நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்


பண் :

பாடல் எண் : 1

அலையார்ந்த கடலுலகத்
தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம்
நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க்
கிடர்கெடுத்தல் காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனு
மொண்பதியு ளுதித்தனையே
செஞ்சடைவெண் மதியணிந்த
சிவனெந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள்
மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி யளவிறந்த
ஞானத்தை யமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த
போனகமுன் நுகர்ந்தனையே

தோடணிகா தினனென்றுந்
தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச்
செழுமறையின் அரும்பொருள
அந்திச்செம் மேனியனை
யடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காணஅர
னுவனாமென் றுரைத்தனையே
அராகம்
வளம்மலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை. (1)
கடல்படு விடமடை கறைமணி மிடறுடை
அடல்கரி யுரியனை யறிவுடை யளவினை. (2)
பெயர்த்தும் தாழிசை
கரும்பினுமிக் கினியபுகழ்க்
கண்ணுதல்விண் ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப்
பத்திமையை விளைத்தனையே. (1)
பன்மறையோர் செய்தொழிலும்
பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும்
ஒழிவின்றி நவின்றனையே. (2)
நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ (1)
தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ (2)
அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனுநீ (3)
தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ (4)
மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்
மறையவர்க் கொருவன் நீ(1)
மருவலர்க் குருமு நீ (2)
நிறைகுணத் தொருவன் நீ (3)
நிகரில்உத் தமனும் நீ(4)
இருசீர் ஓரடி அம்போதரங்கம் அரியை நீ (1) எளியை நீ(2)
அறவன் நீ (3) துறவன் நீ (4)
பெரியை நீ (5) உரியை நீ (6)
பிள்ளை நீ(7) வள்ளல் நீ (8)
தனிச் சொல்
என வாங்
சுரிதகம்
கருந்தமிழ் விரக நிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையில் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇ
கற்றொகு புரிசைக் காழியர் நாத
நற்றொகு சீர்த்தி ஞானசம் பந்த
நின்பெருங் கருணையை நீதியின்
அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பா நிலைக் கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம்` எனக் கலி இருவகைப்படும்.
``கொச்சகம்`` என்பதே முறை பிறழ்ந்து வருவதுதான்.
வெண்பா முறை பிறழ்ந்து வருவது `பாநிலைக் கொச்சகம்` எனவும், கலிப்பாவின் உறுப்புக்கள் முறை பிறழ்ந்து வருவது `மயங்கிசைக் கொச்சகம்` எனவும் சொல்லப்படும்.
இவை கடவுளரைப் பொருளாகக் கொண்டு வரின் `ஒருபோகு கலி` எனப் படும்.
கடவுளரைப் பொருளாகக் கொண்டு வரும் பாட்டுக்களை, `தேவ பாணி` - என வழங்குதல் அக்கால வழக்கம்.
அத்தேவ பாணி யில் ஒருவகை ஒருபோகு கலி.
தேவ பாணியாய் வந்து ஒருபோகாய் நின்ற இக்கலிப்பா உறுப்புப் பிறழ்ந்து வந்தமையால் மயங்கிசைக் கொச்சக் கலிப்பாவாகும்.
இப்பாட்டில் அராக உறுப்பில் உள்ள, ``தமிழிசை மறைவல்`` என்பதையும், இறுதி யுறுப்பாகிய சுரிதகத்து முதற்கண் உள்ள ``அருந் தமிழ் விரக`` என்பதையும், மற்றும், ``காழியர் நாத, ``ஞானசம்பந்த`` என்பவற்றையும் முதலிற் கொள்க.
``தமிழிசை.
.
.
மறை`` உம்மைத் தொகை.
வலன் - வல்லவன்.
தாழிசை - 1 திசை - திசைகளில் உள்ள தலங்கள்; ஆகுபெயர்.
தேவாரங்கட்கு, ``திருப்பதிகம்`` என்பதே பெயர் ஆதலால் அவற்றால் உணர்த்தப்படும் நெறியை, ``திருப்பதிக நெறி`` என்றார்.
இயற்றி - ஒழுங்காக விளக்கி.
சண்பை - சீகாழி.
`ஞானசம்பந்தர் நிலவுலகில் அவதாரம் செய்ததற்குக் காரணமே பிறவித் துன்பத்திற்கு அஞ்சுபவரது துன்பத்தை நீக்கக் கருதித்தான்`` என்பது இங்கு உணர்த்தப்பட்டது.
தாழிசை -2 நற்கண்ணி - நல்ல வகையாகப் பார்க்கும் கண்களை யுடையவள்.
நல்லவகை - அருளை வழங்குதல் மக்களுள் மகளிரைச் சிலரை அழகிய கண் உடைமை பற்றி, `நக்கண்ணையர்` - என்பது.
`சுலோசனா` - என்பது வடமொழி.
அமிர்து - உணவு; சோறு போனகம் - உண்டி.
தாழிசை -3 `உவன் அரன் ஆம்` - என மாற்றிக் கொள்க.
உவன்- நீர், ``எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு`` 1 என வினாவிய அவன்.
அராகம் - 1 ``மறை வல`` என்னும் குறிப்புப் பெயரெச்சத்திற்கு, ``முளரிநன் மலரணிதரு திருமுடியினை`` என்னும் தொடர்மொழி, `அந்தணன்` என ஒரு சொல் நீர்மைத்தாய் முடிபாயிற்று.
அராகம்-2: கறை - நஞ்சு.
அறி - அறிதல்.
முதனிலைத் தொழிற் பெயர்.
`உடைய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
அளவு - பெருமை.
பெயர்த்தும் தாழிசை-1: பரம்ப - பரவுதலால் பரவியது பலவிடத்தும் சென்று பாடியதால்.
தாழிசை2: பன்மறையோர்,வைதிக அந்தணர்களும், சிவ மறையோர்களும், செய் தொழில் - செயற் பாலனவாகிய தொழில்கள்.
`ஒழுக்கம்` என்றபடி.
அகப் புற நூல்களாகிய தந்திரங்களை விலக்குதற்கு, ``பரம சிவ ஆகமம்`` என்றார்.
இஃதே பற்றிச் சேக்கிழார், வேத நெறி தழைத்தோங்க
மிகுசைவத் துறை விளங்க
புனிதவாய் மலர்ந்தழுத.
புகலி திருஞான சம்பந்தர்
என்றார்.
ஒழிவின்றி - எஞ்சாமல். நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் - அணி தவம் - சிவ புண்ணியம்.
`அவர்களுக்கு அறிவிக்கும்` என ஒரு சொல் வருவிக்க.
வித்தகம் - சதுரப்பாடு; திறமை.
அமிர்தம் - அமிர்தம் போல்பவன்; அழியாதபடி காப்பாற்றினவன்.
நுதி - நுனி; முனை.
`தக` என்பது இறுதிநிலை தொக்கு, ``தகு`` என நின்றது.
முச்சீர் ஓரடி அம்போதரங்கம் - மருவலர் - பகைவர்.
சிவநெறிக்குப் பகைவரே பிள்ளையார்க்குப் பகைவர்.
உரும் - இடி.
உகரம் சந்தி.
இருசீர் ஓரடி அம்போதரங்கம் - அருமை புறநெறியாளர்க்கு.
அறவன் - அறத்தை அறிவுறுத்துபவன்.
துறவன் - பற்று அற்றவன்.
தகுதியால் பெரியன்.
மற்றும் ஆசிரியனாக உரியன்.
திருமேனியால் பிள்ளை.
உறுதிப் பொருள்களை வழங்குதலால் வள்ளல்.
தனிச்சொல்: எனக் கூறியவாறு சுரிதகம்.
விரகன் - வல்லவன்.
பரசுதும் - துதிப்போம்.
துழனி - ஆரவாரம்.
முகம் - முகப்பு; புறநகர்.
தண்டலை - சோலை.
பணை - வயற் கூட்டம்.
`துழனியையும், திரு முகத்துத் தண்டலையையும், பணையையும் தழீஇக்கற்கள் தொக்கு நிற்கப் பெறும் புரிசையை யுடைய காழி` - என்க.
தார் - மலர்களின் ஒழுங்கு.
புரிசை - மதில்.
`நீதியாக` என ஆக்கம் வருவிக்க.
இஃது ஆசிரியச் சுரிதகம்.
``தமிழ் விரக! காழியர் நாத! ஞானசம்பந்த! - (நீ) நின் கருணையை நின் அடியார்க்கு நீதியாக அருளுவோய் எனக் கருதி நின்னை (யாம்) ``உதித்தனை; நுகர்ந்தனை; உரைத்தனை; திருமுடி யினை; அளவினை; விளைத்தனை; நவின்றனை; பல பெருமைகளை யுடையவன் நீ`` எனக் கூறியவாற்றால் பரவுதும் - என வினை முடிவு செய்து, `எமக்கும் நின் கருணையை வழங்கியருள்` எனக் குறிப் பெச்சம் வருவித்து முடிக்க.
ஏகாரங்கள் தேற்றப் பொருளவாய்ச் சிறப்புணர்த்தி நின்றன.
கலிப்பாவில் முதற்கண் வரற்பாலதாய தரவு இதன் கண் வரவில்லை.
முதற்கண் தாழிசை வந்ததாயினும், அராகத்தின் நாற்சீர் ஈரடி அம்போத ரங்கம் வரவில்லை; அளவெண் சிற்றெண்களே வந்தன.
இப் பிறழ்ச்சி களால் இக்கலிப்பா மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆயிற்று.
ஆசிரியரைப் பொருளாகக் கொண்டமையால் ஒருபோகும் ஆயிற்று.

பண் :

பாடல் எண் : 2

எனவே இடர் அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன் அருளை நாடும் - புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்காழிக் கோ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புனல் மேய`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
எனவே - என்று வாயால் சொல்லவே.
ஏகாரம், பிரிநிலை ``சொல்லவே`` என்னும் செயவென் எச்சம் காரணப் பொருட்டு.
நனவு - விழிப்பு நிலை.
அது கால ஆகுபெயராய் அதுபொழுது நிகழும் உணர்வைக் குறித்தது.
விழிப்பு நிலையில் உணர்வு அரன் அருளை நாடுதல் உலகப் பற்று நீங்கினார்க்கல்லது இயலாது என்க.
கமல (தாமரை) மலர் மாலை அந்தணர்களுக்கு அடையாள மாலையாகும்.
கொங்கு - பொன்.
அமலம் - தூய்மை.

பண் :

பாடல் எண் : 3

கோலப் புலமணிச் சுந்தர
மாளிகைக் குந்தள வார்
ஏலப் பொழிலணி சண்பையர்
கோனை இருங்கடல் சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம்
பந்தன நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு
சேவடி போற்றுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோலம் - அழகு.
புல மணி - பல இடங்களிலும் வைத்து இழைக்கப்பட்ட இரத்தினங்கள்.
`பல மணி` என்பது பாட மாகக் கொள்ளலும் ஆம்.
குந்தளம் - கூந்தல்.
குந்தளப் பொழில், உவமத் தொகை.
`மாளிகைகட்குக் குந்தளம் போல விளங்குகின்ற பொழில்` என்க.
``ஞானசம்பந்தன்`` என்பது இங்கு `அவன்` என்னும் சுட்டுப் பெயர் அளவாய் நின்றது.
``சம்பந்தன`` என்பதில் ஈற்று அகரம் ஆறன் உருபு, `நற்றமிழே போல்வனவாக (எனது பேதைமையால்) நினைத்துக்கொண்டு` என இசையெச்சம் வருவிக்க.
`சேவடியை` என இரண்டன் உருபு விரிக்க.
`யானையைக் கோட்டைக் குறைத்தான்` என்பது போல, `சண்பையர் கோனைச் சேவடியைப் போற்றுவன்` என முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு வந்தது; முதற்கண் ஆறன் உருபு வருதல் சிறப்பு.
``கவிகொண்டு`` என்பது, ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
அணி புகழ் - அணிவிக்கப்படும் புகழ்.
``இறைவனைத் தமிழால் பாடிய ஆசிரியனை யானும் தமிழால் பாடி உவப்பிக்க நினைக்குங்கால், எனது புன்கவி களையும் யான் அவனது நன்கவிகள் போலக் கருதிக் கொள்ளும் ஓர் பேதமையை உடையேன் ஆயினேன்`` என்பதாம்.
இதனால், இக்கட்டளைக் கலித் துறை ஓராற்றால் இப்பிரபந்தத்தின் தொடக்கமாக அமைகின்றது.

பண் :

பாடல் எண் : 4

போற்று வார்இடர் பாற்றிய புனிதன்
பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார் புகழ் ஞானசம் பந்தன்
எம்பி ரான் இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனம் காவல் பிரிந்தென்
சிந்தை கொள்வ தும் செயச்தொழி லானால்
மாற்றம் நீர்எமக் கின் றுரை செய்தால்
வாசி யோ குற மாதுநல் லீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருட் களவியலில், தலைவி, தோழி இருவரும் ஒருங்கு இருக்கும் அமையம் நோக்கி, அவர்கள்முன் தலைவன் சென்று அவர்களுடைய ஊரை வினாதல், பேரை வினாதல் முதலியவற்றைச் செய்யும் துறையாகச் செய்யப்பட்டது.
`ஒருநாள், இருநாள் மூன்று நாள்` என இதுகாறும் பிறர் ஒருவரும் அறியாதே களவொழுக்கத்தில் ஒழுகிய தலைவன் பின்னும் அதனை நீட்டிக்கக் கருதினால், `இனி இது துணையின்றி முடியாது` என்னும் கருத்தினால் பாங்கன் துணையையும் பாங்கியின் துணையை யும் பெறுவான்.
அத்துணைகளால் நிகழும் கூட்டம் முறையே `பாங்கற் கூட்டம்` என்றும் பாங்கியிற் கூட்டம் என்றும் சொல்லப்படும்.
அவற்றுள் இது பாங்கியிற் கூட்டத்து, `இருவரும் உள்வழி அவன் வர உணர்தல்` - என்னும் பகுதியாம்.
பாற்றிய - போக்கிய.
இடர் போக்கியதைக் கொங்கு நாட்டில் தீப்பிணி வாராமல் தடுத்தது, தந்தையார்க்கு வேள்வி செய்யப் பொன் அளித்தது முதலியவற்றால் அறிக.
வார் புகழ் - நீண்ட புகழ்.
`ஆர் புகழ்` எனலும் ஆம்.
``எம்பிரான் சம்பந்தன்`` - என்பது சுந்தரர் திருமொழி.
1 `எம்பிரானது சுருதி` எனவும், `அச்சுருதியை உடைய கிரி` (மலை) எனவும் கொள்க.
வாய், ஏழன் உருபு.
சேறு - இனிமை; தினையின் இனிமை.
காவல் புரிதலை இங்குக் கிளிகடியும் பாடலால் கவண் எறிதலாகக் கொள்க.
``புனம் காத்தல் உம் தொழிலாக எனக்குத் தெரியவில்லை; இனிய தோற்றத்தாலும், குரலாலும் என் உள்ளத்தைக் கவர்தலே உமது தொழிலாக எனக்குத் தெரிகின்றது`` என்பான்.
``சிந்தை கொள்வது உம் செய்தொழில் ஆனால்`` என்றான்.
``சிந்தை கொள்வது உம் செய்தொழில் ஆனால்`` என்றான்.
``ஆனால்`` என்பது தெளிவின்கண் வந்தது.
மாற்றம் - மறுமொழி.
`மறுமாற்றம்` என்றும் சொல்லப்படும்.
`யான் வினாய வினாவிற்கு உரிய விடை` என்பது பொருள்.
வாசி - மதிப்புக் குறைவு.
குற மாது நல்லீர் - பிறப் பால் குற மகளிராய் உள்ள, அழகுடையவர்களே.
இதனை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 5

நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்ப நனி
பனிமதி அணைந்த பொழில்சூழ்
பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
புனிதகுணன் எந்தம் இறைவன்
பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன் மிகு
பரசமய வென்றி அரிதன்
சலமலி தரும்கமல சரண் நினைவன் என்றனது
தகுவினைகள் பொன்றும் வகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புவனி - புவனம்; உலகம் நிறை செய் - நிறைதலைச் செய்கின்ற.
அஃதாவது, நிறைந்த, புகழ், இன்பம், பொழில், மதில் இவை அனைத்தும் புகலிக்கு அடை.
பனி - குளிர்ச்சி.
மதி - சந்திரன்.
இது பொழிலுக்கு அடை.
விதம் பெருகு புனித குணன் - வகைகள் பலவாகிய தூய பண்புகளை உடையவன்.
இறைவன் - தலைவன்.
பல மலி - பலவாக நிறைந்த.
`பலம் மலி` எனப் பிரித்து, `பயன் நிறைந்த` என்றும் பொருள் கொள்ளலாம்.
`தமிழின் விடங்கன், வடகலை விடங்கன்` எனத் தனித்தனி இயைக்க.
`தமிழின்`` என்பதில் `இன்` சாரியை நிற்க, இரண்டன் உருபு தொக்கது.
விடங்கன் - அழகன்.
பரசமய அரி; (கோளரி - சிங்கம்) வென்றி - வெற்றியை உடைய.
`தன் சரண்` என இயையும்.
சரண் - திருவடி.
சலம் மலி - நீரில் நிறையப் பூக்கின்ற.
``கமல சரண்`` என்னும் உவமத் தொகை வட நூல் முடிபை ஏற்றது.
``புகலி அதிபதி`` முதலாகச் சொல்லப்பட்ட அவனது சரண் களை எனது வினைகள் பொன்றும் வகை நினைவன்` என வினை முடிக்க.
தகுதி, இங்குத் தனக்கே உரிய ஆதல்.
பொன்றுதல் - அழிதல்.
``வகையால்`` என்பதில் தொக்கு நின்ற மூன்றன் உருபு.
`இது பயனாக` என்னும் முதனிலைப் பொருளில் வந்தது.

பண் :

பாடல் எண் : 6

வகைதகு முத்தமிழ் ஆகரன் மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரணம் மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே மணி
நகைஎழி லிற்குற மா துன தருமை நினைக்கிலள் நீ இவள்
நசையின் முழுப்பழி ஆதல்முன் நணுகல் இனிக்கிரி வாணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அகப் பொருள் களவியலில், தலைவனை வரைவு கடாவும் தோழி அதனை நேர் முறையிற் கூறாது, இரவு வருவானை, பகல் வருக எனவும், பகல் வருவானை, `இரவு வருக` எனவும், `ஒரு பொழுதிலும் இங்கு வாரற்க` எனவும் கூறுதற்காக இஃது, ஆறின்னாமை கூறி இரவுக் குறி விலக்கலாகச் செய்யப்பட்டது.
``கிரி வாணனே`` என்பதை, ``கேசரி`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
கிரி வாணன் - மலை வாழ்நன்; குறிஞ்சி - நிலத் தலைவன்.
ஆகரன் - இருப்பிடம் ஆனவன்.
திப்பிய வாசகன் - தெய்வத் தன்மை வாய்ந்த மொழியை உடையவன்.
அஃதாவது, நிறைமொழி ஐயன்.
``வலகலை வித்தகன்`` என்பதை, `கலை வல வித்தகன்` என மாற்றிக் கொள்க.
`வான வில்லும், மதியும் அணைகின்ற மாளிகை, பொற்குவைகளை யுடைய மாளிகை` என்க.
திகை - திசை.
அடுக்குப் பன்மை பற்றி வந்தது.
மட்டு அலர் - தேனை உடைய மலர்களை உடைய (பொழில்) திரு - திருவருள்.
விப்ர சிகாமணி - அந்தணர்களுக்குத் தலைமணி போன்றவன்.
மலயத் தமிழ் - பொதிய மலையில் தோன்றிய தமிழ்.
தமிழ்க் கேசரி - தமிழைப் பாட வல்ல சிங்கம்.
அரனை, ``அரசு`` என்றது, கேசரி போல்வானை, ``கேசரி`` என்றதும் பான்மை வழக்குக்கள் `வாரணமும், வருடைக் குலமும், யாளிகளும் விரவுகின்ற நீள்நெறி வாரணம் - யானை.
வருடைக் குலம்.
மலையாடுகளின் கூட்டம்.
வருடை, இங்குச் சரபம் ஆகாது, அவ் இனம் கூட்டம் ஆதல் இன்மையால்.
வினை துயர் - உம்மைத் தொகை.
வினை - கொலை வினை.
`விளைதுயர்` என பாடம் கொள்ளுதலுமாம்.
``நெறி - வழி ``நெறி துயர மொய்த்துள`` என, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது ஏகாரம், தேற்றம் மணி - முத்து மணி.
எழிலின் - அழகினையுடைய.
``குறமாது`` என்றது தலைவியை.
``உனது அருமை`` என்பதற்கு, `உனது கூட்டத்தினது அருமை` என உரைக்க.
`அதனை நினைக்கிலன்` எனவே, `வருதற்கண் உள்ள அருமையே, அஃதாவது இடர்ப்பாட்டினையே நினைக்கின்றாள்` என்பதாம்.
நசை - விருப்பம்.
நைடயின் இனி நணுகல் - விருப்பம் காரணமாக வருதலை இனித் தவிர்வாயாக (சிறிது பழி - அம்பல்) முழுப் பழி - அவர் முழுப் பழி ஆதல் முன் - (அம்பல்) அலர் ஆதற்கு முன்பே.
இவ்வாறு தோழி கூறியதற்குப் பயன், தலைவன் களவொழுக்கத்தை ஒழிந்து வரைவான் ஆதல்.

பண் :

பாடல் எண் : 7

வாணில வும் புனலும் பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்
சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
திருவா ளனையெழி லருகா சனிதனை
மருவா தவர்கிளைபோல்
நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்
நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்
கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேனறிகிலேனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப் பொருள் உடன் போக்கில் செவிலி புலம்பல் துறையாகச் செய்யப்பட்டது.
வாள் நிலவு - ஒளியை உடைய திங்கள் (பிறை).
கருணா ஆகரன் - அருளுக்கு இருப்பிடமானவன்.
`உமையொடும் கூடிய இவன்` என ஒரு சொல் வருவிக்க.
``ஆவான்`` என்பதற்கு, `நீவிர் வினாவியவன் ஆவான்` என உரைக்க.
உரை செய்யது தந்தையார்க்கு.
திருவாளன் - திருவருள் கைவரப் பெற்றவன்.
அருக அசனி - சமணர்க்கு இடியை ஒத்தவன்.
கிளை - சுற்றம்.
`நாளும் நிலவும் பதி` என முற்றும்மை விரிக்க.
ஓகாரம், சிறப்பு, நசை - விருப்பம், இரக்கம்.
``நசை தீர் வேடுவர், கொலை புரி வேடுவர்` எனத் தனித் தனி இயைக்க, ``பயில் தரு`` என்பதில் தரு, துணைவினை.
கான் அதர் - காட்டு வழி; பாலை நில வழி.
கேள் - கேளாக; நட்பாக.
பாவை - பதுமை.
ஒடு, எண் ஒடு.
`இது கிளி, ஆயம், யாய்` என்பவற் றோடும் இயைந்தது.
ஆயம் - தோழியர் கூட்டம்.
யாய் - நற்றாய்.
`கிளி முதலாக யாய் ஈறாக உள்ளவர்களையும், எனயும் ஒழிய` என்க.
`பெற்ற தாயினும் வளர்த்ததாய் மறக்கற்பாளலல்லள்` என்பாள், ``எனையும்`` என வேறு பிரித்துக் கூறினாள்.
`ஒழியப் பண்ணி` என ஒரு சொல் வருவிக்க.
கிறி - வஞ்சனை; தலைவனை உட்கொண்டு, ``கிறியால் எனது ஒரு மகள் போய்`` என்றாள்.
போய் - போயதனால்.
``எனது மகள்`` என உயர்திணை முறைக் கிழமைக்கண் நான்காம் உருபு வாராது, ஆறாம் உருபு வந்தது கால வழக்கு.
கெடுவேன், இரக்க குறிப்பு இடைச்சொல்.
`இதனை அறிகிலேன்` என வேறு வைத்து உரைக்க.
`முன்பு அவள் செய்த குறிகளை உற்று அறியேன் ஆயினேன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 8

அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
திருஞான சம்பந்த னணிநீடு திண்குன்றில்
நெறியால மண்துன்றி முனைநாள்சி னங்கொண்டு
நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க
வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற
வெகுளாத நஞ்சிந்தை விறலா னுளன்பண்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருட் களவியலில், தலைவி தலைவனை எய்தப் பெறாமை எவ்வாற்றாலோ நிகழ்ந்தமையின் வேறுபட, செவிலி, `இவள் வேறுபடக் காரணம் என்னை` என வினாவிய வழி அவட்குத் தோழி களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றதுறையாகச் செய்யப்பட்டது.
அறிவாகி - ஞானமாகி.
இன்பம் செய் - வீட்டின்பத்தைத் தருகின்ற தமிழ்.
ஞானசம்பந்தரது தமிழ்ப் பாடல்கள் `தமிழால்` என முன்றாவது விரிக்க.
அமண் - சமண்; இது குழூஉப் பெயர்.
`திருஞான சம்பந்தனது குன்று` என்க.
நெறி ஆல - வழியில் உள்ளார் ஒலம் இட.
மண் - தூசு.
`துன்றுவித்து` என்பது பிறவினை விகுதி.
தொகுக்கப்பட்டு, ``துன்றி`` என வந்தது.
துன்று வித்தல் - அடரச் செய்தல்.
புனம் தின்று - காட்டை அழித்துக் கொண்டு `நின் மகள்மேல்` என்க.
தூங்க வாரணம் - உயரமான யானை.
வெறி- நாற்றம் ``கத வாரணம்`` என்பதில் கதம், இன அடை.
``வெகுளாத`` என்பது, `விரும்புகின்ற` என அதன் மறு தலைப் பொருளைக் குறித்தது.
`விரும்புகின்ற நம் சிந்தை` என்பதை, நம் சிந்தை விரும்புகின்ற` என மாற்றிக் கொள்க.
விறலான் - யானையை வென்ற வெற்றியை உடையவன்.
``நம் சித்தை விரும்பு கின்ற` என்பதனால், ``இனி அவனே நின் மகட்குத் தலைவனாக விரும்பத் தக்கவன்`` என்பதையும் தோழி உடம்பொடு புணர்த்துக் கூறினாள்.
``பண்டே உளன்`` என்றதனால், `அவ்விருவரது நட்பு உறுதியாய் விட்ட ஒன்று` எனக் குறித்தாள்.

பண் :

பாடல் எண் : 9

பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்
பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்
கொண்டதர னும்பர்பர னெங்கள்பெரு மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகி லின்பம்
கண்டதரு கந்தர்குல மொன்றிமுழு துங்ககழுவிலேறக்
கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது அன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்சி காமணி பிரானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மஞ்சு அணவுகின்ற`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
மஞ்சு - மேகம்.
அணவுகின்ற - பொருந்துகின்ற.
பிரான் - தலைவன்.
``வேணுபுர நாதனும், வேதியர் சிகாமணியும் ஆகிய பிரான், அமுது செய்தது.
.
.
அருள்மேவு சிவஞானம்; கொண்டது சிவிகை.
தாளம்; தமிழால் தவக் குலத்தவர்களுக்கு இன்பம் கொடுத்தது எங்கள் பெருமான் அருள் படைத்து; கண்டது அருகந்தர் குலம் கழுவில் ஏற; கறுத்தது வினைப் பயன் விண்டது மனத்தில் இறை காதல் அன்றிய வஞ்சகரை`` எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
``செய்தது, கொண்டது, கறுத்தது வினையாலணையும் பெயர்கள்.
இவை எழுவாயாய் நிற்க, அத்தொழில்களுக்கு உரிய செயப்படுபொருள்கள் பெயர்ப் பயனிலையாய் நின்றன.
இது செயப்படு பொருளை வினைமுதல் போலக் கூறுவதொரு வழக்காம்.
கறுத்தது - வெகுண்டது; வெகுண்டு நீக்கியது.
செய்யுளுக்கு ஏற்ப, ``கொடுத்தல்`` எனக் கூறினாரேனும் அதனையும் ஏனையவற்றோடு இயைய, `கொடுத்தது` என்றே கொள்க.
``படைத்து ஏற`` என்னும் வினையெச்சப் பயனிலையைக் கொண்டன.
``தமிழை`` என்றது, `தமிழால்` என உருபுமயக்கம்.
``விண்டது`` என்னும் தொழிற் பெயர்.
எழுவாய், ``வஞ்சகரை`` என்னும் உருபேற்ற பயனிலையைக் கொண்டது.
``விண்டதுவும்`` என்னும் உம்மை சிறப்பு.
`அன்றிய` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று.
அன்றிய - நீங்கிய.
``காதல் அது`` என்னும் அது, பகுதிப் பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 10

பிரானை மெய்த்திரு ஞானசம்
பந்தனை மறையவர் பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர்
நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினி லவனருள்
நினைவொடு தளர்வுறு தமியேனுக்
கிராவி னைக்கொடு வந்ததிவ்
அந்திமற் றினி விடி வறியேனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கவுணியர் தலைவர்பால் காதல் கொண்டாள் ஒருத்தி கூற்றாக - பாடாண் கைக்கிளையாகச் செய்யப் பட்டது.
அக்கைக்கிளையுள் இது கண்படை பெறாது கங்குலை நோதல் `கழலிணையை` என இரண்டன் உருபு விரித்து, மேல் (பாட்டு-3) ``சண்பையர் கோனச் சேவடி போற்றுவன்`` என்றது போலக் கொள்க.
அந்தி - எற்பாட்டுப் பொழுது.
`சிவஞானமே உண்மை மெய்ஞ் ஞானம்` என்றற்கு.
``மெய்த் திரு ஞானம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 11

ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை
வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரி சுண்டே
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன்
வண்களி யேனெளி யேனோ
சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்
தும்புரு வாலியை வென்று நிலத்திடை
நின்று துலக்குகிறாரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய `களி` என்பது பற்றி வந்தது இப்பாட்டு.
களி - களிப்பு; உணர்வழிந்த மயக்கம்.
கள்ளை உண்டு இவ்வாறான மயக்கத்தை எய்தினோன் கூற்றாக வருவதே `களி` என்னும் உறுப்பு.
அது பொருளுடைக் கூற்றாகவே அமைதல் உண்டு.
ஆயினும் இங்கு இது கள்ளுண்டோன் பிதற்றும் பிதற்றுரையாகவே அமைந்துள்ளது.
அதனால் இப்பாட்டில், ``ஆன புகழ்ப் பயில்.
.
.
.
வண் களியேன் எளியேனோ`` என்னும் பகுதி தவிர, ஏனைய பகுதி முழுதும் பொருள் படாப் பிதற்றுரைகளாம்.
``அத்தகு`` என்பதில் அகரம் பண்டறி சுட்டாய், இயல்பாய் உள்ள சிறப்பினைச் சுட்டிற்று.
மைபோலும் கரிய மேகம்.

பண் :

பாடல் எண் : 12

ஆர்மலி புகலி நாத
னருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர
மணந்தவர் தணந்து போன
தேரத ரழிய லும்மைச்
செய்பிழை யெம்ம தில்லை
கார்திரை கஞலி மோதிக்
கரைபொருங் கடலி னீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியலில் ஒருவழித் தணந்த தலைமகன் வரவு நீட்டித்தமையால் தலைவி ஆற்றாது அஃறிணைப் பொருள்களை நோக்கிக் கூறும் காமம் மிக்க கழிபடர் கிளவிகளில் கடலை நோக்கிக் கூறியது.
ஆர் - அழகு.
புகலி நாதன், ஆளுடைய பிள்ளையார்.
வார் - கச்சு.
பயலை - பசலை தேர் அதர் - தேர் சென்ற வழி; என்றது அவ்வழியைக் காட்டும் சக்கரப் பதிவுப் பள்ளத்தை.
அழியல் - அழிக்காதே.
இது பன்மை யொருமை மயக்கம்.
கடலுக்கு மக்கள் செய்யும் பிழை அவற்றில் உள்ள முத்து முதலிய விலையுள்ள பொருள்களைக் கவர்ந்து கொள்ளுதல்.
``உம்மை`` என்னும் இரண்டன் உருபை, `உமக்கு` என நான்கன் உருபாகத் திரிக்க.
`எமது` என்பது, ``எம்மது`` என விரித்தல் பெற்றது.
கஞலி - நெருங்கி.

பண் :

பாடல் எண் : 13

கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை யருளாமல்
திடமாகி லணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி யெழில்வீதி வருகாத லொழியானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியல் பாங்கியிற் கூட்டத்துள் பாங்கியை இரந்து அவள் குறை நேராமையால் `மடல் ஏறுவன்` என அச்சுறுத்தும் `மடல் மா கூறுதல்` என்னும் துறையாகச் செய்யப்பட்டது.
மடல் மா - பனை மடலால் செய்யப்பட்ட குதிரை.
தலைவன் ஒருவன் தன்னால் காதலிக்கப்பட்ட தலைவி யொருத்தியை எவ்வாற்றானும் பெற இயலாத நிலை தோன்றினால் அவன் உடலில் சாம்பலை நிறைய பூசிக்கொண்டு எருக்கம் பூ மாலை அணிந்து கொண்டு, தலைவியின் உருவம் எழுதப்பட்ட படத்துடன் பனை மடலால் செய்யப்பட்ட குதிரைமேல் ஏறி, ``இவள் மேல் யான் வைத்த காதல்` கரை இறந்தமையால் யான் இறக்கின்றேன்`` என்று சொல்லிப் பறையை அடித்துக் கொண்டு தெருக்களில் எல்லாம் சுற்றி வருதல் மடல் ஏறுதல் ஆகும்.
இவ்வாறு ஒருவன் மடல் ஏறி வருவானாயின், `காதல் மிகுதியால் அவன் இறந்து விடுவனா` என்பது பல சோதனை களால் அறியப்படுமாயின் அத்தலைவியை ஊரார் வலிந்து அவனுக்கு மணம் செய்வித்தல் அக்காலத்தில் உலக நீதியாய் இருந்தது.
அதனால், தனக்குக் குறை நேராத தோழியை, ``நின் நிலைமை இதுவாயின், மடல் ஏறுவது தவிர எனக்கு வேறு வழியில்லை`` எனத் தலைவன் கூறி அச்சுறுத்துவான் மடல் ஏறிய தலைவனை ஒருத்தி மணப்பதும், அதற்குப் பெற்றோர், தமையன்மார் இசைவதும் மானம் போனபின் செய்யும் செய்யும் செயலாகவும் அக்காலத்தில் கருதப்பட்டது.
புவி ஏறு கவி நீரர் - நிலவுலகத்தில் மேம்பட்டு விளங்குகின்ற கவிகளைப் பாடும் தன்மையுடைய புலவர்கள்.
`பெருமான்றன் காழி` என இயையும்.
தடம் - தடாகங்கள்.
மாடு - பல பக்கங்கள்.
`மாடு தடம் மிகு காழி` என இயைக்க.
`காழித் தகு பேதை` - என்பதில் சந்தி ஒற்றுச் சந்தத்தின் பொருட்டுத் தொகுக்கப்பட்டது.
பேதை - தலைவி.
அருளாமை - இரங்காமை.
திடம் - திண்ணம்.
நீறு - சாம்பல்.
ஆடி - முழுகி.
வரு காதல் - வர விரும்பும் விருப்பம்.

பண் :

பாடல் எண் : 14

ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்
உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
எழிலா ருங்கவு ணியர் தீ பன்திகழ்
இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
புலமே துன்றின கலைமா னொன்றின
பழிமேல் கொண்டது நுமர்தே ரன்பொடும்
அருகே வந்தது அதுகாண் மங்கையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப்பொருள் கற்பியலில் பருவம் குறித்துப் பிரிந்து சென்ற தலைவன் வாராது நீட்டிக்கப் பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகளுக்குத் தோழி தலைவன் குறித்த பருவத்தே வந்தமை கூறிய துறையாகச் செய்யப்பட்டது.
மன் - தலைவன்.
உயர் பார் - உயர்ந்ததாகிய வீட்டுலகம்.
துன்றிய ஞானம் - அதனை அடைதற்கு ஏதுவாய் உள்ள உணர்வு.
``செங்கரன்`` என்பதற்கு, `தாளம் ஏந்திய சிவந்த கைகளை உடையவன்` என உரைத்து, நிகழ்வான் - இனிது வளர்தற் பொருட்டு (க் குயின் துளி பொழியா நின்றன).
குயின் - மேகம்.
`மேகம் பொய்யாது பொழிதல் நல்லவர் வாழ்தற் பொருட்டு` என்பர் ஆதலின், `ஞானன் நிகழ்வான் குயின் துளி பொழியா நின்றன` என்றார்.
தார்க் கொன்றைகள் - மாலை போலப் பூக்கின்ற கொன்றை மரங்கள் - இவை கார்க் கொன்றை.
புலம் - நிலம்; முல்லை நிலம் `புலத்தின் கண்` என ஏழாவது விரிக்க.
துன்றின - பூக்கள் நெருங்கப் பெற்றன.
`கலை மான்கள் - பிணை மான்களோடு ஒன்றின` என்க.
`இவையெல்லாம் நிகழ்ந்தும் குறித்த வண்ணம் வந்திலது` என்னும் பழியைக் கொண்டதாகிய நமரது (நம் தலைவரது) தேர் அன்பொடும் அருகே வந்தது; மங்கையே! அது காண் என்க.
``வந்தது`` என்பதன் ஈற்றுக் குற்றிய லுகரம் முற்றிய லுகரம் ஆயது செய்யுளியல்பு.

பண் :

பாடல் எண் : 15

மங்கை யிடத்தர னைக்கவி
நீரெதி ரோட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை
நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம் மேவிய
சூல்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி யேரிடை
யாள்குடி கொண்டன ளெம்மனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியலில் பாங்கற் கூட்டத்தில் தன்னை உற்றது வினாவிய பாங்கனுக்குத் தலைவன் ``உற்றது உரைத்தல்`` என்னும் துறையாகச் செய்யப்பட்டது.
`மங்கையை இடத்துக் கொண்ட அரன்` என்க.
``அருள் செய்து`` என்பது, `பாடி` என்னும் பொருட்டாய், ``அரனை`` என விரிந் தும், ``கவி`` என்பதில் தொக்கும் நின்ற இரண்டன் உருபுகட்கு முடிபாயிற்று.
மதித்து - நிச்சயித்து நீர் எதிர் ஓடக் கவி அருள் செய்தது சமணரொடு செய் வாதத்தில்.
`அருள் செய் சைவ சிகாமணி` என இயைக்க.
``கொடியேர்`` என்பதில் ஏர், உவம உருபு.

பண் :

பாடல் எண் : 16

மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
மணிநிறமு மிவள் செங்கை வளையுங் கொண்ட
தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழுங் கீர்த்திச்
சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
நன்னுதலா ளயர்கின்றாள் நடுவே நின்றும்
இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
என்செயநீ ரலர்தூற்றி எழுகின் றீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் பாடாண் கைக்கிளையில் தலைவியை ஆற்றுவிக்கும் தோழி அவர் அறிவித்தலை அயற் பெண்டிரை நோக்கிக் கூறும் முன்னிலைப் புறமொழியாகச் செய்யப்பட்டது.
``இவள் என்பதை முதலிற் கொள்க.
மனம், நிறை.
(நிலை கலங்காமை) கலை (உடை) மணி நிறம் (அழகிய நிறம்) கை வளை இவைகளைக் கவர்ந் தவன் சண்பையர் கோன்.
சண்பை நகர் தனத்தை (கைப் பொருளை)க் கொண்ட பெருஞ் செல்வத்தையும்.
கீர்த்தியையும் உடையது.
சம்பந்தன் பொருட்டாக.
நனம் கொண்டு - அகலம் பொருந்தி.
நடுவே- சண்பையர் கோனுக்கும் இவளுக்கும் இடையிலே.
``நின்றும்`` என்னும் உம்மை சிறப்பு.
இனம் - கூட்டம் ``மடவீர்`` என்பதை, ``அயர் கின்றாள்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
எழுகின்றீர் - திரிகின்றீர்கள்.

பண் :

பாடல் எண் : 17

எழுகுல வெற்பிவை மிடறி லடக்குவன்
எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
முழுது மொளித்திர வியையிந்நிலத்திடை
முடுகுவ னிப்பொழு திவையல விச்சைகள்
கழுமல நற்பதி யதிப தமிழ்க்கடல்
கவுணிய நற்குல திலக னிணைக்கழல்
தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு
துயர்வரு விப்பனி தரியதொர் விச்சையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பிரதம்` - என்பது கலம்பக உறுப்புக்களில் ஒன்று.
இது `சித்து` என்றும் சொல்லப்படும்.
இஃது, `உலகர் வியக்கத் தக்க அற்புதங்களைச் செய்து காட்ட வல்லோம்` எனச் சாலவித்தை காட்டுவோர் கூறும் கூற்றாகச் செய்யப்படும்.
நிலத்தில் ஏழு தீவுகளைச் சூழ்ந்துள்ள ஏழு மலைகள் `குலாசலம்` என்று சொல்லப்படும்.
நாவலந் தீவின் எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் அவ்வாறு சொல்லப்படும்.
மிடறு - கழுத்து; தொண்டை.
குளறுதல் - குழப்பிச் சேறாக்குதல்.
இரவி சூரியன்.
முடுகுவன் - விரைந்து வீழச் செய்வேன்.
விச்சைகள் - வித்தைகள்.
``ஏழு குலமலைகளையும் என் தொண்டைக்குள் அடக்கு வேன்; கடல் நீரைக் கலக்கிச் சேறாக்கிக் குடித்து, அதன்பின் கடலில் தோன்றி மறையும் சூரியனைப் பூமியிலே (கிழக்கும், மேற்குமாக) உலாவச் செய்வேன்; இப்பொழுது இவைகளை ஒரு திறமையாக நான் குறிப்பிடவில்லை.
கவுணியர் திலகன் இணைக் கழலைத் தொழுது துதித்த பின்பும் ஒருவருக்குத் துன்பம் வருவிப்பேன்.
நான் இதுதான் குறிப்பிட விரும்பிய அரிய வித்தை.
இவ்வாறு சொல்லப்படுவதை உண்மையோடு பொருந்திய சிலேடை யாகச் செய்வது உண்டு.
இங்கு அவ்வாறில்லை.
`மிடற்றில்` என இரட்டி வந்து ஒற்றுச் சந்தம் பற்றித் தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் நீதன்
கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முருக்கிய தமிழ் - வாதில் வென்று அழித்த தமிழ்ப் பாடல்.
வியல் இயல் - இடம் அகன்ற இயல்பை உடைய.
நீதன் - நீதியை உடையவன்.
இயல் - அழகு.

பண் :

பாடல் எண் : 19

மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை யாலைதுன் றியகாழி
நாதனந் தணர்கோனெ னானைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
நீதியன் றினபேசும் யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை யோசையுங் கரைசேர
மோதுதெண் திரைசேவல் சேருமன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பாடாண் கைக்கிளையுள் தலைவி இரவு நீடு பருவரலின் வகையாகிய திங்கள் முதலிய இனியனவற்றை இன்னாதனவாகக் கண்டு நோதல் துறையாகச் செய்யப்பட்டது.
மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற.
பூகம் - பாக்டு மரம்.
நாகம் - புன்னை மரம்.
சூதம் - மாமரம்.
பூகம் முதலிய நான்கும் உம்மைத் தொகை `இவைகளையுடைய சோலை` என்க.
வேரி - தேன்.
ஆலை - கரும்பு ஆலை.
துன்றிய - நெருங்கிய.
தார் - மாலை.
``அயர் வோனை`` என்னும் இரண்டன் உருபை நான்கன் உருபாகத் திரிக்க.
நீதி அன்றின - நியாயத்தோடு மாறுபட்ட சொற்கள் அவை தக்க தலைவனைக் காணின் கன்னியர்க்கு மனம் செல்லும் என்பதை அழித்துச் சொல்லும் சொற்கள்.
யாய் - என் தாய்.
இந்து - திங்கள்.
வாசம் - நறுமணம்.
திரை - கடல் அலை.
சேவல் சேரும் அன்றில் - அது, சேவலை அழைக்கும் குரலைக் குறித்தது.
ஆகுபெயர்.
வேய் - வேய்ங்குழல்.
மாலையில் இஃது ஆயரால் ஊதப்படுவது.
கூடி - இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து.
``திரை, வாடை`` என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க.
தென்றலையும் வாடையையும் ஒருங்கு கூறியது, `தென்றற் காலத்தில் தென்றலும் பகையாகின்றது; வாடைக் காலத்தில் வாடையும் பகையாகின்றது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 20

வன்பகை யாமக் குண்டரை வென்றோய்
மாமலர் வாளிப் பொருமத வேளைத்
தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்
நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்
டன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம்
அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பாடாண் கைக்கிளையுள் தலைவிக் குரிய தூதாகிச் சென்ற தோழி கூறும் `தூதிடையாடல்` என்னும் துறை யாகச் செய்யப்பட்டது.
``நின்புகழ் பாடி`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``நின்புகழ் பாடி.
.
.
.
மெய்ச் சிந்தையர்`` எனப் பட்டார் ஞானசம்பந்தர்க்கு அன்பராய நல்லோர்.
`இன்பாம் கோ` என இயைத்து, `அவர் இன்புறுதற்குத் துணையாம் தலைவனே` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 21

கோவின்திரு முக மீதொடு வருதூதுவ ஈரக்
குளிர்பைம்பொழில் வள நாடெழில் நிதியம்பரி சம்மீ
மாவீரிய ரிவர் தங்கையென் மகுடன்திற ம் அமண
மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்
பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்
தூவேரியை மடுமின் துடி யடிமின்படை யெழுமின்
தொகுசேனையு மவனும்பட மலையும்பரி சினியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மறம்` என்பதும் கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.
இது தம்மை மதியாது தம் மகளை எளிதில் தனக்குக் கொடுக்கும்படி ஓலை கொடுத்து விடுத்த தூதனைக் கண்டு மறவர் மறக் குடியில் பிறந்தோர் சினந்து கூறும் கூற்றாகச் செய்யப்படும்.
`காஞ்சி` என்னும் புறத் திணையுள் இது `மகட்பாற் காஞ்சி` என்னும் துறையாம்.
மறக் குடியாவது வழிவழியாகப் படைவீரராகும் தொழிலையுடைய குடி.
கோவின் திருமுகம் - அரசன் விடுத்த ஓலை.
மீதொடு வரு தூதுவ- அஃது உன தலை மேற் காணப்பட வருகின்ற தூதனே.
இவர் மா வீரியர் - இங்குள்ளார் பெரிய வீரர்கள் இவர் தங்கை பரிசம் - இவர்களுக்குத் தங்கையாகிய இவளுக்குப் பரிசமாவன (பரிசம் - மண் கொள்வார் அதன் பொருட்டு மணப் பெண் வீட்டாருக்குத் தரும் பொருள்) ஈரக் குளிர் பைம்பொழில்களை யுடைய வளநாடும் எழில் விளங்கும் நீதிக் குவையும் ஆகும்.
ஈ - இவைகளை நீ இப்பொழுதே கொடு.
மகுடன் திறமண அம் என் - முடியரசனாகிய உம் வேந்தன் கூற்றில் நிகழ்த்தும் மணவினையின் அழகு என்னே! (ஓர் ஓயும், தூதுவனுந் தானே?) பழிபச் சத அவ் அரசன் மற வெங்குலம் அறிகின்றிலன் - பழியை நிலையாகப் பெற்றுள்ள அரசன், `மறவர் களது கொடிய குலம் எத்தன்மையது` என்பதை அறிகின்றிலன்.
``(இவ் வோலை) தமிழ் விரகனும், அருகாசனியுமாகிய சம்பந்தனது ஆணை ஓலை அன்று என்பது தெளிவாதலால், நமர்காள்! தூ ஏரியை மடுமின் - இப்பொழுதே இவ்வரசனது நாட்டில் உள்ள தூய நீர்தேங்கும் ஏரிகளைத் தூர்மின்! துடி (பறைகளை அடிமின்! படை எழுமின்! தொகு சேனையும், அவ் அரசனும் ஒரு சேர அழியும் படி போர் புரியும் நிலைமைதான் இனி.
(வேறு எதுவும் இல்லை.
) என உரைக்க.
``பழி அச்சத அரசன்`` என்பதில் அகரச் சுட்டினை, ``அரசன்`` என்பதனோடு புணர்க்க.
சதம் - நிலைத் திருத்தல் `பழி நிலைபெற்ற அவ் அரசன்`` என்க.

பண் :

பாடல் எண் : 22

இனியின் றொழிமினிவ் வெறியும் மறியடு
தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர்
நசையுண் டதுநரை முதுபெண்டீர்
புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்
விரகன் புயமுறு மரவிந்தம்
பனிமென் குழலியை யணிமின் துயரொடு
மயலுங் கெடுவது சரதம்மே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பாடாண் திணைக் கைக்கிளையுள் தலைவியது ஆற்றாமையால் தோன்றிய வேறுபாட்டினைச் செவிலி யும், நற்றாயும் தெய்வத்தான் ஆயதாகக் கருதி வேலனை வருவித்து வெறியாடுவிக்கத் தோழி உண்மை உரைப்பாளாய் வெறிவிலக்கிய துறையாகச் செய்யப்பட்டது.
``நரை முது பெண்டீர்`` என்பதை முதலிற் கொள்க.
வெறி - வெறியாடுதல்.
மறி அடு தொழில் - யாட்டைப் பலியிடும் தொழில்.
குரவை - தெய்வத்திற்குக் குரவையாடுதல்.
இதனைச் சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவை முதலியவற்றான் அறிக.
வெறி முதலிய ``இவைகளை இன்று இனி (இப்பொழுதே) ஒழிமின்`` எனக் கூட்டுக.
நசை - விருப்பம்.
அரவிந்தம் தாமரை.
அஃது அதன் மலரால் ஆகிய மாலையைக் குறித்தது.
இரண்டன் உருபு அணிதல் தொழிலினும் வரும் ஆதலலால், ``குழலியை அணிமின்`` என்றாள்.
சரதம் - உண்மை `இவள் உறுவது ஓர் நசை உண்டு; அது தமிழ் விரகன் புயம் உறும் அரவிந்தம் (அதனைக்) குழலியை அணிமின்` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 23

சரத மணமலி பரிசம் வருவன
தளர்வில் புகலிய ரதிபன் நதிதரு
வரத ணணி தமிழ் விரகன் மிகுபுகழ்
மருவு சுருதிநன் மலையி னமர்தரு
விரத முடையைநின் னிடையி னவள்மனம்
விரைசெய் குழலியை யணைவ தரிதென
இரதம் அழிதர வருதல் முனமினி
யெளிய தொருவகை கருது மலையனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப் பொருட் களவியலில் தலை வனைத் தோழி வரைவு கடாதற்கண் பிறர் வரைவு உணர்த்திய துறை யாகச் செய்யப்பட்டது.
``மலையனே`` என்பதை முதலிற் கொள்க.
மலையன் - வெற்பன்; குறிஞ்சி நிலத் தலைவன் மண மலி பரிசம் வருவன சராதம் - தலைவியை வரைந்து கொள்ளுதற்கு உரிய மிகுந்த பரிசப் பொருள்கள் வருவன ஆயினமை உண்மை.
(அதனால்) தமிழ் விரகன் மலையின் அமர்தரு விரதம் உடையை நின் இடையின் அவள் மனம் - ஞானசம்பந்தனது மலையின்கண் விருப்பம் வைத்தலையே விரதமாக உடைய நின்னைப் பற்றி அவளது (தலைவியது) மனத்தில் எழுந்துள்ள எண்ணம் விரை செய் குழலியை அணைவது அரிது என- `இனித் தலைவன் தன்னைச் சேர்தல் இயலாது` என்பதாய் இருத்தலால்.
அழிதர இரதம் வருதல் முனம் எளியது ஒருவகை இனி கருது - அவள் இறந்து படும்படி அயலாரது தேர் இங்கு வந்து சேர்தற்கு முன்பு எளிதில் அதை மாற்றுதற்கு ஒரு வழியை நீ இப்பொழுதே எண்ணி முடிப் பாயாக.
அதி தரு வரதன் - மிகுதியாகத் தரும் வரத்தை உடையவன்.
சுருதி - தமிழ் மறை.
அமர் - அமர்தல்; விரும்புதல்; முதனிலைத் தொழிற் பெயர்.
``விரை செய் குழலி`` என்பது தோழி கூற்றாய் ``அவள்`` எனப்பட்டவளையே குறித்தது.
``ஞானம் தமிழ்`` என்பதில் சந்தி ஒன்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

அயன்நெடிய மாலுமவ ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி யிடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி
மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடம்மதில் புடை தழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சுரேசன், தமிழ் விரகன், பரம குருநாதன், பரசமய கோளரி`` என்னும் ஒரு பொருட் பல பெயர்களை எழுவாயாக வைத்து, ``மான குண மதுரன்`` என்பதைப் பயனிலையாக்கி முடிக்க.
இது, ஞானசம்பந்தர் திருவீழிமிழலையில் படிக் காசு பெற்றுப் பஞ்ச காலத்தில் மக்களுக்கு உணவு அளித்துக் காத்த சிறப்பினைக் கூறியது.
`தாணுவாகிய அரன்` என்க.
தாணு - (நெருப்புத்) தூண்.
``அருளினோடு`` என்பதில் ஒடு உருபு கருவிப் பொருளில் வந்தது.
கனம் - பொன்.
இது மாடத்திற்கும் `மதிலுக்கும் அடை` அவனி - உலகம்.
நிலவு - ஒளி வீசுகின்ற.
காசின்- பொற் காசினால்.
மலி மழை - மிக்க மழை.
மான குணம் - பெருமை வாய்ந்த பண்பு.
மதுரன் - இனியவன்.
மதி, சந்திரன் செயம் - வெற்றி சிரபுரம் - சீகாழி.
சுரேசன் - பூசுரர் தலைவன்.
`ஞானத் தமிழ்` என்பதில் சந்தித் தகர ஒற்றுச்சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

அரியாருங் கிரிநெறியெங் ஙனம் நீர் வந்தீர்
அழகிதினிப் பயமில்லை யந்திக் கப்பால்
தெரியாபுன் சிறுநெறிக ளெந்தம் வாழ்விச்
சிறுகுடியின் றிரவிங்கே சிரமம் தீர்ந்திச்
சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்
வரியாரும் பொழிலுமெழில் மதிலுந் தோற்றும்
வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருள் உடன் போக்கில் தலைவன் தலைவியரைச் சுரத்திடைக் கண்டோர் பொழுதும் வழியும் கடிய வாதலைக் கூறிச் செலவு விலக்கிய துறையாகச் செய்யப்பட்டது.
அரி ஆரும் கிரி நெறி - சிங்கங்கள் நெருங்கியுள்ள இம் மலை வழியில் ``தனித்து எங்ஙனம் வந்தீர்`` என்க.
``அழகிது`` என்றது இகழ்ச்சிக் குறிப்பு இனிப் பயம் இல்லை - இப்பொழுது அச்சம் இல்லை (ஆயினும் இனி) அந்திக்கு அப்பால் இடர் நிறைந்த சிறிய கொடி வழிகள் கண்ணிற்குப் புலப்படா.
வாழ்வு இடம் - வாழும் ஆகிய.
``இங்கே குழலியொடும் சிரமம் தீர்ந்து, விடியச் சென்று புகலிப் பதி இனிது மருவலாம்`` என முடிக்க.
விடிதலுக்கு `பொழுது` என்னும் எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 26

ஆமாண்பொன் கூட்டகத்த வஞ்சொ லிளம் பைங்கிளியே
பாமாலை யாழ் முரியப் பாணழியப் பண்டருள்செய்
மாமான கந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகா லின்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யா னின்புறநீ கூறாயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் பாடாண் கைக்கிளையுள் தலைவி தனது ஆற்றாமையால் அஃறிணைப் பொருள்களை நோக்கிக் கூறும் காமம் மிக்க கழிபடர் கிளவிகளுள் தான் வளர்க்கும் கிளியொடு கூறலாகச் செய்யப்பட்டது.
கிளி பேசுந் தன்மை உடையதாதல் பற்றிக் காமம் மிக்க கழிபடர் கிளவிகளுள் இது சிறிது பயன் உடையதாகக் கொள்ளப்படுகின்றது.
`மாண் பொன் ஆம் கூடு` என மாற்றி, `பொன் னால்` என ஆல் உருபு விரிக்க.
கூட்டு அகத்த - கூட்டினுள்ளே இருக் கின்ற அம்சொல் - அழகிய சொல்லைப் பேசுகின்ற.
யாழ் முரியும்படி பாணர் வருந்தும்படியும் பண்டு பாமாலை (தேவாரம்) அருளிச் செய்த மா (பெரிய) மானம் (பெருமை) உடைய சம்பந்தன்` என்க.
கொச்சை- சீகாழி.
``பாணர்`` எனற்பாலது, ``பாண்`` எனக் குடிப் பெயராகக் கூறப் பட்டது.
பாணர் - வருந்தும்படியும் பண்டு பாமாலை (தேவாரம்) அருளிச் செய்த மா (பெரிய) மானம் (பெருமை) உடைய சம்பந்தன்` என்க.
கொச்சை - சீகாழி.
``பாணர்`` எனற்பாலது, ``பாண்`` எனக் குடிப் பெயராகக் கூறப்பட்டது.
பாணர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர்.
இவர் தமது யாழைத் தாமே முரிக்க முயலும்படி ஞானசம்பந்தர் பாடல் பாடினமையைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க.
ஈற்றடி நீண்டு வந்தமையால் இது கலித் தாழிசையாயிற்று.

பண் :

பாடல் எண் : 27

கூற தாகமெய் யடிமை தானெனை யுடைய
கொச்சையார் அதிபதி
வீற தார்தமிழ் விரகன் மேதகு புழி னானிவன் மிகுவனச்
சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்
தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருள் களவியலில் தலைவன் தோழியைக் குறையிரந்தவிடத்துத் தோழி அவனை மறுத்துச் சேட் படுக்கும் வகைகளுள் தலைவியது அருமை சாற்றற்கண் `இவளது பெற்றோர் இவளை ஏறு தழுவியவர்க்குக் கொடுப்பதாகச் சொல்லிய படி பறைமுழங்குகின்றது` எனப் படைத்து மொழி கூறிச் சேட்படுத் தாகச் செய்யப்பட்டது.
ஏறு தழுவியவர்க்கு மகளைக் கொடுத்தல் முல்லை நில வழக்கு.
கூறு - பங்கு.
`என்னைத் தன் பங்கில் சேரும் வண்ணம் மெய்யடிமையாக உடைய அதிபதி` என்க.
`புகழினான் ஆகிய இவனது வனத்தின்கண்` என உரைக்க.
வனம் - காடு; முல்லை நிலம்.
சேறு - சந்தனக் குழம்பு.
திரள் - திரண்ட கணை - அழகு.
``செழு முலை`` என்பது சினையாகு பெயராய்த் தலைவியைக் குறித்தது.
`செழு முலைக்கு உரியவன் ஏறு இது தழுவினார்` என முரசு அதிரும் என்க.
`அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள்.
`தான்` இரண்டும் அசைகள்.

பண் :

பாடல் எண் : 28

சதுரன் புகலிய ரதிபன்கூர்
தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலிய ரதிபன்தாள்
முறைவந் தடையலர் நகரம்போல்
எதிர்வந் தனர்விறல் கெடவெம்போர்
எரிவெங் கணைசொரி புரிமின்கார்
அதிர்கின் றனஇது பருவஞ்சே ரலர்தம்
பதிமதி லிடிமின்னே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, புறப்பொருளில் உழிஞைத் திணை முற்று முதிர்வுத் துறையைப் படைத் தலைவன் கூற்றாக்கிச் செய்யப் பட்டது.
முற்று முதிர்வாவது கோட்டையை அணுகி முற்றுகையிட்ட படைகள் அம்முற்றுகையை வலுப் பெறச் செய்தலாம்.
சதுரன் - திறல் உடையன்.
கூர் தவ சுந்தரம் - மிகுந்த தவமாகிய அழகு; (குல ஒழுக்கம்) `கவுணியர்தம்` முதல்வன் என இயையும்.
தாள் முறை வந்து அடையலர், திருவடி முறையாக வந்து அடையாதவர்கள் `நகரம் போல் ஆக என ஒரு சொல் வருவிக்க.
``ஆக`` என்பது ``சேரலர்தம் பதி`` எனப்பின் வருவதைக் குறித்தது.
சேரலர் - பகைவர்.
எதிர் வந்தனர் - எதிரில் போராட வந்தவர்கள்.
விறல் வெற்றி கெட - அழியும் படி `போரில்` என ஏழாவது விரிக்க ``கமை சொரிமின்; மதில் இடமின்`` எனப் படைத் தலைவன் படைஞரை ஏவினான்.
`இடிமினே` என வரற்பாலது, சந்தம் நோக்கி ``இடமின்னே`` என விரித்து வந்தது.
கார் - மேகம்.
``இது பருவம்`` என்றது, `பருவ நிலை வந்தது.
இது வாயினும் அது பற்றிச் சோர்தல் கூடாது` என்றபடி.
மருதத்திணைக் கும், நெய்தல் திணைக்கும் பெரும்பொழுது வரைவின்மையால் மருதத்துப் புறனாகிய உழிஞைக்கு இங்குக் கார்ப் பருவம் வந்தது.
முன் பாட்டின் இறுதிச் சொல் ``அதிரும்`` என்பதேயாயினும் சந்தி வகையால் ``சதிரும்`` என வந்தமையால் அஃதே பற்றி இப்பாட்டு, ``சதுரன்`` எனத் தொடங்கிற்று.
இப்பாட்டுள் ``புகலியர் அதிபன்`` என்பது இருமுறை வந்துள்ளது.
அஃது, ஏடு பெயர்த்து எழுதினோரது நினைவுக் குறைவால் ஏற்பட்டதாகும்.

பண் :

பாடல் எண் : 29

மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர்
மிகுபொன் மாடப் புகலி நாதன்
துன்னும் ஞானத் தெம்பி ரான்மெய்த்
தொகைசெய் பாடற் பதிக மன்னாள்
பொன்னும் மாநல் தரள முந்தன்
பொருக யற்கண் தனம்நி றைத்தாள்
இன்னு மேகிப் பொருள் படைப்பான்
எங்ங னேநா னெண்ணு மாறே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருள் கற்பியலில் பொருள் வயிற் பிரியக் கருதிய தலைவன் அதனை யறிந்து தலைவி ஆற்றா ளாயது கண்டு செலவழுங்கிக் கூறிய துறையாகச் செய்யப்பட்டது.
மாகத்து மின்னும் எழிலி - வானத்தின்கண் மின்னலை வீசுகின்ற மேகம்.
உம்மை, சிறப்பு.
தலைவியது அருமைக்கு ஞானசம்பந்தரது திருப்பதிகத்தின் அருமையை உவமையாகக் கூறினான்.
அருமை - பெறுதற்கு அருமை.
``அத்தகையாள் இறந்து பட நான் பிரிதல் எங்ஙனம்`` என்றான்.
``தலைவி தன் தனங்களில் பொன்னையும், கண்களில் தாளத்தையும் (முத்துக்களையும்) நிறைத்தாள் என்க.
பொன் - பசலை நிறம்.
முத்து - கண்ணீர்.
எதிர் நிரல் நிறை.
``பொன்னும் முத்தும் இங்கே நிரம்பக் கிடைத்துவிட்ட பின்பு, பொருள் தேட முயல்வது எற்றுக்கு`` என்பான், ``இன்னும் ஏகிப் பொருள்படைப்பான்`` என்றான் படைப்பான், பான் ஈற்று வினையெச்சம்.

பண் :

பாடல் எண் : 30

மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்
வம்புபம்பு குழலுந் துங்க கொங்கை யிணையும்
ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்
ஒத்து கித்து நடையுஞ் சித்த பத்தி மிகையும்
வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்
வென்றி துன்று கழலி னொன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்
சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியல் பாங்கற் கூட்டத்துள், தலைவன், பாங்கனுக்குத் `தலைவியது இடம், இயல்பு இவை` எனக் கூறும் துறையாகச் செய்யப்பட்டது.
``வீறது ஏறும், வயல் சூழ் காழி ஞான பெருமான்`` என்பதை முதலில் வைத்து, அதனை ``நீறு, பதிகம், பத்தி கழல்`` என்பவற்றோடு இயைக்க.
மாறு இலாத பொடி - விதிகட்கு மாறு பாடாப் பொடியாக அமைக்கப்பட்ட நீறு கோலம், திரு நீற்றை அணிந்த அழகு.
வம்பு பம்பு - நறுமணம் மிகுந்த.
இந்நறு மணம் `இயற்கை நறுமணம்`` என்க.
துங்கம் - உயர்ச்சி.
``மூரி`` என்பது எதுகை நோக்கி.
``மூறி`` எனத் திரிந்து நின்றது.
மூரி - யாழ் மூரி.
ஓசை - இசை; பண் நேச நுகர்வு - விருப்பத்தோடு துய்த்தல்.
மொத்துதல் - கால் தரையிற் சேர்தல்.
கித்து - தளர் நடை; மெல்ல நடக்கும் நடை.
`கித்தாகிய நடை` என்க.
தேறல் - தேன்.
பரிசு - தன்மை இயல்பு.
`இவைகளே என் சிந்தையைக் கவர்ந்த தன்மைகள்` என்ப தாம்.
நன்றி - நன்மை.
`இவை அம்மங்கை தனது தவத்தால் பெற்ற நன்மைகளாம்` என்றபடி.
``தவம்`` என்பது காரண ஆகு பெயராய், அதனால் விளைந்த பயனைக் குறித்தது.
`ஞானப் பெரு மான்` என்பதில் சந்திப்பகர ஒற்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப் பட்டது.
``திருநீற்றுக் கோலமும், திருப்பதிகத்து விருப்பமும், குரு பத்தியும், ஆசிரியப் பணியும் நான் கண்ட தலைவிக்கே உரிய சிறப்புக்கள்`` என்பான் மகளிர்க்குரிய பொது இயல்புகள் சிலவற் றுடன் இவற்றைக் கூட்டிக் கூறினான்.
``இச்சிறப்பு அடையாளங்களே என நெஞ்சு அவளிடம் சென்றமைக்குக் காரணம்`` என்பது குறிப்பு.
திருக்கோவையாரில் சொல்லப்பட்ட தலைவன் தலைவியரும் இத்தன்மையாராகக் குறிக்கப்பட்டமை நினைக்கத்தக்கது.
சுந்தரரைப் பரவையார் கண்ட பொழுது பல பொதுவியல்புகளைக் கூறி, ``மின்னோர் செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற்று உடைய வனோ`` என்னும் சிறப்பினைக் கூறியதாக அருளிய சேக்கிழார் திரு மொழியும் இங்கு நினைக்கத் தக்கது.

பண் :

பாடல் எண் : 31

கைதவத்தா லென்னிடைக்கு
நீவந்த தரியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தா ருயிரனைய
மிகுசைவ சிகாமணியைக் வேணுக் கோனைச்
செய்தவத்தால் விதிவாய்ந்த
செழுமலையா ரவனுடைய செம்பொன் திண்டோள்
எய்தவத்தால் விளிவெனக்கென்
யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருள் கற்பியலில் பரத்தையிற் பிரிவில் மீண்டு வந்த தலைவன் பாணனை வாயிலாக விடுத்துழித் தலைவி வாயில் மறுத்த துறையாகச் செய்யப்பட்டது.
``கலதிப் பாணா`` என்பதை முதலிற் கொள்க.
கைதவம் - வஞ்சனை.
அது `தலைவன் தவறிலன்` என வலியுறுத்தற்குக் கூறும் பல பொய் மொழிகள்.
என் இடை - எனது இடை.
அஃது இல்லம், வேணுபுரம், ``வேணு`` எனப்பட்டது.
வேணுபுரக் கோனைத் தாங்கள் முற்பிறப்பிற் செய்த தவத்தால் அத்தவத்தின் பயனாகத் தலைவனாக வாய்க்கப் பெற்றவர்கள் (இங்குள்ள) மலையார் (மலைவாணர்).
அவர்கள் அந்த வேணுபுரக் கோனது திண் தோள்களையே தங்களுக்குப் பாதுகாவ லாகக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அவர்கள் மகளாகிய எனக்கு எந்த ஒன்றினாலும் விளிவு (இறப்பு) உண்டாகாது.
(ஆகவே, `தலைவன் தவறுடையான்` என்பது தெரிந்தால் நான் இறந்துபடு வேன் என்று கருதி) நீ ஏன் (`தலைவன் தவறிலன்` என்பதாகப்) பல பொய்மொழிகளைச் சொல்கின்றாய் (வேண்டா; உடனே திரும்பிப் போ) என்பது.
இங்குக் கூறப்பட்ட பொருள்.
``தோள்`` என்பது வீரத்தைக் குறித்துப் பின் அதனால் உண்டாகும் பாதுகாவலைக் குறித்தது.
ஞானசம்பந்தரை புய வலிமையுடையராகக் கூறியது சமணர் பலரை வென்றமை கருதி.

பண் :

பாடல் எண் : 32

இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களி னியல்பும் வளம்பொலி
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலும் மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசை,தகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதங்கம் ( மிருதங்கம்) - மத்தளம், மதங்கியார் - மத்தளம் வாசிக்கும் பெண்மணியார்.
மத்தளத்தை மகளிர் வாசிக்கும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது.
இம்மகளிரும் பாணர் குலத்தவரே.
அதனால் மத்தளத்தை வாசித்துக் கொண்டு தெருக்கள் தோறும் போய்ப் பொருள் பெறுவது இவர்கட்குத் தொழிலாய் இருந்தது.
`மதங்கி` என்பது, ``மாதங்கி`` என்றும் வரும்.
இவ்வாறு தெருவிற் செல்லும் ஒருத்தியைக் கண்டு ஒருவன் கைக்கிளையாக (ஒருதலைக் காமமாகிக் காதலித்துக் கூறும் கூற்றே, கலம்பகங்களில் `மதங்கியார்` என்னும் உறுப்பாகச் சொல்லப்படும் `மதங்கியார்` என்பது உயர்வுப் பன்மை.
`இது இதிங்கிவள்` என வரற்பாலது செய்யுள் நோக்கி முற்றிய லுகரம் தொகுக்கப்பட்டு, ``இதிங்கிவள்`` என வந்து ``இங்கிவள்`` என்பது ஒருசொல் நீர்மைத்து.
மிடறு - கழுத்து.
`இசையை முகந்து எழு மிடறும் இது` என்றது, `இனிய குரலை உள்ளே உடைய கழுத்து` என்றபடி.
``இது`` என்றதும், `இத்துணை அழகிதாய் உள்ளது` என்றதே யாம்.
இடு காரணங்கள் காட்டுகின்ற - காட்டுகின்ற அபிநயங்கள்.
`பொலிவது` என்பதில் இறுதி நிலை தொகுக்கப்பட்டது.
சுலவும் - சூழ்ந்துள்ள.
சிரபுர மன் - சீகாழிப் பதிக்குத் தலைவன்.
`தமிழ் விரகனது வண்புகழைப் பயிலும் (மிகுதியாகப் பாடுகின்ற) மதங்கி` என்க.
நளிர் - குளிர்சிசியை (மகிழ்ச்சியை)த் தருகின்ற.
``இவளது கொங்கை, கண், நகைப்பு இவைகளைக் கண்டபின் தகுதிமிக்க எனது குலம் முழுவதையும் வசை கவர்ந்து கொள்ளும்படி.
அறிவு மிகுந்த என் மனத்தில் மையல் உண்டாகின்றதே; (இதற்கு என் செய்வேன்!)`` என ஒருவன் மையல் கொண்டு கூறினான் என்க.
``மதங்கிதன் குலம் தாழ்வுடையதாகலின் இவளை நான் விரும்புதல் என் குலம் முழுவதற்கும் வசையாம்`` என்றபடி.
மயங்கினவனுக்கு இயற் பெயர் சொல்லப்படாமையால் இஃது அகப்புறக் கைக்கிளையாம்.
``இவளுடைய அவயவங்கள் மிக அழகுடையனவாய் இருத்தலுடன் இவள் பாடும் பொழுது தமிழ் விரகனது வளவிய புகழையே மிகுதி யாகப் பாடுதல் குறிப்பிடத் தக்கது`` என இவன் தன் மனத்தில் மையல் உண்டாதற்குரிய சிறந்த காரணத்தைக் கூறினமை காண்க.

பண் :

பாடல் எண் : 33

வருகின் றனனென் றனதுள் ளமும்நின்
வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்
தருகும் புனல்வெஞ் சுரம்யா னமரும்
மதுநீ யிறையுன் னினையா தெனின்முன்
கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்
பெருகுந் திருவா ரருள்பே ணலர்போற்
பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருள் உடன் போக்கில் தலைவன் தலைவியது அசைவு (தளர்ச்சி) அறிந்து இருத்தல்` துறையாகச் செய்யப்பட்டது.
``பெண் கொடியே`` என்பதை முதலிற் கொள்க.
இது தலைவியைத் தலைவன் விளித்தது.
எனது உள்ளமும் நின் வசமே நிறுவி - எனது உள்ளத்தை எப்பொழுதும் உன்னிடத்திலே நிற்கும்படி நிறுத்தி.
வருகின்றவன் - வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் நான் உன்பால் வந்துகொண்டே யிருக்கின்றேன்.
(அவ்வாறு இருக்கவும்) யான் - நான்.
குறை கொண்டு - உன்னோடு எப்பொழுதும் இருக்க இயலாத குறையைப் பொறுத்துக் கொண்டு.
தனித்து அமரும்.
அது - தனித்து உறைகின்ற அந்த இடம்.
அருகும் புனல் வெஞ்சுரம் நீ இறையும் நினையாது - நீர் கிடையாத பாலை நிலம் என்பதை நீ சிறிதும் நினையாமல் என்னின் முன் அதர் வந்து பிழை செய்தனை.
என்னினும் முற்பட்டு இந்த வழியிலே வந்து பிழைசெய்து விட்டாய்; (சற்றே தங்கிப் போவம்) ``தமிழாகரனது அருளைப் பேணலர் போல வந்து பிழை செய்தனை`` என்க.
தலைவன் தனது ஊர் சுரத்தை அடுத்து இருத்தலை, ``சுரம்`` என்றே கூறினான்.
``உள்ளமும்`` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம்.
புயல் - மேகம்.

பண் :

பாடல் எண் : 34

கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு
குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்
அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநகர் அணையானகனை கடலின்
முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவனுமர்
முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப் பொருட் களவியல் பாங்கியிற் கூட்டத்தில் தலைவன் தோழியைக் குறையுறும் துறையாகச் செய்யப்பட்டது.
``தலைவியை என் கருத்துக்கு இசையும்படி செய்வதாயின், அதன் பொருட்டு நீ எந்தப் பணியை இட்டாலும் அதை நான் செய்வேன்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருல்.
திருக் கோவையாரில் ``மருக்கோ கடலின் விடுதிமில்`` என்னும் பாடலோடு இதனை ஒப்பிட்டுக் காணலாம்.
`கொடியில்` என ஏழாவது விரிக்க.
மேதை - பேரறிஞர்.
சுப சரிதன் - நல்ல ஒழுக்கம் உடையவன்.
``தமிழ் விரகனது புகலி நகர்` என்க.
அணைவான் - அருகாக உள்ள.
கனை கடல் - ஒலிக்கின்ற கடல்.
``அவை`` பகுதிப் பொருள் விகுதி.
படியாரும் நிகர் அரிய - இப்பூமியில் ஒருவரும் தன்னை நிகர்ப்பவர் இல்லாத.
``வரி ஆரும் மதர் நயனி`` என்னும் தொகைச் சொல் ஒரு சொல் நீர்மைத்தாய், `தலைவி` எனப் பொருள் தந்து, ``அரிய`` என்னும் குறிப்புப் பெயர் எச்சத்திற்கு முடிபாயிற்று.
வரி ஆரும் (நயனம்) - செவ்வரி படர்ந்த (கண்கள்).
மதர் நயனம் - களப்புத் தங்கிய பார்வையை உடைய கண்கள்.
நயனி - கண்களை உடையவள்.
`நயனிக்கு` எனப் பொருட்டுப் பொருளதாகிய நான்கன் உருபு விரிக்க.
`நுளையர் பெண்ணாயினும் உனது அருளையான் வேண்டுகின்றேன்` என்பான், ``நுளையார் மடமாது உன் அருள் பெறின் யான் எப் பணியையும் புரிவேன்`` என்றான்.
இப்பாட்டு நெய்தல் திணையாதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 35

பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை
பெருநெறி யளிப்பனபல பிறவியை யொழிச்சுவன
உறுதுய ரழிப்பனமு னுமைதிரு வருட்பெருக
உடையன நதிப்புனலி னெதிர்பஃறி யுய்த்தனபுன்
நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன
நனிகத வடைத்தனது னருவிட மகற்றியன
துறுபொழில் மதிற்புறவ முதுபதிம னொப்பரிய
தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``துறுபொழில் மதிற் புறவ முதுபதி மன்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இப்பாட்டுத் திருஞானசம்பந்தரது திருப்பதிகங்கள் செய்த அற்புதங்களைத் தொகுத்துக் கூறுகின்றது.
புவியுள் பெறு பயன்களை (பெற வேண்டிய பயன்களை) மிக அருளுவன.
பிற்றை முறை - அவற்றிற்குப் பின், `ஒழித்து` என்பது ``ஒழிச்சு`` என மருவி வந்தன.
`ஒழிச்சுவிடுவன` என்பதில் `விடு` என்னும் துணிவுப் பொருள் விகுதி தொகுக்கப்பட்டது.
பஃறி - ஓடம்.
உய்த்தன - செலுத்தின.
`புன் சமண்` என இயையும்.
``நறு மறு`` என்பது வெகுளியை முழுதும் காட்டாது சிறிது புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு.
குரை - குரைத்தல்; பேசுதலை, ``குரைத்தல்`` என்றது இகழ்ச்சி பற்றி.
சமண் - சமணக் குழாம்.
துன் அரு விடம் - பொருந்துதற்கு அரிய நஞ்சு.
துறு - நெருங்கிய.
புறவம் - சீகாழித் தலம்.
`தொழில் பல மிகுத்த தமிழ்` என இயைக்க.

பண் :

பாடல் எண் : 36

தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்
தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக்கியசீர்
மிகுகா ழியன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்
விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்
மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்
வரலா றுபிழைப் பி(லர்,ஊழிதொ)றூழி இலக்கிதமாய்த்
தகுவாழ்வு நிலைத் தொழில்சே ரறமா னபயிற் றுவர்மா
சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக்கடலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, திருஞானசம்பந்தரது திருவடிகளையே துணையாகக் கொள்பவர் அடையும் பயன்களைக் கூறுகின்றது.
``பொழில் சுற்றியனவும், மதி (சந்திரன்) தோயப் பெறுவனவும் ஆகிய மதில்களினுள், கனம் ஆர் (மேகங்கள் தவழும்) திருப்பொழில்களை யுடைய மாளிகைகளும் மாடங்களும் நெருங்கியுள்ள சீர் மிகு காழி`` என்க.
``தமிழாகரனது மேதகு கழல் விரை ஆர் கழல், விரை ஆர் கழல், கமலக் கழல்`` எனத் தனித் தனி முடிக்க.
பொன் - அழகு.
புனை தார் விரை - தோளில் அணிந்த மாலை (பாதம் அளவு தூங்கிப்) புரளுத லால் உண்டாகும் நறுமணம் கமலக் கழல் தாமரை மலர் போலும் திருவடி.
மகர ஆகர நித்தில நீர் நிலை ஆர் புவி - சுறா மீன்களுக்கு வாழும் இடமாயும், முத்துக்களை உடையதாயும் உள்ள கடல் நீரின் கண் நிற்றல் பொருந்திய பூமி.
வரலாறு - பண்டு தொட்டு உயிர் வாழ்ந்து வரும் வரவு (பிழைப்பிலர் - நீங்கப் பெறாதவராய் ஊழி தொறு) ஊழி இலக்கிதமாய் - பல பல ஊழிகளிலும் பலராலும் காணப் படுபவர்களாய்) அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி ஏடெழுதி னோரால் விடப்பட்டதாக எண்ண வேண்டியுள்ளது.
இலக்கிதம் - இலக்கியம்; குறிக்கொண்டு நோக்கப்படும் பொருள்.
`அறம்` என்னாது ``எழில் சேர் அறம்`` என்றமையால் அவை சிவ புண்ணியங்களாம் என்க.
பயிற்றுவர் - எப்பொழுதும் செய்வார்கள்.
சதுர் - திறல்.
இப்பாட்டினை, ``பன்னிரு சீர்க் கழிநெடிலடியை உடையது`` எனக் கொள்வாரும் உளர்; அது சிறவாமையை அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 37

கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
துருமதிப் பாண கருமங் கேண்மதி
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
காந்திய வுதரக் கனல்தழைத் தெழுதலின்

தேய்ந்துடல் வற்றிச் சில்நரம் பெழுந்தே
இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
உறுசெறுத் தனைய வுருவுகொண் டுள்வளைஇ
இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்
மன்னிய வளநகர் மனைக்கடை தோறும்

சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு வன்துயர் போயொழிந்
தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன
துள்ளத் துள்ள தாயின் மதுமலர்
வண்டறை சோலை வளவயல் அகவ

ஒண்திறற் கோள்மீன் உலாவு குண்டகம்
உயர்தரு வரையின் இயல்தரு பதணத்துக்
கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பருமுரண் கணையக் கபாட
விளையக் கோபுர விளங்கெழில் வாயில்

நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும்
மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைத்த
செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
மாளிகை ஒளிச் சூளிகை வளாகத்து
அணியுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய

நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
கழுமல நாதன் கவுணியர் குலபதி
தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன் பரசமய கோளரி
என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் உள்ளத்
குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி

நாப்பொலி நல்லிசை பாட
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும், மேல், ``கைதவத்தால் என்னிடைக்கு நீ வந்தது`` எனப் போந்த அப்பாட்டின் துறையை உடையதே.
``திரு மதிப் பாண`` என்பதை முதலிற் கொண்டு, - கருமம் கேள்! நின்கண் (உன்னிடத்தில்) நிரம்பிய (இசையியல்பு முற்றிய) பாடல்கள் ஓடா நின்றன.
(எழுந்து சென்று எங்கும் பரவாநின்றன; ஆயினும் நீயோ,) பசி நலிய இணைத்துக் காந்திய உதரக் கனல் தழைத்து எழுதலின் உடல் வற்றி நரம்பு எழுந்து, சில சுள்ளிகளால் இயற்றப்பட்ட குரம்பையைச் செலுத்தனைய உருவத்தைக் கொண்டு, (இந்நிலைமையில்) நல் யாழைச் சுமந்து நகர் மனைக்கடை தோறும் சென்றுழிச் சென்றுழி பல பெறாது வன் துயரையே (உடையை ஆகின்றாய்) `இவ்வன்துயர் நீங்கி இரு நிதி எய்த இன்புற வேண்டும்` என்னும் எண்ணம் நுனது உள்ளத்து உள்ளதாயின் `கழுமலம்` என்னும் பதிக்குத் தலைவனும்.
.
.
ஆகிய `பரசமய கோளரி` எனச் சிறப்புப் பெற்ற அவன்மீது யான் புனைந்த தமிழ்ப் பாடலைக் கற்று, என் மீதும் சிறிது இரக்கம் கொண்டு என் உள்ளத்திலும் தன்மீது செல்லும் அன்பினை அருளிய அந்த ஆண் தகையது புகழை நிரம்ப உணர்ந்து, அவனது வாயிலில் போய் நின்று (பாடு) பாடினால் நீ மாப் பெருஞ் செல்வம் மன்னுதி - என முடிக்க.
`துர்மதி` என்னும் ஆரியச் சொல் தமிழில் உகரம் பெற்று, ``துருமதி`` என வந்தது.
துர் மதி - தீய புத்தி.
கருமம் - செய்யத் தக்க காரியம்.
அடுக்கு வலியுறுத்தற் பொருட்டு.
நீ தலைவன் ஆணையில் நின்று பரத்தையரிடம் சென்று; - தலைவன் உங்களையே விரும்பு கின்றான் - என விருப்பமொழி கூறியும், அங்ஙனமே என்னிடம் வந்து, - தலைவர் சிறிதும் தவறிலர்; அவர்மீது நீவிர் வீண் பழி சுமத்த வேண்டா - என அமைதி கூறியும் இவ்வாறு பொய்யையே பேசித் திரிவதால் நீ அடைந்த பயன் வயிற்றுப் பிழைப்பும் கிடையாத மிகு வறுமையே யன்றி வேறில்லை`` என்க, ``நிரம்பிய பாடல் நின்க ணோடும் (ஆயினும்) சில் பலி பெறாது வன்துயர்`` (உறுகின்றாய்) என்றாள்.
ஆசிரியர் தாம் புனைந்த தமிழை தலைவி புனைந்ததாகவும், தமக்கு இரங்கி அன்பை அருளியதைத் தலைவிக்கு இரங்கி அன்பை அருளியதாகவும் பிரபந்தத் துறைக்கு ஏற்பக் கூறினார்.
ஆயினும் கருத்து வேறாதல் வெளிப்படை.
`கோளரிக்கு` என உருபு விரிக்க.
`புனை என் தமிழ்` என மாற்றிக் கொள்க.
உதரக் கனல் - வயிற்றுத் தீ.
இறுகுடி - முறுக்கு ஏறி.
குரம்பை- குடி உறு செறுத்து அணைய உருவு - மிகவும் உறுதிபடச் செய்தல் ஒத்த தோற்றம்.
பலி- பிச்சை.
`சோலை அறை வண்டு வயலில் (சென்று) அகவ (ஒலிக்க) என்க.
கோள் மீன் - முதலை.
குண்டு அகழ் - ஆழமான அகழி.
`அகழியோடு உயர்தரு பதணம்` என்க.
பதணம் - மதிலின் உறுப்பு.
கடு நுதி - கொடிய முனை கழுக்கடை - சூலம்.
மிடைதல் நெருங்குதல்.
பருமுரண் கணையக் கபாடம் - பருத்த, வலிமையை உடைய கணைய மரத்தோடு கூடிய கதவு.
கணைய மரமாவது, கதவைச் சார்த்திய பின்பும் அது திறக்கப்படாதபடி குறுக்காகப் போடப்படும் மரம்.
விலைய வாயில் விலை மதிப்புடைய வாயில்.
அஃதாவது பொன்னா லும், மணிகளாலும்.
இயன்ற வாயில், மஞ்சு - மேகம்.
இஞ்சி - மதில்.
கனகச் சிலம்பு - பொன் மாலை.
ஒலி - யானை கட்டும் கூடம்.
சூளிகை - மேல் மாடத்தின் நெற்றி.
பட மணி - நாக ரத்தினம்.
துடைத்து - மாசு போகக் கழுவி.
இந்திர வில் - வானவில்.
அஃது இங்கு அதனோடு ஒத்த ஒளியுருவைக் குறித்தது.
செம்மலர் மாது - திருமகள்.
இறை - சிறிதும்.
உம்மை, தொகுத்தல் ``வண்டு அறை சோலை.
.
.
.
கழுமலம்`` என்க.
``கேள் மதி`` என்பவற்றில் மதி, முன்னிலையசை.
முன் பாட்டு இறுதியில் ``அணுகார்`` என்றதனை, `கார்` என்றே கொண்டு அதன் திரிபாக `கரு` என்பது இப்பாட்டின் முதலாயிற்று.

பண் :

பாடல் எண் : 38

நீதியின் நிறைபுகழ் மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை ஓதுவ துறுதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீதி - நடுவு நிலைமை.
`நீதி நிலை பெறுதலால் நிறைந்த புகழை உடைய புகலி` என்க.
ஏகாரத்தை மாறிக் கூட்டி, `தமிழ் விரகனை ஓதுவதே உறுதி` உறுதி` என உரைக்க.
ஓதுவது - துதிப்பது.
உறுதி - நன்மை.
உறுதி பயப்பதனை ``உறுதி`` என்றது ஆகு பெயர்.

பண் :

பாடல் எண் : 39

உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி
உனதுமனம் ஆர முழுவதும்அ தாக
அறுதிபெறும் மாதர் பெயர்தருதல் தானும்
அழகிதுஇனி யான்உன் அருள்புனைவ தாகப்
பெறுதிஇவை நீஎன் அடிபணிதல் மேவு
பெருமைகெட நீடு படி றொழி பொன் மாடம்
நறைகமழும் வாச வளர்பொழில் சுலாவும்
நனிபுகலி நாத தமிழ்விரக நீயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருட் கற்பியலில் பரத்தையிற் பிரிவினின்றும் நீங்கிப் புதல்வற் பெற்று நெய்யாடியிருந்த தலைவியை அணுக, அவள் ஏலாது ஊடியிருந்தமையால், அவளது அடிமேல் வீழ்ந்து வணங்கிய அவனை அதன்பின்பும் அவள் ``இதனைக் காதல் எங்கையர் காணின் நன்று`` எனச் சொல்லி மறுத்த துறையாகச் செய்யப்பட்டது.
(எங்கையர் - என் தங்கைமார்; பரத்தையர்.
) ``அவர் காணின் `நன்று` என நின்னை ஏற்பர்; யான் ஏலேன்`` வெளிப்படுத்து கின்ற நறுமணம்.
`நனி சுலாவும்` எனக் கூட்டுக.
நாதன் - தலைவன்.
இதுவும், ``தமிழ் விரகன்`` என்பதும் இங்கு ஞானசம்பந்தரைக் குறியாமல் அகப்பொருள் தலைவனையே குறித்தது.
பிற ஊர்களைக் கூறாது புகலியைக் கூறியதே இங்கு ஞானசம்பந்தரைப் போற்றிய போற்றுதலாய் அமைந்தது.
எனவே, ``புகலி`` என்றது பாட்டுடைத் தலைவரைப் புகழ்ந்தது ஆதலின் அகப் பொருள் தலைவனை.
``புகலி நாதன்`` என்றது இயற்பெயர் கூறியதன்றாம்.
``தமிழ் விரகன்`` என்றதும், `ஏமாளிகளை இனிய சொற்களால் ஏமாற்ற வல்லவன்` என்னும் பொருட்டாய் இகழ்ச்சியே தந்தது.
``நாத! விரக! நீ எனை இகழும் நீதி உனது மனம் ஆர முழுவதும் அது ஆக.
(அப்படியே இருக்கட்டும்.
நீ) இனி மாதர்பால் பெயர்தருதல் தானும் அழகிது; யான் உன் அருள் பெறுவதாக இவை பெறுதி.
நீ என அடி பணிதல் பெருமை கெட நீடு படிறு.
(இவற்றை) ஒழி`` எனக் கூட்டி உரைக்க.
`யான் புதல்வனைப் பெற்றமையால் உன்னால் இகழப்படுகின்றேன்` என ஊடி உரைப்பாள், ``உறுதி மலைதாழ எனனை இகழும் நீதி`` என்றாள்.
``உனக்கு நான் இம்மைக்கே யன்றி, மறுமைக்கும் துணையாகின்ற நன்மையைக் கருதவில்லை` என்பது குறிப்பு.
அறுதி பெறும் மாதர் - உன்னைத் தமக்கே உரியவனாக அறுதியாகப் பெற்றுள்ள பெண்டிர்.
`மாதர்பால்` என எழாவது விரிக்க.
பெயர்தருதல் - திரும்பிச் செல்லுதல்.
தான், அசை.
உம்மை, சிறப்பு.
புனைவதாக - நான் ஏற்று மகிழ்வதாகக் கருதி.
இவை பெறுதி - இச்செயல்களைச் செய்கின்றாய்; மேவு பெருமை கெட நீடு படிறு - (உனது உண்மை யறியாதார் சிலரால் உனக்கு) உண்டாகின்ற அப்பெருமையும் கெடும்படி நிலைக்கின்ற வஞ்சனைகள் ஆகும் (இவை).
ஒழி - இவற்றை விட்டொழிப்பாயாக- `அது ஆக` என்பது முற்றியலுகரம் தொகுக்கப்பட்டு, ``அதாக`` என வந்தது.

பண் :

பாடல் எண் : 40

நீமதித் துன்னிநினை யேல்மட நெஞ்சமே
காமதிக் கார்பொழிற் காழி
நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு
பூமதிக் கும்கழல் போற்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மட நெஞ்சமே`` என்பதை முதலிற் கொள்க.
மதித்து - (உன்னையும், உன்னின் வேறாகிய பிற பொருள்களையும்) பொருளாக மதித்து.
உன்னை நினைத்தல், ஒரு பொருட் பன்மொழி.
மதிக்கு ஆர் காபொழி - சந்திரனோடு பொருந்துகின்ற பூங்காக்களும், பலவகைச் சோலைகளும் மதிக்கு, உருபு மயக்கம்.
நாம திக்கு - அச்சம் தரும் திசைகள்.
அச்சம், எல்லை காணப்படாது நிற்றலால் உண்டா வது, திக்கு, `எட்டு` என்னும் அளவை உடையமையால், ``திக்கும்`` என்னும் உம்மை முற்றும்மை.
பூ - பூவுலகம்.
இரண்டு, நான்காம் அடிகள் சீர் குறைந்து வந்தைமையால் இஃது ஆசிரியத் துறையாயிற்று.

பண் :

பாடல் எண் : 41

போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே
புந்தி யான்உந்தம் பொற்கழல் பூண்டதே
மாற்றி யிட்டது வல்விட வாதையே
மன்னு குண்டரை வென்றது வாதையே
ஆற்றெ திர்ப்புனல் உற்றதம் தோணியே
ஆன தன்பதி யாவதம் தோணியே
நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே
நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நால் திசைக்கவி ஞானசம்பந்தன்`` என்பதை முதலில் வைத்து, ``எத்திசையிலும் சென்று அருட்கவிகளால் ஞானத்தைத் தொடர்பு கொள்ளச் செய்த ஆசிரியன்`` எனப் பொருள் கூறுக.
போற்றி செய்து பூண்டது - வாது வெல்லும் வழிகளாக அறிவால் தேர்ந்து.
உந்து அம்பு ஒற்கு அழல் - ஓடுகின்ற நீரும், (வையை நீர்) எப்பொருளும் ஒடுங்குதல்.
விட வாதை - நஞ்சுத் துன்பம் வென்றது வாது ஐ.
ஐ இரண்டன் உருபு.
இதனை ஏழன் உருபாகத் திரிக்க.
``தோணி`` இரண்டில் முன்னது, ஓடம்; பின்னது தோணிபுரம்; சீகாழி `அவனது நல்ல நாமம்` என்க.
உம்மை, `நால் திசைகளிலும் ஞானசம்பந்தத்தை உண்டாக்கிய தன்றி` என இறந்தது தழுவி நின்றது.

பண் :

பாடல் எண் : 42

அம்புந்து கண்இமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் சம்பந்தன்
காமரு கழுமலம் அனையா
ளாம்இவள் அணங்கலள் அடிநிலத் தனவே.
42 பன்னிரு சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பல்லாற்றானும் தம்முள் ஒத்து முன்பு ஒருவரை ஒருவர் அறியாத ஒருவனும், ஒருத்தியும் ஊழ் வலியால் தனியிடத்து எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டத்திற்கு முன் தலைவனிடத்து நிகழும் துணிவுணர்வு ஆகலின் இஃது அகப்புறக் கைக்கிளையாம்.
``அடி நிலத்தன; கண் இமைக்கும்; நுதல் வியர்க்கும்; கோதை மலர் வாடும்; (இவையெல்லாம் தேவ மகளிர்க்கு இல்லை ஆகையால்) இவள் அணங்கு (தேவ மகள்) அல்லள்; சம்பந்தன் கழுமலம் அனையாள் ஆம்`` எனக் கூட்டி முடிக்க.
``கழுமலம் நிலவுலகத்தது ஆதலின், இவளும் நிலவுலகத்தவளே`` என்பதாம்.
காமரு - விரும்பத் தக்க.
வம்பு உந்து கோதை - மணம் வீசுகின்ற மாலை இது.
முன்னர் வெண்பாவாகத் தொடங்கிப் பின்னர் ஆசிரியப் பாவாய் முடிந்தமையின் மருட்பா ஆயிற்று.
மருட்பாவிற் குரிய பொருள்களில் இது கைக்கிளைப் பொருள் பற்றி வந்தது.
முன் பாட்டின் இறுதியில் உள்ள ``சம்பந்தன்`` என்பதில் முதலில் நின்றும் சகர ஒற்றை நீக்க `அம்பந்தன்` என்று ஆதலின்; இப்பாட்டு ``அம்புந்து`` எனத் தொடங்குவதாயிற்று.

பண் :

பாடல் எண் : 43

தனமும் துகிலும் சாலிக் குலையும் கோலக் கனமாடச்
சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்
கனவண் கொடைநீ டருகாசனிதன் கமலக் கழல்பாடிக்
கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண
புனைதண் தமிழின் இசைஆர் புகலிக் கரசைப் புகழ்பாடிப்
புலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொல் புதிதாக்கிச்
சினவெங் கதமாக் கலிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்
சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்குவ தறியாரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, `ஞானசம்பந்தரைத் துதிப்பவர் இம்மைப் பயனையும் அடைவர்` என்பதைப் பாணர் சேரிப் பெண் ணொருத்தி நகைக்குங் கூற்றாக வைத்துக் கூறுகின்றது.
தனம் - கைப்பொருள்.
துகில் - உயர்ந்த ஆடை.
சாலிக் குவை - செந்நெற் குவியல்.
`இவைகளையுடைய மாடம்` என்க.
கண்டார் - கொடை யாளர்களைக் கண்டவர்கள் ``ஞானசம்பந்தன் கழலைப் பாடியவர்களெல்லாம் நல்ல உணவுகளைப் பெற்று உண்டு களிக்க, எம் சேரிப் பாணர், `தங்களுக்கும், தங்கள் சுற்றத்திற்கும் உள்ள பசியை எப்படித் தணிப்பது` என்று எண்ணிப் பாராமல்களிறு ஒன்றை இந்தச் சேரியில் கொண்டு வந்தார்; (அதனால் அவரை நான் எங்கள் குடிலுக்குள் நுழைய விடாமல் கதவை மூடித் தாழ் இட்டேன்.
இப்போது அவர் குடிலையும் இழந்தார்; இப்பொழுது அவர் இதனை (களிற்றை) என்ன செய்வது - என்று விழித்துக் கொண்டிருக்கின்றார்`` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
``எம் பாணர்`` என்றதில் ``பாணர்`` என்பது ஒருவரையே பலர்பாலாக உயர்த்துக் கூறியது.
இவ் உயர்வுச் சொல்லும் இங்கு நகைப்பின்கண் வந்தது.
``புலையச் சேரியில் காளை புகுந்தால் என்னாகும்`` என்பது ஒரு பழமொழி ``அந்தக்காளை உயிரோடு உரிக்கப்படும்`` என்பது கருத்து.
என் சொல் என்னும் பழ மொழி.
`அதை எம் பாணர் புதுக்குவது போல, அரிசி பெற்று வாராது களிறு பெற்று வந்தார்` எனச் சொல்லி நகையாடினாள் விறலி.
`சின வெங்கதம்` ஒருபொருட் பன்மொழி.
`சேரிக்கண்` என ஏழாவது விரிக்க.

பண் :

பாடல் எண் : 44

யாரேஎன் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயும் சென்னித் தமிழ்விரகன் சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இன் கமல`` என்பது முதலாகத் தொடங்கி, `குரைகழற்கே, அறிந்து, மெச்சி அன்பு செயப் பெற்றேன்; (ஆதலின்) என்போல அருளுடையார் யாரே`` என இயைத்து முடிக்க.
இது முன் இரண்டடிகள் ஒரு விகற்பமாக, ஏனையடிகள் வேறு வேறு விகற்ப மாய், இரண்டாம் அடியின் மேலும் மூன்றாம் அடியில் தனிச்சொற் பெற்று வந்தமையால் இன்னிசை வெண்பா ஆயிற்று.

பண் :

பாடல் எண் : 45

அறிதரு நுண்பொருள் சேர்பதி கம் அரன் கழல்மேல்
அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்
செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் திகழ்சீர்த்
திருவளர் சண்பையின் மாடலை கடல்ஒண் கழிசேர்
எறிதிரை வந்தெழு மீன்இரை நுகர்கின் றிலைபோய்
இனமும் அடைந்திலை கூர்இடரோடிருந் தனையால்
உறுதியர் சிந்தையி னூடுத வினர்எம் தமர்போல்
உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும், மேல் ``ஆர்மலி புகலி நாதன்`` எனப் போந்த பாட்டுப் போலக் காமம் மிக்க கழிபடர் கிளவியில் `குருகோடு இரங்கல்` துறையாகச் செய்யப்பட்டது.
``வண் குருகே`` என்பதை முதலில் வைத்து, ``அறிதரு சண்பையின் மாடு அலைகடலை (அடுத்த) கழி சேர் திரை வந்து எழு மீன் இரையை நுகர்கின்றிலை; போய் இனமும் (சாதியையும்) அடைந்திலை; இடலோடு இருந்தனை; (என்) சிந்தையினூடு உறுதுயர் உதவின எம் தமர்போல உமரும் (உம்தமரும் உன்னை விட்டு) அகன்றனரோ? உரை`` எனக் கூட்டி முடிக்க.
மாடு - பக்கம்.
கூர் மிகுந்த.
ஆல், அசை.
உறு துயர் - மிகுந்த துன்பம்.
`உதவினராகிய எம் தமர்` என்க.
கூன்களைச் சீராகக் கொண்டு, இப் பாட்டினை, `பதின்சீர்க் கழிநெடில் விருத்தம்` என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 46

குருகணி மணிமுன் கைக்கொடி யும்நல் விறலவனும்
அருகணை குவர்அப் பால்அரி தினிவழி மீள்மின்
தருகெழு முகில்வண் கைத்தகு தமிழ்விர கன்றன்
கருகெழு பொழில்மா டக்கழு மலவள நாடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப் பொருள் உடன் போக்கில் தலைவனுடன் போன தலைவியைப் பின் தேடிச் செல்லும் செவிலித் தாய் நிலை கண்டோர் அவளைத் தடுத்த துறையாகச் செய்யப்பட்டது.
இதன்கண் முதலில், ``தாயீர்`` என்பது வருவித்து, `இனி வழி அப்பால் அரிது; கொடியும், விறலவனும் கழுமல வளநாடு அருகு அணைகுவர்; மீள்மின்`` எனக் கூட்டி முடிக்க.
குருகு - வளையல்.
தரு கெழு முகில் வண் கை - கொடுத்தல் பொருந்திய மேகம்போலும் வண்மையை யுடைய கை(கைஉடைய) தமிழ் விரகன்.
கருகு - இருண்ட.
எழு - ஓங்கிய.

பண் :

பாடல் எண் : 47

நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்
சேடே றும்கொச்சை நேர்வளம் செய்துனை
மாடே றும்தையல் வாட மலர்ந்தனை
கேடே றும்கொடி யாய்கொல்லை முல்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருட் களவியலில் தோழி தலைவனை வரைவு கடாவுவாள் அவன் சிறைப் புறத்தானாக முல்லைக் கொடியை நோக்கிக் கூறும் முன்னிலைப் புறமொழியாகச் செய்யப்பட்டது.
``கொல்லை முல்லையே`` என்பதை வளர்த்தவள் வாடிக்கிடக்க நீ மலர்ச்சி அடைகின்றாய் அதனால் கொடியாய்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
``கோடு ஏறும் கொடியாய்`` என்பது சிலேடை.
கோடு ஏறுதல் - கொம்பைப் பற்றிப் படர்தல்; நான் மறுத்தலை மிகச் செய்தல் இது கேட்டுத் தலைவன் வரைவான் ஆவது பயன்.
சேடு - பெருமை.
கொச்சை நேர் வளம் செய்து - சீகாழி நகர்போலும் வளப்பத்தைப் பெறச் செய்து, `உன்னை வளம் செய்து` என மாற்றிக் கொள்க.
மாடும் ஏறும் - அடிக்கடி அருகில் வந்து பழகும்.

பண் :

பாடல் எண் : 48

முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை
முந்தி உறுபெரிய செந்தண் முனிவன் மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை அணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை யிலர் கணையும் இல்லை பகழிஉறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை இலர்விரக ரல்லர் தழை கொணர்வர்
தோழி இவர்ஒருவர் ஆவ அழிதர்வரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியற் பாங்கியிற் கூட்டத்துள், தலைவன்றனக்குக் குறைநேர் பாங்கி தலைவிக்கு அவன் குறை உணர்தல் துறையாகச் செய்யப்பட்டது.
தம் நிலத்து மலையை, `புகலி முதல்வனது மலை` என்கின்றாள் ஆதலின் அதற்கேற்ப, `வேதம் வழங்கும் மலை` என்றாள்.
``வில்லைக் கையில் உடைய ரல்லர்; கையில் அம்பும் இல்லை.
(ஆயினும்) இவ்வழியாக அம்பு தைக்கப்பட்ட யானை சென்றதோ? கலைமான் சென்றதோ? காட்டுப் பன்றி சென்றதோ! - என இவ்வாறெல்ம் வினவுகின்றார்.
இவை தவிர வேறுவகையான எந்த சொல்லையும் உடையரல்லர்.
வஞ்சிக்கும் தன்மை உடையவராய்த் தோன்றவில்லை.
கையில் கொண்டு வருவதோ தழை.
தோழீ! இப்படி ஒருவர் மிகவும் துன்பந் தோய்ந் தவராய்க் காணப்படுகின்றார்.
ஆ! ஆ! (என்ன துயர்நிலை!) எனக் கூட்டி உரைக்க.
கணை, பகழி - அம்பு.
இரலை - மான்.
கலை - ஆண்.
`இரலைக் கலை` என்பதில் சந்திக் ககர ஒற்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது.
கேழல் - பன்றி.
விரகு - இங்கு, சூழ்ச்சி ``ஆவ`` என்பது இரக்கச் சொல்.

பண் :

பாடல் எண் : 49

எழில்தருபிற வியின்உறு தொழில் அமர்துயர் கெடும்மிகு
பொழிலணி தருபுகலிமன் எழிலிணையடி இறைமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மிகு - பொழில் அணி`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
வழி தரு பிறவி.
பின்னே பின்னே விடாது தொடர்ந்து வருகின்ற பிறவி.
பிறவியின் உறு தொழில் அமர் துயர் - பிறவிகளில் பொருந்துகின்ற தொழிலில் நீங்காதிருத்தலால் வருகின்ற துன்பம்.
`இறைஞ்சுமின்` என்பது ``இறைமின்`` எனக் குறைந்து நின்றது.
இனி, `மலர்கணை` என ஒருசொல் வருவித்து, `இறைமின்` தூவிப் போற்றி செய்யுங்கள்` எனவும் உரைக்கலாம்.
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முற்றிற்று.
சிற்பி