பட்டினத்து அடிகள் - கோயில் நான்மணிமாலை


பண் :

பாடல் எண் : 1

பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மோலி - மௌலி; கிரீடம்.
புறத்தது - மேலே சென்றுள்ளது.
அடிமுடி தேடிய வரலாற்றில் சிவபெருமானது முடி அயனால் அறியப்படாமை கூறப்படுதலின் சிவபெருமானது மகுடத்தை, ``அயன் அறியா மோலி`` என்றார்.
``புறத்தது`` என்பதன் பின், `ஆயின்` என்பது வருவிக்க.
``நாமே`` என்னும் வினாநிலை ஏகாரம் நாம் நாட்டுவேம் ஆகாமையைக் குறித்து நின்றது.
பா மேவும் ஏத்து - `பா` என்னும் உறுப்புப் பொருந்திய இவ்வாறான செய்யுளே.
``பாட்டு`` எனப் பெயர் பெறும்.
எனவே, துதிகளில் பாட்டாய் அமையும் துதிகளே இறைவனுக்கு மிக்க விருப்பத்தைத் தரும் துதி யாதல் பெறப்பட்டது.
``இடம்`` என்றது ஊரை, ``இடத்தை`` என்பதில் சாரியை நிற்க உருபு தொக்கது, `அந்த இடத்தில் அம்பலத்தே கூத்து உகந்தான்` என்க.
கொற்றம் - வெற்றி.
`குடை அயன் அறியா மோலிப் புறத்த தாயின், அதன் அளவை நாமே புகழ்ந்து நாட்டுவோம்` என வினை முடிக்க.
தில்லையம்பலக் கூத்தப் பெருமானது கொற்றக் குடையின் சிறப்புணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர்
வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர்
ஆவதிற் பைம்பொற்கொன்றைத்
தொடைகொண்ட வார்சடை அம்பலத்
தான்தொண்டர்க் கேவல்செய்து
கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு
வாழ்தல் களிப்புடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எரி - காய்கின்ற, பொன் - அழகு, திகிரிப் படை - சக்கராயுதம்.
இகல்தெறும் - பகைவரை அழிக்கின்ற.
பார்த்திவர் - அரசர்.
பொற்கொன்றை - பொன்போலும் கொன்றை.
தொடை - மாலை.
கடை - தலைவாயில்.
அரசர் வாழ்வாயினும் உலக வாழ்வு கவலைகள் பலவுடையதாயும், ஒன்றும் இல்லாதவராயினும் அடியவர் வாழ்வு கவலையற்ற அமைதி வாழ்வாயும் இருத்தல் பற்றி, `அடியவர் வாழ்வே மகிழ்வைத் தருவது` என்றார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது *
எனத் திருவள்ளுவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம்
கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால்
விரிசடையும் வெண்ணீறும் செவ்வான மென்ன
ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்
உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால்
எளிவந் தினிப்பிறர்பாற் சென்றவர்க்குப் பொய்கொண்
டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வெளியாய்` என ஆக்கம் வருவிக்க.
கண்டறிவர் இல்லா வெளி, அருள் வெளி, ``களி வந்து`` என்பதில் ``வந்து`` என்னும் செய்தென் எச்சம் `வந்தபின்` என்பதன் திரிபு ``விரிசடையும் .
காட்டும் அம்பலம், களிவந்து.
அடியேன் மனம் புகுந்தது என்றால் (அஃது ஒன்றை உரைத்தல் அன்றி, இனிப் பிறர்பால் சென்று எளிவந்து பொய்கொண்டு.
இச்சையுரையோம்`` என இயைத்து முடிக்க.
வரையறையின்மையின் சில சீர்கள் ஓரசை குறைந்து வந்தன அன்றி, ஒற்றளபெடையாகப் பாடம் ஓதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 4

உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்
ஆடும் அம்பல வாணா நீடு

குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்
தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்
வீர வெள்விடைக் கொடியும் போரில்

தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும்பொய்நீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல்
வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேருமால் வரையும்
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று
ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள்

அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்
கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சொல்லுலகம், பொருளுலகம்` என இருவகைப்பட்ட உலகங்களையும் கடந்தவன் இறைவன் என்பார் ``உரையின் வரையும்.
.
கடந்து`` என்றார்.
``தாம்`` என்றது உயிர்களை, நினைத்தல், இங்கு உணர்தல்.
உயிர்கள் தம்மை உணரும் உணர்வு `யான்` என்றும் `எனது` என்றும் இருவகையாக நிகழும்.
இவ்விரு வகை உணர்வு உள்ள பொழுது இறைவனை உணர்வு நிகழாது ஆகலின், ``தம்மை மறந்து நின்னை நினைப்பவர்` என்றார்.
``அவரது உணர்வே செம்மை யுணர்வு`` என்றமையால், `தம்மை நினைந்து இறைவனை மறக்கும் உணர்வு கோட்டம் உடைய உணர்வு` என்பதும், `அவர் மனத்தில் இறைவன் நிற்றல் இல்லை` என்பதும் போந்தன.
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும் என்
சிந்தையுள்ளும்
உறைவான் *
என்றவாறே, ``செம்மை மனத்தினும், தில்லை மன்றினும் - நடம் ஆடும் அம்பலவாண`` - என்றார்.
தாது - மகரந்தம்.
தார் - மாலை.
தழங்கும்- ஒலிக்கின்ற.
தமருகம் - உடுக்கை.
சிவபெருமானது ஆணை, `விரையாக்கலி` எனப்படும்.
`இரு ஆயிரம் வகுத்த மருப்பு` என்க.
கயிலையில் இருக்கும் சிவபெருமானது யானை `அயிராவணம்` என்னும் பெயரையும், இரண்டாயிரம் தந்தங்களையும் வெள்ளை நிறத்தையும் உடையது.
வைதிகப் புரவி - வேதமாகிய குதிரை.
இவைகளே திரிபுரத்தேர் மேல் சென்ற காலத்தில் அத்தேரையிழுத்தன.
தார் - மாலை.
மாலை, கொடி, பறை, யாறு, ஆணை, யானை, குதிரை, நாடு, மலை, ஊர் - இப்பத்தும் ``தசாங்கம்`` எனப் பெயர்பெறும்.
தலைவன் ஒருவனைப் புகழ்வோர் அவனுக்கு உரிய இப்பத்தினையும் புகழ்தல் மரபு.
இதனைத் திருவாசகத்துட் காண்க.
`அமரருக்கு முன்னே புகுந்து` என்க.
``நறுமுறு தேவர் கணங்களெல்லாம் நம்மிற் பின்பல்லது எடுக்க லொட்டோம்`` என்னும் திருவாசகத்தைக் காண்க.
`அறுகு எடுத்தல்` என்பது மங்கலம் கொள்வார்க்கு அறுகம்புல் கொண்டு செய்யப்படும் ஒரு சடங்கு.
அஃது இறைவழிபாட்டின் பகுதியாய் வழங்கும்.
அருக்கியம் முதலியன கொடுத்தலும் இவ்வாறு அமையலாம்.
மேற்குறித்த அத்திருவாசகத்தில், ``அறுகெடுப்பார் அயனும், அரியும் - அன்றி மற்று இந்திரனோடு அமரர்`` என வந்தமை காண்க.
தமர் - சுற்றத்தார்; அடியவர்.
மங்கல வினை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தல், வரிசையளித்தல் முதலியன செய்தோரது பெயர்களை ஏட்டில் முறையாக எழுதிக்கொண்டு பின்பு அவர்கட்கு மங்கலம் பெற்றோர் சிறப்புச் செய்தல் வழக்கம்.
அம்முறை பற்றி, `யான், இப்பிறப்பில் இன்று உள்ளது போல அன்று இருந்திலேன் ஆயினும், ஏதோ ஒரு வகைப் பிறப்பில் அன்று நின் திருமண நிகழ்ச்சியில் இருந்துதான் இருப்பேன்; ஆகையால், என்றும் என்னை எவ்வகையிலும் அறிபவனாகிய நீ நின் திருமண நிகழ்ச்சியில் இருந்துதான் இருப்பேன்; ஆகையால், என்றும் என்னை எவ்வகையிலும் அறிபவ னாகிய நீ நின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமர் பெயர் களை எழுதிய வரி நெடும் புத்தகத்து என் பெயரையும் எழுதிக் கொள்ளல் வேண்டும்.
ஏனெனில், நினது அருளாணை தரப்படுமாயின் சிறிய அணுவும் பெரிய மலையாகிவிடும்.
தாழ்ந்த கொசுகும் உயர்ந்த கருடன் ஆகிவிடும் ஆதலின்` என்றார்.
``அணுவும் மலையாம்; கொசுகும் கருடனாம்`` என்றதனால், `அன்று நான் இழிந்த பிறப்பிலே இருந்தேனாயினும் உனது அருள்கூடின் உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாகியிருப்பேனன்றோ` என வினவியவாறு.
``என்`` என்றது, `என் பெயர்` என்னும் பொருட்டு ஆதலின் ஆகுபெயர்.
கானில்வாய்- காட்டில் பொருந்திய.
நுளம்பு - ஒருவகைக் கொசுகு.

பண் :

பாடல் எண் : 5

ஆதரித்த மாலும் அறிந்திலனென் றஃதறிந்தே
காதலித்த நாயேற்குங் காட்டுமே போதகத்தோற்
கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆதரித்த மால் - அன்பு செய்து வழிபட்ட திருமால்.
அவன் அறியாது போயது, தன்முனைப்பால் காண முயன்றதனாலாம்.
`தனையறிந்தவன் ஆதலின், அன்பு மட்டுமே செய்து நிற்கின்ற நாயேற்குத் தன் அடியைக் காட்டியே தீர்வான்` என்றபடி.
இதனால், `எத்தகையோரும் தன் முனைப்புக் கொண்டவழிச் சிவனைக் காண மாட்டார்` என்பது போந்தது.
போதகம் - யானை.
`அம்பலத்தான், அஃது அறிந்து தன் செம்பொன் அடியை நாயேற்குக் காட்டும்` என இயைப்பினும் ஆம்.
இவ்வாறு இயைப்பின் யான் தன்முனைப்புக் கொண்டிலேன் என்பது குறிப்பாற் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 6

அடியொன்று பாதலம் ஏழிற்கும்
அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம்
கடந்தது முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோளெட்டுத் திக்கின்
புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத்
தான்தன் திருநடமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அடி ஒன்று`` என்பதில் ``ஒன்று`` என்றது சாதி பற்றி.
செடி ஒன்று - புதர் பொருந்திய தில்லை என்க.
``நடம்`` என்பது ஆகுபெயராய் அதன் இயல்பை உணர்த்திற்று.
இதன்பின் `இது` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
நடனத்தின் பெருமையை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 7

நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட
நாயகரே நான்மறையோர் தங்க ளோடும்
திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட
செல்வரே உமதருமை தேரா விட்டீர்
இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்
என்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று
தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்
தஞ்சுண்டா யங்கருநீர் நஞ்சுண்டீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, சிவபெருமான் நஞ்சுண்ட கருணையைப் பழிப்பதுபோலப் புகழ்ந்தது, உமது அருமையைத் தேராது (ஆராயாது) விட்டீர்.
`உமக்குப் பின் உம்மோடு ஒப்பார் பிறர் கிடைப்பரோ` என்பதை நீர் எண்ணிப் பார்க்கவில்லை - என்றபடி.
நல்ல வேளையாக உமையவள் அந்த நஞ்சினை உமது கண்டத்திலே நிறுத்தித் தடுத்திராவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? என்னைப் போல்வார் அதனை (கண்டத்தில் தடுத்து நிறுத்துதலை)ச் செய்தல் இயல்வதன்று என்க.
தஞ்சம், அம்முக் குறைந்து, ``தஞ்சு`` என நின்றது.
தஞ்சம் - அடைக்கலம் புகுதல்.
உண்ட - அதனை உடைத்தாய் இருந்த.
ஆயம் - கூட்டம்.
கருதி - `பிழைக்க வேண்டும்` என எண்ணி.
``உண்டீரே`` என்னும் தேற்றே காரம் வெளிப்படைப் பொருளில் பழித் தலையும்.
குறிப்புப் பொருளில் புகழ்தலையும் குறிக்கும்.
தான்புக்கு நட்டம் பயன்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ
என்றார் ஆகலின், `நடம் ஆடி ஏழ் உலகும் உய்யக் கொண்ட நாயகரே`` என்றார்.

பண் :

பாடல் எண் : 8

நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க நெல்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கி யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி

மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்
கருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனன் இருந்த போதும் பெயர்த்துநின்று
எண்டோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டின் உண்மைப் பாடம் விளங்கவில்லை.
மக்கள் யாவரும் கருவில் தோன்றியது முதலே கூற்றுவன் வாயில் இருப்பவர் ஆகின்றனர்.
அதை நினையாமல் அவர்கள் வயிறு வளர்த்தற்குப் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.
இது நஞ்சுடைய நாகத்தின் வாயில் தனது வால் அகப்படப்பட்ட நீர்ப்பாம்பு வயல் நீரில் வாழ்கின்ற தவளையைப் பிடித்து விழுங்க முயல்வதை ஒக்கும்.
அடி 10-ல் ``இருந்தும் போலும்`` எனக் காணப்படுவது பாடம் அன்று.
`இருந்த போதும்` என்பது பாடமாயின், ஈற்றடியில் ``பணிதலோ விலனே`` எனப் பாடம் கொண்டு, `இவைகளை யான் ஒழிந்திலேன்` எனவும், ``இருந்தேன் போலும்`` என்பது பாடமாயின் `பாடுதல் முதலியவற்றைச் செய்திலேனாய் இருந்தேன்` எனவும் பொருள் கொள்ளுதல் வேண்டும் போலும் என்பது அசையாகும்.
முருக்க - அழிக்க.
நெல் - நெற்பயிர்.
மறலி - கூற்றுவன்.
`என்னை மறவா மறலி` என்க.
அயில் தலை அன்ன எயிறு - வேலின் முனை போன்ற கூர்மையையுடைய பற்கள்.
அருள் - உயிர்களின் மேல் இரக்கம்.
``நனி`` என்பது இன்மையைச் சிறப்பித்தது.
அயர்த்தல்- மறத்தல்.

பண் :

பாடல் எண் : 9

இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்
கலவி கடைக்கணித்தும் காணேன் இலகுமொளி
ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்
நாடகங்கண் டன்பான நான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அவர்தம் கலவி கடைக் கணித்தும் காணேன்`` என்பதை இறுதிக்கண் கூட்டியுரைக்க.
இலவு இதழ் - இலவ மரத்தின் காய்போலும் சிவந்த இதழ்.
வாய், ஏழன் உருபு.
வீழ்வார் - விருப்பம் வைப்பார்.
`சிலர் வீழ்வார்; சிலர் இகழ்வார்; நான் அதைக் கடைக் கண்ணாலும் பார்க்க மாட்டேன்.
எனவே, `விரும்புவதோ, இகழ்வதோ - எதுவும் இலேன்` என்பதாம்.
இவ்வாறு இருத்தலே `புறக்கணித்தல்` எனப்படும்.
அவர் - அத்தகைய இதழினையுடைய மகளிர்.
ஆடகம் - பொன்.
`நான், கலவி கடைக்கணித்தும் காணேன்` என வினை முடிக்க.
இதனால் திருநடனத்தின் ஆனந்தத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

நானே பிறந்த பயன்படைத்
தேன் அயன் நாரணனெம்
கோனே எனத்தில்லை அம்பலத்
தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென்
தீமையெல் லாமறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத்
தேவந்து சந்திக்கவே.
1

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நானே பிறந்த பயன் படைத்தேன்`` என்பதை இறுதிக்கண் கூட்டியுரைக்க.
`எம் கோனே` என்று சொல்லித் துதிப்பவர் அயனும்,மாலும்.
என - என்று துதிக்கும்படி.
``தேன்`` என்றது சிவ பெருமானை.
``தேனே`` என்னும் பிரிநிலை ஏகாரம், `யான் வேண்டாமல் இருக்கவும் தானாகவே திருவுள்ளம் செய்தான்` எனப் பொருள் தந்தது.
`தானே திருவுள்ளம் செய்து, தானே புகுந்தான்` என்க.

பண் :

பாடல் எண் : 11

சந்து புனைய வெதும்பி மலரணை
தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர்
தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை
பண்டை நிறமும் இழந்து நிரையொடு
பண்பு தவிர அனங்கன் அவனொடு
நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு
நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன்
நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ டணிந்து திலைநகர்
அம்பொன் அணியும் அரங்கின் நடம்நவில்
அங்கண் அரசை அடைந்து தொழுதிவள்
அன்று முதல் எதிர்இன்று வரையுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நந்தி முழவு தழங்க`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
தழங்க - ஒலிக்க.
`நஞ்சு விழிய முரன்று` என இயைத்து.
``முரன்று`` என்பதையும் ஏனையவற்றோடு இயைய, `முரல` எனத் திரிக்க.
முரல - மூச்சொலி செய்ய.
நரல - ஒலம் இட.
`முழுவு தழங்க, நங்கை மகிழ, அரவுகள் நஞ்சு பிழிய.
முரல, முயலகன் நைந்து நரல நடம் நவில் அரசு` என்க.
பிழிய - வெளிப்பட.
எதிர் இன்று - `அன்று` எனக் குறிக்கப்பட்ட அந்த நாளுக்கு எதிராய் வந்த இந்தநாள்.
`இவள் வெதும்பி, வெருவி, கழல, மெலிந்து, மறந்து, இழந்து, தவிர, பெருக நிற்றலால் விளைந்தன இனையன` என இயைத்து வினை முடிக்க.
சந்து புனைய - (உடல் வெப்பத்தைத் தணித்தற் பொருட்டு யாம் - தோழியர்) சந்தனத்தைப் பூச `அதனால் மேலும் வெதும்பி` என்க.
மலர் அணை முள்போலத் தோன்றுதலால் வெருவினார்.
கலை - உடை.
சங்கு - சங்க வளையல்.
அயலவர் சொல், அலர்.
நலிய - வருத்த, ``கிளியொடு`` என்னும் ஒடு எண் ஒடு.
நிறை - நெஞ்சுரம்.
பண்பு பெண் தன்மையாகிய நாணம், அனங்கன் - மன்மதன்.
அவனொடு நண்பு பெருகுதலாவது, `ஒன்று என்மேல் இன்சொற் சொல்லி வேண்டுதல், ``பெருக`` என்னும் வினையெச்சம் காரணப் பொருட்டாகலின், அதற்கு, `பெருக நிற்றலால்` என உரைத்தல் பொருந்துவதாயிற்று.
`இனையனவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப்பட்டது.
அதனால் `இவை விளைந்ததைத் தவிரக் கண்ட பயன் ஏதும் இல்லை` என்பது போந்தது.
இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி பட்டாங்குச் சொல்லி அறத்தொடு நின்றது.
பகிரதி - கங்கை.
`தில்லை` என்பது சந்தம் நோக்கி இடைக் குறைந்து நின்றது.
`தொழுத` என்னும் பெயரெச்சத்தின் ஈறு தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 12

வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து
கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித்
திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்
கமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்
கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம்
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅ
தஞ்சேல் என்று செஞ்சே லாகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ
டுலகு குழைத் தொரு நாள் உண்டதும்

உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்

தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய

பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி
ஏவருங் காண ஆடுதி அதுவெனக்

கதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாதும் ஒழிந்த தெந்தை வளையாது
கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது
தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப
வான்பொய் அச்சம் மாயா ஆசை

மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்கு கழற்ற
ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும்
செய்ய வாயும் மையமர் கண்டமும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்தசெங்கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும்

வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்
ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது
பெரியதிற் பெரியை என்றும் அன்றே
சிறியதிற் சிறியை என்றும் அன்றே
நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல்

இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நம்ப, மன்று கிழவோனே`` என்பவற்றை முதற்கண் கூட்டுக.
``கடவுள்`` என்பதும் அவற்றை அடுத்து நிற்கும் விளி.
தட ஆகம் - விசாலித்த உடம்பு.
`ஆகத்தில்` என உருபு விரிக்க.
மிடல் - வலிமை.
ஆண்ட - பயன்படுத்திய.
தண்டா - நீங்காத.
``கடையுகஞ் சென்ற`` என்பது முதல் ``குறைவின்றே`` என்பது முடிய உள்ள பகுதி திருமாலின் சிறப்புக் கூறியது.
``கடையுகம்`` என்பதை `யுகக் கடை` என மாற்றிக் கொள்க.
சேல் - மீன்.
``செஞ்சேல்`` என்பதில் செம்மை செப்பத்தைக் குறித்தது.
``ஆகியபின்`` என்பது `ஆகி` எனத் திரிந்து நின்றது.
`ஏழும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று.
ஏகாரம் தேற்றம்.
``பட்டது`` என்னும் ஒருமை அத்தொழில் மேல் நின்றது.
`படுத்தது` என்பது விகுதிகுன்றி, ``பட்டது`` என நின்றது.
ஓர் உக முடிவில் `சோமுகன்` என்றும் அசுரன் வேதத்தைக் கவர்ந்து கொண்டு கடலுள் ஒளிந்து கொள்ள திருமால் அவனை அழித்தற்குக் கொண்ட அவதாரமாகிய மச்சத்தின் வாய்க்குள் ஏழு கடல்களும் அடங்கி விட்டன` என அதன் பெருமை கூறியவாறு.
இதன் பின் உலகம் உண்டதும், மூவுலகையும் ஈரடியாலே அளந்ததும் ஆகிய திருமால் பெருமையையே கூறினார்.
`ஒருநாள் உண்டதும் பௌவத்தோடு உலகு குழைத்து` என்க.
`இத்தகைய பெருமைகளை உடையனாயினும் பிறத்தல், இறத்தல் முதலிய குறைகளையும் அவன் உடையனாயினும் அவற்றைப் பலர் அறியார்` என்றற்கு ``உரைப்போர்க்கல்லது அவன் குறைவு இன்றே`` என்றார்.
உரைப்போர் - உணர்ந்து சொல்வோர்.
கேழல் - பன்றி.
கிளைத்தல் - தோண்டுதல்.
நிகிலம், அகிலம் - எஞ்சுதல் இன்மை.
சரம் - இயங்கியற் பொருள, அசரம் - நிலையியற் பொருள்,பொன்னிறக் கடவுள் - இரணியகருப்பன்; பிரம தேவன்; இங்குக் கூறிய பெருமைகளை யெல்லாம் உடைய பெரிய தேவர்களாகிய மாலும், அயனும் வேற்றுருக் கொண்டு ஊழி ஊழி தேடியும் அறியப்படாத, எல்லை காண்பரிய அடியும், முடியும் தில்லையில் ஒரு சிறிய மன்றினுள் ஆடுதல் எனக்கு அதிசயத்தை விளைக்கின்றது.
ஆயினும் அதிசயம் விளைக்கவும் இல்லை.
ஏனெனில், அம்மன்றினும் மிகச் சிறியதும், ஆயினும் அசுத்தப் பொருள்களை மிக உடையதும், அதனோடும் கூட, ஒருவர் அல்லர்; ஐவர் கள்வரால், ஒருவன் குயவன் சுழற்றுகின்ற அச்சக்கரத்தின் வேகம்போல எண்மடங்கு வேகத்துடன் சுழலும்படி சுழல்வதுமாகிய என் நெஞ்சினுள்ளே நுழைந்து உனது உறுப்புக்களெல்லாம் நன்கு விளங்க ஆடுகின்றாய்; (இது அதிசயம் விளையாமைக்குக் காரணம், இரண்டும் மிக மிக அதிசயமேயாகலின் அதிசயம் விளையாமற்போகவும் இல்லை.
) இதனாலன்றோ உன்னைப் ``பெரியதினும் பெரியை`` என்றும், ``சிறியதினும் சிறியை`` என்றும் வேதங்களும் சொல்கின்றன.
பெரியவர்களும் சொல்கின்றார்கள்.
``அணோரணீயாந்; மஹதோ மஹீயாந்`` என்பது கடோபநிடதம்.
வான் - பெரிய.
மாயா - கெடாத.
மிடைந்தன - நெருங்கின; இது முற்றெச்சமாய் நின்றது.
ஐவர் கள்வர்; ஐம்புல ஆசை.
மண் மகன் - குயவன்.
திகிரி - சக்கரம், தடுத்த - `அஞ்சற்க` என அபயம் தந்தகை.

பண் :

பாடல் எண் : 13

கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்
துழவரும்போய் ஒயுமா கண்டோம் மொழிதெரிய
வாயினால் இப்போதே மன்றில் நடமாடும்
நாயனார் என்றுரைப்போம் நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே` என்பதை முதற்கண் வருவித்து, ``காமத்து உழவரும்` என்பதை அதன்பின்னும், ``நாம்`` என்பதை, ``மொழி தெரிய`` என்பதன்பின்னும் கூட்டியுரைக்க.
``கண்டோம்`` என்பதன் பின்னும், `ஆதலால்` என்பது வருவிக்க.
உழவர் -முயல்பவர்.
கிழவர்- முதியோர், நோய் மூப்பு, உம்மைத் தொகை.
அதன்பின் நான்காவது விரிக்க.
கீழ்ப் படுத்தலைக் கூறுதற்பொருட்டு ``மூப்பு`` என மீண்டு மநுவதித்தார்.
மொழி தெரிய - நமது சொல் மற்றவர்களுக்கும் விளங்கும்படி.
நாயனார் - தலைவர்.
`எப்பொழுதும் உரைப்போம்` என்றபடி.
அவ்வாறு உரையாதோர் ``வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவர்`` * நாம் அவ்வாறின்றி `மன்றில் நடம் ஆடும் நாயனார்` என்று எப்பொழுதும் சொல்லியிருப்போமானால் இவ்வுடம்பு நீங்கியபின் அவன் திருவடியை அடைவோம் - என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 14

நாமத்தி னால்என்தன் நாத்திருத்
தேன்நறை மாமலர்சேர்
தாமத்தி னாலுன் சரண்பணி
யேன்சார்வ தென்கொடுநான்
வாமத்தி லேயொரு மானைத்
தரித்தொரு மானைவைத்தாய்
சேமத்தி னாலுன் திருத்தில்லை
சேர்வதோர் செந்நெறியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க.
``மான்`` இரண்டில் முன்னது மான் கன்று; பின்னது பெண்.
வாமம் - இடப்பக்கம் ``வைத்தாய்`` என்பது விளி, `உன்றன் நாமத்தினால்` என்க.
நாமம் - பெயர்.
அஃது அஞ்செழுத்து மந்திரம், அதனைப் பயில்கின்ற நா குற்றத்தினின்றும் நீங்கும் ஆகலின், `அவ்வாறு செய்து அதனை திருத்தாமல் இருக்கின்றேன்` என்றார்.
நறை - தேன்.
தாமம் - மாலை.
சரண் - திருவடி.
`உன்னைச் சார்வது` என்க.
சார்வது - அடைவது, என்கொடு - எதை வழியாகக் கொண்டு.
என்றது, `எதுவும் வழியாதற்கில்லை` என்றபடி.
`கொண்டு` என்பது, ``கொடு`` என மருவிற்று.
சேமம் - நம்மை `ஒன்றும் செய்யாத எனக்கு உன் திருத் தில்லையை அடைவதாகிய ஒரு வழிதான் உள்ளது` என்க.
``நெறியே`` என்னும் ஏகாரம் பிரிநிலை.
அதன்பின் `உளது` என்பது எஞ்சிநின்றது.

பண் :

பாடல் எண் : 15

நெறிதரு குழலை அறலென்பர்கள்
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ திரிதிவ் விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர்
மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர்
மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு திலையென்கிலர்
திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர்
சிலர்நர குறுவர் அறிவின்றியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பின் வருவன பலவற்றோடும் இயையுமாறு.
``குழலை`` என்பதில் `ஐ சாரியை` என வைத்து.
`குழல் அறல்` என்பார்கள் என அங்ஙனம் கூறுவார் கூற்றாக்கியே உரைக்க.
குழல் - கூந்தல்.
அறல் - நீரோடையிற் காணப்படும் கருநுண் மணல்.
நெறி - நெறிப்பு, இங்கு உரைத்தது போலவே ``நுதல்`` முதலியன எழுவாயாக வும், மதியம் முதலியன பயனிலையாகவும் அமைந்து உரைப்பவர் கூற்றாகி வருதல் காண்க.
நிழல் - ஒளி ``மதி`` என்றது பிறையை.
`இனைய ஆன` என ஆக்கம் வருவிக்க.
`மடமங்கையர், அவர் கூறுமாறே அழகியராதல் அமையும்; `ஆயினும், அவர் என் செய உளர்! என்க.
`அவர்களால் ஆவது ஒன்றில்லை; அதனால் அவர் களது அழகைச் சொல்லிக்கொண்டிருப்பதால் பயனில்லை` என்ப தாம்.
மடமங்கையரை மேற்கூறியவாறு பலபடப் புகழ்கின்ற சிலர், தில்லைக் கூத்தப் பெருமான் தொடர்பாக ஒன்றையேனும் சொல்கின் றிலர்.
மறி - மான் கன்று.
தரன் - தரித்தவன்.
புயன் - தோள்களை யுடையவன்.
அவர் நரகிற்கு ஏதுவான செயல்களையே செய்து போவர் ஆதலின், `நரகு உறுதலைத் தவிரமாட்டார்` எனவும், `அதற்குக் காரணம் அறிவின்மையே` எனவும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 16

அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி வினையெனும்
தொல்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலனெனும் கோள்மீன் அலமந்து தொடர
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்
துயர்த்திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா
உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்
பையர வணிந்த தெய்வ நாயக
தொல்லெயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பல வாண நின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்துதமா செய்யே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அலங்கல் மதியுடன் .
அம்பலவாண`` என்னும் தொடரை முதற்கண் வைத்து உரைக்க.
இடும்பை - துன்பம்.
இனையன - இவைபோல்வன.
எனவே, இங்குக் குறிக்கப்படுகின்ற மரக்கல வாணிபம் நஞ்சும், கள்ளும், கொலைக் கருவிகளும் போன்ற தீப்பொருள் வாணிபமாகின்றதேயன்றி, நற்பொருள் வாணிபமாக வில்லை.
மீகாமன் - மாலுமி.
உய்ப்ப - செலுத்த - கரு - உடம்பு தோன்றுதற்கு முதலாய் உள்ள வித்தும், நிலமும்.
அவைதாம் பலவாகலின், பல துறைமுகப்பட்டினங்களாக உருவகம் செய்யப் பட்டன.
- `அந்தத்` துறைகள் பலவற்றில் ஒருதுறைப் பிறப்பாகிய கடலில் புகுந்து` என்க.
நீத்தம் - நீர்.
புலன் - ஐம்புல ஆசை.
கோள்மீன்- முதலை.
அலமந்து - பல திசையாகச் சூழ்ந்து சூழ்ந்து.
அலைக்கும் - மனத்தைக் கவற்றுகின்ற.
துயர்த்திரை - துன்பமாகிய அலைகளின் உவட்டு - மோதல்கள்.
பெயர்ப்பு இடம் அயர்த்து - பெயர்ந்து அடைய வேண்டிய இடத்தை மறந்து.
அடைய வேண்டிய இடம் வீடு.
கல் - பாறை `கல்லில் வீழப்பண்ணி` என்க.
நிறை - மனம் ஒருநெறியில் நிற்றல்.
கூம்பு - பாய்கள் கட்டப்படும் தூண்.
கீறி - கிழிக்கப்பட்டு.
`கீறிக் கவிழா முன்னம்` என இயைக்க.
மாயப் பெயர்ப் படுகாயம் - பொய்யாய் இருந்தும், `மெய்` என வஞ்சனையான பெயரோடு பொருந்திய உடம்பு.
சிறைக் கலம் - உண்மையில் சிறையாய், தோற்றத்தில் கரைசேர்ப்பதுபோலக் காணப்படுகின்ற மரக்கலம்.
கலங்குபு - நிலைகலங்கி.
அலங்கல் - கொன்றை மலை.
வம்பு அலர் - நறுமணத்துடன் மலர்கின்ற தார் - கயிறு.
நடுக்கடலில் கவிழும் நிலையில் உள்ள மரக்கலங்களைத் தரையில் நாட்டப்பட்டுள்ள தூணில் பிணிக்கப்பட்டுள்ள கயிற்றைக் கொண்டுபோய்க் கட்டி யீர்த்துக் கரைக்குக் கொணர்வது அக்கால வழக்கம்.
இப்பாடலில் அமைந்துள்ள முற்றுருவகத்தின் சிறப்பு அறிந்து மகிழத்தக்கது.
`இவ் வுடம்பு வீழ்வதற்குள் உயிர் உன் திருவடியை அணைதலாகிய சீவன் முத்தி நிலையைத் தந்தருளல் வேண்டும்` என்பதாம்.
`அங்ஙனம் அடையாதே உடம்பு வீழுமாயின், அடுத்த பிறப்பில் செல்ல வேண்டி வரும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 17

செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நற்றாய்க்கு மகளாயினாளை அவளோடு தனக்குள்ள கேண்மை பற்றி, ``என் தையல்`` என்றார்.
சாலும் - பொருந்தும்.
இதன்பின் `ஏனெனில்` என்பது வருவிக்க.
ஐயன் - சிற்றம்பலத்தான்.
சேயே - தொலைவில்தானே.
ஏகாரம் பிரிநிலை.
மகளைப் பெற்ற நற்றாய்க்குத் தோழியே மகளுக்குச் செவிலித்தாய் ஆதலாலும், தோழி தலைவியை, `அன்னாய்` என்றல் வழக்கு ஆதலாலும் ``தாயே`` என்றாள், ``நமது கையில் உள்ள சங்கு சிந்தாத மாத்திரமே`` என்றதனால், `சிந்துநிலையை அடைந்து விட்டன` என்றதாம்.
`உலார்ப் புறத்துத் தலைவனைக் காதலித்தாராகக் கூறப்படும் மகளிர் பொதுமகளிரே யல்லது, குல மகளிரல்லர் என்பதை.
``வழக்கொடு சிவணிய வகைமையான`` என்னும் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையான் உணர்க.
அங்ஙனம் ஆதலின் இங்குச் செவிலி நற்றாய்க்கு இவ்வாறு கூற அமைவதாயிற்று.
இனி, இறைவன் மேலவாய் வரும் அகத்துறைப் பாடலின் உள்ளுறைப் பொருள் தலைவியராவார் பக்குவான்மாக்களும், பிறர் அபக்குவான்மாக்களும், பாசங்களுமே யாதலாலும் அவ்வுள்ளுறை நோக்கில் இஃது அமைவுடையதேயாம்.
இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு ஐயுற்று வினவிய நற்றாய்க்குச் செவிலி அமைவு கூறும் முகத்தால் அறத்தொடு நின்றது.
`முதியராகிய நாமே அந்நிலையை அடைவோம் என்றால், இளையளாகிய நம் மகள் இந்நிலையை அடைந்தது வெகுளத் தக்கதோ` என்றபடி.

பண் :

பாடல் எண் : 18

சங்கிடத் தானிடத் தான்தன
தாகம் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள் தில்லை அம்பலக்
கூத்தற் கவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென்
றாயெங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை
யேலுன் பசப்பொழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சங்கு இடத்தான் - `பாஞ்சசன்னியம்` என்னும் சங்கினை இடக் கையிலே உடையவன்; திருமால்.
அவனை இடப் பாகத்திலே உடையவன் சிவபெருமான்; அம்பலவாணன்.
ஆகம் - திருமேனி, திருமேனியில் ஒருத்தி (உமை) அவனுக்குச் சமைந்து அந்த இடப்பாகத்தையே பற்றியிருக்கின்றார்.
இந்நிலையில் அவளுக்கு நீ தங்கையாகும்படி.
`அவ்வம்பல வாணணுடைய முடிமேல் உள்ள கொன்றைமலர் மாலை எனக்கு வேண்டும்` என்கின்றாய்.
அதனை நீ விடாப்பிடியாய் விரும்புவ தாயின், மால் உமை என்னும் அவ் இருவரைப் போல நீயும் அந்த இடப்பாகத்தை உனக்கு உரியதாகப் பற்றிக் கொள்ளும் வல்லமை யிருக்கு மாயின் விரும்பு; அஃது இல்லை யேல், உன் விருப்பத்தை விட்டொழி.
``பசப்பு ஒழி`` என்றது, `விருப்பத்தை ஒழி` என்றதே யாம்.
`திருமாலையும், உமையையும் தனது சத்திகளாக உடையவன் சிவ பெருமான்` என்பதும், `ஏனையோர்க்கு அந்நிலை கூடா` என்பதும் இங்கு மறைமுகமாக விளக்கப்பட்டது.
கொங்கு இடு அத்தார் - தேனைச் சொரிகின்ற அந்த மாலை.
``எங்கை`` என்பதன் பின் (என) என்று ஒரு சொல் வருவித்து, `அவள் உன்னை - என் தங்கை- என்று சொல்லும் படி` என உரைக்க.
இது, தன்னைத் தூது விடக் கருதிக் குறிப்பாற் சில கூறிய கைக்கிளைத் தலைவியைத் தோழி அருமை கூறி ஆற்றுவித்தது.
``கொன்றை`` என்பதன் பின் `வேண்டும்` என்பது எஞ்சி நின்றது.
``வல்லையேல்`` என்பதன்பின், `வேண்டு` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 19

ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில்
ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள்
விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த
வில்லி தில்லைநகர் போலியார்
சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை
தொடக்க நின்றவர் நடக்கநொந்
தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்
சிந்தை யாயொழிவ தல்லவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு மேற் பலவிடத்தும் வந்தன போலப் பாடாண் கைக்கிளையாகாது, ``சொல்லெதிர் பெறான் சொல்லியின் புறல்`` * என்னும் ஆண்பாற் கைக்கிளையாய அகப்பாட்டு.
இதிற் சிவ பெருமான் பாட்டுடைத் தலைவன் மட்டுமே.
கிளவித் தலைவன் வேறு கொள்ளப்பட்டான்.
``எங்கள் உறவு`` என்றது, தலைவியது கருத்து வேறானமைக்குக் காரணத்தை ஆராய்ந்தது.
வென்றி செய்த - வெற்றி படைத்த.
தில்லை நகர் போலியார் - தில்லைத் தலத்தைப் போல அருமையுடையவர்; தலைவி.
சுழிந்த - நீர்ச் சுழி போன்ற.
தொடக்க நின்று - பிணிக்கநின்று.
அழிந்த சிந்தை - கெட்டே போன மனம்.
இன்னும் வந்ததாகிலும் - ஒருகால் உயிர்த் தெழுந்து திரும்பிவந்தது என்றாலும்; அஃது ஒன்றாயிராது பலவாய்ச் சிதறுவதாம்.
`ஆகவே இனி உய்வது அரிது` என்பது குறிப்பெச்சம்.
`அழுந்தி, நின்று, நொந்து, அழிந்த சிந்தை` என்க.
``ஒழிவது`` என்பதில் ஒழி, துணிவுப் பொருண்மை விகுதி.
அல்ல என்பது ஒருமைப் பன்மை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 20

அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக்
கைத்தேர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும்
அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாள்உழந் தோடியும் வாளுழந் துண்டும்

அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்
பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும்
கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பில் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த
பாதப் போதும் பாய்புலிப் பட்டும்
மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்
சேயுயர் அகலத் தாயிரங் குடுமி

மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்
அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி ஆங்

குள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்
உறுதற் கரியதும் உண்டோ
பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அல்லல் வாழ்க்கை, உடல் ஓம்பும் வாழ்க்கை.
வல்லிதின் - திறமையாக.
செலுத்துதற்கு - நடத்துதற் பொருட்டு மேற்கொள்ளப்படும் பலவகையான தொழில்கள் இங்குக் குறிக்கப் பட்டன.
உழந்து.
கார் - மழை.
கிளை உடன் தவிர - சுற்றத்தார் பலரும் இல்லத்திலே இருந்துவிடத் தான் மட்டும்.
`பதி` என வழங்கி, `எந்த ஊர் நல்ல ஊர்` என ஆராய்ந்து சென்று.
அருளாவயவர் - இரக்கம் காட்டாத படைவீரர்.
அம்பிடை நடத்தல் போர்க்களத்து உலவுதல்.
பவ்வம் - கடல்.
எந்திரம் - மரக்கலம்.
கடாஅய் - செலுத்தி.
குன்று - நீருள் நின்று மரக்கலத்தை உடைக்கும் மலைகள்.
சோற்றுக் கடன் - படைவீரர் தாம் போர் இல்லாது உண்டு இருக்கும் கடன்.
இது போர் வந்த காலத்தில் போர்க்களம் புகுந்து வஞ்சியாது பொருது வெல்லுதல், அல்லது உயிர்கொடுத்தலால் தீரும்.
தாள் உழந்து ஓடி - கால் கடுக்க ஓடித் தூது உரைத்தல்.
வாள் உழந்து - வாட்படை பயிற்றுவித்து.
அறியா .
தெருட்டி - கல்வி கற்பித்து புனைதல் - கவி யாத்தல்.
கற்றன கழறி - தான் அறிந்தவற்றைப் பலரும் அறிய அவைக்களத்து விரித் துரைத்து.
பாச நெடுந்தொடர் (சங்கிலி) பூட்டி ஈர்ப்பவர் ஐவர் - ஐம்புலக் குறும்பர்.
ஆங்கு, உவம உருபுகள்.
அவை, `எல்லாம் வினை களின் பயன்` என்பது பற்றி வந்தன.
கொப்புள் - நீர்க் குமிழி.
ஒப் பின்மை, கணத்தில் தோன்றி கணத்தில் மறைதலில் பிற பொருள்கள் யாவும் ஒப்பிலவாதல் பற்றி என்பது வகை, அல்லது சாதியாகலின் விரி அளவில்லனவாம்.
கலக்கம் - வேறுபாடு.
``மயங்கியும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
`மயங்கினாலும் கண்ணிடைப் பொறித்தும், மனத்திடை அழுத்தியும், (வாக்கிடை) உரைக்க உறுதவம் (யான்) செய்தனன்.
தான் - இந்நிலைமை, நான்முகன் பதத்தினும் மேல் நிகழ் பதமாகும் (இந்தப்) பெறுதற்கரியதோர் பேறு பெற்றேற்கு உறுதற் கரியதும் உண்டோ` என முடிக்க.
``அரியதும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.
``நெய் எரி.
வேதியர்`` - `கற்று ஆங்கு எரி ஓம்பிக் கலியைவாராமே செற்ற` தில்லைவாழந்தணர்.
புலி - புலித்தோல்; ஆகுபெயர்.
யாத்து அசைத்த - கச்சாக இறுக்கிக் கட்டிய.
ஆயிரங் குடுமிப் பேராரம், ஆதிசேடனாகிய பாம்பு.
உறுதவம் - மிக்க தவம்.

பண் :

பாடல் எண் : 21

பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்றோட ஓடித் தொழாநிற்கும் ஒற்றைக்கைம்
மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்
கோமறுகிற் பேதை குழாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெற்றோர் - நற்றாயர்.
பிழைத்து - அவர்களுக்குத் தப்பி.
சுற்று - சுற்றிலும்.
ஒற்றைக்கை மா - தும்பிக்கையை உடைய விலங்கு; யானை.
மறுக - வருந்த.
மான் தேர் - குதிரைகள் பூட்டிய தேர்.
விதப்பினால், `வேதமாகிய குதிரைகள்` என்பது பெறப்பட்டது.
கோ மறுகு - இராச வீதி.
`பேதையர்` என்பதை, ``பேதைகள்`` - என அஃறிணையாக உபசரித்தார்.
பேதையர் - மகளிர்.
இதனால், கூத்தப் பெருமானது, தேர் விழாவின் சிறப்புக் கூறியவாறு.
பெற்றோரும், செவிலியரும் தடுத்தல், `சென்று காணின், அவனது காதல் வலையில் வீழ்ந்து, பிறிதொன்றற்கும் உதவார்` என்னும் அச்சத்தினாலேயாம், இதனால், காந்தத்தை நோக்கிச் செல்லும் இரும்புபோலக் கடவுளை நோக்கிச் செல்வதே உயிர்கட்கு இயல்பு` என்பதும், `அதனைச் செயற்கையாகிய பாசத்தளைகளே குறுக்கிட்டுத் தடுத்துத் துன்புறுத்து கின்றன` என்பதும் ஆகிய உண்மைகள் புலப்படுத்தப்பட்டவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 22

பேதையெங் கேயினித் தேறியுய்
வாள்பிர மன்தனக்குத்
தாதை தன் தாதையென் றேத்தும்
பிரான்தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை
கொடான் நின்று கொல்லவெண்ணி
ஊதையும் காரும் துளியொடும்
கூடி உலாவி யவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பேதை எங்கே இனித் தேறி உய்வாள்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
பிரமன்றனக்குத் தாதை, திருமால், அவனால் `தனக்குத் தாதை` என்று ஏத்தப்படும் பிரான் சிவபிரான்.
கோதை, தாமம் - ஒரு பொருட் சொற்கள்.
அவை தம்மில் சிறிது வேறுபாடுடைய.
ஊதை - வாடைக் காற்று.
கார் - மேகம்.
``ஊதையும், காரும் துளியொடு கூடி உலாவிய`` என்றது, `காலம் கார்காலமாயிற்று` என்றவாறு.
தலைவியரைப் பிரிந்து சென்ற தலைவர் கார்காலத்தில் வந்து கூடுவர் ஆகலின், `அவ்வாற்றால் களிப்பு எய்துகின்ற மகளிரைக் காணுந்தோறும் இவள் ஆற்றாமை மிகுவாள்` என்பது பற்றி, ``பேதை எங்கே இனித் தேறி உய்வாள்` என்றாள்.
இது கைக்கிளைத் தலைவிக்குத் தோழியாயினாள் பருவ வரவு கண்டு கவன்றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாவென
நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி யொருவர் ஆழிய
புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர்
புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர்
கலவ மயில னார்கருள் கரிய குழலி னார்குயில்
கருதுமொழியி னார்கடை நெடிய விழியி னாரிதழ்
இலவின் அழகி யாரிடை கொடியின் விடிவி னார்வடி
வெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது மடல் மா ஊரத் துணிந்த தலைவன் `அஃது இயலுமோ` எண்ணிக் கவன்று கூறியது.
மடல் மா ஊர்பவன் தலைவியது உருவத்தை அவளேபோலத் தோன்றும்படி நன்கு எழுதிய கிழியைக் கையில் கொண்டு ஊர்தல் வேண்டும்.
அதற்கு, `இவளது அவயவங்கள் எழுதற்கு அரியனவாய் உள்ளனவே` எனக் கவன்று கூறினான் எனவே, இதுவும் நேரே அகப்பாட்டாம்.
இங்கும் கூத்தப் பெருமான் பாட்டுடைத் தலைவர் மட்டுமே.
சலதி - கடல்.
கடலில் தோன்றிய விடத்தை அதன்கண் வாழ்வ தாகக் கூறினார்.
ஊழியின் இறுதி; சங்கார கால முடிவு.
`அது பொழுது சிவபிரானைத் தவிரப் பிறர் ஒருவரும் இல்லை` என்றற்கு, ``ஊழியில் இறுதி ஒருவர்`` என்றார்.
ஆழிய - ஆழ்ந்த.
கரோடிகை - தலைஓடு.
`புலால் கமழும் தலையோட்டை யுடையராயினும் தூயரே` என்றற்கு, ``புனிதர்`` என்றார்.
பூசுரர், தில்லைவாழந்தணர்.
`புலிசைப் பொழில்` என இயையும்.
``வாழ்வது`` என்றது மயிலை.
கலவம் - கலாபம்; தோகையை பொழிலிடத்தே கண்டான் ஆகலின், ``பொழிலின் நிழலில் வாழ்வது ஓர் மயிலை ஒத்தவர்`` என்றான்.
தனது நன்கு மதிக்கற்பாடு, தோன்ற, ஒருத்தியையே பலவிடத்தும் பன்மைச் சொல்லாற் கூறினான்.
`குயில் எனக் கருதும் மொழி` என்க.
கடை நெடியவிழி என்ற குழை அளவு செல்லும் விழி என்றவாறு.
இலவு - இலவங் காய்.
இன், உவம உருபு.
``அழகியார்`` எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது.
``வடிவினார்`` என்பதும் அது.
`ஆறு சென்ற வியர்` என்பதில் பெயரெச்சம் காரணப் பொருட்டாய் நின்று காரியப் பெயர் கொண்டாற்போல, இங்கு, ``எழுதும் அருமை`` என்பதில் பெயரெச்சம் பண்பிப் பொருட்டாய் நின்று, பண்புப் பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 24

ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத் தவையெம் சிந்தையிற் கிடத்தி
நனவே போல நாடொறும் பழகிக்

கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பதும் நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம்

காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ தைய நின்னது
கோயில் பல்பணி குறித்தே ஒயாது
உருகி நின்னினைந் தருவி சோரக்

கண்ணிற் காண்பதெவ் வுலகினும்காண்பனவெல்லாம்
நீயே யாகி நின்றதோர் நிலயை நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த்தவ வேடம் கைத்தகப் படுத்தற்கு
வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்தும்
வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு

நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர்
அம்பலத் தாடும் உம்பர்நா யகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள் ``உளர்தரும்`` என்பது முதல் ``எட்டாய்`` என்பது முடிய உள்ள பகுதி சிவபெருமானது அருமை கூறியது.
`அத் துணை அரியனாகிய நீ எளியனாய்த் தில்லை அம்பலத்தில் ஆடு கின்றாய்` என்றார்.
அதனால், ``உளர்தரும்`` என்பது முதல் இறுதி முடிய உள்ள பகுதி முதற்கண் கூட்டி உரைக்கற்பாலதாயிற்று.
அதனுடன், ``அத்த, ஐய`` என்பவற்றையும் முதலிற் கொள்க.
பின்பு, ``வழி வழி மரபினம்`` எனக் கூறுவதால், ``புதிதின் `ஆள்` என வந்து அடைந்திலம்`` என்றது தம் முன்னோரையும் உளப்படுத்துத் தம் மரபு நிலை கூறியதேயாயிற்று.
இதனால், அடிகள் வழி வழிச் சைவராதல் விளங்கும்.
இத்தகையோரையே `பழவடியார்` என்பர்.
தம் காலத்தில் சைவராகின்றவர், `புத்தடியார்` ஆவர்.
தம் பழமையை அடிகள் பின்னரும் தொடர்ந்து விளக்குதல் காண்க.
தாளின் ஏவல் - காலால் ஏவிய பணி.
ஏவல் ஏவப் பட்டதனைக் குறித்தலால் ஆகுபெயர்.
``சிந்தையிற் கிடத்தி`` என்பதை, ``மொழிவது`` என்பதன்பின் கூட்டுக.
`நாள்தோறும் பழகி நனவேபோலக் கனவிலும் நவிற்றும் காதலெம்` எனக் கூட்டுக.
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
என்று அருளிச்செய்தது.
இந்நிலையையேயாம் தொழிற் பெயர் எழுவாயாய் நிற்கும் பொழுது தொழில் முதல் நிலைகள் பயனிலை யாய் வருதல் உண்டு.
அதனை அம்முதனிலைப் பொருளவாய உருபுகளை ஏற்ற பெயர்களும் பயனிலைகளாய் வரும்.
அவ்வாற்றால் ``நெஞ்சத்தை`` என்பது போல ஏனைய ``அஞ்செழுத்தவை, கீர்த்தி, சாதனம், நிலை`` என்பவற்றிலும் இரண்டாவது விரிக்க.
கேட்டது.
``மொழிவது, செய்திடுவது, காண்பது`` என்பன தொழிற் பெயர்கள்.
நவிற்றுதலுக்கு `அவற்றை` என்னும் செயப்படுபொருள் வருவித்து அதனை வேறு தொடராக்குக.
`வரைந்து மீட்பது`` என மேலே கூட்டுக.
அருத்தி - விருப்பம்.
சாதனம் - மணி.
குயிற்றுவது - செய்வது.
`பணியாதல் குறித்தே` என ஆக்கம் வருவிக்க.
சரண் வழி - திருவடிகளை அடையும் வழி.
``மாப்பின் ஒப்பின்`` 1 என்னும் சூத்திரத்துள் ``செலவின்`` என்பதும் கூறப்பட்டமையால் வழி என்பதும் இரண்டாவதன் தொகையாம்.
அல்லால் என்பதற்கு முன்னே இவை என்பதும் பின்னை `பிறிது` என்பதும் வருவித்து, `இவையல்லால் அடாது` என்க.
அடாது - வந்து பொருந்தாது.
ஏகாரம் தேற்றம்.
`தம் கைத்தாக அகப்படுத்தற்கு` என, `தம்` என்பதும், ஆக்கமும் வருவிக்க.
``வேடர்`` என்பதும், `வேடம் உடையவர், வேடர்` என இரட்டுற் மொழிய நின்றது.
கைத்து - கைப்பொருள்.
``சொல்லின் வலை, சமயப் படுகுழி`` என்பன உருவகங்கள்.
இன், வேண்டாவழிச் சாரியை.
படுகுழி, வீழ்ந்தழியும் குழி.
அமைவயின் - வாய்ப்பு நேரும்பொழும்.
``மானுட மாக்கள்`` என்பதும் உருவகம்.
``வலியப் புகுத்தும் விரதம்`` என்றமையால் மேல், ``சமயம்`` எனப்பட்டன.
சமணமும், மீமாஞ்சகமும் ஆயின.
இவற்றுள் மீமாஞ்சக மதம்.
``கங்கை ஆடில் என்! 2 காவிரி ஆடில் என்!`` எனத் தொடங்கும் திருப்பதிகத்துள்ளும் ``விரதமே பரமாக வேதியரும் சரதமாகவே சாத்திரங் காட்டினர்`` 3 எனத் திருவாசகத்துள்ளும், ஆதிமறை ஓதி, அதன்பயன்ஒன் றும் அறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே
எனச் சாத்திரத்துள்ளும் விலக்கப்பட்டமை காண்க.
வளைவுணர்வு - கோணலான அறிவு.
ஓகாரம்.
எதிர்மறை.
இதனுள் ``நுரையும், திரையும்`` என்பது முதலாகப் போந்த அடிகளைச் சிவஞான போதத்து இரண்டாம் சூத்திர மாபாடியத்துள் பிரம முதற்காரணவாத மறுப்பில் எடுத்துக் காட்டி இதன் உண்மைப் பொருளைத் தெளிவுபடுத்தி யிருத்தல் காண்க.
நொப்புறு கொட்பு - கலங்கலையுடைய சுழல்.
வரையின் சீகரம் - மலைபோன்ற அலைகள்.
வாரி, சங்கு முதலியன வருவாய்.
குரை - ஒலிக்கின்ற.

பண் :

பாடல் எண் : 25

நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாயருளும் தம்பிரான் தூயவிரை
மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலும், அயனும் தேடிக் காணாராயினும் மன்றுளே ஆடுகின்றான்` என்றபடி.
`தம் பிரான்` என்பது `தமக்குப் பிரான்` என்னும் பொருளதாயினும் இங்குப் பொதுப்படத் `தலைவன்` என்னும் அளவாய் நின்றது.
`மணி, என்னை அளித்து அருளும் தலைவன்` என முடிக்க.
அளித்து - காத்து.

பண் :

பாடல் எண் : 26

மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம்
வேர்ப்ப அம் மன்றுக்கெல்லாம்
அணிவாய் அருள்நடம் ஆடும்
பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச
மேயினிப் பையப்பையப்
பிணியாய்க் கடைவழி சாதியெல்
லோரும் பிணமென்னவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முகிழ்ப்ப - முறுவல் சிறிதே அரும்ப புலன் வழிப்பேர் - ஐம்புல வழியினின்றும் நீங்கு.
கடை வழி - இறுதிக் காலத்தில் பிணம் என்ன - முன்பு சொன்ன பெயராலே சுட்டாமல், பிணம் என்னும் பெயராலே சுட்டும்படி.
சாதி - சாவாய்.

பண் :

பாடல் எண் : 27

என்நாம் இனிமட வரலாய் செய்குவ
தினமாய் வண்டுகள் மலர்கிண்டித்
தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்
அரனார் திருமுடி அணிதாமம்
தன்னா லல்லது தீரா தென்னிடர்
தகையா துயிர்கரு முகிலேறி
மின்னா நின்றது துளிவா டையும்வர
வீசா நின்றது பேசாயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மடவரலாய், கருமுகில் ஏறிமின்னா நின்றது; துனி வாடையும் வர வீசாநின்றது; அரனார் திருமுடி அணி தாமந்தன் னாலல்லது என் இடர் தீராது; உயிர் தகையாது; (அவரோ அதைத் தருவதாய் இல்லை) இனி நாம் என் செயகுவது பேசாய்` என இயைத்துக் கொள்க.
இது, பருவம் கண்டு ஆற்றளாய கைக்கிளைத் தலைவி தூது விடக்கருதித் தோழியை நோக்கிக் கூறியது.
``மட வரலாய்`` என்றது தோழியை.
தகையாது - தகைக்க (தடுக்க)ப்படாது.
துனி வாடை - துன்பம் தருகின்ற வாடைக் காற்று.

பண் :

பாடல் எண் : 28

பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்

நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன் றொருவழி நில்லா வன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர்
கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர்
பேரும் நின்றில போலுந் தேரின்
நீயுமஃ தறிதி யன்றே மாயப்

பேய்த் தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மயர் இழிவு சார்ந்தனை நீயும்
நன்மையில் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
விளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்
ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ துணராது செறுவுழிச் சேர்ந்தனை
நுண்ணூல் நூற்றுத் தன்னகப் படுக்கும்
அறிவில் கீடத்து நுந்தழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது
குடர்கெவு சிறையறைக் குறங்குபு கிடத்தி
கறவை நினைந்த கன்றென இரங்கி

மறவா மனத்து மாசறும் அடியார்க்
கருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்று ளாடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள் முதல் மூன்று அடிகள் இரட்டைத் தொடை.
இடையே ஒருதொடர் மடுக்கப்பட்டமையால் அடுக்கு இசைநிறை யாகாது.
பொருள் நிலையாய், வலிசெய்தற் பொருட்டாயிற்று.
``வாழி`` என்பன அசை.
இவைகளை இறுதியிற் கூட்டியுரைக்க.
நான்காவது முதல் ஏழு முடிய உள்ள அடிகளில், காலம் காரணமாகப் பொருள்கள் மிக விரைவில் நேர் மாறான நிலைகளை அடைதல் கூறும் முகத்தால் அவற்றது நிலையாமை விளக்கப்பட்டது.
ஒன்று ஒன்று - அது அது.
இதில் முற்றும்மை தொகுக்கப்பட்டது.
ஒரு வழி - நிலையில்.
``அது அது`` எனப்பட்டவை அனைத்தும் தொக்குப் பன்மையாதலின் ``நில்லா`` என்றார்.
``பிறந்தோர், திகழ்ந்தோர்`` முதலிய எட்டிலும் ``ஆகியும்`` என்பதை விரித்து அவைகளை ``இறந்தோர்`` என்பதோடு முடித்து, `இறந்தோராகிய எம் குலத்தினர் எனையர்!` என்க.
தேசு - புகழ் நலத்தினின் வந்தோர் - நல்லொழுக்கத்தில் பொருந்தினோர், எனையர் - எத்துணையர்! என்றது, `எண்ணிலர்` என்றபடி.
``தேரின்`` என்பதை, ``அனையவர்`` என்பதற்கு முன்னே கூட்டுக.
``பேரும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
``போலும்`` என்பது உரையசை.
உலகர் பலரையும் குறியாது, ``எம் குலத்தினர்`` என்றார்.
தாம் நன்குணர்ந்தமையைக் குறித்தற்கு, ``நீயும் அஃது அறிந்தனை யன்றே`` என்றது, `அறிந்தும் இழிவு சார்ந்தனை` என அதன் மடமையை `உணர்த்தற்கு.
ஆகவே, அவ்விடத்து, `அறிந்தும்` என்பது வருவிக்க.
பேய்த் தேர் - கானல், ``நனவுப் பெயர் பெற்ற`` என்றது, `அப்பெயர் நீடு நில்லாதது` என்றற்கு.
மாயம் - கடிதின் மறைவது.
`பொல்லாத் தன்மையரது இழிவினை நீயும் சார்ந்தனை என்க.
``இழிவு`` என்பது அதனை உடைய செயைல உணர்த்தலின் ஆகுபெயர்.
``சார்ந்தனை`` என்பதன்பின், `அதனால்` என்பது வருவிக்க.
ஆதலின் - ஆகிவிட்டமையால்.
இழுக்கம் - சகதி.
`புலன்வழியாகிய இழுக்கம்` என்க.
ஒழுகி - நடந்து.
தூண்டிலில் உள்ள இரையை விரும்பிச் சென்று இறக்கின்ற மீன் `சுவை` என்னும் புலனால் கெடுதற்கும், விளக்கு ஒளியை `இரை` என ஓடி வீழ்ந்து இறக்கும்` என்பர் ஆதலின் அஃது `ஊறு` என்னும் புலனால் கெடுதற்கும், புள் - அதணம்.
`இது வேடர்கள் வஞ்சனையால் இசைக்கும் இசையால் மயங்கி வந்து வலையில் விழும்` என்பர் ஆதலின் அஃது `ஓை\\\\\\\\u2970?` என்னும் புலனால் கெடுதற்கும், பூக்களின் மணத்தை நுகரச் சென்று அவற்றினுள் வீழ்கின்ற வண்டுகள் அம்மலர்கள் குவிந்த பொழுது உள்ளே கிடந்து இறத்தலின் அவை `நாற்றம்` என்னும் புலனால் கெடுதற்கும் உவமையாயின.
`அசுணம் விலங்கு` என்பாரும்.
`வண்டுகள் மலர்த்தேனில் வீழ்ந்து இறத்தல் பற்றிச் சொல்லப்படுவது` என்பாரும் உளர்.
விளக்கம் - விளங்கல்.
ஆகுபெயராய் அதனையுடைய விளக்கைக் குறித்தது.
செறு உழி - கொல்லும் இடம்.
தன் அகப்படுத்தல் - தன்னையே தான் கட்டுக்குள் அகப்படுத்திக் கொள்ளுதல் `உலண்டு` என்னும் பூச்சி தனது வாய் நூலால் தன்னையே தான் சுற்றிக் கொள்ளும் என்பது சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவது.
``கீடம்`` என்பது புழுவாயினும் இங்கு அது பூச்சியையே குறித்தது.
``நுந்துழி`` என்பதும் அவ்வுலண்டிற்கு ஒரு பெயர்போலும்.
குடர் கெவு சிறை - தாயின் கருப்பை.
சிறக்கு - சிறைக்கண்.
வேற்றுமை மயக்கம்.
உறங்குபு கிடத்தி - உறங்கிக் கிடக்கின்றாய்.
`ஆயினும் - இறையவன் - என்கிலை; அஃதொழிந்து, அவ் இறைவனைப் பேசு` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 29

நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யானருளென்
பிச்சியே நாளைப் பெறும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிச்சி - பித்தி; பித்துக்கொண்டவள்.
அஃதாவது, `காதல் மீதூர்வால் இடையறாது நினைந்தும், அதனால் உடல் மெலிந்தும், நிறையழிந்தும் நிற்பவள்.
தில்லைப் பெருமான் அனைவர் நிலையையும் நன்கு அறிந்து அவரவர் நிலைக்கு ஏற்ப அருள்புரிபவன் ஆகலின் அவனது அருளை இவளே பெறுவாள்; அஃதாவது, அவன் தனது கொன்றை மாலையை இவளுக்கே தருவான்.
ஆகையால், இவளைப் போல அன்பில்லாதவர்கள் பலர் அவனது கொன்றை மாலையை விரும்புதற்கு அஃது என்ன.
அன்பருக்கின்றி எல்லார்க்கும் பொதுவோ` என ஒருத்தியைத் தலைவியாகக் கொண்ட தோழி பிற மகளிரைக் காமக் கிழத்தியராக வைத்து இகழ்ந்தாள்.
இதன் உள்ளுறை, `அன்பர் அல்லார்க்குத் தில்லைப் பெருமானது அருள் கிட்டாது` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 30

பெறுகின்ற எண்ணிலித் தாயரும்
பேறுறும் யானுமென்னை
உறுகின்ற துன்பங்க ளாயிர
கோடியும் ஒய்வொடுஞ்சென்
றிறுகின்ற நாள்களு மாகிக்
கிடந்த இடுக்கணெல்லாம் அறுகின் றனதில்லை யாளுடை
யான்செம்பொன் னம்பலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெறுகின்ற தாயர் - வரும் பிறப்புக்களில் என்னைப் பெற்றெடுக்க இருக்கின்ற தாய்மார்கள்.
பேறும் உறும் யான் - அவர்கள் பெறும் பேறாக அவர்களை அடைகின்ற யான்.
ஓய்வு - துடிப்புக்களெல்லாம் அடங்குதல்.
இறுகின்ற நாள்கள் - இறக்கின்ற நாள்கள்.
இவைகள் யாவும் துன்பங்களாய், நான் தில்லையம்பலத் திலே சென்று கூத்தப் பெருமானைக் கண்டு தொழுகின்ற இந்த நேரத்திலே அடியொடு ஒருங்கி நீங்குகின்றன.
``தாயர்`` என்னும் உயர்திணையும், ``யான்`` என்னும் தன்மையும் இடுக்கண்களாய் அடங்கினமையால், ``அறுகின்றன`` என்பதிலே முடிந்தன.

பண் :

பாடல் எண் : 31

அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே
கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்
கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசவொரு மாடே
வாடையுயிர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்
கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது கைக்கிளையாதலின் செவிலி தலைவனை மாலையிரத்தலாய் வந்தது.
`தில்லைக் கூத்தரே` என்பதை முதலில் வருவித்து, `நீர் ஆனையை உரித்து அதன் தோலைக் கமலமாகப் போர்த்துக் கொண்டு மகிழ்ச்சியடைந்தீர்; மன்மதன் எரிந்தொழியப் பார்த்தீர்; இவளது காதலின் இயல்பு அறியாமல் வம்பலர் (பிறரைத் தூற்றும் இயல்புடையோர்) நிறைந்து (தெருவில் கூடிக் கொண்டு) வசை பேசவும், மாடே (ஒருபக்கம்) வாடைக் காற்று இவளுடைய உயிரை வாங்கவும், அழகையும் இழந்து அலமருகின்ற இவளது நிலையைக் கண்டு இரக்கம் இல்லாமல், கொன்றை மாலையை, `தாரேன்` என்கின்றீர்.
அதற்கு மேல் எங்களை, `நீவிர் கொடியீர்` என வைகின்றீர்.
உம்மை அறிஞர்கள் - யாவரும் எளிதில் அடைய அம்பலத்திலே நிற்கின்றார் - என்றும், அம்கணர் (கருணை மிகுந்தவர்) - என்றும், தம்மைச் சார்ந்தவரிடத்திலே அன்பு செய்பவர்- என்றும் இவ்வாறெல்லாம் புகழ்கின்றது என்னோ!` என உரைக்க.
இதுவும் பழித்ததுபோலப் புகழ்ந்தது ``கொடியீர்`` என்பது சிலேடை.

பண் :

பாடல் எண் : 32

அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கரக்கும்
புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றும்
இனைய தன்மைய திதுவே யிதனை

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே யவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் பாடதன சிலவே யென்றிவை

கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன் றுணர்வுழி வருமோ வனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்று
தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய
மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அறியை சாலவெம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்
நின்வயின் மறைத்தோ யல்லை யுன்னை

மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியுஞ் சிறுமையிற் கரந்தோ யல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியுஞ் சேணிடை நின்றோ யல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே

நண்ணியும் நீயொன்றின் மறைந்தோ யல்லை
இடையிட்டு நின்னை மறைப்பது மில்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே அஃதான்று
நினைப்பருங் காட்சி நின்னிலை யிதுவே

நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே
இனிநனி இரப்பதொன் றுடையன் மனமருண்டு
புன்மையின் திளைத்துப் புலன்வழி நடப்பினும்
நின்வயின் நினைந்தே னாகுதல் நின்வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும்

நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்ப ருய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வேய்முதிர்.
ஆதிவானவனே`` என்னும் பகுதியை முதலிலும், அதனை அடுத்து, ``புரிசடைக் கடவுள், பெரும`` என்பவற்றையும் வைத்து, ``அருளு வாழி`` என்பவற்றை இறுதியிற் கூட்டி யுரைக்க.
வேய் - மூங்கில்.
புல்லென - `கயிலை பொலி விழக்கும்படியும், ஒளி எறிக்கின்ற வானகம் வெறுமை யாகும்படியும், இவ்வுலகம் உய்யும்படியும் அம்பலம் பொலியும் படியும் அருநடம் குயிற்றும் - செய்கின்ற.
ஆதி வானவன் - முதற் கடவுள்.
``புரிசடைக் கடவுள்`` என்பதும் விளி.
`பருகியபின்` என்பது, `பருகி` எனத் திரிந்து நின்றது.
வாழ்நாள் முடிவைக் குறிக்கொண்டு நோக்கி வருதல் பற்றிக் கூற்றுவனை வாழ்நாளைப் பருகுவோனாகக் கூறினார்.
``கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும்`` 1 எனப் பிறவிடத்தும் கூறப்பட்டது.
``உடம்பை வறிதாக்கி`` என்றது, `உயிரைப் பிரித்தெடுத்து`` என்றபடி.
நாள்நாள் - பல நாளும்.
பயிலுதல் - அத் தொழிலையே செய்தல்.
நல்குதல் - இரங்குதல்.
`வறிதாக்கிப் பயின்ற கூற்றம்` என்க.
``இனைய தன்மையது`` என்றது.
`இதன் இயல்பு இது ஆதலின் அஃது ஒருவ ராலும் மாற்றப்படாது` என்றபடி.
`கூற்றமாகிய இது இனைய தன்மையதே` என மாற்றிக் கொள்க.
மரணத்தின் இயல்பை விளக்கு தற்கு.
இடையே கூற்றத்தின் இயல்பு கூறினார் ஆகலின்.
பின்னர், `இதனை`` என்றது, முன்னர்க் கூறிவந்த மக்கள் யாக்கையே யாயிற்று.
``நன்று, தீது`` என்பன ஓர் இனத்துப் பல பொருள்கள் மேல் தனித்தனிச் சென்று, பன்மை யொருமை மயக்கமாய் வந்தன.
ஒன்றினும் படாது வருவன, துரும்பு கிள்ளுதல், வாளாமுகம், முடி, கால் முதலியவை களைத் தடவல் போல்வன.
இவைகளை, `நினையாது செய்வன` என்பர்.
`என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
களித்த லும், கலுழ்தலும் விருப்பு வெறுப்புக்களைக் குறிக்க.
``களிப்ப, கலுழ்ப`` என்பன.
அவ்வச் செயப்படு பொருள்மேல் நின்றன.
`ஒன்று ஒன்றாக என ஆக்கம் விரிக்க.
எதிர் காலப் பொருளவாய `உணர` என்னும் எச்சங்கள் ``உணர்வுழி`` எனத் திரிந்து நின்றன.
ஒன்று ஒன்றாக - தனித் தனியாக.
ஒன்றாக - ஒருதொகுதியாக.
தெளிவுழி - ஆராயும் பொழுது.
`தெரிவுழி` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
தேறல் செல்லேம் - தெளிய மாட்டேம்.
மற்று.
அசை `இதுவே மனத்தின் செய்கை` என்க.
``செய்கை`` என்றது தன்மையை.
`வினைகள் வந்து பயன் தரும் முறைமைகளை யெல்லாம் அறியும் ஆற்றல் மனித மனத்திற்கு இல்லை` என்றபடி.
அளிய - எளிய `மனத்தின் தன்மை இதுவாக.
உனது இயல்பை நோக்கும் பொழுது.
நீயும் யாராலும் அறிதற்கு மிக அரியை` என்பதாம்.
``உண்டு`` என்பது உண்மைத் தன்மையைக் குறித்தது.
``யாவையும்`` என்பதில் `யாவற்றையும்` என இரண்டாவது விரிக்க.
``கண்டனை`` என்பதன் பின், `ஆயினும் என்பது வருவிக்க.
``அது`` என்றது அதன் காரணத்தை.
`அவை நின்னைக் காணாமை.
அங்ஙனம் அவற்றின் கண்களை நீ மறைத்த தனாலன்று; இனி, நீ தானும் மாயாய் - மறைந்திலை.
மன்னினை - வெளிப்பட்டே நிற்கின்றாய்.
வாழி, அசை.
``மன்னியும்`` என்னும் உம்மை.
`மன்னியதன்மேலும்` என எதிரது தழுவி நின்றது.
சிறுமையிற் கரந்தோய் அல்லை - சிறியதினும் சிறியதாய் மறைத்து நிற்றல்.
மட்டும் அன்று பெயர்த்தும் - மாறாக பெருமையிற் பெரியோய் நீயே.
பெருமை - பெரியது; ஆகுபெயர்.
பெருகியும் - அவ்வாறு.
பெரிதாயினாயேனும் சேணிடை நின்றோய் அல்லை.
மிக உயரத்திலே நீ இருக்கவில்லை.
தேர்வோர்க்கு - உன்னைத் தேடுபவர்கட்கு.
தம்மினும் நீ அணியையே - அவரினும் பார்க்க நீ அண்மையில் உள்ளவனே.
அவர்கள் உயிரினுள் நிற்பவன்.
(ஆயினும் அவர்கள் உன்னைக் காணாமல் தேடுகின்றனர் ஆயினும்) நீ ஒன்றில் மறைந்து நிற்கவில்லை.
உன்னைப் புலப்பட ஒட்டாது மறைப்பதொரு பொருளும் இல்லை.
இருப்பதாயின், அதுவும் நீயே ஆகின்ற நிலைமையை உடையாய்.
நினைவைக் கடந்த தோற்றத்தையுடைய உனது நிலைமை இது ஆயினும், நினைவையே உடையேனாகிய எனது நிலைமை இது.
அதாவது நீ எத்துணை எளியனாய் இருப்பினும் உன்னைக் காணாமல் இருப்பதேயாகும்.
அதனால் உன்னிடத்தில் யான் இரந்து கேட்பது ஒன்றை உடையேன்.
அஃது யாது எனின், நான் எந்தச் செயலைச் செய்தாலும் (அவை உன்னைவிட்டுத் தனியே இல்லாமையால்) உன்னையே நினைத்துச் செய்தனவாகக் கொள்ளுதலாகிய நினைத்துச் செய்தனவாகக் கொள்லுதலாகிய நினைப்பை நீ கொள்ளப் பெறுதலாம்.
அன்னதொரு வரத்தை நீ எனக்கு அருளல் வேண்டும்.
அருளு! அருளு!! அருளு!!!` என முடிக்க.
``வாழி`` என்பன அசைகள், ``தோன்றுழி`` என்பதில் ``உழி`` காலம் உணர்த்தி நின்றது.
தவ - கெட.
`கறங்கும்` என்பது பாடம் அன்று.
புற்புதம் - நீர்க்குமிழி `உன்னை மறைப்பதொரு பொருள் இருக்குமாயின் அதுவும் நீயே` என்றது.
திரோதான சத்தியாய் நின்று மறைத்தல் பற்றி.

பண் :

பாடல் எண் : 33

வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத் தரசன்றே மாநாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அன்றே`` என்னும் தேற்றச் சொல்லை இறுதிக்கண் கூட்டுக.
செல்வம், இந்திர பதவிச் செல்வம்.
பந்தித்தல் - கைகள்.
கழுத்து, வயிறு இவைகளைச் சுற்றிக் கட்டுதல்.
வேண்டாத - விரும்பாத, விரும்பாமைக்குக் காரணம், நிலையாமையும், துன்பமும் மயக்கமும் நிறைந்திருத்தலுமாகும்.

பண் :

பாடல் எண் : 34

வாழ்வாக வும்தங்கள் வைப்பாக
வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்
தாயுன்னை அன்றியொன்றைத்
தாழ்வார் அறியார் சடிலநஞ்
சுண்டிலை யாகிலன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ
மாக வணங்குவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மறையோர், தங்கள்`` என்பவற்றை முதலிற் கூட்டுக.
மறையோர், தில்லைவாழந்தணர்.
``ஆள்வாய், அம்பலத் தாய்`` என்பன விளிகள்.
வைப்பு - சேம நிதி.
`உன்னையன்றி ஒரு தெய்வத்தை வணங்குபவர்.
தெய்வமாகக் கொண்டு வணங்குவது, நீ நஞ்சினை உண்ணாதிருப்பின் அன்றே இறந்து போயிருப்பாரை யன்றோ? அதனை அவர் அறியார்` என இயைத்து முடிக்க.
ஆரணி துங்கன், நாரணி பங்கன், அருணேசன்
தாரணி அஞ்சும் காரண நஞ்சம் தரியானேல்,
வாரணர் எங்கே, சாரணர் எங்கே, மலர்மேவும்
பூரணர் எங்கே, நாரணர் எங்கே போவாரே.
1 என்றார் சைவ எல்லப்ப நாவலர்.
அசைவைக் குறிப்பதாகிய ``சடிலம்`` என்பது முன்னர் அலைகளையும்.
பின்னர் அவற்றையுடைய கடலையும் குறித்தலால் இருமடியாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 35

வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்
மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ
டுணங்கியிவள் தானுமெலியப் பெறும் இடர்க்கே
ஊதையெரி தூவியுல வப்பெறும் அடுத்தே
பிணங்கியர வோடுசடை ஆடநடமாடும்
பித்தெரென வும்மிதயம் இத்தனையும் ஒரீர்
அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும்
மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது கைக்கிளைத் தலைவிதன் தோழி ஆயத்தாரை முன்னிலைப்படுத்தி வெறிவிலக்கியது.
வணங்கும் - துவள்கின்ற.
வல்லி - கொடி.
வறிது - காரணம் இல்லாமல்.
`இவள் உணங்கி மெலிய` என மாற்றுக.
தான், உம் அசைகள், உணங்குதல் - வற்றுதல்.
மெலிதல் - வலிமை குன்றுதல்.
இடர்க்கு, துன்பத்திற்கு உறுதுணையாக.
ஊதை - வாடைக் காற்று.
எரி தூவுதல் - வெப்பத்தைத் தருதல்.
``மெலியப் பெறும், உலவப் பெறும்`` என்பன அவ்வத் தொழிலை உடையளாதலையும், உடைத்தாதலையும் குறித்தன.
அடுத்து - இவைகளைச் சார்ந்து ``சடை அரவோடு பிணங்கி ஆடும்படி நடனம் ஆடுகின்ற பித்தர், பித்தர்`` எனப் பிதற்றுகின்றாள்.
`அப்படிப் பிதற்றக் கேட்டும் உங்கள் இதயங்களில் இவள் பிதற்றலின் காரணத்தை நீவிர் அறியவில்லை.
(நீவிர் எப்படி அறிவீர்;) `தெய்வத்தைக் குறித்து வெறியாடுதற்கு வேண்டிய செம்மறியாட்டையும், மதுவால் மயக்கப்படுகின்ற மயக்கத்தையும், மற்றும் பல உழைப்பையும் அல்லது வேறு ஒன்றையும் நீவிர் அறிய மாட்டீர்` என்க.
இத்தனையும் - `இவ்வளவுதானும்` என இழிவு சிறப்பும்மை.

பண் :

பாடல் எண் : 36

ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ தசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற் பட்ட மேனி எந்தை

ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத் தொருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்
தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய
தெய்வ மண்டபத் தைவகை அமளிச்
சிங்கஞ் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத் தமையா நோக்கம்
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும்

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும்

வார்ந்துங் குறைத்தும் மதநாய்க் கீந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுந்தி இன்னா
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்

நிரயஞ் சேரினுஞ் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது

இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பின்
இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்கவன்றி
இன்றே இறக்கினும் இறக்க வொன்றினும்
வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
ஆண்டகைக் குரிசில் நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வங் கிடைத்த லானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வேரி வழங்கு ஈரத்தார்ச் சடிலம்` என்க.
வேரி - தேனை.
வழங்கு - ஊற்றுகின்ற - ஈரம் - குளிர்ச்சி.
வரைப்பு - எல்லை.
வண்டுகள் தோளில் புரளும் மாலையின் தேனை உண்ண வந்து இயங்குகின்றன.
தோடு பெண்பாற்கு உரியதும், குழை ஆண்பாற்கு உரியதும் ஆகலின் மேனி இருபாற்பட்டதாயிற்று.
தேன் - வண்டுவகைகளில் ஒன்று - சிறை - பக்கம்.
அமளி - அமை.
``மங்கையர் பருக`` என இயையும் `இமையா நாட்டத்து அமையா நோக்கத்தால் பருக``` என்க.
அமையா நோக்கம் - தெவிட்டாத பார்வை.
``அதுவே`` என்னும் பிரிநிலை ஏகாரம் அதன் சிறப்புணர்த்தி நின்றது கதுமென - விரைவாக.
தெறுசொலாளர் - கடுஞ்சொற்களை யுடைய கால தூதுவர்.
உறுசினம் - மிக்க கோபம் திருகி - முறுகப் பெற்று.
குற்றம் - மண்ணுலகில் செய்த குற்றங்கள்.
கொளீஇ - கொளுவி; எடுத்தெடுத்துக் கூறி.
மத நாய் - வெறி நாய்.
தீ நீர் - உலோகங்களை உருக்கிய நீர்.
அழுவம் - பள்ளம்ஓ குழி ``இன்னா`` என்பதன்பின் `செய்யும்` என ஒருசொல் வருவிக்க.
வரை இல் - எல்லையில்லாத.
``உரையிடை`` என்பதை.
``விரும்பி`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
திரு - இவ்வுலகச் செல்வம்.
முன்பு - வலிமை.
முன்பின் - வலிமையை உடைய.
பழகுதல் - பலநாள் வாழ்தல்.
கழி மூப்பு - இளமை.
கழிய வரும் மூப்பு - ஆண் தகைக் குரிசில் - ஆளும் தகைமையை உடைய தலைவர்.
`குரிசிலாகிய நினக்கு அடியரா யினாரோடும் குழுமி` என்க.
அடைதல் - அடைக்கலமாய் புகுதல்.
அணுகுதல் - அகலமாதிருத்தல்.
`ஒரு பெருங்கடவுளே! எனக்கு மிகப் பெரிய இன்பங்கள்வரினும் வருக; மிகப்பெரிய துன்பங்கள்வரினும் வருக.
எந்த ஒன்றிலும் விருப்போ, வெறுப்போ கொள்கிலேன், எதனால் எனின், யாவர்க்கும் கிடைத்தற்கரிய மிகப் பெரிய செல்வம் எனக்குக் கிடைத்துவிட்டதனால்` என வினை முடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 37

ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே வானோங்கு
வாமாண் பொழிற்றில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது கைக்கிளைத் தலைவியின் காமம் மிக்க கழிபடர் கிளவி.
அஃதாவது காமம் மிகுதியால் வாய்க்கு வந்தன பிதற்றல்.
கழி படர் - மிக்க துன்பம்.
`ஆனேறே! தில்லை மன்னைப் பொலிவித்த கோமான்மேல் அன்புடைய நானே (இறவாது) உயிர் வாழ்ந்தாலும் உனக்கு நல்லதுதானே? (அவ்வாறிருக்க.
நீ ஒருநாள் போந்ததுபோலப் பல நாளும் அவனை இத்தெருவே கொண்டு போந்தால் உனக்கு அழிவது (கெடுவது) ஏதேனும் உண்டோ` என உரைத்துக் கொள்க.
இஃது இறைவனது ஊர்தியை எதிர்பெய்து கொண்டு கூறியது.
``அன்புடைய`` என்பதற்குமுன், `அவன்மேல்` என ஒருசொல் வருவிக்க.
``நானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் அவள் தன்னை இழித்துக் கூறியதனை உணர்த்திற்று.
தான், அசை `ஏனையோர் போல நான் உயர்ந்தவள் அல்லாவிடினும், அவன்மேல் அன்புடையளேயன்றோ என்றபடி.
நன்று - அறம்; புண்ணியம்.
`வாமம்` என்பது ஈற்று அம்முக்குறைந்து நின்றது.
வாமம் - அழகு.

பண் :

பாடல் எண் : 38

கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்
இந்திரன் கோமகுடத்
தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்
கூத்தனுக் கன்பு செய்யா
மிண்டர்மிண் டித்திரி வாரெனக்
கென்னினி நானவன்றன்
தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த்
திரியத் தொடங்கினனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோ - தலைமை.
மிண்டர் - நெஞ்சுரம் உடையவர் மிண்டி - நெருங்கி (கலாய்த்து)த் திரிவார்.
`நான் தொழும்பாய்த் திரியத் தொடங்கினன்.
ஆகையால் இனி எனக்கு என்ன குறை` என்க.
இதனுள் வழி எதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 39

தொடர நரைத்தங்க முன்புள்ள வாயின
தொழில்கள் மறுத்தொன்று மொன்றி யிடாதொரு
களிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்
துளையொழு கக்கண்டு சிந்தனை ஒய்வொடு
நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாதொரு
நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலியிரு மற்கஞ்சி உண்டி வேறாவிழு
நரக உடற்கன்பு கொண்டலை வேனினி
மிடலொடி யப்பண் டிலங்கையர் கோனொரு
விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய
வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை
திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய
தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய
சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``(நான்) உடற்கு அன்பு செய்து அலைவேன்; (`இதனை விடுத்துத் )தில்லை யம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தலமே இனி (எனக்குச்) சதுராவது`` என முடிவு கொள்க.
அங்கம் - உறுப்புக்கள்.
தொடர நரைத்து - நாள்தோறும் தொடர்ந்து நரை தோன்றப்பெற்று முன்பு - இளமைக் காலத்தில் ஒன்றும் - (அங்கம்) ஒன்றேனும், ஒன்றியிடாது - வசப்படாது.
``களிவு தலைக்கொண்டு`` என்பதை, ``கண்டு`` என்பதன்பின் கூட்டுக.
`வெறுப்பை மேற் கொண்டு` என்பது இதன் பொருல், புன்புலை வாரிகள் - அற்பமான இழிந்த நீர்கள்; கோழை, சிறுநீர் முதலியன, நடை கெட - நடத்தல் இல்லாதொழிய.
(`இடம் பெயராது கிடந்து` என்றபடி) கொண்ட பெண்டிர் - மனைவியர், `தொல்லை பொறாது` என்க.
நடலை - துன்பம்.
விழும் உடல் - இறுதியில் வீழ்ந்தொழிகின்ற உடம்பு.
நரக உடல் - இழிவாலும், துன்பத்தாலும் நரகம்போல்வதாகிய உடம்பு.
மிடல் - வலிமை.
விரகு - திறமை.
`அவன் பொன்றியிடா வகை` என்க.
திடம் - உறுதி.
`திடமாக` என ஆக்கம் வருவிக்க.
அருள்காரணமாகத் தரப்பட்ட வரத்தினது திடம்.
அதற்குக் காரணமான அருள்மேல் ஏற்றப்பட்டது.
ஊறிய - உள்ளுள் சுரக்கின்ற, ``சுடர், சுவை`` என்பன பின் வந்த ``சிவன்`` என்னும் ஒரு பொருள்மேல் வந்த பெயர்கள்.
நீடிய- `நிலை பெற்ற, அம்பலம்` என்க.
சதுர் - திறமை.

பண் :

பாடல் எண் : 40

சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்
தளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய
செல்வங் கொடுத்த செல்வம் போற்றி
தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துட்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி

குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்று விலக்கிக்
கடல்விடம் அருந்தன கருணை போற்றி
தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்
ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட

வில்லொன்று வளைத்த வீரம் போற்றி
பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்
கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி

பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி
விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள்

சலந்தரற் றடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி

வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி
பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச்
சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையுங் கடுக்கையுங் கலந்துழி ஒரு பால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி

கடவுளர் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம் பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம் போற்றி
கூறுதற் கரியநின் ஏறு போற்றி

ஏகல் வெற்பன் மகிழும் மகட்கிடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்
தாடும் நாடகம் என்றாங்

கென்றும் போற்றினும் என்தனக் கிறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடவுள் ஆழி - தெய்வத் தன்மையுடைய சக்கரம்.
இயக்கர் கோன் - யட்சர் தலைவன் குபேரன்.
மாநிதி இரண்டு சங்கநிதி, பதுமநிதி ``செல்வம்`` இரண்டில் பின்னது திருவருள் மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர், கோல் முறை - பற்றிக் கொண்டு செல்லும் முறை.
வலித்து - துணிந்து தெறிக்க - துள்ளி விழும்படி.
`மாணிக்கு உயிர் அளித்த` என்க.
அரவம் - ஓசை இடையின்றி - காலம் தாழ்த் தாமல் ஒல் அனல் - வல்லதாய தீ `கரும்பொடு பூப் பொழி பட` என்க.
கிழித்தென - கிழித்தாற்போல்.
விலங்கல் விண்டு விழுந்தென - மலை பிளந்து வீழ்ந்தாற்போல; `விழ` என ஒருசொல் வருவிக்க.
பரிகலம் - உண்டகலம்; என்றது `மிச்சில்` என்றபடி முதல் - தாள்; திருவடி ``உண்டல்`` என்றது உண்ண அமர்ந்ததைக் குறித்தது.
நொய்தில் - எளிதாக.
கை வளம் - வள்ளன்மை உளை - பிடரி மயிர், சிங்கம், நரசிங்கம் சேவகம் வீரம்.
வரி - புள்ளிகள்.
எறுழ் வலி - மிக்க வலிமை.
உரகம் - பாம்பு.
ஒப்பனை - அலங்காரம், கடுக்கை - கொன்றை.
வேண்டா - விரும்பும்படி ஆலம் - நஞ்சு.
பில்குதல் - சிந்துதல்.
ஏகல் வெற்பு - மிகப் பெரிதாகிய மலை.
`முற்றக் கூறிய போற்ற ஆற்றல் இல்லை` என்க.
பொலம் பூ அடி - பொற்பூப்போலும் திருவடிகள்.
``போற்றி போற்றி`` என்னும் சொற்கள் பொருள் உணர்த்தாது, தம்மையே தாம் உணர்த்தி நின்றன.
அவற்றைச் செயப்படுபொரு ளாக்கி, அவற்றின் பயன் `ஆக்குவன்` என ஒரு சொல் வருவித்து, ``ஆயினும்`` என்பதற்கும், ``பூவடிக்கு`` என்பதற்கும் முடிபாக்கி முடிக்க.
``பூவடிக்கு`` என்பதில் `பூ` என்பது இதன் முதற் செய்யுளின் முதலோடு சென்று மண்டலித்தல் காண்க.
கோயில் நான்மணிமாலை முற்றிற்று.
சிற்பி