பரணதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி


பண் :

பாடல் எண் : 1

ஒன்றுரைப்பீர் போலப் பல உரைத்திட் டோயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவும் பூணும் பிரான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகீர்` என்பதை முதற்கண் வருவித்து, தனிச் சீரில் உள்ள ``ஒன்றுரைத்து`` என்பதை, ``உறுதுணையாம்`` என்பதற்கு முன்னே கூட்டி, அவ்விரண்டையும் இறுதிக்கண் வைத்து உரைக்க.
``ஒன்று`` மூன்றில் முதற்கண்ணது, ஒருபொருள்.
இடையது, யாம் சொல்கின்ற ஒன்று.
அது சிவபெருமானது திருப்பெயர்.
ஈற்றில் உள்ளது.
பிறழ்தல் இல்லாத ஒரு சொல்.
அது, `நீவிர் விரும்பியதைத் தருகின்றோம்` என அருளிச் செய்வது.
``அரவம்`` இரண்டில் முன்னது, பாம்பு; பின்னது ஆரவாரம்; பழிச்சொல்.
அவை, `பாம்பை அணிகின்றான், தலையோட்டில் பிச்சை ஏற்று உண்கின்றான்` என்றாற் போல்வன.
`உலகீர் அவனது பெருமையை யறியாமல் அறிவலாதாரால் இகழப்படுகின்ற சிவபிரானது திருப்பெயரைச் சொல்வீராயின், அவன் நீவிர் விரும்பியதைத் தப்பாமல் பெறும் வரத்தை அருளுவான்`.
பல பொருள்களை உரைத்தல், உண்மையை உணராது அலமருதலாலாம்.
ஓயாது - மெலியாமல்.

பண் :

பாடல் எண் : 2

பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்
பிரானிடபம் பேரொலிநா ணாகம் பிரானிடபம்
பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து
பேணும் உமையிடவம் பெற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றில், `உம்மை` என்பது இடைக் குறைந்து, ``உமை`` என வருதலால் அதற்கேற்பப் ``பிரான்`` என்பவற்றை அண்மை விளியாக்கி, `உமது இடபம் மால்` எனவும், `உமது வில் மந்தரம்` எனவும், நீர் இட; பம் - பேரொலி நாண் நாகம்` எனவும், `உமது இட அம் உமை பேணும்` எனவும், `நீர் இட, அம், பெரிய புன்சடைமேல் அமர்ந்து உம்மைப் பேணும்` எனவும் உரைக்க.
மால் - விட்டுணு.
`மந்தரம்` என்பது நீட்டல் பெற்றது.
இரண்டாம் அடியில், ``பம்`` என்பது ஒலிக்குறிப்பு.
நாண் - வில் நாண்.
தனிச்சீரில், அம், அழகு.
அதன் முதல் வகர உடம்படுமெய் பெற்று `வம்` என வந்தது.
எதுகை நோக்கி, ``பம்`` எனத் திரிந்தது.
அழகு ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது.
ஈற்றடியில் அம் - நீர்; கங்கை.

பண் :

பாடல் எண் : 3

பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே
பெற்றும் பிறவி பிறந்தொழிமின் பெற்றும்
குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்
குழையணிந்த கோளரவ நீ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில், `பிறவி பெற்றும்` என மாற்றி, ``பிறந் திட்டு`` என்பதற்குப் `பிறந்ததனோடு` என உரைக்க.
``பிறவி`` என்பது சிறப்புப் பற்றி, மக்கட் பிறவியையே குறித்தது.
இரண்டாம் அடியில் பெற்றும் பிறவி - பெருகி வரும் பிறவிகள்.
பெற்று - பெருக்கம்.
அதனை , `ஏ பெற்றாகும்`` * என்னும் தொல்காப்பியத்தால் அறிக.
பின்னர் வந்த ``பிறந்து`` என்பது அனுவாதம் ஆகலான் அதற்கு, `அது செய்து` என உரைக்க.
`பிறவியை ஒழிமின்` என்க.
மூன்றாம் அடியில் ``குழை`` என்பதில் `குழையாக` என ஆக்கம் விரிக்க.
``கோள் அரவம்`` இரண்டில் முன்னது கொடிய பாம்பு; பின்னது, சில கொள்கைகளோடு கூடிய ஆரவாரம்.
பெற்றும் குழை - குழைய (திருவுளம் இரங்க)ப் பண்ணு.
அண் - (அவனையே) அணுகு.
நீ - நீத்துவிடு.
`இந்த` என்னும் சுட்டின்முன் ககர ஒற்று தொகுத்தலாயிற்று.
இவற்றிற்கெல்லாம் முன்னிலையாக.
`நெஞ்சமே` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 4

நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே
நீயேயா ளாவாயும் நீள்வாளின் நீயேயேய்
ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா
ஏறூர் புனற்சடையா என்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நன்னெஞ்சே`` என்பதை முதலிற் கொள்க.
கொண்டு அதன்பின், பின் இரண்டடிகளைக் கூட்டி, `நீ ஏய்; (ஏய்ந்தால்) நின்மலற்கு ஆள் ஆவாயும் நீயே; (மற்றும்) யாவாயும் நீள்வாளின் நீயே ஆள்` என முடிக்க.
`ஆள் ஆவாய்` என்றது.
`அடியார்களுள் சிறந்தனை ஆவாய்` என்றபடி.
யா வாயும் - எந்த இடத்தையும், ``வாள்`` என்றது படைக்கலப் பொது.
அது நெற்றியைக் குறிக்கும் குறிப்பாயிற்று.
ஏய் - பொருந்து.
``ஏறூர் புனற் சடையா`` என வந்த இரண்டினுள் ஒன்றை, `உயர்தல் மிகுந்த நீரை அணிந்த நல்ல சடையவனே` என்னும் பொருட்டாகவும், மற்றொன்றைப் புல் ஏறு ஊர் நல் சடையா (புல்லை உண்கின்ற இடபத்தை ஊர்கின்ற, நல்ல `சடை` என்னும் அத்தியயனத்தை விரும்புபவனே) என்னும் பொருட்டாகவும் கொள்க.
`யா வாய்` என்பதில், `யா` என்னும் வினா எழுத்து யகர மெய் கெட்டு.
``ஆ`` என நின்றது.

பண் :

பாடல் எண் : 5

என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் என்றும்
* * * * * *
புகலூரா புண்ணியனே என்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இந்தப் பாடல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
அதனால் பொருள் காணவும் இயலவில்லை.
)

பண் :

பாடல் எண் : 6

என்னே இவளுற்ற மால்என்கொல் இன்கொன்றை
என்னே இவளொற்றி யூரென்னும் என்னே
தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்
தவளப் பொடியானைச் சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இவள் உற்றமால் என்னே! (இவள் உள்ள) இன்கொன்றை என்கொல்! இவள் `ஒற்றியூர்` என்னும்; என்கொல்! `தவளப் பொடி அணிந்த சங்கரனே` என்னும்; (என்கொல்!) அப் பொடியானைச் சார்ந்து, தவள் (தவம் செய்பவள் - ஆயினள்; என்கொல்!) என இயைத்தும், தொக்கு நின்ற சொற்களை விரித்தும் முடிக்க.
இது கைக்கிளைத் தலைவிதன் ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
மால் - மயக்கம்; மையல், ``என்`` என்பன எல்லாம் இரக்கக் குறிப்புக்கள்.
அதனை ஈற்றிலும் வருவித்து உரைக்க.
``கொல்`` எல்லாம் அசைநிலை.
``என்கொல்`` என்பது இரக்கம் மிகுதியால் பலகாலும் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமை
சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் சார்ந்துரைத்த
ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்
ஆதிஏன் றென்பால் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சார்ந்து உரைப்பது ஒன்று உண்டு`` என்பதை ஈற்றடி யில் உள்ள ``ஆதி`` என்பதன் பின்னர்க் கூட்டி, ``சார்ந்து - உன்னை அடைந்து , உரைப்பது - யான் உரைக்க வேண்டுவது`` என உரைக்க.
``சாவா, மூவாப் பெருமை`` என்றது, `இறையில்பு` (`பதியிலக்கணம்`) என்றபடி.
மூவாமை - முதுமையடையாமை.
சார்ந்து - அதனைப் பற்றி.
உரைத்த - சிவலோகத்தில் உள்ளார்க்குச் சொல்லிய.
சார்ந்து - இவ்வுலகில் ஆல நிழலை அடைந்து.
உரைத்த - நால்வர் முனிவர் முதலியோர்க்குக் கூறிய.
ஆதியே - முதல்வனே, ``ஆட்கொள்ளும்`` என்பதன்பின் `அவன்` என்பது வருவிக்க.
ஆதி - ஆகின்றவனே; அண்மை விளி.
`என்பால் வந்து` என ஒருசொல் வருவித்து.
``ஏன்று அருள் - என்னை அடியனாக ஏற்று அருள் புரி`` - என உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரோ தாரூர்தீ யாடி அருள்சேரப்
பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற்று உண்டுழல்வாய் பேச்சு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி - 1 - அருள் சேராதார் ஊர் - உன்னுடைய திருவுள்ளக் கனிவை அடைய விரும்பாத அசுரர்களது திரிபுரம், அடி- 2 `அருள் சேராது எய்தாய்` என இயையும்.
இதன்கண் உள்ள அருள் - இரக்கம்.
``ஆரூரில் உள்ள தீ ஆடி` என்பது விளி.
இதனை முதற்கண் வைத்து உரைக்க.
வினையொடு தொக்க ஏழாவதன் தொகையில் வல்லினம் மிகாது, இயல்பாயிற்று.
தனிச்சீரில் உள்ள அருள் - ஞானம்.
இறை உணர்வு இல்லாதார் அவ்வுணர்வைப் பெற வேண்டி அடி-3.
பித்து, `பிச்சு` எனப் போலியாய் வந்தது.
அது பேரருளைக் குறித்தது.
`பேரருளை ஏற்று, அதனால் நலிவுண்டு` என்க.
பிச்சை ஏற்பான் போலச் சென்று இரத்தல் பெருங் கருணை காரணமாக என்றபடி.
கடை - தலைவாயில்.
``பேச்சு`` என்பதற்கு, `இஃதே எங்கும் நிகழ் கின்ற பேச்சு` என்க.
அஃது இகழ்வாய பேச்சையே குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

பேச்சுப் பெருக்குவதென் பெண் ஆண் அலியென்று
பேச்சுக் கடந்த பெருவெளியைப் பேச்சுக்
குரையானை ஊனுக்கு உயிரானை ஒன்றற்
குரியானை நன்நெஞ்சே உற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பேச்சுப் பெருக்குவது என்`` என்பதை இறுதியிற் கூட்டி உரைக்க.
பேச்சுக்கு உரை - சொல்லுக்குப் பொருள்.
ஊன் - உடம்பு.
``சொல்லுக்குப் பொருள் போலவும், உடம்பிற்கு உயிர்போல வும் எப்பொருட்கும் களைகணாய் உள்ளவன்` என்றபடி.
``ஒன்றற்கு`` என்பதன் பின் `உவமையாக` என்பது வருவிக்க.
உரையான் - சொல்லப்படான்.
உற்று - அடையத் தொடங்கி.
`பேசாமை, அஃதாவது மோன நிலையாலே அடையத் தக்கவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 10

உற்றுரையாய் நன்நெஞ்சே ஓதக் கடல்வண்ணன்
உற்றுரையா வண்ணம்ஒன் றானானை உற்றுரையா
ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும்
ஆனையுரித் தானை அடைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நன்னெஞ்சே`` என்பதை முதலிலும் ``உற்றுரை யாய்`` என்பதை இறுதியிலும் வைத்து உரைக்க.
உற்று உரையாய்.
அணுக நின்று நின் குறைகளைச் சொல்வாயாக.
`சொன்னால் அவைகட்குத் தீர்வு காணலாம்` என்பதாம்.
ஓதம் - அலை.
உற்று உரையா வண்ணம் - வேறிடத்திலிருந்து வந்து துதிக்க வேண்டாமல்.
ஒன்று ஆனான் - அவனோடே இயைந்து ஒன்றாயினான்.
`பிரமன், மால் இருவருமே வந்து போற்றுதற்கு உரியராயினும் மாலது அன்பு நோக்கி அவனைத் தன்னோடு ஒன்றாய் இருக்க வைத்தான்` என்றவாறு.
தனிச் சீரில், `உற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று.
உற்ற உரை - பொருந்திய சொல், அஃது ஆகுபெயராய்ப் பொருளை உணர்த்திற்று.
`அவளைப் பொருளாக உடைய சொல்லே சொல்லத் தக்க சொல்` என்றபடி.
அடி- 3 உரித்தான் - எல்லாரும் அடையத் தக்க பொருளாய் உள்ளவன்.
`எப்பொழுதும் அடைந்து உரையாய்` என மேலதனோடு கூட்டுக.

பண் :

பாடல் எண் : 11

அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித்
தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் கடைந்துன்பால்
அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்று
அவ்வமுத மாக்கினாய் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணி - பொன் அணி.
மணி - இரத்தினாபரணம்.
கொண்டு - பாவனையால் கொண்டு.
அடி - 2 ``அடைந்து`` என்ப தனை, `அடைய` எனத் திரித்து, `முழுதுமாக` என உரைக்க.
உன் பால்- சிறந்த பொருளாக எண்ணப்படுகின்ற பால்.
மாணி - பிரமசாரி; சண்டேசுரர்.
தனிச்சீரில் `அடையும்` என்னும் பெயரெச்சம் உம்மை தொகுக்கப்பட நின்றது.
அடையும் துன்பால் - தந்தையால் வந்த துன்பம் காரணமாக.
``அவ்வமுதம்`` எனச் சுட்டிக் கூறியது.
``நீ உண்ட மிச்சிலாகிய அமுதம்` என்பது தோன்றுதற்கு.
``மலர்`` என்றது மாலையை.
அணி மலர் - வினைத் தொகை.
``அவ்வமுதம்`` என்பதில் அகரம் பண்டறி சுட்டு.
பந்தத்தை `மிருத்யு` என்றும், மோட்சத்தை `அமிர்தம்` என்றும் கூறுதல் மெய்ந்நூல் வழக்கு.
``பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்``* - என மாணிக்க வாசகரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 12

காணாய் கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக்
காணாயக் கார்உருவிற் சேர்உமையைக் காணா
உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண் டூரூர் திரி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இதனுள் முன் இரண்டு அடிகளில் மடக்கணி வாராது, சொற்பொருட் பின்வருநிலையணியே வந்தது.
) `நெஞ்சே` - என்பதை முதலில் வருவித்துக் கொள்க.
`கங்கைதனைக் காணாய்; உமையைக் காணாய்; காணா (கண்டு).
நச்சி, திரி` என இயைத்து முடிக்க.
உடை தலை - உடைந்த தலை; வினைத் தொகை.
``ஊர் ஊர்`` என்னும் அடுக்கு இரண்டில் முன்னது பொதுவாயும், பின்னது `அவனது ஊர்` எனச் சில தலங்களைக் குறிக்கும் சிறப்பாயும் நின்றது.
இரண்டிலும் `தோறும்` என்பது வருவிக்க.
கார் உரு - நீல நிறம்.
நச்சுதல் - விரும்புதல்.
உடைதல் - நெகிழ்ந்து உருகுதல்.

பண் :

பாடல் எண் : 13

திரியும் புரம்எரித்த சேவகனார் செவ்வே
திரியும் புரம்எரியச் செய்தார் திரியும்
அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி
அரிஆன் றிருக்கயிலை யாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரியும் புரம் - வானத்தில் சுழலுகின்ற ஊர்கள்; முப்புரம்.
செவ்வே - முறையாக.
திரியும் - பரிணமித்து வளர்கின்ற.
புரம் - பல வகை உடம்புகளை.
எரியச் செய்தார் - அழித்தார்; ``தேவர் களையும் அழித்தார்`` என்றபடி.
திரியும் - உலாவுகின்ற.
அரி - சிங்கம்.
``ஆன்`` என்றது ஆமாவை.
என்னாதார் - என்று சொல்லாதவர்கள்.
அரி ஆன்று இருக்கை இலை - அழகு நிறைந்து இருத்தல் இல்லை.
`இருக்கை` என்பது எதுகை நோக்கிப் போலியாய் வந்தது.
ஆம், அசை.

பண் :

பாடல் எண் : 14

(இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை)
ஆம்பரிசே செய்தங் கழியாக்கை ஆம்பரிசே
ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை
ஏத்தித் திரிந்தானை ஏத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டின் முதல் அடி கிடையாமையால், பொருளை நன்குணரவும் இயலவில்லை.
)

பண் :

பாடல் எண் : 15

ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியென் பால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில் உள்ள ``பார்த்தன்`` என்பதை முதலில் கூட்டுக.
பார்த்தன் - அருச்சுனன்.
ஏத்து உற்று - துதித்தலைப் பொருந்தி.
ஏ - உயரம்.
ஏத்து உயரத்திலே உற்றுப் பார்த்து` என்க.
வான் அடைவான் போல் உயரத்திலே உற்றுப் பார்த்து நிற்றல் அவனது தவ நிலையாகும்.
இதனை,
ஒருதாளின் மிசை நின்று, நின்ற தாளின் - ஊருவின்மேல்
ஒருதாளை ஊன்றி ஒன்றும்
கருதாமல் மனம் அடக்கி, விசும்பினோடு - கதிரவனைக்
கவர்வான் போல் கரங்கள் நீட்டி,
இருதாரை நெடுந்தடங்கண் இமையாது, ஓரா யிரங்கதிரும்
தாமரைப் போதென்ன நோக்க
என்னும் வில்லி பாரதச் செய்யுளாலும் அறிக.
ஏதுற்றுப் பதம் - பல வகை அம்பின் ஆற்றல்களும் ஒருங்கு நிறைந்த பாசுபதாத்திரம்.
பாசூர், ஒருதலம்.
சுபதம் - நல்ல சொற்கள்.
`பாசூரானைப் பற்றிய பாக்களாகிய நல்ல என.
அவாய் சொற்கள்.
இன்று அளியன்பால் உள என, அவாய் நிலையாய் நின்ற பயனிலையை வருவித்து முடிக்க.
அளியன் - இரங்கத் தக்கேன்; `எளியேன்` என்றபடி.
`அவனைப் பற்றிய பாக்கள் என்னிடத்தில் இருத்தலால் எனக்குக் குறை எதுவும் இல்லை` என்பது கருத்து.
சுபதம் என்பது வடசொல் ஆதலின் பண்புத் தொகைக்கண் ஒற்று மிகாதாயிற்று.

பண் :

பாடல் எண் : 16

பாலார் புனல்பாய் சடையானுக் கன்பாகிப்
பாலார் புனல்பாய் சடையானாள் பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ
ஆடுவான் என்றென்றே ஆங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில் உள்ள.
``பாலார் புனல் பாய் சடையானாள்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
பால் ஆர் புனல் பாய் சடையான் - அமுதம் போல நிறைந்த நீர் (ஆகாய கங்கை பாயப் பெற்ற சடையினை உடையவன்.
பால் ஆடி ஆடுவான் - பாலில் சிறப்பாக முழுகி மற்றைப் பொருளிலும் முழுகுவான்.
``பால்`` என விதந்தமையால் அதனது சிறப்புப் பெறப்பட்டது.
`மேனியில் அரவு ஊரப்படுவான்` என்க.
என்று என்று - அவனைப் பலவகையிலும் சொல்லிச் சொல்லி.
ஆங்கு - அவ்வாற்றால்.
பால் ஆர் புனல் பாய் சடை ஆனாள் - பல பக்கங்களிலும் நிறைந்துள்ள நீரில் பொருந்திய சடைப் பூண்டு போல இவள் ஆகிவிட்டாள்.
சடைப் பூண்டைக் `கிடை` என்பர். அதனை,
நீருட் பிறந்து நிறம் பசியவேனும்
ஈரம் கிடையகத் தில்லாகும்
என்பதனானும் அறிக.
சடைப் பூண்டு வலுவற்ற ஒரு மெல்லிய பொருள்.
`காதலால் இவள் அவ்வாறு மெலிந்து விட்டாள்` என்க.
இது தலைவியது வேறுபாடு கண்டு வினாய செவிலிக்குத் தோழி `உண்மை செப்பல்` வகையால் அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 17

ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்தும் ஆம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள், ``ஆங்கு`` என்பனவற்றுள் முன் இரண்டும் அசைகள்.
ஈற்றில் உள்ளது.
`அவ்வாறு என்னும் பொருட்டு.
``மலர்ப் பாதம்`` எனப் பொதுப்படக் கூறப்பட்டதாயினும், சொல்லுவான் குறிப்பால் அது சிவபெருமானது மலர்ப் பாதத்தையே குறித்தது.
`சிவனது மலர்ப் பாதத்தை உரைத்து மாற்று அறியப்படும் - பொன் என்றே சொல்லலாம்.
அஃதன்றே, பொன் என உரைக்கலாம்.
தில்லையுள் அவ்வாறு - பொன் - என்றே சொல்லப்பட்ட அம்பலத்திலும், அண்டம் முழுவதிலும், அண்டத்திற்கு அப்பாலுமாய் உள்ள அம்பரத்திலும் (சிதம்பரத்திலும் - சிதாகாசத்திலும்), அத்தன்மையதாகிய சிவலோகத்திலும் உள்ளது! என இயைத்துக் கொள்க.
சிவபெருமானது திருவடிச் சிறப்பினைப் புகழ்ந்தவாறு.
திருவடியாவது அவனது சத்தியேயாகலின் அஃது இவ்வகையான புகழ்ச்சிகளுக்கெல்லாம் உரியதாயிற்று.
``அப்பாலுமாய்`` என்ற உம்மை.
`அண்டமும் ஆய்` என இறந்தது தழுவி நின்றது.
அண்டம் இரண்டில் பின்னது சிவலோகம் இதனுள்ளும் மடக்கணி வரவில்லை.

பண் :

பாடல் எண் : 18

மாயனைஒர் பாகம் அமர்ந்தானை வானவரும்
மாயவரும் மால்கடல்நஞ்சு உண்டானை மாய
உருவானை மாலை ஒளியானை வானின்
உருவானை ஏத்தி உணர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமர்ந்தான் - விரும்பினான்.
மாய வரு - இறக்கும் படி வந்த.
மால் கடல் - பெரிய கடல் தனிச்சீரில் ``மாயம்`` என்றது வஞ்சனையை.
`மாயத்து` என்னும் அத்துச் சாரியை அணி நயம் நோக்கித் தொகுக்கப்பட்டது.
உருவான் - ஊடுருவிமாட்டான்; `உட்புகான்` என்றபடி.
மாலை ஒளி மாலைக் காலத்துச் செவ்வான் ஒளி.
ஒளியான் - ஒளிபோல்பவன்.
வானின் உருவான், இறைவன் ஆகாயத்தை உருவாக உடையவன்.
``ஏத்தி உணர்`` என்னும் பயனிலைக்கு `நெஞ்சே, நீ` என்னும் எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 19

உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்
உணரா வளைகழல ஒட்டி உணரா
அளைந்தான மேனி அணியாரூ ரேசென்
றளைந்தானை ஆமாறு கண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
அடி -2ல் உணராவளை அறியாமையாகிய கோட்டம்.
கழல - நீங்க தனிச் சீரில் ``உணரா`` என்னும் எச்சத்தை, `உணர` எனத் திரிக்க ஒட்டி உணர்தல் - ஒன்றி உணர்தல்.
அவ்வாறு உணரும் உணர்வில் அணைந்து ஆன மேனி கலந்து விளங்கும் உருவம்.
அவ்வுருவம் விளங்குகின்ற ஆரூரில் சென்று அணைந்தானை - புற்றுருவாயவனை அணை.
புற்று; அதனடியாக `அணைந்தான்` என்னும் பெயர் பிறந்தது.
ஆமாறு கண்டு - அவன் அங்ஙனம் ஆமாற்றைக் கண்டு.
அன்பால் உற்று - அன்பால் பொருந்தினமையால்.
வளை சங்கம் கழலா உணரா- வளையல்களாகிய சங்குகள் கையை விட்டுக் கழன்று, தம் கடமையைத் தாம் உணரவாவாயின.
கடமை - கழலாது கையிற் செறிந்து நிற்க வேண்டுவது.
இதுவும் கைக்கிளைத் தலைவியது ஆற்றாமைக் கூற்று.

பண் :

பாடல் எண் : 20

கண்டிறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்
கண்டிறந்து காமன் பொடியாகக் கண்டிறந்து
கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்
கானின்உகந் தாடுங் கருத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காமன் (மன்மதன்) கண்டு இறந்து (தனது யோக நிலையைக் கண்டும் நெறி கடந்து) காய் எரியைக் கண்டு கடிது ஓடியும் அதன்கண் வீழ்ந்து இறந்து பொடியாகி, (தான் அங்ஙனம் ஆம்படி) கண் திறந்து (நெற்றிக் கண்ணைத் திறந்து அதன்பின்னும்) கானின் உகந்து ஆடும் கருத்தர்க்கு (முதுகாட்டில் விரும்பி ஆடுகின்ற முதல்வர் முன்) கானின் உகந்து ஆடும் கருத்துக் காட்டினான் (அவர் அங்ஙனம் ஆடுவதன் உண்மையைப் பலரும் உணரச் செய்தான்.
உண்மை யாவது, முற்றழிப்புக் காலத்தில் எல்லாரையும் அழித்துத் தன்னை அழிப்பார் இன்றித்தான் ஒருவனேயாய் நிற்றல்.
இவ்வுண்மையைக் காமனை எரித்துத் தான் அவனால் மயங்குவிக்கப்படாமல் இருந்த செயல் உணர்த்துதலால், `காமன் எரியின் வீழ்ந்து பொடியாக் காட்டி னான்` என்றார்.
``கருத்தர்க்கு`` என்னும் நான்காவதை, `கருத்தர்முன்` என ஏழாவதாகத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 21

கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்
கருத்துடைய கங்காள வேடன் கருத்துடைய
ஆன்ஏற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்
ஆனேற்றான் ஏற்றான் எரி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில் உள்ள, `கருத்துடைய கங்காள வேடன்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
அடி - 1ல் கருத்து - கருணை, தனிச்சீரில் `கறுத்து` என்பது எதுகை நோக்கி, ``கருத்து`` எனத் திரிந்து நின்றது.
கறுத்து - சினந்து.
`சின விடை` என்றபடி.
சினம், இன அடை.
ஆமாத்தூர் ஆன் ஏற்றான் - ஆமாத்தூரில் தன்னை வழிபட்ட பசுக்களைக் காக்க ஏற்றுக் கொண்டவன்.
`எரி ஏற்றான்` என மாற்றிக் கொள்க.
இதுவும் பெயர்.
அடி-2-ல் கருதுடைய - `பிறவி துடைப் புண்ணும்படி கங்காள வேடன் ஆயினான்` என்க.
`சிவபிரானது திருமேனியில் தம் உடம்பு தீண்டப் பெற்றவர் பிறப்பறுவர்` என்பது பற்றி இவ்வாறு கூறினார்.
கங்காளம் பிரம விட்டுணுக்களது எலும்புக் கூடு.
இவைகளைச் சிவபிரான் தன் தோள் மேல் தாங்கினான்.
``கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடி`` 1 என்னும் திருவாசகத்தால் அறிக.

பண் :

பாடல் எண் : 22

எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி யேகம்ப மாகும் எரியாடி
ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப
ஈமத் திடுங்காடு தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில் உள்ள ஏகாரம் தேற்றம்.
அதன்பின் வந்த ``கம்பம்`` நடுக்கம் ஆதலின், அஃது இங்குச் சாம்ப லாகிச் சிந்துதலைக் குறித்தது.
தனிச்சீரில் எரியாடி - தீ எரியப்படுவ தாகிய.
`ஈ மத்தை` என்பதில் சாரியை நிற்க.
ஐ உருபு தொகுதல் இலேசினாற் 2 கொள்க.
ஈமத்தையும் இடும் காட்டையும் ஆடரங்காத் தேரும் இறை சிவபெருமான் அவன் பணிப்ப - பணித்தலால்.
ஈமம் - பிணம் சுடும் விறகு.
ஈற்றடியில் உள்ள `காடு` ஆகுபெயராய் அதன்கண் கிடக்கும் விறகைக் குறித்து.
`ஈமத்தோடு ஈமமாய் ஒழிவதேயன்றித் தன்னை எடுத்த உயிருக்கு யாதொரு பயனையும் தந்ததாகாது` என்றபடி.
முன்னர்.
``எரியாடியே கம்பம் ஆகும்`` என்பதும் தேற்றப் பொருளில் வந்தது.

பண் :

பாடல் எண் : 23

தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்
தானயன் மாலாய தன்மையான் தான்அக்
கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக்
கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``காய் புலித்தோல் ஆடைக் கரைப்படுத்தான்`` என்பது.
``சிவன்`` என்னும் அளவாய் நின்றது.
அதனை முதலிற் கொள்க.
அதன்கண் ``கரை`` என்றது ஆடையில் அமைக்கப்படும் கோட்டினை; ``கொடுந் தானைக் கோட்டழகும்`` * என நாலடியாரிலும் கூறப்பட்டது.
``தான்`` என்பன பலவற்றிலும் பிரிநிலை ஏகாரம் விரிக்க.
`அயனும், மாலும் ஆகி நின்றான்` என்றது `அவர்கள் வழியாகப் படைத்தல் காத்தல்களை நிகழ்விக்கின்றான்` என்றபடி.
அடி-2ல் `அயன் உலகில் தனித்து மால் ஆய தன்மையான் - அவ்விருவரின் வேறாய் உயிர்களிடையில் தனி ஒருவனாய்ப் பெரும் பொருளான தன்மையையுடையவன்.
மால் - பெருமை.
நான்மறையை அக்கரைப்படுத்தான் - நான்கு வேதங்களை ஓரோர் வரம்பிற்கு உட்படுத்தினான்.
அவ்வரம்புகளாவன `அறம், பொருள், இன்பம், வீடு` என்பன.
இவ்வாறு நாற்பொருளைக் கூறும் நான்கு நூல்களே நான்கு வேதங்கள்` எனக் கூறுதல் தமிழ் வழக்கு.
இவைகளால் எல்லாம் இறைத் தன்மையை விதந்தவாறு.
தன் பாதம் சார் - அவனுடைய திருவடிகளையே (நெஞ்சே) புகலிடமாக அடை.

பண் :

பாடல் எண் : 24

சாராவார் தாமுளரேல் சங்கரன் தன்மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை சார்வாம்
அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சார்வு`` என்பது முன்னர் இரண்டிடங்களில் இறுதிநிலை கெட்டு, ``சார்`` என நின்றது.
சார் ஆவார் தாம் உளரேல் சங்கரன் எவர் ஒருவர்க்கும் சார்வாக (பற்றுக் கோடாக) ஒருவர் உளர் என்றால் அவர் சிவன் ஒருவனே.
(முன்னர்ப் பொதுவாகக் கூறிப் பின்னர்ச் சிறப்பாக விதந்தமையால் பன்மை ஒருமைகள் மயங்கின.
) அஃது எங்ஙனம் எனின், கங்கையும், உமையும் முறையே அவனது செஞ்சடை மேலும், மேனிமேலும் அவைகளையே சார்வாகப் பற்றித் தங்கள் ஆரவாரத்தை அடக்கியுள்ளனர்.
பாம்பு அவனுடைய செஞ்சடைமேல் கொன்றை மாலையை ஒற்றினாற்போல் உள்ளது.
தனிச்சீரில் உள்ள ``சார்வாம்`` என்பதை இறுதியிற் சேர்க்க.
கங்கையும், உமையும், பாம்பும் அவனையே பற்றுக்கோடாகப் பற்றியுள்ள நிலைமை.
`அனைத்துயிர்கட்கும் பற்றுக் கோடு அவனே` என்பதைக் குறிக்கும் அடையாளங்களாம் - என்பது கருத்து.
``அரவம்`` இரண்டில் முன்னது ஆரவாரம்; பின்னது பாம்பு.

பண் :

பாடல் எண் : 25

மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்
மேல்ஆயம் இன்றியே உண்பொழுதின் மேலாய
மங்கை உமைவந் தடுத்திலளே வான்ஆளும்
அங்கை உமைவந் தடுத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-2ல் - ஆயம் இன்றியே - வேறு ஒருவர் துணை யில்லாமலே `நீர் உண் பொழுதின்` என்க.
இங்ஙனம் உரைத்தற்கு ஏற்ப, முதற்கண் `எங்கள் பெருமானே` என்பதை வருவித்துக் கொள்க.
வான் ஆளும் அம் கை உமை - வானுகலத்தை ஆள்கின்ற அழகிய செய்கையை உடைய உம்மை.
மேலாய மங்கை உமை வந்து அடுத்து `வம்` (என்று தடுத்திலளே; (ஏன்?) `-உம்மை நஞ்சு யாதும் செய்யாது - என்னும் கருத்தினாலோ?` என்பது குறிப்பெச்சம்.
`வம்` என்பது தடுத்தலை உணர்த்தும் குறிப்பு, `என்று` என்பது சொல்லெச்சம் சிவபெருமானது அளவில் ஆற்றலைப் புலப்படுத்ததவாறு.
ஈற்றடி எழுத்தொப்புமை மாத்திரையால் மடக்காயிற்று.

பண் :

பாடல் எண் : 26

அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்டம் அஃதே அடுத்ததிரு
ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும்
ஆனைக்கா வான்தன் அமைவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அடுத்த`` மூன்றினுள் முதலது.
`அண்மையில் உள்ள` என்றும், இடையது `ஏற்புடையது` என்றும், இறுதியது, `பொருந்தியுள்ள` என்றும் பொருள் தந்தன.
சார்வு - இருப்பிடம்.
``அஃதே`` என்பதன் பின்னும், `அஃதேயும்` என எண்ணும்மை விரிக்க.
ஆன் ஐ - இடப உருவான தலைவன்; திரு - இலக்குமி.
திருவைப் பொருந்தியுள்ள தலைவன் மாயோன்.
`அவனுக்காக ஆடுவது` என்றது, அவன் மத்தளம் முழக்க அதற்கு ஏற்ப ஆடுதல்.
ஈற்றடியில் உள்ள ஆனைக்கா, தலம் அமைவு - பொருந்திய ஒழுக்கம்.

பண் :

பாடல் எண் : 27

அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றுஆங்
கமைவும் பரமான ஆதி அமையும்
திருவால வாய்சென்று சேராது மாக்கள்
திருவால வாய்சென்று சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அமைவு`` இரண்டில் முன்னது உலக வாழ்வு.
பின்னது (உங்கு - பிறப்பையும், இறப்பையும் கடந்த) வீடுபேறு.
பரம் ஆன ஆதி - இவை அனைத்தும் தன்மேலவாகக் கொண்ட முதல்வன்; இறைவன்.
அவன் அமைந்துள்ள திருவாலவாய்த் தலம்` என்க.
மாக்கள் - அறிவிலா மக்கள் திருவால் - செல்வத்தால்; செல்வமாகிய காரணத்தால் அவாய்ச் சென்று சேர் - மேலும் மேலும் அவாவி ஓடி.
அஃது இருக்கும் இடத்தை நாடி அடைதல்.
`இரங்கத் தக்கது` என்பது சொல்லெச்சம்.
சேர் - சேர்தல்; முதனிலைத் தொழிற் பெயர்.
`சேர்வு` என்பதே பாடம் எனினும் ஆம்.
``ஆம், ஆன`` - என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``ஆதி`` என்னும் ஒரு பெயர் கொண்டன.

பண் :

பாடல் எண் : 28

சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் சென்றுதன்
கண்இடந் தன்றுஅப்புங் கருத்தற்குக் காட்டினான்
கண்இடந் தப்பாமைப் பார்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக் கண்ணப்ப நாயனாருக்கு அருள் செய்தமையை விளக்குவதாதல் வெளிப்படை.
இதிலும் மடக்கணி வரவில்லை.
`காலால்` என ஆல் உருபை விரித்து ஓதுதல் பாடம் அன்று.
ஈற்றடியில் கண் - மற்றொரு கண்ணை.
இடந்து அப்பாமைப் பார்த்து - இடந்து அப்பாதபடி உற்று நோக்கி, காட்டினான் - தனது மற்றொரு கண்ணும் ஊறு இன்றி விளங்குதலைக் காட்டினான்.
கருத்து- உள்ளம்.
அஃது ஆகுபெயராய் உள்ளத்தின்கண் உள்ள அன்பைக் குறித்தது.
எனவே, ``கருத்தன்`` என்றது `அன்பன்` என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 29

பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே பார்த்திட்
டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்
டுடையானஞ் சோதாதார் ஊண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஊனாரைக் கைவிட்டு`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
ஊன் - உடம்பு.
கைவிடுதல் - பற்று விடுதல்.
ஊண் - உண்ணும் தொழில்.
இதனை எழுவாயாக வைத்து, ``பரியாது``, ``பூசாது`` முதலியன, `அவைகளைச் செய்யாமலே உண்டாகும்` என்றபடி.
அதனால், `அந்த உணவு நியாயமான உணவா காது, தண்ட உணவாம்` எனக் கடிந்துரைத்ததாயிற்று பார்த்தல் - தக்கதை உணர்தல்.
பரிதல் - அன்பு செய்தல்.
அங்கம் - உடம்பு.
பூணு தற்கு, `கண்டிகை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.
அஞ்சு - அஞ்செழுத்து.

பண் :

பாடல் எண் : 30

ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்
ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் ஊணென்றும்
விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர்
விட்டானே புன்சடைமேல் வேறு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஊண் என்றும் விட்டானே`` என்பது முதலாகத் தொடங்கி, `இவள் தன்னை` என்பது வருவிக்க.
உன் மாலின் ஊணால், `ஊண் இல்லை; உறக்கு இல்லை;` என ஊரார் பேசும்படி சங்கினை இழந்தாள்` என இயைத்து முடிக்க.
ஏகாரங்கள் விளியுருபு.
`என்றும் ஊண்விட்டான்` என்பது, `அவன் உண்பதும் இல்லை; உறங்குவதும் இல்லை` என்பதைக் குறித்தது.
ஆயினும் தக்கனது அகங்காரத்தை அடக்க வேண்டி அவனது வேள்வியைத் துரந்தான்.
உறக்கு - உறக்கம்.
மால் - மயக்கம்; மையல்.
``மாலின்`` என்னும் இன் வேண்டாவழிச் சாரியை.
`மாலாகிய ஊணால்` என்க.
மையல் ஊணாக உருவகம் செய்யப்பட்டது.
ஓர் - ஒப்பற்ற; சிறந்த இதுவும் தலைவியது ஆற்றாமையைத் தோழி தலைவற்கு உரைத்து வரைவு கடாயது.

பண் :

பாடல் எண் : 31

வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்
வேறுரைத்த மேனி விரிசடையாய் வேறுரைத்த
பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்
பாதத்தாய் என்னும் மலர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எம்பெருமானீர்` என்பது வருவித்து.
``வேறு உரைப்பன் கேட்டருளும்`` என முடிக்க.
வேறு - வேறாக; சிறப்பாக.
உரைக்கப்படும் பொருள் ஈற்றில் உள்ள ``அலர்`` என்பது.
அலர் - பழிச்சொல்.
அஃதாவது தலைவி, ``விரிசடையாய்`` என்றும், ``பாதத்தாய்`` என்றும், ``அரவு ஊர்வாய்`` என்றும் இங்ஙனம் பலவாறு பிதற்றும் பிதற்றுரை அஃது அவர் அருளாமையால் உண்டாவதாகலின் பழியாற்றி.
வேறு உரைத்த - பிற நூல்களினினும் மேலாய்ச் சிறந்து விளங்கச் சொல்லிய.
`மேனிமேல் விரிந்த சடையாய்` என்க.
வேறு உரைத்த பாதம் - ஏனைப் பலரது பாதங்களினின்றும் வேறு பிரித்து வேதாகமங்கள் உயர்த்துக் கூறிய பாதம்.
அவ்வுயர்வாவது, உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலையும் செய்தல்.
ஈற்றடியில் `பாதத்தாய்` என்பது இடைக் குறைந்து, ``பாதத்தாய்`` என நின்றது.
`அரவு பார் ஊரும் பாதத்ததாய் ஊர்வாய்` என இயைக்க.
ஊர்வாய் - ஊரப்படுவாய்.
என்னும் அலர் - என்று இவள் சொல்கின்ற பழி.
இதுவும் மேலைத் துறை - `அலர்` என்பது சந்தி வகையால் ``மலர்`` என வந்தது.
அவ் எழுத்தெல்லாம் பற்றியே ``மலர்`` என்பது அந்தாதியாயிற்று.

பண் :

பாடல் எண் : 32

மலர்அணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத
மலர்அணைந்து மால்நயன மாகும் மலர்அணைந்து
மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால்
வன்சக்கர் அம்பரனே வாய்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியில் சக்கு, `சக்கர்` எனப் போலியாய் நின்றது.
சக்கு - கண்.
வன் சக்கு - நெருப்புக்கண் அம் பரன் - அழகிய முதல்வன்.
இவ்வாறான ஈற்றடியை முதலிற் கூட்டுக.
மலர் அணைந்து கொண்டு - அன்பர்கள் இடும் மலர்களை மேனிமேல் பொருந்தி ஏற்றுக்கொண்டு.
பாத மலர், உருவகம்.
மால் - திருமால்.
நயனம் ஆகும் மலர் அணைந்து - தனது கண்ணாகிய மலரைச் சாத்தி, `அணிந்து` என்பது எதுகை நோக்கி ``அணைந்து`` எனத் திரிந்து நின்றது.
இனி.
`அணைவித்து` எனினும் ஆம்.
மன் - நிலை பெற்ற.
வாள் - படைக்கலப் பொது.
ஆல், அசை.
`இது போற்றத்தக்க ஒன்று` என்பது குறிப்பெச்சம் ``வாய்த்து`` என்பதை, `வாய்ப்ப` எனத் திரித்து, ``வாளா`` என்பதன்பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 33

வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடியார்கள் எளிதில் கண்டு வணங்க, மலரோனும், மாலும் தேடியும் காணாராயினார் என்பதும், `சலந்தரனைக் கொன்றது போலும் மறக்கருணையை உடையன் ஆயினும் கங்கையைத் தலையில் தாங்கியது போலும் அறக்கருணையை உடையன்; என்பதும் கூறியவாறு.
``சலந்தரன்`` இரண்டில் முன்னது ஓர் அசுரன், பின்னது சலத்தை (கங்கையை)த் தரித்தவன்.
`தாம் சலந்தரனாய் நின்றவா என்னோ` என்க.

பண் :

பாடல் எண் : 34

தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில்
தாம்என்னை வேறாத் தனித்திருந்து தாமென்
கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோ
கழிப்பாலை சேருங் கடன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கழிப்பாலை`` இரண்டில் முன்னது ஒரு தலம்; சோழநாட்டில் காவிரியின் வடகரையது; கொள்ளிடக் கரையது.
பின்னது, அனைத்தையும் கழித்து நின்ற இடம்; நிலைமை.
தாமென் கழிப்பாலை - அலைகள் தாவுகின்ற ஈர நிலமாகிய திருக்கழிப்பாலை.
தாம் - கறைமிடற்றார்.
நாம் - உயிர்கள்.
தத்து உறவு - ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் தொடர்பு - `தாமும், நாமும் பொருளால் வேறாயினும், ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் தொடர்பில் வேறாகாது ஒன்றாவேம்; அஃதாவது, இருமையில் ஒருமையாவேம் என்றபடி.
`அவ்வாறிருக்கவும், அவர் என்னின் வேறாய்த் தனித்திருப்பது, அனைத்தையும் கழித்து நாம் தனியே நின்ற நிலையில் மட்டுமே அடைய நிற்கின்ற கடன் (முறைமை) என்னோ` என்க.
இறைவன் உயிர்களோடு உயிர்க்கு உயிராய் ஒன்றியிருப் பினும் பாசத்தடையால் உயிர்கள் அவனை அடைந்து அவனது இன்பத்தைப் பெறமாட்டாது கிடந்து, பாசத் தடை நீங்கிய பின்பே அவனையடைந்து இன்புறுதலை விதந்தவாறு.

பண் :

பாடல் எண் : 35

கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயான் கடநாகம்
மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய்
மாளவிரித் தாடுவான் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கட நாகம் - மதத்தையுடைய யானை.
`காரோணம் மேயானும், ஆடுவானும் ஆகிய பெருமானைத் தொழுமின்; தொழ வல்லிரேல்.
அவன் வந்து உம்முடைய வல்வினை நோய் மாளும்படி இரித்து (ஓட்டி) ஆடும் (உங்களுடன் கலந்து விளங்குவான்.
) என ஏற்குமாறு இயைத்து முடிக்க.
`மேயார், ஆடுவார்` எனப் பன்மை யாகவும்.
`நம்` எனத் தன்மையாகவும் ஓதுவன பாடங்கள் அல்ல.

பண் :

பாடல் எண் : 36

வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்
வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் வந்தார்
சரிதருவார் பைங்கொன்றைத் தாராரைக் கண்டு
சரிதருவார் பைங்கொன்றத் தார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடி சிவபெருமானைக் குறித்த தொட ராகும்.
சரிதரு - சடையில் நிரம்பி, வெளியேயும் வீழ்கின்ற தார்` என்க.
``தாரார்`` என்றாராயினும் `தாரார் முன்` என விரித்து ``வந்தார்`` என மேலே கூட்டிப் பின், `அவரைக் கண்டு வளைகழல்வார்` என உரைத்தல் கருத்து என்க.
`சுரிதருவார்`, `ஐங்கொன்றை` என்பன பாடம் அல்ல.
வந்தார் - வந்த மகளிர்.
``வந்தார்` என்பன பலவும் சொற்பொருட் பின்வருநிலையணியாய் வந்தன.
இறுதியில், `பைங் கொன்றைத் தார்போலும் வார் குழல்கள் சரிதருவார்` என இயைத்து முடிக்க.
இதன்கண் ``தார்`` என்றது, தார்போலும் காயை.
கொன்றைக் காயை மகளிரது கூந்தலுக்கு உவமையாகக் கூறுதல் வழக்கம்.
பெருமானது திருமேனியழகைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 37

தாரான் எனினும் சடைமுடியான் சங்கரன்அம்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சடை முடியான்; சங்கரன்; அம் தாரான்; (அத் தாரினை இப்பொழுது நமக்குத்) தாரான் எனினும், தசமுகனை முதலில் (சினந்து) தோள் நெரித்துப் பின்பு (நன்கு) மதித்து, அந்த வானவர்கள் தம் முன்னே வாழ்நாளும் கொடுத்துத்தார் ஆய (தூசிப் படையில் ஏற்கத் தக்கதாகிய) வாளும் கொடுத்தான்; (ஆகலின் பின்பு (தருவான்) என இயைத்து முடிக்க.
ஈற்றில் எஞ்சி நின்றது அவாய் நிலை`.
சிவபெருமான் முன்னே முனிந்தானாயினும் பின்னே திருவுளம் இரங்குபவன் என்பது அவன் இராவணனை முன்னே தோள்நெரித்துப் பின்னே அருளியவாற்றால் விளங்கும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 38

மதியாருஞ் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூட்டாகி
அண்ணா மலைசேர்வ ரால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மதி`` மூன்றில் முதலது பிறை; இறுதியது நிறை நிலா.
இடையது அறிவு.
மால் சிவபிரானைப் பலமுறை வழிபட்டமை பற்றி அறிவு நிறைந்தவனாகக் கூறினார்.
அண்ணாலை - திரு அண்ணாமலை.
ஆரோடும் - மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தாரும், மற்றும் நண்பரும் ஆகிய யாரோடும்.
கூட்டு ஆகி.
கூடி வாழும் வாழ்க்கையராகி.
அண்ணாமல் - நெருங்காமல்; `வாழ்விழந்து` என்றபடி.
ஐசேர்வார் - மிடற்றில் கோழைவந்து சேரப் பெறுவார்.
ஆல், அசை.

பண் :

பாடல் எண் : 39

ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆலந்துறை யுடையான் என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
ஆலந்துறை, அன்பில் ஆலந்துறை பாடல் பெறாது வேறு உளவேனும் கொள்க.
`அவனது சொல் சோராதன; பயனளியாது போகாதன.
அவன் இருப்பது ஆல நிழற்கீழ்; ஆய்வது அறம்; அமுது செய்வது ஆலம்.
(நஞ்சு) ஆடுவது தீ` என்க.
`ஆடுவது` என்பது ஈறு குறைந்து நின்றது.
சிவபெருமானது இயல்புகளை விதந்தவாறு.
``இருப்பதுவும்`` என்றாற்போல ஏனையவற்றிலும் இழிவு சிறப்பும்மை - உயர்ந்தவற்றைத் தாழ்ந்தனபோலக் கூறிப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 40

சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் சொல்லாய
வீரட்டத் தானை விரவார் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சொல் ஆயம் - சொற்கூட்டம்; பலவகை மொழிகள்.
`அவை இன்றி` என்றது, `அவைகளைக் கடந்து` என்றபடி.
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் * என அப்பரும் அருளிச் செய்தார்.
தொலைவு - சேய்மை.
சேய்மை யின்றியிருத்தலாவது, `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந் திருத்தல்.
தூநெறி - வீட்டு நெறி.
அந்நெறிக்கண் உள்ள சொல், நூல்கள் `அவைகளால் ஆயப்படும் பெருத்த சுடரொளி` என்க.
தனிச்சீரில் உள்ள சொல்.
`புகழ் பொருந்திய வீரட்டம்` என்க.
``வீரட்டம்` இரண்டில் முன்னது தலம்.
பின்னது வீர அட்டகாசம்.
அட்டகாசம் - பெருஞ்சிரிப்பு.
ஈற்றடியில் `வீரட்டத்தானை வணங்க` என ஒருசொல் வருவிக்க.
விரை - விரைந்து முயல்.

பண் :

பாடல் எண் : 41

விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ரை எலும்பு - யாவரும் விரைந்து அப்பால் விலகும் எலும்பு.
தனிச் சீரில், `வீரை` என்பது முதல் குறுகி நின்றது.
வீரை - கடல்.
ஈற்றடியை, `ஆதி நலம் நஞ்சுண்ட` என மாற்றி, `முதற்கண் விதித்த நன்மைகள் மெலிந்தன` என உரைக்க.
முதற்கண் விதித்த நன்மைகள் நல்வினை செய்வார்க்கு வலுப்படுதலும், தீவினை செய்வார்க்கு மெலிவடை தலும் உளவாதல் பற்றி இவ்வாறு கூறினார்.
``சேராதார்`` என்பதில் ஆறாவது விரியாது நான்காவது விரித்தலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 42

நலம்பாயு மாக்க நலங்கொண்டல் என்றல்
நலம்பாயு மானன் குருவ நலம்பாய்செய்
தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்
தார்த்தார்க்கும் அண்ணா மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டு நிரம்பக் கிடையாமல் ஒரு சீர் விடுபட்டுக் கிடைத்தலால் பொருள் காண்டல் அரிது.
)

பண் :

பாடல் எண் : 43

மலையார் கலையோட வார்ஓடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள் மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் மலை ஆர் கலை - மணி வடங்கள் ஒன்றோடு ஒன்று மோதுகின்ற மேகலை.
கொங்கை மலை, உருவகம்.
அதன்மேல் உள்ள கலை, மேலாடை.
மால் - மயக்கம்.
மையல்.
மலை ஆர் கலை - மலைகளில் வாழ்கின்ற மான்.
வானின், கலை, பிறை.
`தலைகளைக் காவாக உடையான்` என்க.
கா -தோளில் சுமக்கப்படும் பொருள்.
இதுவே, `காவடி` என வழங்குகின்றது; ``கலையுடையான்`` என்பன முதலியவற்றைச் சொல்லி அவனைத் தொழுதாள்; அதன் பயனா மால் ஆனாள்` - என்க.
இதுவும் தலைவியது ஆற்றாமை கண்டு தோழி அஞ்சி உரைத்தது.

பண் :

பாடல் எண் : 44

தாளார் கமல மலரோடு தண்மலரும்
தாள்ஆர வேசொரிந்து தாமிருந்து தாளார்
சிராமலையாய் சேமத் துணையேஎன் றேத்தும்
சிராமலையார் சேமத் துளார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியில் உள்ள சிராமலை - திருச்சிராப்பள்ளிக் குன்று.
அதன் கண் உள்ள இறைவர் யாவர்க்கும் நன்மைதர இருக் கின்றார்.
சேமம் - நன்மை.
``தாள்`` மூன்றில் முதலது தாமரைத் தண்டு; இடையது திருவடி.
ஈற்றது, முயற்சி.
சிரம் அலையாய் - சிரசிலே நீரில் அலையைத் தாங்கியுற்றவனே.
சேமத் துணையே எய்ப்பில் வைப்புப் போல உதவ இருப்பவனே.
`தாளார் (வீடு அடைய முயல்பவர்) ஏத்தும் சிராமலையார்` என்க.

பண் :

பாடல் எண் : 45

ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவாஅஞ்சொலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடின் ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அம்பலவா! ஆர்துணையாம் பூவணத்தாய்! பூதப் படையாளி! பொங்கொளியாய்!`` என்பன விளி.
ஆர் துணையாம் - யாவர்க்கும் நிறைந்த துணையாகின்ற பூவணம், பாண்டி நாட்டுத் தலம், ``அம் சொல் உமை `பூவணத்தாய்` எனின் - `பூப்போலும் தன்மையை தாய் என்றல்.
(நீ) யார் - யாரும்.
உமமை தொகுத்தல்.
துணையா - நிகராகாதபடி.
(யானையை உரிப்பார் வேறு ஒருவர் இல்லை.
) ஆனை உரி மூடின் - யானைத் தோலை உரித்து மூடிக்கொண்டால்,ஆங்கு ஆர் துணையா இருப்பது - அவள் (உமை) அப்பொழுது யாரைத் துணையாகப் பற்றி அஞ்சாமல் இருப்பது? சிவபிரான் யானையை உரித்த பொழுது உமை அஞ்சி அகன்றாள்` என்பது புராண வரலாறு.
புகல் - சொல்லு.
`மூடி` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 46

புகலூர் உடையாய் பொறியரவும் பூணி
புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே புகலூராய்
வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய்
வெண்காடா என்பேனோ நான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புகலூர்`` மூன்றில் முதலது திருப்புகலூர்த் தலம்.
பொறி - படத்தில் உள்ள புள்ளிகள்.
இடையது - புகுதலையுடைத் தாய்ப் பொங்குகின்ற புனல் என்க.
இறுதியது யாவரும் சிறப்பித்துச் சொல்கின்ற கயிலாயம்.
அதனை, ``ஊர்க்கோட்டம்`` என்ற சிலப்பதி காரத்தாலும் உணர்க.
``வெண்காடு`` இரண்டில் முன்னது சோழ நாட்டுத் தலம்.
பின்னது, சாம்பலால் வெண்மையைப் பெற்ற சுடுகாடு.
``புகலூர் உடையாய்.வெள்ளேற்றாய்! உன்னை நான் சுடுகாட்டில் ஆடுபவன்` என்று இகழ்வேனோ என்க.

பண் :

பாடல் எண் : 47

நானுடைய மாடே என்ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே நான்மறையாய் நானுடைய
காடுடையாய் காலங்கள் ஆனார் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நானுடைய`` மூன்றும் சொற்பொருட் பின்வரு நிலை யணியாயே வந்தன.
``காடு`` இரண்டில் முன்னது, ``நானுடைய காடு`` என்றதனால் வினைக்காடாயிற்று.
பின்னது, ``கனலாடுங் காடு`` என்றதனால் முதுகாடாயிற்று.
காலங்கள் ஆனார் - தம் தம் காலம் முடியப் பெற்றார்.
`நானுடைய மாடே` என்பன முதலான விளிகள் பலவற்றையும் முன்னே வைத்து, `வினைக் காட்டை உடைத்தெறி வாயாக` என முடிக்க.
மாடு - செல்வம்.

பண் :

பாடல் எண் : 48

ஆயன் றமரர் அழியா வகைசெய்தான்
ஆயன் றமரர் அழியாமை ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் ஆயன், நந்தகோபன்.
அவனுடைய தமரர்(சுற்றத்தார்) அழியா வகை செய்தான் - இந்திரன் பெய்வித்த கல்மழையால் அழியாதபடி வகை செய்து காத்தலின்.
பின்னொரு காலத்தில் இவ்வாறு செய்தவனாகிய திருமால்.
அன்று - முன் ஒரு காலத்தில் அமரர் ஆய் அழியாமையாய் - தேவர்கள் நலம் பெற்று, இராவணனால் அழியாமைப் பொருட்டு முன்னின்று.
`அழியாமைக்கு` என உருபு விரிக்க.
(அவனை அழித்து) இருத்தினான் - இருக்கச் செய்தான்.
அவன் அன்றே விடை ஊர்வானது திருமேனியை (சிவ லிங்கத்தை) சேதுக் கரையில் திருத்தினார்.
(செம்மையாக நிறுவி வழிபட்டான்.
) இராமேச்சரத் தலத்தின் சிறப்புணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 49

கரையேனும் மாதர் கருவான சேரும்
கரையேனும் ஆது கரையாம் கரையேனும்
கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையேல்
கோளிலியெம் மாதி குறி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் `கரேணுவும்` என்பது ``கரையேனும்`` என மருவி நின்றது.
கரேணு - யானை.
அடி-2ல் முதற்கண் கரை, எதுகை நோக்கித் திரிந்த கறை; அதன் பொருள் `அழுக்கு` என்பது.
இரண்டாவது கரையாம் - சொல்ல மாட்டோம்; `சொல்ல வேண்டுவ தில்லை` என்பதாம்.
அதற்குமுன் `அது` என்னும் சுட்டுப் பெயர் நீண்டு, ``ஆது`` என வந்தது.
யானையாயினும், மாதரது கருப்பைகள் அழுக்குப் பொருளாயினும்; சேரும் - அதன்கண் சேர்ந்துதான் பிறக்கும்.
அது கரையாம் - அதனை நாம் செய்ய வேண்டுவதில்லை.
யானை தெய்வத் தன்மையுடைய உயிராகக் கருதப்படுவதுடன் பெரிய உருவத்தையும் உடையது.
ஆயினும் அது பிறப்பது, என்றால் கருப் பையுள் வீழ்ந்து கிடந்துதான் பிறக்கவேண்டும்.
(ஆகவே, எத்துணைத் தூயோரும், பெரியோரும் `பிறப்பது` என்றால் கருவில் வீழ்ந்து யோனிவாய்ப் பட்டுத்தான் பிறக்கவேண்டும்.
அதனால் அதனை நீ வெறுத்தல் உண்மையாயின்.
கோளிலி எம் ஆதிதன் குறி (இலிங்கம்) கரையேனும் - எல்லைக்குட்பட்ட சிறுபொருளாயினும் (அதன் பெருமையை உணர்ந்து அதனை நீ) பரவவல்லையேல், (நீ) கோள் இலி எம் ஆதி குறி - குற்றம் இல்லாதவனாகிய எம் முதல்வனாம் சிவபெருமானால் குறிக்கப்படும் பொருளாவை.
`பிறவிக் கடலினின்றும் எடுக்கப்படுவை` என்றபடி.
இறுதிக்கண் `ஆவை`` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
கோளிலி, சோழநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 50

குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்
குறியாகி நின்ற குணமே குறியாகும்
ஆலங்கா டெய்தா அடைவேன் மேல் ஆடவரம்
ஆலங்கா டெய்தா அடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``குறி`` மூன்றில் முதலது, உடம்பில் உளதாகின்ற `மச்சம்` என்னும் அடையாளம்.
`சிவபெருமான் திருமேனி முழுதும் சிவந்திருக்க, மிடற்றில் மட்டும் உள்ள நஞ்சுக்கறை மச்சம்போல உள்ளது` என்றபடி.
இடையது அடையாளம்.
`கறை மிடற்றோடு கூடிய திருமேனி ஞானத்தின் அடையாளமாய் உள்ளது` என்றபடி.
அவ்வாறாகி நின்ற குணமாவது அருள்.
தனிச்சீரில் உள்ள குறி, திருமேனி, ஆலங்காடு, `திருவாலங்காடு` என்னும் தலம்.
``எய்தா`` இரண்டு, `எய்தி` என்னும் பொருட்டாய வினையெச்சம்.
ஈற்றில் ஆல் - ஆலம் விழுது.
`ஆட` என்பதில் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது.
`எம்பெருமானே` என்பதை முதற்கண் வருவித்து, `நீ ஞானக் குறியாகி நின்ற குணமே குறியாகியுள்ள ஆலங்காடு என்று நான் அடைவேன்.
நீ ஆடு அரவங்கள் உன் மேல் ஆலம் விழுது போல அங்கு ஆட என்முன் வந்து அடை` என முடிக்க.
`உனது திருக்காட்சியைத் தந்தருள வேண்டும்` என வேண்டியவாறு.

பண் :

பாடல் எண் : 51

அடையும் படைமழுவும் சூலமும் அங்கி
அடையும் பிறப்பறுப்ப தானால் அடைய
மறைக்காடு சேரும் மணாளர்என்பாற் சேரார்
மறைக்காடு சேர்மக்கள் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிவபெருமான் மழுப்படையையும், சூலப் படையையும், நெருப்பையும் ஏந்தியிருத்தல் தன்னை அடைந்தாரது பாசத்தை போக்குமாற்றால் அவர்களது பிற்பை நீக்குங் குறியாய் இருக்கவும், (நல் ஊழ் இன்மையால்) பிறந்து இறப்பவராகிய மக்கள் `திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும் அழகர்` எனப்படுகின்ற அவரை அடைய மாட்டார்கள்.
(`வேறு எங்கெல்லாமோ சென்று அடைவார்கள்` என்றபடி.
) ஈற்றடியில் உள்ள ``மறைக்காடு`` - இடு காடு.

பண் :

பாடல் எண் : 52

தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய ஆறு தழைக்கின்றார் தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்காரர் என்பார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாம் மேய ஆறு சமய முதல் பரமும் - சமயிகள் பலரும் அவரவர் விரும்பிய ஆறு சமயங்கட்கும் முதல்வர்களாய் உள்ள கடவுளர் பலரும்.
(`பரம்` என்பது ஆரியச் சொல்லாயினும் தமிழில் வடசொல்லாய், சொல் வகையால் அஃறிணை இயற்பெயராய், இங்கு பன்மை குறித்து நின்றது.
) தாம் ஏய ஆறு தழைக்கின்றார்- சிவபெருமானால் ஏவியவாற்றானே பெருமை பெற்று விளங்கு கின்றனர்.
(`தொழிற் கடவுளர் பலரும் உயிர் இனத்தவர் ஆதலின் அவர் யாவரும் சிவபெருமானது திருவருளானே கடவுள் தன்மை பெற்று அதிகாரத்தில் உள்ளனர்` என்றபடி.
) தாமேல் - இனி அவரோ (சிவபெருமானாரோ) என்றால்.
தழுவல் உருவர் - (`தழுவல்` என்பது உகரங்கெட்டு, `தழல்` என நின்றது,) உமாதேவியால் தழுவப்பட்ட உருவத்தையுடையவர்.
(`அருளாகிய சத்தியோடு கூடியவர்` என்றபடி.
) சங்க அரவர் (`சங்க` என்னும் அகரம் தொகுக்கப்பட்டது.
) அமரரும், அடியவரும் ஆகிய குழாத்தின் துதி ஆரவாரத்தை உடையவர்.
தழல் உருவர் - நெருப்புப் போலும் திருமேனியையுடையவர்.
என்பார் - எனப்படுவார்.

பண் :

பாடல் எண் : 53

பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்
பார்மேவு கின்ற படுதலையர் பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேரவரு வார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பார்`` மூன்றில் முதலது பல உலகங்கள்.
அவை களில் மேவும் பலராவர் மக்கள், அசுரர், இராக்கதர், நரகர், தேவர், உருத்திரர் முதலியோர்.
கலப்பினால் அவர்களேயாய் நிற்பார்` என்றவாறு.
இடையது, வாழ் நிலம், ஈற்றது, நிலவுலகம்.
வலஞ்சுழி, சோழ நாட்டுத் தலம்.
ஈற்றடியில் வலம் சூழி - வெற்றியாகிய வட்டம்.
மூன்றாம் அடியில் உள்ள ``வலஞ்சுழியைச் சேர்வார்`` என்பதனை எழுவாயாக்கி, முதலிற் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 54

வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா
வாரணிந்த கொன்றை மலர்சூடி வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்
செஞ்சடையாய் செல்ல நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி -2-ல் வார் அணிந்த - நீளமாகத் தொடுக்கப் பட்ட.
தனிச்சீரில் உள்ள வார் - நீர்.
ஈற்றடியில் சடை - வேர்.
`எப் பொருட்கும் செவ்விய வேராய் உள்ளவனே` என்க.
செல்ல நினை - நின் அடியார்களைக் கடைபோக நினை; `இடையிலே மறந்து விடாதே` என்றபடி.
``கடையவனேனைக் கருணையினாற் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே, விட்டிடுதி கண்டாய்`` * என மாணிக்கவாசகரும் விண்ணப்பித்துக் கொண்டார்.

பண் :

பாடல் எண் : 55

நினைமால் கொண்டோடி நெறியான தேடி
நினைமாலே நெஞ்சம் நினைய நினைமால்கொண்
டூர்தேடி யும்பரால் அம்பரமா காளாஎன்
டூர்தேடி என்றுரைப்பான் ஊர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-2-ல் ``மாலே`` என்றது சிவனை விளித்ததே.
மால் - பெரியோன்.
இப்பெயர் இடுகுறியாய்த் திருமாலைக் குறிப்ப தாயினும் காரணங் கருதியவழி பெருமையுடையோர் பலரையும் குறிப்பதே.
இதனை முதற்கண் கொண்டு உரைக்க.
அடி-1-ல் நினை மால் - (உன்னையே) நினைத்தலால் உண்டாகிய மையல்.
நெறி - உன்னை அடையும் வழிகள்.
`நெஞ்சம் நினை நினைய` என்க.
``நினை மால் கொண்டு`` எனப் பின்னுங் கூறியது, அடி-1-ல் கூறியதை மீட்டும் கூறிய அனுவாதம்.
அடி-3-ல் `ஊர் ஊர்` என்னும் அடுக்குக் குறைந்து நின்றது.
உம்பர் ஆர் - தேவர்கள் நிறைந்த.
அம்பர் மாகாளம்.
சோழ நாட்டுத் தலம்.
என் ஊர் தேடி - எனது ஊரைத் தேடி வந்தவனே.
`என்று இவள் உனது ஊரை (அம்பர் மாகாளத்தை)ச் சொல்வாள்` என்க.
இதில் பாடங்கள் பல திரிபுபட்டன.
இதுவும் தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி தலைவனை எதிர்பெய்து கொண்டு கூறியது.

பண் :

பாடல் எண் : 56

ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவும் மேல்லுரகம் ஊடுவர்கொல் ஊர்வதுவும்
ஏகம்பம் என்றும் இடைமருதை நேசத்தார்க்
கேகம்ப மாய்நின்ற ஏறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இடை மருதை நேசத்தார்க்கே - திருவிடை.
மருதூரை விரும்பும் விருப்பம் உடைய இறைவற்கே.
ஏகாரம் தேற்றம் இதனை முதலிற் கொண்டு, ``என்றும்`` என்பதை இதன்பின் கூட்டுக.
`உண்பதுவும் உடைதலையில்` என மாற்றுக.
`மேல் ஊர்வதும் ஊரகம்` என்க.
ஊடுதல், இங்கே வெறுத்தல்.
ஊடுவர்கொல் - இவைகளை வெறுப்பாரோ! வெறார் (ஆயினும்) ஏறு - ஆண் சிங்கம் நரசிங்கம்.
கம்பமாய் நின்றது - நடுக்கம் உடையதாய் நின்றுவிட்டது.
``நேசத்தார்க்கே`` என்னும் ஏகாரத்தால், `இவ்வாறு மிக எளியாராய்க் காணப்படுகின்றவர்க்கே` என, அவரது ஆற்றல் மிகுதி விளக்கப் பட்டது.
திருமால் கொண்ட நரசிங்க அவதாரத்தைச் சிவபெருமான் சரபமாய்த் தோன்றி அழித்தமை புராணங்களில் காணப்படுவது.

பண் :

பாடல் எண் : 57

ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடி ஏறேய
ஆதிவிடங் காகாறை கண்டத்தாய் அம்மானே
ஆதிவிடங் காஉமைதன் மாட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் ஏறு ஏய - தேவர்களில் ஆண்சிங்கம் போல `வாழ்கின்ற முதலே` என்க.
தனிச்சீரில் ஏறு ஏய - உயர்வு பொருந்தக் `காறையை அணிந்த கண்டத்தை உடையவனே` என்க.
காரை - கழுத்தணி; அது விடக் கறையைக் குறித்தது.
`அண்டத்தாய்` என்பது பாடம் அன்று.
அடி-3-ல் ``ஆதிவிடங்கா`` என்பதைக் ``கண்டத்தாய்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
ஆதி விடங்கன் முதற்கண் தோன்றிய சுயம்பு மூர்த்தி.
`ஆதி விடம் உமைதன் மாட்டுகா` என இயைத்து, `முற்காலத்தில் நீ உண்ட நஞ்சினை உமைக்குத் துன்பம் நேராதவாறு காப்பாற்று` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 58

மாட்டும் பொருளை உருவு வருகாலம்
வாட்டும் பொருளை மறையானை மாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கார் பங்காம்
உருவானைச் சோதி உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் மாட்டும் பொருள் - எல்லாம் வல்ல பொருள் .
உருவு வருகாலம் - பிறப்பு வருங்காலம், அடி-2-ல் மாட்டும் பொருள் - அந்தப் பிறப்பிலே சேர்க்கும் பொருள்.
மாட்டும் உரு - நெருப்புப் போல விளங்கும் திருமேனி.
நெருப்பை வளர்த்தலை `மாட்டுதல்` என்றல் வழக்கு.
சோதி உமை - அழகிய உமாதேவி.
அடி-4-ல் உரு - திருமேனி, சோதி - (மனமே, நீ) ஆராய்; எண்ணு.
உரை - துதி.

பண் :

பாடல் எண் : 59

உரையா இருப்பதுவும் உன்னையே ஊனில்
உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் உரையாய
அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே ஆய்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உரையா - உரைத்து; துதித்து.
ஊனில் உரையாய் - உடம்பினின்றும் எழுகின்ற சொல்லாய்.
உரையாய அம்பொன் - மாற்று உரைக்குப் பொருந்திய அழகிய பொன்.
இதன்பின் உள்ள `சோதி` என்பதை இறுதியிற் கூட்டுக.
அடி-4-ல் அம் பொன் - அழகிய இலக்குமி.
ஏ சோதியே - ஏவிய ஒளிவடிவானவனே.
ஏவுதல் - இங்கு, வாழ விடுதல், திருவாரூர், இலக்குமி, வழிபட்ட தலமாகும்.
ஆய்ந்து சோதி - எனது உயிரை அலசித் தூய்மை செய்.

பண் :

பாடல் எண் : 60

ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும்என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலமறுத் தாய்ந்துன்றன்
பாலணையச் செய்த பரமா பரமேட்டி
பாலணையச் செய்த பரம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடைய - அடைவதற்கு.
வரும் - விரும்பி வருகின்ற.
என்மேல் ஆய்ந்து - என்னிடத்துப் படிந்துள்ள குற்றங்களை ஆராய்ந்து, அக்குற்றமாகிய, கட்டாம் மலங்களை அறுத்து.
`ஆய்ந்து அளைய` என இயையும்.
பரமேட்டடி - முன்னோனாகிய இறைவன்.
அடி-4-ல் பால் - ஊழ்; வினை - அணைய - அழியும் படி.
பரம் - உனது கடமை `நன்று` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 61

பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட
பரமாய பைங்கண் சிரமே பரமாய
ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்
ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பரம்`` மூன்றில் முதலது சுமை.
இடையது பரம் பொருள்.
இறுதியது மேன்மை.
முதற்கண் உள்ள ``பைங்கண் சிரம்``, இறந்தாரது குழிந்தாழ்ந்த கண்களையுடைய தலை.
`அவைகளை ஏய (பொருந்த)ப் பூண்ட ``சிரமே`` என இயைக்க.
இச் சிரம் - தலைமை இரண்டாம் அடியில் உள்ள.
``பரமய சிரமே`` என்பதற்கு.
`பரம் பொருளாக மதிக்கப்படுபவருள் தலையாயவனே` என உரைக்க.
சிவபெருமானுடைய கண்கள் திங்களும், ஞாயிறுமாய் நிற்றல் பற்றி, `பைங்கண்` எனப்படுதல் உண்டு.
பரமாய ஆறு - மேலான நதி; ஆகாய கங்கையை.
ஐந்து அடைந்த மேனி - `அயன், அரி, அரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் மூர்த்தங்கள்.
``அன்பு`` என்பதை `என் அன்பு` எனக்கொண்டு, ஆறு அடைந்த செஞ்சடையை ஆய் - `முறைப்படி உன்னை வந்து பற்றிய செவ்விய மூலத்தை ஆராய்` என உரைக்க.
சடை - வேர்; மூலம்.
`ஆராய்` என்றது.
`ஆராய்ந்து அருள்செய்` எனத் தன் காரியம் தோற்றி நின்றது.

பண் :

பாடல் எண் : 62

அன்பே உடைய அரனே அணையாத
அன்பே உடைய அனலாடி அன்பே
கழுமலத்துள் ஆடுங் கரியுரிபோர்த் தானே
கழுமலத்து ளாடுங் கரி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் `அந்` என்னும் வடசொல் `அன்` எனத் திரிந்து, அச்சத்தைக் குறிக்கும் `பே` என்பதை அடுத்து நின்றது அன்பே உடைய அரன்.
வேண்டாத அச்சத்தையுடைய உருத்திரன்.
வேண்டாத அச்சமாவது, கொடுமை நன்மையாதலை உணராமையால் கொள்கின்ற அச்சம்.
இஃது உயிர்கள்பால் உள்ளது.
அணையாத - நெருங்கக் கூடாத.
வன்பேய் - வலியபேய்களை.
அன்பே உடைய - சுற்றிலும் கொண்ட அடி-3-ல் கழுமல் - நிறைதல்.
அன்பே கழுமலத்துள் - அன்பே நிறைந்துள்ள உள்ளங்களில்.
ஆடும் - நடனம் புரிகின்ற.
ஈற்றடியில் உள்ள கழுமலம் - சீகாழி.
ஆடும் கரி - பொருந்தியுள்ள சான்று.
உயிர்களின் செயல்கள் அனைத்திற்கும் சான்று.
`அரனும், அனலாடியும், கரியுரி போர்த்தானும் ஆகிய அவனே கரி` எனற்பாலதனை, ``கழுமலத்துள் ஆடும் கரி`` எனச் சிறப்பித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 63

கரியார்தாம் சேருங் கலைமறிகைக் கொண்டே
கரியார்தாஞ் சேருங் கவாலி கரியாகி
நின்ற கழிப்பாலை சேரும் பிரான் நாமம்
நின்ற கழிப்பாலை சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கரியார்`` இரண்டில் முன்னது, `குற்றம் உடையவர்` என்னும் பொருட்டாய்த் தாருகாவன முனிவரைக் குறித்தது.
பின்னது `சான்றாவார்` என்னும் பொருட்டாய்ச் சான்றோரைக் குறித்தது.
முதல் அடியில் `சேர்த்தும்` என்னும் பிறவினைச் சொல் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டு, `சேரும்` என வந்தது.
கலை மறி - மான் கன்று.
தனிச்சீரில் உள்ள ``கரி`` - சான்று.
``கழிப்பாலை`` இரண்டில் முன்னது சோழநாட்டுத் தலம்.
பின்னது, ``உன்னிடத்தில் உள்ள குற்றங்களை நீக்கும் பான்மையால்`` என்றபடி.
ஐ, சாரியை.
``சேர்`` என்பதற்கு.
`நெஞ்சே, நீ` என்னும் எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 64

சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல்
சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் சேரும்
மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்
மலையான் மகளை மகிழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சேரும் பிரான்` இரண்டில் முன்னது, யாவராலும் அடையப்படும் கடவுளாகிய சிவபெருமானைக் குறித்தது.
பின்னது, `யாவரும் வந்து வணங்குகின்ற தலைவன்` எனப் பொருள் தந்தது.
இதன்பின் `என்னும்` என்னும் பண்பு உருபு விரிக்க.
`சிவபிரானுடைய பெயரைச் சிந்தித்தால் யாவராலும் வணங்கப்படும் தலைமைப் பதவி கிடைக்கும்` என்றபடி.
``சித்திக்க`` இரண்டில் முன்னது `நீவிர் சிந்தித்தால்` எனவும், பின்னது, `யாவரும் நினைக்கும்படி` எனவும் பொருள் தந்தன.
`அவ்வாறு சிந்திப்பதற்கு அவன் யாண்டுறைவன்` எனின், ``ஆரூர் நின்றான்`` என முடிக்க.
உமை, கங்கை இருவருமே மலையரையன் மகளிர் ஆதலின் மலையரையன் இரண்டும் தனித் தனி அவருள் ஒவ்வொருவரைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 65

மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்ய மகளிர்
மகிழ்ந்தம் பரமாகி நின்றார் மகிழ்ந்தங்கம்
ஒன்றாகி நின்றபங்கர் ஒற்றியூர்
ஒன்றாகி நின்ற உமை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மா காளம் - பெரிய `எக் காளம் என்னும் சின்னம்.
செய்ய - அதனை ஊத; `நீர் புறப்பட்டு வர` என்றபடி.
அம்பரம் - ஆகாயம்; வெளி `வெளியாகி நின்றார்` என்பது.
`ஆடையிழந்து நின்றார்` என்பதாம்.
அங்கம் - உடம்பு.
``உமை பங்கர்`` என்பது அண்மை விளி.
ஈற்றடியில் உள்ள ``ஒன்றாகி`` என்பது `ஒன்றுதல் உடையீராகி` என்றபடி.
உமை - உம்மை `உம்மை அன்பர் மகிழ்ந்து` என மேலே கூட்டுக.
`உமது உலாவில் மகளிர் பலர் உம்மைக் கண்டு மையல் கொண்டனர்` எனப் பெருமானது அழகைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 66

உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்
உமைகங்கை என்றிருவர் காணார் உமைகங்கை
கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று
கார்மிடற்றம் மேனிக் கினி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-2-ல் உம்மை.
``உமை`` என இடைக் குறைந்து நின்றது.
உம்மை - முன் ஒரு காலத்தில்.
இருவர், அயனும் மாலும், அடி-2ல், கங்கு ஐ என்று - எல்லையுட்பட்ட நம்மைப் போலும் ஒருதலைவன்` எனக் கருதினமையால்.
அடி-4-ல் கார்மிடல் தம் மேனிக்கு - கரியதும் வலியதும் ஆகிய தங்கள் உடம்பினிடத்தே கரியமேனி திருமாலுடையது.
இனி - இனிக்கும் பொருளாக.
உமை, தனிச் சீரில் உ - சிவனது.
மை - யாவரும்.
`குற்றம்` எனக் கருதுகின்ற.
கம் கை - தலையை ஏந்திய கைகையும் கார் மிடற்று அம் மேனிக் கதிர் முடியான் கண் மூன்றும் - நீல கண்டத்தையுடைய அழகிய திருமேனியையும், ஒளி பொருந்திய சடை முடியையும் உடைய அவனது மூன்று கண்களையும் அடி-1 -ல் உமை, கங்கை என்ற இருவர் உற்ற உணர்வும் பொருந்தியுள்ள அன்பையும்.
காணார் - அறியாராயினர்.
`தம் மேனியில் அறியார் ஆயினர்` என்றதனானே `வேற்றுரு எடுத்தும் கண்டிலர்` என்பது குறிக்கப் பட்டது.
`இனிப்பு` என்பது இறுதிநிலை குன்றி முதனிலை மாத்திரமாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 67

இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்
இனியவா ஆகாமை யற்றும் இனியவா
றாக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை
ஆக்கை பலசெய்த அன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இனியவா காணீர்கள்`` என்பதை இறுதிக்கண் கூட்டுக.
`இப்பிறவியில்` என ஏழாவது விரிக்க.
இனி - இனிமேலும்.
அவா ஆகாமை - ஆசை வளராமல், ஆக்கை பல - பலவகையான பிறப்புக்களை, இனியவாறு செய்த - நல்ல வகையில் படைத்த.
ஆக்கை பல செய்த அன்று அம்மானை இனியவா காணீர்கள் - உங்களுடைய உடம்பு வலுவாயிருந்து பல செயல்களை விரும்பியவாறே செய்த இளமைக் காலத்தில் பெருமானை நல்லவராகா அறிந்து வழிபாடும் செய்யாது விட்டீர்கள்.
`இன்று இரங்கி என் பயன்` என்பது குறிப்பெச்சம்.
இப்பாட்டிற்கு, `உலகீர், நீவிர்` என எழுவாய் வருவித்துக் கொள்க.
ஆமாத்தூர், நடுநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 68

அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி
அன்றவுணர் வீட அருள்செய் தான் அன்றவுணர்
சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்
சேராமல் நின்ற சிவம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்று அவுணர் - பகைத்த அசுரர்; திரிபுரத்தவர்.
வீட - அழிய.
அருள், மறக் கருணை.
தனிச்சீரில், `உணர்வு` என்பது, ``உணர்`` என முதல் நிலையளவாய் நின்றது.
உணர்வு அன்றச் சேராமல் நின்ற அடிகள் - அறிவு மாறு பாடாச் செல்லாதபடி செவ்வே நிற்கின்ற பெருமான்; ஈற்றடியிலும், `சேர்வு` என்பது, ``சேர்`` என முதனிலையளவாய் நின்றது.
மல் - வளம்.
மங்கலம் அடியார்களுக்குச் சேர்வாக (ப்புகலிட மாக) மங்கலம் நிலைபெற்ற சிவம் என்க.
அமரர்க்கு அருளித் திரிபுரத்தவர்க்கு மறக் கருணையே செய்தவனும், யாவர்க்கும் அவரது அறிவு கோட்டம் அடையாதபடி செம்மையனாய் நிற்கின்றவனும் ஆகிய பெருமான் அடியார்கட்குப் புகலிடமாய் நிற்கின்ற சிவமாய் உள்ளான்` என்க.

பண் :

பாடல் எண் : 69

சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் சிவனந்தம்
சேரும் உருவுடையீர் செங்காட் டங்குடிமேல்
சேரும் உருவுடையீர் செல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் அந்தம் செல்கதிக்கு - முடிவில் அடையக் கூடிய கதிக்கு; முத்திக்கு.
ஓர் கண் - ஒப்பற்ற கண்; முத்தி நெறிக்கு ஒப்பற்ற கண்ணாவது ஞானம்.
`சேர்வதை ஆக்கும்` என்க.
அடி-2ல் நம்தம் கதி - நம்முடைய கதி; நாம் அடையக் கூடிய கதி.
அதற்குக் கண் ஆதலாவது, வழிகாட்டியாய் நிற்றல்.
தனிச்சீரில் அந்தம் சிவன் சேரும் உரு உடையீர் - முடிவில் சிவனை அடையும் குறிக்கோளை உடையவர்களே.
ஈற்றடியில் செல் உரு உடையீர் - நினைத்த இடத்தில் செல்லுதற்குரிய உடம்பைப் பெற்றவர்களே.
`செங்காட்டாங்குடிமேல் சேரும்` என முடிக்க.
செங்காட்டாங்குடி, சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 70

செல்லும் அளவும் சிதையாமல் சிந்திமின்
செல்லும் அளவும் சிவன்உம்மைச் செல்லும்
திருமீச்சூர்க் கேறவே செங்கண்ஏ றூரும்
திருமீச்சூர் ஈசன் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் செல்லும் அளவும் - இயலும் அளவும்.
அடி-2-ல் செல்லும் அளவும் - நீவிர் மேலே செல்லும் அளவும்.
``உம்மை`` என்னும் இரண்டாவதை, `உம்மொடு` என மூன்றாவதாகத் திரிக்க.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.
அடி-3-ல் `திருமீயச்சூர்` என்பது ``திருமீச்சூர்`` எனக் குறைந்து நின்றது.
இது சோழ நாட்டில் உள்ள ஒருதலம்.
ஏற - இதனை அடைய.
ஏறு - இடபம்.
அடி-4-ல் திரு மீச்சு ஊர் - மங்கலம் மேற்பட்டு மிகுகின்ற `ஈசன்` என்க.

பண் :

பாடல் எண் : 71

திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்
திறமென்னும் சிந்தைக்கும் ஆமே திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற
சித்தத்தீரே செல்லும் நீர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க.
திறத்தை யுடையது ``திறம்`` எனப்பட்டது.
திறம் - வலிமை - (இடையூறுகளை யெல்லாம் கடக்கும்) வலிமையுடைய சித்தத்தை.
(மனத்தை - அத்துச் சாரியை நிற்க ஐயுருபு தொக்கதனை இலேசினால் * கொள்க) `ஈர் திருக்கடவூர்` என இயைத்து, `ஈர்க்கின்ற திருக்கடவூர்` என வினைத் தொகை யாக்குக.
``திருக்கடவூர் சேரும் சித்தத்தீரே`` என்றது அத்தலப் பெருமானை விளித்தது.
சித்தம் - உள்ளம்.
நீர் செல்லும் - உமது விருப்பம்போல் நீர் திருக்கடவூர் செல்லும்.
அடி-1-ல் திறம் என்னும் சிந்தை - உண்மையில் வலிமையுடைய உள்ளமானது, உம்மைத் தெரிந்து காணும் - பல பொருள்களையும் விட்டு உம்மை ஆராய்ந்து அறியும்.
(அவ்வாறின்றி) திறம் என்னும் சிந்தைக்கும் ஆமே - `யான் வலிமையுடையேன் என வாளா தற்பெருமை பேசிக்கொள்கின்ற உள்ளத்திற்கும் அது கூடுமோ? (கூடாது).
`திறமையுள்ள உள்ளத்திற்கு அடையாளம் சிவபெருமானது பெருமையை உணர்ந்து அவனைப் பற்றுதலே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 72

நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் நீரேய்
நெருப்பாய தோற்றத்து நீளாரம் பூண்டீர்
நெருப்பாய தோற்றம் நிலைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நீரேய். பூண்டீர்`` என்பதை முதலிற் கூட்டி, `எருதேறும் நின்மலனார் ஆவீரும் நீரே; நெருப்பாய தோற்றம் நிலைத்து நெடுவானில் நின்றீரும் நீரே` என இயைத்து முடிக்க.
தனிச் சீரில் `நீறு` என்பது எதுகை நோக்கி ``நீர்`` என நின்றது.
சிவபெரு மானது திருமேனி இயற்கையில் நெருப்புப் போன்றதாய், அதன்மேல் நீறு பூசப்பட்டிருத்தலின் அதற்கு நீறு பூத்த நெருப்பு உவமையாயிற்று.
`பூண்டு` என்பது பாடம் அன்று.
ஆரம், எலும்புமாலையும், தலை மாலையும்.
நிலைத்து - நிலைக்கப் பெற்று.
இறைவரது இயல்பை வருணித்தவாறு.

பண் :

பாடல் எண் : 73

நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்தில் வுலகனைத்தும் நீரே நிலைத்தீரக்
கானப்பே ரீங்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியில் உள்ள கானப்பேர் பாண்டி நாட்டுத் தலம்.
அதனடியாகப் பிறந்த, ``கானப்பேரீர்`` என்பதை முதலில் வைத்து, இவ்வுலகு அனைத்தும் நீரேயாய் நிலைத்து நின்றீர்` எனவும், நிலைத்த இவ்வுலகு அனைத்தும் நிலைத்து ஈர, நீரே கானப்பேர் ஈர்ங் கங்கை சூடினீர்; கங்காளீர்; கம் கையீர்` எனவும் இயைத்து உரைக்க.
இரண்டாம் அடி முதலில், `நிலைத்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
அதனையடுத்து வந்த ``உலகனைத்தும்`` என்பதில், `உலகனைத்திலும்` என ஏழாவது விரிக்க.
தனிச்சீரில், நிலைத்து - தேங்கி.
ஈர - அழிக்க.
இவை கங்கையின் செயல்.
`ஈரக் கண்டு` என ஒருசொல் வருவிக்க.
கானம் - காடு; கற்பகச் சோலை.
`அவ்விடத்து உள்ள பெரிய, குளிர்ந்த கங்கையை நீரே சூடினீர்` என்க.
கம் கையீர் - கபாலத்தைக் கையில் கொண்டுள்ளீர்.

பண் :

பாடல் எண் : 74

ஈரம் உடைய இளமதியம் சூடினீர்
ஈரம் உடைய சடையினீர் ஈர
வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்
வருங்காலம் ஆயினீர் வாழ்வு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் ஈரம் - குளிர்ச்சி.
அடி-2-ல் ஈர் அம் - குளிர்ந்த நீர் ``சடையினீர்`` என்பதை விளியாக்கி முதற்கண் கூட்டுக.
ஈர வருங் காலம் ஆயினீர்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
வரும் காலம் - தோன்றும் காலம்.
வாழ்வு - வாழ்தல்; நிலைத்தல்.
``வருங்காலம் ஆயினீர்`` என்பதை இதன்பின்னும் கூட்டுக.
``ஈர வருங்காலம்`` என்பதில் ஈர்தல் - பிளத்தல்; அஃதாவது அழித்தல்.
``உயிர் ஈரும் வாள்`` 1 என்றார் திருவள்ளுவரும், `உலகத்திற்கு மூன்று காலமும் நீரேயாயினீர்` - என்றபடி.
ஞாலமே, விசும்பே, இவை வந்துபோம் காலமே 2 - என மணிவாசகரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 75

வாழ்வார் மலரணைவார் வந்த அருநாகம்
வாழ்வார் மலரணைவார் வண்கங்கை வாழ்வாய
தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்
தீயாட வானாளு மாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வண் கங்கை வாழ்வாய தீ - வளவிய கங்கா தேவி பொருந்தும் இடமாகிய சடைமுடி.
``தீ`` என்பது உவம ஆகுபெயராய்த் தீப்போலும் சடைமுடியைக் குறித்தது.
வான் ஆள்வான் - அண்டம் முழுதையும் ஆள்பவன்; சிவபெருமான்.
அவன் கழல்கள் சேராதார் நிலைமை பின்னர்க் கூறப்படுதலின் முன்னர்க் கூறப்பட்டவை அவன் கழல்கள் சேர்ந்தாரது நிலைமை யாயின.
இதனை, ``பிறவிப் பெருங்கடல் நீந்துவர்`` 1 என்னும் குறளில் `சேர்ந்தார்` என்பது போலக் கொள்க.
`அவன் கழல்களைச் சேர்ந்து, மலர் அணைவார்(பிரம தேவர் அப்பதவியில்) வாழ்வார்; மலர் (மலரின்கண் உள்ள திருமகளை) அணைவார் (விட்டுணு மூர்த்தி), வரு நாகம் (பாம்பணையில்) வாழ்வார்.
(இங்ஙனமாகச் சிலர்) அவர் கழல்களைச் சேராதாராய், தீ ஆட (உடம்பில் தீ மூண்டு எரிய) வான் ஆளும் ஆறு (கூற்றுவன் உலகை இடமாகக்கொள்ளும் வகை) இரங்கத்தக்கது என்க.
`இரங்கத் தக்கது` என்பது சொல்லெச்சம்.

பண் :

பாடல் எண் : 76

மாறாத ஆனையின் தோல் போர்த்து வளர்சடைமேல்
மாறாத நீருடைய மாகாளர் மாறா
இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே
இடுங்கையர் சேர்வாக ஈ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாகாளம்` என்னும் பெயரை உடைய தலங்கள் பல உள்ளன.
மாகாளர் அத்தலங்களில் இருக்கும் இறைவர்.
தனிச்சீரில் மாறா - நீங்காத.
அடி-3-ல் இடுங்கை - சோர்தல் வறுமையால் வாடுதல்.
வறுமையால் வாடுவோர் அறிந்து சேரும் எழிலவாய் (அழகுடையன வாய்) முன்னே இடும் கையர் - விரைவாகக் கொடுக்கும் கையை உடையவர்கள் சேர்வு - புகலிடம்.
`மாகாளரை வறியவர்க்கு இடும் கையை உடையடவர்களது புகலிடமாக, அறிந்து, (நெஞ்சே, நீ) வறிய வர்க்கு ஈதலைச் செய்` - என முடிக்க.
``இரப்பவர்க்கு ஈய வைத்தார்; அருளும் வைத்தார்`` 2 என அப்பர் அருளிச் செய்ததையும் நோக்குக.
ஈதல் தொழில் நெஞ்சுக்கு இல்லையாயினும் ஈய நினைத்தலே ஈதலைச் செய்தற்கு முதல் ஆகலின் அதனைச் செய்தலாகக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 77

ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்
ஈயும் பொருளே இடுகாட்டின் ஈயும்
படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்
படநாகம் பூணும் படி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகீர், நீவிர்` என்பதை முதலில் வருவித்துக் கொள்க.
`அடி-4-ல் பட - நீவிர் இறந்த பின்பு நாகம் பூணும்படி.
புண்ணிய போகத்தை அடையுமாற்றிற்கு.
(`படிக்கு` என நான்காவது விரிக்க.
) அடி-1-ல் பொருள் ஈயும் - உங்கள் பொருளை வறியவர்க்கு ஈயுங்கள்.
(சிவபெருமானை) எமக்குச் சிவலோகம் ஈயும் பொருளே- `எங்களுக்குச் சிவலோகத்தை ஈந்தருள்கின்ற பரம்பொருளே - `எங்களுக்குச் சிவலோகத்தை ஈந்தருள்கின்ற பரம்பொருளே` என்றும், (`தனிச் சீரில் - `ஈ உம் இடுகாட்டின்` - என மாற்றிக் கொள்க.
) ஈ - வண்டுகளின், உம் இடுகாட்டின் - உங்காரம் பொருந்தியுள்ள இடு காட்டின்கண் ஆடுகின்ற.
`பட நாகம் பூணும் பரபோகீர்` என்னீர் என்று சொல்லித் துதியுங்கள்.

பண் :

பாடல் எண் : 78

படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி
படியேரு பார்த்துப் பரன்இப் படிஏனைப்
பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்
பாருடையாய் யானுன் பரம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இப்படி`` என்பது முதலாகத் தொடங்கி, அடி-2-ல் (யானோ) படி பார்த்து ஏறும் பரன் - (திடீரென மேலே பறப்பவன் அல்லன்.
) படிகளைப் பார்த்து ஒவ்வொன்றாகக் கடந்து மேல் எறுகின்ற அயலான்.
(என்னை) பார்த்து படி ஏறும் பரத்தோடும் கூட்டி - உற்றுப் பார்த்துப் பார்த்துத் தாம் மிகுகின்ற உனது மேலான நிலையோடு சேர்த்தருள்.
அடைபவர் மேல் மெல்ல மெல்லச் சேர்த்தருள் - என்று ஏறும் தன்மையை அடையப்படும் பொருள்மேல் ஏற்றினார்.
``பார்த்துப் படியேறும் பரன்`` - என்றது உயிர்களின் இயல்பை விளக்கியவாறு.
`கூட்டுதி` என்னும் ஏவல் வினை முற்றின் இகர விகுதி தகர ஒற்று இன்றி, ``கூட்ட`` என வந்தது.
``நன்றுமன் அது நீ நாடாய் கூறி`` * என்பதிற்போல.

பண் :

பாடல் எண் : 79

பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்
பரமாய ஆதிப் பரனே பரமாய
நீதியே நின்மலனே நேரார் புரம்மூன்றும்
நீதியே செய்தாய் நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியையும் அதன்பின் மூன்றாம் அடியில் உள்ள ``நீதியே! நின்மலனே!`` என்பதையும் முதலிற் கூட்டியுரைக்க.
``பரம்`` மூன்றில் முதலது, பாரம்; பற்றுக்கள்.
ஏனை யவை மேன்மை.
நேரார் - பகைவர்.
அடி- 4ல் `தீயே` என்பது ``தியே`` எனக் குறுகி நின்றது, ``திருத்தார்நன் றென்றென் தியேன்``* - என்பதிற் போல ``தீயே செய்தாய்; அதனை நினை` என்க.
`அமரர்கள் நின் பாதம் பணிய முப்புரத்தை எரித்ததை நினைக` என்றது, `அதுபோலப் பாதம் பணிந்து எனது மும்மலங்களை நீக்கியருள்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 80

நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்
நினையடைந்தேன் சித்த நிமலா நினையடைந்தேன்
கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும்
கண்டத்தாய் காவாலி கா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சித்த நிமலா - எல்லாம் வல்ல சித்தனாகிய நிமலனே! தனிச் சீரில் அடையுந் தேன் கண்டத் தாய் - உனது திரு முன்பில் வந்த தேன் கலந்த இறைச்சித் துண்டத்தை (கண்ணப்பர் படைத்தது) ஏற்றவனே.
`அடையும்` என்னும் பெயரெச்சத்தில் உகரம் கெட்டது.
கனல் ஆரும் கண் - நெருப்பு பொருந்திய கண்ணையுடைய.
`தந்தாய்` என்னும் விளிப்பெயர் வலிந்து நின்றது.
காவாலி - கபாலியே, அடி-2ல் `நினை அடைந்தேன்;` என முன்னர்க் கூறினமை யால் அடி-1-ல் ``நினையடைந்தேன்`` என்பது `எனது` என்னும் அளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 81

காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே காவாய
ஏறுடையாய் என்னை இடைமருதிலேஎன்றும்
ஏறுடையாய் நீயே கரி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் ``கா`` என்பது இளமரக் காக்களையும், ``பொழில்`` என்பது பெருமரச் சோலைகளையும் குறித்தன.
கரு - மூலப் பொருள்.
அடி-2-ல் கா - கற்பகத் தரு.
கடு வெளி - தூய்மையான ஆகாயம்.
சிதாகாசம்.
தனிச்சீரில், `அங்கா` என்பது முதல் குறைந்து ``கா`` என நின்றது.
`அங்காக்கின்ற வாயை உடைய ஏறி` (இடபம்) என்க.
வேறு - தனிச் சிறப்பையுடைய அடியவனாக .
இடை மருது - திருவிடைமருதூர்.
கரி - எல்லாவற்றுக்கும் சான்று.

பண் :

பாடல் எண் : 82

கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண
கரியாருங் கூற்றங் கனியே கரியாரும்
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண் - பார்வை; இங்கு அருள் நோக்கினைக் குறித்து.
`அருள் நோக்கினால் அரி, அயன் இவர்களது தொழிலை நடத்து விக்கின்றான்` என்பது கருத்து.
தனிச்சீர் ஒழித்து, இரண்டாம் அடியில் ஏனைய பகுதியை இறுதிக்கண் கூட்டுக.
அதன்கண், `கூற்று `வாக்கு` என்பது, ``கூற்றம்`` என வந்தது.
``குறித்தேன் கூற்றம்`` * எனத் தொல் காப்பியரும் கூறினார்.
கரி ஆரும் கூற்றம் - உண்மை நிறைந்த வாக்கு.
உண்மை மொழியே சான்றாகக் கொள்ளப்படும் ஆதலின் அதனைக் ``கரி ஆரும் கூற்றம்`` என்றார்.
உண்மை மொழி, ஞானோபதேசம்.
கரி யானை, அஃது ஐராவதத்தைக் குறித்தது.
ஐராவதம் வழிபட்ட காடு வெண்காடு; திருவெண்காடு, கனல் ஆடும் காடு - முதுகாடு.
ஈற்றடி யில் காலம் (காளம்) - நஞ்சு.
ஆனாய் - (கண்டத்தினின்று) நீங்காய்.

பண் :

பாடல் எண் : 83

ஆன்ஆய ஆய அடலேறே ஆரூர்க்கோன்
ஆனாய னாவமுத மேயானாய் ஆனாய்
கவர்எலும்போ டேந்தி கதநாகம் பூணி
கவலெலும்பு தாகை வளை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் உள்ள ஏகாரத்தைப் பிரித்து, `அடல் ஏறு ஆன் ஆயனே ஆய ஆரூரன் ஆனாய்` எனக் கூட்டி, `வலிமை பொருந்திய இடபம்.
ஆன் நிரைமேய்த்த ஆயன் ஆகிய மாயோனே யாக உடைய, திருஆரூர்த் தலைவன் ஆகியவனே` என உரைக்க.
அடி-2-ல் `அன்னாய் - பல்லுயிர்க்கும் தாயே! உயிர்கட்கெல்லாம் அமுதம்போல இருப்பவனே.
தனிசீரில் உள்ள ``ஆனாய்`` என்பதை மூன்றாம் அடி இறுதியிற் கூட்டி, `இவ்விடத்தை விட்டு நீங்காய்` என உரைக்க.
அடி-3-ல் கவர் எலும்பு - பிளவுபட்ட எலும்புகள்.
ஏந்தி - ஏந்தினவனே.
பூணி - பூண்டவனே.
அடி-4 -ல் உள்ள தொடரை, `எலும்பு கையினின்றும் கவர்ந்த பிரிநிலைப் பொருளவாய் வந்த ஏகாரங்கள் உயர்வு குறித்து நின்றன.
வளையைத் தா` என இயைத்து முடிக்க.
`தடை மெலிந்து, அழகிழந்த கை` என்றற்கு `எலும்புக்கை` என்றாள்.
`தார்` என்பது பாடம் அன்று.
இதுவும் கைக்கிளைத் தலைவி ஆற்றாமையைத் தோழி இறைவற்குக் கூறிக் குறையிரந்தது.

பண் :

பாடல் எண் : 84

வளைகொண்டாய் என்னை மடவார்கள் முன்னே
வளைகொண்டாய் மாசற்ற சோதி வளைகொண்டாய்
மாற்றார் கதுவ மதில்ஆரூர் சேர்கின்ற
மாற்றார் ஊர்கின்ற மயல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மாசற்ற சோதி`` என்பதை முதலிற் கொண்டு, அதன்பின், முதல் அடியில் உள்ள தொடரை, `என்னை மடவார்கள் முன்னே வளை கொண்டாய்` என மாற்றிக் கூட்டுக.
``வளை கொண்டாய்`` என்பது, `மெலிவித்தாய்` என்னும் பொருட்டாதலின், ``என்னை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
அடி-2-ல் வளை கொண்டாய் வளைத்துக் கொண்டாய்; அகப்படுத்திக் கொண்டாய்.
தனிச்சீரில் வளை - சங்கு; வெள்ளிச் சங்கு.
`வெற்றிச் சங்கை உடன் கொண்டு (கைப்பற்றும் முறைகளை) ஆராய்கின்ற மாற்றார் (பகைவர் கள்) கதுவும் (முற்றுகை யிடுகின்ற; ஆயினும் கைப்பற்ற இயலாத) மதில்` என்க.
ஆரூர் சேர்கின்ற (திருவாரூரைச் சென்று சேரவேண்டும் என்று எழுகின்ற) ஆர்ந்து (நிறைந்து) ஊர்கின்ற (மீதூர்கின்ற) மயல் (மையலை) மாற்று - நீக்கு.
இதுவும் மேலைத் துறை.
ஒற்றுமை பற்றித் தலைவியையே தோழி ``என்னை`` என்றார்.

பண் :

பாடல் எண் : 85

மயலான தீரும் மருந்தாகும் மற்றும்
மயலானார் ஆரூர் மயரார் மயலான்
கண்ணியர்தம் பாகர் கனியேர் கடிக்கொன்றைக்
கண்ணியன்றன் பாதமே கல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மயல், நோக்கத்தால் புலப்படுதல் இயல் பாகலின் அது கண்களை மயலை உடையன போல வைத்து, ``மயலான கண்ணியர்`` என்றார்.
இத்தொடர் மகளிரைக் குறித்தல் சொல்ல வேண்டா.
பாகு ஆர் - அவர்கட்குச் சருக்கரையை ஒத்தவன்.
கனி ஏர்- மற்றும் கனியையும் ஒப்பவன்.
கடி - நறுமணம்.
கண்ணி - முடியில் அணியும் மாலை.
``கடிக்கொன்றைக் கண்ணியான்`` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது, கல் - போற்றக் கற்றுக்கொள்.
(`நெஞ்சே, நீ` - என்பது வருவித்துக் கொள்க.
) ஏனெனில், அவையே மயல் ஆன- உலகத்தைப் பற்றி மயக்கங்கள் பலவும் தீர்தற்கு உரிய மருந்தாகும்.
மற்றும் - மேலும்.
மயல் ஆனார் - சிவபெருமானைப் பற்றிய ஆசை நீங்காதவர்கள்.
ஆரூர் மயரார் - அவனது திருவாரூரை மறக்க மாட்டார்கள்.

பண் :

பாடல் எண் : 86

கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்
கலைமான் கறைகாண் கவாலி கலைமான
ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலை மானை ஏந்திய ஏனத்தின் (பன்றியின்) கொம்பாகிய பூண் இவற்றுடன் காணப்படுகின்ற கயிலைப் பெரியோனால் (மான் - பெரியோன்).
அடி-2ல் மான் (நின் மகள்) கலைக் கறை - ஆடைபற்றிய குற்றத்தில்.
கவாலி - அவனேயாயினார்.
(அஃதாவது, உடையில்லாதவள் ஆயினாள்.
ஆடையின் குற்றம் - ஆடை அணியாமை.
(``கவாலி`` என்பதன் பின் `ஆயினாள்` என்பது எஞ்சி நின்றது.
இனி) அரன் - அவன்.
பொன் அம்பலத்துள் கலைமான, ஆடற்கலையும் பாடற்கலையும் பெருமையுறும் வண்ணம் ஆடுவதும், பாடுவதும் (அல்லது இவளை நோக்குகின்றான் இல்லை.
நோக்காவிடினும் இவளது உயிரைக் கொள்ளாதபடி) காலனை (யமனை) ஆடுவதும் ஆடான் அழித்தலையும் செய்யான்.
(நாம் என் செய்வது!) ஈற்றடியில் `அடுவது, அடான்` என்பன முதல் நீண்டு நின்றன.
இது தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 87

அரனே அணியாரூர் மூலட்டத் தானே
அரனே அடைந்தார்தம் பாவம் அரனே
அயனார்தம் அங்கம் அடையாகக்கொண்டார்
அயனாக மாக அடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அரன்`` மூன்றில் முதலது `சிவன்` என்னும் அளவாய் நின்றது.
இடையது `அறன்` என்பது எதுகை நோக்கித் திரிந்த பெயர்.
அறன் - அறவடிவினன்; இறுதியது, அரிப்பவன்.
மூன்று பெயர்களுமே விளி ஏற்று நின்றன.
அயனார் - பிரம தேவர்.
`அவரது அங்கம்` என்றது, தலை ஓட்டினை, அடி-3ல் `அடையாளம்` என்பது ``அடை`` எனக் குறைந்து நின்றது.
ஈற்றடியில் உள்ள தொடரை, `அயல் ஆக அடை நாகம்` என மாற்றி, `அதற்கு மேல் உனது திருமேனியில் அணியப்படும் பொருள் பாம்பு ஆகின்றது.
(`அஃது எதற்கு` என்பது குறிப்பெச்சம்.
)

பண் :

பாடல் எண் : 88

அடையுந் திசைஈசன் திண்டோளா காசம்
அடையுந் திருமேனி அண்டம் அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசனது திண் தோள்திசை அடையும்; திருமேனி ஆகாசம் அடையும்.
திருமுடி (சிறப்பு வாய்ந்த சிரம்) அண்டம் அடையும்.
கால் பாதாளம் (அடையும்) அவனுக்கு ஆடை கடல்.
``தூநீர் - வளைநரல் பௌவம் உடுக்கையாக, விசும்பு மெய்யாகத் திசை கையாக`` * எனப் பழம் புலவரும் கூறினார், அங்கி (அக்கினி) போலும் அழகிய சடா மகுடத்தில் நீர் (உள்ளது.
) கண்கள் மூன்று சுடர்` - என இயைத்துக் கொள்க.
பெருமானது திருவடிவைப் புகழ்ந்த வாறு.
``அடையும்`` என்பதைப் ``பாதாளம்`` என்பதோடும் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 89

மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே மூன்றரண
மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற
ஆய்நின்ற சோதி அறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மூன்று அரணம்`` மூன்றில் முதலது முப்புரம், இடையது (அரணம் - பாதுகாவல்) மும்மூர்த்திகள்.
இறுதியது (அரணம் - சரீரம்) தூலம், சூக்குமம், காரணம் ஆகிய சாரங்கள்.
``சோதி`` இரண்டில் முன்னது, பொதுவில் `ஈசுரன்` என்றும், பின்னது, சிறப்பாகச் `சிவன்` என்றும் பொருள் பயந்தன.
தூல சூக்கும காரண சரீரங்களில் நின்று அறிவைப் பயப்பிக்கும் ஈசுரனை முறையே `விராட், தைசசன், மகேசுரன்` எனக் குறியிட்டு வழங்குவர் வேதாந்திகள்.
ஈற்றடியில் ஆய் நின்ற - நுணுகி நின்ற.
``சோதி`` என்பனவும் விளி களே.
`நீயே அறம்` என எழுவாய் வருவித்துரைக்க.
எனவே, `உன்னை வணங்குதலே அறம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 90

அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் அறமாய
வல்வினைகள் வாரா வளமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மருகலால்`` எனப் பின்னர் வருதலால் முன் இரண்டடிகளும் அவரைப் பற்றியவேயாயின.
மருகல், சோழநாட்டுத் தலம்.
அறம் ஆய்வர் - அற நூலை ஆராய்ந்து விளக்குவார்.
அறங் களில் ஆசாரம் அல்லது தூய்மையும் ஒன்று ஆகலின், `அறம் ஆய்வ ரேனும் அங்கம் (எலும்பை) அணிவர்; இஃது அவர்க்குப் பொருந் துமோ` என ஐயுற்றார் போலக் கூறினார்.
தூய்தல்லாத பொருளைப் பற்றிய போதிலும் அதனால் நெருப்பு வாதிக்கப் படாமைபோல, அவர் எதனாலும் வாதிக்கப்படாமை கூறியவாறு.
அடு காடு - சுடு காடு.
அறம் ஆனார் - அறுதியாயினார்.
தனிச் சீரில் உள்ள அறம், சிவதருமம்.
அது செய்தற்கு அரிதாகலின், ``வல்வினைகள்`` என்றார்.
வாரா - வரப்பெற்று.
ஈற்றடியில் உள்ள வல்வினைககள், வலிய இருவினைகள், `அவை வாராதவாறு சிவதருமம் வாய்க்கப் பெற்று, வளப்பம் பொருந்திய `திருமருகலார்` எனச் சொல்லித் துதிக்க.
``என்ன`` என்பது அகர ஈற்று வியங்கோள்.
`என்க` எனப் பாடம் ஓதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 91

ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்
ஆறுடையர் காலம் அமைவுடையர் ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லைபொழிப்புரையை எழுதவில்லைபொழிப்புரையை எழுதவில்லைபொழிப்புரையை எழுதவில்லைபொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆறு`` மூன்றில் முதலது கங்கை.
இடையது.
``ஆறு` என்னும் எண், இறுதியது.
ஆறுதல்; சாந்தம், காலம் ஆறு, பூசா காலங்கள்.
அமைவு - நிறைவு; திருப்தி.
இஃது எண் குணங்களில் வரம்பில் இன்பமாகும்.
`ஆறுதலுடைய சித்தத்தீர்யாவர் அவர் ``ஆறுடையர்`` முதலாகச் சொல்லப்பட்ட அவரது திருக்கயிலை சேர்கின்ற சித்தத்தீர் ஆவீர்; அத்திருக்கயிலையே எல்லார்க்கும் சேர்வு` (புகலிடம்) என முடிக்க.

பண் :

பாடல் எண் : 92

சேர்வும் உடையார் செழுங்கொன்றைத் தாரார்நஞ்
சேர்வும் உடையர் உரவடையர் சேரும்
திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்
திருச்சாய்க்காட் டேநின் உருவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சேர்வு`` இரண்டில் முன்னது சேரும் இடம்.
அவை பல தலங்கள்.
பின்னது, அடைக்கலமாக அடைதல்.
அவர், `திருச் சாய்க்காடு` என்னும் தலத்தில் ஆடுவர் (விளங்கியிருப்பார்) ஆயின், (நெஞ்சே, நீ) செய்தக்கது என்றும் நின் உருபு (உடம்பை) திருச்சாய்க் காடு (நன்றாய வணக்கத்தில் ஏ (ஏவுதலே) பின்னுள்ள ``சாய்க்காடு`` என்பதில் உள்ள காடு, `நோக்காடு, வேக்காடு` முதலியவற்றிற் போலத் தொழிற் பெயர் விகுதி.
அது வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இரட்டிற்று.
ஏ - ஏவுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.

பண் :

பாடல் எண் : 93

உருவு பலகொண் டொருவராய் நின்றார்
உருவு பலவாம் ஒருவர் உருவு
பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்
பலவல்ல ஒன்றாப் பகர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பைஞ்ஞீலி மேயார்`` என்பதனை முதலிற் கொள்க.
பைஞ்ஞீலி, சோழநாட்டுத் தலம்.
அடி-1ல் `பலகொண்டும்` எனவும், அடி-3-ல் `பலவும், ஒன்றும்` எனவும் போந்த உம்மைகள் தொகுக்கப் பட்டன.
உருவு பல ஆம் ஒருவர் - பொருள்கள் பலவும் ஆகின்ற ஒருவர்.
அவரது உருவு பலவும் அல்ல; ஒன்றல்ல; (எனவே, `உருவே இல்லாதவர்` என்பதாம்) அவரைக் குறிக்கும் சொற்கள் பல அல்லவாக, ஒன்றாக (நெஞ்சே, நீ) பகர்.

பண் :

பாடல் எண் : 94

பகரப் பரியானை மேல்ஊரா தானைப்
பகரப் பரிசடைமேல் வைத்த பகரப்
பரியானைச் சேருலகம் பல்லுயிர்க ளெல்லாம்
பரியானைச் சேருகலம் பண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் பகர் அப் பரி யானை மேல் ஊராதான் - யாவரும் உயர்த்துச் சொல்கின்ற பருத்த யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மேல் ஊர்தல் இல்லாதவன்.
`இடபத்தையே ஊர்கின்றவன்` என்பதாம்.
அடி-2-ல் விளக்கத்தை.
`பகம்` என்றல் உலக வழக்கு.
பரி சடை.
`பரிக்கின்ற சடை` என வினைத்தொகை.
தனிச்சீரில் பகம் - `ப` என்னும் எழுத்து.
அது பாம்பைக் குறிப்பால் சுட்டியது.
அடி - பரியான் - தூல நிலையைக் கொண்டவன்; `உருவு கொண்டு நின்றவன்` என்றபடி.
`விளக்கமான, கங்கை முதலிய வற்றைத் தாங்கியுள்ள சடையின்மேல் வைத்த பாம்பைக் கொண்ட உருவுகொண்டு விளங்குபவன்` என்க.
அடி-3-ல் சேர் உலகம் - பலவாய்த் திரண்டுள்ள உலகங்கள்.
அடி-4-ல் பரியான் - (அறியாமையால்) அன்பு செய்யப்படாதவன்.
அவனைச் சேர்ந்துள்ள உலகமே; சிவலோகம்; பண் - தகுதி வாய்ந்ததாகும்.
(ஆகவே, `அதனை அடையவே மக்கள் முயல வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 95

பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்
பண்ணாகச் செய்த பரமேட்டி பண்ணா
எருத்தேறி ஊர்வாய் எழில்வஞ்சி எங்கள்
எருத்தேறி ஊர்வாய் இடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1ல் பண் - இசை.
பலி - பிச்சை.
அடி-2ல் பண்- தகுதி.
செய்த - ஆக்கிய; படைத்த.
அடி-3-ல் `எருது`, ``எருத்து`` என ஒற்றிரட்டி நின்றது.
தனிச் சீரில் பண்ணா - ஏறுதற்கு உரிய வகையில் அமைத்து.
`எருத்துப் பண்ணா ஊர்வாய்` என மாற்றிக் கொள்க.
அடி-4ல் எருத்து - எருத்தம்; பிடரி.
`எங்கள் எழில் வஞ்சிதன் எருத்து இடமாக ஏறி ஊர்வாய்` என மாற்றி யுரைக்க.
வஞ்சி - கொடி போன்றவள்.
இஃது எருதேறிப் பிச்சைக்கு வந்த இறைவனைத் தலைவிதன் ஆற்றாமை கண்ட தோழி குறையிரந்தது.
`எருது` என்பன பாடல் அல்ல.
``வஞ்சி எருத்தேறி ஊர்வாய்`` என்றது.
`இவளை உன்னிடத்துப் பணிகொண்டருள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 96

இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்
இடமானார்க் கீந்த இறைவர் இடமாய
ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்
ஈங்கோய் மலையார் எமை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எவ்வுயிர்க்கும்`` என்பதை முதலிற் கூட்டுக.
``ஏகம்பம் மேயார்`` என்பது, `இறைவர்` என ஒரு சொல் நீர்மைத்தாய் நின்று, ``இடமாய்`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று.
அடி-2-ல் ஆனார் - நீங்காதவர்.
`உள்ளத்தால் நீங்காதவர்` என்க.
`தம்மை உள்ளத்தால் என்றும் நீங்காதவர்க்குத்தம்மை அண்மை யிலிருக்க இடம் ஈந்த இறைவர்` என்க.
அடி-4-ல் உள்ள தொடரை, `எமை ஈங்கு ஒய மலையார்` என மாற்றி உரைத்துக் கொள்க.
`ஒய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று.
ஒய - மெலியும்படி.
மலையார் - வருத்தார்; `வருத்தத்தைத் தீர்ப்பார்` என்பதாம்.
திருஈங்கோய் மலை, திருச்சிராமலை இவை சோழ நாட்டுத் தலங்கள்.

பண் :

பாடல் எண் : 97

எமையாள வந்தார் இடரான தீர
எமையாளும் எம்மை இமையோர் எமையாறும்
வீதிவிடங் கர்விடம துண்டகண் டர்விடையூர்
வீதிவிடங் கர்விடையூர் தீ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முன்னிரண்டு அடிகளில் மடக்கணி வாராது சொற்பொருட் பின்வருநிலையணியே வந்தது.
`இடரான தீர எமை ஆள வந்தார்` எனவும், `எம்மையும் எமையாளும் இமையோர்` எனவும் மாற்றுக.
வந்தார் - எம்பால் வந்தார்.
வினைப்பெயர்.
`எம்மையும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று.
எம்மையும் - எப்பிறப்பிலும்.
``வீதி`` இரண்டில் முன்னது ஒளி, பின்னது சுயம்பு மூர்த்தி.
``விடை`` இரண்டில் முன்னது இடபம்; பின்னது விடுத்தல்; ஏவுதல் அது `ஏவப் படும் பொருள்` எனப் பொருள் தந்தது.
``ஊர்`` இரண்டில், முன்னது ஏறிச் செலுத்துதல்; வினைத்தொகையாய் வந்தது.
பின்னது நகரம்; திரிபுரம்.

பண் :

பாடல் எண் : 98

தீயான மேனியனே செம்பவளக் குன்றமே
தீயான சேராமற் செய்வானே தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராய்என்னைச்
செம்பொற் சிவலோகஞ் சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தீ`` மூன்றில் முதலது நெருப்பு; இடையது தீமை; இறுதியது ஒளி.
புரிசை - மதில்.
ஈற்றடியில் ``பொன்`` என்றது பொருளை.
செம்பொருள் - மெய்ப்பொருள்; அஃது `அழியாப் பொருள்` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 99

சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே
சேர்கின்ற சிந்தை சிதையாமல் சேர்கின்றோம்
ஒற்றியூ ரானே உறவாரும் இல்லைஇனி
ஒற்றியூ ரானே உறும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முன்னிரண்டடிகளில் சொற்பொருட் பின்வரு நிலையணியே வந்தது.
பின் வந்த ``சிதையாமல்`` என்பது, `சிதையாமைப் பொருட்டு`, ``ஒற்றியூர்`` இரண்டில் முன்னது தொண்டை நாட்டுக் கடற்கரைத் தலம்; பின்னது, பொருந்தி ஊர்கின்ற இடபம், (உன்னைத் தவிர எமக்கு) `ஆரும் உறவு இல்லை` என்க.
உறும் - பொருந்தும் `அதனால் அதன் மேல் நீ வந்து அருள்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 100

உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்
உறுமுந்த முன்னே யுடையா உறுமும்தம்
ஒரைந் துரைத்துஉற்று உணர்வோ டிருந்தொன்றை
ஒரைந் துரக்கவல்லார்க் கொன்று.

தனி வெண்பா
ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி ஒன்றைத்
தவிராது உரைப்பார் தளரா உலகில்
தவிரார் சிவலோகந் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கி யுரைக்க.
தனிச்சீரில்- உறுமும் - சினந்து வருகின்ற.
தம் ஓர் ஐந்து - தங்கள் ஐம்புல ஆசைகளை.
உற்று - நேர்ந்து.
உரைத்து - அவைகட்கு அறிவுரை கூறி (அவை கேட்கும் தம்மையில் ஆயினும் தமக்குள் தாம் சொல்லிக் கொள்வதை அவைகள் கேட்பனபோல வைத்துக் கூறினார்.
) உணர் வோடு இருந்து - மெய்யறிவோடு அமைதியாய் இருந்து, ஒன்றை - ஒன்றாகிய செம்பொருளை.
ஓர் ஐந்து உரைக்க வல்லார்க்கு- அஞ்செழுத்தால் துதிக்க வல்லார்க்கு.
ஒன்று - அந்தச் செம்பொருள்.
அடி-1-ல் முன்னே - முதற்கண்.
உடையாமல் உந்த உறும் - அவ் வைம்புல ஆசைகட்குத் தோலாமல், அவர்களை முன்னோக்கிச் செலுத்த முற்படும்.
இன்னம் - அதற்குமேல்.
அடி-2ல் முன் உடையாமுந்த உறும் - அவர்களது ஆற்றல் (அறிவு இச்சை செயல்கள்) சலியாதபடி முற்காப்பாக எப்பொழுதும் பொருந்தியிருக்கும்.
`அஞ்செழுத்தை ஒருமித்த மனத்துடன் ஒதுபவர்க்கு முதலில் அருட் பேறும்.
பின்னர் ஆனந்தப் பேறும் உளவாம்` என்றபடி.
இவ் வெண்பாவின் ஈற்றடி ``ஒன்று`` என முடிந்து முதல் வெண்பாவின் முதலோடு சென்று மண்டலித்தல் காண்க.
தனிவெண்பா - குறிப்புரை: இறுதியிற் காணப்படும் வெண்பா நூற்பயன் சொல்வதாகப் பிற்காலப் பெரியோரால் செய்து சேர்க்கப் பெற்றது.
சிற்பி