மூர்க்க நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

மன்னிப் பெருகும் பெருந்தொண்டை
வளநா டதனில் வயல் பரப்பும்
நன்னித் திலவெண் திரைப்பாலி
நதியின் வடபால் நலங்கொள்பதி
அன்னப் பெடைகள் குடைவாவி
யலர்புக் காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துகிற்கொடிகள்
விழவிற் காடு வேற்காடு.

பொழிப்புரை :

என்றும் விளக்கம் பெற்றிருக்கும் பெருந் தொண்டை நாட்டிடத்தே, வயலில் நீர்பரப்பிடும் நல்ல முத்துப்போலும் திரைகளை யுடைய பாலி நதியின் வடபுறத்தில் நலம்கொள்ளும் ஒரு நகரம்; அது, அங்குள்ள பெடை அன்னங்கள் தாம் குடைந்தாடும் குளங்களில் உள்ள தாமரைப் பூக்களில் புகுந்து நின்று ஆடவும் நாட்டிய அரங்குக ளிடையே மின்னிடும் இடையையுடைய பெண்களும், துகிலின் கொடிகளும் விழாக் காலத்தே ஆடுகின்ற சிறப்புடையதுமான வேற்காடு என்னும் பெயருடையது.

குறிப்புரை :

வேலமரங்கள் நிறைந்திருத்தல் பற்றியும், முருகப் பெரு மானின் திருக்கைவேல் பற்றியும் இவ்வூர் இப்பெயர் பெற்றதென்பர்.

பண் :

பாடல் எண் : 2

செம்பொற் புரிசைத் திருவேற்கா
டமர்ந்த செய்ய சடைக்கற்றை
நம்பர்க் கும்பர்க் கமுதளித்து
நஞ்சை யமுது செய்தவருக்
கிம்பர்த் தலத்தில் வழியடிமை
யென்றுங் குன்றா வியல்பில்வரும்
தம்பற் றுடைய நிலைவேளாண்
குலத்தல் தலைமை சார்ந்துள்ளார்.

பொழிப்புரை :

செம்பொன்னினாய மதில்சூழ்ந்த திருவேற்காடாய அத்திருப்பதியில், அமர்ந்தருளும் செம்மையாய கற்றைச் சடையை யுடைய பெருமானாரும், தேவர்க்கு அமுது கொடுத்துத் தாம் நஞ்சை யுண்டவருமான இறையவருக்கு, இவ்வுலகில் வழிவழியாக அடிமைத் திறம் குன்றாத இயல்பில் வளர்ந்து வரும் நிலையுடைய வேளாளரது குலத்தில் தோன்றித் தலைமை பெற்றவர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 3

கோதின் மரபில் பிறந்துவளர்ந்
தறிவு கொண்ட நாள்தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின்
அடைவே பொருளென் றறிந்தரனார்
காத லடியார்க் கமுதாக்கி
அமுது செய்யக் கண்டுண்ணும்
நீதி முறைமை வழுவாத
நியதி பூண்ட நிலைமையார்.

பொழிப்புரை :

குற்றம் இல்லாத வழிவழியாகச் சிறந்துவரும் நல்ல மரபில் தோன்றி வளர்ந்து வரும் அவர், பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் ஆதி முதல்வனாய சிவபெருமானது திருநீற்றின் சார்பே மெய்ம்மைப் பொருள் என்று அறிந்து, அப்பெருமான்மீது பெருகும் அன்புடைய அடியார்கட்கு அமுதாக்கி, அவர் அமுது செய்திடத் தாம் அதனைக் கண்டு மகிழ்ந்த பின், தாம் உண்கின்ற நீதி முறைமை தவறாத ஓர் நியதி பூண்டு வாழ்பவர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 4

தூய அடிசில் நெய்கன்னல்
சுவையின் கறிக ளவையமைத்து
மேய வடியார் தமைப்போற்றி
விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர்வேண்டும்
படியால் உதவி அன்புமிக
ஏயு மாறு நாடோறும்
இனைய பணிசெய் தின்புற்றார்.

பொழிப்புரை :

தூய சோறு, நெய், கரும்பின்கட்டி, சுவையுடைய கறிகள் ஆகியவற்றை அமைத்துத் தம்பால் எழுந்தருளிவரும் அடியார் களை வணங்கி, விருப்பினால் அவர்களுக்கு அமுது செய்வித்துத், தம்மிடமுள்ள பொருள்களை அடியார்கள் வேண்டும்படி கொடுத்து, அன்பு மிகப் பொருந்துமாறு, நாள்தோறும் இத்தகைய பணியைச் செய்து இன்புற்று வருபவர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 5

இன்ன செயலின் ஒழுகுநாள்
அடியார் மிகவும் எழுந்தருள
முன்ன முடைமை யானபொருள்
முழுதும் மாள அடிமையுடன்
மன்னு காணி யானநிலம்
மற்று முள்ள திறம்விற்றே
அன்னம் அளித்து மேன்மேலும்
ஆரா மனத்தா ராயினார்.

பொழிப்புரை :

இவ்வாறாய செயல்களைச் செய்து ஒழுகிவரும் நாளில், அடியார்கள் மிகுதியாக எழுந்தருளி வந்திட, அவர்களுக்கு ஏற்ற பணி புரிந்திடலால், தமது முன்னைய உடைமைகளாய பொருள் கள் முழுதும் நீங்கத் தம்மிடத்து விளங்கிய அடிமையுடன், காணியான நிலம், மற்றுமுள்ள அணிகலன்கள் முதலாய உடைமைப் பொருள்கள் யாவற்றையும் விற்று அடியார்க்கு உணவு கொடுத்து, அதனால் மேன்மேலும் அத்தொண்டில் ஆசை நிறையாத மனத்தராயினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 6

அங்கண் அவ்வூர் தமக்கொருபற்று
அடியார் தங்கட் கமுதாக்க
எங்குங் காணா வகைதோன்ற
இலம்பா டெய்தி யிருந்தயர்வார்
தங்கும் வகையால் தாமுன்பு
கற்ற தன்மை நற்சூதால்
பொங்கு பொருளாக் கவுமங்குப்
பொருவா ரின்மை யினிற்போவார்.

பொழிப்புரை :

அந்நாளில், அவ்வூரில், இனி ஒருபொருளும் அடி யார் தமக்கு அமுதாக்க எங்கும் பெற இயலாத நிலையில், வறுமைப் பாடு மிகக் கொண்டு, தொண்டு செய்வதற்கு வழிகாணாது இருந்து அயர்பவர், தம்மிடத்து மறவாது கொண்டிடும் வகையில், தாம் பழகிக் கற்றுக் கொண்டதாய நல்ல சூதினால் பொருள் தேடிக் கொள்வதற்குச் சூதில் தம்முடன் பணயமாக எதிர் ஏற்பார் யாரும் அந்நாட்டில் இல்லா மையால் வேற்றிடத்திற்குச் செல்வாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 7

பெற்றம் ஏறிப் பலிக்குவரும்
பெருமான் அமருந் தானங்கள்
உற்றன் அன்பாற் சென்றெய்
உருகு முள்ளத் தொடும்பணிந்து
கற்ற சூதால் நியதியாங்
கடனு முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக்குடந்தை
யடைந்தார் வந்து சிலநாளில்.

பொழிப்புரை :

ஆனேற்றின் மீதமர்ந்து, பிச்சையேற்றுவரும், பெருமான் வீற்றிருக்கின்ற பல பதிகளையும் தமக்கு உற்ற அன்பினால் சென்றடைந்து, உருகும் உள்ளத்தொடும் பணிந்து, தாம்கற்ற சூதினால் பெறும் பொருளால், தமது நியமமாக அடியார்க்கு அமுதூட்டும் செயலை முடித்து வருபவர், தம்மை நினையாத அசுரர்களின் முப்புரங் களையும் அழித்த வில்லையுடைய பெருமானின் திருக்குடந்தை என்னும் திருப்பதியைச் சிலநாள்களில் வந்து அடைந்தார்.

குறிப்புரை :

குடந்தை என்பது இக்காலத்துக் கும்பகோணம் என அழைக்கப்பெற்று வருகிறது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 8

இருளாரும் மணிகண்டர்
அடியார்க்கின் னமுதளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப்
புகழ்க்குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூதாடி
யுறுபொருள்வென் றனநம்பர்
அருளாக வேகொண்டங்
கமுதுசெய்வித் தின்புறுவார்.

பொழிப்புரை :

இருள் விளங்கும் அழகிய திருக்கழுத்தினையுடைய பெருமானின் அடியவர்களுக்கு, இனிய திருவமுதாக்க வேண்டிய பொருளைத் திரட்டுதற்குப் புகழ்நிறைந்த திருக்குடந்தை நகரினில் பெயர் பெற்ற பொதுமடம் ஒன்றினில், காய் உருட்டும் சூதாடி, அதனால் பெரும் பொருள் பெருகுமளவில் வென்று, அதனைப் பெரு மான் அருளாகவே கொண்டு, அங்கு அப்பொருளால் அடியவர்க ளுக்கு அமுது செய்வித்து இன்புறுவாராகி,

குறிப்புரை :

பொருள் ஆயம் - பொருட் பெருக்கம். ஆதாயம் என்ப தன் திரிபென்பர் பரிமேலழகர். உருளாயம் - உருள்கின்ற காய்; சூதா டும் கருவி. `உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஓய்ப் புறமே படும்\' (திருக்குறள், 933) எனவரும் சொல்லாட்சிகளை இப் பாடல் முகந்து நிற்கிறது.

பண் :

பாடல் எண் : 9

முற்சூது தாந்தோற்று
முதற்பணையம் அவர்கொள்ளப்
பிற்சூது பலமுறையும்
வென்றுபெரும் பொருளாக்கிச்
சொற்சூதுதான் மறுத்தாரைச்
சுரிகையுரு விக்குத்தி
நற்சூதர் மூர்க்கரெனும்
பெயர்பெற்றார் நானிலத்தில்.

பொழிப்புரை :

இவ்வாறு சூதாடும்பொழுது, முதற் சூதாட்டத்தில் வைத்த பந்தயப் பொருளைத் தாம் தோற்று, எதிர் வைத்தார் அதைப் பெறும்படி செய்து, பின்னர்த் தமது திறமையால் அவர் முன்பெற்ற பணத்தின் மகிழ்வால் மேலும் பணயமாக வைக்கும் எல்லாப் பொருள்களையும் பலமுறையும் வென்று, பெரும் பொருளை ஈட்டி, இவ்வாறு சூதாடும்பொழுது பேச்சுமாறி மறுத்தும் வாதிடுவாரைத் தமது வாளால் குத்தி, இத்தன்மையால் நல்ல சூதராய அவர், மூர்க்கர் என்னும் பெயரைப் பெற்றார்.

குறிப்புரை :

பெறுவது ஒன்றாய் இழப்பது பலவாயினும், இழக்கும் தொறும் அச்சூதில் காதல் மிகும் (குறள், 932) என்றார் திருவள்ளுவர். இவ்வாறு பாங்கையெல்லாம் நினைவு கூருமாறு இப்பாடல் அமைந் துள்ளது. நற்சூதர் - நன்கு சூதாடுபவர்; சூதாடுவதிலும், பொருள் பெறுவதிலும் நேர்மை தவறாதவர். `கற்றசூதன்\' எனத் தொகையும், `நற்சூதன்\' என வகையும் கூறியதற்கு ஏற்ப, ஆசிரியர் சேக்கிழாரும், `நற்சூதர்\' என்றார். தம்மொடு சூதாடுவார் நேர்மை தவறின் அவரை வன்மையாக ஒறுத்தல்பற்றி மூக்கர் எனப்பட்டார். எனவே இது காரணப்பெயர் என்பது பெற்றாம். இதுகாறும் பெயர் கூறாது வந்த ஆசிரியர், காரணம் வரும்வழி, இப்பெயரைக் கூறவே, அவர்தம் இயற்பெயர் அறியவாராமையும் பெறுதும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 10

சூதினில்வென் றெய்துபொருள்
துரிசற்ற நல்லுணர்வில்
தீதகல அமுதாக்கு
வார்கொள்ளத் தாந்தீண்டார்
காதலுடன் அடியார்கள்
அமுதுசெயக் கடைப்பந்தி
ஏதமிலா வகைதாமும்
அமுதுசெய்தங் கிருக்குநாள்.

பொழிப்புரை :

அவர், சூதினால் வென்று பெற்ற பொருள் முழுவ தையும், பழுதற்ற தமது நல்லுணர்வினால், அத்தீங்கெலாம் நீங்க அப்பொருளைத் தம் கையாலும் தீண்டாது, அடியார்கட்கு அமுதாக்கு வார் கையில் பெறும்படியாகக் கொடுத்து, அவர் கொடுக்கும் திருவ முதை அன்பினால் அடியார்கள் அமுது செய்திடப், பின்னர் தாம் கடைப்பந்தியில் இருந்து, யாதொரு குற்றமும் இன்றி உண்டு, அங்கு இருக்கும் நாள்களில்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 11

நாதன்தன் அடியார்க்கு
நல்லடிசில் நாடோறும்
ஆதரவி னால்அமுது
செய்வித்தங் கருளாலே
ஏதங்கள் போயகல
இவ்வுலகை விட்டதற்பின்
பூதங்கள் இசைபாட
வாடுவார் புரம்புக்கார்.

பொழிப்புரை :

தலைமை பொருந்திய பெருமானின் அடியார்க்கு நல்ல அமுதை நாள்தோறும் அன்பினால் அமுது செய்வித்துப் பின்னர், அங்குப் பெருமானது திருவருளாலே தமது குற்றங்கள் யாவும் நீங்க, இவ்வுலகை விட்டுப் பூதகணங்கள் இசை பாடப் பொற்பொதுவில் நடனம் ஆடும் பெருமானது உலகினைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

ஏதங்கள் - குற்றங்கள். இவை தம்மிடத்தினின்றும் விலகினால் மட்டும் அமையாது; அவை இல்லாவாகவும் வேண்டும் என்பார் `ஏதங்கள் போய் அகல\' என்றார்; `பொய்யாயின வெல்லாம் போய் அகல\' என்புழிப் போல.

பண் :

பாடல் எண் : 12

வல்லார்கள் தமைவென்று
சூதினால் வந்தபொருள்
அல்லாருங் கறைக்கண்டர்
அடியவர்கள் தமக்காக்கும்
நல்லார்நற் சூதராம்
மூர்க்கர்கழல் நாம்வணங்கிச்
சொல்லார்சீர்ச் சோமாசி
மாறர்திறஞ் சொல்லுவாம்.

பொழிப்புரை :

சூதில் வல்லமை உடையார்களை வென்று, அதனால் வந்த பொருள் முழுமையையும், கருமை விளங்கும் கழுத்தினையுடைய பெருமானின் அடியவர்கட்கு அமுதாக்கிடும் நல்லவராய மூர்க்க நாயனாருடைய மலர்க்கழல்களை வணங்கி, உலகில் பெரிதும் புகழ்ந்து பேசப்படும் சீர்மையுடைய சோமாசிமாற நாயனார் திறத்தை இனிச் சொல்லுவாம். மூர்க்க நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

***************
சிற்பி