அமர்நீதி நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.

பொழிப்புரை :

மிக்க புகழுடைய சோழர்கள் அரசாளுதற்குரிய புனித காவிரி பாயும் சோழநாட்டில், மேக மண்டலம் வரை ஓங்கிய களிப்பினை உடைய வண்டுகள் சூழும் மலர்களையுடைய சோலை களால் சூழப்பட்டு, தேரோடு பொருந்திய, செழுமையான மணிகள் இழைத்த வீதிகளால் சிறப்படைந்து, இவ்வுலகில் நிலைபெற்ற பெருமையினை உடைய நகரமாக விளங்குவது பழையாறை என்பதாம்.

குறிப்புரை :

செம்பியர் - சோழர். `சீரின் நீடிய செம்பியர்` என்பதால் அவர்தம் ஆட்சிச் சிறப்பும், `பொன்னி நன்னாட்டு` என்பதால் அவர்தம் நாட்டுச் சிறப்பும், ஒருங்கு விளங்குதல் காணலாம். `பொழில் சூழ்ந்து` என்பதால் புறச் சூழலும், `தேரின் மேவிய செழுமணி` என்பதால் அகச் சூழலும், பாரின் நீடிய பெருமை` என்பதால் வாழும் மக்கட்சிறப்பும் ஒருங்கு அமைந்த நகர்வளம் காணலாம். பழையாறை - இது திருப்பட்டீச்சரத்திற்குக் கிழக்கே உள்ள பதியாம். இதன் வடபகுதி பழையாறை வடதளி என்றும், அதன் தென்கிழக்கில் உள்ள பகுதி திருப்பழையாறை என்றும் அழைக்கப் பெறுகின்றன.

பண் :

பாடல் எண் : 2

மன்னு மப்பதி வணிகர்தங் குலத்தினில் வந்தார்
பொன்னு முத்துநன் மணிகளும் பூந்துகில் முதலா
எந்நி லத்தினும் உள்ளன வருவளத் தியல்பால்
அந்நி லைக்கண்மிக் கவர்அமர் நீதியார் என்பார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற அப்பதியில் வணிகர் மரபில் தோன்றி யவரும், பொன், முத்து மற்றும் ஏனைய நன்மணிகளும், அழகிய பட்டாடை முதலியனவுமாக எவ்வெந் நாட்டின்கண் உள்ளனவோ, அவையனைத்தும் தம்பால் பெறுதற்கான வளமிக்க வாணிகத் தொழி லில் சிறந்து நிற்பவர் அமர்நீதியார் என்பவராவர்.

குறிப்புரை :

மன்னும் - நிலைபெற்றிருக்கும். அமர்நீதியார் பொன் முதலாகிய மணிகளின் வாணிகமும், பட்டாடை முதலிய துகில் வாணிகமும் ஒருங்குடையவர் என்பது இதனால் தெரியலாம்.

பண் :

பாடல் எண் : 3

சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவடிகளை அன்றிப் பிறி தொன்றையும் சிந்தியாதவராகிய அவர், மாலைக்காலத்துத் தோன்றும் செவ்வானத்தின் நிறத்தினை உடைய சிவபெருமானின் அடியார் களுக்கு அமுது செய்வித்துக் கந்தையையும், உடையையும், கோவணத்தையும் அவர் திருவுள்ளக் கருத்தறிந்து கொடுத்து, நல் வினைப் பயனால் தமக்குக் கிடைத்த செல்வப் பெருக்கால் அடையும் பயனை நாள்தொறும் பெற்று வருவாராயினர்.

குறிப்புரை :

அகக்கருவிகள் நான்கனுள் சிந்தையின் பயன் சிந்திப்ப தாகும். அவ்வாறு சிந்திப்பது சிவன் கழல் அல்லது ஒன்றில்லார் எனவே, அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக வழிபட்டு வந்த நலம் தெரிகிறது. அந்திவண்ணம் - மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானத்தின் நிறம்.கந்தை - கிழிந்ததும் பழையதும் ஆகிய ஆடை என்பது இக்காலத்து உரைக்கும் உரையாகும். எனினும் முழங்கால் மறையும் அளவிற்கான உயரம் குறைந்த ஆடை என்பதே இங்குக் கொள்ளத் தக்க பொருளாகும். நாவரசர், திருவுருவம் இவ்வளவின தாய ஆடையுடன் எங்கும் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் அவர் இவ்வளவான உடையையும், மிகை யெனக் கருதி வாழ்ந்தவர் என்பது `கந்தை மிகையாம் கருத்தும்` என்பதால் அறியலாம். சிறந்த ஞானியர்க்கு ஓடும் கவந்தியுமே உறவாகும் அன்றோ? இத்தகைய ஆடையையே அமர்நீதியார் புதிதாக நெய்து கொடுத்து வந்தார் . கீள் - அரைஞாணுக்கு மாற்றாகக் கட்டிக் கொள்வது. கோவணம் - அற்றம் மறைப்பதற்காகக் கீளுடன் இணைத்துப் பின்னால் போக்கிக் கட்டப் படும் ஆடையாம். இது நால்விரல் அல்லது ஐவிரல் அகலமுடைய தாம். தம்பால் வந்த அடியவர்களுக்கெல்லாம் உணவருத்தியும் இப்பொருள்களுள் வேண்டுவதொன்றையோ அன்றி அனைத்தை யுமோ அவ்வடியவர் விரும்புமாறு கொடுத்தும் வாழ்ந்து வந்தார். `செல்வத்துப் பயனே ஈதல்` (புறநா. 189) ஆதலின் `செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்` என்றார்.

பண் :

பாடல் எண் : 4

முக்கண் நக்கராம் முதல்வனா ரவர்திரு நல்லூர்
மிக்க சீர்வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க அன்பர்கள் அமுதுசெய் திருமடஞ் சமைத்தார்
தொக்க சுற்றமுந் தாமும்வந் தணைந்தனர் தூயோர்.

பொழிப்புரை :

மூன்று கண்களையும் ஆடையின்மையையும் உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருநல்லூர் என்னும் திருப்பதியில், மிகச்சிறப்போடு நடைபெற்றுவரும் திருவிழாவைப் பெருவிருப்போடு தொழுது, அவ்விடத்துத்தகுதிமிக்க அடியவர்கள் அமுது செய்வதற்கென ஒரு திருமடத்தையும் அமைத்தார். தம்மொடு சேர்ந்த உறவினரும் தாமுமாக அங்குச்சென்று வதிந்துவந்தார்.

குறிப்புரை :

முக்கண் - ஞாயிறு,திங்கள், தீ ஆகிய முக்கண். நக்கர் - ஆடையின்றி இருப்பவர்.

பண் :

பாடல் எண் : 5

மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்
திருவி ழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
பெருகும் இன்பமோ டமுதுசெய் திடஅருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை ஒருநாள்.

பொழிப்புரை :

நீலமணி போலும் திருக்கழுத்தினை உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருநல்லூர்த் திருவிழாச்சிறப்பைப் பொருந்திய பேரன்போடு வணங்கி வழிபட்டு, தம் திருமடத்தின் கண் இருக்கும் அடியவர்கள் மிக்க இனிமையோடு திருவமுது செய்யுமாறு அவர்தம் திருவருளை விரும்பிப் போற்றி, அவற்றால் கசிந்துருகும் திருவுள்ளத்தால் மகிழ்ச்சி மீதூர அங்குத் தங்கியிருக்கும் நாள்களில், ஒருநாள்.

குறிப்புரை :

இறைவழி பாட்டையும், அடியவர் வழிபாட்டையும் ஒருங்கு செய்து வருதலின் உவகை மீதூர அமர்நீதியார் திருமடத்தில் இருந்தார் என்பதாம். மருவும் அன்பு - உயிரொடு பொருந்திய அன்பு. அடியவர் இன்பத்தோடு அமுது செய்தற்கு அவர் அருளை விரும்பினர். எனவே அடியவர்க்கு அமுது வழங்குதலில் அவருக்கு இருந்த ஆர்வம் தெரிகிறது.

பண் :

பாடல் எண் : 6

பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்
கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரமசா ரியின்வடி வாகி.

பொழிப்புரை :

குளிர்ந்த திருச் சடையின் கண் பிறையை அணிந்த உயர்தவச் சீலராகிய, பெருமை பொருந்திய திருநல்லூரின்கண் வீற்றிருந்தருளும் கரிய கண்டத்தையுடைய சிவபெருமான், அடியவர் களுக்கு, இவ்வடியவர் இதுகாறும் கொடுத்துவந்த கோவணத்தின் பெருமையை உலகத்தாருக்குக் காட்டவும், நிறைந்த அன்பினராய இவருக்குப் பேரருள் வழங்கவும் ஒரு பிரமசாரியின் வடிவைத் தாங்கிக் கொண்டு.

குறிப்புரை :

தளிர்ச்சடைப் பிறைப் பெருந்தகை என மாறுக. தளிர் - குளிர். அறுகம்புல் எனக்கொண்டு பிறையையும், அறுகினையும் சடையில் கொண்டு என்று உரைத்தலும் ஒன்று. பிறையாகிய தளிரைத் திருச்சடையில் கொண்டு என்றுரைப்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). பிரமசரியன் - ஆசாரியனிடத்து இருந்து ஓதுதலும் விரதம் காத்தலும் ஆகிய ஒழுக்க முடையவன்.

பண் :

பாடல் எண் : 7

செய்ய ஒண்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையும்
சைவ வெண்திரு நீற்றுமுண் டகத்தொளித் தழைப்பும்
மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்குமான் தோலும்
கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்.

பொழிப்புரை :

சிவந்த சிறந்த சடையை மறைத்த ஒப்பற்ற திரு முடிக்கண் முடித்த குடுமியும், சைவ நெறியினர்க்குக் காப்பாக விளங்கும் வெண்மையான திருநீற்றால் விளங்கும் மூவிரல் வடிவின தாய் அணிந்த ஒளி விளக்கமும், திருமேனியில் வெண்மையான முப் புரிநூலுடன் சேர்ந்து விளங்குகின்ற கருமானின் தோலும், திருக் கைகளில் விளங்கும் மோதிர விரலில் பச்சைத் தருப்பையால் முடிந்த முடிச்சின் பசிய ஒளியும்,

குறிப்புரை :

திருமுடிச்சிகை - திருமுடியின் கண் விளங்கும் குடுமி. பவித்திரம் - தருப்பையாலாய முடிச்சு.

பண் :

பாடல் எண் : 8

முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மாமறைக் கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடி யார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடிமலர் நீள்நிலம் பொலிய.

பொழிப்புரை :

தருப்பையைக் கயிறாகக் கட்டி அதனைக் கொப் பூழின் கீழ் அமையக் கட்டிய இடுப்பில் அதற்குப் பற்றுக் கோடாக விளங்கும் மறைவடிவான கோவணஆடையின் பிணிப்பும் கொண்ட வராகி, வஞ்சத்தாலாய வலிய தீவினையாம் களங்கத்தை அறுத்த மாசில் மனத்தவராகிய அடியார்களின் திருவுள்ளத்தே எக்காலமும் நீங்கிடாத திருவடிகள், நீண்ட இந்நிலவுலகில் பொருந்த.

குறிப்புரை :

முஞ்சி - தருப்பை. நாண்உற - கயிறாக முடித்து. தஞ்சமாம் மறை - தம்மையே ஒலமிட்டுத் தஞ்சமாகி வந்தவேதம். `மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ` (தி.8 ப.12 பா.2) எனவரும் திருவாசகமும் காண்க.

பண் :

பாடல் எண் : 9

கண்ட வர்க்குறு காதலின் மனங்கரைந் துருகத்
தொண்டர் அன்பெனுந் தூநெறி வெளிப்படுப் பாராய்த்
தண்டின் மீதிரு கோவண நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்தமர் நீதியார் திருமடங் குறுக.

பொழிப்புரை :

தம் திருவடிவைப் பார்த்தவர்களுக்கு மிகும் விருப்பினால் அவர் மனம் கரைந்து உருகுமாறு, அமர்நீதியாரின் அன் பெனும் தூய அறநெறியை யாவர்க்கும் வெளிப்படுத்துவாராய், தம் கையில் தாங்கிய தண்டில் இரு கோவணங்களையும், திருநீற்றுப் பையையும் தருப்பையையும் கட்டிக்கொண்டு, அமர்நீதியாரின் திருமடத்திற்கு எழுதந்தருளி வர.

குறிப்புரை :

பிரமச்சாரியர்கள் தருப்பையில் துயில வேண்டும் என்பது மரபு. அம்மரபு காத்தற் பொருட்டும், வினை செய்யுங்கால் தருப்பை கொண்டு பவித்திரம் அணிதற் பொருட்டும், தண்டில் தருப்பையையும் தாங்கி வந்தனர். இறைவன் ஏற்று வந்த வடிவம் கண்டவர்களுக்கு அன்பு மீதூர்வையும், அதனால் அக நெகிழ்ந்து உருகும் மெய்ப் பாட்டையும் தருமாறு அமைந்தது. `கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்` என்றார் (தி.12 சரு.1-5 பா.42) முன்னும். `கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்` (தி.6 ப.8 பா.11) என்பர் நாவரசரும்.

பண் :

பாடல் எண் : 10

வடிவு காண்டலும் மனத்தினும் முகம்மிக மலர்ந்து
கடிது வந்தெதிர் வணங்கிஇம் மடத்தினிற் காணும்
படியி லாதநீ ரணையமுன் பயில்தவ மென்னோ
அடிய னேன்செய்த தென்றனர் அமர்நீதி யன்பர்.

பொழிப்புரை :

இவ்வாறு தம்பால் அடைந்த அடியவர் திரு வடிவைக் கண்ட அளவில், மனத்தினும் முகத்தில் மிகு மலர்ச்சி அடைந்து, விரைய வந்து, அவர் திருமுன் வணங்கி, இத்திருமடத்தில் இதற்கு முன்பு ஒரு நாளும் வாராத நீர் இன்று எழுந்தருளப் பெற்றதற்கு அடியேன் முன்செய்ததவம் யாதோ?என அமர்நீதியார் கூறினார்.

குறிப்புரை :

`அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்` (குறள், 706) என்பர் திருவள்ளுவர். ஆனால் அமர்நீதியார் முகம் மனமகிழ்வினும் மகிழ்வு மீதூர்ந்து நிற்கின்றது என்றார். அமர்நீதியாரின் திருமடம் எத்தனையோ அடியவரை ஏற்று மகிழ்ந்திருப்பினும், இது பொழுது எழுந்தருளிய அடியவராய இவ் விறைவர் இதற்கு முன்பு எழுந்தருளவில்லை. இன்றும் அவ்வடிய வரின் அன்பை வெளிப்படுத்தவே வந்தருளியதன்றி வேறில்லை என்பது குறிப்பு. இவ்ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 11

பேணும் அன்பரை நோக்கிநீர் பெருகிய அடியார்க்
கூணும் மேன்மையில் ஊட்டிநற் கந்தைகீ ளுடைகள்
யாணர் வெண்கிழிக் கோவணம் ஈதல்கேட் டும்மைக்
காண வந்தனம் என்றனன் கண்ணுதற் கரந்தோன்.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணை மறைத்துவந்த சிவ பெருமானாகிய அடியவர், தம்மை வணங்கி விருப்புறும் அமர்நீதி யாரைப் பார்த்து `திரளாகவரும் அடியவர்களுக்கு நீவிர் மேன்மையான திருவமுதை ஊட்டி, நல்ல கந்தைகீள் உடையாகிய இவற்றுடன் புதியவும் வெண்மையாயவும் ஆன உயர்ந்த கோவணத்தையும் கொடுத்தலைக் கேள்வியுற்று, உம்மைக் காண்டற்கு விரும்பி வந்தனம்` என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை :

உணவின் தன்மையாலும், உபசரிக்கும் தன்மையாலும் மேம்பட்டிருக்கும் நிலைமையால், `மேன்மையில் ஊட்டி`என்றார். யாணர் - புதிது. கிழி -புத்தாடையாகவே கிழித்த ஆடை.

பண் :

பாடல் எண் : 12

என்று தம்பிரா னருள்செய இத்திரு மடத்தே
நன்று நான்மறை நற்றவர் அமுதுசெய் தருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீருமிங் கமுதுசெய் தருளுமென் றிறைஞ்ச.

பொழிப்புரை :

வ்வாறு வந்தஇறைவர் அருள, இத்திரு மடத்தின்கண் மறைகளை நன்குணர்ந்த நற்றவ மறையவர்கள் திருவமுது செய்தற்கு ஏற்ப, தூய்மையோடு கூடிய மறையவர்களால் சமைக்கப்பெறும் திருவமுதை ஏற்றருள வேண்டுமென்று விண்ணப் பித்துக் கொள்ள.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 13

வணங்கும் அன்பரை நோக்கிஅம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர்ப்பொன்னி ஆடிநான் வரமழை வரினும்
உணங்கு கோவணம் வைத்துநீர் தாருமென் றொருவெண்
குணங்கொள் கோவணந் தண்டினில் அவிழ்த்தது கொடுப்பார்.

பொழிப்புரை :

அவ்வாறு வணங்கிய அன்பரைப் பிரமசாரியாக வந்த அவ்வேதியர் நோக்கி, அவர் வேண்டுதலுக்கு இசைந்தவராய்த் தெய்வத் தன்மை பொருந்திய காவிரியில் நீராடி நான் வரும் பொழுது, மழைவர நேரினும் அப்பொழுது உதவுவதற்காக உலர்ந்த இக் கோவணத்தை உம்மிடத்தில் வைத்துத் தருவீராக என்று கூறி, வெண்மை நிறம் அமைந்த சீரிய அக்கோவணத்தைத் தண்டிலிருந்து அவிழ்த்துக் கொடுக்குமவர்.

குறிப்புரை :

அணங்குநீர் - தெய்வத்தன்மை வாய்ந்த நீர். உணங்கு கோவணம் - உலர்ந்த கோவணம். வெண்குணங்கொள் கோவணம் - வெண்மையான நூலால் அமைந்த கோவணம். குணம் - சீரிய குணங்கள் எனக் கொண்டு, அறப்பண்பின் வடிவாய கோவணம் எனக் கோடலும் பொருந்துவதாம். `மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்` (தி.8 ப.12 பா.2) எனவரும் திருவாசகமுங் காண்க.

பண் :

பாடல் எண் : 14

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.

பொழிப்புரை :

மேற்கூறிய குணநலம் சான்ற கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.

குறிப்புரை :

இகழாது வைத்து - அதன் சிறுமை கருதி இகழாது, பாதுகாப்பாக வைத்து. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 15

கொடுத்த கோவணம் கைக்கொண்டு கோதிலா அன்பர்
கடுப்பில் இங்கெழுந் தருளும்நீர் குளித்தெனக் கங்கை
மடுத்த தும்பிய வளர்சடை மறைத்தஅம் மறையோர்
அடுத்த தெண்டிரைப் பொன்னிநீ ராடுதற்கு அகன்றார்.

பொழிப்புரை :

அம்மறையவர் கொடுத்த கோவணத்தை வாங்கிக் கொண்ட குற்றமற்ற அன்பராகிய நாயனார், நீர் குளித்து விரைவில் இங்கு எழுந்தருளுக என வேண்டிக் கொள்ள, ஆழமான நீர்ப் பெருக்குடைய கங்கை தங்கிய நீண்ட சடையை மறைத்து வந்தவ ராகிய அம்மறையவர், அடுத்திருக்கும் தெளிந்த அலைகளை யுடைய காவிரியில் ஆடுதற்கு அகன்றார்.

குறிப்புரை :

கடுப்பு - விரைவு. மடுத்ததும்பிய - ஆழமாகத் ததும்பி நிற்கும்.

பண் :

பாடல் எண் : 16

தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.

பொழிப்புரை :

மறையவராக வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.

குறிப்புரை :

காப்புச் சிந்தை செய்து - பாதுகாப்பாக வைத்தற்குரிய இடத்தை மனத்தில் எண்ணி. இவ் விடத்துள்ள காப்புப்பொது வகை யான் அமைந்ததாகும். பின்வரும் சேமம் என்பது சிறப்புவகையான் காவலும் தனியிடமுமாக அமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 17

போன வேதியர் வைத்தகோ வணத்தினைப் போக்கிப்
பான லந்துறைப் பொன்னிநீர் படிந்துவந் தாரோ
தூந றுஞ்சடைக் கங்கைநீர் தோய்ந்துவந் தாரோ
வான நீர்மழை பொழிந்திட நனைந்துவந் தணைந்தார்.

பொழிப்புரை :

நீராடுதற்கெனச் செல்லும் மறையவர், பாதுகாப் பாக வைத்திருக்கும் அவ்வடியவரிடத்தினின்றும் கோவணத்தை அகலச் செய்து, குவளை மலர்தற்குரிய துறைகளையுடைய காவிரிநீரில் நீராடி வந்தாரோ? அன்றித் தூய நறுமணமுடைய சடையிலுள்ள கங்கை நீரில் தோய்ந்து வந்தாரோ? அறியோம், ஆனால் விண்ணிடத் தினின்றும் வரும் நீராகிய மழை பொழிய அதில் நனைந்து வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

பானல் - நீலம். கோவணத்தைக் கொடுத்தமறையவரே அதனை அகலவும் செய்தார். `முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்` (தி.8 ப.5 பா.96) ஆதலின். காவிரியில் படிந்துவந்தாரோ? அன்றித் தம்மிடத்திருக்கும் கங்கையில் படிந்து வந்தாரோ? எவ்வாறாக இருப்பினும் விரைவில் வந்தனர் என்றவாறாம்.

பண் :

பாடல் எண் : 18

கதிரி ளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதின்
முதிரும் அன்புடைத் தொண்டர்தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறுசுவைத் திருவமு தாக்கி
எதிரெ ழுந்துசென் றிறைஞ்சிட நிறைந்தநூன் மார்பர்.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய இளம்பிறையை மாலையாக அணிந்த இறைவராகிய மறையவர், அடியவர் இல்லத்தைச் சேர்ந்த பொழுது, முதிர்ந்த அன்புடைய தொண்டராகிய நாயனார், தாம் அவர் வருவதற்கு முன்னே முறையாக அம்மறையவர் உண்பதற்குரிய மிகத்தூய்மையான அறுசுவை அமுதை ஆக்குவித்து, அவர் வந்தணைந்ததும் எழுந்து, எதிர்கொண்டு வணங்கி நிற்க, அழகிய நூல் அணிந்த மார்பினையுடைய அவர்,

குறிப்புரை :

கதிர் - ஒளி, உணவு அறுசுவையோடு கூடியது மட்டு மன்றி, உடற்கு வளமும், நலமும் மிக அமைக்கப்பட்ட தென்பார். `அதிக நன்மையின் அறுசுவைத் திருவமுதாக்கி` என்றார்.

பண் :

பாடல் எண் : 19

தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.

பொழிப்புரை :

தொண்டர்தம் அன்பு எனும் தூய நீரினில் ஆட விரும்பி, அவரை நோக்கிச் செறிவும் குளிர்ச்சியும் மிக்க நீரில் ஆடி வந்ததால், ஈரமுடைய கோவணத்தை மாற்றுதற்குத் தண்டின் மேல் உள்ளதும் ஈரமாகிய கோவணம் ஆதலின், நான் தந்த கோவணத்தைக் கொண்டு வருவீராக என்றுரைத்தார் கோவணக் கள்வர்.

குறிப்புரை :

இடையில் கட்டிய கோவணம் நீராடியமையாலும், தண்டிலி ருந்த கோவணம் மழையாலும் நனைந்திருத்தலின் நும்மிடம் தந்த கோவணம் வேண்டுவதாயிற்று எனக் காரணம் கூறிக் கேட்பினும், அவ் வடியவரிடம் தந்த கோவணத்தை முன்னமேயே அகலப் போக்கி வந்த அடியவர் என்பார், `கோவணக் கள்வர்` என அறிமுகப்படுத்து கின்றார். வந்த அடியவர் ஆடியது காவிரியிலோ அன்றிக் கங்கை யிலோ? அதனை நாம் அறியமுடியவில்லை; ஆயினும் அடியவரின் அன்பு நீரில் ஆடுதலைக்கண்கூடாகக் காண்கின்றோம் என்பார் `அன்பெனும் தூய நீராடுதல் வேண்டி` என்றார். அடியவரிடம் தந்த கோவணத்தை மறைத்த கள்வர், மீண்டும் அக்கோவணத்தைக் கேட்பது எற்றுக்கு, எனவரும் வினாவிற்கும் இத்தொடர் விடையாக அமைந் துள்ளது. இதனால் இவ்வாறு செய்வதும், அடியவர் அன்பை வெளிப் படுத்துதற்கன்றிஅவரைச் சோதிக்கவோ அன்றித் துன்புறுத்துதற்கோ அன்று என்பது விளங்கும். ஞானசம்பந்தரிடத்து உள்ளத்தையும், திருமூலரிடத்து உடலையும், இவ்வடியவரிடத்து உடைமையையும் கவரினும், தம்மிடத்துப் பத்திமை கொண்ட உயிர்களிடத்து இம் மூன் றையுமே ஒருங்கு கவர்வது அவர்தம் இயல்பாகும். `அன்றே என்றன் ஆவியும், உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய், என்னைஆட் கொண்ட போதே கொண்டிலையோ?` (தி.8 ப.33 பா.7) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 20

ஐயர் கைதவம் அறிவுறா தவர்கடி தணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்தவே றிடத்தின்
மையில் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணமுன்
செய்த தென்னென்று திகைத்தனர் தேடுவா ரானார்.

பொழிப்புரை :

வந்து கேட்கும் அப்பெரியவரின் வஞ்சத்தை அறியாதவராகிய நாயனார், விரைந்து உட்சென்று பார்க்க, தனியிடத் தில் மிகப்பாதுகாப்பாக வைத்திருந்த அவர்தம் கோவணத்தைக் கண்டிலர்; தாம் முன்பு காத்து வைத்த கோவணம் எங்குற்றது? என்று திகைத்து அதனைத் தேடுவாராயினர்.

குறிப்புரை :

கைதவம் - வஞ்சனை. ஐயர் - பெருமை மிக்கவர். அஃது அப்பொருள்படுதல் `இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார்?` (தி.12 பு.5 பா.21), `ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்` (தி.12 பு.18 பா.30) என வருவனவற்றா லும் அறியலாம். பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஒரு பொருள் அவ் விடத்தில் காணவில்லையாயின் அஃது எங்கே போயிற்று? என்பது உலகியலிலும், கேட்கப்படுவது ஒன்று. அவ்வழக்கே `வைத்த கோவ ணம் என் செய்தது` என்றார். எனவே அது மறைந்தது தம்மால் அன்று; அது தானாக மறைந்தது எனும் குறிப்புப்பட நின்றது.

பண் :

பாடல் எண் : 21

பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின நெறிமேல்
சங்கை யின்றியே தப்பின தென்றுதஞ் சரக்கில்
எங்கும் நாடியும் கண்டிலர் என்செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெருந்தொடக் கினில்அகப் பட்டார்.

பொழிப்புரை :

மேன்மை மிகுகின்ற வெண்மை ஆடையாகிய அக் கோவணம், ஐயமின்றித் தப்பிவிட்டது என முடிவு கொண்ட அவ் வடியவர், தாம் சரக்கு வைத்திருக்கும் இடத்தும் பிற விடத்தும் தேடியும் காணாதவராய் நின்றார். கருணை பொருந்திய அவ்வேதியரின் பெருங்கட்டில் அகப்பட்டவர் வேறு என் செய்வார்? செய்வதறியாது நின்றார்.

குறிப்புரை :

பொங்கு - மேன்மை மிகுகின்ற, போயின நெறி - மறைந்தது என்ற நிலை. சங்கையின்றி - ஐயம் இன்றி; எனவே கோவணம் மறைந்து விட்டது என்பதில் ஐயமில்லை என்பதாயிற்று. அக்கோவண மறைவிற்குத் தாமோ பிறரோ காரணமாகவில்லை என்பதும் குறிப்பாராயிற்று. எனினும் தம் சரக்குப் பொதியினுள்ளும் பிறாண்டும் தேடியது, ஓரோவழி அக்கோவணம் தான் சென்ற இடம் அதுவாக இருக்குமோ? என்பது பற்றியாம். எத்தனையோ அடியவர் களுக்குக் கோவணம் கொடுத்து மகிழும் தமக்குத் தம்மிடத்து, வந்த ஐயர் ஒருவர்தம் கோவணத்தைத் தந்ததும்,அதைப் பிழையாது தரவேண்டும் எனக் கட்டளையிட்டுக் கூற, அதனை ஏற்றதும், அது தற்பொழுது மறையத்திகைப்பதும், அவர்தம் கூற்றில் கட்டுப்பட்ட தேயாம் என்பார். `அங்கண் வேதியர் பெருந்தொடக்கினில் அகப்பட் டார் என் செய்வார்` என்றார். அடியவர் பட்ட வருத்தமிகுதி ஆசிரியர் சேக்கிழாரையும் பிணித்து நிற்ப இவ்வரியதொடர் எழுந்தமை அறியத் தக்கது. `அம்மருங்கு நின்றயர்வார், அங்கு அருங்கனிக்கு என் செய் வார்?` (தி.12 பு.24 பா.25) என அம்மையார் வரலாற்றில் வரும் வருத்த மிகுதியும் இத்தகையதேயாம்.

பண் :

பாடல் எண் : 22

மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனைய தொன்றுவந் தெய்திய தெனஇடர் கூர்ந்து
நினைவ தொன்றிலர் வருந்தினர் நிற்கவு மாட்டார்
புனைய வேறொரு கோவணங் கொடுபுறப் பட்டார்.

பொழிப்புரை :

மனைவியாரும், மற்றும் பொருந்திய சுற்றத் தாரும், தாமும் ஆக இவ்வாறாயதொரு நிகழ்ச்சி வந்து சேர்ந்ததே என்று மிகுந்த வருத்தத்துடன் வேறு நினைத்தற்கு ஒன்றும் இல்லாதவர் களாய் வருந்தினர். இந்நிலையில் உள்நிற்கவும் மாட்டாராகி, அம் மறையவர் புனைதற்கென வேறொரு கோவணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

குறிப்புரை :

புறப்பட்டார் - மனையினுள் இருந்து வெளியே வந்தார் என்பதே கருத்தாயினும், முன் அகப்பட்டார் எனக் குறித்தவர் இதுபொழுது புறப்பட்டார் எனக் குறிப்பதை நோக்கின், அத்தொடக்கி னின்றும் அவர் வெளிவர இருக்கும் குறிப்பைப் புலப்படுத்தி நிற்குமாற் றையும் அறியலாம் . இனி அவர் இதுவரை நின்ற சித்தவிகாரக் கலக்கத் தினின்றும், புறப்பட்டார் என்னும் பொருள் போதரவும் நின்றது. எனவே மறையவராக வந்த இறையவர்பால் கட்டுண்ட தொடக்கு, இவர் உலகியல் கட்டி னின்றும் புறப்படுதற்குக் காரணமாயிற்றே அன்றி அகப்படுதற்குக் காரணமாகவில்லை என்பதும் குறிப்பாகப் பெறப் பெறுகின்றது. இந்நயம் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை) அவரின் உரையில் கண்டது.

பண் :

பாடல் எண் : 23

அத்தர் முன்புசென் றடிகள்நீர் தந்தகோ வணத்தை
வைத்தி டத்துநான் கண்டிலேன் மற்றுமோ ரிடத்தில்
உய்த்தொ ளித்தனர் இல்லைஅஃ தொழிந்தவா றறியேன்
இத்த கைத்தவே றதிசயங் கண்டிலே னென்று.

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் தந்தையாக விளங்கும் அம் மறையவர் முன் சென்று, `பெரியீர்! நீர் தந்த கோவணத்தைக் காப்பாக வைத்த இடத்தில் நான் கண்டிலேன்; அதனை வேறிடத்து வைத்து ஒளித்தார் எவரும் இல்லை; அக்கோவணம் மறைந்தவாறு அறிகி லேன்; இத்தகையதொரு அதிசயம் வேறு எங்கும் கண்ட தில்லை`, என்று கூறி.

குறிப்புரை :

அத்தர் - தந்தையாராக விளங்குகின்றவர்.

பண் :

பாடல் எண் : 24

வேறு நல்லதோர் கோவணம் விரும்பிமுன் கொணர்ந்தேன்
கீறு கோவண மன்றுநெய் தமைத்தது கிளர்கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றது களைந்து
மாறு சாத்தியென் பிழைபொறுப் பீரென வணங்க.

பொழிப்புரை :

`வேறு நல்ல கோவணம் ஒன்றை நீர் ஏற்றற் கென மகிழ்வுடன் தங்கள் முன் கொணர்ந்துள்ளேன். இது ஓர் ஆடையி லிருந்து கிழித்துக் கொடுவந்ததன்று. கோவணமாகவே நெய்யப் பெற்றது. அழகு பொருந்திய திருநீற்றையணிந்த பெரியீர்! ஈரம் வாய்ந்த நும் கோவணத்தைக் களைந்து அதற்கு மாற்றாக இதனை ஏற்றுக் கொண்டு, அடியேன் செய்த பிழையையும் பொறுத்தருள்க` என்று கூறி வணங்க.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 25

நின்ற வேதியர் வெகுண்டமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்றால்
இன்று நான்வைத்த கோவணங் கொண்டதற் கெதிர்வே
றொன்று கொள்கென உரைப்பதே நீரென உரையா.

பொழிப்புரை :

இதனைக் கேட்டு நின்ற அம்மறையவர் சினந்து. `அமர்நீதியாரே! உம் நிலைமை மிக நன்று, நான் நும்மிடத்துக் கோவணத்தை வைத்துச் சென்றபின் இடையில் நாள்கள் பல கழிந்தனவும் இல்லை. இன்றைய பொழுதில் நான் உம்மிடத்துக் கொடுத்து வைத்த கோவணத்தை நீரே ஏற்று, அதற்கு மாறாக வேறொரு கோவணமும் கொள்ளக் கொடுப்பதும் நன்றோ? நீரே உரைமின்!` என்று கூறியவர்.

குறிப்புரை :

கோவணம் காணாமல் போதற்கு நீர் பாதுகாப்பின்றி வைத்திருக்க வேண்டும், அல்லது நாள்கள் பலவேனும் சென்றிருக்க வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில் அக்கோவணம் மறைந்த தாகக் கூறி, மாற்றாக வேறொன்றைத் தருவது அறம் அன்று என்றார்.

பண் :

பாடல் எண் : 26

நல்ல கோவணங் கொடுப்பன்என் றுலகின்மேல் நாளும்
சொல்லு வித்ததென் கோவணங் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்குறு வாணிபம் அழகிதே உமக்கென்
றெல்லை யில்லவ னெரிதுள்ளி னாலென வெகுண்டான்.

பொழிப்புரை :

`நல்ல கோவணம் தருவேன், என்று உலகில் பலநாள்களும் சொல்லி வந்தது ஈண்டு எனது கோவணத்தைக் கொள்வதற்குத் துணிந்துதானோ? விரைவாக நீர் இங்குச் செய்த வாணிகம் உமக்கு அழகாமோ?` என்று கூறி, என்றும் அழிவில்லாதவ ராகிய அம்மறையவர் நெருப்புச் சிதறியெழுந்தாற் போன்ற சினத்தைக் கொண்டார்.

குறிப்புரை :

மிக எளிய கோவணங்களை இதுகாறும் கொடுத்து வந்து அதன் வாயிலாக மிக உயர்ந்த தம் கோவணத்தைப் பெற்றமை தோன்ற `வாணிகம்` என வருணித்தார். எரிதுள்ளினாலென - நெருப்புச் சிதறினாலென. `இணர்எரி தோய்வன்ன இன்னா செயி னும்` (குறள், 308) எனவரும் திருக்குறள் தொடரும் காண்க. கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறைகொடாது, செய் வதே வாணிகமாகும். ஆனால் நீரோ, அரிய பொருளாயஎன் கோவ ணத்தைப் பெறுதற்கு எளியவாகிய நும் கோவணங்களை இதுகாறும் கொடுத்து வந்துள்ளீர்! ஆதலின், (நும்) வாணிபம் அழகியதே என்றார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 27

மறிக ரந்துதண் டேந்திய மறையவர் வெகுளப்
பொறிக லங்கிய உணர்வின ராய்முகம் புலர்ந்து
சிறிய என்பெரும் பிழைபொறுத் தருள்செய்வீர் அடியேன்
அறிய வந்ததொன் றன்றென அடிபணிந் தயர்வார்.

பொழிப்புரை :

கையில் உள்ள மானை மறைத்து, அதற்கு மாறாகத் தண்டினை ஏந்தி வந்த மறையவர், இவ்வாறு சினந்து கூற, ஐம்பொறி களும் கலங்க உணர்விழந்தவராய், முகம் வாடி. சிறியவனாகிய இவ்வடியவனின் பெரும் பிழையைப் பொறுத்து அருள் செய்வீராக! இது பொழுது நேர்ந்த பிழை, யான்அறிய நிகழ்ந்த ஒன்றன்று எனக் கூறியவாறு அம்மறையவர் தம் திருவடிகளை வணங்கி வருந்துவாராய்.

குறிப்புரை :

மறி - மான். பொறி - ஐம்பொறிகள். நீர் இதுவரை கோவணம் கொடுத்து வந்தது என்போல்வாரது உயர்ந்த கோவணம் ஒன்றைப் பெறுவதற்கேயாம் எனச் சென்ற பாடலில் அம்மறையவர் கூறியதால், தாங்கள் கூறுமாறு போன்று நான் நினைந்து செய்த தவறு அன்று என்பார். `அடியேன் அறிய வந்தது ஒன்று அன்று` என்றார்.

பண் :

பாடல் எண் : 28

செயத்த கும்பணி செய்வன்இக் கோவண மன்றி
நயத்த குந்தன நல்லபட் டாடைகள் மணிகள்
உயர்த்த கோடிகொண் டருளும்என் றுடம்பினி லடங்காப்
பயத்தொ டுங்குலைந் தடிமிசைப் பலமுறை பணிந்தார்.

பொழிப்புரை :

`அடியேன் செயத்தகும் பணி எதுவாயினும் அதனைச் செய்வேன். இக்கோவணமன்றி, விரும்பத்தக்கனவாய நல்ல பட்டாடைகளும், மணிகளும் ஆக மிகப் பலவாக விரும்பினும் அவற்றை ஏற்றுக் கொண்டருளுவீர்`, என்று கூறி, உடம்பில் அடங் காது மீதூர்ந்து நிற்கும் அச்சம் உடையராகி, மனம் உடைந்து, அவர் திருவடிமேல் பன்முறையும் பணிந்தனர்.

குறிப்புரை :

யான் செய்த பெரும் பிழைக்கு என் உடம்பால் அடிமை செய்ய விரும்பினும் அல்லது என் உடைமைகளால் ஈடு செய்ய விரும்பினும், செய்தற்கு ஒருப்படுவேன் என அச்சமும் பத்திமையும் மிகக் கூறினார். குலைந்து - மனம் உடைந்து. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 29

பணியும் அன்பரை நோக்கிஅப் பரம்பொரு ளானார்
தணியும் உள்ளத்த ராயினர் போன்றுநீர் தந்த
மணியும் பொன்னும்நல் லாடையும் மற்றுமென் செய்ய
அணியுங் கோவணம் நேர்தர அமையும்என் றருள.

பொழிப்புரை :

இவ்வாறு கூறி வணங்கும் அன்பரைப் பார்த்து அப்பரம் பொருளாய மறையவர், சினம் தணிந்த உளம் உடையார் போலக் காட்டி, `நீர் தரும் மணியும், பொன்னும், ஆடைகளும் மற்றும் உளவாய பொருள்களும் எனக்கு என்ன பயனைத் தரும்? நான் அணிந்துவரும் கோவணத்திற்கு ஒப்பாயதொரு கோவணத்தைத் தருதலே எனக்கு அமையும்` என்று அருளிச் செய்ய,

குறிப்புரை :

தணியும் உள்ளத்தர் ஆயினார் போன்று - சினம் தணியும் உள்ளத்தாராயினார் போன்று. இப்பொருள்படும் ஆயினும், முன்னர்ச் சினம் இருந்தாலன்றோ பின் தணிதற்கு? முன்னர்ச் சினமும் இல்லை. ஆதலின் இதுபொழுது தணிதலும் இல்லை. இதனால், முன்னர்ச் சினந்தனவும் சினந்தனவல்ல; சினம் உடையார் போலக் காட்டவே என்பது புலப்படும். இவ்வாறு கருதுதற்கெல்லாம் காரணம் கோவணக் கள்வர், தொண்டர் அன்பெனும் தூய நீர் ஆடுதற்கு வந்தார் என்றெல்லாம் சேக்கிழார் குறித்துக் காட்டியமையேயாம்.

பண் :

பாடல் எண் : 30

மலர்ந்த சிந்தைய ராகிய வணிகரே றனையார்
அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்குநே ராக
இலங்கு பூந்துகில் கொள்வதற் கிசைந்தருள்செய்யீர்
நலங்கொள் கோவணந் தரும்பரி சியாதென நம்பர்.

பொழிப்புரை :

இதனைக் கேட்டு மலர்ந்த சிந்தையினை உடைய ராகிய வணிகரில் ஏறு போன்றவராகிய அந்நாயனார், `வெண்ணிறம் வாய்ந்த நும் கோவணத்திற்கு ஒப்பாக ஒளி பொருந்திய உயர்ந்த பட்டாடைகள் போல்வனவற்றை ஏற்பதற்கு இசைந்து அருள்செய்யீர் ஆயின் நன்மை மிக்க கோவணத்தைத் திரும்பத் தரும் வகைதான் யாது?` என்று வணங்க.

குறிப்புரை :

காணாமல் போன கோவணமே வேண்டுமெனக் கூறிய மறையவர், இதுபொழுது அதற்கு ஒப்பானதொரு கோவணம் தர அமையும் எனக் கூறியதும் நாயனார் மகிழ்தற்கு ஏதுவாயிற்று. எனினும் நீர் தந்த மணியும் பொன்னும்,நல்லாடையும் எமக்கு என்செயும்? என முன் அருளியிருத்தலின்,`நலங்கொள் கோவணம் தரும் பரிசு யாது` எனக் கேட்பாராயினர். முன்,`ஈங்குஉறும் வாணிபம் அழகிதே` என மறையவர் இகழ்ந்ததற்கு ஏற்ப,ஈண்டு `வணிகர் ஏறு அனையார்` என்றார். எனவே இவர் செய்து வருவது பிறர் எவரும் செய்தற்கரிய பெருந்தொண்டேயன்றி, வாணிகம், அன்றென்றதும் கருத்தாயிற்று. ஆயினும் `வணிகர் ஏறு` என்றது இவர் தோன்றிய குலத்தில் இத்தகையதொரு வணிகர் இதுகாறும் தோன்றியிராமை யின், அத் தலைமையும் சிறப்பும் தோன்ற இங்ஙனம் கூறினார். `ஆறும் உடையான் அரசருள் ஏறு` (குறள்,381) எனும் திருக்குறளையும் ஈண்டு நினைவு கூரலாம்.

பண் :

பாடல் எண் : 31

உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.

பொழிப்புரை :

`நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம்கையில் நாம் தர, நீர் அதனைப் போக்கியதாக முன் கூறிய அக் கிழிந்த கோவணத்திற்கு ஒப்பாகும் கோவணம் இதுவாகும்` என்று கூறி, தண்டில் கட்டியிருந்த கோவணத்தினை அவிழ்த்து எடுத்து, `இக் கோவணத்திற்கு ஒத்த எடையுடைய கோவணத்தை இடுவீராக` என்றார்.

குறிப்புரை :

கெடுத்த கோவணம் என்னாது, `கெடுத்ததாக முன் சொல்லும் கோவணம்` என்றார், அவர் கூற்றைத் தாம் இன்னும் ஒப்புக்கொள்ளாமை தோன்ற. இங்கு மறையவர் தம் கோவணம் பெருகிய உயர்வுடையதன்று: ஆடையிலிருந்து கிழித்த கோவண மேயாம். அதற்கு ஒப்பான எடையுடைய கோவணம் கொடுத்தாலே போதும் என அதன் எளிமை தோன்றக் கூறுவார் போன்று அதன் உயர்வைக் கூறினார். `ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கு ஈங்கு நான் சொல்ல வேண்டுவதில்லை` என மறையவர் முன் (பா.515) மொழிந்தமையையும் நினைவுகூர்க. இம் மூன்று பாடல் களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 32

நன்று சாலவென் றன்பரும் ஒருதுலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒருதட்டில் இட்டார்
நின்ற தொண்டருங் கையினி னெய்தகோ வணந்தட்
டொன்றி லேயிட நிறைநிலா தொழிந்தமை கண்டார்.

பொழிப்புரை :

மிகவும் நன்று என்று இசைந்து நாயனாரும் ஒரு துலையினை நாட்ட, மலையை வில்லாக உடைய இறையவராகிய மறையவரும் தம் கோவணத்தை ஒரு துலைத்தட்டில் இட்டார். அங் கிருந்த அடியவரும் தம்கையில் நெய்து வைத்திருந்த கோவணத்தை மற்றைத் துலைத்தட்டில் இட, அது அக்கோவணத்திற்கு ஒப்பாக நில்லாமையைக் கண்டார்.

குறிப்புரை :

சாலநன்று என மாற்றுக.

பண் :

பாடல் எண் : 33

நாடு மன்பொடு நாயன்மார்க் களிக்கமுன் வைத்த
நீடு கோவண மடையநே ராகவொன் றொன்றாக்
கோடு தட்டின்மீ திடஇடக் கொண்டெழுந் ததுகண்
டாடு சேவடிக் கடியரு மற்புத மெய்தி.

பொழிப்புரை :

வந்த மறையவர்தம் அருளை நாடி நிற்கும் அன்போடு, தாம் அடியவர்களுக்கு அளித்தற்பொருட்டு முன்வைத் திருந்த நிறைந்த கோவணங்களை, அம்மறையவரின் கோவணத் தட்டிற்கு இணையாகவுள்ளதொரு தட்டில் இட அது அவற்றைக் கொண்டும் அத்தட்டு மேல் எழுந்தே நிற்பதைக் கண்டவராய், ஆடுகின்ற சிவந்த அடிகளையுடைய கூத்தப் பிரானுக்கு அடியவராய நாயனாரும் அற்புதம் அடைந்து.

குறிப்புரை :

நாடும் அன்பு - மறையவரின் அருளை நாடும் அன்பு. நீடு கோவணம் - நிறைந்திருந்த கோவணம். கொடு - கொண்டு.

பண் :

பாடல் எண் : 34

உலகில் இல்லதோர் மாயையிக் கோவண மொன்றுக்
கலகில் கோவணம் ஒத்தில வென்றதி சயித்துப்
பலவும் மென்துகில் பட்டுடன் இடஇட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை யெடுத்துமே லிட்டார்.

பொழிப்புரை :

இது இவ்வுலகில் இல்லாததொரு மாயையாய் உள்ளது. இம்மறையவரின் கோவணம் ஒன்றினுக்கும் அளவற்ற கோவணங்கள் ஒத்தில என வியப்புற்று, மேலும் தம்பாலுள்ள மெல் லிய ஆடைகள், பட்டாடைகள், ஆகியவற்றையும் அத்தட்டின் மேல் இட இட, அத் தட்டு உயர்ந்து கொண்டே செல்லப் பின்னும் விளங்கு கின்ற பொலிவினையுடைய நல்ல ஆடைப் பொதிகளை எடுத்து அவ்வாடைகளின் மேல் இட்டார்.

குறிப்புரை :

மாயை - அறிய முடியாத தன்மை. மறையவரின் ஒரு கோவணத்திற்கு, அடியவரிடத்துள்ள கோவணங்கள், பட்டாடைகள், மென்துகில்கள் ஆகிய அனைத்தும் ஒவ்வாமை, அறிவினால் அறிய முடியாத தன்மையதாய் இருத்தலின் அதனை `மாயை` என்றார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 35

முட்டில் அன்பர்தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்றதட் டருளொடுந் தாழ்வுறும் வழக்கால்
பட்டொ டுந்துகி லநேககோ டிகளிடும் பத்தர்
தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு.

பொழிப்புரை :

அயர்த்தலின்றிச் செய்யும் அன்பருடைய அன்பினை இடுகின்ற துலைத் தட்டினை நோக்க, எவ்வுயிர்க்கும் முதல்வராகிய இறையவராம் மறையவர் அளவில், அவர் கோவ ணத்தை மட்டும் தாங்கி நின்ற தட்டு, அவர்தம் அருளுடனே நிற்றலின் தாழுதல் வழக்காதலின், பட்டொடும் துகில் பலவுமான புத்தாடை களை இடும் அடியவர்தம் தட்டு மேற்பட, அம்மறையவரின் கோவணத் தட்டு தாழ்ந்ததாம்.

குறிப்புரை :

முட்டு - தடை. `முட்டுவயிற்கழறல்` (தொல். மெய்ப். 23) எனவரும் தொல்காப்பியத் தொடரும் காண்க. தடையற்ற அன்பெனவே அயர்த்தலில்லாத அன்பு என்பது பெறப்பட்டது. அன்பராய அடியவர் இடும் தட்டில் அன்பு இருக்க, அருள் முதல்வ ராகிய மறையவர் தட்டில் அருள் நிற்றலின் அது தாழ்ந்தது. காரணம் அன்புடைய அடியவரை, அருளுடைய இறைவன் தாங்கி நிற்பது பற்றியாம். `தன்கடன் அடியேனையும் தாங்குதல்` (தி.5 ப.19 பா.9) என வரும் திருவாக்கும் காண்க. தாங்கும் பொருள் தாழ இருப்பதும், தாங்கப்படும் பொருள்மேல் இருப்பதும் இயற்கையேயாம். ஆதலின் இதனை ஆசிரியர் `வழக்கே` என்றார். விறகு சுமந்தும், மண் சுமந்தும், சோறு சுமந்தும் அடியவர்களை எளிவந்து ஆட்கொண்டமை காண்க. இனி அன்பு மேலிட மேலிட அவ்வுள்ளத்தில் அருட் பதிவு ஏற்படும் என்பது ஞான நூல் கூற்றாதலின், அந்நிலையில் அடியவரின் அன்பாம் பொருள்கள் மேலிட மேலிட மறையவரின் அருளாம் தட்டுப் பதிந்தது; அதாவது, தாழ்ந்தது என்றலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 36

ஆன தன்மைகண் டடியவர் அஞ்சியந் தணர்முன்
தூந றும்துகில் வருக்கநூல் வருக்கமே முதலா
மான மில்லன குவிக்கவும் தட்டின்மட் டிதுவால்
ஏனை யென்தனம் இடப்பெற வேண்டுமென் றிறைஞ்ச.

பொழிப்புரை :

இந்நிகழ்வினைக் கண்டு அடியவராகிய நாயனார், அவ்வந்தணர் முன்னே இத்தட்டில் தூயவும் இனியவுமான ஆடைத் தொகுதிகளையும், அவற்றை நெய்தற்கான நூல் பொதிகளையும் இவை முதலாகவுள்ள குற்றமற்ற பொருள்களையும் குவிக்கவும் இத் தட்டு இணையாகாது தாழ்ந்தே உள்ளது. ஆதலின், என் மாட்டிருக்கும் என் செல்வங்களையும் இத்தட்டில் இடுதற்கு அனுமதித்தல் வேண்டு மென வணங்க.

குறிப்புரை :

துகில் வருக்கம், நூல் வருக்கம் என்பன, அவ்வப் பொருள்களிலும் உள்ள பல்வேறு வகைகளைக் குறித்து நின்றன. மானம் - குற்றம். தனம் - செல்வம்.

பண் :

பாடல் எண் : 37

மங்கை பாகராம் மறையவர் மற்றதற் கிசைந்தே
இங்கு நாமினி வேறொன்று சொல்லுவ தென்கொல்
அங்கு மற்றுங்கள் தனங்களி னாகிலும் இடுவீர்
எங்கள் கோவண நேர்நிற்க வேண்டுவ தென்றார்.

பொழிப்புரை :

உமையை ஒரு கூற்றில் உடைய இறைவராகிய மறையவர், அதற்கு இசைந்து இவ்விடத்து, இனி நாம் வேறு எதனைச் சொல்ல இருக்கின்றது? அங்குள்ள `உம் பொருள்களையாகிலும் இடுவீர்` எவ்வாற்றானும் எங்கள் கோவணத்திற்கு ஒப்பாக அப் பொருள்கள் அமைதல் வேண்டுமென்றார்.

குறிப்புரை :

அங்கு என்பது சேய்மைக் கண்ணதாய மாயா உலகப் பொருள்களையும், இங்கு என்பது மறையவர்உடன் நிற்றலின் சிவச் சார்பாய பொருள்களையும் குறிக்கும் என்றும். சிவச் சார்புடைய கோவணத்திற்கு மாயா உலகச் சார்பாய பொன்னும் மணியும், துகிலும் பிறவும் ஒப்பாகாவெனினும், வேறு வழியின்மையின் அவற்றை யேனும் இடுமின் என்பார். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 38

நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவமணித் திரளும்
பல்வ கைத்திறத் துலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை யில்தனம் சுமந்தவர் இடஇடக் கொண்டே
மல்கு தட்டுமீ தெழுந்தது வியந்தனர் மண்ணோர்.

பொழிப்புரை :

நல்ல பொன்னுடனே வெள்ளியும் ஒன்பான் இரத்தினத் தொகுதிகளும் மற்றும் பலவகையால் மேம்பட்ட இரும்பு செம்பு முதலாய உலோகங்களும் இவற்றின் சேர்க்கையாலாய வெண்கலம் முதலியனவான அளவற்ற பொருள்களும் ஆக அவர் சுமந்து வந்து, அத்தட்டில் இட இட, அவற்றைத் தன்னுட் கொண்ட அளவில் நிறைவு பெற்றிருந்தும், அத்தட்டு மேல் எழுந்தவாறே நின் றது. உலகவர் அதைக் கண்டு வியப்படைந்தார்கள்.

குறிப்புரை :

புணர்ச்சிகள் பலவும் - உலோகங்கள் பலவற்றின் சேர்க்கையாலாய வெண்கலம் முதலிய உலோகங்கள். மல்குதட்டு- இடப்பட்ட பொருள்களால் நிரம்பப் பெற்றிருந்த தட்டு.

பண் :

பாடல் எண் : 39

தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.

பொழிப்புரை :

தவத்தால் நிரம்பிய நான்மறைப் பொருளாக உள்ள நூல்களால் அமைந்ததும், சிவபெருமான் விரும்புதற்குரியதா யுள்ளது மான கோவணம், இட்டமேலான தட்டுக்கு, இவ்வுலகில் வாழும் அமர் நீதீயார் செல்வங்கள் மட்டுமேயன்றி, அனைத்துலகங் களும் கூட ஒப்ப நிற்கமாட்டா என்று சொல்வதும் அதற்கொரு புகழாமோ? ஆகாது என்பதாம்.

குறிப்புரை :

இறைவனின் கோவணம், `மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே` (தி.8 ப.12 பா.2) ஆதல் திருவாசகத்துள் கண்டது. எனவே அம்மறைகள் இறைவனின் கோவணம் ஆதற்கு உரிய தவம் செய்திருத்தல் வேண்டும். ஆதலின் `தவம் நிறைந்த நான்மறை` என் றார். பெருமானின் கோவணத்திற்கு அமர்நீதியார் செல்வங்கள் மட்டுமல்ல, அனைத்துலகங்களுமே ஒப்பு நில்லாவாம் என்பது புக ழாமோ? என்பது கவிக்கூற்றாம். எனவே உலகினர்தம் பொருள்களுக் கெல்லாம் அது மேம்பட்டு நிற்குமென்பதாம்.

பண் :

பாடல் எண் : 40

நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.

பொழிப்புரை :

இந்நிலைமையை நோக்கிய ஒப்பற்றவராகிய நாயனார், மறையவர் முன் நேர்நின்று, கெடுதல் இல்லாத பல்வகைச் செல்வங்களையும் ஒன்று கூட விடாமல் தட்டில் வைத்துள்ளேன்; என்னுயிர்த் தலைவ! யானும் என், மனைவியும், சிறுவனும் ஒப்பாதற் குரிய பொருளாமேல், துலையில் ஏறப் பெறுதற்கு உன் அருள் முன்னிற்பதாகுக எனத் தொழுதனர்.

குறிப்புரை :

தகுமேல் துலையில் ஏறிடப் பெறுவது உன்னருள் என்றது, நும் கோவணத்திற்கு யாங்கள் எவ்வாற்றானும் ஒப்பாகேம் என்பது கருதி. ஒருகால் ஒப்பாதற்குரிய பொருள் ஆகுவேமெனில், அது நின்கருணைத் தகுதி அன்றி எம் தகுதி அன்று என்பதும் கருத் தாயிற்று. உலைவு - கெடுதல்.

பண் :

பாடல் எண் : 41

பொச்ச மில்லடி மைத்திறம் புரிந்தவ ரெதிர்நின்
றச்ச முன்புற உரைத்தலும் அங்கண ரருளால்
நிச்ச யித்தவர் நிலையினைத் துலையெனுஞ் சலத்தால்
இச்ச ழக்கினின் றேற்றுவார் ஏறுதற் கிசைந்தார்.

பொழிப்புரை :

குற்ற மற்ற அடிமைத் திறத்திலேயே திறம்பாது நிற்கும் நாயனார், எதிர்நின்று தம்முன் அச்சம் மீதூர இவ்வாறு கூறலும், அழகிய தண்ணளியினையுடைய மறையவர், அருளினால் அவர்தம் நிலையினை உறுதிப்படுத்தி, இத்துலையைத் தலைக்கீடாகக் கொண்டு, இவ்வுலகியல் நிலையினின்றும் அருள்இயல் உலகிற்கு ஏற்றுவாராய் அவரும், அவர்தம் மனைவியாரும், மைந்தரும் துலையில் ஏறுதற்கு இசைந்தனர்.

குறிப்புரை :

பொச்சம் - குற்றம். இச்சழக்கில் - வைத்த நிதிபெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் இப்பித்த உலகின் தொடக்கு.

பண் :

பாடல் எண் : 42

மனம கிழ்ந்தவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
புனைம லர்க்குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனைஇ டக்கொடு தனித்துலை வலங்கொண்டு தகவால்
இனைய செய்கையி லேறுவார் கூறுவா ரெடுத்து.

பொழிப்புரை :

மனம் மகிழ்ந்து அம்மறையவர்தம் மலரனைய திருவடிகளைத் தம் தலையால் வணங்கி, மலரணிந்த கூந்தலையுடைய மனைவியாரொடு, மகனையும் துலையில் ஏற்றுதற்கு அழைத்துக் கொண்டு வருபவர். அவ்வொப்பற்ற துலையை வலம்கொண்டு தமக் குரிய தகுதி மேம்பாட்டால் இச்செய்கைக்குத் துணிந்து, அத்துலையில் ஏறும் பொழுது கூறுவார்.

குறிப்புரை :

இடக்கொடு - துலையில் இடுதற்காக அவர் இரு வரையும் கொண்டு வந்து.

பண் :

பாடல் எண் : 43

இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க வென்று
மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்.

பொழிப்புரை :

`இறைவரிடத்துக் கொண்ட அன்பினில், இறை யவர்தம் திருநீற்று நெறியை இதுகாறும் யாம் உண்மையாகத் திறம் பாதிருப்பின், நாங்கள் மூவரும் இத்துலையில் ஏற, அக் கோவணம் உள்ள தட்டொடு ஒப்பாக நிற்பதாக` என்று கூறி, மழையினால் நிரம்பி நிற்கும் குளங்கள் சூழ்ந்தபொழிலையுடைய திருநல்லூரில் எழுந்தருளி யிருக்கும் இறையவரை வணங்கி,அன்பு தழைதற்குக் காரணமாய திரு வைந்தெழுத்தை ஓதியவாறு தட்டில் ஏறினார்.

குறிப்புரை :

தழைத்த அஞ்செழுத்து - உயிர் தழைத்தற்கு ஏதுவாகிய திருவைந்தெழுத்து.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 44

மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்துடன் ஏற
அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவண மதுவும்
கொண்ட அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின்றதத் துலைதான்.

பொழிப்புரை :

மிகுந்த அன்பினால் மற்று அவர்கள் மகிழ்ந்து உடனே துலைத்தட்டில் ஏறினார்களாக, அண்டங்கள் அனைத்தையும் தமக்கு உடைமையாகக் கொண்டிருக்கும் பெருமானாகிய இறைவனது திருவரையில் சாத்தும் கோவணமும், அவரிடத்துக் கொண்ட அன்பி னில் குறைபடாத அடியவர் தம் தொண்டும் ஒப்புடையன ஆதலால் அத்துலைதானும் ஒத்து நின்றது.

குறிப்புரை :

மறைகள் - இறைவனைப் பொருளாகக் கொண்டவை. அவர்களின் அடியவர்களும் இறைவனைப் பொருளாக நெஞ்சத்துக் கொண்டவர்கள். ஆதலின் கோவணமும், அடிமைத் திறமும் ஒத்து நின்றவாம்.

பண் :

பாடல் எண் : 45

மதிவி ளங்கிய தொண்டர்தம் பெருமையை மண்ணோர்
துதிசெய் தெங்கணும் அதிசய முறவெதிர் தொழுதார்
கதிர்வி சும்பிடைக் கரந்திட நிரந்தகற் பகத்தின்
புதிய பூமழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்.

பொழிப்புரை :

தம் அறிவினில் அறிவாய் நிற்கும் இறைவரைக் கண்டு வழிபடும் அடியவர்தம் பெருமையை இவ்வுலகத்தோர் யாவரும் வழுத்தி எங்கும் அதிசயம் பொருந்தத் தொழுதார்கள். ஒளி பொருந்திய விண்ணிலிருந்து அவ்வொளி மறைவு பெறுமாறு ஒக்க மலர்ந்த புதிய இனிய கற்பக மலர்களை மழைபோலப் பொழிந்து வானவர் மகிழ்ச்சியுற்றனர்.

குறிப்புரை :

இறைவன் தம் அறிவினில் அறிவாய் இருந்து விளக்க அதனால் விளக்கம் பெற்ற அடியவர்கள் என்பார்.` மதி விளங்கிய தொண்டர்` என்றார். கதிர் விசும்பு - ஒளி பொருந்திய விண்ணகம்.

பண் :

பாடல் எண் : 46

அண்டர் பூமழை பொழியமற் றதனிடை ஒளித்த
முண்ட வேதிய ரொருவழி யான்முதல் நல்லூர்ப்
பண்டு தாம்பயில் கோலமே விசும்பினிற் பாகம்
கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சிமுன் கொடுத்தார்.

பொழிப்புரை :

விண்ணுலகத்தவர்கள் கற்பகப் பூமழையை விசும்பு மறையப் பொழிந்தனராக, மற்று அதன் இடையில் ஒரு வழி யால் மறைந்தவராகிய முக்கீற்று வடிவில் நீறணிந்திருந்த அம்மறை யவர், முதன்மை வாய்ந்த திருநல்லூரில், ஒரு கூற்றில் வைத்த உமையம்மை யாரும் தாமுமாகப் பண்டு தொட்டே உயிர்கட்கு அருள் புரிந்து வரும் பாங்கில், அவ்வடியவர் முன் நின்று காட்சியருளினார்.

குறிப்புரை :

விண்ணவர் பூமழை பொழிய மறையவர் அதனிடைத் தாம் கொண்ட கோலத்தை மறைத்து, அம்மையப்பராகக் காட்சி தந்தனர். எனவே மழை பொழிந்தது, அவர் கொண்ட கோலத்தை மாற்றுதற்கு ஏற்ற இடனாயிற்று என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 47

தொழுது போற்றிஅத் துலைமிசை நின்றுநேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும்
அழிவில் வான்பதங் கொடுத்தெழுந் தருளினார் ஐயர்.

பொழிப்புரை :

வணங்கியும், வாழ்த்தியும் அத்துலையின் மேல் இருந்து வழிபடும் குற்றமற்ற அன்பரும், மைந்தனாரும், மனைவியார் தாமும் ஆக முழுமையாகவும் இனிமையாகவும் அருள் பெற்றுச் சிறக்க, தாம் எஞ்ஞான்றும் தொழுது இன்புற்று வரப் பெருமானும் பெரிய சிவபதத்தைக் கொடுத்து எழுந்தருளி நின்றார்.

குறிப்புரை :

அழிவில் வான்பதம் - அழிவற்ற சிறந்த பதம். சிவ பதம்.

பண் :

பாடல் எண் : 48

நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.

பொழிப்புரை :

இறைவர் தம் திருவருளினால், நன்மையும், பெருமையும் மிக்க அத்துலையே அவர்களை மேலே அழைத்துச் செல்லுகின்ற விமானமாகி, மேற்செல்ல, குற்றமற்ற அன்பராகிய நாயனாரும் அவர்தம் மைந்தரும் மனைவியாருமாகிய குடும்பத் தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாததும் அழிவு படாததுமாகிய சிவ பதத்தைக் கொடுத்த பெருமானுடன் சிவபுரியை அணைந்தனர்.

குறிப்புரை :

திருவருளால் துலையே விமானமாக இறைவரோடு, தம் குடும்பத்தாருடன் அடியவர் சிவபதம் அடைந்தனர்.

பண் :

பாடல் எண் : 49

மலர்மிசை அயனு மாலுங் காணுதற் கரிய வள்ளல்
பலர்புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழைமைகாட்டி
உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம்உன்னித்
தலைமிசை வைத்து வாழுந் தலைமைநந் தலைமை யாகும்.

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், திருமாலும் காண்பதற்கு அரியவரான சிவபெருமான், பலரும் புகழும் திருவெண்ணெய் நல்லூரில் அடிமையாதற்குரிய ஓலையின் பழமை யைக் காட்டி, உலகம் உய்ய ஆட்கொள்ளப்பட்டவரான நம்பியாரூ ரரின் திருவடிகளை நினைந்து, அத் திருவடிகளின் கீழ்வாழும் தலை மையே நம் தலைமையாகும்.

குறிப்புரை :

வகைநூலில் ஆவணங் காட்டி இறைவன் ஆரூரரை ஆட்கொண்ட திறம் கூறியவாறே, விரிநூலிலும் கூறப்பட்டிருப்பது அறியத்தக்கது. நம்பிகள் ஆரூரரை எம்பிரான் என்றார், சேக்கிழார் அவர் திருவடிகளைத் தலைமிசை வைத்து வாழும் தலைமைநம் தலைமையாகும் என அவருக்கு வணக்கமும் கூறினார்.
சிற்பி