நம்பியாண்டார் நம்பிகள் - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை


பண் :

பாடல் எண் : 1

புலனொ டாடித் திரிமனத்தவர்
பொறிசெய் காமத் துரிசடக்கிய
புனித நேசத் தொடுதமக்கையர்
புணர்வி னால்உற் றுரைசெயக்குடர்
 
சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்
சுடுவெ ணீறிட் டமண கற்றிய
துணிவி னான்முப் புரமெ ரித்தவர்
சுழலி லேபட் டிடுத வத்தினர்
 
உலகின் மாயப் பிறவி யைத்தரும்
உணர்வி லாவப் பெரும யக்கினை
ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
உபரி பாகப் பொருள்ப ரப்பிய

அலகில் ஞானக் கடலி டைப்படும்
அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
அடிய ரேமுக் கருளி னைச்செயும்
அரைய தேவத் திருவ டிக்களே.

பொழிப்புரை :

உலகில் மாயப் பிறவியைத் தரும் பெருமயக்கினை - இவ்வுலகில் நிலையில்லாதனவாகிய பல பிறவிகளைத் தருவதான அந்தப் பெரிய திரிபினை.
உணர்வு இலா மயக்கினை - மெய்யுணர்வோடு சிறிதும் தொடர்பில்லாத திரிபினை ஒழிய - யாவரும் விட்டு அகலும்படி.
வாய்மைக் கவிதையில் - உண்மைகள் நிறைந்த பாடல்களில்.
உபரி பாகப் பொருள் பரப்பிய - கலைகளின் முடிநிலைப் பொருள்களைப் பரக்க அருளிச் செய்தவரும்.
அலகில் ஞானக் கடலிடைப்படும் அமிர்த யோகம் - அளவற்ற ஞான நூலாகிய கடலைக் கடைந்தவழித் தோன்றும் அமுத மாகிய சிவயோகத்தால்.
சிவ ஒளிப்புக அடியரேமுக்கு அருளினைச் செயும் - சிவ சோதியில் கலக்கும் பேற்றினை அடியோங்களுக்கு அருளியவரும் ஆகிய அரைய தேவத் திருவடிகள் - திருநாவுக்கரசு தேவராகிய சுவாமிகள்.
(தலைவர்) புலனொடு ஆடித் திரி மனத்தவர் - ஐம்புலன்களோடே எப்பொழுதும் பழகித் திரிகின்ற மனத்தை உடையவரது பொறி செய் காமத் துரிசு அடக்கிய புனித நேசத்தொடு - ஐம்பொறிகளின் வழிச் செல்கின்ற ஆசைகளாகிய குற்றங்களை அடக்கிய வேறொரு தூய அன்புடனே.
தமக்கையர் புணர்வினால் உற்று உரை செய - தமக்கையார் திருவருள் வழிப்பட்ட அறிவினால் அறிந்து செல்ல.
(அச்சொல் வழியே ஒழுகி.
) சுலவு சூலைப் பிணி கெடுத்து தமது வயிற்றுட் குடைந்த சூலை நோயைப் போக்கி.
ஒளிர் சுடு வெண் நீறிட்டு அமண் அகற்றிய துணி வினால் - ஒளிவீசுகின்ற, நன்கு சுடப்பட்ட வெள்ளிய திருநீற்றைப் பூசிக்கொண்டு (முன்பு கொண்ட) சமணக் கோலத்தை நீக்கிய தெளிவினால் முப்புரம் எரித்தவர் சுழலிலே பட்டிடு தவத்தினர் - திரிபுரங்களை எரித்தவராகிய சிவபெருமானது ஆணையிலே பொருந்தி செய்யும் தவநெறியில் நின்றவராவர்.

குறிப்புரை :

`பெரு மயக்கினை ஒழிய, கவிதையில் பல பொருள்கள் பரப்பியதன் விளைவாகிய` யோகத்தினால் சிவ ஒளிப்புக அருளினைச் செயும் அரைய தேவத் திருவடிகள், புலனொடு ஆடித் திரிமனத்தவர்பால் (எழுகின்ற) காமம் ஆகிய குற்றம் (தம் மனத்திலே எழாதவாறு) அடக்கியதனால் தோன்றிய தூய அன்போடு (பத்தி யோடு) கூடித் தமக்கையர் உரை செய (அவ்வழி ஒழுகி) சூலைப் பிணி கெடுத்து வெண்ணீறு இட்டு, சமணக் கோலத்தை நீக்கிய துணிவினால் முப்புரம் எரித்தவரது சுழலிலே பட்டிடு தவத்தினர் ஆவர்` எனக் கூட்டி வினை முடிவு செய்க.
செய்யுள் நோக்கி முறை பிறழக் கூறினாராயினும், ``உரை செயத் திருநீறு இட்டு அமண் அகற்றிய துணிவினால் பிணி கெடுத்து சுழிலிலே பட்டிடு தவத்தினர்`` என்பதே கருத்து என்க.
``சுழல்`` என்பது `ஆற்றல்` என்னும் பொருளதாய்த் திரு வருளைக் குறித்தது.
``தவம்`` என்றது அரசுகள் சூலை நீங்கிய பின் இறுதிகாறும் மேற்கொண்டு செய்த உழவாரப்பணியைக் குறித்தது.
``பெருமயக்கு`` என்றது சமண் சமயக் கொள்கையை.
உபரி பாகம் - முடிநிலைப் பகுதி.
கடல், அமிர்தம் இவை உருவங்கள்.
``திருவடிக்கள்`` என்பதில் ககர ஒற்று விரித்தல்.

பண் :

பாடல் எண் : 2

திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
தெளிதேனொத் தினியசொல் மடவார்உர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடியவர்` நாடும் கதியாகிய நீதி என்க.
உர்ப்பசி - ஊர்வசி.
இறுதி நாளில் தேவ கணிகையர் சிலரை நாவுக்கரசர் முன் விடுத்து மயக்கச் செய்யும் முகத்தால் அவரது உள்ளத் தூய்மையை உலகறியச் செய்த வரலாற்றைப் பெரிய புராணத்துட் காண்க.
வசி - வசப்படுத்துவன.
`ஞானத் திரளாகிய உருமும், மனமும் நெக்கு உருகா, கண் அழுது` எனக் கொள்க.
உருகா, அழுது என்னும் வினையெச்சங்கள் ``உடையான்`` என்னும் குறிப்பு வினைப் பெய ரோடு முடிந்தன.
``குரு`` என்பது ஆகுபெயராய், `குரு உபதேசம்` எனப் பொருல் தந்தது.
புக்கு இடர் படு - புகுந்தபின் துன்பத்திலே அகப்படுகின்ற ``குடர் யோனிக் குழி`` என்பது உம்மைத் தொகை.
`திரிபவர் குழியில் குறுகார்` என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 3

குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார்
அழிந்தபொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே
கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே
கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.

பொழிப்புரை :

முதல் அடி முழுதும் மடவாரது வருணனை.
குழிந்து- ஆழமாகி - சுழி பெறு - நீர்ச் சுழியை உவமையாகப் பெறுகின்ற.
நாவி- உந்தி.
(அதினின்றும் எழுகின்ற) மயிர் நிரையர் - மயிர் ஒழுங்கை உடையவர்.
அம்மயிர் ஒழுங்கு மேலே இரு தனங்களின் இடையே செல்கின்ற.
தகை - அழகு, அழிந்த பொசி - வெளிப்படும் சுரத நீர்க் கசிவு.
`மடவாரது பொசி` என இயைக்க.
``பொசியதில்`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி.
மனமே நீ அணைந்து அயரும் அது - நெஞ்சே நீ அழுந்தி உன்னை நீ மறந்துவிடுகின்ற அந்த இழி நிலையை, நீ அறிந்திலை கொல்! கழிகிடு நாள் கழிந்த - இன்று கழிந்த நாள்கள் பல போயின.
(ஆயினும் இன்று தொடங்கியாவது) எழு நூறு அரும் பதிக நிதியே பொழிந்து அருளும் எங்கள் திருநாவின் அரசினையே - ஏழ் எழுநூறு திருப்பதிகங்களாகிய அருட் செல்வத்தைப் பொழிந் தருளிய எங்கள் திருநாவுக்கரசு தேவரையே, இதயம் கசிந்து புரிந்து நினை - உள்ளதும் உருகி விரும்பி நினை - பிறிது மருந்து இலை - (அதற்கு) வேறு மருந்து இல்லை.

குறிப்புரை :

`ஏழ் எழுநூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்`` என்ற சுந்தரர் திருமொழியைக் கொண்டு ``பதிகம் ஏழ் எழுநூறு பகரும் மா சிவ யோகி`` என இவர் பின்பு அருளிச் செய்தலால் இங்கு, ``எழு நூறு`` என்றது திருப்பதிகம் ``நாலாயிரத்துத் தொளா யிரம்`` என்பதைப் பாடலாக வைத்துக் கொண்டாலுங் கூட, `பதிகம் 490` ஆகும்.
ஆயினும் `இன்று` கிடைத்துள்ள பதிகங்கள் - 312 தாம்` என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

பண் :

பாடல் எண் : 4

இலைமா டென்றிடர் பரியா ரிந்திர
னேயொத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வம் எனவே கருதுவர்
நீள்சன் மக்கட லிடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திருநாவுக்கரசு`` என்போர் இடர் பரியார்; ``இச் செல்வம் நிலையாது`` எனவே கருதுவர்; சன்மக் கடலிடையிற் புக்கு அலையார்; அரன் நெறியாகும் கரை அண்ணப் பெறுவார்கள் - எனக் கூட்டி முடிக்க.
மாடு - செல்வம்.
பரியார் - சுமக்க மாட்டார்.
சன்மம் - பிறவி.
அரன் நெறி ஆகும் கரை - இவனது நெறியாகிய `சைவம்` என்னும் கரை.
அண்ணுதல் - அடைதல்.
வண்ணச் சிலை - சந்திர காந்தக் கற்கள்.

பண் :

பாடல் எண் : 5

என்பட்டிக் கட்டிய விந்தப்பைக் குப்பையை
இங்கிட்டுச் சுட்டபி னெங்குத்தைக் குச்செலும்
முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென
மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்
அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

என்பு அட்டி - எலும்புகளை நெருங்க வைத்து ``பைக் குப்பையை`` என்பதை, `குப்பைப் பையை` என மொழி மாற்றி உரைக்க.
குப்பை - புறத்துப் போடப்படும் பொருட் குவியல்.
அவற்றையுடைய பை உடம்பு.
``குரம்பையை`` என ஓதினால் வல் லொற்று வாராமையே யன்றிச் சந்தத்தில் ஓரெழுத்து மிகையாதலையும் நோக்குக.
மேலும் உடம்பைப் பையாக உருவகம் செய்த பின்பு குரம்பையாக உருவகித்தலும் கூடாமை காண்க.
தைக்கு - அணி செய்தற்கு.
தைத்தல் - அணிதல்.
செல்லும் - உதவும் (உடம்பின் நிலை யாமை இவ்வாறு இருக்கவும்) ``சில வன்பட்டிப் பிட்டர்கள் அறி வின்றிக் கெட்டு புத்தி வஞ்சித்து.
.
.
.
எய்ச்சுத் தட்டுவர் (இன்னும்) அப் பித்தர் இவரைச் சிந்தித்து அன்பர்க்குப் பற்றிலர்; அர்ச்சிக்கிலர்`` என வினை முடிக்க.
முன்பு அருந்திக்கு எத்திக்கு என இட்டுச் சுட்டி - முதலில் தங்கள் மனத்தில், `கல்வியைத் தரும் திசை எந்தத் திசை` என ஆராய்ந்து முடிவு செய்து மொய்ம்பு உற்றுக் கற்று அறிவின்றிக் கெட்டு- அம்முடிவில் உறுதியாய் நின்று பல நூல்களைக் கற்றும் அறிவில்லாமல் கேடெய்தி புத்தியை வஞ்சித்துக் கத்தி பிறருடைய உள்ளத்தையும் குழப்பி விடும் வகையில் மிகுதியாகப் பேசி.
எய்ச்சு விழுந்து தட்டுவர் - இளைத்து விழுந்து தடுமாறுவார்கள்.
அன்பர்க்கு - சிவனடி யாரிடத்தில்.
பற்று இலர் - விருப்பம் இல்லாதவர் ஆவர்.
அர்ச்சிக்கிலர்- சிவனையும் வழி பட மாட்டார்.
`அவர் திருநாவுக்கரசரை எவ்வாறு நினைவர்` என்பது குறிப்பெச்சம்.
வன் பட்டிப் பிட்டர்கள் - வன்கண்மையால் மனம் போனவாறு ஒழும்கும் பிட்டர்கள் (பிரஷ்டர்கள்) - சான்றோரால் விலக்கப்பட்டுபவர்கள்.

பண் :

பாடல் எண் : 6

பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
பெட்டியுரை செய்துசோறு கட்டியுழல் சமண்வாயர்
கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம்
முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
கற்றுணையில் வரும்ஆதி
பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பித்து அரசு - அறியாமையை உடைய அரசன்; பல்லவன்.
பதைத்தல், இங்கு வெறுத்தலைக் குறித்தது.
பதையாத - வெறுப்படையாத.
அஃதாவது, `விரும்பிக் கொள்கின்ற` என்பதாம்.
தேவு கடவுள் பல்லவன் விரும்பிக் கொள்கின்ற கடவுள் அருக தேவன்.
அக்கடவுளை இங்கு, ``கொத்தை நிலை உள தேவு`` என்றார்.
கொத்தை நிலை - குருட்டு நிலைமை.
`அறியாமை யுடைய ஓர் உயிர்` என்றபடி.
இங்ஙனம் கூறியது அகண்டப் பொருளாகச் சொல்லப் படாது கண்டப் பொருளாகச் சொல்லப்படுதல் பற்றியாம்.
பெட்டு - விரும்பி.
இஃது இகரச் சாரியை பெற்று.
``பெட்டி`` என நின்றது.
``சோறு`` என்றது, `வயிற்றுப் பிழைப்பு` என்னும் பொருளதாய் நின்றது.
`சோறு சுட்டி உரை செய்து உழல் வாயர்` என இயையும்.
``சமண் வாயர்`` என்பதை ``வாயராகிய சமணர்`` என மாற்றிக் கொள்க.
சமண் கைத்த அரசு - சமணரால் வெறுக்கப்பட்ட திருநாவுக் கரையன்.
அரசு புகழ் திருவாளன் - பின்பு அந்தவப் பல்லவ மன்னனே புகழ்ந்து கொண்டாடிய திருவாளன்.
ஞான முத்தி - சீவன் முத்தி நிலை.
மிதத்தல் - இங்கு நீந்துதல்.
நெல் துணையின் மிதவாமல் - ஒரு நெல்லளவு தொலைவு கூட நீரில் மிதந்து நீந்தாமல்.
கல் துணையில் வரும் ஆதி - கல்லாகிய தெப்பத்தின் மேல் வந்து கரை ஏறிய முதல்வன்; ஆசிரியன்.
``சமணரால் வெறுக்கப்பட்ட அரையனும், சிவ பூசையைக் கற்ற மதியினனும், அரசு புகழ் திருவாளனும், கல் துணையில் வந்த முதல்வனும் ஆகிய அவன் வைத்துச் சென்ற தமிழ் மாலை`` என்க.
அரசு வசை - தலையாய குற்றங்கள்; நூற்குற்றங்கள்.
``அவை பத்து`` என்பது இலக்கணம்.
``அவைகளுள் ஒன்றும் இல்லாத படி பாடி வைத்த தமிழ் மாலை`` என்க.
கனம் - பெருமை; மாட்சி.
அவை, நூற்குச் சொல்லப்பட்ட அழகு பத்தும் என்க.
ஓத - ஓதினால்.
`அந்நற்பதிகங்களே பின்னடிக்கு வைப்பு நிதியாய் உதவும்` என்பதாம்.
தான், தேற்றப் பொருட்டு.
பிரிநிலை ஏகாரத்தை, ``நற்பதிகம்`` என்பதனோடு கூட்டி யுரைக்க.
``கைத்த`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 7

பதிக மேழெழு நூறு பகரு மாகவி யோகி
பரசு நாவர சான பரம காரண வீசன்
அதிகை மாநகர் மேவி யருளி னாலமண் மூடர்
அவர்செய் வாதைகள் தீரு மனகன் வார்கழல் சூடின்
நிதிய ராகுவர் சீர்மை யுடைய ராகுவர் வாய்மை
நெறிய ராகுவர் பாவம் வெறிய ராகுவர் சால
மதிய ராகுவ ரீச னடிய ராகுவர் வானம்
உடைய ராகுவர் பாரில் மனித ரானவர் தாமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏழ் எழு நூறு - நாலாயிரத்துத் தொள்ளாயிரம் ``பதிகம்`` என்றதை, `பதிகப் பாடல்கள் எனக் கொள்ளுதல் பொருந்தும்.
அல்லாவிடில், `கிடையாது போன பாடல்கள் மிகப் பல` எனல் வேண்டும்.
``பரம காரண ஈசன் அதிகை மாநகர் மேவி, அமண் மூடர் அவர் செய் வாதைகள் அருளினால் தீரும் மா கவி யோகி, பரசு நாவரசான அனகன்`` என மாறிக் கூட்டுக.
கவி யோகி - யோக கவி.
யோகம், சிவ யோகம்.
பரசு - யாவராலும் துதிக்கப்படுகின்ற.
அனகன் - பாவம் இல்லாதவன்; தூயவன்.
பரம காரண ஈசன், சிவபெருமான்.
`அவன் அருளினால்` என்க.
சீர்மை - புகழ்`.
வாய்மை நெறி - மெய்ந் நெறி.
வெறியர் - இல்லாதவர்.
``பாரில் மனிதர் ஆனவர் தாமே, அனகன் வார்கழல் சூடின் நிதியர் ஆதல் முதலிய பயன்களைப் பெறுவர்`` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 8

தாமரைநகு மகவிதழ் தகுவன சாய்பெறுசிறு தளிரினை யனையன
சார்தருமடி யவரிடர் தடிவன தாயினும் நல கருணையை யுடையன
தூமதியினை யொருபது கொடுசெய்த சோதியின்மிகு கதிரினை யுடையன
தூயனதவ முனிவர்கள் தொழுவன தோமறுகுண நிலையின தலையின
ஓமரசினை மறைகளின் முடிவுகள் ஓலிடுபரி சொடுதொடர் வரியன
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன ஊறியகசி வொடுகவி செய்த புகழ்
ஆமரசுய ரகம்நெகு மவருளன் ஆரரசதி கையினர னருளவன்
ஆமரசுகொ ளரசெனை வழிமுழு தாளரசுத னடியிணை மலர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஊறிய கசிவொடு`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
``ஆம் அரசு, ஆர் அரசு, அவன் ஆம் அரசுகொள் அரசு, எனை ஆள் அரசு`` என வந்த ``அரசு`` அனைத்தும் திருநாவுக்கரசு ஒருவரையே குறித்ததன.
அந்த அரசு தன் அடியனை மலர்கள், ``தகுவன, அனையன`` என்பன முதலாகப் பேர் அறியப் புகழப் பட்டன.
தாமரை நகும் - தாமரை மலரைத் தோற்கச் செய்கின்ற.
அக இதழ் - பூக்களில் உள்ள அக இதழ்கள்.
தகுவன - போல்வன.
சாய் பெறு - நுணுகுதலைப் பெற்ற; மென்மையான.
தடிவன - போக்குவன.
மதி - சந்திரன்.
``ஒருபது`` என்றது இரு திருவடிகளிலும் உள்ள நகங்களைக் குறித்து.
தோம் - குற்றம்.
குண நிலையின - குணங்கள் பலவற்றிற்கும் இடம் ஆவன.
தலையின - அன்பர் பலரது தலைமேல் விளங்குவன.
ஓம் அரசு - ஓங்காரத்திற்குத் தலைவன் சிவபெருமான்; ``அவனை மறைகளின் முடிவுகள் ஓலம் இட்டுத் தேடுகின்ற அத்தன்மை யோடே அவைகளால் தேடி எட்ட அரியன`` என்க.
ஓவு அறும் உணர்வொடு சிவ ஒளியன - நீங்குதல் இல்லாத அருள் உணர் வோடே, சிவமாகிய ஒளிப் பொருளைக் கொண்டு விளங்குவன.
ஊறிய கசிவு - சுரந்து மிகுகின்ற அன்பு.
புகழ் ஆம் அரசு - புகழ் மிகுகின்ற உளன் - உளம்; மகர னகரப் போலி.
ஆர் - பொருந்துகின்ற.
`அருளால்` என உருபு விரிக்க.
அவன் ஆம் அரசுகொள் அரசு - அந்தச் சிவனே தானாம் தலைமையினைப் பெற்ற அரசு.
வழி - குடி வழி.
``திருநாவுக்கரசு`` என இறைவனால் சிறப்பிக்கப் பெற்ற அவர் நாவுக்கரசர் மட்டும் அல்லர்; மற்றும் பல்வேறு அரசரும் ஆவர் - என்றற்கு ``அரசு, அரசு`` எனப் பலவற்றைக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 9

அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
தறியாமைப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப்
பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி நாயை - அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போன்ற என்னை.
இது தன்மையைப் படர்க்கை போலக் கூறியது.
`சிவிகையில்` என ஏழாவது விரிக்க.
தவிசு - ஆசனம்.
இது சிவிகையில் இடப் பட்டிருப்பது.
சிவிகையில் ஏறித் தவிசில் வீற்றிருந்து உலாவும் படி செய்தது, ஆசிரியத் தன்மையை எய்து வித்தமையால் ஆம்.
எனவே, `அத்தகைய பேரருளை எனக்கு வழங்கிய திருநாவுக்கரசு` என்றவாறு.
இவ்வாசிரியருக்கு நாவுக்கரசர் இத்தகைய அருளை வழங்கியது இவர் அவரை நாள் தோறும் வழிபட்டு வந்த வழிபாட்டினாலாம்.
`வழி பாட்டு வழியாகவும்` ஆசிரியரது அருளைப் பெறுதல் என்னும் வேடன் கதையால் அறியலாம்.
தெய்வங்களையும், பெரியோர்களையும் வழிபடுகின்ற வழிபாடுகட்கும் பயன் தருபவன் இறைவனே யன்றோ! அறியாமைப் பசு தை சிறியோர் - ஆணவ மலத்தின் காரியமாகிய அறியாமையாகிய பசுத் தன்மை பொருந்திய சிறியோர்கள்.
`அவர் களது கூட்டத்தில் சேர்ந்து அறியாமையில் கிடந்த கொடியேனுக்கு அருள்புரிந்த திருநாவுக்கரசு` என்க.
ஐ - தலைமையை உடைய.
அஃதாவது, `ஆசிரியத் தன்மையை உடைய` என்பதாம்.
குண மேரு - நற்பண்புகளே உருவாகிய மகாமேரு மலை.
இஃது உருவகம்.
விட்டு - விட்டமை யால் ``திருநாவுக்கரசாகிய குண மேருவை அவரது பெருமையை அறிந்த பின்பு பின்பற்றாது பகைமை யுள்ளத்தோடே இருந்ததால் சமண் மூகர்க்கு சிவலோகக் கதி இழவுற்றது`` என்க.
இழவு - இழப்பு.
``திருநாவுக்கரசரைக் சமணர் சொற்கேட்டு முதலில் பல ஒறுப்புக் உள்ளாக்கிய பல்லவ மன்னன் அவர் கல்லை மிதப்பாகக் கடலைக் கடந்து கரையேறிய பின்பு அவரது பெருமையை உணர்ந்து அவரை வணங்கிச.
சைவனாகிச் சிவாலயப் பணிகளைச் செய்தான்.
அவைகளைக் கண்ட பின்பும் சமணர்கள் திருந்தவில்லை.
அதனால் யாருக்கு இழப்பு? சமணர்க்குத்தான் இழப்பு`` என்றபடி.
இது பற்றியே நாவுக்கரசரும் அவர்களை, ``திருந்தா அமணர்`` எனக் குறித்தருளினார்.
`என்னை` என்னும் வினாப் பெயர் இடைக் குறைந்து ``எனை`` என நின்றது.
ஓகாரம் இரக்கப் பொருட்டு.
மொட்டு - அரும்பு.
அகலுதல் - அது கட்டவிழ்ந்து மலர்தல்.
மொட்டுக் கட்டவிழ்ந்து மலர்தல் போல உள்ளம் அறியாமைப் பிணி நீங்க விரிவடைதலை, ``மொட்டு அகல்வு`` என்றார்.
``அத்தகைய செயலில் அதற்கு உரித்தாக ஒன்றையும் பெறுதல் இல்லாத பிண நூல்`` என்க.
பிண நூல் - உயிரற்ற நூல்.
``அதனைப் பெருக (மிகவும்)ப் பொருளாகக் கருதும் சமண் மூடர்`` என்க.
`தேவர்க்கும்` என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
பசு - பசுத் தன்மை.
அஃதாவது, பாசத்தால் கட்டுண்ணும் தன்மை.
தைத்தல் - பொருந்துதல்.
``தை சிறியோர்`` என்னும் வினைத் தொகையில் வல்லொற்று மிகாமை தொகுத்தல்.
``அரிது`` இரண்டும் `அரிதாயது` எனக் குறிப்பு வினையாலணையும் பெயர்.
அவற்றுள் முன்னது அருமை இன்மை குறித்து நின்றது.
செடி காயம் - (குளித்தல் இல்லாமையால்) முடி நாற்றம் பொருந்திய உடம்பு.

பண் :

பாடல் எண் : 10

சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
திரியும் பத்தியிற் சிறந்தவர்
திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
திகழும் பைம்பொடித் தவண்டணி
 
கவசம் புக்குவைத் தரன்கழல்
கருதுஞ் சித்தனிற் கவன்றியல்
கரணங் கட்டுதற் கடுத்துள
களகம் புக்கநற் கவந்தியன்
 
அவசம் புத்தியிற் கசிந்து கொ
டழுகண் டசத்துவைத் தளித்தனன்
அனகன் குற்றமற் றபண்டிதன்
அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
 
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
பசுபந் தத்தினைப் பரிந்தடு
பரிசொன் றப்பணிக்கும் நன்றுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவ சம்பத்து - சிவ நெறியாகிய செல்வம்.
(சிறந்தவர்க்கு) என நான்கவாது விரிக்க.
திலகன் - அழகு தருபவன்.
சிட்டன் - மேன்மையுடையவன்.
பொடி - திருநீறு.
``பைம் பொடி`` எனப் பசுமை கூறியது அன்போடு அணியப் படுதல் பற்றி.
`விருப்பம்` என்னும் பொருளதாகப் `பெள்` என்னும் முதனிலை `டு` என்னும் இறுதி நிலையோடு புணர்ந்து, `பெண்டு` என வருதல் போல `வெண்மை` என்னும் பொருளதாகிய `தவள்` என்னும் முதனிலை, `டு` என்னும் இறுதி நிலையோடு புணர்ந்து, ``தவண்டு`` என வந்தது.
தவண்டு அணி கவசம் - வெள்ளை நிறத்ததாய் அணியப்படும் கவசம்.
வெண்திருநீறு ``புக்கு வைத்து`` என்பதில் ``வைத்து` என்றது அசை.
சித்தன் - சித்தத்தை (மனத்தை) உடையவன்.
இல் கவன்று இயல் கரணம் - இல் வாழ்க்கையில் கவலை கூர்ந்து இயங்குகின்ற மனம் முதலிய அகப் பொறிகள்.
கட்டுதற்கு - அவைகளைக் கட்டுப் படுத்தற்கு.
அடுத்து உள - பொருத்தமாய் உள்ள.
களகம் புக்க நல் கவுந்தியன் - கழுத்தளவும் போர்த்த கந்தைப் போர்வையை உடையவன்; `பற்றுக்களை விட்டவன்` என்றபடி, ``கந்தை மிகயைாம் கருத்தும்`` 1 எனச் சேக்கிழாரும் கூறினார்.
கவந்தி - கந்தை.
களகம் - கழுத்தில் சுற்றப்படுவது.
அவசம் - வசம் இன்மை பரவசம்.
அழு கண்டம் - அன்பினால்.
விம்முகின்ற குரல்.
அளிக்கப்பட்டன திருப் பதிகங்கள் `அவைகளைத் தன் குரலில் வைத்திருந்து வெளிப் படுத்தினான்` என்பதாம்.
அனகன் - பாவம் இல்லாதவன்.
அரசு - ஆளுடைய அரசு.
`திலகன், சித்தன், கவந்தியன், அளித்தனன், அனகன், பண்டிதன் ஆகிய அரசு` என்க.
ஒர் பற்று - ஒப்பற்ற துணை.
உவந்து உறு பரஞ்சுடர் - எங்களிடத்து மகிழ்ச்சி கொண்டு வந்து பொருந்தியுள்ள பேரொளி.
பல சங்கை பதை பரஞ்சுடர் - வினைக் கூட்டம் பதைத்து அழிதற்கு ஏதுவான பேரொளி.
இத்தொடரில் மிகுந்துள்ள பகர ஒற்றுக்கள் சந்தம் நோக்கி விரித்தலாய் நின்றன.
படிறு இன்றி - வஞ்சனையின்றி.
பசு பந்தம் - உயிர்களைப் பசுத்தன்மைப் படச் செய்துள்ள கட்டு.
பரிதல் - அறுத்தல்.
அடு பரிசு ஒன்ற - வெல்லும் தன்மையைப் பொருந்தும்படி.
பணிக்கும் - திருவாய் மலர்ந்தருளுவான்; ஆசீர்வதிக்கும்.
அவனது மொழி நிறைமொழி யாதலின்.
(அவன் ஆசீர்வதித்தபடியே பசு பாசங்கள் அற்றொழியும்) நன்று - நன்றாக; முற்றாக.
உம்மை, உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 11

நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி
நளினம்வைத் துயினல்லால்
ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற்
ருள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில்
பொறியில்ஐம் புலனோடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``என்றும் ஆதியும், அந்தமும்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
இகம் பரம் - இப்பிறப்பு வரும் பிறப்பு.
இத் தொடர்ச்சி முதலும் முடிவும் அறியப்படாமையின் ``என்றும் ஆதியும் அந்தமும் இல் இகம் பரம்`` என்றார்.
சூழல் - நிலைமை.
புகில் - புகலிடமாகப் புகுவதாயின்.
பொன்றுவார் பொறியில் ஐம்புலனோடே புகும் சூழலில் புகேம் - (பிறவிக் குழியில் வீழ்ந்து) கெடுவார் ஐம் பொறிகள் வழியாக ஐம்புலன்களில் புகுகின்ற அந்த நிலைமையில் யாம் புக மாட்டோம்.
``புலனோடு`` என்றது உருபு மயக்கம்.
அடி நளினம் - திருவடியாகிய தாமரை மலர்களில்.
`ஆதரம் வைத்து உயின் அல்லது ஆவது ஒன்றும் கண்டிலம்` எனக் கூட்டி யுரைக்க.
ஆவது - தக்கது.
மற்று உள்ளன.
உபாயம் - பிறவியைக் கடத் தற்குக் சொல்லப்படுகின்ற வழிகள்.
அவற்றுள் ஒன்றையும் நாம் விரும்பமாட்டோம்.
ஆல், அசை.
``மாலை`` என்றதற்கு ஏற்ப இப்பிரபந்தத்தின் இறுதிப் பாட்டின் இறுதிச் சீர் முதற் பாட்டின் முதற்சீரோடு இயைந்து மண்ட லித்து முடிந்தமை காண்க.
பதினொன்றாந் திருமுறை உரையுடன் முற்றுப் பெற்றது.
சிற்பி