பட்டினத்து அடிகள் - திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது


பண் :

பாடல் எண் : 1

இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றியொன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே

மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே
பாவகன் பரிதி பனிமதி தன்னொடும்
மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்
தண்ணொளி ஆரம் தாரா கணமே
விண்ணவர் முதலா வேறோர் இடமாக்

கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்
எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே
அணியுடை அல்குல் அவனிமண் டலமே
மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே
ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே

வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி
வானவர் முதலா மன்னுயிர் பரந்த
ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே
நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்
சுருங்கலும் விரிதலும் தோற்றல்நின் தொழிலே

அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே
என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ
டொன்றிய துப்புரு இருவகை ஆகி
முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி

அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ
டேழுல காகி எண்வகை மூர்த்தியோ
டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி
எவ்வகை அளவினில் கூடிநின்று
அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அகவல் ஆகிய ஒருவகைப்பாவே அந்தாதியாய் வரப் பத்துப் பாடல்களால் செய்யப்படுவது `ஒருபா ஒருபஃது` என்னும் பிரபந்தமாகும்.
`பொரு கடலாகிய மேகலையை இயல்பினின் உடைய இருநில மடந்தை முகம் எனப் பொலிந்த ஒற்றி மாநகர்` என இயைக்க.
``உருவின் பெற்றி ஒன்றாகப் பெற்றோர் யாரே`` என்பதனை இறுதியிற் கொள்க.
துன்னும் - நெருங்கிய.
`நின் சடை மின்னின் பிறக்கம்; நின் சென்னியில் வடிவு அண்டம்.
நின் நுதல் நேர் நாட்டம் மூவகைச் சுடரும்; ஆரம் தாராகணம்; நின் ஆகம் விசும்பே; தோள் எண்டிசை; உடை கடல்; அல்குல் அவனி மண்டலம்; தாள் இணை வழக்குப் பாந்தள்; உயிர்ப்பு மாருதமே; நின் வாய்மொழி ஓசை முழுதும்; நின் உணர்வு ஞானத் தொகுதியே; நின தெழிவின் விளைவுகள் உலகு நிற்றலும் சுருங்கலும், விரிதலுமே, நின் இயல்பு அவற்றின் முயற்சியே.
அதுவும் இமைத்தலும் விழித்தலுமே; என்று இவை முதலாம் இயல்புடை வடிவினோடு உரு இருவகை ஆகி, எண்வகை மூர்த்தியோடு முத்திறக் குணம் முதலிய ஆகி, எண் இறந்து ஓங்கி, எவ்வகை அளவினும் காடு நின்று அவ்வகைப் பொருளும் நீ ஆகிய இடத்து (நின்) உருவம் ஒன்றாகப் பெற்றார் யாரே` என இயைத்து முடிக்க.
`சடை ஒரு வகையது, சென்னி ஒரு வகையது, கண்கள் ஒரு வகையன, மற்றும் பலவும் பலப்பல வகையன முழுமையாகப் பார்க்கும் பொழுதும் ஒரு கூறு ஆண், ஒரு கூறு பெண் என்றால் உனது திருமேனியை உலகில் உள்ள என் இனத்து உடம்பிலும் வைத்து ஒருதலையாக உணர்ந்தோர் ஒருவரும் இலர்` என்பதாம்.
இவற்றிடையே, `இயல்பு களும் உலகில் உள்ள ஒத்த உயிர் இனத்தின் இயல்பாகவும் இல்லை` என்பது கூறப்பட்டது.
இதனால், `இறைவன் சேதனம், அசேதனம் என்னும் இரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றும் அல்லன்` என்பது அவனது தடத்த இயல்பானே உணரப்படுதல் கூறப்பட்டது.
பிறக்கம் - விளக்கம்.
பாலகன் - அக்கினி.
நுதல் நேர் - முகத்தில் பொருந்திய.
நுதல், ஆகுபெயர்.
தண் ஒளி - வெள் ஒளி.
வெள் ஒளி ஆரம், தலை மாலை.
``விண்ணவர் முதலா`` என்பதில் ``முதலா`` என்பது முனிவர், பிரமன், விட்டுணு ஆகியோரைக் குறித்தது.
வேறு, மக்கள் உலகின் வேறு.
கோலம் - அழகு.
ஆகம் - உடம்பு.
இருங்கடல் - கரிய கடல்.
அல்குல் - பிருட்டம்.
இதுபோலும் உயர்ந்தோர் செய்யுட்கள் பலவற்றிலும் `அல்குல்` என்பது ஆடவர்க்கும் உரிய உறுப்பாதல் வெளிப்படையாகவே சொல்லப்படவும் அதற்கு இக்காலத்துச் சிலர் இடக்கர்ப் பொருள் கொண்டு பழித்துரை கூறுதல் இரங்கற்குரியது.
அவனி மண்டலம் - பூ மண்டலம்; நிலத்தது அகலம்.
பாந்தள் - ஆதிசேடன்.
வழக்கு - இயக்கம்.
மாருதம் - காற்று.
உயிர்ப்பு - மூச்சு.
இறைவனது உணர்வு உள்நின்று உணர்த்தவே உயிர்களின் உணர்வு எதனையும் உணர்தல் பற்றி `அவனது உணர்வு உயிர்களின் உணர்வுத் தொகுதியே` என்றார்.
`முயற்சியே, முயற்சியும்` என `முயற்சி` என்பதை இரட்டித்துக் கொள்க.
``அதன்`` என்பதைத் தனித் தனிக் கூட்டுக.
அமைத்தல் - ஆக்குதல்.
தொழில் - தொழிலின் விளைவு; ஆகுபெயர்.
``இமைத்தல்`` என்பது கண்ணை மூடுதலைக் குறித்தது.
`கண்ணை மூடிக் கொள்ளுதல்` என்பது ஒன்றையும் நினையாமையையும், `விழித்தல்` என்பது நினைவு எழுதலையும் இலக்கணை வழக்காற் குறித்தன.
`இறைவன் நினைவை ஒடுக்கலால் உலகம் ஒடுங்குதலும், நினைவு கொள்ளுதலால் உலகம் தோன்றுதலும் உளவாகும்` என்றபடி.
இமைத்தல் விழித்தல்களை அமைத்தல் அழித்தல்களோடு எதிர்நிரல் நிறையாக இயைக்க.
``என்று``, எண்ணிடைச் சொல்.
துப்பு உரு - தூயதாகிய திருமேனி.
எண்வகை மூர்த்தி - அட்ட மூர்த்தம்.
``எண் இறந்த`` என்பதை `எண் இறப்ப` எனத் திரிக்க.
எவ்வகை அளவு - சிறுமை பெருமைகள்.
கூடி நிற்றல் - மிகுந்து நிற்றல்.
அவையாவன சிறியவற்றிற்கெல்லாம் சிறியர் ஆதலும், பெரியவற்றிற்கெல்லாம் பெரியன் ஆதலும்.
``இடத்து`` என்பது வினையெச்ச விகுதி.
`நீ இவ்வாறானவிடத்து, நின் உருவின் பெற்றி ஒன்றாகப் பெற்றார் யார்` என மேலே கூட்டி முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

இடத்துறை மாதரோ டீருடம் பென்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்
புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்
பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்
அருவமும் உருவமும் ஆனாய் என்றும்

திருவமர் மாலொடு திசைமுகன் என்றும்
உளனே என்றும் இலனே என்றும்
தளரான் என்றும் தளர்வோன் என்றும்
ஆதி என்றும் அசோகினன் என்றும்
போதியிற் பொலிந்த புராணன் என்றும்

இன்னவை முதலாத் தாமறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகிப்
பற்றிய அடையின் பளிங்கு போலும்

ஒற்றி மாநகர் உடையோய் உருவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒற்றி மாநகர் உடையோய்! (நின்) உரு, பன்னிய நூலின் பன்மையுள் தாம் அறி அளவையில் மயங்கி என்றும், என்றும்.
பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி அவ்வவர்க்கு அவ்வவையாகிப் பற்றிய அடையின் பளிங்கு போலும்` என இயைத்து முடிக்க.
முதல் நான்கு அடிகளில் கூறப்பட்டன சைவ புராணங்களையே பற்றி மாகேசுர மூர்த்தங்களுள் ஒவ்வொன்றையே சிவபெருமானது உண்மையியல்பாகக் கூறிப் பிணங்கும் பௌராணிகரும், அகப்புறச் சமயிகளும்.
`அருவம் ஆனாய்` என்றும், `உருவம் ஆனாய்` என்றும் எனக் கொண்டு கூட்டிக் கொள்க.
`இறைவன் உருவம் உடையனாயின் உயிர் வருக்கத்தவனாவன் ஆதலின் இறைவனுக்கு எவ்வாற்றானும் உருவமில்லை; அவன் அருவனே என்பார் மேற்கூறிய இருமதத்தவருள் ஒவ்வொரு சாரார்.
இனி, `இறைவன் உருவன் ஆகாவிடில் உயிர்களுக்குக் காட்சி வழங்குமாறில்லை.
அதனால் இறைவனுக்கு உருவமும், அவனுக்கென இடமும் உள்ளன` என்பாரும் மேற்கூறிய இரு மதத்தவருள் ஓரொரு சாரார்.
`திருமாலே இறைவன்` என்பார் பாஞ்சராத்திரிகள்.
`திசைமுகனே இறைவன்` என்பார் இரணிய கருப்ப மதத்தினர்.
`இறைவன் உளன்; ஆயினும் அவனை இன்னன் - எனக்கூற இயலாது` என்பார் மாயாவாதிகள்.
`இறைவன் இல்லை` என்பார் உலகாயதரும், மீமாஞ்சரரும், நிரீச்சுர சாங்கியரும்.
தளர்தல் நெகிழ்தல், அருளுதல், தளராமை இரங்காது ஒறுத்தலே செய்தல் தளர்தல் ஒறுத்தல் இன்றி அருளலே செய்தல்.
எட்டாம் அடியிற் கூறிய இரண்டும் சமணர் கூற்றுக்கள்.
ஆதி - ஆதி முத்தன்.
அசோகினன் - அசோக மரத்தின்கீழ் இருப்பவன்.
போதி - அரச மரம்.
புராணன் - பழையோன்.
`போதி நிழலில் இருப்போன் இறைவன்` என்பார் புத்த மதத்தினர்.
நூல் - வேறுபட்ட சமய நூல்கள்.
இவைகளையே உணர்ந்து வேத சிவாகமங்களை உணராதாரும், உணரினும் தெளியாதாரும் ஆசிரியராய் மெய்யுணர்வு கொளுத்தப் புகுதலால் இவை போலும் பிணக்குகள் உளவாகின்றன.
அதனையே திருமூல நாயனார், குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே
என்று அருளிச்செய்தார்.
``செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யேபோல்`` 2 அவரவரது அறிவு செயல்களுக்குத் தக இறைவன் பயன் அளிப்பவனேயல்லது, அவரது செயலையும் வீணாக்குபவன் அல்லன் ஆதலின் அவரவர் கருதுமாறே நின்று அவரவர்க்குப் பயன் தருவன் என்பது பற்றி ``அவ்வவர்க்கு அவ்வவை யாகி`` என்றார்.
அணங்கிய - துன்புற்ற.
அடை - அடைக்கப்பட்ட பொருள்.
பளிங்கு தன்னால் அடையப்பட்ட பொருளின் தன்மையாய் நிற்றல்போல, `இறைவன் தான் தனது அருள் காரணமாகத் துணையாய் அடையப்பட்டாரது கருத்திற்கேற்ற இயல்பினை உடையனாவன்` என்பதாம்.
பொன்மை நீலாதி வன்னம்
பொருந்திடப் பளிங்கு அவற்றின்
தன்மையாற் நிற்கு மாபோல்
என்றார் சிவஞான சித்தியிலும் 3 இடத்து - இடப்பாகத்தில் உரு, இங்கு `இயல்பு` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 3

உருவாம் உலகுக் கொருவன் ஆகிய
பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித்

தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோர்க் கொருமுகம் ஒழித்ததும்
பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்

திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதனின்
உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர

பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் செய்த வீரச் செயல்களாகப் புராணங்களில் சொல்லப்படுவன பல.
அவை திரிபுரம் எரித்தது, தக்கன் வேள்வியில் எச்சனது தலையைத் தடிந்தது, இந்திரன் தோளை ஒரு காலத்தில் முறித்தது, பிரமன் தலைகளுள் ஒன்றைக் கிள்ளியது, காமனை எரித்தது, இராவணனை மலைக்கீழ் அகப்படுத்தி நெரித்தது.
யமனை உதைத்தது முதலியன.
சிவபெருமானது வியாபகத்துள் அடங்காதது எப்பொருளும் இல்லை.
அஃதே எல்லாப் பொருளையும் அவன் தனக்கு வடிவாக உடைமையின் எப்பொருளும் அவனது உறுப்பே.
ஆகவே, பொது மக்களேயன்றி, `எப் பொருளும் இறைவன் வடிவே` என உணர்ந்தோரும் மேற்கூறிய செயல்களைச் சிறப்பாக எடுத்துக் கூறுவார்களாயின் அது நீ ஓரோர் காலத்து நிகழ்த்திய நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுவதாகுமேயன்றி, உன்னைப் புகழ்ந்த தாகுமோ? (ஆகாது.
ஏனெனில், ஒருவன் தனது உறுப்புக்களைத் தான் பலவகையில் இயக்குதல் அவனுக்குப் புகழாகுமோ? ஆகாமை போல என்பதாம்.)
உருவாம் உலகு - பருப்பொருளாய் உள்ள உலகு.
ஒருவன் - ஒப்பற்ற தலைவன்.
``வடிவு`` என்றது வியாபகத்தை.
சூழ்தல் - எண்ணுதல்.
வேள்வி மூர்த்தி - எச்சன்; யாக தேவன்.
விசும்பு ஆளி - இந்திரன்.
மறையோன் - பிரமன்.
ஆள்வினை - வீரம்.
``கண்டவர்`` என்பதன் பின் `ஆயின்` என ஒரு சொல் வருவிக்க.
படுப்பரோ - படுத்து உணர்வரோ.
``உலவாத் தொல் புகழ் ஒற்றியூர்`` என்பதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 4

பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினுஞ் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியாது

ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகி
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கும்

ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஓவாத் தொல் புகழ் .
முதல்வ`` என்பதை முதலிற்கொள்க.
பொருள் - வேதப் பொருள்.
பூ மகன் - மாயோனது உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமன்.
முதல் தொழிலாகிய படைத் தலைச் செய்தல் பற்றிப் பிரமனையே முதல்வனாகக் கூறினார்.
எனினும் அவனுக்கு மேலும் உயர் இனத்தவர் உளர் என்க.
இருள் - அறியாமை.
துணை - அவ் இருளைச் சிறிதே போக்கி உதவுவது.
எனவே, அத்தகைய யாக்கையின்றி இயங்கும் மன்னுயிர்`` - என்றார்.
`மன்னுயிர் வினையொடும் பிரியாது` என இயையும்.
வினை காரண மாக அவையடையும் மாற்றங்கள் உருவொடு உணர்வும், உயர்வொடு தாழ்வும், திருவொடு தெளிவுமாம்.
உரு - உடம்பு.
இது பருப்பொருள்.
உடம்பினின்றும்.
தோன்றும் உணர்வுகள் நுட்பப்பொருள்.
பணி - தாழ்வு.
திரு - செல்வம்.
திறல் - வெற்றி.
இன் உருபுகள் ஏதுப் பொருளவாய், ``வெவ்வேறாகி`` என்பதனோடு முடிந்தன.
``பிரியாது`` என்னும் எதிர்மறை வினையெச்சம், `நின்று` என்னும் பொருட்டாய், ``வினை யொடும்`` என்பதற்கு முடிபாயிற்று.
அவ் எச்சம், `ஒழுக்கம்`` என்னும் தொழிற் பெயர் கொண்டது.
உண்மை சிறப்பு.
ஒவ்வா - ஒன்றுக்கொன்று மாறுபட்ட.
``பன்மையுள்`` என்பதில் உள்ள ``உள்`` என்பதை இன்னாகத் திரிக்க.
`நின்னிடையாகியும்` என உம்மை கொடுத்து ஓதுதல் பாடம் அன்று.
பெயர்தல் - மறைதல்.
``பெருகி`` முதலிய நான்கு வினை யெச்சங்களும் ``விரவி`` என்பதனோடு முடிந்தன.
``விரவியும்`` என்னும் உம்மை சிறப்பு.
`விளக்கம்` வேறாய் நின்றன` என மாற்றிக் கொள்க.
``நின்னிடையதாகிய இம் மயக்கினை நின் அருள் பெற்றவர் அறியினல்லது, மற்றவர் அறிவரோ`` என முடிக்க.
மயக்காவது, உண்மை மாத்திரையால் பொதுப் படத் தோன்றி, `இன்னது` எனச் சிறப்புற விளங்காமை.
மயக்கு உடையதனை ``மயக்கு`` என்றது உபசாரம்.
``ஒற்றியூர்ப் பெருமானே பலவாகிய உயிர்கள் தம் வினை காரணமாக அடையும் அளவிறந்த மாற்றங்கள் பலவற்றிற்கும் நீயே இடமாய் நின்றும் அவற்றுள் ஒரு மாற்றத்தினையும் நீ சிறிதும் எய்தாது, மாற்றம் இல் செம் பொருளாயே நிற்கின்றாய்; இஃது எவ்வாறு` என்னும் அருள் பொருளை உனது அருளைப் பெற்றோர் உணர்வதன்றி, மற்றவர் உணர வல்லுநரல்லர்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
இஃது எல்லாப் பொருட்கும் இடமாய் நிற்பது ஆகாயமேயாயினும், அப் பொருள்களின் மாற்றங்களுள் ஒன்றை யேனும் அவ் ஆகாயம் எய்தாதது போல்வது.
இதனையே, `கலப்பினால் எல்லாமாய் நிற்கின்ற இறைவன் பொருள் தன்மையால் அவற்றின் வேறாகியும் நிற்கின்றான்` எனச் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன.

பண் :

பாடல் எண் : 5

மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை
துயக்க நின்திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
செய்வினை உலகினிற் செய்வோய் எனினும்
அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச்
சேய்மையும் நாள்தோறும்

என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவத்
துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒற்றி யூர! செஞ்சடை மாதவன் துன்னிய தூ மதியோய்! `சொற்கள் யாவும் நீ` என்பது உண்மையாய் இருக்கவும் அவை உனது இயல்பை அறிய இயலாத நிலைமையை நீ உயிர்களின் உள்ளங்கள் யாவும் உனது உறைவிடங்களேயாதல் உண்மையாய் இருக்கவும், அவ்வுள்ளங்கள் அறியாதவாறு கரந்து நிற்கும் கள்வன் ஆகின்றனை நீ.
உலகில் நிகழும் தொழில்களையெல்லாம் செய்பவன் நீயேயாதல் உண்மையாய் இருக்கவும், அத் தொழில்களால் விளையும் பயன்களுள் ஒன்றும் உன்னைப் பற்றாதவாறே அவற்றிற்குப் பற்றாகின்றனை நீ.
அடியார் கூட்டத்துள் நின்று உனது இன்பத்தினை விரும்பி உன்னை வணங்குகின்றவர்களது உள்ளங்களில் அந்த இன்பமாகவே விளைகின்றவன் நீ.
உயிர்கள் யாவும் இனத்தால் ஒன்றாயிருந்த போதிலும் உன்னை அடைந்தவர்க்கு அண்மையனாயும், அடையாதவர்க்குச் சேய்மையனாயும் இருக்கின்றவன் நீ.
இத் தன்மைகளை எண்ணிப் பார்க்கின் இவை அங்ஙனம் எண்ணிப் பார்ப்பவரது எலும்பையும் உருக்கும்.
ஆகவே, இத் தன்மைகளை உணர்ந்தவர்கட்கே ஊன் உடம்பு அற்றொழியும் நிலைமை, (பிறவா நிலைமை) உண்டாகும் என யாம் உணர்ந்தேம்` என்பது இப்பாட்டின் பொருள்.
மற்று இரண்டும் அசைகள்.
துயக்கம் - கலக்கம்.
சூழல் - சூழ்நிலை.
கனற்பட - குற்றம் உண்டாக.
இனம் - அடியார் கூட்டம்.
வாரி - வெள்ளம்; அல்லது கடல்.
வனப்பு, இங்கே சிறப்பு.
அணிமையனை ``அணிமை`` என்றும், சேய்மையனை ``சேய்மை`` என்றும் கூறியன உபசார வழக்கு.
காண்டல் - உணர்தல்.
``மன்னிய பெரும் புகழ்`` என்பது மதியணிந்தவ னாகிய இறைவனைச் சிறப்பித்தது.
சந்திரன் இறைவன் திருமுடிமேல் இருக்கப்பெற்றது தவத்தினால் ஆகலின் ``மாதவம் துன்னிய தூமதி`` என்றார்.
`செஞ்சடைக் கண் மாதவன் துன்னிய தூமதியோய்` என்க.

பண் :

பாடல் எண் : 6

தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யானென அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே றேறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும்

பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்
நாதன் நானென நவிற்று மாறே

மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யானென மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யானென உணர்த்திய வாறே
நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்

உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருநற் பூதப் படையோய் என்றும்
தெருளநின் றுககினில் தெருட்டு மாறே
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத்

தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையின் சுழலும் மாந்தர்க்
காதி ஆகிய அறுதொழி லாளர்
ஓதல் ஒவா ஒற்றி யூர
சிறுவர்தம் செய்கையிற் படுத்து
முறுவலித் திருத்திநீ முகப்படு மளவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் `நீ` என்னும் தோன்றா யெழுவாய் வருவித்துக் கொள்க.
நீ சடைமிசைத் தூமதி சூடுதல், `யான் தூநெறியை உணரும் அறிவு வடிவானவன்` என்பதைக் குறிக்கும் குறிப்பாம்.
நீ அறக்கடவுளாகிய ஆன் ஏறு (இடபம்) ஊர்தல், அறத்தின் வழி உலகை நடத்தும் முதல்வன் யான்` என அறிவிக்கும் குறிப்பாம்.
(தனி ஒரு பொருளேயாகிய நீதானே) ஒருகால் `சிவம்` என அஃறிணையாயும், ஒருகால் `சிவன்` என உயர்திணை ஆடூவாயும் ஒருகால், `சிவை` என உயர்திணை மகடூவாயும் சொல்ல நிற்றல், `உலகப் பொருள் அனைத்திலும் ஒருபடித்தாக நிறைந்து நின்று அவற்றை அவ்வவ் வழியில் இயக்குபவன் யான்` என்பதை அறிவிப்பதாம்.
மதி, கதிர், தீ (சோம சூரியாக்கினி) மூன்றையும் மூன்று கண்களாகக் கொண்டது `அந்தணர்கள் வேட்கும் முத்தீயும் உனது கண்ணொளிக்கூறே` என்பதை உணர்த்துவதாம்.
நான்கு கால்களை உடையதாய், ஒலிக்கும் தன்மையுடைய மான் கன்றைக் கையில் பிடித்துள்ளது, `நான்கு பகுதியதாய `வேதத்திற்குக் கருத்தா யான்` என்பதைத் தெரிவிப்பதாம்.
முனை மூன்றாய், அடி ஒன்றாய் உள்ள சூலத்தை ஏந்தியிருப்பது, `மூவர் மூர்த்திகட்கும் முதலாய் உள்ள ஒருவனாகிய இறைவன் நான்` என்பதை அறிவுறுத்துவதாம்.
அட்ட மூர்த்தியாய் இருத்தல், `மாற்றம் உடைய அனைத்து உலகப் பொருட்கும் மாற்றம் இன்றி நிற்கும் அடிநிலைப் பொருள் நான்` என்பதைத் தெளிவுபடுத்துவதாம்.
ஈங்கு இவை முதலாம் வண்ணமும், வடிவும் `நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களும் தானேயாய், மற்றும் முதற் பொருளின் இயல்புகள் பலவற்றையும் உடைய இறைவன் நீயே` என்றும், `அது, பூத நாதனாய் நிற்குமாற்றானே அறியப்படும் என்றும் தெளிவுபட வேதம் முதலிய நூல்கள் பலவும் ஒருபடித்தாக வெளிப்பட எடுத்துக் கூறுகின்றபடியே உனது பெருமைகளை உணர்த்தும் சிறப்பு அடையாளங்களாய் நின்று உணர்த்தவும் உணராது பிணங்கி நிற்போர், தமக்குத் தாமே கேடு சூழ்ந்து கொள்ளும் தற்கேடரே யாவர்.
அவர் தாம் (நல்ல போலவும், நயவ போலவும்) கூறும் சொல்லிலும், பொருளிலும் அகப்பட்டு மயங்குவார் மயங்காதபடி வேதத்தை வன்மையாக உணர்ந்த அந்தணர்கள் பலர்க்கும் தெளிவுபட ஓதும் வேத முழக்கம் என்றும் நீங்காது ஒலிக்கின்ற திருவொற்றியூரில் உள்ள பெருமானே! (நீ மேற்கூறிய பிணக்குரையாளர்கள்) பிணக்குரையை உன் முன்னே கூறும்பொழுது, நீ (நடை வழியை `சிறந்த மாட மாளிகை` என்றும், மணலை `சோறு` என்றும் சொல்லிக் களிக்கின்ற) `சிறுவர் செயலோடு ஒப்பது` என்று கருதிப் புன்முறுவல் பூத்திருக் கின்றாய் போலும்! என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
``ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன`` 1 என்று அருளிச்செய்த ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியின்படி, வேதாகமங்களை ஓதியுணர மாட்டாத எளியோர்க்கும், வேதாகமங் களை ஓதிய போதிலும் அதன் உண்மையுணர மாட்டாதவர்க்கும் சிவபெருமானது பெருமைகளை இனிது விளக்கி நிற்பனவே அவனது திருமேனியிற் காணப்படும் சிறப்பு அடையாளங்கள்.
ஆயினும் சில மயக்க நூல்களால் மயங்குவோர் அவற்றின் உண்மையை உணராது தோற்ற மாத்திரத்தையே கண்டு அவரை இகழ்ந்தேபோவர் - என்பதைக் காரைக்காலம்மையார், இவரைப் பொருள் உணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்
என்று அருளிச் செய்தார்.
காணிலும் உருப்பொலார்; செவிக்கினாத காட்சியார் 3 என்பது முதலியவைகளில் அவ்வாறான இகழுரைகளைக் காணலாம்.
அறக்கடவுளே ஆனேற்றுருவாய் வந்து சிவபெருமானைச் சுமந்த வரலாற்றைக் கந்த புராணத்துத் தட்ச காண்டத்துத் ததீசி உத்தரப் படலத்துட் காண்க.
முத்தீக்கள் வட்டம், வில், முக்கோணம் ஆகி இம்மூவகை வடிவில் அமைக்கப்படும் குண்டங்களில் வளர்க்கப்படும் வேள்வித் தீக்கள்.
அவை முறையே சூரியன், சந்திரன், அக்கினி வடிவங்களைக் குறிக்கும்.
சதுரமும் வட்டத்தில் அடங்குவதாகும்.
வேதமான் - வேதம் போலும் மான்.
வேதம் போலும், நான்கு கால்களை உடைமையும், ஒலித்தலும்.
`பூத நாதன்` என்பது வெளிப் படைப் பொருளில் ``பூத கணங்கட்குத் தலைவன்`` எனப் பொருள் தரினும் உள்ளுறைப் பொருளில் `உயிர்கட்குத் தலைவன்` (பசுபதி) எனப் பொருள் தரும்.
``தெருட்டுமாற்றானே` என உருபு விரிக்க.
``தற்கொலி`` என்பது சாதிப் பெயராய் நின்றது.
``சொல்வன்மை, பொருள் வன்மை`` எனத் தனித் தனிக் கூட்டுக.
பொருள் வன்மை யாவது வெளிப்படைப் பொருள் இகழ்ச்சியா அமைதல்.

பண் :

பாடல் எண் : 7

அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
கைவலத் திலைநீ எனினும் காதல்

செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே
சொல்லிய வகையால் துணையலை ஆயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
தங்கிய அவரைச் சாராய் நீயே

அஃதான்று
பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை
துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
அகலா அகற்சியை அணுகா அணிமையை

செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை
வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்
நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய வாகிய எண்ணில் பல்குணம்
நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்
சொல்நிலை சுருங்கின் அல்லது

நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஓங்கு கடல் உடுத்த ஒற்றி யூர`` என்பதை முதலிற் கொள்க.
அளவு - அளவை வகைகள்.
அவை யனைத்தையும் கடந்த பெருமை - பரப்பு.
`யாதோர் அளவைக்கும் உட்படாத நீ என்னுடைய சிறிய உள்ளத்தினுள் ஒடுங்கி நிற்கின்றாய்.
``இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்`` 1 என ஔவையாரும் கூறினார்.
மெய் - உயிர்கள் பெறுகின்ற பலவகையான உடம்புகள்.
அத்தகைய உடம்பு எதுவும் உனக்கு இல்லையாயினும் உலகம் முழுதும் உனக்கு உடம்பாகச் சொல்லப்படுகின்றது.
(``விசுவ ரூபி`` என்பது வேத மொழி) ``கைவலம்`` என்பதில் வலம், ஏழனுருபு.
நீ ஒருவர் கைக்கும் உட்படாதவனாயினும், காதல் செய்வோர் (அன்பர்கள்) செய்யும் சிறப்பு - பூசையும், விழாவும் போல்வனவற்றில் நீங்காது நிற்கின்றாய்.
முற்படக் கூறிய வகைகளால் நீ ஒருவர் பக்கத்திலும் உள்ளாயில்லை யாயினும் உயிர்த் தொகுதிக்கு நீயே தலைவனாகின்றாய்.
நீ இவ்விடத்திலும் ஒழிவின்றி நிற்பவனாயினும் வஞ்சனையாளரை அணுகாதவனாகின்றாய்.
இவ்வாறன்றியும் பிறவாமலே பிறந்த பிறவியை உடையாய்; (இயற்கைப் பொருள், அனாதிப் பொருள்` என்பதாம்.
படிமுறையால் பெருகாத (வளராத - இயல்பிலே) விரிந்து நிற்கின்ற விரிவை உடையாய்; துறவாமலே துறந்த துறவை உடையாய்; (`முன்னே பற்றுக் கொண்டிருந்தது, பின்பு அப்பற்றைத் துறவாமல் இயல்பாகவே பற்றற்றவனாய் இருக்கின்றாய்` என்பதாம்.)
பிறப்பை, `பிறவி` என்றல் போலத் துறவை, `துறவி` என்றலும் வழக்கு.
தொடர்ச்சி - இயைபு.
முன்பு வேறாய் இருந்து, பின்பு பிற பொருள்களோடு தொடர்பு கொள்ளாமல் அனாதியே எல்லாப் பொருளிலும் இயைந்து நிற்கின்றாய்; யாதொரு நுகர்ச்சியையும் உயிர்கள் நுகர்தற் பொருட்டு அவைகளோடு உடனாய் நின்று, அவை நுகர்வனவற்றை நீயும் நுகர்கின்றாய் எனினும், அந்நுகர்ச்சியால் நீ தாக்கப்படாது நினது இயல்பிலே நிற்கின்றாய்.
படி முறையால் வளர்ச்சியடையாது இயல்பாக விரிந்த விரிவினை உடையையாதல் போலச் சிறிது சிறிதாகத் தேய்ந்து நுணுகாது இயல்பிலே அணுவினும் அணுவாய் நுணுகி நிற்கின்றாய்; உயிர்களின் மன வாக்குக் காயங்களுக்கு முன்னர் அகப்படும் பொருளாய் இருந்து, பின் அகப்படாமல் நீங்கினையாகாது, இயல்பிலே அவற்றைக் கடந்து நிற்கின்றாய்.
அஃதேபோல, முன்பு சேய்மைப் பொருளாய் இருந்து, பின்பு அண்மைப் பொருள் ஆகாது இயல்பிலே அண்மைப் பொருளாய் நிற்கின்றாய்.
இவ்வாறே நீ ஒன்றையும் செய்யாமலே எல்லாவற்றையும் செய்தலையும், ஒரு காலைக்கொருகால் சிறந்து நில்லாது இயல்பாகவே எல்லாப் பொருளினும் மேலாகச் சிறந்த சிறப்பினையும் உடையவன் ஆகின்றாய்.
வெப்பத்தை உடையனாய், அதுபொழுது தட்பத்தை உடையவனாயும், திண்மையுடையவனாய், அதுபொழுதே நொய்ம்மையை உடையவனாயும் இருக்கின்றாய்; இன்னும் எப்பொருளையும் படைக்கின்றாய்; பின்பு அழித்து விடுகின்றாய்.
கூடியிருக்கும் பல பொருள்களை வேறு வேறாக்கி நீக்கச் செய்கின்றாய்; அதனோடு வேறு வேறாய் நீங்கி நிற்கின்ற பொருளை ஒன்றாய்த் தொகுக்கின்றாய்.
நின்ற பொருளினின்றும் நீங்குகின்றாய்; (இஃது அப்பொருள் கேடுறுதற் பொருட்டு.
``கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால் - உடலினார் கிடந்து ஊர்முனி பண்டமே`` 1 என்னும் அப்பர் வாக்காலும் அறியப்படும்.)
நீங்கிநின்ற பொருளோடு சேர்கின்றாய்.
இஃது அப்பொருள் ஆக்கம் பெறுதற் பொருட்டு.
எண்ணில் பல்குணம் - ஓர் இனப்படுத்த இயலாத பல்வேறான தன்மைகள்.
மயக்குதல் - ஐயத்தைத் தோற்றுதல்.
உணர்வு ஒருதலைப் படாது பலதலைப்படச் செய்தல்.
ஈங்கிது - இத்தன்மைத்தாய இது.
மொழிவார் யார் - ஒருதலைப்பட அறுதியிட்டுச் சொல்பவர் யாவர்? `ஒருவரும் இலர்` என்றபடி வந்தது.
இவ்வாறெல்லாம் `மெய்ப் பொருள் இன்னது எனச் சொல்ல வாராத அநிர்வசனப் பொருள்` என்பது கருத்தன்று - என்றற்கு,
சொல்நிலை சுருங்கி னல்லது
நின்னிலை அறிவோர் யார் இருநிலத்தே
என்றார்.
சொல்நிலை - `அது இன்னது` எனத் தம்மின் வேறாய்ச் சுட்டியுணர்ந்து சொல்லும் நிலை.
அது நீங்குதலாவது, தான் அதனின் வேறாய் நில்லாது அதுவேயாய் ஒட்டியுணரும் நிலை.
அந்நிலை உணர்வார் உணர்வதாய் நிற்பதல்லது, வேறாய்ப் பிறர்க்கு உணர்த்த வருவதன்று.
அதனையே,
இங்ங னிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ங னிருந்ததென் றுந்தீபற
அறியும் அறிவதன் றுந்தீபற
எனத் திருவுந்தியார் கூறிற்று.
``எவ்வண்ணம் சொல்லுவேன்`` என்றதனால் அட்டியுணர்த்தப்படாமை கூறினாராயினும் ``அங்ஙன் இருந்தது`` என்றமையால் அஃது அனுபவப் பொருளாயினமை கூறினாராதலின், `மெய்ப்பொருள் அநிர்வசனீயம்` என்றல் பொருந்தாதாம்.
விழுப்பம், இங்குத் திட்பத்தைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 8

நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய்வளி ஐயொடு பித்தொன் றாக
ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப
நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்பத்

திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்
குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப

ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து
தோன்றிய பல்பிணிப் பின்னகம் சுழலக்
கால்கையின் நரம்பே கண்ட மாக
மேதகு நிணமே மெய்ச்சா லாக
முழக்குடைத் துளையே முகங்க ளாக
வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப
இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள்
துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங்
காவா என்றுநின் அருளினைப் பெற்றவர்
நாவா யாகிய நாதநின் பாதம்

முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி
உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப்
பெருகிய நிறையெனுங் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து

மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பாரெனுங் கடுவெளி அற்றத்
தூமச் சோதிச் சுடருற நிறுத்திச்
சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற

ஆங்கவ் யாத்திரை போக்குதி போலும்
ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க.
இப் பாட்டினுள் உடம்பு கடலாகவும், இறைவன் திருவடி அக்கடலைக் கடப்பிக்கும் மரக்கல மாகவும், இறைவன் திருவருளைப் பெற்றோரே அம்மரக்கலத்தைப் பற்றிக் கடலைக் கடக்கும் பயணிகளாகவும் உருவகம் செய்யப்படுதல் அறியத் தக்கது.
`பாதத்தில் சிந்தையை நிறுத்தி` என்க.
பொறை - சுமை.
`உடம்பை பூமியோடு பொருத்திக் காணின் உடம்பு பூமிக்குச் சுமையாகும்` எனவும், `ஆசையோடு பொருத்திப் பார்க்கின், எல்லை யின்றி நீள்வதாகும்.
(ஆசைக்கு அளவில்லை என்பதாம்.)
சிறுமையைப் `பெருமை` என்றது இகழ்ச்சிக்குறிப்பு.
``ஆக்கை`` என்னும் ஐகார ஈற்றுத் தொழிற்பெயர் ஆகுபெயராய் ஆக்கப்பட்ட குழியைக் குறித்தது.
குழி - பள்ளம்; ஆழம் என்றது வயிற்றை.
`பொறையாய், நீண்டு, தூர்க்கப்படாத ஆழத்தையுடைய இருங்கடல்` என்க.
வளி - வாதம்.
ஐ - சிலேத்துமம்.
வாதம் முதலிய மூன்று முதல் நிலைப் பொருள்களில் தலையாயது வாதமேயாதலின் அதனை, ``மெய் வளி`` என்றார்.
``ஓடு`` என்பதை வளி, பித்து இவற்றிற்கும் கூட்டுக.
`வளி முதலிய மூன்றனோடுங் கூடி, ஐவகைக் காற்று அடிப்ப` என்க.
தச வாயுக்களில் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் என்னும் ஐந்தே சிறப்புடைமை பற்றி ``ஐவகைக் காற்று அடிப்ப`` என்றார்.
கடலில் பல திசையான காற்றுக்கள் அடித்தல் இயல்பு.
வெளுப்ப - வெளிதாய்த் தோன்ற.
மெலிந்து தொங்கும் தோல், `திரை` எனப்படும்.
கடல் அலைகளுக்கும், `திரை` என்பது பெயர்.
மூடிய இருமல் - பேசுதலைத் தடுக்கும் இருமல்.
`பசியும், வெகுளியுமாகிய சுறவினம்` என்க.
அரவம் - பாம்பு; கடல் வாழ் பாம்பு.
ஒலிப்ப - இரைய.
ஊன் - இறைச்சி.
தடி - தசை.
திடல் - கடல் களில் சிறு தீவுகள்.
எதிர்பாராத தீவு எதிர்ப்படின் மரக்கலத்தைப் பின்னோக்கிச் செலுத்துவர்.
சுழல - திரும்ப.
முழக்குடைத் துளை, நவத்துவாரங்கள்.
கண்டம் - திசை திருப்பும் கருவிகள்.
சால் - உள் அமைப்பு.
முகம் - முன்னோக்கும் பகுதி.
மூக்கு ஆறு - மூக்கின் வழியாக விட்டு வாங்கும் மூச்சு.
ஓதம் - அலை; அஃது ஆருபெயராய், தன் ஓசையைக் குறித்தது.
இப்பரிசு இயற்றிய - `இத் தன்மைத்தாக இயற்றப்பட்ட உடல்` என்க.
துப்புரவு - நுகர்ச்சிப் பொருள்.
கூம்பு - பாய்மரம்.
ஆர்த்து - பொருத்தி, ``கயிற்றிடை`` என்பதை, `கயிற்றினால்` எனத் திரிக்க.
அறுக்கப்படுவதாகிய கயிறு, நின்று நீக்கப் படும் துறையின்கண் பிணித்து வைத்துள்ள கயிறு.
ஒருமை - மன ஒருமை.
பொறி - மரக்கலத்தை வேகமாகச் செலுத்தும் யந்திரம்.
பார்- பாறை; கடலுள் இருப்பவை.
கடுவெளி - கொடிய இடம்.
இது மரக்கலம் உடைதற்கு ஏதுவாம் ஆதலின், இஃது உள்ள இடம் `கொடிது` எனப்பட்டது.
அகற்ற - இந்த இடத்தைத் தெரிந்து மரக் கலத்தை அப்பாற்படுத்தற் பொருட்டு தூமம் - நறும் புகை.
சோதி - விளக்கு.
இவை வழிபாட்டுப் பொருள்கள்.
`தூமத்தோடு கூடிய சோதி என்க.
மரக்கலத்தை வழி தெரிந்து இயக்க அதன்கண் விளக்கு ஏற்றப்படும்.
உணர்ச்சி - மெய்யுணர்வு.
துழாவுதல் - தண்ணீரை ஒரு முகமாகத் தள்ளுதல்.
``அளவில் கரை`` என்றது `அளவின்றி நீண்ட கரை` எனப் பொருள் தந்தது.
``கரை`` என்றது `வீடு` என்பது தோன்ற அளவின்றி நீள்கரை`` என்றமையின், இது குறிப்புருவகம் `துடுப்பினைத் துழாவி நெருங்கிச் சென்று உயிரைக் கரை ஏற்றும்படி ஆங்கு அவ் யாத்திரை போக்குதி போலும்!` என முடிக்க.
போக்குதி - நிறைவேற்றுவாய்.
போலும், உரையசை.
`ஆகி`` என்னும் செய்தென் எச்சம் ``அடிப்ப`` என்பதனோடும், ``அடிப்ப, வெளுப்ப`` முதலிய செயவென் எச்சங்கள் பலவும் ``இயற்றிய`` என்பதனோடும், ``நிறைந்து, முழங்கி`` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய், ``எறிய`` என்பதனோடும், ``அடைந்து`` என்னும் செய் தென் எச்சம் ``சுழல`` என்பதனோடும், ``வணங்கி, நிறுத்தி`` முதலிய செய்தென் எச்சங்கள், ``நெருங்கா`` என்னும் செய்யா என் எச்சத் தோடும், அது ``ஏற்ற`` என்னும் காரியப் பொருட்டாய செயவென் எச்சத்தோடும், அது ``போக்குதி`` என்பதனோடும் முடிந்தன.
இடையில், ``தலைப்பட்டு`` என்பதில், `தலைப்பட்டும்` என இழிவு சிறப்பும்மை விரித்து, அதனை, ``பெற்றவர்`` என்பதனோடு முடிக்க.
இவ்வாற்றால், `இடர்ப்பாடு மிக்க உடம்பினுள் தங்கி, இடர்ப் பாடான வாழ்வில் நின்றும் இறைவனது திருவருளைப் பெற்றவர் அவனது திருவடியைத் துணையாகப் பற்றி அவனது பணியிலே நின்று தம் உயிரை வீடுபேற்றிற்கு உரித்தாக ஆக்கிக் கொள்ள முயல்வர்`` என்பதும், `அவர்கட்கு இறைவன் துணை நின்று அவர்களது முயற்சி வெற்றிபெறச் செய்வன்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித் தழுதல் அகன்ற அம்மனை

கேவலம் சேய்மையிற் கேளான் ஆயினும்
பிரித்தற் கரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை
அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கு

தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது

எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்
துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையுந் தாயுஞ் சாதியும் அறிவும்நம்
சிந்தையுந் திருவுஞ் செல்கதித் திறனும்

துன்பமுந் துறவுந் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவைஒளி ஊறோசை நாற்றத் தோற்றமும்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து
நின்றனன் தமியேன் நின்னடி அல்லது
சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிச்
சேர்விட மதனைத் திறப்பட நாடி
எய்துதற் கரியோய் யானினிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருட்டு - நிமித்தம்.
`பொருட்டாக` என ஆக்கம் வருவிக்க.
இன்னாமை - துன்பம்; செவிக்குத் துன்பமாகுவன.
புன்மை - சிறப்பிலாப் பொருள்களையுடைமை.
நீர்மை - தன்மை.
``என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி - நின்னிடையணுகா நீர்மைய`` என்றமையால், `அருளாளரிடைப் பிறந்த நன்மொழி நின்னிடையணுகுதல் நீர்மைய` என்பது அருத்தாபத்தியாற் பெறப்பட்டது.
ஆவலித்தல் - வாய்விட்டுக் கதறுதல்.
அம்மனை - தாய்.
கேவலம் - தனிமை.
`சேய்மைக் கேவலத்தின்` என மொழி மாற்றிக் கொள்க.
குறைவினில் - தன் மனக்குறை காரணமாக.
ஆர்க்கும் - ஓசை செய்கின்ற.
அறியாது - உன்னை அடையும் நெறியை அறியாமல்.
`ஊழில்` என ஏழாவது விரிக்க.
மயங்கி மயக்குறும்` என இயையும்.
``தலைப்பட`` என்பதனையும், `தலைப்பட்டாற்போல` என்க.
`கண் இலர் கண்பெற்றாற் போலவும், முன்னர்க் கூறிய குழவி தாயைத் தலைப்பட்டாற் போலவும் வணக்கம் வாய்ந்து இன்புறுதலை அறியாமல், மேலும் மேலும் மயக்கத்திலே கிடக்கும் வினையேன் இயற்றிய ஆக` என்க.
இன்பம் - ஐம்புல இன்பம்.
கூடிய - கூடுதற்கு; `செய்யிய` என்னும் எச்சம்.
அவாவினில் - ஆசையால்.
இயற்றிய - இயற்றிவரும் செயல்கள்.
ஆக - நிகழும் நிலையில் நீயே அவிழ்க்கின் அல்லது` என்க.
துன்னிய இருள் - செறிந்த இருள்.
இருள் - அறியாமை.
தூறு - புதர்.
ஒதுங்கி - மறைந்து.
வெள்ளிடை - ஒளி பரந்த இடம்.
``வினையேன்`` என்பதற்குப் பின், ``நின்னடி யல்லது சார்வுமற் றின்மையின்`` என்பதைக் கூட்டுக.
(நீ) `தளர்ந்தோர் காட்சிச் சேர்விடமாகின்ற அதனை நாடி எய்துதற்கு அரியோய் ஆகலின் தெரியுங்கால் யான் இனிச் செய்வதும் அறிவனோ` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 10

காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறுஞ் சிறக்கும் அமிர்தே போற்றி
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வஞ் செய்பவர்க் கணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி

விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின்

பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி

சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்றுனை

நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது
ஏத்துதற் குரியோர் யாரிரு நிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முன் பாட்டிற் போந்த, ``ஒற்றி யூர`` என்பதை இப்பாட்டின் முதலிலும் வருவித்து, `என்று இங்ஙனம் நவிற்றின் அல்லது, உன்னை ஏத்துதற்குரியோர் இருநிலத்து யார்` என முடிக்க.
நவிற்றுதல் - இயன்ற அளவு சொல்லுதல்.
ஏத்துதல் - புகழ்கள் அனைத்தையும் முற்ற எடுத்துக் கூறுதல்.
மூலம் - உலகத்திற்கு முதற் காரணம்; சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை.
அவை பல்வேறு வகை ஆற்றல்களின் திரட்சியாய் இருத்தலின் அவற்றைத் ``தொகுதி`` என்றார்.
முதல்வன், அதனை ஆக்கப்படுத்துபவன்.
அணைதல் - பற்றுதல்.
சிறத்தல் - சுவை மிகுதல்.
வையகம் - நிலம்.
வனம் - நீர்.
முன்னுதல் - நினைத்தல்.
காணவிரும்பி நினைக்கப் படுகின்ற பொருள், மெய்ப்பொருள்.
அது கருத்தில் உற வேண்டு மாயின் கருத்துச் செம்மை பெற வேண்டும்.
செம்மையுள் நிற்பராகில்
சிவகதி விளையு மன்றே
என அப்பரும் அருளிச் செய்தார்.
ஆணி - நிலைபெறுத்தும் பொருள்.
வெம்மையாவது அறத்திற்கு மாறானவற்றைக் காய்தல்.
தண்மையாவது அறம் உடையார்க்கு அருளல்.
`காய்தலும், அருளலும் ஆகிய மாறுபட்ட இரு தன்மைகளை இறைவன் உடையன்` என்பதை உணர்த்தவே அவன் ஆணும் பெண்ணுமாகிய மாறுபட்ட இரு கூறுகளை ஓர் உடம்பில் கொண்டு விளங்குகின்றான் என்றபடி மேவுதல் - விரும்புதல்.
தீபம் - விளக்கு.
மாலோன் - திருமால்.
மறையோன் - பிரமன்.
`இவர்கள்பால் இவர்களேயாய்க் கலந்து நின்று காத்தல் படைத்தல்களைச் செய்கின்றான்` என்பதாம்.
மேலோன் - அனைவர்க்கும் மேலானவன்.
வேதியன் - வேதத்தை அருளிச் செய்தவன்.
தழலோன் - அக்கினி.
இறைவன், இங்கு உருத்திரன்.
அமரன் - அனைத்துத் தேவரும் ஆயவன்.
குமரன் - இளையன்.
சிவனை `முதியன்` என்றல் உலக வழக்கிலும் காணப்படுவது.
பொருள் - அடையத்தக்க பொருள்.
திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது முற்றிற்று
சிற்பி