சோமாசிமாற நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

சூதம் பயிலும் பொழில்அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில்செற்றவர்க் கன்பர் வந்தால்
பாதம் பணிந்தா ரமுதூட்டுநற் பண்பின் மிக்கார்.

பொழிப்புரை :

மாமரங்கள் மிகுதியாக விளங்கி நிற்கும் சோலை களையுடைய திரு அம்பர் என்னும் ஊரில், மனத்தைத் தூய்மை செய் யும் வாய்மையுடைய நான்மறைகளையும் பயில்கின்ற மறையவர்தம் குலத்தில், மேம்பட விளங்கித் தோன்றியவர். அவர், துன்பம் புரியும் முப்புரங்களையும் எரிசெய்த சிவபெருமானுக்கு அன்பராய அடிய வர்கள் தம்மிடம் வந்தால், அவர்களின் திருவடிகளைப் பணிந்து, மிகுந்த அன்புடன் அமுதூட்டுகின்ற நற்பண்பில் மிகுந்தவர்.

குறிப்புரை :

அம்பர் என்பது திருஇன்னம்பர் என்னும் பதியாகும்.

பண் :

பாடல் எண் : 2

யாழின் மொழியாள் தனிப்பாகரைப் போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாதுல கங்க ளான
ஏழும் உவப்பப் புரிந்தின்புறச் செய்த பேற்றால்
வாழுந் திறம்ஈசர் மலர்க்கழல் வாழ்த்தல் என்பார்.

பொழிப்புரை :

: யாழின் இனிமை போலும் மொழியையுடைய உமையம்மையாரை ஒருகூற்றில் கொண்ட சிவபெருமானைப் போற் றும் சிவவேள்விகளைப் பண்டு தொட்டுச் செய்துவரும் முறைமை பிழையாது, மேலாய உலகங்களான ஏழும் உவந்திடப் புரிந்து, அனைத்துயிர்களையும் இன்புறச் செய்திடும் பேற்றால், சிவபெரு மானுடைய திருவடி மலர்களை வாழ்த்தி வணங்குதலே உயிர்கள் நல்வாழ்வு அடைதற்குரிய வழியாகும் எனும் கருத்து உடையவர்.

குறிப்புரை :

பாகரைப் (சிவபெருமானை) போற்றும் யாகம் என்றார், உலகியலின்பங்களைப் பெறக் கருதிப் பிறபிற தெய்வங்களைப் போற் றும் யாகங்களும் உளவாதல்பற்றி. அவை காமியத் தழுந்தி இளைக் கவும், காலர் கைப்படிந்து மடியவும் காரணமாகுமே யன்றி, இறுதியில் இன்பத்தைப் பெற ஏதுவாகா. சிவபாதஇருதயர் செய்துவந்த வேள்வி யும், ஆறுசூழ் வேணிநாதனாரை முன்னாக வைத்துச் செய்த வேள்வி யேயாகும். அரன் நாமமே கூறவும், வையகம் துயர் தீரவும் இவ்வேள் வியே உதவும். இவ்வேள்வியை ஆற்றுவதனாலேயே, இறைவர் கழலை வாழ்த்துதலே உயிர்க்கு உறுதி பயக்கும் எனக் கொண்டார்.

பண் :

பாடல் எண் : 3

எத்தன் மையரா யினும்ஈசனுக் கன்பர் என்றால்
அத்தன் மையர் தாம்நமையாள்பவர் என்று கொள்வார்
சித்தந் தெளியச் சிவன்அஞ்செழுத் தோது வாய்மை
நித்தம் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்.

பொழிப்புரை :

`எத்தன்மையராயினும் அவர் சிவபெருமானுக்கு அன்பர் என்றால், அத்தன்மை உடையவர்தாம், நம்மை ஆள்பவர்\' என்று கொண்டிடும் திறமுடையார், தம்முடைய சித்தம் தெளிவு கொண்டிடச் சிவபெருமானின் நாமமாம் `நமச்சிவாய\' எனும் திருவைந்தெழுத்தை ஓதும் வாய்மை ஒழுக்கத்தை, நாளும் தவறாமல் செய்வதைக் கடமையாகப் போற்றும் நெறியில் தலை நின்றார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 4

சீருந் திருவும் பொலியுந்திரு வாரூர் எய்தி
ஆரந் திகழ்மார்பின் அணுக்கவன் தொண்டர்க் கன்பால்
சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும்பதம் பற்றி யுள்ளார்.

பொழிப்புரை :

அவர், சீரும் திருவும் பொலியும் திருவாரூர்க் கோயிலை அடைந்து, அங்கு வாழும் மாலை திகழும் மார்புடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய சுந்தரமூர்த்தி சுவாமி களுக்கு அன்பால் சேரும் பெரு நண்பு சிறக்கப் பெற்று, அதனால் திருவாரூரில் தங்கி, இவ்வுலகும் வான் உலகும் பணிகின்ற அப்பெருமக னார்தம் திருவடிகளையே தமது பெரும் பற்றாகப் பற்றிக் கொண்டிருப்பார்.

குறிப்புரை :

சீர் - சைவச் சீர்மை. திரு - முத்தித்திரு. பொலிதல் - எளிதில் கைவரப் பெறுதல், தேசம் உய்ய.

பண் :

பாடல் எண் : 5

துன்றும் புலன்ஐந் துடன்ஆறு தொகுத்த குற்றம்
வென்றிங் கிதுநன் னெறிசேரும் விளக்க மென்றே
வன்றொண்டர் பாதந் தொழுதான சிறப்பு வாய்ப்ப
வென்றும் நிலவுஞ் சிவலோகத்தில் இன்ப முற்றார்.

பொழிப்புரை :

உயிர்களிடத்துப் பொருந்திய ஐம்புலன்களுடன், காமம் முதலாக உள்ள அறுவகைக் குற்றங்களையும் வென்று, இவ் வுலகில் நன்னெறி சேர்தற்காம் விளக்கம் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளைத் தொழுதலே எனக்கருதி அப்பணி தலைநின்ற அத னால் வருவதான சிறப்பு வாய்ந்திட, அப்பேற்றால் என்றும் நிலவிய அழிவிலாத சிவலோகத்துச் சென்று இன்புற்றார். அவர் பெயர் சோமாசிமாற நாயனார் என்பதாகும்.

குறிப்புரை :

இவர்தம் பெயரை ஆசிரியர் சேக்கிழார் கூறிற்றிலரேனும் தொகை நூலானும், வகை நூலானும் `மாறன்\' என்பது இவர் இயற்பெயர் எனத் தெரிகிறது. சிவ வேள்விகளை இடையறாது செய்து வந்தமையின் சோமயாசி (சோமாசி) எனும் பட்டப்பெயருடன் அழைக்கப் பெற்றார்.

பண் :

பாடல் எண் : 6

பணையும் தடமும் புடைசூழும்
ஒற்றி யூரிற் பாகத்தோர்
துணையுந் தாமும் பிரியாதார்
தோழத் தம்பி ரானாரை
இணையுங் கொங்கைச் சங்கிலியார்
எழின்மென் பணைத்தோ ளெய்துவிக்க
அணையு மொருவர் சரணமே
அரண மாக அடைந்தோமே.

பொழிப்புரை :

வயற் பண்ணைகளும், குளமும் புறத்தே சூழ இனிது விளங்கும் திருவொற்றியூரில் ஒருகூற்றில், வைத்த துணைவியாரான உமையம்மையாரைச் சிறிதும் பிரியாதிருக்கின்ற பெருமான், தமக்கு ஒப்பற்ற தோழராக விளங்கும் சுந்தரரை இணையான பருத்த மார் பகங்களையுடைய சங்கிலியாரின் அழகிய மெல்லிய தோள்களை அணைந்து சேருமாறு அருள் செய்ய, அதனால் சென்றணைந்த ஒப்பற்றவராகிய சுந்தரரின் திருவடிகளே நமக்குக் காப்பாக அவரை அடைந்தோம்.

குறிப்புரை :

அரணம் - காப்பு. சோமாசிமாற நாயனார் புராணம் முற்றிற்று வம்பறாவண்டுச் சருக்கம் முற்றிற்று
சிற்பி