சிறப்புலி நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

பொன்னிநீர் நாட்டின் நீடும்
பொற்பதி புவனத் துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க்
கில்லையென் னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
மறைத்திரு வாக்கூர் ஆக்கூர்.

பொழிப்புரை :

காவிரியாறு பாய்ந்து செழிப்புச் செய்யும் சோழ நாட்டின் பழமையான அழகிய பதி, உலகத்துள்ளோர் வறுமையினால் இரந்து சென்றால் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியவற்றை வரையாது அளிக்கும் குணம் உடையவர்கள் என்று சீகாழித் தலைவரான ஆளுடைய பிள்ளையார், நன்மை பொருந்திய வேதியர்களைப் பற்றி அருள் செய்த மறை வாக்கினைப் பெறும் ஊரானது `திருவாக்கூர்\' என்பதாகும்.

குறிப்புரை :

பிள்ளையார் அருளிய ஆக்கூர்ப் பதிகத்தில், அவ்வூர வரின் வள்ளன்மை குறித்து ஈரிடங்களில் வருகின்றன. அவை, 1. `வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும், தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே\' (தி.2 ப.42 பா.3) 2. `இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லை என்னாது ஈத்துவக்கும், தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே\' (தி.2 ப.42 பா.9) என்பனவாம். இவற்றுள் முன்னையது வேளாளரின் வள்ளன்மை பற்றியது. பின்னையது இன்னார் என விதந்து கூறாராயினும் வேதியர்தம் வள்ளன்மை கூறுவதாம் என்பது சேக்கிழார் திருவுள்ளமாகிறது.
திருவாக்கூர் - பிள்ளையாரின் திருவாக்கினைப் பெற்ற ஊர். ஆக்கூர் எனப்பின் வருவது அவ்வூரின் திருப்பெயராகும். திருவாக்கூர் ஆக்கூர் என்றது சொல்லணி தவழ நிற்பதாகும்; திருவாமூர் திருவாமூர் என்புழிப்போல.

பண் :

பாடல் எண் : 2

தூமலர்ச் சோலை தோறும்
சுடர்நெடு மாடந் தோறும்
மாமழை முழக்கந் தாழ
மறையொலி முழக்கம் ஓங்கும்
பூமலி மறுகில் இட்ட
புகையகில் தூபந் தாழ
ஓமநல் வேள்விச் சாலை
ஆகுதித் தூப மோங்கும்.

பொழிப்புரை :

அப்பதியில் விளங்கும் தூய்மையான மலர்ச் சோலைகள் தோறும், ஒளி பொருந்திய பெரிய மாளிகைகள் தோறும், பெருமேக முழக்கங்களும் கீழ்ப்படுமாறு மறை ஒலிகளின் முழக்கங் கள் ஓங்கிநிற்கும், அழகு பொருந்திய வீதிகளில் இட்ட அகிற் புகை யின் நறுமணமும் கீழ்ப்படுமாறு, வேட்கப்படும் வேள்விச் சாலைக ளின் நெய்ப்புகைமேல் ஓங்கி நிற்கும்.

குறிப்புரை :

மறை ஒலிகளும், வேள்விப் புகையும் இவ்வகையில் வியக்குமாறுள்ளன.

பண் :

பாடல் எண் : 3

ஆலை சூழ் பூகவேலி
அத்திரு வாக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார்
நான்மறைக் குலத்தி னுள்ளார்
நீலமார் கண்டத் தெண்டோள்
நிருத்தர்தந் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத்
திறத்தினிற் சிறந்த நீரார்.

பொழிப்புரை :

கரும்பு ஆலைகளைச் சூழ்ந்திருக்கும் பாக்கு மரங்கள் வேலி என அமைந்திருக்கின்ற அத்திருவாக்கூரில், உலகில் நிறைந்த புகழால் மிக்கவரும், நான்மறைகளையும் ஓதும் குலத்தில் தோன்றிய வரும், நஞ்சுண்ட கழுத்தையும் எட்டுத் தோள்களையும் உடைய கூத்தப் பெருமானின் தொண்டினை மேற்கொண்டு ஒழுகி வருபவரும் ஆக வாழ்பவர் சிறப்புலி நாயனார் ஆவர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 4

ஆளும்அங் கணருக் கன்பர்
அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க
முன்புநின் றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி
நயந்தன வெல்லாம் நல்கி
நீளும்இன் பத்துள் தங்கி
நிதிமழை மாரி போன்றார்.

பொழிப்புரை :

அவர், உலகங்கள் எல்லாவற்றையும் ஆளுகின்ற சிவபெருமானின் அன்பர்கள் தம்பால் வந்து அணையின், அவர்கள் அடியில் தாழ்ந்து வணங்கி, மூண்டெழும் அன்பு மேன்மேல் பொங்க, அவர்களுக்கு இனிய சொற்களைக் கூறி, நாடோறும் நல்ல உணவு களை அளித்து, உண்பித்து, அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அளித்து, அதனால் மேன்மேலும் பெருகி வளர்கின்ற இன்பத்துள் வாழ்ந்து, செல்வத்தை மழைபோல் சொரிகின்ற மேகம் என விளங்கி வந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 5

அஞ்செழுத் தோதி அங்கி
வேட்டுநல் வேள்வியெல்லாம்
நஞ்சணி கண்டர் பாதம்
நண்ணிடச் செய்து ஞாலத்
தெஞ்சலில் அடியார்க் கென்றும்
இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர்
தாள்நிழல் தங்கி னாரே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தை ஓதி, முத்தீ வளர்த்து, நஞ்சு விளங்கும் கழுத்தரான சிவபெருமானின் திருவடிகளில் பொருந்த நல்ல வேள்விகளைச் செய்து, உலகில் யாதும் குறைவிலராய் வாழும் சிவனடியார்களுக்கு எக்காலத்தும் இடையறாது செய்யும் அன்பி னால், வள்ளல்களினும் வரையாது அளித்து வாழ்ந்து, இறைவரின் திருவடி நிழலில் நிலை பெறும் பேற்றைப் பெற்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 6

அறத்தினின் மிக்க மேன்மை
அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப்பெரு வள்ள லார்வண்
சிறப்புலி யார்தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச்செங் காட்டங்
குடியினிற் செம்மை வாய்த்த
விறற்சிறுத் தொண்டர் செய்த
திருத்தொழில் விளம்பல் உற்றேன்.

பொழிப்புரை :

சிவ அறங்களில் மேன்மை மிக்க அந்தணர் வாழும் திருவாக்கூரில் தோன்றிய வேதியரான வண்மையுடைய அச்சிறப்புலி யாரை வாழ்த்தி, திருச்செங்காட்டங்குடியில் செம்மையால் திளைக்கும் சிறுத்தொண்ட நாயனாரின் திருச்செயலைக் கூறப் புகுகின்றேன்.

குறிப்புரை :

செம்மை வாய்த்த விறல் - சிவபெருமானின் திருவடிக்கே பதித்த நெஞ்சுடன் வாழும் பெற்றி. `அன்பு உள்ள மடையாய்\' என அவர் வரலாற்றில் ஆசிரியர் குறிக்குமாற்றைக் காண்க. சிறப்புலி நாயனார் புராணம் முற்றிற்று.
சிற்பி