நம்பியாண்டார் நம்பிகள் - திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை


பண் :

பாடல் எண் : 1

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விரசு - நெருங்கி.
``மகிழ்`` இரண்டில் முன்னது மகிழ மரம்; பின்னது மகிழ்ச்சி.
அத்தி - யானை.
அரசு, `அரசமரம்` எனவும், அத்தி, `அத்தி மரம்` எனவும் வேறொரு பொருளைத் தோற்றுவித்த லாகிய நயத்தைப் பயந்தது.
அந்நயம் முரண் தொடையாம்.
`நாரையூர் அத்தி முகத்தான்` என இயைக்க.
இவ்விநாயகர், `பொல்லாப் பிள்ளையார்` என்னும் பெயர் உடையர்.
இப் பெயர்ப் பொருளைச் சிவஞான போத மங்கல வாழ்த்து உரையிற் காண்க.
`இப்பெரு மானுக்கு யான் அடியன் ஆனதும் அவன் என்னை நினைந்து அடிமை கொண்டதனாலும், பின்பும் நான் அவனை மறவாது நினைதலும் அவன் நினப்பிப்பத னாலுமே` என்பதாம்.
`இப்பெருமானுக்கு யான் செய்யும் கைம்மாறு யாது? என்பது குறிப்பெச்சம்.
இதனால், `இவ்வாசிரியர் விநாயகப் பெருமானது திருவருளை எய்திய அருளாளர்` என்பது போந்தது.

பண் :

பாடல் எண் : 2

முகத்தாற் கரியனென் றாலும்
தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை
உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்தரு நாரையூர்
அம்மான் பயந்தவெம்மான்
உகத்தா னவன்தன் னுடலம்
பிளந்த ஒருகொம்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரியன் - யானையாகியவன்.
வெளியன் - வெளிப்பட்டு நிற்பவன்.
இவை இரண்டும் முறையே `கருநிறத்தை உடையவன், வெண்ணிறத்தையுடையவன்` எனப் பிறிதுமோர் பொருள்தந்து, முரண்தொடையாயும் நின்றன.
முயலுதல், இங்குப் பணிதல், அகத்தான் - மனத்தில் இருப்பவன்.
திருநாரையூர் பாடல் பெற்ற சிவத்தலம் ஆதல் அறியத் தக்கது.
அம்மான் - அப்பெரியோன்; சிவபெருமான்.
எம்மான் - எங்கள் இறைவன்.
தானவன், கயா முகாசுரன்.
`அவன் உடலம் உகப் பிளந்த ஒரு கொம்பன்` என்க.
உக - சிதைந்து சிந்த.
யாதொரு படைக்கலத்தாலும் அழியா வரம் பெற்ற கயாமுகாசுரனை விநாயகப் பெருமான் தனது இரு தந்தங்களுள் வலத் தந்தத்தை ஒடித்து அதனாலே கொன்று, ஒற்றைக் கொம்பன் ஆகியதைக் கந்த புராணக் கயமுகன் உற்பத்திப் படலத்துக் காண்க.
இதன் முன்னிரண்டு அடிகளில் ஆசிரியர் தம் அனுபவத்தைக் குறிப் பாற் புலப்படுத்தியிருத்தலை உன்னுக.

பண் :

பாடல் எண் : 3

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டிற்கு `நெஞ்சே` என்னும் முன்னிலை வருவித்துக் கொள்க.
கொம்பு, பூங்கொம்பு.
குறுகாமே - வந்து அடையும் முன்.
வம்பு அனைய - புதிதாகிய அந்த; இது பண்டறி சுட்டு.
தன்னம் - சிறுமை.
உலகை வலம் வருதலினும் அன்னை தந்தையரை வலம் வருதல் எளிதாதல் பற்றி ``தன்ன வலம்`` என்றார்.
மாங்கனியின் பொருட்டுச் சிவபெருமான் வைத்த ஓட்டத்துள் விநாயகர் முருகனை வென்று மாங்கனியைப் பெற்ற வரலாறு நன்கறியப்பட்டது.
என் - என்று சொல்.
`சொன்னால், பின் நோய் (வினைகள்) அவலம் (துன்பம்) செய்வது என் உளது? பேசு` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 4

பேசத் தகாதெனப் பேயெரு
தும்பெருச் சாளியுமென்
றேசத் தகும்படி ஏறுவ
தேயிமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும்
நுந்தையும் நீயுமிந்தத்
தேசத் தவர்தொழும் நாரைப்
பதியுட் சிவக்களிறே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இந்தத் தேசத்தவர் .
.
.
சிவக்களிறே! நுங்கையும், நுந்தையும், நீயும் - பேசத் தகாது - என ஏசத் தகும்படி பேயும், எருதும், பெருச்சாளியும் என்று இவற்றை ஏறுவதே`` என இயைத்து முடிக்க.
நுங்கை - உன் தங்கை.
துர்க்கையை உமை அம்சமாதல் பற்றி `அவள் தங்கை` என்பதேயன்றி மகளாகவும் கூறுவர்.
அதை வைத்து இங்கு ``நுங்கை`` என்றார்.
கூசத்தகும் தொழில் கொலை.
அசுரனை யழித்தல்.
``பேய்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க.

பண் :

பாடல் எண் : 5

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிரும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அளறுதொறும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
அளறு - சேறு.
அஃது ஆகுபெயராய் அவற்றையுடைய வயல்களைக் குறித்தது.
`ஊர் ஆரலை அவ்வூர்தலின் பின்னாகப் பற்றி நாரை ஆரும் (உண்கின்ற) படுகர்` என்க.
ஆரல், மீன் வகை.
படுகர் - நீர் நிலை.
மன் - நிலை பெற்ற.
நாரையூரான் - திருநாரையூர்ச் சிவபெருமான்.
``களிறு முகத்தவனாய்`` என்பதை, `முகம் களிறவனாய்` என மாற்றிக் கொள்க.
`முகம் யானை யாகியவன், காயம் (திருமேனி மேகம் போலாது) செந்தீயைப்போல ஒளிறும் (ஒளிவிடுகின்ற) நிறத்தைக் கொண்டிருப்பது என்ன வியப்பு` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

மகத்தினில் வானவர் பல்கண்
சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப்
பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது
மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது
போலும் அடுமருப்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகம் - வேள்வி.
தக்கன் செய்தது.
அதில் பல் உதிர்க்கப்பட்டவன் `பூடா` என்னும் சூரியன்.
கண் பறிக்கப்பட்டவன் `பகன்` என்னும் சூரியன்.
சிரம் அறுக்கப்பட்டவன் எச்சன்.
(யாக தேவன்) தோள் நெரிக்கப்பட்டவன் இந்திரன்.
`நெரித்தருளும் சுரன்` என்க.
சுரன் - தேவன்.
சுகம் - கிளி.
``சுகத்தினில்`` என்பதை `சுகத் தொடு` எனத் திரிக்க.
பின்னிரண்டடிகள் தும்பிக்கையின் அமைப்பை வியந்து கூறியன.

பண் :

பாடல் எண் : 7

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தவெண்ணு கின்றவெறும் பன்றே அவரை
வருந்தவெண்ணு கின்ற மலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மருப்பை`` என்பது, இசையெச்சத்தால் `ஒரு காலத்தில் ஒடிக்கப்பட்ட மருப்பை` எனவும், ``கொண்டு`` என்பது, `எப்பொழுதும் கொண்டு` எனவும் பொருள் தந்தது.
மருப்பு - தந்தம்.
``பொருப்பு`` என்பது `பொருப்புப் போன்றவன்` எனவும், ``எறும்பு`` என்பது எறும்பு போல்வது எனவும் பொருள் தருதலால் உவமையாகு பெயர்கள்.
பொருப்பு, வடிவு பற்றியும், எறும்பு, மடமையாகிய பண்பு பற்றியும் உவமையாயின.
``நெருப்பை.
.
.
எறும்பன்றே`` என்பதை இறுதியிற் கூட்டுக.
`வருத்த` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
மலம் மூல மலமும், பின் அது பற்றி வரும் கன்ம மாயா மலங் களும், `அவை வருத்தா` எனவே, வீடு உளதாதல் அமைந்தது.

பண் :

பாடல் எண் : 8

மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேயுன்னை வாழ்த்துவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மலம் செய்த வல்வினை நோக்கி`` என்பதை, ``உன்னை வாழ்த்துவன்`` என்பதற்கு முன்னே கூட்டியுரைக்க.
மலம் செய்த - ஆணவத்தால் வருவிக்கப்பட்ட ``வல்வினை`` என்பது அதன் நீக்கத்தைக் குறித்தது.
``நோக்கி`` என்றது, `அது நிமித்தமாகக் கருதி` என்றபடி.
புலம் செய்த - எவ்விடத்தும் நின்ற.
காட்சி - தோற்றம்.
சலம் - நீர்; கங்கை.

பண் :

பாடல் எண் : 9

வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இனம் சாய`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இனம் - அசுரர் சுற்றம்.
அசுரர், முப்புரத்து அசுரர்.
``நம்பர்`` என்பது சிவபெருமானைக் குறித்து இரு முறையாற் கூறப்பட்டது.
மகன் - மகவான்; இந்திரன்.
சிவபெருமான் இந்திரனைத் தோள் நெரித்தமை மேல், ``மகத்தினில் வானவர்`` என்னும் பாட்டிலும் சொல்லப்பட்டது.
`நோய் நீக்கி அலை தருவானன்றே` என இயைக்க.
வனம் - காடு.
உருவகம், `வினையாகிய வனம்` என வருதல் பெரும்பான்மைத் தாயினும் சிறுபான்மை `வனமாகிய வினை` என வருதலும் உண்டு என்பதைத் தொல்காப்பிய உவம இயலில் கண்டுணர்க.
`வனமாகிய வல்வினை சாய, அதனானே அவற்றால் வரும் நோயை (துன்பத்தை) நீக்கி` என்க.
வனசத்தன் - தாமரை மலரில் உள்ளவன்; பிரமன்.
அவனது அம் - அழகு; அழகிய எழுத்து.
இனி, `அழகாவது அவனது திறல்` எனினும் ஆம்.
திறலாவது இங்குப் படைக்கும் திறன்.
இதனையடுத்து நின்ற `சாய` என்பதில் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது.
அலை - அலைத் தலை; அழித்தலை.
`நாம் இனி வினைகாரணமாகப் பிரமனால் படைக்கப்படுதலை ஒழிக்கும் நிலையை நமக்குத் தருவான்` என்பதாம்.
``நம்பர்மகன்`` இரண்டிலும் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 10

நாரணன் முன்பணிந் தேத்தநின்
றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர்
மன்னு சிவன்மகனே
காரண னேயெம் கணபதி
யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென்
பவர்க்கில்லை அல்லல்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏத்த நின்று மன்னும் சிவன்` என்க.
எல்லை நடாவிய அததேர் அணவும் - நாற்பாங்கு எல்லையளவும் நடத்தப்படுகின்ற தேர் பொருந்திய.
காரணன் - எப்பொருட்கும் காரணன்.
கரி வதனன் - யானைமுகன்.
என்பவர் - என்று துதிப்பவர்.
இப்பாட்டின் முதலாகிய ``நாரணன்`` என்பது முன்பாட்டு இறுதியில் உள்ள `நாரையூர்` என்பதை ஓராற்றால் அந்தாதியாகக் கொண்டதாம்.

பண் :

பாடல் எண் : 11

அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஈண்டு உழவர்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
ஈண்டு - நெருங்கிய.
நெல் அல்களை - நெற் பயிருக்கு வேண்டத்தகாத களை.
`செங்கழு நீரைக் களையாகக் கட்கும்` என்க.
கட்டல் - களைதல்.
`அரிய செங்கழுநீர் மலர்களை எளியவாகக் கருதிக் களையோடு சேர்த்து எறிகின்றனர்` என்பது அதன் மிகுதி கூறியவாறு.
இதனை `வீறுகோளணி` அல்லது `உதாத்த அணி` என்பர்.
கொங்கு - நறுமணம்.
தார் - மாலை.
அவை கொன்றை மலர் முதலியவற்றால் ஆயவை.
``அவன்`` என்பதை, ``கோ`` என்பதன் பின்னர்க் கூட்டி, `சேயும், கோவுமாகிய அவன் தன் அடியார்க்கு` என உரைக்க.
`தன் அடியார்க்கு` என்பது இசையெச்சம்.
தன் உலகம் - கண லோகம்.
கணம், சிவகணம்.
`எல்லையும்` என உருபு விரிக்க.

பண் :

பாடல் எண் : 12

கோவிற் கொடிய நமன்தமர்
கூடா வகைவிடுவன்
காவில் திகழ்தரு நாரைப்
பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத்
தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள்
தான்பெற்ற யானையையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில் `நமன் தமர் வரின் அவர் கூடாவகை யான் விடுவேன்` என வேண்டும் சொற்கள் வருவித்து விரித்து, அதனை இறுதியிற் கூட்டுக.
கோவில் - கோக்களில்; அரசர்களில்.
புண்ணியரை அளித்தல் செய்யாது, பாவிகளை `கோக்களில் கொடிய வன்` என்றார்.
விடுவன் - எதிர் சென்று துரக்குமாறு அனுப்புவேன்.
`அனுப்புதல், குறையிரத்தல் வாயிலாக` என்க.
`யான் குறையிரந்தால் அவன் அருளாதோழியான்` என்பதாம்.
காவின் - காவினால்.
கா - சோலை.
கரு, பனைக் கை, இரு மதம், ஒற்றை மருப்பு.
முக்கண் இவை யனைத்தும் யானையைச் சிறப்பித்தன.
இரு மதம் - கரிய மதம்.
ஏ வில் புருவம் - அம்பையுடைய வில்போலும் புருவம்.
`கண்கள் அம்பு போலும்` என்பது குறிப்பு.
கண் இமையாதவளை ``இமையவள்`` என்றது எதிர்மறை இலக்கணையாய், `தேவி` என்னும் கருத்துடைய தாயிற்று.
தேவி உமா தேவி.
தான், அசை.

பண் :

பாடல் எண் : 13

யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானேச னார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`யான் ஏத்திய வெண்பாக்கள் (யான் ஏத்திய அல்ல; மற்று,) நாரையூர் விநாயகப் பெருமான் தானே தனக்கு நல்கிக் கொண்டவை` என்க.
``வெண்பா`` என்பது, இங்கு, `வெளிற்றுப் பொருள்களையுடைய பாக்கள்` எனப் பொருள் தந்தது.
`இவைகளைத் தாமும் அவனது அருள் இன்றி, யானே இயற்றுதல் இயலாது` என்றபடி.
என்னை நினைந்து அருள் காரணமாக என்னையும் ஒருவனாகத் திருவுளத்து அடைத்து.
`தலைவனாகிய அவன் அடிமை நேசனாகிய யானாகவேயிருந்து நல்கிக் கொண்டான்` என்க.
இதனால் இப் பிரபந்தம் சீவபோதத்தின் வழிப் பொந்ததாகாது, சிவபோதத்தின் வழிப் போந்தாததால் விளங்கும் ``சூலம் வலனேந்தி`` என்றது, `சிவபெருமான்` என்றபடி.
``ஏந்தி`` என்பது பெயர்.
எடுத்த - ஈன்றெடுத்த.
மதம் - கன்ன மதம்.
`அது முகத்தின் வழியாகப் பாய்கின்றது` என்றபடி.
ஏறு - சிங்க ஏறு.
உவம ஆகுபெயர்.
இது நடையாகிய தொழில் பற்றி வந்த உவமம்.
``ஏறுபோற் பீடு நடை`` 1 என்றார் திருவள்ளுவரும்.
``நல்கினான்`` என உயர் திணையால் முடித்தமையின் ``ஏறு`` என்பது உபசாரமும், உருவகமும் ஆகாமை உணர்க.
இங்கும் ``சூலம்வலன்`` என்பதில் மகர ஒற்று அலகுபெறாதாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழும் நாரைப்
பதியுள் விநாயகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வீரணக் குடி ஏந்திழை - வீரர்களால் வெற்றி வேண்டி வழிபடப்படும் கொற்றவை; துர்க்கை.
இவளை மேல் 2 ``நுங்கை`` என்றதுபோல இங்கு `அவளுக்கு முன்` (முன்னோன் - தமையன்) என்றார்.
முன்னினை - தமையனை; இன், சாரியை.
நண்ணலர் - பகைவர்.
இங்குத் தக்கனும், அவன் சார்பாக அவனது வேள்வியை ஏற்றவரும் வெம்பணை - போர் முரசு.
`அதனையுடைய சிங்கம்` என்றது வீரபத்திரரை.
அவர் உமை மலையரையன் மகளாதற்கு முன்னர்த் தோன்றினமையால் விநாயகரை `அவருக்கு இளையோன்` என்றார்.
``விநாயகன்`` என்பதிலும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபை விரித்து அதனை, ``இளையானை`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
விண் - தேவலோகம்.
`அது வேறு ஓர் இயல்பால் தொழும்` என்க.
வேறு - தனி - தனி ஓர் இயல்பால் தொழுதலாவது.
விரும்பிய செயலை இடையூறின்றி இனிது முற்றுவிக்க வேண்டித் தொழுதல்.
`முன்னவனும், இளையானும் ஆகிய நாரைப் பதியுள் விநாயகனை விண் வேறு இயல்பால் தொழும்` - என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 15

கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கனம் - மேகம், `கனம் மதிலின்கண் சூழ் நாரையூர்` என்க.
கசிந்தார் - அன்பால் மனம் உருகினவர்.
அவர்தம் மனம் மருவினான் சிவபெருமான்.
`பயந்த கன்று` என இயையும்.
வாய்ந்த - `அவனுக்குப் பொருந்திய ஆரம்` என்க.
சினம் மருவியதும், தீண்டுதற்கும் பிறர் கூசுவதும் ஆகிய ஆரம்; அதுபாம்பாகிய மாலை.
`குஞ்சர முகக் கன்று` என மாறுக.
முகம் யானையாயினமை பற்றிப் பிள்ளையாரையே `யானை` என்றலும் ஆம் என்றற்கு, `பிள்ளை` என்னாது, ``கன்று`` என்றார்.
என்றார்க்கு - என்று சொல்லித் துதித்த வர்க்கு.
`வான் மா சாரமோ? சொல்லு` என்க.
வான் - சுவர்க்க லோகம்.
மா சாரம் - பெரிய பயன்.
``சொல்லு`` என்றது நெஞ்சை நோக்கி.
எனவே, `நீயும் அவ்வாறு சொல்` என்பது குறிப்பெச்சமாயிற்று.

பண் :

பாடல் எண் : 16

வானிற் பிறந்த மதிதவ
ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு
நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி
தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென்
றுரைப்பரிவ் வையகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தேனின் பிறந்த`` என்பதில் இன்னுருபை ஒடு உருபாகத் திரித்துக் கொள்க.
மலர், அவை மலரும் பொய்கையைக் குறித்தலால் தானியாகுபெயர்.
கோனின் - கோனால்.
குலம் சிறப்பு.
``மலையின் மான்`` என்பது இலக்கணை (சார்பு) வழக்கால் `மலை யரையன் மகள்` எனப் பொருள்படுவதை `மலையில் வாழ்கின்ற மான்` எனப் பொருள்படுகின்ற இயல்பு வழக்காகக் காட்டி, அதிசயம் தோற்றுவித்தவாறு.

பண் :

பாடல் எண் : 17

வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்கத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தையமர் வான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நம் சிந்தை அமர்வான்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
கை ஐந்து ஆகலின் ஐந்திலும் ஐந்து பொருள்கள் இருத்தல் கூறப்பட்டது.
மாங்கனி இடப்புறக் கீழ்க்கை.
கொம்பு - தந்தம்; வலப் புறக் கீழ்க்கை.
அண்டம் - ஆகாயம்; தும்பிக்கை; `ஆகாயத்தைக் தடவு கின்றது` என்றபடி.
பாசம் இடப்புற மேற்கை.
``மழு`` என்பது `படைக் கலம்`` எனப் பொருள் தந்து, அங்குசத்தைக் குறித்தது.
வலப்புற மேற்கை.
மல்குதல் - நிறைதல்.
``மல்குவித்தான்`` என்பது வினைப் பெயர்.
ஆம் அசை.
கனி சிந்தை வினைத்தொகை.
அமர்வான் - விரும்புவான்.
``நம் சிந்தை அமர்வான்`` என்பது, `புலி கொல் யானை` என்பதுபோலத் தடுமாறு தொழிற்பெயர்.

பண் :

பாடல் எண் : 18

அமரா அமரர் தொழுஞ்சரண்
நாரைப் பதியமர்ந்த
குமரா குமரற்கு முன்னவ
னேகொடித் தேரவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத்
தோன்றின னேயெனநின்
றமரா மனத்தவர் ஆழ்நர
கத்தில் அழுந்துவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமரா - தேவனே.
குமரன் - பிள்ளை.
சரண் - பாதம்.
குமரற்கு முன்னவன் - முருகனுக்குத் தமையன்.
தமர் - சுற்றத்தார்.
ஆசு - குற்றம்; அவணர் தமராகிய ஆசு` என்க.
அவுணர் இங்கு முப்புரத்து அசுரர்.
``என நின்று அமரர் மனத்தவர்`` என்பதை `என அமர்ந்து நில்லாதவர்`` என மாற்றி கொள்க.
அமர்தல் - விரும்புதல்.
`என` என் எச்சத்தால், `துதித்து நில்லாதவர்` எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 19

அவம்தியா துள்ளமே அல்லற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உள்ளமே`` என்பதை முதலிற் கூட்டுக.
தவமதி - தவத்தால் உண்டாகிய ஞானம்.
தவமாவன, சரியை கிரியா யோகங்கள்.
சதுர்த்தோம் - பெருமை பெற்றோம்.
நவ மதியாம் கொம்பு - புதிதாகத் தோன்றுகின்ற பிறைபோலும் தந்தம்.
நம்பன் - சிவபெருமான்.
சிறுவன் - மகன் ``அவமதி யாது`` என்பது, முன் பாட்டில், ``மனத்தவர்`` என்ற அந்தத்தை ஆதியாகக் கொண்டதாம்.

பண் :

பாடல் எண் : 20

நாந்தன மாமனம் ஏத்துகண்
டாயென்றும் நாண்மலரால்
தாந்தனமாக இருந்தனன்
நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேயைந்து செங்கைய
னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேயென்னை ஆண்ட
னேயெனக் கென்னையனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மனம் - மனமே.
இதனை முதலிற் கொள்க.
`நம் தனம்` என்பது ``நாம் தனம்`` என நீட்டல் பெற்றது.
தாம் தனம் - தாவும் (இவ்வுலகத்தைக் கடந்து பற்றும்) செல்வம்.
`இருந்தனனே` என இதுவும் விளி.
எனக்கு என் - `எனக்கு` என்று இருக்கின்ற.
ஐயன் - தலைவன்.
`மனமே! தாம் தனமாக இருத்தனனே!.
.
.
.
.
என் ஐயனே! என்று நாள் மலரால், நம் தனமாக ஏத்து` என வினை முடிக்க.
கண்டாய், முன்னிலையசை.
திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை முற்றிற்று.
சிற்பி