விறன்மிண்ட நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

விரைசெய் நறும்பூந் தொடையிதழி
வேணி யார்தங் கழல்பரவிப்
பரசு பெறுமா தவமுனிவன்
பரசு ராமன் பெறுநாடு
திரைசெய் கடலின் பெருவளனும்
திருந்து நிலனின் செழுவளனும்
வரையின் வளனும் உடன்பெருகி
மல்கு நாடு மலைநாடு.

பொழிப்புரை :

நறுமணம் கமழ்கின்ற அழகிய கொன்றை மாலையை அணிந்த சடையினை உடைய சிவபெருமானின் திருவடி களைவழிபட்டு, மழுப்படையைப் பெற்ற அரிய தவத்தையுடைய முனிவராகிய பரசுராமன், வருணனிடத்தில் பெற்ற நாடாயும், அலை வீசுகின்ற கடலின்கண் உள்ள முத்து, பவளம் முதலிய வளங்களும், திருந்திய மருத நிலத்தின் செழுமையான வளங்களும், மலை வளங் களும் ஒருங்கு நிறைந்து வளம் மிகுந்திருக்கும் நாடாயும் உள்ளது மலைநாடாகும்.

குறிப்புரை :

பரசுராமன்: இச்சொல், பரசும் இராமன், பரசு பெற்ற இராமன் என இருபொருளும் பட நின்றது. இம்முனிவனின் தந்தையாகிய சமதக்கினி முனிவனைக் கார்த்தவீரியன் கொன்றுவிட, அவனை மீளக் கொல்லுதற் பொருட்டுச் சிவபெருமானை நோக்கி வரம் கிடந்தனன் என்றும், அதற்கிரங்கிய பெருமானும் பரசு என்னும் கருவியை வழங்கினர் என்றும், அதனால் அக் கார்த்தவீரியனைக் கொன்று தம் தந்தையையும், அவரின் மூதாதையரையும் மகிழ்வித் தனன் என்றும் காஞ்சிப் புராணம் முதலியவற்றால் அறிகிறோம். ஆதலின் வேணியார்தம் கழல் பரசி, பரசு பெறும் மாதவன்` எனச் சேக்கிழார் குறித்தார். இம்முனிவன், கார்த்தவீரியனைக் கொன்ற தோடன்றி அவனொடு சேர்ந்த பிறரையும் கொன்றனன் என்றும், அதனால் நேர்ந்த பழிக்காகத் தன் பரசினைக் கடலில் எறிந்தனன் என்றும், அவ் வாறு எறிந்த இடத்தில் நீர் விலக ஒரு நாடு உண்டாயிற்று என்றும், அதனை வருணனிடத்திலிருந்து இவன் பெற்றனன் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகின்றது. அதனை எண்ணியே ஆசிரியரும் `பரசுராமன் பெறுநாடு` என்றார். இந்நாடே மலை நாடாகும். மலைகள் மிகுந் துள்ளமை பற்றி இப்பெயர் பெறினும், இது கடல் வளம், மருத வளம், மலைவளம் ஆகிய மூன்றும் உடையதாகும். திருந்துநிலம் - திருந்திய நிலம்; மருத நிலம். `நீர் இன்றியமையாது உலகெனில் யார் யார்க்கும் வானின்றமையாது ஒழுக்கு` (குறள், 20) எனவரும் திருக் குறளால் வானால் நீரும், நீரால் ஒழுக்கமும் சிறந்து நிற்கும் என்பது தெரியவருகிறது. இவ்வாற்றான் நிலவளனும், பண்பு வளனும் ஒருங்கமைந் திருத்தலின் `திருந்து நிலன்` எனப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வாரி சொரியுங் கதிர்முத்தும்
வயல்மென் கரும்பிற் படுமுத்தும்
வேரல் விளையுங் குளிர்முத்தும்
வேழ மருப்பின் ஒளிர்முத்தும்
மூரல் எனச்சொல் வெண்முத்த
நகையார் தெரிந்து முறைகோக்குஞ்
சேரர் திருநாட் டூர்களின்முன்
சிறந்த மூதூர் செங்குன்றூர்.

பொழிப்புரை :

கடல் அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்ட ஒளி வீசுகின்ற முத்துக்களையும், வயலில் உள்ள மென்மையான கரும்பு களினின்றும் உதிர்ந்த முத்துக்களையும், மூங்கிலிலிருந்து வெளிப்ப டும் குளிர்ந்த முத்துக்களையும், யானைக் கொம்பினின்றும் உதிர்ந்த முத்துக்களையும், இவர்களின் பல்வரிசைகள் என்று சொல்லத் தக்க வெள்ளிய பற்களையுடைய பெண்கள் ஆராய்ந்தெடுத்து வேறு, வேறு மாலைகளாகக் கோக்கும், சிறப்பினை உடைய சேரர்களது செல்வம் மிக்க நாட்டிலுள்ள சிறந்த ஊர்களில், முற்படச் சிறந்து நிற்பது செங்குன்றூர் ஆகும்.

குறிப்புரை :

வாரி - கடல். வேரல் - மூங்கில். மூரல் - பல், இம் மலை நாட்டில் உள்ள பெண்கள், முத்துக்களே பற்களென நிற்பன எனக் கூறுமாறமைந்த பற்களை உடையவர்கள். முத்தன்ன வெண்ணகை யார் என்பது கருத்து. முன்னைய பாடலில் கடல், நிலன், மலை ஆகிய மூன்றன் வளங்களும் அமைந்தது மலைநாடு என்பதற்கேற்ப, இப்பாடலில் வாரி, வயல், வேரல், வேழம் ஆகியவற்றில் விளையும் முத்துக்களைக் கூறியுள்ளார். இவற்றில் பின்னைய இரண்டும் மலைபடு பொருள்களாம். மலைகள் மிக்கதாதலின் இந்நாட்டிற்கென இவ்விரு பொருள்களையும் கூறி, ஏனைய இருநாடுகளும் இதற்கு அயலாதலின் ஒவ்வொன்றே கூறினார். செங்குன்றூர் - இது, கேரளம், திருவிதாங்கூர் மாவட்டத்தில் கொல்லம் என்னும் ஊருக்கு அண்மை யில் உள்ளது.

பண் :

பாடல் எண் : 3

என்னும் பெயரின் விளங்கியுல
கேறும் பெருமை யுடையதுதான்
அன்னம் பயிலும் வயலுழவின்
அமைந்த வளத்தா லாய்ந்தமறை
சொன்ன நெறியின் வழியொழுகும்
தூய குடிமைத் தலைநின்றார்
மன்னுங் குலத்தின் மாமறைநூல்
மரபிற் பெரியோர் வாழ்பதியாம்.

பொழிப்புரை :

திருச்செங்குன்றூர் என்னும் பெயரால் விளக்கம் பெற்று உலகில் மதிக்கத்தக்க பெருமையை உடையது இப்பதியாகும். இப்பதியானது, அன்னங்கள் வாழ்கின்ற வயல்களில் உழவினால் அமைந்த நிலவளத்தாலும், தெளிந்த பொருள்களையுடைய மறைகள் கூறியவாறு ஒழுகும் தூய்மையாலும், சிறந்த குடிப்பிறப்பினை உடைய வேளாண்மக்களும், நிலைபெற்ற குலத்தினையுடைய பெருமை பொருந்திய நான்மறைவழி ஒழுகுகின்ற மறையவர்களும் சிறந்து வாழ்கின்ற ஊராகும்.

குறிப்புரை :

இப்பாடலில் குறிக்கப்பெற்ற மரபினர் வேளாளரும், மறையவரும் ஆவர். இவர்கள் இருவரும் மறைவழி ஒழுகலில் ஒத்தவர்கள். ஆயினும் வேளாளர் உழுதொழிலை மேற்கொண்டிருப் பவர்கள். மறையவர் மறைவழி ஒழுகும் ஒழுக்கத்தை மேற்கொண் டிருப்பவர்கள். இவ்விரு மரபினரும் வாழ்கின்ற ஊர் இதுவாகும். தில்லையில் மூவாயிரவர் வேதியர்கள் இருந்தமை போல, இப்பதியிலும் மூவாயிரவர் வேதியர்கள் இருந்தனர் என நம்மாழ்வார் குறித்துள்ளார். `மனக்கொள்சீர் மூவாயிரவர் வண்சிவனு மயனுந் தானு மொப்பார் வாழ், கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன்றூரிற் றிருச்சிற்றாற்றங்கரை யானை, யமர்ந்த சீர்மூவாயிரவர் வேதியர்கள் தம்பதியவனி தேவர் வாழ்வார்,` (திருவாய்.4 பா.6,10) என்பது நம்மாழ்வார் திருவாக்காகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 4

அப்பொற் பதியி னிடைவேளாண்
குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச்
சிவனார் செய்ய கழல்பற்றி
எப்பற் றினையும் அறஎறிவார்
எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பாற் பரிவுடையார்
எம்பி ரானார் விறன்மிண்டர்.

பொழிப்புரை :

அத்தன்மைத்தாகிய அழகிய ஊரின்கண் வேளாண் குலத்தை விளக்குதற்கு ஏதுவாகத் தோன்றியவர். சொலற்கரிய பெருஞ்சிறப்பினையுடைய சிவபெருமானின் சிவந்த நிறமுடைய திரு வடிகளை எப்பொழுதும் எண்ணிய வண்ணம் இருத்தலின் எவ்வகைப் பற்றையும் அறுமாறு செய்பவர். யாவராலும் அளந்தறியக் கூடாத பெருமையுடையவர். மெய்யடியார்களிடத்துப் பேரன் புடையவர். இவர் எம் தலைவராகிய விறன்மிண்ட நாயனார் ஆவர்.

குறிப்புரை :

பற்றற்றானைப் பற்றப் பற்று விடுமென்பர் திருவள்ளுவ னாரும் (குறள், 350). ஆதலின் `சிவனார் செய்ய கழல்பற்றி எப்பற்றி னையும் அற எறிவார்` என்றார். அகப்புறப் பற்றுக்களின் வழிவரும் பற்றுக்கள் பலவாதலின் `எப்பற்றினையும்` என்றார். உம்மை - முற்றும்மை.
`சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்`
எனவரும் திருவாசகத் (தி.8 ப.8 பா.20) திருவாக்கும் ஈண்டறியத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 5

நதியும் மதியும் புனைந்தசடை
நம்பர் விரும்பி நலஞ்சிறந்த
பதிக ளெங்குங் கும்பிட்டுப்
படருங் காதல் வழிச்செல்வார்
முதிரும் அன்பிற் பெருந்தொண்டர்
முறைமை நீடு திருக்கூட்டத்
தெதிர்முன் பரவும் அருள்பெற்றே
இறைவர் பாதந் தொழப்பெற்றார்.

பொழிப்புரை :

அவர், கங்கையையும், இளம்பிறையையும் அணிந்த சடைமுடியையுடைய சிவபெருமான் திருவுளம்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கி, அப் பெருமானிடத்து மேன்மேலும் தழைத்துவரும் அன்பின்வழிச் செல் கின்றவர், முதிர்ந்த அன்புடைய பெருமை மிகுந்த அடியவர்கள் தாம் ஆற்றிவரும் திருத்தொண்டின் முறைமை தொடர்ந்து நீடு மாறு வழிபாடற்றிவரும் திருக்கூட்டத்தின்முன்பு சென்று வணங்கப் பெற்ற பின்னர் சிவபெருமான் திருவடிகளை வணங்கும் ஒழுக்கமுடையவர்.

குறிப்புரை :

இறைவன் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளை முறை யாக வணங்கி மகிழ்வது அடியவர்களிடத்து இருக்கும் சீரிய பழக்கமாகும்
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே. -தி.10 பா.1427
எனத் திருமூலர் ஆற்றுப்படுத்தியிருக்கும் அருமையும் காண்க. வேட மாத்திரத்தால் வணங்குதலன்றி முதிரும் அன்புடையாரையே வணங் குவர் என்பது தோன்ற `முதிரும் அன்பில் பெரும்தொண்டர் முறைமை நீடு திருக்கூட்டம்` என்றார். நலம் சிறந்த பதி - இறைவன் அத்திருப்பதியில் கோயிலாகக் கொண்ட நாள்முதல் தன்னடைந் தார்க்கு இன்பங்களைத் தந்தருளிவரும் திருப்பதி. முன்பரவுதல் - இறைவனை வணங்குமுன் இவ்வடியவர்களை வணங்குதல். இனி அவ்வடியவர் வணங்குமுன்னர் தாம் அவர்களை வணங்கி எனினும் ஆம். இத்தகைய கொள்கையே, பின்னர் அடியவர் கூட்டத்தை வணங் கிச் செல்லாது இறைவனை வணங்கிச் சென்ற சுந்தரர் மீது சினக்கச் செய்தது.

பண் :

பாடல் எண் : 6

பொன்தாழ் அருவி மலைநாடு
கடந்து கடல்சூழ் புவியெங்கும்
சென்றா ளுடையார் அடியவர்தம்
திண்மை ஒழுக்க நடைசெலுத்தி
வன்தாள் மேருச் சிலைவளைத்துப்
புரங்கள் செற்ற வைதிகத்தேர்
நின்றா ரிருந்த திருவாரூர்
பணிந்தார் நிகரொன் றில்லாதார்.

பொழிப்புரை :

பொன் திரளோடு விழுகின்ற அருவிகளையுடைய சேரநாட்டைக் கடந்து, கடல் சூழ்ந்த நிலவுலகத்தில் உள்ள பல திருப் பதிகளுக்கும் சென்று, தம்மை ஆளாகவுடைய சிவபெருமானின் அடியவர்கள் தாம் கொண்டிருக்கும் திட்பமான ஒழுக்கநெறியை வழுவாமல் நடக்கச் செய்து, வலிமை மிகுந்த அடிப்பாகத்தை உடைய மேருவாகிய வில்லை வளைத்து முப்புரங்களை எரித்தற்குக் காரண மான, நான்மறைகளாகிய குதிரைகளைப் பூட்டிய நிலமாகிய தேரில் நின்றருளிய சிவ பெருமான், வீற்றிருந்தருளும் திருவாரூரைத் தமக்கு வேறொருவரும் ஒப்பாகாதவராகிய விறன்மிண்டர் வணங்கினார்.

குறிப்புரை :

திண்மை ஒழுக்கம் - தாம் கொண்ட ஒழுக்கத்தில் உறு திப்பாடுடைமை. வைதிகத்தேர் - மறைகளாகிய குதிரைகள் பூட்டப் பெற்ற தேர். ஈர்த்துச் செல்லும் ஊர்தியால் தேர் இப்பெயர் பெற்றது. `வானோர் எல்லாமொரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப` (தி.1 ப.11 பா.6), `முப் புரம்வெந் தவியவை திகத்தேர் ஏறிய ஏறுசே வகனே` (தி.9 ப.1 பா.10), எனவரும் திருமுறைத் திருவாக்குகளும் காண்க. திரிபுரம் எரித்த வரலாறு சங்க இலக்கியங்களில் ஆங்காங்கெல்லாம் பேசப்படுகிறது.
`செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி` (தி.6 ப.32 பா.1), `சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி` (தி.6 ப.32 பா.3), `புரமெரித்த முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே` (தி.6 ப.34 பா.2) எனவரும் திருவாரூர்த் திருத்தாண்டகங்களில் பெரிதும் இவ்வரலாறு இயைத்துப் பேசப்பெறுகின்றதாதலின் ஆசிரி யரும், `புரங்கள் செற்ற வைதிகத்தேர் நின்றா ரிருந்த திருவாரூர்` எனக் குறிப்பாராயினர்.

பண் :

பாடல் எண் : 7

திருவார் பெருமை திகழ்கின்ற
தேவா சிரிய னிடைப்பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்
தம்மைத் தொழுது வந்தணையா
தொருவா றொதுங்கும் வன்றொண்டன்
புறகென் றுரைப்பச் சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு
பெற்றார் மற்றும் பெறநின்றார்.

பொழிப்புரை :

மங்கலம் பொலிந்து நிற்கும், பெருமை மிக்க தேவா சிரியன் என்னும் காவணத்தில் சிவப்பொலிவு ததும்ப நிற்கும், சிவ பெருமானின் அடியவர்களைப் புறத்தே வணங்கிச் செல்லாது, இவ் வடியவர்க்கு அடியனாகும் நாள் எந்நாளோ? என அகத்து அன்பு செய்து, ஒருவாறாக ஒதுங்கிச் செல்லும் நம்பியாரூரர் இத்திருக் கூட்டத்திற்குப் புறகு என்று சொல்ல, சிவபெருமான் திருவருளால் பெருகி நிற்கும் பெரிய பேற்றினைப் பெற்றுக் கொண்டவர். மேலும் சிவபெருமானையும் அவ்வாறு `புறகு` என்று கூறும் பேறும் பெற்றவர்.

குறிப்புரை :

திரு - மங்கலம்: நன்மை பெருக நிற்கும் மங்கலம். திருநீறு, உருத்திராக்கம், திருவைந்தெழுத்து ஆகிய மூன்றையும், தமக் குரிய பொருளாகக் கொண்டிருக்கும் அடியவர் உளத்தில் இறைவனும் கோவில் கொண்டிருப்பன். எனவே அடியவரும் அவர் உளத்தில் நிற்கும் இறைவனும் எழுந்தருளியிருக்கும் இடம் இக்காவணமாதலின் திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியன்` என்றார். விறன்மிண்டர் உள்ளத்தில் இறைவன் எழுந்தருளி இருப்ப அப்பெரும் பேற்றாலேயே நம்பியாரூரைப் புறகு என்றார். அவ்வருள் உந்துதலினாலேயே இறைவனையும் புறகு என்றார். அதுவும் இறைவன் தர வந்ததாதலின் `மற்றும் பெற நின்றார்` என்றார். தேவாசிரியன் காவணத்தில் நிற்கும் அடியவர்களை அணுகச் சென்று புறத்தே வணங்காது செல்லினும், அவர் அகத்தே அவர்களை வணங்கி வருதலின் `ஒருவாறு ஒதுங்கும்` என்றார். அவர் பெருமையும், தம் சிறுமையும் நோக்கி ஒதுங்கினா ரல்லது, ஒதுக்கினர் அல்லர். `திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்` என்றும், `விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்` (தி.7 ப.39 பா.1, 10) என்றும் இவர் பின் கூற இருக்கும் திருவாக்குகளால் இவ்வுண்மை அறியப்படும். மற்று, பிறிது என்னும் பொருளில் வந்தது.

பண் :

பாடல் எண் : 8

சேணார் மேருச் சிலைவளைத்த
சிவனா ரடியார் திருக்கூட்டம்
பேணா தேகும் ஊரனுக்கும்
பிரானாந் தன்மைப் பிறைசூடிப்
பூணா ரரவம் புனைந்தார்க்கும்
புறகென் றுரைக்க மற்றவர்பாற்
கோணா வருளைப் பெற்றார்மற்
றினியார் பெருமை கூறுவார்.

பொழிப்புரை :

மிக உயர்ந்து விளங்கும் மேருவை வில்லாக வளைத்த சிவபெருமானின் அடியவர் திருக்கூட்டத்தை வணங்காது செல்கின்ற நம்பியாரூரருக்கும், எவ்வுயிர்க்கும் தலைவராம் தன்மை யையுடைய இளம்பிறையைச் சூடிய பாம்பையணிந்த ஆரூர்ப் பெருமானுக்கும் புறகு என்று சொல்ல, அப்பெருமானிடத்து மாறாத திருவருளைப் பெற்றார். அவ்வாறாயின் அவர் பெருமையைக் கூற வல்லார் யாவர்?

குறிப்புரை :

கோணா அருள் - கோடாத அருள்: நீங்காத அருள். அவர் பால் என்பதில் உள்ள சுட்டு இறைவனையன்றி நம்பியாரூர ரையும் குறிக்குமாறு அமைந்துள்ளது. மற்று என்பன அசைநிலைகள்.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 9

ஞால முய்ய நாமுய்ய
நம்பி சைவ நன்னெறியின்
சீல முய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பாடச் செழுமறைகள்
ஓல மிடவும் உணர்வரியார்
அடியா ருடனாம் உளதென்றால்
ஆலம் அமுது செய்தபிரான்
அடியார் பெருமை அறிந்தார்ஆர்.

பொழிப்புரை :

உலகினர் உய்யவும்,நாம் உய்யவும், நம்பியாரூ ரரின் நல்ல சைவநெறியின் ஒழுக்கம் வளர்ந்தோங்கவும் திருத் தொண்டத் தொகையைப் பாடியருள, வளம் மிக்க நான்மறைகளும் திருவடிக்கண் அடைக்கலம் எனக் கூறியும் உணர்தற்கு அரியவனாகிய சிவபெருமான், நாம் இருப்பது அடியார்களுடனேயாம் என்று சொல் வாரானால், நஞ்சை அமுதமாக்கிய இறைவனின் அடியவர் பெரு மையை யாவரே அறிந்தார்? ஒருவரும் இல்லை என்பதாம்.

குறிப்புரை :

நம்பியாரூரரைக் கொண்டு திருத்தொண்டத் தொகையை அருளிச் செய்தவரும், `வேதங்கள் ஐயா என ஓங்கி` (தி.8 ப.1 வரி 34, 35) ஓலமிடவும், அறிதற்கரியராய் நின்றவருமான சிவ பெருமான், நாம் இருப்பது அடியார்களுடனேயாம் என்று கூறுவா ராயின் அவ்வடியவர் பெருமையை முழுமையாக எவரால் கூறமுடி யும் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 10

ஒக்க நெடுநாள் இவ்வுலகில்
உயர்ந்த சைவப் பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறிபோற்றித்
தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம்பெருமான்
அருளி னாலே தாள்நிழற்கீழ்
மிக்க கணநா யகராகும்
தன்மை பெற்று விளங்கினார்.

பொழிப்புரை :

இவ்வாறாகப் பலகாலம் இந்நிலவுலகின்கண் உயர்ந்த பெருமையும், நன்மையும், மிக்க உயரிய நெறிகள் பலவும் ஒருங்கமைந்த சைவ நெறியினைப் போற்றிப் பாதுகாத்துச் சிவ பெருமானுக்கு அடிமையாகும் தன்மையைப் பெற்ற விறன்மிண்ட நாயனார், தம் தொண்டிற்குப் பொருந்தும் முறைமையால் தமது முதல்வராகிய சிவபெருமானின் திருவருளால், அப்பெருமானின் திருவடி நீழலின்கண் மேலான கணநாதர் என்னும் மேன்மையைப் பெற்று விளங்கினார்.

குறிப்புரை :

ஒக்க - இதுகாறும் தாம் செய்துகொண்டு வந்த அடிமைத் திறத்திற்கு ஒப்ப. தொக்க நிலைமை - தொகுதியாகக் கூடிய நிலைமை: சைவப் பெருநெறிக்கென உரிய பண்புகளும், தொண்டுகளும் ஒருங்கு பொருந்திய நிலைமை. எனவே விறன்மிண்ட நாயனார் சைவநெறிக் கென அமைந்த அனைத்துப் பண்புகளையும் கொண்டு, அனைத்துத் தொண்டு களையும் செய்து வந்தவர் என்பது இதனால் போதரும். தக்க வகை - இதுகாறும் செய்துவந்த தொண்டினுக்குத் தக்க நிலை. கணநாயகர் - சிவகணங்களின் தலைவர்.

பண் :

பாடல் எண் : 11

வேறு பிறிதென் திருத்தொண்டத்
தொகையால் உலகு விளங்கவரும்
பேறு தனக்குக் காரணராம்
பிரானார் விறன்மிண் டரின்பெருமை
கூறும் அளவெம் அளவிற்றே
அவர்தாள் சென்னி மேற்கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி
அன்பர் திருத்தொண் டறைகுவாம்.

பொழிப்புரை :

பல சொல்லக் காமுறுவது ஏன்? திருத்தொண்டத் தொகை கிடைக்கப் பெற்றதனால் உலகினர் யாவரும் விளங்கவரும் பெரும் பேற்றிற்குக் காரணமாகும் நம் முதல்வராகிய விறன்மிண்ட நாயனாரின் பெருமையை, என்னளவில் கூறும் அளவிற்கு அமை யுமோ? அமையாது. அவர் திருவடியைத் தலைமேற்கொண்டு பழையாறையில் தோன்றிய வணிகராகிய அமர்நீதி நாயனாரின் திருத்தொண்டினை இனிக் கூறுவோம்.

குறிப்புரை :

வேறு பிறிது என் - வேறு வேறாக இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டு போவதேன்? `பலசொல்லக் காமுறுவர்` (குறள், 649) ஏன் என்றவாறு. எனவே இனிச் சொல்லப்போகும் பெருமை ஒன்றே அவருக்கு அமையும் என்பது கருத்து. தென்தமிழ்ப் பயனாய் உள்ளது திருத்தொண்டத்தொகையாகும். இது ஞாலம் உய்ய, நாம் உய்ய, நம்பி சைவ நன்னெறியின் சீலம் உய்ய அருளப் பெற்றதாகும். பத்திமை தழுவிய இவ்வரலாற்று நூல் ஒன்றே உயிர்களை உய்விக்கும் தகையது. அத்தகைய அருட்பனுவல் சுந்தரர் திருவாக்காக வருதற்கு விறன்மிண்டநாயனார் காரணமாக இருந்தார். ஆதலின் இப்பெருமை ஒன்றே அவருக்கு அமையும் என்றார். ஏகாரம் அசைல. `தூமொழி மடமான் இரக்கம் இன்மையன்றோ இவ்வுலகங்கள் இராமன் பரக்கும தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே` எனக் கம்பர் பெருமான் அருளுவது போல, விறன்மிண்ட நாயனார் புறகு என்றுரைத்த தன்றோ இவ்வுலகங்கள் பரக்கும் தொல்புகழ்த் திருத் தொண்டத் தொகையினைப் பருகுகின்றதுவே` எனக் கூறிமகிழலாம்.
சிற்பி