நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்


பண் :

பாடல் எண் : 1

பாலித் தெழில்தங்கு பாரகம்
உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித்
தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை யன்னம்
நடப்ப, வணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சண்பையர் காவலன் சம்பந்தன், பார் முகம் உய்ய (அருள்) பாலித்து, பறி தலையோர் மால் உற்ற அழுந்த வெல்ல அவதரித்தோன்` என முடிக்க. `வெல்ல` என்பது சொல்லெச்சமாய் வந்து இயையும்.
பறி தலை - மயிர் பறிக்கப்பட்ட தலை. அ மணி நீர் - நீல மணிபோலும் நீர், ஆலித்து - அசைந்து. அலர் தாமரை மலர். அணங்கு - தெய்வம்; நாமகள். சாலி - நெற்பயிர். அது தலை வணங்குதற்கு இவ்வாறு காரணம் கற்பித்தது, தற்குறிப்பேற்ற அணி.

பண் :

பாடல் எண் : 2

கொங்குதங் குங்குஞ்சி கூடாப்
பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள்
பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த
புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி பங்கு தங்கும் மங்கைதன் அருள் பெற்றவன்` எனக் கூட்டி முடிக்க.
கொங்கு - வாசனை. குஞ்சி கூடாப் பருவம் - தலை மயிர் கூட்டி முடிக்க வாராத பருவம்; குழவிப் பருவம். அருள் - ஞானப் பால். புணரி - கடல். வங்கம் - மரக்கலம். வயல் - உப்பளம்.

பண் :

பாடல் எண் : 3

குவளைக் கருங்கண் கொடியிடை
துன்பந் தவிரவன்று
துவளத் தொடுவிடந் தீர்த்த
தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச்
சூளிகைச்சென்னியின் வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குவளைக் கருங்கண் கொடியிடை யாவாள் ஒரு வணிகப் பெண். `கொடி இடை துவள` எனக் கூட்டுக.
திவளுதல் - சுண்ணத்தின் ஒளி விளங்குதல். `திவள் அம் மாளிகை` என்க. சூளிகை - மேல் மாடத்தின் முகப்பு. `சம்பந்தன், கொடியிடை துவள, அத்துன்பம் தவிர அன்று விடம் தீர்த்த தமிழின் தொகை செய்தவன்` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 4

கள்ளம் பொழில்நனி பள்ளித்
தடங்கட மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய
வித்தகன், வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ
டலாக் கயலுகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் நனிபள்ளித் தடம் கடம் ஆக்கி, அஃதே நெய்தல் ஆக்கிய வித்தகன்` எனக் கூட்டி முடிக்க. கள் - தேன். நனிபள்ளி, ஒரு தலம். தடம் - வழி. கடம் - பாலை நிலம், வெள்ளம் பணி - மிகுந்த நீர் எங்கும் மலிகின்ற. வித்தகன் - சதுரப்பாடு உடையவன். ``வெண்குருகு புள்`` என்பது இருபெயர் ஒட்டு. ஆல ஒலிக்க. தள்- தட்டல்; தடுத்தல். ``தட்டோர் அம்ம இவண் தட்டோரே- தள்ளாதோர் இவண் தள்ளா தோரே`` என்னும் புறப்பாட்டைக் காண்க.

பண் :

பாடல் எண் : 5

ஆறதே றுஞ்சடை யானருள்
மேவ வவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி
கண்டவன், மென்கிளிமாந்
தேறல்கோ தித்துறு சண்பகந்
தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் அவனியர்க்குச் சடையான் அருள் மேவத் தமிழால் வழி கண்டவன்` என முடிக்க. ``ஆறது`` ``வீறது`` ``தாறது`` என்பவற்றில் அது பகுதிப் பொருள் விகுதி. வீறு - பெருமை. தேறல் - தேன், என்றது தேன்போலும் சுவையை உடைய தளிர்களை. துறு -நெருங்கிய. தாறு - குலை. `கிளி கோதி, தாவி ஏறும் பொழில்` என்க.

பண் :

பாடல் எண் : 6

அந்தமுந் தும்பிற வித்துயர்
தீர வரனடிக்கே
பந்தமுந் துந்தமிழ் செய்த
பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங்
கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் (ஓதுபவர்களைப்) பிறவித் துயர் தீர அரன் அடிக்கே உந்தும் தமிழ் செய்த பராபரன்` எனக் கூட்டி முடிக்க. அந்தம் முந்தும் பிறவி - இறப்பை முன்னிட்டுக் கொண்டு வரும் பிறப்பு. பந்தம் - சம்பந்தம்; தொடர்பு - `தொடர்பு உண்டாக உந்தும்` என ஆக்கம் வருவிக்க. `பராற் பரன்` என்பது `பராபரன்` என மருவிற்று. `மேலானவர்க் கெல்லாம் மேலானவன்` என்பது பொருள். தடம் - பொய்கை. தேன் - வண்டு, நந்தம் முந்தி முத்தம் கொடுப்ப - சங்குகள் முற்பட்டு முத்துக்களைக் கொடுக்க, ``முத்தம் கொடுப்ப`` என்பது சிலேடை. ``கொடுப்ப`` என்பதன் பின் `மீண்டு` என ஒரு சொல் வருவிக்க. சந்தம் உந்தும் - இசை பாடுகின்ற முத்தத்தைப் பெறுதல் வண்டிற்கு இல்லையாயினும் உள்ளதுபோலத் தற்குறிப்பேற்றம்.

பண் :

பாடல் எண் : 7

புண்டலைக் குஞ்சரப் போர்வையர்
கோயிற் புதவடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா
சனியும்பர் பம்பிமின்னுங்
கொண்டலைக் கண்டுவண்
டாடப் பெடையொடுங்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் குஞ்சரப் போர்வையர் கோயில் புதவு அடைக்கும் தமிழைப் பாடிய குண்டாசனி` என வினைமுடிக்க. புண் - பாகன் குத்தியதனால் உண்டான புண். ``குஞ்சரம்`` என்பது ஆகுபெயராய், அதன் தோலைக் குறித்தது. புதவு - வாயில். உம்பர்ப் பம்பி - வானத்தில் நெருங்கி. தண்டலை - சோலை. குண்டு - ஆழம்.

பண் :

பாடல் எண் : 8

எண்டலைக் குந்தலை வன்கழல்
சூடியெ னுள்ளம்வெள்ளங்
கண்டலைப் பத்தன் கழல்தந்த
வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியி லோடும்
விரவி மிளிர்பவளம்
தண்டலைக் குங்கடற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன், என் உள்ளம் எண் தலைக்கும் தலைவன் கழல் சூடி வெள்ளம் கண்டு அலைப்பத் தன் கழல் தந்தவன்` எனக் கூட்டி முடிக்க. எண் தலை - எட்டுத் திசை. ``வெள்ளம்`` என்பதனை, `இன்ப வெள்ளம்` என்க. அலைப்ப - அலைத்து முழுகும் படி. ``கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்`` 1 என்றது காண்க. `சம்பந்தன் முன்னர்த் தன்கழலைத் தந்தமையால் பின்பு என் உள்ளம் சிவன் கழலைக் காணலாயிற்று` என்பதாம். `முத்தம் நத்தம் விண்ட அலைப் பத்தியில் பவளம் விரவித் தண்டலைக்கும் ஓடும் கடல்` என்க. நத்தம் - சங்கு. ``விண்டு`` என்பதை `விள்ள` எனத் திரிக்க. விள்ளல் - ஈனுதல். தண்டலை - கடற்கரைச் சோலை. ``தண்டலைக்கு`` என்னும் நான்காவதை, `தண்டலைக்கண்` என ஏழாவதாகத் திரிக்க. உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.

பண் :

பாடல் எண் : 9

ஆறுமண் டப்பண்டு செஞ்சொல்
நடாத்தி யமண்முழுதும்
பாறுமண் டக்கண்டு சைவ
சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல்
தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன், பண்டு ஆறு மண்டச் செஞ்சொல் நடாத்தி.... சைவ சிகாமணி` எனக் கூட்டி முடிக்க. ஆறு - வையை நதி; அஃது அதன் நீரைக் குறித்தது. மண்ட - பொருந்த. ``செஞ்சொல்`` என்றது செவ்விய சொற்களை எழுதிய ஏட்டைக் குறித்தது. நடாத்தியது எதிர்முகமாக. பாறு மண்ட - பருந்துகள் நெருங்கி உண்ண. `சங்கு தடத்த சேறு மண்ட, கயல் கனியைச் சிதறி அதன் சாறு மண்டும் வயல்` என்க. தடம் - பொய்கை. மண்டுதல் - நெருங்குதல்.

பண் :

பாடல் எண் : 10

விடந்திளைக் கும்அர வல்குல்மென்
கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைத் குங்கொங்கை புல்கிய
மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி
யொல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் பெருமணத்தில் இருந்த அழகு மிக்க ஒருத்தி உள்ளத்தால் ஆரத் தழுவிய மன்மதன் போலும் அழகினை உடையவன்` இப்பாட்டின் தெளிந்த பொருள். இதனால் பிள்ளை யாரது திருமேனி அழகைப் புகழ்ந்தவாறு. ``பெருமணம்`` என்பதை முதலிற் கொள்க. பெருமணம் - நல்லூர்ப் பெருமணம்; தலம். ``பெரு மணத்தின் கொங்கை`` என்பதை, `பறம்பிற் பாரி` என்பது என்க. கொங்கை சினையாகு பெயர். வடம் - மணி வடம், கடம் - காடு, புதரை, `காடு` என்றார். கழுநீர் - குவளை. ஒல்குதல் - அசைதல். தடம்- பொய்கை. திளைத்தல், இங்கே நிரம்பி நிற்றல். வருவித்துரைத்தன ஆற்றலாற் கொண்டவை.

பண் :

பாடல் எண் : 11

பாலித்த கொங்கு குவளைகள்
ளம்பொழில் கீழ்ப்பரந்து
வாலிப்ப வாறதே றுங்கழ
னிச்சண்பை யந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத்
எண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக்
கும்அர வல்குலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அந்தாதியிற் போல இவ்விருத்தத்திலும் ஒரு பாடலை அகத்துறைப் பாலதாக அருளிச் செய்தார். இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு வினாவிய செவிலிக்குத் தோழி உண்மை வகையால் அறத்தொடு நின்றது.
பாலித்த - `ஒழுக விடப்பட்ட கள்` என்க. கொங்கு நறுமணம். ஆலிப்ப - ஓட. `குவளைத் தேன் பரந்து ஓடும்படி ஆற்று நீர் மிக்கெழு கின்ற கழனி` என்க. அந்தம் - திசைகளின் முடிவு. குஞ்சரம் திக்கு. `அவை அனைத்திற்கும் தலைவன் சண்பையில் தலைவன்` என்க. இவ்விடம் திளைக்கும் அரவு அல்குல்` எனச் சுட்டு வருவிக்க. `இவளை சண்பையில் தலைவன் கோல் இட்ட ஆறே இவள் வேறு பாடு` என்றபடி. கோல் - ஆணை; `தழுவி வாழப் பெறாது. தனிமை யால் மெலிக` என்பதே அவ் ஆணையாம். ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் முற்றிற்று.
சிற்பி