர். தார்ந்து அளிப்பர் பார் ஓம்பு - பாசம் நீங்கி, அது நீங்காதாரை ஆள்பவர்களது தூய உலகத்தை (சுத்த மாயா புவனங்களை)க் காக்கின்ற (பரமசிவனார்) பாணித்தல் - தாமதித்தல். பாணியார் - தாமதியாராய் தீர்ந்து அளிப்பர் - விரைந்து தமது உலகத்தி னின்றும் நீங்கி வந்து அருள் வழங்குவார்` பார் - இதனை (நெஞ்சே) நீ அறிவாயாக.

பண் :

பாடல் எண் : 79

பார்கால்வான் நீர்தீப்ப பகலோன் பனிமதியன்
பார்கோல மேனிப் பரனடிக்கே பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில் அட்ட மூர்த்தங்களில் இயமானன் (ஆன்மா) தவிர, ஏனைய ஏழும் கூறப்பட்டன. இரண்டாம் அடியில், `பார் மேனி` என இயைத்து, `பார்க்கத் தக்க திருமேனி` என உரைக்க. தனிச்சீரில் உள்ள பார் - நில உலகம் - கோகரணம், துளுவ நாட்டுத் தலம். ஆன் - அவ்விடம் `அவ்விடத்துச் சென்று` என்க. ஈற்றடியில், கோகு - ஆகாயம். கரணம் - உடம்பு. ஆகாயம் போலும் உடம்பை உடைய கோ (தலைவன்) அநங்கன்; மன்மதன் என்றது, அவனால் உண்டாகின்ற துன்பம். `நெஞ்சே, கோ கரணத்தான் ஆய கோவினால் உண்டாகின்ற துன்பத்தைப் பரனடிக்கே கூறுதியோ` என இயைத்து முடிக்க. கூறுதல் - விண்ணப்பித்தல். இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 80

கோப்பாடி ஓடாதே நெஞ்சே மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங் குற்றம் கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றாற் கிடம்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, கோப்பாடி ஓடாதே` என மாற்றி முதலிலும், `கூத்தன் கோப்பாடிக் கோகரணம், குற்றாலம் கூறு` என மாற்றி, இறுதியிலும் வைத்து உரைக்க கோப்பாடி ஓடாதே - அரசரைப் பாடிக்கொண்டு அவர்கள்பால் ஓடாதே. `கோ` என்பது சொல்லால் அஃறிணையாதலின், அஃது இங்குப் பன்மையதாயிற்று, கோப் பாடிக் கோகரணம் - தலைவனது (சிவபெருமானது) இடமாகிய, பின்னைக்காய்க் கோப்பு ஆடி நின்றாற்கு - நப்பின்னைக்கு அன்பனாய் ஆயர்மகளிரோடு கைகோத்துக் குரவையாடி நின்ற மாயோனுக்கு. இடம் கொடுக்கும் - இடப்பாகத்தைக் கொடுத்த. எம்பெருமான் பேர் பின்னைக்கு ஆம். எமக்குப் பெருமானாகிய சிவபெருமானது திருநாமத்தைச் சொன்னால் அது, வருகின்ற பிறப்பிற்கு உறுதுணையாய் வந்து உதவும்.

பண் :

பாடல் எண் : 81

பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் பேராநஞ்
சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பேரானை ஈர் உரிவை - பெரிய யானையை உரித்த தோல். ``ஆயிரத்தெண் பேர்`` என்பதை வடமொழியில், `அட்டோத்தர சகத்திர நாமம்` என்பர். ஈர் உருவம் - பெண்ணும், ஆணும் ஆய இருதிற உருவம். பேரா நஞ்சு - பிறரால் விலக்கலாகாத நஞ்சு. எஞ்ஞான்றும் - எந்த ஒரு நாளும் `உயிர் உண்டாம் நாள் அல்ல` (இறந்த நாளேயாம்) என்க. `ஞான்று` என்பது இங்குப் பெயர்த் தன்மைப்பட்டு, எழுவாயாய் நின்றது. ``பெரும்பற்றப் புலியூரானைப் - பேசாத நாளெல்லாம் பிறவா நாளே`` என்ற அப்பர் திருமொழியையும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 82

உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்
துயிராய ஒண்மலர்த்தால் ஊடே உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கட் பட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உயிர்`` மூன்றனுள் முதலது உயிர்ப்பு; மூச்சு - மூன்று மூச்சாவன இடநாடி மூச்சு, வலநாடி மூச்சு, நடுநாடி மூச்சு. ஒடுக்கி - அடக்கி; கும்பித்து. ஐந்து - ஐம்புல ஆசை. `ஐம்புல ஆசையைப் பிராணாயாமத்தில் அடக்கி` என்றபடி. `பிராணாயாமம்` என்றது உபலக்கணம் ஆதலின், அஃது ஏனைய ஏழ் உறுப்புக்களையும் தழுவி, `யோகம்` எனப் பொருள் தந்தது. ``உள்ளம்`` என்றதும், `உயிர்க்கு உயிர்` என்றவாறாம். சத்தியை, `தாள்` என்றல் மரபு. உயிரான். உயிராய் இருப்பவன். `உயிருக்கு உயிராய் உள்ளது சத்தி; சத்திக்கு உயிராய் உள்ளது சிவம்` - என்றபடி. ``பகர்`` இரண்டனுள் முன்னது, `அறுகுணங்களின் தொகுதியாகிய பகத்தை யுடையவர்` என்னும் பொருட்டு. அறுகுணங்களாவன ஐசுவரியம். திரு, புகழ், ஞானம், வீரம், வைராக்கியம்` என்பன. (திருவாவது நன்மை) இது `பகைவர்` என வருதல் பெரும்பான்மை. ``முக்கோற்பகவர்`` * முதலியன காண்க. பகர் - (அவன் பெயர்களைச்) சொல், `மனமே, பாசுபதன் பாதம் பணிய ஆசைக்கட்பட்டு, ஐந்து அடக்கிப் பகர்` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 83

பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும் பாசுபதன் பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பட்டார் அண் - அன்பு பட்டவர் அணைகின்ற. பட்ட அரங்கன் - பெயர் பெற்ற அம்பலவன். அகரம் தொகுத்தல்) பட்டார் எலும்பு - இறந்தவர்களது எலும்பு. பட்டு ஆர்ந்த கோவணத்தன் - பட்டு இழைகள் பொருந்திய கோவணத்தை அணிந்தவன். கோ வண்ணத்து நம்பன் - ஆகாயத்தை வடிவமாக உடைய பழையோன், (ணகர ஒற்றுத் தொகுத்தல் பெற்றது.)

பண் :

பாடல் எண் : 84

கூற்றம் பொருளும்போற் காட்டியெற் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எல் கோல் வளை - ஒளி பொருந்தினவும், ஒழுங்காய் அமைந்தனவும் ஆகிய வளையல்களை அணிந்தவள்; உமாதேவி. (அவளை) கூற்றின் - தனது திருமேனியின் ஒரு கூற்றில் இருக்கத்தக்க. பொருள் - பொருளாக. (ஆக்கம் வருவிக்க) கூற்றும் பொருளும் போல் காட்டி முயன்ற - சொல்லும், அதன் பொருளும் போலப் பிரிவற்றுத்தோன்றும்படி காட்சிப்படுத்து இருக்கச் செய்த. மூன்றாம் அடியில் `செரு + கழிய` எனப் பிரித்து, `போர் ஒழியும்படி` என உரைக்க. இரண்டாம் அடியில் ``செருக்கு`` என்பது, உடல் வலிமையைக் குறித்தது. `என் கோல் வளை` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 85

செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் செய்யாமுன்
நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டூணாய் நின்றானை நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதலடியில் `செய்யான்` - செம்மை நிறத்தை யுடையவன். இரண்டாம் அடியில் `செய்யான்` - செப்பம் (நடுவு நிலைமை) உடையவன்; இதனை, ``செஞ்சடையான்`` என்பதன்பின் கூட்டுக. பழனம் ஒருதலம். செய்யா - படைத்து. முன்நாள் தூணாய் நின்றான் - படைத்த காலம் முதலாகவே உலகத்தைத் தாங்கி நிலை பெறுத்து வோனாய் நின்றான். நாட்டு ஊணாய் நின்றான் - உலக போகமாய் நின்றான். பின் இரண்டடிகள் `நாட்டுணாய்` என ஓதுவன பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 86

நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாயகத்து உளதே` என மாற்றுக. `வாழ்த்த நா உளதாகவும், அதைக் கொண்டு நாம் உளேமாகவும், பிறவியாகிய கடலை` மரக்கலம் போல நின்று கடப்பித்து, நன்னெறியின் பயனாகிய வீடுபேறாம் கரையை அடைவிக்க இறைவன் இருக்கவும் (நாம் அவனை வாழ்த்துதலைச் செய்யாமல்) வாயில் உள்ள அந்த நாவால் சுவைத்து உண்ணுதற்குரியன திரட்டுவதிலே காலம் கழிக்கின்றோம். (அது நாம் உய்தற்குரிய உபாயம் அன்று.) இறைவனுக்கு ஆளாகிப் பணிசெய்து அதனால் நுகரப்படும் இன்பத்தை இன்பமாகக் கருதி முயலுதலே உபாயமாகும்` என்க. சூது - உபாயம். `கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள; நீருள;
கற்றைச் செஞ்சடை யானுளன்; நாமுளோம்;
ஏற்றுக் கோ,நம னால்முனி வுண்பதே`
என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.

பண் :

பாடல் எண் : 87

சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சூது - வஞ்சனை. அஃதாவது தலையளி செய்வான் போலக் காட்டிச் செய்யாது போனமை. சூதன் - சூத முனிவர். இவர் வேத வியாத முனிவர்க்கு மாணாக்கராயவருள் ஒருவர். தம் ஆசிரியர் பால் கேட்ட புராணங்கள் பதினெட்டினையும் நைமிசாரணிய முனிவர்கட்குக் கூறியவர். `இவரால் சொலற்கரிய` என்றது, `புராணங்களால் முடித்துக் கூறப்படாத புகழை யுடையவன்` என்றபடி. குற்றாலம், ஒரு தலம். சூதின் - மாமரத்தின். `சூதம்` என்பது அம்முக் குறைந்து ``சூது`` எனவந்தது. கொழுந்தே கொழுந்து - போலும் கையினின்றே. குருகு - வளையல். இது நெஞ்சினைத் தூது விடக் கருதியவள் அதனை நோக்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 88

குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே குருகிளரும்
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கொடாமே`` என்பதை இறுதிக்கண் கூட்டி, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. போது - பூக்கள். புகலூர், ஒருதலம். போதா - ஞான சொரூபனே. பொன்முடிக்கண் உள்ள போது (மலர்) கொன்றை. கொடாமே - கொடாமையாலே, `குருகு` என்பது கைவளைக்குப் பெயராயினும் இங்குத் தோள்வளையைக் குறித்து நின்றது. `மார்பின்கண்` என உருபு விரிக்க. ஒல்கி - தளர்ந்து `மார்புல்கி` என்பது பாடம் அன்று. குருகு இணையார் - அன்னப் பறவை போலும் இளைய மகளிர். `இணையாது` என ஆறாவது விரித்து. ``குருகிள வேய்த் தோள்`` என்பதற்கு முன்னே கூட்டுக. கோடு - யானைத் தந்தம். மேற்போந்த கொங்கையைச் சுட்டுவதாகிய சுட்டினை விரித்து, `அக்கோடு` என்க. குரு - நிறம்; பொன்னிறம், பசலை, கிளரும் - மிகும். `ஆதலின் நின் முடிக்கட் போதினைத் தந்தருள்` என்பது குறிப்பெச்சம். இது தோழி தலைவனை மாலை யிரந்தது. தன் தலைவியது மெலிவு கூறுவாள் அதனைப் பலர்மேலும் இட்டுப் பொதுப் பட, ``இளையார்`` என்றாள். `குருக்கிளரும்` என்பதில் ககரஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 89

போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதங்க நீர்கரந்த புண்ணியற்குப் போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

போது அரங்க வார் குழலார் - பூக்களுக்கு அரங்கு போல் உள்ள நீண்ட கூந்தலையுடைய மகளிர். என் ஆவார் - அவர் உனக்கு என்ன பயனைச் செய்வார்? இரண்டாம் அடியில், ``போ`` என்பதைத் தனியே பிரித்து, இறுதிக்கண் கூட்டுக. தரங்கம் - அலை, `போதுவர்` என்பது உகரம் தொகுத்தலாய் `போதர்` எனவந்தது. `கொண்டு வரப்பட்டவர்` என்பது பொருள். அங்கம் - உடம்பு. கானகம், முதுகாடு. `ஆடும் கால்களையுடைய நகம் சேர்வான்` என்க, நகம் - கயிலாய மலை, கல் - கற்றுச் செய். ``போ`` என்றது வலியுறுத்தற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 90

கற்றானஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் கற்றான்
அமரர்க் கமரர் அரக்கடிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கற்று ஆன் அஞ்சு ஆடு - கன்றையுடைய பசுவினின்றும் உண்டாகின்ற ஐந்து பொருள்களில் (பஞ்ச கௌவியங் களில்) முழுகுகின்ற. காவாலி - காபாலி. களந்தை - களத்தூர். வேட் களம், நெடுங்களம் முதலாக, `களம்` எனப் பெயர் பெற்ற தலங்கள் பல. கல் தானை - கல்லாடை. தானை - ஆடை. இதனை, ``களந்தைக் கோன்`` என்பதற்கு முன்னே கூட்டி, `கோனை` என இரண்டாவது விரிக்க. கல்லாமை - அறியாமை . ஒருவாறு அறியினும் போற்ற அறியாமை, ``கல்தான்`` என்பதில், ``கல்`` என்பது உவமையாகு பெயராய் உயிர் இல் பொருளைக் குறித்து, அதற்குரிய காலத்தை யுணர்த்திற்று உயிர் இப்பொருளின் காலம், யாதொரு பயனையும் தராது செல்வதாதலையறிக. `தான்` என்பது தேற்றப் பொருட்டு. அஃறிணை பன்மை யொருமை மயக்கம். ``அமரர் - விரும்புவோரினும் மேலாய் மிக விரும்புவோர், `விரும்புவோராய்` என ஆக்கம் விரிக்க. அமரர்க்கு அமரர் - தேவர்கட்கெல்லாம் தேவர்.

பண் :

பாடல் எண் : 91

ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் ஆவா
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் `அவா` என்பது நீண்டு ``ஆவா`` என வந்தது. `யாதொன்றும் அறிவிலர்` என மாற்றுக. ஆவார்போல் காட்டி அழிகின்றார் - தாங்கள் மேல்மேல் உயர்வது போலக்காட்டி (உலகியலிலே மூழ்கிநின்று, உண்மையில்) அடியோடு அழிந்தொழி கின்றார்கள். ஆவா - இஃது இரங்கத்தக்கது. மூன்றாம் அடியில், `பகவன்` என்பது இடைக் குறைந்து, ``பாகன்`` என வந்தது `பகனை` என இரண்டாவது விரித்து, `பாடி ஆடி` என மாற்றியுரைக்க. `அவனது படர் சடைக்கு` என்க. பகல் நாடி - நாள்தோறும் தேடிக் கொணர்ந்து. தூவி - (அவன் நாமங்களைப்) `பகர்ந்து ஏத்தார்` என்க.

பண் :

பாடல் எண் : 92

பகனாட்டம் பாட்டயரும் பாட்டோடாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி பகனாட்டந்
தாங்கால் தொழுதெழுவான் தாழ்சடையான் தம்முடைய
தாங்கால் தொழுதல் தலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பகல் நாட்டம் பாட்டு அயரும் - பகற் காலத்தில் அன்பர்கள் பாடும் பாட்டைக் கேட்பதிற் செல்லும். எல்லி - இரவில். பாட்டோடு பொருந்த ஆகுதலைச் செய்யும். (இங்கு `பகல்` என்பது உலகம் நிலைத்துள்ள காலத்தையும், `இரவு` என்பது அஃது ஒடுங்கிய காலத்தையும் குறித்து நின்றன.) பகன் - `பகன்` என்னும் பெயரை உடைய சூரியன். நாட்டம் - அவனது கண். நாள் உச்சிப் பகல் தந்து ஆங்கால் - நாளானது நண்பகலைத் தந்து பொருந்தும் பொழுது. (அஃதாவது, உச்சி வேளையில்) தொழுது எழுவான் - பிச்சையிடு வாரைக் கும்பிட்டுச் சொல்வான். `தாழ்சடையான்`` என்பதை முதலிற் கொள்க. தன்னுடையது ஆம் கால் (பாதம்) தொழுதல் தலையாய செயலாம், `தொழுவார், சடையார்` எனப் பன்மைப் பாடமாயின. ``அயரும், படுக்கும்`` என்பன பன்மை ஒருமை மயக்கமாம். `தன்னுடையது ஆம் கால்` என்றது சாதியொருமை. அன்றி, `அது உருபு பன்மைக்கண் வந்தது` எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 93

தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்விடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தலையாய`` என்பது முதலாகத் தொடங்கி, இகரம் தொகுக்கப்பட்ட, `ரதிவளரும் பண்பு பாகீர்` என மாறிக் காட்டி, `அதனால் என்மகள்` என்பது வருவித்து உரைக்க. முதல் அடியில், `அம் காட்டித் தலையால் பலி திரிவர்` என மாற்றி, தமது அழகைக் காட்டிக் கொண்டு தலையால் ஏற்கும் பலிக்கு (பிச்சைக்கு)த் திரிவர்` என உரைக்க. தலையாலங்காடு, ஒருதலம், `தாம் தலையாலங்காடர்` என்க. தாம் - என்னை மெலிவித்தவர், என்னும் - என்று பிதற்றுவாள். பாகீரது - பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை. ஈற்றடியில் `பகீர்` என்பது முதல் நீண்டு, ``பாகீர்`` என வந்தது. பகீர் - பகிர்ந்தளிக்க மாட்டீர். `இரதி` என்பது எதுகை நோக்கி முதர் குறைந்து நின்றது. `விருப்பம் (ஆசை) என்பது. வளரும் பண்பு - வளர்தற்கு ஏதுவாகிய குணத்தையுடைய திருமேனி. `பண்பு பகீர்` என்க. இது வீதியுலாவில் செவிலி இறைவனைக் குறையிரந்தது.

பண் :

பாடல் எண் : 94

பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்வான்
பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் பண்பால்
திருமாலு மங்கைச் சிவற்கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பண் மறை, பாய மறை` எனத் தனித்தனி இயைக்க. பண் - செய்யப்பட்ட பாய - பரந்த; விரிந்த. நான்மறையான் - பிரமன், `சென்னிக்கண்` என ஏழாவது விரிக்க. பண் பாய கொன்றை- வண்டுகளின் இசை பரவிய கொன்றை மலர். ``அருளான்`` என்பதன் பின். `ஆயினும்` என்பது வருவிக்க. பண்பால் - தனது இயல்பாய் குணத்தினால். (``மாலும்`` என ஈற்றடியிற் சேர்த்து முடிக்க மூன்றாம் அடியில், ``திருமாலும்`` என்பதனோடு இயைய, `மங்கையும்` என என்னும்மையும், `ஆய` என்பது விரித்து `அவ்விருவரும் ஆய சிவற்கு` என்க. மங்கை, உமாதேவி `அச்சிவற்கு` எனச் சுட்டு வருவித் துரைக்க. ஈற்றடியில் ``மங்கை`` என்றது காதற்பட்ட தலைவியை. மடக்களிப் பயன் வேண்டி, `சீவன்` என்பது குறுக்கப்பட்டது. அதற்கு முன் நின்ற சகர ஒற்று விரித்தல். ஈற்றடியில் உள்ள திரு - அழகு. அதன்பின் வந்த, `மயங்கும்` என்னும் குறுக்கப்பட்டது. அதற்குமுன் நின்ற சகர ஒற்று விரித்தல். ஈற்றடியில் உள்ள திரு - அழகு. அதன்பின் வந்த, `மயங்கும்` என்னும் பொருட்டாகிய ``மாலும்`` என்பது, `மயங்கிக் கெடும்` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. ``சிவன் தார் அருளானாயினும், மங்கை, தனது பண்பால் அவனுக்கு அடிமை செய்ய வேண்டி, உயிர் தன் அழகு கெட மயங்குகின்றாள்` என்றபடி. இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி கவன்றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 95

சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர் என்னும் சிவன்மாட்டங்
காலிங் கனம்நினையும் ஆயிழைஈர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆயிழை`` என்பதை முதலிலும், ``சிவன் மாட்டுக எழுதும்`` என்பதை இறுதியிலும் வைத்து உரைக்க. ``நாணும்`` என்பதன் இறுதி ஒற்று சந்தி வகையாற் கெட்டது. நாணும் - நாணுவாள். `நகும்` என்னும் - (ஊர்) `சிரிக்கும்` என்பாள், செங்குன்றூர். கொடி மாடச் செங்குன்றூர்; ஒரு தலம், அங்குச் சிவன்மாட்டு ஆலிங்கனம் நினையும் - அவ்விடத்தில் சிவனிடத்தில் தங்கித் தழுவுதலை நினைவாள். இங்ஙனம் நினையும் ஆறு - இவள் இவ்வாறெல்லாம் எண்ணுகின்ற முறைமை. ஈர் அம் கொன்றையால் - குளிர்ந்த அழகிய கொன்றை மாலை காரணமாகலாம். (ஆகையால் இவளை) சிவன் மாட்டு உக எழுதும் - சிவபெருமானிடத்தில் கொண்டுபோய் விட்டுவிடப் புறப்படுவோம். இதில் ``சிவன்`` என்பது சொற்பொருட் பின்வரு நிலையாகவே வந்தது. இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 96

ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்
காறார் சடையீர்க் கமையாதே ஆறாத
ஆனினர்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை, ``ஆறாத`` என்பதற்கு முன்னே கூட்டி, அது முதலாகத் தொடங்கியுரைக்க. ஆனின் அத்தார் தாம் ஆட்டுத் தவிர்ந்த பசுக்களின் கழுத்தில் உள்ள மாலைகள் (மணிகட்டிய வடங்கள்) அசைதலை ஒழிந்தன. (`பசுக்கள் கொட்டில்களில் சென்று அடங்கின; இரவுப் பொழுதாயிற்று என்றபடி. அதனால்) ஆனினத்தார் - ஆயர்கள். தாம் தம் அணியிழையினார்க்கு அடிமை களாயினர். `ஆயினும், இஃது ஆறு ஆர்சடையீர்க்கு அமையாதே; பொருந்தாதோ` என்க. இஃது இரவின்கண் தனிப்படர் மிகுதியால் ஆற்றாத தலைவி தலைவனை எதிர்பெய்துகொண்டு கழறியுரைத்தது. எனவே, இது ``மிக்க காமத்து மிடல்`` * பெருந்திணைத் துறையாம். முதற்கண் உள்ள ஆறு ஆ - முறைமை உண்டாக. முறைமை யாவது சிவனடியார்மேல் கூற்றுவன் செல்லாது தவிர்தல். தனிச் சீரில், ஆறாத சினமும் கன்றைப் பிரிந்த துயரமும் தணியாத ஆன் இனம் என்க. சினம், ஆனேற்றுக்கு உரியது.

பண் :

பாடல் எண் : 97

ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில், `அட்டும்` என்பது நீண்டு, ``ஆட்டும்`` என வந்தது. அட்டும் நிரப்புகின்ற அமரரை ஆட்டும் ஓர் போர் ஏறு - தேவர்களை தன் இச்சைப்படி நடத்துகின்ற திருமாலாகிய போர் விடை. சொல்லளவில் `பலிக்கு என்று` சொல்லிப் போந்தானா யினும் உண்மையில் மகளிர்மேற் செய்யும் போரினை ஏற்றானாகியே புறம் போந்தான் - என்க. இதுவும் கைக்கிளைத் தலைவி தன் தோழிக்கு கூறியது.

பண் :

பாடல் எண் : 98

புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்டுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புறந்தாழ் புலிப் பொதுவுள் ஆடி - நகர்க்குப் புறத்தே தங்குகின்ற புலிக்கு (வியாக்கிர பாதருக்கு) உரித்தாகிய மன்றினுள் நடனம் செய்பவனும், வெண்பிறையானும், வெண்சுடர்போல் மேனியானும் ஆகிய சிவபெருமான், புறம் தாழ் புரிகுழலாய் - பின்புறத்தே நீண்டு தொங்குகின்ற கூந்தலை உடைய ஊர்ப் பெண்கள் சொல்கின்ற. புறன் உரை அஞ்சாதே - புறங்கூற்று மொழிக்கு அஞ்சாமலே புல் தந்து - தழுவுதலாகிய புணர்ச்சியைக் கொடுத்து. (`புற்றந்து` என்பது இடைக் குறைந்து நின்றது.) ஆழ் பொன்மேற்று அளிக்கோன் - துன்பத்துள் ஆழ்கின்ற, திருமகள் போல்பவளாகிய இவள்மேலதாகிய அன்பையுடைய தலைவனாயினும். `மேற்றளிக் கோன்` என்று மெய் உரையான் - `தான் இத்திருமேற்றளித் தலத்தில் உறைகின்ற தலைவன்தான்` என்னும் உண்மையைக் கூறிற்றிலன், `கூறியிருந்தால், இவள் இவ்வாறு செயலனும் நிலையை அடைதற்கு முன்பே கொண்டுபோய் அவனிடம் சேர்த்திருக்கலாம்` என்பது கருத்து. திருமேற்றளி, காஞ்சியின் கண்ணதாய ஒருதலம். அப்பெருமான் இத்தலைவியைப் புல்லியதிலனாயினும் இவளது நிலைமையை வைத்துப் புல்லினானாகச் செவிலி கருதி இரங்கினாள் என்க. எனவே, இது கைக்கிளைத் தலைவியது கையற்ற நிலையைக் கண்டு செவிலி இரங்கிக் கூறியதாம். மெய்யுரையாமை, தலைவி அவனை அறிந்து கூறாமையாலும், தோழியர் அறிந்து கூறினமையாலும் அறியப்பட்டதாம். வெண்சுடர் - சந்திரன். சிவபெருமானுக்கு வெண்சுடர் போல் மேனி திருநீற்றால் அமைந்தது.

பண் :

பாடல் எண் : 99

மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் வெய்ய
துணையகலான் நோக்கலான் போற்றிகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மெய் அன்பாவது, பயன் கருதாது செய்யப்படும் அன்பு. `அன்பினின்றும்` என ஐந்தாவது விரிக்க. வேதியன் - வேதம் ஓதுபவன். `வேதப் பொருளாய் உள்ளவன்` என்றும் ஆம், புரி நூல் மெய்யன். புரிநூல் பொருந்திய திருமேனியை உடையவன். வெய்ய துணை அகலான் - விரும்பத்தக்க துணையாய் இருத்தலை நீங்கான். நோக்கு அகலான் - அருட் பார்வையை விடான். இகலா நெஞ்சு - மாறு படாத நல்ல மனம், `வான் நூறு கூறு துணை இகலா` - என மாற்றி, (அவனது பெருமைக்கு) அண்டங்கள் நூற்றில் ஒரு கூற்றளவு ஒவ்வா என உரைக்க. இகலுதல் - ஒத்தல் `நெஞ்சே, வேதியனும், நூல் மெய்ய னும், விரும்புவார்க்கு அகலாதவனும் ஆகிய அவனை அண்டங்கள் நூற்றில் ஒரு கூறு ஒவ்வா; அவனைப் போற்று` என இயைத்து முடிக்க. `அகலா` என்பன பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 100

நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
நூறா நொடிவதனின் மிக்கதே நூறா
உடையான் பரித்தவெரி உத்தமனை வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நூறு ஆன் பயன் - நூறு பசுக்களின் பால். நொடிவது - சொல்வது. நூறா நொடிவது - பெயர்கள் `நூறு` என்னும் எண் படச் சொல்வது. ``நூறா உடையான்`` என்பதில் `நூறு` என்பது அளவின்மையைக் குறித்து, அத்தகையவான குணங்களைக் குறித்தது. இறைவன் செய்யும் தொழில், வகையால் ஐந்தாயினும் விரியால் எண்ணிலவாகலின், அவற்றிற்கு ஏற்பக் குணங்களும் எண்ணிலவாம். இதனை,
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
என்னும் திருவாசகத்தாலும் அறிக. `நூறு` ஆன் பயன் ஆட்டுதல் முதலியவற்றினும் ஒன்று மிக்கது` என இயைத்து முடிக்க. ``பாடல்`` என்றதனால் ``ஒன்று`` - என்றது `பாட்டு` என்பது போந்தது. ஆல், அசை, இதனால், பொதுப்படப் பாமாலை சாத்துதற் பயன் கூறிய துடன், இவ்வந்தாதியால் துதிப்பார்க்கு வரும் பயனும் கூறப்பட்டதாம். ஈற்றில் நின்ற ``ஒன்று`` என்பது முதற்பாட்டின் முதலிற் சென்று மண்டலித்தல் காண்க.
சிற்பி