நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை


பண் :

பாடல் எண் : 1

பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்பரற்ற - ஒவா
தழுவான் பசித்தான் என்றாங் கிறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை - வழுவாமே
முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத
செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த
காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று - காட்டவலான்
வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக் கழுவேற்றினான் - பாணர்
யாழை முறித்தான் எரிவாய் இடும்பதிகம்
ஆழி உலகத் தழியாமற் - காட்டினான்.
ஏழிசை வித்தகன் வந்தேனோரும் வானோரும்
தாழும் சரணச் சதங்கைப் - பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத்
திருவா வடுது றையில் செம்பொற் - கிழிஒன்
றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத
தென்னவன் நாடெல்லாம் திருநீறு - பாலித்த
மன்னன் மருகல்விடம் தீர்த்த பிரான் பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம் பெற்றிக் - குவலயத்தில்
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான் - நித்திலங்கள்
மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும்
பெருவார்த்தை தான் உடைய பிள்ளை - மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப
உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல்
மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர் கோமான் - நிலவிய
வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும்
செய்கையான் மிக்க செயலுடையான் - வெய்யவிடம்
மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித் திம்மண்ணுலகில் - வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர்
கொச்சைச் சதுரன்தன் கோமானைத் - தான்செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளைக்க - வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம - தென்னவலான்
கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் - தந்தபிரான்
பத்திச் சிவம்என்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் - கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப்
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை - என்னவல்லான்
வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே - காட்டினான்
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத் தூயவாய் - நன்னுதலி
கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் - கைம்மலர்க்கும்
அத்தா மரைஅடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே - ரல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு
ஒத்த மணம் இதுஎன் றோதித் - தமர்களெல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம்செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண்டுட - னேநிற்க
பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப்புக்குத்
தன்அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை
1. ஞானப் பால் உண்டது
2. திருப்பதிகம் அருளிச் செய்தல்
3. படிக் காசு பெற்றது
4. சமணர் கழுவேற நின்றது
5. யாழ்மூரிப் பதிகம் பாடியது
6. நெருப்பில் ஏட்டையிட்டுப் பச்சென்றிருக்கக் காட்டியது
7. இசை வல்லான்
8. பாலை நெய்தல் பாடியது
9. பொற் கிழி பெற்றது
10. பாண்டிய நாட்டில் நீற்றொளி பரப்பியது
11. விடம் தீர்த்தது
12. பொற்றாளம் பெற்றது
13. முத்துச் சிவிகை பெற்றது
14. மறைக் கதவம் அடைத்தது
15. ஆண்பனை பெண்பனை யாக்கியது
16. ஓடம் கரையேறவிட்டது
17. முயலகன் தீர்த்தது
18. ஆற்றில் எடு எதிர்ஏற விட்டது
19. எலும்பைப் பெண்ணாக்கியது
20. புத்தன் தலையில் இடிவிழச் செய்தது
21. அமணர் இட்ட தீயைப் பாண்டியன்மேல் ஏவியது
ஆகிய 21 தலைப்புகளில் இப்பாடல்களைத் தந்ததாக எழுதுவர்.

குறிப்புரை :

அடி-1 பூ - பொலிவு.
திரு - அழல்.
நுதல்.
நெற்றிச் சுட்டி யணியும் (அடி-2) குதலை மொழியும் குழவிப் பருவத்தைக் குறித்தன.
கோவாக் குதலை - ஒழுங்குபட வாராத குதலைச்சொல்.
அஃது ஆகு பெயராய் அதனைப் பேசும் பிள்ளையைக் குறித்தது.
`குதலை (அடி-3) அழுவானை இறைவன் காட்ட` என இயைக்க.
(அடி-2) `சிலம்பு அரற்றுமாறு (காலை உதைத்துக் கொண்டு) அழுவானை`` என்க.
`அழுவானை` என்பதில் இரண்டாம் உருபு தொகுக்கப்பட்டது.
(அடி-3) தந்தையாரைக் காணாது அழுத பிள்ளையை, ``பசித்து அழுதான்`` என்றது, `பால் தருக` என்னும் குறிப்புத் தோன்றுதற் பொருட்டாம்.
குழவிப் பருவத்துப் பிள்ளைகள் எப் பொழுது பாலை ஊட்டினாலும் மறாது உண்ணுதல் இயல்பேயாம்.
(அடி-4) `தொழுவான்` என்றதும் பிள்ளையாரையே.
`முன்னை நிலையிலும் தொழுது, இனியும் தொழுவான்` என்றபடி.
(அடி-4) துயர் தீர்க்கும் - துயர் தீர்க்க இசைந்த.
தோகை, உமாதேவி.
(அடி 4,5) `முப்பத்திரண்டு அறமும் வழுவாமே செய்தாள்` என்க.
(அடி-5,6) ``முதிராத கொங்கை`` என்றது நித்திய கன்னிகை யாதலைக் குறித்தது.
செப்பு - கிண்ணம்.
`கன்னிகை யாயினும் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த அருளாலே, அழுகின்ற பிள்ளையைக் கண்டவுடனே பால் சுரக்கப் பெற்றாள்` என்றது குறிப்பு.
(அடி-6)`கொங்கையை உடைய திருநுதலி` என்க.
`திரு நுதலி` என்பது மேற் கூறிய சொற்களின் குறிப்பால் உமாதேவியையே குறித்தது.
அப்பன் - இறைவன்.
(அடி-7) ``அருள் என்றது `ஆணை` என்றபடி.
`அவன் ஆணையின்றிச் செய்தல் கூடாமையின் அது பெற்றாள்` என்பதாம்.
(அடி-8) திரள் - திரட்சி.
``ஞானத்திரளாய் நின்ற பெருமான்`` என்று அருளிச் செய்ததும் காண்க.
இஃதே பற்றிப் பிள்ளையாரை, ``ஞானத்தின் திருஉரு`` எனச் சேக்கிழாரும் கூறினார்.
முன் நின்ற - ஞானத்தைத் திருப்பதிகங்களாகப் பரப்புதற்கு முற்பட்டு நின்ற.
செம்மல் - தலைவன்; ஞானத் தலைவன்.
இது முதலாகச் சொல்லப்படும் அற்புதங்களை யெல்லாம் பெரிய புராணத்துட் காண்க.
இருள் - புறச் சமய இருள்.
தீர்தல் - அவைகள் துச்சமாகச் தோன்றப் பெறுதல்.
``துப்புர வில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்தெழுந் தார்`` என்னும் சேக்கிழார் திருமொழியைக் காண்க.
``இருள் தீர்ந்த (அடி-9) முதல்வன்`` என இயைக்க.
முதன்மை - ஆசிரியத் தலைமை.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தார்.
`அவரிடையே வந்து அவதரித்த ஏறு` என்க.
ஏறு - ஆண் சிங்கம்.
பரசமய கோளரி.
(அடி-10) ஊழி முதல்வன் - சிவபெருமான்.
`அவன் சுட்டிக் காட்ட ஒண்ணாதவனாயினும் சுட்டிக்காட்ட வல்லவன்` என்க.
(அடி-11) பாழி - சமணப் பள்ளி.
(அடி-12) பாணர் - திருநீலகண்டப் பாணர்.
(அடி-14) `ஆழி உலகத்துக் காட்டினான்` என்க.
(அடி-15) வித்தகன் - சதுரப்பாடு உடையவன்.
(அடி-16) தாழும் - வணங்குகின்ற சரணம் - பாதம் பாதங்களில் சதங்கையணிதல் குழவிப் பருவத்தேயாம்.
(அடி-17) பாலையும் நெய்தலும் பாட வலான் - பாலை நிலத்தையும், நெய்தல் நிலத்தையும் ஒருங்கு சேர்த்துப் பாடி அதனாலே பாலை நிலத்தை நெய்தல் நிலமாகச் செய்ய வல்லவன்.
(அடி-19) அருளால் - சிவபெருமானது திருவருளால்.
ஐயன்- தலைவன்.
(அடி-20) தென்னவன் - பாண்டியன்.
வழங்குதலை.
`பாலித்தல்` என்பது மரபு.
(அடி-25) செவி - அரன் செவி.
நித்திலங்கள் - முத்துக்கள்.
(அடி-29) பெரு வார்த்தை - புகழ்.
(அடி-30) குழகன் - அழகன்; சிவபெருமான்.
நாவாய் - ஓடம் பாடவல்ல வாய்.
இருபொருள், `அது`, பகுதிப் பொருள் விகுதி.
(அடி-31) உள்ளம் - ஊக்கம்; `திருவருள் துணை செய்யும்` என்னும் உள்ளத்துறுதி.
ஊன்றுதல், இங்கே, செலுத்துதல்.
(அடி-32) மழவன் - கொல்லி மழவன்.
``சிறுமதலை`` என்பதை, `சிறுமிதனை` என ஓதுதல் சிறக்கும்.
வான் பெரு நோய் - மிகப் பெரிய நோய்.
அது `முயலகன்` எனப்படுவது.
(அடி-33) குழகன் - அழகன்; இளம் பிள்ளை.
குலம் - மேன்மை கோமான் - தலைவன்.
(அடி-36) அயில் வேல் கண் - கூர்மையான வேல் போலும் கண்களை உடைய.
மடமகள் - இளம் பெண்.
(அடி-38) சீர் நின்ற - புகழ் பெற்ற நிலைபெறப் பெற்ற.
(அடி-41) கொச்சை - சீகாழி.
அதன்கண் தோன்றி, சதுரப் பாடுடையவன் இவ் ஆளுடைய பிள்ளை.
தன் கோமான் - அவனுக்குத் தலைவனாகிய சீகாழி இறைவன்.
``செய்த`` என்பது `பாடிய` என்னும் பொருட்டாய், ``கோமானை`` என்ற இரண்டாம் உருபிற்கு முடிபாயிற்று.
(அடி-42) பச்சைப் பதிகம் திருநள்ளாற்றுப் பெருமான் மேல தாயினும், `எங்கு இருந்தும் பிள்ளையார்க்கு அருள் பிள்ளையார்க்கு அருள் புரிந்தவன் சீகாழிப் பெருமானே` என்னும் கருத்தால் அத் திருப்பதிகத்தையும், மற்றும் பல திருப்பதிகங்களையும் சீகாழிப் பெருமானுக்கு உரியவாகவே கூறினார்.
பா - பாடல்.
`பாவின்கண்` என ஏழாம் உருபு விரித்து.
அதனை (அடி-43) ``விளைக்க வல பெருமான்`` என்பதனோடு முடிக்க.
வித்துப் பொருள் - ஞானத்தின் அடி நிலைப் பொருள்கள்.
`ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த பாடல்கள் பதினாறாயிரம்` நம்பியாண்டார் நம்பிகள் தமது பிரபந்தங்களில் குறித்துள்ளார்.
எனினும் இன்று கிடைத்துள்ள பதிகங்கள், விடைவாய்ப் பதிகத்தைச் சேர்த்தாலும் `384-தாம்` என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
(அடி-44) `முத்திப் பேற்றை அருளுபவன் சிவபெருமா னல்லது பிறர் ஒருவரும் இல்லை` என்பது கருத்து ஆகலின் அப் பெருமானை இங்கு, ``முத்திப் பகவன்`` என்றார்.
எனவே, ``பகவன்`` என்பது முகமன் உரையாக ஏனைக் கடவுளர்க்கும் பெயராதல் பெறப் பட்டது.
``முத்திப் பகவ முதல்வன்`` என்றதனால், முத்தியொழிந்த சிலவற்றிற்கு ஏனையோரும் முதல்வராதலும் விளங்கும்.
(அடி-45) `அற்சிக்கும்` என்பது எதுகை நோக்கி, ``அத்திக் கும்`` எனத் திரிந்து நின்றது, ``ஆணை நமதே`` என்றது, சில திருப் பதிகங்களின் திருக்கடைக்காப்புக்களில், அப்பதிகங்களுக்குச் சொல்லப்பட்ட பயன் விளைதலை உறுதி செய்தற் பொருட்டு.
அங்ஙனம் சொல்லப்பட்ட பாடல்களைக் காண்க.
(அடி-47) `பத்திச் சிவம்` என்று கொண்டாடும் - `இவர் இவ் வுலகப் பிள்ளையல்லர்; பெரியோர் பலரும் பத்தி செய்து போற்றுகின்ற சிவ பரம் பொருளே` என்று சொல்லக் கொண்டாடிய.
(அடி-48) பாண்டிமாதேவி, மங்கையர்க்கரசியார்.
(அடி-49) அவர்தம் அமைச்சர் குலச்சிறையார்.
(அடி-52) வர்த்தமானீசர் - திருப்புகலூர்க் கோயில்களில் ஒன்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர்.
முருகன், முருக நாயனார்.
இவரைத் தமது திருப்பதிகத்துள் சிறப்பித்திருத்தலை அத்தலத் திருப் பதிகத்திற் காண்க.
(அடி-54) அத்தன் - (சிவநெறித் தலைவன்.
திருநீலநக்கன், திருநீலநக்க நாயனார்.
இந்நாயனாருடைய இல்லத்தில் பிள்ளையார் தம் திருக்கூட்டத்தோடும் எழுந்தருளி வழிபடப் பெற்றமையைப் பெரிய புராணத்தால் அறிக.
பிள்ளையாரது திருமணச் சடங்குகளை அந்நாயனாரே செய்ததையும் அதன்கண் காண்க.
(அடி-56-59) இப்பகுதியில் `பிள்ளையார்க்குத் திருமணம் செய்விப்பது` என முடிவு செய்த அவர்தம் பெற்றோர் முதலிய சுற்றத்தார் அவருக்கு ஒத்த வகையினளாக உறுதி செய்யப்பட்ட கன்னிகைதன் அழகே குறிப்பிடப்படுகின்றது.
துத்தம், ஏழிசைகளுள் ஒன்று ``குதலை`` என்றது இனிமை பற்றி `நன்னுதலியது` என ஆறாவது விரிக்க.
கோலம் - அழகு.
அம் எமன் குறங்கு - அழகி, மெத்தென்ற துடை.
சித்திரம் - அழகு.
காஞ்சி - இடையில் அணியும் மேகலை வகை களில் ஒன்று.
அல்குல் - விருட்டம்.
நான்கன் உருபுகள் பலவற்றையும் ``ஒத்த`` என்பதனோடு முடிக்க.
(அடி -60-65) ஓதி - சொல்லி.
`ஓதி` செய் காவணம்` என்க.
தமர்கள் - சுற்றத்தார்கள்.
காவணம் - பந்தல்.
``உடன் கண்டு நிற்க`` என்றது சுற்றத்தாரை.
பெருமணம், `நல்லூர்ப் பெருமணம்` என்னும் தலம்.
இத்தலமே பிள்ளையார்க்கு மகட் கொடை நேர்ந்தவர் வாழ்ந்த தலமும், பிள்ளையார் இறைவனை அடைந்த தலமும் ஆகும்.
தன் அத்தன் - தனக்கு அம்மையைக் கொண்டு ஞானப் பாலைக் கொடுப்பித்த அப்பன்; சிவபெருமான்.
``ஞானத் திரளாகி முன்னின்ற செம்மல்`` என்பன முதலாக, ``திருநீலநக்கற்கும் அன்புடையான்`` என்பது ஈறாகப் போந்த பெயர்களை எழுவாயாக வைத்து, `பெற்றவர்களோடும் பெருமணம் (தலம்) போய்ப் புக்குத் திருமணம் செய்காவணத்தே தமர்களெல்லாம் கண்டு நிற்கத் தன் அத்தன் அடியடைந்தான்; (இஃது) அழகிதே! என முடிக்க.
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை முற்றிற்று.
சிற்பி