பட்டினத்து அடிகள் - திருக்கழுமல மும்மணிக்கோவை


பண் :

பாடல் எண் : 1

திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ
றிமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த

வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும்
முதிரா இளமுறை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை

இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின்

பொலிவினொடு மலர மறையோர்
கழுமலம் நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்
கொன்றா வந்த குன்றா வெள்ளத்

துலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னா யோவென் றழைப்பமுன் நின்று

ஞான போனகம் அருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யார் என
அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுயை செவியன் என்றும்

பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இம்முதற் பாட்டில் தோணியப்பர் ஆளுடைய பிள்ளையார்க்கு அருள்புரிந்த வரலாறு சுருக்கமாகச் சொல்லப் படுகின்றது.
பவளப் பெருவரையைப் பற்றிப் படர்ந்த ஒரு மரகதக் கொடி போல உமையம்மை தனது ஒரு கூற்றில் விளங்கச் சிவபெருமான் விளங்குகின்றான்.
திரு - அழகு.
முகிழ்த்த - முளைத்த.
அலை கதிர் - வீசுகின்ற ஒளிக்கதிர்களையுடைய, `பரிதி ஆயிரம் இருந்தென` என இயையும்.
தொகுத்த வரல் முறை - அக்கதிர்களை முழுமையாகப் பெற்று உதயமாகி வருகின்ற முறை.
மலர் மிசை - தாமரை மலரின் மேலிடத்தில்.
உனது முகமாகிய பகலவனைக் காணுந்தோறும் உமை யம்மைதன் திருமுகமாகிய தாமரை மலரும் காலத்தைப் பொருந்தி மலரவும், (கொழுந்து - உமை) அவளது நெற்றியாகிய பிறையைக் காணுந்தோறும் உனது வாயாகிய செவ்வாம்பல் மலரவும், உனது கைகளாகிய செந்தாமரை மலர்கள் அவளது தனங்களாகிய அமிர்த கலசத்தைத் தாங்கவும், அவளது கண்களாகிய குவளை மலர்கள் உனது திருமேனியின் ஒளியாகிய நிலவினால் மலரவும் `இங்ஙனமாக நீ வீற்றிருந்துழி` என்க.
`கழுமலம்` என்னும் தலம் அன்றோடு அழிந் தொழியாது நிலைத்து நின்று வழி வழி விளங்க வேண்டிச் சிவ பெருமான் மேற்கூறியவாறு வீற்றிருந்தருளினான்.
`எப்பொழுது` எனின், நாகர் நாடும் (தேவர் உலகமும்) முதலில் மேலே மிதந்து, பின் உள்ளே மூழ்கி அடிநிலையிற்போய்விடும் படி மண்ணும், விண்ணும் வேறுவேறாகாது ஒன்றாகும்படி ஊழி வெள்ளம் பெருகிவந்த காலத்தில் அவ்வெள்ளத்தின் மேல் வீற்றிருந்தருளினார்.
உலகம் மூன்றிற்கும் களைகணாகி (பற்றுக்கோடாகி) வீற்றிருந்தருளினான்.
உலகம் முழுதும் மறைந்து போயினமையால் அக்காலம் அநாதி காலத்தோடு ஒத்தது.
முதல் இல் காலம் - அநாதி காலம்.
உலகம் நிலை தடுமாறிற்றாயினும் அவன் இனிதே வீற்றிருந்தருளினான்.
அவ்வாறு அவன் அன்று வீற்றிருந்தவாறே இன்றும் அக்கழுமல நகரில் தோணியில் தோணியப்பனாய் வீற்றிருக்கின்றான்.
வீற்றிருந்துழி - அவ்வாறு அவன் வீற்றிருக்கும் இடத்தில்.
(திருக்கோயிலில்) ``தாதை யொடு வந்த வேதியச் சிறுவன்`` என்க.
``பசி வருத்த`` என்றதும், அது காரணமாகப் பால் வேண்டித் தாயாரை மட்டுமே ``அன்னாயோ`` என அழைத்தார் என்றதும்.
`குழந்தைமையை விளக்கிய உபசார மொழி` எனக் கொண்டு, நீருள் மூழ்கிய தந்தையாரைக் காணாமையால் சுற்றும், முற்றும் பார்த்து அழுத பிள்ளையார், திருத்தோணிச் சிகரத்தைப் பார்த்து, ``அம்மே! அப்பா!!`` என்று இருவரையுமே அழைத்தருளி அழுதருளினார், என அருளிச் செய்தார் சேக்கிழார்.
இங்கு ``ஞான போனகம்`` என்றதைச் சேக்கிழார் 1 ``எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம்`` எனவும், அடிசில் எனவும் கூறி விளக்குகின்றார்.
அதுவேறாயாம்.
இங்கு அருள் என்றது திருமுலைப் பாலை.
`ஞான போனகத்தை அருளோடு அட்டிக் குழைத்த திரள்` என்க.
அட்டுதல் - கலத்தல்.
திரள்- உருண்டை.
ஆனா - நீங்காத.
`போனகத்தில் அருளை அட்டி` எனினும் ஆம்.
காட்ட - காட்டும்படி.
`பிள்ளையார் கையிற் சுட்டிக் காட்டிய போதிலும் தந்தையார் கண்டிலர் என்றே சேக்கிழார் கூறினார்.
இடையே இரண்டடி முச்சீர் பெற்று வந்தமையால், இஃது இணைக் குறள் ஆசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 2

அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் இருள்புகுதுங்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்க்
கண்டத்தார் தாமார் அதற்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடியேனுடைய அன்பாகிய ஆறாயும், பொருளின் திரளாயும் உள்ள புகலி` நாதன், - இருள் புகுதும் கண்டத்தான் - என்பாரைக் காதலித்துக் கை தொழுவார்க்கு அருளின் கடல்.
(ஆகலான்) அதற்கு அண்டத்தார்தாம் ஆர்` என இயைத்துக் கொள்க.
புகலி நாதன், சீகாழியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்.
`கடல், ஆறு, திரள்` என்பன உருவகங்கள்.
பொருளாவது ஞானம்.
``ஞானத் திரளாய் நின்ற பெருமான்`` என ஞானசம்பந்தரும் அருளிச் செய்தார்.
`இருள் புகுதும் கண்டத்தான்` என்பார், `நீலகண்டன்` முதலிய பல பெயர்களைச் சொல்லிச் சீகாழிப் பெருமானைத் துதிக்கும் அடியார்கள் `அவர்களைக் கைதொழுவார்க்கே சீகாழிப் பெருமான் அருட் கடலாய் இருந்து பேரருள் புரிகின்றான்` என்பதாம்.
அதற்கு - அந்தப் பேற்றை விரும்புதற்கு.
அண்டத் தார்தாம் - தேவராயினும்.
ஆர் - என்ன உரிமையுடையர்.
`அடியார்க்கு அடியராயினார்க்கு உரித்தாகிய சீகாழிப் பெருமானது திருவருள் தேவர்களாலும் பெறுதற்கரிது` என்பதாம்.
``அருளின்`` என்பதில் இன், வேண்டா வழிச் சாரியை.

பண் :

பாடல் எண் : 3

ஆரணம் நான்கிற்கும் அப்பா
லவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்கரி
யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப்
பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங்
கடந்த கருப்பொருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எந்தை புகலிப்பிரான்`` என்பதை முதலிற் கொள்க.
நடுவாய் - உள்ளீடாய்.
பொழில் - உலகம்.
அந்தக்கரணம் - உட்கருவி.
அவை மனம் முதலியன.
கருப்பொருள் - உயிர் நாடியான பொருள், இது புகலிப் பிரானது மாண்பினை வகுத்தருளிச் செய்தவாறு.

பண் :

பாடல் எண் : 4

கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறல்
மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்
தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி
செந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து

நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய்

மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமயக்
கொழுந்தையும் உடனே கொண்டிங்

கெழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-11 `பாழ் அறையாய்க் கிடந்த சிந்தையை உனக்குப் பள்ளியறையாக்கி` என்க.
அடி -1 கருமுதல் தொடங்கி (தாய் வயிற்றில் கருவாய் இருந்த காலம் முதல்) அது பாழ் அறையாய்க் கிடந்தது.
`பாழ் அறை` என்றது, உதவாக் குப்பைகள் நிரம்பிக் கிடந்த இடம்.
அப்பொருள்கள் காமம், வெகுளி முதலியன.
காமம் - ஆசை.
அக்குப்பைகளை அகற்றியவாறும், பின்பு தூய்மை செய்யப்பட்டவாறும் தொடர்ந்து கூறப்பட்டன.
மை இருள் நிறம் - மைபோலும் பேரிருளை ஒத்த நிறம்.
இதைக் கடாக்களுக்குக் கூறியது இன அடை.
கடா - எருமைக் கடா.
இஃது உருவகம்.
முருட்டுக் குணம் பற்றி ஐம்புல ஆசைகள் எருமைக் கடாக்களாக உருவகிக்கப்பட்டன.
மதன் - மதம்; செருக்கு.
யாப்பு - கட்டு அருள் - ஞானம்.
இருள் - அஞ்ஞானம் துன்ப இருள் - துன்பத்திற்கு ஏதுவான இருள்.
அஞ்ஞானம் துன்பத்திற்கு ஏதுவாதல் கூறினமையின் ஞானம் இன்பத்திற்கு ஏதுவாதல் சொல்லாமே பெறப்பட்டது.
மெய் - வாய்மை.
``சிந்தை`` இரண்டில் முன்னது `சித்தம்` என்னும் அந்தக் கரணம்.
பின்னது இருதயம்.
தவிசு- ஆசனம்.
அடு கதிர் - வெங்கதிர்; ஞாயிறு.
அடைய - இடைவெளியின்றி ஒன்றாகும்படி.
ஆதி வெள்ளம் - முன்பு ஒரு பிரளயத்தில் தோன்றிய வெள்ளம்.
`இரு சுடர்களும் அந்த வெள்ளத்தில் நுரை போல மிதக்க` என்க.
வரை பறித்து இயங்கும் மாருதம் கடுப்ப - மலைகளையெல்லாம் புரட்டி வீசும் காற்று கடுவேகமாய் அடிக்க.
காலம் - முடிவு காலம்.
மற்று, அசை.
புணையாய் - புணைபோல `வானவர் பலரும் திருக்கழுமலப் பெருமானைச் சார்ந்து பிழைத் திருந்தனர்` என்பதாம்.
விடங்கன் - அழகன்.
பிரளய அழகன், தோணியப்பன்.
``உடனே கொண்டு`` என்பதில் ஏகாரத்தை மாற்றி, `உடன் கொண்டே` என உரைக்க.
`என் சித்தம் முன்பு பாழ் அறை யாய்க் கிடந்தது போல இல்லாமல் பள்ளியறையாகும்படி செய்துள்ளேன் ஆதலின் அதில் நீ உன் துணைவியுடன் வந்து இருக்கத்தகும்` என்பதாம்.
பாழ் அறையாய்க் கிடந்தது அஞ்ஞான நிலையில், பள்ளியறையானது மெய்ஞ்ஞான நிலையில்.
எனவே, இறைவன் அஞ்ஞானிகளது உள்ளத்தில் புகாது, மெய்ஞ்ஞானிகளது உள்ளத்தில் புகுதல் கூறப்பட்டதாம்.
ஈற்றயலின் அயலடியும் முச்சீராய் வந்தமையின் இதுவும் இணைக் குறளாசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 5

மானும் மழுவுந் திருமிடற்றில் வாழுமிருள்
தானும் பிறையுந் தரித்திருக்கும் வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வாழும்`` என்பது `செய்யும்` என் எச்சம்.
``இருக் கும்`` என்பது `செய்யும்` என் முற்று.
தான், அசை.
ஏனைய வெளி.

பண் :

பாடல் எண் : 6

ஒளிவந்த வாபொய் மனத்திருள்
நீங்கவென் உள்ளம்வெள்ளம்
தெளிவந்த வாவந்து தித்தித்த
வாசிந்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த
வாகடை சாரமையத்
தெளிவந்த வாநங் கழுமல
வாணர்தம் இன்னருளே
.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மனத்து`` என்பதனோடு பின் வரும்``என்`` என்பதைக் கூட்டி முதலிற் கொள்க.
ஒளி ஞானம்.
``ஆறு`` என்பன பலவும் செய்யுள் முடிபாய்க் கடைக் குறைந்து `ஆ` என நின்றன.
அவை அனைத்திலும் எண்ணும்மை விரித்து அவற்றை `வியப்பு` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
கழுமல வாணர்தம் இன்னருள் எளிவந்த வாறு`` என மாற்றிக் கொள்க.
பொய் - திரிபுணர்ச்சி.
வெள்ளத் தெளி- மிகுதியான தெளிவு.
சிந்தியாது ஒரு களி - எதிர்பாராத ஒரு பெரு மகிழ்ச்சி.
கைவருதல் - இடர்ப்பாடின்றி இனிது நிகழ்த்துதல்.
கடை சார் அமையம் - முடிவு கிட்டும் காலம்; இறுதிக் காலம்.

பண் :

பாடல் எண் : 7

அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத் தாடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவான் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யான் அவர்
தந்தைய ராகியுந் தாய ராகியும்
வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை
யான் அவை

தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது யான்இதன்
மேல்இனி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந்

தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்

கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மிகக் கனிந்த` என்றற்கு ``அருள் பழுத்து அளிந்த`` என்றும், பிறிதொருவகைக் கனியன்று`, ``கருணை வான்கனி`` என்றும் ஈரிடத்து எடுத்துக் கூறினார்.
``கனி, காதல், வாரி`` என்பனவும் ``வாண, யோகி, எந்தை`` என்பனபோல விளிகளே.
காதல் - பேரன்பு.
மாணிக்கவாசகர், ``என்னுடை அன்பே`` என்றதுபோல இவரும் இறைவனை, `தீராக் காதலே`` என விளித்தார்.
வாரி - கடல்.
குடுமி - சிகரம்.
மழை - மேகம்.
காட்சி - தோற்றம்.
``இருந்த`` என்னும் சினைவினை முதல் மேலதாய்.
``யோகி`` என்பதனோடு முடிந்தது.
பரமயோகி - மேலான யோகி.
``பாவையுடன் இருந்த யோகி`` என்றது சிவபெருமானது அதிசய நிலையை வியந்ததாம்.
``அகலம், நிகிலம்`` என்பன எஞ்சாமைப் பொருளை உணர்த்தும் வடசொற்கள்.
யோனி - பிறப்பு வகையின் உட்பிரிவுகள்.
நிகலமும் - அனைத்துப் பொருள்களும்.
இறைவன் செய்வன எல்லாம் சங்கற்ப மாத்திரையான் ஆதல் பற்றி, ``நினைந்த நாள்`` என்றார்.
``யாரும், யாவையும்`` எனத் திணை விராய் எண்ணப்பட்டன சிறப்புப்பற்றிப் பின் பல இடத்திலும் உயர் திணை முடிபு கொண்டன.
``அவர்`` என்பதிலும், ``எனக்கு`` என்பதிற் போல, `அவர்க்கு` என நான்காவது விரிக்க.
பின் வந்த ``தந்தையர், தாயர்`` என்பன பொருட்பன்மை பற்றாது இடப்பன்மை பற்றியும், காலப்பன்மையும் பற்றி வந்த பன்மை யாகலின் அவை ``யான்`` என்னும் ஒருமையோடு மயங்கின.
``நிலன்`` என்பன உலகங்கள்.
``பிறிதல்`` என்றது.
`இன்னும் கூறில்` என்றபடி.
அனைத்து - அத் தன்மைத்து.
`அனைத்தேயாம்` என ஆக்கம் விரிக்க.
``இலனே`` என்னும் ஏகார வினா எதிர்மறுத்து நின்றது.
எனவே, `திண்ணமாக இைளத்து நிற்கின்றேன்` என்றதாம்.
இதன்பின் `ஆயினும்` என்பது வருவிக்க.
நந்தா - கெடாத.
சோதி - ஒளி, ஞானம் `சோதியாகிய அஞ் செழுத்து` என்க.
சோதியின் காரணம் சோதியாக உபசரிக்கப்பட்டது.
`அஞ்செழுத்தை நவிலும் தந்திரம்` என்க.
தந்திரம் - நூல்; என்றது அதன்கண் கூறப்பட்ட நெறிமுறைகளை, `பயின்றவரொடு` என ஒடு உருபு தொகுக்கப்பட்டு.
அதனானே ``பயின்றவர்`` என்பதன்பின், பகர ஒற்று மிக்கது.
``இயன்றதோர் பொழுது`` என்றது, ``சொன்னது`` என்பதனோடும் இயையும்.
அதனால் `கட்டளையின்றி, நேர்ந்த பொழுது செய்யும் இயல்பினேன்` என்றவாறாம்.
``இட்டது மலரா`` என்றதனால், `இடப்பட்டன மலரல்லாத பிறவாம்` என்பதும், ``சொன் னது மந்திரமாக`` என்றதனால், `சொல்லப்பட்டன மந்திரம் அல்லாத பிறவாம்` என்பதும் பெறப்பட்டன.
`இரண்டாகிய கடல்` என்க.
இன், வேண்டாவழிச் சாரியை.
`நீ அருள் பழுத்து அளிந்த கனியாதல் பற்றி இதனை உனக்கு உணர்த்துவேனாயினேன் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 8

கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் உடலாம்
முழுமலத்தை ஒர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முக்கட் பெருமான்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
``கடலான`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது.
`துன்பத்தை அடல் ஆம் உபாயம்` என்க.
அடல் - அழித்தல், முழு மலம் - பெரிய அசுத்தம் ஓர்கிலார் - எண்ண மாட்டார்.
எனவே, `அதில் பற்றுச் செய்து துன்புறுவர்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 9

தொழுவாள் இவள்வளை தோற்பாள்
இவளிடர்க் கேஅலர்கொண்
டெழுவாள் எழுகின்ற தென்செய
வோஎன் மனத்திருந்தும்
கழுமா மணியைக் கழுமல
வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக் கண்டு வந்ததென்
றாலொர் வசையில்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கழுமல வாணன்`` எனப் பின்னர் வருதலால் முதற் கண் வாளா ``தொழுவாள்`` என்றாள்.
``இவள்`` எனப் பின்னும் கூறியது, அவளது அவல மிகுதியை உணர்த்தற்கு.
``இடர்க்கு`` என்பது போலும் நான்கன் உருபேற்ற பெயராகலின், அதற்கு, `இடர் தீர்தற் பொருட்டு` என உரைக்க.
அலர் - ஊரார் தூற்றும் பழிச்சொல், ``கொண்டு`` என்றது `தனைப் பொருட்படுத்தாது` என்றபடி.
`எழு கின்றது என் செயவோ` - என்றது, `இவள் இவ்வாறு எழுந்து செல் வதால் பயன் அடையப்போகின்றாளா` என்றபடி.
இவளது எழுச்சி கழுமல வாணனைக் கண்டு வந்ததாய் முடியுமாயின் ஓர் வசையில்லை என்க.
அஃது இயலாது ஆதலின் மேலும் வசைதான்` என்பது குறிப் பெச்சம்.
`மனந் திருந்தும்` என்பது பாடம் அன்று.
இது கைக்கிளைத் தலைவி தலைவன் உள்வழிச் சேறல்.
செவிலி இரங்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 10

வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலி நாயக இகல்விடைப் பாக

அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக்
காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுங்கண்நாட் டத்துக்
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை

யாயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்ணில் கோடி எனைப்பல வாகி

இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்
அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழிவழி யாகி வழிகுழி யாகி

ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த தெந்தைநின்
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை

ஒவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றுங் துணிவுபோன் றனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வசை இல் காட்சி- குற்றம் இல்லாத தோற்றம்.
அஃது என்றும் ஒடிபடித்தாய் இருத்தல்.
`காட்சியால்` என உருபு விரிக்க.
இசை - புகழ்.
சீகாழித் தலம் பன்னிரு யுகங்களில் யுகத்திற்கு ஒன்றாக பன்னிரு பெயரைப் பெற்றது.
அப்பெயர்களாவன பிரமபுரம், வேணு புரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம்` என்பன.
இவை ஞான சம்பந்தர் பாடல்கள் பலவற்றில் எடுத்தோதி அருளப்பட்டிருத்தல் காண்க.
மை - குற்றம்.
அமை நாண் தோள் - மூங்கில் நாணத் தக்க தோள்.
சேவகம் - வீரம்.
மாமுது தலைவன் - பெரிய, பழைய தலைவன்.
ஆதியான் - முதற் கடவுள்.
கல்லா உளம் - கல்வியைக் கல்லாத மனம்.
`அதன்கண் தோன்றும் புல்லறிவு` என்க.
தொடர - தொடர்ந்து நிகழ்தலால்.
மறந்து - ஆன்றோர் உரைகளை மறந்து.
வெறுங் கண் - கல்வியறிவொடு கூடாத கண்.
இதனை, ``புண்`` 1 என்றார் திருவள்ளுவர்.
`தண்` என்பது பாடம் அன்று.
நாட்டம் - பார்வை.
`நாட்டத்தினால்` என மூன்றாவது விரிக்க.
`யாண்டை எல்லாமாயினும்` என மாற்றிக் கொள்க.
``பிற`` என்பதின்பின்னும் `ஆயின்` என்பது வருவித்து `பிறவாயினும்` என்க.
எனவே, `அஃது உண்மையன்று` என்றதாயிற்று.
`ஆவன ஆகிய பலவும் அழிவனவேயன்றி, ஒன்றேனும் நிலைத்திருப்பதன்று` என்பதாம்.
பின் வந்த ``பலவும்`` என்பதற்குமுன் `அவை` என்பது வருவிக்க.
``போவது`` முதலிய மூன்றும் இறப்பு, எதிர்வு, நிகழ்வு ஆகிய கால நிகழ்ச்சிகளைக் குறித்தன.
தெள் நீர், கடல் நீர்.
`நீரால்` என உருபு விரிக்க.
``ஞாலம்`` என்றது கரையை, என - என்று சொல்லும்படி இதன்பின் ``பல`` என்றது எண்ணிலியை.
உளவாதல் - தோன்றுதல்.
காணா - காணப்படாது.
துவ்விகுதி தொகுத்தலாயிற்று.
`இல்லன உள்ளன போலவும், உள்ளன இல்லனபோலவும் தோன்ற` என்க.
இருள் - அறியாமை என்றது திரிபுணர்ச்சியை அன்னதும் அன்னது - அந்தத் திரிபுணர்ச்சியும் நிலையாததே.
அடுக்கும் - பொருந்தும்.
`அஃது` என்னும் ஆய்தம் தொகுக்கப்பட்டு `அது` என நின்றது.
என் எனின் - எவ்வாறு எனின்.
கொட்புறுதல் - சுழலுதல்.
ஒன்றின் - ஒரு பொருளில்.
ஒன்று - அதனின் வேராய ஒன்றின் உணர்வு.
தடுமாற - திரிவுபட.
`ஒழிவின்று தடுமாற` என்க.
`இன்றி` என்னும் வினை யெச்சத்து ஈற்று இகரம் செய்யுளுள் உகரமாய்த் திரிந்தது.
`கட்புலன் இல்லா ஒருவனது தடுமாற்றம் அவன் கண்பெற்றுழி நீங்குதல்போல, வெறுங் கண் நாட்டத்தால் எனக் உண்டாய தடுமாற்ற.
நினது அருள் நாட்டம் பெற்றவழி நீங்குவதே` என்பார்.
``அன்னதும் அன்னதே அடுக்கும்`` என்றார்.
கருணையின் - நீ அருளுதலின்.
(வழங்கினமை யால்) மேவரும் - விரும்பத் தகும்.
விகற்பம் வேறுபாடு.
துணிவு - உண்மையுணர்வு `போன்றது என` என்பது `போன்றென` எனக் குறைந்து நின்றது.
ஓவிய வகைகள் கட்புலனுக்கு வேறு வேறு பரிமாணம் உடைய வேறு வேறு பொருள்களாய்த் தோன்றுமாயினும் மெய்ப் புலனுக்கு ஓவியந் தோன்றாது அவற்றிற்கு நிலைக்களமாகிய சுவர் ஒன்றே தோன்றுதல் போல, மருள் நாட்டத்திற்கு அவ்வப் பொருளும் தனித் தனியே நிலை பெறும் பொருள்கள் தோன்று மாயினும் திருவருள் நாட்டத்தில் திருவருளாகிய ஒன்றினையே பற்றுக் கோடாகப் பற்றி நிலைபெறுதல் தோன்றும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 11

எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இன வேகம்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இனம் - கூட்டம்.
வேகம் - விரைந்த செலவு.
கலியான் இமிரும் பல் நா - ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற பல நாக்குகள்.
`இமிரும்` என்னாது, `நிமிரும்` எனினும் ஆம் `பாம்புகளின் பல நாக்குக்களை யுடைய சடை` என்க.
பூம் புகலி - அழகிய சீகாழி, இதழிப் போது எனவே எழுந்திருந்தாள் - `கொன்றைப் பூ மாலை` என்று சொல்லிக் கொண்டே புறப்பட்ட இவள்.
என் செய்வாள் - என்ன செய்து அதனை மாட்டு அன்புடையவர்களே!) இன்னம் சின ஏறு காட்டுதிரேல் தீரும் - இனியொரு முறையும் முன்பு அப்புகலிப் பெருமானை இங்குச் சுமந்து வந்த சினவிடையைக் காட்டுவீர்களாயின் இவள் நோய் தீரும் (அஃதறியாது வேறு பரிகாரங்களை நீவிர் செய்து பயன் என!) இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு வெறியாட்டெடுத்த நற்றாய் செவிலித் தாயரை நோக்கித் தோழி அறத்தொடு நின்றது.
``எழுந்திருந்தாள்`` என்பது ஒருசொல்.

பண் :

பாடல் எண் : 12

போதும் பெறாவிடில் பச்சிலை
உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்
றேஇணை யாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா
மரைசென்று சார்வதற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காய் கனிகளை நோக்கப் போது (பூ) எளிதாகலின், ``போதும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
``ஏதும்`` என்னும் உம்மையும் அப்பொருட்டு.
`எங்கும் பச்சிலை உண்டு; புனல் உண்டு` என்க.
``அன்றே`` என்பது தேற்றம்.
செப்பு - கிண்ணம்.
சூது - சூதாடு கருவி `இவை இணையாகப் பெறா முலை` என்க.
முலை.
சினையாகு பெயர்.
இணை - ஒப்பு.
`வண்டு பெறாத` என இயையும்.
இன் தாது - இனிய மகரந்தம்.
`தேனே யன்றித் தாதும் பெறாத தாமரை` என்க.
எனவே, `தாமரை போல்வது அல்லது தாமரை அன்றென்ற வாறாம்.
ஆகவே, `வண்டு தாதும் பெறாத தாமரை` என்றது விபாவனையாம் `அடித் தாமரை சென்று சார்வதற்குப் போதும் பெறாவிடில் பிற உண்டு? என்க.
(இப்பிரபந்தத்தில் இன்னும் 18 பாடல்கள் இருக்க வேண்டும்.
ஆயினும் நல்ல பதிப்புக்களில் இந்த 12 பாடல்களே உள்ளன.
ஆனூர் சிங்காரவேல் முதலியார் பதிப்பகத்தில் எஞ்சிய பாடல்கள் காணப்படுவதாகவும், அவைகளை அறிஞர்கள் `ஆசிரியர் வாக்கல்ல` என்று கருதுவதாகவும் சென்னைச் சைவ சித்தாந்த சமாஜத்து 1940 ஆம் ஆண்டுப் பதிப்பில் குறிப்புத் தரப்பட்டுள்ளது.
ஆனூர் சிங்காரவேல் முதலியார் பதிப்புக் கிடைக்கவில்லை.
) திருக்கழுமல மும்மணிக்கோவை முற்றிற்று.
சிற்பி