இளம்பெருமான் அடிகள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை


பண் :

பாடல் எண் : 1

முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு தூறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிபோது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல்வன் - சிற்பம் வல்லாருள் தலையாயவன். மதலை - தூண்களையுடைய `மாடம்` என்க. மாடம் - உயர்நிலை மாடம். உயர்நிலை மாடம். திருக்கோயிலின் உட்கருவறை. ஊன்றிய- அழுந்த வைத்த. கடவுட் பாண்டில். தெய்வத் தன்மை பொருந்திய வட்டம் இதனைக் `கூர்மாசனம்` என்பர். `பாண்டிலாகிய பள்ளி` என்க. பள்ளி - தங்கும் இடம். `பள்ளியின்கண்` என ஏழாவது விரிக்க. செம்புயல் - மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம். `மேகம் போல` எனவும் `விழுதுபோல` எனவும் உவம உருபு விரிக்க. `விழுது போல` என்றது இலிங்க வடிவத்தை. புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் - கடவுள் தன்மை மேல் எழுந்து தோன்றிய முத்தொளியே. முத்தொளி உவமையாகு பெயர். முத்து. உயர்வாகிய குறிப்புப் பற்றி வந்த உவமை. `முத்தொளி` என்றது சிவபெருமானை. சுடர், அண்மை விளி. `தலங்கள் தோறும் இலிங்க வடிவில் கோயில் கொண்டு விளங்கி அருள் புரிகின்ற பெருமான் என்றபடி. எறிவளி - பெருங்காற்று. `பெருங்காற்று அடிக்கினும் சிறிதும் அசைவுறாத உனது திருவடி அரியவோ` (எளியவோ) என்க. `எளிய அல்ல ஆயினும் அவற்றை நீ சூட்டிய எங்கள் தலைமேல் மற்றும் உனது குவளை மலர் மாலையைச் சூட்டியது எக்காரணத்தால்` என முடிக்க. ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு. ``கழுநீர் மாலைக் கடவுள் போற்றி`` - எனத் திருவாசகத்தையும் காண்க. ஒலியல்- மாலை. மாறு. மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல்.

பண் :

பாடல் எண் : 2

மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கி உரைக்க. ``செவ்வரை`` என்பதில் செம்மை, ஆகுபெயராய் நெருப்பைக் குறித்தது. நீறு அடுத்த செம்மை - நீறு பூத்த நெருப்பு. பெருமான் திருமேனி முழுதும் திருநீறு பூசப்பட்டுள்ளது.
தாழ்வன - தங்கியுள்ள (அசையாது நிற்கின்ற) மலை. திரள் - திரட்சியான வடிவம். மாறு - எதிர். `மாறாத` என ஆக்கம் விரிக்க. தடுத்த - தடுக்கப்பட்ட. உலகை அழிக்க எண்ணி வந்த எண்ணத்திற்கு எதிராகத் தடுக்கப்பட்ட கங்கை என்க. `சடையால் தடுக்கப்பட்ட கங்கை சிறிதும் கீழே ஒழுகாதபடி பிறை தடுத்து நிற்கின்றது போலும் எனத் தற்குறிப்பேற்றமாகக் கூறி வியந்தவாறு. ஒழுகும் தன்மை உடையதாகிய கங்கையை ஒழுகாது வைத்துள்ள தன்மையை.
``நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை`` * என அப்பரும் வியந்தவாறு காண்க. ஏகாரம், வினாப் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 3

இடைதரில் யாம்ஒன் றுணர்த்துவது உண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினும் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இடைதரின் - வாய்ப்பு அளித்தால். `உனக்கு உணர்த்துவது` என்க. சிமையம் - கோபுரம். அஃது ஆகுபெயராய் அதனையுடைய நகரத்தைக் குறித்தது. மூரி - பெரிய மந்தாரம். தேவலோகத்துப் பஞ்ச தருக்களில் ஒன்று. அஃது இங்கு அதன் பூவைக் குறித்தது. தொடை - மாலை. நிலவின் மாலை. நிலாக் கதிர்கள். `மந்தார மலர்கள், நதி பிறை இவைகளோடு கூட, உனது அடியார்கள் இடுகின்ற புல்லிய எருக்கம் பூவும் உனது சடை முடிக்குப் பொருந்துமோ` என்க. `அன்பர் இடுவன யாதாயினும் அதுவே பெருமானுக்கு மிகு விருப்பத்தைத் தருவது என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

சடையே
நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே
மிடறே
நஞ்சகம் துவன்றி அமிர்துபிலிற் றும்மே
வடிவே
மிளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே
மடங்கல்மதம் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான்று
இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாள்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றயலடி முதலாகத் தொடங்கி உரைக்க. மூன்று தலைகளையும், ஒற்றைக் காலையும் உடைய வேல் திரிசூலம். ஊன்றுதல் - சேர்த்தல். குடுமி - முனை - `சடை முதலாகச் சொல்லப் பட்டவற்றில் ஒவ்வொன்றும் தோற்றத்திலும், செயலிலும் நேர்மாறாய் உள்ளன. ஆகவே, அவைகளை எத்தன்மையுடையன - ஒரு பெற்றிய வாகத் துணிய எங்களால் இயலவில்லை` என்பதாம். முளி எரி - பிற பொருள்களையெல்லாம் உலர்த்துகின்ற நெருப்பு. கவைஇ - கவித்து. தளிர் தயங்கும் - தளிர் விளங்கப்பெறும். மடங்கல் - யமன். முனை தவ - போரை மிகுதியாக உடைய `வேல்` என்க. அஃதான்று - அது வன்றி. இதனைச் சடை முதலிய எல்லாவற்றின் பின்னும் தனித்தனிக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 5

வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால்
மாலைப் பிறைக்கீறா கண்முதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலைப் பிறைக் கீறா!... போர்பாகா!` - என்பதனை முதற்கண் கூட்டியுரைக்க. `கீற்றன்` என்பது இடைக் குறைந்து `கீறன்` என நின்று விளியேற்றது. வேலை முகடு - கடலின் உச்சி. விசும்பு அகடு - வானத்தின் நடுவிடம். கை கலந்த காலை - இவை இரண்டும் ஒன்றுபடும்படி நீ ஒரு தூணாய் நின்ற காலத்தில் நீரை எங்கே கரந்தணை (உள்ளடக்கி வைத்தாய்?). ``ஐயோ`` என்றது. `இதனை அறியாது திகைக்கின்றோம்` என்னும் குறிப்பினது. இறை - சிறிது. ``இறைக் கூறாய்`` என்பதில் ககர ஒற்று விரித்தல்.

பண் :

பாடல் எண் : 6

இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசி
புதுநீர் மணத்தும் புலியத ளேயுடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் தோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொங்கு கங்கை`` என்பது முதலாகத் தொடங்கி, ``இடை தந்து இதுநீர் ஒழிமின்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. ``புது நீர்`` என்பதில் நீர் - நீர்மை; தன்மை. `இமையத்தரசியாகிய உமையைப் புதுமணம் கொண்ட பொழுதும் உம்முடைய உடை புலித்தோலாகவே இருந்தது. இது போன்ற தன்மையை அதற்கு ஒரு வாய்ப்புத் தந்து ஒழிப்பீர் என்க. `முன்றிலின்கண் உள்ள திங்கள்` எனவும், `திங்களின் மேல் நீர் ததும்புதலால் அத் திங்கள் திவள் அம் (துவளுகின்ற ஓர் அழகைச்) செய்கின்ற (உண்டாக்குகின்ற) சடை` எனவும் உரைக்க. தோட்ட - பூ இதழ்போல் அமைந்த. செது நீர் - அலம்புகின்ற நீர்.

பண் :

பாடல் எண் : 7

வண்ணம்
அஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமின் விலகிப் பகல்செகுக் கும்மே
என்னை
பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அஃதான்று
முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும்கொடும்பிறைத்
தேமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முளையெயிற்றுக் குருளை ... சடை இறைவ`` எனபதை முதலிலும், ``அஃதான்று`` என்பதைச் ``செகுக்கும்மே`` என்பதன் பின்னும், ``என்னை`` என்பதை ``உடைத்தே`` என்பதன் பின்னுமாகக் கூட்டியுரைக்க.
`உனது வண்ணம் (நிறம்) உனது ஐந்து தலைகளையும் கவைஇ (மூடி) பவளமால் வரையிடத்துத் தவழும் மஞ்சின் (மேகத்தின்) மின்னல் போல விலகி (இடையிடையே விளங்கி) பகல் ஒளியைச் செகுக்கும். (அழிக்கும்). `பழங்கலம், முடைக் கலம், சிறு கலம்` எனத் தனித்தனி இயைக்க. கலம் - பிச்சைப் பாத்திரம். முடை - முடை நாற்றம் உடையது. இங்ஙனமாயினும் நெஞ்சகத்தைக் கவரும் அதிசயத்தை உடையது. வஞ்சம். இங்கு அதிசயம். இங்ஙனம் ஆகலின் உமது கொள்கை மாயம் உடைத்தாகின்றது. கொள்கை, இங்குத் தன்மை. ஓகாரம் வியப்பு. முறு கொள்கை - முறுகிய (இறுகிய) கொள்கை.
குருளை, பாம்புக் குட்டி, அது சீறுதலால் திங்கள் துயிலெழுந்து நடுங்குகின்றது. `நடுங்குதலையை உடைய பிறை` என்க. நடுங்குதலை, `தலை நடுங்கல்` என்றல் வழக்கு. விதிர்க்கும் - வீசுகின்ற. கொடு - வளைந்த. பிறைத்து - பிறையை உடையது. `பிறையை உடையதாய் ஏமுறு சடை` என்க. ஏமுறு - பல பொருள் கட்கும் பாதுகாவலாகப் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 8

உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ சடைமுடிமேல்
முன்னாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்டதிவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முக்கணா` என்பதை முதலிற் கொள்க.இவள் - (உன்மேல் வைத்த காதலால் மெலிகின்ற) இவள். இன்ன நாள் - இன்று. கண்டது - உன்பால் கண்டது. மார்பில் உள்ள தலை மாலையையோ? வெள்ளெருக்கம் பூ மாலையையோ? சடைமேல் உள்ள முதல்நள் தோன்றும் பிறையையோ? என்க. `இவற்றுள் ஒன்றேனும் காதலை விளைக்கும் பொருளாய் இல்லையே` என்பது குறிப்பு. ``தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்`` *- என்பதில் தலைவன். தலைவியர் தம்முள் ஒருவரது இழிபை மற்றவர் தேறாமையும் அடங்கும் ஆதலின் அஃது அவ்வாற்றான் ஆய பெருந்திணைத் தலைவியது ஆற்றாமை கூறித் தோழி தலைவனைக் குறையிரந்தது. ``கொங்கை`` என்பது மார்பைக் குறித்தது. ``கண்டது`` - எனச் செயப்படுபொருள் வினை முதல் போலக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

இவள்அப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்
அவள்அப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல தாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண்
தவளப்பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க. ``இவள்`` என்றது உமாதேவியைச் சுட்டியதும், ``அவள்`` என்றது கங்காதேவியைச் சுட்டியதும் ஆகும். கங்கையை, `புத்தேளிர் உலகிற்கு அரசி`` என்றது ஆகாய கங்கையாதல் பற்றி. ``அது கொண்டு என்னை`` என்றது, `எவள் உயர்ந்தவள். எவள் தாழ்ந்தவள் என்னும் ஆராய்ச்சியில்லை என்றபடி. எவளுக்கு நீ நல்லது? யாரை முன் எய்திற்று? எற்றே? - என்றது. எவள் உனை விரும்புபவள்? முதலிற் கொள்ளப்பட்டவள் யார்? முன்னர் ஒருத்தியிருக்கப் பின்னர் ஒருத்தியைக் கொண்டது எதற்கு என்றபடி. இவற்றின்பின் `என்னும்` என்பதை வருவித்து. `என்னும் இது கா - என்று எழுகின்ற வினா எழாதபடி பார்த்துக் கொள்` என உரைக்க. `இந்த வினா எழுந்தால் உன்னால் விடையிறுக்க இயலாது` என்பதாம். `இருவருள் ஒருத்தி தான் இவனை விரும்பு பவள்` என்றலும் ஒருத்தி முன், மற்றொருத்தி பின் எனக் கூறுதலும். இருவருள் ஒருத்தியை `மிகை` என்றலும் கூடா என்றபடி. `சிவபிரான் கொள்வன யாவும் உலக நலத்திற்கு இன்றியமையாமை கருதியே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. `நல்லது` என்றது `நல்ல பொருள் என்றபடி. `நல்லை` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பண் :

பாடல் எண் : 10

கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
அயில்வழங்கு முடுமிக் கயிலை நாடநின்
அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
யாமே கண்டதும் இலமே தாமா
மூவா எஃகமும் முரணும்
ஒவாது பயிற்றும் உலகம்மால் உளதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``குடுமி`` என்றது ஆகுபெயராய்ச் சூலத்தைக் குறித்தது. `கரதலம் நுழைத்த சூலம்` என்க. சிவபெருமான் ஏந்தியுள்ள சூலத்தின் மூவிலைகள் உயிர்களின் அறிவு, இச்சை, செயல் இவை களைப் பிணித்துள்ள ஆணவ மலத்தின் சத்தியைப் போக்கும் ஞானேச்சரக் கிரியைகளாகிய சத்திகள் ஆதல் பற்றி, ``மரகதக் கபாடத்து அயில் வழங்கு குடுமி`` என்றார். ``ஆணவமாகும் கபாடமும்`` 1 எனப் பிற்காலத்தில் சிவப்பிரகாச அடிகளும் கூறினார். ``நின் அணங்கு`` என்றது கங்கா தேவியை. துயில் எடுத்தல் - எழுப்பு தல். `எழுப்புதல் பிறையை` என்க. பிறையைக் கங்கை எழுப்புத லாவது மிதக்கச் செய்தல். `மிதக்கச் செய்யும்பொழுது சந்திரனது நிலா ஒளி எங்கும் விளங்குதல் வேண்டுமன்றோ? அங்ஙனம் விளங்க யாம் ஒருபோதும் கண்டதிலம் என்க. பிணையல் - மாலை. ``நிலாப் பிணையல்`` என்றது உருவகம். `இனி, நிலாவாகிய அப் பிணையல் மூவா எஃகமும் (கெடாத சூலப்படையோடு) மூரணும் - மாறுபட்டுத் தோன்றுதலும் செய்யும். ``இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினை`` 2 - என்றபடி சூலம் கருநிறமாய் இருத்தலின் நிலவு அதனோடு மாறுபடுவ தாயிற்று. ஓவாது பயிற்றும் - உனது சடையில் உள்ள பிறையை இடைவிடாது கண்டு கொண்டிருக்கின்ற. உலகம் மால் உளது - உலகம் திகைப்பை உடையதாகின்றது. `பிறை என்றும் பிறையாகவே உள்ளதன்றி, வளரவில்லையோ என்க` என்றபடி. ``வளருமோ பிள்ளை மதி`` - என அம்மை திருவந்தாதியிலும் 3 கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
வளரொளிதேய்ந்து உள்வளைந்த தொக்கும் கிளரொளிய
பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்
கோதைப் பிறையின் கொழுந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. பேதைப்பிணா, கருங்கட் பிணா` எனத் தனித்தனி இயைக்க. பேதை - `மடம்` என்னும் பெண்மைக் குணம். பிணா - பெண்மான். அஃது உவமையாகு பெயராய். உமா தேவியைக் குறித்தது. மானினது நோக்குப்போலும் நோக்குடைமை பற்றி மகளிரை `மான்` என்றல் வழக்கு. கோதைப் பிறை - கொன்றை மாலையை அடுத்துள்ள பிறை. `பிறையாகிய கொழுந்து` என்க. இன், வேண்டாவழிச் சாரியை. உளர் ஒளி - வீசுகின்ற ஒளி. `ஒளிய திரைகள்` என இயையும். இயல்பாகவே குறைந்த களையினையும், உள் வளைவையும் உடைய பிறைக்கு அவற்றைச் செயற்கை போலக் கூறியது தற்குறிப்பேற்றம்.

பண் :

பாடல் எண் : 12

கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்
செழுந்திரள் குன்றகஞ் சென்றடைந் தால்ஒக்குந் தெவ்வர்நெஞ்சத்
தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர்
எழுந்திரள் சோதி பிழம்பும்என் உள்ளத் திடங்கொண்டவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டிற்கு `எங்கள் பெருமானே` என்னும் விளியை முதற்கண் வருவித்துக் கொண்டு `கூர் இருள், கொழுந்திரள் தெண்ணிலவு அஞ்சி வார் பளிங்கின் செழுந்திரட் குன்றகம் சென்று அடைந்தால் ஒக்கும் நின், தெவ்வர் நெஞ்சத்து அழுந்து கண்டத்துப் (பிழம்பும்) தவளப் பொடிப் (பிழம்பும்), செக்கர் மேனி நின்று எழும் ஓர் திரட் சோதிப் பிழம்பும் என் உள்ளத்து இடம் கொண்ட` என இயைத்து உரைத்துக் கொள்க.
நிலவு, பெருமான் முடிமேல் உள்ளது. கூர் இருள் - உலகத்தில் மிகுந்துள்ள இருள். திருநீற்றினால் பெருமானது திருமேனி பளிங்கு மலைபோல் உள்ளது. அவனது நீலகண்டம் அம்மலையின் ஒருபுடை புகுந்த இருள் போன்றுள்ளது. பெருமானது திருமேனி அவளை வெறுப்பவர்கள் உள்ளங்களில் அழுந்தி அச்சுறுத்துகின்றது. `அழுந்து` என்பது கடைக் குறைந்து நின்றது. ``பிழம்பும்`` என்ற உம்மையால் அஃது ஏனைக் கண்டம், பொடி இவற்றுடனும் சென்று இயைந்தது. ``உள்ளத்து இடம்`` என்னும் ஆறாவதன் தொகையை, `நிலத்தது அகலம்` என்பது போல ஒற்றுமைக் கிழமைப் பொருட்டாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 13

கொண்டல் காரெயிற்றுச் செம்மருப் பிறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொலங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொண்டல் - கிழக்குத் திசைக் காற்று. `இதுவே மழையைத் தரும்` என்பது தமிழ்நாட்டு வழக்கம். கார் - மேகம் எயிற்று மருப்பு - பல்லாகிய கொம்பு. மின்னல் இவ்வாறு உருவகம் செய்யப் பட்டது. எனவே, மேகத்தை யானையாக உருவகம் செய்யாமை ஏகதேச உருவகமாயிற்று. செம்மருப்பு, இல்பொருள் உவமை பற்றி வந்த உருவகம். இறால் - தேன் கூடு ``இறாலின் புண்`` எண்பதையும் ``இறாலாகிய புண்`` என விரித்து உருவகமாதல் உணர்க. `மருப்பால் ஆய புண்` என உருபு விரித்துக் கொள்க. சிமயம் - சிகரம். `மேகமாகிய யானையது எயிறாகிய மருப்பினால் உண்டாகிய இறால் ஆகிய புண் பொருந்திய சிகரங்கள்` என்றபடி. இயல்பாகப் பொருந்தியுள்ள தேன் அடையை, `யானை மருப்பால் உண்டாகிய புண்` எனச் செயற்கை யாகக் கூறியது தற்குறிப்பேற்றம். `மேகத்தினது எயிறாகிய கொம்பு` என்றது மின்னலை. `மின்னல் அடிக்கடி தோன்ற அதனிடையே தேனடை காணப்படுவது. அம்மின்னலாய் உண்டான புண்போலத் தோன்றுகின்றது` என்பதாம். சிகரங்களிடை இறந்த விலங்குகளது முடை நாற்றம் மேற்கூறிய புண்ணின் நாற்றமாகக் கூறப்பட்டது. ``குடுமி`` என்பதும் சிகரமே. `புண்படு சிகரம் ஆதலின் புலவு நாறு சிகரமாயிற்று` என்பதாம். இமயமாகிய குடுமியை உடையவரையோன், இமையமலையரசன். புனலாள் - கங்காதேவி. இளையோன் - முருகன். பொருநன் - வீரன். `முதுகாட்டில் செல்லப் பலரும் அஞ்ச, நீ அஞ்சவில்லை` என்றபடி. வேறாங்கு கவர்க்குமோ - வேறுபடுவதாய் இரண்டுபட்டு நிற்குமோ, `சிவபெருமானது திருவடியைத் துதித்தலுக்கு வேறாக வீட்டு நெறி ஒன்று உளதோ` - என்றபடி.

பண் :

பாடல் எண் : 14

நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் தீரும் இடர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நெறி விரவு - ஒழுங்காகப் பொருந்திய `மாலை` எனப் பொருள் தரும். `படலை` என்பது ஈற்று ஐகாரம் தொகுக்கப்பட்டு நின்றது. ஏற்றுதல் - மோதுதல். ஏறி - கங்கையை விட்டுக் கொன்றை மாலை மேல் ஏறி. பொறி பிதிர - புள்ளிக் விளங்கும்படி. ஈற்று அரா - சூல் கொண்ட பாம்பு. ஏற்றர் - இடப வாகனத்தையுடையவர். `ஏற்றாராலே` எனப் பிரிநிலை ஏகாரம் விரித்து. `அவராலேதான் இடர் தீரும். ஏனையோராலே தீராது` - என உரைக்க. இடர், சிறப்பாகப் பிறவித் துன்பம்.

பண் :

பாடல் எண் : 15

இடர்தரு தீவினைக் கெள் கிநை வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்
கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``போழருவி`` என்பது முதலாகத் தொடங்கி ``பவள வண்ணா`` என்பதை ஈற்றடியிறுதியில் கூட்டி உரைக்க. போழ்தல் நிலத்தை. அருவி - ஆற்று வடிவாய் உள்ள கங்காதேவி. கொம்பை அடைதரு செஞ்சுடர்க் கற்றை பருமாமுதை ஒக்கும் சடை - கங்கையைப் பொருந்தியுள்ள சுடர்க் கற்றையை உடைய, பெரிய முதிர்ந்த கட்டினை ஒக்கும் சடை. முதை - முதிர்ந்த காடு. தீவினைக்கு- தீவினை நிமித்தத்தால். எள்கி - பிறரால் இகழப்பட்டு நைவார்க்குச் சரண் நின் ஈரடியின் தாமரைப் போது கொலாம்` என முடிக்க. சரண் - புகலிடம். ஈரடியின் போது, ஈரடியாகிய மலர். இன், வேண்டாவழிச் சாரியை. புடை - பக்கத்திற் பொருந்திய `இணைந்துள்ள` என்றபடி. `கொல், ஆம்` என்பன அசைகள். `தீவினையால் வருந்துபவர்க்குப் புகலிடமாகத் தக்கன சிவபெருமானது இணையடிகளே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 16

அந்த ணாளர் செந்தொடை ஓழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நெறிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டிலும் முதற்கண், `எங்கள் பெருமானே` என்னும் விளியை முதற்கண் வருவித்துக் கொண்டு, `நீ, அவுணர் நன்னாட்டு இறைவனாகிக் குறுநெடுந்தானை பரப்பிக் காய்சின அரவு நாண் பற்றி ஓர் நெடுவரை நெளிய வாங்கிச் சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்று (உனது) மால் விடை தாள் நிமிர்ந்து அடர, ஒழுக்கமும், ஆண்மையும் உக்க` என இயைத்து உரைக்க. அந்தணாளர் செந் தொடை, வேதம். அடலோர் - வீரம் உடையோர். சுடர் மொழி, வரமாக வழங்கிய சொல். அதனால் அவுணர்கள் (திரிபுரத்தவர்) அடைந்த ஆண்மை. அந்த ஆண்மை வீரர் பலராலும் பாராட்டிப் பேசப்பட்டது. `பயிற்றும் ஆண்மை` என இயைக்க. மால்விடை, திருமாலாகிய இடபம். அடர- அது தனது கால்களை நீட்டி உதைக்க. உக்க - சுக்குநூறாகி உதிர்ந்தன. `உக்கன` என்றே பாடம் ஓதுதலும் ஆம். `நீ சுடுகணை துரந்ததன்றியும், உனது விடை அடர்ந்ததனாலும் திரிபுரமும், அதன்கண் இருந்தோர் ஆண்மை உருவின்றிச் சிதறி அழிந்தன` என சிவபெருமானது ஊர்தியின் ஆற்றலைப் புகழ்ந்தவாறு. வேத நெறி பிழைத்தமை காரணமாகச் சிவபெருமான் போர் தொடுத்ததை அங்ஙனம் தொடுத்தபின் நிகழ்ந்தது போலக் கூறினார். எனினும், அஃது அதற்கு முன்பே அழிந்தது` என்பதே கருத்து. இறைவனாகி - `யான் இறைவன்` என்பதைப் புலப்படுத்தி. குறுமை பூதங்களின் உருவம் பற்றியும், நெடுமை மிகுதி பற்றியும் கூறப்பட்டன. ``நிமிர்ந்து`` என்பதை `நிமிர` எனத் திரிக்க. `சுடுகணையால் எரியை நிமிர்த்து அதனைத் துரந்த ஞான்று` என்க

பண் :

பாடல் எண் : 17

ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புனம் - கொல்லை; முல்லை நிலம். அஃது ஆகுபெயராய்க் கொன்றைப் பூவைக் குறித்தது. `ஞான்ற மாலை` என இயையும். ஞான்ற - தொங்கிய. நாள் மதியம் - முதல் நாட்பிறை. இவ் வருவான் - இப்பொழுதே நம்முன் தோன்றுவான். `வேந்து வருவான்` என்க. மூன்றாய் இயங்கும் மூதூர் திரிபுரம். வியல் மாடம் - அவற்றில் உள்ள மாட மாளிகைகள். ``மாடத்தில்`` என ஏழாவது விரிக்க. ``கண் சிவந்த`` என்றது. `சினந்த` என்றபடி. `இப்பொழுதே வருவான்` என்றது, தமது அன்பு காரணமாக எழுந்த தெளிவினாலாகும்.

பண் :

பாடல் எண் : 18

வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்திகிரி
ஏந்தற்கு மைத்துனத் தோழனின் தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வேம் மால் விடைக் கொற்றவன்`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. `முன்னாள் சூரன் வேம் துக்க மாக்கடல் படவென்றி கொண்ட சேந்தன்` என மாற்றிக் கொள்க. சூரன் இறுதியில் மாவாகி (மாமரம் ஆகி)க் கடல் நடுவில் நின்றான்` என்பர். அஃது உண்மை யன்று. `வேகின்ற துக்கமாகிய பெரிய கடல் நடுவில் பொருந்தினான்` என்பது தான் உண்மை எனச் சொல் நயம்படக் கூறினார். சேந்தன் - முருகன். திகிரி - சக்கரம். `தெய்வத் திகிரி ஏந்தல்` என்பது `மாயோன்` என்னும் ஒரு பெயர்த் தன்மைத்தாய், ``அளந்த`` என்னும் ஒரு பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. `வள்ளி என்னும் கொடிச்சி` எனவும், `கூந்தற் கொடிச்சி` எனவும் தனித் தனி முடிக்க. கொடிச்சி - குறத்தி.

பண் :

பாடல் எண் : 19

கொற்றத் துப்பின் பொற்றை ஈன்ற
சுணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்
ஏர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொற்றத் துப்பின் - வெற்றிக்கு ஏதுவான வலிமையை உடையவளும், பொற்றை ஈன்ற - மலையால் (மலை யசரசனால்) பெறப்பட்டவளும். சுணங்கு அம் செல்வத்து - தேமலின் அழகாகிய செல்வத்தை உடையவளும், (ஐ சாரியை) அணங்கு தரு முதுகாட்டு - அச்சத்தைத் தருகின்ற முதுகாட்டின்கண் வாழ்பவளும். பேய் முதிர் ஆயத்து - பேய்களாகிய முற்றிய சுற்றத்தை உடையவளும் ஆகிய பிணவின் கொழுந - மான் போன்றவளுக்குக் கணவனே. இங்ஙனம் வருணிக்கப்பட்டவள் காடுகிழாள். இவளும் சத்தியின் கூறாதல் பற்றி `மலையரையனால் பெறப்பட்டவள்` என்றார். பொற்றை - மலை. `ஒற்றை` என்பது பாடம் அன்று. ஏர் கழல்- அழகிய திருவடியை. கவைஇ - சூழ்ந்து. தாமம் தவழ் தரு புனல் - பூக்கள் மிதக்கின்ற நீர். தலைப்படுநர் - தங்கள் தலையிலே உறப் பெற்றவர்கள். ``அழுந்தலோ`` என்னும் ஓகாரம் சிறப்பு. `சிவபெருமானுடைய பாத தீர்த்தம் தலையிலே படப்பெற்றவர்களது துன்பங்கள் நீங்கியொழியும்` என்பது கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 20

இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்
றுலகெலாஞ் சென்றுழல்வ ரேனும் மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்காட் செய்வதே
எங்கட் குறும் தெரியின் ஈண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இளைஞர் - அறிவு முதிரப் பெறாதவர்கள். இலர் என்று ஏச - `இவர் யாதோன்றும் இலராகிய நிச்சல் நிரப்புடையர்` என்று சொல்லி இகழும்படி. தெரியின் - ஆராய்ந்து பார்த்தல். குறுந் தெரியல் - சிறிய மாலைக் கண்ணி. ஈண்டு எங்கட்கு உறும் - இப்பிறப்பில் எங்கட்கு நன்மை தருவதாகும். `அறிவு முதிர்ந்தோர் இகழ்தல் கண்டு யாமும் அது செய்யோம்` என்றபடி.
புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற
நெறிநில்லா
ஒத்தசொல்ல உலகம் பலிதேர்ந்து எனது
உள்ளம் கவர் கள்வன்` 1
எனவும்,
புத்தரும், சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே 2
எனவும் ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். கோல், ஆம் அசைகள்.

பண் :

பாடல் எண் : 21

ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டவொற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப்பிறைக் கீளும்எப் போதுமென் நெஞ்சத்தவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈண்டு முற்றத்து - `இவ்வுலகமாகிய முற்றத்திலே (வெற்ற வெளியான இடத்திலே) முற்றத் திரிந்து` என இயைக்க. `முற்றத் திரிந்து, அம் முனைநாள், விசை ஏறியை எங்கும் பெறாது வெறுங் கை வந்தார்` என்க. முனைநாள் - முன்னை நாள். பெறாது - காணப் பெறாமல். `மாலும், அயனுமாகிய இரு பெருந் தேவர்கள்` என்பதைச் சொல்லாமற் சொல்லக் கருதி அத்தொடரைத் தோன்றா எழுவாயாக வைத்தார். செங்கண் - சிவந்த கண்; நெருப்புக்கண். ஆரம் - எலும்பு மாலை. `செங்கண்` என்பதிலும் உம்மை விரித்து, `ஒற்றைச் செங்கண்ணும், பூண்ட ஆரமும் ... கீளும் எப்போதும் என நெஞ்சத்தவே` என இயைத்து முடிக்க. `மாலும், அயனும் எத்துணை முயன்று தேடியும் காணப்படாத முதல்வன் என் நெஞ்சத்தில் எப்பொழுதும் குடிகொண்டுள்ளான்` எனத் தாம் பெற்ற பேற்றினை வியந்துரைத்தவாறு.

பண் :

பாடல் எண் : 22

நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ
மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ
யாதா கியதோ எந்தை நீதியென்
றுடைதலை நெடுநிலா வெறியல்
கடைதலென் றருளிச் சூடிய பொருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எந்தை`` என்பது முதலாகத் தொடங்கி, முதல் அடியை இறுதியில் வைத்து முடிக்க எந்தை. விளி, நீதி இங்குத் தகுதியைக் குறித்தது. வெறியல் - மாலை. கடைதல் - மார்பின்கண் அசைதல். உடை தலை மாலை மார்பின்கண் அசைதலைத் தகுதி யென்று அருளிச் சூடிய பொருள் விளையாட்டியல்போ? தெருளா மையோ? (இவ்விரண்டுமாய் இருத்தல் இயலாது. ஆகையால்) ஒரு வஞ்சமோ உடைத்து` என முடிக்க. `தலை மாலை சூடிக் கொள்ளுதலை ஒரு விளையாட்டாகக் கருதுதல் மடவோர் இயல்பாகும்` என்பார், ``மடவோர் விரும்பு விளையாட்டு`` என்றார். தெருளாமையாகிய மருள்புரி கொள்கையோ` என மாற்றியுரைத்தல் கருத்து என்க. ``அருளி`` என்றது, `உனது செயல்கள் யாவும் அருள் காரணமாகவே நிகழும் ஆதலால் இன்னதோர் அருளைக் கொண்டு` என்றபடி. பொருள் - கருத்து. பழிப்பது போலப் புகழ்தல் வேண்டி ``வஞ்சம்`` என்றார் ஆகலின், ``ஆழ்ந்ததோர் கருத்து`` என்பதே அதன் உண்மைப் பொருளாம். ஓகாரம் சிறப்பு. அக்கருத்தாவது, தனது நித்தியத் தன்மையை உயிர்கட்கு உணர்த்துதலாம்.

பண் :

பாடல் எண் : 23

பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கண் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தெருளாத ... பகட்டுரியான்`` என்பதை முதலிற் கொள்க. மறி - கன்று. `தெருளாத மறி, பால் மறா மறி` எனத் தனித் தனி முடிக்க. ``தெருளாத`` என்றதும், ``பால் மறா`` என்றதும் குழவிப் பருவத்தைக் குறித்தவாறு. பகடு - யானை. `பைங்கண் பகடு` என்க. பொருளாக - இன்றியமையாப் பொருளாக. மற்று. அசை. அல்லாதார்- யான் தவிர ஏனையோர். `பைங்கொன்றைத் தாரையும் தான் மறான்` என்க. உம்மை தொகுத்தலாயிற்று. மறான் - மறுக்கமாட்டான். இது தூது செல்லுமாறு வேண்டி தலைவிக்குத் தோழி தலைவனது அன்பின்மை கூறி இயற்பழித்தது.

பண் :

பாடல் எண் : 24

தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
ஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிக்கெற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
ஒரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இவன் ஓர்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. அங்ஙனம் உரைக்குங்கால் ``நல் ஏறு கடாவி`` என்பதை ``ஐயம் வேண்டி உழிதரும்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. ``ஓர் பேரிளங் கொங்கைப் பிணா`` என்றது கங்காதேவியை. `இவன் இத்தகையனாய் இருத்தலால் தலைமை மிக்க பொன் வழங்கியதனால் என்ன பயன்? என்றபடி. பொன் மலையாட்டி, உமாதேவி. `அவரே பெருந்தேவி` என்றற்கு ``தலைமை மிக்க`` என்றார்.

பண் :

பாடல் எண் : 25

உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் ததுளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின்
சுடர்மொழி ஆண்மை பயிற்று நாவலர்க்
கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உழிதரல் மடிந்து - அலைவதினின்றும் ஓய்வுபெற்று. கழுது - பேய். சீர் இயல் பெரும - நடனம் புரிகின்ற பெருமானே. சீர் - தாளம். `தாளத்திற்கு இசை நடனம் ஆடுபவன்` என்றபடி. புகர் முகத் துளைக்கை உரவோன். யானை முகக் கடவுள். நெடியோன் பாக - திருமாலை ஒரு பாகத்தில் உடையவனே. நின் சுடர் மொழி ஆண்மை- வேதத்தை ஆளும் தன்மை. அஃதாவது, வேத நெறிப்படி உன்னை மன மொழிமெய்களால் வழிபடுந்தன்மை. ``பயிற்றும்`` - என்பது தன் வினை பிறவினை இரண்டற்கும் பொதுவாய் நின்றது. ஓகாரம், சிறப்பு.

பண் :

பாடல் எண் : 26

எளியமென் றெள்கி இகழாது நாளும்
அளியம்ஆட் செய்தாலும் ஐயோ தெளிவரிய
வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
கொள்கயிலை எம்பாற் குறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச் சீரிலிருந்து தொடங்கி, ஈற்றடியை இறுதியில் வைத்து உரைக்க. வள்ளன்மையைக் குறிக்கும் `வள்ளல்` என்பது ஈறு குறைந்து, முதனிலையளவாய் நின்றது. வள்ளன்மையைப் பொருப் பிற்கு ஏற்றினும்,பொருப்பற்கு ஏற்றினும் பொருந்தும். எளியம் என்று ஏற்கி இகழாது - `யாம் சிவனுக்கு செய்யும் அளவிற்குத் தகுதியுடையமோ` என்று `எங்களை நாங்களே இகழ்ந்துகொண்டு, அது பற்றி உனக்கு ஆட்செய்தலை ஒழியாது செய்தாலும் நீ எங்கள் பால் உள்ள குறைபாட்டினை கருத்திற் கொள்கின்றாய் இல்லை (கருத்திற் கொண்டு தீர்க்கின்றிலை) என்க. `கொள்கையிலே` என்பது, ``கொள்கயிலை`` எனப் போலியாய் வந்தது. `எம்மாற் குறை` என்ப தும் பாடம். அதற்கு, `குறை - பணி` என்பது பொருளாகும்.

பண் :

பாடல் எண் : 27

குரையாப் பலியிவை கொள்கவென் கோல்வளை யுங்கலையும்
திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில்
பொறையாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம் மேனியெம் வேதியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தெய்வக் கங்கை`` - என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ``கடல்`` என வருதலால், ``பொறை`` என்பது கடலில் உள்ள நீரைக் குறித்தது. ``ஆகாயத்தில் உள்ள தெய்வக் கங்கையில் தனது நீர் எழுந்து பாய்வதாகிய ஒரு கடல்`` என்க. `இறைவன்` என்பது `இறையன்` எனவும் வரும். `இறையனார்` என்பதை நினைக. விளியேற்குங்கால் `இறைவன்` என்பது `இறைவா` என வந்தது. `என் பலியாகிய இவைகளைக் கொள்க. இவற்றை விடுத்து என் வளையையும், கலையையும் கொண்டாய், என் செய்வது! என்க. பலி - பிச்சை. இது கைக்கிளைத் தலைவி தலைவனை நெருங்கிக் கூறியது

பண் :

பாடல் எண் : 28

வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத் தண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேதியர் - நிலத் தேவர்; பூசுரர், விண்ணோர் - வானத் தேவர். நான்முகத்து அண்டம் - பிரமாண்டம். `அதன் முழு இடத்திலும் நிறைந்துள்ளாய்` என்றற்கு ``நான்முகத்து அண்டவாண``- என்றார். ``நாடு`` என்றது உலகத்தை; அது சத்திய லோகம். `அது செம்பொன் நிறத்தது` என்றற்கு. ``செக்கர் நாடு`` என்றார். விடை திருமால் ஆதலின் ``அதன் பாக`` என்றதனானே வைகுந்தத்தில் நிறைந்தமை சொல்ல வேண்டாவாயிற்று. நாவல் பெருமை - நாவால் வலியராம் பெருமை. அது தம்மால் மொழியப்படும் மொழிகள் யாவும் நிறைமொழிகளாய்ப் பயன்தருதல். எனவே, `அருளாளர்கள் மொழியும் மொழிகள் நிறைமொழிகளாய் நின்று பயன் தருதல், இறைவனது அருளாற்றல் அம் மொழிகளில் கலந்து நின்று இயக்குதலானே` என்பது அறியப்படும். ``நல்குவோய்`` என்பது முற்று.

பண் :

பாடல் எண் : 29

எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச
நனவே பலிதிரிதி நாளும் சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சின வேங்கைக் கார்க் கயிலை நாட`` என்பதை முதலிற் கொள்க. சின வேங்கை - புலி. கார் - மேகம். `இவைகளை யுடைய கயிலை` என்க. ``நாடு`` என்றது, `இடம்` என்றபடி. எனவே இளைஞர் - எடுத்துச் சொல்லப் புகுங்கால் உலகியலில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள் இகழ்ந்தே கூறும்படி `(நீ) நாளும் நனவே உலகெலாம் பலிதிரிந்து` என்க. ``நனவே`` என்றது, ``யாவரும் நன்கறியும்படி`` என்றவாறு. `அதுவன்றி, நீ போர்க்கை களிற்று உரியலால் இலை; `அங்ஙனமாக - யான் பேரைசுவரியம் உடையவன் - என்று உன்னை நீயே உயர்த்திப் பேசிக் கொள்ளுதல் வேண்டா` என்க. `ஐசுவரியம் உடையேன்` எனக் கூறிக்கொள்ளுதல் `என் பெயர் ஈசுவரன்; (இன்னும்) மகேசுரன்` என்று சொல்லிக் கொள்ளுதல். பேசல் - பேசற்க. இனி இதனைத் தொழிற் பெயராக்கி. `நீ பேசல் பொய்` என முடிக்கினும் ஆம். அன்றி, `பேசேல்` எனப் பாடம் ஓதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 30

பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி யீரினிச்
செய்வதென்னே செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``செந்நீர் வளர்சடை`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. செந்நீர் - சிவந்த நீர்மை. செந்நிறம். `வைத்த முதல்வன்` என இயையும். `திரளினது செக்கர்` என ஆறாவது விரிக்க. ``நீர்``, ``செய்தீர்``, ``அறியீர்`` என்பன எள்ளல் பற்றி வந்த பன்மையாகலின் அவை ``முதல்வனே`` என்னும் ஒருமையோடு மயங்கின. ``பொய் நீர் உரை செய்தீர்`` என்பதை, ``செய்வது என்னே`` என்பதற்கு முன்னே கூட்டுக. பல் பொய்யோம் - நாள்தோறும் பிச்சைக்கு வருதலைப் பிழையோம். இஃது ஒருநாள் பிச்சைக்கு வந்த இறைவன் கூறியது. அங்ஙனம் கூறியதை நிறைவேற்றாமையால் `நீர் பொய் உரை செய்தீர்; செய்வது என்னே` என்றாள். கடை - தலைவாயில். இது கைக்கிளைத் தலைவி ஆற்றாமையால் தலைவனை எதிர் பெய்துகொண்டு கூறியது. ``முதலவனே`` என வந்த இதன் இறுதிச் சீர் இதன் முதல் செய்யுள் முதலோடு சென்று மண்டலித்தல் காண்க. சிவபெருமான் திருமும்மணிக்கோவை முற்றிற்று.
சிற்பி