நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை


பண் :

பாடல் எண் : 1

திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் மெம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன்

முத்தீ வேள்வு நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன்

மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திங்கட் கொழுந்தொடு.
.
.
.
பரிபுன் சடையோன் - சிவபெருமான்.
பொங்கு அரவு- சினம் மிக்க பாம்பு.
திளைத்தல் - விளையாடுதல்.
`திங்களோடு பாம்பு விளையாடுதல் வியப்பு.
கடு வரல் கலுழி வேகமாய் வருகின்ற வெள்ளம் - வெள்ளம் இருகரை யிலும் பொன்னைச் சிதறுதலும், மலர்களை மலர்த்துதலும் இயல்பு.
`அவ்வாறு இங்கு வெள்ளத்தால் இரு கரைகளிலும் சிதறப்படும் பொன் இதழியும், (கொன்றை மலரும்) மலர்த்தப்படும் மலர் எருக்குமாம்` என்றபடி.
இதழியின் செம்பொன் உருவகம்.
`இன்` வேண்டாவழிச் சாரியை.
புதல் - புதர்.
இருபிறப்பாளனும் அருதொழிலாளனுமாகிய தமிழ் விரகன்` - என்க.
`முத்தி வேள்வியைக் கூறும் நான்மறை` என உரைக்க.
``வேள்வு`` என்பது, `வி` என்னும் விகுதி பெறாமல், `வு` என்னும் விகுதி பெற்று வந்த தொழிற் பெயர்.
மழை நோக்கி - மாவடுப் போன்ற கண்களை யுடையவள்.
`புதல்வனது பாடல்` என ஆறாவது விரிக்க.
கை விளித்தல் - கையால் அழைத்தல்.
``கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்`` என்றது காண்க.
இது நிலைமண்டில ஆசிரியப்பா இதனுள் எண்ணலங்காரம் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் தாளிமைகள் என்றும் என் தலைமேல் இருக்க` என முடிக்க.
`என்றும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று.
அடுத்த பாடல், ``என்றும்`` எனத் தொடங்குதல் காண்க.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 3

என்று மடியவ ருள்ளத்
திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித்
துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக்
குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ
சிகாமணி பொன்னடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
கல் - வறுமை, இன்மை.
ஒண்மை - ஒளி, ஞானம்.
``ஒண் கலி`` என்றது, `ஒண்மையின் கலி` என்றபடி.
அஃதாவது ஒண்மையைக் கெடுக்கும் கலி.
பொன்றுதல் - அழிதல்.
``பொன்றும்`` என்பது `பொன்றல்` என்பது `வி` என்னும் பிறவினை விகுதி தொக்கு நின்றதாகக் கொள்ளல் வேண்டும், ``குடி பொன்றிக் - குற்றமும் ஆங்கே தரும் 1 என்பதிற்போல என்றார் மாதவச் சிவஞான யோகிகள்

பண் :

பாடல் எண் : 4

அடுசினக் கடகரி யாதுபடி உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளாதனால்
பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே
வளர்ந்தது 5
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே
பெற்றது
குழகனைப் பாடிக் கோலக்காப்புக்
கழகுடைச் செம்பொன் தாளம் அவையே 10
தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே
அடைத்த
தரசோ டிசையா அணிமறைக் காட்டுக் 15
குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே
ஏறிற்
றத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே
பாடிற் 20
றருமறை ஒத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே
கொண்டது
பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்ஆ யிரமே 25
கண்டது
உறியோடுபீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பலகழு மிசையே
நீத்த
தவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் 30
தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே
நினைந்த
தள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே
மிக்கவர் 35
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தனிந் நானிலத் திடையே. 37

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஞானசம்பந்தன் இந்நானிலத்திடை`` என்பதை முதலிற் கொள்க.
`ஞாலத்திடை` என்பது பாட மன்று என்பது, அடுத்த பாடல் ``நிலத்துக்கு`` எனத் தொடங்குவதால் விளங்கும்.
முன் பாட்டு ``அடி`` என முடிந்தமையால் இப்பாட்டின் முதல் `அரிசினம்` என்பதும் பாடமன்று.
அடு சினம் - போரில் பகைவரைக் கொல்ல எழுகின்ற சினம்.
`திருவருளதனால் பிறந்தது.
கடிநகரதுவே; வளர்ந்தது.
உண்டே; பெற்றது.
செம்பொன் தாளம் அவையே; தீர்த்தது.
விடமே; அடைத்தது.
கதவே; ஏறிற்று.
சிவிகை.
முன்னாட் பெற்றே; பாடிற்று ஆண்பனையதனைப் பெண்பனையாகவே; கொண்டது.
சமணைப் பல் கழுமிசையே; நீத்தது அரன் அடி பரவும் தமிழ்ச் சுவை யறியாத் தம்பங்களையே; நினைந்தது.
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே`` எனக் கூட்டி யுரைக்க.
பிறந்தது, வளர்ந்தது முதலாக வந்தன பலவும் இடம், செயப்படுபொருள் ஆகியவை வினை முதல் போலக் கூறப்பட்டனவாம்.
``நீத்தது நினைந்து`` என்பன தொழிற் பெயர்கள்.
எழுவாய் நின்று செயப்படு பொருட் பெயர்களாகிய பயனிலைகளைக் கொண்டன; ``ஏறிற்று`` என்பது ``பெற்று`` என்னும் வினையெச்சப் பயனிலை கொண்டது.
``பாடிற்று`` என்னும் ``எழுவாயும்`` பெண் பனையாக என வினையெச்சப் பயனிலை கொண்டது.
கொள வல்ல ஞானசம்பந்தன்` என்க.
மிக்கவர் - ஞானமும், அன்பும் மிகப் பெற்றவர்; மேலோர்.
`மிக்கவரது` என ஆறாவது விரிக்க.
வாவி, இங்குச் சுனை.
இனி, `மான சரோவரம்` என்னும் பொய்கையும் ஆம்.
சிலம்பு - மலை.
போனகம் - திருமுலைப் பாலில் அளைந்த அடிசில்.
பேதுறு - வருந்திய.
பெண், வணிகப் பெண் ``கணவனை`` என்பதை, `கணவனுக்கு` எனத் திரித்து ``தீர்த்தது`` என்பதனோடு இயைக்க.
அரசு - திருநாவுக்கரசர்.
இசையா - கூடி.
குரைசேர் - ஒலித்தல் பொருந்திய.
அத்தி - யானை.
மா - குதிரை.
விடு - ஒழுக விடுகின்ற.
அவிழ் - வாய் உணவு - அள்ளற் பழனம் - சேற்றையுடைய வயல்.
``கரியது, நகரது திருவருளதனால், ஆண் பனையதனை`` என்பவற்றில் அது பகுதிப் பொருள் விகுதி, ``தாளம் அவையே`` என்பதில் ``அவை`` என்றதும் அது.
இதுவும் நிலைமண்டில ஆசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 5

நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சொலத் தக்க`` என்பது முதலாக எடுத்துக் கொண்டு உரைக்க.
சொலத் தக்க - சிறப்பித்துச் சொல்லத் தக்க சுத்தர்கள் - மலம் நீங்கிய தூயோர்; முத்தர்கள்.
சுரன் - பூசுரன்.
நிலம் - பூவுலகம்.
அதற்குமேல் உள்ள ஆறு நிலையான உலகங்களாவன, `புவர் லோகம், சுவர் லோகம், மக லோகம், சன லோகம், தவ லோகம், சத்திய லோகம்` என்பன.
புவர் லோகம் சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களையுடைய சுடர் உலகம்.
காற்று மண்டலம் இவற்றின் கீழாய் அடங்கும்.
சுவர் லோகம், இந்திராதி தேவர் வாழ் உலகம்.
மக லோகம் மரீசி முதலிய மகான்கள் வாழும் உலகம்.
சன லோகம், சன்னு முதலிய பொது ஞானியர் வாழும் உலகம்.
தவ லோகம், சனகர் முதலிய சிறப்பு ஞானியர் வாழும் உலகம்.
சத்திய லோகம் பிரம தேவனுடைய உலகம்.
திருமாலினுடைய வைகுந்தமும் இதனுடன் சேர்ந்து ஒன்றாக எண்ணப்பட்டது.
இவற்றிற்கெல்லாம் மேலே உள்ளது சீகண்டருத்திரர் உலகம் அதுவும் சிவலோகமாகவே எண்ணப்படும்.
இவையெல்லாம் சிவஞான மாபாடியத்துட் கண்டன.
1 இவை பல்லூழி காலம் இருத்தல் பற்றி, ``நீடுலகு`` எனப்பட்டன.
``உச்சித் தலத்துக்கு மேல்`` என்றது, `அவைகளுக்கு அப்பால்` என்றபடி.
``தான்`` என்பது தேற்றப் பொருளில் வந்தது.
என்பர் - என்று சொல்லுவர் மெய்யுணர்ந்தோர்.
`ஞான சம்பந்தருக்கு அடியவராகவே, ஞானம் எளிதில் கூடும் - என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 6

பதிகம் பலபாடி நீடிய
பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக்
காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக்
காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந்
தோசில வூமர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஞானசம்பந்தர் அவதரிக்கப் பெற்றது காழிப்பதி` என்று சொல்லக் கேட்டால் அறிவிலிகள் சிலர் உடனே வீழ்ந்து வணங்காமலே நிற்பார்கள்.
அவர்கள் இறுதியில் ஒதிய மரத்தின் கிளை வீழ்வதுபோல யாதொரு பயனும் இல்லாமல் வீழ்வார்கள்`` என்பது இதன் திரண்ட பொருள்.
`ஞானசம்பந்தர்பால் தலையாய அன்பினை உடையர் ஆகாதார் இவ்வாறு ஆவர்` என்பதாம்.
தலையன்பினது நிலைமை.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
என்பதில் குறிக்கப்பட்டமை காண்க.
``பதிகம் பல பாடி நீடிய பிள்ளை`` என்றது, ``பிள்ளைமைப் பருவத்திலே அளவற்ற திருப்பதிகங்களை அருளிச் செய்து அதனால் என்றும் நிலை பெற்ற புகழையுடைய சிறிய பெருந்தகையார்` என்றபடி.
`அப்புகழைக் கேட்டும் அவருக்கு அடியர் ஆகாதவரைப் பற்றி என்ன சொல்வது` என்பதாம்.
பரசு - மழு - தரன் - தரித்தவன்; சிவபெருமான்.
அணுக்கன் - நெருக்கமானவன்.
`அவதரித்தது` எனற் பாலதனை, ``அவதரித்த`` என உடம்பொடு புணர்தலாக்கிக் கூறினார்.
``பிள்ளை, அணுக்கன், காலன்`` எனப்பட்ட பெயர்களை எடுத்தல் ஓசையாற் கூறி, அவரது அவதாரச் சிறப்பினை உணர்க.
ஒதி ஒருவகை மரம், இது நிற்றலாவது சிறிது நிழலைத் தரும்; வீழ்ந்தால் எந்த ஒன்றிற்கும் பயன்படாது.
அதனால் வீழ் தலையே கூறினார்.
இது முற்காலத்தில் `உதி` - என வழங்கப்பட்டது.
அம், சாரியை.
பணை - கிளை.
அந்தோ, இரக்கக் குறிப்பு.
``பலபாடி`` என ஓர் அடியின் இடையே மூவசைசீர் வந்தது.

பண் :

பாடல் எண் : 7

தவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்
தும்பர் பதணத் தம்புதந் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன்
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து

முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கல்லது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இச் செய்யுள் அகப் பொருளில் களவியலில் நொது மலர் வரைவு முயல்வறிந்து தோழி செவிலிக்கு அறத்தொடு நின்ற துறையாகச் செய்யப்பட்டது.
2 முதல் நான்கு அடிகளை,
மாளிகைப் பதணத்து
யானைத் தலைக் கும்பத்து உம்பர்
அம்புதம் திளைக்கும் பெருவளம்
எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.
பதணம் - மேல்மாடத்து மேடை.
`மாளிகைப் பதணம்` என இயைக்க.
பதணத்துக் கும்பம் - அம்மேடையின் மேல் அழகிற்குச் செயற்கையாகச் செய்யப்பட்ட குடம்.
(அதன்) உம்பர் - மேலே அம்புதம் திளைக்கும் பெருவளம் - மேகங்கள் தவழ்கின்ற மிக்க வளமையை.
தழீஇ - தழுவி.
திருவளர் - அழகு மிகுகின்ற.
புகலி - சீகாழி.
`கவள யானை, திவளும் யானை` - எனத் தனித் தனி இயைக்க.
கவளம் - யானை உணவு.
திவளுதல் - அசைதல்.
`யானையின் தலைபோலும் கும்பம்` என்க.
கவுள் தலை - கன்னத்தையுடைய தலை.
யானையின் கன்னம் மத நீர் ஒழுக நிற்பது ஆதலின், அஃது எடுத்துக் கூறப்பட்டது.
`சம்பந்தன் சிலம்பில்` என இயையும்.
அலம்பு- மலை.
அம் - அழகு.
கருது இயம் செவ்விச் சுருதி - அறிஞர் விரும்புகின்ற வாச்சியங்கள் இனிமை பெற எழுப்புகின்ற இசையை உடைய சிலம்பு.
இவ் இசை வண்டுகளாலும், மூங்கில்களாலும் இசைக்கப்படுவன.
`செவ்வி பெற எழுப்பும் சுருதி` என, வேண்டும் சொற்களை இசையெச்சமாக வருவித்துக் கொள்க.
`சிலம்பிற் புனம்` என இயைத்துக் கொள்க.
தேமரு தேன் + மரு.
தேன்- இனிமை.
காமரு - அழகிய.
கைம் மா - யானை.
மூரி - பெரிய; வலிய.
மருப்பு - தந்தம்.
உக - சிந்தும்படி.
``முற்பட வந்து`` என்பதை, ``புனத்து`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
வெற்பன் - குறிஞ்சி நிலத் தலைவன்.
சுணங்கு அணி - தேமலைக் கொண்ட.
``புகலித் தலம் விளங்கப் பிறந்த சம்பந்தனது மலையில் தினை வலர் புனத்து (ஒருநாள் எங்கள்மேல் யானை வந்த பொழுது) முன் வந்து சிலை வளைத்துச் சரம் துரந்து முயன்று அங்கு உதவி செய்த வெற்பனுக்கு அல்லது பிறருக்கு நும் மகளை மணம் செய்து கொடுக்க எண்ணுவது நம் எல்லோருக்கும் வலிய பழியாய் முடியும்`` என்பதாம்.
`அவ்வாறு செய்ய முயன்றால் தலைவி இறந்துபடுவாள்` என்பது கருத்து.
இது, தோழி செவிலிக்குக் களிறு தருபுணர்ச்சியால் அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 8

பழியொன்றும் ஓராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரதந்தரம்போய் நெஞ்சே நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சமணர் பழி ஒன்றையும் ஓராமை (நினையாமை) வைதிக மதத்தவர்மேல் அன்று கொண்டிருந்த காழ்ப்பு உணர்ச்சியினால் ஆம்.
அதற்கு, ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த திருமடத்திற்குத் தீக்கொழுவியதே போதிய சான்றாகும், ஒன்றும் - சிறிதும் திகம்பர சமணருட் சிலர் பாயை உடுத்தாமல் கையால் இடுக்கித் திரிந்தனர்.
``வாளா`` என்றது, இருமையின்பத்தையும் இழந்தமை நோக்கியாம்.
அழிதல் - தோல்வியடைதல்.
துரந்து - ஓட்டி.
அரங்க - தாமே நசுங்க, அரங்குதல் என்னும் தன் வினையே வலித்தல் பெற்று `அரக்குதல்` என வருகின்றது.
``சுரும்பு அரற்றும்`` என்றது, `தாமரை மலர் போன்றது` என்றபடி.
நிரந்தரம் - இடை விடாமல்.
அந்தரம் - இடைவெளி.
நிர்அந்தரம் - இசை வெளியின்மை.
போய் - அருகணைந்து.
நெஞ்சு அணைதலாவது, பற்றுதல்.

பண் :

பாடல் எண் : 9

நினையா தரவெய்தி மேகலை
நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுதி
யேதடஞ் சாலிவயல்
கனையா வருமேதி கன்றுக்
கிரங்கித்தன் காழ்வழிபால்
நனையா வருங்காழி மேவிய
சீர்ஞான சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது பாடாண் திணைக் கைக்கிளைத் துறையாகச் செய்யப்பட்டது.
இது புறப்புறக் கைக்கிளை.
``தடஞ் சாலி வயல்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
``நின்னை`` என்பது இடைக்குறைந்து ``நினை`` என நின்றது.
ஆதரவு - ஆதரித்தல்; விரும்புதல் நெகுதலும், சரிதலும் ஆகிய சினை வினைகள் முதல்மேல் ஏற்றிச் சொல்லப்பட்டன.
சினையொடு ஒட்டிய பொருள்களும் ஒற்றுமை பற்றிச் சினையாகவே கருதப்படும்.
சரிவாள், வினையாலணையும் பெயர்.
தன், சாரியை.
``ஆவ`` என்பது இரக்கக் குறிப்பு இடைச் சொல்.
அருளுதி - இரங்குவாய், ஏகாரம் அசை.
வினா வாக்கி உரைத்தலும் ஆகும்.
`தடவயல்` என இயையும்.
தட பெருமை யுணர்த்தும் உரிச்சொல்.
சாலி - நெற்பயிர்.
வயல் வரும் மேதி - வயல்களின் பக்கம் மேய்தற்கு வருகின்ற எருமை.
``வயல்`` என்பதன் பின், ``புடை`` என்னும் பொருட்டாய கண்ணுருபு விரிக்க.
கமையா - கனைத்து; ஒலியெழுப்பி.
கன்றுக்கு - உடைவனிடத்திலே கட்டுண் டிருக்கும் தனது கன்றை நினைந்த காரணத்தால், `நனைய` என்றதன் இறுதி நீட்டல் பெற்றது.
`எச்சத் திரிபு` என்றலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 10

தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத்
தாடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக

மலைமகள் புதல்வ கலைபயில் நாவநினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ
றாதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் புறப்புறக் கைக்கிளை.
தனம் மலி - பொருளை நிரம்பத் தருகின்ற.
திரு - இலக்குமி.
`அவள் திளைக்கும் மாடம், இன்பத்து மாடம், ஆடக மாடம் எனத் தனித்தனி இயைக்க.
திளைத்தல் - இன்பம் உற்று இருத்தல்.
வீயா - அழியாத.
ஆடகம் - பொன்.
நீடு - உயர்ந்திருக்கின்ற.
தென் - அழகு.
புகலி - சீகாழிப் பதி.
`புகலிக் கவுணியர்` என இயைக்க.
காமரு - விரும்பப்படுகின்ற.
கவின் ஆர் - அழகு நிறைந்த (தலைவன்).
கவுணியர் - கரவுணிய கோத்திரத்தவர்.
தலைவன் - சிறந்தவன்.
பொற்பு - அழகு.
நற்றமிழ் - ஞானத் தமிழ்.
விரகன் - வல்லவன்.
ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் கூறுவோர் ``மலைமகள் புதல்வ`` - என்பதற்கு உண்டமை பற்றி ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் கூறுவோர் ``மலைமகள் புதல்வ`` என்பதற்கு `முருகன்` எனப் பொருள் கொள்வர்.
அம்மையது திருமுலைப் பாலை உண்டமை பற்றி ஞானசம்பந்தரை அங்ஙனம் கூறுதல் பொருந்துவதே.
பயிலுதல் - பல முறையும் சொல்லுதல்.
ஆதரித்து - விரும்பி.
``பேதையர்`` என்பதுபொதுப் பொருட்டாய், `மகளிர்` எனப் பொருள் தந்தது.
வெள் வளை - சங்க வளையல்.
``செம்பொன்`` - என்பது உவமையாகு பெயராய், அது போலும் தேமலைக் குறித்தது.
காதல் மிகுதியால் உடல் மெலிய வளை கழலுதலும், உடம்பில் தேமல் தோன்றுதலும் இயற்கை.
இவற்றை வாங்குதலும், கொடுத்தலுமாகக் கூறியது, ஏற்றுரை (இலக்கணை) வழக்கு.
சங்கினைப் பொன்னை விலையாகக் கொடுத்து வாங்குதலால், `சிறுபிள்ளை` என்பது உண்மையாயிற்று என்பதாம்.
`பிள்ளைமைப் பருவத்திற்றானே இத்துணைப் பேரழகுடையராய் இருந்தார்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 11

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தொஃறோணி கண்டீர் நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொன் மாலை மார்பன்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``நிறை யுலகில்`` என்பதை, ``பிறவி`` என்பதற்கு முன்னே கூட்டுக.
பிறவி - பிறத்தல்.
அது முடிவில்லாது வருதலால் பெரிய கடலாக உருவகிக்கப்பட்டது.
ஞானசம்பந்தரது தமிழ் பிறத்தல் தொழில் வாராது போக்குதல் பற்றி அஃது அக்கடலைக் கடக்க உதவும் தோணியாக உருவகிக்கப்பட்டது.
இஃது இயைபு உருவகம் பொல்லாமை - தீமை.
`துன்பத்தைத் தருவது` என்பது கருத்து.
நீந்துதல் - கடத்தல்.
துறவு; பற்றுக்களை அறவேவிடுதல்.
அவ்விடுதலை தருவதனை விடுதலாகவே கூறினார் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது.
தோல் + தோணி = தோஃறோணி.
தொன்மை - பழைமை.
`ஞான சம்பந்தரது தமிழ் பொருளால் பழைமை யுடையது` என்பது கருத்து.
`தோற்றோணி` என்பது பாடம் அன்று.
கண்டீர்; முன்னிலையசை.
நிறை உலகு - உயிர்கள் நிறைந்துள்ள உலகு.
பொன் மாலை, பிள்ளைகட்கு அணியப்படுவது.
தன், சாரியை.
`சம்பந்தன்தன் தமிழ்` என்க.
மாலைத் தமிழ் - கோவையாக (திருப்பதிகங்களாக)ச் செய்யப்பட்ட தமிழ்.
ஞானத் தமிழ் - ஞானத்தைத் தரும் தமிழ்; இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
தமிழ், அதனால் ஆகிய பாடல்களைக் குறித்த கருவியாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 12

ஞானந் திரளையி லேயுண்
டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல்
லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார்
கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி
மேவிய கொற்றவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் புறப் புறக் கைக்கிளை.
``படைச் சால் வழியே`` - என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``திரளை`` என்பது இங்குக் கிண்ணத்தைக் குறித்தது; ஆகு பெயர்.
சோனம் - மேகம்.
தரு, உவம உருபு.
``சோனந் தரு குழலார்`` என்றது தோழிமார்களை.
எனவே, `தலைவியர் கேட்பச் சொல்லிடா முன்` என்க.
``கொற்றவனே`` (அறிவால் அறியத் தக்க ஞானத்தைக்) கிண்ணத்திலே பெற்று உண்டாய்`` - என்னும் அதிசயத்தைத் தோழியர் தம் தலைவியர் கேட்ப நாடறியச் சொல்லும் முன்னே உனது பங்கயத் தாரினை (தாமரைமலர் மாலையை)க் கழற்றிக் கொடுத்துவிடு; (ஏனெனில், அதனைக் கேட்டவுடனே தலைவியர் ஆற்றாமையால் இறந்துபடுவர்) - என்பது இதன் பொருளாகும்.
``தலைவியர் கேட்ப`` என்பது இசையெச்சம் இது `மாலையிரத்தல்` என்னும் துறை.
சுரும்புகட்குப் பானமாவது தேன்; அதனைத் தருவது பங்கயம் (தாமரை மலர்) தாமரை மாலை அந்தணருக்கு உரிய அடையாள மாலை.
படைச் சால், உழுபடை உழுது சென்ற பள்ளம், கூன் நந்து - வளைவான சங்குகள் கொற்றவன் - தலைவன்.

பண் :

பாடல் எண் : 13

அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச்
சொரிமதக் கறிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே
இடையிடைச் செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையா லுந்திய கலுழிக்
கரையா றுழல்வன கரடியின் கணனே
நிரையார் பொருகட லுதைந்த சுரிமுகச் சங்கு

செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையி லமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற்

சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருளில் களவியலில், தோழி தலைவனை வரைவுகடாதல் வேண்டி வரவு விலக்கு வாள்; ஆறின்னாமை கூறி விலக்கிய துறையாகச் செய்யப்பட்டது.
ஆறு இன்னாமை - வரும் வழி துன்பம் உடையது.
``மலையோனே`` என்றதை ``நிரையார்`` என்பதற்கு முன்னே கூட்டிப் பின்வரும் அடிகளையும் முதலில் வைத்து உரைக்க.
மலை யோன் - வெற்பன்; குறிஞ்சி நிலத் தலைவன்.
அவனி தலம் நெரிய - பூமியில் உள்ள இடங்கள் ஆங்காங்குக் குழியும்படி மலைஇ - போர் செய்து, என்பது, `செய்து கொண்டு சொரிகின்ற மதம்` என நிகழ்காலம் உணர்த்தி நின்றது.
செஞ்சேறு - இரத்தத்தோடு கூடிய சேறு.
அரி சிங்கம், எஞ்சா - இளைக்காத.
பேழ்வாய் - பெரியவாய்.
சேண் விசும்பு- உயரத்தில் உள்ள ஆகாயம்.
`விசும்பினின்றும் மின் வீழ்வன` - என்க.
அது, பகுதிப் பொருள் விகுதி.
பொறி, தீப்பொறி, வரை - மலை.
அது சினம் உடைத்தன்றாயினும் வெள்ளத்தைப் பொங்க விடுதல் பற்றிச் சினம் உடையது போலக் கூறப்பட்டது.
இக்காலத்தவரும்.
`இயற்கையின் சீற்றம்` என்பர்.
உந்திய - வெளிப்படுத்தப்பட்ட கலுழி - (கான் யாற்று) வெள்ளம், கரையால் - கரை வழியாக.
கணன் - கணம்; கூட்டம்.
இத்துணையும் ஆறின்னாமை கூறியது.
இனிச் சீகாழிச் சிறப்பு.
நிரை ஆர் - அலைகளின் வரிசை பொருந்திய கரையை
மோதுதல் பொருதல்
உதைந்த - கரையில் கொண்டு வந்து ஒதுக்கிய
சுரி முகம் - வளைந்த முகம்.
`சங்கு பங்கய மலரின் மடல் நிறைய முத்து உதிர்க்கும் கழனி` என்க.
கிழித்த - மலர்த்திய.
மடல் - இதழ்.
பழனம் - மருத நிலம்.
செம்மடல், வெண்முத்து - `சிறுகு இடை பெருமுலை` முரண் தொடைகள் `புணர்வன வரல் ஒழி நீ` என முடிக்க.
`இவ்வாறான நெறியினில்` என இசையெச்சம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 14

மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்தும்
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தந் தீராதார் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முலைத் தலங்கள் நீத்தாலும்`` என்றது, புறப் பற்றுக்களையெல்லாம் அறவே நீக்கினாலும்` என்றபடி.
`முலைத் தலங்கள்` என்றது, அதற்கு இனமாகிய மற்றை மணி, பொன் இவை களையும் தழுவி நின்றமையின் உபலக்கணம்.
தலைவர் துயிலும் இடமாதல் பற்றி, ``தலங்கள்`` என்றார்.
முன் வைக்கற் பாலதாய இது செய்யுள் நோக்கி ஈற்றில் வைக்கப்பட்டது.
வான் - பெருமை.
தவம், உற்ற நோய் நோன்றலும், உயிர்க்கு உறுகண் செய்யாமையும் ஆகிய அவையேயாம்.
என்னை? `நற்றவம்` என்றோ,1 ``இறப்பில் தவம்`` என்றோ சிறப்பியாது வாளா, ``தவங்கள்`` என்றமையின் ``செய்து`` என்பதனையும், ``நீத்தாலும்`` என்பதனோடு இயைய, `செய்தாலும்` திரிக்க.
``கலைத் தலைவன் சம்பந்தற்கு ஆளாய்.
.
.
தீராதார், தாம் முலைத் தலங்கள் நீத்தாலும், மலைத் தலங்கள் மீதேறி வான் தலங்கள் செய்தாலும் மூப்பர்` - என இயைத்து வினை முடிவு செய்க.
மூப்பர் - முதுமையை எய்துவர்.
என்றது, `பின் ஏனையோர் போலவே இறந்தொழிவர்` என்னும் குறிப்பினது.
நிலையாமை யுணர்வு முதலிய காரணங்களால், `எனது` என்னும் புறப் பற்றுக்களை விட்ட வழியும்.
பற்றற்றான் பற்றினைப் பற்றாதவழி, 2 `யான்` என்னும் அகப் பற்று நீங்காமையால், `ஏனை யோர் போலவே இறப்பர்` என்றார்.
ஞானசம்பந்தரை ஆசிரியராக அடைந்து அவர் சொல்வழி நில்லாதவர்க்கு, `யான்` என்பது ஒழியாது என்பது கருத்து.
``யான் - என்னும் செருக்காவது, தானல்லாத உடம்பைத் தானாகக் கருதும் மயக்கம்`` என்றார் பரிமேலழகர் 1 தன்னை உடம்பின் வேறாக உணர்தலும் பசுஞானமாவதல்லது, பதிஞானம் ஆகாமையால் அவ்வாறுணர்தல் `யான்` என்பதினின்றும் நீங்கியது ஆகாது.
மற்று, எல்லாச் செயல்களும் சிவபெருமான் செயலேயாக, அவற்றுள் சிலவற்றை ``யான் செய்தேன்; பிறர் செய்தார்`` என மயங்கியுணர்ந்து விருப்பு வெறுப்புக்களைக் கொள்ளுதலே, `யான்` என்னும் செருக்காகும்.
அச் செருக்கு, ``எல்லாம் அவனே`` என உணர்ந்து இறைவனைப் பற்றாத வழி நீங்குமாறில்லை.
எனவே, இறுதியடியில் ``தம் பந்தம்`` என்றதில் `பந்தம்` எனப்பட்டது, `யான்` என்னும் அகப் பற்றையேயாயிற்று.

பண் :

பாடல் எண் : 15

தாமரை மாதவி சேறிய
நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன்
னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போல்அழ
கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங
னேகுமென் நேரிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள் உடன்போக்கில் நற்றாய் தலைவியது மென்மைத் தன்மை நினைந்து இரங்கிய துறையாகச் செய்யப்பட்டது.
இன்னோரன்னவற்றை, `அன்னை மருட்சி` என்பர் ``நேரிழை`` என்பதை, `மருவாதவர் போல்`` என்பதன் பின் கூட்டியுரைக்க.
மா தவிசு - சிறந்த ஆசனம்.
நான்முகன் தன்பதி, சத்தியலோகம் சீகாழி `பிரமபுரம்` எனப்படுதலால் அதனை, ``நான்முகன் தன்பதி போல் சீர் வளர் காழி` என்றார்.
சீர் வளர் - சிறப்பு மிக்க.
கவித் திறத்து நா மருவாதவர் - பாடல் வகைகளில் நாப் பொருந்தாதவர்கள்; பாடாதவர்கள்.
``அவர்களே, மெய்வருந்தப் பெற்று, நீரும் நிழலும் இல்லாத பாலை வனத்தில் வாழ்வோராவர்`` என்பதாம்.
``ஈந்து`` என்றது, `நீங்கப் பெற்று` என்றபடி.
வில்லை - வில்லை ஏந்திக் காத்துக் கொண்டு போகும் தலைவன், ``நீர் மருவாத சுரம்`` என்றது, சுரத்தினது இயல்பை எடுத்துக் கூறியவாறு.
``நீர்மரு`` என்பது ஆசெதுகை.
நேர் இழை - நுணுகிய வேலைப்பாடு அமைந்த அணிகலம்.

பண் :

பாடல் எண் : 16

இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே காமர்
கனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும்
பாய்கிளி யிரியப் பையவந் தேறி

ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்பு செய் தென்னை யாட்கொளு மிடமே பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்

புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த மூத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்

பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப்பொருள் களவியலில் பகற் குறி இடையீட்டில் தலைவி செறிக்கப்பட்டமையின் தலைவன் குறி யிடத்துச் சென்று தலைவியைக் காணாது, களம் நோக்கி மறுகுதலாகிய, `வறுங்களம் நாடி மறுகல்` என்னும் துறையாகச் செய்யப்பட்டது.
இழை கெழு - அணிகலன்கள் பொருந்திய.
``மென்முலை`` என்பது அடையடுத்த ஆகுபெயராய்த் தலைவியைக் குறித்தது.
பின் வரும் செய்யுட்களுக்கும் கொள்க.
கொன்றை; கொன்றை மரம்.
இது முல்லை நிலக் கருப் பொருளாயினும்,
எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்
என்பதனால் மலை நிலத்து வந்தது.
திணை மயக்கம் அன்று.
`இதழில் ஒசித்த பொழில்` என்க.
ஒசித்தல் - வளைத்தது பூவைப் பறித்தற் பொருட்டு.
தழை வர - இலைகள் நிலத்திற் படும்படி.
`என்னையும்` என்பது இடைக் குறைந்து நின்றது.
உம்மை, `காண்டல் கூடாத என்னையும்` என உயர்வு சிறப்பு.
தினை ஒட்டும் ஓசை.
சிறு சொல் - இகழ்ச்சியுரை.
இது அன்பினால் சொல்லப்படுவது.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
என்பது காண்க.
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை`` தினைப் புனத்தில் வெகுளி பற்றி வந்தது.
2 `பொன்புரை குடுமி`` என இயைக்க.
குடுமி, இங்குக் கேசரம்.
தொழில், படைத்தல்.
நாடு- உலகம், புற் கடை - புல்லிய தலைவாயில்.
கழுவுதல் - தூய்மைப் படுத்தல்.
சராவம் - ஓமத்துள் நெய்யை விடும் அகப்பை.
துடுப்பு - அவ் அகப் பையை மூடுவது.
சேடு - பெருமை.
விலங்கல் - மலை, `விரகன் விலங்கள்` என்க.
காம்பு - மூங்கில்.
காம்பன தோளி, தலைவி.
இதனை, ``பொன் புரை`` என்பதற்கு முன்னே கூட்டுக.
வஞ்சித் திருத்தல் - ஒளிந் திருத்தல்.
விளையாட்டுக்களில் ஒளிந்திருப்பதும் ஒன்று.
மணி - மணிகளை உடைய.
அறை - குகை.

பண் :

பாடல் எண் : 17

வேழங்க ளெய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் நீள்வயல்சூழ்
வாயந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் அகப்பொருள் களவியலில் தலைவன், தலைவி, தோழி இருவரும் உள்வழிச் சென்று, ``இவ் வழியாக அச்சம் உற்று ஓடிய யானை வந்ததா`` எனப் பொய்யாக வினாவ, தோழி அவன் கருத்தறிந்து நகை உண்டாகக் கூறுவதாகிய, ``தோழி இறை வனை நகுதல்`` என்னும் துறையாகச் செய்யப்பட்டது.
``(இவர் ஏந்தியிருப்பது தழை; வினாவுவது வேட்டத்தில் தப்பிய யானை.
அதனால்,) இக்காலத்தில் யானையை எய்பவர்க்கு அம்பாய் அமைவது, சாய்ந்து துவள்கின்ற தழைதானோ`` என்பது இப் பாட்டின் பொருள்.
வில், ஆகுபெயராய், அதன்கண் தொடுக்கப்படும் அம்பைக் குறித்தது.
`ஆழ் கடல் அம் முத்தம்` என்க.
அம் - அழகு.
சீகாழி அக் காலத்தில் கடலைச் சார்ந்து இருந்தது.
அதனால் அதன் அலைகள் முத்துக்களை வயல்களில் எறிந்தன.
`வயல் சூழ் காழி, மாடக் காழி, மதிற் காழி` எனத் தனித் தனி இயைக்க.
வாய்ந்த - வாய்ப்பான (மாடம்) திவளுதல் - ஒளி வீசுதல், இதுவும் மாடத்திற்கே அடை.
காழிக் கோன், ஞானசம்பந்தர்.
சிலம்பு - மலை.
`துவள்தழை` என்பது எதுகை நோக்கிச் செய்கை வேறுபட்டது.
ஓகாரம், இழிவு சிறப்பு.
தான், அசை.

பண் :

பாடல் எண் : 18

தழைக்கின்ற சீர்மிகு ஞானசம்
பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்சைக் கலர்ந்தன
கோடலம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர
சாபம்நின் னெண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து
தோன்றிற்றுப் பெய்வளையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள் கற்பியலில் ``கார் காலத்து வருவேன்`` எனக் கூறிப் பிரிந்த தலைவன் அக்காலம் வந்தும் வாரா மையால் ஆற்றாளாய தலைமகட்குத் தோழி அவன் வரவுணர்த்திய துறையாகச் செய்யப்பட்டது.
``பெய் வளையே`` என்பதை முதலிற் கொள்க.
இது தோழி தலைவியை விளித்தது.
தட மலை - பெரிய மலை.
வாய், ஏழன் உருபு.
`அழைக்கின்ற மஞ்ஞைக்கு` என்பதை, `மஞ்ஞை அழைக்கின்றதற்கு என மாற்றிக் கொள்க.
இதன்கண் உள்ள நான்கன் உருபை வினை செய்யிடப் பொருளாகிய கண்ணுருபாகத் திரித்து, `அழைக்கின்ற பொழுதாகிய இப்போது` எனப் பொருள் கொள்க.
அழைத்தல் - அகவுதல்.
மயில் அகவுதல் முகில் வருகையைத் தெரிவிக்கும்.
கோடல் - காந்தள்.
இது குறிஞ்சி நிலத்தில் மழைக் காலத்தில் பூக்கும் `கோடல் அலர்ந்தன` என்க.
`அம்பு எய்தல்` என்பது சிலேடை வகையால், மேகம், கோடையாகிய பகைவன்மேல் அம்பெய்வதாகப் பொருள் தரும்.
அம்பு - கணை; நீர், `இக் கமைக்கு ஏற்புடையவில் வானவில்` என்பது, ``அந்தரத்து இந்திர சாபம்`` என்பதனால் குறிக்கப்பட்டது.
அந்தரம் - ஆகாயம்.
சாபம் - வில்.
``இவை யெல்லாம் நிகழ்ந்து முடிவ தற்கு முன்னே நல்லவருடைய தேர் வந்து தோன்றிவிட்டது.
அதனால், இப்பருவத்தில் தலைவர் வருவார் - என்று உறுதியாக எண்ணியிருந்த உன் எண்ணம் ஒன்றும் (சிறிதும்) தவறவில்லை`` என்க.
``அம்பு எய்திடுவான் இந்திர சாபத்தை இழைக்கின்றது`` என்பதற்கு `மேகம்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
எய்திடுவான், வான் ஈற்று வினையெச்சம்.

பண் :

பாடல் எண் : 19

வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதே னுண்டு வேணுவின் துணியால்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி யெழுப்பு மந்தண் சிலம்ப அஃதிங்கு
என்னைய ரிங்கு வருவர் பலரே
அன்னை காணி லலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்
சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது, அகப் பொருள் களவியலில் தோழியிற் கூட்டத்தில் தலைவன் தோழியைக் குறையிரந்து நிற்கக் குறை நேரும் தோழி அதற்குத்தான் அச்சம் உற்றவளாய் தலைவனையும் அஞ்சுவித்தலாகிய அஞ்சி அச்சுறுத்தல் துறையாகச் செய்யப்பட்டது.
வளை கால் மந்தி - மரம் ஏறுதலால் வளைந்த காலையுடைய பெண் குரங்கு.
வேணுவின் துணி - மூங்கிலை முறித்துக்கொண்ட கழி.
வேழம் - யானை.
சிலம்ப - வெற்பனே.
``பெண் குரங்கு தேனை உண்ட மயக்கத்தால் மூங்கிலை முறித்துக் கொண்ட கழியால் அருகில் துயிலும் யானை எழுப்பப்படு கின்றது`` என்றதனால், ``தலைவியது இல்லில் உண்டு வாழ்ந்த கடமை உணர்ச்சியை யுடைய என்னால் என்பாள் விளைவது அறியாது மயங்கி நிற்கின்ற நீ அறிவுறுத்தப் படுபவனாயினை எனத் தோழி உள்ளுறை உவமம் கூறினாள்.
அஃது இங்கு - உனது நாட்டிற்குச் சொன்ன அந்த இயல்பு இங்கும் உள்ளது.
`அதனை நீ அறி` என்பது இசையெச்சம்.
இங்கு - இவ்விடத்தில் என் ஐயர் பலர் வருவர்.
ஐயர் - தலைவன்மார், ஏகாரம், அசை.
அலர் - வழி.
``தூற்றும்மே`` என்பதில் மகர ஒற்று விரித்தல்.
தேற்றேகாரம், அச்சத்தைக் குறித்தது.
பரல் - சதங்கையின் உள்ளிடு மணி.
``கரந்த பரல்`` என மாற்றிக் கொள்க.
விளி - விளிக்கின்ற; கூப்பிடுகின்ற.
கிங்கிணி - சதங்கை.
``கிங்கிணியைச் சேவடியில் புல்லி (பூட்டி) `` என்க.
அமுது - (பெற்ற தாயார் உண்பித்த) பால் ``அருவி`` என்றது வாய் ஊறலை.
தாளம் - சப்பாணி கொட்டுதல்.
கூத்து - குதிப்பு.
``சில் குரல் இயற்றி`` என்பது முதல் ``இயற்றி`` என்பது காறும் ஞானசம்பந்தர் தம் தந்தையார் சிவபாத இருதயரைக் காணாது அழுத அழுகைக் காட்சி விளக்கப்பட்டது.
`அவ் அழுகையானே சிவனருள் பெற்ற நற்றமிழ் விரகன்` என்க.
இறைவனை ``அழுதழைத்துக் கொண்டவர்`` 1 எனச் சேக்கிழாரும் கூறினார்.
பற்றலர் - பகைவர்.
`இடுகிய` என்பது ``இடுங்கிய`` என விரித்தல் பெற்றது.
ஒடுங்கிய - ஒடுங்குதற்கு; மறைதற்கு.
``பாய்ந்தனன்`` என்றது, விரைவு பற்றி எதிர் காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
கருதி - யாதொன்றையும் நினைத்து.
`கங்குற்கண்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது.

பண் :

பாடல் எண் : 20

தேம்புனமே யுன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் தேம்பி
அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால்
தொழுதகன்றா ளென்றுநீ சொல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள் களவியல் பகற் குறியில் தோழி தலைவன் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுக்கும் வகைகளுள் ஒன்றாகிய புனம் நோக்கிக் கூறியதாகச் செய்யப்பட்டது.
தேம் புனம் - தேனை உடைய புனம்.
திரிந்து - வலம் வந்து.
``அணி மலையர் வந்தால்`` என்பதனை இதன்பின் கூட்டுக.
மலையர்- வெற்பர்.
குறிஞ்சி நிலத் தலைவன்.
வாம் புகழ் - வாவும் புகழ்; எங்கும் பரவிய புகழ்.
`வான் புகழ்` - எனப் பாடம் ஓதலும் ஆம்.
`அழுது அகன்றாள்` எனக் கூறினால்.
`உறவு இழக்கப்பட்டதாகும்` என்னும் கருத்தினால் அதனை விலக்கி, `தொழுது அகன்றாள்` எனக் கூறுமாறு கூறினாள்.
இதனால் தலைவனுக்கு ஆறுதல் உண்டாகும்.
``சொல்லு`` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 21

சொற்செறி நீள்கவி செய்தன்று
வைகையில் தொல்லமணர்
பற்செறி யாவண்ணங் காத்தசம்
பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந்
தாடுங் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை
வாழி யிரும்புனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இச் செய்யுளும் முன்னைச் செய்யுளின் துறை யாகவே செய்யப்பட்டது.
இங்கு, ``பல்`` என்றது, சொல்லைக் குறித்து, `அவன் பல் பலித்தது` என்றும், `பற்போனமையால் சொற்போயிற்று`` என்றும் வழக்கத்தில் வழங்குதல் காண்க.
செறிதல் - சேர்தல்; வெற்றி பெறுதல்.
படல் - விசாலித்த.
கல் சுனை - கற்களுக்கு இடையே உள்ள சுனை.
வார் - நீண்ட.
கனங் குழை - கனமாகிய காதணியை உடைய தலைவி.
இரும் புனம் - பெரிய புனம்.
`புனமே! கனங்குழையை (அவள் தமர்) இற் செறியா வண்ணம் காத்திலையே; நீ வாழி` என வினை முடிக்க.
காவாமை முற்றி முதிர்ந்ததால் உண்டாயிற்று.
வாழி, இகழ்ச்சிக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 22

புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்

கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே யுறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்
தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்

மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை

ஆதலின் புறவே யுறவறலை நீயே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள்.
களவியலில் உடன் போக்கின் செவிலி பின் தேடிச் செல்லுமிடத்துக் குரவொடு புலம்பல் பெரும் பான்மையாகச் சிறுபான்மை வரும் புறவொடு புலம்பலாகச் செய்யப் பட்டது.
புறவு - புறா; இது பாலை நிலப் பறவை.
வறத்தல் - வற்றுதல்.
வறந்த - வறந்தமையால்.
புல், தரையிற் பரவிய புற்கள்.
முளி - உலர்ந்த.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
என்றது காண்க.
சரம் உரீஇ - அம்பு பட்டு உருவியதனால்.
படு கலை - இறந்த அம் மான்.
மானை வேட்டையாடிய வேடர், அதன் குளம்பை `பயன் இல்லது` என போகட்டுப் போதலின், அது வெயிலால் உருகி மிகத் தீ நாற்றத்தை உண்டாக்கிற்று என்க.
`நாற்றத்தை யுடைய சுரம்` என்க.
ஆடும் அரவு - படம் எடுத்து ஆடும் பாம்பு.
இஃது இனம் உள்ளது அகடு - வயிறு.
வெயில் வெப்பம் மிகுதியால், தரை மேல் ஊர்ந்து செல்லும் பாம்பின் அடி உடல் தீய்வதாயிற்று.
பாலை நிலத்தில் பாடுவன பருந்தும், கழுகும், `அவற்றது குரல் `பஞ்சுரம்` என்னும் பண்போன்றன` என்க.
இப்பண் குறிஞ்சியின் உட்பிரிவாய்ப் பாலைக்கு உரிமையுடையது.
``கலைக் குறம்பின் முடுகு நாற்றமும், அரவின் வயிறு தீய்கின்ற வெப்பமும் ஆகிய இவற்றிடையே கள்ளிக் கிளைகளில் பஞ்சுரப் பண்ணைக் கேட்டு நன்கு உறங்குகின்ற புறாவே`` - என்றதனால், ``நீ என மகளைச் சுரத்திடைப் போதலை விலக்காமை வியப்பன்று`` என்பதனைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
`நீ (எமக்கு) உறவாவாய் அல்லை` என்க.
பொறி - புள்ளி.
காண், முன்னிலை யசை நறை - தேன்.
தேம்- இனிமை.
அசைத்த - இறுகக் கட்டிய.
அணி - அழகு `அணி பொற் குன்றம்` என மாற்றிக் கொள்க.
`பொற் குன்றம்` என்றதும் ஞான சம்பந்தரை.
உருவகம்.
மானம் - அபிமானம்; பற்று.
மண்மிசை - இவ்வுலகத்தில், ``இவ்வுலகத்தில் `பற்று` எனப்படுவது ஒன்றையும் இல்லாது விடுத்த ஞானசம்பந்தன்`` என்க.
`நயவார் கிளைபோல், வஞ்சி மருங்குற் கிள்ளை ஏதிலன் பின் (சுரத்திற்) செல்ல` என உரைக்க.
``மனை விரியாத`` என்றது, `ஒரு ஞான்றும் வெளிச் சென்று அறியாதவள்` என்பதைக் குறித்தது.
வஞ்சி - கொடி.
மருங்குல் - இடை.
`மருங்குலையும், அழகிய சொல்லையும் உடைய கிள்ளை` என்பதாம்.
கிள்ளை - கிளி; உவம ஆகுபெயர்.
ஏதிலன் - அயலான்.
ஈற்றடி முடிந்தது முடித்தல்.

பண் :

பாடல் எண் : 23

அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முத்தமிழ் பயந்தான், ஞானசம்பந்தர்` அவரது ஊர் காழியே` என்க.
இங்ஙனம் கூறியதனால் காழியது சிறப்பு உணர்த்தப் பட்டது.
`கடலில் வந்து ஏறு சங்கம் நுளையர் வீசும் வலையிலும், மலர்கள் தலையிலும் முத்தை அவிழ்க்கும் வயல்` என்க.
வீங்கு - மிகுந்த.

பண் :

பாடல் எண் : 24

ஊரும் பசும்புர வித்தே
ரொளித்த தொளிவிசும்பில்
கூரு மிருளொடு கோழிகண்
தூஞ்சா கொடுவினையேற்
காரு முணர்ந்திலர் ஞானசம்
பந்தனந் தாமரையின்
தாருந் தருகில னெங்ஙனம்
யான்சங்கு தாங்குவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் பிறர் கூற்றாய் வாராது; தலைவி கூற்றாய் வந்தமையின், பாடாண் கைக்கிளையாகாது, அகப்புறக் கைக் கிளையாய் ``உட்கோள்`` என்னும் துறையின தாம்.
ஊரும் - ஏறிச் செல்கின்ற.
பசும் புரவி - பச்சைக் குதிரை இவை பூட்டப்பட்ட தேர் சூரியனுடையது.
கூரும் - மிகுகின்ற இருளொடு கண் துயிலாது கூவுகின்ற கோழி யாமக் கோழி.
கொடு வினையேற்கு - கொடிய வினையை உடையேனாகிய என் பொருட்டாக.
ஆரும் உணர்த்திலர் - (தோழி உட்பட) யாரும் விழித்திருக்கவில்லை.
சங்கு - சங்க வளையல்.

பண் :

பாடல் எண் : 25

தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்ட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்

காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே

வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும்

இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருட் களவியலில் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்த தலைவன் வரவு நீட்டிக்கத் தலைவி இரங்கிய காமம் மிக்க கழிபடர் கிளவியாகச் செய்யப்பட்டது.
கழி படர் - மிக்க துன்பம்.
துன்ப மேலீட்டால் தன் சொல் - கேட்க மாட்டாத பொருளை நோக்கியும் கூற்று நிகழும்.
இது குருகோடு இரங்கியது குருகு - நீர்ப்பறவை.
``இளங் குருகே`` என்பதை முதலிற் கொள்க.
தே மலி - தேன் நிறைந்த.
படப்பை - தோட்டம்.
தலை, ஏழன் உருபு.
முகடு - மேட்டு நிலம்.
கவடி - பலகை.
இது நண்டின் கால்களுக்கு உவமை.
கற்கடகம்- நண்டு.
சுவடித்தல் - தின்னுதல்.
`சுவடித்து` என்பது, ``சுடிச்சு`` எனப் போலியாயிற்று.
நண்டினை விரும்பித் தின்னுதல் நரிக்கு இயற்கை.
சூல் நரி - கருவுற்ற நரி.
`நரியின் முதுகைச் செந்நெறி கதிர் எழுந்து மோதும் காழி` என்க.
``குலத்தை`` என்பதில் பிறவினை விகுதி தொகுத்தலாக, ``வாழ`` என வந்தது என்றலும் ஆம்.
காழி தமிழ் விரகனுக்கு உரித்து ஆயினமையின், அதனையடுத்த கடலும் உரித் தாயிற்று.
கடல் வாய் - கடலின் அடை கரை.
`அதன் கண் பெருங் குருகு - பெரிய நீர்ப்பறவை.
உகுத்த - இட்ட.
களிறு - ஆண் சுறா.
`பெரிய நீர்ப் பறவை கடலின் அடை கரையில் இட்ட முட்டையை ஆண் சுறா முன் ஏறிக் கவர்கின்றது; (அதனை அப்பறவை நோக்காது சோர்ந்துள்ளது என்க.
) ``பனி சொரிகின்ற இவ் இரவில் நீ துணை யோடன்றித் தனியே போந்து உடல் கூசி, குளிர் உற்று வாயடைத்து உடல் வெளுத்திருக்கின்றாய்.
இவ் இரண்டிற்கும் என்ன காரணம்? சொல்.
(என்னைப் பிரிந்து சென்ற என் தலைவர் இன்னும் வாராதது போல, உங்கள் தலைவரும் உங்களைப் பிரிந்துபோய் இன்னம் வர வில்லையோ?`` என்க.
`பெருங் குருகின் முட்டையைச் சுறாமீனும் விரும்புகின்றது` அதன் பெருமை கூறப்பட்டது.
இயல்பிலே சோர் வுற்றுப் பெருங் குருகு சிறுதுயில் கொள்வதனையும், இயல்பிலே இலங்கு குருகு நிறம் வெளுத்திருப்பதையும் தலைவி தனது கழிபடர் காரணமாக ஆற்றாமையால் விளைந்தனவாகக் கருதினார்.

பண் :

பாடல் எண் : 26

குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை யருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமுமால் இன்னம்
புன்கலங்கள் வைகைப் புனல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வைகைப் புனல் இன்னம் புன்கலங்கல் தெளியா திருப்பது, முன் காழிப் பிள்ளை அருகந்தர் கலங்க நட்ட முடை கெழுமி` எனக் கூட்டி முடிக்க.
குருகு - நீர்ப்பறவை.
பணிலம் - சங்கு.
கூன் நந்து - கூன் பொருந்திய நத்தை.
கூன், முதுகில் உள்ள ஓட்டின் தோற்றம்.
சேல் - கெண்டை மீன்.
அருக முனிவர்கட்கு, `அருகந்தர்` என்பதும் பெயர்.
முடை கெழுமி - முடை நாற்றம் உடைய இரத்தம் முதலியன பொருந்தி நடப்பட்டது கழுமரம் ஆதலின் அவற்றின்கண் ஏறினாரது உடல் அழிவவாயின்.
நடுதலுக்குச் செயப்படு பொருள் வருவிக்க.
``நட்ட`` என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டாய், ``முடை`` என்னும் காரியப் பெயர் கொண்டது, ``உண்ட இளைப்பு`` என்பது போல.

பண் :

பாடல் எண் : 27

புனமா மயில் சாயல் கண்டுமுன்
போகா கிளிபிரியா
இனமான் விழியொக்கும் மென்றுவிட்
டேகா விருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம்
பந்தன் கடல்மலைவாய்த்
தினைமா திவள்காக்க வெங்கே
விளையுஞ் செழுங்கதிரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப்பொருள் களவியலில் பகற்குறி பற்றித் தலைவியது வேறுபாடு கண்டு ஐயுற்று, `தினைக் காவல் நன்கு போற்றப் படாதது என்னை` என வினவிய செவிலிக்கு, ஐயச்செய்கை மறுத்துப் பிறிது காரணங் கூறித் தெளிவித்த துறையாகச் செய்யப்பட்டது.
இவள் காக்க - இவள் தினைப் புனம் காக்கும் பொழுது.
``(எவ்வளவு கடிந்து ஓட்டினாலும்) மயில்கள் இவள் சாயலைக் கண்டு போகின்றில.
கிளிகள் (இவள் சொற்கேட்டுப்) போகின்றில, மான் இனம், `இவள் கண் நம் கண் ஒக்கும்` என்று இவ்விடம் விட்டுப் போகின்றில.
ஆதலின் தினை செழுங் கதிர் எங்கே விளையும்`` என்க.
கனம் - மேகம்.
`திண்மை` எனினும் ஆம்.
கடல் மலை - கடலை அடுத்துள்ள மலை.
நெய்தலொடு குறிஞ்சி மயங்கிய திணை மயக்கம்.
``எங்கே`` என்பது, ``எப்படி`` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 28

கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை யணங்கோ மொய்த்தெழு
தாமரை யல்லித் தவிசிடை வளர்ந்த
காமரு செல்வக் கனங்குழை யவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்து ளருந்தெய்வ மதுவோ

வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஒவியர் தங்க லொண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்

இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள் களவியலில் தலைவன் முதற்கண் கண்ட காட்சிக்குப் பின் `இம்மகள் மானுட மகளோ, தேவ மகளோ` என ஐயுற்ற ஐயத் துறையாகச் செய்யப்பட்டது.
``வண்டமர் குழலும்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
கதிர் - நிலாக் கதிர்.
மதி - பிறை.
``ஒருத்தி`` என்றது கங்கா தேவியை.
விருத்தன் - மேலானவன்.
இது, `முதுமை யுடையோன் தன் தேவியறி யாதவாறு வேறொருத்தியை மறைத்து வைத்துள்ளான்` என்பதொரு நயத்தைத் தோற்றுவித்தது.
அத்தன் - தலைவன்.
நாட்டுறை அணங்கு- ஊர்த் தேவதை.
அல்லி - அக இதழ்.
தாமரை மலர் ஆசனத்தில் வளர்ந்த கனங்குழையவள் - இலக்குமி.
மீத் தரு தேவ லோகத்துப் பஞ்ச தருக்கள்.
மரு - நறுமணம் உரு - அழகு உருப்பசி; ஊர்வசி.
முனிவர் களது தவத்தைக் கெடுத்தற்கு இவள் இந்திரனால் அவ்வப் பொழுது ஏவப்படுதல் பற்றி, ``தவ நெறி கலக்கும் உருப்பசி`` என்றார்.
தான், அசை.
வாருணக் கொம்பு - நீரர மகள்.
மதனன் கொடி - மன்மதன் தேவி; இரதி.
இது காதல் கொள்ளாக் காலத்து எழும் எண்ணம் ஆதலின், ``மதனன் கொடியோ`` என ஐயுறுதல், குற்றமாகாதாயிற்று.
ஆரணியத்துள் அருள் செய்வம் - வன தேவதை.
அது, பகுதிப் பொருளே விகுதி.
மருங்கு - இடை.
கிஞ்சுகம் - சிவப்பு.
`குழல் முதலிய உறுப்புக்கள் பலவும், திறம் வாய்ந்த ஓவியரால் தீட்டப் பட்டனபோல உள்ளன` என்றற்கு, ``ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும் உருவு`` என்றான்.
வட்டிகைப் பலகை - ஓவியம் தீட்டும் பலகை.
வான் - சிறந்த துகிலிகை - எழுதுகோல்.
`ஓவியர் பலகையில் துகிலி கையால் தங்கள் ஒண்மதி காட்டும் உருவு` எனக் கூட்டுக.
`ஒண்மதி காட்டும் உரு ஒவிய உரு` என்பான், ``இயக்குதற்கு அரியது ஓர் உரு`` என்றான் ``கண்டு`` என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருட்டாய், `காண்டலாலே` எனப் பொருள் தந்தது.
`காட்டி ஒன்றானே மயங்கிற்று` என்றதனால், `இது வியப்பு` என்பது குறிப்பெச்சமாயிற்று.
`தேவ மகள்` என்றே எண்ணாமல், `மானுட மகளே` என்னும் எண்ணம் உடன் நிகழ்தலின், மயக்கம் தோன்றிற்று.
`ஒரு வடிவாகிய இது அணங்கோ - அருந்தெய்வமாதுவோ` என முடிக்க.
ஐயக் கிளவிகளில் உயர்திணையுமாக விரவி எண்ணுவான் ஆகலின், முதற்கண் `இவள் ஒருத்தி` என்னாது ``ஓர் வடிவு இது`` என அஃறிணையாகக் கூறினான்; என்னை? திணை ஐயத்திற்கு `உருபு` முதலியன ஐயப் புலப் பொதுச் சொற்கள் ஆதலின்.

பண் :

பாடல் எண் : 29

வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு
.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள்களவியலில் உடன் போக்கின்கண் தலைவியைச் செவிலி பின் தேடிச் செல்லுங்கால் கண்டோரை வினவ, அவர்கள் செவிலிக்குக் கூறிய துறையாகச் செய்யப்பட்டது.
வடிக் கண்ணி - மாவடுவைப் போலும் கண்களையுடையவள்; தலைவி.
கடிக் கண்ணியான் - நறுமணம் கமழும் முடி மாலையை உடையவன்; தலைவன்.
பின் வந்த ``வடிக்கண்ணி`` என்பதை - `கண்ணி வடி` என மாற்றி, `மாலை போலும் வடுக்களையுடைய மாம் பொழில்` எனப் பொழிலுக்கு அடையாக்குக.
`பொழில் சேர் வைகை` என்க.
வைகையில் அமணரை மலைந்தவர் ஞானசம்பந்தர் `பூம் பொழிலே புக்குச் சேர்ந்திருப்பார்` - என உரைக்க.
இதற்கு `அவர்கள்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
எனவே, `மீளுதலே நீர் செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 30

குருந்தும் தரளமும் போல்வண்ண
வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம்
பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை
வாட்டினை வானகத்தே
திருந்துந் திரள்முகில் முந்திவந்
தேறுதிங் கட்கொழுந்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது பாடாண் தினைக் கைக்கிளைத் துறை.
செவிலி கூற்று.
குருந்து - குருத்து ஓலை.
இதுவும் வெண்மை நிறம் பற்றி நகைப் பிற்கு உவமையாயிற்று.
தரளம் முத்து, வண்ணம் - அழகு.
கொய்தல் மலருக்கு அடை.
யாவராலும் விரும்பிக் கொய்யப்படுகின்ற மலர் செந் தாமரை மலர்.
அதில் வீற்றிருப்பவள்.
இலக்குமி.
இங்கு வீர லக்குமியைக் கொள்க.
அமணரை வென்ற வெற்றி பற்றி ஞான சம்பந்தரை வீரலக்குமி பொருந்திய புயம் உடையவராகக் கூறினார்.
தாமரைக் கா - தாமரை மாலையைப் பெறுதற்காக.
`முகில்களுக்கு முந்தி வந்து எழுகின்ற திங்கட் கொழுந்து` என்க.
`கொழுந்து`` என்றத னால் இஃது அந்திப் பிறையாயிற்று.
எனவே, தலைவியின் பொருட்டுச் செவிலி பொழுதுகண்டு இரங்கிக் கூறியதாயிற்று, ``திங்கட் கொழுந்தே! மங்கையை வாட்டினை; (இது விசும்பில் இயங்கும் உனக்கு நன்றோ``) என முடிக்க.
ஈற்றில் வருவித்த குறிப்பெச்சம்.
இப் பாட்டின் இறுதி முதற்பாட்டில் சென்று மண்டலித்தல் காண்க.
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை முற்றிற்று.
சிற்பி