நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி


பண் :

பாடல் எண் : 1

பார்மண் டலத்தினிற் பன்னிரு
பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர
மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந்
தோளான் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன்
மேவிய தண்பதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆளுடைய பிள்ளையார், திருஞானசம்பந்தர்.
பார் மண்டலம் - நிலவட்டம்.
சீகாழியின் பன்னிரு பெயர்களாவன, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை, கழுமலம்` என்பன.
இவைகளைத் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களால் அறிக.
படப்பை - தோட்டம்.
கார் மண்டலக் கண்டம் - கறுத்த வட்டத்தையுடைய கழுத்து.
தார் மண்டலம் - மார்பிலணியும் மாலை வட்டம்.
மேவிய - அவதரித்த.
பதி - நகரம் எண்தோளன் கருணை பெற்ற சம்பந்தன் மேவிய தண்பதி பிரமபுரம்` என முடிக்க.
எண்தோளன் - சிவபெருமான்.

பண் :

பாடல் எண் : 2

பதிகப் பெருவழி காட்டிப்
பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க
னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர்
மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம
ராவதி காவலரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெருவழி, பல சிறுவழிகள் வந்து (குறுகிய தூர வழிகள்) வந்து சேரும் நெருந்தூர வழி சமயத் துறையில் பெருவழி, சைவம் பிற சமயங்கள் யாவும் அதனுள் அடங்கும்.
ஓதுசமயங்கள், பொருள் உணரும் நூல்கள்
ஒன்றோ டொன்று ஒவ்வாமல் உளபலவும்;
யாது சமயம்? பொருள்மூள் யாது இங்கு? என்னில்,
இவற்றுள்
`இது ஆகும்; இது அல்லது; எனும் பிணக்கது இன்றி,
நீதியினால் இவையாவும் ஓரிடத்தே காண
நின்றது யாது, அதுசமயம், பொருள் நூல்;
ஆதலினால் இவையிரண்டும் அருமறை, ஆகமத்தே
அடங்கியிடும்; இவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்.
என்னும் சிவஞான சித்தியைக் காண்க.
பதிகப் பெருவழி - பதிகமாகிய பெருவழி.
வழிகாட்டும் கருவியை, ``வழி`` என்றது கருவியாகு பெயர்.
மதியத் திரு நுதல் - பிறைபோலும் அழகிய நெற்றியை உடைய மகள்.
``பங்கனது அருளை நாங்கள் பெற வைத்த (பெறுதற்கு வாய்ப்பு அளித்த) நிதி`` என்க.
நிதி, உருவகம்.
கதி - சென்று அடையும் இடம்.
அமராவதி - தேவேந்திரன் நகர்.
`அதைக் காப்பவர்`, என்றது, `இந்திரன் ஆவர்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 3

காப்பயில் காழிக் கவுணியர்
தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகையிருப்
பேன்என்ன, மாரனென்னே!
பூப்பயில் வாளிக ளஞ்சுமென்
நெஞ்சுரங் கப்புகுந்த;
வேப்பயில் வார்சிலை கால்வளை
யாநிற்கும் மீண்டிரவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக் கைக்கிளைத் தலைவி காதலால் ஆற்றாது கூறியது.
கா பயில் - சோலைகள் மிகுந்த.
கவுணியர் தீபன் - கவுணிய கோத்தரத்தவர்கட்கு ஒரு விளக்காக வந்தவர், ஞானசம்பந்தர்.
`அவருக்கு, நான் இறந்துபட்டால் பெண் பழி வரும்; அது கூடாது` என்று நான் எவ்வளவோ ஆற்றி யிருந்தாலும் மாரன் வாளிகள் அஞ்சும் என் நெஞ்சு அரங்கம் புகுந்தன; மீண்டும் அவன் இந்த அரவிலே தனது வில்லை வளைக்கின்றான் - என்பதாம்.
``என்னே`` என்பதை இறுதியிற் கூட்டி `நான் என் செய்வேன்` என உரைக்க.
மாப் பழி - பெரும் பழி; பெண் பழி என்ன - என்று நான் கருதியிருக்க.
வாளிகள் - அம்புகள்.
வேப் பயில் சிலை - வெப்பம் மிகுந்த வில்.
கால் - முனைகள்.
`மீண்டும் சிலை கால் விளயாநிற்கும்? என இயைத்து முடிக்க.
இரவு - இரவின்கண்.

பண் :

பாடல் எண் : 4

இரவும் பகலும்நின் பாதத்
தலரென் வழிமுழுதும்
பரவும் பரிசே யருளுகண்
டாயிந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி
யே!குட வெள்வளைகள்
தரளஞ் சொரியுங் கடல்புடை
சூழ்ந்த தராய்மன்னனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இந்தப் பராகத்தே`` முதலாகத் தொடங்கி உரைக்க, ``பாதத்து`` என்பதில் அத்து, வேண்டா வழிச் சாரியை.
`பாரகத்தே விரவும்` என்க.
பாத அலர், உருவகம்.
வழி - சந்ததி.
விரவும் பரமதம்- பலவாகக் கூடுகின்ற வேற்றுச் சமயங்கள்.
கோளரி - சிங்கம்.
`வேற்றுச் சமயங்களாகிய யானைகட்குச் சிங்கமாய் உள்ளவர்` என்பது பொருள் ஆகலான் இஃது ஏகதேச உருவகம்.
இது `பரசமய கோளரி` என்றும் வரும்.
குடவளைகள் - குடம் போன்ற சங்குகள்.
தரளம் - முதாது.
`பூந்தராய்` என்பதை, ``தராய்`` என்றது தலைக் குறை.

பண் :

பாடல் எண் : 5

மன்னிய மோகச் சுவையொளி
யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந்
தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகம் கிங்கிணிப்
பாத நிழல்புகுவோர்
துன்னிய காஅமர் சண்பையர்
நாதற்குத் தொண்டர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மோகம் - மயக்கம்.
மோக ஐந்து - மயக்கத்தைத்தரும் ஐம்புலன்கள்.
பதம் - அவற்றின் ஆற்றல்.
ஐம்புல ஆற்றலைக் கடந்தோர், `துறவிகள், எல்லா நெறிகளிலும் துறவு நிலை உள்ளது எனினும், ஞானசம்பந்தருக்குத் தொண்டர் ஆகியவர்களே அவர் அடைந்த பேற்றினை அடைவர்` என்பதாம்.
அவர் அடைந்த பேறுசிவ சாயுச்சியம் அதனை,
போதநிலை முடிந்த வழிப்
புக்கு ஒன்றி உடன் ஆனார் 1 என்றதனால் உணர்க.
பாதம், ஞானசம்பந்தருடையன.
அவை சென்றது இறைவர் திருவடி நிழலில்.
பாத நிழல் புகுவோர் - அடியொற்றிச் சொல்பவர்.
துன்னிய கா அமர் சண்பையர் நாதன் - நெருங்கிய சோலைகள் பொருந்திய சீகாழியில் உள்ள அந்தணர் கட்குத் தலைவன்; ஞானசம்பந்தர்.

பண் :

பாடல் எண் : 6

தொண்டினஞ் சூழச் சுரிகுழ
லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன்
போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம்
போக்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின
ஆக்கிய வித்தகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ஞானசம்பந்தரது வீதி யுலாவைக் கண்டாள் ஒருத்தி கூறியது.
தொண்டு இனம் - அடியார் கூட்டம்.
இஃது அவரைச் சூழ்ந்து செல்கின்றது.
அவரைக் கண்ட மகளிரது மனங்களோ அக்கூட்டத்தைப் பின் தொடர்ந்து செல்கின்றன.
அவர் அணிந்துள்ள தாமரை மலரை விரும்பி வண்டுக் கூட்டமும் சூழ்கின்து.
``கண்டினம்`` என்பதை, `கண்+தினம்` எனப் பிரித்து, `மயில் தினம் உகுத்த கண்` என்க.
`கண்` என்பது ஆகுபெயராய் அதற்கு இடமாகி தோகையைக் குறித்ததும் தானியாகுபெயர்.
கண் வளை பிரம்போர் - மயில் தோகைகளை வளைத்துக் கட்டிய பிரம்பை உடைய சமணர்கள், `மயிலைக் கொன்று எடுக்காமல், அது தானாக உகுத்த தோகையைக் கொள்வர்` என்க.
நீராடாமை அவர் நோன்பு ஆகலின், ``கழுவா உடலம்`` என்றார், கழுவின - கழுவில் ஏறியிருப்பன.
``கழுவா உடலம் கழுவின ஆக்கின`` என்றது நயம்.
குருதியால் கழுவப்பட்டது என்க.
இனம் விண்டு சூழ - கழுவில் ஏறினார்க்கு இனமாய் உள்ளவர்கள் கழு மரங்களைச் சூழ்ந்து நிற்க.
வித்தகம் - சதுரப்பாடு உடையவன்.
`வாதில் வென்றவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

வித்தகம் பேசி,நம் வேணுத்
தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டும் முறுவல்நல்
லார்தம் மனம்அணைய,
உய்த்தகம் போந்திருந் துள்ளவும்
இல்லா தனவுமுறு
பொத்தகம் போலும்! முதுமுலைப்
பாணன் புணர்க்கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகன் ஐந்திணையுள் மருதத் திணைய தாய், வாயில் வேண்டிய பாணனைக் கழறித் தலைவி வாயில் மறுத்தது.
`பாணன் முது முலை புணர்க்கின்றது, (அவன் பேசுகின்ற) உள்ளவும், இல்லாதனவும் உறும் பொத்தகம் - அவ் இருசொற்களும் பொதிந்து உள்ள புத்தகம்.
தலைவி புதல்வனைப் பெற்றுள்ளாள் ஆகலின் தனது கொங்கைகளை ``முதுமுலை`` என்றாள்.
இங்ஙனம் கூறவே `நம்மை விரும்பாமல் இளையராகிய பரத்தையரைத் தேடி அவர் சேரியில் சென்று இரவெல்லாம் தங்கிவிட்டு, இங்குத் தங்குதல் மாத்திரைக்கு விடியலில் வர விரும்புகின்ற தலைவனை நம் இல்லத்துள் விடுத்தற்கு இப்பாணன் உள்ளதும், இல்லதுமாக ஏதேதோ சொல்லிக் கதைக் கின்றான்` எனத் தலைவி பாணனைக் கழறி வாயில் மறுத்தாளாம்.
``பரத்தையர் சேரியிலும் சென்று இப்படியே அவர்களிடம் பொய்யும், புனைவும் கூறி நம் தலைவனை அவர்கள் இல்லினுட் புகவிடுவதே இவனது தொழில்; அந்த தொழிலை நம் முன்பும் செய்ய வந்திருக்கின்றான்; ஆயினும் அது பலிக்காது`` என்றற்கு, ``பாணன் நம் முலை புணர்க் கின்றது, உள்ளவும், இல்லாதனவும் உறு பொத்தகம் போலும்`` என்றாள்.
புணர்க்கின்றது - புணர்ப்பதற்குக் கூறும் சொல், பொத்தகம் - இவன் கற்ற புத்தகத்தில் உள்ள சொற்கள்; ஆகுபெயர்.
`பாணன் தலைவனை முதுமுலை புணர்க்கின்ற சொல் பொத்தகம் போலும்` என்க.
வேணு - மூங்கில்.
இது முத்துக் களைப் பிறப்பிக்கும்.
`அது போல நம் தலைவன் பரத்தையரது வாய்களில் முத்துப் போலும் பற்களை வெளித்தோன்றி விளங்கச் செய்கின்றான்` என்பாள், ``நம் வேணுத்தலைவனை`` என்றும், `முத்து அகம் காட்டும் முறுவல் நல்லார்`` என்றும் கூறினார்.
வாள் - ஒளி நிகர்ந்து - நிகர்ப்ப; ஒரு படித்தாய் விளங்க.
வேணுத் தலைவன், உவமத் தொகை.
தலைவனை அவர்களது அகத்தில் வித்தகம் பேசி உய்த்து, தானும் போந்து இருந்து, அவர்தம் மனம் தலைவன்பால் அணைதற்குப் பேசுகின்ற` உள்ளவும் இல்லாதனவும் பொருந்திய பொத்தகம் எனக் கொள்க.
``முத்து அகம்`` என்பதில் அகம் - செப்பு.
வாய் இங்ஙனம் உருவகிக்கப்பட்டது.
``காட்டும்`` என்றது, `திறந்து காட்டு` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 8

புணர்ந்தநன் மேகச் சிறுநுண்
துளியின் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல விருந்தனை
யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன்
கொடிமதில் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு,
வாழி! மடக்குருகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவன் பிரிவால் ஆற்றாமை மிக்க தலைவி குருகோடு சொல்லி இரங்கியது இது, ``காமம் மிக்க கழிபடர் கிளவி`` எனப்படும்.
`குருகே! (நீயும்) மேகச் சிறு நுண் துளியில் சிறகை உதறி, ஆற்றியிருந்தவரைப் போல இருந்தனை.
(எனினும் உனது ஆற்றாமை தெரிகின்றது.
) இக்கொச்சையில் (என்னை மணந்தவரைப் போல) உன்னை மணந்தவரும் உன்னைத் தனியே விட்டுப் போயினரோ? சொல்லு` என உரைக்க.
``மேகத் துளியில்`` என்றதனால் அவர் சொல்லிச் சென்ற கார் காலம் வந்தமையைக் குறித்தாள்.
உணர்தல் - இங்கே, மெலியாது ஆற்றியிருத்தல்.
பரசுதல் - துதித்தல்.
குணம், பத்தி நெறிப் பண்பு.
கொச்சை - சீகாழி.
வாய், ஏழன் உருபு.
வாழி, அசை.
மடம் - இளமை.
குருகு - நீர்ப் பறவைப் பொது.

பண் :

பாடல் எண் : 9

குருந்தலர் முல்லையங் கோவல
ரேற்றின் கொலைமருப்பால்
அருந்திற லாகத் துழுதசெஞ்
சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதில் சண்பை
நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம்
. . . . . . . . . முரசே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டின் ஈற்றடி ஏடு சிதலமாகி முழுமையாகக் கிடைக்காமையால் இதன் முழுப் பொருளை அறிதல் அரிதாகின்றது.
) இப்பாட்டு முல்லைத் திணைத் துறையை உடையதாகத் தெரி கின்றது.
ஏறு தழுவள் குறிப்பு உள்ளது.
அருக - அசனி = அருகாசனி; சமணர்கிளாகிய பாம்புகளுக்கு இடிபோன்றவன்; ஞானசம்பந்தர்.
சண்பை நகர் - சீகாழி - அமை - மூங்கில்.

பண் :

பாடல் எண் : 10

முரசம் கரைய,முன் தோரணம்
நீட, முழுநிதியின்
பரிசங் கொணர்வா னமைகின்
றனர்பலர்; பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன்
கருது, அரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த
நகரன்ன தூமொழிக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டு, தலைவியது நொதுமலர் வரைவு முடுக்கம் கண்டு தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
) `அங்கு முரசு அறைய` என மாற்றி யுரைக்க.
முன் - தங்கள் வருகையின் முன்னால்.
பரிசம், பெண்ணை மணம் கொள்ளுதற்குத் தரும் விலை.
அமைகின்றனர் - இசைகின்றனர்.
``பலர்`` என்றதனால், `இன்னும் இருமுது குரவர் மகட் கொடை நேர்திலர்` என்பது பெறப் படும்.
``நீ`` என்பதற்கு முன் ``தாயே`` என்பது வருவிக்க.
`சங்கு, மணவினைச் சங்கு` என்பது தோன்றுதற்கு, ``அரி சங்கு`` என்றாள்.
அரி - திருமால்.
அவன் காத்தற் கடவுள் ஆதலின் அவன் சங்கு மங்கலச் சங்காம்.
அணைதல் - அணைக; வியங்கோள்.
என்னாமுன்- என்று இருமுது குரவர் கூறுதற்கு முன்.
அஃதாவது, மணத்திற்கு இசைவதற்கு முன் தூமொழி, தலைவி.
நான்கன் உருபை ஏழன் உருபாகத் திரித்து, `தூமெழிக்கண் நிகழ்ந்துள்ளதை கருது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
நிகழ்ந்துள்ளது, தலைவன் ஒருவனோடு களவிற் கூடிய கூட்டம்.
அணை வயல் - நீர் மடைகளை உடைய வயல்.
`வயல் சுரிசங்கினைத் தந்த நகர்` என்க.
`அருகாசனிதன் நகர் அடைதற்கு அரிதாதல் போல இவள் அடைதற்கு அரியள்` என்பாள், ``அருகாசனிதன் நகர் அன்ன தூமொழி`` என்றாள்.

பண் :

பாடல் எண் : 11

மொழிவது, சைவ சிகாமணி
மூரித் தடவரைத்தோள்
தொழுவது, மற்றவன் தூமலர்ப்
பாதங்கள்; தாமங்கமழ்ந்
தெழுவது, கூந்தல் பூந்தா
மரையினி யாதுகொலோ!
மொழிவது, சேரி முப்புதை
மாதர் முறுவலித்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தொழிற் பெயர் எழுவாய்கள் வினைகொண்டு முடியும் உருவுகளைப் பயனிலையாக ஏற்றல் இயல்பாகலின், ``மொழிவது, தொழுவது`` என்னும் தொழிற் பெயர்கள், ``தோளை, பாதங்களை`` என்னும் இரண்டன் உருபோடு முடிந்தன.
இரண்டன் உருபுகள் இங்கு இறுதிக்கண் தொக்கன.
எழுவது என்னும் எழுவாய், ``தாமரை`` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது.
ஈற்றில் நின்ற ``மொழிவது`` என்னும் எழுவாய், ``யாது`` என்னும் வினாப் பயனிலை கொண்டு முடிந்தது.
கொல், ஓ அசைகள்.
மொழிவது - புகழ்வது.
மூரித் தடவரைத் தோள் - பெரிய, அகன்ற மலைபோலும் தோள்கள்.
மற்று, வினைமாற்று.
தாமம் - மாலை.
`தாமமாய்` என ஆக்கம் வருவிக்க.
அகரச் சுட்டு `அவன் அணிந்த` எனப் பொருள் தந்தது.
முரி - மாறுபாடு.
புதைத்தல் - மறைத்தல் `சேரி மாதர்` என இயையும்.
முறுவலித்து - தமக்குள் எள்ளி நகையாடி.
`நாம் விரும்பிப் புகழ்வது சைவ சிகாமணி தோள்களையும், தொழுவது அவனது பாதங்களையும், கூந்தலில் மணங்கமழ அணிவது அவனது நினைவாக அவனுக்கு அடையாளமாகிய தாமரை மலர்மாலையுமாக ஆய்விட்டபொழுது சேரிப் பெண்டிர் நம்மை நகைத்துப் பேசுவதற்கு என்ன கிடக்கின்றது` என்பது இதன் திரண்ட பொருள்.
இப்பாட்டு, தன்னைத் தூதுவிடக் கருதிய கைக்கிளைத் தலைவிக்கு, ``இஃது அம்பல் அலராதற்கு ஏதுவாய்விடும்`` வன்புறை கூறியது.

பண் :

பாடல் எண் : 12

வலிகெழு குண்டர்க்கு வைகைக்
கரையன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர்
தீபன், கடலுடுத்த
ஒலிதரு நீர்வை யகத்தை
யுறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்,மட
மாதினை வாட்டுவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ஒருவழித் தணந்து வந்த தலைமகனைத் தோழி குறியிடத்தில் நேர்ந்து வரைவு கடாயது.
`மாதினை வாட்டுவது வார்பனியாம்` என முடிக்க.
`உன்னைப் புல்லிக் கிடத்தலால் தலைவிக்கு மிக இனிதாதற்கு உரிய பனிக்காலம், நீ தணந்தமையால் மிக இன்னதாயிற்று` என்றபடி.
இதன் பயன் தலைவன் தலைவியை வரைந்தெய்து வானாதல், `கவுணியர் தீபன் (தனது திருவருள் வலியால்) வையகத்தை உறையிட்டது.
(மூடி மறைத்தது) ஒத்து உதிரும் பனி` என்க.
`வைகைக் கரையில்` என ஏழாவது விரிக்க.
கலி - ஆரவாரம்; புகழ் ஆரவாரம்.
கெழு - பொருந்திய.
`உதிரும் பனி, மலிதரு பனி, வார் பனி` எனத் தனித்தனி முடிக்க.
வார்தல் - ஒழுகுதல்.
`சில வேளை உதிர்ந்தும், சில வேளை ஒழுகியும் விழும் பனி` என்றபடி.
குறிஞ்சித் திணைக்கு முன்பனிக் காலமாகிய பெரும்பொழுது உரித்தாக ஓதப்பட்டமை நினைக.

பண் :

பாடல் எண் : 13

வாட்டுவர் தத்தந் துயரை;வன்
கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத்
தலைவனை மெல்விரலால்,
தோட்டியல் காத னிவனென்று
தாதைக்குச் சூழ்விசும்பில்
காட்டிய கன்றின் கழல்திற
மானவை கற்றவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
வன் கேழல் - காட்டுப் பன்றி.
சிவபெருமான் பன்றிப்பின் சென்றது.
அருச்சுனனுக்காக.
``கழல் திறம்`` என்று, `திருவருள் ஆற்றல்` என்றபடி.
ஆற்றல், அதனால் விளைந்த அற்புதங்களைக் குறித்து.
``கற்றவர்`` என்பது, கேட்டவர், பயின்றவர் ஆகியோரையும் தழுவி நின்ற உபலக்கணம்.
``கன்று`` என்றது குறிப்புருவகம் ஆதலின், `யானைக் கன்று` எனக் காதற் சொல்லாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு
அன்னை யருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ
சிகாமணி சண்பையென்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம்
பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று
தோன்றுங் கடிநகரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, உடன்போக்கால் பிரிந்த தலைவியைத் தேடிப் பின் சென்ற செவிலிக்கு, முன் சென்ற வரைக்கண்டோர் கூறியது.
`அன்னை! அவர் சென்று கடிநகர் அணுகுவர்; (ஆகவே, நீ இனிச் செய்யத்தக்கது) மீள்வதே` என இயைத்து முடிக்க.
அவர் - தலைவன்.
தலைவியர் `தவல்விக்கின்ற` என்பது இவ்விகுதி தொகுக்கப்பட்டு, ஏதுகை நோக்கி லகரம் ரகரமாய்த் திரிந்து நின்றது.
தவல்வித்தல் - அழித்தல்.
`சண்பை என்னக் கோபுரம் சூலத் தொடு தோன்றும் கடி நகர் என்க.
கடி - காவல்.
இந்நகர் தலைவன் உடையது.
பவர்தல் - படர்தல்.
`கொடி` என்னும் பெயர் ஒருமை பற்றி, ``படர்கின்ற`` என்றார்.
பல் கதிரோன் - சூரியன்.
`அவனது தேர்க் குதிரைகளைச் சூலம் தனது உயர்ச்சியால் கவர்கின்றது` என்பதாம்.
கவர்தல், இங்கே தடுத்தல்.

பண் :

பாடல் எண் : 15

நகரங் கெடப்பண்டு திண்தேர்
மிசைநின்று, நான்மறைகள்
பகரங் கழலவ னைப்பதி
னாறா யிரம்பதிகம்
மகரங் கிளர்கடல் வையம்
துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப்
பிரானென்பர், நீணிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நகரம், திரிபுரங்கள்.
``நின்று`` என்னும் செய்தென் எச்சம் எண்ணின்கண் வந்தது.
எனவே, `ஒரு காலத்தில் நான்மறை களைப் பகர்ந்தவனும், அழகிய கழல்களை உடையவனும் ஆகிய அவனை மொழிந்த நிகர் இலி` என்பது பொருளாயிற்று.
ஒரு காலத்தில் நான்மறை பகர்ந்தது, படைப்புக் காலத்தில் ஆல்நிழலில் ``அவனை`` என்பதை, `அவன்மேல்` எனத் திரித்துக் கொள்க.
``வாய்`` என்ற வேண்டாக் கூற்று, `ஞானப் பால் உண்ட` என்னும் சிறப்பினைத் தோற்றுவித்தது.
மகரம் - சுறாமீன்.
அங்கு, அசை.
நிகர்இலி - தனக்கு நிகராவார் ஒருவரையும் இல்லாதவன்.
கவிக் காழி - ஆரவாரம் மிக்க சீகாழி.
`அம் கழலவனைப் பதினாறாயிரப் பதிகம் வாய் மொழிந்த நிகர் இலியாவான் காழிப் பிரான் என்பர்` என முடிக்க.
``நீள் நிலத்து`` என்றது.
`நிலத்துள்ளார் யாவரும்` என்பது தோன்றுதற்கு.

பண் :

பாடல் எண் : 16

நிலம் ஏறியமருப் பின்திரு
மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகனை
தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண்
டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன்
காட்டிய நாதனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிலம் ஏறிய மருப்பின் திருமால் - வராக அவதாரத்தில் பூமி ஏறி நின்ற கொம்பினை உடைய மாயோன்.
குலம் ஏறிய - சிறப்பு மிகுந்த.
கோகனம் - தாமரை.
அது `கோகனதம்` என்றும் மருவி வரும்.
சலம் - கங்கை.
`முடியும், தாளும் கண்டிலர்` என்க.
இவையிரண்டும் ``திருமாலும், அயனும்`` என்பவற்றோடு எதிர்நிரல் நிறையாய் இயைந்தன.
சம்பந்தன் அன்று தந்தை
காணக் காட்டிய நாதனைத்
திருமாலும், அயனும் தாள்,
முடி கண்டிலர்.
என இயைத்து முடிக்க.
``நாதனைத் தாள் முடி கண்டிலர்`` என்பதில், ``யானையைக் கோட்டைக் குறைத்தான்`` என்பது போலச் சிறுபான்மை முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு வந்தது.

பண் :

பாடல் எண் : 17

நாதன் நனிபள்ளி சூழ்நகர்
கானக மாக்கிஃதே
போதின் மலிவய லாக்கிய
கோனமர் பொற்புகலி
மேதை நெடுங்கடல் வாருங்
கயலோ? விலைக்குளது
காதி னளவும் மிளிர்கய
லோ?சொல்லு; காரிகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு,
காமஞ் சாலா இளமையோளாகிய
நெய்தல் நிலத் தலைவி பால் அந்நிலத்
தலைவன் ஏமம் சாலா இடும்பை
யாகிய கைக்கிளைப் பட்டுச்
சொல் எதிர் பெறான், சொல்லி இன்புற்றது.
2 `காரிகையே! விலைக்கு உள்ளது (நீ விற்பது) கடலினின்றும் வாரிய கயலோ? அல்லது (உனது முகத்தில்) காதளவும் சென்று மிளிர்கின்ற கயலோ? (ஏது?) சொல்லு` என `மீன் விற்கின்ற நீ உன் கண்ணால் என்னை வாட்டுகின்றாய்` என்பதாம்.
நாதன் நனி பள்ளி நகர் - சிவபெருமானது `திருநனி பள்ளி` என்னும் தலம்.
``சூழ்`` என்னும் முதலனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய், அத்தொழிலை உடைய இடத்தைக் குறித்தது.
`முன்பு கானகம் ஆக்கிப் பின்பு அதனையே வயல் ஆக்கிய கோன்` என்க.
`கானகம்` என்பது முல்லை நிலமும், `வயல்` என்பது மருத நிலமும் ஆவன ஆயினும் அவை சிறு பான்மை பற்றி ஓதப்பட்டனவேயாகும்.
ஏனெனில், இது பாலை நெய்தல் பாடியதாகவே பிற இடங்களிலும் சொல்லப்படுதலாலும், இவ் ஆசிரியர்தாமே.
நனிபள்ளியது - பாலைதனை
நெய்தல் ஆக்கியும்
எனக் கூறுதலாலும் என்க.
மேதை - புகலிக் கடல் - சீகாழியைச் சார்ந்து நிற்கும் கடல்.

பண் :

பாடல் எண் : 18

கைம்மையி னால்நின் கழல்பர
வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம்
நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங்
கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி
யோ!சொல்லு சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைம்மை - சிறுமை.
இஃது இப்பொருட்டாயின் பரவாமைக்கு காரணமாகும்.
இவ்வாறன்றி, `கைம்மை - கைத் தொண்டு` எனின், அது `கைத்தொண்டினால் பரவுதலைச் செய்யாமை` எனப் பரவுதலின் வகையைக் குறிக்கும்.
வன்மையன் - வல்லமை யுடையவன்; அஃதாவது, `வீடு பேற்றைப் பெற வல்லவன்` என்பதாம்.
விழுப்பம் - மேன்மை.
``திறன் அறிந்து தீதின்றி வந்து பொருள் அறம், இன்பம் இரண்டையும் தரும் 2 ஆதலின், ``விழுப் பொருள்`` எனப்பட்டது.
ஓடு, எண்ணிடைச் சொல்.

பண் :

பாடல் எண் : 19

பந்தார் அணிவிரற் பங்கயக்
கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள
வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது
நானெப்பொழுது முன்னுஞ்
சந்தார் அகலத் தருகா
சனிதன் தடவரையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, குறிஞ்சித் திணையில் `வறுங்களம் நாடி மறுகல்` என்னும் துறையது.
அஃதாவது தலைவியைத் தமர் இற்செறிக்கத் தினைப்புனமும் கொய்யப்பட்ட பின்னர்த் தலைவன் அவண் சென்று வெற்றிடத்தைக் கண்டு வருந்தித் தன்னுள்ளே கூறியது.
பந்து ஆர் விரவு - ஆடுவதற்கான பந்து சேர்ந்திருக்கும் விரல்களை உடையவள்.
சிலர், `பந்தவாது, அகங்கை புறங்கைகளின் திரட்சி` என்பர்.
அதனை எடுத்துக் கூறுதலால் பயன் யாதும் இல்லை யாகலானும், அஃது ஆடவர்கட்கும் உள்ளதே யாகவனும், அது பொருந்தா உரையாம்.
பங்கயம் - தாமரை, அஃது ஆகுபெயராய், அதன் அரும்பைக் குறித்தது.
பங்கயக் கொங்கை, பவள வாய்.
உவமத் தொகைகள்.
கோமள வல்லி - அழகிய கொடி போன்றவள்; உவமையாகுபெயர்.
நந்தா விளக்கு - அணையா விளக்கு.
இதுவும் உவமையாகுபெயரே.
`நான் கண்டது எப்பொழுது` என வருத்தத்தால் அண்மைக் காலத்தை மிகக் கடந்த சேய்மைக் காலமாக மயங்கி நினைவு கூர்வானாய் வருந்திக் கூறினான்.
`அருகாசனிதன் தடவரைக் கண்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
முன்னும் - நினைக்கப் படுகின்ற.
`முன்னும் அருகாசனி` என்க.
சந்து ஆர் அகலத்து - சந்தனம் பொருந்திய மார்பினை உடைய.

பண் :

பாடல் எண் : 20

வரைகொண்ட மாமதில் சண்பைத்
தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின்
நஞ்ச நிகழக்கொலாம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ்
சுழலநொந் தோரிரவும்
திரைகொண் டலமரு மிவ்வகல்
ஞாலஞ் செறிகடலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும் தனிமை மிக்க தலைவி கடல் ஒலிக்கு ஆற்றாது இரங்கியது.
`ஆற்றாமையால் இரவில் துயில் வருதல் அரிதாய் இருக்க, அதன்மேல் கடலும் இரவு முழுதும் ஒலித்துத் துயிலைத் தடுக்கின்றது` என்பதாம்.
``கொண்ட`` என்பது உவம உருபு.
`வாழ்த்தாதவர்கள் துன்புற்று அரற்றுதல்போலக் கடல் திரை கொண்டு அலமரும்` என வினைமுடிக்க.
திரைகொண்டு - அலைகளைப் பெற்று.
அலமரும் - அலையும்.
`அலையும்` என்பது தன் காரியத்தின் மேலதாய், `ஒலிக்கும்` எனப் பொருள் தந்தது.
`கடல் இன்று அலமருதல், முன்பு தேவர்கள் கடைந்த காலத்தில் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நஞ்சைத் தோற்றுவித்ததுபோலத் தோற்றுவிக்கவோ` என அஞ்சிய வாறாம்.
இது தற்குறிப்பேற்ற அணி.
கொல், ஐயம், ஆம், அசை.
``கடைந்தது`` என்பது அத்தொழிலைக் குறித்தது.
நிரை - வரிசை.
இன், உவமப் பொருள்கண் வந்த ஐந்தன் உருபு.
``நுரை கொண்டு`` என்பதைத் ``திரைகொண்டு`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
மெய் - உடம்பு.
பரம் - சுமை.
`உடற் சுமையோடு உள்ளம் சுழல நொந்தோர்` என்க.
`சுமையோடு` என்பது, `சுமையாக` அதனுடன் என்றவாறு.
நோதல், தனிமையினால், கூடினார்க்கு இனியதாகின்ற இரவு இன்னாது ஆதல் பிரிந்தோர்க்கே யாதலின் கடல் வருத்தம் செய்யும் இராக் காலத்தை ``நொந்தோர் இரவு`` என அவர்க்கே உரித்தாக் கினாள்.
ஞாலம் செறி கடல் - நிலத்தை உள்ளடக்கிய கடல்.

பண் :

பாடல் எண் : 21

கடலன்ன பொய்மைகள் செய்யினும்
வெய்ய கடுநரகத்
திடநம னேவுதற் கெவ்விடத்
தானிருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத்
தலைவன்செந் தாமரையின்
வடமன்னு நீள்முடி யானடிப்
போதவை வாழ்த்தினமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
வடம் - மாலை.
தாமரை மலர் மாலை அந்தணர்களுக்கு அடையாள மாலையாகும்.

பண் :

பாடல் எண் : 22

வாழ்த்துவ தெம்பர மேயாகும்,
அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்து மாழா
தது,வரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற்
கிடமிசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம், போதக
மீனுங் கழுமலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கழுமலத்தையே வாழ்த்துதல் எம் பரமே யாகும்` என வினை முடிக்க.
பரம் - கடமை.
அந்தம் - யுக முடிவு.
முந்நீர் - கடலில் உள்ள மூன்று நீர்.
(ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்).
`நீர் - நீர்மை` எனக் கொண்டு, ``படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தன்மைகளையுடைய கடல்`` என்பர் நச்சினார்க்கினியர்.
`முந்நீர், வையத்தை ஆழ்த்திய காலத்தும் ஆழாததும், சம்பந்தர்க்கு இடமும் ஆகிய கழுமலம்` என்க.
ஏகாரம், தேற்றம்.
கா - கடற்கரைச் சோலை.
இது, `கானல்` எனப்படும்.
கேதகம் - தாழம் பூ.
போது - மற்றை மலர்கள்.
`இவைகளில் தும்பி (வண்டுகள்) அடை கிடக்கும் கழுலம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 23

மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி
நீண்முடி வண்கமலப்
பலர்மயில் கீர்த்திக் கவுணியர்
தீபன் பகைவரென்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு
மே?கணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன
மாகில் அரும்பினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பகற்குறியில் தினைப்புனம் வந்த தலைமகனைத் தோழி கண்டு வரைவு கடாவுவாளாய், `வேங்கை மரம் பூத்தது, இதனைக் காணின் எமர் தினைப் புனத்தைக் கொய்து விடுவார்கள்.
அப்பால் தலைவி இற் சொறிக்கப்படுவாள்; இனி நீவிர் இங்கு வாரற்க` என்றாட்குத் தலைவன் வரைவு மறுத்தது.
வேங்கை பூப்பின் அதுவே காலமாகத் தினையை அறுவடை செய்தல் வழக்கம்.
`வாட் கண்ணியகேணியார் அலர்பயிலா முன்னம் அரும் பினைப் பறித்தனமாகில் புனம் கொய்திடுமே?` என வினை முடிக்க.
வேங்கை மரம் பூத்து அலர்வதற்கு முன்னே நாம் அரும்புகளைக் கொய்து விடுவோம்; பின்பு எப்படி தினைப்புனம் கொய்யப்படும்` எனத் தலைவன் கூறித் தோழியை நகையாடினான்.
வேங்கை நன்கு பூத்துக் குலுங்குவது எப்பொழுது? எல்லாம் நாளையே நிகழப் போவ தாகச் சொல்லி என்னை ஏய்க்கின்றாய்` என்பது தோன்றத் தலைவன் இயலாத ஒன்றை இயல்வதுபோலக் கூறி அவளது விலக்குரையை இகழ்ந்தான்.
இஃது, `எள்ளல் பற்றி நகை` என்னும் மெய்ப்பாடு.
``மலர் பயில்`` என்பதில் `பயில்`, உவம உருபு.
`நீள் முடியில் கமலப் பூவை யுடைய தீபன்` என்க.
பின் வந்த `கண்ணி` முடியில் அணியும் மாலை.
`கீர்த்தியை` உடையவன்.
என்பதும் தீபனையே சிறப்பித்தது.
`தீபனுக்குப் பகையாயினார் புலம்புவது போல வேங்கை புலம்ப` என்க.
கணி - வேங்கை மரம், இகழ்ச்சி தோன்ற அதனை உயர் திணையாக்கிக் கூறினார்.
புலம்புதல் - தனிமைப்படுதல்.
அஃதாவது பொலிவை இழந்து நிற்றல்.
பகைவர்க்கும் இது பொருந்தும்.
`இத்தலை பயில்` எனச் சுட்டு வருவிக்க.
தலை - இடம் கொய்திடும் - கொய்யப் படும்.
ஏகாரம், வினாப் பொருட்டாய் கொய்யப்படாமையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 24

அரும்பின அன்பில்லை யர்ச்சனை
யில்லை யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி
செய்கிலன் பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங
னேவந்து நேர்பட்டதால்
கரும்பன நீள்வயல் சூழ்காழி
நாதன் கழலடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரும்பின அன்பு - மெய்ம்மயிர் பெடித்தற்கு ஏதுவான அன்பு.
``அரும்பின்`` என்னும் பெயரெச்சம் காரணப் பெயர் கொண்டு முடிந்தது.
`அரன் நெறியே விரும்பின மாந்தர் சிவன் அடியார்கள்.
மெய் - உண்மை உடம்பு இருபொருளும் கொள்க.
நேர்பட்டது - கிடைத்தது.
ஆல், அசை கரும்பன - கரும்புகளை உடைய `நல்வியல்புகள் பலவும் உடைய அன்புள்ளத்தார்க்கும் கிடையாத கழலடி, நல்லியல்பு ஒன்றும் இல்லாத வன்புள்ளத்தேனுக்கு எங்ஙனம் வந்து கிடைத்தது` என வியந்து கூறியவாறு.
`இப் பிறப்பில் யாதும் செய்யாவிடினும், முற்பிறப்பில் நல்வினை செய்தேன்போலும்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 25

அடியால் அலர்மிதித் தாலரத்
தம்பில் கமிர்தமின்(று)இக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்
வா(று)அலர் கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம்
பந்தன் கருதலர்போல்
வெடியா விடுவெம் பரல்சுறு
நாறு வியன்கரத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவியது உடன்போக்குப் போயதை அறிந்த நற்றாய் வருந்தியது.
`மிதித்தாலும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப் பட்டது.
அரத்தம் பிலகு - இரத்தம் சிந்துகின்ற.
அமிர்தம் - அமிர்தம் போல்வாள்.
அவளது மென்மையறியாமற் சுரத்து உய்த்தமை பற்றித் தலைவனை, ``கொடியான்`` என்றாள்.
கடி - விளக்கம்; அடையாள மாய் விளங்குவது.
``கருதலர்`` என்பது, `பகைவர்` என்னும் அளவில் நின்று, `ஞானசம்பந்தனுக்கு` எனத் தொக்கு நின்ற நான்காவதற்கு முடிபாயிற்று.
வெடியா விடு - நிலம் வெடித்து வெளித் தள்ளுகின்ற.
பரல் - பரற்கற்கள்.
சுரம் - பாலை நிலம்.
பின்னர், ``இன்று`` என்றமையால், முன்பு `இயல்பாக` என்பது வருவிக்க.
`இயல்பாக அடியால் அலர்மிதித்தாலும் (அடிகளில்) அரத்தம் பில்குபவளாகிய ளாகிய என்மகள் இன்று பரல் நாறும் சுரத்துக்கண் கொடியானொடும் பின் நடந்தது எவ்வாறு` என வினை முடிக்க.
இது, `தன் கண் தோன்றிய இழவு பற்றி பற்றி வந்த அழுகை` என்னும் மெய்ப்பாடு.

பண் :

பாடல் எண் : 26

சுரபுரத் தார்தம் துயருக்
கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண்
டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தானடி எய்துவ
னென்ப, அவனடிசேர்
சிரபுரத் தானடி யாரடி
யேனென்றும் திண்ணனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`(யான்) - பரமன் மன்னும் மரபு உரத்தான் (அவன்) அடி எய்துவான் - என்ப, அவன் அடி சேர் சிரபுரத்தான் அடியார் அடி வான் என்னும் திண்ணனவே` என வினை முடிக்க.
(அடைதற்கு) உரிய மரபுகளாவன, சரியை முதலிய நான்கு, `அவைகளைச் செய்து பெற்ற உரத்தால் (வலிமையால்) நான் அவன் அடி அடைவேன்` என்று எண்ணுவன எல்லாம், `சிரபுரத்தான் அடியார்க்கு அடியான்` என்னும் பேற்றினை நான் பெற்ற வன்மையினாலேயாம்` என வினை முடிக்க.
சுரபுரம் - தேவ லோகம்.
தேவர்கட்குப் பரராய (வேற்றவ ராகிய) அசுரர்புரம், திரிபுரம்.
``மரபு உரத்தான்`` என்பதில் `ஆன்` மூன்றனுருபு.
சிரபுரம் - சீகாழி.
திண்ணன - திண்மையை உடையன.
`ஞானசம்பந்தருக்கு அடியார்க்கு அடியரானவரும் சிவனடியைச் சேர்வர்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 27

திண்ணென வார்சென்ற நாட்டிடை
யில்லைகொல்! தீந்தமிழோர்
கண்ணென வோங்கும் கவுணியர்
தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும்
பீன,மற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து)
ஓடி எழுமுகிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பொருள் மேற் சென்ற தலைவன் வரவு நீட்டிப்பத் தலைவி கார் கண்டு இரங்கியது.
`விண்ணினவாய், முல்லை அரும்பு ஈனவும், யாம் மெலிய வும், எண்ணின நாள் வழுவாது இரைத்து ஓடித் தீபன் கைபோல் பொழிந்து எழு முகில் அவர் சென்ற நாட்டிடை இல்லை கொல்` என இயைத்து முடிக்க.
திண் என் அவர் - உள்ளம் இளகுதல் இன்றி வல்லென்றி இருக்கும் அவர்; தலைவர்.
`கண் பொருள்களைக் காட்டுதல் போலப் பாடுபொருளைத் தெரிவிப்பவன்` என்பதாம்.
இது சிறப்பு நிலைக் களனாக வந்து உவமை.
விண்ணினவாய் - வானம் முழுதும் பரந்தன வாய்.
எண்ணின நாள், ``இன்ன நாளில் வரும்`` என்று நாள் தோறும் எண்ணால் எண்ணிக் கொண்டு வந்த நாள்.
`அந்த நாள் வழுவாது முகில்கள் என்று சொல்லிச் சென்ற சொற்படி வந்திலர்` என்பது குறிப்பு.
`இந்நாட்டில் எழு முகில் அவர் சென்ற நாட்டில் இல்லையோ என்றதும் வழுவினதைக் குறிப்பாற் கூறியதே.
`கார் காலம் வந்தவுடன் வருவேன்` என்று சொல்லி வேனிற் காலத்தில் பிரிந்து செல்லுதலும், பின்பு கார் காலம் வந்தவுடன் வந்து சேர்தலும் தலைவரது இயல்பு.
இரைத்து - ஒலித்து.

பண் :

பாடல் எண் : 28

எழுவாள் மதியால் வெதுப்புண்(டு)
அலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள், தனக்கின் றருளுங்
கொலாந்,தொழு நீரவைகைக்
குழுவா யெதிர்ந்த உறிகைப்
பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா வுடலம் கழுவின
வாக்கிய கற்பகமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு ஞானசம்பந்தரைக் காதலித்த கைக் கிளைத் தலைவியது ஆற்றாமையைச் செவிலி சொல்லி இரங்கியது.
``எழுவாள்`` என்பது முதலியவற்றிற்கு `என் மகள்` என்னும் தோன்றா எழுவாயை முதற்கண் வருவித்துக் கொள்க.
``எழுவாள்`` என்பதை ``அலமந்து`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
மதி - நிலவு.
தனக்கு - அவளுக்கு; `கற்பகம் அருளுங்கொல்` எனக் கூட்டி முடிக்க.
ஆம், அசை.
தொழு நீர - வணங்கப்படும் தன்மையை உடை.
`வைகையில் குழுவாய் எத்ர்ந்த` என்க.
எதிர்ந்தது, புனல் வாதம் செய்ய வந்தது.
``கழுவா உடலம் கழுவின ஆக்கிய`` என் மேல் வந்த தனை நோக்குக.
1 கற்பகம், எண்ணிய எண்ணியாங்கு வழங்குதல் பற்றி வந்த உருவகம்.

பண் :

பாடல் எண் : 29

கற்பா நறவம் மணிகொழித்
துந்தும் அலைச்சிலம்பா!
நற்பா மொழியெழில் ஞானசம்
பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை
யின்னிளம் செவ்விகண்டிட்(டு)
இற்பா விடும்வண்ண மெண்ணுகின்
றாளம்ம! வெம்மனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தோழி, `தலைவி இனி இச்செறிக்கப் படுவாள்` எனப் படைத்துமொழி கூறி வரைவு கடாயது.
`கல் பா மணி` எனக் கூட்டி, `கற்களில் உள்ள ஒளிக் கற்களை` என உரைக்க.
நறவம் - தேன்.
நற் பா - ஞானப் பாடல்.
மொழி சம்பந்தன்.
வினைத்தொகை.
புறவம் - சீகாழி.
முலையின் செவ்வி கண்டு எம் அன்னை இற்பாவிடும் வண்ணம் எண்ணுகின்றாள்` என இயைக்க.
அம்ம - இதுகேள்.
``அம்ம கேட்பிக்கும்`` 1 என்பது இலக்கணம்.
``கண்டிட்டு`` என்பதில் இட்டு, அசை.
`இனித் தலைவி புறத்துவாராள்` என்பதாம்.
இது கேட்டுத் தலைவன் வரைவு முடுக்கத்தில் தலைப்படுவானாதல் பயன்.

பண் :

பாடல் எண் : 30

எம்மனை யா,எந்தை யாயென்னை
யாண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம்
பந்தன் புறவமன்னீர்!
வெம்முனை வேலென்ன வென்னமிளிர்ந்து
வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ
னுள்ளத் தொளிர்வனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவியது குறிப்பு உணர்ந்த தலை மகன் பின்னும் வேட்கை மீதூர்தலை உணர்ந்த தலைமகளுக்குத் தன் நிலை உரைத்தது.
அன்னை, `அனை` என இடைக் குறைந்து நின்றது.
எண் அன்னையாய் - எம் தாய்க்குத் தாய்.
எந்தை யாய் - எம் தந்தைக்குத் தாய், `இவர்களுடன் என்னையும் ஆண்டு` என்க.
குழி முழுதாண்டமை கூறியவாறு.
மலர், தாமரை மலர்.
புறவம் - சீகாழி.
அன்னீர் - போன்றவரே.
தலைவியைத் தலைவன் பன்மைச் சொல்லால் உயர்த்துக் கூறினான்.
அவள் இன்னும் தனக்கு உரியவள் ஆகாமையின்.
அடுக்குப் பன்மை பற்றி வந்தது.
மிளிர்தல் - சுழலுதல்.
அரி - செவ்வரிகள்.
ஒளிர்வன - ஒளிரும் கண்கள்.
`எம் உள்ளத்து ஒளிர்தலால் உண்மையில் அவை உம்முடையனவோ, அல்லவோ` என்றபடி.
`உம் பார்வையின் தொடர்ச்சியால் எனது வேட்கை ஒரு காலைக்கு ஒருகொல் மிகாநின்றது` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 31

ஒளிறு மணிப்பணி நாட்டும்,
உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண்
டே?மிண்டி மீனுகளும்
அளறு பயற்சண்பை நாத
னமுதப் பதிகமென்னுங்
களிறு விடப்புகு மேல்தொண்டர்
பாடும் கவிதைகளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சண்பை நாதன் (தனது) `பதிகம்` எனும் களிறுகளை விட, (அவை சென்று) புகுமேல், ஏனைத் தொண்டர்களது கவிதைகள் சில மூவுலகத்திலும் எதிர் நிற்பது உண்டே` எனக் கூட்டி முடிக்க.
மணி - மாணிக்கம்.
பனி நாடு - நாகலோகம்.
``உலகம்`` என்றது இவ்வுலகத்தை.
உம்பர் - வானுலகம்.
வெளிறு பட - உள்ளீடு இல்லாமை தோன்ற.
இது ஞானசம்பந்தரது பாடலின் முன் ஏனைக் கவிதைகள் பெறும் மதிப்பீடு பற்றிக் கூறியதன்றி, எப்பொழுதும் உள்ள நிலை பற்றிக் கூறியதன்று.
``உண்டே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், `இன்று` என்னும் எதிர்மறைப் பொருளைத் தந்தது.
மிண்டி - வலிமை பெற்று.
அளறு - சேறு.
அமுதப் பதிகம், உவமத் தொகை.
பதிகம் என்னும் களிறு, உருவகம்.
உவமைப்பின் உருவகிக்கப்பட்டதாயினும் இது பலபொருள் உவமைப் பாலதே இரண்டிறஅகும் பொதுதன்மை வேறு வேறு ஆகலின் அமைந்தது.

பண் :

பாடல் எண் : 32

கவிக்குத் தகுவன, கண்ணுக்
கினியன, கேட்கில்இன்பம்
செவிக்குத் தருவன, சிந்தைக்
குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில்
முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை
நாதன் குரைகழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
நவ்வி, ``நவி`` என இடைக் குறைந்த நின்றது.
தாளம் - முத்து.
நவ்வி - மான்.
முற்றில் - சிறுமுறம் `சிறுமியர் தரளம் முற்றி முகந்து குவிக்க` என்க.
திரை - கடல் அலை.

பண் :

பாடல் எண் : 33

கழல்கின்ற ஐங்கணை, யந்தியும்,
அன்றிலுங் கால்பரப்பிட்(டு)
அழல்கின்ற தென்றலும் வந்திங்
கடர்ப்ப,வன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன்
தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ,
இனிஇன் றுறுகின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் கைக்கிளைத் தலைவி தலைவன்.
அளி பெறாமையால் வருந்திக் கூறியது.
கழல்கின்ற - வில்லை விட்டுக் கழன்று வருகின்ற ஐங்கமை மாரனுடையன, அவற்றோடுகூட, அந்தி முதலிய மூன்றும் அடர்ப்ப (துன்புறுத்த) உழல்கின்ற நெஞ்சம் (அங்ஙனம் உழலுதலால் உறுகின்றது என்! (அடையப் போவது என்ன!) என்க.
ஆயிழை, வணிகப் பெண்.
அவளுக்காக ஞான சம்பந்தர் நஞ்சம் தணித்தது.
திருமருகலில், திருப்புறம்பயத்திலும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
`பரப்பியிட்டு` என்பது குறைந்து, ``பரப்பிட்டு`` என வந்தது.
கால் - காலுதல்; வெளிப்படுத்தல்.
`காலுதலால் பரப்பியிட்டு` என்க.
பரப்படுவது நாற்றம்.
``கால் பரப்பி`` என்பது பிறிதொரு பொருள்மேலது போலத் தோற்றுவித்தது நயம்.

பண் :

பாடல் எண் : 34

உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய
தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல்
முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ
மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம்
போலுந் துடியிடைக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, `பெருந்தமையாகிய நீ இன்னையாகுதல் தகாது` எனக் கழறிய பாங்கனுக்குத் தலைவன் தனது மெலிவைக் கூறியது.
`கழுமலம் போலும் துடி இடைக்கு அன்பினொடு, தாளமும், இன்பும், முண்டமும் கண்டவரைத் தெறுகின்ற வாறாய் உண்டாய் இருக்கை என்ன செய்தவமோ!`` எனக் கூட்டி முடிக்க.
அன்பு, ஒத்த அன்பினர்பாற் செல்லும் அன்பு.
இதுவும் ஒரு பண்பாடு.
``தாளம்`` சிறப்புருவகமாய்க் கொங்கைகளைக் குறித்தது.
`தன்னை மணப்பான் பெறுகின்ற இன்பும்` என்க.
இதனால் தலைவன் முன்பு கூட்டம் நிகழ்ந்தமையைக் குறிப்பிட்டு, அங்ஙனமாயினும் ``அறிதொறறி யாமை காணப்பட்டாற் போலக் காதலி மாட்டுச் செறிதொறும் முன்னைச் செறிவு செறிவாகா தொழிகின்றது`` 1 என்பதை உணர்த்தி னான்.
நுதல், இங்கே புருவம்.
முண்டம் - நெற்றி.
`தெறுகின்றவாறாய் அமைந்தமை அவள் முன்பு செய்த எந்தத் தவத்தின் பயனோ` என்க.
தவம், கருவியாகு பெயர்.
``கண்ட வரைத் தெறுகின்றவாறு`` என்றதனால், `நீயும் கண்டனை யாலின் இவ்வாறு கழலுகிறாய்` என்றான்.
துறுகின்ற - முழுமையாகச் செறிந்து நிற்கின்ற.

பண் :

பாடல் எண் : 35

இடையு மெழுதா தொழியலும்
ஆம்;இன வண்டுகளின்
புடையு மெழுதினும் பூங்குழ
லொக்குமப் பொன்னனையாள்
நடையும் நகையுந் தமிழா
கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியு மெழுதிடின்,
சால அதிசயமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு ``மடல் என, மடல்மா கூறிய தலைவற்கு, ``அதற்கு அவள் வடிவை ஓவியமாக எழுதிக் கொணரல் வேண்டும்; அது நும்மால் இயலாது` எனத் தோழி கூறி நகையாடியது.
`வண்டுகள் மெய்க்கும் சூழலை நீர் எழுதிவிட்டாலும் அப்பொன்னனையாளது பூங்குழை ஒருவாறு எழுதியது போல் ஆய்விடும்.
இனி இடையையும் எழுதாது ஒழிந்தால் அதனையாரும் குறையாக நினைக்க மாட்டார்கள்.
(ஏனெனில் காண்டற்கு அரிது) ஆயினும் அவளது நடையையும், நகைப்பையும் தேன்போலும் மொழியையும் நீர் எழுதிக் கொணர்ந்தால் அது பெரிய அதிசமாகும்` என உரைக்க.
சிந்தா மணியும், திருக்கோ வையும்எழு திக்கொளினும்
நந்தா உரையை எழுதல் எவ் வாறு நவின்றருளே
எனப் பிற்கால ஆசிரியரும் கூறினார்.
தமிழாகரன் - ஞானசம்பந்தர்.
``தேன் அடையும்`` என்பதில் ``அடையும்`` என்பது `சிவணும்` என்பது போல உவம உருபு.

பண் :

பாடல் எண் : 36

மேனாட் டமரர் தொழவிருப்
பாரும், வினைப்பயன்கள்
தாநாட் டருநர கிற்றளர்
வாருந் தமிழர்தங்கள்
கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற
கொச்சையர் கோன்கமலப்
பூநாட்டு அடிபணிந் தாருமல்
லாத புலையருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மேல் நாடு - விண்ணுலகம்.
``வினைப் பயன்கள் தாம்`` என்பதில் தாம், அசை.
தமிழர் தங்கள் கோன், பாண்டியன்.
பூ நாட்டு அடி - பூவின் தன்மை பொருந்திய பாதம்.
`அமலர் தொழ இருப்பாரும், அருநரகில் தளர்வாரும் (யாவர் என்னில்) கொச்சையர் கோன் அடி பணிந்தாரும், அல்லாத புலையருமே` என முடிக்க.
புலையர் - கீழ்மையர்.
ஏகாரம் பிரிநிலை.

பண் :

பாடல் எண் : 37

புலையடித் தொண்டனைப் பூசுர
னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட
மாடும் மணியையென்தன்
தலையிடைப் பாதனைக் கற்றாங்
குரைத்தசம் பந்தனென்னா,
முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந்
தாளென்தன் மொய்குழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளைத் தலைவி ஆற்றாமை கண்டு செவிலி இரங்கியது.
`புலைத் தொண்டன், அடித்தொண்டன்` எனத் தனித் தனி முடிக்க.
புலை - கீழ்மை; நெறிப்பா டின்மை.
ஆசிரியர் புலை அடித் தொண்டனைப் பூசுரன் ஆக்கியதாகக் கூறியது தம்மைக் குறித்தே யாயினும் அதனைச் செவிலி கூற்றாகக் கூறினமையால், ``தொண்டனை`` என்பதற்குத் `தொண்டன் ஒருவனைப் பூசுரன் ஆக்கி` எனப் பொருள் கொள்க.
ஆசிரியர் இவ்வாறு கூறியது, `யானை பூசுரனாய்ப் பிறந்தும் அதற்கேற்ற செயலை உடையனாயினேன் இல்லை` என்னும் இரக்கத்தினாலாம்.
இஃது அவர் தம் பெருமையை உணர்த்துகின்றது.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
என்பஆகலின்.
பாவைக்கு - பாவை பொருட்டாக; `அவள் காணும் படி` என்பதாம்.
தலையிடைச் `சூட்டியபாதன்` என்க.
கற்றல், இங்கு, உணருமாறெல்லாம் உணர்தல்.
என்னா - என்று சொல்லிச் சொல்லி; `பிதற்றி` என்றபடி.
பொன் - பசலை.
சங்கு சங்க வளையல், ``பொன் கொண்டு சங்கு இழந்தாள்`` என்பது `பரிவருத்தனை` என்னும் அணியாம்.
சங்கைக் கொடுத்துப் பொன்னை விலையாகப் பெறும் வழக்கம் அந்நாளில் இருந்தது.

பண் :

பாடல் எண் : 38

குழலியல் இன்கவி ஞானசம்
பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தே
னுனையுங் கதிரவனே!
தழலியல் வெம்மை தணித்தருள்
நீ;தணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை
யேன்பெற்ற வாரணங்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவி தலைவனுடன் உடன் போக்காகப் போயினமை கேட்டு நற்றாய் சுரம் தணிவித்து இரங்கியது.
சுரம் - பாலை நிலம்.
`கதிரவனே! வினையேன் பெற்ற ஆரணங்கு, தணியாத வெம்மையால் அழல் இயல்பினையுடைய தான் நடந்தாள்; ஞான சம்பந்த கழலைப் பணிதல்போல உன்னையும் நான் கழலணிந்த பாதத்தைப் பணிந்தேன்; நீ அந்தத் தழல் இயல் வெம்மை தணித்தருள்` என இயைத்து முடிக்க.
குழல் இயல் இன்கவிகுழல் இசையின் இயல்பினை உடைய இனிய பாடல்கள்.
``பாதம் பணிந்தேன்`` என்பது `வணங்கினேன்` என ஒரு சொல் நீர்மைப்பட்டு, ``உனை`` என்றும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.

பண் :

பாடல் எண் : 39

அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை
பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந்
தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ்
செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத்
தான்தன் இருந்தமிழே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டில் ஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் பல எடுத்துக் கூறப்பட்டன.
அவைகளைப் பெரிய புராணத்தால் அறிக.
அணங்கு - தெய்வத் தன்மை.
`இசைத் தெய்வம்` என்னுமாம்.
கணம் - கூட்டம்.
பிணங்கு அலை நீர் - எதிராக வீசிவரும் அலைகளை யுடைய நீர்.

பண் :

பாடல் எண் : 40

இருந்தண் புகலி,கோ லக்கா,
வெழிலா வடுதுறை,சீர்
பொருந்தும் அரத்துறை போனகம்,
தாளம்,நன் பொன், சிவிகை
அருந்திட ஒற்ற,முத் தீச்செய
வேற வரனளித்த
பெருந்தகை சீரினை யெம்பர
மோ!நின்று பேசுவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புகலியில் அருந்தப் போனகம், கோலக்காவில் ஒற்றத் தாளம், ஆவடு துறை?ல் முத்தீச் செயப் பொன், அரத்துறையில் ஏறச் சிவிகை அரன் அளித்த சீரினை நின்று பேசுவது எம் பரமோ`` என இயைத்துக் கொள்க.
பெருந்தகை, ஞானசம்பந்தர்.
``அளித்த பெருந்தகை`` என்பதில், `அரசன் ஆ கொடுத்த பார்ப்பான்` என்பது போலப் பெயரெச்சம் கோடற் பொருட் பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 41

பேசுந் தகையதன் றேயின்று
மன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந்(து)
ஊண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளாலெழில்
வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ்
ஞாலம் கவின்பெறவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தமிழ்விரகன், மழை மறந்து ஊண் கெட, வீழி மிழலையின் வாய்க்காசின் மழைபொழிந்தான் என்றுஇஞ்ஞாலம் இன்று, அன்றும் பேசும் தகையது அன்று` என இயைத்துக் கொள்க.
``பேசும்`` என்று `பேசி முற்ற முடிக்கும்` என்றபடி.
கண்கூடாக விரைவிற் காண்பது.
இன்றைய நிலையாகலின் அதனை முன்னர்க் கூறினார்.
`உலகத்தாரால் முற்ற முடியக் கூறல் இயலாது` என்பதாம்.
காசின் மழை - காசினால் உண்டான மழை.
அஃது உண்டி மழை.
``மழை மறந்து`` என்றதற்கு ஏற்ப உண்டியையும் மழையாக உருவகித்தார்.
``மறந்து`` என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருட்டாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 42

பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ்
சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம்
பந்தனை வாழ்த்துதலால்
வெறியுறு கொன்றை மறியுறு
செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு
மானவர் பொன்னுலகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
வெறி - நறுமணம்.
மறி - மான் கன்று.
`விடை எடுத்த கொடி` என்க.
பொறி - பொறித்தல்; எழுதுதல்.
பொன் - அழகு.
`ஞானசம்பந்தரை வாழ்த்தினாலே சிவலோகத்தை அடைதல் நிச்சயம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 43

பொன்னார் மதில்சூழ் புகலிக்
கரசை, யருகர்தங்கள்
தென்னாட் டரணட்ட சிங்கத்
தினை,யெஞ் சிவனிவனென்(று)
அந்நாள் குதலைத் திருவாய்
மொழிக ளருளிச்செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை,
காண்க யமாலயமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தென்னாட்டு அரண் - பாண்டி நாடாகிய கோட்டை; என்றது அவர்கள் யாராலும் வெல்ல இயலாத அளவு வலுப் பெற்று இருந்த இடம்` என்றபடி.
அட்ட - அழித்த.
``அரண் அட்ட`` என்றது.
`அரண்போல வாழ்ந்த நிலைமையை அழித்த` என்றபடி.
``சிங்கம்`` என்றது ஏகதேச உருவகம் ஆதலின், `அருகராகிய யானைகளது` என உரைக்க.
`திருவாயால்` என மூன்றாவது விரிக்க.
``ஆணை`` என்றது காதற்சொல், ``காண்க`` என்பதும், `காண்` என்பதுபோல அசை.
யமாலயம் - எமன் உலகம்.

பண் :

பாடல் எண் : 44

மாலையொப் பாகும் பிறைமுன்பு
நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில்
மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன்
வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன்
மலரின்று சூடிடினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளைத் தலைவி தோழியைத் தூது செல்லும்படி குறையிரந்து கூறியது.
``வடுப்படு கொக்கினம் சூழ்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
`(நீ சென்று) காழித் தலைவன் மலரை (மாலையை) (மெலிவடையாது) நிற்பேன்; (சேவினங்களின் கழுத்தில் உள்ள மணி களின் ஓசையைக் குறுகச் செய்வேன்; (அடக்குவேன்.
) வேலையை (கடலை) பாடு (ஒலியை) அணைப்பேன்; (அடக்குவேன்.
) மற்றும் மன்மதன் தனது வில்லை வளைத்து தொடுத்துள்ள கோலை ஒரு போதும் விடாமல் தடுப்பேன்` என இயைத்து இவ்வாறு பொருள் கொள்க.
பிறை முதலியன காதல் மிக்கவரை மேலும் வருத்துவன ஆதலின், `அவைகளால் யான் வருந்தி இறந்து படாது பிழைப்பேன்` என்பாள் இவ்வாறு கூறினாள்.
மாலை ஒப்பாகும் - காலம் வந்து வருத்த, அதற்கு ஒப்பாகத் தானும் உடன் கூடி வருத்து கின்ற.
``நின்று, குறுக்கி, அணைத்து`` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன.
``மணி`` என்பது, ஏற்புழிக் கோடலால் சேவினங்களது மணியைக் குறித்து, ஆகுபெயரால் அவற்றின் ஓசையை உணர்த்திற்று.
ஆங்கு - அப்பொழுதே.
கோல் - அம்பு.
வடு - மா வடு.
கொக்கு - மா மரம்.
சோலை ஐ - சோலையினது அழகை உடைய.
``மலர்`` என்பதும் ஆகுபெயரால், மலரால் ஆகிய மாலையையே குறித்தது.
``குனித்த`` என்பது, `குனித்துத் தொடுத்த` எனப் பொருள் தந்தது.
`சூடாவிடில் ஆற்றேன்` எனச் சூடாமையைப் பிரித்தலின், ஏகாரம் பிரிநிலை.

பண் :

பாடல் எண் : 45

சூடுநற் றார்த்தமி ழாகரன்
தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை
நீயுங் கொடும்பகைநின்(று)
ஆடுதற் கேயத்த னைக்குனை
யே,நின்னை யாடரவம்
வாடிடக் காரும் மறுவும்
படுகின்ற வாண்மதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் கைக்கிளைத் தலைவி கங்குலில் கண்படை பெறாது வருந்துதல் கண்டு தோழி நிலவைப் பழித்துக் கூறியது.
`வாள் மதியே! ஏசற்ற கொம்பினை நீயும் கொடும் பகையாய் நின்று ஆடுதலாகிய குற்றத்திற்காகத்தான் நின்னை அரவம் வாட்டிடக் (கண்டு) காரும், மறுவும் உன்னையே அத்தனைக்குப் படுகின்றன` எனக் கூட்டி முடிக்க.
சூடு நல் தார்த் தமிழ் ஆகரன் - சிவபெருமானுக்கு அணிவிக்கின்ற நல்ல மாலையாம் தமிழுக்கு இருப்பிடமானவன்; ஞானசம்பந்தர்.
ஏசறுதல் - ஏக்கம் உறுதல்.
கொம்பு - பூங்கொம்பு போல்வாள்; தலைவி `தமிழாகரன் போல நீயும் பகையாகின்றனை` என்றமையால் உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
`பகையாய்` என ஆக்கம் வருவிக்க.
ஆடுதல் - வெல்லுதல்; ``ஆடாடென்ப ஒரு சாரோரே; - ஆடன் றென்ப ஒருசாரோரே`` 1 என்றது காண்க.
அரவம்- இராகு என்னும் பாம்.
`வாட்டிட` என எதுகை நோக்கி இடைக் குறைந்து நின்றது.
கார் - மேகம்; இது நிலவிற்குப் பெருங்குறையாய் நின்று இழிவை உண்டாக்குகின்றது.
அத்தனைப் படுகின்ற - அந்த அளவு பொருந்துகின்றன.

பண் :

பாடல் எண் : 46

மதிக்க தகுநுதல் மாதொடும்
எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன்
சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்தண்
தேனுண்டு, மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை
நாடு குறுகுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, களவின் கண் தோழி தலைவனை ``வேளாண் பெருநெறி வேண்டியது`` அஃதாவது தலைவனை விருந்தினனாகத் தம் இல்லத்தில் ஓர் இரவு தங்கிச் செல்ல வேண்டியது.
மதிக்கு அத்தகு நுதல் சந்திர உவமையாகின்ற அத்துணைத் தகுதி வாய்ந்த நெற்றி.
`உவமை யாகின்ற` என்பது சொல்லெச்சம்.
மாது - தலைவி மாதொடும் வைகுதல் களவினாலாம்.
``வைகி`` என்றதனால் `இராப் பொழுது` என்பதும், அதனானே, `நாடு குறுகுதல் பொழுது புலர்ந்தபின்` என்பதும் போந்தன.
சுருது - இசை.
``அதனைக் கடந்து`` என்றது.
`நகர்க்குப் புறத்தே சென்று` என்றபடி.
கமலம் தாமரை மலர்; ஆகுயெர், முகிழ்ந்த தேன் - கட்டு அவிழாமையால் தங்கியுள்ள தேன்.
அதனை உண்பது வரால் மீன்.
மிண்டி - உழவர்களையும் மோதி.
குருகு - நீர்ப் பறவை.
இரியும் - அஞ்சி ஒடுகின்ற.
``துதிக்கத் தகு.
குருகு இரியும்`` என்றது கொச்சையை (சீகாழியை)ச் சிறப்பித்தது.

பண் :

பாடல் எண் : 47

குறுமனம் உள்கல வாத்தமி
ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாயஞ்ச
லெம்மூர் நகுமதிசென்(று)
உறுமனை யொண்சுவ ரோவியக்
கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை
நீட்டுவர்; சேயிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவன் பிரியக் கருதிய பொழுது தலைவி, `இவர் எவ்விடத்தார்? இவண் மீள வருவார் கொல்லே! வாரார் கொல்லோ!` என ஐயுற்று அல மருதல் கண்டு தலைவன் `எம் இடம் அணித்து` எனக் கூறித் தேற்றியது.
`மென்குழலாய்! சேயிழையே! என் ஊர்ச்சுவர் ஒவியக் கிள்ளையை (உண்மைக் கிளி என்று நினைத்து) நும் பதியில் சிறுமிகள் அருகில் சென்று அங்கையை நீட்டுவர்; அஞ்சல்` என முடிக்க.
`அத் துணை அணித்து` என்றபடி.
குறு மனம் - விரிவடையாத மனம்.
அஃதாவது, உலகப் பற்று மிக்க மனம்.
`அத்தகைய மனங்கள் தம் உள் நினைத்தறியாத தமிழாகரன்` என்க.
நகு மதி - ஒளி வீசுகின்ற சந்திரன்.
மனை - மாளிகை.

பண் :

பாடல் எண் : 48

இழைவள ராகத்து ஞான
சம்பந்த னிருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலுங்
காண்பீர் கடைசியர்,நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ்
சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில்
சூழ்ந்த வளவளலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, உடன்போக்காகச் சென்ற தலைவன் தலைவியரை எதிர்கண்டோர் தம் ஊரில் வந்து தங்க வேண்டி அவ்வூர் அணிமை கூறியது.
இழை - நூல், ஆகம் - மார்பு.
சுருதி - போல எழுகின்ற சுருதி.
`சுருதியை உடைய கழை` என்க.
கழை - மூங்கில் மூங்கிற் புழைகளில் இயற்கையாக வீசும் காற்றால் இசை தோன்றுதல் இயல்பு.
முழை - வளை.
சாலி - நெற்பயிர்.
கிளைத்தல், இங்கே, வெளிப்படச் செய்தல்.
கடைசியர் நண்டு தங்கட்கு அகப்படுத்த பொருட்டு நெற்பயிரைச் சாய்க்கும் பொழுது அப்பயிரினின்றும் முத்துக்கள் வெளிப்படுகின்றன என்க.
முத்துக் `கிளைக்கும் வயல், பொழில் சூழ்ந்த வயல்` எனத் தனித் தனி முடிக்க.
குடுமி, அதனையுடைய குன்றினைக் குறித்த ஆகுபெயர், `இக்குன்றினைக் கடத்தலும், இதனைச் சூழ்ந்த பொழிலை அடுத்துள்ள வயல்களைக் காண்பீர்` என்க.
மழை - மேகம்.
வயலைக் கூறவே ஊர் `அவ்விடத்து உள்ளது` என்பது தானே விளங்கும்.

பண் :

பாடல் எண் : 49

வயலார் மருகல் பதிதன்னில்,
வாளர வாற்கடியுண்(டு)
அயலா விழுந்த அவனுக்
கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர்
தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னைனென்னத்
தோன்றிடும் புண்ணியமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
அயலா விழுந்த அவன் - தன்னூரிலும் இல்லாமல், மாமன் ஊரிலும் இல்லாமல் அயலூரில் இறந்த அந்த வணிகன்.
அவ்வூர் திருமருகல்.
புயல் ஆந்தரு கை - மேகத்தின் தன்மை நிறைந்த கை.
அத்தன்மையாவது, கைம்மாறு கருதாது வழங்குதல்.
இத்தன்மை திருவீழிமிழலையில் காணப்பட்டது.
`கருணையாகிய வெள்ளத்தை உணவு உருவாக்கிப் பொழிந்த கையையுடைய ஞானசம்பந்தன்` என ஒருகாற் சொல்லவே புண்ணியம் வந்து சேரும் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 50

புண்ணிய நாடு புகுவதற்
காகக் புலனடக்கி,
எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல்
லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம்
பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத்
தானைக் கருதுவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`புண்ணிய நாடு புகுவதற்காக (ப் பண்டு தொட்டு) எல்லாரும் நிற்பது, புலன்களை அடக்கி, (ஞான நூல்களில்) முறைப் பட வைத்து எண்ணிய தொழில்களில்.
இன்று யான் எனக்கு ஏற்ற தொழிலாக நண்ணிய (மேற் கொண்ட) தொழில் ஞானசம்பந்தனை நினைப்பது ஒன்றே` என்க.
புண்ணிய நாடு, இறையுலகம்.
வைணவர்கள், `திருநாடு` என்பர்.
நந்து - சங்கு.
`நீர்க் கழுமலம், மாடக் கழுமலம்` எனத் தனித் தனி முடிக்க.
கண் இயல் மாடம் - கண்ணுக்கு இயன்ற (அழகு மிக்க) மாட மாளிகைகள்.
முன்பு ``புலன் அடக்கி,`` பின்பு, `புலன் அடக்காமல்` என்பது வருவிக்கப்படும்.
இதனால், ஞானசம்பந்தரைத் தியானிக்கும் தியான பலத்தின் சிறப்புக் கூறப்பட்டதாம்.
வீடும், ஞானமும் வேண்டுதி ரேல்,
விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்! எந்தை
வலஞ்சுழி
நாடி, ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டுஇசை
பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது
ஞானமே.
என அவர்தாமே அருளஇச் செய்தமை இங்கு அறியற்பாலது.

பண் :

பாடல் எண் : 51

கருதத் தவவருள் ஈந்தருள்
ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே!
கலங்கல் இவருடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன்;
நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பரு
ளேறி மறைகுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தவ அருள் - தவம் வாய்ப்பதற்கான அருள்.
இனி, ``தவ`` என்பதனை, மிகுதி குறித்த உரிச் சொல்லாகக் கொள்ளலும் ஆம்.
`சண்பை மாதே` என இயையும்.
`ரசம்` என்னும் ஆரியச் சொல் தமிழில் `இரதம்` எனத் திரிந்து வரும், `சுவை` என்பது அதன் பொருள்.
சுவை உவமைக்குப் பொருட்கும் உள்ள பொதுத் தன்மை.
கலங்கல் - அஞ்சற்க.
இவர் - நம்மைத் தொடர்ந்து ``வருகின்ற இவர்கள், ஆறலை கள்வர் முதலியோராயின் கழுநிரையில் ஏற்றுவேன்; நும் தமரது போர்ப் படையாயின், பொதும்பரும் மருதச் சினை ஏறி மறைகுவன்`` என்.
`நீ அவருடன் சென்றுவிடு` என்பது குறிப்பெச்சம்.
எனவே, இப்பாட்டு உடன் போக்கில் தமர் வரவைத் தலைவி காட்டியவிடத்துத் தலைவன் தலைவிக்குக் கூறியதாம்.
சினை - கிளை.
பொதும்பர் - மரச் செறிவு.
பொருது - போர் செய்து.
`அக்கழு` என்னும் சுட்டு, சமணர் ஏறிய கழுவைச் சுட்டியது.

பண் :

பாடல் எண் : 52

மறைமுழங் குங்குழ லார்கலி
காட்ட, வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி
ழாகரன் பற்றலர்போல
துறைமுழங் குங்கரி சீறி,
மடங்கள் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற்
சால வரும்பழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தோழி வரைவு கடாதல் வேண்டி ஆற்றினது அருமை கூறித் தலைவனைக் குறி வரல் விலக்கியது.
மறை முழங்கும் குரல், அந்தணர்களுடையது, `குழல்` என்பது பாடம் அன்று.
ஆர்கலி - கடல்.
என்றது அதன் தன்மையை.
அஃதாவது ஒலி.
பற்றலர் - வருதல்போல நீவரின்` என்க.
`தீயூழ் உடையவரே இவ்வழியில் வருவர்` என்பதாம்.
துறை - கிளை வழிகள்.
``சீறி`` என்பது, `ஞாயிறு பட்டு வந்தான் என்பது போலக் காலப் பொருள் பற்றி வந்த செயவென் எச்சத் திரிபு.
மடங்கல் - சிங்கம்.
அறை - குகை.
மலைகளில் பளிங்குப் பகுதிகள் இருத்தல் இயல்பு.
`அரும் பழி சாலவரும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இனி, மோனை நயம் கருதாது, `பழி சால வரும்` என முடித்தலும் ஆம்.
`தலைவனே! நீ வரின்` என விளி வருவித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 53

பழிக்கே தகுகின்ற(து) இன்(று)இப்
பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக்
கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக்
கலமரு மோவியர்தம்
கிழிக்கே தருமுரு வத்திவள்
வாடிடக் கீள்கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளைத் தலைவியது ஆற்றாமை கண்டு தோழி கங்குற் காலத்தில் பிறையைப் பழித்துக் கூறியது.
இப் பிறை, கொச்சைவயவர் எனத் தானும், பிறரும் மொழிகின்ற மொழியையே விரும்பி, (அவர் சூடியுள்ள) தாமரை மாலையைப் பெறுதற்கு அலமருகின்ற இவள் வாடும்படி கதிர் விழுந்த பின்பு விளங்குகின்ற செவ்வானத்தைக் கீள்கின்றதே; (இது) இன்று பழிக்கே தகுகின்றது` என இயைத்து முடிக்க.
`இயல்பாகவே மெலிகின்றவரை நலிதல் பெருங் கொடுமை` என்பாதம்.
தகுகின்றது - ஏற்புடைத்தா கின்றது.
``பழிக்கே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தால், `புகழுக்குச் சிறிது தக்க தாயிற்றில்லை` என்பது பெறப்பட்டது.
பல் கதிர் - பல கிரணங்களை யுடைய சூரியன்.
விழுந்த வழி - மறைந்த வழி.
வழிக்கே - வழியின் கண்ணே; உருபு மயக்கம்.
செக்கர் - செவ்வானம்.
கொச்சைவயம் - சீகாழி.
முளரி, இருமடி யாகுபெயர்.
`அலமரும் இவள், உருவத்து இவள்` எனத் தனித் தனி முடிக்க.
``கிழிக்கு`` என்பதும் ``வழிக்கு`` என்பதுபோல உருபு மயக்கம்.
தரும் - `எழுதி காட்டுகின்ற உருவம்`` என்பது பாடமாயின், `இவளை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்ட தாம்.
கீள்கின்றது - கிழிக்கின்றது; கிழித்துக் கொண்டு புறப்படா நின்றது.
`ஏனோ` என்பதகு சொல் லெச்சம்.
இது கேட்டுத் தலைவி, `இஃது இயற்கை` என்னும் உணர்வால் ஆற்றுவாள் ஆவது பயன்.

பண் :

பாடல் எண் : 54

கீளரிக் குன்றத் தரவ
முமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டன
ரென்பர் வயற்புகலித்
தாளரிக் கும்அரி யானருள்
பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ்
நாட்டுள்ள குண்டர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பரசமயே கோளரிக்கு (ச் சற்றும்) நிகராகாத குண்டர்கள் வைகைக் கரையில் மாண்டனர் என்பர்` என இயைத்து முடிக்க.
கீள் அரிக் குன்றம் - பிற விலங்குகளைக் கிழிக்கின்ற சிங்கங் களை யுடைய மலை.
``கிளர் மணியின் வாள் அரிக்கும் வைகை`` என்பதை, `கிளர் வாளின் மணி அரிக்கும் வைகை` என மொழி மாற்றி உரைக்க.
வாள் - ஒளி.
அரித்தல் - கொழித்தல்.
தாள் அரிக்கும் அரியான் - தனது திருவடிகள் திருமாலும் காண அரியன ஆயினவன்; சிவபெருமான்.
``தாள் அரியான்`` எனச் சினைவினை முதல்மேல் நின்றது.
`நிகராக் குண்டர்கள்` என இயையும்.
``கோளரிக்கும்`` என்பதன் ஈற்று மகரமெய்கெட, நகர ஒற்று மிக்கது விரித்தல் விகாரம்.

பண் :

பாடல் எண் : 55

குண்டகழ் சூழ்தரு கொச்சைத்
தலைவன்றன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வல்லியன்
னீர்!வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை
வீழ்செங் கலங்கலொடும்
புண்தகக் கேழல் புகுந்ததுண்
டோ?நுங்கள் பூம்புனத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, களவியலில் தலைவன் தோழி, தலைவி இருவரும் உள்ள இடத்துச் சென்று தோழி தன் குறிப்பையறிதற் பொருட்டு கெடுதி வினாயது கெடுதி - தொலைந்து போன பொருள் அதைப் பற்றி வினாவியது என்க.
குண்டு - ஆழம், `குன்றகம் சேர் மலர் வல்லி` என்க.
வல்லி - கொடி.
அன்னீர் - போன்றவர்களே.
வரி வில் - விரிந்து கட்டப்பட்ட வில்.
அது போலும் உங்களது புருவத்தைச் சார்ந்துள்ள உங்களது, கண் தக - கண்கள் பாய்வது போல, வாளி பட - (யான் எய்த) அம்பு பட்டமையால்.
செங் கலங்கல் - குருதி.
புண் தக - புண் பொருந்த.
கேழல் - காட்டுப் பன்றி.
`வேழம்` எனப் பாடம் ஓதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 56

புனத்தெழு கைம்மதக் குன்றம
தாயங்கொர் புன்கலையாய்,
வனத்தெழு சந்தனப் பைந்தழை
யாய்,வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம்
பந்தன்வண் கொஞ்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாயல்கு
லாய்த்திவர் கட்டுரையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, முன்பாட்டை அடுத்துப் பாங்கி, மதியுடம்பட்டது.
அஃதாவது, `தலைவன் கெடுதி வினாவ இங்கு வரவில்லை; தலைவியை அடைதற்கு என் துணையை வேண்டியே இங்கு வந்தான்` என பாங்கி உணர்ந்தது.
`இவரது கட்டுரை (பேச்சு) இவர் இழந்த பொருள் முதலில் யானையாய் இருந்து, பின்பு மானாகி, அதன்பின்பு மகளிர் உடுத்தும் சந்தனத் தழையை வழங்குவதாகி முடிவில் தலைவியது கொங்கை களாய், முடிவில் அவளது அல்குலாய்விட்டது என்க.
முதலில் இவர், `இவ் வழியாக அம்பு பட்ட ஓர் யானை வந்ததா` என்றார்; அடுத்து `மான் வந்ததா என்றார்; அடுத்து எதையும் தேடுவதை விடுத்து, `இத் தழை உங்கட்கு ஆகுமோ என்றார்.
பின்பு அப்படியும், இப்படியும் போய்த் தலைவியை முன்னும், பின்னும் நோக்கி நிற்கின்றார்; (நன்கு தெரிகின்றது இவரது எண்ணம்) என்பதாம்.
கைக் குன்றம், யானை.
காலை - மான்.
தழை - மகளிர் உடையின் மேல் அழகாகக் கட்டிக் கொள்ளுதற்குப் பூவும், பச்சிலையும் விரவத் தொடுத்து ஆக்கும் ஓர் உடைச் சிறப்பு.
இதனைத் தலைவன் `தலைவிக்கு` எனக் கொணர்ந்து, பெறும்படி பாங்கியை வேண்டுதல் ஒரு முறை.

பண் :

பாடல் எண் : 57

கட்டது வேகொண்டு கள்ளுண்டு,
நுங்கைக ளாற்துணங்கை
இட்டது வேயன்றி, யெட்டனைத்
தானிவ ளுள்ளுறுநோய்
விட்டது வே?யன்றி வெங்குரு
நாதன்றன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின்,
பேதை மகிழ்வுறவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவியது வேறுபாடு கண்டு தாயர் வேலனை வினாவி வெறியாட்டெடுக்கத் தோழி அதற்கு உடன்படாள் என்பது பற்றிச் செவிலிக்குப் பட்டாங் குரைத்து வெளிவிலக்கி அறத்தொடு நின்றது.
கட்டதுவே கொண்டு - குறிகேட்டுப் பார்த்து, அது, பகுதிப் பொருள் விகுதி.
சிறிது நெல்லை அள்ளி முறத்தில் இட்டு, இரண்டு இரண்டாக எடுத்து வைத்துக் குறிபார்ப்பதை, `கட்டு` என்றும், அப்படிப் பார்க்கும் குறித்தியை, `கட்டுவிச்சி` என்றலும் பழைய வழக்கங்கள்.
அங்ஙனம் குறிபார்த்து, `தலைவியது வேறுபாடு தெய்வத்தான் ஆயது` எனக் கொண்டு மனைக்குள் வெறியாட்டு எடுக்கப்பட்டது.
வெறி - செம்மறியாடு.
அதனைப் பலியிட்டுக் கொண்டாடுவது வெறியாட்டு.
துணங்கை - இரு கைகளாலும் விலாக் களைப் புடைத்து ஆடும் ஒருவகைக் கூத்து, வேலனைச் சார்ந்தவர்கள் ஆடிய இக்கூத்தை அதனைச் செய்வித்தோர் ஆடியதாக அவர்மேல் ஏற்றிக் கூறினாள், இகழ்ச்சி தோன்றுதற் பொருட்டு.
`சுணங்கை` என்பது பாடமன்று.
``நீங்கள் துணங்கை யாடியதைத் தவிர, இவளது நோய் நீங்கிற்றோ`` என்றாள்.
அன்றி ``இதை விடுத்து, இவள் மகிழ்வுற, வெங்குறு நாதன்றன் தார் கொண்டு சூட்டு மின்`` என முடிக்க.
ஐந்திணைகளிலன்றி கைக்கிளைக்கும் தலைவி ஆற்றாமை பற்றி வரும் இன்னோரன்ன சில துறைகள் பொதுவாம் என்க.
வெங்குரு - சீகாழி.
மட்டு அவிழ் - தேனோடு மலர்கின்ற சினைக்குரிய இவ்வினை முதல்மேல் ஏற்றப்பட்டது.
தார் - மாலை.
பேதை, தலைவி.

பண் :

பாடல் எண் : 58

உறவும், பொருளுமொண் போகமுங்
கல்வியுங் கல்வியுற்ற
துறவும், துறவிப் பயனு
மெனக்குச் சுழிந்தபுனல்
புறவும், பொழிலும் பொழில்சூழ்
பொதும்புந் ததும்பும்வண்டின்
நறவும், பொழிலெழிற் காழியர்
கோன்திரு நாமங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காழியர் கோன் திரு நாமங்களே எனக்கு, உறவு, பொருள் முதலிய அனைத்தும்` என்பதாம்.
`கல்வியால் உற்ற` என மூன்றாவது விரிக்க.
``துறவி`` என்பதும் ``பிறவி` என்பது போலத் தொழிற் பெயர்.
இப்பொருட்கு `வி` விகுதி.
துறந்தவனைக் குறிக்குமிடத்தில் வகர ஒற்றுப் பெயர் இடைநிலையும், இகரம் விகுதியுமாகும்.
புறவு, முல்லை நிலம், ``பொழில்`` என்றது, முல்லை நிலத்துச் சிறுகாடுகளை, அவகைளால் சூழப்பட்ட பொதும்பு, நகர்ப்புறச் சோலை.
ததும்புதல், இங்கே மிகுதியாக மொய்த்தல்.
வண்டின் - வண்டுக் கூட்டத்தில்.
நறவு - தேன்.
``நறவும்`` என்னும் உம்மை, `வண்டுக் கூட்டங்களேயன்றி, அவற்றிடையே நறவும் பொழிகின்ற காழி` என இறந்தது தழுவிய எச்சம்.

பண் :

பாடல் எண் : 59

நாமுகந் தேத்திய ஞானசம்
பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல்
இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத்
தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின்
ரார்த்தன காரினமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் பிரிந்த காலத்துக் கார்ப் பருவங் கண்டு தலைவி இரங்கியது.
`நாம், ஞானசம்பந்தனை நண்ணலர் போல் எம் உகக் கார் இனம் சரம் சிந்தி இஞ்சியை இடிக்கவும், தோன்றிகள் தீமுகம் தோன்றவும், தளவம் முகை அரும்பவும் கா முகத்தில் பூ முகத்தைக் காட்டி நின்று ஆர்த்தன` எனக் கூட்டியுரைக்க.
`ஏரம்` என்பது, `ஏம்` எனக் குறைந்து நின்றது.
ஏமம் - பாதுகாவலம்.
உக - கெடும்படி.
சரம்- சரமாரி போலும் மழை மாரி.
இஞ்சி - மதில்.
இடி படுத்தல் - இடியை வீழ்த்தும் முகத்தால் இடிபாட்டினை உண்டாக்குதல்.
தோன்றி - தோன்றிச் செடி.
இவற்றின் பூ சிவப்பாய் இருக்கும் ``தோன்ற`` எனச் சினைவினை முதல்மேல் நின்றது.
தளவம் - முல்லைக் கொடி.
கா முகம் - சோலைகளின்.
பூ முகம் காட்டுதல் - பூப் பூக்கச் செய்தல்.
தோன்றி பூத்தல் முதலியவை கார் காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகள்.
கார் காலம் வந்து நாள் பல ஆயினமையை இவை குறிக்கும்.
`தலைவன் இன்னும் வந்திலர்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 60

கார்அங்(கு) அணைபொழிற்
காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்
சீர்அங்(கு) அணைநற் பெருமணந்
தன்னில் சிவபுரத்து,
வார்அங்(கு) அணைகொங்கை
மாதொடும் புக்குறும் போது,வந்தார்
ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல்
லால்,அவ் அரும்பதமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கவுணியர் தீபன், நல்லூர் பெருமணந் தன்னில் மாதொடும் சிவபுரத்துப் புக்குறும் போது, வந்தார் அவ் அரும்பதம் பெற்றதல்லால், ஆர் அங்கு ஒழிந்தனர்` எனக் கூட்டியுரைக்க.

பண் :

பாடல் எண் : 61

அரும்பத மாக்கு மடயரொ(டு)
அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந்
திறைஞ்சுமின், பேரரவம்
வரும்ப நான்மறைக் காழித்
தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென்
னானைதன் தாளிணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரும் பதம் - அரிய சொல் என்றது துதிமொழியை அவைகளை ஆக்குதல், துதித்தல்.
எனவே, `துதி செய்யும் இடயரொடு, அஞ்சலி செய்தார்க்கும் அடைதற்கரிய பெரும்பதம்` என்றவாறாம்.
பெரும்பதம் - வீடு பேறு.
`பெரும்பதம் எய்தலுற்றீர்! வந்து என் ஆனை தன் தாளிணையே இறைஞ்சுமின்` என இயைத்து முடிக்க.
பேர் அரவம் வரும் பதம் - பெரிய ஆரவாரம் எழுகின்ற இடம்.
`பதமாகிய காழி` என்க.
``பை அரவு அல்குல்`` 1 என்பதில், `அரவப் பை` என்பது `பை யரவு` எனப் பின் முன்னாகி நின்றது போல, `கமல மலர்` என்பது பின் முன்னாக மாறி, ``மலர்க் கமலம்`` என நின்றது.
இலக்கணப் போலி மொழி.
`பத சம்பந்தன்` என இயையும்.
``எண் ஆனை`` என்பது காதற் சொல்.
ஏகாரம், பிரிநிலை.
`வேறு முயலல் வேண்டா` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 62

தாளின் சரணந் தருஞ்சண்பை
நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே
புகுந்திடும், கெண்டைகளும்,
வாளுந் தொலைய மதர்த்திரு
காதி னளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி
யாவைத்த மென்னகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கெண்டைகளும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
இப்பாட்டு, `பாங்கன் நீ இன்னையாதற்குக் காரணம் என்னை` வினாயதற்குத் தலைவன் உற்றது உரைத்தது.
சரணம் - அடைக்கலம்.
தரியலர் - பகைவர்.
`தரியலர் போல் மலங்க` என்க.
மலங்குதல் - தலங்குதல்; ``மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி`` 1 என்பது காண்க.
கீளுதல் - கிழித்தல்; உள்ளத்தைக் கிழித்தல்.
`கீளுதலால் மலங்க` என்பதாம்.
விலங்கே - குறுக்கே.
(யான்) `கீளின் மலங்க, கருங் கண்ணி வைத்த மென்னகை விலங்கே புகுந்திடும்` என இயைத்துக் கொள்க.
தொலைய - தோற்க.
மதர்த்தல் - களித்தல்.
மின் - ஒளி புரியா - புரிந்து; வெளிப்படுத்தி.

பண் :

பாடல் எண் : 63

நகுகின்ற முல்லைநண் ணாரெரி
கண்டத்(து) அவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின
கொன்றை; விரவலரூர்
புகுகின்ற தீயெனப் பூத்தன
தோன்றி; புறவமன்கைத்
தகுகின்ற கோடல்கள்; அன்பரின்
றெய்துவர் கார்மயிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தோழி தலைவியைப் பருவம் காட்டி வற்புறுத்தியது.
`கார் மயிலே! முல்லை நகுகின்ற; கொன்றை நிதி காட்டின; தோன்றி தீயெனப் பூத்தன; கோடல் கைத் தகுகின்ற; அன்பர் இன்று எய்துவர்` என இயைத்து முடிக்க.
`கார் காலம் வந்துவிட்டது; ஆகவே அவர் வந்துவிடுவார்` என்பதாம்.
``நகுகின்ற, தகுகின்ற`` என்பன, அன் பெறா அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினைமுற்றுக்கள்.
நண்ணார் - பகைவர்.
கண்டம் - நாடு.
`நண்ணார் நாடு` என்க.
`அது நம் அரசனைப் பகைத்தமையால் தீப்பற்ற எரிவதாயிற்று` என்பதாம்.
செய்யுளாகலின், பின்வரும் அன்பரைச் சுட்டும்.
`அவர்` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது.
நிதி, பொன் `கொன்றை பொன் காட்டின` என்பதாம்.
விரவலர் ஊர், மேற்குறித்தவர்களது ஊர்கள்.
தோன்றி - தோன்றிச் செடி.
புறவ மன் - முல்லை நிலமாகிய அரசன்.
கோடல்கள்- காந்தட் பூக்கள்.
`அவை அரசன் கைகளைப் போலத் தோன்றுகின்ற என்பதாம்.
இவையெல்லாம் கார் கால நிகழ்ச்சிகள்.
கார் மயில் - கார் காலத்தில் ஆடும் மயில்.
மயிலே - மயில் போன்றவளே! உவமை யாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 64

மயிலேந் தியவள்ளல் தன்னை
யளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாத
னுலகத்(து) எதிர்பவர்யார்?
குயிலேந் தியபொழிற் கொங்கேந்
தியகொம்பி னம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள
னாய்வந்த அண்ணலுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டிற்கு இரண்டு வகையாகப் பொருள் சொல்லப்படுகின்றது.
முதலாவது பொருள், ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் குறிப்பது.
இரண்டாவது பொருள், அவ்வாறன்றிப் பொதுவாய் நிற்பது.)
முதலாவது உரையில் ``மயில் ஏந்திய வள்ளல்`` என்பதைப் பின் வருகின்ற ``தன்`` என்பதனோடு இயைக்காமல், ``அளிப்ப`` என்பதன்பின் `வந்து` என ஒருசொல் வருவித்து, `வந்த மதி புணர்ந்த சண்பை நாதன்` என இயைத்து, ``மதி புணர்ந்த - ஞானத்தைப் பெற்ற`` எனப் பொருள் உரைக்கப்படும்.
இனி, `முருகனைப் புதிதாக ஞானம் பெற்றதாக உரைத்தல் சிறப்பன்று` எனக் கொண்டு, மதியைச் சந்திர னாக்கி, `சந்திரன் தவழ்கின்ற எயில்` என எயிலுக்கு அடையாக்கியும் உரைக்கப்படும்.
இதில் `வந்து` என்பது உருவிக்கப்படாமல் `வந்த` என்பது வருவிக்கப்படும்.
மயில் ஏந்திய வள்ளல் - மயிலால் தாங்கப்பட்ட வள்ளல்; முருகன், ஐ - தந்தை.
முதல் உரையிற் கொள்ளும் பொருள், ஒரு சொல்லை வருவித்தல்.
``மதி புணர்ந்த`` என்பதை வெறும் ஓர் அடை மொழியாக்குதல் ஆகிய இடப்பாடுகள் உள்ளன.
இரண்டாவது உரையில், ``மயிலேந்திய வள்ளல் தன் ஐ`` என்பது நேரே ஒரு தொடராகி, `சிவபெருமான்` எனப் பொருள் தந்து, அவன் அளிப்ப ஞானம் பெற்ற சண்பை நாதன்` என நேரே சென்று எளிதில் விளங்குகின்றது.
முதலிற் கண்டவாறு உரை செய்கின்றவர்கள், `ஞான சம்பந்தரை முருகன் அவதாரமாக நம்பியாண்டார் நம்பிகள் சொல்லி இருப்பதைச் சேக்கிழார் சொல்லவில்லை` என்பர்.
`ஞானசம்பந்தர் முருகன் அவதாரமே` என ஒட்டக் கூத்தர் தமது தக்க யாகப் பரணியில் மிக வலியுறுத்திக் கூறினார்.
பிற் காலத்திலும் அருணகிரி நாதர், திருப்போரூர்ச் சிதம்பரசுவாமிகள் இக் கருத்தைக் கொண்டிருந்தனர்.
துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அவ்வாறு எங்கு கூறவில்லை.
இவையெல்லாம் இப்பாட்டில் ``சண்பை நாதன்`` என்னும் அளவில் நிற்பன.
பின் உள்ளவை அகப் பொருள் துறையில் தலைவனைப் பகற்குறி விலக்கி, இரவுக்குறி நேரும் தோழி, அதற்குத் தலைவியை உடன்படுவித்தது.
கொங்கு - தேன்.
`கொம்பு போலும் அம்பு` என்க.
`கொடிய அம்பினைப் பூங்கொம்பு போலக் கொள் பவன்` எனத் தலைவனது ஆண்மையைக் குறிக்க இவ்வாறு கூறினாள்.
அயில் ஏந்திய மலர்; வேல்போலத் தோன்றும் மலர்கள், இவை கரும்பின் பூக்கள்.
தோடுகொள் வேலின் தோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
என்றது காண்க.
`கரும்பினது வேல்போலும் பூக்களைக் கண்டுளனாய் வந்த அண்ணல்` என்றது `எதிர்ப்பவர் வேல்களையும் பூக்கள்போல் எண்ணி அழிப்பவன்` என்னும் குறிப்பினைத் தோற்றுவித்தது.
`அண்ணலுக்கு` என்னும் நான்கனுருபை இரண்டனுருபாகத் திரித்து அதனை, ``எதிர்ப்பவர் யார்`` என்பதனோடு முடிக்க.
`எதிர்பவர்` எனப் பாடம் ஓதலும் ஆம்.
நம் அண்ணலைத் தகைவார் ஒருவர் இனி இதனை, ஒருவழித் தணந்த தலைமகன் வரவு நீட்டிப்ப, `அவற்கு ஏதம் விளைந்தது கொல்லோ` என நினைந்து கவன்ற தலைவியைத் தோழி, `இஃது ஆகாது` என ஆற்றுவித்ததாகக் கொள்ளலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 65

அண்ணல் மணிவளைத் தோளரு
காசனி சண்பையன்ன
பெண்ணி னமிர்தநல் லாள்குழல்
நாற்றம் பெடையொடுபூஞ்
சுண்ணந் துதைந்தவண் டே!கண்ட
துண்டுகொல்? தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழிலெழிற் காசினி
பூத்தமென் தாதுகளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ``கொங்குதேர் வாழ்க்கை`` எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாட்டின் பொருளையே உடையது.
1 அப்பாட்டின் கருத்தை நச்சினார்கினியர் பலவாகக் கூறுவார்.
2 அண்ணல் - பெருமை.
பெண்ணின் அமிர்த நல்லாள் - பெண்களுக்குள்ளே அமிர்தம் போல்வளாய அழகு மிக்கவல்.
சுண்ணம், இங்கே, மகரந்தம், ``பெடையோடு பூஞ் சுண்ணம் துதைந்த வண்டே`` என்பதை முதலிற் கொள்க.
தூங்கு ஒளி - தொடர்ச்சியாய் எழுகின்ற ஒலி.
``நீர்`` என்பது ஆகுபெயராய், அதனையுடைய பொய்கையைக் குறித்தது.
`பொய்கையை யுடைய பொழில்` என்க.
காசினி - பூமி.
தாது - மகரந்தம், இதுவும் ஆகுபெயராய் அதனை யுடைய பூக்களைக் குறித்தது.
இதன்பின் `தாதுகளில்` என ஏழாவது விரித்து, `வண்டே! காசினியில் பொழில்களில் பூத்த தாதுகளில் பெண்ணின் அமிர்தநல்லாள் குழல் நாற்றம் கண்டதுண்டுகொல்` என ஐயத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 66

தாதுகல் தோய்த்தநஞ் சந்தாந்
யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து
வாளா துலுக்குகின்றீர்;
பேதியிற் புத்தர்கள்! வம்மின்;
புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றும் கழுத்திறம்
பாடிக் களித்திடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`போதியிற் புத்தர்களே! நீவிர் எம் சந்நியாசியார் போலவே காவியுடுத்துச் சமணர்களைத் துன்புறுத்தும் வகையில் அவர்களது உறிகளைக் கைப்பற்றி வீணாக வம்பு செய்கின்றீர்கள்; (அவர்களை வாதத்தில் வென்றபாடில்லை.
எம்முடன் சேர்ந்து) அவர்களை அன்று புகலியர் கோன் வாதில் வென்று கழுவேற்றிய திறத்தைப் பாடுதற்கு வாருங்கள்`` என்பது இப்பாட்டின் பொருள்.
போதி - அரசமரம்.
இது புத்தர்கள் தெய்விகத் தன்மை உடையதாகக் கருதி வழிபட்டிருப்பர்.
``போதி`` என்றது அதன் நிழலைக் குறித்தது.
``போதியிற் புத்தர்கள்`` என்பதை, `பறம்பிற்பாரி` என்பது போலக் கொள்க.
புத்தர்கள், அண்மை விளி.
தாது கல் - காவிக் கல்.
`சந்நியாசியார்` என்பது `சந்நாசியார்` என மருவி வந்தது.
அஃது ஆகுபெயராய் அவர் உடுக்கும் ஆடையைக் குறித்தது.
சடலம் படுத்தல் - உடம்பிற் பொருந்த வைத்தல்.
தூதை - மட் பாண்டம்.
இதில் கஞ்சி ஊற்றி வைக்கப்படும்.
சிக்கம் - உறி.
`தூதையினை உடைய சிக்கம்` என்க.
சமண முனிவர்கள் தாம் உண்ணும் கஞ்சியை இவ்வாறு உறியில் வைத்துக் கையிலே கொண்டிருப்பர்.
கீழே புறத்தே வைத்தால் ஈ, எறும்பு முதலிய சிற்றுயிர்கள் கஞ்சியில் வீழ்ந்து மாண்டு விடுமாம்.
`சிக்கத்தில் கரம் சேர்த்து` என்க.
கரம் - புத்தர்கள் கை.
துலக்குதல் - வம்பு பேசுதல்.
`சும்மா தும்பு துலுக்குகிறான்` என்னும் வழக்கம் இப்பொழுதும் நாட்டில் உண்டு.
காதுதல் - இங்கே, காய்தல் அது வாதில் வெல்லுதலைக் குறித்தது.
சமணரும், புத்தரும் வதத்தை இகழ்தலில் ஒன்று படினும் பிற வகையில் வேறுபட்டுத் தம்முட் கலாய்ப்பர்.
அது பற்றி, ``ஞான சம்பந்தர் காலத்திற்றானே `சமண் சமயம் பொய்ச் சமயம்` என்பது நாடறிய மெய்ப்பிக்கப்பட்டு விட்டிருக்க, இன்று புத்தர்கள் ஏன் அந்தச் சமயத்தை `பயனற்றது` எனக் காட்ட முயல வேண்டும் என்கின்ற முறையில் அமைந்தது இப்பாட்டு.
துறவுக் கோலத்தால் புறத்தே சமணரைப் போல இல்லாமல் எம்மைப் போல உள்ள நீவிர், சமணரை வென்ற வெற்றியைப் பாடுவதிலும் எங்களோடு சேர்ந்து கொள்ள லாமே` என்பது தோன்ற, ``நம் சந்நாசியார் சடலம் படுத்து`` என்றார்.
பௌத்தத் துறவிகள் சிவந்த ஆடையை உடுத்துதல், பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
என அருளிச் செய்தமையாலும் அறியலாம்.
படிமம் - துறவுக் கோலம்.
நாம் உரை காணும் பாட்டில் ``தாதுகல் தோய்த்த`` என்பது நம் சந்நாசியார் ஆடையின் இயல்பு கூறியது.
`பௌத்தருடையது பட்டைத் துவராடையாயினும் நிறத்தால் ஒருபடை ஒக்கின்றது` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 67

களியுறு தேன்தார்க் கவுணியர்
தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகலிழுந்
தால்,விரை யார்கமலத்(து)
அளியுறு மென்மலர்த் தாதளைந்(து)
ஆழி யழைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட
மானைத் துவளவிப்பதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பிரிவுணர்த்திய தலைவனுக்குத் தோழி தலைவி ஆற்றாளாவது கூறிச் செலவழுங்குவித்தது.
கவுணியர் தீபன் கருதலர் (பகைவர்) ஞான ஒளியை இழப்பதுபோல ஞாலம் பகற் பொழுதை இழந்தால்` என்க.
களி உறு - வண்டுகள் உண்ணக் களிப்பைத் தருகின்ர.
வெளி உறு ஞாலம் - பகற் காலத்தில் ஒளியைப் பெற்று மகிழ்கின்ற உலகம் விகை - நறுமணம்.
அளி - வண்டு.
தாது அணைந்து - மகரத்தில் மூழ்கி.
ஆழி அழைப்ப - கடல் ஒளியை உண்டாக்கும்படி.
துளி உறு வாடை - மழைத் துளியோடு பொருந்தி வரும் வாடைக் காற்று.
மட மான் - தலைவி `ஞாலம் பகலை இழந்தால் (இரவில்) மட மானைத் துவள்விப்பது வாடையாகிய இதுவாம்` என இயைத்து முடிக்க.
`அதுபொழுது எனக்கு அவளை ஆற்றுவித்தல் அரிது` என்பது குறிப்பெச்சம் இதனால் தலைவன் செலவழுங்குதல் பயன்.

பண் :

பாடல் எண் : 68

தேறும் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துச் சிறந்துவந்துள்
ஊறு மமிர்தைப் பருகிட்
டெழுவதொ ருட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை
வாழ்வித் தவன்கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா
கரனென்னும் நன்னிதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தேறும் புனல் - தெளிவாகிய நீர் வழிமொழி ``சுரருலகு நரர்கள் பயல்`` எனத் தொடங்கும் `வழிமொழித் திருவிராக`த் திருப்பதிகம் 1 .
அலங்கல் - தாமரை மலர் மாலை.
`எந்தத் தலத்தில் உள்ளவரும் தில்லைப் பெருமானே` என்பது பற்றி, அத்திருப்பதிகத்தின் வழிப் பிரமாபுரப் பெம்மானை உள்க எழும் இன்பத்தைத் தில்லைச் சிற்றம்பலத்தினின்ரும் வந்து ஊறும் அமிர்தத்தைப் பருகுவதனால் உண்டாகும் இன்பமாகக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 69

நிதியுறு வாரற னின்பம்வீ
டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர்
கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச
லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம்
பணிந்தனள் மன்னனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தோழி செவிலிக்குப் புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.
``-அவனைத் தொழுபவர் அறம் முதலிய நான்கையும் எய்துவா என வேதம் துதித்தலைப் பொருந்திய காழியர் கோன்`` என்க.
செய்யுள் நோக்கி நிதி முற் கூறப்பட்டது.
`நதியின் கண், தொழாதார் இனையும்படி (வருந்தும்படி) உறு நீர்` என உரைக்க.
``அந்நீரின்கண் அகப்பட்டுக் கலங்கிய உன் மகளைத் தலைவன் ஒருவன் கண்டு எடுத்துக் கரை சேர்த்துத் தெளிவித்து, `அஞ்சற்க` என்று சொல்ல, இவள், `அண்ணலே! இது நன்றோ` எனச் சொல் அவனைப் பாதம் பணிந்தால்`` எனத் தோழி கூறினாள், இதனால், ``உற்றாற்கு (மெய் தீண்டினவனுக்கு) உரியர் பொற்றொடி மகளிர்`` என்னும் முறைப்படி உன் மகள் இனி அவனுக்கே உரியள்`` என்பது குறிப்பால் தோன்றக் குறினாள்.
வாள நுதல், தலைவி.
மன்னன் - அரசகுலத்தின னாய தலைவன.
``நன்றோ`` என்றதில் ஏகாரம் எதிர்மறைப் பொருட்டாய், ``கன்னியை யுடையாள் ஒருத்தியை அரசர் குலத்தினா ராகிய நீவிர் திடுமெனப் போந்து தீண்டியது நன்றன்று`` எனவும், ஓகாரம் சிறப்புப் பொருட்டாய் ``கன்னிப் பெண்ணைத் தீண்டும் முன் அவளை மணந்து கொள்ளத் துணிந்தே நெறியுடைய ஆடவர் தீண்டுவர் ஆதலின், `நீரும் அத்துணிவினை யுடையீர்` என்பதனை அறிய நன்றா கின்றது`` எனவும் இருபொருளும் தந்தது.
இவ்வாற்றால் முதலில், `நின் மகள் நம் குடிக்குப் பழியுண்டாக ஒழுகினாள் அல்லள்` எனவும் `தெய்வத்தால் நிகழ்ந்த இந்நிலைமையால் நின்மகள் குடிப் பிறந்தார்க்கு உரிய அறத்தையே பற்றி நின்று, தன்னை அவனுக்கு உரியளாகக் கருதிவிட்டாள்` எனவும் கூறினாள்.
``மதி`` என்பதைச் சந்திரனாகக் கொண்டு நுதலுக்கு உவமை யாக்காது, `புத்தி` எனக் கொண்டு, தலைவியது முதுக் குறைவைப் புகழ்ந்ததாக உரைத்தல் சிறப்பு.

பண் :

பாடல் எண் : 70

மன்னங் கனை!செந் தமிழா
கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர்
வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகையெடுத்
தாற்கிவள் பூணழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும்
பாலுமவ் வேந்தலுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும் முன்னது போலவே தோழி செவிலிக்குக் களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.
``மன்னங்கனை`` என்பதை, ``மன் அங்கு அனை`` எனப் பிரித்து, `அனை - அன்னையே என உரைத்து, ``மன் அங்கு`` என்பதை எடுத்தாற்கு என்பதன் பின்னர்க் கூட்டி, `இது நிகழ்ந்த அங்கு` என உரைக்க.
இவ்வாறன்றி, தோழி செவிலியை, `அங்கனாய்` என விளித்தல் பொருந்தாது.
அன்னங்கள் - அனங்களே! என்றது மகளிர் கூட்டத்தை.
அடர் - தாக்க வந்த வேழம் - களிறு; ஆண் யானை இடை விலங்கி - குறுக்கே தடுத்து, பொன் அம் கலை சா வகை - எடுத்தாற்கு- பொன்போலும் அழகிய ஆண், மான்தன் பெண் மானைக் காக்கத் தன் உயிரையும் விடத் துணிந்ததுபோலத் துணிந்து எடுத்துக் காத்த அவனுக்கு.
இதன் பின் `உரித்தாக` என ஒரு சொல் வருவிக்க.
இரித்தாயது, பூணின் அழுத்தம்.
உள ஆம் - உளவாகலாம், ``உள`` என்ற பன்மையால், தழும்புகள் பலவாதல் பெறப்பட்டது.
`உள` எனத் துணிந்து கூறின் பின்னரும் அவனோடு பலநாள் பழகியதாகும் ஆதலின், பெரும்பாலும் உள ஆகலாம்` என ஊகமாகக் கூறினாள்.
இதனால், தலைவி தலைவனை இறுகத் தழுவி கொண்டமை கூறினாளாயிற்று.

பண் :

பாடல் எண் : 71

ஏந்தும் உலகுறு வீரெழில்
நீலநக் கற்குமின்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும்
தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத்
துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானையெப்
போதும் விரும்புமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏந்தும் உலகு - தாங்கும் உலகு; நிலவுலகம்.
போக மார்ப்பை - ``போகமார்த்த பூண்முலை யாள்`` என்னும் முதல் நினைப்பை யுடைய திருப்பதிகத்தை.
குளிர்படுத்து வேகாது பச்சையாகப் பண்ணி.
``மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்மின் ஒலியும் பெருமையும் ஒக்கும்`` 1 என்றது போலக் கடல் நகரத்தையும் கூறுதல் கூடுமாகலின், ``கடற் கூடல்`` என்பதை, `கடல் போலும் கூடல்` எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 72

விரும்பும் புதல்வனை மெய்யரிந்
தாக்கிய வின்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண்
டருளென் றடிபணிந்த
இரும்பின் சுடர்களிற் றான்சிறுத்
தொண்டனை யேத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன்
பாதம் தொடர்வெளிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரும்பு - அங்குசம்; ஆகுபெயர்.
சுடர் - ஒளி.
யானையை அடக்க உதவுகின்ற அங்குசத்தை அதன் காதிலேயே மாட்டி வைப்பது வழக்கம்.
``இரும்பின் சுடர்க் களிற்றான்`` என்றது தளபதியாய் இருந்து வெற்றி பெற்றதைக் குறித்த குறிப்புச் சொல்.
தொடர்வு - தொடர்தல்; அடைதல்.
`பாதத் தொடர்பு` என்பதும் பாடம்.
``தொடர்வு எளிதே`` என்றது, `சிறுத்தொண்டர்பால் மிக்க நட்புக் கொண்டவர்` என்பது விளங்குதற்கு.
``அரும்பும் புனற் கடையாய்`` என்றது, `சிவபெருமானாகவே தோன்றுகின்றவரே` என்றபடி.
மலர் - தாமரை மலர் மாலை.

பண் :

பாடல் எண் : 73

எளிவந்த வா!வெழில் பூவரை
ஞாண்,மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலு
மெங்க ளரன்துணையாங்
கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின்
ஞான வமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற்
சிறுக்கன்ற னாரருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எளி வந்தவா`` என்பதை இறுதியிற் கூட்டி, `எளியேனுக்கு எளிவந்தவாறு வியக்கத் தக்கது` என முடிக்க.
``பூ`` இரண்டில் முன்னது அழகு; பின்னது பொற்பூ.
தார் - வடம்.
அழுங்க - ஒளி குன்றும்படி.
`அரனுக்குத் துமையாம்` என நான்காவது விரிக்க.
``கிள் வந்த`` என்பதில் `வந்த`, உவம உருபு.
``அளித்த`` என்னும் பெய ரெச்சம் ``சிறுக்கன்றனார்`` என்னும் கோடற் பொருட் பெயர் கொண்டது.
அளி - வண்டு.
``சிறுக்கன், சிறுக்கி` என்றாற் போலும் வழக்கு இருத்தலால், `சிறு` என்பது முன் வலி மிகுதல் வழக்கு நெறியாகக் கொள்ளப்படும்.
கன்று - யானைக் கன்று.
அன்னார் - போன்றவர்.

பண் :

பாடல் எண் : 74

அருளுந் தமிழா கர!நின்
னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை
யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு
வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய
ரென்கண் வருவிப்பதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைக்கிளைத் தலைவி பொருட்டாகத் தூது வந்து மாலை இரந்த தோழியை ஞானசம்பந்தர் இன்சொற் சொல்லி மறுக்க வேண்டி, அவளையே `தலைவீ` என அழைத்ததாகவும், அதனைக் கேட்டுத் தோழி மறுமொழி கூறியதாகவும் இப்பாட்டு அமைந்துள்ளது.
`பணி செய்பவளாகிய என்னை, `தொழீஇ` என அழைக்காமல், `தலைவி` என அழைக்கின்றீர்.
அப்பெயர் என் தலைவிக்கு உரியது.
அவளை நீர் ஏற்றுக் கொண்டால் பின்பு உரிமை பற்றி அவளை நீர் `தொழிஇ` என்றே அழைக்கலாம்.
அப்பொழுது நான் செய்த உதவி பற்றி எனக்கு நீர் தரும் பாராட்டாக என்னை அவன்முன் `தலைவீ` என்று கூட அழைக்கலாம்.
அவ்வாறு செய்யாமல் இப்பொழுதும் என்னை, `தலைவீ` என்று அழைத்து வெறும் இன்சொற் சொல்லி மறுக்க நினைக்கின்றீரே; இது முறையோ; என்னும் கருத்தினை இப்பாட்டு உடையது.
சுருளுங் குழல் இயல், தலைவி, ஞானசம்பந்தர் யானைமேல் பவனி வரக் கண்ட பொழுது அதன் பின்னே ஓடியதாக வைத்து, ``களிற்றினொடு ஓட்டருவாளை அருளியன்றே அவள் பெயரை என்கண் வருவிப்பது`` என்றாள், அவள் பெயர், `தலைவி` என்பது ஓடுதலை `ஓட்டருதல்` எனவும் கூறுவர்.
``ஒக்கவே ஓட்டந்தேன்`` 1 என அருளிமை காண்க.
``ஓட்டருவானை`` என்பது பாடமன்று, அலங்கல் - மாலை.
`முன்பு அருளியன்றே` என இயையும்.

பண் :

பாடல் எண் : 75

வருவார் உருவின் வழிவழி
வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகரச்
செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரகரம்
போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல்
கள்மிண்டி வானத்து மின்னியவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ஒருவழி தணந்த தலைமகள் வரவு நீட்டிப்பத் தலைவி கார் காலம் கண்டு ஆற்றாமை மிக்க வழித்தோழி, `இஃது அவர் வரும் காலம்` எனத் தேற்றி ஆற்றுவித்தது.
வருவார் உரு - பிரிந்து சென்று மீண்டுவரும் தலைவர்களது உருவம்.
அவைகள் வரும் வழியிலே வைத்த விழியை உடையவர்கள் தலைவியர்.
விழியை அவ்வாறு வைத்த வண்ணமே உணமை அருந்துகின்ற திருவை (சிறப்பை) உடையவர்கள் தலைவியர்.
`அவர்கள் இருந்த செழு நகரத்தில் கொண்டல்கள் மிண்டி மின்னிய` என்க.
செவ்வித் திருவடி - பக்குவம் வந்த காலத்தில் உயிர்களால் அடையப்படும் திருவடி.
அவை சிவபெருமானுடையன கொண்டல்கள் முன்னே சலத்தை (மழையை) வீச, அஃது இருண்டு பெய்தலின், `வருகின்றவர்கள் வழியறியாது திகைப் பார்களோ` என்று வெருவா வண்ணம் பின்பு மின்னின` என்க.
எனவே, `மின்னலே விளக்காக வருவர்` என வற்புறுத்தியவாறு.
இதன் முதல் அடியில் பாடங்கள் பிழைபட்டுள்ளன.
மிண்டி - வலிமை யுற்று.
`தலைவர் பிரியத் `தலைவியர் ஆற்றியிருத்தல் உலகியல் ஆதலின், நீயும் அத்தன்மைய ளாதல் வேண்டும்` என்பாள், `நம் தலைவர்` எனவும், `நீ` எனவும் கூறாது பொதுப்பட, ``வருவார்`` எனவும், ``அருந்தும் திருவார்`` எனவும் கூறினாள்.

பண் :

பாடல் எண் : 76

மின்னார் குடுமி நெடுவெற்
பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை
சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தார்மேல்
புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு
காசனி நல்கிடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வீழ் பனிநோய் இறையே, மன் ஆர் பரிசனத்தோர் மேற் புகலும் அருகாசனி நல்கிட, வெற்பகக் கொங்கில் தன் ஆர்வழி கெட்டமை சொல்லுவர்` என இயைத்து முடிக்க.
காண், முன்னிலை யசை.
வெற்பகக் கொங்கு - மலைகள் நிறைந்த கொங்கு நாடு.
பனி நோய் - குளிர்க் காய்ச்சல்.
தன் ஆர் வழி - தனக்கு ஏற்புடைய வழி ``தன்`` என்றது பனி நோயை.
`உலகத்தார் பலரும் சொல்லிப் புகழ்வர்` என்க.
இறை - சிறிது.
மன் ஆர் - மிகுதியாகப் பொருந்திய `பதினாறாயிரம் பேர்` என்பர்.
பரிசனத்தோர், உடன் வரும் அடியார்கள்.
நல்கிட - அருள்புரிய அஃதாவது, `திருப்பதிகம் அருளிச் செய்ய` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 77

நல்கென் றடியி னிணைபணி
யார்;சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில்
லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு)
ஒல்கு முடம்பின ராய்,வழி
தேடிட் டிடறிமுட்டிப்
பில்கு மிடமறி யார்கெடு
வாருறு பேய்த்தனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சிலர்`` என எடுத்துக்கொண்டு, ``சண்பை நாதன்`` என்பதை ``நல்கென்று`` என்பதன்பின் கூட்டியுரைக்க.
நல்கு - அருள் செய்; ``அடியின் இணை`` என்பதில் பின், வேண்டாவழிச் சாரியை.
ஒல்குதல் - தளர்தல், வழி, வீடு பேற்றிற்கான வழி, பில்கும் இடம் - பேரின்பம் ததும்பும் இடம்.
அறியார்; முற்றெச்சம்.
உறு - மிகுதி.
`இஃது உறு பேய்த்தனம்` என்க.
பேய்த்தனம் - பேய்த் தன்மை அஃதாவது, பித்து.

பண் :

பாடல் எண் : 78

தனமே தருபுகழ்ச் சைவ
சிகாமணி தன்னருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி
யே!மலர் மேலிருந்த
அனமே! யமிர்தக் குமுதச்செவ்
வாயுங்க ளாயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற்
சோலையு ளெய்துகவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தலைவியை ஆயத்து உய்த்தது.
தனம் தரும் புகழ் - பொருள் வழங்கியதனால் உண்டாகிய புகழ்.
அது தந்தையார் சிவபாத இருதயருக்கும், திரிவீழி மிழலையில் பஞ்ச காலத்தில் பலர்க்கும் வழங்கியது.
`அன்னம்` என்பது இடைக் குறைந்து நின்றது.
``செவ்வாய்`` என்றதும் `சிவந்த வாயை உடையவளே` என்றவாறேயாம்.
பொலிய - (நீ இல்லாமையால் இழந்த) பொலிவைப் பெற்று விளங்கும்படி.
இங்ஙனம் கூறியதனால், `நீ செலவு தாழ்ப்பின் ஆயத்தார் தேடி வருவர்` என்பது குறிப்பித்தான்.
``சைவ சிகாமணிதன் அருள் போல் மனம் புகுந்த`` என்றதனால், `அவ்வருள் போல நீ என் உயிரினும் சிறந்ததாய் ஆதலின், நீ எங்கிருப்பினும் உனை நான் இமைப் போதளவின் மறவேன்` எனத் தனது காதர் சிறப்பு உணர்த்தினான்.

பண் :

பாடல் எண் : 79

உகட்டித்து மோட்டு வராலினம்
மேதி முலையுரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை
கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி
ழாகரன் தன்னையல்லால்,
பகட்டில் பொலியினும் வேண்டேன்,
ஒருவரைப் பாடுதலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உகட்டித்து`` என்னும் பிறவினை வினைச்சொல், `உகண்டு` எனத் தன்வினையாய் நின்றது.
உகளுதல் - பிறழ்தல், எழும்பிக் குதித்தல்.
மோட்டு வரால் இனம் - பெரிய வரால் மீனின் கூட்டம்.
மேதி - எருமை.
உரிஞ்ச - உராய.
அகடு - வயிறு அஃது ஆகுபெயராய், மடியைக் குறித்தது.
`அகட்டினின்றும் சொரிபால்` என்க.
தடம் - தடாகம்.
கொச்சைவயம் சீகாழி.
தகடு - பொன் தகடு.
மணி - இரத்தினம்.
பூண் - அணிகலம்.
பகடு - யானை.
ஒருவரை - வேறு ஒருவரை `வேறு` என்பது தமிழாகரரோடு இயைபில்லாமை `யானைமேற் செல்லும் செல்வத்தைப் பெறுவதாயினும்; தமிழாகரரோடு சிறிதும் இயை பில்லாத ஒருவரைப் பாடுதலை வேண்டேன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 80

பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
`நேடிய` என்பது பாடமன்று.
ஞானசம்பந்தர் பழங் காசுபெற, நாவுக்கரசர் நல்ல காசு பெறிறமை பற்றி, ``பூந்திருநாவுக்கரசு`` என்றார்.
பூ - அழகு.
அவர் பெற்ற காசின் அழகு அவருக்கு ஆக்கிச் சொல்லப்பட்டது.
``இக் குவலயம் உளதாய்த்து`` என்றது, `உயிர்கள் பஞ்சத்தால் வாடி மடியாமல் வாழ்ந்தன` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 81

வலையத் திணிதோள் மிசைமழ
வேற்றி, மனைப்புறத்து
நிலையெத் தனைபொழு தோகண்ட(து)
ஊரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட
வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல்! முன்போல்
மலர்க திருக்கண்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, புதல்வனை வாயிலாகப் பற்றி வந்த தலைவனைத் தலைவி வாயில் மறுக்கத் தோழி வாயில் வேண்டியது.
`நீதி கெட்டார்.
வாள் நுதல்! ஊரனைத் தோள்மிசை மழவு ஏற்றி மனைப்புறத்துக் கண்டது எத்தனைப் பொழுதோ! திருக்கண்கள் முன்போல் மலர்க` எனக் கூட்டி யுரைக்க.
வலையம் - வாகு வலயம்; தோள்வளை.
மழவு - புதல்வன்.
மனைப்புறம் - புறங்கடை.
நிலை - நிற்றல்.
`நிற்றலில் கண்டது` என ஏழாவது விரிக்க.
``எத்தனைப் பொழுதோ`` என்றது, `மிக நீண்ட நேரம்` என்றபடி.
`தலைவர் இத்தன்மையராகவும் சிவப்பு ஆறாமை குல மகளிர்க்கு அழகன்று; உனது அழகிய கண்கள் சிவப்பு ஆறி, முன்போல் குளிர்ச்சியுடன் மலர்வன வாக` என்பதாம்.
நீதி கெட்டான்.
சமணர்.
குலைய - அழிய `அவரைச் கழுக் குழுவிற் கண்டவன்` என்க.

பண் :

பாடல் எண் : 82

கண்ணார் திருநுத லோன்கோலக்
காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர்
கோன்பாணி நொந்திடுமென்(று)
எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன்
தாளங்க ளீயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை
யேத்தார் வருந்துவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண் ஆர் திருநுதலோன், சிவபெருமான் கோலக்கா, சீகாழியை அடுத்துள்ள தலம்.
நொடி - நொடித்தல்; தட்டுதல்; தாளம் இடுதல், பாணி - கை.
எண் ஆர் - எண்ணுதல் (கணித்தல்) பொருந்திய எழுத்து அஞ்சு திருவைந்தெழுத்து மந்திரம்.
இட்ட - பொறிக்கப்பட்ட மண்ணார் - மண்ணுலகத்தில் உள்ளவர்.
`அச்சண்பை நாதனை` எனச் சுட்டு வருவிக்க.
எண்ணார், முற்றெச்சம் `எண்ணாராய் வருந்துவது என்` என ஒருசொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 83

வருந்துங் கொலாங்கழல், மண்மிசை
யேகிடில் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம்
பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன்
காண்;புண ரித்திகழ்நஞ்(சு)
அருந்தும் பிரான்நம் மரத்துறை
மேய வரும்பொருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
மென்தார் - மெல்லிய மலர் மாலையை அணிந்த.
மணி, முத்து.
காண், அசை.
புணரி - கடல்.
`அரும் பொருளாய் உள்ளவன்` என்க.

பண் :

பாடல் எண் : 84

பொருளென வென்னைத்தன் பொற்கழல்
காட்டிப் புகுந்தெனக்கிங்(கு)
அருளிய சீர்த்திரு ஞானசம்
பந்த னருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை
விட்டு விழுநிதியின்
திரளினை யாதரித் தால்நன்று
சாலவென் சிந்தனைக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன், பின் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
`என்னைப் பொருளெனக் கொண்டு` என ஒரு சொல் வருவிக்க.
ஞானசம்பந்தன் அருள் இல்லாதவரே அருளைத் துறந்து, பொருளை விரும்புவர்` என்பதாம்.
ஆதரித்தால் - விரும்பினால், `அது நன்று` எனத் தோன்றா எழுவாய் வருவிக்க.
தீதாவதனை, ``நன்று`` என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
`யாம் பிரியின் தலைவி வாழாள்` என்பதை அறிந்து வைத்தும் பொருள் வலிக்கின்ற நெஞ்சம் பேதைமை யுடைத்து` என்றபடி.

பண் :

பாடல் எண் : 85

சிந்தையைத் தேனைத் திருவா
வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாட லிசைத்துத்
தொலையா நிதியமெய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய
கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந்
தேகரம் நீட்டுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முன்பு `சிந்தையை` என்றதனால் பின்பு ``தேனை`` என்றதற்கு, `சிந்தையில் ஊறும் தேனை` என உரைக்க.
தொலையா நிதியம் - உலவாக் கிழி.
தீத் தொழில் மூட்டிய - வேள்வித் தொழிலில் ஈடுபடச் செய்த.
``சார்வலி ரேல்`` என்பது முதலாக வந்த பயனிலை கட்கு, `மக்கள்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 86

நீட்டுவ ரோதத்தொ டேறிய
சங்கம் நெகுமுளரித்
தோடுவெண் முத்தம் சொரிசண்பை
நாதன் தொழாதவரின்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு)
உண்ணீ ருணக்குழித்த
காட்டுவ ரூறல் பருகும்
கொலாமெம் கனங்குழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவனுக் குறை நேர்ந்த தோழி தலைவியைக் குறை நயப்பிக்கச் சில கூறி காலத்தில் தலைவி அதனை அறியாள் போன்று குறியாள் கூறியது, அஃதாவது கூறப்பட்ட பொருளோடு தொடர்புபடாமல் பொதுவாக எதனையோ கூறியது.
இதனை, என் செய்வாம் - எனில், `பொன் செய்வாம்` - என்றல் போல்வது`` என்பர்.
``எம் கனங் குழையே`` என்பதை முதலிற் கொண்டு, இறுதியில், `பருகும் ஆம் கொல்` என மாற்றி முடிக்க.
நீட்டு உவர் ஓதத்தொடு - கரைமேல் நீட்டுகின்ற, உப்புச் சுவையை உடைய அலைகளோடு, முளரித் தோட்டு - தாமரை மலரின் இதழ்களின்மேல்.
இது நெய்தலில் மருதம் மயங்கிய திணை மயக்கம்.
வேட்ட தண்ணீர் - நீர் வேட்கையால் அதனைத் தணிக்க விரும்பிய நல்ல நீருக்கு ஈடு.
காட்டு உவர் ஊறல் பருகும் ஆம்.
கொல் - காட்டில் உள்ள உவர்க் கேணியில் ஊறுகின்ற அந்த நீரும்பருகுநீர் ஆகின்றது போலும்! இது வேடர் வாழ்க்கையின் தாழ்வினைப் புலப்படுத்தியது.
தோழி கருதிய பொருட்கும், இதற்கும் யாதோர் இயைபும் இல்லை.
தலைவி இவ்வாறு தொடர்பில்லாமல் கூறியது, தோழி கருத்தைத் தான் அறிந்து கொள்ளாதது போலக் காட்டிக் கொள்ளுதற்காம், ``தொழாதவரின்`` என்றாரேனும் `தொழா தவர்க்கு ஆவது போல` என்பதே கருத்து.
`சண்பை நாதனைத் தொழாதவரே இடப்பாடான வாழ்க்கையை உடையவர் ஆவர்` என்பதாம்.
``பருகு`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகு பெயராய், பருகப்படும் நீரைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 87

குழைக்கின்ற கொன்றைபொன் போல
மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்ட லியம்புஒன்
றிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண்
சண்பைப் பிரான்புறவத்(து)
இழைக்கின்ற கூடல் முடயஎண்
ணாத இளங்கொடிக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவன் நீடத் தலைவியது ஆற்றாமை கண்டு தலைவி முன்னிலைப் புறமொழிகளால் ஆற்று வித்தது.
கொண்டல் - மேகமே! இது மேகத்தைத் தோழி விளித்தது.
ஒன்று இலை - வேறு ஒன்றும் செய்தியில்லை.
`கொண்டலே, இழைக் கின்ற கூடல் முடிய எண்ணாத இளங்கொடிக்கு, அகன்றார் வரவு இயம்பு; வேறு ஒன்றும் செய்தியில்லை` எனக் கூட்டி முடிக்க.
கூடல் இழைத்தலாவது, கண்ணை மூடிக்கொண்டு மணலில் ஒரு வட்டம் வரைதல்.
`அவ்வட்டத்தின் இரு முனைகளும் ஒன்றாய்க் கூட, வட்டம் முழுமை பெற்று நிற்குமாயின் கருதிய பொருள் கைகூடும்` எனவும், `முனைகள் கூடாமல் வேறாய்ப் போய்விடின் கருதிய பொருள் கைகூடாது` எனவும் கொள்ளுதல் வழக்கம்.
பிரிந்து சென்ற தலைவர் வந்து சேர்தலை அறியத் தலைவியர் இவ்வாறு கூடல்களை இழைத்துப் பார்ப்பார்கள் இருமுனையும் ஒன்று கூடுதலால் இதற்குக் `கூடல்` என்பது பெயராயிற்று.
அது தலைவர் வந்து தலைவியரோடு கூடுதலையும் குறிப்பதாம்.
``கூடல் முடிய எண்ணாத இளங்கொடி`` என்றதனால், இங்குத் தலைவி பல முறை கூடல் இழைத்து அது கூடாமை கண்டு ஆற்றாமையுடைய ளாயினாளாம்.
`கொண்டலே! அகன்றார் வரவை நீ இளங்கொடிக்கு இயம்பு` என்றது, `கார் காலம் வந்தமையால் இனித் தாழ்ந்து தலைவர் வருவார்` என்பதை முன்னிலைப் புறமொழியாகக் கூறி ஆற்றுவித்தது.
குழைக்கின்ற - தளிர்க்கின்ற.
புறம் - முல்லை நிலம்.

பண் :

பாடல் எண் : 88

கொடித்தே ரவுணர் குழாமன
லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா
சனியை யணியிழையார்
முடித்தேர் கமலர் கவர்வான்,
முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை
கோத்து வளைத்தனரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ஞானசம்பந்தரது உலாப் புறத்தில் கண்டோர் கூறியதாக அமைந்தது.
``அடித் தேர்`` என்பதில் தகர ஒற்று, எதுகை நோக்கி விரிக்கப்பட்டது.
தேர்தல் - சிந்தித்தல்.
`முடித்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
ஏர் - அழகு.
கமலம், தாமரை மலர்க் கண்ணி; ஆகுபெயர், வடித்து - கூர்மை யாக்கப்பட்டு.
ஏர் - எழுச்சி பெற்ற.
வளைத்தனர் - முற்றுகை யிட்டனர்.

பண் :

பாடல் எண் : 89

வளைபடு தண்கடற் கொச்சை
வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன
லூரன்தன் நீரில்அம்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத்
தம்பலம் நாறுமிந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன்
வாயின் மணிமுத்தமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, புதல்வனை வாயிலாகக் கொண்டு போந்த தலைமகன் `யான் தவ றொன்றிலேன்` எனக் கூறியவாறே கூறிய வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.
வளை படு கடல் - சங்குகள் உண்டாகின்ற கடல்.
வளைபடும் முடி - வணங்குதல் பொருந்தும் முடி.
அம்குவளை படு கண்ணியர் - அழகிய குவளைப் பூப்போலும் கண்களை யுடைய மகளிர்; பரத்தையர் வளைபடுகிங்கிணி - வளைத்துக் கட்டப்பட்ட சதங்கை.
`மைந்தன் வாயினின்றும் பெறப்படுகின்ற முத்தத்தில் ஊரனது வாய்நீரிலே சில மகளிரது பலவாகப் பொருந்திய பொதுத் தம்பலம் நாறாநின்றது` என்க.
`அவன் தவறிலன் என்பது யாண்டையது` என்பது குறிப்பெச்சம்.
மணி - சிறப்பு.
இப்பாட்டு, `மடக்கு` என்னும் சொல்லணி பெற்று வந்தது.

பண் :

பாடல் எண் : 90

முத்தன வெண்ணகை யார்மயல்
மாற்றி, முறைவழுவா(து)
எத்தனை காலம்நின்று ஏத்து
மவரினு மென்பணிந்த
பித்தனை, யெங்கள் பிரானை,
யணைவ தெளிதுகண்டீர்;
அத்தனை, ஞானசம் பந்தனைப்
பாதம் அடைந்தவர்க்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
`அவரினும் பாதம் அடைந்தவர்க்கு எங்கள் பிரானை அணைதல் எளிது` என முடிக்க.
கண்டீர், முன்னிலை யசை.
அத்தன் - தலைவன்.
`சம்பந்தனைப் பாதத்தை அடைந்தவர்க்கு` என முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு சிறுபான்மை வந்தது.

பண் :

பாடல் எண் : 91

அடைத்தது மாமறைக் காடர்தம்
கோயிற்கதவினை அன்று
உடைத்தது பாணன்தன் யாழின்
ஒலியை யுரகவிடம்
துடைத்தது தோணி புரத்துக்கு
இறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற்று
அரசு பணித்திடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தோணிபுரத்துக்கு இறைவன்`` என்பதனை முதலிற் கொள்க.
`துடைத்தது உரக விடம்` எனவும், `நள்ளாற்றரசு வணித்திடச் சுடரொளிவாய்ப் படைத்து தண்மையை` எனவும் கூட்டுக.
ஒளி - நெருப்பு; ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 92

பணிபடு நுண்ணிடை பாதம்
பொறாபல காதமென்று
தணிபடு மின்சொற்க ளால்தவிர்த்
தேற்குத் தழலுமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானடம்
பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென்
னோவந்து தோன்றியதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத தலைவன் போக்குடன் படானகவும் அதனைத் துணிந்து வந்த தலைவியைக் கண்டு அவன் தன் நெஞ்சினுள்ளே சொல்லியது.
பனிபடும் இடை - பாம்பு போலும் இடை.
இஃது அதனை உடையாளைக் குறித்தது.
`இடையது பாதம்` என்க.
`பல காதம் நடக்கப் பொறா` என ஒரு சொல் வருவிக்க.
தணிபடும் இன்சொல் - பணிவு பொருந்திய இன்சொல்.
``தவர்த்தேற்கு`` என்னும் நான்கா வதை, `தவிந்தேன்கண்` என ஏழாவதாகத் திரிக்க.
`தவிர்த்தேன்கண், வேலன்ன கண்ணி, ஞானசம்பந்தன் மருவலர்போல், தழல் உமிழ் கான் வந்து படுதற்கு ஏது வாயவேல்.
தலைவனது உடன்பாட்டைத் தலைவி பெறுதலும், தலைவன் சிறிது ஆற்றுதலும் இதன் பயன்.

பண் :

பாடல் எண் : 93

தோன்றல்தன் னோடுட னேகிய
சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேயிந்த வேந்திழை
யார் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா
கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல
நாடு பொருந்துவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவி தலைவன் உடன் போக்கில் பின் தேடிச் சென்ற செவிலியைக் கலந்துடன் வருவோர் கண்டு தேற்றியது.
``ஈன்றவரே`` என்றது செவிலியை.
`இந்த ஏந்திழையார் பூண் முலையை ஈன்றவரே` என்று துணிந்தபின் பின்வருமாறு அவட்குக் கூறினர்.
அவர் - இவர் தேடிச் செல்கின்ற அந்த இருவர்.
வடவரை - மேருமலை, ``அவர் `இவ்வளவில் கழுமல நாடு பொருந்துவர்` என்றதனால் இனி நீவிர் மேற் செல்ல வேண்டா, மீள்வதே தக்கது` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 94

பொருந்திய ஞானத் தமிழா
கரன்பதி, பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக்
கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையிற்
காகூ கழுமலமென்(று)
இருந்திட வாமென்று வானவ
ராகி யியங்கியதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தமிழாகரன் பதி எங்கும் வானவராகி இயங்கியது தோணிபுரத்துக்கு இறைவன் திருவருளால் காலையில், கா கூகழுமலம் என்று இருந்திடவாம்` என முடிக்க.
ஈற்றடியிலும் `என்று` என ஓதுதல் பாடம் அன்று.
``தோணிபுரத்துக்கு இறைவன்`` என்றதும் ஞான சம்பந்தரை, `சீகாழியில் தங்குவதால் காலையில் அவரது பாடலை மற்றவர்களோடு நாமும் ஓதுப் பயன் பெறலாம்` என்னும் கருதினால் தான்.
சீகாழியில் தேவர்கள் குழுமுகிறார்கள் என்றபடி.
``கா கூ`` என்றது திருந்திய இசை இல்லாமையை.
காலையில் நீர்ப் பறவைகள் எழுந்து ஒலிப்பதை நீரே துயில் எழுவது போலக் கூறுதல் வழக்கம்.

பண் :

பாடல் எண் : 95

இயலா தனபல சிந்தைய ராயிய
லுங்கொலென்று
முயலா தனவே முயன்றுவன்
மோகச் சுழியழுந்திச்
செயலார் வரைமதிற் காழியர்
கோன்திரு நாமங்களுக்(கு)
அயலா ரெனப்பல காலங்கள்
போக்குவ ராதர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இயலாதன - கைகூடாதன.
`அன்ன பலவற்றைச் சிந்தையில் உடையவராய்` என்க.
முயலாதன - முயலத் தகாதன.
செயல் ஆர் - வேலைப்பாடு அமைந்த.
வரை மதில் - மலைபோலும் மதில்.
ஆதர்கள் - அறிவிலிகள்.

பண் :

பாடல் எண் : 96

ஆதர வும்,பயப் பும்மிவ
ளெய்தின ளென்றபலார்
மாத ரவஞ்சொல்லி யென்னை
நகுவது! மாமறையின்
ஓதர வம்பொலி காழித்
தமிழா கரனொடன்றே
தீதர வம்பட வன்னையென்
னோபல செப்புவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளை தலைவியது ஆற்றாமையைச் செவிலியறிந்தமை அறியாது அலர் அஞ்சிய அவளுக்குத் தோழி கூறியது.
ஆதரவு - காதல்.
பயப்பு - பசலை.
மா தரவு - பெரிய குற்றம்.
தாவு, `தரவம்` என வந்தது.
பின் இரண்டடிகளில் உள்ள அறவம் - ஒலி, அன்னை என்னோ பல செப்புவது தமிழாகர னொடு தீது அரவம் பட அன்றே` என முடிக்க.
தீது அரவம் - குற்றமாகிய சொல், அது, `தலைவி காதல் வயப்பட்டாள்` என்பது.
என்னோ - எவைவையோ.

பண் :

பாடல் எண் : 97

செப்பிய வென்ன தவம்முயன்
ரேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா
கரனை, யுணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி யேத்தும்
படிதக றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை
சூழ்தரு மண்மிடையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தமிழாகரனை, உணர்வுடையோர் ஏத்தும்படி நல்ல செந்தமிழால் செப்பிய மண்ணிடை என்ன தவம் முயன்றேன்` என இயைத்து முடிக்க.
செப்பிய - செப்புதற்கு.
ஒப்புடை மாலை - ஒரு சீராக அமைக்கப்பட்ட பூமாலை.
கற்பு உடை வாய்மொழி - கற்ற கல்வியையுடைய வாயினின்றும் தோன்றும் சொற்களால்.
ஏத்தும்படி- துதிக்கின்ற முறையில்.
கதறிட்டு இவர - அலைகள் முழங்கிக் கொண்டு கரைமேல் ஏறுதலால்.
மல் படு தொல்லைக் கடல் - முத்து முதலிய செல்வங்கள் மிகுகின்ற பழைய கடல்.

பண் :

பாடல் எண் : 98

மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமண் - அமணர் குழாம்.
பண்ணைக் கழு - நிறைய நாட்டுப்பட்ட கழுமரம்.
கண் - கண் போன்றவர் கதி - யாவரலும் அடையப்படுபவர்.
திண்மை - நெருக்கம்.
தொடையல் - பூமாலை.
சேர்ந்தனம் - புகலிடமாக அடைந்தோம்.
`இனி எமக்கு யாது குறையுளது` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 99

சேரும் புகழ்த்திரு ஞானசம்
பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல்
லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமுடற் ராயரு
ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு
மாலும் பிரமனுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`-திருஞானசம்பந்தரை யான் துதிப்பாடிய இந்தத் தமிழ்ப் பாடலை ஒதி உணர்ந்தவர் பெற்ற பேரின்ப உலகத்தை எமக்கு அருள் கூர்ந்து அளித்தல் வேண்டும் - என் மாலும் பிரமனும் நீரும், மலருங் கொண்டு, சிவபெருமானைக் கும்பிடுவர்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
எனவே, இப்பாட்டு இப்பிரபந்தத்தின் பயன் கூறிற்றாம்.
காரும் - கறுத்த.
பேரும் பா - தொடர்ந்து நடக்கும் பாட்டுக்கள்.

பண் :

பாடல் எண் : 100

பிரமா புரம்வெங் குரு,சண்பை,
தோணி, புகலி,கொச்சை
சிரமார் புரம்,நற் புறவந்,
தராய்,காழி, வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம்
பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலர் பன்னிரு
நாமமிப் பாரகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிரமார் புரம் - சிரபுரம், தராய் - பூந்தராய் வரம் - மேன்மை.
பரம் - மேன்மை.
`திருஞானசம்பந்தன் வரம் ஆர் பொழிற் பதிக்கு இப்பாரகத்துப் பன்னிருநாமம் பிரமாபுரம்.
.
.
.
கழுமலர்` என முடிக்க.
இப்பாட்டின் இறுதிச்சீர் - இதன் முதற்பாடலில் சென்று மண்டலித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 101

பராகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும்
ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின்
தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தோணிபுரத் தலைவன் நாமம் செவிக்கு இசையா நாள், பாருலகத்தைக் கடந்து அமரர்களால் வணங்கப் படும் நாளாய் இருப்பினும் இன்னாது` என்க.
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி முற்றிற்று.
சிற்பி