அதிரா அடிகள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை


பண் :

பாடல் எண் : 1

ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பின்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் முதல் மூன்று அடிகளும் சிவபெருமானைக் குறித்தன. ``இருங்குறும் பைம்புக.. கழுப்படை`` என்னும் தொடர் சிவபெருமான் ஏந்தியுள்ள சூலத்தைக் குறித்தது. இருமை - கருமை. அஃது மையீறு இன்றி நின்றமையின் மெல்லினம் மிகுந்தது. குறுமை - சிறுமை. பசுமை - ஈரம். அது பகைவர் உடலில் பாய்ந்து புலராமையால் ஆயிற்று. புகர் - அழகு. நுதி - முனை. அஃது உதிரத்தால் சிவந்து நின்றது. நாலுதல் - தொங்குதல். நுதியிலே நாறுகின்ற. இணர் - கொத்தாகிய குடல் என்க. நிணம் - கொழுப்பு. குடல் பகைவ ருடையன. கமழும் - நாறுகின்ற. இவ்வளவும் சூலத்திற்கு அடை. மதலை - மகன். துவன்றுதல் - நெருங்குதல். அஃது இங்கே மிகுந்து பாய்தலைக் குறித்தது. கதன் - கதம், கோபம். கடம் - மதநீர்; தட - பெரிய, கபோலம் - கன்னம். வல மருப்புக் கயமுகாசுரனை அழிக்க ஒடிக்கப்பட்டது. ஆகலின், ``இட மருப்பின்`` என்றார். கரண்டக உதரம் - கூடை போலும் வயிறு. ``சிற்றுண்டிகள் பலவற்றால் நிரம்பி யது` என்றபடி. `கதனுடைக் குழவி. கபோலக் குழவி, மருப்பிற்குழவி, உதரத்துக் குழவி என முடிக்க. முரண் - வலிமை. யுகளம் - இணை. யாவையும் - அனைத்துப் பொருள்களின்மேல் உள்ள பற்றுக்களும் ஆகுபெயர். இதன்கண் ஒன்று முதல் நால் அளவான எண்ணலங்காரம் வந்தது. ``செந்நுதி வெள்நிணம்`` முரண் தொடை.

பண் :

பாடல் எண் : 2

நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. காமாரி - காமனை அழித்தவன்; சிவபெருமான். `அன்பர்கள் உள்ளத்தில் கலந்து அவற்றை இடமாகக் கொள்கின்ற காமாரி` என்க. கருமை - பெருமை. கடம் - மதம். தட - பெருமை. `தடத்துக் கடம்` பின் முன்னாக மாற்றி யுரைக்க. கடமாகிய மாரி, உருவகம். மணி - இரத்தினம் போலும் பிள்ளை. சப்பாணி கொட்டுதல், குழந்தைகள் தங்கள் இரு கைகளையும் சேர்த்துக் கொட்டும் விளையாட்டு. `இச்சிறு பிள்ளையின் சப்பாணி கொட்டுக்கு உலகம் அதிரும்` என தன் ஆற்றலை வியந்தவாறு. `சக பாணி` ``சப்பாணி`` என மருவிற்று.

பண் :

பாடல் எண் : 3

மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாளரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க்க கிளங்கன்றை அங்கரும்பின்
துனிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவித்
பிணிசிந்து கான்முனை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமானுக்கு மகனாகவே கங்கைக்கும் மகன் ஆயினான். மானம் - பெருமை. அரக்கர். திரிபுரத்து அசுரர். அவர் களது அணி படைகள். `இளங் கன்று` என்பதில் இளமை, பருவத்தைக் குறித்தது; குறையைக் குறித்த தன்று. துணி - துண்டு. போதகம் - யானை. தொடர்ந்தோர் - அன்பு செய்தோர். `தன்னைத் தொடர்ந் தோர்` என்க. பிணி சிந்து - நோயை அழிக்கின்ற. கான்முனை - பிள்ளை. பேதுறல் - மயங்கல். ``பேதுறல் இல்லை`` என்றது. `தெளிவு உண்டாகும்`` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

பேதுறு தகையம் அல்லம் தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கன்
நாப்பண்
புக்கவண் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோள்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியை, தீதுறப் பேதுறு தகையமல்லம்` என மாற்றி இறுதியில் வைத்துரைக்க. ``குஞ்சி`` என்றது சடையை. `துவக்கு` என்னும் வடசொல் `தொக்கு` எனத் திரிந்து வந்தது. `தோல்` என்பது பொருள். தோல், யானைத் தோல். தொக்கன் - அத்தோலைப் போர்த் திருப்பவன். ``நாப்பண்`` என்றது. `அவனுக்கும், உமைக்கும் நடுவில்` என்றதாம். பொறி - புள்ளி. தடக்கை - வளைந்த கை - தும்பிக்கை. முரணிய - மற்றைக் கைகளோடு மாறுபட. ``கொட்ட`` என்பதன்பின், `விளங்கும்` என ஒரு சொல் வருவிக்க. `நாபி` என்னும் வடசொல் `நாவி` எனத் திரிந்து வந்தது. நாபி - கொப்பூழ். அஃது ஆகுபெயராய் வயிற்றைக் குறித்தது. `வயிறு` என்னும் விதப்பால் `பெருவயிறு` என்பது பெறப்பட்டது. தே - கடவுள். `தேவாகிய இதன் அடி மணந் தனம்` என்க. தே, சொல்லால் அஃறிணையாதலின், ``இதன்`` என்றார். மட்டு உகு தெரியல் - தேனைச் சிந்துகின்ற பூமாலை. மணந்தனம் - கூடினோம். அதனால் `தீது அடைதலால் பேதுறு தகையமல்லமாயி னோம்` என்க. பேதுறல் - வருந்தல். `அல்லது` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 5

மேய உருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை
ஒய மணியூசல் ஆடின்றே பாய
மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை
தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாளமர்க்கண், பாய மழை செவிக் காற்று உந்திய, எந்தை தழை செவிக் காற்று உந்த, மேய ... ... திண் சேனை தளர்ந்து ஓய ஊசலாடின்று என இயைத்துக் கொள்க. உரும் - இடி. அஃது அதனோடு ஒத்த ஓசையைக் குறித்தது. ``எயிறு`` என்றது. கோரப் பல்லை. சேனை. கயமுகாசுரனுடன் வந்தது. ஓய - போரை ஒழியும்படி. மணி ஊசல் - அழகிய ஊசல் போல. ``ஆடின்று`` என்பதில் `இன்` என்பதன் ஈற்று னகர மெய் றகர மெய்யாய்த் திரியாதே நின்றது; இது முற்கால வழக்கு. ``மழை செவி`` என்பதில் `செவ்வி` என்பது இடைக்குறையாய் வந்தது. சகர ஒற்றுத் தொகுத்தல். பா - பரவிய. `பரவிய மழைச் செவ்வியை உண்டாக்கும் இயற்கைக் காற்றை வென்ற எந்தையது தழை செவிக்காற்று உந்தியதனாலே சேனை தளர்ந்து ஓய ஊசலாடின்று` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 6

உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்குற் கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊர் விந்தத்தள் - தனது இருப்பிடமாக விந்த மலையைக் கொண்டவள்; துர்க்கை - இவள் உமாதேவியின் கூறாதல் பற்றி `முருகனை இவளுக்கு மகன்` எனக் கூறுதல் போல, மூத்த பிள்ளையாரையும் `இவளுக்கு மகன்` என்றார். அரா மருங்கு - பாம்பு போலும் இடை. `இவள் பெற்ற` என்பதன்பின் ``ஓடை நெற்றிச் சந்தம்`` என்பதையும், ``தாள் இரி`` என்பதையும் கூட்டி, வேழக் கன்று`` என்பதற்கு அடையாக்குக. உந்த - வெளிப்படுத்த. தளரா வளைத்தன- தளர்ச்சியடையாது எல்லாப் பொருள்களையும் உள்ளடக்குவன வாகிய ஒளிக்கதிர்கள். முன்னம் மின் ஓடை நெற்றிச் சந்தம் - முன்னே மின்னுகின்ற பட்டத்தையுடைய நெற்றியின் அழகு. தனித் தெவ்வர் தம் தாள் இரி - ஒப்பற்ற பகைவரது முயற்சிகளைப் பின்னிட்டு ஓடும்படி ஓட்டிய. மந்தம் - மெல்ல நடக்கின்ற. (ஆயினும்) தளரா - மெலி வடையாத சரணங்கள் (பாதங்கள்) என்க. வழுத்துதல் - துதித்தல். ``வழுத்துமின்`` என்றது. `வழுத்தினால் எந்நலமும் பெறுவீர்` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 7

மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஒவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மேகத்தின் முழக்கம் போலும் முழக்கத்துடன் என்றும் ஒரு பெற்றியனாய் விளங்கும் யானைமுகக் கடவுளை (எமக்கு அருளவேண்டி) யாம் மிகவும் துதிக்க வேண்டுவதில்லை. ஏனெனில், அவன் பிறந்தது, இவ்வுலகம் முழுவதையும் படைத்தவனது அகங் கரித்த தலையை அரிந்தவனுக்கு, எழுதியது. மேருமலையாகிய ஏட்டில் வலைஞர் தலைவன் மகளுக்கு மகனது மொழியை - என்பது இதன் திரண்ட பொருள். `தந்தையது ஆற்றல் இவனிடத்தும் உளதாதலும், வலைஞர் தலைவன் பெயரன் சொல்லத்தான் ஏடுஎழுதுவோனாய் இருந்து எழுதிய அருளாளன் ஆதலாலும், ஆற்றலும், அருளும் ஒருங்குடையோர் தம்மையடைந்த எளியவர்க்கு இரங்கியருளல் இயல் பாதலும் யாம் `உமக்கு அருளுக` என மிகவும் வேண்ட வேண்டுவதில்லை. அவனேயருளுவன் என்பதாம். வலைஞர் தலைவன் மகளுக்கு மகன் வியாத முனிவன்; அவன் மொழி மகாபாரதம். `மகா பாரதத்தை வியாத முனிவன் சொல்ல, விநாயகப் பெருமான் சிவபெருமானது ஆணையின் வண்ணம் தாம் முன்பே ஒடித்து வைத்திருந்த தந்தத்தை எழுத்தாணியாகவும், மகாமேரு மலையை ஏடாகவும் கொண்டு எழுதினார் என்பது இவ்விதிகாச வரலாறு.

பண் :

பாடல் எண் : 8

மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழிய வருபொருளே கண்ணே செழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாலையனே சூழாதென் அன்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறைமொழியின் முதல், பிரணவம். விநாயகர் பிரணவ வடிவாய் உள்ளவர். `அவர் தோன்றியதே பிரணவத்திலிருந்து` என்பது வரலாறு. * `மறை மொழியின் முதலே` என மாற்றியுரைக்க. முந் நயனம் - மூன்று கண். ஏறு - ஆண் சிங்கம். கழிய வரு பொருள் - பாசங்கள் யாவும் நீங்கிய பின் கிடைக்கும் பொருள்; முதற் கடவுள். கண்ணே - எங்களுக்குக் கண்போல இருந்து எல்லாவற்றையும் அறிவிப்பவனே. செழியகலாலயனே - பொருள் நிறைந்த கலைகளுக்கெல்லாம் இருப்பிடமாய் உள்ளவனே.

பண் :

பாடல் எண் : 9

அன்பு தவச்சுற்றத் தாரழல் கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின் றான்மதஞ் சூழ்மருப்பிற்
கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட்
கின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்பு தவச் சுற்றம் - அன்பை மிகுதியாக உடைய சுற்றம்; அது தேவர் குழாம். `அசுரர்கள் அன்பில்லாதவர்கள்` என்பது கருத்து. சுற்றத்து - சுற்றத்தால்; சுற்றம் காரணமாக. `எரிய மாட்டு கின்றான். என இயையும். `மாட்டுகின்றான்` என்றது இறந்த காலத்தில் நிகழ்காலம். எனவே, `அன்று மாட்டுகின்றான்` என்றபடி. மாட்டு கின்றான் - எரிக்கின்றான். வன்பு தவத்து - வலிமை மிகுதியால் மாட்டு கின்றான் என்க. அன்று நீ காத்தது இயம்புக - அது பொழுது (வலிமை மிகுந்த) நீ அவனுக்கு என்ன உதவி செய்தாய்? சொல்லுக. `தந்தை போரில் ஈடுபடும்பொழுது மைந்தர் அவனுக்கு உதவ வேண்டுவது முறைமையன்றோ` என்றபடி `நீ அன்று அவனுக்கு உதவியது, அவனுடைய தேரினது அச்சை முறித்ததுதானோ` எனக் குறிப்பால் பழித்தவாறு, இது பழித்தது போலப் புகழ்ந்தது. `யாவர்க்கும் முதல்வ னாகிய சிவபெருமானது தேரின் அச்சையே நீ முறித்து விட்டாய்` என்றால், உனது ஆற்றல் முன் பிறர் ஆற்றல் என்னாம் என்பதாம். கன் புதவம் - கல்லால் ஆகிய கோபுர வாயிற் கதவு. `புதவின்கண்` என ஏழாவது விரிக்க. அரசர்கள் பகைவரது ஊரை முற்றுகையிடும் பொழுது அவர்களது கோட்டை வாயிற் கதவுகளை யானைகளை ஏவி உடைக்கச் செய்வது வழக்கம். அம்முறையில் நீயே வலிய யானை யாய் இருத்தலால் திரிபுரத்தசுரன் கோட்டை வாசலின்மேல், ``கரத் தாளமிட்டுக் கடுநடையிட்டு ஓடி இன்பு உதவச் சென்று மருப்பின் உதவியது உண்டோ` என்பதும் உடன் கூறியவாறு. மருப்பு - தந்தம்.

பண் :

பாடல் எண் : 10

கவவுமணிக் கேடகக் கங்கணக் கவைவல்நா
அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநின்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை
வரைநனி கீறி மூரி
அஞ்செறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொண்டு உரைக்க. மஞ்சு - மேகம். தந்தையது பொருள் தனயர்க்காதல் பற்றி விநாயகப் பெருமானை, ``கயிலை மலை கிழவோன்`` என்றார். உனது கேடகமும், கங்கணக்கவையும், வல் நாவும் அவுணரோடு பொருத ஞான்று என்க. கவவு மணி - முற்றிலும் நிறைந்த இரத்தினம். கேடகம் - வாளோடு ஏந்தும் பலகை. பூணினை, ``கங்கணம்`` என்றார். கவை - பிளவு. அது தந்தத்தைக் குறித்தது. வல் நா - வலிய நாக்கு. பகைவரை யானை தனது தந்தத்தால் குத்தும் பொழுது அதன் நாவும் அவர்களுக்கு ஊறு விளைவிக்கும், அவுணர், கயமுகாசுரன் படைஞர். அழல் - வெப்பம். பேர்ஊதை - பெருங்காற்று. மூரிச் சேறு - பெருஞ்சேறு; என்றது. கடலின் அடியில் உள்ள சேறு. என்பர் - என்று அறிந்தோர் கூறுவர். பிள்ளையாரது வலிமையை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 11

மலைசூழ்ந் திழிகின்ற மாசுணம்பொற் பாறைத்
தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்
கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. கலை - உடை. கலை சூழ் திரண்டு அகங்கொள் பேரறிவன் - நூல்களின் ஆய்வுகள் யாவும் ஒருங்குகூடி தங்கள் அகத்தும் கொள்கின்ற. பெரிய அறிவு வடிவாய் உள்ளவன். உம்பர் - மேலே; உயரத்தில். கால் உயிர்க்கும் கை - மூச்சுக் காற்றை வெளிவிடும் கை; தும்பிக்கை. கரண்டகம் கொள் கால் - கூடை நிரம்பத்தக்க காற்று. `கை மாசுணம் இணைப்பது ஒக்கும்` - என முடிக்க. மலை சூழ்ந்து இழிகின்ற மாசுணம் - மலையைச் சுற்றிக் கொண்டு கீழ்நோக்கியிறங்கும் பாம்பு. பொற் பாறைத் தலை - பொற் குன்றின் உச்சி. தான். அசை. இளைப்பது - இளைப்பாறுவது. பெருமூச்சு விடுவது.

பண் :

பாடல் எண் : 12

காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் கின்ற விடுசுடர்க்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நான் மறைக்கின்ற - நான் உள்ளத்திலே பொதிந்து வைக்கின்ற சுடர், பிள்ளையார். இதனுள் ``கையது, நூலது, வெற்பது, வேலது வாளது`` என்பவற்றில் உள்ள ``அது`` என்பன எல்லாம் பகுதிப் பொருள் விகுதிகள். ஏனைய ``காலது`` முதலியன பலவும் `அதனை உடையது` என்னும் குறிப்பு முற்று வினையாலணையும் பெயர்கள். எனவே, ``கை காலது, (தும்பிக்கை காற்றை இடையது). கண் தீயது (தீயை உடையது) மதநீர் மேலது, நூல் (முந்நூல்) அதன் கீழது, வெற்பு (மலைபோலும் திருமேனி) ``பாவையது`` என இத னிடத்தும் துவ் விகுதி விரிக்க. பாவையது - பெண்ணை (வல்ல பையை) உடையது. ``பாலது, தேனது`` என்பவற்றில் உள்ள `அது` என்பனவும் பகுதிப் பொருள் விகுதிகளே. எனவே `அதுபால்தான், தேன்அதுதான் என்னும் மெல்லிய மொழியையுடைய பாவை` என்பதாம். `வால் முப்பூண் வேல் (சூலம்)` என்க.

பண் :

பாடல் எண் : 13

சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகமும் வலம்வர வேஅக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கணிந்த
ஒங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நெடுவேற் சேய். முருகன். அவன் மூன்று உலகங் களையும் சுற்றிவருவதற்குமுன் விநாயகர் தம் தாய் தந்தையரை வலம் வந்து மாங்கனியைப் பெற்று உண்ட வரலாறு நன்கறியப்பட்டது. படலை - மாலை. வளாய் - சுற்றி வந்து. அள்ளல் - சாறு.

பண் :

பாடல் எண் : 14

இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க. வானாடன் - சிதாகாசத் தில் உள்ளவன்; சிவபெருமான். வரை - மலை போலும் தோற்றத்தை யுடைய பிள்ளை. ``திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்` எனத் தொடங் கும் கந்த புராணக் காப்புச் செய்யுளால் விநாயகரது பேருருவ நிலையை உணர்க. `இவ் வலயம்` என இயையும். வலயம் - பூமியை வளைந்துள்ள கடல். கயம்கொள் - ஆழத்தைக் கொண்ட. மூ வலயம். மூத்த (பழமையான) வலயம்; வினைத்தொகை. ஏழ் வரைகள். ஏழு தீவுகளிலும் உள்ள மலைகள். திக் கயங்கள் - திசை யானைகள். `தட வரைகளும், திக் கயங்களும் பேர்ந்து செங்கீரை ஆடும்படி வானாடன் பெற்ற வரை செங்கீரை யாடின்று` என இயைத்து முடிக்க. `செங்கீரை யாடின்று`` என்பதை மேல் ``ஊசலாடின்று`` என்றது போலக் கொள்க. மேல் சப்பாணி கொட்டற் சிறப்புக் கூறி, இங்குச் செங்கீரை யாடற் சிறப்புக் கூறினார். தேன் - வண்டுகளில் ஒருவகை. தேனும், வண்டும் புகுந்து ஆடுதல் தான் அணிந்த கொன்றை மாலையில் என்க.

பண் :

பாடல் எண் : 15

பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த
மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக்
கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ
செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தன்னைப் பெற்ற மெல்லோதி. மெல் ஓதி - மெல்லிய கூந்தலை உடையவள். ``சிலம்பின் மகள்`` என்றது, `மலைவாழ் சாதியினள்` என இகழ்ச்சி தோன்றக் கூறியது. மற்று, வினைமாற்று. பெற அவள் பிச்சு உகந்த பிச்சன் - தன்னைப் பெறுவதற்கு அவள் தன் கணவனாகப் பெரிதும் விரும்பப்பட்ட பித்தன். மயங்கல் முன்னோன்- பித்துக் கொள்ளியான முதியோன். (ஆயினும் அவன்) பின் இணைமை மிகக் கற்றவன் - நடனம் ஆடுதலில் வல்லவன். ஐயன் - யாவர்க்கும் தலைவன். அவன் புறங்காட்டிடை ஆடுதலையே விரும்புகின்ற காரணத்தால்தானோ, செற்ற வெண் தந்தத்தவன் (ஒடிக்கப்பட்ட தந்தத்தை உடையவன்) எங்களை இறவா நிலையினராகச் செய்தன! `தன் அடியவர்களைப் புறங்காடு அடையாவகை செய்து, `தன் தந்தை புறங்காட்டு ஆடுதலைத் தவிர்க்க நினைத்தான் போலும்!` என்றபடி. நடனங்களில் சில வகைகள் இணைந்து ஆடுவனவாகவும் இருத்தலின் ``இணைமை`` என்றார். `உகத்தலால்` என்பது `உகந்து` எனத் திரிந்தது. ``அஃது ஆற்றாது - எழுவாரையெல்லாம் பொறுத்து`` * என்பதிற்போல.

பண் :

பாடல் எண் : 16

செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரட் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றனதி ணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொலம் படை - பொன்னால் செய்யப்பட்ட அணிகலக் குழாம். (`ஐம்படைத் தாலி` என்றல் பொருந்தாது.) கூர்மை நோக்கித் தந்தத்தை `உகிர்` என்றார். யானையின் வாயில் சிறு பற்கள் உள்ளே நிறைந்திருக்க, அதன் தற்காப்புக் கருவியாய் இரு தந்தங்கள் முன்னே நீண்டு வளரும் `அத்தகைய தந்தத்தையுடைய திரண்ட வாய்` எண் `திரள் வாயையும், புழைக் கையையும் உடைய பாகன்` எனக் கொள்க. ``மண் முழை வழங்கும் திண் முரண் ஏற்றின் பனை`` பெருச்சாளி. ஏறு - விலங்கின் ஆண். பனை - பனந் துண்டம். `ஏறாகிய பனை` என்க. இன், வேண்டா வழிச் சாரியை. இணை அடி சரணம் - இணைந்த அடியாகிய பாதம். ஏத்த - ஏத்துதலால், `இடும்பைப் பௌவம் நோக்கி இனி நீங்கலம்` என்க. `பௌவத்திற்கு` என நான்காவது விரித்துக் கொள்க. இடும்பை. பிறவித் துன்பம்.

பண் :

பாடல் எண் : 17

அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசையிழிவ தொக்கும் பலன்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. பலன் - பயன். மரங்களின் பயனாகிய கனிகள். அளைந்த - திளைத்த. கடுக்கைத் தாது - கொன்றை மலரின் மகரந்தம். அளைந்து - கலந்து. அலங்கல் மணி - ஒளி வீசுதலையுடைய மணி. விலங்கல் - மலை - `கொன்றை மலரின் மகரந்தம் பொன் போலவும், வண்டுகள் நீல மணி போலவும் உள்ளன` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 18

மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்றை
மதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மதம்`` நான்கில் முதலது மகிழ்ச்சி; இரண்டாவது வலிமை; மூன்றாவது மதநீர்; நான்காவது மிகுதி. மடங்கல் - நரசிங்கம். ``மடங்கல் கொன்ற`` என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. கும்பம் - மத்தகம். மந்தாரப் பொன் நாடு - `மந்தாரம்` என்னும் தருக்களையுடைய தேவ லோகம். `தேவலோகத்தில் இருந்து தேவர் கட்குச் செல்வ மிகுதியைத் தந்த செம்மல்` என்க. இஃது அசுரர்கட்கு இடர் இழைத்தலைக் கருத்துட் கொண்டு கூறியது. தேவலோகத்தி லிருந்து `தேவர்கட்கு அருள் புரிகின்ற அந்தச் செம்மல் வையம் உய்ய இங்கும் வளர்கின்றான்` என்றபடி, வளர்கின்றது தொழிற் பெயர். எனவே, வளர்கின்றது `போற்றுதலுக்குரியது` என்பது எஞ்சி நின்ற தாம். இதன்கண் சொற்பின்வருநிலையணி வந்தது.

பண் :

பாடல் எண் : 19

வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிவின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கவடு - மிலாறுகள். `கவட்டினது` என ஆறாவதும், பொதும்பரில்` என ஏழாவதும் விரிக்க. தும்பு - தும்பிக்கை. பாரிடை- நிலவுலகத்தில். இங்கு இது கூறப்பட்டமையால் முதற்கண் ``வானிடை`` என்பது வருவித்துக் கொள்க. `குறுநடைத்தாய்` என ஆக்கம் வருவிக்க. ஞாங்கர் - அவ்விடத்து - இட்ட - அன்பர்கள் படைத்த. ``ஓச்சும், விழுங்கிய`` என்னும் இரு பெயரெச்சங்கள் அடுக்கி, ``எந்தை`` என்னும் ஒரு பெயர் கொண்டன. `விண்ணுலகத்திலும், மண்ணுலகத்திலும் உலாவியும், இருந்தும் அருள் புரிகின்ற எந்தை என்றபடி.

பண் :

பாடல் எண் : 20

கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் தோளுற்
றறுத்தெறிந்து கொன்றழித்தவ் அங்கயங்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கிம்புரிப்பூண்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கிம்புரிப் பூண் கேயூரம் - யானையின் தந்தங்களில் இடுகின்ற `கிம்புரி` என்னும் பூண்போலும் கேயூரம் என்க. கேயூரம் - தோள் வளை. வாள் உற்று - ஒளி பொருந்திய. வாளரக்கர் - கொடிய அசுரர்கள் - அவர்களது தோள்களை முன்னே பற்றி அறுத்தெறிந்து அவர்களைக் கொன்றழித்துப் பின்பு, அக்கயம் கண் மீண்டு அவர் களுக்குத் தலைமை பூண்டு வந்த அந்த யானையின்மேல் (கய முகாசுரன் மேல்) பார்வையைத் திருப்பி, அவனை இறுத்து எறிந்து - துண்டுகளாக்கி வீசிக் கொன்றழித்த ஏறு (ஆண் சிங்கம். கேள் - உற்று எனக்கு உறவாகப் பொருந்தினமையால் யான் தளர ஒட்டுமோ - கொன்றழித்தல், மீமிசைச் சொல்.

பண் :

பாடல் எண் : 21

ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகவெங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னை அல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏறு தழுவியது. நப்பின்னையை மணத்தற் பொருட்டு, வெருட்டி விடப்பட்ட காளைகளை அடக்கி வென்றது. எனவே, இங்கு, ``புத்தேள்`` எனப்பட்டவன் கண்ணபிரானாயினான். அவன் சிவபிரானுக்கு அன்புடையன் ஆகலின் அவனை ``எம்புத் தேள்`` என்றார். உமாதேவி மாயோனுக்குத் தங்கையாகச் சொல்லப் படுதலின், விநாயகரை, `அவன் அவதாரமாகிய கண்ணபிரானுக்கு மருகன்` என்றார். எண் தோளவன் சிவபிரான்.
வண்டு உண்ண நெக்க ஆறு - வண்டுகள் மொய்த்து உண்ணும் படி கசிந்து ஒழுகும் மதநீர்த் தாரை. அவை இரு காதுகளினின்றும் வீழ்ந்து தோள் வழியாகக் கைகளிலும் செல்லுதலால், `அவற்றைத் தழுவிய கரதலத்தை உடையவர்` என்றார். வணங்காத வியன் சிரம் - `யாரையும் வணங்காத பெருமையுடைய எமது தலை நின்றன்னை யல்லால் வேறொரு தெய்வத்தைப் பொருந்தி வணங்குமோ` என்க.

பண் :

பாடல் எண் : 22

சிரமே
விசும்பு போத உயரி இரண்
டசும்பு பொழி யும்மே
கரமே
வரைத்திரண் முரணிய இரைத்து விழும்மே
புயமே
திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்குமே
அடியே
இடும்தொறும் இவ்வுல கம்யெபரும்மே
ஆயினும்
அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நெடும் பணைச் சூர்`` என்பதை முதலில் வைத்து, அதன்பின், `அதனது` என்பது வருவித்து அதனை ``சிரம்`` முதலிய வற்றோடு இயைத்து உரைக்க. நெடும் பணைச்சூர் - நெடுக உயர்ந்த, பருத்த, அச்சம் தரும் தெய்வம் ஒன்று. விசும்பு போத உயரி - ஆகாயம் நிறையும்படி உயர்ந்து. அசும்பு - கசிவு; மதநீர். அஃது இரு காதுகள் வழி ஒழுகுதலால், ``இரண்டு அசும்பு பொழியும்`` என்றார். முரணிய- மாறுபடும்படி. ``இரைத்து விழும்`` என்றதனால், கரம், தும்பிக்கை யாயிற்று. செறிக்கும் - அடைக்கும். இடுந்தொறும் - பெயர்த்து வைக்குந்தோறும். அம் சுடர்ப்பிழம்பு தழீஇ - அழகிய தீயினது உருவம் போன்ற தோற்றத்தைப் பொருந்தி. ``அழகிய`` என்றதனால் தோற்றம் மாத்திரையே தீப்போலும் தன்மையுடையதன்றிச் சுடுதல் இன்மை பெறப்பட்டது. `அவற்றொடும் எம் நெஞ்சகத்து ஒடுங்கும்` என முடிக்க. ஓகாரம் வியப்புக் குறிப்பு. இதனால் பிள்ளையாரது பேருருவத் தோற்றம் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 23

சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து
வார்தந் தெழுமதியம் மன்னுமே சீர்தந்த
மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த
கோமதலை வாண்மதியங் கொம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. சீர் தந்த மா மதலை - தந்தையாகிய மலையரையனுக்குப் புகழைத்தந்த பெருமையையுடைய மகள். வான்மதி - மிகுந்த ஞானமே வடிவானவள். அம் கொம்பு - அழகிய பூங்கொம்பு போன்றவள்; உமை. அவள் வயிற்றின்கண் உதித்த கோ மதலை - தலை மகன், விநாயகர் கடவுள். அவன் முடியில் அணிந்த வாள் மதிக்கொம்பு - ஒளி பொருந்திய பிறைக் கீற்று. சூர் தந்த பொற்குவட்டின் சூளிகையின் அயிர்த்து - `அச்தத்தைத் தரும் பொன்மலையினது சிகரத்தின் நெற்றி` என மருண்டு. வார்தந்து எழுவான் மதியம் மானும் - ஊர்தலை மேற் கொண்டு தோன்றிய வானப் பிறையை ஒக்கும். பிள்ளையார் தமது திருமுடியில் அணிந்துள்ள பிறை அம்முடியை வானத்தில் செல்லும் பிறை. `பொன்மலையின் சிகரம்` என மயங்கி வந்து பொருந்தியது போல் உள்ளது என்பதாம். இது தற்குறிப் பேற்றமும், மயக்க அணியும் சேர்ந்து வந்த சேர்வையணியாகும்.
சிற்பி